தசமஹா வித்யா 04 : புவனேஸ்வரி.
அன்னையின் பத்து வடிவங்களில் அடுத்த வடிவம் புவனேஸ்வரி தாய். இவள் ஈரேழு உலகிற்கும் அதிபதியாக அதன் இயக்கு சக்தியாக, ஆதார சக்தியாக அறியப்படுகின்றாள், எல்லா உலகுக்கும் ஆதாரம் இவளே.
புவனம் என்றால் உலகம், அதை இயக்குபவள் புவனேஸ்வரி.
இந்தப் பிரபஞ்சம் ஏகப்பட்ட அண்டங்களைக் கொண்டது. அந்த அண்டங்களில் பதினான்கு உலகம் மட்டும் மானுடர் அறிய அந்த மகா சக்தியால் அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அது போக ஏகப்பட்ட உலகங்கள் உண்டு.
இந்த உலகங்களெல்லாம் ஒவ்வொரு பலனுக்காய் பரம்பொருளால் உருவாக்கப்பட்டவை. அவற்றை அறியும் சக்தி யாருக்குமில்லை, ரிஷிகளே உணரமுடியா விஷயம் அது.
அப்படியான பிரபஞ்சத்தில் இந்த மானுடர் வாழும் உலகம் ஆத்மாக்கள் கர்மம் தொலைக்க உருவான ஒன்று. அந்தக் கர்மம் தொலைக்க அவற்றுக்கு உடல் வேண்டும், அந்த உடல் வாழ இந்த உலகம் வேண்டும். இதன் சூழல் வேண்டும், அப்படி மானுடர் கர்மம் கழிக்கும் இந்தப் பூமி எனும் சிறைச்சாலையின் அதிபதி அன்னை.
ஆனால், அவள் இந்தப் பூமியினைக் கொடிய சிறைச்சாலையாக வைக்கவில்லை. மாறாக, அன்பும் அழகும் அற்புதமும் கொண்ட மகா இன்பமான உலகாக வைத்து ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மானுடர்க்கும் பொறுப்பேற்றுத் தாயாக நின்று அணைத்துக் கொள்கின்றாள், இங்கு எல்லாமும் அவள் இயக்கமே.
இந்த அன்னை அப்படி எல்லா உலகங்களுக்கும் தாயாக நிற்கின்றாள், இயக்கு சக்தியாக ஆதாரமாக நிற்கின்றாள். அவளின் தோற்றம் புராணத்தில் தெளிவாகச் சொல்லப்படுகின்றது.
அவளின் தொடக்கக் காட்சி சிவராத்திரி நிகழ்வில் வருகின்றது, அந்த மகா சிவராத்திரி அன்று எல்லா இயக்கமும் ஸ்தம்பிக்கும். சிவன் ஆழ்ந்த தவநிலையில் இருந்தபோது எல்லாமே செயலற்றுவிடும். ஆனால், ஒரே ஒரு சக்தி அப்படி செயலற்றுவிடாமல் இந்தப் பிரபஞ்சம் இயக்கத்தினை மேல் நின்று காக்கும், அவளே இந்தத் தாய்.
ஒரு ஊழிக்காலம் முடிந்து இந்தப் பிரபஞ்சம் மீளப் படைக்கப்பட்டபோது முப்பெரும் தேவர்கள்களுக்கும் சக்தியில்லை, என்ன செய்வது எனத் தெரியவில்லை. அப்போது விஷ்ணு தான் ஆலிலையில் குழந்தையாய் மிதந்தபோது அன்னை புவனேஸ்வரி தன்னைத் தாலாட்டி காத்ததை நினைவுக் கூர்ந்து அவளிடம் மற்ற இருவரையும் அழைத்துச் சென்றார்.
அவள் எல்லாம் கடந்த அவள் இடமான “மணித்வீபம்” எனும் இடத்தில் இருந்தாள். இது பாற்கடலையும் தாண்டிய தொலைவில் உண்டு.
அங்கே அன்னையினைக் காண விரும்பிய மும்மூர்த்திகளும் அவள் கால் கட்டை விரலின் நகத்திலே எல்லா உலகினையும் கண்டு பணிந்தார்கள், எல்லா உலகமும் அவள் கால் நகத்திலே அடக்கம் என்பதைக் காட்டி அவள் பிரமாண்டமாய் நின்றாள்.
அவளே பிரம்மனுக்கு, சரஸ்வதியினைக் கொடுத்து சத்யலோகம் அனுப்பி, அவன் தொழிலைச் செய்ய வைத்தாள். அப்படியே விஷ்ணுவிற்கு லட்சுமியினைக் கொடுத்து பாற்கடலுக்கும், சிவனுக்கும் சக்தியினைக் கொடுத்து கயிலாயத்துக்கும் அனுப்பி வைத்தாள்.
இப்படி அவளே மும்மூர்த்திகளுக்கும் சக்தியும் பொறுப்பும் ஞானமும் கொடுத்து எல்லாமும் தொடங்கி வைத்தாள்.
ஆம், இந்தப் புராணத் தத்துவத்தின் தாத்பரியம் மிக எளிது. இந்த உலகில் ஒவ்வொரு உடலின் உயிரும் சக்தியும் அவளாலே புகுத்தப்படுகின்றது. அவளாலே காக்கப்பட்டு, அவளாலே குறித்த காலத்தில் விடுவிக்கவும் படுகின்றது.
கர்மம் தொலைக்கும் இந்த உலகில் ஒவ்வொரு ஆன்மாவினையும் இந்த உலகில் அனுமதிப்பதும், காப்பதும் பின் அதற்கான கதிப்படி அனுப்பி வைப்பவளும் அவளே.
இந்த மகா பெரும் பணியினை அன்னை எல்லா உலகிலும் செய்கின்றாள், பூமி உள்பட எல்லாப் புவனத்திலும் செய்வதால் அவள் புவனேஸ்வரி.
அகத்தியர் திருமகள் துதி இந்த அன்னையினைப் பற்றிச் சொல்லும்.
“மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும்
செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன்
உலகமெலாம் காவல் பூண்டான்
படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவி
மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன்நின் பெருஞ் சீர்த்தி எம்மனோ
ரால் எடுத்துச் சொல்லற் மாற்றோ”
அரசியாக வீற்றிருப்பவளே, செந்தூரம் போன்ற இதழ்களைக் கொண்ட வாயினை உடைய மயிலே. உன் கடைக்கண் அருளால் அன்றோ விஷ்ணு உலகைக் காக்கின்றார், பிரம்மன் உன் அருளால்தானே உலகைப் படைக்கின்றார். அந்தப் பிறைநிலவினை அணிந்த சிவனும் உன் அருளாலேதானே உலகைக் காக்கின்றார். அப்படியான உன் பெருமையினை என்னைப் போன்றவரால் எப்படி முழுவதுமாக வார்த்தைகளில் எடுத்துச் சொல்ல முடியும் என்பது பொருள்.
அன்னை ஆதிபராசக்தி. அவளே சிவனின் சக்தியாக நின்று உலகை அழிக்கின்றாள். அவளே பிரம்மனின் சக்தியாக நின்று உலகைப் படைக்கின்றாள். அவளே திருமாலின் சக்தியாக நின்று உலகைக் காக்கின்றாள்.
முத்தொழிலையும் செய்யும் அவள் பெருமையினை மானுடரால் எப்படிச் சொல்ல முடியும்? அதுவும் சொல்வதற்கு வார்த்தைகள் ஏது என்கின்றார் அகத்திய முனி.
அன்னையின் மாபெரும் ஆற்றலை எல்லாமே அவள் இயக்கம் என்பதை இப்படிப் பாடிச் சொல்கின்றார் குறுமுனி.
அபிராமி அந்தாதி பாடல் ஒன்றும் இதே கருத்தைச் சொல்லும்.
“பூத்தவளே புவனம் பதினான் கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே”
“பூத்தவளே புவனம் பதினான் கையும்” எனத் தொடங்கும் அபிராமி பட்டர், பூத்தல் என்றால் மலர்தல். ஒரு மலர் ஆகாயம் நோக்கி விரிவதைப் போல இந்த உலகினை அபிராமி படைத்தாள் என்கின்றார் அபிராமி பட்டர்.
உலகை படைத்தவன் பிரம்மன் அல்லவா? இதில் அன்னையின் பெயர் வருமா என்ற கேள்வி எழலாம், அக்கேள்விக்கும் பதில் உண்டு. ஆம், பிரம்மனே படைப்புக்கு அதிபதி. ஆனால் அவனை உள்ளிருந்து சக்தியாக இயக்குபவள் யார்? நிச்சயம் அன்னை பராசக்தியின் வடிவமான கலைமகள்.
அந்தச் சக்தி இல்லையென்றால் பிரம்மனால் இயங்க முடியாது. அவனுக்கு உணர்வு கொடுத்து அவன் கரங்களிலும் நாவிலும் நின்று செயலாற்றுபவள் அன்னை, அந்தச் சக்தியின்றி பிரம்மன் இல்லை.
இதனாலே “பூத்தவளே” என அழகாகச் சொல்கின்றார் பட்டர். ஒரு செடிக்குள் இருந்து பூக்கும் பூ போல பிரம்மனுக்குள் இருந்து அன்னை வெளிப்பட்டு இந்த உலகம் படைக்கப்படுகின்றது என அழகான உவமையாகச் சொல்கின்றார்.
“புவனம் பதினான் கையும்” என்பது ஈரேழு உலகையும் அன்னை படைத்தாள் என்பதைச் சொல்லும் வரியாகும். இதன் முந்தைய பாடலில் “புவி ஏழையும் பூத்தவள்” எனப் பட்டர் சொன்ன விஷயமும் கவனிக்கத்தக்கது.
அப்படியானால் புவி வேறு, புவனம் வேறா என்றால் வேறுதான். ஏழு புவிகளும் 14 உலகங்களும் இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.
புவி ஏழு என்று கூறக்கூடிய ஸப்ததீபங்கள் ஜம்பு, பிலக்ஷ, குந, கிரௌஞ்ச, சாக, சான்மல மற்றும் புஷ்கர எனும் ஏழு தீவுகளாகும்.
(இன்றைய பூமியின் கண்டங்கள் 7 என்பதும் குறிப்பிடத்தக்கது.)
புவனம் பதினான்கு யாதெனில் கீழ் ஏழு லோகங்களாகிய அதலம், விதலம், சுதலம், தாராதலம், மஹாதலம், ரசாதலம் மற்றும் பாதாளம் ஆகியவையும், மேல் ஏழு லோகங்களாகிய பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், ஜனலோகம், தபோலோகம், மஹர்லோகம் மற்றும் சத்திய லோகம் ஆகியன ஆகும்.
திருமூலரும் திருமந்திரத்தில் “தானே தலைவியென நின்ற தற்பரை” என்ற பாடலில் அன்னையே பதினான்கு உலகங்களையும் படைத்தவள் என்பார்.
புவியினையும் புவனத்தையும் படைப்பதால் அவள் “பிரம்மஹ்ரூபா”, “ஸ்ருஷ்டி கர்த்ரி” (லலிதா சகஸ்ரநாமம்) என்றும் அழைக்கப்படுகின்றாள். புவியும் புவனமும் மட்டுமன்றி அதன் உயிர்களையும் அவளே ஜனிக்க வைப்பதால் “ஜனனி” என்றும் அவள் போற்றப்படுகின்றாள்.
அடுத்து ” பூத்தவண்ணம் காத்தவளே”
அன்னை படைப்புத்தொழில் மட்டும் செய்யவில்லை காக்கும் தொழிலும் செய்கின்றாள் என அடுத்து சொல்லத் தொடங்குகின்றார் பட்டர்.
ஆம், உலகைப் படைத்துவிட்டு அன்னை விட்டுவிடவில்லை. அவள் உலகைக் காக்கும் சக்தியாகவும் திகழ்கின்றாள்.
அவள் தனியாக எத்தனையோ அசுரர்களைக் கொடியவர்களைச் சம்ஹாரம் செய்திருக்கின்றாள். இன்னும் காக்கும் கடவுளென அறியப்படும் விஷ்ணுவில் உள் நின்று அவரை இயக்கி நின்று உயிர்களைக் காக்கின்றாள்.
இதனாலேதான் அவளுக்கு விஷ்ணுரூபிண்யை, கோப்த்ரி, கோவிந்த ரூபிணி என நாமங்கள் உண்டு.
“பின் கரந்தவளே” என அடுத்த வார்த்தையினைச் சொல்கின்றார் பட்டர். இதற்கு மறைத்தல் எனப் பொருள். அதாவது ஆபத்து வேளையில் ஓடிவந்து உதவத் தயாராய் இருப்பவள் எனப் பொருள்.
கோழி தன் குஞ்சுகளை ஆபத்து வந்தால் இறக்கைக்குள் வைத்து காப்பது போல, தாய் தன் குழந்தையினை மறைவாய் காப்பது போல் அன்னை லோக உயிர்களை மறைபொருளாய் அரூபியாய் நின்று காத்துக் கொண்டிருக்கின்றாள் என்கின்றார் பட்டர்.
ஒரு தாய் குழந்தையின் நலனுக்கு எதையெல்லாம் மறைத்து வைப்பாளோ அப்படி மறைத்து வைத்து உயிர்களையும் மானிடரையும் காப்பவள் அன்னை என்கின்றார் பட்டர்.
“கரந்தவளே” எனும் வார்த்தைக்கு இப்படிப் பொருள் உண்டு எனினும் அன்னை சிவனின் சக்தியாக இருந்து சம்ஹாரம் செய்வதிலும் அழிக்கும் சக்தியாக வீற்றிருப்பவள் என்பதும் இன்னொரு பொருள்.
அடுத்து “கறைகண்டவனுக்கு மூத்தவளே” என்கின்றார் பட்டர். கறைகண்டன் என்றால் கறை கண்ட கழுத்துடையவன் எனப்பொருள். ஆலகாலத்தைக் கழுத்தில் தாங்கிய சிவனுக்கு அன்னை மூத்தவள் என்கின்றார் பட்டர்.
உண்மையில் சிவனுக்குச் சக்தி மூத்தவளா? அங்கேதான் ஒளிந்திருக்கின்றது ரகசியம்.
தத்துவப்படி சிவமும், சக்தியும் ஒன்றேதான். அந்தப் பெரும் சக்தி சலனமற்றிருக்கும் போது சிவமாகவும், இயங்கி பிரபஞ்சம் உண்டாகும் போது சக்தியாகவும் மாறும். இந்த இரண்டு பெரும் சக்திகளும் இணைந்த நிலைதான் சிவசக்தி நிலை.
சிவசக்தி இல்லையெனில் எதுவுமே இல்லை.
ஆகச் சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்றியதால் இங்கே அம்பிகையை மூத்தவள் என்கிறார்.
அடுத்து அம்பிகையினை “முகுந்தனுக்கு இளையவளே” என்கின்றார்.
முகுந்தன் என்றால் கண்ணன், அந்தத் திருமாலுக்கு இளையவள் அன்னை என்கின்றார் பட்டர்.
இந்த இடத்தில் குழப்பம் வரலாம். அன்னை எப்படி சிவனுக்கு மூத்தவளாக இருக்கும் நிலையில் திருமாலுக்கு இளையவள் எனும் சந்தேகம் வரலாம்.
புராணத்தத்துவப்படி திருமாலுக்கு மலைமகள் தங்கை எனும் நம்பிக்கை உண்டு, அந்த வகையில் சொல்கின்றார் பட்டர்.
ஏன் திருமாலுக்கு எத்தனையோ நாமம் இருக்க முகுந்தனைப் பட்டர் சொல்கின்றார் என்றால் முகுந்தன் என்றால் மூப்பே இல்லாத் தளர்வே இல்லாதவன் எனப் பொருள்.
அந்த முகுந்தனுக்குத் தங்கை என்பவள் மிக இளமையானவள் முக்கால இளமையானவள் என்கின்றார் பட்டர்.
அப்படியே மூப்பே இல்லாத அன்னை தன் பக்தர்களுக்கும் மூப்பு இல்லா வரம் தரத் தகுதியானவள் என்பதைக் குறிப்பால் விளக்குகின்றார்.
“ஜராத்வாந்த ரவிப்ரபா” என அன்னைக்கு ஒரு பெயர் உண்டு.
இன்னும் தெளிவாய்ச் சொல்லப் போனால் அம்பிகையில் மும்மூர்த்திகளும் அடக்கம்.
அவளை ‘உந்மேஷ நிமிஷோத்பன்ன விபன்னபுவானாவலி” என்று லலிதா சஹஸ்ரநாமம் போற்றுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
உந்மேஷம் என்றால் கண்களைத் திறத்தல், நிமிஷம் என்றால் கண்களை மூடுதல்.
அதாவது, அன்னை தனது கண்களைத் திறந்து மூடுவதன் மூலம் உலகங்களைப் படைத்தும் அழித்தும் வருகிறாள் என்பது பொருள்.
படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலையும் செய்யும் அன்னையினை விட பெரும் தெய்வம் எங்கே உண்டு? என இப்பாடலில் கேட்கின்றார் பட்டர்.
இதுதான் புவனேஸ்வரி தாயின் தத்துவம் அதனை அபிராமிபட்டர் மிக அழகாக விளக்குகின்றார்.
இதைத்தான் பல புராணச் செய்திகளும் சொல்கின்றன.
சௌந்தர்யலஹரியில் இந்தக் கருத்து வருகிறது. சக்தி கண்ணசைத்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் படைத்தல் காத்தல் அழித்தல் எனும் முத்தொழிலையும் தொடங்குவார்களாம். சக்தி மறுபடி கண்ணசைத்தால் நிறுத்துவார்களாம். அதனால் சக்தியை விடச் சிறந்த தெய்வம் வேறு இல்லை என்ற கருத்து அங்கே வருகின்றது.
இதைத்தான் அகத்திய முனிவரும் சொல்கின்றார்.
அன்னை கலைமகள், மலைமகள், அலைமகள் என மூவடிவமாய் நின்று உலகை இயக்குகின்றாள் என்பதையே ஆதிசங்கரரும் தன் கனகதாரா ஸ்தோத்திரப் பாடலில் சொல்கின்றார்.
“கீர்தேவதேதி கருடத்வஜ சுந்தரீதி
சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி |
ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலயகேளிஷு ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரி புவநைக குரோஸ்தருண்யை || “
கீர் என்றால் வாக்கு, தேவதேதி என்றால் தேவதை, கருடக்த்வஜ என்றால் கருடக்கொடியை (உடையவர்), சுந்தரீதி என்றால் சுந்தரி / அழகானவள்.
சாகம்பரி என்றால் காய் கனிகளை உண்டாக்குபவள் (நில மகள்)
இதி என்றால் இவள்.
சசி என்றால் நிலவை, சேகர என்றால் முடியில் (சூடியவர்). வல்லப என்றால் உயர் துணையாள்,
இதி என்றால் இவள், ஸ்ருஷ்டி என்றால் படைத்தல்.
ஸ்திதிப் என்றால் காத்தல், ப்ரளாய என்றால் அழித்தல், கேளிஷு என்றால் விளையாட்டாக
ஸம்ஸ்திதாயை என்றால் நிலைத்து இருப்பவள்.
தஸ்யை என்றால் அவளுக்கு, நம என்றால் வணக்கம் (போற்றி) , த்ரி புவநைக என்றால் மூன்று உலகுக்கும் ஒரே குரோ என்றால் ஒரே குருவின், தருண்யை என்றால் இளம் நாயகி எனப் பொருள்.
ஆகப் பாடலின் பொருள் இதுதான்
“கலைமாம கள்என்றும் கருடக்கொ டியானின்
அலைமாம கள்என்றுமாய்
நிலமாளும் சாகம்ப ரிஎன்றும் பிறைசூடும்
பெம்மானின் மலைமகளுமாய்
உலகத்திலே நின்று உயிர்படைத் துக்காத்து
முடிப்பதை விளையாட்டென
செய்பவள் மூவுலகம் ஆளும்நா ராயணனின்
நாயகியே போற்றிபோற்றி”
ஆம், அந்தச் சௌந்தர்ய லஹரியின் 97-வது சுலோகம் கூறுகிறது:
‘வேதம் அறிந்தவர் சரஸ்வதியைப் பிரம்ம பத்தினியாக, லட்சுமியை விஷ்ணு பத்தினியாக, பார்வதியை ருத்ர பத்தினியாக கூறுவர். பரப்பிரம்மத்துடன் இணைந்த பராசக்தியே! நான்காவதாகிய நீயோ இம்மூவருக்கும் அப்பாற்பட்டவளாய், இத்தகையவள் என்று கூற முடியாதவளாய், மகாமாயை எனப்பட்டவளாய் உலகு அனைத்தையும் ஆட்டி வைக்கிறாய்.’
இதுதான் புவனேஸ்வரி தாயின் பெரும் தத்துவம்.
காமகோடி ஸ்ரீசங்கராச்சாரியார், “தேவி, உன் மகிமையை மனதால் நினைக்கவும் முடியாது. ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார கிருத்தியத்துக்காக மும்மூர்த்திகளை உண்டு பண்ணி, இந்தக் காரியத்திற்கும் மேலான அதிதேவதையாக இருப்பது உனது ஸ்வரூபம். மூன்றுக்கும் மேலாக நான்காவதாக இருக்கிறவள் நீதான்” என்கிறார்.
அவள் “பரப்பிரம்ம மஹிஷீ” என்ற பெயரையும் கொண்டவள்.
உத்தம சாந்தியை விரும்புவோர் புவனேஸ்வரியை உபாசிக்க வேண்டும் என்று தசமகா வித்யா சமுத்திரங்களை எழுதிய காவ்ய கண்ட கணபதி சாஸ்திரி உருகி உரைக்கின்றார்.
அன்னை நவக்கிரங்களில் சந்திரன் அம்சம், சந்திரன் இருக்குமிடமே தாயின் ஸ்தானத்தைக் குறிப்பதாக ஜோதிட நுணுக்கங்கள் சொல்லும், அவ்வகையில் தாய் எனும் சக்தி அருக்கும் சந்திரனுக்கும் தொடர்பு உண்டு.
இன்னும் சந்திரனாலே மனதின் உணர்ச்சிகள் எண்ணங்கள் எழுகின்றன, சந்திரனே மனதிடம் மனோபலத்துக்கான அதிபதி என்பதும் ஜோதிடம் சொல்லும் உண்மை.
சந்திரன் மனதுக்கான கிரஹம், பௌர்ணமி, அமாவாசையில் கடல்மட்டம் எழுவதும் குறைவதும் கண் காணும் உண்மைகள்.
அதாவது, நீரானது பௌர்ணமி அன்று பொங்குகின்றது, அப்படி நீரால் இயங்கும் உடலிலும் நீரில் மிதக்கும் மூளையிலும் சில மாறுபாடுகள் வரும்.
அதனாலே சிலருக்குப் பௌர்ணமி அன்று ஒருவித அதீத எழுச்சிகள் வரும், நிலையற்ற தன்மை வரும், அமாவாசையில் அது தலைகீழாகும்
இதெல்லாம் மனம் சம்பந்தபட்டது. சந்திரன் என்பதற்கான பெரும் சான்றுகள், அதனாலே ஜாதகத்தில் சந்திரன் இருக்குமிடம் முக்கியமானது.
சந்திரன் கால நேரத்தை அளந்து தரும் கிரஹம், உணர்ச்சிகளின் அதிபதி, இன்னும் தெளிவாகச் சொல்லபோனால் ஈர்ப்பு விசைகளைக் கட்டுப்படுத்துபவர்.
பூமியின் ஈர்ப்பு விசை எப்படிச் சந்திர கிரஹணம், அமாவாசை, பௌர்ணமியில் மாறுமோ இன்னும் வளர்பிறை, தேய்பிறையில் மாறுமோ அப்படி மனம் கொள்ளும் பற்றுக்களில் இருந்தும் அதனை விடுவிக்கவும் கட்டிவைக்கவுமான சக்தி சந்திரனுக்கு உண்டு.
சந்திரனின் பார்வையே ஒரு பொருளைப் பற்றவும் செய்யும், மனம் விரும்பும் ஒன்றைத் துறக்கவும் செய்யும்.
இதனாலே பற்றற்றக் கோலத்துக்கு செல்ல சந்திரன் அருள் அவசியம், இறைவனைப் பற்றி நிற்க அந்த அருள் அவசியம்.
பூமி எல்லாப் பொருளையும் ஈர்க்கும். ஆனால், சந்திரனின் சக்தியால் அந்த ஈர்ப்பில் மாறுபாடு காட்டமுடியும், பௌர்ணமியில் கடல் பொங்குவது அப்படித்தான்.
சந்திரன் என்பது தாய்ஸ்தானத்தில் இருப்பது, அதனாலே சந்திரனாலே பூமியில் மழை பெய்யும், சந்திரனாலே நேரம், திதி என எல்லாம் வகுக்கப்படும், மாதம் வரை காட்டுவது சந்திரனே.
சந்திரனே பாச உணர்ச்சிகளுக்கு அதிபதி, தாயினை விட அன்பினைக் கொட்டுவார் யாருமில்லை எனும் வகையில் இந்த அன்னை பெரும் பாசமிக்கவள்.
அவள் தச அவதாரங்களில் வராஹ மூர்த்தி, இந்தப் பூமிக்கு ஆபத்து என்றவுடன் ஓடிவந்து அதனை மீட்டெடுத்த அந்த வராகத்தின் அம்சம் அதாவது பூமியினைக் காத்து நிற்கும் வலுவான சக்தி அவள்.
அன்னையினை வழிபட்டால் உலகின் எல்லாப் பெரிய இடமும் கிட்டும், இந்தப் புவியில் பெருவாழ்வு. வாழும் வரம் தரும். இந்தப் பூலோக வாழ்வினை அவளே மிகச் செழுமையாகத் தருவாள், அவளைப் பக்தியுடன் பூஜித்தால் இந்த உலகம் வசப்படும்.
அவளே ஜெகன் மாதா, அவளே அகிலாண்டேஸ்வரி .
அன்னையின் பெருமையினைப் “பிரபஞ்ச சார தந்திரம்”, “திரிபோவன ஷத்”, “சாரதா திலகம்”, “வாயு புராணம்” “தட்சணாமூர்த்தி சம்ஹிதை”, “தேவி பாகவதம்”, “மேரு தந்திரம்”, “ஸ்வட்சத சங்கமம்” என அன்னையின் பெருமைகள் சொல்லப்பட்டுள்ளன.
“வாஞ்சிதார்த்த ப்ரதாயினீ க்ஷிப்ர ப்ரஸாதினீ ” என்ற ஸ்லோகத்தின்படி வேண்டியவற்றை வேண்டிய படி அளிக்கவும், குறிப்பிட்ட காலத்தில் அருளவும் ஆற்றல் பெற்றவள் புவனேஸ்வரி தேவி.
அங்காள பரமேஸ்வரி என எல்லா இடமும் கொண்டாடப்படுபவள் இவளே, அவள் ஆலயமெல்லாம் அப்பெயரில் இருப்பது புவனேஸ்வரி தாயே.
இந்த இரவு அன்னைக்கானது, இந்தப் பூமி அவளின் ஆட்சி. இங்குள்ள எல்லாமே அவள் கொடுத்தது. அதனால் மண்விளக்கில் நெய் தீபமிட்டு நறுமலர் தூவி நல்ல அரிசியில் நைவேத்தியம் செய்து பட்டுசாற்றி அவளைத் தூபமிட்டு வணங்கினால் பெரும் பலன் உண்டு.
இந்த உலகில் நாம் வாழும் வாழ்வுக்கும், நாம் பெற்றிருக்க்கும் எல்லாவற்றுக்கும் அவளே பொறுப்பு, ஒன்றுமில்லாமல் இந்த உலகுக்கு வந்து எல்லாமும் பெற்று வாழ்கின்றோம் என்றால் அதற்கு ஒரே காரணம் அவளே, எல்லாமும் அவள் கொடுத்ததே.
அவளே நம்மைத் தாங்குகின்றாள், பாதுகாக்கின்றாள். வகை வகையாக உணவுப் படைக்கின்றாள். எல்லாமும் நமக்குத் தந்து இன்புற்றுவாழும் வழி செய்து கர்மம் தொலைக்கத் தாங்கி நிற்கின்றாள்.
அவளுக்கு நன்றி கூறி நிற்கும் இரவு இது, மறக்காமல் அவளுக்கு நன்றி மட்டும் சொல்லுங்கள். வேறு எல்லாமும் அவளே தருவாள்.
“ஓம் நாராயண்யை வித்மஹே, புவனேச்வர்யை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்”
எனும் அவள் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள், அப்படியே 108 முறை “ஓம் புவனேஸ்வர்யை நம” எனச் சொல்லி அவளுக்கு நன்றி மட்டும் சொல்லுங்கள். அந்த ஒன்றிலே கருணைமிகு தாயானவள் மிக அன்போடும் உருக்கத்தோடும் நமக்கு வேண்டியன எல்லாம் அள்ளி அள்ளி தருவாள். இது சத்தியம்.