தசமஹா வித்யா 05 : மஹா திரிபுர சுந்தரி.
தசமஹா வித்யா 05 : மஹா திரிபுர சுந்தரி.
பத்து தேவியரில் அடுத்த அம்சமானவள், பஞ்ச பூத தத்துவத்தின் வடிவமானவளும், மகா சக்தி நிரம்பியவளும் தேவர்கள் மற்றும் மும்மூர்த்திகளின் கடைசிப் புகலிடமும், பொய்யா நம்பிக்கையுமான அந்தத் திரிபுர சுந்தரி.
அவளே எல்லோருடைய ஆகக் கடைசிப் புகலிடம். எல்லோருடைய நம்பிக்கையும் ஏன் மும்மூர்த்திகளின் நம்பிக்கையுமே இனி முடியாது எனத் தவித்துப் போகும் நிலையில் கடைசியாக அவள் இறங்கி வந்து காப்பாள்.
இந்த உலகினைக் காக்கக் கூடியவர் திருமால், அவர் ஆபத்துகளில் இருந்து காப்பார். அவரை அடுத்துக் காக்கும் சக்தி கொண்டவர் பரமேஸ்வரன், அவர் பிரளயகாலத்தில் காப்பார். இந்த இருவராலும் முடியாததைச் செய்து காட்டி ஈடு இணையற்ற பெரும் அரசியாக இந்தப் பிரபஞ்சத்தை நடத்துபவள் அன்னை.
அப்படியான அன்னை எக்காலமும் மறைவாய் இருந்து அருள்புரிவார். ஆனால், மிக மிக முக்கியமான தருணத்தில் அவள் இறங்கி வந்து தன் மஹா சக்தியினை நிரூபித்து லோகத்தைக் காத்தருள்வாள். அப்படி அவள் எழுந்து வந்து காத்த காட்சிதான் பண்டாசுர வதம், திரிபுர சுந்தரியினைச் சொல்லும் புராணமும் அதுவே.
பல புராணங்களில் தேவி மஹாத்மியம் உள்ளிட்ட காட்சிகளில் அவள் பெருமை சொல்லப்பட்டாலும் பிரமாண்ட புராணம் அதனை வெகுவாக எடுத்துரைக்கின்றது.
அக்காலத்தில் சூரபத்மனை ஒழிக்க சிவனின் மகனே வரவேண்டும் எனும் நிலை இருந்தது. ஆனால், சிவனோ ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அந்தத் தவத்தில் இருந்து விடுபட்டு அவர் மகவு ஒன்றைப் பெறுதல் வேண்டி தேவர்களெல்லாம் ஆலோசித்தனர். வெறுமனே அவர் தவத்தைக் கலைப்பது அர்த்தமற்றது என்றும், அப்படி அவர் தவம் கலையும்போது அவர் மகவொன்றைப் பெறும்படி ஆசையில் திளைக்க வேண்டும் என்றும் மன்மதனை ஏவிவிட்டார்கள்.
மன்மதனுக்கும் அதில் அச்சம் இருந்தது, ஆனால் அவன் எப்போதும் விஷ்ணுவின் அன்புக்குரியவன் என்பதால் அவரை நம்பிச் சென்று சிவன் மேல் தன் மலர்க்கணைகளை ஏவினான். அதுபட்டு தவம் கலைந்த சிவபெருமான் மிகுந்த ஆத்திரத்தில் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து அவனை எரித்துப் போட்டார்.
அவன் சாம்பல் குவியலாய்க் கிடந்தான், மன்மதனின் மனைவி ரதி இதற்கு நியாயம் கேட்டுத் தேவர்களிடமெல்லாம் ஓடினாள், அவர்களும் ஓடிவந்தனர். தவம் கலைந்து எழுந்த சிவனும் நடந்ததை அறிந்து சிந்தித்தபடி நின்றார்.
பின் மன்மதனுக்குச் சிவன் உயிர் கொடுப்பது என முடிவாயிற்று, ஆனால் அவன் வேறு யார் கண்ணுக்கும் தெரியாதபடி அரூப உடலைப் பெற்றான். ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான், மற்றவர்கள் அவனை உணரமுடியுமே தவிர காண முடியாது, உடல் கிடையாது. காரணம், சிவனையே சோதிக்க முயன்றதால் கிடைத்த சாபம் அது.
அப்படி மன்மதனுக்கு உடல் அவசியமில்லை என்பதால் அவன் சாம்பல் அப்படியே கிடந்தது. இதனைத் தேவலோகச் சிற்பியான சித்திரகர்மா என்பவன் விளையாட்டாக மன்மதனைப் போலவே இளைய உருவமாகப் படைத்தான். அவன் நீருக்குப் பதிலாக அமிர்தம்விட்டுச் செய்ததால் அச்சிலை மெல்ல மெல்ல உயிர் பெற்றது.
சாம்பலில் இருந்து வந்ததால் அது பண்டன் என்றானது, சிவனின் நெற்றிக்கண் நெருப்பும், ஆசைமிக்க மன்மதனின் உடலும் கொண்ட சாம்பல் என்பதால் இந்த இரு இயல்பும் அவனுக்குள் நெருப்பாக இருந்தன.
அவன் பெரிய தவங்களைச் செய்ய ஆரம்பித்தான். சிவன் அவன் தவத்துக்கு இறங்கி வந்து அவன் கேட்டபடி “பிறந்து, வராத பெண் ஒருத்தியால் தனக்கு மரணம்” எனும் வரத்தைக் கொடுத்தார், அப்படியே பிரம்மனிடம் இருந்து தன்னை எதிர்ப்போரின் உயிர்சக்தியினை, ஆதார சக்தியினைக் கவரும் வரமும் பெற்றுக் கொண்டான்.
இதன்பின் அவன் ஆட்டம் அதிகமாயிற்று. சிவனின் நெற்றிக்கண் நெருப்பின் கொதிப்பும், மன்மதனின் ஆசையும் ஒருசேர அவனை ஆட்டிவைக்க பாணாசுரன் பெரும் சக்தியாய் எழுந்து எல்லா உலகையும் கைப்பற்றினான்.
வழக்கமாக அசுரர்கள் தேவலோகத்தைக் கைப்பற்றுவது ஒன்றும் ஆச்சரியம் அல்ல. ஆனால், இவனின் பாதிப்பு மிகக் கொடியதாய் இருந்தது. அதாவது, எல்லாத் தேவரின் உடலிலும் புகுந்து அவர்களின் இந்திரிய சக்தி முதல் எல்லாச் சக்தியினையும் உறிஞ்சிக்கொண்டிருந்தான்.
தேவர்கள் உடலிலே அவன் புகுந்து சக்திகளை எடுத்துக் கொள்வதால் அவர்கள் சருகுகள் போல வாடிய கீரைப் போல் ஆனார்கள். அவர்களால் எதுவுமே செய்யமுடியவில்லை, செயலற்றுப் போனார்கள். இனியும் தாமதிக்க ஒன்றுமில்லை என்பதால் விஷ்ணுவிடம் சரணடைந்தார்கள்.
அவரும், பிரம்மனும் இன்னும் எல்லாத் தேவர்களும் சிவனைச் சரணடைந்தார்கள், எல்லாத் தேவர்களின் சக்தியும் பலமும் பண்டாசுரனால் உறிஞ்செடுக்கப்பட்டன, யாராலும் அவனை எதிர்த்துக் கேள்விக் கேட்கக் கூட முடியா அளவு அடிமையானார்கள். அந்த அளவு அவன் எல்லாத் தேவரின் உடலிலும் ஊடுருவிக் கலந்திருந்தான்.
மும்மூர்த்திகளுமே செய்வதறியாது திகைத்தபோது நாரத முனிவர் அன்னையினை வேண்ட ஆலோசனைச்
சொன்னார். அவளே இந்தப் பெரும் துன்பத்திலிருந்து நம்மைக் காக்க முடியும், அழிந்தே போகும் இந்த நிலையில் இருந்து நம்மை மீட்டெடுக்க முடியும் எனச் சொன்னார்.
அதன்படி பெரும் யாகம் நடந்தது. சிவனே நெருப்பானார், பெரும் பெரும் பொருட்கள் இடப்பட்டு யாகம் பிரமாண்டமாக நடந்தது. ஆனால் அன்னை வரவில்லை, கடைசியில் தங்கள் அவயங்கள் ஒவ்வொன்றாய்த் தேவர்கள் அந்த நெருப்பில் இட்டார்கள், அந்த அவயங்களில் கலந்திருந்த பண்டாசுரன் வெளிப்பட்டு ஒதுங்கி நிற்கத் தொடங்கினான்.
அப்படி அவர்கள் தங்களையே தீயில் இட முயன்றபோது அன்னை ஆயிரம் சூரியனுடைய ஒளியில் எழும்பி வந்தாள். அவளின் தோற்றம் காண ஆயிரம் கண்கள் வேண்டியனவாக இருந்தது.
அவளின் மகா பிரம்மாண்ட வெளிச்சத்திலே தேவர்கள் உடலில் இருந்த பண்டாசுரன் உக்கிரம் தாளாமல் ஒதுங்கிப் போனான், அன்னை அந்தத் தேவர்களைக் கிளிகளாக்கித் தன் பின்னால் மறைத்துக் கொண்டாள்.
பண்டாசுரன் பெரும் போருக்குத் தயாரானான். அன்னை அவனை அழிக்க கரும்பு வில் சகிதம் வந்திருந்தாள். காரணம், அவன் மன்மதனின் சாம்பலில் இருந்து வந்ததால் அவள் மன்மதனின் ஆயுதத்தோடே வந்து பெரும் போர் தொடுத்தாள்.
முடிவில் அவனைச் சங்கரித்துப் போட்டு அழித்தாள், எந்தத் தேவர்களாலும் அழிக்கமுடியாத அவனை அன்னை அழித்துப் போட்டு மூவுலகையும் காத்தாள். மூவலகும் அவளால் விடுதலை அடைந்து வாழ்வு அடைந்தது. மூவுலகிலும் அவளுக்கு நிகரான அழகுமில்லை. ஆற்றலுமில்லை.
இதனால் அவள் திரிபுர சுந்தரி எனப் பெயர்பெற்றாள். மாபெரும் ஆற்றல் கொண்டிருந்ததால் அவள் மகா திரிபுர சுந்தரி என்றானாள்.
(வாலை குமரி எனும் திரிபுர சுந்தரி வேறு. திரிபுர வைரவி வடிவம் வேறு.)
“பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே”
என அன்னையின் இந்தக் கோலத்தைப் பாடுகின்றார் அபிராமி பட்டர்.
அன்னை கரும்பு வில் ஏந்தி வந்த கோலத்தை இங்கே காட்சிப்படுத்துகின்றார் பட்டர்.
ஐந்து பானம் என்றால் ஐந்துவகை புலன்களாலும் எழும் ஆசை. பெண்ணைக் கண்டோ, அவள் குரல் கேட்டோ, நறுமணமோ, தொடுதலோ என எதுவோ தூண்டிவிடும் ஆசை. இதனை ஐந்து மலருக்கு ஒப்பிட்டார்கள். அந்த ஐந்து மலர்களான தாமரை மலர், அசோக மலர், குவளை மலர், மாம்பூ, முல்லை மலர் ஆகிய ஐந்தும் பார்வைக்கு, மணத்துக்கு, மென்மைக்கு என ஒவ்வொரு தனித்துவ ஈர்ப்பைக் கொண்டது.
கரும்பு என்பது இனிமையானது மட்டுமல்ல அதன் ஒவ்வொரு துண்டும் மறுபடி மறுபடி வளரக்கூடிய சக்தி கொண்டது. அந்தச் சுழற்சியில் வரும் ஆசைக்குத்தான் கரும்பும் ஐவகை பாணங்களும் அடையாளத்தைச் சொல்வது.
அன்னையினை வழிபட்டால் உலகின் மயக்கங்களில் இருந்து விடுபடலாம், அன்னை அந்தச் சக்தியினை அருள்வாள் என்பது அந்த அடையாளத்தின் விளக்கம்.
“இன்சொல் திரிபுரசுந்தரி” அன்னையினைப் புகழும் பட்டர் அப்பாடலில் சொல்லும் பொருள் இதுதான்.
“சிலம்பு அணிந்த பாதங்களைக் கொண்டவளும், கையில் பாசாங்குசமும், ஐந்துகணைகளும் கொண்டவளே, இனிமையான மொழிகொண்ட திரிபுர சுந்தரியே, தீமை குடியிருக்கும் வஞ்சகர்கள் இருந்த முப்புரத்தை அழிக்க மேருவினை வில்லாக்கிய சிவனில், அந்த நெருப்பு மேனியில் சரிபாதியாகக் குடியிருப்பவளே என் அன்னையே” என அன்னையின் பெருமையினைப் பாடுகின்றார்.
இன்னுமோர் பாடலில் இந்தத் திரிபுர சுந்தரியினைப் புகழ்ந்து பாடுகின்றார் பட்டர்.
“பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே”
“நான் பார்க்கும் திசைகளில் எல்லாம் என் அன்னையே கைகளில் பாச அங்குசத்துடன், ஐந்து மலர்க்கணைகளுடன் கரும்பு வில்லுடன் சிறிய இடையுடன் கச்சை அணிந்த மார்மேல் குங்குமமும், முத்துமாலையும் அணிந்த தோற்றத்துடன் நீயே தெரிகின்றாய், என் அல்லல் நீக்கும் திரிபுரையான நீயே தெரிகின்றாய்” என்பது பாடலின் பொருள்.
இந்தப்பாடலில் புராணச் செய்தி ஒன்றைச் சொல்லி அன்னையின் பெரும் புகழை மறைமுகமாகப் பாடி, அன்னை பண்டாசுரனை அழித்த அந்தத் திரிபுர சுந்தரி கோலத்தைச் சொல்லிப் பாடுகின்றார்.
“பண்டாசுர வதோத் யுக்த சக்தி ஸேனா சமன் விதா” லலிதா சகஸ்கரநாமத்தின் ஒருவரி. அதாவது, பண்டாசுர வதத்திற்கு ஆயத்தமாக இருக்கும் சக்திகளின் சேனைகளால் சூழப்பட்டவள் என்பது இதன் பொருள்.
இந்தப் பண்டாசுரன் கதையினைத்தான் அங்கே அவனை அழிக்க அன்னை திரிபுர சுந்தரி எனும் திரிபுரையாக வந்து அவனை வென்றதைத்தான் இங்கே சொல்கின்றார் பட்டர்.
பண்டாசுரனை அழிக்க அன்னை திரிபுர சுந்தரியாகத் தோன்றினாள், திரி என்றால் மூன்று. சரஸ்வதி, லஷ்மி, பார்வதி எனும் முப்பெரும் தேவியரின் சாயலாய் அவள் தோன்றினாள். அவள் பண்டாசுரனை எதிர்க்கொண்டாள், காமன் சாம்பலில் இருந்து எழும்பிய பண்டாசுரனைக் கரும்பு வில், ஐந்து அம்புகள் எனும் காமனின் ஆயுதங்களுடன் எதிர்க்கொண்டாள்.
அந்தப் போர் இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. பண்டாசுரன் அவளைத் தாக்க முனைந்தபோது அவள் தன் இரு கைவிரல்களையும் சொடுக்கினாள், அங்கிருந்து பத்துத் தேவியர் உருவானார்கள்.
“கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி” என்றொரு லலிதா சகஸ்கரநாம ஸ்லோகம் உண்டு. அதாவது, அன்னையில் இருந்து உதித்த தேவியரெல்லாம் நாராயணன் அம்சம் எனப் பொருள்.
அப்படிப் பத்துத் தேவியர் உதித்தார்கள்.
காளி, தாரா, சுந்தரி, புவனேஸ்வரி பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி, கமலாத்மிகா எனப் பத்துப் பேர் உருவானார்கள். இவர்களெல்லாம் சேர்ந்து யுத்தம் செய்து பண்டாசுரனை முடக்கினார்கள். இறுதியாக அன்னை அவனை ஒழித்துக்கட்டி எல்லா உலகையும் மீட்டாள் என்பது புராணம்.
இதையெல்லாம் சொல்லி அன்னையின் பெருமையினைப் பாடித் திரிபுர சுந்தரியினைத் துதிக்கின்றார் பட்டர்.
பண்டாசுரன் என்பதன் லௌகீக வடிவம் தாண்டி ஆன்மீக வடிவம் நுணுக்கமானது, பண்டாசுரன் என்பவன் காமனின் சாம்பலில் இருந்து உருவானவன் என்பது சாதாரணம் அல்ல, எளிதாகக் கடக்கக் கூடியதும் அல்ல.
சாம்பலில் இருந்து பண்டாசுரன் எழும்பியது போல வென்றுவிட்டதாகக் கருதினாலும் காமம் அடங்காதது, அது எவ்வளவு கொன்றாலும் மீண்டும் எழும்பிவரும் சக்தி கொண்டது.
அதனை வெல்ல அன்னையின் அருள் அவசியம், அன்னை காமனை வென்ற அடையாளங்களைத் தன்னோடு வெற்றிச் சின்னமாக வைத்திருப்பவள். அவளை அண்டினால் எல்லா ஆசைகளும் அடங்கும், பாண்டாசுரனை வென்ற அந்தத் திரிபுரை நம் மனக்கிலேசம் எல்லாமும் நீக்குவாள்.
அப்படியே ஐம்புலன்களையும் அடக்கி அந்தத் திரிபுரையினைத் தியானித்தால் பெரும் ஞானம் ஏற்படும், எல்லா இடத்திலும் இறைவனைக் காணும் அந்த முக்தி நிலை வாய்க்கும்.
அன்னை இந்தப் பிரபஞ்சத்தை மட்டுமல்ல ஒவ்வொருவரின் ஆத்மாவினையும் மீட்டுக் காப்பாள், அவளை அண்டியோர்க்கு எந்தப் பெரிய மாயையும் ஆபத்தும் பனிபோல் மறைந்துவிடும், அன்னையின் மகத்தான சக்தியில் எல்லா ஆபத்தும் அழிக்கப்படும்.
“பண்ட சைன்ய வதோத்யுக்த ஷக்தி விக்ரம ஹர்ஷிதா”, “நித்ய பராக்ரமாடோப நிரீக்ஷண சமுத்சுகா” , “பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா”, “மந்திரிண்யம்பா விரசித விஷங்கவத தோஷிதா”
இதெல்லாம் லலிதா சஹஸ்ரநாமம் அவளைப் பற்றிச் சொல்லும் வரிகள், பண்டாசுரனை அழித்த கோலத்தைச் சொல்லும் வரிகள்.
அன்னை நவக்கிரகங்களில் புதன் சாயல், புதன் கிரஹம் தரும் பலனெல்லாம் அவள் தருவாள், புதனுக்கே மூல சக்தி அன்னை.
நுணுக்கமான பிரபஞ்ச ரகசியத்தைத் தருபவர்தான் புதன் பகவான். புதன் கிரகம் வலுப்பெற்றிருந்தால் கல்வி எளிதில் வரும், கலைகள் வரும், பேச்சுவன்மை கூடும் என்பதெல்லாம் இந்த அடிப்படையே.
பல சூட்சும ரகசியங்களை, பல கணக்குகளை, பல கால அளவின் பலன்களை உணர்த்தி அருள்பவர் புதன் பகவான், அதனாலே அவர் கல்விக்கு அதிபதி, கல்வி வரம் வழங்கும் கிரஹம்.
புதன் என்பவர் சிந்திக்கக் கற்றுத்தரும் கிரகம், சிந்தனையினைத் தூண்டி துலங்க வைக்கும் அருளைத் தரும் பகவான், பிரபஞ்ச ரகசிங்களைப் பிரபஞ்சத் தத்துவங்களை அள்ளி அள்ளி தரும் அற்புதமான கிரஹம்.
புதன் ஜாதகத்தில் வலுவாக இருந்தால்தான் கல்வி வரும்; தெளிவு வரும்; நாலு விஷயங்களை நயம்பட விளக்கும் புரியும்படி விளக்கும் சக்தி வரும்; செல்வாக்கும் சொல்வாக்கும் வரும்.
அழகுற புரிதலும் புரிந்தததைத் தெளிவுறச் சொல்வதும் புதனின் கருணையே.
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் தெளிவும், நல்ல சிந்தனையும் தொழிலில் பாண்டித்யம் அதாவது நல்ல தேர்ச்சி நிலையும் இருத்தல் வேண்டும். தொழில் பலம் சிறக்க மனமும் சிந்தனையும் அவசியம், புதன் புத்திகாரகன்.
வாழ்வில் எது அவசியம் என்றால் இரு விஷயம் மகா முக்கியம்.
முதலில் தனக்கு எது பொருந்தும், எது பொருந்தாது என்பதைத் தெளியவைப்பது, இன்னொன்று எந்த இடத்தில் எப்படி நடந்துகொண்டு காலம்பார்த்து, இடம்பார்த்து நபர் பார்த்து, சூழல் பார்த்துத் தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்பது.
இதை அருள்வது புதன் பகவான்.
எது மிகச் சரியாக ஒருவனுக்குப் பொருந்துமோ? எந்தக் கர்மாவுக்காக அவன் படைக்கப்பட்டிருக்கின்றானோ அதைத் தெளிவாக உணரச் செய்து, அதை நோக்கி அவன் செல்லவும், தன் கர்மாவினைச் சரியாகச் செய்ய என்னென்ன அவன் கற்க வேண்டுமோ எல்லாம் கற்க வழி செய்வார் புதன் பகவான்.
இரண்டாம் விஷயம், எதையும் உடனே ஏற்றுக்கொள்ளாமலும், உடனே புறக்கணிக்காமலும் இரண்டையும் நடுநிலையாய் அலசிப் பார்த்து, எது சரி எது தவறு எது உண்மை எது மாயை என அறிந்து முடிவெடுப்பது.
இந்த நடுநிலையான தன்மையினைத் தருபவர் புதன், அன்னை அந்த வரத்தை அருள்வாள்.
இந்த அன்னைதான் காமேஸ்வரன் எனச் சிவனை மாற்றிய காமாட்சி, சிவன் காமனை எரித்துப்போட்ட இடம், காஞ்சி மயானம். அதனாலே, அவள் காஞ்சியிலே காமாட்சியாகக் குடிகொண்டிருக்கின்றாள்.
காமம் என்பது நெருப்புப் போன்றது. அதைத் தெய்வீகமாகப் பயன்படுத்தினால் தெய்வத்தை அடையலாம் என்பதைச் சொல்லியபடி அவள் காமாட்சியாக அருள்பாலிக்கின்றாள்.
அவளை அண்டியோர்க்கு எல்லா மாயையும் அகலும், எல்லா ஆசையும் கட்டுக்குள் வரும், மனம் ஞானத்தின் பால் திரும்பும். அவள் பெரும் ஞானமளித்து முக்தியும் அளிப்பாள்.
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்திலும் உண்டு எனும்படி அந்தப் பண்டாசுரனின் சாயல் ஒவ்வொரு மானுடரிலும் உண்டு. என்னதான் ஆசைகளைக் கட்டுப்படுத்தினாலும், மனதை அடக்கினாலும் மனதின் ஆசைகளை எரித்துப் போட்டாலும் அது நேரம் பார்த்து எழும்.
தேவர்களுக்குள் பண்டாசுரன் ஊடுருவியது போல ஆசைகள், மனம், சிந்தை, உணர்வு என எல்லாவற்றிலும் கலந்து நம்மை அடிமைப்படுத்தும். இந்திரியங்களை வளைத்து ஒருவனை முடக்கிப் போடும்.
பண்டாசுரன் என்பவன் என்றோ வாழ்ந்தவன் அல்ல, அவன் இன்றும் ஒவ்வொருவர் மனதோடு கலந்திருக்கின்றான். புலன்களுக்கும் சிந்தைக்கும் சுகமெனும் மயக்கம் கொடுத்து அவர்களை உறிஞ்சிக்கொண்டிருக்கின்றான்.
அன்னையினை அண்டினால், அவளை வேண்டினால், அவள் நம்முள் இருக்கும் அந்த அசுரனை முழுக்க அழித்துப்போட்டு நம்மைக் காத்து நிற்பாள்.
அன்னைக்கு நாடெங்கும் கோவில்கள் உண்டு. மகமாயி என அழைக்கப்படுபவள் அவளே. முப்பிடாரி எனக் கிராமங்களில் வணங்கப்படுபவளும் இந்த அன்னையே.
மூன்றுமுகம் கொண்டவள் எனப் போற்றப்படுபவளும் இவளே.
இந்த அன்னைக்கு எல்லா இடமும் கோவில் பிரசித்தி என்றாலும் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பிரசித்தியான கோவில் உண்டு, அந்தப் பிரதேசமே அவள் பெயரில்தான் திரிபுரா என அழைக்கப்படுகின்றது.
வங்கம் முழுக்க இருந்த அன்னை வழிபாடு வடகிழக்கிலும் உண்டு. பின்னாளில், வங்கதேசம் என இஸ்லாமிய உருமாற்ற பூமியாக ஒரு பகுதி இழக்கப்பட்டாலும் வடகிழக்கில் இந்துமதம் வலுவாக எக்காலம் போல் உண்டு.
மிக ஆச்சரியமான விஷயமாகச் சிவனுக்குத் தாட்சாயணி தசமஹா வித்யா கோலம் காட்டியபோது திரிபுரசுந்தரி நின்ற இடம் வடகிழக்கு, இன்றும் இந்திய தேசத்தை அவள் வடகிழக்கில் இருந்தேதான் காக்கின்றாள்.
காசி ஆலயம் மீண்டபின் அவளின் திரிபுரா ஆலயமும் மீளகட்டப்பட்டிருக்கின்றது. மீட்டெடுக்கப்பட்ட அந்தச் சிறப்பான ஆலயத்தைத்தான் நவராத்திரி முதல் நாளில் வழிபட்டார் பாரத பிரதமர் மோடி.
இந்த அன்னை மகா சக்தி கொண்டவள், யாராலும் முடியாது எனக் கைவிடப்பட்ட ஒரு விஷயத்தை மிக வெற்றிகரமாக முடித்துத் தன் பக்தர்களுக்குத் தருபவள்.
இவளே என்றும் 16 வயது நிரம்பிய ஷோடசி, இவளே அரசிக்கெல்லாம் அரசியான ராஜராஜேஸ்வரி.
தசாவதாரத்தில் இவள்தான் கல்கி அவதாரம், அதாவது எப்படித் தேவர்கள் பண்டாசுரனிடம் அவர்கள் அறியாமலே சிக்கினார்களோ அப்படிக் கலி எனும் அறிவியலிடம் விஞ்ஞானத்திடம் இந்த மானிடச் சமூகம் சிக்கும்.
எப்படி இப்போது மானுட உடலில் ஸ்ட்ன்ட் என்றும், சிப் என்றும் மெல்ல எந்திரம் புகுந்துகொண்டிருக்கின்றதோ அப்படிப் பிற்காலங்களில் முழுக்க மானுடம் இந்த விஞ்ஞான கலியிடம் அடிமைப்பட்டுப் போகும்.
செயற்கை நுண்ணறிவு என இன்று மெல்லத் தலைக்காட்டும் கலி பின்னாளில் இந்த மானுட இனத்தையே காலில் இட்டு மிதித்துத் தன் ஆட்சியினை நிறுவும். பின், அது நிலவினைச் சூரியனைக் கட்டுப்படுத்தக் கிளம்பும். இந்தப் பிரபஞ்சத்தையே கைப்பற்ற எழும். அதில் ஓரளவு வெற்றியும் பெறும்.
அந்நேரம் அன்னை கல்கி அவதாரமாய் வந்து எப்படி அன்று பண்டாசுரனை அழித்து உலகைக் காத்தாளோ அப்படி இந்தக் கலியினை அழித்து உலகைக் காப்பார்.
இன்று நம்மையும் அறியாமல் இந்த விஞ்ஞான உலகத்தில் பல விஞ்ஞான மாயைகளுக்கு நாம் அடிமையாகின்றோம், மெல்ல மெல்ல இந்த விஞ்ஞானம் பெரும் சிக்கல்களின் காரணமாகின்றது.
அன்னையினை வணங்குவோர்க்கு இந்தத் திரிபுர சுந்தரியினை வணங்குவோர்க்கு எக்காலமும் எந்தப் பிரச்சினையும், விஞ்ஞானம் அஞ்ஞானம் என இரண்டிலுமே வராது. அஞ்ஞானம் என்றால் இருள் அதாவது பண்டாசுரன் எனும் பெயருக்கே அறியாமை இருள் என்றே பொருள்.
பண்டாசுரனின் கதைதான் உலகெல்லாம் இந்துமதம் பரவிய காலங்களில் ஐரோப்பாவிலும் இருந்தது. இன்றும் “பண்டோரா பாக்ஸ்”, “பீனிக்ஸ் பறவை” எனச் சொல்லப்படும் மேற்குலக வார்த்தைகளில் பண்டாசுரனின் சாயலும் உண்டு.
கிரேக்க ரோம மதங்களில் அராபியாவின் பண்டைய மதங்களில் திரிபுர சுந்தரி உண்டு. அப்படியே பௌத்தத்தின் இன்னும் சில பிரிவுகளில் அவள் உண்டு.
இந்த இரவு அவளுக்கானது. விஞ்ஞானம் எனும் பண்டாசுரனின் அட்டகாசம் தொடங்கியிருக்கும் காலத்தில் வாழும் நாம் அவளைத் தொழுதல் அவசியம். அவளை அண்டி பற்றி நின்றால் இந்தக் கலிகாலத்தில் வரும் எல்லாத் தொல்லைகளில் இருந்து மனதாலும், உடலாலும், சிந்தையாலும் அவள் விடுதலைத் தந்து பெரும் மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் வாழவைத்து முக்தியும் தருவாள். இது சத்தியம்.