தசமஹாவித்யா 09 : ராஜ மாதங்கி.
தசமஹாவித்யா 09 : ராஜ மாதங்கி.
தசமஹா வித்யாவில் அடுத்து வருபவள் அன்னை மாதங்கி. சியாமளா தேவி என வழங்கபடுபவளும் இவளே, இந்தப் பிரபஞ்சத்தில் கோடான கோடி உயிர்கள் படைப்புக்கள் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு சிறப்பு மானிடருக்கு உண்டு. அது உணர்வுகளைத் தக்கபடி வெளிப்படுத்துவது, மானிட இனத்தின் சிறப்பு அதுதான்.
அப்படிச் சரியாகச் சிந்திப்பதும் சிந்திப்பதை வெளிப்படுத்துவதும் யார் சரியாகச் செய்வார்களோ அவர்கள் பெரும் இடம் அடைவார்கள். சரியாக உணர்ந்து அதைச் சரியாக வெளிப்படுத்தி மற்றவர்களை வசப்படுத்துவது ஒரு கலை, அந்தக் கலை இருவகைப்படும்.
முதலாவது, அரசியல் மற்றும் இதர அறிவுகள். சாணக்கியன் முதல் சீனிவாச ராமானுஜன் வரை அவ்வகை, இரண்டாம் வகையினர் காளிதாசன் கம்பன் முதல் குமரகுருபரர் பாரதி வரை.
இவர்கள் அனைவரிலும் அன்னையின் அருள் உண்டு, இந்த அருளில் யாரும் சொல்லமுடியாததைச் சொல்ல முடியும், யாரும் செய்யமுடியா அற்புதங்களைச் செய்யமுடியும், யாரும் பெறமுடியா பெரும் இடம் பெறமுடியும், எல்லோரையும் எளிதில் வசீகரிக்கவும் முடியும்.
எல்லா வகை ஞானம், எல்லாக் கலைகளையும் தந்து அவர்களுக்குக் காவலும் இருப்பவள் அன்னை, 64 கலைகளும் அவளில் இருந்தே தோன்றுகின்றன.
ஒரு கவிஞன் என்பவன் எடுத்த உடனே எழுதிவிடமுடியாது, வெறும் வார்த்தைகளை அடுக்கிவிட்டுச் செல்லமுடியாது, யாருக்கு எல்லா விஷயத்திலும் ஆழ்ந்த ஞானம் உண்டோ, எல்லா உயிர்களையும் எல்லாப் பக்கங்களையும் இந்த மகாபிரபஞ்சதின் ஒவ்வொரு அங்குலத்தையும் எவன் அளந்து வைத்திருப்பானோ, அவனே நல்ல கவிஞனாக முடியும், அவனுக்கு எல்லாமும் தெரிந்திருதால் மட்டுமே அது சாத்தியம்.
அன்னை அந்த வரத்தை அருள்வாள். அதனாலே “ஆயக் கலைகள் அறுபத்திநான்கினையும் அருள்வாள் என் அன்னை” எனப் பாடினான் கம்பன்.
இந்த அன்னை ஆதிபராசக்தியின் தனி வடிவமானவள். இந்த உலகை நீங்கள் கவனித்தால் ஒவ்வொன்றும் அழகாகவும் ஞானமாகவும் படைக்கப்பட்டிருப்பதை அறியலாம், இந்தப் பிரபஞ்சம் அவ்வளவு அழகானது, அதிலும் பூமி அவ்வளவு அழகானது.
புவியீர்ப்பு விசை என்பது வெறுமனே அது எல்லாரையும் தன் பக்கம் இழுப்பதல்ல. அதைத் தாண்டி இங்குக் காணும் எல்லாமும், இங்குக் கிடைக்கும் எல்லாமும் மனிதரை மயக்கி தன்பால் வைத்துக்கொள்ளும் சக்தி கொண்டது.
அந்தரத்தில் தொங்கிச் சுழலும் பூமியில் நீலக் கடல், வெள்ளிப் பனிமலை, பசுமையான அதன் பரப்பு, வளைந்தோடும் ஆறுகள், அது கொடுக்கும் வழமை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு, பறவைகள் விலங்குகள் கால்நடைகள் என ஒவ்வொன்றும் கோடிகணக்கான அழகுகள்.
பூமி கொடுக்கும் தங்கம் முதல் தாதுக்கள் வரை எல்லாமே அழகு. அவற்றைக் கொண்டு செய்யப்படும் நகைகள் முதல் சிற்பம் வரை இன்னும் அழகு, கோடான கோடி உணவு வகைகளின் சுவையும் அழகும் இன்னும் தனிக்கணக்கு
அதிகாலை வானம் அந்திவானம் என இயற்கையும் , மழைக்காலம் வெயில்காலம் என எல்லாமும் அழகு.
அழகு என்பதோடு மட்டுமல்லாமல் அது இயக்கப்படும் முறை அற்புதமானது. சூரியனுக்கு ஒரு கணக்கு, சந்திரனுக்கு ஒரு கணக்கு என்பதில் தொடங்கி, முறையான மழை இதமான குளிர் என எல்லாமும் அற்புத்மானது, கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா முதல் தேனி, சிட்டுக்குருவி தொடங்கி யானை கடல்வாழ் மீன்கள் என ஒவ்வொரு உயிரும் இயங்கும் ஞானம் இன்னும் மகத்தானது.
இந்த உணர்வின் தேவிதான் இந்த அற்புதமான வசீகரிக்கும் அழகும் கலையும் கொண்டு உலகை இயக்கும் அந்த அம்சம்தான் மாதங்கி அல்லது சியாமளா தேவி.
மடியில் வீணையும் கையில் கிளியும் இன்னும் மலர்களும் ஏந்தி காட்சி அருள்பவள் அவள், ஷியாமளை எனும் சொல்லுக்குக் கரும்பச்சை நிறத்தவள் எனப் பொருள்.
இந்தச் சியாமளா தேவியின் தொடக்கம் பண்டாசுரனனா போரின்போது சொல்லப்படுகின்றது, அந்தப் போரில் அன்னையிடமிருந்து அவள் வெளிப்பட்டு போரிட்டாள் என்பதைத் தேவி மஹாத்மியம் முதல் பல புராணங்கள் சொல்கின்றன, அதன் பொருள் அன்னை தன் வசீகரிக்கும் சக்தியால் அசுரர்களை அழித்துப்போட்டாள் என்பது.
இப்படியான அன்னை அவதாரமும் செய்தாள், அவள் தேர்ந்து கொண்ட முனிவர் மதங்க முனிவர்.
இந்த மதங்க முனிவர் இமயவானை நன்கு அறிந்தவராக இருந்தார், அதன்படி இமயவான் போல் தனக்கும் அன்னையே மகளாக பிறக்க வேண்டும், தான் அவளை வளர்க்கவேண்டும் எனப் பெரும் விருப்பம் கொண்டிருந்தார், அதற்காகப் பெரும் தவம் இயற்றினார்.
அவர் தவமியற்றிய இடம் இந்தியத் தமிழத்தில் திருவெண்காடு எனும் தலமாக இருந்தது. பெரும் சோதனைகளைத் தாண்டி அவர் தவத்தில் வென்றபோது அன்னை தடாகத்தில் குழந்தையாய் எழுந்தார்.
அவளைத் தன் மகளாக வளர்த்தார் மதங்க முனிவர், முனிவர் மகளாக வளர்ந்ததால் அவள் மாதங்கி என்ற பெயரும் பெற்றாள்.
எப்படி இமயவான் மகளாக பார்வதி எனும் பெயரோடு வந்தாளோ, மதுரையில் மலையத்துவஜன் மகள் மீனாட்சியாக வந்தாளோ அப்படி மதங்க முனிவரின் மகளாக வந்தவள் இந்த மாதங்கி.
அவளுக்கு உரிய பருவம் வந்தபோது சிவனே வந்து திருமணம் செய்து கொண்டார். இதனால் இன்றும் திருவெண்காட்டில் அவர் மாதங்கீஸர் என அருள்பாலிக்கின்றார்.
இந்த மாதங்கி அன்னைதான் சியாமளை. அவளே எல்லாக் கலைகளுக்கும் அதிபதி, கலைகளைக் கொண்டு ஒருவனுக்கு பெரும் இடம் தருபவளும் அவளே. ஷியாமளா தேவி எனும் கலைவடிவம் அவளே.
புராணங்கள் இன்னும் அவள் பெருமையினைப் பேசுகின்றன.
அவளுக்கு உப அங்க தேவதைகளாக ஹசந்தி ஷ்யாமளா, சுக ஷ்யாமளா, சாரிகா ஷ்யாமளா, வீணா ஷ்யாமளா, வேணு ஷ்யாமளா, லகுஷ்யாமளா என ஆறு தேவியர் உண்டு என்கின்றது.
அன்னையின் பெருமை லலிதா சகஸ்ரநாமம்’,ஸ்ரீசாக்த ப்ரமோதத்தம்’, மீனாக்ஷி பஞ்சரத்னம்’,ஸ்ரீவித்யார்ணவம்’, சாரதா திலகம்’,நவரத்ன மாலா’ போன்ற பல நூல்களில் சொல்லப்படுகிறது.
இந்த அன்னையே இசைவாணியாகவும், வாக் தேவதையாகவும் வர்ணிக்கப்பட்டு வணங்கப்படுகிறாள். எல்லாக் கலைகளின் தேவதையாகவும், அரச போக வாழ்வை அளிப்பவளாகவும் இவளே விளங்குகிறாள்.
சியாமளா நவரத்னமாலை, சியாமளா ஆவரணம், மாதங்கி ஸஹஸ்ரநாமம், சியாமளா தண்டகம், சியாமளா கவசம், மாதங்கி ஹ்ருதயம், ராஜமாதங்கி மந்த்ரம், மாதங்கி ஸ்தோத்திரம், மாதங்கி சுமுகி கவசம், ஸ்யாமளா சஹஸ்ரநாமம் போன்ற பல துதிகள் இந்த அன்னையின் புகழைப் போற்றுகின்றன.
இந்த மாதங்கிதான் மதுரை மீனாட்சியின் அம்சம், மீனாட்சி அன்னையின் வழிபாடு அப்படியே சியாமளாவின் அருளையும் பெற்றுத் தரும், இதனாலே மதுரை அம்மன் எல்லாக் கல்விக்கும் கலைக்கும் பெரும் அதிபதியானாள். அவளிடமிருந்தே எல்லாக் கலைகளும் எல்லாருக்கும் வந்தன குமரகுருபரர் உள்பட.
இந்த அன்னையின் பெருமையினைக் கம்பனும், அபிராமிபட்டரும் அற்புதமாகப் பாடிவைத்தார்கள். நான்கே வரிகளில் அதனை மிக அற்புதமாக ஆழமாகச் சொன்னவர் பட்டர், சரஸ்வதி அந்தாதியில் இன்னும் அழகாகச் சொன்னான் கம்பன்.
முதலில் அபிராமிபட்டர் பாடியதைக் காணலாம்.
“கண்களிக்கும் படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சைவண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே”
பாடலின் விளக்கத்தை ஒவ்வொரு வரியாக காணலாம், காரணம் அன்னை மாதங்கியினை இதைவிட இன்னொருவர் பாடிவிட முடியாது என்பதால் ஒவ்வொரு வரியும் முக்கியம்.
“கண்களிக்கும் படி கண்டுகொண்டேன்” என அன்னையினைத் தான் உணர்ந்ததைச் சொல்லும் பட்டர் அடுத்து “கடம்பாடவியில்” என்கின்றார்.
கடம்பாவி என்பது கடம்பவனம் எனும் இடத்தைக் குறிப்பது, அக்காலத்தில் கடம்ப மரங்கள் நிரம்பியிருந்ததால் மதுரை ஆலயத்துக்கு இந்தப் பெயர்வந்தது, அங்கிருக்கும் அன்னையினையே இப்பாடலில் குறித்துச் சொல்கின்றார் பட்டர்.
அடுத்து “பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்” என்கின்றார்.
பண்களிக்கும் என்றால் மிக இனிமையான பண்களைக் கொடுக்கும் வீணை என்ற பொருளும், இனிமையான பண்களே அன்னையின் வீணைக்கு நாணும் எனும் இன்னொரு பொருளும் உண்டு.
சௌந்தர்ய லஹரியில் ஒரு புராணக் கதை உண்டல்லவா? கலைமகள் அன்னை அம்பிகையின் சந்நதியில் வீணை வாசித்தாள், அதைக் கேட்ட அம்பிகை “நல்ல இசை” எனச் சொன்னதைக் கேட்டு கலைமகள் வீணையினைக் கீழே வைத்துவிட்டாளாம்.
காரணம், அம்பிகையின் மொழியே அவ்வளவு அழகான இசையாக இருந்ததாம், அப்படியான அன்னைக்கு தன் வீணை இசை வீண் எனக் கலைமகள் தலைக்குனிந்தாளாம்.
இந்தக் காட்சியினை நினைவுக் கூர்ந்து “பண் களிக்கும் வீணை” என்கின்றார் பட்டர்.
அடுத்து “கையும்” என்கின்றார்.
அது எப்பொழுதும் வரமருளும் படியும், அபயம் அளிக்கும்படியும் இருக்கும் அந்தக் கையினைத் தரிசித்து அடுத்து, “பையோதரமும்” என்கின்றார்.
’பையோதரம்’ எனும் வார்த்தைக்கு ஞானப்பாலைக் கொண்ட தனங்கள் என்று ஒரு பொருளும், கரும்பு என இன்னொரு பொருளும் உண்டு.
இப்படி அன்னையின் திருக்கோலத்தை பாடும் பட்டர் அடுத்த “மண்களிக்கும் பச்சைவண்ணமும் ஆகி” என்கின்றார்.
அன்னைக்குச் “சியாமளா தேவி” என்றொரு நாமம் உண்டு. சியாமளை எனும் சொல்லுக்குச் கரும்பச்சை அல்லது பச்சை நிறம் எனப் பொருளும் உண்டு.
இவ்வுலகில் தாவரம் பச்சை, பயிர்கள் பச்சை, எதெல்லாம் உயிர்கொண்டதோ எதெல்லாம் மானிடம் வாழ வழி செய்யுமோ அதெல்லாம் நிலத்தில் அசையா நிலையில் பச்சை.
அன்னையினை அந்த சக்திவடிவமாய் உணர்ந்த ரிஷிகள் அவளைச் சியாமளை என்றார்கள்.
மதுரை அன்னைக்குப் பச்சைநிற ஆடை உடுத்துவது இந்த அடிப்படையிலே, அதை இங்குக் குறிப்பிட்டுச் சொல்லும் பட்டர் அடுத்து “மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே” எனப் பாடி முடிக்கின்றார்.
முன்பு அன்னை பிரம்மனின் மகனாகக் கருதப்படும் மதங்க முனிவரின் மகளாக மாதங்கி எனும் பெயரோடு பிறந்தாள், பின் சிவனுக்கு மனைவியானாள், இந்த மாதங்கி தசமகா வித்யா எனும் 10 தெய்வங்களில் ஒருவர்
அவளுக்கு சியாமளை எனும் பெயரும் உண்டு.
ஆக, இந்தப் பாடலின் சுருக்கம் இதுதான்.
கடம்பவனத்தில் இருக்கும் என் அன்னையே, உன்னைக் கண்குளிர தரிசித்தேன். கையில் வீணையும் கொண்ட உன்னை, ஞானமிகு தனங்கள் கொண்ட உன்னை தரிசித்தேன், பச்சை வண்ணப் பட்டு அணிந்தவளே, மாதங்க முனிவரின் மகளாக வந்தவளே என் அன்னையே”
பாடல் மிக சிறியதாக இருந்தாலும் இதன் உட்பொருளும் அதன் விளக்கமும் மிகப்பெரியது. இந்தப் பாடலின் மூலம் லலிதா சகஸ்கரநாமம் சொல்லும் சியாமள தேவி பற்றியது.
காளிதாசனின் சியாமளா தண்டகம் மிக பிரசித்தியானது. அந்த சியாமளா தண்டகத்தின் ஒரு பாடலின் தழுவலே இந்தப் பாடல், சியாமளா தேவி மாதங்க முனிவரின் மகளாக அவதரித்த அந்த மாதங்கியின் அம்சம்.
இப்பாடல் மதுரை என அழைக்கப்படும் கடம்பவனத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மன், மீனாட்சி அம்மனைக் குறித்து பாடப்பட்ட பாடல் என்பதில் சந்தேகமில்லை, இன்றும் மதுரை ஆலயத்தின் தல விருட்சம் கடம்ப மரமே.
ஆனால், அதே நேரம் அங்கிருக்கும் அன்னையின் கையில் வீணை இல்லையே இவரோ வீணை பற்றி சொல்கின்றாரே எனும் சந்தேகம் வரலாம்.
அங்குதான் அந்த மாதங்க முனியின் மகளாக அவதரித்த அந்த மாதங்கியினைப் பற்றி அறிந்து கொள்ளல் அவசியம்.
மாதங்கி சரஸ்வதியின் தாந்த்ரீக வடிவமாகக் கருதப்படுகிறாள். சரஸ்வதியைப் போலவே, மாதாங்கியும், பேச்சு, இசை, அறிவு மற்றும் கலைகளை நிர்வகிக்கிறார். பத்து வித்யாகாளி ரூபங்களில் அவளும் ஒருத்தி.
மாதங்கி என்பது மரகதப் பச்சை வண்ணத்தைக் குறிக்கிறது மாதங்கி சரஸ்வதியின் வடிவம் என்றும் உச்சிஷ்டா மாதங்கினி என்றும் அறியப்படுகின்றாள்.
(இந்த உச்சிஷ்டா மாதங்கிதான் உஜ்ஜைனி மகாகாளி, காளிதாசனுக்கு பெரும் அருள் அருள் அளித்தவள் அவளே.)
கைகளில் உடுக்கை, வாள், மண்டையோடு போன்றவை உச்சிஷ்டா மாதங்கினியிடம் காணப்படுகிறது. இவரின் இன்னொரு தோற்றமான ராஜ மாதங்கியின் உருவம் வீணை வாசிப்பவராகவும், கிளியை வைத்திருப்பவராகவும் சித்தரிக்கப்படுகிறது.
ஆம், ராஜமாதங்கி கைகளில் வீணை அல்லது கிளியினை வைத்திருப்பாள் என்பது புராணச் செய்தி, இந்த ராஜமாதங்கிதான் கலைக்கும் நுண் கலைகளுக்கும் இசைக்கும் திறனுக்கும் கவிக்கும் அதிபதி, அப்படியே சரஸ்வதி சாயல்.
ஆக, மதுரையில் இருப்பது ராஜமாதங்கி என்பது தெளிவாகின்றது, அவள் கையில் கிளியுடன் இருக்கும் ராஜமாதங்கி, பச்சை நிறம் கொண்ட மாதங்கி.
கையில் கிளி இருந்தாலும் அவளின் அடிப்படை அருள் வீணை உள்ளிட்ட நுண்கலைகளை அள்ளி அள்ளி கொடுப்பது, அதைத்தான் இங்குச் சுட்டிகாட்டிப் பாடுகின்றார் பட்டர்.
நாம் முன்பு சொன்னபடி மகாகவி காளிதாசனின் பாடலைத் தழுவி இப்பாடலை பாடினார் என்றோம் அல்லவா? அப்பாடலோடு விளக்கத்தைக் காணலாம்.
“மாணிக்யவீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி”
என்பது அந்த காளிதாசனின் பாடல்.
(காளிதாசனின் இந்த வடமொழி பாடலைத்தான் அப்படியே தமிழாக்கி “மகாகவி காளிதாஸ்” படத்தில் “மாணிக்க வீணையே மரகதப் பதுமையே” எனப் பாடினான் கவிஞர் கண்ணதாசன். )
மாணிக்கங்கள் இழைத்த வீணையை இசைப்பவளும் பரமானந்தத்தில் திளைப்பதால் மந்தமான நடையுடையவளும், நீல மணியின் ஒளியுடன் கூடிய அழகிய உடலுறுப்புகள் உள்ளவளும், மதங்க முனி
வரின் புதல்வியுமான பராசக்தியை மனதில் தியானம் செய்கிறேன் என அதற்குப் பொருள்.
இந்தப் பாடல் முழுக்க முழுக்க சியாமளா அன்னைக்குப் பாடபட்டதால் அந்த அன்னையினை இன்னும் ஆழமாகத் தியானிக்கலாம்.
‘சியாமளா’ என்றும், ‘ஸ்ரீ ராஜ சியாமளா’ என்றும், ‘ஸ்ரீமாதங்கி’ என்றும், ‘மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.
தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள்.
வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் ‘மந்திரிணீ’ என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.
ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக,(முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள்.
அதனால் “மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதுரே நம” என்று ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் அவளைப் போற்றுகிறது.
மேலும் ‘கதம்பவனவாஸினீ’ என்றும் இந்த அம்பிகை துதிக்கப்படுகிறாள். ஸ்ரீ லலிதா தேவியின் வாசஸ்தலமான ஸ்ரீ நகரத்தில்,சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்வதாலேயே சியாமளா தேவிக்கு இந்தத் திருநாமம்.
மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள். மதுரைக்குக் ‘கடம்பவனம்’ என்ற ஒரு பெயரும் இருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
பண்டாசுர வதத்தின் போது, கேயசக்ர ரதத்தில்( ஏழு தட்டுக்கள் உள்ள ரதம்) இருந்து அம்பிகைக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசுரனின் தம்பியான விஷங்கனை வதம் செய்தாள்.
‘கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிசேவிதா’ என அந்தக் காட்சியினைச் சொல்கின்றது லலிதா சஹஸ்ரநாமம்.
( சில அர்த்தங்களின்படி பார்த்தால், அகங்காரம் மிகுந்த ஜீவனே ‘பண்டாசுரன்’ (உலகாயத) விஷயங்களில் ஜீவனுக்கிருக்கும் ஆசையே விஷங்கன்.
மேலும், குறுக்கு வழியில் செல்லும் புத்தியையும் விஷங்கன் குறிக்கிறான். சியாமளா தேவி, நேர்வழியில் செல்லும் மனதிற்கும் புத்திக்கும் ஆத்மஞானம் அறியும் மனநிலைக்கும் அதிபதி. ஆகவே, சியாமளா தேவியே அவனை ‘விஷங்க வதம்’ செய்கிறாள். )
கவி காளிதாஸர் அருளிய ஸ்ரீ சியாமளா தண்டகம், தியான ஸ்லோகத்தில், அம்பிகை, மாணிக்கக் கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் விருப்பமுடையவளாக, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக, திருமார்பில் குங்குமச்சாந்து தரித்தவளாக, தன் திருநெற்றியில், சந்திரக்கலையை அணிந்தவளாக, கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம் கொண்டவளாகச் சித்தரிக்கப்படுகிறாள்.
இதில் அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே.
வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது.
மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
சில நூல்களில், ஸ்ரீ சியாமளா, பச்சை வண்ணம் உடையவளாக, சிரசில் சந்திரகலையை அணிந்தவளாக, நீண்ட கேசமும் புன்முறுவல் பூத்த அழகுத் திருமுகமும் உடையவளாக, இனிமையான வாக்விலாசம் உடையவளாக, ஆகர்ஷணம் பொருந்திய திருவிழிகள் உடையவளாக, கடம்ப மாலையும், பனை ஓலையினாலான காதணி மற்றும் பல்வேறு ஆபரணங்கள் தரித்து தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.
சில தாந்த்ரீக நூல்களில், ஸ்ரீ ராஜ சியாமளா தேவி, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, நெற்கதிர், தாமரை, பாசம், அங்குசம், ஜபமாலை, புத்தகம், வீணை முதலியவற்றைத் தாங்கியவளாக சித்தரிக்கப்படுகிறாள்.
தேவியின் திருத்தோள்களில் கிளியும் இருப்பதாகக் குறிக்கப்படுகிறது. இதில்,நெற்கதிர், ஜீவனின் முந்தைய கர்மவினைகளையும், பாசம், ஆசையையும், அங்குசம் கோபத்தையும், ஜபமாலை புத்தகம் முதலியவை அறிவையும், வீணை யோகத்தையும் குறிக்கிறது. அம்பிகையின் திருக்கரத்திலிருக்கும் கிளியே ‘ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியாக’ அவதரித்து, ஸ்ரீமத் பாகவதம் முதலான நூல்களை அருளியதாக ஐதீகம்.
தாந்த்ரீக முறையிலும் இந்த அன்னைக்கு வழிபாடு உண்டு.
முதலில் தாந்த்ரீக முறை என்றால் என்ன எனப் பார்ப்போம். யந்திரம் மற்றும் மந்திரம் ஆகியவற்றின் துணை கொண்டு ஓர் உயரிய இலக்கை அடையும் முறைக்குத் ‘தாந்த்ரீகம்’ என்று பெயர்.
சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி. தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள்.
இவளே பேச்சுவன்மை உள்படும் விஷயங்களைத் தருவதால் இன்றும் கிராமப்புறங்களில், ‘பேச்சி’, ‘பேச்சாயி’ ‘பேச்சியம்மன்’ என்ற திருநாமங்களோடு வழிபடப்படும் தெய்வம், பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகையைக் குறிப்பதே.
எல்லைகளற்ற கடல்போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதைப் பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே சித்திக்கும். மேலும், ஒருவர் பேசும் வாக்கியத்தின் மத்திமப் பகுதியே அவர் மனதில் நினைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமையும். இந்த மத்திமப் பாகத்துக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை.
சில ஜோதிடர்கள் வாக்கு பலிதம் உள்ளோருக்கு உள்ளது இவளின் அருளே.
நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.
பாட்டு, நடனம், நினைத்த பொழுதில் கவி இயற்றும் திறன் போன்ற நுண்கலைகள் அம்பிகையின் அருளாற்றலாயே ஒருவருக்குக் கிடைக்கிறது. சரஸ்வதி தேவியின் விரிந்த, பேராற்றலுள்ள வடிவமே ஸ்ரீ மாதங்கி தேவி எனக் கொள்ளலாம்.
சரஸ்வதி தேவியை மொழி, கலைகள், கற்கும் திறன் இவற்றின் அதிதேவதையாகக் கொண்டால், மாதங்கி தேவியை மனதை உள்முகமாகத் திருப்பி, தான் யார் என்பதை அறியும் ஆற்றலுக்கும், ஆத்மவித்தைக்கும் அதிதேவதையாகக் கொள்ளலாம்.
தசமஹா வித்யைகளுள் ஒருவராகக் கருதப்பட்டாலும், இந்தத் தேவி, ஆற்றல் நிறைந்த மிகப் புனிதமான திருவுருவாகவே போற்றித் துதிக்கப்படுகிறாள். அனைத்துக் கேடுகளையும் தான் ஸ்வீகரித்துக் கொண்டு நன்மையை பிறருக்கு அருள்பவளே ஸ்ரீ மாதங்கி.
ஸ்ரீ நகரத்தில் அம்பிகையின் இருப்பிடம். ஸ்ரீ லலிதாம்பிகையின் வாசஸ்தலமாகிய ஸ்ரீ நகரத்தில், பலவிதமான கோட்டைகள் அமைந்துள்ளன. அவற்றுள் தங்க, வெள்ளிக் கோட்டைகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ள கதம்பவனத்தில் (ஸ்ரீ சக்ரத்தில், இந்த இடம், த்ரிகோணம், பஞ்சகோணம், அஷ்டதளபத்மம், ஷோடச தள பத்மம், உள் பத்து கோணம், வெளிப்பத்து கோணம், சதுரம் என்ற ஏழு ஆவரணச் சக்கரங்கள் கூடும் இடமாக உள்ளது)
தங்கத்தினாலான படிகள் உள்ள, மாணிக்கத்தால் ஆன மண்டபங்கள் உள்ள விசாலமான ஆலயத்தில், ரத்தினம் இழைத்த அழகான சிம்மாசனத்தில், ப்ரஹ்ம வித்தையின் 98 அக்ஷரங்களின் அதிபதியாக விளங்கும் ஸ்ரீ சியாமளா தேவி வீற்றிருந்தருளுகிறாள்.
(நம் உடலில் அமைந்துள்ள ஆதாரச்சக்கரங்களில், தொண்டைப் பகுதியில் அமைந்துள்ள ‘விசுத்தி’ சக்கரத்தில் பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள் என்பது யோக சாஸ்திர உரை)
இப்படிப்பட்ட அன்னையினைப் பட்டர் ஏன் இங்குப் பாடினார் என்றால் அதுதான் விஷயம்.
இந்த சியாளா அன்னைக்குத் தனியாக நவராத்திரி உண்டு.
ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் உண்டு, சித்திரை மாதம் வசந்த நவராத்திரியும், ஆடி மாதம் வாராஹி நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும், தை மாதத்தில் தை அமாவாசை மறுதினம் துவங்கி, சியாமளா நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது.
எல்லா நவராத்திரியிலும் அன்னையின் நாள் உண்டு, அன்னை நுண்கலைகளின் அதிபதி.
அவளே காளிதாசனை உருவாக்கினாள். இந்த அபிராமி பட்டரையும் பாட வைத்தாள். அவளை யாரெல்லாம் பணிந்து பாடுவார்களோ அவர்களுக்குக் கலைகளை அள்ளி அள்ளி தருவாள்.
உஜ்ஜைனியில் மகாகாளியாக இருப்பவளும் அவளே; மதுரையில் மீனாட்சியாக நிற்பவளும் அவளே; அந்த அன்னையினைப் பாடி நுண் கலைகளின் வரம்வாங்க எல்லோருக்கும் போதித்து இப்பாடலை பாடுகின்றார் பட்டர்.
மதுரையில் இருப்பவள் சியாமளை அன்னையே, மதுரை ஆலயம் ஆலவாய் ஆலயம் எனத் திருவாரூர், சிதம்பரம்,நெல்லை போல மாபெரும் சிவாலயமே, அங்குச் சியாமளையாக அன்னை எழுந்தளுளினாள்.
பின்னாளில் மீன்கொடி ஏந்தி பாண்டியர் ஆண்ட காலங்களில் மீன் ஆட்சி அம்மை என அவள் கொண்டாடப்பட்டு இன்றுவரை அப்பெயரும் நிலைத்துவிட்டது.
அதையே கம்பனும் பாடுகின்றான்.
“மயிலே மடப்பிடி யேகொடி யேயிள மான்பிணையே
குயிலே பசுங்கிளி யேஅன் னமேமனக் கூரிருட்கோர்
வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே”
கம்பன் அன்னையினைப் போற்றி பாடும் இந்தப் பாடலினை விளக்கமாகக் காணலாம்.
“மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே” என்பது முதல் வரி, மயிலே என்கின்றான், மடப்பிடி என்றால் பெண்யானை எனப் பொருள், இளமையான பெண் யானையே, கொடியே எனச் சொல்லும் கம்பன், கலைமானின் பெண் துணையான பிணை எனும் பெயரிலும் அன்னையினைப் பாடுகின்றான்.
அடுத்தவரி “குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூர் இருளுக்கு ஓர்” என வரும், குயிலே இளங்கிளியே அன்னமே, மன இருளுக்கு எனப் பொருள் வரும்.
அடுத்தவரி “வெயிலே நிலவெழும் மேனி மின்னே இனி வேறுதவம்” என வரும், வெயிலே நிலவு எழும் ஒளிபோல மின்னும் தோற்றம் கொண்டவளே, இனி எனக்கு வேறுதவம் ஏன் என்பது பொருள்.
கடைசிவரி, “பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற் பாதங்களே” என முடிகிறது, அப்படியான அன்னையே மகிழ்வுடன் உன் பாதம், பொன்போன்ற பாதங்களைப் பணிவேன் என முடிக்கின்றான் கம்பன்.
ஆகப் பாடலின் பொருள் இதுதான்.
குயிலே, பெண் யானையே, பெண் மானே, கிளியே, அன்னமே, இருளுக்கு ஒளியாய் வருபவளே, நிலவு போல் ஜொலிப்பவளே. இனி நான் வேறு தவமோ வழிபாடோ செய்ய அவசியமில்லை, உன் திருவடிப் பணிந்து மட்டும் இருப்பதே என்பணி”
இந்தப் பாடல் வெறுமனே பறவைகள் பெயரோடும் சில துதிகளோடும் முடியும் சாதாரண பாடல் போல் தெரிந்தாலும் ஆழ்ந்த பொருள் கொண்டது.
முதலில் அன்னையினை மயில் என்கின்றார், அன்னைக்குச் “சதுஷ்ஷஷ்டி கலாமயி” என ஒரு பெயர் இருப்பதை லலிதா சஹஸ்ரநாமம் சொல்கின்றது, அன்னை மயில் வடிவில் தவமிருந்து இறைவனை அடைந்தவள். அவ்வகையில்தான் மயிலாப்பூர் கோவில் வரலாறே உண்டு.
அவளுக்கு “மயூரி” என்றொரு நாமமும் உண்டு, மயில்கள் மலைப்பகுதியில் வசிப்பவை என்பதால் பார்வதி தேவியினைச் சொல்லும் இடமெல்லாம் மயிலையும் சொல்வார்கள்.
அடுத்து மடப்பிடியே என்கின்றார், பிடி என்றால் பெண்யானை மடப்பிடி என்றால் இளமையான பெண்யானை எனப் பொருள்.
இதனை இருவிதங்களில் சொல்லலாம்.
பொதுவாக, பெண்ணின் மேல் அழகை யானையின் மந்தகத்தோடு கவிஞர்கள் ஒப்பிடுவார்கள், யானையின் மந்தகம் இருபக்கம் பெருத்து நடுவில் ஒடுங்கியிருக்கும், சேலை கட்டிய பெண்ணின் மார்பழகு அப்படி தோன்றுவதால் பெரும் அழகான பெண்களைப் பிடி எனச் சொல்வது உவமையாயிற்று.
அப்படியே கஜலட்சுமி எனும் யானையினைச் சொல்கின்றான், அன்னை லட்சுமி வடிவானவள், அலைமகள் அம்சமாய் இருப்பவளும் அவளே.
அவள் அன்னப்பறவைசாயலில் இருப்பாள், அதாவது, கலைமகளாக இருப்பவள் அவளே, சர்ஸ்வதியும் அவளே.
ஆக மலைமகள், அலைமகள், கலைமகள் என எல்லா வடிவமுமாக நிற்கும் அன்னையினை விட்டு எங்குச் செல்லமுடியும். அவளே எல்லா வரமும் தருபவள்; அவளே தைரியம் தருவாள்; அவளே செல்வம் தருவாள்; அவளே கல்வியும் அறிவும் தருவாள், அவளை விட இன்னொரு தெய்வம் எங்கே உண்டு.
இந்த மூன்றும் ஓரிடத்தில் கிடைக்கும்போது வேறு எங்கு செல்லஅவசியம் உண்டு? அப்படியே தேடினாலும் எங்கே தேடுவது?
வானம் அவள், சூரியன் அவள், நிலவும் அவள். அப்படியாக எல்லாமுமாக இருக்கும் அவள் எதுவும் அறியா இருட்டாய் இருந்த என் மனதையும் ஞான வெளிச்சத்தால் நிரப்பி இருக்கின்றாள், அந்த ஞானத்தால் நான் எல்லாம் அறிந்துகொண்டேன். இனி அவளை விட்டு எங்கே செல்வது? அவளை அறிந்தபின் அவளை நீங்குவது அறிவுடமை ஆகுமோ, ஆகாது அதனால் அவளைவிட சிறந்தது இல்லை என்பதால் அவள் பாதமே பணிகின்றேன் என உருகிப் பணிகின்றான் கம்பன்.
இந்தப் பாடலில் கிளியும் குயிலும் அவன் ஏன் சொல்கின்றான் என்பதில்தான் பாடலின் முழுச் சுவாரஸ்யமுமே அடங்கியிருக்கின்றது.
இங்கே அவன் அன்னையின் இன்னொரு வடிவமும் கலைகளின் தனி வடிவமான சியாமளையினைப் பாடுகின்றான்.
குயில் என்பது அவள் கொண்டிருக்கும் வீணையின் நாதத்தை குறிப்பது, கிளி என்பது அவளின் பச்சை நிறத்தையும் அவள் அருளும் கிளிபோன்ற இனிய பேச்சினையும் சொல்வது.
மதுரையில் இருக்கும் மீனாட்சி அந்த சியாமளா வடிவமே, அவளே கலைகளுக்கு அதிபதி.
காளிதாசன் அவளுக்கே “சியாமளா தண்டகம்” எனும் நூலைப் பாடினான்.
அந்தச் சியாமளையினைத்தான் இங்கே குறிப்பிட்டுப பாடி கலைகளும் காவியங்களும் பாட அருளைத் தரும் அவளைத் துதிக்கின்றான் கம்பன்.
இப்பாடலை இன்னும் தன்பாணியில் இன்னொரு பாடலாகப் பாடுகின்றார் பட்டர்.
“”குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாச்சலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே”
சரஸ்வதியான அந்தச சியாமளை பிரம்ம வித்தையின் 98 அக்ஷரங்களின் அதிபதியாக விளங்கும் அந்த மகா சரஸ்வதியினைத்தான் காளிதாசன் பாடினான், அபிராமிபட்டர் பாடினார்.
இந்த அன்னை நவக்கிரகங்களில் சூரியன் அம்சமானவள், சூரியனே ஜாதககட்டத்தில் முக்கியமானது சூரியன். ஒரு ஜாதகத்தை நிர்மாணம் செய்யக் கூடியதே சூரிய பகவான் அன்றி வேறல்ல.
ஆம், சூரியனே ஒளிவடிவம், அந்த ஒளிவடிவமான சூரியனே ஒருவருக்கு ஆன்ம பலம் அளிப்பவர் இவர். ஆண் தன்மை எனும் தைரியமும் ஆளுமையும் பெண் தன்மை எனும் ஆகர்ஷமும் கொடுப்பது சூரியனின் ஜாதக இருப்பிடமே.
சூரியன் அரசனுக்குரிய கிரஹம், ஒரு அரசன் அவன் மட்டும் வலுவானகாக இல்லாம்ல் அமைச்சர் சேனை என எல்லாம் வலுவாக அமைந்தால் சிறப்பான், அப்படிச் சூரியனோடு சேரும் கிரகங்களைப பொறுத்து ஒருவன் ஜாதகம் அமையும்.
ஆத்மாவினைச் சூரியனின் வடிவமாகக் கண்டார்கள் இந்துக்கள். சுருக்கமாகச் சொன்னால் உயிர்ச்சக்தி, ஆத்ம சக்தி என சரியாகச் சொன்னார்கள்.
எல்லாக் கலைகளும், கலை ஞானமும் இறைவனை அடைவதற்கே. அவ்வகையில் அன்னையின் அருளில் எல்லாக் கலைகளும் பெருகினால் ஆத்மா இறைவனை அடையும் என்பதை இந்துக்ககள் உணர்ந்தே இந்த அன்னையின் அருள் அவசியம் என்றார்கள்.
இதனாலேதான் இந்துக்கள் தங்கள் கலைகள் எல்லாம் அது சிற்பக்கலை, கட்டிடக்கலை, சங்கீதம், பாடல்கள், இசை என எல்லாக் கலையும் இந்துமதத்துக்கே தந்து இறைவனை அடைய வழிகாட்டினார்கள்.
அன்னை சூரியனின் அம்சம். அவளை வழிபட வழிபட உள்ளொளி பெருகும், அது நம்மை அந்த நித்ய ஒளிநோக்கி அழைத்துச்செல்லும்.
ஆம், “ஓம் பூர் புவஸ்வஹ” எனும் காயத்ரி மந்திரத்தின் தத்துவமே இந்த மாதங்கி அன்னை, அவளை இந்நாளில் வணங்க எல்லா ஞானமும் அருளும் கல்வியும் அவள் அள்ளி அள்ளி தருவாள்.
மீனாட்சி அம்மன் எனக் கொண்டாபடுவள் அவளே, மதுரையில் இருப்போர் அவள் ஆலயத்தில் இந்நாட்களில் வணங்குதல் நலம், கிராமங்களில் பேச்சியம்மனாக இருக்கும் இந்த அன்னையினை இந்நாளில் கொண்டாடுதல் இன்னும் நல்லது.
“ஓம் சுகப்ரியாயை வித்மஹே காமேச்வர்யை ச தீமஹி
தன்னோ ச்யாமா ப்ரசோதயாத்”
என அவளைப் பாடி வணங்குவோம்.
“ஓம் ராஜமாதங்க்யை நம” எனச் சொல்ல சொல்ல அவள் அருள் நிச்ச்யம் பெருகும். ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு வரம் உண்டு ஒரு திறமை நிச்சயம் உண்டு, அன்னையினை வழிபட வழிபட அது நிச்சயம் துலங்கும், அந்த வரம் வேண்டி அவளை வணங்குவோம். எல்லா ஞானமும் கலையும் உங்களுள் இருந்து பிரவாகமாய் எழும். இது சத்தியம்.