சரஸ்வதி அந்தாதி : 02
சரஸ்வதி அந்தாதி : 02
“வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்
சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே
பிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்
உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே”
இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.
“வணங்கும் சிலை நுதலும் கழை தோளும் வனமுலை மேல்
சுணக்கும் புதிய நிலவு எழும் மேனியும் தோட்டுடனே
பிணக்கும் கருந்தட கண்களும் நோக்கி பிரமன் அன்பால்
உணங்கும் திருமுன்றிலாய் மறை நான்கும் உரைப்பவளே”
இனிப் பாடலின் விளக்கத்தைக் காணலாம்.
கம்பன் அன்னையின் தரிசனத்தைக் கண்டவன். அவள் சிலையினை நாள்தோறும் வணங்கி பூஜை செய்யும் அவனுக்கு, இந்த இக்கட்டான நிலையில், அன்னையே வந்து கால் சிலம்பைக் கொடுத்தாள்.
அதுவரை சிலையாய் கண்ணில் கண்டு, மனதால் தியானித்த உருவின் உயிர் வடிவினை, அசையும் வடிவினை அன்று தான் அவன் கண்டான். அதை அப்படியே பாடலில் சொல்லி, தனக்கே உரித்தான கவிநயத்துடன் அவளின் பெருமையினை உருவகமாகச் சொல்லிப் பாடுகின்றான்.
“வணங்கும் சிலை நுதலும்” எனத் தொடங்குகின்றான்.
இந்த வரியினை இரு விதமாக விளக்கலாம். ஆனால் இரண்டுமே ஒரே பொருளைத் தருகின்றது.
நுதல் என்றால் நெற்றி, வணங்கும் சிலை நுதல் என்றால் தான் அனுதினமும் வணங்கும் அந்த சரஸ்வதி சிலையில் இருக்கும் அதே அழகான நெற்றியினைக் கொண்டவளே எனப் பொருள்.
இன்னொரு பொருள் கொஞ்சம் கவித்துவமானது. அதாவது, சிலை என்றால் தோற்றம். அன்னையினை வணங்குவோர் மண்டியிட்டு நெற்றித் தரையில் பட வணங்குவார்கள் அல்லவா? அப்போது உடல் வில் போல் வளைந்திருக்கும் அல்லவா? அப்படியான வளைந்த தோற்றமுள்ள நெற்றி என்கின்றான் கம்பன்.
அதாவது, நெற்றி தரையில் பட அன்னையினை வணங்கும் பக்தனின் உடல் போல் வில்லாய் வளைந்த, வில் போல் அமைந்த நெற்றி எனப் பாடலைத் தொடங்குகின்றான்.
அடுத்து “கழை தோளும்” என்கின்றான்.
கழை என்றால் மூங்கில் எனப் பொருள். அன்னையின் தோள் மூங்கில் போல் அழகான தோற்றமுடையது என்கின்றான் கம்பன்.
அடுத்து “வனமுலை மேற் சுணங்கும்” என்கின்றான்.
வனமுலை என்ற சொல், வனம்+முலை எனப் பிரிந்து வரும். வனம் என்றால் செழித்த; அழகான எனப் பொருளில் வரும். அந்தப் பொருளில் அன்னையின் நகில் அழகைப் பாடுகின்றான் கம்பன்.
அடுத்து, அந்த மார்பின் “மேல் சுணங்கும்” என்கின்றான்.
சுணங்கு எனும் வார்த்தைக்குப் பொலிவான, தனித்த நிறம் எனப் பொருள். இது எப்போது என்றால் ஆடையோ, ஆபரணமோ உடலின் மேல் நீண்ட காலம் இருந்தால், அந்த இடத்தின் தோல் ஒரு மினுமினுப்பினை பெறும்.
அந்த மினுமினுப்பைத்தான் சுணங்கு என்பார்கள்.
இது பெரும்பாலும் இளமையான தேகம் கொண்டவர்க்கு எளிதாகத் தெரியும். அன்னை இளமையானவள் என்பதை இப்படிச் சூசகமாகச் சொல்கின்றான் கம்பன். எப்போதும் ஆபரணங்களை அணிந்திருப்பவள், அந்த ஆபரணத் தடங்கள் உடலில் பதியும் அளவு இளமையானவள் என்கின்றான்.
அடுத்து ‘புதிய நிலவு எழும் மேனியும்” என்கின்றான். புதிய நிலவு என்றால் அமாவாசைக்கு பின் வரும் பிறை நிலவு.
அந்த நிலவு எப்படி அழகாக மின்னி ஜொலிக்குமோ அப்படி அன்னையின் உடல் முழுக்க அழகாகப் பொன்னிறத்தில் ஜொலிக்கின்றது. சுடர்போல் பிரகாசிக்கின்றது என்பதைப் பாடுகின்றான்.
அடுத்து “தோட்டுடனே பிணக்கும் கருந்தட கண்களும்” என்கின்றான்.
அதாவது அன்னை காதில் அழகானத் தோடு அணிந்திருக்கின்றாள். அந்தக் காதினை அன்மித்து அழகான கண்கள் இருக்கின்றன. காதுவரை நீண்ட வேல் போன்ற கண்களாக அவை அழகுற அமைந்திருக்கின்றன.
அந்த தோடு அழகா இல்லை, தான் அழகா என அந்தக் கருவிழி அடிக்கடி சென்று காதுகளின் தோட்டைப் பார்க்க முயன்று ஒரு வித சண்டையிடுகின்றதாம்.
அசையும் அன்னையின் விழிகளை அவ்வளவு அழகாகச் சொல்கின்றான் கம்பன். அந்தக் கண்ணின் மணி அழகா? இல்லை காதுகளின் தோடு அழகா? எனப் போட்டி போட்டு இரண்டும் அசைகின்றது என உருகிச் சொல்கின்றான்.
அடுத்து “நோக்கிப் பிரமனன்பால் உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே” எனப் பாடி முடிக்கின்றான்.
உணங்குதல் என்றால் வாடுதல் எனப் பொருள். முன்றில் என்றால் முன்பாக என அர்த்தம்.
அந்தக் கண்கள் தன் முன்னால் வாடி நிற்கும் பிரம்மனை அன்பால் பார்க்கின்றதாம். அதாவது பிரம்மன் அன்னையின் முகத்தை ஏக்கமாக வாடி நின்று பார்க்கின்றானாம். அப்போது அன்னை இரக்கத்துடன் அவனை நோக்கி நான்கு வேதங்களையும் உரைக்கின்றாள் என்கின்றான்.
ஆகப் பாடலின் பொருள் இதுதான்.
“குனிந்து வணங்கும் தோற்றம் போல அழகான வளைந்த நெற்றியினைக் கொண்டவளே; மூங்கில் போலத் தோள்களைக் கொண்டவளே; செழுமையான மார்பின் மேல் பூந்தாது போன்ற நிறம் பெற்றவளே; மூன்றாம் பிறை போல் ஜொலிக்கும் அழகான தேகம் கொண்டவளே; கண் விழி அசைவு அழகா, அசைந்தாடும் காதின் தோடு அழகா என கண் அழகும் செவி அழகும் கொண்டவளே; உன் முன் வாடி நிற்கும் பிரம்மனுக்கு இரக்கம் கொண்டு நான்கு மறைகளையும் உரைப்பவளே!”
இனிப் பாடலை கொஞ்சம் ஆழமாகக் காணலாம்.
அன்னையின் நெற்றி வணங்கும் சிலை தோற்றத்தில் இருப்பதாகச் சொல்கின்றான். வில் போல் வளைந்த நெற்றியினைக் கண்டோரெல்லாம் குனிந்து வணங்கும் தோற்றம் கொண்டவள் அன்னை என்கின்றான்.
அன்னை தன் அழகான நெற்றியில் குங்குமம் தரித்து நிற்பாள். அந்த மங்கலக் கோலம், பார்த்தவுடன் வணங்கத் தக்கத் தோற்றம். அப்படியான பெரும் தெய்வீகக் கோலத்தில் நிற்பவள் என்பதைச் சொல்கின்றான் கம்பன்.
அடுத்து, மூங்கில் போன்ற அழகான சீரான, பொலிவான தோள்கள் என்கின்றான். பொதுவாக இந்த உவமையினை பெண்களின் தோள் அழகுக்குச் சொல்வது வழமை. என்றாலும், இங்கே அன்னை வீணை மீட்டும் கரங்களைக் கொண்டிருப்பது கவனிக்கதக்கது.
மூங்கிலின் குழல் போன்ற இனிய இசையினை வீணையில் மீட்டித் தரும் கைகள் இவை எனப் பொருத்தமாகப் பாடுகின்றான்.
அடுத்து வனமுலை என்கின்றான். வனம் என்றால் செழுமையானது; பசுமையானது என்பது மட்டுமல்ல; அதுதான் பெரும் வளங்களைத் தருவது.
ஆறுகளும், சந்தனமும், பெரும் மணிகளும் கானகத்தில் இருந்துதான் வரும். சிறந்ததெல்லாம் அங்கிருந்தான் கிடைக்கும்.
அன்னையின் தனங்கள் அருளை ஆறாகத் தருபவை; குழந்தைக்கு தாய் பாலூட்டி காப்பது போல, உலக உயிர்களை அன்னை தன் அருளால் காக்கின்றாள் என்கின்றான்.
வனம் என்பது காவலைக் கொடுப்பது. குழந்தை அன்னையின் நெஞ்சத்தைப் பாதுகாப்பாக உணர்வது போல, உலக உயிர்களெல்லாம் அன்னையில் அடைக்கலமாகின்றன என்பதைச் சொல்கின்றான் கம்பன்.
அவள் மார்பின் மேல் சுணங்கு ஏற்பட்டு புதிய நிறத்தில் மின்னுவதையும் கம்பன் சொல்கின்றான். இங்கே அர்த்தம் இல்லாமல் இல்லை.
அன்னைக்குக் கழுத்தில் சூட்டப்படும் நகைகள் மார்பு வரை நீண்டிருக்கின்றன. அந்த அழுத்தத்தால் அந்த இடத்தின் நிறத்தில் மாறுபாடு வருகின்றது, அதனைச் சொல்கின்றான்.
அதாவது அன்னை ஒரு பக்தன் வைக்கும் வேண்டுதலைத் தன் நெஞ்சில் பதித்து வைப்பவள் என்பதைச் சூசகமாகப் பாடுகின்றான்.
அன்னைக்கு சூட்டப்படும் நகைகள் அவள் தோள் மேல் பதிந்து விடுவதைப் போல, பக்தனின் வேண்டுதல் மாலை அவள் நெஞ்சத்தில் தங்கி விடுகின்றது. அவள் அவ்வளவு ம்ருதுவான, மென்மையான மனமுடையவள் என்பதைச் சொல்கின்றான் கம்பன்.
அடுத்து அவள் தோற்றம் பற்றிச் சொல்கின்றான். புதிய நிலவின் ஒளி கொண்டவள் என்பது.
இது அன்னை எக்காலமும் இளமையானவள்; அவளுக்கு மூப்பில்லை, காலம் முடிவது இல்லை, எக்காலமும் ஒரே மாதிரி இருப்பவள் என்பதையும் நுணுக்கமாகச் சொல்கின்றான்.
அடுத்து தான் மிக மிக ரசனையான சூட்சுமமான வரிகளைப் பாடுகின்றான்.
அன்னையின் கண்கள் அங்குமிங்கும் அசைகின்றன. காதணி ஆடுவது அழகா, கண்ணின் கருமணி அசைவது அழகா எனும் அளவு இரண்டும் போட்டிப் போடுகின்றன என்கின்றான்.
அன்னை “ம்ருகாக்ஷீ” அதாவது மானையொத்த கண்களை உடையவள் என்கின்றது லலிதா சஹஸ்ரநாமம்.
அன்னை என்பவள் இயக்கும் சக்தி. இந்தப் பிரபஞ்சம் என்பது இயங்கிக் கொண்டே இருப்பது. இங்கு இயக்கமில்லாமல் எதுவுமில்லை.
ஒவ்வொரு துகளும் இந்த உலகில் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. அணுவுக்குள் துகள்கள் இயங்குகின்றன; மானிட உடலில் செல்கள் வளர்கின்றன; கோள்கள் இயங்குகின்றன; நதிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன; சூரிய, சந்திர, பூமி உள்ளிட்டவை இயங்கிக் கொண்டே இருக்கின்றன.
எல்லாமும் மாறிக்கொண்டே இருக்கின்றன; அதவாது இயங்குகின்றன. இயங்காதது என ஒன்றும் உலகில் இல்லை. எல்லா படைப்பும், எல்லா பொருளும் இயங்கினாலும், மூல சக்தி ஒன்றுதான்.
அந்த சக்திதான் மானிடர் முதல் மரம், செடிகொடி, பூமி, பிரபஞ்சம் என எங்கும் நிறைந்திருக்கின்றது. பல வித சக்திகளில் அதனைக் கண்டாலும், அதன் மூலம் ஒன்றே.
அதுதான் அன்னை சக்தி.
லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும்
அவள் “மூலப்ரக்ருதி” பிரபஞ்சத்தின் மூலப்பொருளானவள்; தோற்ற-நிலையின் சாரம்.
அவள் “வியாபினீ”, அனைத்திலும் வியாபித்திருப்பவள்; எங்கும் நிறைந்தவள்.
அவள் “விவிதாகாரா”, பல்வேறு தோற்ற-நிலைகள், வடிவங்கள் தாங்கியிருப்பவள்.
அவள் தன் கண் அசைவில் இந்தப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள எல்லாப் படைப்புகளையும் இயக்குகின்றாள். அவள் தன் கண்ணசைவினாலேயே இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் மகா சக்தி; ஆதி பராசக்தி என்பதைத்தான் அப்படிப் பாடுகின்றார் கம்பர்.
ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியில் இப்படி அன்னையை வர்ணிப்பார்.
உன் கொடி போன்ற புருவத்தின் அசைப்பால், நீ காட்டிய உத்தரவை மதித்து, சதாசிவன், ப்ரம்மாவை உலகத்தை உற்பத்திச் செய்வதற்காகப் படைக்கிறார் . (ஸ்தவாஜ்ஞா மாலம்ப்ய க்ஷணசலிதயோ ர்ப்ரூலதிகயோ : )
அன்னையின் விழி அசைவில் இந்த பிரபஞ்சமும் அதனில் இருக்கும் உலகமும் இயங்குகின்றது, அவளே எல்லாமும்; இயக்கும் இயக்குசக்தி; இயங்கும் மகா சக்தி அவள் இல்லையேல், இங்கு எந்த இயக்கமுமில்லை என்கின்றார்.
லலிதா சஹஸ்ர நாமத்தில்
“உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவலீ” அவளது விழி சிமிட்டும் நொடிப்பொழுதுகளில் பேரண்டங்களைத் தோன்றி மறையச் செய்பவள்
என வரும்.
சௌந்தர்ய லஹரி சொல்லும் – அம்மா ! நீ கண்களைத் திறப்பதால் உலகம் தோன்றுவதாகவும், கண்களை மூடுவதால் அழிந்துவிடுவதாகவும் கற்றறிந்த ஞானிகள் கூறுகின்றனர் . (நிமேஷோன்மேஷாப்யாம் ப்ரலயமுதயம் யாதி ஜகதி )
பின் அவள் செவி; தோடு அணிந்த அழகான செவிகள்.
பொதுவாக தெய்வங்களுக்கும் தோடு அணிந்து பார்க்கும் வழக்கம் இந்துக்களுக்கு உண்டு. திருஞான சம்பந்தரின் முதல் பாடலே “தோடுடைய செவியன்” எனத் தொடங்குவதை கவனிக்கலாம்.
(சிறு குறிப்பு :- தோடு பெண்கள் அணிவது. குண்டலம் தான் ஆண்கள் காதில் அணிவது. இங்கே பரமசிவனை “தோடுடைய” எனச் சொன்னதால் அவர் அர்த்தநாரீஸ்வரராக சம்பந்தருக்கு காட்சியளித்தார் என்றாகிறது)
அதன் பொருள் இறைவனுக்குத் தோடு வேண்டும் என்பதல்ல, அந்தத் தோடு அணியும்படி செவி உண்டு; அந்தச் செவி பக்தனின் குரலைக் கேட்கும்; இறைவன் நம் குறைகளைக் கேட்பார் என்பதைத் தெளிவுபடுத்தி நம்பிக்கை அளிப்பதற்காக.
அப்படி அன்னை தன் பக்தர்கள் குரலைக் கேட்பாள்; அவள் பக்தன் குரலைக் கேட்டதும், அவள் கண்கள் அருள்பாலிக்கத் துடிக்கும். உலக இயக்கமே அவள் கண்ணில் கட்டுப்பட்டுக் கிடப்பதால் பக்தனின் குறையினை நொடியில் தீர்த்து வைப்பாள் என உருகுகின்றான் கம்பன்.
“தாடங்க யுகலீபூத தபனோடுப மண்டலா” என்பது சஹஸ்ரநாமம் சொல்லும் வரி. அதாவது சூர்யனையும் சந்தரனையும் இரு தோடாக அணிந்திருப்பவள் எனப் பொருள்.
சகஸ்ர நாமம் அவளை “கநத்கனக தாடங்கா” என்கின்றது. ஜொலிக்கும் பொற்காதணிகளை அணிந்தவள் என்கின்றது.
அவள் “சாந்த்ர கருணா” மிகுந்த இரக்கமுள்ளவள்.
அவள் “கருணாரச சாகரா” கருணைக் கடலாக விளங்குபவள்.
அவள் “நித்யக்லின்னா”, நாடி வரும் அன்பர்களுக்கு நித்திய கருணாசாகரமாக கடாட்சிப்பவள்.
அவள் “தயா மூர்த்தி” பரிவே வடிவானவள்.
அவள் “ராஜத்-க்ருபா” பெருங்கருணைக் கொண்டவள்.
அவள் “அவ்யாஜ கருணா மூர்த்தி”, காரணமற்ற பெருங்கருணை வடிவானவள்.
அவள் “பக்த சௌபாக்ய தாயினி”, பக்தர்களின் வாழ்வில் செழிப்பும் வளமும் அருளுபவள்.
சௌந்தர்ய லஹரியில் – தாயே ! உன் காதுகள் கவிகளின் காவியங்களான மலர்களில் உள்ள தேனால் நிரம்பியிருக்கின்றன. காது வரை நீண்ட அழகிய உன் கண்கள், நவரசங்களைப் பருகும் வண்டுகள் போல், உன் காதுகளிடம் உள்ள தேனைப் பருக அடிக்கடிச் செல்கின்றன. (கவீனாம் ஸன்தர்ப-ஸ்தபக-மகரன்தைக-ரஸிகம் கடாக்ஷ-வ்யாக்ஷேப-ப்ரமரகலபௌ கர்ணயுகலம் |)
என ரசிக்கின்றார் சங்கரர்.
அடுத்து முக்கியமான ரகசியத்துக்கு வருகின்றார் கம்பர். அதுதான் மாபெரும் தத்துவம்.
பிரம்மன் வாடிய முகத்தோடு அன்னையினை நோக்குகின்றான. அன்னை அவனுக்கு நான்கு வேதங்களையும் போதிக்கின்றாள் என்கின்றான்.
இங்கே தான் பெரும் ரகசியம் ஒளிந்திருக்கின்றது.
பிரம்மன் இந்த உலகை வேதங்கள் வழி படைக்கின்றான், வேதங்களே படைப்புக்கும் பிரபஞ்ச இயக்க விதிகளுக்கும் காரணமானவை.
அந்த வேதவிதிபடியே பிரம்மன் தொழிலாற்ற முடியும். படைப்பின் ரகசியமெல்லாம் வேதத்தில்தான் உண்டு. வேதம் இல்லையேல் எதுவுமில்லை.
வேதங்களின் மூலமானவள் அன்னை, அவளிடமிருந்தே எல்லா வேதங்களும் வருகின்றன. அவளே மூலம்.
பிரம்மன் தன் படைப்புத் தொழில் சிறப்பாக நடைபெற அவள் முகத்தையே வாடியபடி பார்க்கின்றான். அவள் உரைக்கும் வேதங்கள் அடிப்படையிலே தன் படைப்புத் தொழிலைச் செய்கின்றான்.
லலிதா சகஸ்ர நாமம் இதனைச் சொல்கின்றது.
அவள் “வேத ஜனனி” வேதங்களைப் படைத்தவள்.
அவள் “சிருஷ்டி கர்த்ரீ” அதாவது பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பவள்.
அவள் “ஆபிரம்ம கீட ஜனனீ” பிரம்மதேவன் முதல் கிருமிகள் வரை அனைத்தையும் சிருஷ்டித்த மாதா என்கின்றது.
இந்த உலகை படைத்து இயக்கும் ரகசியங்கள் நிறைந்தது வேதங்கள். அவை ஒலி வடிவானவை; அவை மிக மிகப் பெரியவை. ரிஷிகள் அந்த மாபெரும் கடலில் தாங்கள் அள்ளியவற்றை சிலத் துளிகளாகக் கொடுத்தார்கள்.
வேத வியாசர் அந்த துளிகளைத்தான் தொகுத்துத் தந்தார். மற்றபடி அந்த வேதங்கள் ஆதி அந்தமில்லாமல் நீண்டவை, ரகசியமானவை. இந்த மாபெரும் பிரபஞ்சத்தையும், அதன் உயிர்களையும் எல்லாவற்றையும் இயக்குபவை.
சவுந்தர்ய லஹரியில் ஒரு பாடல் வரி உண்டு.
“ஶ்ருதீனாம் மூர்த்தானோ தததி தவ யௌ ஶேகரதயா
மமாப்யேதௌ மாத: ஶிரஸி தயயா தேஹி சரணௌ”
அதன் பொருள் என்னவென்றால் “தாயே, உன்னுடைய எந்த பாதங்களை வேதங்களின் தலைபோன்ற உபநிஷதங்கள் சிரோபூஷணங்களாக தரிக்கின்றனவோ, அந்தப் பாதங்களை என்னுடைய தலையிலும் கூட தயை கூர்ந்து வைத்தருள்வாயாக.”
அதாவது வேதங்கள் அன்னையின் பாதங்களைத் தாங்கி நிற்கின்றன என்கின்றது பாடல்.
மற்றொரு பாடலில் வேதங்களைக் கொண்டு ப்ரம்மா உலகை ஸ்ருஷ்டிப்பதை உணர்த்தும் வகையில் – “உன்னுடைய பாத தூளியைச் சேர்த்து, பிரம்மா, இந்த உலகைப் படைக்கிறார்”. ( தனீயாம்ஸும் பாம்ஸும் தவ சரண பங்கேருஹ-பவம் விரிம்சி: ஸம்சின்வன் விரசயதி லோகா-னவிகலம்| ) என்கின்றது.
அன்னையின் அரியணையினை வேதங்கள் நான்கும் படிகளாகத் தாங்கி நிற்கின்றன. வேதங்கள் தாங்கும் அன்னை அவள். அந்த வேதங்கள் படிகளாக இருந்து அன்னையினைத் தாங்குவதால் அவள் “வேதவல்லி”.
ஆக, பிரம்மனுக்கே படைப்பின் மூலமான வேதத்தை அன்னை உரைக்கின்றாள். அவளிடமிருந்து வரும் வேதங்களின் போதனையில் தான், பிரம்மனே உயிர்களைப் படைத்து, தலையெழுத்தை எழுதுகின்றான் என்பது கம்பன் நுணுக்கமாகச் சொல்லும் தத்துவம்.
இந்த பாடலைப் பாடி இக்கட்டான நிலையில், அன்னை, தன்னை கைவிட மாட்டாள் என நம்பிக்கை கொண்டு அன்னையினைத் தொழுகின்றான் கம்பன்.
அன்னையே! எல்லா படைப்பும் உன்னை குனிந்து வணங்குகின்றன, அந்த வணக்கத்தின் கோலம், உன் நெற்றியில் வளைவாய்த் தெரிகின்றது. அன்னையே! நீ என்றும் இளமையான தாயாக வீற்றிருப்பவள். எல்லா உயிர்க்கும் தாயாக இருந்து படைத்து, காத்து வருபவள். நான் உன்னிடம் அடைக்கலமானவன்; என்னையும் காப்பாற்று.
நீ பக்தர்களை உன் நெஞ்சில் பதியவைத்து காப்பவள். பக்தர்களின் குரலைக் கேட்பவள். இந்த பிரபஞ்சத்தையே உன் விழி அசைவில் ஆட்டி வைப்பவள். அப்படிப்பட்ட நீ இருக்கும் பொழுது, இந்த அவையில் எனக்கென்ன பயம்?
நீ பிரம்மனுக்கே வேதம் உரைப்பவள். நால்வகை வேத தத்துவப்படியே அதாவது நீ உரைத்த மறையின் படியே, வேதங்கள் படியே, பிரம்மன் உலகை, உயிர்களைப் படைக்கின்றான்; அவைகளின் தலையெழுத்தையும் எழுதுகின்றான்.
நீ சொல்லித்தான் அவன் என் தலை எழுத்தையும் எழுதியிருப்பான். ஆக உன்னால் உருவாகி, உன்னால் விதி நிர்ணயிக்கப்பட்ட என் வாழ்வு இங்கே இவர்கள் விருப்பப்படி எப்படி முடியும்? பிரம்மன் மூலமாக நீ எழுதிய எழுத்து நிச்சயம் நல்ல எழுத்தாக இருக்கும்; நீ அவ்வளவு இரக்கமுள்ள தாய் அல்லவா?
அவ்வளவு கீர்த்தி வாய்ந்த உனது மகனாக நிற்கும் எனக்கு, இங்கே என்ன இடர் வரமுடியும்? வராது. உன் மகனுக்கு இங்கு எந்தத் தீங்கும் வராது என மனமார நம்பிப் பாடுகின்றான் கம்பன்.