சரஸ்வதி அந்தாதி : 06
சரஸ்வதி அந்தாதி : 06
“மயிலே மடப்பிடி யேகொடி யேயிள மான்பிணையே
குயிலே பசுங்கிளி யேஅன் னமேமனக் கூரிருட்கோர்
வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே”
இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து வரும்.
“மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக் கூர் இருள்க்கு ஓர்
வெயிலே நிலவெழும் மேனி மின்னே இனி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற் பாதங்களே”
கம்பன் அன்னையினைப் போற்றி பாடும் இந்தப் பாடலினை இனி விளக்கமாகக் காணலாம்.
“மயிலே மடபாபிடியே கொடியே இளமான் பிணையே” என்பது முதல் வரி, மயிலே என்கின்றான், மடப்பிடி என்றால் பெண்யானை எனப் பொருள், இளமையான பெண் யானையே, கொடியே எனச் சொல்லும் கம்பன், கலைமானின் பெண் துணையான பிணை எனும் பெயரிலும் அன்னையினைப் பாடுகின்றான்.
அடுத்தவரி “குயிலே பசுங்கிளியே அன்னமே மனக் கூர் இருள்க்கு ஓர்” என வரும், குயிலே இளங்கிளியே அன்னமே, மன இருளுக்கு எனப் பொருள் வரும்.
அடுத்தவரி “வெயிலே நிலவெழும் மேனி மின்னே இனி வேறுதவம்” என வரும், வெயிலே நிலவு எழும் ஒளிபோல மின்னு தோற்றம் கொண்டவளே இனி எனக்கு வேறுதவம் ஏன் என்பது பொருள்.
கடைசிவரி “பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற் பாதங்களே” என முடிகிறது, அப்படியான அன்னையே மகிழ்வுடன் உன் பாதம், பொன்போன்ற பாதங்களைப் பணிவேன் என முடிக்கின்றான் கம்பன்.
ஆக, பாடலின் பொருள் இதுதான்.
குயிலே, பெண் யானையே, பெண் மானே, குயிலே, கிளியே அன்னமே, இருளுக்கு ஒளியாய் வருபவளே, நிலவு போல் ஜொலிப்பவளே இனி நான் வேறு தவமோ வழிபாடோ செய்ய அவசியமில்லை, உன் திருவடி பணிந்து மட்டும் இருப்பதே என்பணி”
இந்தப் பாடல் வெறுமனே பறவைகள் பெயரோடும் சில துதிகளோடும் முடியும் சாதாரண பாடல் போல் தெரிந்தாலும் ஆழ்ந்த பொருள் கொண்டது.
முதலில் அன்னையினை மயில் என்கின்றார், அன்னைக்கு “சதுஷ்ஷஷ்டி கலாமயி” என ஒரு பெயர் இருப்பதை லலிதா சஹஸ்ரநாமம் சொல்கின்றது, அன்னை மயில் வடிவில் தவமிருந்து இறைவனை அடைந்தவள். அவ்வகையில்தான் மயிலாப்பூர் கோவில் வரலாறே உண்டு.
அவளுக்கு “மயூரி” என்றொரு நாமமும் உண்டு, மயில்கள் மலைப்பகுதியில் வசிப்பவை என்பதால் பார்வதி தேவியினைச் சொல்லும் இடமெல்லாம் மயிலையும் சொல்வார்கள்.
அடுத்து மடப்பிடியே என்கின்றார், பிடி என்றால் பெண்யானை மடப்பிடி என்றால் இளமையான பெண்யானை எனப் பொருள்.
இதனை இருவிதங்களில் சொல்லலாம்.
பொதுவாக பெண்ணின் மேல் அழகை யானையின் மந்தகத்தோடு கவிஞர்கள் ஒப்பிடுவார்கள், யானையின் மந்தகம் இருபக்கம் பெருத்து நடுவில் ஒடுங்கியிருக்கும், சேலை கட்டிய பெண்ணின் மார்பழகு அப்படி தோன்றுவதால் பெரும் அழகான பெண்களைப் பிடி எனச் சொல்வது உவமையாயிற்று.
இன்னொன்று கஜலட்சுமி எல்லோரும் அறிந்த வடிவம், அவள் யானைகளால் தாங்கப்படுகின்றவள் என்பதால் பிடி என்றார்.
அடுத்துக் கலைமான் என்கின்றார், மானின் கண்கள் போல பார்வை கொண்டவள் எனப் பொருள், மான் அன்னைக்கும் ஒரு வாகனமாக சில இடங்களில் காணப்படும்.
துர்க்கைக்கு வாகனமாக மானும் உண்டு. பாய்ந்து வரும் கலைமானைக் கொற்றவைவாகனமாகக் கொண்டிருப்பதால் அவள் “பாய்கலைப் பாவை” என்றும் “கலையதூர்த்தி” எனவும் பெயர்கொண்டிருக்கின்றாள்.
மான் வாகனத்தில் பராசக்தி வருவாள், மகாலட்சுமி வருவாள் என்பதால் மானுக்கு “ஹரிணி” எனும் பெயர் உண்டு.
அன்னை பராசக்தி மான் வாகனத்தில் பவனி வருகிறாள். மகாலட்சுமி மான் வடிவில் இருந்து மகிழ்கிறாள். அதனால் மானுக்கு ஹரிணி என்பது பெயராயிற்று. மகாலட்சுமி மான்கள் சூழ, மான் வடிவில் இருப்பதுடன், மானை வாகனமாகவும் கொண்டிருக்கிறாள். முருகன் கோயில்களில் சிலவற்றில் மான் வாகனம் உள்ளது.
காஞ்சிகோவில் உள்ளிட்ட பல இடங்களில் அன்னை மான் மேல்தான் வருவாள், அவள் ஆவேசமான கோலத்தில் சிங்கம்மேல் வரலாம், ஆனால் சாந்தமான கோலத்தில் கலை அருள் வழங்கவரும்போது மான்வாகனத்தில் வருவாள் என்பது ஐதீகம்.
அன்னைக்கு “ராஜீவலோசனா” என்றொரு நாமம் உண்டு, அதற்கு மான் கண்ணின் சாயலைக் கொண்டிருப்பவள் எனப் பொருள்.
அன்னையினைக் குயில் என்கின்றார், அன்னைக்குக் “கோகிலவாணி” என்றொரு பெயர் உண்டு, லலிதா சகஸ்ரநாமம் அதனைச் சொல்கின்றது.
அன்னை குயில் போன்ற இனிமையான ராகங்களைப் பாடுபவள் என அவளுக்கு அந்தப் பெயர் வந்ததால் அவளைக் குயில் என்கின்றார்.
அடுத்துக் கிளியே என்கின்றார், கிளி என்பது இனிமையான மொழிக்கு பெயர்பெற்றது, சொன்னதைத் திரும்பச் சொல்வது ஒரு தத்துவக்குறியீடு.
அன்னை சியாமளை கையில், மதுரை மீனாட்சி அம்மன் கையில் கிளி இருப்பதைக் கவனிக்கலாம், அது அன்னை இனிமையான மொழிகளைத் தருபவள் என்பதன் அடையாளம்.
அடுத்து அன்னமே என்கின்றார், அன்னம் சரஸ்வதியின் வாகனம் என்பது எல்லோரும் அறிந்தது, அன்னை அன்னத்தின் சாயலை கொண்டவள், நன்மை தீமை அறிந்தவள், பரிசுத்தமான ஞானம் கொண்டவள் என்பதைச் சொல்கின்றார்.
அன்னைக்கு “ஹம்ச வாஹனாயை” என்றொரு நாமம் உண்டு அதைச் சொல்கின்றான் கம்பன்.
அடுத்து மன இருட்டை போக்கும் சூரியனே என்கின்றார், வெயில் என்பது சூரியனிடம் இருந்து வரும் வெளிச்சத்தை சொல்லும் வார்த்தை, அவ்வகையில் விடியலை தருவாள் அன்னை என்கின்றார்.
அடுத்து எழுந்துவரும் நிலவின் தோற்றத்தைக் கொண்டு மின்னுபவளே என்கின்றார்.
அன்னை வானத்தில் சுடராக நிற்கின்றாள். அதனால் அவளுக்குப் “பானுமண்டல மத்தியஸ்தா” “சந்திர மண்டல மத்தியஸ்தா” என அவளுக்கு நாமம் லலிதாசஹஸ்ர நாமத்தில் உண்டு, அதனைச் சூசகமாகச் சொல்கின்றான் கம்பன்.
இப்படிப்பட்ட அன்னை தன் மன இருளைப் போக்கி வெளிச்சம் தருவாள், அதே நேரம் நிலவின் குளிர்ச்சியும் தருவாள், அவளை விட்டு எங்கும் நீங்கமாட்டேன். அவள் காலடியில் பணிந்தே கிடப்பேன் என உருகிப் பாடுகின்றான் கம்பன்.
இந்தப் பாடலில் அவன் மறைமுகமாகச் சொல்லவரும் தத்துவம் ஆழமானது.
சொற்களையும் பெயர்களையும் கொண்டு ஒரு பாடலை அவன் குலுக்கிப்போட்டுவிட்டான், அதை ஒவ்வொன்றாக பிரித்து அடுக்கினால் அழகான அர்த்தத்தை ஆழமான பொருளுடன் பெறலாம்.
இங்கே மயில் என்பதும் மான் என்பதும் பார்வதியினைக் குறிக்கும் சொற்கள், அந்த ஆதிபராசக்தி பார்வதியின் அம்சமாய் துர்க்கையாய் நிற்கின்றாள் .
அப்படியே கஜலட்சுமி எனும் யானையினைச் சொல்கின்றான், அன்னை லட்சுமி வடிவானவள் , அலைமகள் அம்சமாய் இருப்பவளும் அவளே .
அவள் அன்னப்பறவை சாயலில் இருப்பாள் அதாவது கலைமகளாக இருப்பவள் அவளே, சர்ஸ்வதியும் அவளே.
ஆக மலைமகள், அலைமகள், கலைமகள் என எல்லா வடிவமுமாக நிற்கும் அன்னையினை விட்டு எங்குச் செல்லமுடியும். அவளே எல்லா வரமும் தருபவள்; அவளே தைரியம் தருவாள்; அவளே செல்வம் தருவாள்; அவளே கல்வியும் அறிவும் தருவாள்; அவளை விட இன்னொரு தெய்வம் எங்கே உண்டு.
இந்த மூன்றும் ஓரிடத்தில் கிடைக்கும்போது வேறு எங்குச் செல்ல அவசியம் உண்டு? அப்படியே தேடினாலும் எங்கே தேடுவது?
வானம் அவள், சூரியன் அவள், நிலவும் அவள். அப்படியாக எல்லாமுமாக இருக்கும் அவள் எதுவும் அறியா இருட்டாய் இருந்த என் மனதையும் ஞான வெளிச்சத்தால் நிரப்பி இருக்கின்றாள், அந்த ஞானத்தால் நான் எல்லாம் அறிந்துகொண்டேன். இனி அவளை விட்டு எங்கே செல்வது? அவளை அறிந்தபின் அவளை நீங்குவது அறிவுடமை ஆகுமோ, ஆகாது அதனால் அவளைவிட சிறந்தது இல்லை என்பதால் அவள் பாதமே பணிகின்றேன் என உருகிப் பணிகின்றான் கம்பன்.
இந்தப் பாடலில் கிளியும் குயிலும் அவன் ஏன் சொல்கின்றான் என்பதில்தான் பாடலின் முழுச் சுவாரஸ்யமுமே அடங்கியிருக்கின்றது.
இங்கே அவன் அன்னையின் இன்னொரு வடிவமும் கலைகளின் தனி வடிவமான சியாமளையினைப் பாடுகின்றான்.
குயில் என்பது அவள் கொண்டிருக்கும் வீணையின் நாதத்தை குறிப்பது, கிளி என்பது அவளின் பச்சை நிறத்தையும் அவள் அருளும் கிளிபோன்ற இனிய பேச்சினையும் சொல்வது.
மதுரையில் இருக்கும் மீனாட்சி அந்த சியாமளா வடிவமே, அவளே கலைகளுக்கு அதிபதி.
காளிதாசன் அவளுக்கே “சியாமளா தண்டகம்” எனும் நூலைப் பாடினான்.
அந்தச் சியாமளையினைத்தான் இங்கே குறிப்பிட்டு பாடிக் கலைகளும் காவியங்களும் பாட அருளைத் தரும் அவளைத் துதிக்கின்றான் கம்பன்.
‘சியாமளா’ என்றும், ‘ஸ்ரீ ராஜ சியாமளா’ என்றும், ‘ஸ்ரீமாதங்கி’ என்றும், ‘மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.
தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள்.
கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள்.
அவள் வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் ‘மந்திரிணீ’ என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.
ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி எனக் கொண்டாடப்படும் அவள் அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக,(முத்திரை மோதிரம் தரித்தவளாக) இருப்பவள்.
அதனால் லலிதா ஸஹஸ்ரநாமம் அவளை “மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதுரே நம” என்று போற்றுகிறது.
மேலும் ‘கதம்பவனவாஸினீ’ என்றும் இந்த அம்பிகை துதிக்கப்படுகிறாள். ஸ்ரீ லலிதா தேவியின் வாசஸ்தலமான ஸ்ரீ நகரத்தில், சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்வதாலேயே சியாமளா தேவிக்கு இந்தத் திருநாமம்.
மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள். மதுரைக்குக் ‘கடம்பவனம்’ என்ற ஒரு பெயரும் இருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ லலிதோபாக்கியானம் எனும் நூல் அவளை “சங்கீத யோகினி சியாமா, ச்யாமளா, மந்திர நாயிகா’ என்று எனப் போற்றுகிறது.
காளிதாசன் தன் சியாமளா தண்டகத்தில் தொடக்கப் பாடலை இப்படிப் பாடுகின்றான்.
“மாணிக்யவீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி”
என்பது அந்த காளிதாசனின் பாடல்
“மாணிக்கங்கள் இழைத்த வீணையை இசைப்பவளும் பரமானந்தத்தில் திளைப்பதால் மந்தமான நடையுடையவளும், நீல மணியின் ஒளியுடன் கூடிய அழகிய உடலுறுப்புகள் உள்ளவளும், மதங்க முனி
வரின் புதல்வியுமான பராசக்தியை மனதில் தியானம் செய்கிறேன்” என அதற்குப் பொருள்.
அவன் தன் ஸ்லோகத்தில் அம்பிகையின் அழகை சொல்கின்றான்.
அவள் மாணிக்கக் கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் விருப்பமுடையவளாக, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக, திருமார்பில் குங்குமச்சாந்து தரித்தவளாக, தன் திருநெற்றியில், சந்திரகலையை அணிந்தவளாக, கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள்.
அம்பிகையின் திருக்கரங்களில் கிளியும் இடம்பெற்றிருக்கிறது என்கின்றான், அந்தத் தோற்றத்தைத்தான் கம்பன் இங்கே கிளியே எனப் பாடுகின்றான்.
அவள் ஏந்திய வீணையின் இசை நாத அடையாளமாக அவளைக் குயிலே என்கின்றான் கம்பன்.
அம்பிகையின் அந்தச் சியாமளா எனும் பச்சை வண்ண தோற்றம் சாமான்யம் அல்ல, கிளி என அவன் சொன்னதில் மறைமுகமாக இந்தப் பச்சை வண்ண தோற்றத்தையும் சொல்கின்றான்.
பச்சை என்பது உயிர்சக்தியினைக் குறிப்பது, தாவரம் முதல் உணவும் உயிரும் கொண்டிருக்கும் எல்லாமும் பச்சை நிறத்தில் இருப்பதைக் காணலாம்.
அப்படியே அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது.
மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
சில நூல்களில், ஸ்ரீ சியாமளா, பச்சை வண்ணம் உடையவளாக, சிரசில் சந்திரகலையை அணிந்தவளாக, நீண்ட கேசமும் புன்முறுவல் பூத்த அழகுத் திருமுகமும் உடையவளாக, இனிமையான வாக்விலாசம் உடையவளாக, ஆகர்ஷணம் பொருந்திய திருவிழிகள் உடையவளாக, கடம்ப மாலையும், பனை ஓலையினாலான காதணி மற்றும் பல்வேறு ஆபரணங்கள் தரித்து தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.
சில தாந்த்ரீக நூல்களில், ஸ்ரீ ராஜ சியாமளா தேவி, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, நெற்கதிர், தாமரை, பாசம், அங்குசம், ஜபமாலை, புத்தகம், வீணை முதலியவற்றைத் தாங்கியவளாக சித்தரிக்கப்படுகிறாள். தேவியின் திருத்தோள்களில் கிளியும் இருப்பதாகக் குறிக்கப்படுகிறது.
இதில், நெற்கதிர், ஜீவனின் முந்தைய கர்மவினைகளையும், பாசம், ஆசையையும், அங்குசம் கோபத்தையும், ஜபமாலை புத்தகம் முதலியவை அறிவையும், வீணை யோகத்தையும் குறிக்கிறது.
அம்பிகையின் திருக்கரத்திலிருக்கும் கிளியே ‘ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியாக’ அவதரித்து, ஸ்ரீமத் பாகவதம் முதலான நூல்களை அருளியதாக ஐதீகம்.
சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி.
(யந்திரம் மற்றும் மந்திரம் ஆகியவற்றின் துணை கொண்டு ஓர் உயரிய இலக்கை அடையும் முறைக்கு ‘தாந்த்ரீகம்’ என்று பெயர்.)
தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள்.
தசமாஹவித்யாவில் அவள் முக்கியமானவள் அவளே. மஹாவித்யையே ஸ்ரீமாதங்கி.
மதங்க முனிவரின் மகளாக வந்துதித்த காரணத்தாலேயே ‘மாதங்கி’ என்ற திருநாமம் அம்பிகைக்கு ஏற்பட்டது.
கிராமப்புறங்களில், ‘பேச்சி’, ‘பேச்சாயி’ ‘பேச்சியம்மன்’ என்ற திருநாமங்களோடு வழிபடப்படும் தெய்வம், பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகையைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
ஆம், நல்ல பேச்சாற்றல் வழங்கும் அன்னை சரஸ்வதியே, அவளின் அம்சமான சியாமளையேதான் பேச்சி,பேச்சாயி( பேச்சுவழங்கும் தாய்), பேச்சியம்மன் என அழைக்கப்படுகின்றாள்.
எல்லைகளற்ற கடல்போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதை பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே அமையும்.
ஒரு விஷயத்தைச் சொல்லும் நயத்துக்கும், அதன் பொருளைச் சொல்லும் நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.
பாட்டு, நடனம், நினைத்த பொழுதில் கவி இயற்றும் திறன் போன்ற நுண்கலைகள் அம்பிகையின் அருளாற்றலாயே ஒருவருக்குக் கிடைக்கிறது.
சரஸ்வதி தேவியின் விரிந்த, பேராற்றலுள்ள வடிவமே சியாமளை, அந்த சியாமளாவிற்கு மூன்று அங்க- உபாங்க தேவதைகள் உள்ளனர். லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி என்பவர்களே அவர்கள்.
ஆம், “சங்கீத மாத்ருகை” என அழைக்கப்படுபவள் அந்தச் சியாமளை.
கம்பன் இந்தப் பாடலில் இப்படி அன்னையின் பெருமையினைச் சொல்கின்றான், அந்த மகாசக்தி முப்பெரும் தேவியர் வடிவில் உண்டு, தசமாஹா வித்யாவில் ஒருத்தியான சியாமளா வடிவிலும் உண்டு.
அந்த சியாமளைதான் கலைகள் அனைத்திற்கும் அதிபதி, எல்லாக் கலைகளும் அவளிடமிருந்தே வருகின்றன, ஜாதகத்தில் புதன் கிரகம் வழியாக நுண்கலைகள் அனைத்தும் தருபவள் அவளே.
அந்த அன்னையின் மாபெரும் அருமை தெரிந்தபின் நான் அவளைவிட்டு விலகுவேனோ, மாட்டேன் ஒருகாலமும் மாட்டேன் அவள் காலடியில் அமர்ந்து எல்லாம் பெற்றுக்கொள்வேன் எனப் பாடுகின்றான் கம்பன்.
சரஸ்வதிதான் சியாமளா தேவி எனப் பாடி, சியாமளையின் பெருமையினைச் சொல்லி அவளே தன் காவல் என உருகுகின்றான்.
காளிதாசனின் சியாமளை தண்டக ஸ்லோகத்தின் வரிகளில் இருந்து இந்தப் பாடலை எடுத்துப் பாடுகின்றான் கம்பன்.
அதையே அபிராமிபட்டரும் தன் பாணியில் பாடுகின்றார், சியாமளையினை நினைந்து பாடுகின்றார்.
“குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாச்சலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே” என்கின்றார்.
சரஸ்வதியான அந்தச் சியாமளை பிரம்ம வித்தையின் 98 அக்ஷரங்களின் அதிபதியாக விளங்கும் அந்த மகா சரஸ்வதியினைத்தான் காளிதாசன் பாடினான், அபிராமிபட்டர் பாடினார்.
அவளின் தோற்றத்தைத்தான் அவளின் ஆற்றலைத்தான் அவளின் பெருமையினைத்தான் இப்பாடலில் பாடி , இப்படிப்பட்ட மகாசக்தியினைவிட தனக்கு என்ன வேண்டும்? அவள் காலடிபோதும் என உருக்கமாகப் பாடுகின்றான் கவிசக்கரவர்த்தி கம்பன்.