சரஸ்வதி அந்தாதி : 08
சரஸ்வதி அந்தாதி : 08
“இனிநான் உணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்
கனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்
தனிநாயகியை அகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்
பனிநாண் மலர் உறை பூவையை யாரணப் பாவையையே”
பாடலைப் பொருள் பிரிந்து காணலாம்.
“இனி நான் உணர்வது எண் எண் கலையாளை இலகு தொண்டை
கனி நாணும் செவ்விதழ் வெண்ணிறத்தாளை கமலவயன்
தனி நாயகியினை அகிலாண்டமும் பெற்ற தாயை மண
பனிநாண் மலர் உறை பூவையௌ யாரண பாவையை”
முதல்வரி “இனி நான் உணர்வது எண் எண் கலையாளை” என்பது
இனி நான் உணர்வது என்பதற்கு என்ன பொருள் என்றால் ஒரு விஷயம் புரிந்து அதன்படி நடப்பது அல்லது ஒரு முடிவினை உணர்ந்து இதுதான் சரியானது, இதுதான் இறுதியானது என அதன் வழி நிற்பது.
இதுதான் என் முடிவு என்பதைத்தான் இப்படி தொடங்குகின்றான் கம்பன்.
தான் உணர்ந்து கொண்டது, தனக்கு முழுக்க புரிந்தது எது என அவன் சொல்கின்றான் என்றால், அன்னையின் ஆற்றலை புரிந்துகொண்டேன் என்கின்றான்.
“எண் எண் கலையாளை” என்பது எண்ணெட்டு 64 கலைகளின் அதிபதியான அன்னையின் சிறப்பைப் பற்றியது, அன்னை ஆய கலைகள் 64 கலைகளின் மூலம். அவளிடமிருந்தே எல்லா கலைகளும் வருகின்றன, அவளே அருள்கின்றாள்.
அதைச் சொல்லி தொடங்குகின்றான் கம்பன்.
அடுத்து “இலகு தொண்டை கனி நாணும் செவ்விதழ் வெண்ணிறத்தாளை” என்கின்றான்.
தொண்டை கனி என அவன் சொல்வது கோவைக் கனி.
கோவைக்கனி தரும் கொடி வேலிகளில் அதாவது வழியோரங்களில் பாதை ஓரங்களின் வேலிகளில் படர்ந்திருக்கும். வழியோரம் செல்வோர் அதனைக் காணமுடியும்.
பாதைக்கு ‘தொண்டு’ என்றொரு பெயர் உண்டு. வேலியின் நுழைவாயிலை தொண்டு அலல்து தொண்டை என்பார்கள்.
உடலின் உணவு செல்லும் வழியான தொண்டை முதல், இரு நாடுகளுக்கு வழியான தொண்டை மண்டலம் வரை இப்படித்தான் பெயரானது.
அந்த வழியோர வேலியில் காய்க்கும் கோவை கனியினைத்தான் இங்கே உவமையாக சொல்கின்றான் கம்பன், அது செந்நிறமானது.
அந்த கோவைக்கனி நாணும் அளவு சிவந்த இதழ்களை கொண்ட அன்னை, வெண்ணிறமான தூய மேனி கொண்டவள் என்கின்றான்.
அடுத்து “கமலவயன் தனி நாயகியினை அகிலாண்டமும் பெற்ற தாயை “
கமலம் என்றால் தாமரை, தாமரைமேல் அமர்ந்திருக்கும் பிரம்மன் என்பது பொருள். அந்த பிரம்மனின் தனி நாயகியினை என்கின்றார்.
அதாவது பிரம்மன் படைப்பு தொழில் செய்பவன், அவன் அன்னையின் அருளில்தான் படைக்கின்றான் என்பது புராண தத்துவம். அன்னை இல்லாமல் பிரம்மன் இல்லை. ஆனால் பிரம்மன் இல்லாமல் அன்னை தனியாக இயங்கும் சக்தி கொண்டவள்.
அதைத்தான் “தனி நாயகி” என்கின்றான் கம்பன்.
அப்படியே “அகிலாண்டமும் பெற்ற தாயை” என்கின்றான், அன்னை எல்லா உலகங்களுக்கு மட்டுமல்ல எல்லா அண்டங்களுக்கும் தாய், எல்லா அண்டங்களும் அவற்றின் உயிர்களும் அன்னையிடம் இருந்தே தோன்றியதால் அவள் லோகநாயகி மட்டுமல்ல அகிலாண்டேஸ்வரி என்கின்றான்.
கடைசி வரியாக “மண பனிநாண் மலர் உறை பூவையாள் ஆரண பாவையை” என்கின்றான்.
அதாவது நல்ல மணம் கொண்டதும், நீர் பனித்து நிற்பதுமான புதுத் தாமரையில் வசிக்கின்றவள் ஆரணம் எனும் வேதங்களின் வடிவானவள் அவள் என்பது பொருள்.
ஆக பாடலின் பொருள் இதுதான்.
“அன்னை 64 கலைகளின் மூலம், கலைகள் அனைத்தும் அவளிடம் இருந்தே தோன்றுகின்றன, கோவை பழமும் நாணி தோற்கும் அந்த சிவந்த வாயும் வெண்ணிற மேனி கொண்டவள். அவள் பிரம்மன் துணை இல்லாமலும் தனித்து இயங்கும் தனி நாயகி, 64 கலைகளுக்கு மட்டுமல்ல இந்த உலகுக்கு மட்டுமல்ல அண்டங்கள் அனைத்துக்கும் அவளே தாய்.
அவள் வெண் தாமரையில் வசிப்பவள், வேதங்களின் வடிவமே உருவான ஞானப்பெண் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்”
அன்னை 64 கலைகளின் மூலம் என்பதையும், அனைத்து கலைகளும் அவளிடம் இருந்தே வருகின்றது என்பதையும், கலைகளே ஒருவனை பண்படுத்தி இறைவனிடம் அழைத்து சென்று ஞானம் தரும் என்பதையும் முன்பே கண்டிருக்கின்றோம்.
அன்னை 64 கலைகளை வழங்குவதால் கலைமகள், அவளை “கலாவதி” என்றும், இன்னும் “காவ்யகலா” என்றும் பல பெயர்களில் லலிதா சஹஸ்ர நாமமும், வேதநூல்களும், சாஸ்திர நூல்களும் குறிப்பிட்டு வணங்குகின்றன.
சவுந்தர்ய லஹரி அதைச் சொல்கின்றது.
“சது ஷஷ்ட்யா தந்த்ரைஸ் ஸகல மதி ஸந்தாய புவநம்
ஸ்தி தஸ் தத்தத் ஸித்தி ப்ரஸவ பரதந்த்ரை பசுபதி : |
புநஸ் த்வந்நிர் பந்தா தகில புருஷார்த்தைக கடநா
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல மவாதீதர திதம்” ||
அதாவது பராசக்தி தாயே! பரமசிவன் இவ்வுலகில் அவரவர் விரும்பும் சித்திகளை மட்டும் அளிக்கும் 64 சாஸ்திரங்களால் திருப்தியடையச் செய்துவிட்டு பேசாதிருந்துவிட்டார். ஆனால் பின்னர் உன்னுடைய நிர்ப்பந்தத்தின் பேரில் அந்த 64 சாஸ்திரங்களின் வாயிலாகவும் அடையக்கூடிய பிறவிப் பயன்களையெல்லாம் ஒருங்கே கிடைக்கச் செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்த முக்கியமான பஞ்சதசீ என்னும் உன்னுடைய உபாசனா முறையே இப்பூவுலகில் வெளியிட்டார் என்பது பொருள்
அன்னை 64 கலைகளையும், அதனால் அடையும் சித்திகளையும் தன் உபாசகர் மூலம் உலக மக்களுக்கு தந்தார் என்கின்றது பாடல்.
அதைத்தான் கம்பன் இங்கே பாடுகின்றான்.
அடுத்து அன்னையின் இதழின் சிகப்பை பற்றி சவுந்தர்ய லஹரி சொல்வதை காணலாம், அதை பற்றி ஒரு ஸ்லோகம் உண்டு.
“ப்ரக்ருத்யா (ஆ)ரக்தாயாஸ் தவ ஸுததி தந்தச்சதருசே:
ப்ரவக்ஷயே ஸாத்ருச்யம் ஜநயது பலம் வித்ருமலதா |
ந பிம்பம் தத்பிம்ப ப்ரதிபலந ராகாத் அருணிதம்
துலாம் அத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா ” ||
அதாவது அம்பிகே!, இயற்கையாகவே சிவந்த உன்னுடைய அதரங்களுக்கு சமமாக ஒரு பொருள் ஏதாவது இருக்குமானால், அது பவழக்கொடியில் பழுத்த பழமாக இருக்கலாம். கோவைப் பழமோ உன்னுடைய அதரத்தினது ஒளியால் உண்டான சிவப்பு நிறமுடையதாக இருப்பதால், அது உனது அதரகாந்தியின் முன் வெட்கப்படும்படியாக இருக்கிறது.
நான் முன்பே பார்த்தபடி வெற்றிலையால் சிவந்த அன்னையின் வாயிலின் எச்சில் துளியிலிருந்து கலைகள் வருவதாக நம்பிக்கை உண்டு, பல புலவர்களும் மகான்களும் பாடிய வரி அது.
இதனால் அன்னையின் உதட்டை எப்போதும் சிவந்த நிறத்துக்கே ஒப்பிடுவார்கள், இந்த சவுந்தர்ய லஹரி பாடலும் அதைத்தான் சொல்கின்றது.
பவழக்கொடிக்கு பழம் கிடையாது, ஆகையால் அம்பாளுடைய அதரங்களுக்கு இணை ஏதுமில்லை என்று கூறுகிறார் ஆதிசங்கரர். கோவைப் பழத்திற்கு சம்ஸ்கிருதத்தில் பிம்ப பழம் என்று பெயர். அன்னையின் அதர பிம்பத்தின் சிகப்பு நிறமானது கோவைக்கனியில் பிரதிபலிப்பதாலேயே அப்பழம் அந்த நிறத்தைப் பெற்றிருக்கிறது என்பார்கள் மகான்கள்.
ஆக, பிரதிபலிப்பே கோவைப்பழத்தின் சிவப்பு என்றால் அதனின் மூலமான அன்னையின் அதரங்கள் எப்படியிருக்கும் என உருவக அழகில் பாடுகின்றார் சங்கரர்.
இதுவே சஹஸ்ரநாமத்தில் “புதிதான பவழத்தினும் கோவைப்பழத்தினும் சிறந்த காந்தியுடைய உதடுகளைக் கொண்டவள்” (நவ வித்ரும பிம்ப ஸ்ரீ ந்யக்காரி ரதனச் சதா) என்று கூறப்படுகிறது.
இந்த இரு ஸ்லோகங்களையும் முன்னிட்டுத்தான் இந்த வரிகளில் பாடுகின்றான் கம்பன்.
அடுத்து அன்னை வெண்ணிற மேனியாள் என்கின்றான், இது பற்றி சில பாடல்களைக் காணலாம்.
சவுந்தர்ய லஹரியில், அன்னையே! உடைந்த சந்திர காந்த கல்லின் உள் பகுதிபோல் வெண்மையான ஒளி நிறைந்த வசினி தேவதைகளையும், உன்னையும் உபாசிப்பவன் (“ஸவித்ரீபிர்-வாசாம் சசிமணி-சிலா-பங்க-ருசிபிர் வசின்யாத்யாபிஸ்-த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்த”) எனப் பொருள் பட அன்னை வாக் தேவதைகள் உருவில் வெண்மை நிறமாய் நிற்கின்றாள் என சங்கரர் பாடியதையே இங்கு பாடுகின்றான் கம்பன்.
லலிதா சஹஸ்ரநாமம் அன்னை வெண்ணிறத்தவள் என்பதை “சுக்ல வர்ணா” அதாவது வெண்மை நிறம் உடையவள்; “கௌரி” அதாவது வெளுப்பான நிறமுடையவள் என்கின்றது. மேலும் அவள் “தருண ஆதித்ய பாடலா” அதிகாலை சூரியனைப் போல வெண்ணிற நிறத்துடன் ப்ரகாசிப்பவள் என்ற பொருள் பட துதிக்கின்றது.
கம்பன் இதைத்தான் சொல்லிபாடுகின்றான்
இந்த வடிவம்தான் இந்த வெண்ணிற வடிவம்தான், அவள் தன் ஞான அருளைத் தருகின்றாள் எனும் குறியீடுதான் அன்னை ஞானப்பாலை வெண்ணிற பாலை தருவாள் என ஞானியரால் பாடப்பட்டது.
சம்பந்தருக்கு அவள் ஞானம் கொடுத்தது இப்படித்தான், அந்த ஞானம் தனக்கும் அன்னை தந்தாள் எனப் பாடுகின்றான் கம்பன்.
அடுத்து “பிரம்மனின் தனி நாயகி” என்கின்றான். அதாவது அன்னை தனியே நின்று சாதிப்பவள், பிரம்மனை நம்பி அவள் இல்லை, பிரம்மனே அவளை நம்பியிருக்கின்றான் என்பது அவன் சொல்லும் புகழ்ச்சி.
சவுந்தர்ய லஹரியில் “அன்னையே, பிரம்மா உன்னுடைய திருவடித் தாமரைகளிலுள்ள மிக நுட்பமான துகளை ஸம்பாதித்து உலகங்களை முட்டின்றி சிருஷ்டிக்கிறார். (“தநீயாம்ஸம் பாம்ஸும் தவசரண பங்கேருஹ பவம் விரிஞ்சி: ஸஞ்சிந்வந் விரசயதி லோகாநவிகலம் “)
எனப் பொருள்பட உள்ளது ஒரு ஸ்லோகம்.
இதைத்தான் கம்பனும் பாடி அன்னையிடம் இருந்தே பிரம்மன் படைப்பை செய்கின்றான், அவள் கால் தூசியில் இருந்தே உலகை படைக்கின்றான் அவள் அப்படி தனித்த சக்தி கொண்டவள் என்பதையே “தனி நாயகி” என ஒரு வார்த்தையில் அவன் சொல்லி வணங்குகின்றான்.
லலிதா சஹஸ்ரநாமம் “உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவலீ” என்கின்றது. அதாவது கண் சிமிட்டுவதால் பேரண்டங்களை தோன்றி மறையச் செய்பவள் என அவள் ஆற்றலைச் சொல்கின்றது.
சவுந்தர்ய லஹரி “மலையரசன் மகளே ! நீ கண்களைத் திறப்பதால், மூடுவதால் உலகம் தோன்றுவதாகவும், அழிந்து விடுவதாகவும் கற்றறிந்த வித்வாங்கள் சொல்கின்றனர்” (நிமேஷ உன்மேஷாப்யாம் ப்ரலயம் உதயம் யாதி ஜகதி) என இதையே சொல்கிறது.
மொத்தம் 1008 அண்டங்கள் உண்டு என்பது புராண செய்தி, அந்த ஆயிரத்து எட்டு அண்டங்களும் அவள் கண் மூடித் திறப்பதால் தோன்றி மறைகின்றன. அதனால் அவள் அகிலத்தின் தாய், அவளில் இருந்தே எல்லாம் தோன்றி மறைவதால் அவளே அகில அண்ட ஈஸ்வரி, அகிலாண்டேஸ்வரி என வணங்கபடுகின்றாள்.
அன்னை “சஹஸ்ர சீர்ஷ வதனா”, “”சஹஸ்ராக்ஷீ” “சஹஸ்ர பாத்” அதாவது அன்னை ஆயிரக்கணக்கான (எண்ணற்ற) தலைகளும்/ முகங்களும், ஆயிரக்கணக்கான கண்களும், பாதங்களும் கொண்டு எங்கும் வியாபித்திருக்கின்றாள் என்றும்,
அவள் “லீலா-க்லுப்த ப்ரஹ்மாண்ட மண்டலா” அதாவது பிரம்மாண்ட மண்டலங்களை விளையாட்டாக சிருஷ்டிப்பவள் எனறெல்லாம் சஹஸ்ரநாமம் போற்றுகின்றது.
அந்த அகிலாண்டேஸ்வரி கோலத்தை வணங்கிப் பாடுகின்றான் கம்பன்.
அடுத்து வேதங்களின் வடிவானவள் என்கின்றான்.
அன்னை வேத வடிவானவள் அவளே வேதவல்லி, வேதங்கள் தாங்கும் அரியணையில் வீற்றிருப்பவள் என்பதை பல இடங்களில் பார்த்திருக்கின்றோம்.
அவளை “வேத ஜனனி” என்கின்றது சஹஸ்ரநாமம். அதாவது அவளிடம் இருந்தே வேதங்கள் தோன்றின எனப் போற்றுகின்றது.
அதனாலே அவள் “வேத மாதா” என்றானாள், அப்படியே அவள் “ஜாதவேதஸே” எனப் போற்றபட்டாள்.
அன்னை வேதம் அறிந்தோர் மனதில் வேதமாய் வாழ்கின்றாள் (“விப்ர ப்ரியா” “விப்ர ரூபா”) என்பதும் சஹஸ்ரநாம வாக்கு.
இதைத்தான் கம்பனும் பாடி தொழுகின்றான்.
அன்னை எல்லா கலைகளுக்கும் அதிபதியானவள், கலைகளை தன் வாயின் தாம்பூலத்தின் துளியில் இருந்து தரும்படி கோவை கனி நாணும் சிவந்த அதரங்களை கொண்டிருப்பவள், அவள் வாக் தேவதை என வெண்ணிற உருவில் இருப்பவள், வெண்ணிய ஞானபாலாக தன் பக்தருக்கு ஞானம் தருபவள்.
அவள் இந்த பூமியல்ல, இந்த அண்ட சராசரங்களின் அகிலாண்டேஸ்வரி, அவள். இந்த மாபெரும் பிரபஞ்சத்தையும் அதிலிருக்கும் எல்லாவற்றையும் உருவாக்குபவள், அவள் கால் தூசியில் இருந்தே பிரம்மன் பெரிய உலகை படைக்கின்றான், அவள் இல்லாவிட்டால் பிரம்மன் இல்லை, அவள் தனித்து நிற்கும் நாயகி.
அந்தப் பெரிய நாயகியினை, தனி நாயகியினை, வேதங்களின் வடிவானவளைப் பற்றி என் மனம் அறிந்துகொண்டது. அவளின் ஆற்றலையும், சக்தியையும், மாபெரும் வல்லமையையும் என் மனம் அறிந்து கொண்டது. அதைத் தவிர இவ்வுலகில் அறிந்து கொள்ள இனி எதுவுமே இல்லை. அது போதும். அவளை அறிந்தால் எல்லாம் அறிந்த நிலையாகிவிடும், அந்நிலையினை நான் அடைந்துவிட்டேன் என உணர்ந்து பாடித் தொழுகின்றான் கம்பன்.