சரஸ்வதி அந்தாதி : 09

சரஸ்வதி அந்தாதி : 09

“பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவும் கலைகள் விதிப்பா ளிடம்விதி யின்முதிய
நாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கும் நறுங்கமலப்
பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து வரும்.

“பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா(ய்)
மேவும் கலைகள் விதிப்பாள் இடம் விதியின் முதிய
நாவும் பகர்ந்த தொல் வேதங்கள் நான்கும் நறுகமல‌
பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே”

முதல்வரி “பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா(ய்)” என வரும், இது யாப்பிலக்கண அம்சங்கள்.

இரண்டாம் வரி “மேவும் கலைகள் விதிப்பாள் இடம்” என வரும், விதி என்றால் கொடுக்கப்பட்டது எனப் பொருள், எல்லா கலைகளையும் கொடுப்பவள் இடம் எனப் பொருள்.

மூன்றாம் வரி “விதியின் முதிய நாவும் பகர்ந்த தொல் வேதங்கள் நான்கும்”, விதியின் முதிய நாவும் என்றால் பிரம்மனின் நாக்கு எனப் பொருள், தொல் வேதம் என்றால் நான்வகை வேதங்கள்.

கடைசி வரி “நறுகமல பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே”, நல்ல மணம் வீசும் வெண் தாமரைப் பூவும். அவளின் பாதம் எப்போதும் பற்றி பாடிக்கொண்டிருப்பவர் புந்தி எனும் புத்தியுமே.

இந்தப் பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்.

“யாப்பிலக்கணப்படி அமையும் பாடல்களும் வார்த்தையும் அதன் பொருளும் இன்னும் பலவித கலைகளைத் தரும் தேவி எங்கே அமர்ந்திருப்பாள், அவள் இருக்குமிடம் எது என்றால் அவள் முதலில் தோன்றிய மூத்தவன் பிரம்மனின் நாவில் அமர்ந்திருப்பாள். நான்கு வேதங்களிலும் இருப்பாள், நல்ல மணம் வீசும் தாமரையில் இருப்பாள். அப்படியே அவள் திருப்பாதம் அண்டி பூக்களிட்டு வணங்கும் அடியார்களின் மனதிலும் இருப்பாள்.”

அன்னை பிரம்மனின் நாவில் இருப்பாள். நான்கு வேதங்களிலும் இருப்பாள். தாமரையில் இருப்பாள். அடியார் மனதிலும் இருப்பாள் என அன்னை இருக்குமிடத்தை பாடுகின்றான் கம்பன்.

இப்பாடலை அவன் “பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா மேவும் கலைகளும்” எனத் தொடங்குகின்றான்.

பா என்றால் பாடல் வகை, தமிழின் யாப்பிலக்கணம் நான்கு வகை பாடல்களைச் சொல்கின்றது.

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப் பாடல் அமைப்புக்களைச் சொல்கின்றது.

வெண்பா என்றால் இரு அடிகளை உடையது, ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் வரும். 2 அடி முதல் 12 அடிகள் வரை வரிகள் வரலாம்.

குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலிவெண்பா எனப் பல பிரிவுகள் உண்டு.

வெண்பா என்பது செப்பல் ஓசை அதாவது ஒரு பொருளைச் சொல்லும் ஓசையில் அமையும் பாடல் வகை, குறள் இதற்கு சரியான எடுத்துகாட்டு.

ஆசிரியப்பா 3 அடிகளில் தொடங்கும், அடிகளின் மேல் எண்ணிக்கைக்கு எல்லை கிடையாது. ஆசிரியப்பாவின் அடிகள் நான்கு சீர்களைக் கொண்ட அளவடியாகவோ, மூன்று சீர்கள் கொண்ட சிந்தடியாகவோ, இரண்டு சீர்களைக் கொண்ட குறளடியாகவோ அமையலாம். ஐந்து சீர்களைக் கொண்ட அடிகளும் இடம் பெறலாம். எனினும் முதல் அடியும் இறுதி அடியும் அளவடிகளாக இருத்தல் வேண்டும்.

இது நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறிமண்டில ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா என நான்கு வகையில் வரும்.

இது அகவல் ஓசைப்பாடல். அதாவது அழைத்துச் சொல்லும் வகையில் ஒரு விஷயத்தை, யாரையோ அழைத்துச் சொல்லும் வகையில் பாடப்படும்.

கலிப்பா பொதுவாக அளவடி எனப்படும் நான்கு சீர்களைக் கொண்ட அடிகளைக் கொண்டிருக்கும். வரிகள் கணக்கில்லை எனினும் சில வரையறைகள் உண்டு.

இது ஒத்தாழிசைக் கலிப்பா, வெண் கலிப்பா, கொச்சகக் கலிப்பா என மூவகையில் வரும். துள்ளல் எனும் ஒருவித எழுச்சியான பாடல்கள், மகிழ்ச்சியான பாடல்களைக் கொடுக்கும் வகை இது.

அடுத்து வஞ்சிப்பா, இது இரு சீர் அல்லது மூன்று சீர்களைக் கொண்டது. இது தூங்கல் அல்லது மெதுவான ஓசை, பெண்கள் நடக்கும் ஓசை போன்ற சாயலைக் கொண்டதால் வஞ்சிப்பா என்றானது.

குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா என இரண்டு உண்டு.

இந்த நான்கு வகை பாடல்களும் போக, பரிபாடல் மருட்பா என சிலவகைகள் உண்டு.

தொடை என்றால் அழகு எனப் பொருள், ஒரு பாடலுக்கு அழகான வார்த்தைகள் பொருத்தமாய் அமைதல் வேண்டும்.

அந்த தொடை என்றால் பொருந்தி வருவது, சரியாக இணைந்து வருவது எனப் பொருள், இந்த தொடை பல பிரிவுகளைக் கொண்டது.

மோனை, எதுகை, இயைபு, அளபெடை, முரண், இரட்டை, அந்தாதி, செந்தொடை என அது பல வகையில் சொல்லப்படும்.

பாடலுக்கு சந்த அழகும் இன்னபிற அழகும் கொடுப்பது இதுதான்.

பதம் என்றால் சரியான பொருள், அது ஒரு வார்த்தையோ இல்லை எழுத்துக்கள் இணைந்து வரும் வார்த்தையோ, எதுவாயினும் பொருளைச் சரியாக தரவெண்டும் அதுதான் பதம்.

எழுத்துக்களைச் சேர்த்து அசைக்கபடுவது அசை. இந்த அசைகள் சேர்ந்தது சீர் எனப்பெறும். அது ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச் சீர் என நான்கு வகைப்பெறும்.

இந்த சீர்தான் உச்சரிப்பு அழகை தரும், இனிமையினை அதிகரிக்கும்.

ஆக யாப்பிலக்கணத்தை சொல்கின்றான் கம்பன். ஒரு பாடல் யாப்பு எனும் விதிகள் படி அமைதல் வேண்டும். அங்கே எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என எல்லாமும் பொருந்தவேண்டும்.

ஏன் இப்படி இலக்கணம் வகுத்தார்கள் என்றால் இரு விஷயங்கள்.

முதலில் அது பாட எளிதானது. மனனம் செய்ய எளிதானது, சந்த நயத்தோடு அமையும் பாடல் மனதில் தங்கிவிடும்.

இரண்டாவது இந்த யாப்பிலக்கண வகை பாடல்கள்தான் ஏழு ஸ்வரங்களுக்குள் அழகாக கட்டுப்படும். எந்த ராகத்திலும் எந்த தாளத்திலும் அதனைச் சரியாக பொருத்த முடியும். சரியாக அவை மெட்டுக்குள் அமரும், ராகத்துக்கு அடங்கும்.

அப்போது அதன் இசை, பொருள், வார்த்தை ஜாலம் எல்லாமே மிக மிக இனிமையாய் அழகாய் அமையும்.

இந்த யாப்பினை கற்றவர்கள்தான் கவிஞர்களாக முடியும். அத்தோடு எல்லா கலையும் கற்றிருந்தால் மட்டுமே மிகச் சிறந்த கவிஞர்களாக மிளிர முடியும்.

அன்னை எல்லா கலைகளையும் தருகின்றாள். அப்படியே அதைச் சொல்ல நல்ல யாப்பிலக்கண விதிகளையும் தருகின்றாள். எல்லாமே அவள் அருளால் கிடைக்கின்றது.

இப்படிப்பட்ட தேவி மூத்த நாவு என சொல்லப்படும் பிரம்மனின் நாவில் இருக்கின்றாள் என்கின்றான் கம்பன். அன்னை பிரம்மனின் வார்த்தைகளாக ஒலிப்பாள் என்பது ஐதீகம். பிரம்மனின் மொழி அவள்தான் என்பதால் அவள் பிரம்மன் ஓதும்படி அவன் நாவில் இருக்கின்றாள் என்கின்றான்.

லலிதா சஹஸ்ரநாமம் அவளை “ப்ராஹ்மீ” அதாவது பிரம்மாவின் சக்தி வடிவானவள் (வாக்தேவீ) என்கின்றது

அடுத்து வேதங்களில் இருக்கின்றாள் என்கின்றான்.

நால்வகை வேதங்களும் ஒலிவடிவானவை. அவள் “நாதரூபா” அந்த வேதங்கள்தான் உலகை படைத்து இயக்குகின்றன, பிரம்மன் அந்த வேதத்தைத்தான் ஓதுகின்றான்.

அதைத்தான் சொல்லிபாடுகின்றான் கம்பன்

மாமுனி அகஸ்தியர் தன் சரஸ்வதி ஸ்தோத்த்தில் பாடுகின்றார்

“வேதாயை வேதரூபாயை வேதாந்தாயை நமோ நம
குணதோஷ விவர்ஜின்யை குண தீப்த்யை நமோ நம”

அதாவது தானே வேதமாகியவள், வேத உருவானவள், வேதசாரமான உபநிடதங்களின் சாரமான அன்னை சரஸ்வதிக்கு வணக்கங்கள். மாசற்றவள், குண தோஷங்களுக்கு அப்பாற்பட்டு ப்ரகாசிப்பவளுக்கு வணக்கங்கள் என் பாடுகின்றார்

இதைத்தான் கம்பன் அன்னை அந்த வேதவடிவாகவும் இருக்கின்றாள். வேதங்களிலும் இருக்கின்றாள் என்பவன் வெண் தாமரையில் இருக்கின்றாள் என்கின்றான்.

மேலும் அதே ஸ்லோகத்தில் அகத்திய முனி “யாச்வேதபத்மாஸனா” அதாவது வெள்ளைத்தாகரையில் வீற்றிருப்பவள் என்கிறார்.

அன்னைக்கான நாமங்களை “பத்மாசனா, மஹாபத்மாடவி-சமஸ்தா” என்றெல்லாம் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லும்.

வெண் தாமரை என்பது நுண்கலைகளின் வடிவம். நுண்கலைகளின் அதிபதியாக சுக்கிரபகவான் எனும் வெள்ளிக்கிரகம் அறியப்படுவார்.

அன்னை எழுத்துக்கலை போல் இசைக்கலையின் நுணுக்கங்களின் இருப்பிடம் என்பதை விளக்கும்விதமாக மற்றொரு சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தில் வர்ணிக்கிறார் ஆதிசங்கரர்

“கலே ரேகாஸ்-திஸ்ரோ கதி கமக கீதைக நிபுணே
விவாஹ-வ்யானத்த-ப்ரகுணகுண-ஸம்க்யா ப்ரதிபுவ
விராஜன்தே நானாவித-மதுர-ராகாகர-புவாம்
த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதி-நியம-ஸீமான இவ தே”

தாயே ஜதி , ஸ்ருதி என இசையின் நுணுக்கங்களில் சிறந்தவளே, உன் கழுத்திலுள்ள முன்று ரேகைகளும், சிவன் உனக்கு அணிவித்த மஞ்சள் கயிற்றின் அடையாளம் போல் உள்ளது. அது பல வித இனிமையான ராகங்களுக்கு ஆதாரமான சட்ஜம், மத்யமம், காந்தாரம் (ஸ, ம, க) என்ற ஸ்வரங்களின் எல்லைகளை காட்டுவது போல் விளங்குகிறது என அதற்கு பொருள்

அன்னை அந்த நுண்கலைகளின் வடிவத்தைச் சொல்லும் தாமரையில் வசீகர கலைகளின் வடிவமாக நிற்கின்றாள் என்பவன் அடுத்து சொல்கின்றான்.

இப்படி எல்லா கலைகளும் பாடலும் வழங்கும் அவளை பிரம்மன் நாவினில் இருக்கின்றாள். வேத வடிவாகவும் பொருளாகவும் இருக்கின்றாள். இன்னும் ஈர்க்கும் கலைகளை தருபவளாக வெண் தாமரையில் நிற்கின்றாள்.

அந்த அன்னை அங்கெல்லாம் மட்டுமல்ல, யாரெல்லாம் தன்னை மலரிட்டு வணங்குவார்களோ அவர்கள் மனதிலும் இருக்கின்றாள்.

“முனிமானஸ ஹம்ஸிகா” அதாவது தவரிஷிகளின் மனதில் விற்றிருக்கும் அன்னப்பறவை போன்றவள் அன்னை என லலிதா சஹஸ்ரநாமம் போற்றும்.

சௌந்தர்ய லஹரியில் ஆதிசங்கரர், அன்னையை எப்பொழுதும் த்யானிப்பவனுக்கு ஒரு பயமும் இல்லை என பின்வரும் ஸ்லோகம் மூலம் சொல்கிறார் ஆதிசங்கர்

“ஸ்வதேஹோத்-பூதாபி: க்ருணிபி-ரணிமாத்யாபி-ரபிதோ
நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய
கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயன-ஸம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸம்வர்தாக்னி:-விரசயதி நீராஜனவிதிம்”

அதாவது தாயே! அஷ்ட மஹா சித்திகளுடன் கூடிய உன்னை எவன் எப்பொழுதும் மனதில் தியானம் செய்கிறானோ, அவனுக்கு சிவ சாயுஜ்ய பதவி கூட புல்லுக்கு சமானமாகத் தோன்றும். மகாபிரளயகால அக்னியே அவனுக்கு கற்பூர ஆரத்தி செய்திடும் என்பதில் என்ன ஆச்சர்யம்? என்கிறார்.

அதைத்தான் என்னையும் அந்த பெருநிலைக்கு அன்னை வைத்திருக்கின்றாள், என் மனதிலும் அந்த அன்னையே இருக்கின்றாள். அதனால் அழகான பாடல்களை மிகுந்த பொருளோடு மிக இனிமையான இசைநயத்தோடு சந்தங்களோடு கலை அழகோடு தருகின்றாள். எங்குமிருக்கும் அன்னை எனக்குள்ளும் இருக்கும்போது எனக்கு என்ன பயம் வரும்? நான் எதற்கும் கலங்க வேண்டிய அவசியமே இல்லை என அழுத்தமாக பாடுகின்றான் கம்பன்.