சரஸ்வதி அந்தாதி : 13
சரஸ்வதி அந்தாதி : 13
“புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை
அரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத்
தெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற
விரிகின்ற தெண்ணெண் கலைமானுணர்த்திய வேதமுமே”
இப்பாடல் கீழ் கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.
“புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்திருளை
அரிகின்றது ஆய்கின்ற எல்லா அறிவின் அரும்பொருளைத்
தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்துமுற்ற
விரிகின்றது எண்ணெண் கலைமான் உணர்த்திய வேதமுமே”
இனிப் பாடலின் பொருளைக் காணலாம்.
முதல் வரி “புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்திருளை” என வரும். அதாவது “புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்து இருளை” எனப் பொருள்.
புரிகின்ற என்றால் ஒரு விஷயத்தை தேடித் தேடி ஓடி அடைந்து சிந்தித்து அதை புரிகின்ற என்பது பொருள். மனமார விரும்பிப் பயில்கின்ற, அறிய முயலுகின்ற சிந்தனையினுள் பலவாறாக மறுபடி மறுபடி புகுந்து எனப் பொருள்.
இரண்டாம் வரி “அரிகின்றது ஆய்கின்ற எல்லா அறிவின் அரும்பொருளை” என வரும். அதாவது முந்தைய வரியின் தொடர்ச்சியான “இருளை” என்பதைச் சேர்த்துக் கொண்டால் “இருளை அரிகின்றது” என வரி தொடங்கும்.
அதன்படி மன இருளை அகற்றுகின்றது (அரிகின்றது), இன்னும் ஆராயும் எல்லா மறைப் பொருளையும் எனப் பொருள்.
மூன்றாம் வரி “தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்துமுற்ற” என வரும். அதாவது மறைப்பொருளை தேடி அறிந்துகொள்வதால் பெறும் இன்பமானது நெஞ்சம் முழுக்க தெளிவினைக் கொடுக்கும், முதிர்ச்சியினைக் கொடுக்கும் என்பது பொருள்.
நான்காம் வரி “விரிகின்றது எண்ணெண் கலைமான் உணர்த்திய வேதமுமே” என வருகின்றது.
அதவாது அப்படி உணர்ந்த மறைப்பொருளானது பிரம்மாண்டமாக விரிகின்றது, அறுபத்தின் நான்கு கலைகளின் அதிபதியான அன்னை உணர்த்திய வேதம் அப்படி விஸ்வரூபமாகின்றது எனப் பாடி முடிகின்றார்.
பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்.
“அறுபத்திநான்கு கலைக்கும் அதிபதியான அன்னையின் வேதங்களை அறிந்து உணர்வதால், அதனை மறுபடி மறுபடி தியானிப்பதால் மனதின் அறியாமை இருள் அகல்கின்றது. உண்மைப் பொருள் மெல்ல மெல்ல புரிய ஆரம்பிக்கின்றது. அதோடு மகிழச்சியும் ஆனந்தமும் நிறைகின்றது. அந்த மகிழ்ச்சி மனமெல்லாம் பரவி சிந்தையெல்லாம் நிறைந்து விரிந்து பரவுகின்றது” எனப் பாடுகின்றான் கம்பன்.
ஓரிரு வரிகளில் இப்பாடல் பொருளாய் முடிந்தாலும் அதன் ஆழம் மிகப் பெரிது.
கம்பன் அன்னையின் அருளால் யோகியரும், ஞானியரும், பரமஹம்சர்களும், ரிஷிகளும், மகா மகா ஞானிகளும் உருவாகிப் பல சீடர்களை உருவாக்குகின்றார்கள். ஏராளமான மக்களுக்கு நல்வழி காட்டுகின்றார்கள் என்பதைச் சுருக்கமாகச் சொல்கின்றான்.
“சது:ஷஷ்டி கலாமயீ” என்கிறது லலிதா சஹஸ்ரநாமம், அதாவது அறுபத்தி-நான்கு கலைகளின் அம்சமாக வியாபித்திருப்பவள் அன்னை.
கலாவதீ” அதாவது அனைத்து கலைகளின் சாரமானவள் – அனைத்து கலைகளையும் தன்னகத்தே கொண்டவள், வித்யா அதாவது ஞானமயமானவள்.
வேதம் அன்னையால் அருளப்பட்டது. அவளை “த்ரயீ” – ரிக், யஜூர், சாம வேதமானவள், “வேத ஜனனி – வேதங்களைப் படைத்தவள்” என்று சகஸ்ரநாமம் சொல்லும்.
அன்னை அறுபத்திநான்கு கலைகளுக்கும் அதிபதி. அந்த கலைவாணியால் அருளப்பட்ட வேதத்தை ஓத ஓத மனதின் இருள் மெல்ல அகலும்.
அவ்வாறு பராசக்தியான அன்னையின் பாத தூளியான வேதத்தை ஓதி ஓதியே தவம் செய்து அந்த ஞானத்தால் ப்ரம்மனும், விஷ்ணுவும், ருத்திரனும் இந்த உலக வ்யவகாரமான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களைச் செய்கின்றனர் என சௌந்தர்யலஹரியில் ஆதிசங்கரர் பாடுகிறார்.
“தநீயாம்ஸம் பாம்ஸும் தவசரண பங்கேருஹ பவம்
விரிஞ்சி: ஸஞ்சிந்வந் விரசயதி லோகாநவிகலம்|
வஹத்யேனம் ஶௌரி: கதமபி சஹஸ்ரேண சிரஸாம்
ஹர: சம்க்ஷுத்-யைனம் பஜதி பசிதோத்தூள நவிதிம் “
தேவசேனாபதியான முருகப்பெருமானுக்கு தனது தாம்பூலரச ப்ரசாதம் மூலம் ஞானச்செல்வத்தை அருளினாள் அன்னை, அதனால் ஞானபண்டிதன் ஆனார். என சௌந்தர்ய லஹரியில் ஆதிசங்கரர் போற்றுகின்றார்.
“விசாக இந்த்ர உபேந்த்ரை: சசிவிஷத-கர்பூர சகலா
விலீயன்தே-மாதஸ் தவ வதன-தாம்பூல-கபலா |
அதோடு முருகன் அன்னையின் அருளால் பெற்ற தன் வீரதீர பராக்ரமத்தால் தேவர்களைக் காத்து அசுரர்களை வதைத்து உலகைக் காத்தார்.
மேலும் அம்பாளின் மோக்ஷ சாதனமான ஞானாமிர்தத்தைப் பருகியதால்தான் கணபதியும், கந்தனும் எப்பொழுதும் பாலகர்களாகவும், ஞானமுள்ளவர்களாகவும், மங்கையர் சம்பந்தம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர் என்கிறார்.
“பிபன்தௌ தௌ யஸ்மாத் அவிதிதவதூ ஸங்கரஸிகௌ
குமாராவத்யாபி த்விரதவதன-க்ரௌஞ்சதலனௌ |
பல ஞானியரை, யோகியரை, ரிஷிகளை வெவ்வேறு விதங்களில் ஆட்கொண்டு, பலவித ஞானத்தை, வித்யையை, கலைகளை அருளி அதன் மூலம் உலக மாந்தருக்கு அருள் புரிகின்றாள் அன்னை ஆதிபராசக்தி.
மற்றொரு இடத்தில் கடல் சூழ்ந்த நிலமான த்ராவிட பக்கம் இருந்து வந்த, நிலவழி தொடர்பில்லாமல் கடலால் தனித்துவிடபட்ட இடத்தில் இருந்து, கடல் இருப்பதால் பெரும் தொடர்புகளோ பெரும் ஞானியரோ வராத இடமான த்ராவிடம் எனும் முப்பக்கம் நீர்சூழ் பகுதியின் குழந்தையான தான் தேவியின் ஞானப்பால் அருந்தி கவிபாடும் அருள் பெற்று, மக்களிடம் பக்தியை வளர்த்ததை ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார்.
தவ ஸ்தன்யம் மன்யே தரணிதர-கன்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ |
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானா மஜனி கமனீய: கவயிதா ||
இது போலவே காளிதாசன், காளமேகப்புலவர், அபிராம பட்டர் போன்றோர் அன்னையின் வெவ்வேறு வழிகளில் அருள் பெற்று கவிபாடி தொண்டு செய்தனர்.
திருஞானசம்பந்தர் அன்னையின் ஞானபாலால் குழந்தைவயதிலே ஞானியாக விளங்கினார்
அருணகிரிநாதரும் முருகனின் தரிசனத்தாலும், தன் நாவில் அவன் வேலால் எழுதியதாலும் ஞானமடைந்து திருப்புகழ் போல அரிய நூல்கள் படைத்தார்.
மஹரிஷி வால்மீகி தவமிருந்து அத்தவத்தின் பயனால் அனைத்து ஞானமும் பெற்று வேதத்தின் சாரமாகிய இராமாயண இதிஹாசத்தை நமக்கு கொடுத்து ஆதிகவியானார்.
மூகவி, காளமேகம், குமரகுருபரர் என அன்னையின் அருளால் உருவானவர்ஜள் ஏராளம்
ஆதிசங்கரர் தனக்கு அன்னையின் பாத தீர்த்த ப்ரஸாதம் வேண்டுகிறார். அன்னையின் கால் மருதாணி கலந்த பாத தீர்தத்தத்தை பருகி ஊமையான மூகர் ஞானம்பெற்று 500 ஸ்லோகங்கள் பாடி நமக்கு அருளியதை மேற்கோள் காட்டி, தனக்கும் அவ்வாறு அருள வேண்டுகிறார்.
“கதா காலே மாத꞉ கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம்ʼ வித்யார்தீ தவ சரண நிர்ணே ஜனஜலம் |
ப்ரக்ருத்யா மூகாநாமபி ச கவிதா காரணதயா
கதா தத்தே வாணீ முககமல தாம்பூல ரஸதாம் || “
அம்மா! பிறவியிலேயே ஊமையாய் இருப்பவனுக்கும் கூட கவிபாடும் திறமையைக் கொடுக்கக் கூடிய மருதாணி பூசிய உன் பாதங்களை அலம்பிய ( தாம்பூலரசம் போல் சிவந்த ) நீரானது, ஞானத்தை அடைய விரும்பும் எனக்கு எப்போது கிடைக்குமோ?
ஒரு பக்தன் அன்னையின் தாம்பூலரசம், ஞானப்பால், பாத தீர்த்த ப்ரசாதம் கிடைத்து வீரம், ஞானம், கவிபாடும் திறம் பெற்றது போலவே அடுத்து அன்னையை உபாசிப்பவன் தேவியின் அருளால், கல்வி, செல்வம், அழகு மற்றும் ஜீவமுக்தி நிலையையும் தன் வாழ் நாளில் அடைகிறான் எனவும் போற்றுகிறார்.
“சிரம் ஜீவன்னேவ க்ஷபித-பசுபாச-வ்யதிகர:
பரா னன்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்-பஜனவான் |”
அவ்வாறு ஜீவ முக்தி அடைந்து உலக மக்களுக்கு ராமக்ருஷ்ண பரமஹம்ஸர், ரமண மகரிஷி போன்றோர் அருளுகின்றார்கள்.
மஹரிஷி பதஞ்சலி வேதத்தில் உள்ள யோகத்தை அறிந்து ஞானம் பெற்று, அந்த அறிவின் மூலம் அனைவருக்கும் புரியும் வண்ணம் யோக சாஸ்த்திரத்தை வழங்கினார்.
ஔவைப்பாட்டி கூட தன் த்யானப் பயிற்சியால் ஞானம் பெற்று அருள் பெற்றதை தன் அகவலில் விளக்குகிறார். அவ்வாறு ஞானம் அடைந்து வேதத்தில் கூறப்பட்டுள்ள யோக அறிவு உள்பட பல்வேறு நீதிகளை எளிய பாடல்களாக உலகுக்கு தந்து சென்றுள்ளார்.
இவ்வாறே ரிஷிகள் அக்னிவேசர், சுஸ்ருதர், சரகர் மற்றும் பல சித்தர்கள் மூலம் இவ்வுலகுக்கு வைத்திய சாஸ்திரத்தை அருளினாள் அன்னை.
தேவர்கள், மஹரிஷிகள், யோகிகள், சித்தர்கள், தெய்வகவிகள் என பல்வேறு வேத ஞானத்தை வெவ்வேறு விதமாக உலகுக்கு அளிக்கிறாள் அன்னை.
அறியாமை இருள் அகன்ற மனதில் அறிவும் தெளிவும் வரும். அவை வந்த இடத்தில் எது உண்மையோ எது நிலையானதோ அதை நோக்கி மனம் ஆராயும்.
அப்படி ஆராயும் போது தியானிக்கும் போது மனம் தெய்வ நிலையினை எட்டும். அந்த நிலையில் மாபெரும் ஆனந்தம், பிரபஞ்சப் பேரானந்தம் வெள்ளமாய் மனதில் நிரம்பும். அவன் ரிஷி எனும் பெரும் நிலையினை, மாபெரும் மகான் எனும் நிலையினை அடைவான்.
பிரபஞ்ச தெய்வீக சக்தி இன்னும் விரிந்து பரந்து பலருக்கு வழிகாட்டும். பெரும் ஞான தீபங்களை ஏற்றிக்கொண்டே இருக்கும்.
முற்காலம் மட்டுமின்றி நம் காலங்களில் கூட விவேகானந்தர் ஆன்மீகத்திலும், மஹாகவி பாரதி ஆன்மீகம் மற்றும் இலக்கியத்திலும், ஸ்ரீநிவாஸ ராமானுஜம் கணிதத்திலும், சர் சி.வி. ராமன் அறிவியலிலும், இப்படிப்பலர் மூலம் வேத ஞானத்தினை இவ்வுலகில் ப்ரகாசப்படுத்துகிறாள் அன்னை.
அன்னை இருளான மனங்களையும் ஞானத்தால் நிரப்புகின்றாள். அவளின் வேதம் ஒன்றுமே இல்லாதவனையும் மாபெரும் ரிஷியாக மகானாக மாபெரும் தெய்வீகக் கவிஞனாக மாற்றுகின்றது, அவளின் சக்தி அவள் கொடுத்த வேதங்களின் வழியாக அப்படி வெளிப்படுகின்றது என்கின்றான் கம்பன்.
பக்த ஹார்த தமோ பேத பானுமத் பானு சந்ததி:(ல.ஸ.) = பக்தர்களிடத்தில் கொண்ட அளப்பரிய பரிவினால், அவர் மனத்தில் படிந்திருக்கும் அறியாமை எனும் இருளை தனது சூரியக்கதிர் போன்ற பிரகாசத்தால் அகலச்செய்பவள்.
அன்னை வேதங்களின் ஞானம். ரிஷிகளின் ஞானம். மகான்களின் அறிவு. யோகிகளின் யோக சக்தி. பெரும் கவிஞர்களின் காவிய வரிகள் என எல்லாமுமே அன்னையின் அருள் எனச் சொல்கின்றான் கம்பன்.
அன்னையின் அருள் இன்றி எந்த ஞானமும் வாய்க்காது என்பதை, இறைவனின் முழு அருள் பெற அன்னை வழிபாடும் அருளும் அவசியம் என்பதை காரைக்கால் அம்மையார், திருமூலர் உள்ளிட்ட மகா ஞானியர் வாழ்விலே காணலாம்.
அன்னையின் அருளாலே அவள் கருணையாலே பிரபஞ்ச ஞானம் ஒருவனுக்குக் கொட்டும், அவன் மனமும் சிந்தையும் மகா பிரமாண்டமாகும், மறுபடி மறுபடி அன்னையினைத் தொழ தொழ பெரும் இடத்துக்கு அவன் செல்வான் என்பதைத்தான் பாடலில் சொல்கின்றார் கம்பன்.
இது கவிஞர்களுக்கு, ஞானியருக்கு மட்டுமல்ல பாரதி போன்ற பெரும் அறிவாளிகளுக்கும் , சீனிவாச ராமானுஜம் போன்ற கணித மேதைகளுக்கும் பொருந்தும்.
வேதம், பிரபஞ்சம், காலம், எல்லாமே ஒரு கணித அடிப்படை , அதைத்தான் ராமானுஜனுக்குப் போதித்தாள் அன்னை, சரியாகப் படிக்காத அவனும் உலகின் மாபெரும் கணித மேதைகளில் ஒருவனாகி அழியா இடம் பெற்று நிற்கின்றான்.
இதைத்தான், அன்னையால் எல்லாமே கைகூடும் என்பதைத்தான், அன்னை குடியிருக்கும் மனம் கற்பனை கூட செய்யமுடியா மகா பிரம்மாண்ட சிந்தனைகளை, பெரும் பெரும் அதிசயங்களைக் கொட்டும் என்பது அவன் பாடலின் போதனை.