சரஸ்வதி அந்தாதி : 15

சரஸ்வதி அந்தாதி : 15

“நாயக மான மலரக மாவதுஞான வின்பச்
சேயக மான மலரக மாவதுந் தீவினையா
லேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந்
தாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.

“நாயகம் ஆன மலரகம் ஆவதும் ஞானஇன்பச்
சேயகம் ஆன மலரகம் ஆவதும் தீவினையாலே
அகம் மாறி விடும்அகம் ஆவதும் எவ்வுயிர்க்கும்
தாயகம் ஆவதும் தாதார் சுவேத சரோருகமே “

இனி பாடலின் பொருளைக் காணலாம்.

முதல் வரி “நாயகம் ஆன மலரகம் ஆவதும்” என்றாகின்றது. அதாவது நாயகம் என்றால் முக்கியம் எனப் பொருள். அந்தத் தாமரை அன்னை அமர்ந்ததால் முக்கியமான மலராக மாறிவிட்டது.

அடுத்து “ஞானஇன்பச் சேயகம் ஆன மலரகம் ஆவதும்”. அதாவது கல்விக்கும் ஞானத்துக்குமான மலராக அது அன்னை அமர்வதால் பெயர் பெற்றுவிட்டது. கலைமகள் அமர்வதால் அந்த மலர் கல்வி ஞான மலராக மாறிவிட்டது என்பது பொருள்.

அடுத்து “தீவினையாலே அகம் மாறி விடும்அகம் ஆவதும்” முற்பிறவியில் செய்த தீவினைகள் எல்லாம் மாறிவிடும் இடமாவதும் எனப் பொருள்.

கடைசியாக “எவ்வுயிர்க்கும் தாயகம் ஆவதும் தாதார் சுவேத சரோருகமே” சரோருகம் என்றால் தாமரை, சுவேத சரோருகம் என்றால் வெள்ளைத் தாமரை, தாதார் என்றால் பிரம்மன். ஆக எல்லா உயிர்க்கும் தாயானவளும், பிரம்மனின் மனைவியானவளும் அமர்ந்திருக்கும் வெண் தாமரையே எனப் பொருள்.

ஆகப் பாடலின் பொருள் இதுதான்.

சாதாரண மலராக இருந்த வெண்தாமரை அன்னை அமர்ந்ததால் அது மலர்களில் முக்கியமானது என்றும், கல்வி ஞானத்தின் அடையாளமாகவும், தீவினைப் போக்கும் இடமாகவும், பிரம்மனின் மனைவி அமர்ந்ததால் தாயானவள் இருக்கும் தாயகம் எனும் சிறப்பை பெற்றது எனப் பாடுகின்றான் கம்பன்.

இது கவிஞர்களின் கண்களில் இயல்பான கற்பனையாக வரும். அதாவது சாதாரண மலரான தாமரை அன்னை வந்து அமர்வதால் எப்படிப் பெயர் பெற்றது என்பதைச் சொல்கின்றான் கம்பன்.

அந்தத் தாமரைக்கான சிறப்பு, எந்த மலருக்கும் இல்லாத சிறப்பு, எப்படி வந்தது என்றால் அன்னை அதன்மேல் அமர்ந்ததால் வந்தது என்கின்றான் கம்பன்.

இது வெளிப்படையான பொருளை, அதாவது அன்னை வந்து அமர்ந்ததால் ஒரு வெள்ளைத் தாமரை இவ்வளவு பெரும் சிறப்பை பெற்றது என கவித்துவமாக சொன்னாலும் அதன் ஞானமார்க்கமான ஆழமான போதனைகள் வேறு.

அது மிக ஞானமானது, சூட்சுமமானது, ஆழமான தத்துவத்தைக் கொண்டது.

தாமரை அடையாளம், தாமரைச் சின்னம், தாமரை மலர் இன்றி இந்துக்களின் வழிபாடோ சிலைகளோ எதுவுமே இல்லை. தாமரை இந்துக்களின் ஞானத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது.

இந்து ஞானமரபில் தாமரை முக்கியமானது. அது ஞானமலராக ஞானம் மலர்வதன் குறியீடாகவே கருதப்பட்டது. இந்துமதத்தின் எல்லா பிரதான தெய்வங்களையும் அம்மதம் தாமரை மலர்மேல் தான் நிறுத்திற்று. பிரம்மன் முதல் தேவி வரை அது தாமரையில் வைத்து மகிழ்ந்தது.

தாமரை என்பது ஞானத்தின் வெளிப்பாடாகவே இந்துமரபில் இருந்தது. இதனாலே ஆலயங்களின் சிலைகள், பலிபீடங்கள், ஓவியங்கள் என எல்லா இடத்திலும் தாமரை இடம் பிடித்தது. தாமரை இல்லா இந்து ஆலய சிற்பமோ ஓவியமோ எதுவுமில்லை. அந்த அளவு நீங்கா இடம்பிடித்தது தாமரை.

தாமரை பல இதழ்களைக் கொண்டது, மென்மையானது, குளிர்ச்சியானது, நீரில் இருந்து விலகி நின்று மலர்ந்து நிற்பது, தேனும் நறுமணமும் தருவது, தாமரை மலர்போல் மானிட மனம் ஞானத்தில் மலர வேண்டும் என்பதாலே அந்த மலரை ஞானமலர் என்றார்கள்.

வள்ளுவன் கூட “மலர்மிசை ஏகினான்” எனத் தாமரை மலரையேச் சொன்னான்.

தாமரை எனும் ஞானமலர் அடையாளமில்லாமல் இந்துமதம் இல்லை. அதன் சிற்பம், வழிபாடு, தத்துவம், பாடல் என எதுவுமில்லை. எல்லாமே தாமரையினை அடையாளமாகக் கொண்டவை.

இந்தத் தாமரையினை இந்துமதத்தில் இருந்து பவுத்தம் எடுத்துக் கொண்டது. இன்றும் பவுத்த நாடுகளில் தாமரை ஞானமலராகவே போற்றப்படுகின்றது.

தாமரையும் அதன் மேல் அமர்ந்திருக்கின்ற தெய்வங்களை பற்றித்தான் எல்லா புலவரும் பாடினார்கள், எல்லா பாடல்களும் அப்படித்தான் வந்தன‌.

மதுரை தமிழ்ச்சங்கம் கூட பொற்றாமரை குளத்தின் அருகில் கூடி தாமரையினை கொண்டாடியது மரபு.

(அந்த மரபில்தான் இந்தியாவின் தேசிய மலராக தாமரை இடம் பிடித்தது)

அன்னை தாமரையில் அமர்ந்திருப்பதால் அவளுக்கு “பத்மாசனா” எனும் நாமம் உண்டு என்பதையும், தாமரை முழுக்க அவள் ஒளி தெரிவதால் அவளை “நளினி” என்றும் லலிதா சஹஸ்கரநாமம் சொல்கின்றது.

இந்த சிந்தனையில்தான் கம்பன் பாடுகின்றான்.

இப்படி அன்னை தாமரையில் எழுந்தருளியிருக்கும் அன்னை தன் மனதிலும் எழுந்தருளியிருக்கின்றாள் என்பதை சூசகமாக சொல்கின்றான் கம்பன்.

எல்லா ஞானங்களையும் கல்வியினையும் கலைகளையும் அருளும் அவள், தன் மனத்தாமரையில் அமர்ந்து தனக்கு அந்த ஞானத்தை அருளுகின்றாளென்கின்றான்.

இன்னும் அன்னை உலகிற்கே தாயானவள் என்கின்றார்.

அன்னைக்கு “தரஸ்மேர முக(அ)ம்புஜா” என்றொரு நாமமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய தாமரை போன்ற முகம் கொண்டவள் எனப் பொருள்.

இப்படி நேரடியாக பொருள் கொண்டாலும் இப்பாடல் யோகத்தின் பெரும் ரகசியங்களை விளக்குகின்றது. யோகம் ஒன்றையே வழிபாடாக பல வகைகளில் சொன்ன மதம் தாமரையினை ஏன் குறித்தது என்றால் காரணம் இல்லாமல் இல்லை.

உடலின் சக்கரங்கள் தாமரை மொட்டுபோல் குவிந்து குண்டலம் போல் இருக்கும் இயல்புடையவை. இவை விரிந்தால் பெரும் ஞான பேரானந்த நிலை ஏற்படும். இந்த பேரானந்தத்துக்கு மனிதனை கொண்டு செல்வதுதான் இந்துமத அடிப்படை போதனை.

அதன் வழிபாடும் பூஜையும் தெய்வீக கோலமும் எல்லாமும் இந்த பெரும் இன்பத்துக்கு ஒருவனை இழுப்பதே.

அந்த பெரும் இன்ப நிலையினை ஒருவன் எட்டிவிட்டால் அவன் மனம் வேறு எந்த விஷயத்திலும் இன்பத்திலும் மயங்காது. அவன் கர்மாவினை கலங்காமல் செய்து, மயங்காமல் செய்து முக்தி அடைவான். அகங்காரமும் ஆர்ப்பாட்டமும் அவனைவிட்டு அகலும் என்பதுதான் இந்து வழிபாட்டின் நோக்கம்.

அவ்வகையில் ஒவ்வொரு உடலில் இருக்கும் ஆறு சக்கரங்களையும் இயங்க வைப்பதுதான் அதன் ஆதார தர்மம்.

அவ்வகையில் இப்பாடல் குண்டலிசக்தியினை எழுப்பும் பெரும் தத்துவத்தைச் சொல்கின்றது. அதனை அந்த ஆறு சக்கரங்களின் வடிவினையும் அதன் அமைப்பையும் கொண்டு பார்க்கலாம்.

முதல் சக்கரம் மூலாதாரம். இது முதுகெலும்பு முடியும் இடத்தில் இடுப்பு பகுதியின் முடிவில் அமைந்திருக்கும். இது நான்கு இதழைக் கொண்ட தாமரை போன்ற வடிவில் இருக்கும். இதன் நிறம் பச்சை. இங்கு எழுந்தருளியிருப்பவர் விநாயகப்பெருமான். அவரோடு இருப்பவர் வல்லப தேவி.
இதற்கான லலிதா சஹஸ்ரநாமம் மூலதாரைக நிலயா அதாவது அன்னை மூலதார சக்கரத்தில் நான்கு இதழ் தாமரையில் நிலை கொண்டவள்.

இரண்டாம் சக்கரம் ஸ்வாதிஷ்டானம். மூலாதாரத்தில் இருந்து இரு விரல் அளவு மேலே அமைந்திருக்கும். இது ஆறிதழ் தாமரை. பொன்னிறமான இந்தச் சக்கரத்தில் அமர்ந்திருப்பது பிரம்மனும் சரஸ்வதியும்.
இதற்கான லலிதா சஹஸ்ரநாமம் ஸ்வாதிஷ்டான (அ)ம்புஜகதா அதாவது அன்னை ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் ஆறு இதழ் தாமரையில் நிலை பெற்றிருப்பவள்.

மூன்றாம் சக்கரம் மணிபூரகம். இது ஸ்வாதிஷ்டானத்தில் இருந்து எட்டு விரல் அளவு மேலே அமைந்திருப்பது. பத்து இதழ்களைக் கொண்ட தாமரை இது. பளிங்கு நிறமானது. இங்கு மகாவிஷ்ணுவும் மகா லக்ஷ்மியும் அமர்ந்திருப்பார்கள்.
இதற்கான லலிதா சஹஸ்ரநாமம் மணிபூராந்தருதிதா அதாவது மணிபூரக சக்கரத்தில் எழுபவள் அன்னை.

நான்காம் சக்கரம் அனாஹதம். இது மணிபூரகத்தில் இருந்து 10 விரற்கடை மேல் உள்ளது. 12 இதழ்கொண்ட இந்த அக்னி நிறத்து தாமரையில் ருத்திரனும் பார்வதியும் அமர்ந்திருப்பார்கள்.
இதற்கான லலிதா சஹஸ்ரநாமம் அனாஹத(அ)ப்ஜ நிலயா அதாவது அனாஹத சக்கரத்தில் பன்னிரெண்டு இதழ் தாமரையில் இதயத்தில் நிலைத்திருப்பவள் அன்னை.

ஐந்தாம் சக்கரம் விஷுத்தி. இது அனாஹதத்தின் மேல் 10 விரற்கடை அளவில் அமைந்துள்ளது. இது கருமை நிறமானது. பதினாறு இதழ்களைக் கொண்ட இந்தச் சக்கரத்தில் மகேஸ்வரனும் மகேஸ்வரியும் அமர்ந்திருப்பார்கள்.
இதற்கான லலிதா சஹஸ்ரநாமம் விஷுத்தி சக்ர நிலயா அதாவது விஷுத்தி சக்கரத்தில் பதினாறு இதழ் தாமரையில் தொண்டைப் பகுதியில் நிலைத்திருப்பவள் அன்னை.

ஆறாம் சக்கரம் ஆக்ஞை. இது விஷுத்தியில் இருந்து 10 விரற்கடை அளவு மேலே உள்ளது. இது மேக நிறமானது, 2 இதழ்களைக் கொண்ட இந்தத் தாமரையில் சதாசிவமும் மனோன்மணியும் எழுந்தருளியிருப்பார்கள்.

இதற்கான லலிதா சஹஸ்ரநாமம் ஆக்ஞா-சக்ர(அ)ப்ஜ நிலயா அதாவது ஆக்ஞா சக்கரத்தில் இரண்டு இதழ் தாமரையில் புருவ மத்திய பகுதியில் நிலைத்திருப்பவள் அன்னை.

கடைசி சக்கரம் தலைக்கு மேலே இருப்பது துரிய சக்கரம். இது உடலோடு ஒட்டியிராது. மாறாக பூத உடலைத்தாண்டி அமைந்திருக்கும். மனித சிரஸில் இருந்து 4 விரற்கடை உயரத்தில் அந்தரத்தில் இருக்கும்.
இதற்கான லலிதா சஹஸ்ரநாமம் சஹஸ்ரார(அ)ம்புஜாரூடா அதாவது சஹஸ்ரார சக்கரத்தில் ஆயிரம் இதழ் தாமரையில் உச்சந்தலையில் உயர்ந்தெழுபவள் அன்னை.

(இந்த சக்கரத்தையும் மானிட சிரஸையும் இணைப்பதுதான் கிரீடம் அணியும் முறையாயிற்று. அரசனுக்கு ஏன் கிரீடம் என்றால் ராஜகுரு அல்லது ரிஷிகள் இந்தப் புள்ளியினை ஆராயந்து அது தொடர்புபடும் வகையில் மகுடம் சூட்டுவார்கள், பாரத கிரீடம் சூடும் மரபு இப்படி வந்ததே.

இதனால்தான் ரிஷிகளும் ஆசாரியர்களுமே மகுடம் சூட்டும் சடங்கை செய்தார்கள். அந்த சகஸ்ர சக்கரம் துலங்கிய மன்னன் ஞானமாய் நல்லாட்சி தருவான் எனும் சூட்சுமம் அதனில் இருந்தது.)

ஆம், ஆயிரம் இதழுடைய சக்கரம் இது. இந்த சக்கரம் ஜோதி ஒளிகொண்டது. பரம்பொருள் அல்லது ஆதிசக்தி வீற்றிருக்கும் இடம் இது.

ஆக இந்த ஆறு சக்கரங்களும் அதனோடு சேர்ந்து துரிய சக்கரமும் துலங்குவதே முழு ஞான நிலை. இந்த நிலையினை எட்ட, எல்லா சக்கரங்களும் அதாவது எல்லா தாமரையும் விரிய வேண்டும்.

இந்த ஏழு சக்கரங்களிலும் அன்னை இருப்பதைக் காணலாம்.

அன்னை தாமரையில் வீற்றிருப்பாள் என்பதன் மறைபொருள் இதுதான். எல்லா சக்கரங்களிலும் அன்னை சக்தியாக இருக்கின்றாள். அந்த சக்கரங்களை இயக்கி உச்சியில் ஆயிரம் இதழ்கொண்ட தாமரையினை மலரச் செய்தால் முழு ஞானம் கிட்டும்.

ஆக இந்த பாடலில் அன்னையினை தாமரை நாயகியாக கம்பன் வரிந்து பாடுவதெல்லாம் இந்த உடலின் சக்கரங்களில் அவள் சக்தியாய் இருப்பதையும், யோகத்தின் மூலம் தியானத்தின் மூலம் அவளை சரணடைந்தால் அந்தத் தாமரை விரியும் என்பதையும், அதனால் பெரும் பேரானந்தமும் ஞானமும் ஏற்படும் என்பதைத்தான் சொல்கின்றார்.

அன்னை எல்லா சக்கர தாமரைகளிலும் அமர்ந்திருக்கின்றாள். அவளை தியானித்து சக்கரங்களைத் துலக்கினால் பெரும் பேரானந்தம். அதைத் தவிர ஏதும் தேவையில்லா பெரும் ஆனந்தம் கிட்டும் அந்த பெரும் ஆனந்தமே ஞான நிலை என்பது கம்பர் சொல்லும் போதனை.

தாமரையில் அமர்ந்திருக்கும் தாமரை நாயகி. இதய கமலத்திலும் இன்னும் எல்லா சக்தி கமலத்திலும் இருக்கின்றாள். தியானத்தால் அவளை சரணடைந்தால் பெரும் ஞானமும் யோகமும் அவளால் அருளப்படும். அந்த சரணாகதியினை விட பெரும் பாக்கியம் ஏதுமில்லை என்பது பாடல் சொல்லும் ஞான மறைபொருள்.

சாதாரண மலரான தாமரை அன்னையால் பெரும் சிறப்பு பெற்றது போல ஒன்றுமில்லாத தன்னுள் அன்னை வந்து தனக்கு பெரும் கல்வியும் அறிவும் ஞானமும் தந்து பெரும் இடத்துக்கு உயர்த்திவிட்டாள் என்கின்றான் கம்பன்.