சரஸ்வதி அந்தாதி : 19

சரஸ்வதி அந்தாதி : 19

“கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்
கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்
கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்
கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்

“கமலம் தனில் இருப்பாள் விருப்போட அங்கரம் குவித்து
கமல கடவுளர் போற்றும் மென் பூவை கண்ணிற்கு கருணை
கமலந் தனைக்கொண்டு கண்டொருகால்தம் கருத்துள்வைப்பார்
கமலங் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே”

இனி பாடலின் பொருளை காணலாம் “கமலம் தனில் இருப்பாள்”, அன்னை தாமரை மலரில் வீற்றிருப்பாள் என பொருள்

அடுத்து ” விருப்போட அங்கரம் குவித்து கமல கடவுளர் போற்றும் மென் பூவை”, அதாவது தன்னை பணிந்து மனமுவந்து முழு மனதுடன் தன்னை அறிந்து விரும்பி கரம் குவித்து தேவர்களே வணங்கும் அந்த மெல்லிய வடிவான அன்னை என பொருள்

அடுத்து “கண்ணிற்கு கருணை கமலந் தனைக்கொண்டு கண்டொருகால்” அதாவது தாமரையில் வீற்றிருக்கும் அன்னை தன்னில் கருணை கொண்டு, கருணை வெள்ளமாய் ஒரு பொழுதில் என பொருள்

அடுத்து “தம் கருத்துள்வைப்பார் கமலங் கழிக்கும் கலைமங்கை” தன்னை வேண்டி நிற்பவர் மேல் தன் கண்ணின் கருணை வெள்ளத்தால் அவரின் குற்றமெல்லாம் கழித்துவிடுவாள் என்பது பொருள்

“ஆரணி காரணியே” என அடுத்த வரி முடியும்

ஆரணி என்றால் ஆரணம் என பொருள் அன்னை வேதங்களை அணிந்திருப்பவள், வேத வடிவினள் என்பது பொருள்

காரணி என்றால் எல்லா விஷயங்களுக்கும் இயக்கத்துக்கும் படைப்புக்கும் மூல காரணமாக இருப்பவள் என பொருள்

இந்த பாடலின் பொருள் இதுதான்

அன்னை தாமரை மலரில் விற்றிருப்பாள், அவளை தேவர்களும் தெய்வங்களும் மலர் தூவி இருகரம் கூப்பி வணங்குகின்றனர், காரணம் அவள் வேதங்களின் வடிவமாகவும் எல்லா இயக்கங்களின் காரணமாகவும் இருப்பவள், அப்படியான அன்னை தன்னை மனதால் நினைந்து தியானிப்போரின் குற்றங்களையெல்லாம் தன் அருள் பார்வையினால் களைந்து சுத்தமாக்குகின்றாள், அவர்களுக்கு நல்ல அடையாளம் தருகின்றாள் என்பது பாடலின் பொருள்

இந்த பாடலில் கமலம் எனும் வார்த்தையினை கொண்டு விளையாடுகின்றான் கம்பன்

கமலம் எனும் தாமரையில் அன்னை வீற்றிருப்பாள், அவளை கமலகடவுள் எனும் பிரம்மனும் தொழுது பணிவான், இன்னும் தேவர்களெல்லாம் பணிவார்கள்

கம் மலம் எனும் அடியாரின் ஆண்மம், கண்மம், மாயை எனும் மும்மலங்களை, மூன்று குற்றங்களை அன்னை நீக்குவாள் என்கின்றான்

கமலம், கமலகடவுள், கம்மலம் என அவன் தமிழ் அப்படி விளையாடுகின்றது

இப்பாடல் அன்னை மும்மலங்களையும் களைவாள், அவள் பார்வை பட்ட நேரம் ஒருவனின் மூன்று குற்றங்களும் கரைந்து அவன் கர்மவினையில் இருந்து விடுபடுவான் என்பதை சொல்கின்றது

இந்த மூன்று வினைகளையும் களைந்தவர்களே தம்மில் இருந்து நீக்கியவர்களே மகா ஞானிகள்

ஆண்மம் என்றால் ஆணவம், கண்மம் என்றால் கர்மம், மாயை என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பி திசைமாறி குழம்பி செல்லுதல்

ஆணவம் என்றால் தான் எனும் அகங்காரம், கர்மம் என்றால் முன் ஜென்ம கர்மா இன்னும் இப்போது சேர்க்கும் கர்மா, மாயை என்றால் லவ்கீக குழப்பங்கள்

இந்த மூன்றையும் காமம், வெகுளி, மயக்கம் என்றும் சொல்வார்கள், இந்த மூன்றையும் கடந்தவர்கள்தான் ஞானியர் ரிஷிகள், ஆனால் மிகுந்தபாடுபட்டு பல்லாண்டு தவம், விரதம் என தன்னை வெறுத்து ஒறுத்து அந்நிலை அடைவார்கள்

ஆனால் அன்னையின் அருள்பார்வை ஒருவனை அந்த மகான் நிலைக்கு, ரிஷி நிலைக்கு எல்லாம் கடந்த நிலைக்கு கொண்டுசென்றுவிடும் , அவள் பார்வைபட்ட நேரமே ஒருவன் எல்லா சாபமும் குழப்பமும் நீங்கி தெய்வீக நிலையினை அடைவான்

மானுடனின் சகல குற்றம் பாவங்களையும் நீக்கி அவர்களை தெய்வ நிலைக்கு உயர்த்துவாள், காரணம் அவளே வேதங்களின் வடிவம், அவளே எல்லாவற்றையும் இயக்குகின்றாள்

அவளை தேவர்களும் முப்பெரும் தெய்வங்களும் கொண்டாடுகின்றார்கள், அவள் இந்த பிரபஞ்சத்தையே இயக்குபவள் அவளால் மானிடரை தெய்வநிலைக்கு மிக சிறந்த நிலைக்கு தன் கண்பார்வையாலே உயர்த்த முடியும என்கின்றான் கம்பன்

இப்பாடல் அன்னையே வேத வடிவம், அவளே எல்லா இயக்கத்துக்கும் காரணம் அப்படி அவளே தன் அடியார்களை காக்கின்றாள் இயக்குகின்றாள் என்பதை சொல்கின்றது

ஒரு சவுந்தர்ய லஹரி ஸ்லோகம் உண்டு

“”தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கே-ருஹ-பவம்
விரிஞ்சி: ஸஞ்சிந்வந் விரசயதி லோகா-நவிகலம்
வஹத்யேநம் ஸௌரி: கதமபி ஸஹஸ்ரேண ஸிரஸாம் ஹர:
ஸம்க்ஷுத்யைநம் பஜதி பஸிதோத்தூளந-விதிம்”

அதாவது தாயே! தாமரை மலர்களைப் போன்று சிவந்த உன் திருவடிகளிலிருந்து எழுந்த மிக நுண்ணிய தூசித்துளியை சேர்த்து வைத்துக் கொண்டு பதினான்கு உலகங்களையும் பிரம்மா விசாலமாகப் படைக்கிறார். அதுபோன்றே, மகாவிஷ்ணுவும் ஆதிசேஷன் என்னும் உருவில் பதினான்கு உலகங்களையும் மிகுந்த சிரமத்துடனாவது தாங்குகிறார். பரமசிவனோ, இதை நன்றாகப் பொடி செய்து கொண்டு, விபூதி பூசுவதைப் போன்று உடல் முழுவதும் பூசிக் கொள்கிறாகள்”

இப்பாடல் அன்னையினை பணிந்தோர் காமம் வெகுளி மயக்கம் எனும் மும்மலங்களை கடப்பார்கள் என்கீன்றது

ஆம், அன்னையினை பணிந்தால் பிறப்பற்ற நிலை, சொர்க்கம் நரகம் தாண்டிய முக்தி நிலை கிடைக்கும் என்பதுதான் பாடலில் அவர் சொல்லவரும் விஷயம்,வாழ்வின் அந்திமகால அச்சத்தை போக்கி முக்தி தருபவள்

அன்னைக்கு “மருத்யு தாரு குடாரிகா” என்றொரு நாமம் லலிதா சஹஸ்கரநாமத்தில் உண்டு, அதற்கு யமன் எனும் மரத்தை வெட்டும் கோடாரி என பொருள்

அன்னை ரம்பையும் அரிவைகளும் புடைசூழ வருபவள் என்பதால் அவளுக்கு “ரம்பாதி வந்திதா” என்றொரு பெயரும் உண்டு

தேவலோக பெண்கள் சூழ வந்து ஆசிதருபவள் எனவும் அதற்கு அர்த்தம் உண்டு

இவ்வாறு அன்னை பிறப்பற்ற நிலை தருவாள், சொர்க்கம் நரகம் தாண்டிய முக்தி தருவாள், தன் அபய கரத்தால் நம்பிக்கை தருவாள்

அன்னைக்கு “வேதவல்லி” என்றொரு பெயரும் உண்டு

வேதங்கள் ஒலிவடிவானவை, அந்த ஒலிவடிவ வேதங்களே உலகை ஆட்கொண்டு இயக்கி கொண்டிருக்கின்றன, பிரபஞ்சம் ஒலிவடிவ வேதங்களால் இயங்குகின்றது

இன்னொரு ஸ்லோகத்தோடு பாடலின் முழு பொருளையும் அறியலாம்

“த்வதன்யஹ பாணிப்யாம்(அ)பயவரதோ தைவதகணஹ
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்ய(அ)பிநயா .
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ”

மற்ற தேவர்களும், தெய்வங்களும் அபயம், வரம் தருவதை தங்கள் கைகளின் முத்திரைகளால் காட்டி தம் பக்தர்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன. ஆனால் நீயோ அபிநயம் காட்டுவதில்லை. ஏனென்றால், மற்ற தெய்வங்கள் தங்கள் அபய-வர பிரதானத்தை கைகளால் காட்டி அருள்வதை விட அதிகமாக, உன் பக்தர்கள் வேண்டிய வரங்களைக் கொடுப்பதற்கு உன் பாத தாமரையே போதுமே.”

ஆம், அன்னையே எல்லாவற்றையும் வேதவடிவில் இயக்குகின்றாள், அவளே தன்னை பணிவோரின் குற்றங்களையெல்லாம் மன்னித்து அவர்களை அணைத்தூ பெரும் இடத்துக்கு உயர்த்துகின்றாள் , அப்படியான எனனை தன்னையும் எடுத்து தன் குற்றங்களை மன்னித்து தன்னையும் உயர்த்தினாள் சிறப்பானாக்கினாள் என மருகுகின்றான் கம்பன்.