சரஸ்வதி அந்தாதி : 22
சரஸ்வதி அந்தாதி : 22
“வேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்
கூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர்
மாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற்
சேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே”
இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.
“வேறிலை யென்றுன் அடியாரிற் கூடி விளங்குநின்பேர்
கூறிலை யானும் குறித்துநின் றேன்ஐம் புலக்குறும்பர்
மாறிலை கள்வர் மயக்காமல் நின்மலர்த்தாள் நெறியில்
சேறிலை ஈந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே”
இனி பாடலின் பொருளைக் காணலாம்.
முதல் வரி “வேறிலை யென்றுன் அடியாரிற் கூடி” எனத் தொடங்குகின்றது. இது “வேறு இல்லை என்னும் அடியாரில் கூடி” எனப் பிரிந்து பொருள் தரும்.
அன்னையே என் தாயே, உன்னையன்றி எனக்கு வேறு யாருமில்லை எனப் பொருள்.
அடுத்து “விளங்குநின்பேர் கூறிலை யானும் குறித்துநின் றேன்”. “விளங்கும் உன் பேர் கூறிலை யானும் குறித்து நின்றேன்”
அதாவது சிறப்புற்று விளங்கும் உன் நாமங்களை எல்லோரும் சொல்லும் போது நானும் சொல்லி மனதால் குறித்து வணங்கினேன்.
அடுத்து “ஐம் புலக்குறும்பர் மாறிலை கள்வர் மயக்காமல்”. அதாவது “ஐம்புல குறும்பர் மாறு அலை கள்வர் மயக்காமல்” என வரும்.
ஐந்து புலன்களும் கொள்ளையர் போல் மாறி என்னை மயக்காமல் எனப் பொருள்.
அடுத்து “நின்மலர்த்தாள் நெறியில் சேறிலை ஈந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே” என வரும்.
அதவாது உன் பாதத்தின் வழியில் சேர்ந்து நடக்க அருள் புரிவாய். வெண் தாமரையில் அமர்ந்திருக்கும் ஆபரணங்கள் அணிந்த கலைமகளே எனப் பொருள்
ஆக பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்.
“அன்னையே, உன்னைத் தவிர வேறு அடைக்கலமில்லை; வேறு யாருமில்லை என நான் உன்னிடம் சரணடைந்து உன் அடியார்கள் கூட்டத்தோடு சேர்ந்து நிற்கின்றேன்.
உன் நாமங்களை அவர்கள் துதிக்கும் போது நான் மனதால் சொல்லி வணங்குகின்றேன், உன்னை தியானிக்கின்றேன்.
ஒருவன் நடந்துசெல்லும் போது கொள்ளையர்கள் அவனை எதிர்பாராமல் தாக்கி அச்சுறுத்தி வேறு வழிக்கு விரட்டி விடுவதைப் போல என் ஐம்புலன்களும் எனக்கு எதிராக எழுந்து என்னை மயக்கி என்னை உன் வழியில் இருந்து பிரிக்காமல் உன் பாதங்களைப் பற்றி வர எனக்கு வரம் அருள்வாய் வெண்தாமரை நாயகியே.”
இங்கே தேர்ந்த யோகம் ஒன்றைச் சொல்கின்றான் கம்பன். ஐம்புலன்கள் என்பது சாதாரணம் அல்ல. ஒரு மனிதனை ஆட்டுவிப்பதே அந்த ஐம்புலன்கள்தான்.
கண், செவி, மூக்கு, வாய், மெய் எனும் ஐம்புலன்கள்தான் ஒருவனை இந்த மாய உலகில் தள்ளுகின்றன. அவைகளால் தான் ஒரு மனம் ஆட்டி வைக்கப்படுகின்றது.
இந்த ஐந்து புலன்களின் வழி வரும் மயக்கமே ஒருவனை வழி தவறச் செய்கின்றன. கம்பன் அந்த ஐந்து புலன்களையும் கள்வர்கள், வழிபறி கொள்ளையர்கள் என்கின்றான்.
“உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு.”
என்பது திருமூலர் பாடல். அவரே புலன்கள் ஐந்தும் கள்வர்கள் போன்றவை, ஆபத்தான வழிக்கு இழுத்துச் செல்பவை என்கின்றார். கம்பன் அதைத்தான் கவித்துவமாகப் பாடுகின்றான்.
ஐம்புலன்கள் வழி வரும் ஆசையினை, பாச மயக்கத்தை அறுத்தால் தான் சிவனோடு ஒன்ற முடியும் என்பதை திருமூலர் சொல்கின்றார்.
“மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
துயக்கறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால்
தியக்கஞ்செய் யாதே சிவனெம் பெருமான்
உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே”
என்கின்றார்.
ஒளவையாரின் ஞானக்குறள் இதனை எளிதாக விளக்கும்.
“அஞ்சு மடக்கி யறிவோ டிருந்தபின்
துஞ்சுவ தில்லை யுடம்பு”
இக்குறள் “அஞ்சும் அடக்கி அறிவோடு இருந்தபின் துஞ்சுவது இல்லை உடம்பு” எனப் பிரிந்து பொருள் தரும்.
ஐம்புலன்களையும் அடக்கி, அந்தப் புலனடக்கத்தோடு தன்னையும் அறிந்த பின் உடம்பு அழியா நிலை பெறும் என்பது குறளின் பொருள்.
திருமூலர் மேலும் சொல்கின்றார்.
“சொல்லக்கில்லேன் சுடர்ச் சோதியை நாடொறும்
செல்லக்கில்லேன் திருமங்கையும் அங்கு உள
வெல்லக்கில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்ல நின்று ஓடும் குதிரை ஒத்தேனே”
ஐம்புலன்களோடு தான் எனும் ஆணவத்தையும் வென்றபின் மனதினை குதிரையாக்கி முக்தி நோக்கி வேகமாகச் சென்றேன் என்கின்றார் திருமூலர்.
இன்னும் சொல்கின்றார்.
“ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில்
ஐவர்க்கு இறை இறுத்து ஆற்றகிலோமே”
என்பதும் திருமூலர் பாடல். ஐந்து உறுப்புகளை அடக்கி 96 தத்துவங்களை அடக்கி ஐம்புல ஆசைகளையும் வென்றால் ஞானிகளின் அரசன் ஆகலாம். ஐந்து புலனும் அடங்காது சினத்தோடு நின்றால் அவைகளுக்கு கட்டுப்பட்டு அடிமையாக வேண்டும் என்பதும் அவர் பாடலே.
இன்னொரு பாடலிலும் தெளிவாகச் சொல்கின்றார் திருமூலர்.
“புலம் ஐந்து புள் ஐந்து புள்சென்று மேயும்
நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து
குலம் ஒன்று கோல் கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலமந்து போம்வழி ஒன்பது தானே”
‘புலம் ஐந்து’ என்பது ஐம்புலன்கள். புள் என்றால் பறவை. இந்த ஐம்புலன்களின் உணர்வுகளை, சிறகை விரித்துப் பறக்கும் அந்த உறுப்புகளின் ஆசைகளைப் பறவையாகச் சொல்கின்றார் திருமூலர்.
சுவைத்தல், பார்த்தல், நுகர்தல, கேட்டல், உணர்தல் என்பன அந்தப் பறவைகள்.
‘நிலம் ஐந்து’ என்பது இந்த ஐம்புலன்களின் செயலைக் குறிப்பது. வாயால் உணரப்படும் சுவை, பார்க்கும் கண்கள், மூக்கின் மணம், செவியின் ஒலி, உடலின் சிலிர்ப்பு என ஐந்தும் அவ்வகை.
“நீர் ஐந்து, நீர்மையும் ஐந்து’ என்பது இந்த ஐந்து புலன்களின் வழியே மனிதன் அடையும் இன்ப – துன்பங்களைக் குறிக்கிறது. அதாவது புலன்களால் வரும் இன்ப மயக்கத்தைக் குறிப்பது.
“குலம் ஒன்று கோல் கொண்டு மேய்ப்பான் ஒருவன்.”
“குலம்” என்பது உடலைக் குறிக்கிறது. மேய்ப்பான் என்பது ஆத்மாவினைக் குறிப்பது.
“உலமந்து போம்வழி ஒன்பதுதானே” என்பது நவத்துவாரங்கள், உடலின் ஒன்பதுவாசல்கள். உலமந்து என்றால் வருந்தி வெளியேறும் வழி எனப் பொருள். அதாவது ஒரு காவல்காரன் பறவைகள் வராமலும் இதர வாசல்கள் வழி வேறு விலங்குகள் வராமலும் பயிரைக் காப்பது போல ஆத்மா ஐம்புலன்களையும் அடக்கி ஞானப்பயிறைக் காக்க வேண்டும். அந்நிலையில் ஞானம் விளையும் என்பது திருமூலர் பாடல்.
“மெய்வாய் விழி நாசியொடும் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே” என்பது அருணகிரியார் வாக்கு.
வழிபாடு, தவம், யோகம் என்பதெல்லாம் இந்த ஐம்புலன்களையும் அடக்கி மனதைக் கட்டுப்படுத்தும் முயற்சியே.
இந்த ஐம்புலன்களையும் அடக்குவதைப் பல வகையில் வலியுறுத்திற்று, இந்துக்களின் பூஜையும் விரதம் முதலான ஏற்பாடுகளும் இன்னும் பலவும் இந்தப் புலன்களை கட்டுப்படுத்தும் பயிற்சியே.
அன்னை இந்த ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றலைத் தருவாள். அந்த நிலையில் இறைசக்தியோடு ஒன்றிக்கலாம், ஐம்புலன்களும் கட்டுப்படும் போது மனமும் கட்டுப்படும். அப்போது அன்னை மனதில் குடியேறி ஆட்சி செய்வாள் என்பது கம்பன் சொல்ல வரும் போதனை.
சவுந்தர்ய லஹரியில் ஒரு ஸ்லோகம் சொல்கின்றது.
ததாநே தீனேப்யஹ ச்ரியமநிச-மாசாநுசத்ருஸீம்
அமந்தம் ஸௌந்தர்ய ப்ரகர-மகரந்தம் விகிரதி |
தவாஸ்மிந் மந்தார-ஸ்தபக-சுபகே யாது சரணே
நிமஜ்ஜந் மஜ்ஜீவஹ கரணசரணஹ ஷட்சரணதாம் ||
தீனேப்யஹ – ஏழைகளுக்கு
ஆசாநு-சத்ருஸீம் – அவர்கள் விரும்பும் அளவிற்கு
ச்ரியம் – செல்வத்தைக்
அநிசம் – எப்போதும்
ததாநே – கொடுப்பதும்
அமந்தம் – குறைவின்றி
ஸௌந்தர்ய-ப்ரகர-மகரந்தம் – அளவு கடந்த அழகாகிய மகரந்தத்தை
விகிரதி – பெருகச் செய்வதும் |
மந்தார- கற்பகமர
ஸ்தபக- பூங்கொத்து போல்
சுபகே – அழகாகவும் இருக்கும்
சரணே தவ அஸ்மிந் – இந்த அழகிய உன் பாத கமலத்தில்
நிமஜ்ஜன் – அடைந்து இருக்கும்
கரண-சரணஹ – மனது உள்பட ஐம்புலங்களையும் கால்களாகக் கொண்ட
ஷட்சரணதாம் – ஆறுகால் வண்டாக இருக்கும் பாக்கியத்தை
ம(ஜ்)ஜீவ ஹ – என் ஜீவன்
யாது – அடையட்டும்
தேவீ ! ஏழைகளுக்கு அவர்கள் விரும்பும் அளவிற்கு மிகுதியாகச் செல்வத்தை எப்போதும் கொடுப்பதும், வெள்ளம் போன்று குறைவின்றி அளவு கடந்த அழகாகிய மகரந்தத்தை பெருகச் செய்வதும், கற்பகமரப் பூங்கொத்து போல் அழகாகவும் இருக்கும், இந்த அழகிய உன் பாத கமலத்தில் அடைந்து இருக்கும், தேனைப் பருகும் வண்டாக இருக்கும் பாக்யத்தை, மனது உள்பட ஐம்புலங்களையும் ஆறு கால்களாகக் கொண்ட, என் ஜீவன் அடையட்டும்.
இங்கே ஆதிசங்கரர் சொல்லும் உவமைத் தத்துவம் மிக நுணுக்கமானது.
வண்டு மலரை நோக்கிச் செல்லும் போது வேறு எந்த சிந்தனையும் கொண்டிராது. வழி தவறிச் செல்லாது. நேராக மலரை வந்து அடையும். அதன் புலன் வழி மாறாது.
வண்டுக்கு ஆறு கால்கள் இருப்பது போல ஐம்புலன்களும் மனமும் சேர்ந்து ஆறு விஷயமும் அன்னையினை சிந்தித்து அவள் அருள் ஒன்றிலே திளைத்திடல் வேண்டும். அந்த வரம் வேண்டும் எனப் பாடுகின்றார்.
அதாவது ஐம்புலனும் மனமும் அன்னை ஒருத்தியிடமே நீங்காமல் திளைத்திருக்கக் கோருகின்றார்.
அன்னைக்கு “வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீ” அதாவது பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்பவள்,
“பக்தஸௌபாக்ய தாயிநி” அதாவது பக்தர்களின் வாழ்வில் செழிப்பும் வளமும் அருளுபவள்,
“வந்தாரு ஜந வத்ஸலா” அதாவது தாய் சேயிடம் கொண்ட கருணையை, அன்பை தன்னை வணங்கும் பக்தர்களிடத்தில் பொழிபவள்.
எனப் பல பெயர்கள் உண்டு.
சவுந்தர்ய லஹரியின் மற்றொரு பாடல் சொல்கின்றது.
புராராதே-ரந்தஹ புரம்(அ)ஸி ததஸ் த்வச்சரண்யோ(ஹோ)
ஸபர்யா-மர்யாதா தரலகரணாநாம் அஸுலபா |
ததா ஹ்யேதே நீதா(ஹா) சதமக-முகா(ஹா) ஸித்திம் அதுலாம்
தவ த்வாரோபாந்த -ஸ்திதிபி(ஹி) அணிமாத்யாபி(ஹி) அரமரா(ஹா) ||
த்வம் – நீ
புராராதே- முப்புரம் எரித்த பரமசிவனின்
அந்த(ஹ) புரம் அஸி – அந்தப்புரத்தில் உள்ள பட்டமகிஷியாக விளங்குகிறாய்
தத(ஹ) – அதனால்
த்வச் சரண்யோ(ஹோ)- உனது பாதங்கள்
ஸபர்யா-மர்யாதா- அருகில் நெருங்கி பூஜை செய்யும் முறை
தரல-கரணாநாம் – ஐம்புலன்கள் அடங்காத சித்தம் உடையவர்களால்
அசுலபா – அடைய சுலபமானது இல்லை
ததா ஹி – இதனால்தான்
யேதே – இந்த
சதமக-முகா(ஹா) – இந்திரன் முதலான
அமரா(ஹா) – தேவர்கள்
தவ – உன்
த்வாரோபாந்த -ஸ்திதிபி(ஹி) – வாயிற்புரத்தில் இருக்கும்
அணிமாத்யாபி(ஹி) – அணிமா முதலிய தேவதைகளால் தடை செய்யப்பட்டவர்கள் ஆயினும் பூஜை செய்ய விரும்பி வந்ததால்
ஸித்திம் அதுலாம் – அணிமா முதலான நிகரற்ற அஷ்ட சித்திகளை
நீதா(ஹா) – அடையும்படி செய்விக்கப்பட்டார்கள்
அம்மா! நீ முப்புரம் எரித்த பரமசிவனின் அந்தப்புரத்தில் உள்ள பட்டமகிஷியாக விளங்குகிறாய். அதனால் உனது பாதங்கள் அருகில் நெருங்கி பூஜை செய்யும் முறையானது ஐம்புலன்கள் அடங்காத சித்தம் உடையவர்களால் அடைய சுலபமானது இல்லை. இதனால்தான் இந்திரன் முதலான தேவர்கள் உன் வாயிற்புரத்தில் இருக்கும் அணிமா முதலிய தேவதைகளால் தடை செய்யப்பட்டவர்கள் ஆயினும் பூஜை செய்ய விரும்பி வந்ததால் அணிமா முதலான நிகரற்ற அஷ்ட சித்திகளை அடையும்படி செய்விக்கப்பட்டார்கள்.
அதாவது புலனடக்கம் இல்லாதவர்க்கு அன்னை பேரருளான சாயுஜ்யம் எனும் முக்தியை வழங்க மாட்டாள். புலன்களை அடக்கி அவளை தியானிப்போர்க்கு மட்டுமே அவள் இந்த பிறப்பற்ற நிலையை அருள்வாள் என்பது பாடலில் சொல்லும் மறை பொருள்.
அன்னைக்கு “ஸ்ரீ மஹாராஜ்ஞீ” அதாவது பிரபஞ்சம் என்னும் ராஜ்ஜியத்தை ஆள்பவள், தான் தோற்றுவித்த அனைத்தையும் ஆள்பவள்,
“மஹாகாமேச மஹிஷீ” அதாவது மன்மதனை எரித்த மஹா காமேஸ்வரனின் ராணி
என நாமங்கள் உண்டு.
அன்னை மன்மதனை அடக்கியவள். அவனின் ஐந்து அம்புகளைப் பறித்து தன் கையில் வைத்திருப்பவள். மன்மதனின் ஐந்து அம்புகளும் ஐம்புலன்களைக் குறிப்பவை. அவளை மனதார வழிபட்டால் அவளின் கருணையால் ஐம்புலன்களையும் அடக்கலாம். அதனால் ஒருவன் வழி தவறிச் செல்லாமல் அவள் பாதம் அடைவான்.
இதனைத்தான் இந்தப் பாடலில் போதிக்கின்றான் கம்பன்.
இதனை தான் எப்படி அடைந்தேன், ஐம்புலன்களையும் எப்படி அன்னை மேல் திருப்பி அவளை விட்டு நகராமல், ஐம்புலன்கள் கொள்ளையர் போல் தாக்காமல் தற்காத்துக் கொண்டேன் என்பதை மறைமுகமாகச் சொல்கின்றான் கம்பன்.
அதாவது என் கண்கள் அன்னையினை மட்டும் நோக்கின. என் செவிகள் அன்னையின் புகழை மட்டும் கேட்டன. என் சுவாசம் அவள் பெயரைச் சொல்லியது. என் வாய் அவளை மட்டும் பாடியது. இந்த மேனி அவளை மட்டும் நெஞ்சார வணங்கியது.
என் சொல், செயல், தத்துவம், சிந்தை என எல்லாமும் அவளாய் இருந்தாள். நான் என் ஐம்புலன்களையும் அவள் பால் திருப்பினேன். அவளைத் தவிர வேறு நினைவுகளோ செயலோ இல்லாமல் அவளை வணங்கி அவள் புகழ் பாடி நின்றேன்.
அதனாலே அவள் என்னை ஆட்கொண்டாள் என்கின்றான்.
இந்தப் பாடலின் எளிதான சூட்சுமம் என்னவென்றால் ஐம்புலன்களை அடக்காத இந்திரனே வந்தாலும் அன்னை பேரருள் வழங்க மாட்டாள் மாறாக ஐம்புலன் அடக்கியோருக்கு அவள் பேரருளை வழங்குவாள்.
ஆனால் ரிஷிகளும் முனிவர்களும் யோகிகளும் அரும்பாடுபட்டு ஐம்புலன்களை அடக்கி, பல்லாண்டு காலம் தவம் பயின்று யோகம் பயின்று தியானம் செய்து அடையும் அருளை, பல்லாயிரம் காலம் புலனடக்கி தவமிருந்து பெரும் அருளைக் கம்பன் அன்னையினை வழிபட்டு அவள் பால் ஐம்புலனையும் அடக்கி வழிபட்டு அவளை தியானித்து பெற்றுக் கொண்டேன் என்கின்றான்.
அன்னை அவ்வளவு கருணை உள்ளவள். ஐம்புலனையும் ஆமைபோல் அடக்கி அவளிடம் அடைக்கலம் புகுவோர்க்கு அவள் இந்திரனுக்குக் கூட தராத பெரும் முக்தி வரத்தைத் தந்து அருள் வழங்கி காத்து வருகின்றாள். தன்னை அப்படித்தான் ஆதரிக்கின்றாள் என உருகி மருகி பாடுகின்றான் கம்பன்.