சாணக்கியன் அமைத்த‌ சாம்ராஜ்ஜியம் : 01

சாணக்கியன் அமைத்த‌ சாம்ராஜ்ஜியம் : 01

அது பொதுயுகத்துக்கு முன்னர் சுமார் 300 ஆண்டு முந்தைய காலகட்டம், இந்துஸ்தானம் பெரும் ஆபத்தை இரு முனைகளில் எதிர்பார்த்தது.

முதலாவது மாபெரும் சேனையோடு யாரும் எதிர்க்கமுடியா அளவு கிரேக்கம் முதல் ஆப்கான் வரை விரிந்து படர்ந்திருந்த அலெக்ஸாண்டரின் கிரேக்க சாம்ராஜ்ஜியம், அதனை அரிஸ்டாட்டில் தூண்டுதல்படி அலெக்ஸாண்டர் அமைத்ததே இந்துஸ்தானைக் கங்கை கரையினைக் கைப்பற்றவேண்டும் என்பதற்காக‌.

அவன் காலத்திலும் அவனுக்குப் பின்னும் மிகப் பலமான அரசாக கிரேக்கம் மிரட்டிக்கொண்டிருந்தது, அவனை இந்திய அரசர்கள் கட்டுப்படுத்தினாலும் எப்போதும் அவர்கள் பாயும் ஆபத்து இருந்தது.

இன்னொருபக்கம் இந்துஸ்தானம் எனும் இந்து பூமியினை முழுப் பௌத்த நாடாக்க மாற்ற பௌத்த பிக்குகள் அதி தீவிரமாக முயன்று கொண்டிருந்தார்கள்.

இப்படியான ஆபத்தை இத்துஸ்தானம் எதிர்கொண்ட ஆபத்தில் கங்கை கரையில் வலுவான அரசு இந்து அரசாக இருந்தது மகத நாடு.

மந்தாகினி எனும் கங்கையின் நதியோரம் இருந்ததால் அது மகத நாடு, இன்று பாட்னா என அழைக்கப்படும் அந்தப் பாடலீபுரம் அவர்களின் தலைநகரமாய் இருந்தது.

அதற்குக் குஸுமபுரம் என்றொரு பெயரும் இருந்தது.

அது அன்று உலகின் வலுவான அரசாக இருந்தது, கங்கை அள்ளிக் கொடுத்த செல்வம், அறுக்க அறுக்க குறையாத விளைச்சல், அள்ள அள்ள குறையாச் செல்வம், நிலவளம், காடுவளம் என எல்லாமும் நிறைந்த சொர்க்க பூமியாய் இருந்தது.

நீர்வளமும் நிலவளமும் மிகுந்துவிட்டால் விளைச்சல் அதிகமாக கொட்டும், அது நன்றாக நடந்துவிட்டால் செல்வம் குவியும், செல்வம் குவியும் நாட்டில் கலைகள் மேலோங்கும். பக்தியும் மேலோங்கும்.

வியாபாரம், கலைகளெல்லாம் செழிக்கும் போது நாட்டின் பாதுகாப்பு உயரும்,பாதுகாப்பான நாட்டில் மக்கள் வளமாகவும் நிம்மதியாகவும் வாழ்வார்கள்.

அந்த நிம்மதி அவர்களுக்குத் தனி அழகைக் கொடுக்கும், கவலையற்ற வாழ்வு கொடுக்கும். பேரழகுக்கு எதுவும் ஈடு இல்லை.

கால்நடைகள், மாபெரும் வயல்கள், குவிந்து கிடக்கும் தானியம், ஓயாமல் ஓடும் வண்டிகள், பரபரப்பான நகரங்கள், தங்கமும் வைரமும் கொட்டி கிடக்கும் அங்காடிகள், ஒப்பனைகளாலும் இயல்பான வாழ்வாலும் அழகு மிகுந்த பெண்கள், உற்சாகமான வாலிபர்கள், நிறைவைக் கண்ட முதியவர்கள் என அந்த நாடு சுபீட்சமாய் இருந்தது.

கல்வியில் அது மகா பெரிய இடத்தில் இருந்தது, நாளந்தா போல பெரும் பெரும் பல்கலைகழகங்கள் அன்றே இருந்தன, அது இந்து ஞானமாக மிளிர்ந்தது, அவை கல்வியாளர்களை ஞானியரை உருவாக்கிற்று.

அந்தக் கல்வியினை அவர்கள் சமூகத்துக்குத் தர தர எல்லா வகையிலும் பண்பட்ட சமூகமாக அது உயர்ந்து நின்றது.

கங்கை நதி கொடுத்த செல்வம் அப்படி மகா உன்னதமான நாட்டை அன்று எல்லா மக்களும் வியப்போடு நோக்கும் அளவு வலுவான நாட்டை உருவாக்கி வைத்திருந்தது.

இப்படியான மிகச் செழிப்பான மகா சுபீட்சமான நாட்டை ஸ்வார்த்த சித்தி எனும் இந்து மன்னன் ஆண்டுவந்தான், அவன் செங்கோலாட்சி மிகச் சரியாக இருந்தது.

ராஜபரிபாலனம் என்பது எல்லோருக்கும் வராது, அதுவும் செல்வம் மிகுந்த நாட்டை ஆள்வது என்பது பெரும் சிக்கல், அப்படியே அது ஒரு கலை.

அந்தக் கலையில் தேர்ந்திருந்தான் அந்த ஸ்வார்த்த சித்தி மன்னன், அவன் மாபெரும் சிவபக்தனாகவும் இருந்தான்.

அவனுக்கோர் மதிநுட்பமும் மகா தந்திரம் கொண்டவனுமான அமைச்சன் ஒருவன் இருந்தான் அவன் பெயர் ராஷசன்.

எல்லா வளமும் எல்லாருக்கும் இறைவன் கொடுப்பதில்லை, எல்லாம் கொடுத்து அதில் ஒரு குறைவைத்து அந்தக் குறையில் அவனைக் கலங்க வைத்து பின் தன்னை நாடவைத்து தன் திட்டத்தை நிறைவேற்றுவதில் பரம்பொருளுக்கு ஒரு ஆனந்தம்.

அரசனுக்கு பட்டத்து ராணியாக ஸூனந்தை என்பவள் இருந்தாள், இவனுக்கு அனுக்கியாக இருந்தவள் முரை எனும் கணிகை.

கணிகையர் வேறு, பரத்தையர் வேறு. இரண்டாம் வகை என்பது அவ்வளவுக்கு அறிவோ கூரிய விஷய ஞானமோ இல்லாத வகை. அவர்களால் பெரிய சாதனைகளைச் செய்துவிட முடியாது, செக்கு மாடுக்ளைப் போல சுற்றி சுற்றி அங்கே உழலுபவர்கள்.

ஆனால் கணிகையர் அப்படி அல்ல, கூரிய மதி உடையவர்கள், உடலைக் கட்டுகோப்பாக வைக்கும் கலை தெரிந்தவர்கள், உளவியல் முதல் பார்ப்போரை வசீகரிப்பது வரை எல்லாக் கலைகளும் கற்றவர்கள்.

சாதுர்யமான பேச்சு, தந்திரமான நடவடிகைகள், மின்னல் சிரிப்பு, நொடியில் மாற்றம், மனதில் எழும் அற்புதமான திட்டங்கள், அதை நோக்கிச் செல்லும் சாமர்த்தியம், கிடைத்த வாய்ப்பில் தன்னை நிறுத்துதல் என எல்லாமும் அறிந்தவர்கள்.

இளமை முதல் அவர்கள் பெற்ற தேர்ந்த அனுபவம் அவர்களுக்குக் கைகொடுக்கும்.

மன்னர்களுக்கு ரகசியம் காப்போர் முக்கியம், விசுவாசிகள் முக்கியம், மிக மிக நம்பிக்கையானோர் அதி முக்கியம், அந்த இடத்தை இவர்களில் சிலர் அழகாகப் பிடித்துக் கொள்வர்.

ராஜராஜசோழனுக்கு பஞ்சவன் மாதேவி, ராஜேந்திரனுக்கு பரவை என அப்படித்தான் வாய்த்தார்கள், அப்படிச் சாதுர்யமான அழகி முரை இங்கே அவனுக்கு அணுக்கியாகி இருந்தாள்.

மன்னனுக்கு இருந்த பெரும் குறை இருவர் மூலமும் அவனுக்கு வாரிசு இல்லை, நாடாளும் மன்னனுக்கு வாரிசு இல்லை என்றால் எப்படி?

மன்னன் சிவனிடம் சரணடைதான், நாடெங்கும் மாபெரும் சிவாலயங்கள் எழுப்பினான், பெரும் பெரும் யாகங்கள் செய்தான், நாடே அவனுக்காகப் பிரார்த்தித்தது.

எல்லாத் தானங்களைச் செய்தான்; 32 அறங்களையும் செய்தான்; சிவனடியார்களைக் கொண்டாடினான்; என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவ்வளவும் முயன்றான்.

அவனும் சிவனிடம் கையேந்தி நின்றான், சிவன் அவனுக்காக அல்ல தன் தேசமான இந்துஸ்தானைக் காக்க பெரும் நாடகமாட விழைந்தார்.

அதன்படி அவனுக்கோர் கனவு வந்தது, அந்தக் கனவில் சிவனே வந்தார் “மன்னா, கலங்காதே. நாளை காலை நானே முனிவனாக வருவேன், எனக்குப் பாதபூஜை செய்து அந்த நீரை உன் மனைவியர் மேல் தெளிப்பாயாக” எனச் சொல்லி மறைந்தார்.

மன்னன் அந்தக் கனவை பிரதோஷ நாளின் அதிகாலையில் கண்டான், அதிகாலை கனவு பலிக்கும் என்பதும் அந்தக் கனவை யாருக்கும் சொல்லக் கூடாது என்பதும் சாஸ்திரம்.

அப்படி மன்னனும் யாருக்கும் சொல்லாமல் அமைதியாக காத்திருந்தான், கனவில் கண்டபடியே முனிவர் வந்தார்.

மன்னன் அவரை எதிர்கொண்டு அழைத்து அவருக்குப் பாதபூஜை செய்தான், அவன் பட்டத்து அரசிக்கு அது பிடிக்கவில்லை.

அவள் கொஞ்சம் அகங்காரியாக இருந்தாள். பெரும் பக்தியோ வழிபாடோ அவளுக்குத் தெரியாது. சிவன்டியார்களை உபசரிப்பது அவளைப் பொறுத்தவரைக்கும் வெட்டிவேலை, வேலையற்றவன் சோம்பேறி அப்படி அலைகின்றான் என்பது அவள் எண்ணம்.

தன் கனவை யாரிடமும் சொல்லாத மன்னன் தன் இரு மனைவியரையும் அழைத்தான், பட்டத்து ராணி வேண்டா வெறுப்பாக வந்து நின்றாள்.

அவனின் அணுக்கியான முரை அப்படி அன்று. அவள் மாபெரும் பக்தி மிக்கவள், அனுதினமும் சிவலிங்க பூஜை செய்பவள், அவளின் பக்தி ஒன்றுதான் அரசனை அவளிடம் நெருங்கி வரச் செய்தது.

அவள் பயபக்தியாய் நின்றாள். ஆனால், ராணிக்கு அஞ்சி சற்று ஒதுங்கி நின்றாள், அவளின் நிலை அப்படியானது.

பூஜை முடிந்ததும் முனிவர் தன் பாதநீரை ராணிமேல் தெளித்தார். அவளின் மனதை அறிந்திருந்ததால் சம்பிரதாயத்துக்குத் தெளித்தார், ஒன்பது துளிகள் அவள் மேல் பட்டன‌.

பின் தள்ளி நின்ற முரை மேலும் நீரைத் தெளித்தார், ஒரு துளி அவள் சிரசில் பட்டது, அவள் முழங்கால் பணிந்து பெற்றுக்கொண்டாள். முனிவர் அவளை ஆசீர்வதித்தார்.

பத்துமாதத்தில் இருவருக்குமே பிரசவ காலமாயிற்று, முரை ஒரு அழகான ஆண்மகவினை பெற்று மௌரியன் எனப் பெயரிட்டாள்.

அரசிக்கோ நாட்கள் நகந்தன. பிரசவம் ஆகவில்லை, சில வாரம் கழித்து முட்டை போன்ற மாமிச பிண்டம் ஒன்று மட்டும் ஜெனித்து விழுந்தது.

அரசன் ஆடிப்போனான், கணிகைக்கு பிறந்ததை வாரிசாக்க ராணி விடமாட்டாள், அதனால் இதுதான் இதுதான் வாரிசு. ஆனால் அதுவோ பிண்டமாகக் கிடக்கின்றது.

கைகால். கண், மூக்கு என எதுவுமில்லா அப்பிண்டத்தை என்ன செய்வது என அரசனுக்கும் தெரியவில்லை, அது அரசக் கரு என்பதால் வெளியில் எறியவும் எல்லோரும் தயங்கினார்கள்.

மன்னன் தன் அமைச்சர் ராஷ்சனுடன் ஆலோசித்தான், முதன் முதலாக யாரிடமும் சொல்லாத் தன் கனவை சிவன் வந்த கதையினைச் சொன்னான்.

ராஷசன் ஆலோசித்தான். நாட்டின் அதிசிறந்த வைத்தியர்கள், சூட்சும சக்தி கொண்டவர்கள், ரிஷிகள் எனப் பலரரிடம் கலந்து பேசினான்.

தேர்ந்த ஞானம் கொண்ட ஒரு ஞானி ஒரு உபாயம் சொன்னார், அவர் மிகச்சிறந்த வைத்தியராகவும் சிவனடியாராகவும் இந்து சமய நூல்கள் மருத்துவ நூல்களில் கரை கண்டவராகவும் இருந்தார்.

நாளந்தா போன்ற பல்கலைகழகங்களில் மாபெரும் மருத்துவ அறிவு கொண்டவர்கள், மருத்துவத்தில் பிரபஞ்ச சக்தி சூட்சும சக்தியினைக் கலந்து ஆச்சர்யங்களைச் செய்பவர்களெல்லாம் இருந்தார்கள்.

அவர்கள் கூடிப்பேசி வேண்டிய சுவடிகளில் இருந்து குறிப்பெடுத்து சிவனிடம் உத்தரவும் பெற்று ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அதன் படி அந்தப் பிண்டத்தை ஒன்பது கூறுகளாக வெட்டி அதனை விசேஷ தைலக் குடங்களில் இட்டார்கள்.

இது ஒன்றும் ரகசியமோ ஆச்சரியமோ அல்ல, மகாபாரத கௌரவர்களே இப்படித்தான் உருவானார்கள் என்பது இந்துக்களின் மருத்துவக் குறிப்பில் உள்ள உண்மை.

அந்நியப் படையெடுப்பில் இந்துஸ்தானின அறிவுச் செல்வமெல்லாம் அழிக்கப்படும் வரை இதெல்லாம் இயல்பானதாக இருந்தது, இன்று நம்பமுடியா ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த முறை அதாவது ஒரு பிண்டத்தில் அல்லது ஒரு செல்லில் இருந்து ஒரு உயிரை உருவாக்கிக் கொண்டுவருவது இப்போது விஞ்ஞான உலக ஆராய்ச்சி.

குளோனிங் என்பது அதுதான். ஒரு உயிரின் ஒரு செல்லை மட்டும் எடுத்து அதன் மூலம் போல ஒரு உயிரை உருவாக்கும் முயற்சி, டோலி எனும் ஆட்டுக்குட்டி அப்படி உருவானதையும், இன்னும் இது ரகசிய ஆய்வில் இருப்பதையும் எல்லோரும் அனுமானிக்கலாம்.

அப்படி அன்றே இந்தக் குளோனிங் முறை, பிரதியெடுக்கும் முறை ஒரு செல்லில் இருந்து ஒரு உடலை உயிரை உருவாக்கும் முறை பாரதத்தில் இருந்தது.

இந்துமதமே விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டி, விஞ்ஞானம் முடியும் இடமும் அதுவே.

அப்படி இந்த ஒன்பது குடங்களில் இருந்த பிண்டங்களும் குழந்தைகளாயின, ஒன்பது குழந்தைகள் வந்தன, ஒரு சேர வந்தன‌.

நந்தன், ஸு நந்தன், உபநந்தன், ப்ரநந்தன், லோக நந்தன், குருநந்தன், பிரியநதன், விந்த்ர நந்தன், விநந்தன் என ஒன்பது நந்தர்கள் வளர்ந்தார்கள். இவர்கள்தான் இளவரசர்கள்.

இவர்கள் தாய் ஸூனந்தை வழியில் நந்தர்கள் என வந்து நின்றார்கள். ஆனால் தாய்க்கு உள்ள எல்லா அகம்பாவமும் முட்டாள்தனமும் அறியாமையும் மதியாமையும் அவர்களிடம் அப்படியே இருந்தது.

முரையின் மகனான மௌரியனோ தாய் வழியில் மிகுந்த புத்திசாலியும் கூரிய அறிவுடையனாகவும் இருந்தான். தாய் அங்கீகாரம் இல்லாதவள் என்பதால் அவன் ஒதுக்கி வைக்கப்பட்டான்.

ஆனால், அவன் தாயோ இந்நாட்டின் எதிர்காலம் முக்கியம் நல்ல அரசன் முக்கியம், நாட்டு மக்களுக்காக வாழும் அரசன் முக்கியம் என்பதில் கருத்தாய் இருந்தாள், நந்தர்கள் யாரும் உருப்படியில்லை என்பது அவர்கள் 12 வயதின்போதே தெரிந்தது.

முரை தன் மகனை அரசுக்குப் பழக்கினாள். உன் தாயினை விடு உன் தகப்பன் ஒரு அரசன் அவனுக்குப் பின்னர் நாட்டைக் காக்கும் பொறுப்பு உனக்கு உண்டு எனச் சொல்லி சொல்லி வளர்த்தாள்.

அதன்படி அவனும் எல்லாக் கலைகலையும் ரகசியமாக கற்றுத் தேர்ந்தான், அவர்கள் எல்லோருக்கும் 16 வயதானது.

அனைவருக்கும் திருமணம் நடந்தது, அதன் பின் அடுத்த அரசன் யார் எனும் குழப்பம் வந்தது, அந்த ஆலோசனை கூட்டத்துக்குக் கூட மௌரியன் அழைக்கப்படவில்லை.

முரை சுதாரித்தாள். அங்கு நடப்பதையெல்லாம் அவள் அறிந்ததால் சொன்னாள் “மௌரியா, இந்தத் தேசம் முரடர்கள் கையில் சிக்கி நாசமாகப் போகின்றது, நீ அறிவுடை மகன் பெரும் வீரன், எப்படியாவது இவர்களை முறியடித்து நாட்டைக் காக்கும் வழியினைப் பார்.

அந்தச் சிவன் உனக்குத் துணையிருப்பார்.

இந்த அரசு வீழ்ந்தால் பௌத்தம் எழும், அல்லது யவனர் காந்தாரத்தில் இருந்து பாய்வர், இங்கு இந்துமதம் அழியும், இந்து அறிவும் நம்பிக்கையும் அழியும். அதை மீட்டெடுக்க அதன்பின் மாபெரும் போராட்டம் நடத்தவேண்டி வரும்.

நீ அந்த குழப்பத்தை தவிப்பாய், இந்த முரட்டு முட்டாள் கூட்டத்திடம் இருந்து நாட்டை மீட்பாய், மன்னனுக்கோ வயதாயிற்று. இனி அவன் அதிகாரம் செல்லாது.

இந்தக் கூட்டம் நீ பகிரங்கமாக மோதினால் உன்னை நொடியில் கொல்லும். அதனால் அறிவுடையவனான நீ சிவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இந்தச் சிவனின் ராஜ்ஜியத்தை காக்கக் கடவாய்”

மௌரியன் ஆழ்ந்த ஆலோசனையில் அமர்ந்தான்.

பலமிக்க முரட்டு முட்டாள்கள் 9 பேர், ஒரே ஒரு பலவீனமான அறிவாளி எனக் காட்சிகள் பரபரப்பானது.

ஒன்பது பேரில் மூத்தவனுக்கு அரசபட்டம் என அரசன் அறிவிக்க, மௌரியன் அதில் உள்ள ஒரே ஒரு ஓட்டையினைக் கவனித்தான்.

அது அந்த ஒன்பது பேரும் ஒன்பது பிண்டமாக ஒரே நேரம் ஜெனித்தவர்கள், இதில் எவன் மூத்தவன் என்பதை யாராலும் சொல்லமுடியாது.

எப்போதும் முரடர்களுக்கு ஆசை அதிகமிருக்கும், முட்டாள்களுக்குப் பேராசை இருக்கும். இது நியதி.

அங்கே அந்த ஒன்பது பேரில் யார் மூத்தவன் எனும் சர்ச்சை எழுந்தால் போதும். வெட்டு, குத்து, களபேரம் உறுதி.

அந்தப் புள்ளியினை நோக்கி நகர்ந்தான் மௌரியன். காலம் அடுத்தக்கட்டக் காட்சியினை எழுதத் தயாரானது.

(தொடரும்..)