சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 02

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 02

அந்த ஸ்வார்த்த சித்தி மஹாராஜாவின் பட்டது ராணிக்கு நவ நந்தர்கள் ஒன்பது பானைகளில் பிண்டமாக இடப்பட்டு ஒரே நேரத்தில் பிறந்துவந்தார்கள்.

அங்கு யார் மூத்தவர் என்பது தெரியாது. ஆனால். மன்னரின் இளைய மனைவி முரைக்கு பிறந்த மௌரியன் இவர்களுக்கு மூத்தவன், அவனே மன்னனுக்கு முதல் மகன். ஆனால், கணிகையின் மகன் என்பதால் ஆட்சி அவனுக்கு வராது.

நவநந்தர்களில் ஒருவனுக்கே அரசாளும் உரிமை உண்டு, ஆனால் முரையும் மௌரியனும் கொதித்துக் கொண்டிருந்தார்கள்.

காரணம் மன்னருக்கு வயதாகிவிட்டது, நவநந்தர்களோ முரடர்கள், ஆட்சியினை நிர்மாணிப்பது ராஷசன் எனும் அந்த அமைச்சன்.

எப்போதும் தலைமை சரியில்லா இடத்தில் புத்தியுள்ள வேலைக்காரன் ஆதிக்கம் செலுத்துவான், சந்தர்ப்பவாதி ஆட்சியினையே கைப்பற்றுவான்.
ஆனால், தந்திரசாலி அரசனைப் பின்னின்று இயக்குவார்ன், லாபமெல்லாம் இவனுக்கு, போர் உள்ளிட்ட ஆபத்தென்றால் அரசனுக்கு.

இப்படியான நரிமூளை கொண்டவன் ராஷசன், மிகப் பெரிய அறிவாளி, ஆனால் அரச குலம் தன் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும், அவர்களே அறியாமல் இருக்கவேண்டும் என்பது அவன் எதிர்பார்ப்பு.

நவநந்தர்கள் முட்டாள்கள், இவர்களிடம் ஆட்சி வந்தால் இந்துமதத்தை வீழ்த்திப் பௌத்தத்தை எழுப்பிவிடலாம் என்பது பௌத்தர்கள் எதிர்பார்ப்பு, அப்போது அந்தக் கூட்டம் மிக மிக குறைவு.

இந்தச் சதியினை முறியடித்து தேசமும் மதமும் காப்பது தன் கடமை என்பது மௌரியனின் நிலைப்பாடு.

அங்கே நவநந்தர்கள் ஆட்சிகுரியவர்கள், பலவீனமானாலும் செல்வாக்குள்ள மன்னன், இவர்களோடு மிகப்பெரிய தந்திரசாலியான ராஷசன் என அது மலைபோல் வலுவான கூட்டணி.

இப்பக்கம் மௌரியன் எனும் ஒரே ஒரு அறிவாளி.

மௌரியன் சிவபக்தன், மாபெரும் சிவபக்தன். இதனால் சிவன் மேல் பாரத்தை போட்டு தன் செயல்களைத் தந்திரமாக செய்தான்.

எதிரியிடம் பலம் அதிகம், நம்மிடம் குறைவு எனும்போது எதிரியோடு மோதக் கூடாது, பலவீனமான நேரத்தில் சமாதானம் செய்யக்கூடாது.
மாறாக, உறவாடவேண்டும், உறவாடிக்கொண்டே சுற்றிவரவேண்டும். பகையினை மனதில் வைத்து அதை வெளிக்காட்டாமல் பேசித் திரிந்து சரியான நேரம் பாயவேண்டும்.

இதைத்தான் தன் அவதாரத்தில் மகாபாரத காட்சியில் செய்து காட்டினான் கண்ணபிரான், அதர்மத்தை அழிக்க, நல்லது நிலைக்க தந்திரம் ஒரு வழி அது பாவமாகாது எனச் சொல்லி நிரூபித்தவன் அவனே.

வாலிவதையில் ராமன் செய்ததும் அதுவே.

அவன் வழியில்தான் அன்று ஆட்சிகள் நடந்தன, ஆட்சியின் ஒரு அங்கமாக அந்தத் தந்திரம் இருந்தது. நாட்டுக்காக மதத்துக்காக அதைக் கையில் எடுத்தான் மௌரியன்.

அவன் மிகச்சிறந்த உளவாளிகளை நந்தர் தரப்பில் அனுப்பினான். குறிப்பாக ராஷசனுக்கு மௌரியன் மேலும், மௌரியனுக்கு ராஷசன் மேலும் மறைமுக சந்தேகம் இருந்தது, இருவரும் அறிவாளிகள் என்றால் அப்படித்தான்.

அப்படி மௌரியனால் நியமிக்கப்பட்ட உளவாளி நந்தர்களில் ஒருவனுக்கு மன்னர் முடிசூட்ட விழைந்தது பற்றிச் சொன்னான்.

விரைவில் நந்தரில் ஒருவருக்குப் பட்டாபிஷேகம் எனும் நிலையில் மௌரியன் தீவிரமாக யோசித்தான். அவனேதான் உலகம் கண்ட மூத்த பிறப்பு. ஆனால், கணிகையின் மகன் என்பதால் வாய்ப்பில்லை, பட்டத்து இளவரசர்கள் 9 பேரும் ஒரே நேரம் உதித்தவர்கள்.

மௌரியன் ஒரு தந்திரம் செய்தான். ரகசியமாக ஒவ்வொரு நந்தனையும் சந்தித்து வாழ்த்தி நீதான் மூத்தவன் அரசு உனக்குக் கிடைக்கத்தான் வேண்டும் மன்னர் விருப்பம் அதுதான் எனச் சொன்னான்.

ஒருவருக்குத் தெரியாமல் ஒருவருக்கு இதைச் சொல்லி ரகசியமாக அவர்கள் ஆசையினைத் தூண்டிவிட்டான்.

“தம்பி, நீதான் மூத்தவன் என்பதால் உனக்கே பட்டாபிஷேகம் நடக்கும், இதை நான் அறிவேன்” என இவன் சொல்ல “அண்ணா உங்கள் அன்பே அன்பு” என அவர்கள் உருகிப்போக மௌரியனின் திட்டம் அழகாக வேலை செய்தது.

முட்டாள்களை நம்ப வைக்க ஆசையினைத் தூண்ட வேண்டும், முரடர்களை நம்ப வைக்க அவர்களின் சாகசம் பற்றி பேசவேண்டும், அப்படிச் சரியாக வளைத்திருந்தான் மௌரியன்.

மறுநாள் சபை கூடிற்று. ஒன்பது பேரும் தாங்களே அடுத்த அரசன் என மணிமுடி நோக்கிக் காத்திருந்தார்கள், அரசன் அரியணையில் அமர்ந்திருக்க அவனின் பெரும் பலமான ராஷசன் அருகில் அமர்ந்திருந்தான்.

ஒன்றுமே அறியாதவன் போல் தொலைவில் அமர்ந்திருந்தான் மௌரியன்.

அரசன் சொன்ன்னான், “அவையோரே, எனக்கோ வயதாகிவிட்டது, இனி நானும் நம் வழக்கப்படி ஆட்சியினை மகனிட்ம கொடுத்துவிட்டு நான் காட்டுக்குள் ஆஸ்ரம வாழ்க்கைக்குச் செல்லப் போகின்றேன்.

இனி என் மகனில் மூத்தவனுக்குப் பட்டம் சூட்டுவேன்” என்றான்.

அது அந்நாளைய வழக்கம் என்பதால் அவை ஒப்புக்கொண்டது, மௌரியன் மெல்லப் புன்னகைத்தான்.

அரசன் முடிக்கவும். நந்தர்கள் எழுந்தார்கள், ஒன்பது பேரும் ஒருசேரச் சொன்னார்கள்.

“நானே மூத்தவன், நானே மூத்தவன், அதனால் எனக்கே அரசு”

அதிர்ந்தான் மன்னன். நெற்றி சுருக்கினான் ராஷசன், அரசன் இந்த எதிர்பாராச் சிக்கலைக் கண்டு கலங்கினான், அறிவாளியான ராஷசனோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான், அவசரப்பட்டு பேசுவதோ நிலைமை எங்குச் செல்கின்றது என அவதானிக்காமல் வார்த்தைகளை விடுவதோ சரியானது அல்ல என்பதை அவன் அறிவான்.

அவன் நிலைமையினை அணுக்கமாக கணக்கிட்டான், ஒன்பது பேரும் ஆட்சிக்குவர கை உயர்த்துவதும், இது இனி மோதலில் முடியும் என உணர்ந்தவன் மன்னனிடம் சொன்னான்.

“மன்னா, கருத்து வேறுபாடு வந்ததால் சில நாட்கள் கழித்து அவையினைக் கூட்டலாம், இப்போதைக்கு பட்டாபிஷேகம் வேண்டாம்”

அப்படியே சபை கலைந்தது. மன்னர் இது வாரிசு சண்டை எனக் கலங்கிக் கொண்டிருந்தார். ஆனாலும், சிவன் கொடுத்த பிள்ளைகள் என அமைதி கொண்டார். ஆனால், ராஷசனுக்கு தூக்கம் வரவில்லை, அவன் நந்தர்கள் முரட்டு முட்டாள்கள் என்பதையும் இம்மாதிரி வாதமெல்லாம் அவர்களுக்குத் தெரியாது என்பதையும் கணித்து எங்கோ தவறு இருப்பதை அனுமானித்தான்.

அவனுக்கு ஏதோ தட்டுப்பட்டது, யாரோ பின்னணியில் இருக்கின்றார்கள் என்பதை அறிந்தவன் அதை அறிய ஒரு உபாயம் செய்தான்.

திருடன் வீட்டில் ஒளிந்திருப்பது தெரிந்தால் அது தெரியாதது போல் காட்டிக்கொண்டு அவனை அப்படியே அமுக்குவதுதான் அறிவுடமை, தன் வீட்டில் யாரோ உளவாளி இருப்பதை அனுமானித்தவன் அது யார் எனக் கண்டறியவேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு தன் காரியத்தைச் செய்தான்.

அப்படி தன் வேலைக்காரன் காவல்காரன் என யாரையும் மாற்றாமல் சந்தேகப்படாமல் தன் வழமையான வழக்கப்படி மன்னனோடு ஆலோசனை செய்தான்.

“இப்படி ஒன்பது பேரும் ஒரே நேரத்தில் அரசுக்கு ஆசைபட்டால் என்ன செய்வது ராஷசசா” என மன்னர் கேட்க “மன்னா அப்படியானால் இந்த ராஜ்ஜியத்தை ஒன்பது பாகமாக்கி ஒன்பது இளவரசர்களை இப்பொது நியமிப்போம்.

பின் யார் சிறந்தவரோ அவரை அரசனாக்கலாம், நீங்கள் இதையெல்லாம் செய்துவிட்டு பின் காட்டுக்குச் சென்றால் போதும்” என ஆலோசனை சொன்னான்.

மன்னனுக்கும் அது பிடித்திருந்தது, நல்ல யோசனை எனப் பாராட்டியவன் ஓரிருநாளில் சபை என அறிவித்தான்.

மன்னன் சென்றானே அன்றி ராஷசன் பரபரப்பானான், தன் நம்பிக்கைகுரிய ஆட்கள் மூலம் தன் வேலைக்காரர்கள் பணியாளர்களை வேவு பார்த்தான்.

அதில் ஒருவன் மௌரியனைச் சந்தித்த தகவல் வந்தது, அதை முதலில் ஒரு செய்தியாக மட்டும் வைத்துக் கொண்டான் ராஷசன்.

பின் மெல்ல மௌரியனை உளவுப் பார்த்தான், மௌரியன் யார் யாரையெல்லாம் சந்திக்கின்றான் என்பதை அறிந்து கொள்ள விரும்பினான், அப்போது அவனுக்குச் சந்தேகம் வரவில்லை, மாறாக உளவு என்பது எல்லாவகை தகவலையும் தெரிந்து வைப்பது.

நாடு ஒன்பது பாகமாகப் பிரிக்கப்பட போகின்றது எனும் தகவல் மௌரியனை எட்டியதும் அவன் தன் தந்திர திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு மாற்றினான்.

அப்படியே நவநந்தர்களை தனித் தனியே சந்தித்து, “தம்பி இனி அரசனின் திட்டம் இதுவாக இருக்கலாம். நீ வளம் நிறைந்த கும்சபுரம் பகுதியினைக் கேள், அப்போது நீ பலவான் ஆவாய், நான் உன்னுடன் இருந்து உன்னை நடத்துவேன்” எனச் சொன்னான்.

ஒன்பது பேரும் மகிழ்ந்தார்கள்.

மறுநாள் சபை கூடிற்று , என்ன நடக்கின்றது என்பதை காணவந்த ராஷசன் கொஞ்சமல்ல நிறைய கவனமானான்.

நந்தர்கள் ஒன்பது பேரும் மௌரியனுக்கு செலுத்தும் மரியாதை இம்முறை இவனுக்குச் சந்தேகமானது, குறித்துக் கொண்டான். பின் சபை கூடிற்று.

“அவையோரே, இந்நாட்டை ஒன்பது பாகமாகப் பிரிக்க இருக்கின்றேன், ஒன்பது இளவரசர்கள் ஆள்வார்கள். அவர்களில் சிறந்தோர் இனி அரசனாவான், இது எம் முடிவு” என்றான் அரசன்.

மௌரியன் தூண்டிவிட்டபடியே “கும்சப்ரம் எனக்கு” என ஆளாளுக்கு ஒன்பது பேரும் சொன்னார்கள். சொல்லிவிட்டு அவர்கள் கண்கள் மௌரியனைத் தேடின‌.

ராஷசன் புன்னகைத்தான்.

அவை குழம்பிற்று. களபரமாயிற்று, மன்னன் பரிதாபமாக ராஷசனை நோக்கினான், அவன் சொன்னான், “‘மன்னா இம்முறையும் சபை ஒத்திவைக்கலாம்”

அப்படிச் சொல்லிவிட்ட மன்னன் மிகக் களைத்து கவலையில் படுக்கையில் வீழ்ந்தான், அவனைச் சந்திக்க விரைந்தான் ராஷசன்.

“அமைச்சரே, ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றது, இது தீராக் குழப்பமானால் எனக்குப் பின் என்னாகும்? இது எப்படித் தீர்க்கமுடியும், சிவன் என்னை ஏன் சோதிக்கின்றான்” எனக் கண்ணீர்விட்டான் மன்னன்.

ராஷசன் சொன்னான் “மன்னா இது தீர்க்கக் கூடிய சிக்கல்தான், இவை எல்லாம் உங்கள் மகன்களின் சொந்த பேச்சு அல்ல‌.

இதன் பின்னணியில் இருப்பவன் மௌரியன்” என்றவன் கைதட்டினான், அவன் வீட்டில் இருந்த மௌரியன் உளவாளி கொண்டுவரப்பட்டான்.

அரச ஆலோசனையினை மௌரியனுக்குச் சொன்னவன் தான் என அவன் ஒப்புக்கொண்டான், மன்னன் அவனைச் சிறையில் அடைக்க சொல்லி உத்தரவிட்டு இன்னும் குழம்பினான்.

“அமைச்சரே, ஏன் இப்படி மௌரியன் வேலைகளைச் செய்கின்றான், இந்நாடு நன்றாக இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லையா? அவன் விளையாடுகின்றானா? சிறையில் அடைத்துவிடுவோமா?’ எனச் சீறினான்.

ராஷசன் கொஞ்சம் பதறிச் சொன்னான் “அரசே, ஒன்றை மறந்துவிட்டீர்கள், அவனே இங்கு மூத்தவன். ஆனால், கணிகை மகன் என்பதால் யாரும் அவனைக் கருத்தில் எடுக்கவில்லை.

உங்கள் பிள்ளைகள் 10 பேரில் அவனே அறிவாளி, அவனே 64 கலையும் அறிந்தவன் பெரும் வீரன், தந்திரககரன், அவனேதான் ஆட்சியில் அமரவேண்டும்.

அதை அவன் உணர்ந்திருக்கின்றான், நீங்கள் உணரவில்லை என்பதே அவன் கோபம், அதை இப்படி காட்டிவிட்டான்” என்றான்.

“என்ன செய்வது அமைச்சரே” என்றான் மன்னன்.

ராஷசன் மனதில் ஏற்கனவே திட்டம் இருந்தது, நந்தர்களின் மதிப்பு மிக்கவன் மௌரியன். இப்போது அவனைத் தொட்டால் நந்தர்கள் பெரும் ரகளைச் செய்வார்கள் தன் நிலை கேள்விகுறியாகும்.

பகைவன் அல்லது ஆபத்து என ஒருவனை அடையாளம் கண்டால் அவனைத் தனித்துவிடாமல் கைக்குள் வைத்தே கொல்வது ராஜ்தந்திரம், கொல்லாவிட்டாலும் பரவாயில்லை காலுக்கு அடியில் வைத்து நசுக்கலாம்.

(இதைத்தான் பாலஸ்தீனில் இஸ்ரேல் செய்கின்றது, பாகிஸ்தான் எனப் பிரிக்காமல் அந்தப் பிராந்தியத்தை இப்படி வைத்து கொள்வோம் என்பதுதான் சீக்கியர் உள்ளிட்டோர் கோரிக்கையாக 1947ல் இருந்தது)

ஆம், பகைவனை வெளியே விடவே கூடாது.

அப்படி எல்லாக் குழப்பங்களுக்கும் பின்னால் இருந்த மௌரியனை உள்ளே இழுத்துப்போட்டு முடக்க திட்டமிட்டான், அதன்படி ஒரு உபாயம் சொன்னான்.

“மன்னா, அவனும் உங்கள் மகன் அறிவாளி அவன் நமக்கு அவசியம் தேவை, அவனை உள்ளே இழுக்காவிட்டால் இப்படிக் குழப்பமும் செய்வான்.

அதனால் அவனுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்து வைத்துக் கொள்வோம், நாட்டை ஒவ்வொரு வருடம் ஒரு ந
நந்தன் ஆளட்டும், அவர்களில் சிறந்தோரை நாம் அரசனாக்கலாம்.

நான், மௌரியன் என எல்லோரும் அவனுக்குத் துணை இருப்போம், அரசும் வாழும், மௌரியனும் நம் கட்டுப்பாட்டில் இருப்பான். அவன் அறிவும் நாட்டுக்கு பயனாகும்” என யோசனை சொன்னான்.

மன்னன் அவன் திட்டத்தை ஏற்றுக்கொண்டான்.

தனக்கு மௌரியன் நேரடிப் பகையாளி அல்ல, தன் மனதில் மட்டும் பெரும் பகையாளி, அவனுக்குத் தெரியாமலே அவனைக் கருவறுக்க வேண்டும் என்ற நோக்கில் சாதுர்யமாக காய்களை நகர்த்தினான் ராஷசன்.

மௌரியன் இதை முழுக்க அறியவில்லை என்பதுதான் துரதிருஷ்டம். அவன் ராஷசனின் சதிகளைக் கணிக்கத் தவறினான், எல்லாமே அரசமுடிவு, தன் திட்டபடி நடக்கின்றது என நம்பினான்.

அந்த அளவு மிகச் சாதுர்யமாக திட்டமிட்டு வென்றான் ராஷசன்.

அப்படி மௌரியனுக்கும் தூது சென்றது, அவன் வரவழைக்கப்பட்டான் “மகனே, என் மகன்களில் அறிவாளியும் புத்திசாலியும் பெரும் வீரனும் நீதான்.

ஆனால், உன் அன்னை பொருட்டு அவை உனக்கு ராஜ்ஜியம் தராது, ராஜ்ஜியம்தான் தரமுடியாதே தவிர உன்னை அமைச்சராக்க அங்குத் தடை இல்லை.

அதனால் நீ அமைச்சராக இருந்து இந்த நாட்டை நடத்துவாய், உன் தம்பியரோடு நடத்துவாய்” எனக் கைகளை பிடித்துச் சொன்னான்.

மகிழ்ந்தான் மௌரியன். அதைவிட பெரும் மகிழ்ச்சிக் கொண்டான் ராஷசன்.

அதன்படி அவை மறுபடி கூடிற்று. ஒன்பது நந்தர்களும் ஒவ்வொரு வருடம் அரசனாக இருப்பார்கள், ஆனால் அமைச்சராக எல்லோருக்கும் மௌரியன் நீடிப்பான் என அறிவிக்கப்பட்டது.

எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள், ஒரு நந்தனுக்கு முடிசூட்டிவிட்டு மனைவி சுனந்தையுடன் வனம் புகுந்தான் மன்னன்.

மௌரியனின் ஆற்றலில் நாடு செழித்தது. அவனின் கூரிய திட்டங்களில் நாடு வலுவடைந்தது. நந்தர்கள் எனும் முரடர்களை அவன் தன் சாதுர்யத்தால் அடக்கி ஆட்சியினை சரியாகக் கொண்டு சென்றான்.

ஆட்சியில் மௌரியன் கை ஓங்கிற்று, தன் கரம் தாழ்வதை ராஷசன் அனுமானித்தான்.

மௌரியனுக்கு ஆட்சியினைக் கைபற்றும் ஆசை இருந்தது, ஆனால் புத்திசாலி அவசரப்படமாட்டான், அவன் காலத்தை கொஞ்சம் நீட்டிப் பார்த்தான்.

நவநந்தர்கள் இனிப் பெருகுவார்கள், நாமும் எண்ணிக்கையில் பெருகவேண்டும், நாம் ஒரே ஒருவனாக இருந்ததால்தானே இவர்களுடன் மோத முடியவில்லை, நாம் ஒரே மகன் என்பதால்தானே அடங்க வேண்டியதாயிற்று.

நான் ஒருவனாக இருக்கலாம் ஆனால் ஏகப்பட்ட மகன்களை பெற்று பெரும் எண்ணிக்கையில் பெருகி இந்த அரசை எதிர்காலத்தில் என் வம்சம் கைப்பற்றும் எனச் சொல்லி ஏகப்பட்ட திருமணம் செய்து 100 மகன்களைப் பெற்றான்.

அவர்களில் ஒருவனே சந்திரகுப்த மௌரியன்.

காலம் வேகமாக ஓடிவிடும், அடுத்த 16 ஆண்டுகளில் 100 மகன்கள் அவர்களில் மிகச் சிறந்த அறிவாளி, ஆயிரம் அமைச்சருக்கும் ஆயிரம் தளபதிக்கும் ஆயிரம் சிங்கங்களுக்கும் சமம் என வியக்கபட்டவான மகனும் இருந்தான்.

அவனே சந்திரகுப்த மௌரியன்.

இவன் பொக்கிஷ அதிகாரியாக நியமிக்கப்பட்டான், அவன் கீர்த்திப் பெருகிற்று, ஒரு நிழல் அரசனைப் போல் அவன் ஆளத்தொடங்கினான்.

அவனின் மிகப்பெரிய வளர்ச்சியும் அறிவும் மக்கள் கொண்ட அபிமானமும் நந்தர்களுக்கே குழப்பம் கொடுத்தன, அந்த இடத்தில் புகுந்தான் ராஷசன்.

அவர்களின் மனவோட்டம் அறிய விரும்பினான். அவர்களும் சந்திரகுப்தன் மேல் கொஞ்சம் அச்சத்தில் இருப்பதைக் கண்டறிந்தான்.

அதை இன்னும் பெரிதாக்கினான். பெரிய பெரிய நெருப்பாக்கினான் ராஷசன்.

எப்படி நந்தர்களுடன் உறவாடி முன்பு பாட்டாபிஷேகத்தைக் குழப்பி பின் அமைச்சராகி இன்று ஆட்சியினை நடத்துகின்றானோ அப்படி நாளை சந்திரகுப்தன் பெரும் அச்சுறுத்தலாவான் எனப் போதித்தான் ராஷசன்.

நந்தர்கள் இவனிடமே ஆலோசனைக் கேட்டனர்.

“பாம்பினை அதன் குட்டிகளோடு அழிப்பதுதான் சரி, ஒரு மௌரியன் விடாமல் அழித்துவிடுவோம், ஆனால் உறவாடி அழிப்போம் இல்லையேல் நாட்டில் குழப்பம் வரும்” எனச் சொல்லி தன் திட்டத்தை வரைந்தான்.

மொத்த மௌரியர்களையும் கொன்றுபோடும் தந்திரம் அது. யாருக்கும் தெரியாமல் ஒரு தகவல் வெளிவராமல் கொல்லும் மாய வியூகம் அது.

அதனை மௌரியன் அறியவில்லை, சந்திரகுப்தனும் அறியவில்லை, அவர்கள் அறியாமலே அவர்கள் கழுத்துக்குக் கயிறு இடப்பட்டுக் கொண்டிருந்தது.

பௌத்த கோஷ்டிகள் வழக்கம் போல் ஆட்சி குழப்பத்துக்குக் காத்துக்கொண்டிருந்தன‌.

இந்தக் காலகட்டத்தில்தான் கிரேக்கத்தின் மாசிடோனியாவில் இருந்து இந்தியாவினைக் கைப்பற்றுவேன் எனப் பெரும் சேனையுடன் கிளம்பினான் கிரேக்க அலெக்சாண்டர்.

(தொடரும்..)