சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 03
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 03
முட்டாள் மன்னனை விட அறிவார்ந்த அமைச்சன் நினைத்ததை சாதிப்பான். அப்படி அமைச்சரான மௌரியன் தன் குலத்தைப் பெருக்கி எல்லோரையும் அரசவையின் முக்கிய பதவிக்குக் கொண்டு வந்து தன் மகன் சந்திரகுப்தனை கருவூல அதிகாரியாக்கியபோது அமைச்சன் ராஷசனுக்குப் பொறி தட்டிற்று.
அதன் பின் ஒவ்வொரு இடத்திலும் ராஷசனின் ஆட்களை அகற்றி மௌரியனின் ஆட்கள் நியமிக்கப்பட நியமிக்கப்பட ராஷசன் ஆத்திரமானான்.
ஆனால், அறிவாளி ஒருகாலமும் உணர்வுகளை வெளிக்காட்டமாட்டான், ராஷசன் கூரிய அறிவுடையன் என்பதால் எதனையும் வெளிக்காட்டாமல் ஆனால் அடுத்த கட்டத்தைசா சிந்தித்து கொண்டே இருந்தான்.
அதிகாரம் பெயரளவில் நந்தர்களிடம் இருக்கின்றதே தவிர, அதை இயக்குவது மௌரியன் குடும்பம் என்பதையும் இது இன்னும் சில ஆண்டுகளிலே ஆட்சி மௌரியன் வசமாகிவிடும் என்பதையும் உணர்ந்தான்.
இனியும் தாமதித்தால் ஆபத்து எனக் கருதியவன் நந்தர்கள் மனவோட்டம் அறிய விரும்பினான்.
நந்தர்களும் மௌரியனால் விரட்டப்படும் அதிகாரிகள் குறித்த கவலையில் இருந்தார்கள், ஆட்சிக்கு இந்த அதிகாரிகள் சரியில்லை என மௌரியன் விரட்டி தன் ஆட்களை வைத்ததால் அவர்களால் நிர்வாகத்தில் தலையிடவும் முடியவில்லை.
எல்லாம் சரியாக நடந்தாலும் ஏதோ ஒரு அதிருப்தியினை உணர்ந்தனர், அந்த இடத்தில் ராஷசன் புகுந்து தன் தந்திரத்தை அரங்கேற்றினான்.
எதை எப்போது எங்குச் சொல்லவேண்டும் என்பது நல்ல ராஜதந்திரிக்குத் தெரியும், அவன் நந்தர்களை எப்படி மௌரியன் முன்பு பட்டமேற்கும் போது குழப்பி வைத்தான் என்பதை அறிந்திருந்தும் அதுவரை அவர்களிடம் அதுபற்றிச் சொன்னதில்லை.
முன்பே சொல்லி முக்கிய ஆயுதத்தை அவன் பலவீனமாக்க விரும்பவில்லை. மௌரியனின் தந்திர வேலைகளை அரசனும் ராஷசனும் மட்டும் அறிந்திருந்தார்கள்.
அதை நந்தர்களிடம் சொல்லாமல் மறைத்திருந்தான் ராஷசன், அரசனிடமும் சொல்லித் தடையிட்டான் “இதெல்லாம் நந்தர்களுக்குத் தெரிந்தால் உள்வீட்டு மோதல் வரும், சொல்லாமலே விட்டுவிடுதல் நலம்” என அரசனை முன்பே திசை திருப்பியிருந்தான்.
அதுவரை தன் மனதில் காத்த ரகசியத்தை நந்தர்களிடம் அந்த இடத்தில் போட்டு உடைத்தான்.
அதுவும் நந்தர்களிடம் ஒரு எச்சரிக்கையாகச் சொல்வது போல் சொன்னான்.
“இந்த மௌரியன் அப்போதே உங்களைக் குழப்பினான், உங்கள் எல்லோரையும் குழப்பி எங்களையும் குழப்பி மகாராஜாவினையும் குழப்பித்தான் அமைச்சர் பதவி பெற்றான்.
உள்வீட்டு மோதல் வராமல் இருக்க அவனை மந்திரியாக்கினார் மகாராஜா, ஆனால் அது இப்போது சவாலாகின்றது, அவனிடம் ஏதோ திட்டமில்லாமல் ஒவ்வொரு இடத்திலும் அவன் ஆட்களை வைக்கமாட்டான்.
அதனால் நந்தர்களாகிய நீங்கள் கவனமாய் இருப்பது நல்லது”
பேராசை கொண்ட மூடர்களுக்கு யாரும் இடம்பார்த்து அவர்கள் ஆசை கனவுக்கு இடையூறு பற்றி பேசிவிட்டால் ஆத்திரம் பொங்கிவரும், அப்போது எதைத் தின்றால் பித்தம் தெளியும் எனும் நிலைக்குச் செல்வார்கள்.
மூடர்களின் பெரும் பலவீனம் தங்களை அறிவாளிகளாக நினைத்துக் கொள்வது, அப்படி நினைத்துக்கொண்ட நந்தர்கள், ராஷசனிடமே அவனை எப்படி தடுப்பது என ஆலோசனை கேட்டார்கள்.
அப்படி ஒரு நிலைக்குக் காத்திருந்த ராஷசனும் தன் திட்டத்தை கட்டம் கட்டமாகச் சொன்னான்.
‘அரசர்களே, அவன் எண்ணிக்கையில் பெருகிவிட்டான், அவர்களைப் பதவியிலும் அமர்த்திவிட்டான். இனி நாம் அவனைத் தொட்டால் ஆட்சியிலும் நாட்டிலும் குழப்பம் வெடிக்கும்.
மக்களிடம் மிகப்பெரிய பெயரை அவன் பெற்றுவிட்டான், அதனால் பொய்வழக்கோ சிறையோ சாத்தியமில்லை. அது குழப்பமாகும்.
100 பேர்களுக்கு மேல் பெருகி ஆட்சியில் நிற்கும் மௌரியன் மக்களில் எல்லோரையும் கொல்லமுடியாது, ஒரு சிலரை கொன்றால் கூட எஞ்சிய நெருப்பு நம்மை அழித்துவிடும்.
நெருப்பினை ஒரு பொறி மிச்சம் வைக்காமல் அணைக்க வேண்டும், விஷத்தில் ஒரு துளி வைக்காமல் அழிக்க வேண்டும், , நாகத்தில் ஒரு குட்டி கூடத் தப்பாமல் கொல்லவேண்டும்.
அப்படி ஒரு பகைமிக்க கூட்டத்தில் ஒருவன் தப்பாமல் அழிக்கவேண்டும்.
இதைவிட முக்கியம் மௌரியன் மகா புத்திசாலி, அவன் மேல் கைவைத்தால் என்னென்ன செய்யவேண்டும் எனும் திட்டம் அவனிடம் இருக்கும், அதனால் நாம் அவனை மிக ஜாக்கிரதையாக அணுக வேண்டும்.
ஒரு வாய்ப்புதான் நாம் எடுக்கவேண்டும், அந்த ஒருவாய்ப்பில் மொத்த மௌரியர்களும் அழிய வேண்டும், அதற்கான திட்டத்தை நாம் வகுக்கவேண்டும்”
நாகம் தன் நீண்டகால நஞ்சை கக்கியது போல் விஷத்தைக் கொட்டியிருந்தான் ராஷசன்.
அறிவில் குறைந்த நந்தர்கள் அந்தத் திட்டத்தை அவனிடமே கேட்டார்கள், திட்டத்தின் அடுத்த கட்டத்துக்குச் சென்றான் ராஷசன்.
“அரசர்களே, மொத்த மௌரியர்களையும் ஒரு பொறியில் வைத்துக் கொல்லவேண்டும், நாம் ஒரு பாதாள அவை ஒன்று கட்டுவோம், அது அதிரகசிய ஆலோசனை மையம் எனச் சொல்லி வைப்போம், அவனை அங்கே தன் மொத்த குடும்பத்தோடு வரவைத்து பழகவைப்போம்.
பின் ஒருநாள் அவர்களை மொத்தமாக கொன்றுவிடலாம், யாருக்கும் எதுவும் தெரியாது, ஒரு புகை கூட கசியாது, ஆட்சியில் எந்தக் கலகமும் வராது, மக்களிடமும் ஆத்திரம் வராது.
ஒரு சிக்கலான பிரசினையினை, பெரும் மிரட்டலாக எழும் சவாலை யாருக்கும் தெரியாமல் முடிப்பதே சரி, அதைத்தான் நாம் செய்யப்போகின்றோம்”
அருமையான திட்டம் என ராஷசனை தழுவிகாகொண்டார்கள் நந்தர்கள்.
அதன்படியே ஒரு பாதாள மாளிகை அமைக்கப்பட்டது, மிக மிக ஒடுக்கமான வாசலுடன் நிறைய படிகளுடன் பாதாளத்தில் விஸ்தாரமாக கட்டப்பட்டது.
இங்கே பெரிய தந்திரம் என்னவென்றால் அந்த மண்டபத்தை அமைக்க மௌரியனிடமே உத்தரவு பெற்று, மௌரியனின் மேற்பார்வையில்தான் அது கட்டப்பட்டது.
மிக நுணுக்கமாக அதை வடிவமைத்தார்கள் மௌரியர்கள் , அதைப் பாம்பு ரகசியமாக பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தான் ராஷசன்.
ஒருவனை ஒழித்துக்கட்ட முடிவெடுத்துவிட்டால் அவன் கொஞ்சமும் சந்தேகம் கொள்ளாமல் நடந்துகொள்ள வேண்டும் என்பது ராஜதந்திரம், அவ்வகையில் ராஷசன் கொஞ்சமும் பிழைக்காமல் நடந்துகொண்டான்.
அந்தக் காலகட்டம் கிரேக்க மிரட்டல், பௌத்த மிரட்டல் இன்னும் அன்னிய அரசர்களின் மிரட்டல் என அச்சங்கள் ராஜ்ஜியத்துக்கு இருந்த காலம்.
இதனால் மிகப் பாதுகாப்பான இடத்தில் ரகசிய ஆலோசனைகளை நடத்தியாக வேண்டும் என இந்தப் பாதாள மண்டபம் கட்டப்பட்டதால் மௌரியனும் எதையும் யோசிக்கவில்லை.
17 வயதாக இருந்த சந்திரகுபதனுக்கும் எந்த சதியும் தெரியவில்லை.
முழுச் சதியும் ராஷசனுக்குத் தெரிந்திருந்தது, நந்தர்களுக்குக் கூட அவன் முழு விவரமும் சொல்லவில்லை.
அந்த ரகசிய பாதாள மண்டபத்தில் அடிக்கடி கூட்டங்கள் நடந்தன, நந்தர்களும் கலந்து கொண்டார்கள், மௌரியர்களும் கலந்து கொண்டார்கள்.
மௌரியர்களுக்கு ஒரு சிறு சந்தேகமும் ஏற்படாதவாறு சதியினை தன் நெஞ்சோடு வைத்து அடைகோழி போல் காத்துக்கொண்டான் ராஷசன்.
ஒருநாளில் தன் திட்டத்தை அரங்கேற்றினான்.
அவசரமான ஆலோசனை என்றும் மௌரியனும் அரசவையில் நிர்வாகிகளாக இருந்த அனைவரும் வந்தார்கள், 101 இலைகள் இடப்பட்டு, 101 பாத்திரத்தில் நீர், 101 விளக்குகள் என எல்லாம் வைக்கப்பட்டிருந்தன.
மௌரியன் தன் மக்களோடு வந்தான், கொஞ்ச நேரத்தில் நந்தர்கள் வந்துவிடுவார்கள் என அவன் காத்திருந்தான்.
ஆனால் மறைந்திருந்து அவன் குலத்தில் எல்லோரும் வந்துவிட்டார்கள் என அறிந்த ராஷசன் அந்த மண்டபத்தின் வாசலை பாறைகளால் மூடி பெரிய சுவரும் கட்டிவிட்டான்.
ஏற்கனவே சுரங்கப்பாதைகள் அனைத்தும் அவனால் அடைக்கப்பட்டிருந்தன.
முதலில் சதியினை அறியாத மௌரியன் பின் நேரம் செல்ல செல்ல சந்தேகமடைந்து வாசலுக்குச் செல்லும் போதுதான் சதியின் முழு வடிவமும் தெரிந்தது.
பாமபு கடித்துவிட்டால் பாம்பை கட்டுப்படுத்தும் வித்தை தெரிந்திருந்தும் பயனில்லை என்பது போல எல்லை மீறிவிட்ட நிலையில் தலைமேல் கைவைத்து அமர்ந்தான் மௌரியன்.
அவன் குலமும் கலங்கிற்று.
இனி எல்லோரும் சாவது என்பதுதான் முடிவு, திட்டமிட்டு சரித்துவிட்டார்கள் எனக் கலங்கினான் மௌரியன். அவன் குலமும் கலங்கிற்று.
ஒரு தகப்பனுக்குத் தன் பிள்ளைகள் பற்றி தெரியும், யார் எப்படியானவர், எப்படித் திறமையானவர் என்பது தெரியும்.
அப்படிச் சந்திரகுப்தனை நோக்கிச் சென்றான், அவன் பின்னால் மற்ற குல மௌரியர்களும் அவனைத் தொடர்ந்தார்கள்.
சந்திரகுப்தனை நோக்கிச் சொன்னான் மௌரியன்.
“மகனே, நாமெல்லாம் அழியபோகின்றோம், நாம் அழிவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எல்லாரும் ஒரு நாள் சாகவேண்டியவர்களே.
ஆனால், இப்போது நிலைமை மோசமாக இருக்கின்றது, கிரேக்கரும் பௌத்தரும் இந்த நாட்டை விழுங்கக் காத்திருக்கின்றார்கள்.
நமக்கு அரசு உரிமை இல்லை, ஆனால் முடிந்தவரை நாம் அரச நிர்வாகத்தில் இருந்து இந்நாட்டை காத்தோம், இனி அந்த வாய்ப்பு இல்லை.
நாம் இல்லாமல் போனால் எதிரிகள் நொடியில் பாய்வார்கள், இந்தத் தேசம் பாழாகும். இந்துமதம் அழியும். அதைத்தான் எண்ணி எண்ணித்தான் கவலையுறுகின்றேன்.
சிவனே, இனி இத்தேசத்தைக் காக்கட்டும், இது அவன் பூமி.
அதனால் நாம் கடைசி முயற்சி எடுக்கலாம், நம்மில் ஒருவன் மட்டும் பிழைத்து நாட்டை காக்கட்டும். மதம் காக்கட்டும்
இங்கு நமக்கு எதிரிகள் நந்தர்கள் அல்ல, நமக்கு எதிரிகள் அந்நியரும் அந்நிய மதமும், இந்த நாட்டுக்கும் எதிரிகள் அவர்கள்தான்.
அதனால் நம்மில் ஒருவர் பிழைத்து இந்த நாட்டையும் மதத்தையும் காக்க வேண்டும், அதை நீ செய்வாய், உன்னால் முடியும் என நான் நம்பிக்கை கொள்கின்றேன்.
அதனால் நாங்கள் சாகத்தான் வேண்டும், எப்படியும் சாகப்போகின்ற நாங்கள் உன்னைக் காத்துவிட்டு அதனால் இந்த நாடும் மதமும் காக்கக் காலம் வழி செய்யும்”
சந்திரகுப்தன் கலங்கிக் கேட்டான் “நான் ஒருவனாயிற்றே , அறிவார்ந்தவன் என்றாலும் தனியே என்ன செய்யமுடியும்?”
மௌரியன் சொன்னான் “மகனே, இது சிவனின் பூமி, உனக்குத் துணையாக ஒருவன் எங்கிருந்தாவது வருவான் நம்பிக்கை கொள், தர்மம் வாழ ஆயுதம் ஏந்த ஒருவனும், அவனை நடத்த ஒருவனும் ராமபிரான் கண்ணபிரான் காலம் தொட்டு இங்கு உண்டு.
அப்படி உனக்கும் ஒருவன் வருவான், இந்நாட்டையும் மதத்தையும் காப்பான்”
சொன்னபின் அவர்கள் ஆளாளுக்கு அப்படியே அமர்ந்து கொண்டார்கள், உணவை தொடவில்லை. நீரும் தொடவில்லை.
ஒவ்வொருவராகச் சாகத் தயாரானர்கள்.
சந்திரகுப்தன் கொஞ்சமும் அசரவில்லை, அசாத்தியமான மனதிடமும் மாபெரும் லட்சியமும் கொண்டவர்கள் எதற்கும் கலங்கமாட்டார்கள்.
அவன் 101 பாத்திரங்களில் இருந்த நீரையும் ஒரே பாத்திரத்தில் கொட்டினான், 101 விளக்கின் எண்ணெயும் ஒரே பாத்திரத்தில் சேகரித்தான்.
சாப்பாட்டையும் அப்படி ஒரே இடத்தில் கொட்டினான், எஞ்சி இருந்ததை. சேமித்தான்.
ஒவ்வொருவராக சந்திரகுப்தன் கண்முன் சாகத் தொடங்கினார்கள், சகோதரர் தந்தை என ஒவ்வொருவர் மரணமும் தொடர்ந்தது.
அவன் கொஞ்சமும் அசையவில்லை, செடியில் மலர் உதிர்வதைக் காண்பது போல் அவர்களைக் கண்டான். அவர்களின் உடலை ஓரிடத்தில் குவித்துவைத்துவிட்டு அசையாமல் இருந்தான்.
அந்த மரணமோ, துர்நாற்றமோ எதுவும் அவனைப் பாதிக்கவில்லை.
அவன் காக்கவேண்டியது அவன் உயிரை, அதை மட்டும் முடிந்தமட்டும் காக்க ஒருவேளை உண்டு சொட்டு சொட்டாய் நீரைப் பருகி, இரவில் விளக்கேற்றி முடிந்தவரை தாக்குப்பிடிக்கத் தொடங்கினான்.
அவன் மனமெல்லாம் நந்தர்களையும் அவனுக்குப் பின்னால் இருந்தவர்களையும் பழிவாங்க வேண்டும், இந்த நந்த வம்சத்தை அழித்துப்போட வேண்டும் எனும் வெறியும் ஆத்திரமும் நிறைந்திருந்தது.
அவன் முழுத் தியானத்தில் இறங்கினான். ‘சிவனே, என்னை வெளியே கொண்டுபோ, இங்கு நான் சாகாமல் இருக்கும் வரத்தைக் கொடு” என முழுநேரமும் வேண்டத் தொடங்கினான்.
உள்ளே அவன் மட்டும் பிழைத்திருக்க, வெளியே எதுவும் நடவாதது போல ராஷசன் காரியம் செய்துகொண்டிருந்தான்.
மௌரியர்கள் மாயமாய் மறைந்தார்கள் , அவர்களைப் பற்றி ஒரு துரும்பு செய்தி கூட கிடைக்கா நிலையில் மக்களும் குழம்பினார்கள்.
பல கேள்விகளுக்கு உங்களைப் போல எங்களுக்கும் தெரியவில்லை என்பதே அரச பதிலாக வந்தது, இந்த மண்டபம் பற்றி யாருக்கும் தெரியாது.
எல்லாம் திட்டமிட்டபடி நடந்ததாக நந்தர்கள் சிரித்தார்கள். பின்னால் இருந்து ராஷசனும் சிரித்தான்.
இனி இத்தேசம் என் கைபொம்மை, என் ஆட்சி ஒன்றே இனி இங்கு சாசனம் என ராஷசன் தன் நெடுநாள் திட்டத்தை அரங்கேற்றத் தொடங்கினான்.
ஆனால், சிவனின் திட்டம் வேறாக இருந்தது, நாட்டை பகை சூழ்ந்தது..
(தொடரும்..)