சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 05
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 05
சாணக்கியன் தன் காலை தட்டிய அந்த முளை கம்பினை ஆட்டி அசைத்து எடுத்தான், பின் அதைப் பொடி பொடியாக உடைத்தான். பின் எரித்துப் போட்டான்.
எரியும்வரை அருகிருந்து ஆத்திரத்துடன் பார்த்தவன் பின் அந்தச் சாம்பலை அப்படியே கரைத்துக் குடித்தான், குடித்த வேகத்தின் இடையே சந்திரகுப்தனை நோக்கி ஒரு பார்வை பார்த்தான்.
சந்திரகுப்தனும் அவனை நேருக்கு நேர் கண்களைச் செலுத்திப் பார்த்தான்.
அறிவுடையோர் ஒருவரையொருவர் கண்களால் பார்க்கும்போது பார்வையிலே செய்தியினைப் பறிமாறிக் கொள்வார்கள், நீ என் கண்களுக்குள் விழுந்துவிட்டவன் என்பது சாணக்கியன் பார்வையாய் இருந்தது.
நான் என்ன செய்யவேண்டும் என்பது சந்திரகுப்தனின் பதில் பார்வையாய் இருந்தது, இரு புலிகள் பார்வையால் பேசிக்கொள்வது போல் அந்தக் காட்சி சில நொடிகள் நகர்ந்தது.
சந்திரகுப்தனுக்கு அடுத்து என்ன செய்வது எனும் யோசனை இருந்தது. அந்நேரம் மதிய உணவுக்குச் சீட்டு அதாவது 100 பிராமணர்க்கும் ஒரு மகா பண்டிதனுக்கும் போஜன சீட்டு கொடுக்கும் நேரம் வந்தது.
அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட தயாரானது, சந்திரகுப்தன் சில நாழிகை கழித்து கொடுக்க வேண்டிய சீட்டினை அப்போதே கொடுப்பது போல் பரபரப்பானான்.
கூட்டம் இன்னும் அலைமோதிற்று. ஒருவன் கூட்டத்தில் நெருக்கப்பட்டு சந்திரகுப்தன் அருகில் விழுவது போல் விழ முனைந்தவன் அவன் காதோரம் சொன்னான்.
“சாணக்கியன் உனக்கு உதவ வந்திருக்கின்றார், அவருக்கான வாய்ப்பினை உருவாக்கிவிடு, அறிவாளிகள் மட்டும்தான் சாணக்கியனின் உதவியினைப் பெறமுடியும்”
சொன்னவன் யாதும் அறியாதவன் போல் விழுந்து எழுந்து அவன் போக்கில் சென்றுவிட்டான், அங்கே ஒன்றும் அறியாதவன் போல் அமர்ந்திருந்தான் சாணக்கியன்.
சந்திரகுப்தனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை, சாணக்கியன் என்றொருவனை அவன் அதுவரை முழுக்க அறிந்ததில்லை, இதனால் சற்றுக் குழம்பினான்.
இனி என்ன செய்வது எனச் சிந்தித்தவனுக்கு “அவருக்கான வாய்ப்பினை உருவாக்கிவிடு” எனும் ஒரே ஒரு வாக்கியம் மட்டும் காதோரம் ஒலித்துக் கொண்டிருந்தது.
சாணக்கியன் பற்றி அதிகம் தெரியாதுதான், ஆனால் அவன் வந்ததும் ஆழ ஊன்றிய கம்பினை பிடுங்கி எரித்துக் கரைத்துக் குடித்ததும் எதையோ சொல்லவில்லையா.
ஆழ ஊன்றிய எதையோ ஒன்றை அவன் அசைத்தான் என்றால் அது குறியீடாக ஏன் நந்தர்களாக இருக்க கூடாது?
சாணக்கியன் தனியாக வரவில்லை தன் ஆட்களோடு வந்திருக்கின்றான், ஒருவேளை எதிரிநாட்டு ஆளாக இருப்பானோ. யாராக இருந்தால் என்ன, என் பெற்றோரை உடன்பிறந்தோரை வஞ்சகமாகக் கொன்று என்னையும் கொல்லப்பார்த்து கடைசியில் ஆபத்து என்றதும் என்னை அழைத்து அவர்கள் கையின் கத்திபோல் பாவித்துவிட்டு இப்போது பிராமணர்களிடம் சாபம் வாங்கி சாகும் வேலைக்கு அனுப்பி வைத்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லதுடிக்கும் இந்த நந்தர்களை அழிக்க இவனைப் பயன்படுத்தினால் என்ன?
இப்போது தேவை ஒரு சண்டை, நந்தனுக்கும் சாணக்கியனுக்கும் ஒரு பிணக்கினை உண்டாக்கினால் என்ன?
அந்த இடத்தில் உற்சாகமானான் சந்திரகுப்தன், சாணக்கியனோ ஒன்றும் அறியாதவன் போல கூட்டத்தில் நின்றுகொண்டிருந்தான், அவன் பார்வையினைக் கவனித்தான் சந்திரகுப்தன்.
அது சில ஆட்களை தேடியது, சந்திரகுப்தனை அவன் அறியாதவாறு பார்த்து மெல்லப் புன்னகைத்தது.
சந்திரகுப்தனுக்கு ஏதோ புரிந்தது, அவன் மின்னல் வேகத்தில் வியூகமிட்டுத் தயாரானான்.
பந்திக்கான சீட்டு கொடுக்கப்பட தயாரானது, வாசலில் அதைப் பெற்றுக்கொண்டு உள் மண்டபத்தில் சென்று உண்ண வேண்டும்.
அதன்படி 100 அந்தணர்கள் தனியாகவும், மகா வித்துவான் என்பவன் அரசர்களோடு அமர்ந்து உண்ண வேண்டும், அந்த மகா வித்வான் பார்க்க அழகானவனாக மாபெரும் மேதையாக பெரும் தேஜஸும் வசீகரமும் கொண்டவனாக தெய்வாம்சமாக இருத்தல் வேண்டும்.
சந்திரகுப்தன் சீட்டுக்களைக் கொடுக்க ஆரம்பித்தான், அரசர்கள் அருகில் அமரும் சீட்டை தன் இடது கையில் வைத்து கொண்டு மற்ற சீட்டுக்களைக் கொடுத்தான்.
சாணக்கியனும் ஒன்றும் அறியாதவன் போல தள்ளு முள்ளுவில் வந்தான், அவனுக்கு அரசர்கள் அருகில் அமரும் சீட்டைக் கொடுத்துச் சொன்னான்.
“உள்ளே மண்டபத்தில் 100 இலைகள் போடபட்டிருக்கும் அங்கே நீர் செல்லவேண்டாம், தனியாக 10 இருக்கைகளும் பந்தியும் இருக்கும் அங்கே ஓரத்து இடம் உமக்கானது”
சாணக்கியன் அந்தச் சீட்டினை ஒன்றுமறியாதவன் போல் பார்த்துக்கொண்டே வாங்கினான், அதே நேரம் சந்திரகுப்தனின் முகத்தில் நிகழ்ந்த மாற்றங்களை அறிந்து மெல்லத் தனக்குள் புன்னகைத்தான்.
சாணக்கியன் உள்ளே சென்றான். இதர அந்தணர்களும் சென்றார்கள், இனி அனைவரும் காத்திருக்க வேண்டும். நந்தர்கள் ஒன்பது பேர் வந்தபின் பந்தி தொடங்கும்.
இந்த இடைவெளியில் தன் இருக்கையில் இருந்து எழுந்து தானும் உணவு உண்ண தயாராவது போல் தன் அறைக்குச் செல்லத் தயாரானான் சந்திரகுப்தன்.
அவன் செல்லும் வழியில் ஒருவன் கத்தினான், “ஏ சீட்டுக்காரனே, நான் வேதம் அறிந்த அந்தணன், இங்கே எனக்குச் சீட்டு வழங்கப்படவில்லை, நான் உயிர்போகும் பசியில் இருக்கின்றேன், என் சாபம் வருமுன் நான் ஆகாரம் எடுக்க வழிசெய்” எனக் கத்தினான்.
அவனைக் கூர்ந்த் பார்த்த சந்திரகுப்தன் கடந்து செல்ல அடியெடுத்து வைத்தான். “என் குருநாதனுக்கு சீட்டு கிடைத்தது எனக்கு ஏன் கிடைக்கவில்லை” என். அவன் மெல்ல முணங்க அவனை உற்றுநோக்கியவன் தள்ளிச் சென்று அவனை நோக்கி கை அசைத்தான்.
அவன் ஓடிவந்தான்.
“வா, இன்று என்னோடு உணவு அருந்தலாம்” என அவனைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.
யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படவில்லை, அவன் அந்த அந்தணனை தன்னோடு அழைத்துச் சென்று தனக்கான அறையில் தனிமையில் கேட்டான்.
“யார் அந்தச் சாணக்கியன்? எந்த நாட்டின் சார்பாக வந்தான்? நான் அவனுக்கு வாய்ப்பினை உருவாக்கி கொடுத்துவிட்டால் என்ன நடக்கும்? நந்தர்களுடன் அவனுக்கென்ன பகை?”
அந்தணன் வெற்றிலையினை மென்றபடி சொல்ல ஆரம்பித்தான்.
“ஐயா அவர் பெயர் சாணக்கியன், இந்துஸ்தான தென்முனை தமிழ்பேசும் பகுதி அவர் பூர்வீகம், காஞ்சி அங்கிருக்கும் பல்கலை கழகம் முதல் சிந்துநதியின் தட்சசீலம், கங்கை நதிகரையின் நாலந்தா, காஸ்மீரத்தில் கிருஷ்ண கங்கா நதிகரையில் அமைந்திருக்கும் சாரதா மடம் , மலையாள தேசத்தின் கலைகள் என எங்கெல்லாம் வேதம், அறிவு, கல்வி தர்க்கம், யுத்தம், வானவியல், சூட்சும சக்தி வசப்படுத்துதல் என எல்லாமும்
கற்ற பெரிய பண்டிதன்.
அவர் அளவு அறிவாளி இன்று பாரத தேசத்தில் எவருமில்லை.
அவரின் பெரும் கவலை பெரும் கனவும் இந்த இந்துஸ்தானம், இங்கு இந்துமதம் வாழவேண்டும் என்பதில் ஒரு தவஞானி போல் நிற்கின்றார்.
பௌத்தம் சமணமெல்லாம் இங்குத் தழைக்க கூடாது, பாரதம் சனாதனதர்ம நாடாக நிலைக்க வேண்டும் என்பதில் பெரும் கவனம் கொண்டவர், அவர் சுத்தமான தவசி.
இந்தப் பாரதகண்டம் அவரின் பெரும் கனவு, பெரும் பெருமிதம்.
அவருக்கு இந்த மதம், இந்த ஆன்மீகம் , இந்த மகாஞான சனாதனதர்மம் என எல்லாவற்றிலும் பெரும் நம்பிக்கை உண்டு, பெருமிதம் உண்டு.
அவருக்கு இந்நாட்டின் வலுவான அரசுகள் சனாதான தர்ம அரசுகள் முக்கியம், அரசு சரியாக இருந்தால்தான் மக்களும் மதமும் காக்கப்படும் என்பதில் அவர் மிகச்சரியாக இருக்கின்றார்.
தெற்கே தென்முனை கடலால் சுழப்பட்ட பிரதேசம். அங்கே எந்த ஆபத்துமில்லை, திபெத்திய எல்லைகள் பௌத்த எல்லைகள் அங்கும் ஆபத்தில்லை, எந்தப் படையெடுப்பும் வராத பகுதி அது, இந்துஸ்தானத்துக்கும் சீன பௌத்த அரசுகளுக்கும் நல்ல புரிந்துணர்வு உண்டு, அங்குப் போர் என்பது ஒருகாலமுமில்லை.
ஆனால், வடமேற்கு எல்லை அப்படி அன்று, அடிக்கடி ஹூணர்கள் முதல் பலர் வந்த பகுதி, மலைப்பிளவு வழியே எத்தனையோ கொள்ளைக் கூட்டம் வந்து தோற்றோடிய பகுதி.
எனினும், அந்த ஆபத்து இன்னும் ஓயவில்லை, யவண மாவீரன் அலெக்சாந்தர் என்பவன் பெரும் படையோடு வந்து பெரும் சாம்ராஜ்யம் அமைத்துவிட்டான், அவன் கிரேக்கம் தொடங்கி சிந்துநதி தீரம் வரை மிகப்பெரிய கிரேக்க அரசை அமைத்துவிட்டான்.
அவன் வெல்லமுடியா அரசுகளை வென்றவன், யாரும் வீழ்த்தமுடியா பாரசீக அரசன் டாரியஸை வென்றவன்.
அவன் அபூர்வமான வீரன், மிகச் சிறுவயதிலே போர்கலைகள் அனைத்தும் கற்றவன், காலம் அவனுக்குக் கைகட்டியது, அவன் மாபெரும் கொள்ளையினை நிகழ்த்த வந்து கொண்டிருக்கின்றான்.
அவனுக்கு இலக்கு வெறும் செல்வம் அல்ல, வெறும் நிலம் அல்ல, அவன் பெரும் ஆசை கிரேக்க மதமும் கிரேக்க கலாச்சாரமும் பெருகவேண்டும் என்பது.
அவன் குருநாதன் அரிஸ்டாட்டில் என்பவன் அப்படி அவனை உருவாக்கி அனுப்பிவிட்டான், அவன் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி கால்வைக்கும் இடமெல்லாம் தங்கள் பாரம்பரியத்தை நிறுவுகின்றான்.
அவனால் எகிப்து தேசத்தின் மதம் புதைக்கப்பட்டு அவர்கள் புராதன மத நகரம் அழிக்கப்பட்டு அவன் பெயரில் அலெக்ஸாண்டிரியா என்றாயிற்று.
இன்னும் ஜெரிக்கோ ஜெருசலேம் டாம்ஸ்கஸ் பாக்தாத் என எல்லாவற்றையும் அவன் அழித்துத் தன் மத அடையாளத்தை நிறுவி உலகமெல்லாம் கிரேக்கம், ஒரே கிரேக்கமதம் எனும் பெரும் கனவில் இருக்கின்றான்.
அவன் இங்கும் அதைச் செய்வான், காசி முதல் காஞ்சிவரை அவன் எல்லாம் அழித்துப்போட்டு அவன் அரசை நிறுவினால் என்னாகும்?
அரசுகள் பிரச்சினை இல்லை வீழும் எழும், ஆனால் மதம்? நம் வேதம்? நம் ஞானம், நம் வேதபாடசாலைகள்?
அவை அழிந்தால் கிடைக்குமா? இவையெல்லாம் லட்சோப லட்சம் வருடம் முன்னால் முன்னோர்களும் ரிஷிகளும் விட்டுசென்ற மாபெரும் அறிவல்லவ? நம் ஞானமல்லவா? நமக்கிருக்கும் பெரும் அடையாளம் அல்லவா?
சனாதான தர்மம் என்பது வெறும் மதம் அல்ல, அது வெறுமனே ஆண்டிகள் கூட்டம் அல்ல. அது வாழ்வியல், அது ஆட்சியியல், அது ஞானமார்க்கம் என எல்லாம் கலந்த மானுட குல விளக்கு.
அது அழிந்தால் கிடைக்காது, அது புதைந்தால் எழாது.
கிரேக்கர்களால் ரோமம், எகிப்து மதம் இன்னும் அராபியாவில் இருந்த இந்துமதம் என எல்லாமும் அவர்களால் அழிந்தது போல இந்துமதமும் இங்கு அழிந்துவிட்டால் யார் மீட்பார்கள்.
சந்திரகுப்தா ஒன்றை நினைவில் கொள், இங்கு அவர்கள் வந்தால் நாம் தடம் தெரியாமல் அழிவோம், நடுக்கடலில் மூழ்கிய கப்பல் போலாகிவிடுவோம்.
இங்குத் தங்கமோ வைரமோ செல்வமோ கால்நடைகளோ இழந்தால் இழப்பல்ல, மக்களை இழந்தாலும் இழப்பல்ல.
சிந்து முதல் தாமிரபரணிவரை ஓடி செழிக்கும் நாடு, எல்லா வகை செல்வமும் நொடியில் விளையும் நொடியில் குவியும் அப்படி ஆசீர்வாதமான நாடு இது.
ஆனால், சனாதானதர்மம் வீழ்ந்தால் அது கிடைக்காது, விட்டால் அதைப் பெறமுடியாது, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேணிவரும் ஞானப்பொக்கிஷத்தை இழந்தால் யார் மீட்டுத் தருவார்? எங்கிருந்து எடுப்பாய்?
சாணக்கியன் அதற்காகத்தான் அஞ்சுகின்றார், அவருக்கு அறிவாளிகள் நிரப்பப் பிடிக்கும். ஒரு அறிவாளி மதிக்கப்படும் தேசம் உயரும், அறிவாளிதான் விளக்குக்கு எண்ணெய் போல இருப்பவன், அரசன் ஒரு திரி என்பதில் அவர் சரியாக இருப்பார்.
அறிவாளிகளை உதாசீனப்படுத்தும் நாடு அவருக்கு உவப்பானது அல்ல.
அவர் இந்த மகத நாட்டை பல வழிகளில் கண்காணித்தார், இங்கு நந்தர்கள் என முரடர்கள் இருப்பதும் இவர்களை எதிரிகள் எளிதில் அழித்துவிடுவார்கள் என்பதையும் அவதானிக்கின்றார்.
அவருக்கு மௌரியன், சந்திரகுப்தன் என மகா அறிவாளிகளுக்கு இழைக்கப்படும் அநீதியும், மக்கள் மனவோட்டமும் இங்கிருக்கும் ஆபத்தும் புரிகின்றது.
அவர் நந்தர்களுடன் மோதி அழிக்கவேன்டும் இந்தப் பெரும் அரசு வல்லவன் ஆற்றல் உள்ள ஒருவனால் ஆளப்பட்டால்தான் அது எல்லாவகையிலும் வலுத்து நின்றால்தான் கிரேக்க மாபெரும் பேரரசை எதிர்த்துத் தாக்குப்பிடிக்க முடியும்.
இது நம் ஆசை அல்ல, பெரும் விருப்பம் அல்ல, நந்தருக்கும் நமக்கும் பெரும் பகை அல்ல, இது வாரிசு சண்டையோ இல்லை, அதிகார பரவலோ அல்ல.
இது மதம் காக்கும் போர், மண் காக்கும் போர், நந்தர்கள் வீழ்ந்தால் மகதம் வீழும், அந்நியர் கையில் சிக்கிவிட்டால் காசி முதல் கயா வரை ஏன் காளிகட்டம் வரை எல்லாம் அழியும்.
கிரேக்கத்தில் இருந்து சிந்துநதிவரை தொட்டவர்கள் கன்னியகுமரி வரை வெட்டுக்கிளி கூட்டமாய்ப் பாய எவ்வளவு நேரமாகும்.
மகத பேரரசுக்குத்தான் இங்கே பெரும் பொறுப்பும் கடமையும் உண்டு, ஆனால் இவர்களோ அதுபற்றி சிந்திக்கவே இல்லை.
இந்த முட்டாள் முரடர்களை கிரேக்கப்படை நொடியில் எறிந்துவிடும், அவர்களும் நாள் பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றார்கள், இடையில் கூட பர்வதேஸ்வரன் படையெடுத்துவர முயன்று உன்னைத் தேடினான், நீ வந்ததும் ஓடிவிட்டான்.
ஒருவேளை நீ இல்லையென்றால் இங்கே போர் வெடித்திருக்கும். அந்தப் பலவீனத்தில் அந்நிய அரசுகள் பாய்ந்திருக்கும்.
சந்திரகுப்தா இங்கு நாங்கள் நேற்றுவரவில்லை, இங்கு நடக்கும் குழப்பம் பற்றிக் கேள்விபட்டு அதனால் எழும் ஆபத்தை அறிந்துதான் இங்கு ஆட்சிமாற்றம் அவசியம், பலமான அரசு அவசியம் என அறிந்துதான் வந்தோம்.
சாணக்கியன் உன்னை அறிந்திருக்கின்றார், ஆனால் அவர் எல்லோரையும் தேர்ந்தெடுப்பதில்லை, அவருக்கு அறிவாளிகளும் விவேகிகளும் மட்டுமே பிடிக்கும், முட்டாள்கள் சோம்பேறிகள் அச்சம் கொண்டவர்களை அவர் திரும்பியும் பார்ப்பதில்லை.
அவருக்குத் தேவை நந்தருக்கும் அவருக்கும் ஒரு பிணக்கு, அந்தப் புள்ளியில் இருந்து பகை வளர்தல் வேண்டும். உரிய காரணம் வேண்டும்.
அவர் அதைத்தான் உன்னிடம் எதிர்பார்த்தார், நீ என்ன ஏற்பாடு செய்தாயோ தெரியாது. எனினும், விரைவில் ஏதாவது செய்தாக வேண்டும் ” என அவன் முடிக்கும் முன்பே பெரும் சத்தம் கேட்டது.
ஓடிவந்த சேவகன் சொன்னான். “ஐயா விருந்து மண்டபத்தில் பெரும் குழப்பமாகிவிட்டது, யாரோ சாணக்கியனாம் அவர் சினம் கொண்ட நாகம்போல் சீறிக்கொண்டிருக்கின்றார், என்னமோ நடக்கின்றது சீட்டு கொடுத்தவர் நீங்கள் அல்லவா, வந்து பாருங்கள்”
சந்திரகுப்தன் புன்னகைத்தான், அந்த அந்தணன் அவனை ஆரத் தழுவிக் கொண்டான்.
“சந்திரகுப்தா நீ கெட்டிக்காரன், அவர் கண்ணால் சொன்னதை நீ செய்துவிட்டாய், வா அங்குச் செல்லலாம். அவருக்கு எல்லாக் கலைகளும் தெரியும், அவரை நெருங்கி தோளில் கைபோடும் சக்தி எவனுக்குமில்லை.
வர்மத்தின் எல்லாக் கலைகளும் அறிவார், தேவதைகள் எப்போதும் காவல் செய்யும், அவராக விரும்பாமல் அவரைத் தொடுபவன் எவருமில்லை.
அதனால் பதறாமல் வா, மண்டபத்தில் என்ன நடந்தது என விசாரிக்கலாம்”
சந்திரகுப்தனும் அந்த அந்தணரும் மண்டபம் விரைந்தார்கள், அங்கே சீறும் கார்கோடகன் போல் அவர் ஒருபக்கமும், ஒன்பது நந்தர்கள் இன்னொரு பக்கமும் நின்றுகொண்டிருந்தனர்.
பாரதகண்டத்தின் மாபெரும் சரித்திரம் அந்த நொடியில்தான் தொடங்கிற்று, கிரேக்க அச்சுறுத்தலில் இருந்து சானாதான தர்மம் அப்போதுதான் தன் காவலை பெறத் தொடங்கிற்று.