சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 10

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 10

யுத்தம் மிகத் தீவிரமாக நடந்தது. எல்லா இடமும் நந்தர்கள் சேனை வலுவாகத்தான் இருந்தது.

கோட்டையினை முற்றுகையிடும் போரில் அது இயல்பானது. காரணம், ஒரு பெரிய அரசு படைபலமிக்க அரசு எதரிகள் சூழ வரும்போது அப்படித்தான் வலுத்து நிற்கும், முழுப் பலத்தோடு நிற்கும்.

சாணக்கியனுக்கு அது தெரிந்ததுதான். பல தந்திரங்களைச் செய்து எதிரிகளைக் குழப்பினான். அந்த குழப்பத்தையும் மீறி பெரும் வலுவோடு நந்தர் சேனை நின்றது.

ஒரு இடத்தில் கூட பலவீனமில்லாமல் நான்கு பக்கமும் வலுவான அணைகட்டி நின்றது நந்தர்படை.

சாணக்கியன் தேரில் ஏறி சுற்றிவந்து பார்த்தான். எல்லா இடமும் நந்தர்கள் அரண் வலுவாக இருந்தது. தகர்க்க முடியவில்லை.

இது ஒருவகையில் ஆபத்து. போரில் அரண் உடையும் நேரம் என்பது எதிர்பாராமல் நடக்கும், அதுவும் வலுவான எதிரி திடீரென அரணைத் தாண்டி தாக்கத் தொடங்கினால் நிலைமை விபரீதமாகிவிடும்.

நந்தர்கள் இப்போது தற்காப்பு யுத்தம் நடத்துகின்றார்கள். இந்நிலை தொடர்ந்தால் சில நாட்களில் நம் பலவீனம் அறிந்து, எங்கே உடைக்கலாம் என அறிந்து உடைத்துவிடுவார்கள்.

போரில் எதிரிக்கு அவகாசம் கொடுப்பதும் சரியல்ல; இது அவர்கள் ஊர்; அவர்கள் பூமி. எப்போதுமே அந்நிய மண்ணை விடச் சொந்தமண்ணில் ஒவ்வொரு வீரனும் பல மடங்கு உற்சாகமும் உக்கிரமும் கொண்டிருப்பான்.

இப்படியெல்லாம் யோசித்த சாணக்கியனுக்கு இனி ஆயுதப்போர் மட்டும் பலனளிக்காது என்பது தெரிந்தது. இனித் தந்திரத்தை இறக்கவேண்டும் என முடிவு செய்தான்.

களத்தை தீர ஆராய்ந்தவன் கிழக்குவாசலில் ராஷசன் சில தளபதிகளோடு சந்திரகுப்தனுடன் மோதுவதை குறித்துக் கொண்டான்.

அந்த நேரம் வரை நந்தர்கள் ஒன்பது பேரும் களமிறங்கவில்லை, அவர்கள் மேற்குவாசலுக்குச் செல்லவேண்டும் எனக் காத்துகொண்டிருந்தார்களே தவிர யுத்தத்தில் இறங்கவில்லை.

இதையும் சாணக்கியன் உளவாளிகள் மூலம் அறிந்து கொண்டான்.

சாணக்கியன் திட்டம் துல்லியமானது, போரை நீண்ட நாட்களுக்கு இழுக்க அவன் விரும்பவில்லை, எதிரி மண்ணில் நாள்பட்ட யுத்தம் என்பது சலிப்பாகிவிடும், அது எதிரிகளுக்குத் தோதாகிவிடும்.

இங்குப் போர் என்பதன் நோக்கம் நந்தர்களை அழிப்பது, அவர்களை அழித்தால் போதும், நந்தர்களை அழிப்பதுதான் இலக்கு, நந்தர்கள் அழிந்தால் யுத்தம் உடனே நிற்கும். நாடும் வசமாகும்.

ஆனால், முக்கிய சிக்கல் அவர்கள் ஒருவர் அல்ல, ஒன்பது பேர்கள். இந்த ஒன்பது பேர்களும் மொத்தமாக வரும்படி செய்தல் அவசியம். அதை ஜீவசித்தி மூலம் தந்திரமாகச் செய்தாகிவிட்டது.

இந்த ஒன்பது பேரும் வரும்போது முந்திக் கொண்டு கொல்ல சிறப்புப் படை அவசியம், ஒன்பது பேரையும் முந்திக் கொண்டு வளைத்துக் கொல்ல சிறப்புப்படை அவசியம்.

இதனால் மிகத் தேர்ந்த வீரர்கள் 300 பேரை மட்டும் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து தனிக்குழுவாக வைத்திருந்தான்.

இந்த திட்டத்தை அவன் யாருக்கும் சொல்லவிலை.

இப்படியான திட்டத்தில் இருந்தவன் இனித் தந்திரத்தை அரங்கேற்றி தன் திட்டத்தைச் செயல்படுத்தினான். அப்படி அவன் ஒரு செய்தியினைப் பரப்பினான்.

யுத்தத்தில் வெறும் ஆயுதம் என்பது விளையாட்டாகிவிடும், சில வகை தந்திரங்களே முழு வெற்றியினைக் கொடுக்கும்.

அப்படி “ராஷசனை சந்திரகுப்தன் கொன்றான்” எனும் செய்தியினைப் பரப்பினான் சாணக்கியன்.

நந்தர்கள் சேனை அலறிற்று. யுத்தம் அவனால் நடத்தப்படுகின்றது, அவன் எல்லாம் நடத்துவான் என நம்பிக்கொண்டிருந்த சேனை குழம்பிற்று.

ராஷசனே இறந்துவிட்டானா? இனி என்னாகும் எனப் பெரும் பயம் நந்தர்சேனையிடம் பரவி விஷயம் நந்தர்களை எட்டிற்று.

நந்தர்கள் அச்சமிகுந்தவர்களாய் ஜீவசித்தியிடம் ஓடினார்கள். ஜீவசித்தி முன்பு சொன்னபடியே அவர்கள் ஒன்பதுபேரையும் மேற்குவாசலுக்குப் போகச் சொன்னான்.

நந்தர்கள் அச்சம் மிகுந்தவர்களாய்க் களத்துக்கு வந்தார்கள், நந்த சேனை மிகுந்த அச்சத்திலும் குழப்பத்திலுமிருந்தது.

ராஷசனுக்கும் செய்தி சென்றது. அவன் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து கவலையுற்றான். ஆனால், பதிலுக்கு என்ன செய்வது என அவனுக்குத் தெரியவில்லை.

மேற்கு வாசலுக்கு நந்தர்கள் ஒன்பதுபேரும் களம் காண வந்தனர்.

இரையினைக் கண்ட புலிபோல் சாணக்கியன் கவனமானான். தன் தலையினைத் தடவி பார்த்து விரிந்த கூந்தலை சிலுப்பிவிட்டுக் கொண்டான்.

நந்தர்கள் இயல்பிலே முரடர்கள், இப்போது அந்த முரட்டுத்தனத்துடன் அச்சமும் சேர்ந்து கொண்டு மிகுந்த ஆத்திரத்துடன் போரிட்டார்கள்.

சாணக்கியன் அவர்களை முதலில் ஆடவிட்டான். மெல்ல மெல்ல அவர்களை முன்னோக்கி நகர்த்தி வந்தான்.

நந்தர்களும் போரில் தங்களுக்கு வெற்றி என ஆவேசமாக முன்னேறினார்கள். அவர்களைத் தொடர்ந்து அவர்கள் சேனை வந்தது.

பர்வதேஸ்வரனுக்குச் சாணக்கியன் உத்தரவு கொடுத்தான். அவன் சேனை வியூகப்படி நந்தர்களுக்கு பின்னால் வரும் சேனையினை இடை புகுந்து தடுத்தது.

அப்படியே எஞ்சிய நந்த சேனையுடன் நந்தர்கள் முடக்கப்பட்டனர். ஆனால், அரசர்கள் முடக்கப்பட்டார்கள் என்றதும் வீராவேசம் கொண்டு அந்த முடக்கத்தை உடைத்து அவர்களைக் காக்க நந்தர்களின் தளபதிகள் முயன்றார்கள்.

யுத்தம் கடுமையான போது சாணக்கியன் அந்தச் சிறப்புப் படையினை ஏவிவிட்டான்.

அதுவரை களம்பாயாத அந்த வீரர்கள் புதுவேகத்தில் புகுந்து நந்தர்களை வளைத்து அடித்தார்கள், நந்தர்கள் ஒன்பது பேரும் நொடியில் சரிந்தார்கள்.

அரசன் சரிந்தான் என்றதும் சேனைகள் சிதறி ஓடின, எங்கும் குழப்பம் நிலவியது.

ஒன்பது நந்தர்களும் வீழ்ந்து கிடக்க அவர்கள் நடுவில் சிம்மம் போல் வந்து நின்றான் சாணக்கியன், தன்னை அவமானப்படுத்திய நந்தனை அடையாளம் கண்டு காலால் மிதித்தான்.

ஆனால், அது போர்க்களம். நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் வரவில்லை என்பதால் தன் சபதம் முழுக்க நிறைவேற்ற காலம் உண்டு என்பதால் அவன் அடுத்தடுத்த காரியத்தில் இறங்கினான்.

இனி யுத்தம் நின்றுவிடும் என்பது தெரியும். ஆனால், நெருப்பை முழுமையாக அணைக்கவேண்டும் என்பது போல யுத்தம் முடியும் நேரம் எப்போதும் பரபரப்பு அதிகம் இருக்கும், கவனம் அதைவிட அதிகம் வேண்டும்.

நந்தர்கள் வீழ்ந்தார்கள் என்றதும் நந்த சேனை யுத்தத்தை நிறுத்திற்று, ராஷசனும் யுத்தத்தை வேறுவழியின்றி நிறுத்திவிட்டு யோசித்தான்.

அவன் தந்திரசாலி அல்லவா? நடந்த அத்தனையும் அவன் கண்முன்னால் வந்தது. எதிரே நிற்கும் சந்திரகுப்தன் அவனுக்குத் துணையாக பர்வதேஸ்வரன் இவர்களை இயக்கிய சாணக்கியன் என எல்லாம் அறிந்து கொண்டான்.

அவன் மனம் அவனிடம் சில விஷயக்களைச் சொன்னது.

அதாவது அவன் ஒன்றும் அரசன் அல்ல, தந்திரமாக அரசர்களை இயக்கி அவர்கள் பின்னால் இருந்து வேண்டியன பெற்றுச் சுகவாழ்வு வாழ்ந்தவன்.

இப்போது நந்தர்கள் இல்லை, புதிய அரசன் வரப்போகின்றான். அது யாராக இருந்தால்தான் என்ன? நம் இடம் நாம் தக்கவைத்தால் சரி.

ஆனால், வருவது பர்வதேஸ்வரன் என்றால் விஷயம் எளிது. ஒருவேளை சந்திரகுப்தன் என்றால் நம் நிலைமை நிச்சயம் முடிந்துவிடும், அவன் நம்மை ஏதோ ஒருவழியில் ஒழித்துவிடுவான்.

இப்போதைய தேவை ராஜ்ஜியம் யாருக்கு எனப் பார்க்கவேண்டும். பின் பதுங்கவேண்டும். அப்படியே பதுங்கி, ஒதுங்கி வியூகம் பல வகுத்து சந்திரகுப்தனை ஒழித்துவிட வேண்டும்.

அவன் இருக்கும் வரை ஆபத்து. பெரும் ஆபத்து.

இப்போது உயிர்தப்பல் அவசியம். பின் நிலைமையினை அவதானித்து ஜீவசித்தி துணையோடு நாம் நினைத்ததை சாதிக்கலாம்.

“ஏ சாணக்கியா, நீ உன் ஆட்டத்தைக் காட்டிவிட்டாய், நான் யார் என இனிக் காட்டுகின்றேன்” என மனதுக்குள் சவால் விட்டவன் சந்திரகுப்தனிடம் சரணடைந்தான்.

“சநதிரகுப்தா, மன்னரின் வாரிசில் எஞ்சியிருப்பவன் நீ, இந்த அரசு உன்னுடையது. அதை நீதான் இனி ஏற்கவேண்டும், நான் எப்போதும் போல ஒரு அமைச்சராக இங்குச் சேவை செய்ய வாய்ப்பளிக்க வேண்டும்” என மண்டியிட்டான்.

சந்திரகுப்தன் அவனைப் பற்றி முழுக்க அறிவான், அவன் இதுபற்றி பின்னர் யோசிக்கலாம் என அவனைக் கூடாரத்தில் காவல் வைத்துவிட்டு சாணக்கியனுக்குத் தகவல் அனுப்பினான்.

“அவனைக் கொல்லவேண்டாம், சில விஷயங்களுக்கு விஷ நாகம் அவசியம்” எனச் சொல்லி பதில் அனுப்பினான் சாணக்கியன்.

அப்படியே ராஷசனுக்கு உயிர்பிச்சை கிடைத்தது.

ஆனாலும், அவன் நாகம் அல்லவா? முழுக்கத் தந்திரமான நரி அல்லவா? அவன் உயிர்பிச்சை கிடைத்ததும் மீண்டும் என்ன செய்யலாம் என யோசித்தான்.

அவனைச் சாணக்கியன் பிழைக்கவிட்டதன் அர்த்தம் அவன் அறியவில்லை. மாறாக, தன் சாமார்த்தியத்தில் தப்பியதாக கருதினான்.

அப்படிச் செயல்பட்டவன் நேரே பர்வதேஸ்வரனை அடைந்து சொன்னான்.

‘ஐயா, நீங்கள்தான் இனி இந்நாட்டின் மன்னர், உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கின்றேன்.

அந்தச் சந்திரகுப்தன் பட்டத்து அரசியின் மகன் அல்ல, அவன் கணிகைக்குப் பிறந்தவன், அவனை அரசனாக்குவது என்பது அவமானம், அப்படிச் செய்தால் மக்களும் உங்கள் மேல் கோபம் கொள்வர்.

அவனுக்கு ஏன் நீங்கள் உதவவேண்டும்? அவனைக் கொன்றுவிட்டு மொத்த ராஜ்ஜியத்தையும் நீங்கள் எடுங்கள். நான் உங்களுக்குத் துணை இருந்து இங்கே ஆளுகின்றேன்” என்றான்.

ஏற்கனவே இந்த திட்டத்தில் இருந்த பர்வதேஸ்வரன் தனக்குத் தோதான ஆள் கிடைத்துவிட்டான் என வாய்விட்டு சிரித்து அவனைக் கட்டித் தழுவிக் கொண்டான்.

இப்போது இருவரின் இலக்கும் சந்திரகுப்தன் என்றானான்.
காரணம், அவனைத்தான் சாணக்கியன் அரசனாக்கப் போகின்றான், அவனை ஒழித்துவிட்டால் சாணாக்கியனால் என்ன செய்துவிடமுடியும்? ஒற்றைப் பிராமணனை அடித்து விரட்டினால் அழுதுக்கொண்டு செல்வதை விட என்ன செய்ய முடியும்?

இப்படிப் பர்வதேஸ்வரனும் ராஷசனும் திட்டமிட்டார்கள். ராஷசன் மிகச் சாமார்த்தியமாக இதை யாரிடமும் சொல்லவில்லை. ஜீவசித்தியிடமும் சொல்லவில்லை.

சாணாக்கியன் இவனைத் தன் உளவாளிகள் மூலம் கண்காணித்து அவன் ஏதோ செய்வதை அறிந்து கொண்டான், கொஞ்சம் சுதாரித்தான்.

சாணாக்கியன் செய்த காரியம் நந்தர்கள் சேனையினை அப்படியே அழைத்துச் சந்திரகுப்தன் வசம் கொடுத்து அவனைப் பலமாக்கியது.

இப்போது சந்திரகுப்தனுக்குப் படைபலம் வாய்த்துவிட்டது. இனி அவனுக்கு பலம் அதிகம், ஒற்றை ஆளாக எந்த மாளிகையில் அனுதினமும் அவன் செத்துப் பிழைத்தானோ, அந்தக் கோட்டைக்குள் இனி அரசனாக அவன் செல்லவேண்டும்.

சந்திரகுப்தன் கோட்டைக்குள் நுழைய சாணக்கியனிடம் ஆலோசித்தான்.

சாணக்கியன் சொன்னான், “சந்திரகுப்தா, காலமெல்லாம் எதிரிகள் வசம் இருந்த கோட்டை அது, உனக்குப் பரிச்சயம் என்றாலும் அவசரப்படவேண்டாம்.

நம் ஆட்களை அனுப்பி முதலில் முழுக்காவலை உறுதி செய்வோம். அங்கு யார் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்பதே தெரியாது.

இங்கு எல்லாமே அதிகாரப்போட்டி. நந்தர்கள் இருந்தவரை ஒரு அமைதி இருந்தது, நாமும் இன்னும் முழுப் பலமும் பெறவில்லை.

இதனால் இன்னொரு சக்தி நம்மைப் பழிவாங்கவோ, இல்லை நம்மிடம் இருந்து ஆட்சியை பறிக்க நினைக்கலாம், எதுவாயினும் நீ கோட்டைக்குள் புகும்போது கவனமாக இருத்தல் அவசியம். கொஞ்ச நாளைக்குப் பொறுமையாய் இரு”

அதே நேரம் பர்வதேஸ்வரனும், ராஷசனும் சந்திரகுப்தனை எப்படிக் கொல்லலாம் என ஆலோசித்தனர். அவர்கள் திட்டப்படி பதவி ஏற்க கோட்டைக்குள் வருபவனைக் கொன்றுவிடுவது என ஏற்பாடு.

அதாவது இவர்கள் கொன்றுவிட்டு நந்தர்களின் விசுவாசி கொன்றுவிட்டான் எனப் பழியினை அங்கே போட்டு, சாணக்கியன் ஒரு பார்ப்பனர் அதனால் அரசனாக முடியாது என விரட்டிவிட்டு நாட்டை அவர்கள் எடுத்துக் கொள்வது.

அதனால் அவர்கள் சந்திரகுப்தனை உள்ளே வரவழைக்க வியூகம் வகுத்தார்கள்.

ராஷசன் சந்திர்குப்தனிடம் வந்து சொன்னான், “இன்னும் பதவி ஏற்காமல் இருந்தால் எப்படி? உடனே வரும்படி மக்கள் எதிர்பார்க்கின்றார்கள், அமைச்சராய் இதைச் சொல்லவேண்டியது என் கடமை”

சாணக்கியன் மெல்லப் புன்னகைத்தப்படி சொன்னான், “சந்திரகுப்தா, ராஷசன் ஆசைப்படுகின்றார் அல்லவா? நாம் சில நாட்களில் அரண்மனை பிரவேசம் செய்யலாம்”

ராஷசன் சந்தோஷமாகத் திரும்பினான். அவனும் பர்வதேஸ்வரனும் எப்படிச் சந்திரகுப்தனைக் கொல்வது எனத் திட்டமிட்டார்கள்.

குறிப்பிட்ட நாள் வந்தது. சந்திரகுப்தன் தயாரானான். பட்டத்து யானை தயாராக இருந்தது.

அரண்மனையில் சந்திரகுப்தனைக் கொல்ல ராஷசன் தயாராக இருந்ததான். கொலைக்கான எல்லாமும் திட்டமிட்டபடி சரியாக இருந்தது.

(தொடரும்)