சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 11

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 11

எப்படியாவது சந்திரகுப்தனை ஒழிக்க வழி தேடிக் கொண்டிருந்தான் ராஷசன், சந்திரகுப்தனிடம் பாடலிபுத்திரம் சிக்கினால் தன் நிலை உடனே காலி என்பதையும், சந்திரகுப்தன் தன்னை ஒழித்துக்கட்டிவிடுவான் என்பதையும் உணர்நதவன் முந்திக் கொள்ள முடிவெடுத்தான்.

ஆனால், அது சாத்தியமில்லை, சந்திரகுப்தனைச் சாணக்கியன் மிகுந்த காவலில் வைத்திருந்தான், மிக வலுவான காவல் படையும் சோதனையும் அவனைச் சுற்றி இருந்தது.

உண்ணும் உணவைக் கூட சோதித்தபின்பே உண்ண சந்திரகுப்தன் அனுமதிக்கப்பட்டான்.

அவனே இனி அரசன், அவன் இல்லையென்றால் இனி ஒன்றுமில்லை என்பதால் சாணக்கியன் அவனை வலுத்த காவலில் வைத்திருந்தான்.

பர்வதேஸ்வரனுக்கும் சந்திரகுப்தனை ஒழித்துவிட்டால் முழு ராஜ்ஜியம் தனக்கு எனும் திட்டம் இருந்தது, அவன் ராஷசனை சற்றுப் பொறுமையாக இருக்கச் சொன்னான்.

அரசனுக்கான ஊர்வலத்திலோ, இல்லை மகுடம் தரிக்கும்விழாவிலோ நந்தர் தரப்பில் யாரோ ஒருவர் அவனைக் கொல்வது போல கொல்லலாம் என வாய்ப்புக்குக் காத்திருந்தான். ஆனால், ராஷசன் கடுமையாக யோசித்தான், இப்போதே சந்திரகுப்தனை இப்படிக் காக்கும் சாணக்கியன் இனி அரச ஊர்வலம் என்றாலும் பெரும் காவலைச் செய்வான்.

அரண்மனைக்குள் சந்திரகுப்தன் வந்துவிட்டான் என்றால் முதல் பலி தானே என்பதை ஊகித்தான், பர்வதேஸ்வரன் சந்திரகுப்தனை ஒழிக்க கால அவகாசம் எடுப்பான், அதற்குள் சந்திரகுப்தன் தன்னை ஒழித்துவிடுவான் என அஞ்சினான்.

அதற்காக பர்வதேஸ்வரன் பக்கம் செல்ல முடியாது, அப்படிச் சென்றால் இன்னும் ஆபத்து. பின்னாளில் இங்கும் வரமுடியாமல் அங்குப் பர்வதேஸ்வரனிடம் அடிமையாக இருக்க நேரிடும்.

மகத நாட்டின் தலைமை அமைச்சராக இருக்கவேண்டும், எந்த அரசன் வந்தாலும் அதை விட்டுவிடக் கூடாது என்பதுதான் அவன் திட்டம்.

இதனால் அவன் சந்திரகுப்தனை முந்திக்கொண்டு கொல்ல முழுநேரம் சிந்தித்தான். கடைசியில் ஜீவசித்தியிடமே சரணடைந்து சொன்னான்.

“ஜீவசித்தியாரே, சந்திரகுப்தனை அவன் முகாமிலே கொல்லவேண்டும், அப்போது நமக்கு வரும் பெரும் ஆபத்து நீங்கும்.

சர்வகாவல் நிறைந்த அவன் முகாமிலே அவனைக் கொன்றோம் என்றால் சாணக்கியன் தன்னம்பிக்கை இழந்து, உடைநது ஓடிவிடுவான், பின் பர்வதேஸ்வரன் பிரதிநிதியாக நாம் இந்நாட்டை ஆளலாம்.

உங்களிடம் மறைப்பதென்ன? இங்கே பௌத்தம் தழைக்க வேண்டும் என்பதுதானே உங்கள் ஆசை.

எனக்கு இந்த நாட்டை ஆளும் பெரும் வாய்ப்பு, உங்களுக்குப் பௌத்த நாடாக இந்த மகத நாட்டை மாற்றும் பெரும் வாய்ப்பு என இரண்டும் கிடைக்கும்.

என் ஆசைக்கும் உங்கள் ஆசைக்கும் இடையே தடையாக இருப்பவன் சந்திரகுப்தன், அவனைக் காப்பவன் சாணக்கியன்.

சாணக்கியன் ஒற்றைப் பிராமணன், அடித்துவிரட்டினால் ஓடிவிடுவான், ஆபத்து சந்திரகுப்தன், அவனை ஒழித்துக்கட்டியே தீரவேண்டும்.

ஜீவசித்தியாரே, நாட்டினை ஆளும் சக்தி எனக்கே உண்டு. நந்தர்கள் இல்லை, பர்வதேஸ்வரன் அந்நிய மகாராஜா, அவனை மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள், ஏற்றாலும் எப்படி மக்களை அவனுக்கு எதிராக திசைதிருப்புவது என்பதை நான் அறிவேன்.

என்னைப் போன்ற அனுபவமிக்கவன் இங்கு யாருமில்லை அதனால் நான் அவர்களுக்கு மிக அவசியம்.

இதனால் ஆட்சி என்னிடமே நிஜமாக இருக்கும், நானே இந்த மகா மகதப் பேரரசை இயக்குவேன், அப்போது உங்கள் பௌத்தம் பெருக பெரிய பெரிய மடம் அமைத்துத் தருவேன். இடம் தருவேன்.

நீங்கள் பல பாகங்களில் இருந்து துறவியரை அழைத்து வரலாம், விரும்பியதைச் செய்யலாம், இந்தச் சனாதன தர்மமோ மண்ணோ எனக்கு முக்கியமில்லை.

என் ஆட்சி முக்கியம், காலமெல்லாம் அரசர்கள் ஆள்வதும் அவர்களை விட அறிவில் சிறந்தவர்கள் அமைச்சர்களாக இருந்து தங்கள் அறிவைக் கொடுத்துவிட்டு அடிமையாய் இருப்பது எப்படி?

நாட்டை நடத்துவது அமைச்சன். அரசன் வெறும் கருவி, அப்படியான அமைச்சன் நேரடியாக ஆண்டால்தான் என்ன?

காலம் எனக்குக் கனிந்திருக்கின்றது, நந்தர்களுக்கும் சாணக்கியனுக்குமான சண்டையினை நான் எனக்கு அனுகூலமாக்கிக் கொண்டேன், என் அறிவால் அதைச் செய்தேன்.

எனக்கு நந்தர்கள் உவப்பானவர்கள் அல்ல. சந்திரகுப்தன் என் எதிரி.

இருவரையும் என்னால் நேரடியாகத் தொடமுடியாது, சாணக்கியன் தன் திட்டத்தால் நந்தர்களை சரித்துவிட்டான். நான் இனிச் சுதாரித்துச் சந்திரகுப்தனைச் சரித்துவிட்டால் போதும், சாணக்கியன் தொடங்கிய யுத்தத்தின் பலன் என்னைச் சாரும்.

நான் அந்த பலனில் உங்களுக்கும் பங்கு தருவேன்”

இப்படித் தன் முழுத் திட்டத்தையும் ஜீவசித்தியிடம் சொன்னான் ராஷசன். இந்துமதம் அழிந்து பௌத்தம் பெருகட்டும், எனக்கு ஆட்சிதான் முக்கியம் எனச் சொன்னதை கேட்டு மனதால் கொதித்தாலும் அதை வெளிக்காட்டாமல் பௌத்த துறவி வேடத்தில் இருந்த ஜீவசித்தி இயல்பாகச் சொன்னான்.

“பௌத்தத்துக்கு நீங்கள் செய்யும் உதவிக்காக நான் எந்த உதவியும் செய்யத் தயார்” எனச் சொன்னான் ஜீவசித்தி.

ராஷசன் அவனிடம் நிறைய ஆலோசித்தான், கொஞ்சமும் சந்தேகம் வராமல் அவனைக் கொல்லவேண்டும், காரணம் ஆதாரத்தோடோ ரத்தம் தெறிக்கும் கொலையாகவோ இருந்தால் பழி பர்வதேஸ்வரன் மேல் விழும். அவன் தன்னைச் சந்தேகப்பட நேரிடும்.

இதனால் ஆதாரமே இல்லாமல் இயல்பான மரணமாக அது நிகழவேண்டும்.

விஷம் கொடுத்துக் கொல்லுதல் அல்லது நோய்வரும் விஷத்தைக் கொடுத்து மெல்லக் கொல்லுதல் என்பது சரியான தேர்வு, ஆனால் கடும் காவலில் இருப்பவனுக்கு நீர் கூட சோதித்துக் கொடுக்கபடுகின்றது என்பதால் அது முடியாது.

யாரும் சந்தேகிக்கமுடியா வகையில் வைத்திய முறையில் கொல்லவேண்டும் என யோசிக்கச் சொன்னான்.

யாக சாலையில் புகையில் விஷத்தைக் கலக்குவது, அவன் படுக்கையில் விஷப் பொடியினை தூவிவிடுவது, உள்ளே அரசனுக்குச் செல்லும் பழங்களில் விஷத்தைத் தடவி அனுப்புவது எனப் பல வகைகள் சோதிக்கப்பட்டன‌. ஆனால், அவையெலாம் சோதனையில் அடிபட்டு போகும், அப்படி ஒரு வாய்ப்பு வெளித்தெரிந்துவிட்டால் பின் நிச்சயம் அணுகமுடியாது என்பதால் கைவிட்டார்கள்.

“ஜீவசித்தரே, நீர்தான் மந்திர தந்திரங்களில் பெரிய சக்திவாய்ந்தவராயிற்றே, ஏதாவது ஒரு துர்சக்தியினை அனுப்பி அவனைக் கொல்லும்” என்றான் .

“ஐயா ராஷசரே, நீங்கள் நினைப்பது போல இந்தத் துர்சக்தியினை ஏவிவிடுதல் சுலபம் அல்ல, அப்படி சுலபம் என்றால் சாணக்கியன் நந்தர்களை இதனைக் கொண்டே அழித்திருப்பான்.

இந்தத் துர்சக்திகளை ஏவிவிட நேரம் காலம், ஜாதக கட்டம் அவசியம், அதைவிட முன்ஜென்ம கர்மா அவசியம்.

ஒரு துஷ்ட சக்தி ஒருவனைத் தொட அதற்கும் அவனுக்குமான பழைய பழிவாங்கும் பந்தம் இருக்கவேண்டும், ஒரு தொடர்பு ஜென்ம ஜென்மமாக அல்லது பரம்பரையாக வரவேண்டும்.

அப்போதுதான் அது பலிக்கும், இல்லையேல் பலிக்காது.

அந்தத் துஷ்டசக்திகளைச் சரியான காரணமின்றி ஒருவன் கர்மாவுக்கு எதிராக வலுகட்டாயமாக ஏவினால் அது நம்மை அழித்துவிடும்”

இப்படி ஜீவசித்தி சொன்னதும் வேறுவகையில் சிந்தித்தான் ராஷசன்.

‘ஜீவசித்தரே, நாம் ஏதும் நஞ்சினை விஷத்தை உணவில் உடையில் கலந்தால்தானே சிக்கல். ஒரு அழகான பெண் மூலம் அதை அனுப்பினால் என்ன? பெண்ணுக்கு ஒருவன் மயங்கும்போது அவன் மதியும் காவலும் எச்சரிக்கையும் அகலும் அல்லவா?

நாம் அந்தப் பெண்ணின் கூந்தலில் விஷத்தைத் தடவி அனுப்பினால் என்ன? அவளைப் போகிக்கும் போது சாகட்டும்”

இந்தத் திட்டம் மிக மிக நுணுக்கமானது என்பதை அறிந்த ஜீவசித்தி ராஷசனின் கூரிய அறிவைப் பாராட்டிக்கொண்டு மனதால் அஞ்சினான்.

ராஷசன் மாபெரும் ஆபத்து, நிச்சயம் அவன் மிகப்பெரிய அறிவாளி. ஆனால், அவன் அறிவெல்லாம் வஞ்சகம் என உணர்ந்தவன் அந்தத் திட்டத்தின் பாதகத்தைச் சொன்னான்.

“ராஷசா அப்படியென்றால் அந்தப் பெண்ணுக்கும் ஆபத்து நிகழும், இருவரையும் யாரோ கொன்றுவிட்டார்கள் என்றாகிவிடும்.

இன்னொன்று அப்பெண்ணை அலங்காரம் செய்ய அங்கே பணிவிடை பெண்களெல்லாம் உண்டு, இந்த விஷம் பெரிய சலசலப்பை உண்டு செய்யும், அதுவும் குளித்து அலங்கரிக்கும் பெண்ணுக்கு இதெல்லாம் வாய்ப்பில்லை.

சரி, அப்படி ஒரு பெண்ணை எப்படி அனுப்புவீர்?” என்றான்.

நந்தர்கள் இல்லையே தவிர அரசகுலத்தில் அழகு மங்கை ஒருத்தி உண்டு, மாபெரும் அழகி. அவள் சர்வ லட்சணமும் பொருந்தியவள், அவள் அழகுக்காக அவளை எல்லோரும் விரும்புவார்கள்.

அவள்தான் முக்கிய துருப்பு சீட்டு, அவளைக் கண்டவன் எவனும் வீழ்வான், அப்பெண்ணை அரச கைதி எனச் சந்திரகுப்தனிடம் அனுப்பிவிடலாம், ஆனால் அவள் விஷம் கொண்டு செல்லமாட்டாள், இந்தச் சதிக்கு உடன்பட மாட்டாள்.

அவள் அறியாமல் அவள் மூலமாக அவனைக் கொல்லவேண்டும், அதற்கான உபாயத்தை நீங்களே கூறவேண்டும் என்றான்.

ஜீவசித்தி தீவிரமாக சிந்தித்தான், இவன் சந்திரகுப்தனைக் கொல்வதிலே குறியாக இருக்கின்றான், நாம் இவனிடம் தன்னால் முடியாது எனச் சொல்லிவிட்டால் வேறு ஒருவன் மூலமாக் அதை முயற்சிப்பான்.

இதனால் இவனை விடக் கூடாது, இவனை நம் கண்காணிப்பிலே வைத்தல் வேண்டும். அதே நேரம் சந்திரகுப்தனையும் காக்கவேண்டும் என எண்ணியவன் சிந்தித்தான்.

பின் சொன்னான்.

“ராஷசரே அப்பெண்ணிடம் ஒரு மோதிரம் கொடுப்போம், அதன் பின் அவளைத் தொடுபவன் யாராயினும் செத்துவிடுவான்?”

எப்படி என்றான் ராஷசன்?

நான் ஒரு மாய மோகினியினை விஷக் கன்னிகை ஆவியினை வரவழைப்பேன், சில பூஜைகளால் அதனை அந்த மோதிரத்தில் அடக்குவேன், அவள் அந்த ஆவிக்குக் கட்டுப்பட்டவள் ஆகிவிடுவாள், இது ஒரு காவல் போன்ற கட்டு.

அந்த மோதிரம் அவளிடம் இருக்கும்வரை யார் அவளைத் தொட்டாலும் விஷநாகம் தீண்டியது போல் செத்துவிடுவார்கள்”

ராஷசன் துள்ளி எழுந்தான், அருமையான திட்டம் என ஆர்ப்பரித்தான். மோதிரத்தை நீங்கள் தயார் செய்யுங்கள் பெண்ணை நான் தயார் செய்கின்றேன் என்றவன் அடுத்தக் கட்டத்தில் இறங்கினான்.

அந்த அழகான பெண்ணிடம் சென்று, “இனி நீ மன்னர் சொத்து, மன்னர் அரண்மனை புகும் விழா விரைவில் நடக்க இருக்கின்றது, அவரை மகிழ்வித்து அழைத்துவரும் பொறுப்பு உன்னுடையது.

நீ அதிகாரமிக்கவள் என்பதைச் சொல்ல உனக்கொரு முத்திரை மோதிரம் தருவேன். அதை அணிந்து சென்றால் உனக்குத் தனிச் சலுகையும் மன்னர் கண்முன் உனக்குப் பரிசுகளும் கிடைக்கும், யாருக்கும் கிடைக்காத வாய்ப்ப்பு உனக்கு வரும்”

இப்படிப் பெண்ணை தயார் செய்து விட்டு அடுத்தக்கட்டமாக சந்திரகுப்தனுக்குப் பரிசுகளை அனுப்ப ஆரம்பித்தான்.

“மன்னர், விரைவில் அரண்மனைக்குத் திரும்ப இருப்பதால் ஊர்வலம் சிறப்பாக நடைபெற பொக்கிஷங்களை அனுப்புகின்றேன்” எனச் சொல்லி அனுப்பினான்.

அவன் அனுப்பும் பரிசுகளை எல்லாம் சாணக்கியன் ஒரு கண் வைத்து சோதித்தே பெற்றுக் கொண்டான்.

அப்படியே அந்தப் பெண்ணும் அழைத்து வரப்பட்டாள், “அரண்மனையின் இந்த அழகு பொக்கிஷத்தை மன்னருக்காக மந்திரி அனுப்பினார்” என்றார்கள்.

அவள் கைவிரலில் அந்த மோதிரம் மின்னியது.

சாணக்கியன் தவசி, தவத்தால் மனதை அடைக்கியவன், ஆசைகளற்றவன், அவனின் நோக்கம் சனாதனம் வாழவேண்டும், தர்மம் வாழவேண்டும் எனப் பெரும் சிந்தனை கொண்டவன்.

அவன் ஆசைகள் அற்றவன், முழுத் தவசி, எப்போதும் தவம் தியானம் என மனதை பிரபஞ்சத்தில் வைத்திருப்பவன்.

எவனுக்கு மக்கள் மேலும் நாட்டின் மேலும் நல்ல தர்மத்தின் மேலும் அக்கறை அதிகமோ அவனிடம் துர்சக்திகள் கட்டுப்படாது, அம்மாதிரி தெய்வச்கதி மிக்க மனிதர்களுக்கு மூன்றாம் கண் விழித்துப் பிரபஞ்ச பெரும் சக்தி குவிந்திருப்பதால் எல்லாமும் அறிவார்கள்.

சாணக்கியன் அந்தப் பெண்ணின் கண்ணைக் கண்டான். அந்த விழிகளின் ஓட்டமும், உதடுகளின் மெல்லிய உதறலும் அவனுக்குள் சில சந்தேகங்களை எழுப்பின‌.

அதே நேரம் ஜீவசித்தி நடந்ததையெல்லாம் சொல்லி அந்த ஆபத்தை எச்சரித்து ஒரு தூதனை அனுப்பினான். ஆனால் அவன் வழியில் சிக்கிக் கொண்டான்.

“இந்த அழகான பெண் மன்னருக்குப் பரிசு” என அவளை சந்திரகுப்தன் இருந்த முகாம் நோக்கிக் கொண்டு செல்லப்படும் போது சாணக்கியன் சந்தேகித்தான்.

“அவளைத் தனியே அமர வையுங்கள். நான் சில கேள்விகளைக் கேட்க வேண்டும்”

அந்தப் பெண் மர்ம சிரிப்பு சிரிக்க ஆரம்பித்தாள், சாணக்கியன் அவளைக் கூர்ந்து பார்த்தான். அவள் தலைமேல் விஷ நாகம் ஒன்று தோன்றி மறைவதைக் கண்டு அதிர்ந்தான்.

(தொடரும்..)