சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 12

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 12

சாணக்கியன் அந்தப் பெண்ணை பார்த்தவுடனே அவளுக்குள் இருந்த நாகக்கன்னி தன்னை அடையாளம் காட்டிற்று, தவசிகள் முன் இப்படியான சக்திகள் கட்டுப்படும்.

முழுத் தவசிமுன் பிரபஞ்சத்தின் சூட்சுமச் சக்திகள் கட்டுப்படும், பக்குவப்பட்ட ஆன்மாவின் சக்தி முன் அப்படியான சக்திகள் அடங்கும். இது விதி.

ஆத்மாவின் சக்தி அது.

அப்படியான சாணக்கியன் முன் அந்த நாகக்கன்னி பணிந்தது, தான் யார் என்பதையும் தன்னை ஜீவசித்தி அழைத்த காரியத்தையும் சொன்னது.

சாணக்கியன் யோசித்தான். காரணம், அவன் அனுப்பிய தகவல் வரவில்லை, ஒருவேளை ஏதோ தவறாக நடக்கின்றதோ எனச் சிந்தித்தவன் அந்த நாகக்கன்னியோடு பேசினான்.

பொதுவாக இம்மாதிரி சக்திகள் சில சாபங்களைப் பெற்றிருக்கும், அந்தச் சாபங்கள் அல்லது தேவைகளுக்காக அலையும். அந்தத் தேவையினைப் யார் நிறைவேற்றுவார்களோ அவர்களுக்கு அது கட்டுப்படும், அவற்றைக் கண்டறியவும் அவற்றைக் கட்டுக்குள் கொண்டுவரவும் சில மந்திர உச்சாடனைகளும் பெரிய ஆத்மபலமும் அவசியம்.

அப்படி ஆத்மசக்தி மிக்கவர்கள் அதைக் கட்டுப்படுத்துவார்கள், அதற்கு விமோசனம் அளிப்பதாகச் சொல்லி வசப்படுத்தி அது சில காரியங்களைச் செய்தால் இவர்கள் அதைச் சாந்தப்படுத்தவோ, இல்லை வேண்டிய விடுதலையினைத் தரவோ உத்தரவாதம் தருவார்கள்.

இந்தக் கலைகளில் கரை கண்டவன் சாணக்கியன், அவன் அந்த நாககன்னியோடு மனதால் பேசினான், அது தனக்கு ஜீவசித்தி சில பரிகாரங்களைச் செய்யவும் அதற்குப் பிரதிபலனாக தான் இங்கே வந்திருப்பதையும் சொன்னது.

சாணக்கியன் குழம்பினான், இதை ஏன் ஜீவசித்தி தன்னிடம் சொல்லவில்லை, ஒருவேளை எங்கோ தவறு இருக்கலாம் என்பவன் அந்த மோதிரத்தை வாங்கிக் கொண்டு அந்த நாக கன்னியினைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நந்த வம்சத்துப் பெண்ணைப் பாதுகாப்பாக மறைத்துவைத்தான்.

கொஞ்ச நேரத்தில் ஜீவசித்தி அனுப்பிய ஓலை வந்தது, அப்பெண் தான் அனுப்பியவள் என்பதையும், சந்திரகுப்தனை அவளிடம் இருந்து காக்கும்படியும் கோரியிருந்தான் ஜீவசித்தி.

சாணக்கியனின் நிதானமும் கூர்மதியும் சந்திரகுப்தன் உயிரைக் காத்தது.

சாணக்கியன் இதனை வெளியில் சொல்லவில்லை, சில விஷயங்களை ரகசியமாக வைத்துக்கொள்ளல் வேண்டும், முடிந்துபோன விஷயத்தைச் சொல்லி வீண்பரபரப்பை ஏற்படுத்துவது ராஜதந்திரம் அன்று.

சாணக்கியன் ஆத்திரமானான். அவனுக்குள் இருந்த எரிமலை மீண்டும் வெடித்தது. “என் சபதத்தில் நான் வென்று சந்திரகுப்தனை அரசனாக்கும் நேரம் அவனைக் கொல்லும் அளவு சென்றுவிட்டார்களா?

விடமாட்டேன், சந்திரகுப்தன் என் ஆயுதம், இங்கே பௌத்தம் ஒழிய சனாதன தர்மம் வாழ, வேதம் வாழ நான் கண்டெடுத்து உபயோகிக்கும் ஆயுதம், அதை இழக்க அனுமதியேன்.

என்னிடமே வித்தைகாட்டினார்களா?, காட்டுகின்றேன் நான் யார் எனக் காட்டுகின்றேன், என் முகாமுக்குள் அவர்கள் வந்தால், அவர்கள் முகாமுக்குள் நானும் செல்வேன்” என மனதால் சீறினான்.

அவனுக்குள் சிந்தனைகள் ஓடின. போரில் நந்தர்களை வென்றால் பாதிராஜ்ஜியம் எனச் சொல்லி பர்வதேஸ்வரனை அழைத்துவந்து வெற்றியும் பெற்றாயிற்று.

ஆனால், பர்வதேஸ்வரன் நகர்வதாயில்லை. அவன் சேனைகளோடு இங்கேயே தங்கியிருக்கின்றான், பாதி ராஜ்ஜியம் பெற்றுக்கொள்ளும் பேச்சினையே தொடங்கவில்லை.

அவன் தன் நாட்டுக்கு ஏன் திரும்பவில்லை, இங்கே அவனுக்குப் பாதி நாம் சொன்னபடி தரவேண்டும் என்றாலும் அவன் ஏன் கேட்கவில்லை?

அவன் சேனைகளை வலுப்படுத்துகின்றான், அவன் தம்பிமார்கள் மலையகேது, வைரோகதன், தளபதி பாகு நாராயணன் என எல்லோருடனும் இங்கேதான் தங்கியிருக்கின்றான்.

இது ஆபத்து, பெரும் ஆபத்து. பர்வதேஸ்வரனிடம் ஏதோ திட்டம் இருக்கின்றது, அவனை ராஷசன் வேறு சந்திக்கும் செய்தி வருவது இன்னும் ஆபத்து.

நிச்சயம் பர்வதேஸ்வரன் பாய்வான், அவன் பாதிநாட்டோடு திருப்தி அடைபவன் அல்ல, அதுவும் மீதியினைத் தந்தாலும் நிம்மதியாக ஆளவிடமாட்டான். ஆயிரம் தொல்லை தருவான்.

நமக்கொரு ஆபத்து என்பதால் அழைத்துவந்தோம், இவன் நமக்காக அல்ல நந்தர்கள் பலமிழந்தாலும் இப்படித்தான் வந்திருப்பான்.

அவன் இப்போது பலமாக இருக்கின்றான், நந்தர்களுமில்லை என்பதால் அவனை எதிர்க்க இனி யாருமில்லை, அந்நிலையில் அவன் சுயரூபம் காட்டுவான்.

ஒரு அரசனை முழுக்க நம்பக்கூடாது, சிங்கத்தைப் போல அவனைக் கவனமாக கையாளவேண்டும் என்பது ராஜநீதி. காரணம், அவன் அதிகாரமுள்ளவன் வலுத்த சக்திகொண்டவன், அவனை யார் எதிர்ப்பது?

அவன் மனதில் உள்ளதை படிப்பவன் எவன்? எந்த அரசனை முழுக்க நம்பமுடியும்? ஒருகாலமும் முடியாது, பறவையின் நிழலும் அரசன் மனமும் கணிக்கமுடியாதவை.

அவனுக்குள் பலத்த விவாதங்கள் எழுந்தன, கடைசியில் அவன் ஆழ சிந்தித்தான்.

எதிர்தரப்பில் சகோதரர் மூவர். பர்வதேஸ்வரன், மலையகேது வைரோகதன். எந்த அரசகுடும்பம் என்றாலும் வாரிசு போட்டி, ஆளும் ஆசை வரும் இது நியதி.

பர்வதேஸ்வரன் இருக்கும் வரை இருவரும் அடங்கியிருப்பார்கள், அவனை அகற்றிவிட்டால் ஒன்று ஆளுக்கு சரிபாதியாக பிரித்து ஆளுவார்கள் இல்லை அவர்களுக்குள் மோதுவார்கள்.

நந்தர்களை அழிக்க பர்வதேஸ்வரனை அழைத்துவந்து இனி நரிக்கு தப்பி புலிவாயில் சிக்கக் கூடாது, இது அரசியல் அங்கு அவரவர் நலம் முக்கியமே தவிர தர்மம் என எதுவுமில்லை.

அறத்துக்கும், தர்மத்துக்கும் அப்பாற்பட்டது அரசியல். அது ஒரு போர், வலுத்தது வாழும் போர்.

இப்படியெல்லாம் ஆழச் சிந்தித்தவன் அந்த விஷக் கன்னியினை அழைத்தான், அதுவும் வந்து நின்றது.

“நாக கன்னிகையே நான் சொன்னதைச் செய்தால் உனக்கான பரிகாரங்களை நான் செய்கின்றேன்.

ஏற்கனவே ஜீவசித்தி என்னை வசப்படுத்தி அனுப்பியிருக்கின்றார், அவர் சொன்னதுதான் செய்யமுடியும், நான் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவள்.

ஆம். அவன் அந்தப் பெண்ணை யார் தொட்டாலும் நீ அவனைக் கொல்லும்படிதானே அனுப்பினான், ஆள் யார் எனச் சொல்லவில்லை அல்லவா?

ஆமாம். அவளைத் தொட்டவனைக் கொல்வதுதான் நான் அவனுக்குக் கொடுத்த உறுதிமொழி.

நல்லது. அவன் என் சீடன். நான் அவனுக்குக் குரு. நான் சொல்கின்றேன் நீ அப்பெண் உருவில் நான் சொல்லுமிடம் செல். அங்கு உன்னிடம் வருபவனைக் கொல், பின் உனக்கான பரிகாரங்களை நானே செய்து உனக்கு விடுதலை தருகின்றேன்.

நான் சக்திவாய்ந்த நாகக்கன்னி, சில சாபங்களால் இங்குச் சிக்கிக்கொண்டேன், என்னை மறுபடியும் நாகலோகத்துக்கு உன்னால் அனுப்பமுடியுமா?

நால்வகை வேதத்தில் கரைகண்டவன் நான், எல்லாச் சூட்சும சக்திகளையும் என்னால் வசப்படுத்த முடியும், உன் கர்மப்படி நான் உனக்கு உதவ முடியும், நீ எனக்கு உதவினால் உன் விடுதலைக்கு நான் உத்திரவாதம்”

அதன் பின் அந்த நாகக்கன்னி பணிந்தது. ஆனால் மானிட உருவில் சில நிமிடம் மட்டுமே தென்படமுடியும் எனவும் சொன்னது.

சாணக்கியன் சொன்னான், “கவலை வேண்டாம், இன்றிரவு பர்வதேஸ்வரனிடம் உன்னை அனுப்புவேன், அவன் மதுகுடித்து மயங்கியிருக்கும் நேரம் உன்னை அனுப்புவேன்.

அந்தச் சில நொடிகளில் நீ கொன்றுவிட்டு மறைந்துவிடு, நீ உள்ளே நுழைவதை எல்லோரும் பார்க்கும்படி வாசலை கடந்து செல்” என்றான்.

அதன்படி அவன் மாலை குடித்துக் களித்திருந்த நேரம் அந்த நந்தர்குலப்பெண் வடிவில் இந்த நாக தேவதை சென்றது, அதைக் கண்டவர்கள் மன்னனுக்கு அனுப்பப்பட்ட பெண் என வழமைபோல் இருந்ததார்கள், அப்பெண்ணின் பேரழகு அவர்களைச் சந்தேகம் கொள்ள வைக்கவில்லை.

பர்வதேஸ்வரன் அப்படி ஒரு அழகான பெண்ணை அதுவரை பார்த்ததில்லை என்பதால் மிக மயங்கினான், அவள் யார் எனக் கேட்கக்கூட விரும்பாத அளவு மயக்கம் இருந்தது, அருகில் வந்த அவளை அவன் தொட்ட நேரம் அப்படியே விழுந்தான்.

அங்கே விளக்குகள் அணைக்கப்பட்டன‌.

காலை பர்வதேஸ்வரன் செத்துக்கிடந்த செய்தி பெரும் அதிர்ச்சியாக பரவிற்று, அவன் கழுத்தில் நாகம் கடித்த குறியீடு இருந்தது, உடல் நீலநிறமாக மாறி இருந்தது, வாயில் நுரை தள்ளிய அடையாளம் இருந்தது.

மன்னன் இருக்குமிடம் காவல் நிறைந்தது, அங்கே நாகம் எப்படி வந்தது, அதுவும் கழுத்தில் எப்படி கடித்தது என யாருக்கும் புரியவில்லை.

ஆனால், ஒரே ஒருவனுக்கு புரிந்தது அது ராஷசன்.

அவன் அந்த நந்தர்குலப் பெண் எங்கே என அவசரமாக விசாரித்தான். அவளைக் காணவில்லை என்றதும் அவனுக்கு எல்லாம் விளங்கிற்று.

எங்கோ தவறு நடந்திருக்கின்றது, தன் திட்டம் சாணக்கியனுக்குக் கசிந்துவிட்டது. அந்தச் சாணக்கியன் தான் அனுப்பிய ஆயுதம் கொண்டே என் காவலை ஒழித்துவிட்டான்.

இனி என் நிலை மோசமாகும், மகாமோசமாகும். அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாது. பர்வதேஸ்வரனை இழந்த மலையகேது இனி என்னென்ன ஆடுவானோ தெரியாது.

இப்போதைக்கு நாம் பதுங்குவது நல்லது, குழப்பமான நேரத்தில் மொத்த குடும்பத்தோடு பதுங்குதல் தவறு. சிக்கிக்கொண்டால் மொத்தமாக காலியாகிவிடுவோம்.

அதனால் நாம் ஒருபக்கமும், குடும்பத்தாரை ஒரு பக்கமுமாக மறைத்தல் வேண்டும் என்றவன் அவசரமாகப் பரபரப்பானான்.

சாணக்கியன் தந்திரசாலி, அந்த நந்தர்குலப் பெண்ணை நான் சந்திரகுப்தனைக் கொல்ல அனுப்பினால், அவன் அவளைப் பர்வதேஸ்வரனிடம் அனுப்பி அவளைக் கொன்றுவிட்டான்.

இனி அவளின் மூலம் நான் என்றல்லவா மலையகேது தேடுவான்?

இந்தச் சாணக்கியன் எவ்வளவு பொல்லாதவன்? எவ்வளவு தந்திரசாலி, என்னையே இப்படி ஆபத்தில் தள்ளிவிட்டானே, இனி என் நிலை என்னாகும்?

என்னமும் ஆகட்டும். ஆனால் நான் சும்மா செல்லாமாட்டேன், பெரும் வலையினைப் பின்னிவைத்துவிட்டுத்தான் செல்வேன்.

அடேய் சாணக்கியா, உன் பலம் சந்திரகுப்தன் ஒருவனே, அவனைக் கொன்றுவிட்டால் உன் நிலை பல் பிடுங்கிய நாகம்.

எனக்கென்ன நான் எங்கும் நுழைந்து யாரையும் வசப்படுத்துவேன், என் நிலை வேறு. ஆனால், நீ அப்படியா சந்திரகுப்தன் இல்லையென்றால் உன்னை எவன் சீண்டுவான்?

நான் பதுங்கப் போகின்றேன். ஆனால், வேடன் போல வலை பின்னிவிட்டு காத்திருக்கப் போகின்றேன், என் திட்டத்தில் நீ சிக்குவாய் , அப்போது நான் மீண்டும் வருவேன்”

என்றவன் தாருவர்மன், சகட தாஸ், சந்தன தாஸ் என தன் நண்பர்களை அழைத்தான், அவர்கள் அவனுக்கு நம்பிக்கையானவர்கள்.

“நண்பர்களே, நான் எதிர்பாரா ஆபத்தில் சிக்கிக்கொண்டேன், இப்படி நடக்கும் என ஊகித்து அதற்குரிய முன்னேற்பாடுகளையும் செய்தேன்.

தாருவர்மா, சகட தாஸா உங்களுக்கு இதோ நிறைய பொன்னும் பரிசும் தருகின்றேன், உங்கள் வேலை இங்கே முடிசூடவரும் சந்திரகுப்தனை எப்படியாவது கொன்றுவிடுவது, அது நடந்தால் நான் ஆபத்தின்றி வருவேன். பின் இந்த அரசாங்கமே நம் கையில் பின் உங்களுக்கு ராஜவாழ்வுதான்.

சந்திரகுப்தனுக்கு யார் உண்டு? கொன்றுவிட்டால் போதும் விசாரணையுமில்லை, வழக்குமிலை. கூடுதலாக எதிர் நாட்டின் சகாயமே கிடைக்கும். மனதில் வையுங்கள்.

சந்தன தாஸா, நான் தலைமறைவாகின்றேன், நீ என் மனைவியினையும் குடும்பத்தாரையும் கவனமாகப் பார்த்துக்கொள், நான் திரும்ப வரும்போது ஒப்படைத்துவிடு”

சொன்னவன் அவர்களுக்கு நிரம்ப பொருள் கொடுத்து அனுப்பிவைத்தான், அவன் குடும்பம் சந்தன தாஸனிடம் அடைக்கலமானது.

இந்த நண்பர்கள் வியாபாரிகள், ரத்தினம் முதல் எல்லா வியாபாரமும் அவர்களுடையது. வியாபாரிகளுக்கு அரசன் தயவு அல்லது அவனைக் கட்டுக்குள் வைக்கும் வாய்ப்பு முக்கியம், அதனால் ஒப்புக்கொண்டார்கள்.

ராஷசன் இன்னும் பரபரப்பானான், நேரே ஜீவசித்தியிடம் சென்று “ஐயா நாம் மோசம் போய்விட்டோம். நாம் அனுப்பிய விஷக் கன்னிகை பர்வதேஸ்வரனையே கொன்றுவிட்டாள்.

இனி நாம் சிக்கிக்கொள்வோம், நீங்கள் எனக்கு முக்கியம், நான் சுரங்கப்பாதை வழியாக உங்களை அழைத்துச் செல்கின்றேன். காரணம், இங்கு நீங்கள் இருந்தால் கொன்றுவிடுவார்கள், சாணக்கியனுக்குப் பௌத்தன் ஆகாது.

அதனால் நீங்களும் தப்பிவிடுங்கள், நான் சொல்லுமிடத்தில் குடில் அமைத்து ஒன்றும் அறியாதவர் போல் இருங்கள், உரிய நேரம் நான் உம்மிடம் வருவேன்” எனச் சொல்லி அவனையும் அவசரப்படுத்தினான்.

இப்படியாக அவன் தப்பிச் சென்றான், அவனோடு சுரங்கப்பாதை வழியாக ஜீவசித்தியும் ஒன்றுமறியாதவர் போல் சென்றார். ஆனால், தகவலை சாணக்கியனுக்குக் கடத்தினான்.

இது ஒருபுறம் நடக்க மலைய கேது தன் அண்ணன் செத்த சோகத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தான். என்ன ஆனாலும் இந்தப் பாதகம் எப்படி நடந்தது? சதியா விபத்தா எனக் கொந்தளித்துக் கொண்டிருந்தான்.

அப்போது சாணக்கியன் வந்தான், ஆவேசமாக வந்தான்.

“மலையகேது, நான் மிகுந்த குழப்பத்திலும் ஆத்திரத்திலும் உள்ளேன். இது எப்படிச் சாத்தியமாயிற்று என்பதை அறிவேன், ஒரு பெண் வந்ததை உன் ஆட்கள் எல்லோரும் பார்த்திருக்கின்றார்கள், அவள் நந்தன் வீட்டு அழகு பெண் போல் இருந்திருக்கின்றாள்.

அவள் வந்தபின்பே உன் அண்ணன் இறந்திருக்கின்றான் என்றால் இதில் சந்தேகிக்க என்ன இருக்கின்றது. நந்தர் அரண்மனையில் இருந்தவள் எப்படி அங்கே வந்தாள்? யார் அனுப்பினார் என்பதை யோசித்துகொள்.

இது ராஷசன் வேலையன்றி யார் வேலையாக இருக்க முடியும்?

அவனைப் பிடித்து விசாரி உண்மை தெரியும், நான் என் ஆட்களை ஏவியிருக்கின்றேன், நீ உன் ஆட்களை அனுப்பி அவனைத் தேடு.

நந்தர்கள் எனும் தன் எஜமானை கொன்றவனை அந்த ராஷசன் தந்திரமாக விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டான் அவனை விடாதே” என உரக்கச் சொன்னான்.

அவ்வண்ணமே படைகள் ராஷசனை சல்லடைபோட்டுத் தேடின. கடைசியில் அவன் மனைவி மக்களுடன் அவன் மாயமாகிவிட்டான் என வந்தார்கள்.

“அவன் தப்பித்துவிட்டான். கொடியவன், இனி நீ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்” எனச் சொல்லிவிட்டு வந்துவிட்டான் சாணக்கியன்.

மலையகேது நிறைய குழம்பிப் போனான், அப்படிக் குழம்பியவனை இன்னும் குழப்ப அவன் தளபதி பாகுராயன் என்பவனைப் பயன்படுத்தினான் சாணக்கியன்.

அவனைத் தனியே அழைத்து “பாகுராயா, இது எங்களுக்கும் நந்தர்களுக்குமான பிரச்சினை, இங்கே உதவவந்த இடத்தில்தான் உங்கள் மன்னர் இப்படிப் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இங்கு ஏதோ பெரியசதி நடக்கின்றது, நான் பர்வதேஸ்வரனுக்கு இங்குப் பாதிராஜ்ஜியம் தர இப்போதும் சம்மதிக்கின்றேன். அது வேறு விஷயம்.

ஆனால், இங்குப் பாதுகாப்பில்லை, கடும் காவலில் இருந்த பர்வதேஸ்வரனையே அவன் கொன்றுவிட்டான் என்றால் மலையகேது நிலை என்ன?

உன் அரசனைக் காப்பது உன் கடமை அல்லவா? அதனால் நீ அவனை உன் தேசத்துக்கு பத்திரமாக அழைத்துச் செனறுவிடு, அதுதான் நல்லது.

அப்படியே என்னோடும் தொடர்பில் இரு, நீ சுத்தமான வீரன், மாவீரன். உண்மையில் உன் வீரத்துக்கும் நீ இருக்கவேண்டிய இடமே வேறு. ஆனால், அரசனை மீறி என்ன செய்யமுடிய்ம்?

என் ஆட்சி இங்குவரட்டும் எப்படியும் பாதிராஜ்ஜியம் உங்களுக்குத்தான். அதனால் நீ இங்கு வரவேண்டி இருக்கும், நான் உன்னைப் பெரிய அதிபதி ஆக்குவேன்” எனத் தூண்டிலை வீசினான்.

அந்த வலையில் விழுந்தான் பாகுராயன்.

பின் அவன் எச்சரித்தபடி மலையகேது தன் உயிருக்கு அஞ்சி தன் தேசம் திரும்பினான். வைரோகதன் மட்டும் பாடலிபுத்திரத்தில் இருந்தான்.

சாணக்கியன் நிமிர்ந்து சொன்னான், “இனிதான் பட்டாபிஷேகம் நெருங்குகின்றது, அத்தோடு மலையகேதுவும் வைரோகதனும் பிரிந்து மோதிக்கொண்டால் போதும், ஏன் பாதிநாடு கொடுக்கவேண்டும்?”

அவன் சிந்திக்கத் தொடங்கி, சிரிக்கத் தொடங்கினான், அதே நேரம் தாருவர்மனும் சகடதாஸனும் சந்திரகுப்தனைக் கொல்லத் தேடி அலைந்தார்கள், ஜீவசித்தி தன் வேடத்தில் தொடர்ந்தான்.

உயிர்தப்பிய ராஷசன் மலையகேது தன் நாடு சென்றுவிட்டான் என அறிந்து அடுத்த தந்திரத்தை அரங்கேற்றத் தொடங்கினான்.

(தொடரும்..)