சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 17

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 17

ராஷசன் மனைவியிடம் இருந்து தன் உளவாளி அடித்து வந்த மோதிரத்தை வைத்தபடி என்னென்ன செய்யலாம் என ஆழ்ந்த ஆலோசனையில் இருந்தான் சாணக்கியன்.

பொதுவாக அவன் சந்திரகுப்தனின் அரசவைக்கு அடிக்கடி செல்வதில்லை. முக்கிய கூட்டம் என்றால் செல்வான், அங்கும் அதிகம் பேசமாட்டான், நடப்பதை கவனித்துக் கொண்டே ஒரு புன்னகையினைச் சிந்திவிட்டு நகர்ந்துவிடுவான்.

எல்லோரும் ஒருசேர ஆலோசனை கேட்டால் சில விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்வான், மற்றபடி அவனை அவையில் அடிக்கடி காணமுடியாது.

அவனுக்கென ஒரு மாளிகை இருந்தது, அங்கேதான் அமர்ந்து சிந்திப்பான். அடிக்கடி காணாமலும் போவான்.

அந்த மண்டபத்தின் ஆசனத்தில் அவன் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான், ராஷசனின் ஆபத்தை எப்படி முறியடிப்பது எனக் கடுமையாக சிந்தித்துக் கொண்டிருந்தபோது, பர்வதேஸ்வரனின் நகைகள் எனச் சிலவற்றை ஆட்கள் கொண்டுவந்தார்கள். அவற்றை என்ன செய்யலாம் எனக் சந்திரகுப்தன் கேட்டு அனுப்பியிருந்தான்.

பர்வதேஸ்வரனை அந்த மாய நாககன்னி மூலம் கொல்லும் போது கிடைத்த நகைகள் அவை.

அவை அரசனின் நகைகள் என்பதால் அவற்றைத் தானம் செய்தல் அதுவும் பிராமணருக்குத்தான் தானம் செய்ய வேண்டும் என்பது மரபு. காரணம், அன்றைய மரபுப்படி அரசன் தெய்வத்துக்குச் சமானம். மேற்கொண்டு அரசன் அணிந்திருக்கும் நகைகளெல்லாம் சூட்சுமமான சக்திகள் கொண்டவை, அவற்றைச் சாமானியருக்குக் கொடுக்கக் கூடாது என்பதால் வேதம் அறிந்தோருக்குத்தான் கொடுக்க வேண்டும்.

அதைக் கண்டதும் சாணக்கியனுக்கு ஒரு யோசனை தோன்றிற்று.

“இவைகளைப் பத்திரமாக வைக்கச் சொல்லுங்கள், நான் நாட்டின் சிறந்த பிராமணர்களை அனுப்புகின்றேன், அவர்களிடம் கொடுக்கச் சொல்லுங்கள்” எனச் சொல்லி அனுப்பிவிட்டு சில பிராமணர்களை வரவழைத்தான்.

சாணக்கியனுக்குப் பரிட்சயமான விஸ்வாஸ் என்பவன் தலைமையில் சிலர் வந்தார்கள், அவர்களிடம் அந்த நகைகளைக் கொடுத்துச் சொன்னான் சாணக்கியன்.

“நீங்கள் இந்த நகைகளைப் பற்றி அறிவீர்கள், மன்னனின் நகைகளை வைத்திருப்பது நல்லதல்ல என்பதை சாஸ்திரம் அறிந்த நீங்கள் தெரிந்திருப்பீர்கள்?

பிராமணர்களின் ஆறு கடமைகளில் ஒன்று தானம்பெறுதல் மற்றும் கொடுத்தல். இந்த நகைகளைத் தானமாக பெறும்போது தோஷம் உங்களை ஒட்டும். அந்தக் கர்மத்தைப் பல பூஜைகள், தானங்கள் மூலம் நீங்கள் தீர்க்க வேண்டும் என்பது விதி.

இந்த நகைகளை நீங்கள் ராஷசனிடம் கொண்டு சென்று அவனைத் தனிமையில் சந்தித்து நல்லவிலைக்கு விற்றுவிட்டு தர்மகாரியங்களைச் செய்யுங்கள். பிராமணன் தனக்கென ஒன்றும் வைத்துக்கொள்ள முடியாது என்பதால் அந்தப் பொருள் நிச்சயம் நல்ல காரியத்துக்கே செல்லும்” எனச் சொல்லி அனுப்பினான்.

அவர்களை அவன் ஏன் ராஷசனிடம் அனுப்பினான் என்பதை அவர்கள் அறியவில்லை. சாணாக்கியன் திட்டத்தை தன்னோடு வைத்துக் கொண்டான்.

அவர்கள் சாணக்கியன் கட்டளைப்படி எல்லை கடந்து மலையகேது தேசம் சென்றார்கள். அங்கு ராஷசனை சந்தித்தார்கள், அவன் அந்த நகைகளைக் கண்டு நல்ல விலைக்கு வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டான்.

விஷயம் சாணக்கியனுக்குத் தெரிவிக்கப்பட்டது .அவன் புன்னகைத்தான்.

பின் சாணக்கியன் மேலும் ஓர் உபாயத்தில் இறங்கினான். தன் ஆளாக சகடதாஸனைக் கண்காணிக்கும் சித்தார்த்தனை வரச்சொன்னான், சகடதாஸனை முழுக் கண்காணிப்பில் இந்தச் சித்தார்த்தன் கொண்டுதான் அவன் வைத்திருந்தான்.

சித்தார்த்தனிடம் ஒரு கடிதம் காட்டினான் சாணக்கியன், ஓலையில் எழுதப்பட்ட அக்கடிதம் தாறுமாறான எழுத்தை கொண்டிருந்தது.

அதைக் காட்டி “சித்தார்த்தா, இந்தக் கடிதத்தைப் பார், கொஞ்சம் முக்கியமான கடிதம். ஆனால், எனக்கு எழுத்து அழகாக வராது, அந்தச் சகட தாஸனின் கையெழுத்தில் இந்தக் கடிதத்தை எழுதி வாங்கி வா” எனச் சொல்லி அனுப்பினான்.

(அக்காலத்தில் எழுதப்படிக்க தெரிந்தோர் குறைவு, தொலைவில் வசிக்கும் குடும்பங்ங்கள், வியாபாரிகள் திருப்பயணமாக‌ தூரதேச மடங்களுக்குத் திருப்பயணமாக செல்வோர் இப்படித் தங்கள் கருத்தைக் கடிதமாக எழுதி வாங்குதல் உண்டு. அதற்கு கூலியும் உண்டு.

இதெல்லாம் அன்றே இருந்தது, பிரிட்டிஷார் வந்துதான் அஞ்சல் முறையினைத் தந்தனர் என்பதெல்லாம் புரட்டு.

இந்தியாவில், சீனாவில் இவ்வழக்கம் இருந்தது. சீன மன்னன் இதை இன்னும் குதிரைகள் மூலம் மக்களுக்கான அஞ்சலாக மாற்றியிருந்தான்.

அதைத்தான் அவனிடமிருந்து பிரிட்டிஷார் கைப்பற்றி தங்கள் நாட்டில் வளர்த்தனர், பின் இந்தியாவுக்கும் வந்தது.

அஞ்சல் போக்குவரத்து, செய்திபரிமாற்றம் மன்னர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் அன்றே இருந்தது. )

சித்தார்த்தன் அப்படியே சாணக்கியன் குறிப்பினை சகடதாஸனின் கையெழுத்தில் வாங்கி வந்தான், அந்த ஓலையில் தான் கைவசம் வைத்திருந்த ராஷசனின் முத்திரை மோதிரம் கொண்டு முத்திரையிட்டான்.

இனி அது சகடதாஸனே எழுதிய ஓலையாக கருதப்படும்.

அந்த ஓலையினைச் சித்தார்த்தனிடம் கொடுத்து, புன்னகைத்தபடியே சொன்னான் சாணக்கியன்.

“சித்தார்த்தா, பௌத்தர் தலையெடுக்காமல் இந்த மகதராஜ்ஜியம் பூரண சனாதன ராஜ்ஜியமாக நிலைக்க, பௌத்த கிரேக்க மிரட்டலை முறியடிக்க இதனைச் சனாதானதர்ம அரசாக வலுவாக்க நாம் செய்யும் காரியங்ளை அறிந்து எம்மோடு இருக்கின்றாய்.

நாம் இன்னும் முழுவெற்றி அடையவில்லை, அந்த ராஷசன் எதிரிகள் முகாமில் இருப்பதால் ஆபத்து தொடர்ந்துகொண்டே இருக்கின்றது, அவனை முழுக்க முடக்க வேண்டும்.

இப்போது நான் உனக்கு ஒரு விஷயம் சொல்கின்றேன், மிகுந்த ரகசியத்துடன் அதனைச் செய்யக்கடவாய்.

நாளை சகடதாஸனை பிடித்துச் சில குற்றச்சாட்டுக்களைச் சொல்லி அவனைக் கொலைகளத்துக்கு அனுப்புவோம், கொலையாளிகள் அவனைக் கொல்லாமல் காலம் தாழ்ந்த்துவார்கள்.

நீ அப்போது அவனைக் காப்பது போல் சிலரோடு வரவேண்டும், கொலையாளிகள் உன்னிடம் போராடுவது போல் நடிப்பார்கள். ஆனால், உன்னைத் தாக்கமட்டார்கள்.

நீ உன் நண்பனைக் காப்பது போல காப்பாற்றிச் சென்று ராஷசனிடம் அடைக்கலமாகிவிட வேண்டும்.

பின் உரிய நேரம் நான் சொல்லும் போது இந்தக் கடிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வா, அப்படியே அவனிடம் சில மலையகேதுவின் நகைகள் இருக்கும், அதையும் எடுத்துக் கொண்டு நீ இங்குத் திரும்பி வரவேண்டும்.

இதுபற்றிய முழுவிவரமும் அப்போது உனக்குத் தெரியவரும், இப்போதைக்கு இதைமட்டும் தெரிந்துகொள்.

நாளை நீ எங்கும் செல்லவேண்டாம். நம்பகமான ஆட்களைத் திரட்டிவை. அதே நேரம் ரகசியம் உன்னோடு மட்டும் இருக்கட்டும். செய்தி உன்னை அடையும் போது பாய்ந்து வந்துவிடு” எனச் சொல்லி பொருளும் கொடுத்து அனுப்பினான்.

மறுநாள் அதிகாலையே சகடதாஸனை விசாரணைக்காக இழுத்து வந்தார்கள். சந்திரகுப்தனே மன்னன் என்பதால் தீர்ப்பை அவனே சொல்ல வேண்டும், சாணக்கியன் அவையில் அமைதியாக வீற்றிருந்தான்.

சகடதாஸன் விலங்கிட்டு நிறுத்தப்பட்டிருந்தான், அவன் மேல் குற்றம் சாட்டப்பட்டு விவாதம் நடந்தது, அவனோ தன் மேல் தவறில்லை என வாதிட்டுக் கொண்டிருந்தான்.

சாணக்கியன் இரு கைகளையும் சேர்த்து ஏதோ குறிப்பால் சொல்ல சந்திரகுப்தன் குறுக்கிட்டு சொன்னான்.

“நீ செய்தது ராஜதுரோகம், மலையகேதுவிடம் இருக்கும் ராஷசனின் ஆள் நீ, இங்கு நடந்த பல குழப்பங்களுக்கும் சதிகளுக்கும் முக்கியமானவன் நீ.

உன்னை விசாரிப்பதோ, பேசிக்கொண்டிருப்பதோ அவசியமற்ற ஒன்று. உன்னைப்பற்றிய எல்லாத் தகவலும் உளவுப்படை மூலமாக சமூகத்தை அடைந்துவிட்டது.

நீ மன்னிப்பு கோரினாலும் கோராவிட்டாலும் உனக்குச் சிறை இல்லை, மரணம் தான் உனக்கான தண்டனை” என்றவன் அவனை இழுத்துச் செல்ல உத்தரவிட்டான்.

“ராஷசனுக்கும் எனக்கும் தொடர்பில்லை, அவன் இல்லா இங்கே நான் என்ன செய்துவிட முடியும், ஏதோ ஒரு காலம் அவனோடு பழகினேன். அதற்கு இப்போது மரண தண்டனை என்றால் எப்படி, என்னை வாழவிடுங்கள், என்னைக் கொல்லாதீர்கள், உயிர்பிச்சை இடுங்கள்” எனக் கதறிக்கொண்டே சென்றான்.

யாரும் அவனை ஏறேடுத்துப் பார்க்கவில்லை.

கொலைக்களத்திற்கு அவன் பலத்த காவலுடன் கொண்டு செல்லப்பட்டான், இனி அவன் தலையினை வெட்டவேண்டியதுதான் மீதம் இருந்தது.

அவன் கால் கைகளில் விலங்கிடப்பட்டிருந்தது, அவன் எவ்வளவோ கதறியும் கத்தியும் கொஞ்சமும் பலனில்லை, கசாப்பு கடையின் ஆடுபோல் நின்று கொண்டிருந்தான்.

மரணபயம் முழுமையாக அவனை ஆட்கொண்டிருந்தது, கண்களில் மிரட்சி, உலர்ந்த நாவு, கலங்கிய மனம், என்ன நடக்கின்றது என்று கூட சுதாரிக்க முடியாத சூழல் என அவன் நிலைகுலைந்தான்.

அவன் கழுத்தை பிடித்துப் பலகையில் வைத்து அவன் கதறி, கலங்கிக் கிடக்க, இனி எல்லாம் முடிந்தது என அவன் சோர்ந்து கிடக்க, கொலையாளி வாளை ஓங்கியபோது “என் நண்பனைச் சாகவிடமாட்டேன்” எனப் பாய்ந்து வந்தான் சித்தார்த்தன்.

கொலையாளிகள் வாளை சகடதாஸன் மேல் பாய்ச்சாமல் கீழே இறக்கினார்கள். பெரும் சண்டை உண்டாயிற்று. விலங்கை அடித்து உடைத்து சகடதாஸனை சுதாரிக்கச் செய்து வீரர்களுடன் சண்டையிட்டு மின்னல் வேகத்தில் அவனோடு தப்பினான் சித்தார்த்தன்.

மரணத்தின் வாசலில் இருந்து மீண்ட சித்தார்த்தன் உயிரைக் கையில் பிடித்தப்படி சித்தார்த்தனோடு விரைந்தான். கோட்டை வீரர்கள் மிகச் சம்பிரதாயமான எதிர்ப்பை காட்டினார்கள்.

மிகக் குறைவான வீரர்கள் உள்ள வழியே தப்பிச் செல்வதைப் போல் தப்பிச் சென்றனர் இவர்கள், அவர்கள் செல்வதை யாரும் அறியாதவாறு பார்த்துப் புன்னகைத்தான் சாணக்கியன்.

சாணக்கியனின் ரகசிய கரங்கள் இருந்ததால் மிக ரகசியமாக சகடதாஸன் மலையகேது நாட்டுக்குச் சென்றான், அங்கே ராஷசன் அவனைக் கட்டித் தழுவி வரவேற்றான்.

அவனிடம் சொன்னான் சகடதாஸன் “ராஷசா, இவன் என் உயிர்த்தோழன், உயிர்காத்த தோழன், சாணக்கியனால் நான் கொல்லப்பட இருந்தபோது தன் உயிரைப் பொருட்படுத்தாமல் என்னோடுதான் சாவேன் அல்லது வாழ்வேன் எனச் சவால் எடுத்து என்னைக் காத்தான்.

நண்பா, நான் உன் முன் நிற்க இவனே காரணம், என் உயிருள்ள வரை இவனை இனி நாம் மறக்கமுடியாது” என்றான்.

“என் நண்பனுக்கு இரண்டாம் உயிர் கொடுத்த நீ அவன் தகப்பன் அல்லவா?” என அவனைத் தழுவிக் கொண்டான் ராஷசன்.

இங்கே காட்சிகள் இப்படி நடக்க அங்கே தன் தளபதி புத்ரபட்டன் என்பவனோடு அடுத்த நாடகத்தை அரங்கேற்ற திட்டமிட்டுக் கொண்டிருந்தான் சாணக்கியன்.

‘புத்ரபட்டனே, நான் உன்னைக் கொண்டு சில காரியம் செய்ய இருக்கின்றேன், நம்மிடம் இருந்து தப்பிப் போன சகடதாஸனை முன்னிட்டு உன்னிடம் அவையில் அரசன் கடுமையாக நடந்துகொள்வான்.

நீ அப்போது சில தினங்களில் சகடதாஸனைப் பிடித்துவருவதாக சொல்லி உன் தளபதிகள் சிலரை அழைத்துக் கொண்டு மலையகேது நாட்டுக்குச் சென்று இங்கே உன்னை மிக மோசமாக நடத்தினார்கள் எனச் சொல்லி ராஷசனோடு இரு, அங்கே இருந்து அவர்கள் படைபலம் இதர விஷயம் அறிந்துகொள்.

நான் சொல்லும்போது திரும்பிவந்துவிடு” எனச் சொல்லி அனுப்பினான்.

மறுநாள் இந்தத் திட்டத்தை அரங்கேற்ற வேண்டும் என அவன் நினைத்துக் கொண்டிருந்தபோதே ராஷசனின் இன்னொரு கூட்டாளியும், அவன் மனைவிக்கு அடைக்கலம் கொடுத்தவனுமான சந்தனதாஸன் சுதாரித்தான்.

சாணக்கியனின் அடுத்த குறி தான் என்பதையும், எந்நேரமும் அவன் தன்னைப் பிடிப்பான் என்பதையும் அறிந்தவன், தான் சிக்கினாலும் ராஷசன் குடும்பம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அவன் மனைவி பிள்ளைகளைத் தன் நண்பன் தனசேனனிடம்் ஒப்படைத்து என்ன நடந்தாலும் இவர்களைக் காக்கவேண்டும் எனச சத்தியம் வாங்கிக் கொண்டான்.

அப்படி அவனிடம் அவர்களைப் பத்திரப்படுத்தி விட்டு ஒன்றுமறியாதவன் போல் அமர்ந்து கொண்டான்.

சாணக்கியனின் அடுத்த இலக்கு சந்தனதாசனாக இருந்தான். ஆட்களை அனுப்பி அவனையும், அவன் அடைக்கலத்தில் இருந்த ராஷசன் குடும்பத்தையும் பிடித்துவர ஆட்களை அனுப்பினான் சாணக்கியன்.

சாணக்கியனின் ஆட்கள் விரைந்து வந்து அவன் வீட்டைச் சூழ்ந்து அவனைப் பிடித்தபோது ராஷசன் குடும்பம் அங்கே இல்லை.

அவனை அரண்மனைக்கு இழுத்துச் சென்றார்கள். சாணக்கியன் தான் தாமதித்துவிட்டதை உணர்ந்தான். ஒரே நேரத்தில் இருவரையும் பிடித்திருக்கவேண்டுமோ? ஒருவேளை இந்த அவகாசத்தில் ராஷசன் குடும்பம் தப்பிவிட்டதோ? எனச் சிந்தித்தவன் அவனை உற்றுநோக்கினான்.

தன் நண்பனின் குடும்பத்தைக் காப்பாற்றிவிட்டோம் எனும் நிறைவில் சந்தனதாசன் சாணக்கியனைப் பார்த்தான்.

சாணக்கியன் தன் விசாரணையினைத் தொடங்கினான்.

(தொடரும்..)