சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 18

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 18

சந்தனதாஸனிடம் சாணக்கியன் விசாரணையினை இறுக்கமான முகத்துடன் தொடங்கினான்.

“அந்த ஏமாற்றுக்காரன் ராஷசனின் ரகசிய ஆளான சந்தனதாஸனே, இந்த நாடு உங்களால் மிகுந்த குழப்பம் அடைந்திருகின்றது, ராஷசனை நாங்கள் தேடும் நேரம் அவன் மனைவி, மக்களுக்கு நீ அடைக்கலம் கொடுத்திருக்கின்றாய்.

அது பெரிய குற்றம். இராஜதுரோகம். இப்போது நீ அந்த ராஷசனின் மனைவி மக்கள் இருக்குமிடத்தை சொன்னால் உன் குற்றம் குறையும், விடுதலை சாத்தியமாகும், அதனால் சொல்லிவிடு” என்றான்.

“சாணக்கியரே அவர்கள் என்னிடமில்லை, என்னைக் கொன்றுபோட்டாலும் உங்களுக்கு வேண்டிய எதுவும் என்னிடமிருந்து கிடைக்காது, அதனால் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள், நான் முடிவினை உணர்ந்தே இருக்கின்றேன்” என்றான் சந்தனதாஸன்.

அவனை உற்று நோக்கிய சாணக்கியன் அவனைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டான், சந்தனதாஸன் சிறையில் பெரிய கொடுமை செய்யப்படுவதாக தகவல்களை சாணக்கியன் கசியவிட்டான்.

அது ராஷசனை அடைந்து அவன் பெரிய மன உளைச்சலுக்கு ஆளானான். அவன் கவலை அவன் குடும்பத்தாரை பற்றியதாக இருந்தது. ஆனால், அவர்கள் இன்னும் சிக்கவில்லை என்பதில் கொஞ்சம் ஆறுதலாக இருந்தான்.

ராஷசனின் ஆட்களை முழுக்க வேட்டையாடுவது போல் சாணக்கியன் காட்டிக் கொண்டிருந்தான், அவனின் போக்கு வித்தியாசமாய் இருந்தது, சந்திரகுப்தனால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

குருவின் மனதில் என்ன இருக்கின்றது என்பதைச் சீடன் கேட்கக் கூடாது. அதை அறிந்துகொள்ள முயற்சிக்கவும் கூடாது என்பதால் அமைதி காத்தான்.

சாணக்கியன் அவன் குழப்பம் கண்டான், தன் சீடனின் முகத்தில் ஏற்படும் குழப்பம் கண்டு அதன் குறிப்பை அறிபவனே நல்ல குரு.

அவன் சொன்னான், “சந்திரகுப்தா என்ன பார்க்கின்றாய்? ராஷசனைக் கொன்றுபோட வாய்ப்பு பல இருந்தும் ஏன் இப்படி நாடகம் ஆடுகின்றேன் என யோசிக்கின்றாயா?

நான் அவனை அந்த மலையகேது ராஜ்ஜியத்தில் இருந்து அப்புறம் அகற்றிப்போட பார்க்கின்றேன், அவன் அங்கே மிகப்பாதுகாப்பாய் சௌகர்யமாய் இருக்கின்றான், ராஸசன் போன்றவர்கள் அங்கே இருப்பது நமக்கு ஆபத்து, அவன் நிச்சயம் புத்திசாலி அப்படியானவன் எதிரியிடம் இருப்பது நமக்குப் பெரும் ஆபத்து.

அதனால் நம் நம்பிக்கைக்குரிய ஆட்களை நான் அனுப்பியிருக்கின்றேன், அவர்கள் அவனைச் சூழ்ந்திருந்து நேரம் பார்த்து அவனை அசைத்து தூக்கிவருவார்கள்.

சந்திரகுப்தா நாம் அவனை ஏன் கொல்லவில்லை என்றுதானே நினைக்கின்றாய்?

வீரர்கள் முரடர்களைக் கொல்வது போரில் தர்மம். ஆனால், அறிவாளிகளைக் கொல்வது பாவம். அறிவாளிகள் புத்தி கூர்மை உடையவர்கள் தங்கத்துக்குச் சமம். அவர்களின் சிந்தனையில் மாற்றம் வரவேண்டுமே தவிர கொல்ல எண்ணுதல் கூடாது, அறிவாளிகள் எப்போதும் கிடைக்கமாட்டார்கள்.

இந்த ராஷசனை நமக்குத் தொல்லையில்லா வகையில் மாற்றிவிட்டால் போதும், என்றேனும் ஒருநாள் அவன் மனம் மாறலாம். ஆனால், அறிவு மாறாது.

இன்று குழப்பமான அல்லது ஆசைமிகு மனதால் அவன் அட்டகாசம் செய்யலாம், நாளை மனம் மாறிவிட்டான் என்றால் அவன் அறிவு எல்லோருக்கும் பயன்படும், அறிவாளி கிடைப்பது அபூர்வம் சந்திரகுப்தா.

அவனை எதிரியிடம் இருந்து அகற்றி அவனை வேறு இடத்திற்கு அனுப்ப வேண்டும், மலையகேது நம்மேல் பெரும் வன்மத்தில் இருக்கும் நேரம், ராஷசன் எனும் எதிரியும் அவனோடு இருத்தல் நல்லதல்ல‌.

இதனால் நம் ஆட்களை அனுப்பியிருக்கின்றேன், இன்னும் அனுப்புவேன்.

சந்திரகுப்தா, நம் ஆட்களையும் நான் சாதாரணமாக அனுப்பவில்லை, அவர்கள் குடும்பத்தார் முதல் பல விஷயங்களை நம் கையில் வைத்துக்கொண்டுதான் அனுப்புகின்றேன், அப்பொழுதுதான் இவர்களைக் கட்டுப்படுத்த நமக்கும் பிடி கிடைக்கும், அரசியலில் யாரையும் முழுக்க நம்புவது ஆபத்து.

இப்போது சகடதாஸன், சித்தார்த்தன், நம் தளபதிகள் உள்ளிட்ட சிலரை ராஷசனிடம் அனுப்பியிருக்கின்றேன். இன்னும் அனுப்பவேண்டியவர் உண்டு, அதன் பின் நாம் செய்யவேண்டியவற்றை உனக்குத் தெரிவிப்பேன்” என்றவன் நீண்ட ஆலோசனையில் இறங்கினான்.

பின் தன் ஆட்களில் முக்கியமானவனை அழைத்து “எல்லாம் தயாரா?” எனக் கேட்டான். “நாளை காலையில் அரண்மனை அவையில் எல்லாமே சரியாக இருக்கும்” என அவன் சொல்ல சாணக்கியன் உத்தரவு கொடுத்தான்.

மறுநாள் காலை அவையில் சாணக்கியனின் நண்பனும், ஜீவசித்தி எனும் பெயருடையவனுமான அந்த இந்து சர்மா நிறுத்தப்பட்டான், அவனை நோக்கி கத்தத் தொடங்கினான் சாணக்கியன்.

“ஏ ஜுவசித்தி, ராஷசனை கைப்பாவையாகக் கொண்டு இங்கு எல்லா அதர்மங்களையும் நீயே செய்திருக்கின்றாய்.

புனிதமான சனாதனதர்மததை ஒழித்துப் பௌத்தத்தை நிறுவ நீ அந்த ராஷசனைக் கைப்பாவையாக் கொண்டு ஆடியிருக்கின்றாய், உன்னைப் பற்றிய எல்லா விசாரணையும் நடத்தி முடித்து நீ செய்த எல்லாக் காரியங்களையும் அறிந்துகொண்டோம்.

பர்வதேஸ்வரன் மரணம் முதல் இத்தேசம் சந்தித்த அத்தனை குழப்பங்களிலும் உனக்குப் பங்கிருக்கின்றது.

உன் சித்துவேலைகளும் இதர எல்லாத் திட்டங்களையும் நாங்கள் அறிவோம். நீ துறவி என்பதால் எங்களால் கொல்லமுடியாது. அதனால் நாட்டைவிட்டு உன்னை விரட்டியடிக்க முடிவு செய்துவிட்டோம், இனி ஒரு கணம் மகத நாட்டில் நீ தென்படக் கூடாது, உயிர்பிச்சை இட்டோம் ஓடிப் போ” என விரட்டினான்.

ஜீவசித்தி எனும் இந்துசர்மா சாணக்கியனைப் புரிந்துகொண்டு, “உங்கள் கட்டளைப்படி வெளியேறுகின்றேன்” எனச் சொல்லி வெளியேறினான்.

அவன் எங்குச் செல்வான் என்பதைச் சாணக்கியன் ஊகித்தது முன்பு திட்டமிட்டபடியே நடந்தது.

இப்படி இங்கே மகத அரசில் அந்த ராஷசனின் ஆட்கள் அனைவரையும் களையெடுப்பதாக காட்டிக்கொண்டிருந்தான் சாணக்கியன், அதை அங்கிருந்து உணர்ந்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான் ராஷசன்.

மலைய கேது மன்னன் அவையில் தனக்கான மாளிகையில் சாணக்கியனை நினைந்து மனம் குமுறிக்கொண்டிருந்தான் ராஷசன்.

அவன் மேல் கொண்ட அன்பினால் அவன் அறிவின் திறத்தில் வியந்ததால் அழகான முத்துமாலை ஒன்றை மலையகேது அனுப்பியிருந்தான், அதைப் பெற்றுக்கொண்டவன் கைகளிலே வைத்துக்கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்தான் சித்தார்த்தன்.

ராஷசன் சொன்னான் “நண்பா வா, நமது நாட்டினருடன் உரையாடி எவ்வளவு காலமாகிவிட்டது, உன்னை போன்றோர் வந்தபின்புதான் உற்சாகமே வருகின்றது, சகடதாஸனை இங்கே நான் கணக்கனாக வைத்துவிட்டேன், சில தளபதிகளை இங்கே மன்னனிடம் வேலைக்கு அமர்த்தியிருக்கின்றேன்.

உனக்கு என்னவேண்டும் எனக் கேட்டால் அதையும் செய்து தருவேன்” என்றவன் பெருமூச்சுவிட்டான்.

அவன் முகத்தின் கவலை கண்டதும் சித்தார்த்தன் கேட்டான் ” என்ன யோசனை ஐயா?”

முத்துமாலையினைத் தன் மடியில் வைத்தபடி தலைமுடியினைக் கட்டியபடிச் சொன்னான் ராஷசன் ” சித்தார்த்தா, நான் சரியாகத்தான் திட்டமிடுகின்றேன், நம் நந்தர்களைக் கொன்று ஆட்சியினைச் சந்திரகுப்தனிடம் கொடுத்து நம்மையெல்லாம் விரட்டி அடிக்கும் சாணக்கியனை ஒழிக்க திட்டம் சரியாகத்தான் இடுகின்றேன்.

ஆனால், அவை எல்லாமே பாழாகின்றன, எல்லாமே தடைபட்டு நமக்கு விரோதமாய்த் திரும்புகின்றன‌.

இது நமது திட்டத்தின் தவறு அன்று, ஒரு மனிதன் எவ்வளவு அறிவோடு திட்டமிட்டாலும் தெய்வ அனுகிரஹம் என ஒன்று வேண்டும், அது ஏனோ எனக்கு இல்லை.

சாணக்கியன் அறிவாளி என்பதை விட அவனுக்குத் தெய்வ அனுகிரஹம் இருக்கின்றது, அவன் திட்டமெல்லாம் பலிக்க விதி ஒத்துழைக்கின்றது.

அவனை ஒரு சக்தி காக்கின்றது, அதனால் அவனை ஒழிப்பதை விட இனி திசைதிருப்புவதுதான் நமக்குச் சரி.

சித்தார்த்தா, மகதம் நமதுநாடு. நீயும் நானும் எல்லோரும் அங்குதான் பிறந்தோம், வளர்ந்தோம். நம் நாடு எனும் பெரும் பெருமையுடன் அங்குக் கௌரவமாய் வாழ்ந்தோம்.

யார் இந்தச் சாணக்கியன்? எங்கிருந்தோ வந்தான்; நம்பமுடியாத் தந்திரம் செய்தான்; ஏதேதோ நடந்தது; இன்று நாமெல்லாம் அந்நியநாட்டில் ஒரு அபலையாய் வாழ்கின்றோம், இது நமது நாடாச் சொல்?

நாம் நம் நாட்டை மீட்க வேண்டும், நம் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றி வாழவேண்டும், அதுதான் நம் கஷ்டங்களுக்குத் தீர்வு.

இதற்கு நான் ஒரு திட்டம் வைத்திருக்கின்றேன். சந்திரகுப்தனைக் கொல்வதிலே இவ்வளவு காலமும் திட்டமிட்டேன், அவனை அகற்றிவிட்டால் சாணக்கியன் தனிமரமாகிவிடுவான் எனக் கணக்கிட்டேன்.

ஆனால், சாணக்கியனுக்குத் தெய்வபலம் இருக்கின்றது. அது அப்படியே இருக்கட்டும். ஆனால், அவனுக்கும் சந்திரகுப்தனுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்திவிட்டால் சாணக்கியன் தானே சென்றுவிடுவான்.

சாணக்கியன் அகன்ற மறுநிமிடம் சந்திரகுப்தன் பலமற்றவனாகிவிடுவான். அவன் பல்லும் நகமும் அற்ற பலமிழந்த வயதான சிம்மமாகிவிடுவான், விஷமற்ற நாகமாகிவிடுவான், அவனை வெற்றிகொள்ளல் இனி எளிதாகிவிடும்.

அதனால் அவர்களுக்குள் சண்டை மூட்டிவிடும் ஒரு காரியத்தைச் செய்தல் வேண்டும், வாய்ப்பு கிடைக்கும் போது அதைச் செய்தல் வேண்டும்.

சரி, இப்போது இந்த முத்துமாலையினை ஒரு பாதுகாப்பான இரும்புப் பெட்டியில், பல சாவியும் ரகசிய திறப்பும் கொண்ட பேழையில் வைக்கவேண்டும்” எனச் சொன்னான்.

சித்தார்த்தன் கேட்டான், “எனக்கும் உங்கள் பாதுகாப்பான பேழையில் கொஞ்சம் இடம் தருவீர்களா என்னிடமும் சில நகைகள் உண்டு”

“நண்பனே, உனக்கு இல்லாமலா என் நண்பன் சகடதாஸனின் உயிர்காத்தவன் நீ, உனக்கு இடமில்லாமலா, நீ உன் நகைகளைக் கொடுக்கலாம்.

நண்பா, இந்த இடம் காவல் மிக்கது, இங்கு என்னைத் தவிர யாரும் வரமுடியாது, உனக்கு நம்பிக்கை இருந்தால் உன் நகைகள் இங்கே இருக்கட்டும். அந்நிய தேசத்தில் பாதுகாப்பான இடம் இதனைத் தவிர வேறு எதுவுமில்லை”

“ஐயா, உமது வார்த்தைகளை விட பெரிய வலிமையும் காவலும் ஏது, என் கழுத்தில் கிடக்கும் நகைகளையும், என் மடியில் இருக்கும் நகைகள் சிலவற்றை இப்போது வைக்கின்றேன், எங்கு வைப்பது எனத் தெரியாமல் மடியிலே சுமந்து திரிகின்றேன்.

இங்கு நான் தைரியமாக உலாவிட இவற்றை ஓரிடத்தில் வைத்தல் அவசியம் ” என்றவன் அந்தப் பேழையில் தன் கழுத்தில் இருந்த, கையில் இருந்த மோதிரம், தன் மடியில் இருந்த நகைகளைக் கழற்றி வைத்தான்.

அப்போது அந்த மோதிரம் ராஷசன் கண்ணில்பட்டது.

“நண்பா, இது உனக்கு எப்படிக் கிடைத்தது சொல்” எனக் கேட்டான், எதையும் வெளிக் காட்டவில்லை.

சித்தார்த்தன் சொன்னான், “ஐயா, ஒருநாள் அதிகாலை தெருவழியே செல்லும் போது சந்தனதாஸனின் வீடு அருகே இது கிடந்தது, அப்போது எடுத்து வைத்திருந்தேன்” என்றான்.

“நண்பனே, இது எனக்கு மிகவும் பிடித்திருகின்றது, நான் உனக்குப் பெரும் விலை கொடுத்தால் இதனைத் தருவாயா?” எனக் கேட்டான் ராஷசன்.

“நிச்சயமாக, இதைக் கொண்டு நான் என்ன செய்யப்போகின்றேன்” எனச் சொன்னான் சித்தார்த்தன், அப்படியே மோதிரத்தை வாங்கிக் கொண்டான் ராஷசன்.

இனி அதைச் சகடதாசனிடம் கொடுத்து வழமைபோல் தன் முத்திரை மோதிரமாக பயன்படுத்த எண்ணம் கொண்டான்.

கவலை மிகுந்துவிட்டால் அறிவாளிகள் கூட கலங்குவார்கள், மிகுந்த கவலை தன்னை அறியாமல் வார்த்தைகளால் வெளிவரும், நிரம்பிய அணை வழிவதை போல வார்த்தைகள் வழியும்.

“சித்தார்த்தா, இனி சாணக்கியனும் சந்திரகுப்தனும் ஒன்றாய் இருத்தல் கூடாது, எப்போதுமே நோக்கம் ஒன்றாயிருக்கும் வரைதான் இருவர் இணைந்திருக்கமுடியும், நோக்கம் நிறைவேறியபின் கருத்து வேறுபாடுகள் வரும்.

அப்படி அவர்களுக்குள் ஒன்றுவரும் அல்லது வரவைழைக்க வேண்டும், ‘சந்திரகுப்தனால் சாணக்கியனா, சாணக்கியனால் சந்திரகுப்தனா எனும் கேள்வி எழவைக்க வேண்டும், என்னிடம் பெரிய திட்டங்கள் உண்டு’ எனச் சொன்னான்.

அவன் சொன்ன வார்த்தைகளை அப்படியே கடத்திவிட்டான் சித்தார்த்தன்.

ஆனால், அதற்கு முன்பே இதனை ஊகித்திருந்தான் சாணக்கியன், எங்கோ பாதாளத்தில் பதுங்கியிருக்கும் ராஷசன் வெளிவரவேண்டுமானால் தான் ஒரு நாடகம் நடத்தவேண்டும் என்பதையும் இதுதான் தான் வெளிவரும் காலம் என ராஷசன் வெளிவர ஒரு நாடகம் அவசியம் என்பதையும் அறிந்திருந்த சாணக்கியன் சந்திரகுப்தனிடம் சொன்னான்.

“சந்திரகுப்தா, சில காரணங்களுக்காக நீயும் நானும் பகிரங்கமாகச் சண்டையிட வேண்டும், ஆனால் காரணம் நியாயமானது போல் தெரியவேண்டும்”

வெலவெலத்துக் கேட்டான் சந்திரகுப்தன், “குருவே, என்ன சொல்லுகின்றீர்கள்”, சாணக்கியன் புன்னகைத்தான்.

(தொடரும்..)