சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 23
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 23
மலையகேதுவின் வாள் இன்னும் சில நொடிகளில் ராஷசனின் தலையினைக் கொய்யும் என எல்லோரும் கண் கொட்டாமல் நின்றனர், ராஷசன் கண்களை மூடிக் கொண்டான்.
அந்நேரம் சாணக்கியனால் நன்கு தயாரிக்கப்பட்டிருந்த பாராகுணன் சொன்னான்.
“மன்னரே, இவன் ஒரு வீரன் என்றால் நாம் வெட்டிக் கொல்வது சரி. ஆனால், இவன் கோழை, எதையுமே சரியாகச் செய்ய தெரியாத கோமாளி, அறிவாளி வேடத்தில் அலைந்த கோமாளி.
இவனை நாம் வெட்டிக் கொன்றுவிட்டால் என்னாகும்? இவனை அகற்றிவிட்டதாலே நாம் பெரும் வெற்றிகளைப் பெற்றதாக வரலாறு சொல்லும், அங்கே இவன் பெரிய ஆபத்தானவனாக, முக்கியமானவனாக மாறிவிடுவான்.
அங்கே இவனுக்கான தண்டனை வெறும் மரணமாக மட்டும் இருக்கும், அப்படி இருக்கக் கூடாது.
இவனை அடித்து ஒன்றுமில்லாதவனாக்கி தெருவில் விட வேண்டும். சந்திரகுப்தனுக்கும், இவனுக்கும் நட்பு இருந்தால் அவன் சேர்த்துக்கொள்ளட்டும். இவன் எங்களோடு இருந்தாலும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். நாங்கள் எந்த இடத்திலும் யார் பலம் இன்றியும் வெல்வோம் என வென்று காட்டவேண்டும்.
அதைப் பார்த்து பார்த்து இவன் சாகவேண்டும், மனதால் நினைவால் தினம் தினம் அழுதுச் சாகவேண்டும்.
ஒவ்வொரு நொடியும் தன் செயலை எண்ணி இவன் கதறி கதறி மனமார அழுது அழுது சாகட்டும். தன் திட்டமெல்லாம் தவிடுபொடியாகிச் செல்லாக்காசு ஆகி, வழியோர யாசகனும் இவனை மதியாது ஒதுங்கிச் செல்லும் அளவு கேவலமான வாழ்க்கை இவனுக்குக் கொடுக்க வேண்டும்.
அதனால் மன்னர் யோசித்து முடிவு செய்யவேண்டும்” என்றான்.
மலையகேது யோசித்தான், “ஆம், இவன் ஒரே நொடியில் சாகக் கூடாது, வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நொடியும் சாகவேண்டும், ஒவ்வொரு கணமும் அழுது அழுது சாகவேண்டும்.
ஏ துரோகியே, உன்னை இந்த நாட்டை விட்டு விரட்டுகின்றேன், போ எந்த மகத நாட்டுக்கு நல்லது செய்வதாக நினைந்து என்னைக் கொல்ல வந்தாயோ அதை உன்னால் செய்யமுடியவில்லை எனும் தோல்வியுடன் போ.
எனக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும், சர்வ சக்தி பொருந்திய மலையகேது நான். நொடிப்பொழுதில் மகத நாட்டை நொறுக்கிப்போடும் வல்லமை எனக்கு உண்டு, அப்படிப்பட்ட என்னை ஐந்து அரசர்களுடன் கூடி கொல்லப்பார்த்தும் உன்னால் முடியவில்லை அல்லவா? அந்தத் தோல்வியோடு போ.
இப்போதும் ஐந்து துரோகிகளைக் காட்டியிருக்கின்றாய், அதனால் விட்டுவிடுகின்றேன் போ.
ஆனால், ஒன்று நினைவில் கொள். என்னைத் தடுத்து நிறுத்த எந்தச் சக்தியாலும் முடியாது, விரைவில் சந்திரப்குதன், நீ, அந்தச் சாணக்கியன் என எல்லோரையும் என்ன செய்கின்றேன் பார்” எனச் சொல்லி அவனைக் காலால் உதைத்தான்.
சுருண்டு விழுந்த ராஷசன் தடுமாறி எழுந்து வீதி வழியே சென்றான், என்ன நடந்தது? என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை அறியவே அவனுக்குப் பல நாழிகை ஆனது. அவ்வளவுக்குக் குழம்பிப் போனான்.
மலையகேது தன்னைக் கொல்ல வந்தவர்கள் என எண்ணி அந்தச் சித்திரவர்மன், புஷ்கராஷன், சிம்மநாதன், சிந்துசேனன், மேகாஷன் என ஐவரையும் கொலைக்களத்துக்கு அனுப்பினான். அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
தன்னைச் சூழ்ந்த ஆபத்தெல்லாம் விடைபெற்றுவிட்டதாகவும், இனி தனக்குத் துரோகிகள் யாருமில்லை எனவும் உரக்கச் சொல்லிக்கொண்டான் மலையகேது.
சில நாட்கள் சென்றன. ராஷசன் பராரியாய் அலைந்தான். அவன் மனம் முழுக்க வெறுப்பாய் இருந்தது, அவன் ஒரு காளி கோவிலில் சென்று அமர்ந்து மனம் விட்டுச் சொன்னான்.
“அன்னை மாகாளி, நான் மலையகேதுவுக்கு விசுவாசமாகத்தான் இருந்தேன். ஆனால், ஒரு மூடனுக்கு விசுவாசமாய் இருப்பது ஆபத்து என்பது இப்போதுதான் தெரிகின்றது.
கொஞ்சமாவது அவனுக்கு அறிவு இருக்கின்றதா? நந்தர்கள் எனும் என் எஜமானர்களை அழித்தவனும், பலமுறை என் திட்டத்தில் இருந்து தப்பியவனான அந்தச் சந்திரகுப்தனிடம் நான் செல்வேனா? இவன் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?
இவன் செய்த முட்டாள்தனத்தால் இனி அவனுக்கு அழிவுதான் மிஞ்சும்.
இனி அவன் என்னாவான் என்பது என் கவலை அல்ல தாயே, எனக்கு ஏன் தெய்வத்தின் கடாட்சமில்லை, தெய்வக் கடாட்சம் இருந்தால் மட்டுமே எந்தத் திட்டமானாலும் வெல்லும், அந்த ஆசீர்வாதம் இல்லாவிட்டால் எவ்வளவு அருமையான திட்டம் என்றாலும் மண்ணைக் கவ்வும்.
எனக்கு அந்தப் பிராப்தம் இல்லை தாயே, என் மேல் மலையகேது சுமத்தியதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டு, அடிப்படைதன்மை இல்லாதது, அது எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும்.
ஆனால், காலநேரம், சாட்சிகள் இன்னபிற எல்லாம் சரியாகப் பொருந்தும்போது யார் என்ன செய்யமுடியும்? வண்டிமாடு விருப்பப்பட்டா பொதி இழுக்கும், அப்படி பழியினைச் சுமந்து வந்திருக்கின்றேன்.
தாயே, இனி நான் பெரிதாக வாழவிரும்பவில்லை. உன்னிடம் ஒரே ஒரு வரம் கேட்கின்றேன்.
என்னை நம்பாமல் கெட்டுப்போனவர்கள போகட்டும். என்னை நம்பி எனக்காக மகத நாட்டுச் சிறையில் இருக்கின்றான் என் நண்பன் சந்தன தாஸன்.
இவ்வளவு நடந்தும் என் மனைவி மக்களை பிடித்துக் கொடுக்காமல் என்னை நம்பி, எனக்காக அவன் சிறையிருக்கின்றான், அவனை நான் எப்படியாவது மீட்க வேண்டும்.
தாயே, அவன் குற்றமற்றவன், அவனை இப்படியே விட்டு சாக எனக்கு மனமில்லை, நான் அவனை மீட்க வேண்டும், அதற்கு மட்டும் அருள் செய்வாயாக.
அந்தச் சாணக்கியன் யாராலும் எதுவும் கணிக்கமுடியாத மகா ஆபத்தானவனாக இருக்கின்றான். அவனுக்கும், சந்திரகுப்தனுக்கும் சண்டை என்பது கூட இப்போது எனக்கு குழப்பம் தருகின்றது, இந்நேரம் நான் எப்படிச் செல்லமுடியும்” எனப் புலம்பினான்.
உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது, “ராஷசா, நடப்பதெல்லாம் நன்மைக்கே, தைரியமாக மகதம் செல், எல்லாம் நலமாகும்”
ராஷசன் அந்தக் காளியினை வணங்கி தொழுது வேறு பாதையில் மகதம் நோக்கிச் செல்லத் தொடங்கினான்.
ஓரிரு நாட்களில் திடீரென பாடலிபுத்திரம் பெரும் பரபரப்பானது, எல்லா இடமும் மக்கள் திரண்டு பேசிக்கொண்டார்கள், மகத சேனாதிபதிகளே அரண்டு போனார்கள்.
எல்லா இடமும் பெரும் வியப்பும், நம்பமுடியா ஆச்சரியமும் பரவிக் கிடந்தது.
சந்திரகுப்தன் அவையினை அவசரமாகக் கூட்டினான். ஆம். விஷயம் அவ்வளவு முக்கியமானது.
ராஷசனை விரட்டிவிட்டு தன் காவலுக்கு இருந்த அரசர்களை மலையகேது கொன்றுபோட்டபின் அவனுக்கு யாருமில்லை, அப்படி நின்றவனை எளிதாக கைது செய்து பாராகுணன் உள்ளிட்டோர் மகதம் அழைத்து வந்திருந்தனர்.
மிகப்பெரிய பகை மன்னன், பெரும் அச்சம் கொடுத்துக் கொண்டிருந்தவன், என்றாவது ஒருநாள் தங்களைத் தாக்குவான் என மகதம் அஞ்சிய மன்னனை மிக எளிதாக சிலர் கைது செய்து கொண்டு வந்தனர் என்பது நம்பமுடியா அதிசயம், பெரும் சாகசம்.
அந்தச் சாகசத்தை எளிதாக செய்திருந்தான் சாணக்கியன், மிகத் தந்திரமான திட்டங்களால் மலையகேதுவினைத் தன் ஆட்களால் வளைத்து அங்கே அமைச்சர், சேனை என எல்லா இடமும் தன் ஆட்களை நிரப்பி பின் அவர்களை வைத்தே அவன் காவலை இழக்கச் செய்து, தனிமைபட்டுப்போன அவனை இப்போது வெறும் கைதிபோல் இழுத்து வருவதெல்லாம் சாசகம்.
மகதநாட்டு அவையில் விலங்குடன் நிறுத்தப்பட்டிருதான் மலையகேது, அவன் முகம் பேய் அடித்தது போல் இருண்டிருந்தது, அவன் அந்த அவையில் ராஷசன் இருப்பான் என எதிர்பார்த்தான். அவன் இல்லாதது அவனுக்கு நெஞ்சில் இடிவிழுந்தது போல் இருந்தது.
அப்படியானால் ராஷசன் குற்றம் செய்யவில்லையா, எங்கே தவறு நடந்தது எனக் குழம்பியவன், எல்லாம் இவர்கள் திட்டமிட்ட நாடகம் என்பதில் கத்தத் தொடங்கினான்.
“துரோகிகள், நீங்கள் எல்லோரும் கோழைகள்.. நேருக்கு நேர் என்னோடு மோத அஞ்சிய கோழைகள்..” என அவன் கத்தத் தொடங்கிய போது அவையில் எல்லோரும் எழுந்து நின்றனர்.
கத்திக் கொண்டிருந்த மலையகேது அந்த நிசப்தம் கண்டு திரும்பிப் பார்த்தான், அங்கே சாணக்கியன் கம்பீரமாக நடந்து வந்தான்.
அவனை அவை வணங்கிற்று, சந்திரகுப்தன் வணங்கினான், எல்லாவற்றையும் கண்டு ஏற்றுக்கொண்ட சாணக்கியன் தனக்கான ஆசனத்தில் போய் அமர்ந்தான்.
அமர்ந்தவன் தன் குடுமியினைச் சரி செய்தபடி சாவகாசமாக அமர்ந்து ஒன்றும் அறியாதவன் போல் இருந்தான். ஆனால், கண்கள் கூர்மையாயின.
“என்னை மோசம் செய்துவிட்டீர்கள், ஏமாற்றிவிட்டீர்கள், இதெல்லாம் கீழ்த்தரமான தந்திரங்கள். ச்சீ நீங்களெல்லாம் ..” எனக் கொந்தளித்தான் மலையகேது.
“நீ சொல்வதை நேரடியாக சொல்லலாம்” என்றான் சந்திரகுப்தன்.
“உங்களுக்கும் எங்களுக்கும் என்ன? நந்தர்கள் ஆட்சியினை அகற்றித் தந்தால் பாதி ராஜ்ஜியம் தருவதாகச் சொன்னீர்கள், அதற்குத்தான் நாங்கள் வந்தோம்.
ஆனால் தந்தீர்களா? மாறாக நாகக் கன்னிகை அனுப்பி எங்கள் தந்தையினைக் கொன்றீகள், என்னை என் தேசத்துக்கு விரட்டினீர்கள், கடைசி வரை நீங்கள் சொன்ன எதையுமே தரவில்லை.
இப்போது எங்கள் நாட்டிலே உங்கள் ஆட்களை அனுப்பி என்னைச் சுற்றி துரோகிகளை அனுப்பி என்னை இப்படி அவமானமாக கோழை போல் பிடித்திருக்கின்றீர்கள், இதெல்லாம் ஒரு அரசன் செய்யும் முறையா?” எனக் கொந்தளித்தான்.
சந்திரகுப்தன் சாணக்கியனை நோக்கினான், வலது காலை அழுத்தி ஊன்றி எழும்பி தன் மேலாடையினைசா சரி செய்துகொண்டு, வாயின் தாம்பூலத்தைத் துப்பிவிட்டு பேசத் தொடங்கினான் சாணக்கியன்.
“மலையகேது, ஒரு அரசன் தன்னைக் காக்க, தன் மக்களைக் காக்க தான, பேத, சாம, தண்டம் எனும் நான்கு முறைகளையும் பயன்படுத்தவேண்டும்.
உண்மையினைச் சொல், நாங்கள் உன்னை அழைக்கும் முன்பே இந்த மகதத்தை கைப்பற்ற சிங்க பொம்மையினை அனுப்பி நீங்கள் நோட்டம் பார்க்கவில்லை? இந்த ஆட்டத்தை தொடங்கியதே நீங்கள்தான்.
மலையகேது இது அரசியல், இங்கு அறம் என்பது எல்லைக்கு உட்படாதது, அரசியல் கூட்டணி என்பது பாம்போடு பழகுதலுக்குச் சமம், புலியினைக் கூட்டி வேட்டைக்குச் செல்லுதலுக்குச் சமம், அவரவர்க்கு என்ன தேவையோ அதுதான் முக்கியம்.
நாங்கள் பாதிராஜ்ஜியம் தருவதாகச் சொன்னோம் மறுக்கவில்லை, ஆனால் அந்தப் பாதிராஜ்யம் பெற்றபின் உங்களால் எங்களுக்கு அச்சுறுத்தல் வரக்கூடாது எனும் உறுதிமொழியினை நீங்கள் தரவில்லை.
எங்கள்மேல் கண்வைத்துவிட்ட உங்களை நம்பி பாதிராஜ்ஜியம் தந்து உங்களைப் பலமாக்கிவிட்டு நாங்கள் அழிந்து போகமுடியாது.
என்ன சொன்னாய்? நாகக்கன்னி அனுப்பி உன் தந்தையினைக் கொன்றோமா? அப்படியானால் அப்படி ஒரு நாகக்கன்னிகையினை உன்னால் படைக்க முடியுமா சொல்? நாகக்கன்னி அனுப்பி எல்லோரையும் கொல்வது சாத்தியம் என்றால் நந்தர்களுடன் நாங்கள் போர் செய்ய அவசியமே இல்லையே?
உங்கள் பர்வதேஸ்வரனுக்குச் சர்ப்பகால சிக்கல், அதனால் விஷம் எனும் வகையில் உயிர் போயிருக்கலாம். அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்?
நந்தர் எனும் யானைக்குத் தப்பி உங்கள் புலிக் கூட்டத்திடம் நாங்கள் சிக்கிக் கொள்ள முடியாது.
எங்கள்மேல் உள்ள ஆத்திரத்தில் எங்கள் எதிரி ராஷசனுக்கு ஆதரவளித்தீர். பாஞ்சாலம், காஷ்மீரம், சிந்து எனப் பல தேச மன்னர்களோடு கூடி எம்மேல் போர்தொடுக்கும் திட்டத்தில் இருந்தீர்.
எங்கள் மேலான ஆபத்தை நீர் முன்னெடுக்கும் போது, எங்களை நீர் ஒழிக்க நினைக்கும் போது நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொள்ளக் கூடாதா?
இது எங்கள் தற்காப்பு, அரசியல் யுத்தத்தில் முந்திக் கொள்ள வேண்டும், பாம்பு கடிக்கும் முன் அதைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் எந்த மருந்தும் பலனளிக்காது.
மலையகேது இது ராஜதந்திரம், அரசியலில் எல்லாமே அனுமதிக்கப்பட்டது. அங்கே மக்களை, நாட்டைக் காக்க எல்லா வழிகளும் பயன்படுத்த உரிமை உண்டு, அரசியல் என்பது ஆயுதபலத்தாலோ மிரட்டல் அதிகாரத்தாலோ சேனை ஆள் அம்பாரியாலோ அல்ல.
போர் என்பது கடைசி வாய்ப்பு, அதற்கு முன் எல்லா வகையிலும் முயற்சிக்க வேண்டும், தெய்வக் கடாட்சம் இருந்தால் அது பலிக்கும்.
உன்னை நாங்கள் கொல்லப்போவதில்லை, எங்கள் முழு ஆபத்தும் நீங்கும் வரை சிறையில் வைக்கப்போகின்றோம், உன் குடும்பத்துக்கும் ஏதும் ஆகாது. அவர்கள் எங்கள் காவலில் நலமாய் இருப்பார்கள்.
முழுக்க எல்லாம் சரியான பின் உன்னை விடுதலை செய்வோம், குறுக்கப்பட்ட பலத்துடன் நீ அனுப்பப்படுவாய்” என்றான்.
மலையகேது தலையில் அடித்துக் கொண்டு சிறைநோக்கிச் சென்றான்.
அவன் சென்றபின் சாணக்கியன் தன் வலது காலை ஒரு பலகையின் மேல் கால் தண்டம் அதிரவைத்து, தன் மேலாடையினை உதறிச் சொன்னான்.
“அவையோர்களே, நந்தர்களை வீழ்த்தியதால் மட்டும் நம் மன்னருக்கு ஆபத்து நீங்கவில்லை, ஆபத்து இந்த மலையகேது வடிவில் பெரும் மிரட்டலாக இருந்தது.
ராஷசன் முதலானோர் பெரும் அச்சுறுத்தலாக இருந்தார்கள். ஐந்து நாட்டு படைகளுடன் சேர்ந்து நம்மைத் தாக்கும் தயாரிப்பில் இருந்தார்கள்.
இப்போது அந்த ஐந்து நாட்டு அரசர்கள் இல்லை, மலையகேது சிறையில் இருக்கின்றான்.
இனி நம் அதிகாரம் மகதம் மட்டுமல்ல, இனி காஷ்மீரம், பாஞ்சாலம், சிந்து, தக்காணம் எனப் பாரத கண்டம் முழுக்க நம் ஆட்சி, உலகில் மிகப் பலமான நாடாக நம் தேசம்.
இனி கிரேக்கருக்கு சவால்விடும் வகையில் மாபெரும் அரசாக நாம் நிலைப்போம், இனி எல்லாமே நம் கட்டுப்பாடு, இன்னும் சில நாட்களில் பாரத கண்டம் முழுக்க நமக்கு முறைப்படி கட்டுப்படும்.
அங்கெல்லாம் நாம் ஆலயங்களைப் பெரிதாக்குவோம், பெரும் மடங்களை அமைத்து சனாதன தர்ம வாழ்வினை நிலை நிறுத்துவோம், மாபெரும் பல்கலைக்கழகம் அமைத்து எல்லாக் கலைகளும் வளர்ப்போம்.
பெரிய சேனை பெரிய காவல் கொண்ட மாபெரும் சக்தியாக இனி இந்த சனாதான அரசு இனி எழுந்து நிற்கும்.
அவையோரே ஒரு அரசு அமைப்பதோடு அல்லது அதிகாரத்தை மாற்றுவதோடு பிரச்சினை ஓயாது, புதிதாக ஒரு அரசு எழும்போது ஆயிரம் தடைகள் பகைகள் வரும், எதிர்ப்புகள் சிக்கல்கள் வரும், எல்லா இடத்தில் இருந்தும் வரும்.
அப்படித்தான் இந்த மகத நாட்டுக்கும் வந்தது. அவை எல்லாம் அகற்றி இனி நமக்கு எதிரிகள் யாருமில்லை எனும் நிலையில் சனாதான அரசு நிலைக்க வழி செய்திருக்கின்றேன்.
நந்தர்கள் எனும் முரட்டு அரசர்களிடம் சிக்கிய மகதத்தை மீட்டு சந்திரகுப்தன் எனும் அரசனைத் தந்து, அந்த மகதத்தை சிந்து இயமம் முதல் தக்காணம் வரை நீட்டித்துத் தந்திருக்கின்றேன்.
என் கடமை இது. இந்துக்களுக்கு பலமான ஒரு அரசை ஸ்தாபித்துவிட்டேன், இனி எக்காலமும் இங்கு ஆபத்து இல்லை, அப்படி முளைத்தாலும் நான் விடமாட்டேன், ஒரு காலமும் விடமாட்டேன்” என் ஓங்கிச் சொன்னான்.
அவை அவன் அறிவை தீர்க்கத்தை முன்னெச்செரிக்கையினைக் கண்டு மலைத்துப் போனது, சந்திரகுப்தன் அவனைக் கை எடுத்து வணங்கினான்.
ஆம். மலையகேதுவினை அழகான வலையில் விழவைத்து அவனோடு அக்கம் பக்கம் மன்னர்களும் ஒழியவைத்து வெகு சமார்த்தியமாக மாபெரும் அரசை நிறுவிக்காட்டினான் சாணக்கியன்.
தன் முயற்சியில் பெரும் வெற்றி பெற்றுவிட்டாலும் சாணக்கியனின் மனம் ராஷசனைத் தேடிக்கொண்டே இருந்தது. அவனை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் எனத் தேடிக்கொண்டே இருந்தது.
எல்லாப் பக்கமும் அதற்கான ஆட்களை அனுப்பிய்ருந்தான். அந்நேரம் ஒரு பாழடைந்த நந்தவனத்தில் அமர்ந்திர்ந்தான், ஆளே உருமாறிப் போன ராஷசன்.
(தொடரும்…)