சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 24

சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 24

ராஷசன் எல்லாமும் முடிந்தது என நினைத்துக் கொண்டிருந்தான். அந்தப் பாழடைந்த சோலையில் அவன் தனித்திருந்து தன் நிலை குறித்து விம்மிக்கொண்டிருந்தான். அவன் நெஞ்சமெல்லாம் வேதனை ஒன்றே குடிகொண்டிருந்தது.

எவ்வளவு முயன்றாலும் சாணக்கியனை அவனால் வெல்லமுடியவில்லை; சந்திரகுப்தனை அவனால் அழிக்க முடியவில்லை; அவனின் எல்லாத் திட்டங்களும் அருமையானவை என்றாலும் சாணக்கியனின் அற்புதமான திட்டங்களால் எல்லாமே நாசமாகி நொறுங்கின‌.

மிகவும் மனம் நொந்த ராஷசன் இப்படிப் பரதேசியாக எல்லாம் இழந்து ஒன்றுமில்லாதவனாக அந்தப் பாழடைந்த நந்தவனத்தில் தன் விதியினை எண்ணி நொந்து கொண்டிருந்தபோது ஒருவனைக் கண்டான்.

அவன் பசுலோமன். ஆனால், அவன் சாணக்கியனின் ஆள் என்பதை ராஷசன் அறிந்திருக்கவில்லை. மாறாக, யாரோ என எண்ணிக்கொண்டிருந்தான்.

வந்தவன் ஒரு மரக்கிளையில் கயிறுகட்டி தன் உயிரை மாய்க்க முயன்றதைக் கண்ட ராஷசன் ஓடிச் சென்று தடுத்து “அப்பனே யார் நீ? உனக்கு என்னாயிற்று? ஏன் சாகும் அளவு மனமொடிந்து போனாய்?” என விசாரித்தான்.

அதற்குப் பதில் சொன்னான் அந்தப் பசுலோமன்.

“ஐயா நானும், விஷ்ணுதாசனும் சந்தனதாஸனும் மிக உற்ற நண்பர்கள். நீர் யாரென எமக்குத் தெரியவில்லை. ஆனால், மகதத்தில் நடந்ததெல்லாம் நீர் அறிந்திருப்பீர்.

அங்கே நந்தர்களை அகற்றி ஆட்சியினைச் சாணக்கியன் சந்திரகுப்தனுக்குக் கொடுத்தபின் ராஷசன் எனும் பழைய மந்திரி எதிர்தரப்பான மலையகேதுவிடம் சேர்ந்துகொண்டார். அவர் நந்தர்களின் விசுவாசி.

அவரைப் பிடிக்க சந்திரகுப்தன் பெரும் வலைவீசினான், அப்போது அவர் சிக்கவில்லை. ஆனால், அவருடன் தொடர்புடையவன், ராஷசனின் மனைவி மக்களைப் பத்திரமாக வைத்திருப்பவன் எனச் சந்தனதாஸனை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆனால், சந்தனதாஸன் எந்நிலையிலும் ராஷசனின் மனைவி மக்களைப் பற்றி தனக்கு ஏதும் தெரியாது எனச் சாதித்துக்கொண்டே இருந்தார்.

அவரை வழிக்கு கொண்டு வர அவர் நண்பர் சகடதாஸனை கொல்ல களத்துக்கு அனுப்பினான் சந்திரகுப்தன். ஆனால், சிலர் கொலையாளிகளை வீழ்த்தி சகடதாஸனை அழைத்துச் சென்றார்கள், அதுமுதல் சந்தனதாஸன் மேல் கடும் ஆத்திரத்தில் இருக்கின்றான் சந்திரகுப்தன்.

எங்களது நண்பர் விஷ்ணுதாசன் பெரிய இரத்தின வியாபரி, அவன் சந்திரகுப்தனைச் சந்தித்து தன் சொத்துக்கள் முழுக்கத் தருவதாகவும் அதைப் பெற்றுக்கொண்டு சந்தனதாஸனை விடுவிக்கவும் கோரினான். ஆனால், சந்திரகுப்தனோ “இது பொன்னுக்கும் பொருளுக்குமான விஷயமல்ல, ராஜதுரோக விஷயம். அதனால் சந்தனதாஸை விடமுடியாது” எனச் சொல்லிவிட்டான்.

“இன்னும் சில தினங்களில் சந்தனதாஸன் கொல்லப்பட இருக்கின்றான், அவனின் பிரிவுக்கு முன் நான் செத்துவிடவேண்டும் என விஷ்ணுதாஸன் தீகுளிக்க தயாராகின்றான்.

நான் என் இரு நண்பர்களின் மரணத்தின் முன் சாகும்படி, அவர்கள் சாவினைக் காண முடியாதபடி முன்பே சாக திட்டமிட்டு இங்கே வந்திருக்கின்றேன், என்னைச் சாகவிடுங்கள், நண்பர்களைக் காக்கமுடியாத நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை” என்றான்.

ராஷசன் அவனை நோக்கி “ஐயனே, சந்தனதாஸன் நிச்சயம் விடுதலையாவான், நீ சென்று விஷ்ணுதாசனைக் காப்பாற்றி வைக்கும் வேலையினைப் பார், சந்தன தாஸனை விடுவிக்கும் பணி என்னுடையது” என்றான்.

“யாராலும் காக்க முடியாத சந்தனதாஸனை நீர் காப்பீரோ? யார் நீர்? உம்முடைய பெயர் என்ன? என்ன செய்கின்றீர்? என விசாரித்தான் பசுலோமன்.

“நான் அமைச்சன் ராஷசன், அரிமத்யா ராஷசன். நந்தர்களிடம் அமைச்சராக இருந்து இப்போது சாணக்கியனால் தேடப்படும் ராஷசன்” என்றான்.

“ஐயா, நீர் மலையகேதுவிடம் இருப்பவர் அல்லவா? நீர் இப்போது எப்படிச் சந்தனதாஸனைக் காக்கமுடியும்” என்றான் பசுலோமன்.

“நானே வாழ்வின் அந்திமகட்டத்தில் இருக்கின்றேன், என்னை நம்பாமல் பலர் கெட்டார்கள், நான் என்னை நம்பியவர்க்கு ஒரு காலமும் துரோகம் செய்தவனல்ல, என்றாலும் பல பழிகளுக்கு ஆளாகிவிட்டேன்.

நான் என்னை நம்பிய ஒருவனை விடுவித்து, என்னை நம்பியவர்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்பதை உலகுக்கு நிரூபித்துவிட்டு வாழ்வைவினை முடிக்க விரும்புகின்றேன்” என்றான்.

அவன் குரலில் விரக்தி ஓங்கி இருந்தது.

“அப்படியானால் நீர் விரைந்து செல்லும், தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் சந்தனதாஸனுக்கு ஆபத்து. நான் சென்று விஷ்ணுதாசனை உமது வாக்கின்படி தடுக்கிறேன்” எனச் சொல்லி விரைந்தான்.

விஷயம் சாணக்கியனை எட்டிற்று.

சாணக்கியன் நெற்றி சுருக்கி யோசித்தான். பின், சந்தன தாசனுக்குரிய காவலை தளர்த்தச் சொல்லி யாரும் அவனைச் சந்திக்கலாம் என வழிவகை செய்துவிட்டு தன் போக்கில் இருந்தான்.

ராஷசன் பரபரப்பானான். எப்படியாவது சந்தனதாஸனை தப்பவைத்துவிட வேண்டும், அங்கே என்ன நடந்தாலும் சரி, தன் உயிரே போனாலும் தன்னை நம்பும் தனக்காக பாடுபடும் சந்தனதாஸனை விடுவிக்க வேண்டும் எனும் பெரும் எண்ணம் கொண்டான்.

அதன்படி தன் பழைய ஆட்களான சித்தார்த்தன், சிமிர்தார்த்தகனை அழைத்துக் கொண்டு மகதம் சென்றான். சென்றவன் மிக மிக அவசரமாக சந்தனதாஸன் கொல்லப்படத் தயாராக இருந்த இடத்துக்குச் சென்றான்.

சென்றவன் மார்பிலும் முகத்திலும் அறைந்து கொண்டான், தனக்காக சாகும் அளவு தயாரான சந்தனதாஸனை தழுவி ‘ஓ’ என அழுதான், பின் ஓங்கிய குரலில் சொன்னான்.

“சந்தனதாஸா, நீ சாகக் கூடாது. இந்த நந்த குலத்தினை அழியவிட்டவனும், அதைக் காக்க முடியாதவனும், நண்பர்களுக்கு ஆபத்து எனும்போது உதவாதவனும், தன் திட்டமெல்லாம் தோற்று எல்லாப் பகைவராலும் நகைகப்புக்குரியவகையில் விரட்டபட்டவனுமான நானே சாக வேண்டும்.

எனக்காக சாகும் அளவு சவால் எடுத்த நண்பனே, உன்னை நான் காப்பேன், இனி நீ விடுதலையாவாய்.

வீரர்களே, நானே சாக வேண்டியவன், கள்ளிப்பூ மாலையினை எனக்குச் சூட்டுங்கள், எமலோகத்துக்குச் செல்லும் அந்த அடையாளத்தை எனக்குச் சூட்டுங்கள்.

என்னைக் கொல்லுங்கள், என் பொருட்டுத்தானே இவனை கொல்லச் சொன்னார்கள், இதோ நானே வந்துவிட்டேன். இவனை விடுவித்து வாழவைத்து என் தலையினை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

விஷயம் சந்திரகுப்தனுக்குச் சென்றது, அவன் சாணக்கியனுக்குத் தெரியப்படுத்தி, அடுத்து நடப்பது என்ன எனக் கேட்டான்.

சாணக்கியன் எல்லாம் அறிந்தும் அறியாதவன் போல் சில கட்டளைகளைப் பிறப்பிக்கச் சொன்னான்.

அதன்படி சந்தனதாஸன் விடுவிக்கப்பட்டான், அவன் மனைவி மக்கள் விடுவிக்கப்பட்டனர். சந்தனதாஸன் ராஷசனை கட்டித் தழுவிச் சொன்னான் “இப்போதும் நான் செல்ல விரும்பவில்லை நண்பா, உன்னோடு சாகத்தான் விரும்புகின்றேன்”

கடைசிவரை உன் நட்புக்காய் வாழ்ந்தேன், நண்பனுக்காய் வாழ்ந்தேன் எனும் பெயரோடு சாக விரும்புகின்றேன்” என்றான்.

‘தெய்வம் என் வாழ்நாள் முழுக்க அயோக்கியர்களையே காட்டினாலும், எங்கும் அவநம்பிக்கை சந்தேகம் அவமானம் எனத் தீரா வலிகளை பலர் மூலம் தந்தாலும் எனக்காக வாழும் ஒருசிலரை, என்னை உயிரினும் மேலாகக் கொண்டாடும் சிலரைத் தந்திருப்பது மகிழ்ச்சி.

எனக்காகவும் துடிக்கும் நட்பான இதயத்தைத் தந்த தெய்வமே, உனக்கு நன்றி” எனச் சொல்லிக் கொண்டான் ராஷசன்.

சந்தனதாஸன் விடுவிக்கப்பட்டு அனுப்பப்பட்டான். ஆனாலும், ராஷசனுக்கு என்னாகுமோ என அவன் வாயிலிலே நின்று கொண்டிருந்தான்.

ராஷசன் கைது செய்யப்பட்டு சாணக்கியன் முன் இழுத்துச் செல்லப்பட்டான், அவன் கொண்டுவந்திருக்கும் செய்தியினைக் கேட்டு, தன் தலைமுடி கலைந்து கிடக்க மிக வேகமாக இரையினை எதிர்பார்த்த சிம்மம் போல் வாசலுக்கு விரைந்தான் சாணக்கியன்.

“கொழுந்து விட்டெரியும் நெருப்பு எப்படி ஒரு கலயத்தில் அள்ளப்பட்டது? நாட்டையே கலங்கடித்த சிம்மம் எப்படிப் பிடிபட்டது?

பெரிய திமிங்கலமாடும் கடலை நீந்தி கடந்தது யார்?” எனச் சொல்லி வாசலுக்கு வந்தான்.

அங்கே பரிதாப கோலத்தில் அழுக்கு ஆடையுடன், திருத்தப்படாத முகத்துடன், எண்ணெய்யில்லாத் தலையுடன் பார்க்கவே பரிதாபமாக நின்றிருந்த ராஷசனைக் கண்டான்.

ராஷசன் சாணக்கியனை ஏறிட்டுப் பார்த்தான்.

அதுவரை தன் உணர்ச்சிகளை அடக்கிய சாணக்கியன் அதற்கு மேல் தாளாமல் திரும்பி நின்று கொண்டான், அவனை மீறி கண்கள் பனித்திருந்தன‌.

“இவரைக் கொண்டு சென்று தக்க அலங்காரம் செய்து அழைத்து வாருங்கள், சிறந்த ஆடைகளைப் பூட்டுங்கள், நகைகளை அணிவித்து இந்த மகதத்தில் எப்படி வாழ்ந்தானோ அப்படி அழைத்து வாருங்கள்”

எல்லோரும் திடுக்கிட்டார்கள். ராஷசன் திகைத்தே போனான்.

“என்னைக் கொல்லத்தானே வேண்டும் , அப்படித்தானே இங்கு எல்லாம் நடந்தது. இந்தத் திட்டமெல்லாம் நீங்கள் என்னைக் குறிவைத்து வகுத்ததுதானே, இப்போது என்னாயிற்று?

இனியும் வலி தாங்கவோ ஓடி ஒளியவோ எனக்குத் தெம்பில்லை, எனக்கு அடைக்கலம் கொடுப்பவருமில்லை, நானே சாகத்தான் மகதம் வந்தேன், தயவு செய்து இனியும் என்னிடம் விளையாடி சோதிக்க வேண்டாம், என்னைக் கொல்வதென்றால் உடனே கொல்லவும்” என்றான் ராஷசன்.

“உம்மைக் கொல்வதென்றால் என்றோ கொன்றிருக்க மாட்டேனா? அறிவினை அறிவு அறியும், புத்திசாலி இன்னொரு புத்திசாலியினை எளிதாக உணர்வான்.

அறிவுடைவன் இன்னொரு அறிவாளியினை வெறுப்பானா ராஷசா.. என் மனதை நீ அறிந்தது இவ்வளவுதானா?

இதெல்லாம் எனக்காகவா? இந்தச் சந்திரகுப்தனுக்காகவா? இல்லை எல்லாம் இந்த பாரத கண்டத்துக்காக, சனாதனத்துக்காக‌.

அங்கே உன்னைப் போன்ற அறிவாளிகள் வேண்டும். ஆனால், தன்னிலை அறிந்தவர்களாக பொறுப்பினை உணர்ந்தவர்களாக வேண்டும்” என்றவன் அதற்கு மேல் பேசமுடியாமல் அவனை அலங்கரித்து பசியாறி வரச் சொன்னான்.

குழம்பியபடியே காவலர்களுடன் சென்றான் ராஷசன், விஷயம் அறிந்து வேகமாக வந்து கொண்டிருந்தான் சந்திரகுப்தன்.

மிக நீண்ட பெருமூச்சுடன் அமர்ந்திருந்து காளிக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தான் சாணக்கியன்.

(தொடரும்..)