பன்னிரு ஆழ்வார்கள் : 01 பொய்கை ஆழ்வார்.
பன்னிரு ஆழ்வார்கள் : 01
பொய்கை ஆழ்வார்.
ஆழ்வார்கள் என்றால் ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள் என்பது பொருள். இந்த ஆழ்ந்த பக்தி என்பது அவர்களின் விதிப்பயனால் அவர்கள் இந்தப் பூமிக்கு வந்த கர்மாவின் பயனால் நிகழ்ந்தது. அந்த முன் தேர்ந்தெடுக்கப்பட்ட வகை மூலம் பகவான் மானுடர்க்கு என்ன சொல்லவேண்டுமோ அதைச் சரியாகச் செய்தார்.
இந்த உலகம் யுகங்களைக் கடந்து வருவது, ஒவ்வொரு யுகத்திலும் பக்தி முயற்சிகள் என்பது மானுட சிந்தனைகளுக்கும் மனவோட்டங்களுக்கும் ஏற்ப மாறிக்கொண்டே வந்தது.
இதனால் ஒவ்வொரு யுகத்துக்கும் என்ன வழிபாடுகள், அக்கால மனசிந்தனைக்கும் சூழலுக்கும் ஏற்றதோ அதைக் கொடுப்பது பரம்பொருளின் சித்தம், இப்போது மானுடனுக்கு இவ்வளவு போதும் என்பது அவன் சித்தம்.
ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வகையான ஆயுட்காலம், ஒவ்வொரு வகையான குணநலன்களை மனிதன் கொண்டிருக்க வேண்டும் என்பது விதி, அந்த விதிக்கு ஏற்ப வழிபாடுகளும் அவற்றின் சாயலும் மாறும்.
கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என நான்கு யுகங்களை முன்னோர்கள் சொன்னார்கள்.
கிருத யுகம் எனும் காலத்தில் மக்கள் அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 9 அடி உயரமும், 1 லட்சம் ஆண்டுகள் வாழலாம்.
இந்த நீண்ட ஆயுளில் பிரார்த்தனை நேரம் அதிகம், வழிபடும் நேரம் அதிகம் வரும், இதனால் மிக நீண்ட ஸ்லோகங்கள், ஆண்டுகணக்கில் தவமெல்லாம் எளிதானது. புராண காலம், அரக்கர்கள் காலம், அசுரர்கள் காலம் என்பது இதுதான்.
திரேதா யுகம் என்பது நான்கில், மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 8 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக பத்தாயிரம் ஆண்டுகள் வாழலாம். இராமர் திரேதா யுகத்தில் பிறந்தவர்.
இது யாகங்கள் எனும் மாபெரும் நீண்ட வழிபாட்டுக் காலம், மிக நீண்ட வேதங்களை எளிதாக நீண்ட காலம் சொல்லி வழிபடும் காலம், நீண்ட ஆயுள் இருந்ததால் எல்லாமே சாத்தியம்.
அப்போது இருந்த ஒரு நாளைக்கான கால நேரமும் மாறுபட்டுயிருந்தது .
துவாபர யுகம் என்பது சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 அடி உயரம் உள்ளவர்களாகவும், 1000 ஆண்டுகள் வாழலாம். கிருஷ்ணர் மற்றும் பலராமர் ஆகியோர் துவாபர யுகத்தில் பிறந்தவர்கள் .
இங்கே இன்னும் முன்பை விட ஆயுளும் நாட்களும் குறுகின, இதனால் வழிபாடுகளும் அவற்றின் நேரமும் சுருங்கிற்று.
கலியுகம் என்பது நான்கில், ஒரு பகுதி அறநெறியுடனும், மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 120 ஆண்டுகள் என்பது ஆயுள்.
இப்போதுதான் ஆழ்வார்கள் வந்த காலத்தை கவனிக்க வேண்டும்.
துவாபர யுகம் முடிந்து கலியுகம் பிறக்க இருக்கும் போது பகவான் அந்தக் காலகட்டத்துக்கான வழிபாடுகளை, அதாவது இனி ஒரு நாளைக்கு குறைந்த நாழிகை, வெறும் 120 வருட ஆயுள், அதைவிட முக்கியமாக கால்வாசி மக்கள்தான் அறவாழ்வு வாழ்வார்கள் எனும் விதி, இதனால் வழிபாடுகளின் பாடல்களை ஆழமாகவும், சிறியதாகவும் கொடுக்க விரும்பினார்.
கலியுகத்தில் வெறும் நாம வழிபாடு வேறு வரும் என்பதும் அவர் அறிந்தது. அந்த நாம வழிபாட்டோடு சில ஆழமான போதனைகளை, எளிதான போதனைகளை மக்களுக்கு கொடுத்து அவர்களை அறவழியில், தர்ம வழியில் நடத்த திருவுளம் கொண்டார்.
அதனால் தன் அம்சத்தில் தன் அருள் பெற்ற பலரை அனுப்பினார். அப்படிச் சைவத்தில் பலர் வந்தார்கள், அவர்களுக்கு நாயன்மார்கள், சைவக் குரவர்கள், இன்னும் சித்தர்கள் எனப் பல பெயர் உண்டு.
வைணவமரபில் வந்தவர்கள் ஆழ்வார்கள் என்றானார்கள்.
இந்துமதம் எல்லா வகையிலும் இறைவனை அடைய போதித்த மதம். அது அத்வைதம் என சைவம், துவைதம் என வைணவம் என இருபிரிவுகளை முக்கியமாக்கிற்று.
இந்த அத்வைதம் என்பது விதிகளை அதிகம் நம்பாது, இறைவன் நம்முள் உண்டு, எல்லோரும் இறைவடிவமே, அதனால் பூஜைகள் சாஸ்திரங்கள் அதிகம் வேண்டாம் என்பது போல் வளைந்து கொடுக்கும்.
துவைதம் அப்படி அல்ல. அது பரம்பொருளை தனியாக ஜீவாத்மாவினை தனியாக பாவிப்பதால் அது பல விதிகளை வகுத்தது, இறுக்கமான விதிகளும் கடுமையான ஆச்சார அனுஷ்டானங்களும் அங்கு உண்டு.
சரண் அடைதல் முழுக்க சரணடைதல், ஒரு தயக்கமோ கலக்கமோ இன்றி கொஞ்சமும் எள்முனையேனும் தயக்கமின்றி சரண் அடைதலே அங்குப் பிரதானம்.
ஆனந்தமயமான ஆன்மா வாழ்வினை ஆனந்தமாக கொண்டாடி நிரந்தர ஆனந்தம், நித்திய ஆனந்தமான இறைவனுடன் கலக்க வேண்டும் என்பது அதன் கொள்கை.
இதனால் அது கொண்டாட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மானுட சுபாவத்துடன் கலந்து வந்த வகை என்றாலும் உள்ளூர அது போதிப்பதெல்லாம் முழு சரணடைவு.
அந்த சரண் அடைதல் என்பது எப்போது வரும் என்றால் பகவானின் அன்பையும் அருளையும் முழு ஆற்றலையும் உணர்ந்தால், அந்த மகா சக்திவாய்ந்த பரம்பொருள் மானுட ஜீவாத்மா மேல் கொண்டிருக்கும் பரிவை உணர்ந்தால் வரும்.
அப்படி உணரவைக்க வந்தவர்கள் ஆழ்வார்கள். அதனை காலத்துக்கு ஏற்றபடி கலிகாலம்தொடங்கும் வகையில் வந்து மிக உருக்கமாக சொல்லித்தந்து, கலிகால வழிபாடுகளை செய்ய வழிதந்தவர்கள் ஆழ்வார்கள்.
தென் பாரத பக்கம் அன்று மூத்த மொழியாக, ஒரே மொழியாக தமிழ் இருந்தது. அதனில் இருந்தே பின்னாளைய மொழிகள் பிரிந்துச் சென்றன.
இந்த ஆழ்வார்கள் காலம் மிக மூத்த காலமென்பதால் அவர்கள் பாடல்களும் போதனையும் தமிழில்தான் காலத்தால் அமைந்துவிட்டன.
அப்படி வந்து போதித்த ஆழ்வார்களில் முதன்மையானவர் பொய்கை ஆழ்வார்.
இவர் பாடிய பாடல்களும் போதனைகளும் கிடைத்தனவே அன்றி ,காலத்தால் மிக மூத்த இவரைப் பற்றி கிடைத்த குறிப்புகள் கொஞ்சமே.
தீபத்தின் வரலாறு எதுவாகவும் இருக்கட்டும் அதுகாட்டிய ஞான ஒளிதான் இங்கே கவனிக்கத்தக்கது.
அவரின் முழு வரலாறும் தெரியவில்லையே தவிர அவர் பிறந்த குறிப்பு துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக்தி அளிக்கும் ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சியில் அவர் அவதரித்தார்.
“காசி முதலான நன்னகரி யெல்லாம் கார்மேனியருளாளர் கச்சிக் கொவ்வாவெ” எனக் கொண்டாடப்படும் திருக்கச்சியில், திருவெஃகா எனும் திவ்ய ஸ்தலத்தில் அவர் அவதரித்தார்.
முக்தி அளிக்கும் ஸ்தலங்கள் ஏழு உண்டு. அயோத்தி, மதுரா, ஹரித்துவார், வாரணாசி, காஞ்சிபுரம், உஜ்ஜைனி
மற்றும் துவாரகை.
அப்படியான காஞ்சிபுரம் பெரும் புண்ணியப் பேறுகளை பெற்று பாலாற்றின் கரையில் அமைந்திருக்கின்றது . சோழர்களும் பல்லவர்களும அதனால் பெரும் பெரும் ஆலயம் அமைத்து வழிபட்டார்கள், வழிபட சொன்னார்கள்.
சைவமும், வைணவமும் தழைத்தோங்கிய ஞானபூமி அது, அங்குதான் பொய்கை ஆழ்வார் அவதரித்தார்.
“”கைசைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த
பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு-வையத்
தடியவர்கள் வாழ அருந்தமிழ் தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து”
என்பது அவர் அவதாரப் பாடல்.
அவர் மானுடப் பிறப்பு அல்ல, மாறாக திருவெஃகாவின் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவிலின் வலது பக்கம், நட்சத்திரங்களால் விளங்கும் ஆகாச வீதியைப் போல தாமரைகளால் ஜொலிக்கும் ஒரு பொய்கை உண்டு.
அந்த பொற்றாமரை குளத்தில்தான் அவர் அவதரித்தார்.
அவர் திருமாலின் பாஞ்சசன்ய சங்கின் அம்சமாக அவதரித்தார், அவரின் அவதார காலம் என்பது சுவேதவராக கல்பம், வைவஸ்வத மன்வந்தரம், 28-வது மற்மா யுகத்தில், துவாபரயுகத்தின் 8 லட்சத்து 62 ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று வித்தார்த்தி வருஷம், ஐப்பசி மாதம், சுக்ல பக்ஷம், அஷ்டமி திதி, செவ்வாய்க் கிழமை, திருவோண நக்ஷத்திரம் அன்று நடந்தது.
( “ஆழ்வார்கள் காலநிலை” எனும் புத்தகம் எழுதிய மு.ராகவ ஐயங்காரும், கருடவாகன பண்டிதர் எழுதிய “திவ்யசூரி சரித்திரம்” எனும் நூலும், அழகிய ஜீயர் எழுதிய “ஆறாயிரம்படி குரு பரம்பரை” எனும் நூலும் இதனைச் சொல்கின்றன)
அவர் பொய்கையில் குழந்தையாய் அவதரித்தார் என்பது கொஞ்சம் ஆழமாக நோக்க வேண்டியது, அதுவும் பெருமாள் கையில் இருக்கும் சங்கின் அம்சமாய் ஏன் வந்தார் என்பதும் நுணுக்கமாய்ப் புரிந்து கொள்ள வேண்டியது.
பொய்கை என்றால் தானே உருவாகிய நீர் நிலை, தடாகம் என்றால் உருவானது, பொய்கை என்றால் வற்றாதது எனவும் பொருள் உண்டு, பொய்யாத நீர் நிலை பொய்கை.
பகவானின் கையில் சங்கு இருப்பது, அதுவும் அரிதான பாஞ்சசன்ய சங்கு இருப்பது எல்லோரும் அறிந்தது, இந்து மரபில் சங்குக்கு முக்கிய இடம் உண்டு.
அது தத்வார்த்தமானது.
சங்கு என்பது சீரிய வளர்ச்சியினைக் குறிக்கும், சங்கு என்பது உள்ளே ஒரு உயிர் இருக்கும் வரை வளரும் தன்மையினைக் கொண்டது, அதாவது சங்கினைப் பொறுத்தவரை அது ஒரு உடலின் கூடாக இருக்கும். அந்த உடல் அழியும். சங்கு அழியாது.
ஒரு ஆத்மா அழியாது. ஆனால், உடல் அழியும் என்பதே சங்கின் தத்துவம். இதைத்தான் இந்துக்கள் பிரதானமாக சொன்னார்கள், வழிபாடுகளில் சொன்னார்கள், தெய்வங்களின் கையில் கொடுத்துச் சொன்னார்கள்.
குழந்தைக்குப் பாலூட்டுவது முதல் மயானத்தில் ஊதுவது வரை சொன்னார்கள்.
பகவான் சங்கை ஊதினான், அதுவும் போர்க்களத்தில் ஊதினான் என்பது வெறும் ஓசை அல்ல, மாறாக உடல் அழியும், ஆன்மா அழியாது, தர்மம் அழியாது என்பதைக் குறிப்பால் சொன்னான்.
சங்கின் சிறப்புக்கள் ஏராளம். அதுதான் எந்நேரமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தினை ஒலித்துக் கொண்டே இருக்கும், பிரபஞ்ச தத்துவம் அது.
இந்தச் சங்கின் அமைப்பினை பார்த்தாலே உண்மை தெரியும், ஒரு புள்ளியில் ஆரம்பித்து அதை மூடி பல சுற்றுகள் சுற்றி பின் வாய்பிளந்து முடியும் அந்த வடிவம், பிறப்பு முதல் இறப்பின் வடிவத்தை அழகாகச் சொல்லும்.
சங்கிற்கு ஒரு விசேஷ குணம் உண்டு. முற்றிய சங்கு நீரைவிட்டு கரை ஒதுங்கும். அப்படிப் பிறவி முடித்த ஆன்மா பிறவிக் கடலை விட்டு பகவானிடம் சேரும்.
இன்றும் திருக்கழுக்குன்றம் முருகன் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு சங்கு கரையில் ஒதுங்குவதும், அதைக்கொண்டு பூஜைகள் நடப்பதும் கண்கூடு.
ஆம். சங்கு என்பது பிறவியில் இருந்துவிடுபடும் ஆன்மாவின் ஞானக்குறியீட்டு வடிவம். அப்படிச் சங்கு அம்சமான அந்த ஆழ்வாரும் பிறவிக் கழிந்தவராய் விடுபட்டவராய் பொய்கையில் உருவாகிக் கரையில் கிடந்தார்.
அவரை ஒரு குடும்பம் எடுத்து வளர்த்தது, அவர் வளர வளர பக்தியும் வளர்ந்தது. அபூர்வ சங்கு பூஜையில் பகவானுக்கான ஒலியினைக் கொடுப்பது போல் உரிய காலத்தில் சங்குபோல் முழங்கத் தொடங்கினார் பொய்கை ஆழ்வார்.
அவரின் மனம் பெருமாளின் அன்பிலே கரைந்திருந்தது, அவரின் காதுகள் பகவானின் புகழை மட்டும் கேட்டன, அவரின் வாய் பகவானை மட்டும் பாடிற்று, அவரின் நாசி பகவானை மட்டும் சுவாசித்தது, அவரின் கண்கள் பகவானை மட்டும் கண்டன.
கைகள் பகவானை மட்டும் தொழுதன, அவரின் கால்கள் கோவில்களுக்கு மட்டும் ஓடின.
காஞ்சியில் பிறந்த அவர் ஸ்ரீரங்க பகவானைதா தரிசித்தபின் பெரும் பெரும் தத்துவங்களைக் கொட்ட ஆரம்பித்தார். பகவானை எப்போதும் நினைந்து அவர் அன்பில் கரைந்து போய் இருப்பதால் அவர் அடிக்கடி கண்களில் நீர் சொட்ட பாடுவதும் வழிபடுவதும் வழமையாயிற்று.
(பொய்யாத கண்ணீரை கொண்டிருந்ததால் , கண்களில் பக்தி பொய்கையினைக் கொண்டிருந்ததால் அவர் பொய்கை ஆழ்வார் என அழைக்கப்பட்டார் என்ற குறிப்பும் உண்டு.)
இந்தப் பொய்கை ஆழ்வார்தான் பாகவதத்தில் இருந்த பல அவதார வகையில் இருந்து தசாவதார கோலத்தை முதலில் பாடியவர்.
ஆம். தசாவதாரம் எனும் பத்து அவதாரத்தை முதலில் வகைப்படுத்தி பாடியவர் இவர்தான், அவ்வழியில்தான் இன்றும் வைணவம் நிலைப் பெற்று நிற்கின்றது.
ஆழ்வாரின் வாழ்வில் முக்கியமான சம்பவம் அல்லது திருப்புமுனை திருக்கோவிலூரில் உண்டாயிற்று, அங்குதான் இவர் காலத்தில் வாழ்ந்த பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்ற இருவரையும் இறைவன் சந்திக்க வைத்து முதல் மூன்று திருவந்தாதிகள் வர திருவுளம் கொண்டார்.
அந்தக் காட்சி உருக்கமானது. அங்கிருந்துதான் நாலாயிரத் திவ்யபிரபந்தமே தொடங்குகின்றது. இந்த யுகத்துக்கான வழிபாட்டு பாடல்களும், பகவானின் அருளால் அங்கிருந்துதான் கிடைத்தது.
ஸ்ரீரங்கநாதனை தரிசிக்க தெற்கு நோக்கி சென்றுகொண்டிருந்தார் பொய்கை ஆழ்வார், தென்பெண்ணை ஆற்றின் பக்கம் செல்லும் போது அங்கே இருந்த மிருகண்டு முனிவரைச் சந்திக்க விரும்பினார்.
அங்கே செல்லும்போது பெரும்மழை கொட்டிற்று. இதனால் ஒரு சிறிய அறைகொண்ட குடிசையில் ஒதுங்கினார். அங்கே ஒருவர் படுத்துக் கொள்ளலாம்.
அவர் அங்கே படுக்க நினைக்கும் போது, பூதத்தாழ்வாரும் மழையில் வந்து சேர்ந்தார். ஒருவர் மட்டும் படுக்கும் அந்த மிகச் சிறிய இடத்தில் இருவர் அமர்ந்து கொள்ளலாம் என்பதால் இருவரும் அமர்ந்து கொண்டார்கள்.
அது இரவு நேரம் வேறு.
இருவரும் அமர்ந்திருந்தபோது பேயாழ்வாரும் வந்து சேர்ந்தார். ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம் என்றால் மூவர் நின்றுகொள்ளலாம் என மூவரும் நின்று கொண்டார்கள்.
இந்த மூன்று ஆழ்வார்களும் “அயோ நிஜர்கள்” என அழைக்கப்பட்டார்கள். அதாவது இவர்கள் மானுடப் பிறப்பு அல்ல, இவர்கள் கண்டெடுக்கப்பட்டவர்கள், தானாக உதித்தவர்கள் என்ற பொருளில் அப்படி அழைக்கப்பட்டார்கள்.
இந்த உன்னத ஆழ்வார்கள் மூவரும் ஒரு அறையில் இரவின் இருட்டில் நின்றுகொண்டிருந்தபோது, பகவான் மிகப்பெரும் காரியம் ஒன்று விளைய சித்தம் கொண்டார், அதன்படி இந்த மூவரையும் யாரோ இரவில் நெருக்குவது போல் இருந்தது.
இந்த இரவில் தங்களை நெருக்குவது யார் எனத் தெரியாமல் அவர்கள் கொஞ்சம் கலங்கினர், யாரோ ராட்சஸனோ, பூதமோ இல்லை எந்தச் சக்தியோ தங்களை அழுத்துகின்றது என்பதை உணர்ந்து அந்தச் சக்தியினை காண விழைந்தனர்.
ஆனால், இருட்டில் எங்கிருந்து விளக்கேற்றி அதனைக் காண்பது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை, விளக்கு ஏற்றும் நிலையில் தாங்கள் இல்லை. ஆனால், நெருக்குதலோ மிக அதிகமாக இருக்கின்றது என்பதை உணர்ந்து பகவானை நோக்கிப் பாடத் தொடங்கினார்கள்.
முதலில் பொய்கை ஆழ்வார் பாடினார்.
“வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடராழி யான்அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீக்குகவே என்று”
மிக நுணுக்கமான பொருளைக் கொண்ட பாடல் இது.
“மனதை விளக்காகவும், கடலை நெய்யாகவும், கதிரவனைத்திரியாகவும் கொண்டு ஒரு விளக்கை ஏற்றி நிற்கின்றேன் பகவானே, இந்தப் பெரிய இருளின் இக்கட்டில் இருந்து என்னை மீட்டெடுப்பாய்” என்பது பொருள்.
அடுத்துப் பூதத்தாழ்வார் பாடினார்,
“அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்”
அன்பைத் தகளியாகவும், ஆர்வத்தை நெய்யாகவும், என் சிந்தனையினை திரியாகவும் கொண்டு தமிழ் கவிஞனாகிய நான் ஞான விளக்கை ஏற்றுகின்றேன் எனப்பாடினார்.
இந்த இருவரும் உளமுருக இப்படிப் பாடியதைக் கேட்டு, ஒருவர் உலகையே விளக்காகவும், இன்னொருவர் அன்பையே விளக்காகவும் பாடியதை கேட்டுப் பகவான் அங்கே எழுந்தருளினார்.
பகவானைத் தரிசித்த ஆனந்தத்தில் பேயாழ்வார் பாடினார்,
“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று”
இப்படி அந்தக் குடிசையில் மூவரையும் ஒருசேர சந்திக்க வைத்து, அவர்களைப் பாட வைத்து, தன்னைக் காட்டி அருள்பாலித்தார் பகவான்.
இந்த இடத்தில் வெறும் மூன்று பாடல்கள் மட்டும் பாடப்படவில்லை, அதன் பின் உள்ளம் உருகி ஆளுக்கு நூறுபாடல்கள் பாடினார்கள்.
பகவானைத் தரிசித்த பரவசத்தில் பாடினார்கள், அதுதான் “இயற்பா” எனத் தொகுக்கப்பட்டு, இன்று முதல் மூன்று திருவந்தாதிகளாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது.
நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் முதல் பாடல் இதுதான்.
இந்த முதல் மூன்று பாடல்களும் சாதாரணமாகக் கடந்து செல்பவை அல்ல, இவை மூன்றும் இருபெரும் ஞானப் போதனையினைச் சொல்பவை.
முதல் பாடலில், பொய்கை ஆழ்வார் உலகை விளக்காக்கி, கடலை நெய்யாக்கி, சூரியனைத் திரியாக்கி பாடுவது புற இருளை அகற்றுவது.
இரண்டாம் பாடலில், பூதத்தாழ்வார் பாடுவது அன்பை விளக்காக்கி, மனதை நெய்யாக்கி, சிந்தையினைத் திரியாக்கி எரியவைப்பது என்பது அக இருளை போக்குவது.
இந்த இரு காரியமும் நடந்தால் இரு விளக்கையும் ஏற்றினால் பகவான் தெரிவார், கடவுளைக் காணலாம் என்பது மூன்றாம் ஆழ்வார் பாடியது.
ஆம். புற இருள், அக இருள் இரண்டும் நீங்கினால் பகவானை அடையலாம் எனப் போதித்த பாடல் அது.
இன்னொரு ஆழமான மறைபொருளும் உண்டு, அதுதான் இங்கே ஆணிவேரும் அற்புதமுமான பொருளுமாய் அமைந்தது.
முதல்பாடல், உலகையும் விண்ணையும் சொல்வது. அதாவது படைப்பினை சொல்வது. அவ்வகையில் அது பிரம்மனைக் குறிப்பது.
இரண்டாம் பாடல், மனதையும் அன்பையும் ஆர்வத்தையும் குறிப்பது. இது சிவபெருமானைக் குறிப்பது.
மூன்றாம் பாடல், பகவான் விஷ்ணுவினைக் குறிப்பது.
மும்மூர்த்திகளும் ஒன்றே, ஒரே ஞானப் பேரோளியில் இருக்கும் சக்திகள் இந்த மும்மூர்த்திகளே, மூவரும் ஒன்றே அங்குப் பேதம் ஏதுமில்லை என மிக நுணுக்கமாகப் பாடுகின்றார்கள் இந்த முதல் மூத்த ஆழ்வார்கள்.
இந்தத் திருவந்தாதி எனும் இயற்பா மிக மிக உருக்கமானது.
அந்தாதி வகையில் பாடப்பட்ட பாடல் இது, பின்னாளைய எல்லா அந்தாதிகளுக்கும் இதுதான் தொடக்கம்.
பொய்கை ஆழ்வார் பாடிய பாடல்கள் ஏராளம் என்றாலும் மிக அழகான மிகச் சிலிர்ப்பான பாடல்கள் சிலவற்றைக் காணலாம். அது அவரின் ஆழ்ந்த பக்தியினைச் சொல்லி படிப்போரையும் பகவானை நோக்கி இழுத்து வரும்.
அப்படிச் சில பாடல்களைக் காணலாம்.
“பழுதே பல பகலும் போயின என்று* அஞ்சி
அழுதேன் அரவு-அணைமேல் கண்டு- தொழுதேன்*
கடல் ஓதம் கால் அலைப்பக் கண்வளரும்* செங்கண்
அடல் ஓத வண்ணர் அடி “
பல பொழுதுகள் உன்னைக் காணாமல் வீணாயிற்றே என அழுதேன், பாம்பின் மேல் படுத்திருக்கும் அரங்கனைத் தொழுதேன், அலை வீசி பகவானைத் தாலாட்டி தூங்கவைக்கும் கோலத்தை, பொல்லாதவரை அடக்கியபின் யோக நித்திரை செய்யும் செம்மையான கண்களைக் கண்டபின் அந்தத் திருவடிகளைக் கண்டபின் சேவித்துத் தொழுதேன், நான் அவர் அடியினை அடைந்துவிட்டேன் என்பது பொருள்.
அதாவது, பொழுதுகளை வீணாக்காமல் பாற்கடல் நாதனை அடையவேண்டும், நல்ல வழியில் வாழ்ந்து வைகுண்டம் ஏகவேண்டும் இல்லையேல் பிறவி வீணாகும் என்கின்றார்.
” இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி*
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும்- நமையாமல்*
ஆகத்து அணைப்பார் அணைவரே*ஆயிர வாய்
நாகத்து அணையான் நகர் “
அதாவது, இமையாத கண்ணான ஞானக்கண்ணால் ஞான விளக்கேற்றி இருளை அகற்றி, ஐந்து புலனையும் அடக்கி, உலக விஷயங்களை அணைக்காதவர்கள், பாம்பு அணைமேல் பள்ளி கொண்டிருக்கும் நாதனை அடைவார்களோ? என்பது பொருள்.
இமையாக் கண்களைக் கொண்டிருக்கும் பகவானை இடைவிடாமல் எண்ணினால் தியானித்தால் புலன்கள் அடங்கி ஞானம் பெற்று வைகுண்டம் ஏகலாம் என்பது மறைமுகப் பொருள்.
“குன்று அனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும்*
இன்று முதலாக என் நெஞ்சே– என்றும் புறன் உரையே ஆயினும் பொன் ஆழிக் கையான்
திறன் உரையே சிந்தித்திரு “
என் மனமே, எப்போதும் யாரென்ன சொன்னாலும் கலங்காதே, எம்பெருமான் சக்ரபாணியினைப் பற்றிப் பேசு, அவனைப் பற்றி நினை, அவனைப் பற்றி சிந்தித்துக்கொள், அப்போது மலை அளவு குற்றங்களை நீ செய்திருந்தாலும், பாவங்களைச் செய்திருந்தாலும் அவை எல்லாம் தீர்ந்துபோக பகவான் கருணைச் செய்வான் எனப் பொருள்.
“சென்றால் குடையாம்
இருந்தால் சிங்காசனமாம்*
நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள்– என்றும் புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு”
திருமாலுக்கு குடையாகவும், அமரும் ஆசனமாகவும், அவனுக்கு மிதியடியாகவும் பாற்கடலில் தெப்பமாகவும் ஆதிசேஷன் இருக்கின்றான் என்பது பாடலின் பொருள்.
அதாவது, எல்லா வகையிலும் எல்லா நிலையிலும் ஆதிஷேசன் பெருமாளோடு இணைந்திருப்பது போல மனமே நீ பகவானின் நினைவினை எந்நேரமும் உறங்கும் போதும், பணி செய்யும்போதும், நடக்கும் போதும் எல்லா நிலையிலும் மனதில் கொண்டிரு என்பது பாடலின் பொருள்.
இதன் இன்னொரு பொருள், மனமே பகவானை நீ முழுக்க மனதால் சரணடைந்தால் அவனே கதி என வீழ்ந்து சரணடைந்தால் ஆதிசேஷன் தன்னைக் காப்பது போல அந்தக் கருணாமூர்த்தி உன்னை நொடி விலகாமல் காத்து வருவான் என்பது.
“வினையால் அடர்ப்படார் வெம் நரகில் சேரார்*
தினையேனும் தீக்கதிக்கண் செல்லார்* நினைதற்கு
அரியானை சேயானை* ஆயிரம் பேர்ச் செங்கண்
கரியானைக் கைதொழுதக்கால்”
நினைப்பதற்கு அரிதானவனும், பாற்கடலில் இருப்பவனும், ஆயிரம் திருநாமங்களை உடையவனும்,
சிவந்த திருக்கண்களையும் கறுத்த வடிவையுடையனுமான பெருமானைக் குறித்து
கைக்கூப்பி வணங்கினால் ஒருவனுடைய நல்வினை தீவினைகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது, கர்மா எல்லாம் வினைகளெல்லாம் கழிந்துவிடும், நரகத்தில்விழ மாட்டார்கள் தீயவழிக்குச் செல்ல மாட்டார்கள்.
நாராயணனை வணங்கினால் எல்லா விதமான வினைகளும் கொடுவினைகளும் கர்மங்களும் அகன்று நரகில் விழாதபடி அவர்கள் காக்கப்படுவார்கள், தீய வழிக்குச் செல்லமாட்டார்கள், விஷ்ணு பகவான் அவர்களைக் கர்ம வினைகளில் இருந்து காப்பார் என்பது பொருள்.
அடுத்துச் சிறந்த பாடல் ஒன்றைத் தருகின்றார் பொய்கை ஆழ்வார்,
“உளன் கண்டாய் நல் நெஞ்சே* உத்தமன் என்றும்
உளன் கண்டாய்* உள்ளுவார் உள்ளத்து- உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்*
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்”
அதாவது, பிறரைக் காத்தால் அன்றி உயிர் தரிக்க மாட்டாத உத்தமன் அவன். தம்மை நினைப்பவர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து நித்ய வாசம் கெய்கிறான் அவன். நம்மைக் கடைந்தேற அவன் எத்துணை பெரு முயற்சி எடுத்துக்கொள்கிறான். திருபாற்கடலிலும், திருவேங்கடத்த்கிலும் இன்னும் பல திவ்யதேசங்களில் நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் படாதபாடு படுகின்றான். அத்தகைய பெருமான் இன்று என் நெஞ்சில் நிறைய புகுந்தான். அவனை நீ சதா நினை நெஞ்சே! என்பது பொருள்.
இதைவிட உருக்கமாக சொல்லவும் முடியுமா?
திருவரங்கத்திலே படுத்துக்கிடந்து காக்கின்றான், திருப்பதியிலே நின்றுகொண்டு காக்கின்றான், இன்னும் பல தலங்களில் நடந்து காக்கின்றான், எந்நேரமும் நம்முடன் அவன் இருக்கும் போது, நம்முள் நம்முடன் அவன் இருக்கும்போது நெஞ்சே நீ கலங்குவது ஏன்? என்பது ஒவ்வொரு உயிருக்குமான போதனை.
அவரின் அற்புதமான பாடல்கள் இன்னும் வரும்,
” ஊனக் குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி*
ஞானச் சுடர் கொளீஇ நாள்தோறும்– ஏனத்து உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம்
மருவாதார்க்கு உண்டாமோ வான்? “
சித்தர்கள் பாணியில் அவர் பாடும் பாடலின் பொருள் இதுதான்.
உடலாகிய குடிசையிலே உள்ளே வந்து இருள் நீக்கி ஞானச் சுடர் ஏற்றி வராஹ உரு கொண்டு பூமியினை அகழ்ந்த அந்த எம்பெருமானுடைய திருவடிகளைத் தொழாதவர்களுக்குப் பரம பதம் கிடைக்குமா என்றால் கிடைக்காது.
பகவானின் திருவடிகளில்வீழ்ந்து சரணடைதலே பரமபதம் தருவது என்பது போதனை.
“என்று கடல்கடைந்தது? எவ்வுலகம் நீரேற்றது*
ஒன்று மதனை யுணரேன் நான்* – அன்று
தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி* இதுநீ
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்”
கொஞ்சம் சீர் பிரிப்போம் .
என்று கடல்கடைந்தது ? எவ்வுலகம் நீர் ஏற்றது,
ஒன்றும் அதனை உணரேன் நான், – அன்று
அடைத்து உ டைத்துக் கண்படுத்த ஆழி, இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்.
அதாவது, பாற்கடலை எப்போது கடைந்தார்கள்?, மாவலியிடம் மூன்று அடியை எப்போது தானமாகப் பெற்றான்?, இலங்கைக்கு எப்போது பாலம் கட்டியது ?
யாருக்குத் தெரியும் ? ஆனால் , அது இன்றுபோல் இருக்கிறது. இதோ இந்தக் கடல் இன்றும் யாரோ கடைவது போல அலை பொங்குகிறது. நுரை பொங்குகிறது.
அன்று மூவடியால் அளந்த உலகம் இதோ இந்த உலகம்தான், என்றோ உண்டு, அகழ்ந்து எடுத்து, உமிழ்ந்தது இந்த உலகம்தான்.
நீங்கள் நிற்கும், அமர்ந்து இருக்கும் இந்தத் தரைதான் உலகளந்த பெருமாள் அன்று அளந்தது. அவை எல்லாம் முடிந்து போனது மாதிரி இருந்தாலும்,இன்று வரை அவற்றுள் ஏதோ ஒன்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
பக்தியும், தெளிந்த அறிவும் இருந்தால் காலம் மறைந்து போகும். அன்று நடந்தது இன்று நடப்பது போல இருக்கும். அன்று சொன்ன கீதை இன்று சொல்வது போல இருக்கும்.
எதுவும் முடிந்து போகவில்லை. அன்று சொன்னது இன்றும் பொருந்தும்.
அதாவது, பகவானே படைக்கின்றான், பகவானே காக்கின்றான், பகவானே அழிக்கின்றான், இங்கு எதுவுமே மானிடரால் முழுக்க புரிந்து கொள்ளக் கூடியது அல்ல. அதனால் அவனை அவன் செயலைப் புரிந்துகொள்ள நினையாமல் முழுக்க அறிந்து கொள்ள முயலாமல் சரணடைந்து கிடப்பது ஒன்றே வழி என்கின்றார்.
அடுத்துப் பாடுகின்றார்,
“பொன் திகழும் மேனிப் புரிசடையும் புண்ணியனும்
நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவர் அங்கத்தான் திரிவரேனும் ஒருவன்
ஒருவர் அங்கத்து என்றும் உளன்”
“பொன் போல் பிரகாசிக்கும் வடிவையும், பின்னப்பட்ட சடையையும், அழகிய புண்ணியத்தையுமுடைய ருத்திரனும்; நின்று உலகத்தையளந்த நெடுமாலும்; இரண்டு சரீரத்தையுடையவராய் சஞ்சரித்தாலும், இரு அரங்கத்தில் சஞ்சரித்தாலும்; இருவரும் ஒருவருடைய சரீரத்தைப்பற்றி எக்காலத்திலும் உளன்.
தென்னரங்கத்திலே நெடுமால் இருக்கிறார்; பொன்னரங்கத்திலே ஈசன் களிநடம் புரிகின்றான். தென் அரங்கநாதனும் பொன் அரங்கநாதனும் இருவரல்லர்; ஒருவரே” என்னும் உண்மையை உணர்த்துகிறார் பொய்கை ஆழ்வார்.
இப்பாடல் “ஹரியும் சிவனும் ஒன்று” என்கின்றது. மிகப்பெரிய ஞானத்தை அன்றே போதித்தவர் பொய்கையாழ்வார், பின்னாளில் சைவ வைணவபேதம் வந்துவிடக்கூடாது என்பதை சரியாக அறிந்து இரு சக்தியும் ஒன்றே என்கின்றார்.
“கைய வலம்புரியும் நேமியும்* கார்வண்ணத்து
ஐய! மலர்மகள் நின் ஆகத்தாள்-செய் மறையாள் உன் உந்தியான் மாமதிள் மூன்றுஎய்த
இறையான்* நின் ஆகத்து இறை”
அதாவது பழம்திருவேங்கடமுடையானே! மேகம் போல் நிறமும், இயல்பும் வாய்ந்தவனே! வலும்புரி சங்கும், சக்கரமும் உன் கைகளில் விளங்குகின்றன. மலர் மகளோ நின் மார்பில் இருக்கிறாள். இவை யாவும் உன் ஐஸ்வர்யத்தையும் அழகையும் காட்டுகின்றன. உம்மை அறிவிக்கும் வேதத்தை ஓதும் பிரம்மனோ உன் கொப்புழில் பிறந்தான். சிவனோ உன் திருமேனியில் ஒரு மூலையில் கிடக்கிறான். பிரம்ம ருத்திரர்கள், பெரிய பிராட்டி எல்லோருக்கும் உன் திருமேனியில் இடம் கொடுத்தாயே உன் சீலத்தை என்ன என்று சொல்வது.
இன்னும் பாடுகின்றார்.
“அவரவர் தாம்தாம் அறிந்தவாறேத்தி*
இவர் இவர் என் பெருமான் என்று – சுவர்மிசைச் சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தியுருவே முதல்”
அவரவர் தாம் அறிந்த வகையில் தொழுது இவர்தான் என் கடவுள் என்று சொல்லி சுவரில் சித்திரமாக வரைந்து சார்த்தியும் வைத்தும் தொழுவர். ஆனால், இதற்கெல்லாம் ஆதி காரணம் உலகை அளந்த அந்த திருமாலின் உருவமே என்பது.
எவ்வளவு ஆழமான பாடல்.
“புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழா யானை*
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே* -திகழ் நீர்க்
கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும்*
உடலும் உயிரும் ஏற்றான்”
மனமே நீ புகழ்வதால் அவனுக்கு ஏதும் பெருகுவதில்லை, நீ பழிப்பதால் அவனுக்கேதும் குறைவதும் இல்லை, நீ இகழ்ந்துவிட்டால் அவனுக்கேதும் நடக்கப் போவதுமில்லை, அவன் வான், கடல், மண், மலை, ஆகாயம், நெருப்பு என எல்லா இடத்திலுள்ளும் எல்லா உடலின் உயிராகக் கலந்திருக்கின்றான் என்பதை அறிந்து கொள் என்பது பொருள்.
“பெயரும் கருங்கடலே நோக்குமாறு* ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும்* -உயிரும்
தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன்*
ஒருவனையே நோக்கும் உணர்வு”
“ஆறுகள் கடலை நோக்கி ஓடுவதும், தாமரைப்பூ பகலவனை நோக்கி மலர்வதும், உயிர்கள் எமனையே நோக்கிக் கிட்டுவதும் ( கிடைக்கப்பெறுவதும்) எப்படி இயல்பாக நிகழ்கின்றனவோ அப்படியே ஞானம் என்பதும் திருமாலைப் பற்றி அல்லாது வேறு எதைப் பற்றி உண்டாவதும் அல்ல. எனவே அறியப்படும் பொருள் திருமாலே” என்பது பொருள்.
“சொல்லும் தனையும் தொழுமின் விழும்உடம்பு,*
செல்லும் தனையும் திருமாலை,* – நல்இதழ்த்-
தாமத்தால் வேள்வியால்* தந்திரத்தால் மந்திரத்தால்,*
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று”
“உடம்பு விரைவிலேயே விழுந்துவிடும்… நாவால் அவன் நாமத்தைச் சொல்லும் சக்தி இருக்கும்போதே, திருமாலை வழிபடுங்கள், அழகு மலர் மாலை சூட்டுங்கள், யாகம் செய்தோ, தந்திரத்தாலோ, மந்திரங்கள் ஓதியோ, அல்லது அவன் நாமங்களைச் சொல்லியோ எப்படி வணங்கினாலும் நல்லது “
“உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ றூழி*
உணர்வாரா ருன்னுருவந் தன்னை?* உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய்* நால்வேதப்
பண்ணகத்தாய் நீகிடந்த பால்?”
திருமலையும், வைகுந்தமாநகரும், திருவெஃகாவும், பூ மாறாத நீர் நிலைகளையுடைய சிறந்த திருக்கோவிலூரும் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களையும் நிற்பதும் வீற்றிருப்பதும் பள்ளிகொண்டிருப்பதும் நடப்பதுமாக இருக்கிறார் என்று நினைத்தால் நமது இடரெல்லாம் நீங்கிவிடும்.
ஒருவன் நின்றும், நடந்தும், படுத்தும் செய்த பாவத்தை எல்லாம் அந்தந்த கோலத்தில் நிற்கும் பெருமாள் ஏற்றுக்கொள்கின்றார், அவரைப் போற்றி கர்மத்தைத் தீருங்கள் என்பது போதனை.
இப்படி மிக உருக்கமான பாடல்களை மிகப்பெரிய ஞானபோதனைகளைத் தந்தவர் மிகப்பெரிய ஞானத்தைக் கொட்டி கொடுத்தவர் பொய்கையாழ்வார்.
அவரின் சுருக்கமான போதனை இதுதான், இந்த வரிகளில் அவரின் முழு ஞான அஸ்திபாரமும் சுருங்கிவிடுகின்றது, அவரின் “இயற்பா” இங்கே சுருக்கமாகின்றது.
“கர்ப்பப்பையில் கட்டுண்டு கிடந்தபொழுதே ரங்கநாதனுடைய விஷயங்களை ஸாக்ஷாத்காரமாய்க் கண்டேன், கைதொழுதேன்; ஒரு
அம்சத்தையாவது மறந்தறியமாட்டேன். அறிவில்லாதவர்களே! நான்
இப்பொழுது அவனை மறப்பேனோ?”
“என் வாய் அவனை யொழிய வேறொருவனைத் துதிக்காது; கை லோக மளந்தவனையே தொழும்; கண்கள் பூதனையைக் கொன்றவனையே காணும்; செவி அவனுடைய திருநாமமல்லாததைக் கேளாது; வாக்கு, கண், செவி, மூக்கு, உடல் என்ற ஞானேந்திரியங்களும், பூதமைந்தும், அழிவற்ற ஞானமும் யாகமும் தர்மமும் ஸர்வேசுவரனை அடைவதற்குத் தகுந்த உபாயமென்று பெரியோர் சொல்வதுண்டு”
” பாம்பனை மேல் பள்ளிகொண்டானை ஸாக்ஷாத்கரித்துத் தொழுதேன். பலபகலும் பழுதாய்ப் போயினவேயென்று அஞ்சியழுதேன். கலக்கம் போம்படி உள்ளத்தை நன்றாக நிறுத்திப் புத்தியால் தெளிவாய் நன்கு அறிந்தவர்களுடைய மனது வருத்தமறத், தன் தாயைத் தேடும் கன்று போல், அவனுடைய திருவடிகளையே விரும்பிச் சென்று நாடிக்கொள்ளும்”
“நான்முகனை உந்தியில் இருத்தி, அவனுக்கு வேதத்தை உபதேசித்த பெரியானுடைய திருநாமத்தைப் புத்தியால் சிந்திக்காமல், ஜபித்துக் கணக்கெண்ணும் ஸந்தியாவந்தனம் முதலிய கர்மத்தால் கிட்டும் பயன் யாது?”
” மனமே! எக்காலத்திலும் வேறு காரணத்தாலாவது அந்த சக்கிர பாணியைப் புகழ்வாய். கைவிடமாட்டேனென்ற சொல்லையே சிந்தித்து உறுதியாயிரு. இன்றுமுதலாக மலைபோன்ற குற்றங்களைச் செய்யினும் அவன் அவைகளைக் குணமாய்க் கொள்வானன்றோ? அதற்காகவே அவன் லீலா விபூதிக்கு எழுந்தருளுவது”
“அவனுடைய திருவடிகளில் திருத்துழாயைச் சாற்றி ஜலத்தை ஸமர்ப்பித்து அடியார் தாங்களே தொழாநிற்பர், மனத்திலுள்ள
அஞ்ஞானம் தீரும். அரிய விளைகளும் கிட்டா. தனமான பக்தியும் தானே
கைக்கூடும்”
“திருவனந்தாழ்வான் குடையாயிருப்பார் எழுந்தருளியிருக்கையில் சிங்காதன மாய் விளங்குவார்; நின்றால் மரவடியாய்த் தோன்றுவார்; விசாலமான பாற் கடலில் பள்ளிகொள்ளும்போது தெப்பமாயிருப்பார், ரத்தினத்தால் செய்யப்பட்ட தீபமாயிருப்பார், அழகிய பரிவட்டமாயுமிருப்பார், தழுவிக் கொள்ளும் மெத்தையாயுமிருப்பார்”
“திருநாமத்தை வாயில் வரும்படி பலகால் சொல்லுவதே யொழிய எம்பிரானை யார் அறிவார்? அது நிற்க, அவருடைய நாபியில் உதித்த நான் முகனே அந்த அடிக் கமலத்தை யறிந்தானோ?”
“பக்கத்திலிருக்கிற பிரபலமான பாபத்தைக் குறித்து அஞ்சினேன்; அஞ்சி உய்ய நின் திருவடிகளை அடைய இன்பமாயிருக்கும் பாமாலை கொண்டு தொழுது, நமோ நாராயணாவென்னும் சொல்மாலை சாற்றக்கற்றேன்.”
“அனாதிகாலமாய் என்னை வந்தடைந்த கொடும் பாபம் துன்பம் நோய் கெட்ட நடத்தை முதலியவை மறுபடியும் திரும்பிவராமல் போக வேண்டுமென்றிருந்தால், மலர்மங்கையைக் கொண்டுபோன அரக்கனுடைய பலம் அழியச் சரந்தொடுத்த திருக்கையானே உபாயங்காண்”
“சதுர்முக பிரம்மா முதல் பல பல பிறவிகளில் கிடந்துழலும் ஆத்ம கோடிகளுக்கெல்லாம் ரக்ஷகனான அவனையன்றி வேறொன்றை இவ்வுலகம் அறியுமோ?”
“சர்வேசுவரனுடைய பொருளான ஆத்மாவை என்னுடையதென்று விரும்பேன். தாழ்ந்த சம்ஸாரிகளோடு சேரேன். உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவர்
அல்லாதவர்களுடன் ஸஹவாசம் செய்யேன். ஸ்ரீபதியை யல்லாதுவேறு சிலரைத் தெய்வமென்று ஏத்தேன். ஆச்சரியப்படமாட்டேன். என்மேல் பாபம் வருவதெங்கே?”
“நினைத்தற்கு அரியனாய், தூரத்திலிருக்கிறவனாய், ஆயிரம் பெயர்களையுடையவனாய், செங்கண்ணனாய், கரியானாய் விளங்கும் அவனைக் கை தொழுதக் கால், கர்மபந்தத்தில் கட்டுப்படார்; கொடிய நரகில் சேரார். ஒருநாளும் கெட்டவழியில் செல்லார்”
“காலையெழுந்து, உலகத்தார் கற்குமவை யெல்லாம் கற்று, அறிந்தவர்களாய் உயர்த்தியையுடைய வைதிகர்கள் ஆசைப்படுவனவும்
ஆழியானுடைய பாதங்களையே; சொல்லுவதும் தியானிப்பதும் சாரங்கபாணியின் திருநாமங்களையே; உலகிலுள்ள ஆறுகள் யாவும் பெருங்கடலையே நோக்கிச்செல்லும்; அழகு வாய்ந்த கமலமும் ஆகாயத்தில் ஒங்கி வளரும் ஒருவனையே விரும்பும், ஜீவன்களும் முடிவில் காலனையே காண்பார்.
அப்படியே, ஞானமும் கமலாகார்தனான திருமால் ஒருவனையே விரும்பும். பரம்பத நாதா! லீலாவிபூதியை அடைந்தவனே ! வேங்கடவா! நான்மறையின் அகப்பொருளே ! காலமெல்லாம் ஒன்று கூடினாலும் உன் பெருமையை உணர்வார் யார்? உன் உருவந்தன்னை உணர்வார் யார்? நீ கிடந்த பாற் கடலை உணர்வார் யார்?
இவ்வுடம்பு விழுமளவும் திருமாலை அழகிய மாலைகளாலும், யாகங்களாலும் மந்திரமில்லாத கிரியைகளாலும், கிரியைகளில்லாத மந்திரங்களாலும் தொழுங்கள். வாக்கு சொல்லுமளவும் திருநாமங்களாலே புகழ்வீர்; அது உங்களுக்கு நன்று”
“கம்பீரமான மனமே ! நோயையும் கிழத்தனத்தையும் விட்டு, நூறு யுகங்களில் ஸ்திரமாயிருந்து, பூமியோடு கூடின அண்டமெல்லாம் ஆண்டாலும், கண்ணனிடத்தில் அன்பை என்றும் விடவேண்டாம். மன்றாடி வேண்டுகிறேன்.
பிரீதிக்கு ஆதாரமான மனம், திருவாழியானைக் கிட்டு என்று சொல்லும்; நாவு அவனுடைய திருத்தோள்களைப் பார்க்கச் சொல்லித் துதியென்று சொல்லும்; கண் ஸ்ரீதரனையே பாரென்று சொல்லும்; செவி அத்துழாய் மாலைக்குடையவனுடைய புகழையே கேளென்று சொல்லும்”
“என் நெஞ்சே!நீ அவனைத் துதித்தாலும் துதி, நிந்தித்தாலும் நிந்தி; அனாதரவு செய்தாலும் செய்; அல்லது விரும்பினாலும் விரும்பு. எழுகடலையும் எண்மலையையும் திறந்த ஆகாயத்தையும் காற்றையும்
உடலையும் உயிரையும் தரித்தவனவனே”
“ஏற்றான், புள்ளுர்ந்தான், எயிலெரித்தான், மார்விடந்தான், நீற்றான், நிழல்மணி வண்ணத்தான்- கூற்றொருபால் மங்கையான் பூமகனான் வார்சடையான், நீண்முடியான். அங்கையான் நீள்கழலான் காப்பு”
எருதையுடையவனுமாய், திரிபுரத்தை எரித்தவனாய், சுடலைச் சாம்பலை
பூசியவனுமாய், உடலின் ஒரு பக்கத்தில் உமையைத் தரித்தவனாய், தாழ்ந்து விளங்கும் சடையையுடையவனாய், கங்கையைச் சிரமேல் தரித்தவனான ருத்திரன், பெரிய திருவடியை யுடையவனுமாய், ஹிரணியனுடைய மார்பைப் பிளந்தவனாய், குளிர்ந்த நீலமணி போன்ற வடிவையுடையவனாய், கமலப்பூவில் வசிக்கும் பிராட்டியையுடையவனாய், நீண்ட கிடந்தையுடையவனாய், நீண்ட திருவடி களையுடையவனான விஷ்ணுவின் ரக்ஷைடியாயிருப்பான்”
“உன்னைத் தியானித்தால் நரகமான யமன் முதலானோர் நீங்குவார்; உன்னைத் தியானித்தால் சாமான கர்மபந்தங்கள் விட்டொழியும்; உன்னைச் சிந்திப்பார்க்குக் கிழத்தனம் முதலிய விகாரங்களிலில்லை;
உன்னடியை வந்தனை செய்வார் ஒப்பற்ற பதத்தை அடைவார்.”
“பக்திமார்க்கத்தில் ஸ்திரமாயிருந்து உன்னைத்தொழுபவர், அழிவில்லாத வேதத்தால் போற்றப்படும் ஸ்வரூபத்தைபுடையவராவர். உன் திருப்பதியான திருமலை, ஒரு குறையும் பாராத வண்ணம் பரமபதத்தைக் கொடுக்கும்”
“இந்த ஸம்சார துக்கத்தை யார் படுவார்? நெஞ்சமே! எழுந்திரு. இனி நமக்கு இடையூறுகள் வந்தால் முதலை பட்டபாடு படுமன்றோ?”
“தானம் வாங்கின திருமாலை உலகத்தார் பழிப்பாரல்லது தானங் கொடுத்த மாபலியைப் பழிப்பாருண்டோ? சர்வேசுவரனுடைய பொருளான பூமியைத் தனதென்று அஞ்ஞானத்தால் மதித்து, அவருக்கே கொடுக்கத் துணிந்த அவனுடைய
மனத்தன்மையை யார் கண்டு சிந்திப்பார்?”
“குன்றெடுத்துக் காத்த குணக்கடலே! வீட்டிற்கு வெளியில் போகாமலும் உன்ளே புகாமலும் அழகிய திருக்கோவிலூரில் இடைக்கழியில் (ஈடுத்தலம்) நின்று நீயும் திருமகளுமாய் எனக்கு ஸேவை சாதித்தாய், என்ன ஆச்சரியம்!”
“உன் திருவடிகளைக் காண்பதற்கு இந்த ஜம்பூத்விபத்திலுள்ளோர் உபாயத்தை நன்றாயறிந்தனர். ஆனபின்பு ஏழுவிதமான நரகத்தின் வாசல்களில் இனிப் புகுவார் யார்? கோபித்துக்கொள்ளாமல் உறுதியான பூட்டைப் பூட்டுங்கள்”
“விரும்பினாலும் உன் பாதங்களையே விரும்பு வேன்; எப்போது பாடினாலும் உன் புகழையே பாடுவேன்; சூடினாலும் உன் பொன்னடிகளையே தலையில் சூடுவேன். எனக்கு இனி எப்படியானாலென்ன?
“எனக்கு ஒப்பானவர் யாருமிலை. சர்வேஸ்வரன் தானே தளக்கு ஒப்பாமல்லாது எனக்கொப்பாவனோ?”
தன்னிலத்திலிருக்கிற காயாம்பூவின் நிறமும் மலரும் உன் திருமேனியை ஒன்றாகக் காட்டும்”
“மாம்ஸ மயமான இந்தக் குடிசையில் உள்ளே நுழைந்து அக்குளத்தை நீக்கி, ஞானமாகிற விளக்கை ஏற்றி உன் திருவடிகளை நாள்தோறும் கிட்டாதவருக்குப் பரமபதம் கிட்டுமோ?”
“நாராயணாவென்று சொல்லும் படியான உன் திருமந்திரம் இருக்கிறதே. விரும்புதல் இல்லாத மேலான மோட்ச மார்க்கத்தில் போவதற்கு உபாயமிருக்கிறதே. ஒருவர் துன்மார்க்கங்களிலே போவதற்குக் காரணமென்ன”
“நெஞ்சமே பாபம் புண்ணியம், பூமி கடல் காற்று ஆகாயம் இவைகளுக்கும் மேலான தத்துவங்களுக்கும் அவனே ஸ்வாமியென்று உறுதிகொள்”
“நெஞ்சே! புருஷோத்தமன் நமக்காசுவே இருக்கிறான்; எக்காலத்திலும் நம்மைக் காப்பதற்கே இருக்கிறான்; தியானிப்பவர்களுடைய நெஞ்சத்திலே எப்பொழுதும் விளங்குகிறான்; திருப்பாற்கடனிலே உள்ளவனும், திருமலையில் அவதரிப்பானும், நமது உள்ளத்தில் நித்யாவாசம்
பண்ணுறெவனேயென்று அறிந்துகொள்”
“நெஞ்சமே! ஒரு அடியால் உலகை அளந்தவனைச், கேசவனைக் குளிர்ந்த திருத்துழாய் மாலையணியும் ஸ்ரீபதியை, மனத்திலேநாட்டிக்கொள். இப்படிச் செய்தால் உலகை யளந்த ஒரடியையும், சகடத்தை உதைத்த சேவடியையும், சித்தமாக போற்றப்படும் இரண்டு திருவடிகளையும் கண்டு கடைத் தேறலாம்”
நெஞ்சை உருக்கும் இந்த வரிகளை, மனதை உருக்கும் அற்புத அமுதத்தினை, பகவானிடம் சரணடைதலை மிக மிக உருக்கமாக மருவி சொல்லியவர் பொய்கையாழ்வார்.
இந்தக் கைகாட்டி கொடுத்த வழியில்தான் பின்னாளைய ஆச்சாரியர்கள், பெரும் கவிஞர்கள் எனப் பலர் வந்து உள்ளம் கசியும் பாடல்களைக் கொடுத்தார்கள்.
மிகப்பெரிய அஸ்திபாரம் கொடுத்தவர் அவர்தான், மிகப்பெரிய வழி காட்டியவர் அவர்தான், மிகப்பெரிய ஜோதியினை அன்றே ஏற்றிவைத்தவர் அவர்தான்.
அவரின் மிக உருக்கமான தீர்க்கமான இரு பாடல்களில் அவரைப் புரிந்து கொள்வது இன்னும் நல்லது.
“தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்”
இப்பாடல் இப்படிப் பிரிந்துவரும்.
“தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே
தமர் உகந்தது எப் பேர் மற்று அப் பேர் தமர் உகந்து
எவ் வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ் வண்ணம்-ஆழியானாம்”
“அடியார்கள் எந்த உருவத்தை விரும்புகிறார்களோ, அதுவே அவன் உருவம். எந்தப் பெயரைக் கொடுக்கிறார்களோ அதுவே அவன் பெயர். எந்த விதமாக சிந்தித்து இடைவிடாமல் தியானம் செய்கிறார்களோ அந்த விதமாகவே இருப்பான் சக்கரக் கையான்” என்பது பொருள்.
ஒரு ஸ்லோகம் உண்டு.
“ஆகாசாத் பதிதந் தோயம் யதா கச்சதி சாகரம் |
சர்வதேவ நமஸ்கார: ஸ்ரீகேசவம் ப்ரதி கச்சதி || “
“எப்படி ஆகாசத்திலிருந்து மண்ணில் விழும் நீரானது ஆறுகளின் வழியே ஒன்றாகிக் கடலில் சேர்கிறதோ, அதுபோல் மற்ற எல்லா தேவதைகளுக்கும் செய்கின்ற நமஸ்காரங்கள் கடல் வண்ண நிறனான கேசவனுக்கே செல்கின்றன” என்பது பொருள்.
இதையேதான் கீதையின் ஸ்லோகத்தில் கண்ணன் சொல்கின்றான்.
“யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ச்ததைவ பஜாம்யஹம்”
“பக்தர்கள் எந்த உருவத்தில் என்னை பூஜிக்கின்றார்களோ,அந்த உருவத்தில் நான் என்னை அவர்களுக்கு காட்டுகிறேன்”
ஆம் . கீதையில் கண்ணன் சொன்னதையும், வேதங்கள் சொல்வதையும் இங்கே மிக சரியாக பதிவு செய்கின்றார் பொய்கை ஆழ்வார்.
“அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று””
இங்கே மிகப்பெரிய விஞ்ஞானத்தையும், அதையே ஆன்மீகம் எனும் சொல்லும் இந்துமத தத்துவத்தையும் மிக சரியாகச் சொல்கின்றார் பொய்கையாழ்வார்.
மாபெரும் பிரபஞ்ச ரகசியத்தை எளிதாக ஆன்மீகம் கலந்து சொல்கின்றார்.
அதாவது, வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். உலகம் என்பது நேர்மறை, எதிர்மறை சக்திகளையுடையது.
பூமி என்னும் காந்த மண்டலத்திலும் வட துருவம், தென் துருவம் என்று இருக்கும். மின்சாரத்திலும் பாஸிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் உண்டு. அப்பொழுதுதான் அது பூர்த்தியாகும். சம்ஸ்கிருதத்தில் இதை த்வந்த்வம் (இருமை) என்பர்.
பிறப்பு, இறப்பு, சீத, உஷ்ணம் பகல், இருள், ஞானம் அஞ்ஞானம் இது நீண்டது, எல்லா பொருளிலும் எல்லா உயிரிலும் எல்லா படைப்பின் அணுவிலும் இருக்கும் நுணுக்கமான விஷயம் இது.
வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும்.
மித்ரன் என்பது ஒளியின் சாயல் பொருள் பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம்.
சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் “மித்ராய நம” என்பதாகும்.
அர்த்த நாரீஸ்வர உருவத்திலும் உமையை கருப்பாகவும், சிவனை சிவப்பாகவும் காட்டுவர். சங்கர நாராயண உருவத்திலும் சிவனை சிவப்பாகவும், விஷ்ணுவை கார்மேனி வண்ணனாகவும் காட்டுவர். இவை அனைத்திலும் உள்ள பொருள் ஒன்றுதான். ஆக்க சக்தி அழிவு சக்தி இரண்டும் நிறைந்ததே இயற்கை.
சிவனின்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவனில்லை என்பது அதுதான்.
இங்கே நிரந்தர சக்தி இயக்கும் சக்தி இரண்டும் இணைந்ததே எல்லாமும், ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.
இதை உணர்த்துவதே வேதங்களில் வரும் மித்ர- வருண இணை தத்துவம்.
பொய்கை ஆழ்வார் முதல் மூவரில் ஒருவர். அவரும் இதே கருப்பு-சிவப்பு தத்துவத்தைப் பாடுகிறார்.
“அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரைநூல் மறை உறையும் கோயில்- வரை,நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார்மேனி ஒன்று”
அதாவது சிவன், நாராயணன் என்ற பெயர்களுடன், ரிஷபம், கருடன் வாகனத்தில், ஆகமம், வேதம் என்பவனற்றை கொண்டு, கயிலாயம் வைகுண்டத்தில் வசிப்பவர்களும் அழித்தல் காத்தல் தொழிலை செய்பவர்களும், அக்னி பிழம்பும் கருப்பு உருவமும் கொண்டவர்களுமான இருவரின் உடல் ஒன்றுதான்.
மிக தீர்க்கமான மொழி இது.
சிவனும் விஷ்ணுவும் ஒன்று, தொழிலால் வாகனத்தால் உருவத்தால் தன்மையால் வேறு என்றாலும் இருவரும் ஒன்றே இருவரின் இணைந்த ஒரே நிலையில்தான் இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது என்பது.
சைவமும் வைணவமும் வழிபாடு தெய்வம் என வெளியே வேறாக தெரிந்தாலும் வேதத்தின் மூலவேரில் இரண்டும் ஒன்றே, ஒரே மரத்தின் இரு கிளைகள் என்பதை சொல்கின்றார் பொய்கை ஆழ்வார்.
பொய்கை ஆழ்வாரின் ஞானமும் அதை அவர் சொன்ன உருக்கமும் மிகவும் ஆழமானது, தெய்வீக ஞானமானது.
சரணடைதலை மிகச் சரியாக சொன்ன ஆழ்வார் அவர், இறைவனின் சிறப்புக்களை சொல்லி அவனின் பெருமைகள் சொல்லி பேதங்களை அகற்றி வேதங்களின் ஞானத்தை மிக சரியாக தந்த மகான் அவர்.
அவரின் வழிகாட்டலில்தான் அவர் தொடங்கிவைத்த யுகத்தில்தான் இன்று வைணவம் தலைநிமிர்ந்து நிற்கின்றது, இந்த யுகத்தின் முக்கியமான தொடக்ககால ஆழ்வார் அவர், விதை அவர்.
அவரும் அவர் பாடல்களும் அதன் ஞானமும் ஒவ்வொரு இந்துவும் பெருமையோடும் ஞானகர்வத்தோடும் பின்பற்றி வரவேண்டிய தத்துவ பாரம்பரிய பொக்கிஷங்கள்.
ஞான விளக்குகள்.
அவரை நினைந்து பெருமானை வழிபடுவோர்க்கு, அவர் சொன்ன பாடல்களைப் பாடி இறைஞ்சி நிற்போருக்கு, அவர் சொன்ன பாடல்களை உணர்ந்து, உளம் உருகி சொல்வோர்க்கு எக்காலமும் ஸ்ரீரங்க நாதனின் அருள் நிச்சயம் உண்டு, இது சத்தியம்.
“செய்யதுலாவோணத்திற் செகத்துதித்தான் வாழியே.
திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே.
வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே.
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே.
வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே.
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே.
பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே.
பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே”.
பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்.