பன்னிரு ஆழ்வார்கள் : 02 பூதத்தாழ்வார்.
பன்னிரு ஆழ்வார்கள் : 02 பூதத்தாழ்வார்.
“என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி அளித்ததானை – நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடன்(ல்)மல்லைப்
பூதத்தார் பொன்னங் கழல் .”
ஆழ்வார்களில் இரண்டாவது ஆழ்வார் எனச் சொல்லப்பட்டாலும், வைணவத்தின் முதல் மூத்த மூவரில் மூன்று ஆழ்வாரில் இவரும் முக்கியமானவர்.
இவரைப் பற்றிய வரலாறும் பொய்கையாழ்வாரைப் போல அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாம் திருவந்தாதி இவர் எழுதியது எனும் வகையில், அற்புதமான அந்தப் பாடலை படிப்போர் மனம் உருகவைக்கும் அப்பாசுரத்தை அவர்தான் இறையருளால் வழங்கினார்.
தொண்டைநாட்டின் முக்கிய துறைமுகமாக இருந்தது “கடன் மல்லை”, இன்றிருக்கும் மாமல்லபுரம் அல்ல, அதன் கிழக்கே இருந்த பெரிய நகரம் இது.
இன்று மாமல்லபுரம் கடற்கரையில் இருக்கும் கோவில் போல ஏழு பெரிய கோவில்கள் அங்கே இருந்தன, பூம்புகார் கடலினுள் சென்றபோது அந்த மல்லையும் மூழ்கிப்போயிற்று.
இன்றிருக்கும் மல்லை அதன் எஞ்சிய பகுதி அல்லது அதன் நினைவாக பெயரிடப்பட்ட பகுதி, இந்தப் பூதத்தாழ்வார் அந்தப் பழைய “கடன் மல்லை” அல்லது “கடல் மல்லை” என்ற தலத்தில் அவதரித்தவர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் 22 தொண்டை நாட்டில்தான் உண்டு, அப்படியான விஷ்ணு பக்தி கொண்ட பகுதி அது.
அங்கேதான் அந்த மல்லை எனும் மாமல்லபுரமும் உண்டு.
மல்லை எனும் பெயர் எப்படி வந்தது என்பதற்குச் சில குறிப்புகள் உண்டு. ஆதாரமான செய்திகள் இல்லை என்றாலும் அப்படிச் சில தகவல்கள் உண்டு.
பகவான் விஷ்ணுவின் தலங்கள் பலவற்றுக்கு அந்த நாதனின் பெயரை இடுதலே வழமை, அப்படிப் பகவானுக்குப் பல நாமங்கள் உண்டு.
கேசிகனை அழித்ததால் அவன் கேசிகன் என்றானது போல, அவன் கம்சனின் மல்லர்களைக் கொன்றதால் மல்லன் என்றொரு பெயரும் உண்டு என்பார்கள்.
அந்த மல்லன் எனும் பகவானுக்கு உருவான ஊர்தான் இந்த மல்லை. மல்லரை அழித்த மகா மல்லன் என்பதால் அவன் மாமல்லன் என்றானான், அங்கே பகவானுக்குப் பெரிய ஆலயம் இருந்தது, இப்போது இருக்கும் மல்லையிலும் ஒரு பிரதான அரங்கன் ஆலயம் உண்டு.
ஆம். அது அப்போது இருந்தே காஞ்சி போல, திருப்பதி போல மிக மிக பிரசித்தியான விஷ்ணு ஆலய வழிபாடு கொண்ட நகரம், காலத்தால் முந்தையது அதையும் கடல் கொண்டுபோய்விட்டது.
அதன் எஞ்சிய பகுதிதான் இன்றைய மாமல்லபுரம் அல்லது மகாபலிபுரம். மல்லை என மல்லரைக் கொன்ற பெயரோ, மகாபலியினை அடக்கிய பெயரோ எது என்றாலும் அது பகவான் விஷ்ணுவின் பெருமையினைச் சொல்லும் ஊர்.
பல்லவர்கள் வந்ததெல்லாம் மிக மிக பிற்காலத்திலே. அதனால் பல்லவ மன்னனின் பெயரில் உருவான நகரம் என்பதெல்லாம் அபத்தம் . ஏற்கனவே இருந்த பகவான் விஷ்ணு நாமத்தில் இருந்த நகரில் பல்லவர்கள் ஓட்டிக்கொண்டார்கள் என்பதே வரலாறு.
அந்தப் பெருமை வாய்ந்த மல்லை பெரிய துறைமுகமாக இருந்தது. பல நாட்டு கப்பல்கள் பூம்புகார் போல வந்து சென்று கொண்டிருந்தது, பரபரப்பான ஊராக அது இருந்தாலும் அங்கே பெருமாள் பக்தி மிக மிக பெரிதாக இருந்தது.
அரங்கன் எனும் பள்ளிகொண்ட பெருமாள் அங்கு இருந்தார். அவருக்கு எல்லோரும் கடன்பட்டவர்கள் எனும் பெயரில் அது “கடன் மல்லை” என வழங்கப்பட்டது.
அந்த ஊரில்தான் ஒரு குருக்கத்தி மலரிலே அவதரித்தவர் இந்த ஆழ்வார், அவர் விஷ்ணுவின் கையில் இருக்கும் கௌமேதகி எனும் கதாயுத அம்சமாக பிறந்தவர்.
மாமல்லையின் தலசயன பெருமாள் கோவில் அருகில் இவர் அவதரித்ததாக குறிப்பு உண்டு. அந்த ஆலய சுவற்றில் அதுபற்றிய தகவல்கள் காணப்படுகின்றன.
பழைய மல்லை கடலில் மூழ்கிவிட்டது, அவர் அங்கே அவதரித்திருக்கலாம் என்பதும் பின்னாளில் எஞ்சிய இந்த மல்லையில் அவர் நினைவாக இதெல்லாம் பொறிக்கப்பட்டடிருக்கலாம் என்பதும் ஆய்வுகள்சொல்வது.
எது எப்படியாயினும் இவர் அந்த மாமல்லையில் பிறந்தார் என்பது உறுதியானது.
இவர் பொய்கையாழ்வார் பிறந்த மறுநாளில் அதாவது ஐப்பசி அவிட்டம் அன்று அவர் அவதரித்தார்.
அவர் பூவின் தாதில் இருந்து உருவானவர் என்பதால் பூத்தாது ஆழ்வார் என அழைக்கப்பட்டு பின் அது பூதத்து ஆழ்வார் என மருவிற்று என்பார் உண்டு.
பூதலம் எனும் பூமியில் அவர் பெருமாளின் பெரும் பக்தராக அவதரித்து இந்த பூதலத்தில் பகவான் அருளை பரப்பியதால் அவர் பூதத்தாழ்வார் எனும் பெயர் பெற்றார் என்பார் உண்டு.
அவர் பெருமாளை “கடல்வண்ண பூதம்”, “திருமார்பன்னவன் பூதம்” என அழைத்ததால் அவர் பூதத்து ஆழ்வார் என்றானார் என்பாரும் உண்டு.
மாமல்லபுரத்தின் பெரும் நீலக்கடல் அவருக்கு கருநீல கண்ணனை நினைவுப்படுத்தியதால், பகவானை அவர் அந்த உருவில் கண்டதால் , பெருமாளை “கடல் வண்ண பூதமே” எனப் பாடினார், அப்பெயர் நிலைத்தது என்ற குறிப்பும் உண்டு.
இப்படியாக அவர் பூதத்து ஆழ்வார் எனும் பெயரை பெற்றார்.
ஆழ்வார்கள் மூவர் ஏன் அவதரித்தார்கள் என்றால் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பின்னாளில் பௌத்தம், சமணம் இன்னும் பற்பல மதங்கள் எழுந்து வேதங்களை ஒழிக்கமுயலும், வேத வழிபாட்டை அழிக்க முயலும் என்பதை அறிந்த பகவான் முன்கூட்டியே அதை முறியடிக்க அடியார்களை அனுப்பினார்.
அப்படி வந்த ஆழ்வார்கள் எளியவகையில் பகவான் மேல் பக்தி செய்யவும், எளிய பாடல்களில் பகவானை போற்றி அவன் நாமம் ஒன்றிலே மனம் உருகிநின்று வேதங்களின் பலனை பெறவும், பிற மார்க்க ஆபத்தில் இருந்து இந்துமரபை காக்கவும் இவர்களை அனுப்பினார்.
பின்னாளில் படுத்திருக்கும் பெருமாள் தூங்கும் புத்தர் என்றாவார், இன்னும் பல வகையில் இந்துமதத்தை அது ஆக்கிரமிக்கும், வேதங்களை அழிக்க முயலுமென தெரிந்து பரம்பொருள் இவர்களை அனுப்பினார்.
அவர்கள் போட்டுவைத்த காவல்தான், அவர்கள் இட்ட அஸ்திபாரம்தான் பின்னாளில் சமணம் பௌத்தமெல்லாம் பெரிதாக எழுந்தபோதும் இந்துமரபை அசையாமல் காத்துக் கொண்டது.
அவர்கள் இட்ட வழியில்தான், அவர்கள் சொன்ன தத்துவத்திலும் போதனையிலும்தான் பின்னாளைய ஆழ்வார்கள் பெரிதாக எழுந்து மதத்தை, மரபை இந்த ஞானமரபை பெரிதாக பரப்பி அந்த ஜோதியினை அணையாமல் காத்தார்கள்.
அதனாலே பெரும் மன்னர்கள் வந்து திருவரங்க ஆலயத்தை மிக பெரியதாக்கினார்கள். இன்னும் அழியா பெரும் பெரும் ஆலயமெல்லாம் எழுந்து இந்த ஞானவழி நிலைத்தது.
எத்தனையோ இடர்களையும் சோதனைகளையும் தாண்டி அது நிலைத்தது.
எல்லாவற்றுக்கும் மூலகாரணம் அந்த ஆழ்வார்கள், அவர்களாலே இறைசித்தப்படி இதெல்லாம் நடந்து இன்று இந்த இந்துமதம் எழுந்துநிற்கின்றது.
பிற்கால தவறான சித்தாந்தங்களை, தவறான போதனைகளை குழப்பங்களை உடைக்க அவதரித்தவர் பூதத்தாழ்வார், அதனாலே அவர் விஷ்ணுவின் பலமான கதாயுத அம்சம் எனக் கருதப்படுகின்றார்.
கதாயுதம் என்பது சக்திவாய்ந்தது, பலமானது, எந்த சுவரையும் கோட்டையும் தூள் தூளாக்குவது. அப்படி எதிரிகளை தூள் தூளாக ஆக்கி உடைத்துப் போட வந்தவர் பூதத்தாழ்வார்.
அவரின் பாசுரங்களின் உருக்கமும், ஆழமும், ஞான தாத்பரியமும் அதை சொல்கின்றன, கேட்போர் மனமெல்லாம் உருக்கும் அப்பாடல்கள் எந்த எதிர்சமயத்தவர் வாதத்தையும் முடங்கிப் போட்டு அவர்கள் இதயத்தை தொடும் அளவு ஞானமானவை. உருக்கமானவை.
அவரின் வாழ்வு மாமல்லையில் தொடங்கிற்று, எப்போதும் இறைவனை நினைத்து அவனையே பாடிக்கொண்டிருந்தவர், அவனை தவிர ஏதும் அறியாதவர்.
அவர் 13 கோவில்களுக்கு மங்கள சாசனம் பாடினார். திருப்பதி, திருவரங்கம், திருமாலிருஞ்சோலை, பகவான் பள்ளி கொள்ளும் திருபாற்கடல் (இது வைகுந்தத்தை நோக்கி பாடுவது), திருகுடந்தை, திருகோட்டியூர், திருகச்சி, திருபாடகம், திருகோவிலூர், திருதஞ்சை மாணிக்க கோவில், திருதங்கல், திருநீர் மலை மற்றும் அவர் அவதரித்த கடல் மல்லை ஆகிய தலங்களுக்கு மங்களா சாசனம் எனும் வாழ்த்துப்பாடல்களை பாடி தொழுதார்.
இவரின் வாழ்வு முழுக்க எளிமையான ஆனால் உருக்கமான பக்தி பாடல்களே ஆக்கிரமித்தன. எப்போதும் பகவான் நினைப்பில் இருப்பதையும் அதையே பாடுவதையும் ஆலயங்களிலே வீழ்ந்து கிடப்பதையும் செய்து கொண்டிருந்தார்.
பக்தியில் பூதம் போல விஸ்வரூபமும், ஞானத்தில் பூதத்தின் பலமும் கொண்டிருந்தார்.
அவரின் வாழ்வின் மகா முக்கிய சம்பவம் அந்த திருக்கோவிலூர் மிருகண்டு முனிவர் குடிலில் நடந்தது, அங்கேதான் மிகச் சிறிய அறையில் அவரும் பொய்கை ஆழ்வாரும் பேயாழ்வாரும் இருட்டு அறையில் நின்று கொண்டிருக்க இருளில் பகவான் அவர்களை நெருக்கியபோது ஆளுக்கு 100 பாடல்களை பாடி முதல் மூன்று திருவந்தாதிகளை கொடுத்தார்கள்.
அப்படி இரண்டாம் திருவந்தாதி இவர் கொடுத்தது
“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்”
என திருகோவிலூரில் அவர் அந்த சிறிய அறையில் தொடங்கிய பாடல்தான், இருளிலிருந்து ஒளியினை வேண்டி இறைவனைக் காண வேண்டி பாடிய தொடக்கப் பாசுரம்.
அறியாமை அக இருளை அகற்றி ஞானம் தரவேண்டும் பரம்பொருளே என வேண்டி கேட்ட பாசுரம்.
“அறிவை அளிக்கும் தமிழ் நூலை இயற்றிய நான், அன்பை அகலாகவும், அந்த அன்பினால் விளைந்த ஆர்வத்தை நெய்யாகவும், இனிமையாக உருகும் மனதின் எண்ணங்களை திரியாகவும் இட்டு, அதனாலே உருவாகும் ஞானத்தை ஒளியாகக் கொண்டு நாராயணனுக்கு விளக்கு ஏற்றுகின்றேன், பகவானே நீ வருவாயாக” என அந்தத் தொடக்க பாடலுக்கு பொருள்.
அப்படி அன்பே பகவான் விரும்பும் விஷயம், அன்புள்ள மனமே அவன் நாடுகின்றான். அன்பை விளக்காக கொண்டு சிந்தையினை திரியாக்கி ஞானச்சுடராய் ஒளிரவிட்டால் பகவான் தெரிவான்.
அன்பே அவன் வடிவம், அன்பே அவன் உருவம், அன்பினை அவனிடம் ஞானத்தால் வெளிப்பட வெளிப்பட அந்த ஜோதி தெரியும் எனப் பாடுகின்றார்.
அதாவது அதன் சூட்சுமமான பொருள் என்னவென்றால் இறைவன் ஜோதிவடிவானவன், அந்த ஜோதியினை அன்பான மனதிலே காணலாம், அறியாமை இருளகற்றி காணலாம் என்பது.
அன்பே, எல்லா உயிர்கள் மேலும் அதன் ஆதாரமான பகவான் மேலும் காட்டும் முழு அன்பே இறைவனை அடையும் வழி என்பதை போதிக்கின்றார்.
அதாவது பின்னாளில் சமணமோ, பௌத்தமோ பிற மார்க்கங்களோ போதிக்கும் போதனையின் சாயலை என்றோ பாடிவைத்தவர் பூதத்தாழ்வார்.
அவரின் மிகச் சிறந்த பாசுரங்கள் சிலவற்றை காணலாம். அப்போது அவரின் ஞானமான பக்தியும் அபாரமான சரணடைதலும் உருக்கமாகத் தெரியும்.
சில பாசுரங்ள் இதோ,
“ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் – வானத்து
அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணி அமரர் கோமான் பரிசு”
அதாவது ஸ்ரீமன் நாராயணனுடைய மேலோக திருநாமங்களையும் மற்றும் அப்பெருமானுடைய அவதார திருநாமங்களையும தவறாமல் சொல்லி ஞானத்தால் உணர்ந்து வழிபட வேண்டும், ஞானத்தால் அறிவால் அவனின் பெருமை மிக்க நாமங்களை மட்டும் சொல்லி வந்தால் போதும், அந்தப் பலன் நம்மை வைகுண்டத்தில் அழியா நிலை கொடுத்து பகவானை பாடும் கணங்களின் தலைவனாக அமர்த்தும்.
பகவான் நாமத்தைவிட பெரிய வழிபாடு இல்லை என விஷ்ணுசகஸ்ரநாம பலனை சொல்கின்றது.
“தாம் உளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே- வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது”
தங்கள் உள்ளத்தில் பகவான் இருப்பதை உணர்ந்து, உள்ள தடாகத்தின் மலர்களால் அவனை அர்சித்து , மனதில் எழுந்தருளும் அந்த பகவானின் பாதங்களில் தலைவைத்து வணங்குபவர்கள் கொடிய நரகத்தை அடைய மாட்டார்கள் என்பது பொருள்.
பகவானை மனதால் துதிக்கும் போது அங்கே அவர் எழுந்தருள்வார், அவரை சிந்தையால், புத்தியால், ஞானத்தால் வழிபடும்போது நல்லன எல்லாம் கைகூடும், முக்தி கைகூடும். அப்போது நரகம் ஒரு காலமும் வாய்க்காமலே போகும் என்கின்றார்.
இதயத்தில் இறைவனை வைத்து இதயத் தாமரையில் பூஜிக்கவேண்டும் என்பது பாடலின் போதனை.
“கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது – உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக்கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு”
அன்று வாமனனாய் மாவலியிடம் சென்று யாசித்து உலகங்களை பெற்றதும், மிடுக்கையுடைய நரசிம்மனாய் பலசாலியான இரணியனின் மார்பிலே தனது நகங்களை அழுத்தி கிழித்து அழித்ததும், ஒருகாலத்தில் தான் அளந்த ஏழு உலகங்களையும் உண்டதும், ஆகாசத்தைக் காட்டிலும் பெருமை படைத்த செயல்களையுடைய தாமரைக் கண் செந்தாமரைக் கண்ணனான பெருமானின் நியாயமான செயல்களே என்பது பொருள்.
அவன் மாவலியாய் வந்து நாடகமாடி மாவலியினை அடக்கியதும், தூணில் ஒளிந்திருந்து நரசிம்மமாய் வந்ததும், பின் தான் அளந்த உலகை தானே கண்ணனாய் குழந்தையாய் வந்து அள்ளி உண்டதும் அவனுக்கு நியாயமான செயல்களே.
அதாவது உலகுக்கு மாவலியினை அவன் வஞ்சித்தான் என்றும், இரணியனை தந்திரமாக கொன்றான் என்றும், தன் கால்பட்ட மண்ணை தின்றான் என்பது ஒரு மாதிரி விஷயமாக பட்டாலும் அவன் தர்மத்தை அரங்கேற்ற எந்த வடிவிலும் எந்த நிலையிலும் வருவான், தர்மத்தை செய்ய அவனுக்கு எந்த உருவிலும் வரும் ஆற்றல் உண்டு, அது சரியானது என்பது பொருள்.
வாலிவதமும் இவ்வகையில் முக்கியமானது, தர்மத்தை நிலைநாட்ட செய்யப்படும் எல்லாமே அறம் என்கின்றார்.
“அவன் கண்டாய் நல்நெஞ்சே ஆர் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் – அவன் கண்டாய்
காற்று தீ நீர் வான் கருவரை மண் கார் ஓதச்
சீற்றத் தீ ஆவானும் சென்று”
என் நல்ல மனமே அவன் அருளை தேடு அவனைக் கண்டுகொள், உன் ஐம்புலனும் அவனை உணரட்டும், அவன் காற்று, நெருப்பு நீர், வானம், ஆகாயம், மலை, மண், மழை என எல்லாமுமாக இருக்கின்றான், காண்பவை காணாதவை எல்லாம் அவன் என்பதை உன் ஐம்புலன்களால் பணிந்து அவனை அடைவாயாக, அவனே எல்லா வடிவினன் என்பதை தெரிந்துகொள்வாயாக.
“மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் – எனைப் பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன் ஒரு நாள்
மா வாய் பிளந்த மகன் “
கணக்கற்ற வைதிகர்களால் தேவாதி தேவன் என்று சொல்லப்படுபவனும், பாற் கடலிலே சயனித்திருப்பவனும் , முன்பு ஒரு நாள் குதிரையாக வந்த அசுரன் கேசியின் வாயைப் பிளந்தவனும், சிறுபிள்ளையானவனும் மேலும் திருமலையிலிருப்பவனும் நினைப்பதற்கு அரியவனும் திருவரங்கத்தில் உள்ளவனுமான பெருமான் என் மனத்திலும் உள்ளான்.
“சிறியார் பெருமை சிறிதின்கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர்- அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு என் நெஞ்சே இரு”
“என் மனமே! மேன்மை என்பது சிறிதும் இல்லாத அற்பர்களின் அகங்காரத்தால் பெறப்படும் பெருமையானது, விரைவிலேயே அவர்களைத் தாழ்விலே கொண்டு சேர்த்துவிடும்.
நன்மை தீமைகளைப் பகுத்தறியும் அறிவில்லாதவர்களும், தங்களின் அறியாமையினால் மேன்மேலும் அறிவில்லாதவர்களாகவே ஆகிவிடுவர்.
பிறர் அறியாவண்ணம் மகாபலிச் சக்கரவர்த்தியிடம் பூமியைத் தானமாகப் பெற்றவனும், அந்தப் பூமியைப் பிரளய காலத்தில் உண்டவனும்,
பின் படைப்புக் காலத்தில், அந்தப் பூமியை வெளிப்படுத்தியவனுமாகிய எம்பெருமானின் செயல்கள் வியக்கத்தக்கவை.
அப்பெருமானையே எப்பொழுதும் நினைத்து வாழ்ந்தால், நமக்கு எக்குறையும் இராது!”
“உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர் மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேய் இரும் சாரல் வியல் இரு ஞாலம் சூழ்
மா இரும் சோலை மலை “
சர்வேஸ்வரனே, நான்கு வேதங்களையும் உணர்ந்தாய், பின் அதனை போதிக்கின்றாய், அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி உள்ளிட்ட நூல்களையும் பல ரிஷிகள் மூலம் அருள்கின்றாய், பூவில் வந்த அலர்மேல் மங்கையுடன் கூடி வாழ்கின்றாய்.
மூங்கில்கள் மிகுந்த இந்த அழகிய திருமால் சோலையிலும் வந்து வாழ்கின்றாய் என்பது பொருள்.
வேதம், வேதங்களின் சாரம், அதைசொல்லும் ரிஷிகள், வைகுண்டம், பூலோகம், மலை சோலை எல்லாம் அவனே. அவன் வடிவமே என்பது பூதத்தாழ்வார் சொல்லும் போதனை.
“எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கு என்றும் சார்வம் அறிந்து – நமக்கு என்றும்
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து “
அதாவது, சங்க நிதி, பதுமநிதி எனும் பெருஞ்செல்வத்தை தங்களுடையதாக நினைத்து ஏமாந்து இராதே. தங்களுக்கு எப்போதும் அடைக்கலமாக இருக்க கூடிய உபாயத்தை அறிந்து நமக்கு என்றும் மாதவனே எம்பெருமானே என்ற மனம் படைத்தவராக அவன் திருநாமத்தை இடைவிடாது வேதம் போல் ஓதுவதே வாழ்வாக உணரவேண்டும்.
பொருட்செல்வம் அழியும் அது மறுமை வரை வராது, அழியாத பெரும் செல்வமான பகவான் நாமத்தை சொல்லி அவனை அடைதலே வாழ்வின் நோக்கமாக இருக்கட்டும் நெஞ்சே என்பது பொருள் “
“உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் – உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்து அவன் பேர் ஈர் ஐஞ்ஞூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம் “
நல்ல நெஞ்சமே, புருஷோத்தமன் எப்போதும் நம்மை ரட்சிப்பதிலே கவனமாய் இருக்கின்றான் என்பதை மறவாதே, அவன் தன்னை நம்புவோர் மனதில் இருப்பான், திருப்பாற்கடலில் உறங்குவான், திருமலையில் நிற்பான், நம்முடைய மனதில் அவன் நித்திய வாசம் செய்கின்றான் என்பதை அறிந்து கொள்.
எனக்குப் பாங்கான மனமே! புருஷோத்தமனான எம்பெருமான் சத்தியமான குணத்தை பெற்றிருப்பவன் என்பதை பார், எக்காலத்திலும் நம்மை இரட்சிப்பதே அவனுக்கு வாழ்வு.
ஆஸ்திகர்களுடைய மனத்திலே நித்யவாசம் பண்ணும் அவன், திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருள்பவனும், திருமலையிலே நிற்பவனுமான அந்த பகவான் இப்போது நம்முடைய இதயத்திலே வந்து புகுந்து நித்யவாசம் செய்கின்றான் என்பதை தெரிந்துகொள்.
“பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டு அவனை மெய்யே – மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு”
பகவானை பகலில் கண்டேன்; கனவில் கண்டேன;, அவன் மெய்யை கண்டேன்; பொலிவான அவன் சேவடியோடு சோதி வடிவினை கண்டேன் என்பது பகலில் சூரியனை காண்பதை போல நேரடி அர்த்தம் தரும் விளக்கம்.
ஆனால், உண்மையான விளக்கம் ஆழமானது.
அஞ்ஞான இருளில் இருந்து வெளிப்பட்டு பகலைக் கண்டேன் என்பது பொருள். இருளில் அறியாமை மாயை எனும் இருளில் இருந்த நான் இப்போது வெளிச்சம் கண்டேன் இறைவனில் கண்டேன் என பூதத்தாழ்வார் சொல்கின்றார்.
நாரணன் கண்டேன் என்கின்றார், நாரம் என்றால் தண்ணீர் என்று ஒரு பொருள் உண்டு. தண்ணீரில் இருப்பவன், துயில்பவன் என்று இன்னொரு பொருள்.
“கனவில் மிகக் கண்டேன்” எப்போதும் அவன் நினைவில் இருப்பதால் கனவிலும் அவனை கண்டேன் என்கின்றார்.
“மீண்டவனை மெய்யே- மிகக் கண்டேன்” என்றால் என்னை விட்டு அவன் மறைந்தாலும் மீண்டும் மீண்டும் நினைவால் அவனைத் தேடி கண்டுகொண்டே இருக்கின்றேன் என்கின்றார்.
“நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு”
சக்கராயுதம் ஒளி வீச, சிவந்த திருவடிகளோடு, வானில் திகழும் அந்த ஜோதி வடிவை கண்டேன் என்கிறார்.
அறியாமை இருளில் இருந்து வெளிவந்து ஞான வெளிச்சத்தில் அவனை எப்போதும் கண்டுகொண்டே இருக்கின்றேன் என்பது அவர் சொல்லும் போதனை.
“அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின்மேல் துயில்வான் – முத்தீ
மறை ஆவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்
இறை ஆவான் எங்கள் பிரான்”
இப்பாடல் காஞ்சி அத்திவரதரை குறித்து அவர் மங்கள சாசனம் பாடியதைசொல்லும் பாடல், அந்த காஞ்சி அத்திவரதரின் தொன்மையினை சொல்லும்பாடல்.
அந்த அத்தியூரான் கருடவாகனத்தில் வருவான்; மணிகள் பதித்த நாகத்தின் மேல் துயில்வான்; அவனே வேதமும் ஆவான்; பாற்கடலை கடையும் போது நஞ்சை உண்ட சிவனுக்கும் இறைவன் ஆவான்” எனப் பாடுகின்றார்.
அன்றே அந்த காஞ்சியின் ஆலயங்களை பற்றிய தகவலும் அத்திவரதர் செய்திகளும் அவரால் பதியப்பட்டிருக்கின்றது.
“இறை யெம்பெருமா னருளென்று,
இமையோர் முறையினின்று மொய்ம்மலர்கள் தூவ-
அறை கழல் சேவடியான் செங்கணெடியான்,
குறளுருவாய் மாவலியை மண் கொண்டான் மால்”
எங்களுக்கு ஸ்வாமியான வாமனனே கிருபை செய்யென்று தேவர்கள் வரிசையாய் நின்று அழகிய மலர்களை சமர்பிக்க, ஒளிக்கும் வீரத்தண்டையை அணிந்த சிவந்த திருவடிகளையுடையவனாயும், சிவந்த திருக்கண்களையுடையவனாயும், யாவற்றிற்கும் மேலான சர்வேசுவரன் அவர்களிடத்தில் அன்புகூர்ந்து வாமன ரூபியாய் அவதரித்து மஹா பலியின் யாகசாலைக்குச் சென்று பூமியை வாங்கி வசமாக்கிக் கொண்டான்.
இப்படி மிக மிக உருக்கமான பாடல்களை தரும் அவரின் போதனைகளை இப்படி சுருக்கி சொல்லலாம் அது அர்த்தமானது.
“சர்வ ரட்சகரான அந்த ஸ்ரீபதியின் திருநாமங்களையும், இதைக்காட்டிலும் வேறான குணங்களைச் சொல்லும் திருநாமங்களையும் ஞானத்தால் நன்றாயறிந்து பக்தியால் சொன்னால், நமக்கு பந்தம் கொண்டவனாய், அவனுக்கு பாற்கடலில் சேவகம் செய்யும் நித்ய ஸுரிக்களாய் நம்மையும் அவன் ஸ்ரீ வைகுண்டத்தில் சேர்ப்பிப்பான்.
என் மனதை நகரமாகச் செய்து, பிரகாசிக்கும் மாணிக்க வைரங்களான என் எல்லையற்ற அன்பையே சேகரித்து, சிநேகமான முத்தை நேர்த்தியான மலராய் ஸமர்ப்பித்து, ஒப்பில்லாத அழகிய தாமரைப்பூவை ஏந்திக்கொண்டு, பிராட்டியை அந்தத் திருமேனியில் வலது திருமார்பில் வைத்துக்கொண்டவனுடைய திருவடிகளைப் பணிந்தேன்.
குணதோஷங்களை அறிந்து, ஐந்து இந்திரியங்களையும் அடக்கி, லௌகீக சுகங்களில் செல்லாமல் விஷய சுத்தமான மலர்களை மனமாக கொண்டு, ப்ரீதியால் மிகுந்த மனதையுடையவராய்,அவனை உணர்ந்து திருநாமத்தை ஓதித் துதிக்கும் மஹாபாக்யசாலிகள் என்னுடைய திருவடிகளை நேரில் காண்பார்.
அவனைத் தவிர வேறு யாரையும் போற்றி அனுபவித்த சுகம் சிறிது, துக்கமோ பெரிது .
எல்லா லோக தேவர்களும் உன் வாசலிலிருந்து தினந்தோறும் உன் பாதங்களைத் தொழுது மோட்சத்திற்கும் பூமிக்கும் நடுவிலிருக்கிற நல்ல லோகத்தை அடைவார்கள்.
சரணடையத் தகுந்த அந்தத் தேவர்களென்றும் சரணடையும் இம்மனிதர்களென்று பேதமில்லை. அவனுடைய திருவடிகளைத் தொழுது துதிக்காதவர் யார்?
வயிற்றைப் பெரிய ஊராகச் செய்து, பிறரால் ஏறிட்ட தீமைகளையும் புத்தி பூர்வமாகச் செய்த தீமைகளையும் சம்பாதித்து, இவ்வுலக சுகத்தில் பாக்யத்தை அனுபவிப்போர்களை மதிக்காத புத்தியற்றவர்களே! பகவானுடைய திருநாமங்களை ஓதி, சஞ்சரித்து ஜகத்திலுள்ள மற்றவரையும் பரிசுத்தப் படுத்துகிறவர்களாகக் கடவீர்.
தனக்கு எம்பெருமானிடத்தில் அடிமைத் தனம் நேர்ந்ததென்று தானே தெரிந்துகொள்ளாமற் போனாலும், அவனை மனதில் புகும்படி ஸ்திரப்படுத்துவதே நமக்கு சகல நலனையும் அருளும். காட்டிலுள்ள மேட்டைத் தடாகமாக்கும்படி செய்வதே மானிட பணி.
அதற்கு மேல் மழையைப் பெய்யும்படி செய்யும் மானுடன் யார்? அதெல்லாம் பரம்பொருளின் கருணையன்றோ.
தாங்கள் அறியாமற் செய்யும் தப்புகளையும் அறிந்து செய்யும் தப்புகளையும் கையிட்டு, எக்காலத்திலும் நன்மார்க்கத்திலிருந்து உன்னை அனுபவிப்பார்களும், ஒழிவில்லாமல் வாமனனுடைய திருநாமங்களைச் செவ்வையாய் அறிந்து அழகாய்த் துதிக்கக் காரணங்களைப் பெற்றவர்களும், மேன்மேல் சுகத்தை அனுமதிப்பர்.
அவர்கள் பகவான் காரியம் செய்கிறவரான தாங்கள் இருந்தார்களே, தங்களுடைய கருவியான மனது சரீரத்திற்குள்ளே இருந்து செய்ததே, பகவானை துதிப்பதற்குக் காலமுமிருந்ததே. அந்த ஜகன்னாதனுடைய திருவடிகளைக் கிட்டும்படியான தலையை உடையவர்களாக இருந்தார்களே, அப்படிபட்டவர்கள் கொடிய நரகத்தை அடையமாட்டார்கள்.
தங்கள் ஜீவசக்தியால் எல்லா ஜீவனின் தொழில்களையும் கவனித்து அதில் பகவானை காணும் மகா புருஷரை அடைந்தால் கிடைப்பதற்கு அரிதான மோட்சம் எளிதாகும்.
தங்கள் ஞானத்தால் பகவானை உணர்ந்து அவனை எல்லா ஜீவராசிகளின் இயக்கத்தில் காணும் மகாபுருஷனை அடைந்தால் அவன் வழி அந்த குருவழி மோட்சத்தை அடையலாம்.
என் நெஞ்சமே, பூரணமான அருளை அடையதக்க தவத்துக்கும் அது கொடுக்கும் ஆனந்தத்துக்கும் அவனே பிரபு, அவனே சுவாமி , பஞ்ச பூதங்கள் அதன் சக்திகள், பெரும் கடல்கள், வடக்கினி எனும் அக்கினிக்கும் அவனே தெய்வம், ஆகையால் அவனையே சரணடைவாய்.
திருமாலே, என் மனம் தியானத்தில் உன்னோடு கலந்ததால் ஆனந்தமான என் வாக்கும் உன் திருவடிகளையே துதித்து உன் பெருமையினைப் பாடி மகிழ்ந்தது. என் உடல் உன்னை நினைந்து நர்த்தன நடனமாடி களித்துக் கிடக்கின்றது.
பகவானே உன் திருவடிகளுக்குத் தவத்தாலும் அழகிய மலர்களாலும் பூஜை செய்கின்றேன், அதனால் உன் கருணையினைப் பெற்று உனக்குக் கைங்கரியம் செய்கின்ற தகுதிப் பெற்றேன்.
பகவானே, லௌகீக விஷயங்கள் இனியவை எனச் சொல்வார் உண்டு, சில பானங்கள் இனிமை, அமிர்தம் இனிமை என்பார் உண்டு. ஆனால், உன் பெருமை அறிந்து அதனை ஆசையோடு ஒருவன் பற்றிக் கொண்டால் இவை எல்லாம் இன்பமாகுமோ, அப்படியே உன் நாமம் உன்னை பற்றியவரைக் காக்காமல் போகுமோ?
மனமே, அற்ப மனிதர்கள் பெருமை அவர்களின் அற்பனத்திலே சேர்த்துவிடும், பாவபுண்ணியங்கள் அறியாதவர்கள் புத்தியற்றவர்கள், மாயக் கண்ணனை போல அற்புதமான செயல்களை செய்யவல்லவன் வேறொருவனில்லை என்று உணர்ந்து அவனை பற்றிக்கொள், உறுதியாகப் பற்றிக்கொள்.
பெருமாளே, உன் திருவடிகளை ஏற்றிப் பணியாவிட்டால் நாங்களெடுக்கும் பல பிறவியெல்லாம் வீணாகும்.
மனமே, தனக்கும் பிறர்க்குமான இருவருடைய செல்வத்தை நமக்கு வேண்டுமென்று பிரமித்திராமல், தங்களுக்கு எக்காலத்திலும் காப்பு இதுதான் என தெரிந்துகொண்டு, அதாவது நமக்கு எக்காலத்திலும் மாதவனே அடைக்கலமெனும் சிந்தையோடு இரு, அதற்குமேல் அவனுடைய திருநாமங்களைச் சொல்வதே வேதமாகும் என்பதை அறிந்து கொள்.
வேதத்தின் தாத்பரியத்தை அறியாதவர்களே! வேதத்தின் அர்த்தத்தை அறியமுடிந்தால் புருஷோத்தமனுடைய திருநாமத்தைதின் தொடக்கமும் முடிவுமாக இருக்கும், அவனே வேதம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
வயது முதிர்ந்து, நரை கூடி, உடல் தளர்ந்து, பேச்சற்று வாய்குளறி உடலெல்லாம் கோழை வடிந்து கிடக்குமுன் அவனை சரணடையுங்கள், இல்லையேல் இந்த உடல் எடுத்த பலன் என்ன? அது வீணாகப் போகுமே.
மானுடரே, உங்களுடைய சொந்த புத்தியால் அவனை ஒரு காலமும் அடைந்து மோட்சத்தை அடைய முடியாது
அவனுடைய கிருபையினாலே அவன் கருணையினால் மட்டுமே அவனை அடைய முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
பகவானே, உன் நீண்டழகிய தோள்களைக் காண உன்னையே தியானிப்பேன். இப்படி நினைப்பவர்கள் அடுத்த பிறப்பை அடையமாட்டார்கள், உன்னை தொழுபவர்கள் எல்லா சுகங்களையும் மறந்து உன்னையே பற்றிக்கொண்டு மீட்சிப் பெறுவார்கள்.
அவனுடைய பாதகமலங்களை யார் தொழுவரோ அவருடைய சரணங்களைத் தொழுவதே எனக்கழகு என் கைகள் பண்ணும் சிறப்பு.
சிரேஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அரசனும் தெய்வமுமான அந்த பகவான் நாமத்தை சொல்லாமல் அவனை தியானியாமல் இருப்பவர்களை நான் மனிதர்களாக கருதவே மாட்டேன்.
அவனுடைய பாத கமலங்களை யார் அர்ச்சித்து வழிபடுவார்களோ அவர்களுக்கு முன்பு இருந்த கவலை ஏதும் இராது, அவனால் எல்லா கவலையும் தீர்ந்த நிலைக்கு செல்வார்கள்.
திருமாலிருஞ்சோலை எனும் கள்ளழகர் கோவில். திருமலை இவ்விரண்டும் நீ உகந்தருளின திருப்பதிகளென்று எண்ணுவதுபோல், என் மனமும் நீ உகந்து பள்ளிகொள்ளும் திருக்கோயிலென்று எண்ணவேண்டும். இதையே வேண்டினேன் என் பெருமானே.
வரதராஜனே, ஏழ் பிறப்பினும் எல்லா கிழமையிலும் எந்த நிலையிலும் உன்னையே துதித்து, உன்னையே நான் நம்பியிருப்பதால் எப்போதும் உன்னைவிட்டு அகலாத ஆனந்த கடலை எனக்கு அருள்வாய்.
திருமாலை சந்திக்கவேண்டும் எனும் பெரும் ஆர்வம் வெள்ளமாக பொங்கிவிட்டால் அதை கட்டுபடுத்துவது சிந்தித்தால் நடக்குமோ, அது அணைகடந்த வெள்ளமாய் அவனை அடைந்தே தீரும்.
உலக மாந்தரே, திருமகளுடன் நின்றருளும் தெய்வத்தை நாவால் துதிக்கும் கர்மத்தில் உறுதியாயிருங்கள். நாங்கள் எமக்கு ஸ்வாமியான ரமாகாந்தனுடைய திருவடிகளையே பற்றி நின்று மோட்சம் அடையுங்கள், எட்டுதிக்கிலும் இருக்கும் மக்களே உங்களுக்கு அவனே அடைக்கலாம்.
அவன் ஒரே ஒரு உருவத்தில் இருப்பவன் அல்ல, அவன் தன்னை அண்டியவர்களுக்கு எளியவனாய் எந்த உருவில் வணங்கினாலும் அந்த உருவில் வருவான்.
அடியார்களின் வணங்குதல்படி அவன் வரும் உருவமே தொண்டர்கள் உய்ய வழியாயிற்று, அவன் உருவமற்றவன். ஆனால், மானிடர் உணரும்பொருட்டு உருவோடு வந்து வழிநடத்தி உய்விக்கின்றான், அவன் கருணை அலாதியானது.
கண்ணனே, நம் பாவங்களை கழுவும் சத்குருவென்று அவனை வணங்கின்றேன், என் அறியாமையால் முன்பு அவனை அறியாமல் இருந்துவிட்டேன், இவனை அறியாமல் இருந்ததற்காய் வருந்தி இப்போது அவனிடமே சரணடைந்துவிட்டேன்.
கண்ணா, இதிஹாஸ புராணங்களுடைய தாத்பரியத்தை உள்ள படியே அறிந்து துதித்தால் அதன் ஆதார அர்த்தங்களும் உனக்கு வாசகமான திருநாமமாகவே இருக்கும். விசேஷமாய்ச் சொல்லப்படுகிற ஸ்லோகங்களுக்கு நீயே பொருள்.
பூரணமாக உன்னைப் பாட முடியுமோ?, உன்னைப் பரிபூர்ணமான மொழிகளால் துதித்துக் காண எனக்கு அருள் செய்வாய்.
உன் திருமேனியைப் பணிந்தேன். உன் சேவடிமேல் அழகிய கமலங்களை அன்பாய்ச் சாற்றினேன். விரும்பி உன்னை ஏற்றினேன். இந்த தேஹம் விழுந்தபின் புகும் ஸ்ரீவைகுண்டத்தில் உன்னை சதாகாலம் சேவித்து அங்கே இருந்து துதிபாடும் பாக்கியத்தை அருள்வாய்.
நல்ல நெஞ்சே இந்த பிறப்பு துக்கமும் அழுகையும் உடையது என்பதையும் சாபமானது என்பதையும் அறிந்தாதனால் சர்வ ரட்சகனான அவனுடைய திருநாமத்தை ஓதி அந்த துக்க கடலில் இருந்து வெளிவருவாய், இதனை ஆராய்ந்துபார்த்து பிறவிக் கடலை கடக்கும் வலிமையினை அவனிடமே கேள், அவன் உனக்கு அருள்வான்.
பகவானே, உன் திருமேனியைக் கனவில் கண்டதுபோல் கண்டேன். அக்கனவில் உன் திருக்கையில் விளங்கும் சுடர் திரு சக்கரத்தைக் கண்டேன். ஆத்மாவுடன் கூடியும் துக்கத்தை விளைவிப்பதுமான புண்ய பாவங்கள் என இரண்டையும் துரத்தி விட்டுப் பின்னும் திரும்பி வரக் கடவதாய்ச் செய்யும் மிக பெரிய வானத்தை போல உன் சக்தியையும் கண்டேன்.
இப்போது எல்லையற்ற புகழும் தடையற்ற அதிகாரமும் நினைப்பதற்கரிய செல்வமும் வாய்ந்து இப்புவியை யாளும் ராஜ ராஜாக்களும், பெரும் செல்வாக்கும் அறிவும் படைத்தவரெல்லாம் முன்பு அவன் பாதங்களை பற்றியவர்களாகவே இருப்பார்கள்.
பகவானே, எழு ஜன்மங்களிலும் எல்லா நிலைமைகளிலும் புண்ணியம் செய்தவன் நான், தவத்தின் பலனை முழுக்க அடைந்தவன் நான், அந்த புண்ணியமும் தவமும் வாய்க்கப்பெற்றதாலே இப்பாமாலையினை பாடி உன்னுடைய பாதங்களில் சமர்பிக்கும் பாக்கியம் பெற்றேன், பெரிய தமிழ்பண்டிதனாக நீ என்னை உருவாக்கியதன் காரணத்தை பூர்த்தி செய்துவிட்டேன்.
மனமே! புருஷோத்தமனுடைய பாத கமலங்கள் அர்சிக்கதக்கவை. அவைகளை அழகிய தாமரை மலரால் பூசனை செய்யகடவாய். அவன் பாதத்தை ஏற்றிப்பணிந்து அவனுடைய ஆயிரம் திரு நாமங்களை எக்காலத்திலும் சொல்வதே உன் கடமையாகட்டும்.
நான் அவனுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்றேன், அவன் அழகிய திருவடிகளில் கரைந்தேன், அதன் பெருமைகளை உணர்ந்து கொண்டு பரிபூரண அருள் பெற்றேன்.
அவன் பாதத்திலே நான் இவ்வளவு பரவசங்களை அடைந்தேன் என்றால் அவன் திருமேனி முழுக்க கண்டால் நான் என்னாவேன்? அக்காலம் எப்படி இருக்கும்?
அஞ்ஞானமான பெரும் இருளில் என் ஆயுள் முடியாமல் நல்ல பொழுதில் விடியகண்டேன், என் சர்வேஸ்வரனை கண்டேன், லௌகீகத்தில் இருந்து மனதை விலக்கி என் எண்ணத்தை அவன்மேல் திருப்பியவனை கண்டேன், அவன் திவ்யமான விக்ரஹததில் விளங்கும் திருவாழியினையும் திருச்சோதியினையும் நான் கண்ட பாக்கியத்த்தை எப்படி உரைப்பேன்?
வேதங்களின் தத்துவம் என சொல்லப்பட்ட பெருமையையுடைய திருமாலை பரிபூர்ணமில்லாத குறையுள்ள குற்றமுள்ள சொற்களால் பாடினேன். அவனோ நான் பாடியதை பாராமல் என் சிரத்தையினை மட்டும் கண்டு என்னை அணைத்துக் கொண்டான்.
அமிர்தமென்றும், தேன் என்றும், சக்கரபாணி என்றும் தேவர்களுக்கு அமிர்தத்தை மீட்டு கொடுத்தவன் என்றும் வேதங்களில் சொல்லப்படும் அந்த திருமாலை துதித்து அமிர்தம் போன்ற மாலையால் அவனை அலங்கரித்து மகிழ்கின்றேன், அவன் நாமம் அந்த அமிர்தத்தைவிட இனிமையானது.
அவனுடைய திருநாமங்களை கொண்டு வெறுமனே அவனை பாடிய கவிகள் அவனை பூஜித்ததால் அடைந்த பலன் என்ன? அவனை அண்டியர்கள் தங்கள் உடலால் செய்த காரியத்தால் அவனைக் கண்டார்களா?
அல்ல, அவனை தவத்திலும் தியானத்திலுமே முழுமையாக காணமுடியும்.
நான் எந்த சாதனாவினையும் செய்ய முடியாமல் தாயின் கர்பத்தில் கட்டுண்டு கிடந்தபோது திருகோஷ்டடியூரில் எழுந்தருளிய என் சுவாமியின் மகிமையினை கண்டேன், அவனுடைய திருவடி பெருமையினை இப்போதுதான் உணர்கின்றேன்.
அவன் எனனை கர்பத்திலே தேர்ந்தெடுத்தான், பின் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
திருகோவிலில் பள்ளிகொண்ட எம் பெருமானை முழுக்க அறிந்து அனுபவித்தவர்களுக்கு மட்டுமே நித்திய சேவை செய்யும் பொருட்டு வைகுண்டத்தின் வாசல் திறக்கும், அதை அறியாதவர்க்கு அது தப்பிவிடும் என்பதை இப்போது அறிந்து கொண்டேன்.
கற்பக விருட்சமான அவனின் பாதங்களை சரணடைந்து அவனின் லீலாவினோதங்களில் கலந்தபின் இந்த உலகின் பாக்கியசாலியும் பெரும் செல்வாக்கு பெற்றவனும் நான் அல்லவா? என்னைவிட பெரும் பாக்கியம் பெற்றவன் யார்/
இந்த உடல் வீழ்ந்தபின் கொடிய நரகத்தில் சேர்ந்துவிடுவோமோ என மனங்கலங்கியிருக்கும் நீங்கள், அந்நிலை வருவதற்கு முன் எத்தனையோ நூல்களில் சொல்லப்பட்ட எம்பெருமானின் அடைக்கலத்தினை பெற முயலுங்கள்.
மானுடர்களே, கொடிய நரகத்தின் சித்திரவதைகளை நினைத்து பாருங்கள், அங்கே எமனும் கிங்கிரர்களும் செய்யும் வதைகளை நினைத்துபார்த்து அந்த பரந்தாமனின் திருவடிகளை பற்றிகொண்டு அந்நிலை வராமல் மீளும் நிலையினை அடைந்துவிடுங்கள்”
இப்படி மிக அழகான ஆழமான ஞானமான போதனைகளை சொல்லும் பூதத்தாழ்வார் இரு முக்கிய ஸ்லோகங்களில் மலைக்க வைக்கின்றார்.
“மண்ணுலக ஆளேனே? வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்தும் மேவேனே? – நண்ணித்
திருமாலைச் செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கைதொழுத பின்”
அதாவது எனக்குப் பூமியில் அரச பதவி கிடைத்தாலும், தேவர்களுக்குத் தேவனாக மேலோகப் பதவி கிடைத்தாலும் விரும்பமாட்டேன். எங்கள் பெருமானை தொழும் எனக்கு அதெல்லாம் அவசியமில்லை, அவனை தொழும் பாக்கியம் மட்டும் போதும் என்கின்றார்.
அவரின் இந்த பாடல் எப்போதும் சிலாகிக்கக் கூடியது.
“ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே
உத்தமன்பேர் எத்தும் திறமறிமின் ஏழைகாள் – ஒத்ததனை
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு”
ஒத்(து) என்பது சத்திய வேதம் என்பதன் தமிழ்ச் சொல். அதாவது சத்திய பிரமாணம் என்பது, ஆங்கிலத்திலும் சத்திய பிரமாணத்துக்கு இந்த வார்த்தைதான் வரும்.
அதாவது வேதத்தின் அர்த்தமும் முடிவும் இத்தனைதான். அது உத்தமனான திருமாலின் பெயரை ஏற்றமாகச் சொல்கிறது. ஏழைகளே, வேதத்தைப் படிக்க முடிந்தால் நல்லது. முடியா விட்டாலும் பரவாயில்லை, மாதவன் பேர் சொன்னால் போதும். அதுதான் வேதத்தின் சுருக்கம் என்கின்றார்.
அதாவது இந்த யுகத்தில் பகவானின் நாமத்தை சொன்னாலே போதும் அதுதான் வேதம், அதுவேதம் சொன்ன எல்லா பலனையும் தரும் என்கின்றார்.
இதைத்தான் பின்னால் வந்த எல்லா ஞானியர்களும் மகான்களும் சொன்னார்கள், அதை அன்றே சொன்னவர் பூதத்தாழ்வார்.
மாமல்லையில் பிறந்த அவரின் திருவாழ்வு, பகவானுக்குரிய பெருவாழ்வு வாழ்ந்தவர், மாபெரும் வைஷ்ணவ தத்துவங்களுக்கு அடிதளமிட்டவர் அந்தப் பூதத்தாழ்வார்.
எந்தப் பெருமாள் கோவிலுக்குச் சென்றாலும் அவர் பாடிய வரிகளைப் பாடி அந்தப் பரமனை வேண்டுங்கள், அவர் பெயரைச் சொல்லித் துதித்து வேண்டி நில்லுங்கள்.
அந்தப் பகவான் பெரும் பலனை உங்களுக்கு அளிப்பார், எல்லா நலனும் பலமும் உங்களை அடையும், ஞானம் கைக்கூடும், மோட்சபாக்கியம் கிட்டும்.
“அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே.
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே.
நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே.
நல்ல திருக்கடன்மல்லை நாதனார் வாழியே.
இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான் வாழியே.
எழின்ஞானச் சுடர் விளக்கையேற்றினான் வாழியே.
பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே.
பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே”
தன்னுடைய அன்பையே திரியாக இட்டு விளக்கேற்றிய பூதத்தாழ்வார் வாழ்க.
தனக்கு பகவத் விஷயத்திலே இருக்கக்கூடிய ஞானத்தையே கொண்டு விளக்கை ஏற்றிய பூதத்தாழ்வார் வாழ்க, வாழ்கவே.
பொன்னைப் போன்று இருக்கக்கூடிய திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாதர், அவரிடத்தலே மிகவும் ஈடுபாடு கொண்டு அவருடைய புகழை தன்னுடைய பாசுரங்களில் அழகாக வெளியிட்டவர் ஆழ்வார் பூதத்தாழ்வார் வாழியே.
வைகுண்டத்து பூதம் போல் எக்காலமும் நிலைத்திருக்கும் அந்தப் பூதத்தாழ்வார் வாழ்க வாழ்க.
பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்.