பன்னிரு ஆழ்வார்கள் 08 : பெரியாழ்வார்.
பன்னிரு ஆழ்வார்கள் 08 : பெரியாழ்வார்.
இந்துஸ்தானம் எனும் பாரத கண்டத்தில் ஒவ்வொரு பாகமும் ஞான பூமி, அது இந்துக்களின் பூமி. கலைகளில் இருந்து செல்வம் வரை இந்துமதத்துக்காக கொடுத்த பூமி.
அவர்களின் அபூர்வமான கல்சிலையும் கல் ஆலயமும் தெய்வத்துக்காய்க் கொடுக்கபட்டன, அவர்களின் நகை செய்யும் கலையும் இன்னும் நவமணிகளைக் கொண்டு உருவாக்கும் பொருளும் தெய்வத்துக்கே கொடுக்கப்பட்டன.
அரண்மனை கூட இல்லாமல் பிரமாண்ட ஆலயங்களை இந்து தெய்வங்களுக்கே அக்கால மன்னர்கள் கட்டினார்கள், சிற்ப கலையில் சிறந்த அந்த இந்துக்கள் அரசனுக்கு அன்றி தெய்வங்களுக்கே அழியாச் சிலை வடித்தார்கள்.
அவர்களின் நச்சுத் தொழில் உலகின் பெரும் தேர்களையும் கதவுகளையும் இந்து ஆலயங்களுக்குக் கொடுத்தன. பட்டு உடையில் கூட சிறந்தது தெய்வத்திற்கே சாற்றப்பட்டது.
உணவில் சிறந்ததை தெய்வத்துக்கே படைத்து மகிழ்ந்தார்கள்.
சந்தனமோ, அகிலோ, புனுகோ எது அரிதாயினும் அதைத் தெய்வத்துக்குச் சூட்டினார்கள், எல்லா வகை அறிவும் பொருளும் தெய்வத்துக்கு மட்டுமே அர்ப்பணம் என்றிருந்த உன்னத இனம் அது.
அப்படித்தான் அவர்கள் மொழியும் இறைவனுக்கே அர்ப்பணமாயிற்று, அதிலும் தமிழ் மொழி முழுக்க முழுக்க இறைவனுக்கே அர்ப்பணிக்கபட்டமொழி.
ஆம், இந்துமதமும் அதன் ஆழமான தத்துவமும் அழகும் பொலிவும் தன்னிகரில்லாதது, அந்த இந்துமதம் சொன்ன தத்துவ போதனைகளைப் பாடி பாடி ஆராதித்து வளர்ந்த மொழி தமிழ்.
இந்துமதம் என ஒன்றுமட்டும் இல்லாதிருந்தால் தமிழ் எனும் மொழி வளர்ந்திருக்காது. நீரற்ற மரம் போல் அது வீழ்ந்திருக்கும்.
இந்துமதம் எனும் பெருமதம் கொடுத்த மேகத்தில் உருவான நதிகளில்தான் தமிழ் எனும் மரம் வளர்ந்து கனி கொடுத்து கொண்டே இருந்தது, அந்த இத்துமதமே தமிழின் வளர்ச்சிக்கும் பொலிவுக்கும் ஆதாரமாய் இருந்தது.
தமிழின் உன்னத இலக்கியம் எனச் சொல்லப்படுபவை எல்லாம் இந்து இலக்கியங்களே, தமிழின் தத்துவ போதனயினைச் சொல்லும் குறள் அது. வள்ளுவன் ஒளவை என யாருடைய குறளாகட்டும், தமிழின் அழகைச் சொல்லும் ராமாயணமாகட்டும், தேவாரம் திருவாசகமாகட்டும், நீதிநெறிகளைச் சொல்வதும் இன்னும் காதலைச் சொல்வதும் போரைச் சொல்வதும் எனத் தமிழின் அழியா இலக்கியமெல்லாம், பொற்கால இலக்கியமெல்லாம் இந்துக்கள் பாடலே.
இதனாலே தமிழின் அழகான சுவையும் உருக்கமும் பக்தி இலக்கியங்களில் அழகாக பிரதிபலிக்கும், தமிழ் இறைவனுக்கான மொழி. இறைவன் தன்னைப் பாட தானே உருவாக்கிய மொழி என்பது அதன் பக்தி இலக்கியங்களில்தான் தெரியும்.
பக்தியில் மூழ்கிய தமிழன் எவனோ அவன் அழியாக் காவியங்களை இயற்றினான், தங்கத்தில் பதிக்கப்பட்ட வைரம்போல் தமிழ் அவன் மூலமாக ஒளிவீசிற்று.
சிங்கத்தின் பால் தங்க கிண்ணத்தில் மட்டும் கெடாது என்பது போல் தமிழின் சுவை பக்தி இலக்கியங்களில் கெடாது சுவைக்கும்.
கழுகு இரு சிறகுகளைக் கொண்டு மேல் எழுவது போல இந்துமதம் சைவம் வைணவம் என இரு சிறகுகள் மூலம் அழகாக உயரப்பறந்தது.
தமிழ் இந்துவின் கட்டிடக்கலை அழகு கோவில்களில்தான் தெரியும், அவன் சிற்பங்களின் பெருமை சாமி சிலையில்தான் தெரியும், அப்படித் தமிழ் இந்துவின் பேசிய தமிழின் அழகு இந்து இலக்கியங்களில்தான் அழகுறத் தெரியும்.
அது வைணவ இலக்கியங்களில் இன்னும் அழகாகத் தெரியும், தமிழின் மிகச் சிறந்த பக்தி இலக்கியமெல்லாம் தமிழின் தீஞ்சுவையில் கம்பன் எனவும் ஆழ்வார்கள் எனவும் வைணவர்களால் பல இடங்களில் அழகாய்த் தெரிந்தது.
மெல்ல ஓடும் குளிர்ந்த நதி போல், அந்தி மாலையில் வீசும் தென்றல் போல், நிழலில் கிடைக்கும் கரும்பின் சாறு போல் அந்தத் தமிழும் அதன் சுவையும் மிக ரம்மியமானது.
ஆழ்வார்கள் அதை மிகச் சரியாகக் கொடுத்தார்கள், பக்தியில் மூழ்கி தமிழ் சிப்பி பிளந்து முத்தெடுத்தார்கள், அதை வகை வகையாகக் கோர்த்தார்கள்.
அதில் ஒருவர்தான் பெரியாழ்வார்.
அவர் தமிழ்ப்பிறந்த பாண்டியநாட்டின் பிறப்பு அவர், அவர் கலியுகத்தின் குரோதன வருடத்தில் ஆனி மாத சுக்லபட்ச ஏகாதசியில் ஞாயிற்றுகிழமை சுவாதி நடசத்திரத்தில் அவதரித்தார்.
இவரின் தந்தை முகுந்தபட்டர், தாயார் பத்ம வல்லி. இக்குலம் முன்குடுமி பிராமணர் எனும் சேரநாட்டு குலம்.
இவர் இயற்பெயர் ராம ஆண்டான்.
கிருஷ்ண அவதாரத்தில் ஒரு செய்தி உண்டு, பகவானைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் மாலை கொண்டு செல்ல வேண்டும் என எண்ணி நந்தவனம் அமைத்து மாலை தொடுத்துக் கொடுத்து அந்தப் புண்ணியத்திலே வைகுண்டம் ஏகிய ராமகிருஷ்ணர் எனும் பக்தர் கதை உண்டு.
அப்படித் தானும் பகவானுக்கே மாலை தொடுத்துக் கொடுத்து அவனை அடைதல் வேண்டும் என மாலைகட்டி கொடுக்கும் புண்ணியத்தில் இறங்கினார், இதற்காக நந்தவனம் அமைத்துப் பூச்செடி நட்டு, நீர் பாய்ச்சி மலர்பறித்து மாலை தொடுத்துக் கோவிலுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
அதுவே அவரின் வாழ்வும் தொழிலுமாயிற்று, அதைத் தவிர வேறு ஏதும் அவர் அறிந்திலர்.
இன்றும் தமிழக அரசின் முத்திரையாக உள்ள அந்த ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆலயத்தில்தான் அவர் பணியாளராய் இருந்தார், அந்தக் கோவிலின் பெயர் “வடபெருங்கோவிலுடையான்”
அவர் இயற்பெயர் ராம ஆண்டான், சதா சர்வ காலமும் விஷ்ணுபக்தியில் ஊறி அவன் நாமத்தை சொல்லிக் கொண்டிருந்ததால், சித்தமெல்லாம் விஷ்ணுவாகி போனதால் “விஷ்ணு சித்தன்” என அழைக்கப்பட்டார்.
அவர் தொடக்கத்தில் கவிஞர் அன்று, அவருக்கு நந்தவனத்தில் மலர் பறித்து, தொடுத்து பகவானுக்கு சாற்றுவது மட்டுமே வேலை. மிகப்பெரும் அர்ப்பணிப்புடன் நாளும் பொழுதும் நொடியும் தவறாது, மகா ஆச்சாரமாய் வில்லிபுத்தூர் பெருமாளுக்கு மலர் அலங்காரம் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.
பகவானுக்கு பூ பறித்துத் தொடுப்பது என்பது ஆச்சாரமானது, கடும் குளிரில் குளித்து அதிகாலை மிகக் கவனமாக பறித்து மிகுந்த பவித்திரத்துடன் செய்யவேண்டிய வழிபாடு அது, ஆச்சாரமும் அனுஷ்டானமும் மிக முக்கியம்.
அதைக் கவனமாகக் செய்துவந்தார் விஷ்ணுசித்தன்.
ஒருநாள் கூட நேரம் தவறாமல் அதைச் செய்து கொண்டிருந்தார், மானிடக் கண்களுக்கு அவர் கோவிலை அண்டிப் பிழைக்கும் ஏழை பராரியாகத் தெரிந்தாலும் இறைவன் கண்ணில் அதி உன்னதமான பக்தராகத் தெரிந்தார்.
எப்போதும் இறைநினைவிலே மூழ்கி பகவானுக்கு மாலை கட்டுவது, பகவானுக்குப் பணி செய்வது என அவரின் முழுக் கவனமும் அங்கேதான் இருந்தது.
மனிதனின் அந்தஸ்து, பணம் சொத்து அதிகாரம் கொண்டு எடைபோடுவது மானிடக் கண்கள், மனிதனின் மனம் கண்டும் அவன் தன்மேல் வைத்திருக்கும் பக்திகண்டும் எடைபோடுவது பகவான் கணக்கு.
அப்படிப் பகவான் தராசிலே முள் விஷ்ணுசித்தன் பக்கமே சரிந்தது, தன் பக்தனை உலகறியச் செய்ய திருவுளம் கொண்டார் பெருமான்.
அப்பொழுது பாண்டிய நாட்டை ஸ்ரீவல்லபதேவன் ஆண்டுகொண்டிருந்தான், அடிக்கடி மாறுவேடத்தில் இரவில் நகர்வலம் வருவது அவனுக்கு வாடிக்கையான ஒன்று.
ஓர் இரவு நகர்வலம் வருகையில் நகருக்குப் புதியவன் ஒருவன் கோவில் அருகே உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அவனிடம் வழிபோக்கன் போல் விசாரித்தான்.
அதற்கு அந்த அந்நியன், “ஐயா! நான் ஒரு அந்தணன். கங்கையில் நீராடி வருகிறேன்“ என்றான். இவன் மன்னன் அல்லவா? யாரையும் நம்பக் கூடாது என்பது விதி, அதே நேரம் தான் யாரென காட்டவும் கூடாது.
இதனால் அவனைச் சோதிக்கும் கேள்வினைக் கேட்டான், மன்னன் எல்லா சாஸ்திரமும் நீதியும் அறிந்திருந்தான்.
“கங்கைக்குச் சென்று வருகின்றீரா, நல்லது உமக்கு தெரிந்த நீதிநூல் வரிகளைச் சொல்லும், எமக்கும் புண்ணியம் கிடைக்கும் எனச் சாதாரணமானவன் போல் கேட்டான்.
அந்த அந்நியன் தெளிவாய்ச் சொன்னான், “மழைக்காலத்தின் தேவையை மற்ற எட்டு மாதங்களிலும், இரவின் தேவையை பகலில், முதுமையின் தேவையை இளமையில், மறுமையின் தேவையை
இம்மையில் தேடி வைக்க முயற்சி செய்ய வேண்டும்“ என்றான்.
மன்னனுக்கு அவன் பண்டிதன் என உறுதியானதால் தான் யாரெனக் காட்டாமலே விடைபெற்று அரண்மனை திரும்பினான், ஆனால் அவன் மனம் சிந்திக்கத் தொடங்கியது.
மறுமை என்றால் என்ன சேர்க்க வேண்டும் எனத் தீராமல் சிந்தித்த மன்னன் மிகவும் தீவிரமானான். தன் அமைச்சர் செல்வநம்பியுடன் இதுபற்றி விவாதித்தும் பலனில்லை.
அவன் அமைச்சரோ ஆலய பூசாரிகளோ மதுரையின் அந்நாளையபண்டிதர்களோ இதுபற்றி விளக்க முடியவில்லை, விளக்கினாலும் அவனுக்குப் புரியவில்லை.
இனி இது கடவுள் மட்டுமே விளக்கிச் சொல்லும் விஷயம் என முடிவுக்கு வந்த மன்னன் இனித் தெய்வமே தனக்கு விடைதரட்டும் என அந்த ஏற்பாட்டைச் செய்தான்.
ஒரு கொடிமரம் போன்ற கம்பை தன் சபையில் நட்டு அதன் உச்சியில் பெரும் பொற்கிழியினைத் தொங்கவிட்டிருந்தான், யார் மன்னனிடம் அந்தப் போதனையினைச் செய்யும்பொழுது இந்தக் கழி தானே வளையுமோ அவன் சொல்வதே நற்போதனை என அறிவிக்கவும் பட்டது.
இக்காலத்தில் இதெல்லாம் நம்பமுடியாத அல்லது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது எனச் சிலர் கருதலாம். ஆனால், அக்காலம் அப்படி அன்று, அது பிரபஞ்ச சக்திகளும் மானிடனும் மிக நெருக்கமாக இருந்த காலம், தெய்வம் அடிக்கடி மனிதனிடம் நேரில் வந்து உறவாடிய காலம்.
இம்மாதிரி ஏற்பாடுகளெல்லாம் இயல்பாய் இருந்த காலம், அதனால் பொற்கிழியினைக் கம்பத்தில் கட்டி கம்பம் வளைந்தால் அதுதான் சரியான பதில் என அறிவித்தான்.
(இந்தச் சபை இன்றைய மீனாட்சிஅம்மன் ஆலய பொற்றாமரை குளத்தின் கரையில் இருக்கும் தமிழ்சங்கத்தில்தான் இருந்தது என்கின்றது சில குறிப்புக்கள். )
சுருக்கமாகச் சொன்னால் தருமி காலத்தில் பாண்டிய மன்னனுக்கு வந்த சோதனை போன்றது இது, இறைவன் தன் நாடகத்தை நடத்திப் பக்தனைக் காக்க மன்னன் மனதில் வலிய விதைக்கும் சந்தேகத்தின் இன்னொரு காட்சி இது.
அப்பொழுது யார் யாரெல்லாமோ வந்து போதித்தும் அந்தக் கழி வளையவில்லை, மன்னன் அடுத்து யார் யார் என எதிர்பார்த்துக் கொண்டே இருந்தான்.
அப்பொழுது திருவில்லி புத்தூரில் விஷ்ணு சித்தனின் கனவில் வந்த பெருமாள் அவரிடம் மதுரைக்குச் சென்று தன்னைப் பற்றி பாடிப் போதிக்குமாறு கூறி மறைந்தார்.
எழுந்த விஷ்ணுசித்தர் திகைத்தார், அவருக்கு மதுரையும் தெரியாது மன்னனும் தெரியாது அந்த அறிவிப்பே தெரியாது.
அதுவும் தமிழ் பாட தெரியாத தனக்கு எப்படிப் பாடவரும், அதுவும் மன்னன் முன்பாட வரும், கொஞ்சம் தவறினாலும் மன்னன் தலைவெட்டுவானே என்ற அச்சத்தில் தலைகுனிந்து நின்றாலும் பெருமாள் சொன்னதற்காக மதுரை செல்லத் துணிந்தார்.
முறையான கல்வியோ தமிழோ இலக்கணமோ, முன்பின் பாடல் என்றால் என்ன என அறியாதவரான அவர் பகவான் அழைத்தார் என்பதற்காகச் சென்றார்.
மதுரைக்குள் நுழைந்து கூடல் அழகர் கோவில் பெருமானை தொழுதுவிட்டு சபை ஏகினார்.
மதுரை சபைக்குள் அவர் நுழைந்தபொழுது வேதம் அறியாத பண்டாரம் எப்படி இறைதத்துவம் பேசவரலாம் என அவதூறு எழுந்தது, தமிழை முறைப்படி கல்லாதவன், பெரும் கவி பாடாதவன், பெரும் குருவிடம் சீடராக இல்லாதவன் எப்படி இச்சபைக்குள் வரலாம் எனப் பண்டிதர்கள் முணுமுணுத்தனர்.
பெரும் செல்வந்தர் இடையே வறியவன் கந்தலாடையுடன் செல்வது போல, பெரும் பண்டிதர்களிடையே அந்தப் பூகட்டும் பண்டாரம் கூனி நின்று மனதுக்குள் பகவானை வேண்டினார்.
மன்னனின் அமைச்சர் செல்வநம்பி சொன்னான், “மண்ணுக்குள் தங்கமும் உண்டு, தோண்டிப் பார்க்காமல் முடிவு செய்யக் கூடாது” அவர் சபையில் பேசலாம் என அவரைப் பேச அனுமதித்தார்.
விஷ்ணுசித்தன் கண்களை மூடினார், அவர் முகம் பிரகாசமாயிற்று, ஒரு தெய்வீக சக்தி அவருக்குள் இறங்கிற்று.
“ஸ்ரீமன் நாராயணனே மறுமைக்கான செல்வம் அவனைப் பணிந்தால் மறுமைக்கு அச்சமில்லை” என ஸ்ருதி, ஸ்மிருதி, இதிகாச, புராண மேற்கோள்களால் விளக்கினார். சபை அதிசயத்தது.
ஆலய மணிபோல் கம்பீரமாக முழங்கிக் கொன்டிருந்தார் விஷ்ணு சித்தர், அவரின் போதனையில் சபை கட்டுப்பட்டு சொக்கி நின்றது, சிலருக்குக் கண்ணீர் வந்தது.
பெரும் ஞானப் பண்டிதன் போல ஒவ்வொரு வேதவரியாக அவர் விளக்கிச் சொன்னபோது சபை அதிசயித்தது.
மன்னன் வியப்போடும் நன்றியோடும் பார்த்துக்கொண்டிருந்தபொழுதே அந்தக் கம்பு வளைந்து கிழி அவர் முன் தொங்கியபடி நின்றது.
அந்த வேத சபையே அவர் ஆழமான பக்தி கொண்ட ஆழ்வாரிலும் பெரிய ஆழ்வார் எனக் கொண்டாடி, பெரியாழ்வார் என அழைத்தது, தாழப் பணிந்து நின்ற பொற்கிழியினைக் கண்டவர்கள் உடல் சிலிர்த்து “பெரியாழ்வார், பெரியாழ்வார்” எனப் பணிந்தார்கள்.
விஷ்ணு சித்தர் பெரியாழ்வார் என்றானார், தரை பணிந்து பரமனைத் தொழுதார்.
தன் சந்தேகம் தீர்ந்த மன்னன், மறுமைக்குத் தயாராகும் வழி பெருமாளைப் பணிவதே என உணர்ந்து அதைப் போதித்த பெரியாழ்வாரை யானைமேல் ஏற்றினார்.
அதுவும் பட்டத்து யானைமேல் ஏற்றி வலம் வந்தார், அது அரசப் பதவிக்குச் சமம். அந்நேரத்தில் வானில் கருடன் தோன்றிற்று, அந்தக் கருடனை அவர் நோக்கிக் கொண்டிருந்தபொழுதே அது மதுரை கூடலழகர் கோவிலுக்கு மேல் சென்று மறைந்தது.
யாவரும் இதுகண்டு அதிசயிக்க பட்டத்து யானையிலே பவனியாக அந்த ஆலயம் சென்றார் பெரியாழ்வார், அந்தப் பரந்தாமனின் சந்நிதியில் பாடினார், தமிழ் அருவியாய்க் கொட்டிற்று.
“ பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு” என வாழ்த்தி திருப்பல்லாண்டு பாடி அருளினார்.
கல்வி அறிவில்லாப் பெரும் குருவும் போதனையுமில்லா அந்த ஏழை பூக்காரப் பண்டாரம் பெரும் ஞானியாய் அழகு தமிழில் பண்டிதரும் நெருங்கமுடியா வண்ணம் அழகான தமிழை கொட்டத் தொடங்கினார்.
ஆம், திருபல்லாண்டு எனும் அழகிய பதிகம் அவர் கொடுத்ததே, இன்றும் வைணவ ஆலயங்களில் அது இல்லாமல் வழிபாடு இல்லை, வழிபாடுகளில் மட்டுமல்லாமல் சுவாமி ஊர்வலத்திலும் அதுதான் பாடப்பட்டது.
வைஷ்ணவ வழிபாட்டின் மகா முக்கிய பாடல் அது.
அதன்பின் தமிழ் அவருக்குக் கங்கை பிரவாகமாய் வந்தது, அற்புதமான பாடல்களையெல்லாம் எழுதினார், தமிழகம் முழுக்க வைஷ்ணவ ஆலயம் சென்று பாடினார்.
திருவரங்கம், திருவெள்ளாறை, திருப்பேர்நகர்,கும்பகோணம், திருக்கண்ணபுரம், திருச்சித்திரக்கூடம்,
திருமாலிஞ்சோலை திருக்கோட்டியூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குறுங்குடி, திருவேங்கடம், திருவயோத்தி, சாளக்கிராமம், வதரியாச்சிரமம், திருக்கங்கைக் கரைக்கண்டம், துவாரகை, வடமதுரை, திருவாய்பாடி, திருப்பாற்கடல், பரமபதம் ஆகிய ஆலயமெல்லாம் அவரால் பாடப்பட்டது.
குறிப்பாக கண்ணனைக் கொஞ்சும் அதுவும் குழந்தை கண்ணனைக் கொஞ்சும் சுவைமிக்க பாடல்களை எழுதினார்.
“பிள்ளைத்தமிழ்” எனும் அற்புதமான இலக்கிய மரபு அவரிடம் இருந்துதான் வந்தது.
பிள்ளைத்தமிழ் எனும் இலக்கிய மரபில் கண்ணனை அழகாக கொஞ்சி கொஞ்சி எழுதிய பாடல் பாணி அவர் தொடங்கிவைத்தார், தன்னை ஒரு தாயாக கருதி கண்ணனை தன் குழந்தையாகக் கருதி அவர் பாடிய பாடலெல்லாம் தீஞ்சுவை மிக்கவை, படிக்க படிக்க உருக்கமானவை.
குழந்தை கண்ணனுக்காய் அவர் பாடிய பாடல் அவ்வளவு உருக்கமானது, சில வரிகள் இதோ.
“கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்”
“மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ!
வையம் அளந்தானே! தாலேலோ!”
அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதி யேல்
மஞ்சில் மறையாதே, மாமதீ! மகிழ்ந்து ஓடிவா”
“பாரித்த மன்னர் படப்பஞ் சவர்க்கு அன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே! சப்பாணி”
“கொங்கைவன் கூனிசொற் கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன்கான் அடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்”
ஆம். குழந்தை தவழ்தல், அதற்கு நிலா காட்டி சோறுட்டுதல், தவழும் குழந்தையினைக் கொஞ்சுதல், கண்ணாம்பூச்சி என விளையாடுதல், குளிப்பாட்டுதல் எனத் தாய் குழந்தையினைக் கொஞ்சுதல் போல் கொஞ்சுகின்றார் ஆழ்வார்.
பின்னாளில் பிள்ளைத்தமிழ் உருவாகவும், அதன் வழி பாரதியும் கண்ணதாசனும் கண்ணனைக் கொஞ்சி பாடவும், வாலி கண்ணனின் பிள்ளைத்தமிழ் பாடவும் பெரியாழ்வாரே காரணம்.
அவர் தொடங்கிவைத்த கண்ணன் பாடலே பின்னாளில் பிள்ளைத் தமிழாகவும் கண்ணன் பாடலாகவும் வளர்ந்தது.
“ஆயர்பாடி மாளிகையில்” எனப் பாடியது பெரியாழ்வாரே, அதைத் தழுவித்தான் கண்ணதாசன் பாடினார்.
மிகப் பெரிய விஷ்ணு பக்தனாக அவன் புகழ் பாடியே வாழ்ந்த ஆழ்வார், விஷ்ணுவுக்கு மலர் பறிக்கும் பொழுது ஒரு பெண்குழந்தை கிடக்கக் கண்டு அதை ஆண்டாள் எனப் பெயர் சூட்டி அழைத்தார்.
ஆண்டாளின் பக்திக்கும் தமிழுக்கும் அவரே குரு, ஆண்டாளின் அபரிமிதமான பக்திக்கு அவரே அடிப்படை.
அவரின் தமிழே ஆண்டாளுக்கும் வந்தது , அந்தத் தமிழில் அவர் பக்தியின் உச்சத்தில் காதலாய்ப் பாட ஆண்டாள் ஆழ்வார்களின் ஒரே பெண் ஆழ்வார் என்றானார்.
ஆண்டாள் பெருமாளோடு கலந்த பொழுது அதைப் பாடவும் பெரியாழ்வார் தவறவில்லை.
“ஒரு மகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால் தான் கொண்டு போனான்”
வைஷ்ணவ உலகின் மிகப்பெரிய ஆழ்வார்களில் ஒருவர் எனும் அளவு பெரும் பாடலைப் பக்தியோடு கொடுத்தவர். இன்றும் அவரின் திருப்பல்லாண்டு அதி உன்னத இடத்தில் கொண்டாடப்பட்டு அதன் மூலமே வழிபாடும் நடக்கின்றது.
தமிழில் வழிபாடு செய்ய இந்துமதம் அனுமதிக்கவில்லை அது ஆரிய சதி எனப் பொங்கும் கோஷ்டி எதுவும் இந்தத் திருப்பல்லாண்டு மேல் வாய்திறக்கமுடியாதபடி அன்றே பாடிவைத்தவர் பெரியாழ்வார்.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரை திருப்பல்லாண்டு (12 பாசுரங்கள் எனவும், 13 தொடக்கம் 473 வரை பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்) ஆகிய இரு நூல்களில் இவரின் பாடலெல்லாம் அமைந்துள்ளன.
வைஷ்ணவ பிரிவின் முக்கிய பாடல் இது, மிக மிக உருக்கமான காவியம் இது, உருகாதோர் உள்ளத்தையும் உருக்கும் ரசவாத பக்தி தமிழ் அது.
பெருமாள் கோவிலில் பெருமாள் சிலைக்கு அடுத்து அவசியமானது இப்பாடல்கள் என்பதைவிட அந்தப் பெருமையினைச் சுருக்கமாகச் சொல்லமுடியாது.
தன்மேல் பக்தி கொண்ட ஒரு பூதொடுக்கும் பக்தனுக்குக் காலமெல்லாம் அவன் மொழியில் தன்னைப் பாட வழிசெய்த பெருமாளின் கைமாறும் இங்குக் கையெடுத்து வணங்க வேண்டியது.
அந்த அளவு தன் பக்தன் மேல் மிகப்பெரிய நேசம் வைத்து அவனுக்கு மாபெரும் முடி சூட்டியிருக்கின்றார் பெருமான்.
அவர் கருடனின் சாயலில் வந்தவர், ஆனிமாதம் சுவாதி நட்சத்திரம் அவரின் அவதார நாளாகக் கொண்டாடப்படுகின்றது.
அவரின் பாடல்கள் சுவையும் ஆழமும் கொண்டவை, அவரின் முதல் பாடலே பெருமாளைப் பற்றி எப்படித் தொடங்கிற்று என்றால் அவர் எக்காலமும் நிரந்தனமானவன் என்ற பொருளில் பாடப்பட்டது, ஆம் கவனியுங்கள்.
பல்லாண்டு(பலஆண்டு)= X என வைத்துக்கொண்டால்
பல்லாண்டு(X) பல்லாண்டு(X) பல்லாயிரத்தாண்டு(X1000) பல்கோடி(X100,00,000) நூறாயிரம்(1,00,000) என்றாகும்.
அதாவது, (X)(X)(X1000)(X100,00,000)(100,000) என நீளும்.
ஆம். பல, பல, பலஆயிரம் (பலகோடிலட்சம்) ஆண்டுகள் என நீண்டுவரும், அழியாத இறைவனே எனப் பொருளாகும்.
இப்படி ஒருவரியில் பெரும் யுகங்களைப் பெரும் விஷயங்களைச் சொல்லிப்பாடியவர் பெரியாழ்வார், அவரைப் படிக்க படிக்க ஆழமும் அதிகம், பொருளும் அதிகம், சுவையும் அதிகம்.
மதுரையில் தாங்கள் மேதாவிகள் எனக் கர்வத்தோடு அலைந்த சில பண்டிதர்களின் கர்வம் அடக்கி, ஒரு பூக்காரனை மிக உன்னதக் கவியாகக் காட்டி அவர்கள் கர்வம் அடக்கி, தான் மதுரை கூடலழகர் ஆலயத்தில் கம்பீரமாக அமர்ந்திருப்பதை உலகுக்குச் சொன்னார் பெருமான்.
பெரியாழ்வார் வாழ்வு அதைத்தான் சொல்கின்றது, பல அகங்காரிகளின் கர்வத்தை அவர் மூலம் அடக்கி அழியாப் பாடல் பல பாடிவைக்க வழிசெய்ய வந்த பிறப்பு பகவான் தேர்ந்துகொண்ட பெரியாழ்வார்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு அவர் புகழும் பக்தியும் இங்கு நிலைத்திருக்கும், அவரை எக்காலமும் நினைத்துப் பெருமாளை வழிபட்டால் எல்லா நலமும் நம்மை வந்தடையும்.
எந்நிலையில் இருந்தாலும் முழுப் பக்தியோடு பெருமாளுக்கு தொண்டு செய்தால் உரிய நேரம் மிகப்பெரிய பாக்கியத்தை அவன் தருவான் என்பதைக் காலம் காலமாக சொல்லிக்கொண்டிருகின்றார் பெரியாழ்வார்.
உள்ளார்ந்த அன்புடன் ஒரு பக்தன் தனக்கு வாடும் பூமாலையிட்டால் கூட அவன் பக்தி உண்மையாயின் அவனை உலகறியச் செய்து பெரும் புகழுடனும் பெரும் ஞானத்துடனும் தனக்கு அழியாத பாமலைகள் சூட்டி இறைவன் அருள்புரிவான் என உரக்கச் சொல்கின்றது பெரியாழ்வார் வாழ்வு.
அவர்தான் பூமாதேவியின் அம்சமாக அவதரித்த ஆண்டாள் நாச்சியாரைத் தன் நந்தவனத்தில் கண்டெடுத்து மகளாய் வளர்த்துப் பின் பெருமாளிடம் சேர்பித்தார்.
ஆண்டாள் நாச்சியார் எனும் ஆழ்வார் இவராலே வளர்க்கப்பட்டவர்.
பெரியாழ்வாரின் பாடல்கள் மிக மிக அழகானவை, உருக்கமானவை, நெஞ்சத்தை நெகிழவைப்பவை, கொண்டாட வைப்பவை.
எப்போதும் நினைவில் நிற்பவை, அந்த அழகான உயிரோட்டமான பாடல்கள் சிலவற்றைக் காணலாம், ஒரு பானை சோற்றுக்குச் சில சோறு பதம்.
பெரியாழ்வாரின் பாடல்கள்தான் பின்னாளில் “பிள்ளைத் தமிழ்” என்றொரு இலக்கியம் உருவாக காரணமானவைட, அந்த அளவு ஒரு தாய் தன் குழந்தையினை மகிழ்ந்து கொஞ்சி உருகிப் பாடுவதை போல அப்படியே பக்தியில் பாடியிருப்பார்.
பக்தியினைப் பாசபாடல்களாக கொடுத்தவர் அவர்தான், அதிலிருந்துதான் அப்படி ஒரு சம்பிரதாயம் உருவாயிற்று.
பெரியாழ்வார் மானுடப் பாசபந்தத்தைப் பக்தியில் காட்டினார், தன்னில் இருந்து உதித்த தன் மகவு தன்னைக் காக்கும் தன்னைக் கைவிடாமல் தன்னை வாழ்வின் முடிவில் ஆதரிக்கும் என நம்பி பாசம் வைக்கும் மானுட சுபாவத்தைப் பாடலில் பக்தியாகச் சொன்னார்.
தன் மனதில் எழும் பக்தியினை தான் கொண்டிருக்கும் பக்தியினைக் குழந்தையாகப் பாவித்து, அந்தப் பக்தி வளர்ந்து, காலம் செல்ல செல்ல பெரிதாக வளர்ந்து முதுமையில் தன்னை முக்தி நிலைக்கு வைகுண்டத்தில் சேர்க்கும் எனும் தாத்பரியப்படிப் பாடினார்.
அந்த ஞான தாத்பரியமேதான் அவர் பாடல்களில் தாயும் குழந்தையுமாக இருந்தது.
லௌகீக வாழ்வின் பாசபந்தப்படி அவர் பாடியதாகச் சொன்னாலும் அது தன் பக்தி குழந்தை நிலையில் இருக்கின்றது, அதை இன்னும் இன்னும் காத்து வளர்க்கவேண்டும் என்பதையே வலியுறுத்தும் ஞான ஆழம் கொண்ட பாடல்.
எல்லாப் பெற்றோரும் தன் குழந்தை பல்லாண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்துவார்கள், அப்படித் தன் குழந்தையான இறைபக்தியும் அதிலிருக்கும் பெருமாள் புகழும் பல்லாண்டு காலம் வாழட்டும் எனத் தாய் போல் அவர் வாழ்த்திப்பாடினார்.
*பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா உன்
சேவடி செவ்வி திருக்காப்பு”
அதாவது மல்லர்களை அடக்கிக் கொன்ற பலம் பொருந்திய திருத்தோள்களையும் மாணிக்கத்தைப் போன்ற நிறத்தையும் உடைய எம்பெருமானே! உன்னுடைய சிவந்த திருவடிகளுக்குப் காலம் உள்ளவரை குறைவற்ற பெருமை இருக்க வேண்டும் எனப் பாடுகின்றார்.
இந்தப் பல்லாண்டு பல்லாண்டு என்பது மானிட ஆண்டு தேவர் ஆண்டுகள் தாண்டி யுகம் தாண்டிச் செல்லும், யுகம் தாண்டி வாழும் பெருமானே உன் காலடிகளைச் சேவிக்கின்றேன் எனப் பாடலைப் பாடுகின்றார், காலம் கடந்து நிற்பவன் பகவான் அற்ப ஆயுள் கொண்டது உலகம் எனச் சொல்லிப் பாடுகின்றார்.
அதாவது, அற்ப வாழ்வை கடந்து அழியா இறைவன் பாதங்களைச் சரணடையுங்கள் என்கின்றார்.
அடுத்தப் பாடல் பாடுகின்றார்.
*அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே””
பகவானே, அடியார்களான எங்களுக்கும் பெருமாளான உனக்கும் உள்ள பந்தம் எப்பொழுதும் இருக்க வேண்டும். உன்னுடைய திருமார்பிலே எப்பொழுதும் இருப்பவளான அழகும் ஆபரணங்களும் இளமையும் பொருந்திய பெரிய பிராட்டியார் அருள் எப்பொழுதும் இருக்க வேண்டும்.
உன்னுடைய வலது திருக்கையிலே அழகும் ஒளியும் பொருந்தி இருக்கும் திருவாழி எப்பொழுதும் இருக்க வேண்டும். உன்னுடைய இடது திருக்கையிலே இருக்கும், யுத்தங்களிலே ஆயுதமாகப் புகுந்து எதிரிகளின் உள்ளத்தை சிதறடிக்கும் பெருத்த கோஷத்தை எழுப்பும் அந்தப் பாஞ்சசன்னியம் என்னும் திருச்சங்கம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.
அதாவது, பகவானே உன்னை நம்பும் அடியார்க்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நீயே அடைக்கலமாக வேண்டும் என்பதைப் பாடுகின்றார்.
கண்னனை யோசதையின் இடத்தில் இருந்து, அதாவது ஜீவாத்மாவினை காக்கும் பரமாத்மா இடத்தில் இருந்து பாடுகின்றார் பெரியாழ்வார்.
‘பேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திரு-
வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே”
கண்ணன் குழந்தையாக வளர்ந்த காலங்களில் கோகுலத்தில் அவனைக் கண்ட சாஸ்திரம் அறிந்தவரெல்லாம் சாமுத்திரிகா லட்சணம் அறிந்தவர்கள் அவன் பெரும் சக்தியாய் எழுவான் என்பதைச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
அப்படியே கண்ணபிரான் பிறக்கும்போது சங்கு சக்கரங்களுடனே பிறந்தார், இதனைக் கம்சன் கண்டால் குழந்தையினை அழித்துவிடுவான் என்பதால் அவனுக்கு அந்த அடையாளம் தெரியாதபடி அணிகலன் ஆடைகள் அனுப்பப்பட்டன.
அதனால் ,அவன் சீருடைப்பிள்ளை என்றானான், அதாவது தன்னை மறைத்து கொண்டான் எனப் பொருள், பரந்தாமன் மறைவாய் இருப்பான் அவனைத் தேடி அடைந்துகொள் மனமே எனப் பாடலில் சூசகமாகப் போதிக்கின்றார்.
அவர் கண்ணனின் திருமேனி அழகினைத் திருப்பாதம் தொடக்கமாக திருமுடி வரை பாடியுள்ள அழகு சிலிர்ப்பானது.
“அதிருங் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி
மதுரமுலை ஊட்டி வஞ்சித்து வைத்துப்
பதறப் படாமே பழந் தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே
ஒளிவளையீர் வந்து காணீரே”
அதாவது, கண்ணபிரான் இளம்பிராயத்தில் கோகுலத்திலுள்ள இடையர் மனைகளுக்கு சென்று அவர்களது பால் தயிர் வெண்ணெய் முதலியவற்றைத் திருடி உண்டதை இடையர் குல பெண்களெல்லாம் வந்து முறையிட, அதை அறிந்த யசோதை அக்குற்றத்திற்காக ஒரு தண்டனையாகக் கண்ணனை வயிற்றில் கயிற்றினால் கட்டி உரலோடு பிணித்து வைத்த செய்தியினை சொல்லும் பாடல் இது.
“அதிருங் கடல்நிற வண்ணன்” எனும் அந்த வரி, அவன் அலைகடல் போல் துருதுருவென இருந்தான், ஓய்வில்லாமல் விளையாடிக் கொண்டே இருந்தான் என்பதை அழுத்திச் சொல்லும் வரி.
இப்படிக் கண்ணனின் பாலகாலத்துக் காட்சியினையெல்லாம் ஒன்றுவிடாமல் அழகான வரிகளில் ஒரு காவியமாக வடித்து வைத்துப் பெரும் போதனைகளை மறைமுகமாக சொன்னவர் பெரியாழ்வார்.
கண்ணன் பூதகியினை விஷப்பாலை உறிஞ்சிக் கொன்றான் என்பது, ஆலகால சிவனை நினைவுப்படுத்தும் தத்துவம்.
உலகின் விஷத்தையெல்லாம் உலகின் ஆபத்தையெல்லாம் தான் ஏற்றுக்கொண்டான் கண்ணன் எனும் பெரும் தத்துவம்.
அப்படி அவரின் பாடல்களிலெல்லாம் பாசமான பாடல்களுக்குள் பெரும் ஆன்மீகத் தத்துவம் மறைந்திருக்கின்றது.
அப்படியே யசோதா யாதவ கண்மணியான கண்ணனைக் கன்றுகள் மேய்க்க அனுப்பி விட்டு பின்பு குழந்தையை கன்றின் பின் அனுப்பிவிட்டேனே என்று மனம் கரைந்து ஏங்கியதை மிக அழகாகப் பாடியுள்ளார்.
“வண்ணக் கருங்குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்
பண்ணிப் பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானைக் கான் அதரிடைக் கன்றின்பின்
எண்ணற்கு அரியானைப் போக்கினேன் எல்லே பாவமே”
கண்களுக்கு இனியவனை, இத்தகையவன் என்று யாரும் நினைக்க முடியாதவனை, இந்த ஆய்பாடி முழுவதும் பல குறும்புகள் செய்து, அதனால் பல பெண் பிள்ளைகள் அவனது லீலைகளை என்னிடம் வந்து புகார் செய்ய காரணமாய் உள்ளவனை, அதனால் அப்படிச் செய்ய விடாமல், காடுகளில் கன்றுகளுக்குப் பின்னே போக விட்ட, தான் ஒரு பாவியே என்று பாடுகிறார்.
எத்தனை குறும்பு செய்தாலும் அவன் வடிவழகை நினைத்தால் “கொடிய என்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும்” என்பதைப் போல இவனை விட மாட்டேன் என்கிறதே என்கிறார்.
அடுத்துப் பாடுகின்றார்.
“ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன் செங்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகளாய்க் குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை*
மருமகளைக் கண்டு உகந்து மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ?*
பெரிய நோன்புகளை நோற்று மிக மிக பாக்கியமான பெண்பிள்ளையைப் பெற்ற நான், இவளை “காவியங்கண்ணி யெண்ணில் கடிமாமலர்ப்பாவையொப்பாள்” என்றபடி எல்லார்க்கும் பிடித்தமான என் மகளை, உலகத்தாரெல்லாரும் புகழும்படி வளர்த்தேன், இப்படி வளர்ந்த இவளை எம்பெருமான் தானே நேரில் வந்து கைக்கொண்டு போனான், போகட்டும்.
ஆன்மா இறைவனை அடையும் அந்தக் காட்சியினை இப்படிப் பாடுகின்றார் பெரியாழ்வார்.
இன்னும் பாடுகின்றார்.
“அங்கு ஒரு கூறை அரைக்கு உடுப்பதன் ஆசையால்
மங்கிய மானிட சாதியின் பேர் இடும் ஆதர்காள்
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால்
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்”
அற்ப மனிதரிடம் ஒர் ஆடை வாங்கி கொண்டு, அரையில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்கிற ஆசையினாலே, அழிந்து போயிருக்கிற மனித சாதியினுடைய பெயரை உங்கள் பிள்ளைகளுக்கு இடுகின்ற அறிவில்லாதவர்களே,
திருமாலே! ஸ்ரீதரனே ! என்று பெயரிட்டு உமது பிள்ளையை அழைத்தால், சிறந்த பெண்களே! நாராயணன் என்ற பெயரைக் கொண்ட உமது பிள்ளையின் தாயானவள் நரகம் புக மாட்டாள் என்பது பொருள்.
நாராயணன் நாமத்தை சொன்னால் நரகமில்லை, ஆத்மா நரகத்தில் வீழாது என்பதைச் சொல்கின்றார்.
“காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல்
சோர்ந்து நடுங்கிக் குரல்
மேலும் எழா மயிர்க் கூச்சும் அறா என
தோள்களும் வீழ்வு ஒழியா
மால் உகளாநிற்கும் என் மனனே உன்னை
வாழத் தலைப்பெய்திட்டேன்
சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திரு
மாலிருஞ் சோலை எந்தாய் “
சேல் மீன்கள் துள்ளி விளையாடுகிற சுனைகள் சூழ்ந்திருக்கப்பட்ட திருமாலிருஞ்சோலையில் விளங்கும் எம்பிரானே, நான் வாழ்வு பெறும்படி உன்னைச் சேர்ந்து விட்டேன். அதனால் எனது கால்களும் அடி பெயர மாட்டா, கண்ணீரும் துளியாளும் நிற்க மாட்டா, என் உடம்பு தளர்ந்து நடுங்க, குரல் மேலே வரவும் மாட்டாது மலர் சிலிர்ப்பும் நீங்காது. என் தோள்களும் பூரித்தலை நீங்க மாட்டா, என் மனமோ நீ செய்த உதவியை நினைத்து மயக்கத்தை மேன்மேலும் கொள்ளும் என்பது பாடலின் பொருள். அதாவது, ஆத்மா நீண்ட போராட்டத்தின் பின் வைகுண்டம் செல்லும் நிலையினைச் சொல்கின்றார் பெரியாழ்வார்.
அடுத்துப் பாடுகின்றார்.
“எத்தனை காலமும் எத்தனை ஊழியும்
இன்றொடு நாளை என்றே
இத்தனை காலமும் போய்க் கிறிப்பட்டேன்
இனி உன்னைப் போகலொட்டேன்
மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர்
நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்தம் நின்பாலது அறிதி அன்றே திரு
மாலிருஞ் சோலை எந்தாய் “
திருமாலிருஞசோலை பெருமானே!! இன்று, நாளை என்று சொல்லிக் கொண்டிருந்தே எவ்வளவு காலம் எத்தனை கற்பங்களும் கழிந்தன. இவ்வளவு காலம் வரையிலும் பல இடங்களிலும் போய் அஞ்ஞானம் ஆகிய இயந்திரத்தில் அகப்பட்டு நசித்தேன். இனிமேல் நீ என்னை விட்டு போவதற்குச் சம்மதிக்க மாட்டேன் .
உன் அத்தை மக்களான பாண்டவர்களை வாழ வைத்து அவர்களுக்குப் பகைவர்களான துரியோதனாதியரை அழித்தவனே!! என் மனம் உன்னிடமே இருப்பது நீ அறிவாய் அன்றோ. என் ஆத்மாவின் எதிரிகளான மாயைகளை அழித்து என்னை முக்திகதிக்கு அழைத்துச் செல்வாய் பரம்பொருளே என மறைமுகமாக மன்றாடுகின்றார்.
அடுத்துப் பாடுகின்றார்.
“மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால்
மூன்று எழுத்து ஆக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய
எம் புருடோத்தமன் இருக்கை
மூன்று அடி நிமிர்த்து மூன்றினிற் தோன்றி
மூன்றினில் மூன்று உரு ஆனான்
கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரைமேல்
கண்டம் என்னும் கடிநகரே”
மூன்று எழுத்தைப் பயப்படாமல் மெதுவாகப் படித்தால் அர்த்தம் புரியும். ‘அ’, ‘உ’, ‘ம’ என்ற மூன்று எழுத்தை ‘அகாரம்’ ‘உகாரம்’ ‘மகாரம்’ என்று மூன்று சொற்களாக்கி, ‘ஓம்’ என்ற பிரணவமாக்கினார்.
பிறகு பிரணவத்திலிருந்து மேலும் வளர்ந்து ‘ஓம் நமோ நாராயணாய’ என்று உருவாக்கி, அதன்மூலம் ஜீவனுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள மூன்று குணங்களை வெளிப்படுத்துகிறார். பிரணவம் எப்படி வளர்கிறதோ அதே போல திரிவிக்கிரம அவதாரத்தில் பெருமாள் மூன்று அடி நிலம் கேட்டு வளர்ந்தார். அந்தப் பெருமாள் கண்டம் என்னும் கடிநகரிலே இருக்கிறார் என்று பெரியாழ்வார் பாடுகின்றார்.
“ஓம் நமோ நாராயணாய” என்பதன் பொருளை, அந்த மந்திரத்தை மிக அழகாகப் பாட்டில் தருகின்றார் பெரியாழ்வார்.
“பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த உறைப்பனுர்
மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார்
சிறப்புடைய மறையவர்வாழ் திருவரங்கம் என்பதுவே”
பிறத்தற்குரிய அறையிலேயே மாயமாய் போய்விட்ட பிராமணனது நான்கு பிள்ளைகளையும் கொஞ்ச நேரத்திற்குள் பரமபதத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து கொடுத்து தாயுடன் சேர்த்த வல்லமை உடையவனது ஊரானது வேதத்தில் கூறியுள்ளபடி அக்னியை வளர்த்துக் கொண்டிருப்பவர்களும் வரும் விருந்தினரை உபசரித்துக் கொண்டிருப்பவருமான மேன்மையுடைய பிராமணர்கள் வாழ்கின்ற திருவரங்கம் ஆகும் என அந்தத் தலத்தின் பெருமையினைச் சொல்கின்றார்.
“எல்லையில் வாசல் குறுகச்சென்றால் எற்றிநமன்தமர் பற்றும்போது
நில்லுமின் என்னும் உபாயமில்லை
நேமியும் சங்கமும் ஏந்தினானே
சொல்லலாம் போதே உன் நாமமெல்லாம்
சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டுஎன்றும்
அல்லல்படாவண்ணம் காக்கவேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே”
திருவரங்கத்தில் ஆதிசேடனாகிய படுக்கையில் பள்ளி கொண்டிருப்பவனே!! சங்கு சக்கரங்களைத் தாங்கியவனே, மரண காலத்தில் எமலோக வழி நெருங்கும் பொழுது எமது தூதர் என்னை அடித்துப் பிடிக்கும் பொழுது நில்லுங்கள் என்று அவர்களை என்னால் தடுக்க முடியாது .
உனது திருநாமங்களை எல்லாம் சொல்ல சக்தி இருக்கும் இப்பொழுதே சொல்கின்றேன். வேறொரு கதியை கொண்டிராத என்னை எப்பொழுதும் திருவுள்ளத்தில் கொண்டு துன்பமடையாமல் நீ காப்பாற்ற வேண்டும் என மன்றாடுகின்றார்.
“நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா! என்னும் இத்தனைஅல்லால்
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோநாரணா என்பன்
வன்மைஆவது உன் கோயிலில்வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே”
திருமாலே, நாரணா என்று சொல்லும் இவ்வளவு அல்லாமல் அடியேன் இப்படிச் சொல்வது தீமையா நன்மையா என்பது ஒன்றையும் அறிய முடியாதவன். எனது இழிந்த குணத்தினால் உன்னைக் கபடமாக கொண்டாடித் தோத்திரம் செய்பவனல்லேன். உன்னைத் தியானம் செய்யும் வழியையும் அறிய மாட்டேன். இடைவிடாமல் நமோ நாராயணா என்று சொல்வேன். என் வன்மையானது உன் கோயிலிலே வாழும் வைணவன் என்கிற வலிமையாகும் எனப் பக்தியின் வலிமையினைச் சொல்கின்றார்.
கண்ணனைப் பற்றி பாடிய பெரியாழ்வார் ஹனுமன் சீதையினை அசோகவனத்தில் சந்தித்த காட்சி பற்றியும் பாடுகின்றார்.
பெரியாழ்வார் ராமாவதாரம் பற்றியும் மிக அழகாக ஹனுமன் சீதைக்கு தான் ராமபிரானின் தூதுவன் தான் என்று அடையாளம் சொல்வதைப் பாடியுள்ளார் .
“மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மானொன்று புகுந்துஇனிது விளையாட
நின்னன்பின் வழிநின்று சிலைபிடித்துஎம் பிரான்ஏக
பின்னேஅங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓ ரடையாளம்”
மின்னலைப் போன்ற மெல்லிய இடையை உடையவளே, அடியேன் விண்ணப்பத்தை கேட்க வேண்டும் .பொன்னிறம் உள்ள ஒரு மான் வந்து அழகாக விளையாடி நிற்க உமது ஆசைக்குக் கட்டுப்பட்டு இருந்து வில்லேந்தி இருந்த ராமபிரான் அதன் பின் போக, பிறகு அவ்விடத்தில் இலக்குமணன் பிரிந்ததும் ஒர் அடையாளமாகும் எனச் சொல்கின்றார்.
கம்பனைப் போல அழகானவார்த்தைகள் வர்ணனைகளுடன் பாடிச் சொல்கின்றார் பெரியாழ்வார் , அதை இன்னும் தொடர்கின்றார்.
“திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சிமேல்
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே “
ஜனகனது யாகத்தில் விசுவாமித்திரர் முனைவருடன் போன காலத்தில் பெரிய சபையின் நடுவில் சிவதனுசை முறித்தவனான ஸ்ரீ இராமபிரானது மோதிரத்தை பார்த்து பிராட்டியும் அனுமனே, நீ சொன்ன அடையாளங்கள் எல்லாம் சரியே என்று சொல்லி பெருமானின் மோதிரத்தை தலை மீது வைத்துக் கொண்டு மிகவும் மகிழ்ந்தாள்.
“பலபல நாமம்சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை
அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன்மலை
குலமலை கோலமலை குளிர்மாமலைகொற்றமலை
நிலமலை நீண்டமலை திருமாலிருஞ் சோலையதே”
மிகப் பல குற்றத்தை வெளிப்படையாக சொல்லிப் பழித்த சிசுபாலனுடைய அற்பத்தனத்தை போக்கிய அழகனும், அலங்காரத்தை உடையவனுமான கண்ணன் வாழும் மலையாவது தொண்ட குலத்துக்கு தலையான மலையும் , அழகை உடைய மலையும் குளிர்ந்த பெரிய மலையும் வெற்றியை உடைய மலையும்
நல்ல நிலத்தை உடைய மலையும் உயர்ச்சியை உடைய மலையுமாகிய திருமாலிருஞ் சோலை என்ற மலையே ஆகும் எனப் பாடுகின்றார்.
இன்னும் அற்புதமான பாடல்களெல்லாம் அவரிடம் இருந்து வந்தது.
“மடி வழி வந்து நீர் புலன் சோர
வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே
கடைவழி வாரக் கண்டம் அடைப்பக்
கண்ணுறக்கம் அது ஆவதன் முன்னம்
தொடை வழி உம்மை நாய்கள் கவரா
சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார்
இடைவழியில் நீர் கூறையும் இழவீர்
இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே..
எமதூதர்களைக் கண்ட பயத்தால் மடியிடத்தில் உள்ள இந்திரியத்தின் வழியாக நீர் வெளிப்பட்டு பெருகவும் வாயிலே கொட்டிய கஞ்சியும், நெஞ்சிலே கோழை அடைப்பதால் உள்ளே போகாமல் வெளிப்பட்டு கடைவாய் வழியாக பெருகவும் மரணம் வருவதற்கு முன்னே இருடிகேசன் என்று பெயர் சொல்லிப் பகவானைத் துதிக்க வல்லவர் ஆகுங்கள்.
அவ்வாறானால் உங்கள் தொடைகளில் நாய்களும் கவ்வமாட்டா. எமதூதர்கள் சூலத்தினால் குத்தவும் மாட்டார்கள். நீங்கள் நடுவழியில் ஆடையினையும் இழக்க மாட்டீர்கள் என்பது பொருள்.
இது பகவானை அண்டி வாழ்ந்தால் மரணபயமில்லை, பகவான் மேலான பக்தி கொண்டோர் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை என்பதைச் சொல்லிப் பாடுகின்றார்.
“அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி
ஆவி மூக்கினில் சோதித்த பின்னை
சங்கம் விட்டவர் கையை மறித்துப்
பையவே தலை சாய்ப்பதன் முன்னம்
வங்கம் விட்டு உலவும் கடற்பள்ளி மாயனை
மதுசூதனனை மார்பில்
தங்க விட்டு வைத்து ஆவதோர் கருமம்
சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே.”
அதாவது, பஞ்ச பிராணன்களும் உடம்பிலிருந்து நீங்கிவிட உயிர் உள்ளதா இல்லையா என்று மூக்கில் கைவைத்து பார்த்து உயிர் நீங்கி விட்டது என்று அறிந்த பின்பு சுற்றியுள்ளவர்கள் இனி அவன் பிழைப்பான் என்ற ஆசையை விட்டு கையை மடக்கி வைத்துக்கொண்டு தலை சாய்த்து அழுவர்.
அப்படி ஒரு நிலை வருமுன்பே கடலில் பள்ளி கொண்டிருக்கும் மாயனை மதுசூதனனை தம் இதயத்தில் வணங்கி தம்மால் சுலபமாகச் செய்யக்கூடிய ஒரு செயலைச் செய்யக்கூடியதற்கு எந்நாளும் பயனைப் பெற முடியும் எனப் போதிக்கின்றார்.
மரணம் வருமுன் பகவானைத் தேடுங்கள் என்கின்றார்.
“துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணை ஆவர் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே”
இந்திரியங்களும் மனமுமாகிய எல்லாம் தளர்ச்சி அடைகின்ற காலத்திலேயே துணையாக இருப்பார்கள் என்றல்லவோ வல்லமை உடையவர்களைச் சேர்வது நான் உன்னிடம் சரணமாக அடைய தகுதி இல்லாது இருப்பினும் கஜேந்திராழ்வானுக்கு கிருபை செய்து காப்பாற்றியதால் உன்னைச் சேர்ந்தேன். என்னை மரண காலத்தில் தோன்றும் இளைப்பு தோன்றி வருந்தும் பொழுது அச்சமயத்தில் நான் உன்னைச் சிறிதும் நினைப்பதற்கும் சக்தி இல்லாதவன் ஆகவே ஸ்ரீரங்கத்தில் ஆதிசேஷன் ஆகிய படுக்கையில் பள்ளிகொண்டிருப்பவனே,
அந்த வேலையில் சொல்வதற்கு பதிலாக இப்பொழுதே உனது திருநாமத்தைச் சொல்லி வைத்தேன் என அந்திம காலத்துக்கான தயாரிப்பை முன்பெ சொல்கின்றார்.
“தண்ணனவு இல்லை நமன்தமர்கள்
சாலக் கொடுமைகள் செய்யாநிற்பர்
மண்ணொடு நீரும் எரியும் காலும்
மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய்
எண்ணலாம் போதே உன் நாமம் எல்லாம்
எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அண்ணலே நீ என்னைக் காக்கவேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே”
அதாவது, ஐந்து பூதங்களின் வடிவாய் இருப்பவனே, எல்லாருக்கும் தலைவனே, எம படர்கள் சொல் செயல்களின் மென்மை சிறிதும் இல்லாதவர்களாய் மிகவும் கொடுமையைச் செய்வார்கள். உன் திருநாமங்களை எல்லாம் எண்ணுவதற்கு இயலும் இக்காலத்திலேயே எண்ணி சொன்னேன், நீ எப்பொழுதும் என்னைக் காக்க வேண்டும் எனப் பொருள்.
இன்னும் பாடுகின்றார்
“கண்ணா! நான்முகனைப் படைத்தானே! காரணா! கரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை
ஓவாதே நமோ நாரணா என்று
எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம வேத நாள்மலர் கொண்டு உன பாதம்-
நண்ணாநாள்! அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே”
எல்லாப் பொருள்களுக்கும் காரணமானவனே பிரம்மனைப் படைத்தவனே ,கிருஷ்ணா அவதாரம் செய்தவனே கலியத் திருமேனி உடையவனே, உனக்கு அடியவனான நான் உணவு உண்ணாத போது பசி எடுப்பதில்லை இடைவிடாமல் நாராயணனே உனக்கு நமஸ்காரம் என்று நினையாத நாளும் , மூன்று வேத மந்திரங்களைக் கொண்டும் , மலர்களைக் கொண்டும் உனது திருவடிகளைக் கிட்டாத நாளுமான அந்நாள்கள் நேரிடுமாயின் அப்படிப்பட்ட நாள்களே நான் பட்டினியாய் இருக்கும் நாள்களாகும் என்பது பாடலின் பொருள்.
“மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிது அன்று கண்டீர் புகேன்மின்
சிங்கப் பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர்
பங்கப்படாது உய்யப் போமின் பண்டு அன்று பட்டினம் காப்பே”
ஆன்மா உரு தெரியாதபடி மங்குவதற்கு காரணமான தீவினையால் நேரும் நோய்களே உங்களுக்கும் ஒரு தீவினை வந்தது பாருங்கள், இங்கே நுழையாமல் இருங்கள்!! நுழையாமல் இருங்கள், . இங்கே புகுவது உனக்குச் சுலபமாய் முடிவதென்று நிச்சயம். ஆகவே நுழையாமல் இருங்கள். ஏனெனில் நரசிங்க அவதாரம் எடுத்த எமது தலைவனாகிய சுவாமி வந்து சேருகின்ற திருக்கோயிலாகும் இவ்வுடல், இங்கே வந்து புகுந்து அவமானப்படாமல் தப்பும்படி ஓடிப் போய் விடுங்கள். என் உடல் இப்பொழுது காவலைப் பெற்றுள்ளது என நோயில் வீழ்ந்தபொதும் அந்தப் பகவானை சொல்லிப் பாடுகின்றார்.
இந்தப் பாடல் நோயுற்றோர் சொல்லிவர நல்ல பலனைக் கொடுக்கும், தன்வந்திரி மந்திரத்துக்கு இணையானது.
இன்னும் பாடுகின்றார்
“கடல் கடைந்து அமுதம் கொண்டு
கலசத்தை நிறைத்தாற்போல்
உடல் உருகி வாய் திறந்து
மடுத்து உன்னை நிறைத்துக்கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என்
கோல்-ஆடி குறுகப் பெறா
தட வரைத் தோள் சக்கரபாணீ”
அதாவது, சார்ங்க விற் சேவகனே பெரிய மலை போன்ற தோள்களையும் சக்கரத்தாழ்வானையும் உடையவனே, சார்ங்கம் என்னும் வில்லை தரித்த வீரனே,
திருப்பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து அமுதத்தை எடுத்து கலசத்தில் நிறைத்தது போல, அடியேன் உடல் உருவகப் பெற்று வாயை திறந்து கொண்டு ஆராவமுதாகிய உன்னை உட்கொண்டு தேக்கிக்கொண்டேன். இனிக் கொடிய தண்டங்களை நடத்துபவனான எமனும், எனது செங்கோல் செல்லும் இடங்களிலும் அணுகவல்லவன் அல்லன் எனப் பொருள்.
நம்மாழ்வார் பாடல்கள் சாகாவரம் வாய்ந்தவை, “பெரியாழ்வார் திருமொழி” என நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டிருப்பவை.
பகவான் தன் பக்தனை, தமிழ் அறியாத தமிழ் இலக்கணம் அறியாதவனை, தன்னை மட்டும் நம்பி பூ மாலை கட்டிப் பணிசெய்தவனைப் பாமலை கட்டவைத்து அழியாப் பாசுரங்களைப் பெற்றுக்கொண்ட நிகழ்வின் சாட்சிகள் அவை.
அந்தப் பெரியாழ்வார் திருமொழிதான் பின்னாளில் பிள்ளைத் தமிழாகி பாரதியார் வரிகள் வரை “கண்ணா வாடா” என்பது வரை வந்தது.
பெருமாள் வழிபாட்டில் அந்தப் பெரியாழ்வாரின் பாசுரங்கள் அவசியம், அந்தப் பாசுரங்களை பாடிக் கண்ணனை வழிபடுங்கள், அப்போது அந்த மாயகண்ணன் பெரியாழ்வாரின் வரிகளுக்காக உங்களை நோக்கி ஓடிவந்து அருள்புரிவான் இது சத்தியம்.
“குருமுகம் அநதீத்ய ப்ராஹ வே தாந் அஸேஷாந்
நரபதி பரிக்லுப்தம் ஸுல்கமாதாது காம:
ஸ்வஸுரம் அமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜ குல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி”
என அவருக்குத் தனியன் பாடுவார்கள், அதைச் சொல்லி வணங்கலாம், நிச்சயம் பகவான் அருள் உண்டு.
“நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே!
நானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே!
சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே!
தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே!
செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே!
சென்றுகிழியறுத்துமால் தெய்வமென்றான் வாழியே!
வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே”
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.