பன்னிரு ஆழ்வார்கள் 09 : ஆண்டாள்.
பன்னிரு ஆழ்வார்கள் 09 :
ஆண்டாள்.
பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்குமான பந்தத்தை மானுட உணர்ச்சியின் ஒவ்வொரு உணர்ச்சியுடன் போதித்த மதம் இந்துமதம்.
அது குரு சிஷ்ய பாவமாக ரிஷிகள் வாழ்வினைச் சொல்லி போதித்தது.
நண்பர்கள் எனும்வகையில் கண்ணனையும் அர்ஜூனனையும் சொல்லிப் போதித்தது.
தகப்பன் பாசம் என ராமபிரான், பரசுராமனைக் காட்டிப் போதித்தது, விசுவாசம் என அனுமனை காட்டிச் சொன்னது.
வாழ்க்கை துணை ராமன் சீதையினைக் காட்டிச் சொன்னது.
குடும்பம், தாய், தந்தை, நட்பு என எல்லா மானிட உணர்வுகளிலும் ஆன்மீகத்தைச் சொன்ன இந்துமதம், காதலில் சொல்ல ஒரு பெண்ணை உருவாக்கிற்று.
மானிட காதல் என்பது எப்படி ஒரு ஈர்ப்பு பந்தமோ அதைப் பக்தியில் காட்டிப் பரமனை அடைய முடியும் என அவளைக் கொண்டு போதித்தது.
ஆத்மாவின் ஏக்கத்தை ஒரு பெண்ணின் ஏக்கமாக பாடி, வாழ்வு என்பது பகவானை அடைதலே என்பதை லௌகீக மொழியில் ஆன்மீக பொருளில் பாட அவளை அனுப்பிற்று.
ஆம், அவள் தமிழ்மொழியின் சொத்து, காதல் என்பது எப்படியானது என்பதைக் காளிதாசன் கூடச் சொல்லமுடியா அளவு உன்னத இலக்கிய முத்து.
காதல் மொழிகளைத் தமிழில் ஆன்மீகமாகப் பாடிக்காட்டிய ஒரு முழுச்சித்த மனநிலை அவளுடையது.
நீரில் கிடக்கும் தாமரை நீரில் ஓட்டாதது போல சமைத்து வைத்த வீட்டுக்காரி பட்டினிக் கிடப்பது போல் அவள் காத்தது ஒரு தவம்.
காதலை அவள் அளவு பாடியவளுமில்லை ஆனால் அக்காதலில் பகவானைத் தவிர ஏதும் நினைவில்லாமலே வாழ்ந்து அவளைப் போல் கலந்தவருமில்லை.
அவள் ஆன்மீக இலக்கியமாக தன் காதல் மொழிகளை அழகாக கொடுத்துச் சென்றவள்.
பெரும் பெரும் ஞானியருக்கே வரும் பக்குவம் அது, அது மாபெரும் ஞானியருக்கு வந்தது உன்னதமான பக்தி மிக்கவர்களுக்கு உணர்வுகளில் சிறந்தது காதல்.
எதிர்பார்ப்பில்லாக் காதல் நிபந்தனையில்லாக் காதல் என்பது அன்பின் வெளிப்பாடு, அந்நிலையினை யாரும் எளிதில் எட்டிவிடமும் முடியாது.
தாய் பிள்ளைமேல் கருணைகாட்ட தாய் எனும் பந்தம் உண்டு, குடும்பத்தார் சொந்தபந்தம் காட்ட ஒரு பிணைப்பு பிறப்பால் உண்டு.
ஒவ்வொரு பாசத்தின் பின்னாலும் நிபந்தனையும் எதிர்பார்ப்பும் உண்டு. அது நியதி. ஆனால், எதிர்பார்ப்பில்லாக் காதல், நிபந்தனையே இல்லாக் காதல் என்பது அன்பின் சிகரம்போன்ற நிலை, அன்பு கடலின் அடி ஆழம் , எல்லையில்லா அன்பு வானம்.
அந்தப் பெரும் அன்பை பகவான் மேல் கொட்டி எழுதுவது என்பது மானுட மனம் கடந்த, எல்லை கடந்த, குணம் கடந்த, பெரும் பக்குவம் பெற்ற ஞானியராலே சாத்தியம்.
ஆண்டாள் அப்படியான ஞானி , அவள் கொடுத்த இலக்கியம் எக்காலமும் முதன்மையான இலக்கியம்.
இந்தியாவின் இலக்கிய உலகம் இனிமையானது, அங்கு முத்திரையிட்ட கவிஞர்களும் புலவர்களும் ஏராளமானோர் உண்டு எனினும் வெகுசிலரே தனித்து நின்றார்கள்.
காளிதாசன் வர்ணனைகளால் ஜொலித்தான், கம்பன் உவமைகளால் உயர்ந்தான், இளங்கோ தன் அருவிபோன்ற தமிழால் இனித்தான்.
ஒளவையும், வள்ளுவனும் தங்கள் ஞானபோதனையால் நின்றார்கள்.
இந்த வரிசையில் வந்து நிற்பவள் அந்த ஆண்டாள், அவளின் பாடலெல்லாம் ஏக்கத்தைக் கொடுப்பவை, பெரும் எதிர்பார்ப்பில் வந்த ஏக்கம், அந்த ஏக்கத்தில் வந்த கலக்கம், அந்த கலக்கத்தில் அவ்வப்போது அவளே சொல்லிக்கொள்ளும் ஆறுதல், அந்த ஆறுதலைத் தேடி அவள்பாடும் பாடல் என ஆண்டாள் தனித்து நிற்கின்றாள்.
அவள் ஆழ்வார்களில் தனிப்பிறப்பு, ஆழ்வார்களில் ஒரே பெண் பிறப்பு, ஆனால் அந்தப் பாடலும் சுவையும் அழகும் உருக்கமும் ஏக்கமும் எந்தப் பக்திவரிகளுக்கும் குறைந்தது அன்று.
மாணிக்கவாசகர் உருக்கமாக பாடினார் என்றால் அந்த உருக்கத்தை தன் ஏக்கத்தால் அழகாக சமன் செய்கின்றாள் ஆண்டாள்.
அவளின் வாழ்வும் தவமும் பாடலும் அவள் ஒரு அவதாரம் என்பதை எளிதாக உணரவைக்கின்றது.
பெரியாழ்வார் பாண்டிய மன்னனை வாதத்தில் வென்றதும் அந்தப் பணத்தில் அவர் ஒரு நந்தவனம் அமைப்பதும் ஆண்டாள் வருகைக்கான முன்னோட்டமாகின்றது, அந்த நந்தவனத்தில்தான் ஆண்டாளைக் கண்டெடுக்கின்றார் பெரியாழ்வார்.
ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அயோநிஜையாய் அவதரித்தாள்.
பெரியாழ்வாரின் தமிழும் அவர் காட்டிய கண்ணனும் ஆண்டாளுக்கு உணவும் சுவாசமுமாகின்றன. அந்த இரண்டிலுமேதான் அவள் வாழ்கின்றாள்.
அக்காலத்தில் சிறுவயதிலே திருமணங்கள் நிச்சயிக்கப்படும் பொழுது கண்ணனே தன் கணவன் என அதிர வைக்கின்றாள் ஆண்டாள், அந்த வயதிலே கண்ணன் மேல் அவளுக்கு அவ்வளவு ஈர்ப்பாகின்றது, அந்த ஈர்ப்புக் காதலாகின்றது.
அந்தக் காதல்தான் அவளை அவ்வளவு பாடல்களைப் பாடவைக்கின்றது.
அவள் பக்தி எப்படியிருந்தது என்றால் கண்ணனுக்குக் கட்டிய பூமாலையினைக் கண்ணனுக்குச் சூடினால் அவன் கழுத்தில் நார்களோ இல்லை வேறு முடிச்சுகளோ குத்துமோ எனக் கவலையுறும் அளவு இருந்தது.
அதனால் அவள் அந்த மாலையினை தான் சூடி உணர்ந்து, வலியில்லை என்றபின்புதான் கண்ணனுக்கு அணிவித்தாள். அந்த அளவு அவள் பக்தியில் மூழ்கியிருந்தாள்.
அந்த மாலையில்தான் யசோதையின் தாம்பு கயிறுக்குப் பின் கண்ணன் சிக்கினான், அன்பால் அவன் அவள் மாலையில் சிக்கினான்.
அதனால்தான் தொட்டுப்பார்த்த உணவும், சூடிக்கொண்ட மலரும் பகவானுக்குப் படைக்கப்படக் கூடாது எனும் விதியினையும் மீறி அவளை “சூடிக் கொடுத்த சுடர்கொடி” என்றாக்கினான்.
கண்ணனை நோக்கி ஏங்கி ஏங்கி பாடிய ஆண்டாள், அவன் உத்தரவுப்படியே திருவரங்க ஆலயத்தில் அவன் சந்நதியில் காயத்தைக் காற்றில் கரைத்துப் பாற்கடல் ஏகினாள்.
அவள் வெறும் 15 அல்லது 16 ஆண்டுகள்தான் இப்பூமியில் வாழ்ந்திருக்கின்றாள், ஆனால் அந்தக் குறுகிய வாழ்வுக்குள் கால காலத்துக்கு நிற்கும் காவியங்களைத் தந்திருக்கின்றாள்.
அவள் பாடல்கள் மார்கழி மாதம் பாவைக்குப் பாடப்படும் பாடல்கள் என்றாலும், தை முதல் பங்குனி வரை காமதேவனுக்குப் பாடப்படும் பாடல்கள் என்றாலும் அதாவது காதல் ஏக்கத்தில் பாடப்பட்ட பாடல் என்றாலும் அது முழுக்கத் தத்துவம், முழு ஆன்மீக ஞானத் தத்துவம்.
காதலனை நோக்கி காதலியாக அவள் பாடியதெல்லாம் ஒரு ஆன்மா இறைவனை நோக்கி ஏங்கிய தத்துவம்.
இன்னும் ஆழமாகக் கண்டால் கீதையின் போதனையினை மிகச் சுருக்கமாகக் காதலாகச் சொன்ன பாடல்கள் அவை.
கீதையில் அர்ஜூனனுக்குக் கண்ணன் சொன்ன கீதை குரு சிஷ்ய பாவம், அப்படி ஏகப்பட்ட கீதைகள் உண்டு. உத்தவ கீதை உள்ளிட்ட ஒவ்வொரு கீதைகள் உண்டு.
அவ்வகையில் வாழ்வின் ஞான போதனையினைக் காதல் காட்சிகளில் கீதையின் சாரத்தைக் கலந்து தந்தவள் ஆண்டாள்.
கண்ணனின் வாழ்வும் பெருமையும் மட்டுமல்ல, காதல் எனும் பெயரில் உன்னதப் பக்தி மட்டுமல்ல இன்னும் பெரும் வரலாறெல்லாம் அவள் பாடலில்தான் பொதிந்து கிடக்கின்றன.
அவள் பாடல்கள் வெறுமனே கண்ணன் பெருமையினையும் அதனால் ஆண்டாள் உருகியதையும் சொல்லவில்லை, அக்கால இந்து தமிழகத்தை கண்முன் நிறுத்துகின்றாள்.
மார்கழி மாதம் அன்று எப்படிச் சிறப்பிக்கப்பட்டது என்பதை அழகாகச் சொல்லும் அவள் பாடல்தான், தைமாதம் உழவர் திருவிழாவும் அன்று உழவனுக்கான நாளும் அன்று என்பதை உறுதியாகத் தெரிவிக்கின்றாள்.
தை மாதம் என்பது காமதேவனுக்கான பண்டிகை என்பதையும் அப்பொழுது கரும்பும் மலரும் பொங்கலும் வைத்து வழிபடுவது இந்துப்பெண்கள் வழமை என்பதையும் அழகாக எழுதிவைத்தாள்.
காமதேவன் என்றவுடன் திராவிட பகுத்தறிவில் இடுப்புக்குக் கீழும் கழுத்துக்குக் கீழும்தேடிச் செல்லுதல் கூடாது, அது அவர்கள் கண்ட காமதேவன்.
மாறாக, உண்மையான காமதேவன் என்பவன் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஆத்மார்த்தமான பிணைப்பை ஏற்படுத்தும் சக்தி கொண்டவன், கணவன் மனைவி இடையே அந்த ஆத்மார்த்தமான அன்பு வேண்டும் பிணைப்பு வேண்டும்.
அந்த வரத்தை வழங்குபவன் காமதேவன் என்றானான், அவனை வணங்கிஅந்த வரத்தை பெறுவது காமனின் நோன்பாய் இருந்தது.
ஆண்டாளும் கண்ணனை நினைந்து அந்த நோன்பை இருந்தாள், அப்பொழுது அவள் பாடியதுதான் நாச்சியார் திருமொழி.
அவள் அந்த காமன் நோன்புடன் இன்னொரு சூசாகமான தகவலும் சொல்கின்றாள், அது அன்று வழமையில் இருந்த பலராமன் வழிபாடு.
கண்ணனும் பலராமனும் சாதாரணம் அம்சம் அல்ல, அவர்கள் அடிதட்டு மக்களான மேய்ப்பர்களையும் உழவர்களையும் ராஜ்ஜியம் அமைத்துக் காத்து வாழவைத்தவர்கள். இதனால் பலராமனின் ஆயுதம் ஏர் கலப்பை என்றானது.
கண்ணனை நினைத்து வணங்கும் இடத்திலெல்லாம் பலராமனும் வணங்கப்பட்டான், இந்தியா முழுக்க பலராமன் வழிபாடும் இருந்தது. அந்தப் பலராமனை தைமாதம் நன்றியோடு வணங்குவது இந்துக்கள் இந்துவிவசாயிகளின் வழமையாய் இருந்தது.
இன்றும் யாதவருக்குப் கண்ணன் போல உழவருக்குப் பலராமன் இருந்தான்.
சங்க இலக்கிய பரிபாடலும் இன்னும் பலவும் அதனை விளக்குகின்றன, பனைமர கொடியுடன் அவனை வணங்குதல் வழமையாய் இருந்தது.
பனைக்கொடியையும் கலப்பையையும் ஆயுதமாகக் கொண்ட பலராமனுக்கு மதுரையில் கோயில் இருந்ததை “மேழிவனுயர்த்த வெள்ளை நகரமும் என்ற வரிகள் மூலம் இளங்கோவடிகள் எடுத்துக்காட்டுகிறார்.
இன்றும் சுசீந்திரம் கோவில் முதல் சென்னை பேராலயங்கள் வரை பலராமனுக்கு சிலைகள் உண்டு.
அந்த வரலாற்றைத்தான் இன்று தமிழர் திருநாள், உழவன் திருநாள் என திசைமாறிவிட்ட அல்லது 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு எந்த இடத்திலும் இல்லாத பொங்கல் விழா, தமிழன் விழாவினை அது இந்து பண்டிகை என்றும் காமதேவனுக்கும் பலராமனுக்குமான விழா என்பதையும் அழகாக அவள் பாடல் தெரிவிக்கின்றது.
ஆம், காமன் எனும் அணங்க தேவனுக்குக் கரும்பு படைத்தும் உழவர்கள் காவலனான பலராமனுக்குக் கலப்பை வைத்து வழிபட்டதும், எல்லா உணவுக்கும் தாயான சூரியனை வழிபட்டதுமே அன்றைய மரபு.
அதை இக்காலத்தில் “தமிழ், தமிழர்” எனத் திசைதிருப்பினாலும் அதன் மூலம் இந்துப் பண்டிகை என்பதை அவளே தன் பாடல்களில் தெரிவிக்கின்றாள்.
அப்பாடல்களில் தத்துவம் உண்டு, அழகு தமிழ் உண்டு, ஆன்மீகம் உண்டு, விஞ்ஞானம் உண்டு, அதிசயத் தகவல் உன்டு, இன்னும் அக்கால நடைமுறை அத்தனையும் உண்டு.
அதுவும் அந்தத் தமிழ் அவளைத்தவிர யாருக்கும் சாத்தியமில்லை.
அவள் அழுதால் நாம் அழுவோம், அவள் சிரித்தால் நாமும் சிரிப்போம், அவள் வாடினால் நாமும் வாடுவோம்.
அவள் ஏங்கினால் நாமும் ஏங்குவோம், அவள் கொஞ்சினால் நாமும் கொஞ்சுவோம்.
அப்படி ஒரு தமிழும் அந்தத் தமிழில் தன் மன ஏக்கத்தை ஆன்ம தவிப்பினை அவள் சொன்னதுபோல் யாரும் சொல்லியிருக்க முடியாது.
தமிழின் அருமையினைச் சொல்லவந்தவள் ஆண்டாள், ஏக்கமும் உருக்கமுமான தவிப்பை தமிழ்மொழி தவிர இன்னொரு மொழியில் சொல்ல வழியில்லை எனப் பரம்பொருள் அனுப்பிய அவதாரம் அந்த ஆண்டாள்.
திருப்பாவை (30), நாச்சியார் திருமொழி (143) ஆக 173 பாடல்கள் பாடினாள்.
அவள் பாடல்களெல்லாம் ஆன்மீகத் தத்துவங்கள், காதல் எனும் பெயரில் சொல்லப்பட்ட ஞான ரகசியங்கள்.
(அந்த ஆழ்வாருக்கு, தனித் தமிழ் புலவருக்கு, கீதையினைக் காதலாய்ச் சொன்ன மேதைக்கு இன்று ஆடிப்பூரம் எனும் அவதார பெருநாள்.)
தமிழும், அதன் அழகும், இந்துத் தமிழர் வாழ்வின் பாரம்பரியமும், இந்துக்களின் ஆன்மீகமும் அவள் பாடல்களிதான் முழுக்க இருக்கின்றன.
ஆடிப்பூர நாளில் அவளை நோக்கி வணங்குவது ஒவ்வொரு இந்துக்களின் நன்றி கடமையாகின்றது, காலத்தால் ஏற்படும் சவால்களையெல்லாம் இந்துமதம் அவள் பாடல்களாலும் அவள் பெயராலும் எதிர்கொண்டு வெற்றி பெறுகின்றது.
இந்துமதம் பெண்ணடிமை மதம் என்றால் அங்கே ஆண்டாள் முன்னுக்கு வருவாள்.
இந்துச்சமூகம் பெண்களைப் படிக்கவைக்கவில்லை என்றால் அங்கே அவள் வருவாள், பெண்கள் வழிபட உரிமை இல்லை என்றால் அவள் வருவாள், ஆச்சாரமும் அனுஷ்டானமும் மூடநம்பிக்கை என்றால் “சூடிக் கொடுத்த சுடர்கொடியான” அவள் வந்து வாதிடுவாள்.
ஆன்மா இறைவனை நோக்கி எவ்வடிவில் தவமிருந்தாலும் அது காதல் என்றாலும் பாசம் என்றாலும் பரம்பொருள் இறங்கி வந்து தன்னோடு அணைத்துக்கொள்வான் என்பதே ஆண்டாள் வாழ்வு.
ஆடிப்பூரத்தில் உதித்த மஹாலஷ்மியும் உமாதேவியும் மட்டுமல்ல அந்தச் சக்தியாய் அவதரித்த ஆண்டாளும் தன் தவத்தால் இறைவனை அடைந்தாள் என்பதுதான் அவள் பக்தி வாழ்வின் முத்தாய்ப்பு அவள் ஒரு அவதாரம் என்பதைச் சிறப்பித்துச் சொல்லும் நிகழ்வு.
கீதையினை காதல்பாட்டு வடிவிலும் ஏக்கவடிவிலும் சொல்ல வந்த அந்த ஞானமகளுக்கு, கண்ணனைப் பாடவே அவதரித்த அந்த ஞானப்பெருமகளுக்கு, அழகு தமிழில் உருக்கமாக பாடிய பக்திப்புலவரான பெருமகளுக்கு ஆடிப்பூரநாளில் பாடி வணங்கி நிற்பது ஒவ்வொரு தமிழ்பேசும் இந்துவும் பெற்ற பெரும் பாக்கியம்.
கமலமுடன் வில்லிபுத்தூர் விளங்கவன்தாள் வாழியே!
காரார் நற்றுழைக்கானத் தவரித்தல் வாழியே!
விமலமாம் திருவாடிப் பூரத்தாள் வாழியே!
விட்டுசித்தன் வளர்தெடுத்த இளங்கிழையாள் வாழியே!
அமலத் திருப்பாவை ஐயாறு அளித்தருள்வாள் வாழியே!
ஆக நூற்றெண்ணைந்து மூன்றுரைத்தாள் வாழியே!
அமுதனாம் அரங்கனுக்கே மாலையிட்டாள் வாழியே!
ஆண்டாள் தம் இணையடிகள் அனவரதம் வாழியே!
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
( குறிப்பு: ஆண்டாள் அருளிய ” திருப்பாவை” விளக்கம் புத்தகமாக வந்துள்ளது மற்றும்”நாச்சியார் திருமொழி” விளக்கம் இந்த வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளோம்.)