பன்னிரு ஆழ்வார்கள் 12 : திருமங்கை ஆழ்வார்.

பன்னிரு ஆழ்வார்கள் 12 : திருமங்கை ஆழ்வார்.

ஆழ்வார்களில் வித்தியாசமானவரும், ஏதோ ஒரு வகையில் கடைசிவரை பகவானுக்கு கைங்கரியம் செய்வேன், ஏதோ ஒருவழியில் செய்வேன் என செய்து நின்றவரும் அப்படியே வைகுண்ட பாக்கியம் பெற்றவருமான அந்த திருமங்கை ஆழ்வாரின் வாழ்வு சுவாரஸ்யமானது.

பெரும் மன்னனாக வாழ்ந்திருக்க வேண்டிய அவர் வாழ்வு எப்படி ஒரு ஆழ்வாராக, பெருமாளின் அதிதீவிர பக்தனாக வாழ்ந்து பாசுரங்களை கொட்டிச் சென்ற பெருவாழ்வாக, எக்காலமும் ஆழ்வார்களில் மகா முக்கியமானவராக இடம்பெற்றது என்பது ஒவ்வொரு இந்துவும் அறிந்துகொள்ள வேண்டிய பெருமிதமிக்க வரலாறு.

வைஷ்வண பக்திக்கும் அந்த விஷ்ணுவழிபாட்டின் அழியா பெருமைக்கும் அவர் எக்காலமும் பெரிய உதாரணம்.

இனி அந்த திருமங்கை ஆழ்வாரின் வாழ்வினை காணலாம்.

இவர் வாழ்வு காலத்தால் முந்தையது. அப்போது சோழவள நாட்டை சோழர்கள் பல பாகங்களாக பிரித்து நிர்வகித்தனர், அப்படி பிரிக்கப்பட்ட ஒரு பகுதி திருகுறையலூர், இந்த பகுதியினை சோழமன்னன் பிரதிநியாக ஆலிநாடன் என்பவர் நிர்வகித்துக் கொண்டிருந்தார். இந்தப் பகுதிக்கு ஆலிநாடு என்றொரு பெயர் இருந்ததால் இவர் ஆலிநாட்டான் என அழைக்கப்பட்டார். இவர் மனைவியார் வல்லித்திரு அம்மையார்.

இந்த ஆலிநாடு சோழநாட்டின் ஒரு பகுதி, அதனை இவர் நிர்வகித்தார்.
வரிவசூல், காவல் நிர்வாகம் என எல்லாம் மேற்பார்வையிட்டு உரிய வசூலை சோழனுக்கு அனுப்பவேண்டும், படைகளை கவனிக்க வேண்டும், போர் என்றால் மன்னனுடன் சென்று போரிட வேண்டும் எனப் பல விதிகள் இவருக்கு உண்டு.

இப்படியாக அவர் ஆலிநாட்டை நிர்வகித்து வந்த காலகட்டத்தில்தான் அவருக்கொரு ஆண்மகவு பிறந்தது. கலியுகம் 398 ஆம் ஆண்டு, நள ஆண்டு கார்த்திகை பௌர்ணமி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் அவதரித்தார்.

இவர் விஷ்ணுவின் சாரங்கம் எனும் வில்லின் அம்சம் என்பார்கள். பகவான் பெருமாள் தன் வில்லையே ஒரு அம்சமாக அனுப்பிய பிறப்பு அவர். அவர் பிறக்கும்போதே கருநீல நிறம் கொண்டிருந்ததால் நீலன் எனப் பெயர் பெற்றார்.

நீலன் ஒரு சேனைத்தலைவனின் மகன் என்பதால் எல்லா கலைகளும் அவருக்கு கற்றுக்கொடுக்கப்பட்டன.
நால்வகை போர்கள், ஆயுதபயிற்சி குதிரை, யானை படை நடத்துதல் இன்னும் என்னென்ன போர்கலைகள் உண்டோ அத்தனையும் கற்றுக்கொடுக்கப்பட்டன‌.

அவரும் கூர்மையாக அதனை கற்றுக் கொண்டார். வளர வளர சேனை அறிவும் போர் அறிவும் வீரமும் சேர்ந்து வளர்ந்தது. குதிரை, யானை வளர்ப்பிலும் பெரும் தேர்ச்சிப் பெற்றார்.

அவரின் குதிரைக்கு “ஆடல்மா” என்றும் அவரின் யானைக்கு “கடமா களியானை” என்றும் பெயராயிற்று.

இவர் போர்கலைகளில் வல்லவரானார்.‌16 வயதை எட்டுமுன்னே சோழனுக்கு மாபெரும் பலமாக நின்றார். சோழனும் அவர்மேல் பெரும் மரியாதை வைத்திருந்தான்.

இந்த நீலன் எல்லா எதிரிகளுக்கும் எமன் போல் விளங்கியதால் “பர காலன்” என்றானார். அவர் பெயரை கேட்டாலே எதிரிகள் அஞ்சி ஓடத் தொடங்கினார்கள். புலிக்கொடி தாங்கிய சோழப்படையில் அவர் ஒரு வரிப்புலி போல் சீறி நின்றார்.

அதே நேரம் தமிழில் அவருக்கு பெரும் பயிற்சியும் இருந்தது. நான்கு வகை கவிகள் எனும் ஆசுகவி, மதுரகவி, வித்தாரக்கவி, சித்திரக்கவி எனும் நான்கு கவிகளிலும் பெரும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

ஆசுகவி என்றால் கொடுத்த பொருளினை பற்றி உடனே பாடும் திறமை.

மதுரகவி என்றால் பொருள்வளம், சொல்வளம் கொண்டு பொருள்வளமும் பெற்று எல்லா வகை அணிகள் உருவகமெல்லாம் பெற்று கேட்போர் மதுகுடித்தவர் போல் மயங்கி கிடக்க வைக்கும் க‌வி.

வித்தாரக்கவி என்றால் கவியில் ஒரு ஈர்ப்பு, வசீகரம், கேட்போர் மறுத்து சொல்லமுடியாமல் உடன் பட்டு நிற்பது போல் வைக்கும் கவி.

சித்திரக்கவி என்றால் எல்லா பொருள்களும் முழுமையாய் உணரும் பரஞானம் வாய்ப்பதற்காக பாடப்படுபவை. சித்திரம் எனும் மானுடரின் அருள்நிலை உயர பாடப்படுவது சித்திரக்கவி.

இந்த நான்கு கவிகளிலும் அவர் தேர்ச்சி பெற்றவரானார். இதனால் பல கவிஞர்களை தோற்கடித்து “நாற்கவி பெருமான்” எனும் பட்டத்தோடும் வலம் வந்தார்.

இவர் இப்படி பெரும் பலம் படையால், நிதியால் பெற்றிருந்தாலும் அப்போது திருத்தொண்டு ஏதும் செய்யவில்லை, பெரும் கவியாற்றல் பெற்றிருந்தாலும் இறைவனை பாடவில்லை.

அக்கால சோழநாட்டில் சைவம், பௌத்தம் என இரு மதங்கள் வலுப்பெற்றிருந்தன. மன்னன் சைவமாக இருப்பதால் அந்த நாடும் சைவ பூமியாக இருந்தது. எனினும், பௌத்தமும் வலுவோடு இருந்தது. நாகப்பட்டினத்தில் பெரிய பௌத்த விகாரையெல்லாம் இருந்தது.

சைவத்தை பௌத்தம் விழுங்கலாம் எனும் ஒரு எச்சரிக்கையும் அப்போது இருந்தது.

இக்காலகட்டத்தில்தான் பரகாலர் தன் பெரும் பலத்துடன் அரசனுக்கு சேனைதலைவனாகவும், தன் கவியால் கற்றவர் அவையில் கவிஞனாகவும் பரிணமித்துவந்தார். அழகு, அறிவு, செல்வம், படைபலம் கொண்ட அவருக்கு எல்லா சுகங்களும் சந்தோஷமும் கிடைத்தது.

பெண்கள் மேல் ஒரு மையலும் இயல்பாக இருந்தது.

இவர் இங்கே வளர்ந்துவரும் போது, ஷத்திரிய குலத்தின் வீரனாய் தளபதியாய் வளர்ந்து வந்போது அங்கே ஒரு பெண்ணும் இன்னொரு இடத்தில் வளர்ந்து வந்தாள், பிராமண குலத்தில் பிறந்து வளர்ந்த அவள் பெயர் குமுதவல்லி.

அவளுக்கும் ஒரு பெரும் பின்னணி இருந்தது, அவள்தான் அவள் ஒருத்திதான் திருமங்கை ஆழ்வார் என்றொரு ஆழ்வார் உருவாக பெரும் காரணம்.

அப்படி ஒரு ஆழ்வார் உருவாகி வர பரம்பொருள் அவளை சொல்லித்தான் அனுப்பினான், அவள் சாதாரண பிறப்பல்ல அவளுக்கோர் ஜாதகமே உண்டு.

பெருமாளின் வில் அம்சமாக பிறந்த பரகாலரை உரிய நேரத்தில் வைஷ்ணவம் பக்கம் திருப்ப முன்பே பகவான் திட்டமிட்டு அனுப்பிய கால கைகாட்டி அவள்.

அவள் வானலோக மங்கையின் அவதாரம், வானலோக பெண்களின் தலைவி “சுமங்கலை” என அவளுக்கு அங்கு பெயர். அழகிலும, அறிவிலும், கலைகளிலும் அவள் பெரும் தேர்ச்சிக் கொண்டவள்.

அவள் ஒருமுறை இமாலயச்சாரலில் தன் தோழியரோடு நடந்துகொண்டிருந்தபோது கபில முனி திருமாலின் பெருமைகளை இதர முனிவர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார். அதை கண்டவாறே தன் தோழியருடன் சிரித்தபடி சென்ற சுமங்கலை அங்கே அவலட்சணமாக இருந்த முனிவரை நோக்கி மிக கேலியாய் நகைத்தாள்.

அதனைக் கண்ட கபிலமுனி அவளுக்கு சாபம் கொடுத்தார். நீ மானுடராக பிறந்து ஒரு மிலேச்சனுக்கு வாழ்க்கைப்பட்டு மிக மிக மோசமாக அவமானப்பட்டு வாழ்ந்து இந்த சாபம் தீர்ப்பாய் என உரக்கச் சொன்னார்.

மாபெரும் முனி தனக்கு சாபமிட்டதை அறிந்து அவர் பாதம் அஞ்சி ஒடுங்கினாள் சுமங்கலை, அவரின் காலை பிடித்துக் கதறினாள்.

கருணையே உருவான கபிலமுனி அவளுக்கு ஆறுதல் சொன்னார், “பெண்ணே நாம் அல்ல இயக்குவது, நான் அல்ல சொன்னது, என்னுள் இருந்து பகவான் நடத்தும் நாடகம் இது என்பதை உணர்ந்துகொள், உன்னை கொண்டு ஒரு திட்டம் பகவான் வைத்திராமல் இதெல்லாம் நடக்காது.

அதனால் உனக்கு பிராயசித்தம் தருகின்றேன், நீ பூலோகம் சென்று பிறப்பாய். அங்கே பெருமாளின் வில் அம்சத்தில் பிறந்த ஒரு பராக்கிரசாலியினை காண்பாய், அவன் பெரும் வீரனும் கவியுமாயும், பலாப்பழம் போல வெளியே முரடும் உள்ளே நல்மனம் கொண்டோனாக இருந்தாலும் அவன் பகவான்பால் திரும்பவில்லை.

இங்கே எந்த திருமாலின் பெருமையினை கேட்டுக்கொண்டிருந்த முனிவனை நீ அவமானபடுத்தினாயோ அதன் பரிகாரமாக அந்த பராக்கிரமசாலியினை உலகம் உய்ய பெருமாள் அடியானாக்குவாய், அவனுள் பக்தி உண்டு, பெரும் வைராக்கியம் உண்டு. ஆனால், தன் இலக்கு தெரியாமல் அவன் சுற்றிக்கொண்டிருக்கின்றான்.

நீ அவனை நல்வழிபடுத்தி அவனால் உலகம் உய்ய வழிசெய்வாயாக’ எனச் சொல்லி அனுப்பினார்.

தெய்வம் ஒவ்வொரு அவதாரத்தையும் வழிநடத்த ஒரு சக்தியினையும் கூடவே அனுப்பும். அப்படி திருமங்கை ஆழ்வார்க்கு துணையாக அவதரித்தவர் குமுதவல்லியார்.

திருநாங்கூரில் ஒரு தடாககம் அருகே குழந்தையாய் கிடந்தார். கபிலமுனிவரின் கட்டளைப்படி அவள் குழந்தையாக மாற, அவளை தேவலோக பெண்கள் முனிவர் சித்தப்படியே பாரத கண்டத்தின் திலகமான சோழநாட்டின் திருவெள்ளக்குளம் (திருநாங்கூர் அருகே) எனும் ஊரின் தடாகம் அருகே விட்டுச்சென்றார்கள்.

அந்த ஊரில் ஒரு பிராமணர் இருந்தார், அவர் தொழில் வைத்தியம் பார்ப்பது. எல்லா நோய்க்குமான மருந்தினை அவரால் கொடுக்கமுடியும், எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு பெருமாள் பக்தராகவும் இருந்தார்.

அப்போது வைஷ்ணவம் அழிவில் இருந்தது அல்லது மிரட்டலில் இருந்தது. ஒரு பக்கம் பௌத்தமும் இன்னும் பல குழப்பங்களும் வைணவத்தை சிக்கலில் தள்ளியிருந்தன‌.

மன்னன் சைவம் என்பதால் சைவத்துக்கு ஆபத்தில்லை. ஆபத்து இந்த வைஷ்ணவத்துக்கே இருந்தது. அந்த நெருக்கடியான காலகட்டத்தில் அவர் அனுதினமும் பெருமாளை வேண்டி நின்ற நேரமது. தனக்கும் வாரிசு இல்லை இருந்தால் பகவான் நாமத்தில் பகவான் பக்தியில் வளர்க்கலாம் என அவர் அனுதினமும் தவித்துக் வேண்டிக்கொண்டிருந்தார்.

அப்படியான வேண்டுதலை செய்ய தயாராகும் பொருட்டு காலை நேரம் தடாகத்துக்கு வந்தவர் அக்குழந்தையினை கண்டார்.

குழந்தையில்லா அவருக்கு அது வரம்போல கிடைத்தது. அள்ளி எடுத்துக் கொண்டு வீடு சென்றார். அவர் மனைவியும் அது தங்களுக்கான குழந்தை என மார்போடு அணைத்தபடி வளர்க்கத் தொடங்கினார்.

அக்குழந்தையினை பூரண பெருமாள் பக்தியில் வளர்க்க தொடங்கினார் வைத்தியர்.

அக்குழந்தை முறுக்க மலர் போன்ற இதழும், கருங்குவளை கண்ணும், குயிலின் குரலும், மலர்கள் நிறைந்த கூந்தலும் கொண்டு பெரும் அழகியாக வளர்ந்து வந்தாள். காண்போர் வாயடைத்து போகும்வண்ணம் பெரும் அழகியாய் உருவெடுத்தாள்.

அதைவிட முக்கியமாக அவள் மிகப்பெரிய வைஷ்ணவ பெண்ணாக, பெருமாள் பக்தியில் மிக மிக உறுதியாக எக்காலத்திலும் பெருமாளை கனவிலும் விடாதவளாக கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

பரம்பொருளின் திட்டம் அது, அவள் உருவானதே அதற்காகத்தான்.

அப்படியான அழகியினை தன் விதிபலனால் சந்தித்தார் பரகாலர், பார்த்த தருணம் வீழ்ந்தார்.

அவருக்கு இயல்பாகவே பெண்மயக்கம் உண்டு. பெரும் வீரர், தளபதி என்ற பிம்பம் தாண்டி நால்வகை படையும் நால்வகை கவியும் நடத்தும் பெரும் ஆற்றல்காரர் என்பதால் பெண்கள் மயங்கி நின்றதும் இயல்பு.

இப்படி பெரும் கேளிக்கை வாழ்வும், தெய்வபக்தியோ, ஆன்மீகமோ இல்லாமல் வாள்முனை, கொண்டாட்ட கவிகள் எனச் சுற்றி வந்து கொண்டிருந்தவர் பரகாலர்.

பெண்கள்தான் பல இடங்களில் இயக்கு சக்தி, அதர்மம் அழித்து தர்மம் மீட்க பெண்கள்தான் ஒருவனை இயக்குவார்கள்.

சீதை ராமபிரான் மூலம் ராவணனை அழித்தாள். துரியோதனை தன் கணவர்கள் மூலம் பாஞ்சாலி அழித்துப்போட்டாள், முருகப்பெருமான் வள்ளிக்காக செய்த சில காரியங்களும் உண்டு.

அப்படி பௌத்தம் எனும் பெரும் மிரட்டலை அழிக்க இந்த பரகாலரை உருவாக்க வந்தவள், இயக்க வந்தவள் அந்த குமுதவல்லி என்பதை அப்போது எவருமே அறிந்திருக்கவில்லை.

மலரின் மணம் யாரும் சொல்லாமலே எல்லோரையும் எட்டும் என்பது போல குமுதவல்லியின் அழகும், சிறப்பும் எல்லா இடமும் பரவிற்று. அது பரகாலரையும் எட்டிற்று.

அப்படிப்பட்ட அழகி யார்? என அறிய விரும்பினார் பரகாலர். உடனே அவளைக் காண விழைந்தார். திருவெள்ளக்குளம் அருகே உள்ள ஒரு பெருமாள் கோவிலில் மார்கழி காலையில் அவள் பாடும் செய்தி கிடைத்தது.

அதன்படி முன்னமே சென்றவர் அதிகாலையிலே கூட்டத்தில் ஒருவராக நின்று அவளைக் கண்டார்.

அப்படியான பரகாலர் இப்பெண்ணை கண்டதும் குருடன் கண்பெற்றது போல் மகிழ்ந்தார். அதுவரை அவர் கண்ட பெண்களெல்லாம் நினைவில் இருந்து சட்டென மறைந்தார்கள்.

அவள் ஒருத்தியே விஸ்வரூபமாக நின்றாள். அவளைக் கண்ட அத்தருணமே அவர் மனம் அவளிடம் சரணடைந்தது. அவள் பால் அவர் மனம் முழுக்க உருகிற்று.

அவரோ சிற்றரசர், அரசனின் பிரதிநிதி எனும்போது என்ன தடை வந்துவிட முடியும்?

ஆனால், குலம் ஒரு தடையாக வந்தது. அவர் ஷத்திரிய மரபு, அந்தப் பெண்ணோ பிராமண வம்சம். அக்காலத்தில் ஷத்தியர்களின் தர்மமே இதர மூன்று குலத்தையும் காப்பது.

இதனால் தயங்கியவர் அப்பெண்ணை உற்று நோக்கியபடியே நின்றார். தோழியரோடு அவரை கடந்த குமுதவல்லியும் அவரை கண்டு ஒரு நொடி ஆடிப்போனாள். சிலைபோல் நின்றாள்.

காரணம், அவளின் பூர்வஜென்ம சாபம் அல்லது பூமிக்கு அவள் வந்த நோக்கமெல்லாம் நினைவுக்கு வந்தது, கபிலமுனி கண்முன் வந்து போனார்.

தன் கர்மாவினை புரிந்து கொண்டவள் அவரை நோக்கி மெல்லிய புன்னகையினை தத்துவமாய் சொல்லிவிட்டு வீடு திரும்பினாள்.

அந்த புன்னகைக்கு அர்த்தம் கண்ட பரகாலர் நேரே அந்த வைத்தியன் வீட்டை அடைந்து தான் அப்பெண்ணை மணக்க விரும்பும் செய்தியினை தெரிவித்தார்.

வைத்திய அந்தணர் ஆடிப்போனார், குழம்பினார். நாடாளும் அரசனின் பிரதிநிதி சிங்கத்துக்கு சமமானவன் அவனை எதிர்க்கும் சக்தி யாருக்கும் அங்கு இல்லை.

ஆனால், தானோ அதிதீவிர வைஷ்ணவன், தன் மகளும் அப்படியே. அந்நிலையில் பெரிய கடவுள் நம்பிக்கையின்றி, வேறு குலம், வேறு சம்பிரதாயம் அதுவும் போர், கொலைதொழில் என சுற்றிவருபவனை எப்படி ஏற்பது?

ஏற்கவும் முடியாது ஏற்காமலும் முடியாது என அவர் தயங்கினார்.

அவரின் குழப்பம் அறிந்த குமுதவல்லி கதவோரம் நின்று அழைத்துச் சொன்னாள், “அப்பா, இரு கட்டளைகளுக்கு இவர் உடன்பட்டால் நான் அவர் மனைவியாக தயார்”

வைத்தியருக்கு அவள் நந்தவனத்தில் கிடைத்த குழந்தை என்பது தெரியும், அதனால் அவளின் விருப்பமே தன் விருப்பம் என அவளையே நோக்கினார்.

பரகாலரும் அந்த குரல் வந்த திசையிலே உயிரை குவித்து கேட்டார், அந்த குமுதவல்லி சொன்னாள்,

“முதலாவது, இவர் பெருமாளை ஏற்று வைஷ்ணவராகி திருமண் நாமம் அணிந்து, திருச்சின்னங்கள் சங்கு சக்கர சின்னம் பொறித்து வைணவராக மாற வேண்டும்.

இரண்டாவது, தினமும் ஆயிரம் வைணவ அடியார்களுக்கு உணவிட வேண்டும்”

இது இரண்டுமே அன்று பௌத்தம் பெருகிய காலத்தில் வைணவம் வளர்க்க அடிப்படையான விஷயங்கள், ஒரு சிற்ற்றரசன் வைஷ்ணவம் ஏற்றான் என்பது பெரிய மாற்றம்.

அப்படியே ஆயிரம் அடியார்களை அவன் ஆதரிக்கும் போது அந்த அடியார்களால் புறக்கவலை ஒழித்து முழுக்க முழுக்க வைணவம் பரவ உழைக்கமுடியும்.

இந்த வியூகத்தில்தான் அவள் அப்படி கோரிக்கை வைத்தாள். அவளை தவிர ஏதும் அறியாத சிந்தனையில் இருந்த பரகாலர் உடனே அந்தக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டார்.

தன் கோரிக்கையினை ஏற்கும் ஆணை, தனக்கு கட்டுப்படும் ஆண்மகனை ஒரு பெண் விரும்புதல் இயல்பு, அப்படி நாணத்துடன் குமுதவல்லியும் சம்மதித்தாள்.

கண்ணிழந்த குருடன் கண் பெற்றது போல அவளை தன் வாழ்வின் பெரும் அர்த்தமாக உணர்ந்த பரகாலர் அருகிருக்கும் நம்பியம் பெருமாள் ஆலயத்திலே வைணவம் தழுவி சங்கு சக்கரம் பொறித்து மணமகனானார்.

முழு வைஷ்ணவனாக திருமண் இட்டுக் கொண்டு, பெருமாள் முன்னால் உறுதிமொழி சொல்லிக்கொண்டு அவளுடன் மணமேடை அமர்ந்தார்.

திருமணம் கருடன் வட்டமிட மிக மிக விமரிசையாக நடந்தேறிற்று. வைகுண்டமே திரண்டு வாழ்த்தியது. மானுட கண்களுக்கு புலப்படவில்லை.

கதிரவன் நாளெல்லாம் அவர்களை வாழ்த்திவிட்டு அவர்களின் மணச்செய்தியினை இன்னொரு பகுதி மக்களுக்கு சொல்ல விடைப்பெற்றான்.

அவளிடம் முழுக்க சரணடைந்தார் பரகாலர், அவள் சொன்னதெல்லாம் அவருக்கு வேதவாக்காயிற்று.

அதன்படியே அவளோடு காலையில் பெருமாளை வணங்க ஆரம்பித்தார். அவள் பெருமாள் பக்திக்கான திறவுகோல்தான். அந்த பெரும் ஜோதி எரிய ஒரு சிறு நெருப்புத்தான் என்பதுபோல அவள் தொடங்கிவைத்த பெருமாள் பக்தி மெல்ல மெல்ல அவரில் வியாபித்தது.

பின் திருநாங்கூரில் இருந்து திருமங்கைக்கு மனைவியோடு வந்தார் பரகாலர், மணமக்களை பெரிதாக கொண்டாடி மக்கள் வரவேற்றார்கள்.

பரகாலரின் திடீர் திருமணம் சோழமன்னன் அவையில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது. காரணம், அது சைவர்கள் அவையாக இருந்தது. தங்களில் ஒருவன் வைணவன் என்றானதை அவர்களில் பலர் ஏற்கவில்லை.

மன்னனை அழைக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டது, எப்போதுமே திறமையானவனுக்கு எதிரிகள் இருப்பார்கள், அவர்கள் இடம்பார்த்து அடித்தார்கள்.

“மன்னரே, இவர் நம்மை மதிக்கவில்லை, உங்களை மதிக்கவில்லை, கூடுதலாக வைஷ்ணவனாக மாறிவிட்டான் அவனை தண்டிக்க வேண்டும்” என்றெல்லாம் புகார்கள் வந்தன‌.

ஒரு மன்னன் ஒரு புகார் வந்தவுடன் நடவடிக்கை எடுக்கக் கூடாது. எதையுமே நிதானமாக அலசி ஆராய்ந்து செய்யவேண்டும். இன்னும், ஒரு தளபதி நிர்வாகி மேல் எடுத்தவுடன் கைவைக்க கூடாது என அமைதி காத்தான்.

ஆனால், பரகாலரை கண்காணிப்பில் வைத்தான்.

பரகாலர் அங்கே முழு வைஷ்ணவனாக மாறி திருப்பணிகளில் இறங்கினார். விளக்கில் நெய் என்பது ஒளியாக படிநிலை பெறுவது போல அந்த குமுதவல்லியின் மேலான அவரின் காதல் விஷ்ணு பக்தி எனும் ஜோதியாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.

நாளுக்கு நாள் அவரின் திருத்தொண்டு அதிகரிக்க நிதிகள் தட்டுப்பாடாயின, அவர் குறுநில மன்னர் திருமங்கை எனும் நாட்டுக்கு நிர்வாகி. ஆனால், நாட்டின் உண்மையான எஜமான் அரசன், இவர் கூலிமட்டும்தான் அதுவும் படை கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் மட்டுமே நிதிபெறமுடியும்.

வரும் வரியினை அரசனுக்கு அனுப்பிவிட்டு இவர் கூலிதான் பெறமுடியும்.

ஆனால், இவரின் பெரும் தொண்டு காரணமாக எல்லா நிதியினையும் பெருமாள் பணி, அடியார்க்கு அன்னதானம் என அள்ளி இறைக்க அரசனுக்கு செலுத்தவேண்டிய நிதி தட்டுப்பாடாயிற்று. செலுத்தமுடியவில்லை.

அரசன் ஏற்கனவே இவரை கண்காணிப்பில் வைத்திருந்தான். இவர் உரிய வரியினை செலுத்தாமல் அதை பெருமாள் தொண்டுக்கு அள்ளி இறைப்பது அவனுக்கு பொறுக்கமுடியாததாயிற்று.

அவன் அங்கே நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும். காரணம், அவனுக்கு கீழ் சிற்றரசர்கள் பலர் இருந்தார்கள். அவரவர் விருப்பபடி விட்டால் அரசு எனும் மாளிகையின் செங்கல்களெல்லாம் உருவப்படும்.

அரசன் நிதியினை அனுப்பச் சொல்லி கடிதம் எழுதினான். பரகாலரால் கட்டமுடியவில்லை. பின் அவரை பிடித்துவர படை அனுப்பினான்.

மன்னனின் படைகள் வந்ததும் திருமங்கை மன்னர் பரகாலர் சீறினார். தான் யாரென காட்ட தன் பிரசித்தியான குதிரை “ஆடல்மா” மேல் ஏறி பெரும்போர் நிகழ்த்தினார். அரசனின் படைகள் அவரின் தாக்குதலை சமாளிக்கமுடியாமல் தோற்றோடின‌.

கால்கள் இருப்பதே அவரிடம் இருந்து தப்பி ஓட எனும் அளவுக்கு அவர்கள் தப்பி ஓடினார்கள், அரசன் நடந்ததை கேள்வியுற்று ஆத்திரம் கொண்டான்.

இனி அவனை அடக்காவிட்டால் ராஜ்ஜியம் நிலைக்காது எல்லா சிற்றரசர்களும் இப்படி அவரவர் விருப்பத்துக்கு நடந்தால் சோழநாடு, சோழநாடாய் இராது என்பதை உணர்ந்து பெரும் படையோடு சென்றான்.

மன்னன் நகரும் மலை போன்ற யானைகளுடனும், கடல் அலைபோல குதிரைப்படையுடனும் திருமங்கையினை ஒரு தீவு போல சூழ்ந்து கொண்டான்.

சோழமன்னன் பெரும் உள்நாட்டு போரில் ஈடுபடுகின்றான் என்றதும் பாண்டிய சேர அரசுகள் பரபரப்பாகின, இதெல்லாம் அக்காலத்தில் வழமையான ஒன்று.

ஒரு பெரும் அரசு சிக்கலில் சிக்கும் போது இதர அரசுகள் அதை தாக்கி பிடித்துக்கொள்ளுதல் அவ்வப்போது நடந்தன‌.

பரகாலருக்கும் சோழமன்னனுக்குமான யுத்தம் தொடங்கியதும் பல ஆபத்துக்கள் ஆங்காங்கே முளைத்தன‌.

இதனை எல்லாம் கவனித்தே போரை தொடங்கினார் பரகாலர். அவரின் “கடல்மா களியானை” மேல் அமர்ந்து அவர் களம்புகுந்தபோது மந்தாரமலை பாற்கடலை கலக்கியது போல் சோழப்படைகள் கலங்கின‌.

சில நாட்கள் போர் தொடர்ந்தது. அப்போது பரகாலரின் மனைவி குமுதவல்லி சில ஆலோசனைகளை சொன்னாள்.

“நாம் பெருமாளின் சேவகர்கள் அரசனின் சேவகர்கள் அல்ல, நீங்கள் இந்தப் போரில் மன்னனை கொன்றால் அல்லது வெற்றிபெற்றால் அரசனாகும் ஆசையில் இதை நடத்தியதாக ஊரார் தூற்றுவார்கள்.

அத்தோடு நான் ராணியாகும் ஆசையில்தான் இது நடந்ததாக என்னை பழிப்பார்கள், உங்களை ஒரு வைஷ்ணவராக பார்க்க விரும்பினேனே அன்றி ஒருகாலமும் மன்னனாக பார்க்க ஆசைப்படவில்லை.

நீங்கள் வென்றால் இதுதான் பழியாகும், என்னைத்தான் பழிப்பார்கள், தயவுசெய்து போரை நிறுத்துங்கள், எதுவானாலும் பகவான் பார்த்துக்கொள்வார்” என்றாள் குமுதவல்லி.

ஆசைமனைவியின் சொற்களை மனதில் கொண்டபடியே மறுநாள் யுத்தத்துக்கு சென்றார் பரகாலர்.

பெரும் யுத்தத்தில் அவரை நெருங்க யாராலும் முடியவில்லை. கடைசியில் எல்லாக் காவலையும் மீறி மன்னனை அவர் நெருங்கும் நேரம் வந்தது, எளிதாக மன்னின் புலி சின்னத்தை சாய்த்து மன்னன் முன் எமனாக நின்றார்.

ஆனால், அந்த நொடி மனைவியின் மந்திரச்சொல் நினைவுக்கு வந்தது. வாளை தாழ்த்தினார்.

அவர் முகம் மாறுவதை நொடியில் கவனித்த மன்னன் சொன்னான், “உனக்கு எல்லா அதிகாரமும் தந்து வாழவைத்த எனக்கு நீ காட்டும் நன்றி இதுதானா?

அரசவைக்கு வரவேண்டிய வரி வரவில்லை என்றால் அவையோர் மன்னனைத்தானே பழிப்பார்கள், அது அறியாதவனா நீ?

பரகாலா நீ என்னுடைய பெருமை, என்னுடைய முக்கிய தளபதி, ஒரு ஆற்றலான தளபதி கிடைப்பது கடினம் என்றுதான் நான் உனக்கு ஆபத்தில்லா போர் புரிந்தேன்.

நீ என்னோடு அவைக்கு வா, அவை சொல்வதை செய், மற்றபடி நாம் இங்கே மோதினால் அந்நியருக்கு வாய்ப்பாகிவிடும் அல்லவா?”

மன்னனின் பேச்சுக்களை மனைவியின் ஆலோசனைப்படி சீர்தூக்கி பார்த்த மன்னன் அரசனோடு செல்ல உடன்பட்டான், குமுதவல்லி பெருமாளை வேண்டி நின்றாள்.

மன்னனின் அவையில் பரகாலர் நிதி மோசடி செய்தது, மன்னன் படைக்கு சேதம் விளைவித்தது என்ற குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு நின்றார், பின் அந்த தொகையினை கொடுத்துவிட்டு அவரை விடுதலை செய்யலாம் என தீர்ப்புமாயிற்று.

மன்னனுக்கும் வேறுவழி தெரியவில்லை.

திருமங்கை மன்னர், மன்னனின் மாபெரும் தளபதி , வெல்லமுடியா வீரர், சோழநாட்டின் காவலர், நாற்கவி பெருமான் என்றெல்லாம் புகழப்பட்ட திருமங்கை மன்னர் இப்போது பணமோசடி கைதியாக நின்றார்.

இவர் செலவு செய்த நிதியினை திரும்பப்பெறும் வரை அவர் சிறையில் கிடக்கட்டும் என்ற நிலை வந்ததும் அவரின் எதிரிகள் அவரை சூழ்ந்து துன்புறுத்தினர், பரிஹாசம் செய்தனர், பல நிந்தனைகள் குவிந்தன‌.

பெருமாள் பெயரை சொல்லி மனைவிக்கு நகைசூட்டினான், அவளுக்கு வேண்டியன செய்தான் எனும் வசவு மொழிகள் காதில் விழுந்ததும் மனமுடைந்து அழுதார் பரகாலர்.

“பெருமாளே, நான் உனக்காகத்தானே ஒரு துளி செல்வம் இல்லாமல் செலவு செய்தேன், உனக்கும் உன் அடியார்க்கும் நான் செய்த தொண்டுக்கா இந்நிலை, நான் கள்வனா? நான் பெண் பித்தனா?” என்றெல்லாம் கதறியவர் உணவும் மறுத்தார்.

அவரின் நிலைகண்டு இறங்கிவந்த எம்பெருமான் காஞ்சி கோவிலில் வந்து தன்னை வணங்கினால் நிதி கிடைக்கும் எனச் சொல்லி மறைந்தார்.

அதுவரை இவர் காஞ்சிக்கு சென்றதில்லை. காஞ்சி வரதராஜப்பெருமாள் ஆலயம் தெரியாது. ஆனாலும், அங்கு சென்றால் தனக்கு நிதி கிடைக்கும், விடுதலை ஆகலாம் என நினைந்து காஞ்சிக்கு சென்றால் எனக்கு நிதி கிடைக்கும், அப்போது என் கடனை தீர்ப்பேன் என சிறை அதிகாரியிடம் சொன்னார்.

அவன் அதை மன்னனிடம் தெரிவிக்க, அவையோரிடம் அனுமதிகேட்டான் மன்னன்.

“சோழநாட்டு நிதியினை காஞ்சி கோவிலில் பதுக்கியிருக்கின்றான் பாவி” என்ற குற்றச்சாட்டோடு பெரிய காவலோடு அந்த காஞ்சி வரதர் கோவிலுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கே நிதி கிடைக்கும் என சென்றவருக்கு ஏதும் கிடைக்கவில்லை அவர் மனம் சோர்ந்தார். ஆனால், பகவான் தன்னை தன் புனிதமான சன்னதியில் ஆசீர்வதிக்கத்தான் அழைத்தார் என்பது அவருக்கு தெரியவில்லை.

பகவான் அவரில் தன்னை இறக்கினார், அவரை புதுமனிதனாக்கினார் என்பதை அவர் அறியவில்லை.

அதனால் இங்குவந்தும் தன் கடன் தீரவில்லை என சோகத்தில் அமர்ந்தார், வீரர்களும் காவலர்களும் மறுபடியும் அவரை நகையாடினார்கள்.

மாபெரும் கவலையில் தன் கடைசி நம்பிக்கையும் பொய்த்ததில் அதுவும் பகவான் வந்த கனவு பொய்த்ததில் ஆடிப்போனார். கலங்கினார் பரகாலர்.

நொந்த மனதோடு அவர் படுத்தபோது இனி சாகத்தான் வேண்டும் என அவர் நொந்து படுத்தபோது அவர் கனவில் வந்த பெருமான் பாகவதி ஆற்றின் அருகே புதையல் இருப்பதை சொல்லி ஒரு துளசி செடியினை அடையாளம் காட்டினார்.

அப்படியே சென்ற பரகாலர் பெருமாள் சொன்ன துளசி செடியினை கண்டு அதனை தோண்டச்சொன்னார் புதையல் கிடைத்தது, அது மிக பழங்கால புதையலாய் இருந்தது.

இது தெய்வச் செயல் என அஞ்சிய சிப்பாய்கள் அவரை பணிந்தனர். வணங்கினர். அவரோ கொஞ்சமும் சலனப்படாமல் அரசனுக்குரியதை கொடுத்துவிட்டு, காஞ்சி வரதராஜ பெருமாளுக்கும் காணிக்கை கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

அரசன் தான் பெற்றுகொண்ட செல்வத்தினை தன் கணக்கினை சரி செய்தபின் அவரை போகவிட்டான். ஆனால், அவரின் சிற்றரச பதவி பறிக்கப்பட்டது. அவர் இப்போது சாதாரண மனிதராகி விட்டார்.

அந்தப் புதையல் செல்வம் இருக்கும்வரை தொடர்ந்து தன் அறப்பணிகளை பெருமாளுக்கு செய்துவந்தார். ஆனால், நாளடைவில் எல்லாம் தீர்ந்தது.

செல்வம் தீர்ந்ததேயன்றி அவரின் பக்தியும் வைராக்கியமும் தீரவில்லை, அடுத்து என்ன செய்வது என யோசித்தார்.

அவருக்கு வேறு தொழில் தெரியாது, தெரிந்ததெல்லாம் போர் தொழில், இனி அதுவுமில்லை. ஆனால், எதைக் கொண்டு பகவானுக்கு காரியம் செய்வது?

அவர் நிரம்ப யோசித்தார். அரசனிடம் இருந்தது என்ன? மக்கள் பணம், மக்களுக்கு அரசன் யார்? அந்த மகேஸ்வரன்.

ஆக, மக்கள் கடவுளுக்கான வரியினைத்தானே இவனிடம் கொடுக்கின்றார்கள்? இவன் சரியாக பகவான் காரியம் செய்தால் இங்கு ஏன் வைஷ்ணவம் வளரவில்லை.

ஆக, அரசனுக்கு செல்லும் நிதி வீணாகின்றது. அது இருந்தால் நாமே கைங்கரியம் செய்யமுடியும்? அரசனிடம் சென்று வீணாகும் நிதி பகவானுக்கு பயன்பட என்னசெய்யவேண்டும்?

அந்த நிதியோட்டத்தை தடுக்க வேன்டும், இடைமறித்து நம்பக்கம் திருப்பவேண்டும்.

நிதி யார் கட்டுவார்கள்? பெரிய தனவான்கள், மிராசுகள், வியாபாரிகள், பண்ணையார்கள் கட்டுவார்கள். அந்தப் பெரும் பணத்தை நாம் அடித்து வந்து பகவான் காரியம் செய்தால் என்ன?

ஒவ்வொரு மனிதனுக்கும் பரந்தாமனே பிரதானம், அவனுக்கு செலவழிக்காமல் அரசனிடம் கொட்டுகின்றார்கள், அரசனும் செய்யவில்லை, தான் செய்த திருப்பணியும் செய்யவிடவில்லை.

இனி விடக் கூடாது, விடவே கூடாது. பரந்தாமனுக்கு இல்லா பணம் இந்த தேசத்தில் இருக்கக்கூடாது என முடிவெடுத்தவர், தான் ஒரு அரசாங்கம் அமைக்க முடிவெடுத்தார்.

அதன்படி தனக்கு விசுவாசமான சிலரை சேர்த்துக்கொண்டார். நீர்மேல் நடப்பான், நிழலில் ஒதுங்குவான், தாழ ஊதுவான், தொலா வழக்கன் என சிலரை சேர்த்துக்கொண்டார்.

இவர்கள் ஒவ்வொருவரும் தனி தனி பயிற்சி பெற்றவர்கள், யுத்தம் மற்றும் உளவுக்கலைகளில் தேர்ந்தவர்கள் அவர்களை கொண்டு ஒரு திட்டம் வகுத்தார்.

அதன்படி திருமண் இட்டவர்களை தொடுவதில்லை மாறாக பெரும் பணக்காரர்கள், இரக்கமில்லாதவர்கள், பணம் ஒன்றே குறியானவர்கள், தன்னலம் மிக்கவர்கள், தெய்வகாரியங்களுக்கு அசட்டை செய்பவர்கள் என அவர்களைத்தான் குறிவைத்தார்.

ஆம். அவர் பெரிய பெரிய தனவான்களிடம் இருந்து பெருமாளின் தேவைக்கு எடுத்துக்கொண்டார், மற்றவர் பெயரில் அது வழிப்பறி.

அவர் பெயரில் அது பகவான் அரசாங்கம் . அதற்கான வரி, அதை அவர் கட்டாயமாக வசூலிக்க தொடங்கினார், வசூல் என்றால் அதிகம் பணம் இருப்பவரிடம் பகவானுக்கு என்ன தேவையோ அதை ஒரு வரி போல வசூலிப்பார்.

அவர் வெறுமனே கொள்ளை இடுவதில்லை, ஒருவரை பற்றிய எல்லா தகவலையும் திரட்டுவார், பின் அவரின் அன்றாட செயல்களை பட்டியலிடுவார், அதில் அவர் பெருமாளுக்குரிய வாழ்க்கை வாழாவிட்டால் கஞ்சன், சுயநலகரானாக தெரிந்தால் விடமாட்டார்.

இப்படி பெரிய பெரிய கஞ்சர்கள், இரக்கமில்லா தர்ம சிந்தனையில்லாதவர்களிடம் கொள்ளை அடித்தார் என அவர்மேல் குற்றசாட்டு வந்தாலும் அவரை பொறுத்தவரை அது பகவான் ராஜ்ஜியத்துக்கான வழிகள்.

பணக்காரர்களின் கொழுத்தபணம் அறக்காரியங்களை தவிர உல்லாச கேளிக்கைகளுக்கு குடி, போதை பெண்மயக்கம், ஆடம்பர என செலவழிவதை விட பெருமாளுக்கு பயன்படவேண்டும் என்பதே அவர் எதிர்பார்ப்பாய் இருந்தது.

இப்படி ஆங்காங்கே கிடைக்கும் பணம் அவரின் அன்றாட திருப்பணிகளுக்கே போதா நிலையில் அவருக்கு பெரிய கவலை திருவரங்கம் கோவிலில் வந்தது.

அந்தக் கோவில் காலம் காலமாக அவ்வப்போது கட்டப்பட்டாலும் நிறைய குறைகள் இருந்தன. ஆனால், அப்போதைய அரசன் அதை கவனிக்கவில்லை, நிறைய குறைகள் இருந்தன‌.

மதில் சுவர் இல்லாததால் ஆடுமாடுகள் என எல்லா ஜீவன்களும் உள்ளே வந்தன. கோவிலின் புனிதம் கெட்டுப்போனதுபற்றி யாருக்கும் கவலை இல்லை.

இதனை தீர்க்க யாருமில்லை மன்னனுக்கு விருப்பமில்லை, பணக்காரர்களுக்கு ஆசையில்லை, வசதி இருப்போர்க்கு கவலை இல்லை, நிர்வாகத்தினருக்குமில்லை.

ஆனால், பகவான் மேல் பெரும் பக்தி கொண்ட அவருக்கு இருந்தது. ஆனால், அதற்கு வழிப்பறியால் வரும் செல்வங்கள் போதாது.

வழிப்பறி என்பது அன்றாடம் செய்யக்கூடியது அல்ல, எல்லா முயற்சியும் வெற்றியும் அல்ல. எப்போதாவது எங்காவது கிடைப்பதை கொண்டுதான் திருப்பணிகள் செய்யமுடியும் அதுவும் இந்த பெரும் பணிக்கு அதெல்லாம் போதாது.

அவருக்கு பெரும் செல்வம் வேண்டும், நிரம்ப செல்வம் வேண்டும், அதற்கு அரண்மனைதான் சரியான இடம் என்றாலும் அங்கு கொள்ளையிட முடியாது.

இதனால் மிகப்பெரிய பொருளுக்கு மாபெரும் நிதிக்கு என்ன செய்யலாம் என யோசித்த போதுதான் அவருக்கு நாகப்பட்டினத்தில் இருக்கும் புத்தவிகாரையும், அதிலிருக்கும் தங்கத்ததாலான புத்தர் சிலையும் பற்றி தெரிய வந்தது. பெரிய பெரிய பொக்கிஷங்கள் அங்கே இருந்தன‌.

பௌத்தம் அப்போது இந்தியாவினை விழுங்கி பின் ஆதிசங்கரரின் எழுச்சிக்கு பின் விரட்டப்பட்டிருந்தாலும் ஓசையில்லாமல் ஆங்காங்கே நுழைந்திருந்தது, நாகப்பட்டினம் அதில் முக்கியமானது.

சோழமன்னர்களுக்கு அது உவப்பில்லை என்றாலும் அதை அழித்துவிட்டால் இலங்கை, கடாரம், ஷியாம், பர்மா எனப் பல பௌத்த நாடுகளுக்கு வியாபாரமோ இல்லை மதமோ பரப்ப செல்வது இயலாத ஒன்று.

நாடுகளுக்கிடையே இப்படி சில சிக்கல்கள் உண்டு, இதனால் நாகப்பட்டினத்தில் புத்த விகாரை பெரிதாக அந்த தங்க புத்தர் சிலையோடு இருந்தது.

அதனை எடுப்பது ஒன்றும் அவ்வளவு சுலபம் அல்ல, அது மகா கடினமானது, பெரும் காவல் என்பதை தாண்டி மகா ஆபத்தானது, அங்கே உச்சியில் வைக்கபட்டிருந்த சுழலும் பொறி.

எவ்வளவு காவலை தாண்டினாலும் அந்த மூடப்பட்ட ஸ்தூபியின் உச்சியில் ஏறி இறங்கமுடியாதபடி ஒரு சுழலும் பொறி இருந்தது.

அது காற்றில் இயங்கக்கூடியது. இன்னும் சில ரகசியங்களில் இரவு பகலாக இயங்கக்கூடியது, அதை தாண்டிச் சென்றால் சக்கரம் தலையினை துண்டித்துவிடும்.

அந்தச் சக்கரத்தை கடக்காமல் உள்ளே செல்லமுடியாது.

அந்த புத்தன் சிலையினை எடுத்துவந்து திருவரங்க கோவில்வேலையினை முடித்துவிடலாம் எனத் திட்டமிட்டவர் நாகப்பட்டினம் சென்றார். அங்கே இருந்த காவலும் அதை அடுத்து உச்சியில் சுழலும் அந்த சக்கரமும் அவரை ஸ்தம்பிக்க வைத்தன‌.

அந்த பொறியினை நிறுத்தாமல் அவரால் அந்த புத்த சிலையினை தொடமுடியாது, இதனால் அந்த பொறியினை செய்தவன் யார், அதை எப்படி நிறுத்துவது எனத் தேட துவங்கினார்.

அந்த பொறியினை செய்தவன் திறமை வாய்ந்த கொல்லன் (கம்மியன்) அவன் கிழக்கு தேச நாட்டில் இருந்தான், அவனைத் தேடி கப்பல் ஏறினார் பரகாலர், இருந்த பணத்தையெல்லாம் போட்டு எப்படியோ போய் சேர்ந்தார்.

அங்கே சென்று அந்த கொல்லனின் வீட்டை கண்டறிந்து அவனை நோட்டமிட்டார், அவன் ஒருநாள் மதியம் எதிரே வந்தபோது தன் தோழர்களுடன் ஒன்றுமறியாதவன் போல் பேசிக்கொண்டு வந்தார்.

“அந்த நாகப்பட்டினம் விகாரையில் இருந்த சக்கரம் நின்றுபோனதாம், வேறு ஏற்பாட்டை செய்கின்றார்கள். அந்த கொல்லன் மட்டும் அங்குள்ளவர் கையில் கிடைத்தால் நிலைமை அவ்வளவுதான்” என ஒன்றுமறியாதவன் போல் சொல்லிக்கொண்டே சென்றார்.

அதைக் கேட்ட அந்த கொல்லன் “என்ன சொல்கின்றீர் அய்யா?” என ஒடிவந்து கேட்டான்.

“உமக்கு விஷயமே தெரியாதா, அங்குள்ள பௌத்த மேலிடம் அந்த சுழலும் பொறியினை செய்தவன் மேல் கடும்
ஆத்திரத்தில் இருக்கின்றார்கள், அது சரியாக வேலை செய்யவில்லை எனக் கோபத்தில் இருக்கின்றார்கள், பல சிக்கலும் உள்ளதாம்” என சொல்லிக்கொண்டே சென்றார்.

“ஐயோ அது என் வாழ்நாள் சாதனை அல்லவா? அதில் பழுதே வராதே, சிக்கல் என்றால் கூட சரிசெய்யும் உபாயங்களை சொன்னேனே, அதுவும் அதை நிறுத்தும் இரும்பாணியினை கூட ஒரு ரகசியப் பெட்டியில் இட்டு விகாரைக்கு வடக்கே ஆற்றுபக்கமாய் புதைத்து ஒரு புத்த அடையாளத்தை வைத்தேனே.

எல்லாம் மறந்துவிட்டார்களா, எப்படியும் போகட்டும் இனி நான் அங்கு சென்றால் அவ்வளவுதான்” எனச் சொல்லிவிட்டு வருத்தத்துடன் சென்றான்.

அந்த தீவு பாக்கு அதிகம் விளையும் இடம் (இன்றைய பினாங்கு போன்ற இடமாக இருக்கலாம்), அந்த நாட்டில் இருந்து அவர் திரும்ப வரவேண்டும், அவர் திரும்பி அங்கே ஆங்காங்கு வேலைகளை செய்து பணம் திரட்டி கப்பல் ஏற வந்தார்.

அந்த கப்பல் நிறைய பாக்கு மூட்டைகள் இருந்தன. ஆனால், அங்கே வாங்கும் விலைக்கும் இந்துஸ்தான சோழநாட்டுக்கு கொண்டு சென்று விற்கும் விலையும் பெரும் வித்தியாசம் இருந்தது.

கொள்ளை லாபம் இருந்தது. கிழக்காசிய தீவுகளில் சும்மா அள்ளியதை போல் அள்ளிச் சென்று சோழநாட்டில் கொள்ளை விலைக்கு விற்கும் கப்பல் தலைவனை தன் கூரிய கண்களால் கண்டார் பரகாலர்.

“அநியாயமாகச் சம்பாதிக்கும் இவனை விடக் கூடாது, விடவே கூடாது” என முடிவெடுத்தவர் ஒரு தந்திரம் செய்தார்.

ஒரு பாக்கை எடுத்தார், அதை பாதியாக தன் கத்தியால் வெட்டினார், பின் அந்த பாக்கை கப்பலின் பாக்கு மூட்டைக்குள் கப்பல்காரனிடம் சொல்லி வீசினார்.

“என் பாதி பாக்கு கப்பலில் இருக்கின்றதுதானே” என்றார். அவன் “ஆமாம்” என்றான்.

அப்படியானால் “பாதி பாக்கு எனக்கு கட்டுப்படும்” என எழுதி கொடு எனச் சொன்னார், அவன் பாதி பாக்கெல்லாம் ஒரு விஷயமா எனக் கேட்டான்.

“நாங்களெல்லாம் அரசபணியாளர்கள், ஒவ்வொரு பாக்குக்கும் பதில் சொல்லவேண்டும், என் பாதி பாக்கு உன் கப்பலில் உண்டு என்பதை மட்டும் சீட்டாக எழுது” எனக் கோரினார்.

அவனும் “கப்பலில் பாதி பாக்கு உண்டு” என எழுதி கொடுத்தான், பத்திரமாக அதனை வைத்துக் கொண்டார்.

கப்பல் கரைக்கு வந்தது. அதுவரை அமைதியாக இருந்தவர் பின் சொன்னார் “கப்பலில் இருக்கும் பாக்கில் பாதி பாக்கு என்னுடையது அல்லவா?, கொடுத்துவிடு”

கப்பல் தலைவன் அரண்டே போனான், ” ஒரே ஒரு பாக்கில் பாதியினைத்தான் மூட்டையில் இட்டீர், இப்போது முழு பாக்கும் கோரினால் எப்படி?,” என மறுத்தான்.

அவரோ “உம்மை சும்மா விடமாட்டேன், என்னிடம் எழுதி தந்த சீட்டை இங்கிருக்கும் அதிகாரிகளிடம் காட்டுவோம் என இழுத்துச் சென்றார்”

அதிகாரிகள் சீட்டை பார்த்தபோது அதில் “கப்பலில் பாதி பாக்கு உண்டு” என எழுதப்பட்டிருந்தது. அதன் படி கப்பலில் இருந்த மொத்த பாக்கிலும் பாதி இவருக்கு எனத் தீர்ப்பாயிற்று.

ஆக ,பேராசை பிடித்த கப்பல் தலைவனிடம் இருந்து பெரும் தொகையினை கைப்பற்றினார் பரகாலர், அதை திருவரங்கத்துக்கு சரியான ஆட்கள் மூலம் கொண்டு சேர்த்தார்.

பின் நாகப்பட்டினம் பௌத்த விகாரை அவர்கள் இலக்காயிற்று, அந்த பௌத்த ஆலயத்தை சுற்றிச் சுற்றி உளவு பார்த்தவர் அந்த கொல்லன் சொன்ன அடையாளத்துபடி அந்த பொறியினை கட்டுப்படுத்தும் இரும்பாணியினை எடுத்துக் கொண்டார்.

அவர்கள் திட்டப்படி விகாரைக்குள் சென்று பதுங்க வேண்டும், எல்லோரும் வெளியேறியபின் நள்ளிரவில் புத்தன் தங்கச் சிலையினை எடுத்துக் கொண்டு தப்ப வேண்டும்.

அப்படி வெளியேறும் போது பெரும் காவலாய் இருக்கும் சுழலும் பொறியினை நிறுத்தி அப்பாதை வழியே வெளியேறவேண்டும். காரணம், அங்கேதான் காவல் இராது.

மிக அழகான திட்டம் இது. அதன் படி தன் ஆட்கள் பகுதியாக பிரித்துக் கொண்டார். மூவர் மட்டுமே விகாரைக்குள் சென்று பதுங்க வேண்டும், சிலர் காவலுக்கு வெளியே நிற்க வேண்டும், சிலர் ஏதும் ஆபத்தென்றால் காக்க தயாராக இருக்க வேண்டும்.

அப்படி எல்லா திட்டத்துடன் ஒரு அமாவாசை நாள் தயாரானார்கள். விகாரைக்குள் சென்று மிக ரகசியமாக ஆளுக்கொரு இடத்தில் மூவரும் பதுங்கிக் கொண்டார்கள்.

விகாரையின் பிக்குகள் விகாரையினை மூடிவிட்டு கிளம்பினார்கள். யாருமில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்ட பரகாலர் தான் எடுத்துவந்த திருகாணியினை உரிய இடத்தில் வைத்து திறந்தார்.

அத்தோடு உச்சியில் இருக்கும் சக்கரத்தின் சுழற்சி நின்றது, பெரிய சக்கரம் அது, ஓசையில்லாமல் சுழலும் அச்சக்கரம் நின்றது.

அதன் கூரிய விசிறிகள் இடையில் ஆள் செல்லும் அளவு இடைவெளி இருந்தது, அவர்கள் மேலே பார்த்து மகிழ்ந்துவிட்டு கீழே கண்டால் அதிர்ச்சி இருந்தது.

ஆம். அது ஒரு வித்தியாசமான அமைப்பு , ஒரு சக்கரத்தை நிறுத்தினால் பீடத்தின் அமைப்பே மாறி இன்னொரு வழியாக வர சொன்னது, அங்கு இன்னொரு பல்சக்கரம் சுழன்றது.

அதாவது மிக கவனமாக ஒரு கொல்லனை வைத்து ஒரு சுழலும் சக்கரத்தை வைத்தவர்கள் அவனுக்கு தெரியாமல் இன்னும் யாருக்குமே தெரியாமல் இன்னொரு பாதுகாப்பு சக்கரம் வைத்தார்கள், அது அப்போதுதான் அவர்களுக்கே தெரிந்தது.

என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தார் பரகாலர், இனி ஒரே வழி தப்பி செல்வது என முடிவானது அதன் படி சங்கிலி ஒன்றை பிடித்து மேலேறி ஒருவழியாக உச்சத்தை அடைந்து, வருத்தத்துடன் வெளியேற முயன்றபோது தொலைவில் வாழை தோப்பை கண்டார், அவருக்குள் ஒரு திட்டம் உருவானது.

ரகசியமாக வெளியே நின்ற ஆட்களை அழைத்து வாழை மரங்களை வெட்டி அடிப்பாகம் பல எடுத்துவரச் சொன்னார், அவர்களும் வெட்டி எடுத்து வந்தார்கள்.

அதனை உள்ளே கொண்டு சென்று சுழலும் சக்கரத்தின் உள்ளே செலுத்தினார், முதலில் ஆவேசமாக வெட்ட தொடங்கிய சக்கரம் பின் வாழைமரக்கழிவுகளில் சிக்கி சிக்கி மெதுவாகி பின் நின்றுகொண்டது.

அந்த இடைவெளியில் உள்ளே புகுந்து அந்த பொற்சிலையினை பெயர்த்தெடுத்தார் பரகாலர், ஆனால் பெயர்த்தெடுக்கும் வரை அமைதியாக இருந்த சிலை பிடியினை விட்டதும் அந்தரந்த்தில் அங்குமிங்கும் ஓடத்துவங்கிற்று.

அதாவது பௌத்தர்களுக்கும் சூட்சும சக்திகள் உண்டு, பௌத்தர்களுக்கும் சூட்சும சக்தி தொடர்புகள் உண்டு, மாந்திரீகம் எல்லாம் உண்டு, அவர்கள் அந்த சக்தியில் எல்லா ஆபத்தையும் கடந்து யார் அந்த சிலையினை தொட்டாலும் அவர்கள் கைக்கு அகப்படாமல் தப்பி ஓடுவது அசைவது போல அந்த மர்ம சக்தியினை அங்கே ஸ்தாபித்திருந்தார்கள்.

(சிலர் சொல்வது உள்ளே இரும்பும் வெளியே காந்த கல்லும் இருந்தது அதனால் அது அப்படி ஒரு அசைவினை காட்டும் என்ற வாதம் உண்டு, ஆனால் அது சூட்சும விஷயங்களா இல்லை அன்றைய விஞ்ஞானமா என்பது பற்றி அதிகம் சொல்லப்படவில்லை.

ஆனால், அந்த பொற்சிலை அங்குமிங்கும் ஓடியது பறந்தது வரலாற்றில் உண்டு)

கடல்கடந்து சென்று தகவல் பெற்று பெரும் ஆபத்துக்களை தாண்டி வந்தபின்னும், கடைசியில் இப்படி புத்தர் சிலையினை தொடும் நேரம் இப்படி ஆகிவிட்டதை அறிந்து மிகவும் மனம் வருந்தினார்.

இனி தன்னை காக்க பரமன் ஒருவராலே முடியும் என்பதை உணர்ந்து பாடல் ஒன்றை பாடித் தொழுதார்.

“ஈயத்தாலாகாதோ இரும்பினா லாகாதோ
பூயத்தால்மிக்க தொரு பூதத்தா லாகாதோ
பித்தளை நற்செம்புகளா லாகாதோ – மாயப்
பொன்னும் வேண்டுமோ மதித்துன்னை பண்ணுகைக்கு”

அந்தப் பாடலைப் பாடி பகவானை தொழுததும் அந்தச் சிலை அப்படியே நின்றது. கட்டுப்பட்டு இயல்பானது. அதை எடுத்துக் கொண்டவர்கள் சிலைக்கு அடியில் இருந்த பெரும் ரத்தினங்களையும் அள்ளிக்கொண்டு தப்பினார்கள்.

திட்டமிட்டபடி நாகப்பட்டினம் விகாரையின் பொற்சிலையினை தூக்கிவிட்டார்களே தவிர அதை எடுத்து செல்வதில் சவால்கள் மிக இருந்தன‌.

இதனால் ஆட்களை அகற்றி ரகசியமான இடங்களுக்கு அனுப்பிவிட்டு இருவர் மட்டும் வியாபாரிகள் போல் வேடமிட்டு சிலையோடு அலைந்தார்கள். சிலை ஒரு நிலத்தில் உறங்கிக் கொண்டிருந்தது.

அந்நேரம் வண்டிமாட்டோடு நிலத்தின் குடியானவன் உழவு செய்ய வந்தான், அவனிடம் நிலம் என்னுடையது என வாதம் செய்தார் பரகாலர்.

“இது எங்களுடைய நிலம், இது காலம் நீ எங்களை ஏமாற்றி அனுபவித்திருக்கின்றாய், அதனால் நீ நிலத்தில் கால்வைத்தால் விடமாட்டேன்” என மிரட்டினார்.

அவனோ தன் நிலம் என்றான்.

அப்படியானால் ஆவணத்தை எடுத்துவா என இவர் சொல்ல, இதோ என வேகமாக அவன் சென்றான், அந்த நேரத்தில் நிலத்தில் இருந்த சிலையினை எடுத்துக் கொண்டு தப்பி வண்டியினை எடுத்து ஓடினார் பரகாலர்.

இப்படி ஊர் ஊராக அலையும் போது நாகப்பட்டினம் அருகே ஒரு அரச நிர்வாக கும்பல் அவர்களை இவர்கள்தான் சிலையினை எடுத்தவர்கள் என அடையாளம் கண்டுகொண்டது.

அவரை ரகசியமாக பிடித்தது காவல் படை, நகர காவல் தலைவனே அவரிடம் பேசினான்.

அவனிடமும் ஒரு தந்திரோபாயம் செய்தார் பரகாலர்.

“சிலையினை ஏற்கனவே கடத்திவிட்டோம், அது ஒரு பந்தயத்துக்கு களவாடப்பட்டது.

இப்போது நீர் எம்மை கொன்றாலும் சிலை இருக்குமிடம் உமக்கு தெரியாது, எம்மை சிறையில் இட்டால் உள்ளதும் போனது, நான் ஒருவனே சிலையினை உங்களிடம் மீட்கத் தகுதியானவன்.

இந்த கும்பலைபற்றி உங்களுக்கு தெரியுமல்லவா? அவர்களை நானே தான் ரகசியமாக பின் தொடர்ந்து மீட்க வேண்டும்.

உனக்கு ஒரு உத்திரவாதம் தருகின்றேன், நான் எப்படியாவது சென்று அவர்களிடம் இருந்து சிலையினை உருக்காமல் காப்பாற்றி வைக்கின்றேன், அடுத்த பங்குனி மாத ரோஹிணி அன்று உம்மிடம் ஒப்படைப்பேன்.

உங்கள் புத்த விசாகம் அன்று சிலை உங்களிடம் இருக்கும்” எனச் சொன்னார்.

நகர தலைவனுக்கு வேறுவழி தெரியவில்லை, இவரை அடித்தாலோ கொன்றாலோ ஏதும் ஆகாது, கடத்திய கும்பல் சுதாகரிக்குமே தவிர இவனை கைவிடுவார்களே தவிர சிலை கிடைக்காது என்பதை ஊகித்தவன் அவரிடம் பேரம் பேசினான்.

அவர் மறுபடியும் விரைவில் ஒப்படைப்பேன் என்றார், அவனோ சீட்டெழுதி கொடுக்க சொன்னான் ஆதாரம் கேட்டான், கடைசியில் “சிலையின் ஒரு விரல் குறையாமல் தருகிறேன் பங்குனி ரோஹிணி அன்று தருகின்றேன்” என எழுதிக் கொடுத்தார் பரகாலர்.
அவரைப் பற்றிய பல செய்திக்ளை அறிந்தபின் அவரைப் போகச் சொன்னான்.

சிலையினை இப்படி தந்திரமாக கொண்டுவந்து திருவரங்க நாதனுக்கு பெரும் பணிகளை செய்தார், அந்த தங்கமும் வைரமும் மாணிக்கமும் கோவில் திருப்பணிக்கு பயன்பட்டன‌.

திருவரங்கம் எனும் ஆலயம் மிக பெரியதாக உருவாக அவர்தான் காரணம், தான் அள்ளிவந்த பணத்தை கொண்டு அவர் செய்த திருப்பணிதான் இன்றுவரை நாம் காணும் திருவரங்கமாக நிலைத்து நிற்கின்றது.

அவர் திருவரங்க கோவிலுக்கு ஆற்றிய தொண்டுகள் “கோயில் ஒழுகு” எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.

அவர் கட்டிய கோயில்கள், கட்டிடங்கள், மதில்கள், நெற்களஞ்சியம், சமையல் கூடம், படித்துறை, ஆகியவற்றை அந்நூல் தெளிவாக சொல்கின்றது.

ஆம். திருவரங்கத்தில் நான்காம் திருவீதியின் திருச்சுற்று மற்றும் கோபுரங்களை அவர்தான் கட்டினார். இக்கோயிலின் நான்காம் திருச்சுற்று வடக்கு பகுதியில் “காந்தார புட்கரணி” என்ற வட்டவடிவ குளம் அமைத்தார்.

அவரின் பெயரான ஆலிநாடன் எனும் பெயரில் ஒரு வீதி அமைந்தது, அங்கு திருநடை மாளிகை அமைத்தார்.

வடக்கு கோபுரத்தில் உள்ள அழகிய சிவபெருமான் கோயிலும், விமானமும், திருப்பண்டாரம், திருக்கொட்டாரம் கட்டி முடித்தார்.

இந்த மதிலுக்கு உட்பட்ட பிரகாரத்திற்கு ஆலிநாடன் திருவீதி என்ற பெயர் இன்றும் உள்ளது. இங்கே திருமடைப்பள்ளியையும் கட்டினார்.

திருவரங்க‌ கருவறை விமானத்துக்கு பொன் கூரை அமைத்தார், ஐந்தாவது திருச்சுற்றில் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டினார்.

மேட்டு அழகிய சிங்கர் சன்னதியை ஏற்படுத்தினார்.

இரண்டாவது சுற்றில் தபோலோகம் என்ற அழகிய கிளி மண்டபத்தை கட்டினார், திருமாமணி மண்டபம், 100 கால் மண்டபத்தை கட்டினார்.

நான்காவது சுற்றில் தெற்கு வடக்கு கோபுரங்களை கட்டினார், கொள்ளிடம் தென்கரையில் தசாவதாரக் கோயில் கட்டி கர்ப்பகிரகத்தில் 10 சிலைகளை அமைத்தார், தனக்கென ஒரு கோயிலையும் கட்டினார், கொள்ளிடக் கரையில் இறந்தோர் பரமபதம் அடைய நிலத்தை வாங்கி மண்டபம் கட்டினார்.

இந்தப் படித்துறை “திருமங்கை மன்னன் படித்துறை” என்றே அழைக்கப்படுகிறது.

இன்று காணும் ஏழாம் பிரகார சுற்றுச்சுவரை அவரே எழுப்பினார், ஆக அவர் இல்லையென்றால் இன்றிருக்கும் திருவரங்க ஆலயம் இல்லை.

திருவரங்கத்தில் எல்லா அடியார்களும் பாடினார்கள், வேண்டினார்கள். ஆனால், தன் உயிரை பணயம் வைத்து பொருள் தேடி வந்து பெரும் ஆலயமாக அதை மாற்றியவர் அவர்தான்.

திருமங்கை ஆழ்வார் என்றொருவர் இல்லையென்றால் இன்று காணும் திருவரங்க ஆலயமே இல்லை.

விஷயம் இத்தோடு முடிந்ததா என்றால் இல்லை, நாகப்பட்டின விகாரை சிலை கடத்தப்பட்டதில் சோழமன்னனும் மனதுக்குள் சிரித்துக் கொண்டான், பௌத்தம் சனாதன மார்க்க எதிரி என்பதால் அவன் ரகசியமாக அதை ரசித்தான்.

திருவரங்க ஆலயத்திற்கான பணம் மட்டுமே வந்ததே தவிர, எப்படி யார்மூலம் வந்தது எனத் தெரியாது வேலைகள் நடந்தன. எப்படியோ பணம் வந்தது என்பதால் யாராலும் பரகலாரை குற்றம் சாட்டவும் முடியவில்லை.

எல்லா மக்களும் பங்குபெறுவதாக சொல்லி ஏதேதோ வியூகம் வகுத்து அதை அழகாக செய்துமுடித்தார் திருமங்கை ஆழ்வார்.

நாகப்பட்டினம் என்பது பௌத்தர்களின் விசேஷமான பூமியாய் இருந்தது. அங்கிருந்து பரவ வேண்டிய பௌத்தத்தை பரகாலர் எளிதாக முறித்துப் போட்டார், பௌத்த பிக்குகள் எல்லோரும் பேயறைந்தது போல் இருந்தனர்.

எனினும், அந்த நாகப்பட்டின தலைவன் அவரை தேடிவந்தான், பங்குனி ரோஹிணி நாள் கடந்ததும் வந்தான்.

அவர் எழுதி கொடுத்த சீட்டோடு வந்தான், அந்த சீட்டில் “வரும் பங்குனி ரோஹிணிக்குள் புத்தர் சிலையின் ஒருவிரல் குறையாமல் ஒப்படைப்பேன்” என எழுதப்பட்டிருந்தது.

சபை அதற்கான நியாயம் கேட்டது.

சீட்டில் இருந்தபடி ஒரே ஒரு விரலை, புத்தனின் ஒரே ஒரு சிறிய விரலை மட்டும் ஒப்படைத்து ஒன்றும் அறியாதவர்போல் இருந்தார் பரகாலர்.

நாகப்பட்டின காவல் தலைவன் அலறினான், கத்தினான் இவன் என்னை மோசம் செய்தான் என கூப்பாடு இட்டான். ஆனால், இது வேறுநாடு என்பதால் அவனால் அதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியவில்லை.

பரகாலர் அமைதியாகச் சொன்னார், “இந்த ஒருவிரல்தான் அன்று என்னிடமும் கிடைத்தது, அதை எல்லோரிடமும் காட்டிவர ஒருவருடம் அவகாசம் கேட்டேன், அதை எழுதியும் கொடுத்தேன் இதோ கொடுத்துவிட்டேன்”

சிலையின் ஒரே ஒரு விரலோடு சோகமாக நடந்தது அந்த நாகப்பட்டின கோஷ்டி.

இப்படி பெரும் காரியங்களை முடித்தபோது அவருக்கு 60 வயது எட்டியிருந்தது, முன்புபோல் அவரால் வசூல் செய்யமுடியவில்லை.

மனிதன் நிறுத்துமிடம் ஆண்டவன் கணக்கு தொடங்குமல்லவா? அதன்படி இவரின் வீரதீர செயல்களால் தன் பக்தன் தன்னை மகிழ்வித்ததை கண்டு நெகிழ்ந்த பகவான் அவரை ஆட்கொண்டு அவரின் நால்வகை கவி மூலம் பாசுரங்களை பொழிந்து தன்னை பாடவும் திருவுளம் கொண்டார்.

ஒரு நாடகம் மூலம் அதை நடத்தினார், அங்கிருந்துதான் திருமங்கை மன்னர் என்பவர் திருமங்கை ஆழ்வார் என உருவானார்.

அதை அடுத்துப் பார்க்கலாம்.

தன் புஜபலத்தாலும், வாள் பலத்தாலும், சாதுர்ய வியூகத்தாலும் பல அசாத்தியமான வகையில் பல வசூல்களை செய்து பெரும் பொருள் குவித்து திருவரங்கம் உள்ளிட்ட ஆலயங்களில், மன்னனும் செய்யமுடியா திருப்பணிகளையும், எந்த செல்வந்தனும் செய்யமுடியா அடியார் திருப்பணிகளையும் செய்து கொண்டிருந்த தன் அடியாரை பகவான் கருணையோடு நோக்கினார்.

பரகாலருக்கும் அப்போது சுமார் 60 வயது நெருங்கிக் கொண்டு இருந்தது. அவருக்கும் உடலால் ஓய்வுகொடுத்துவிட்டு, அவரின் கவிவலிமையினால் தன்னை பாடவைக்க வேண்டும், அழியா பிரபந்தங்கள் தன் அடியாரிடம் இருந்து வரவேண்டும் அதனால் அவரை ஆட்கொள்ள வேண்டும் என திருவுளம் கொண்டார் பகவான்.

அதன்படி அவரும், பிராட்டியாரும் பெரும் நகை அணிந்து புதுமணம் புரிந்த தம்பதியராக, பணக்காராக வீட்டு மணமக்கள் போல் சென்றார்கள். மாட்டு வண்டியில் சில ஆட்கள் காவலுடந்தான் வந்தார்கள்.

அதனை எப்போதுமே பாதையினை கண்காணிக்கும் பரகாலரின் ஆட்கள் அவரை கண்காணித்தார்கள்.

அவர்கள் அறியாமல் அவர்களை பின் தொடர்ந்து வந்தார்கள்.

உரிய இடம் வந்ததும் கோழிபோல் கத்தினார்கள், அவ்வளவுதான் மறைவில் இருந்த பரகாலர் வாளுடன் அவர்கள் எதிரே வந்தார்.

ஒரு அந்தண குடும்பம் உடலெல்லாம் நகைகள், கையில் பொருள் மூட்டை, ஆட்கள் சகிதம் நின்றிருந்தது. பரகாலரின் ஆட்கள் மின்னல் வேகத்தில் அந்த காவலர்களை வளைத்துக் கொண்டு கை, கால்களை கட்டிப்போட்டனர்.

அந்நேரம் வேகமாக வந்து அவர்களிடம் இருந்த நகைகளை, பொருளை துணியினை விரித்து அதன்மேல் வைக்கச்சொன்னார் பரகாலர்.

அந்தணரும் மனைவியும் முதலில் மறுத்தார்கள், கதறினார்கள். இதெல்லாம் பாவம், ‘பகவானே பகவானே’ எனக் கத்தினார்கள்.

“பகவான் பணிக்குத்தான் இதனை கேட்கின்றேன், பகவானுக்கு தேவையான காரியம் ஆயிரம் இருக்க, உங்களுக்கு இதெல்லாம் அவசியமா? கொடுங்கள் பகவானுக்கு” எனச் சொல்லி கழற்றச் சொன்னார்.

அஞ்சிய அவர்களும் ஒன்றுவிடாமல் கழற்றிக் கொடுத்தார்கள். அவர்கள் கொடுக்கக் கொடுக்க ஒவ்வொன்றாய் துணியில் போட்டு கொண்டிருந்தார் பரகாலர்.

கடைசியில் எல்லாமும் கழற்றியாயிற்று. ஆனாலும், அந்தணர் கால் விரலில் அணிந்திருந்த ஆபரணம் ஒன்று அப்படியே இருந்தது.

அதையும் கழற்றச் சொன்னார் பரகாலர். ஆனால் தன்னால் கழற்ற இயலாது, நீயே கழற்றிக்கொள் என்றார் அந்தணர்.

அதனை முடிந்தவரை கழற்றமுயன்ற பரகாலர், கடைசியில் தன் வாயால் கடித்து இழுத்து எடுக்க முனைந்தார்.

அது தன் அடியானை தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வைக்கும் பகவானின் நாடகம் என்பதை பரகாலர் அறிந்திருக்கவில்லை.

அந்தணரும் அவர் மனைவியும் அந்நேரம் புன்னகைத்ததை யாரும் அறிந்திருக்கவுமில்லை.

அவரின் கால் விரல் ஆபரணத்தை அவர் கடித்து இழுத்த நேரம் “நீர் பெரிய கலியனப்பா” என்றார் அந்தணர், அதன் பொருள் நீ மிக மிக பலம்வாய்ந்தவன் என்பது.

அந்த ஒரு சிறிய ஆபரணமும் விடாமல் கழற்றியவர் அந்த மூட்டையினை கட்டித் தூக்க முயன்றார், முடியவில்லை.

நிறைய பெரிய வேட்டை கிடைத்துவிட்டது என மகிழ்ந்தவர் ஒற்றை ஆளாக தூக்க முனைந்தார், அப்போதும் முடியவில்லை.

தன் ஆட்களை அழைத்து தூக்க முயன்றார், அப்போதும் மூட்டை நகரவில்லை, கடைசியில் மாட்டு வண்டியுடன் இழுக்க முயன்றார். அப்போதும் அசையவில்லை.

குழம்பியவர் அந்தணனை கொஞ்சம் அச்சமாக பார்த்தார், “சொல், நீ மந்திரம் அறிந்தவன் தானே, உன் மந்திர வார்த்தைகளால் ஏதோ சித்து செய்துவிட்டாய், அதை மாற்றும் மந்திரத்தை உடனே சொல்” எனச் சீறினார்.

புன்னகைத்த அந்தணன், “என் அருகே வா , உன் காதில் அதை சொல்கின்றேன்” என்றார், மிகுந்த காவலோடு எச்சரிக்கையோடு அவர் அருகே சென்றார் பரகாலர்.

அப்போதும், “பகவானே இந்த மந்திரவாதி ஏதோ செய்துவிட்டான், என்னையும் ஏதும் செய்துவிடாமல் காப்பீராக” எனப் பிரார்தித்து சென்று அவரிடம் காதை கொடுத்தார்.

அந்தணர் அந்தக் காதில் மும்முறை அஷ்டாச்சரமென்னும் பெரும் மந்திரத்தை “ஓம் நமோ நாராயணா” எனச் சொல்லி அவர் தலையினை தொட்டார்.

அங்கேதான், அந்த நொடிதான் எல்லாம் மாறிற்று, மந்திரத்தை கேட்ட நொடி நிமிர்ந்து அவர் முகத்தை கண்டார் பரகாலர், அப்படியே வீழ்ந்தார்.

ஆம். அங்கே பகவான் தன் பிராட்டியாருடன் காட்சியளித்தார்.

“எம் பெருமானே, இந்த கொள்ளையனையும் வந்து ஆட்கொண்டீரோ, பாவியாக கர்மம் கழித்த என்னையும் தேடி வந்தீரோ, இந்த பூமியில் என்னைவிட பாக்கியசாலி யார்? இந்த அளவு பெரும் கருணையினை கண்டவன் யார்?

இன்றே நான் ஒளிபெற்றேன், இன்றே என் இருள் நீங்கிற்று, இன்றே நான் வேதம் முழுக்க அறிந்தேன்”

எனச் சொல்லி அவரை விழுந்து சேவித்தார், பரமாத்மா அவருக்கு சில மொழிகள் சொன்னார்.

“அடியாரே, இனி நீர் எம்மை உன் கவிபுலமையால் பாடிவருவீராக, இதுகாலம் கொள்ளையால் என் உள்ளம் கவர்ந்த நீர், இனி பாமாலை சூட்டுவீராக” எனச் சொல்லி ஆசிகூறி மறைந்தார்.

அந்த இடத்தில்தான் திருமங்கை மன்னர், திருமங்கை ஆழ்வார் என உருவானார்.

அத்தோடு அவர் மனம் மாறிற்று. சிந்தை மாறிற்று. வாளையும் கத்தியையும் தூக்கி ஏறிந்தார். பகவான் கொடுத்துச் சென்ற பொருளையும் ஆலய பணிகளுக்காக கொடுத்துவிட்டு “இனி என் கடன் தலமெல்லாம் பாடிக் கிடப்பதே” என முடிவெடுத்தார்.

நான்கு கவிகளிலும் வல்லவர் என்பதால் வகை வகையாக பாடினார், தொடர்ந்து பாடினார்.

நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் ஆயிரம் பாடல்கள் அவர் எழுதியது.

பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம்‌, திருநெடுந்தாண்டகம்‌ திருவேழுக் கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என வகை வகையாகப் பாடினார்.

அவரின் மாபெரும் பக்தி வடநாடு முதல் தென்னாடு வரை பல வைஷ்ணவ ஆலயங்களை தரிசித்தது, மதுரா முதல் திருப்பதி வரை பல திருத்தல யாத்திரை மேற்கொண்டார், எண்பதற்கு மேற்பட்ட தலங்களுக்கு சென்று பாடினார்.

திருப்புல்லாணி, திருமயம் திருக்கரம்பனூர், கண்டியூர், நைமிசாரண்யம் (அருள்மிகு தேவராஜர் திருக்கோயில், நைமிசாரண்யம், உ.பி.), ஜோதிஷ்மட், திருப்பிரிதி (அருள்மிகு பரமபுருஷர் திருக்கோயில், நந்தப்பிரயாக், உ.பி.)

சிங்கவேள்குன்றம் (அருள்மிகு பிரகலாத வரதன்,நரசிம்மர் திருக்கோயில், அகோபிலம், கர்நூல், ஆந்திரா)

திருஎவ்வுள், திருப்பரமேஸ்வர விண்ணகரம், திருப்பவள வண்ணம், திரு நீரகம் , திரு காரகம் , திருக்கார்
திருக்கள்வனூர், நிலாத்திங்கள் துண்டான், திருப்புட்குழி, திருவஹீந்தபுரம் .

காழிச்சீராம விண்ணகரம், திருக்காவளம்பாடி , திருவெள்ளக்குளம் , கீழைச்சாலை, திருப்பார்த்தன் பள்ளி, திருமணிக்கூடம், மணிமாடக் கோயில், அரியமேய விண்ணகரம்.

வண் புருஷோத்தமம், திரு நாங்கூர், நாகப்பட்டினம், திருத்தேற்றி அம்பலம், வைகுந்த விண்ணகரம்,
செம்பொன் சேய் கோயில், தலைசிங்க நான்மதியம்.

இந்தளூர், தேரழுந்தூர், திருச்சிறுபுலியூர், நாகை திருக்கண்ணங்குடி.

திருக்கண்ண மங்கை , திருச்சேறை, திருநறையூர், திருவெள்ளியங்குடி, நந்திபுர விண்ணகரம், ஆதனூர் , திருப்புள்ளபூதங்குடி , திருக்கூடலூர் (அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர்)
திருக்கோழி என எண்ணிக்கை எண்பதுக்கும் மேல் தாண்டும்.

அதாவது 108 திவ்ய தேசங்களில் ஏகப்பட்ட தலங்களை அவர் தரிசித்தார், பெரும் பாடல்களை அங்குதான் இயற்றினார், ஆயிரம் பாடல்களும் அப்படித்தான் வந்தன‌.

அவரைப் போல் ஏகப்பட்ட தலங்களை தரித்து ஆயிரம் பாடல்களை தந்தவர்கள் குறைவு, அந்தப்பாடல்கள் அவ்வளவு அழகானவை.

முதன் முதலில் தன்னை ஒரு பெண்ணாகவும், பகவானை தலைவனாகவும் பாடும் பாணியினை நம்மாழ்வார் தொடங்கி வைத்தார், அதனை திருமங்கை ஆழ்வார் தொடர்ந்தார்.

அவரின் பாடல்கள் எல்லாமே சிறப்பு என்பதால் சில பாடல்களை எடுத்து அதன் அழகை புரிந்து கொள்ளலாம்.

தன் அனுபவத்தினை பகவானே தனக்கு உபதேசித்த மந்திரத்தை சொல்லி பாடலை தொடங்குகின்றார்.

“பகவானுடைய பேரருளால் அவனிடமிருந்தே திருமந்திரத்தைப் பெற்றேன். அது என் பாவத்தைப் போக்கியது. என்னைத் தெளிவடையச் செய்தது. நான் நற்கதி அடையும் தகுதியைப் பெற்றுள்ளேன். ‘

புலவர்கள் அற்ப மனிதர்களைக் ‘கற்பகமே ரக்ஷகனே’ என்கிறீர்கள். நாராயண நாமம் சொல்லி நற்பயன் பெறுங்கள். சொன்னால் நன்மை, துயர் நீங்கும், அழைமின். துஞ்சும் போதாவது அழைமின், நாராயணா என்று கூறுங்கள்” என்கிறார் .

இனி பாடல்களை காணலாம்.

“வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்தம்மோடு அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்”

அதாவது இழிவாக கிடந்த காலமெல்லாம் வாடிக்கிடந்தேன், மனவருத்தமடைந்தேன், அளவற்ற துக்கங்களுக்கு இருப்பிடமான இல்லறத்திலே பிறந்து பொருந்தப்பெற்றேன்.

அப்படி கிடந்ததனால் இளமை தங்கிய பெண்கள் தரக்கூடிய சிற்றின்பத்தை ஆசைப்பட்டு அந்தப்பெண்கள் போன வழியையே பற்றி ஓடினேன். இப்படி ஓடித்திரியுமிடத்து எம்பெருமான் திருவருளாலே ஞானமென்கிற ஒரு சிறந்த நிலையில் அடிவைத்து நன்மை தீமைகளை ஆராயப் புகுந்தேன். அப்படி ஆராயுமளவில் நாராயணா மஹா மந்திரத்தை நான் கண்டுகொண்டேன் என்கின்றார்.

அடுத்துப் பாடுகின்றார்.

“குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு
பெருநிலமளிக்கும் வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினுமாயின செய்யும் நலந்தரும் சொல்லை
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்”

அதாவது நாராயணன் எனும் நாமத்தின் பெருமையினை பாடுகின்றார். அடியார் அந்தப் பெயரினை கைகண்டு கொண்டுவிட்டால் போதும். நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும்; அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் கரையும் .

அந்நாமம் பரமபதத்தைக் காட்டும். பெற்ற தாயைவிட அதிகமாகச் செய்யும். நாராயணன் என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் கண்டுகொண்டால் போதும், சொன்ன எல்லாமும் உத்தரவாதம் என்கிறார்.

அடுத்துப் பாடுகின்றார்.

“முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன் ஒரு கோல் ஊன்றி
விதிர் விதிர்த்து கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி
இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசாமுன்
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே”

அதாவது கையாலே முதுகை பிடித்துக் கொண்டு முன்னே ஒரு கொம்பை விழாது இருப்பதற்காக ஊன்றி கொண்டு உடம்பு நடுங்கி கண்கள் சுழல பெற்று மேல் இளைப்பு கொண்டு இரும, சிறுவர்கள் வயதானவர்களை பார்த்து மூப்படைந்த தன்மை இது என்னே! என்று சொல்லி இகழ்வதற்கு முன்பே மலரில் உள்ள தேனை குடிக்கும் வண்டுகள் இசைக்கும் திருவதரி (பத்ரிநாத்)யை வணங்குவோம்.

அடுத்துப் பாடுகின்றார்.

“ஈசி போமின் ஈங்கு இரேல்மின் இருமி இளைத்தீர்
உள்ளம் கூசி இட்டீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர்பால்
நாசம் ஆன பாசம் விட்டு நல் நெறி நோக்கல் உறில்
வாசம் மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே”

வெளியேறுங்கள் சீ சீ இவ்விடத்தில் இருக்காதீர்கள், இருமலாலே உடல் மெலிந்தீர், இப்படி நாங்கள் சொல்வது கேட்டு நெஞ்சம் கூசினர் என்று பேசும் குவளை மலர் போலும் கண்களை உடைய பெண்களிடம் கேடு தரும் பற்றை விட்டு, நல்ல வழியில் செல்லக் கருதின், மணம் நிறைந்த திருத்துழாயையுடைய இறைவன் கோயில் கொண்டிருக்கும் திருவதியை வணங்குவோம் என்கின்றார்.

“ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தான் உடைக் குரம்பை பிரியும்போது உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்
நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்”

தேன் நிறைந்த தாமரைப் பூவில் பிறந்த பெரிய பிராட்டியாருக்கு தலைவனே! திருப்பாற்கடலில் கண் வளர்ந்து அருளியவனே! திருநைமிசாரணித்துள் எழுந்தருளி உள்ள என் தலைவனே!
தசையை சுவராக வைத்து எலும்புகளை தூணாக நிறுத்தி மயிரை மேலே வைத்து மூடி ஒன்பது வாயில்களை உடையதாக இருக்கும் குடிசையாகிய உடலை விட்டு உயிர் பிரியும் காலத்தில் உன்னுடைய திருவடிகளே தஞ்சம் என்று நினைத்திருந்தேன். என்னுடைய தவமாக விளங்கும் உன் அருளால் உன் திருவடிகளை அடையப்பெற்றேன் என்பது பாடலின் பொருள்.

அடுத்தொரு பாடல் உண்டு.

“நல்லை நெஞ்சே! நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரந் தோளன் இடம்,
நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து
அதர்வாய் சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேழ்குன்றமே”

எனக்கு பாங்கான நெஞ்சே!! நமக்கு தலைவனாய், பெரிய பிராட்டியார் தழுவும்படி எழுந்தருளியிருக்கிற ஆயிரம் திருத்தோள்களை உடைய பெருமானிடம் நெல்லி மரங்கள் வேரோடு பாறைகளை உடைக்கவும் பனை ஓலைகள் ஒலி செய்யவும் , சில் வீடு என்னும் வண்டுகள் ஒலிக்கவும் உள்ள சிங்கவேள் குன்றத்தை நாம் சென்று வணங்குவோம்.

அடுத்து எட்டெடுழுத்தின் பெருமையினை சொல்கின்றார்.

“பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்
சொலி நின்று பின்னரும்
பேசுவார்-தமை உய்ய வாங்கி
பிறப்பு அறுக்கும் பிரான் இடம்-
வாச மா மலர் நாறு வார் பொழில்
சூழ் தரும் உலகுக்கு எலாம்
தேசமாய்த் திகழும் மலைத் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே”

அதாவது எல்லோராலும் சொல்லத்தக்கதும் நாவுக்கு இனியதுமான திருநாமம் ஆகிய எட்டு எழுத்துக்களையும் ஒருமுறை கூறி மீண்டும் அதனையே சொல்வோர் ஈடேறும்படி ஏற்று அவர்களது பிறவி தொடர்பினை நீக்கும் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் இடம் மலர்கள் மணம் வீசும் சோலைகளாலே சூழப்பட்டதும் எல்லா உலகங்களுக்கும் ஒளியாய் விளங்குவதுமாகிய திருமலையாகும். அதை நெஞ்சமே நீ விரைவில் அடைவாயாக.

அடுத்தப் பாடல் இதோ.

“தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்-
வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா!-
நா(யே)ன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே”

மூங்கில்கள் நிறைந்து பூஞ்சோலைகள் சூழ்ந்து மணம் நிறைந்த திருமலையில் எழுந்துருளி உள்ள பெருமானே, தாய், தந்தை, மனைவி, சுற்றம் பிள்ளைகள் என்று உறவு அல்லாதவர்களை உறவாக நினைத்து துன்ப பட்டேன்.
(நா)யைப் போலும் கீழானவன் ஆகிய நான் மெய்யான உறவாகிய உன்னை வணங்க வேண்டும் என்ற ஆசையால் உன்னிடம் வந்து தஞ்சம் புகுந்தேன். அடியவனான என்னை குளிர நோக்கி அடிமை கொண்டு அருள்வாய் என்பது பொருள்.

அடுத்துப் பாடுகின்றார்,

“வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவரர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தோர் தொழுதுஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்
மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே”

வேதவடிவாய் இருப்பவனை, வேதத்தினால் பெறப்படும் இனிய பயனாய் இருப்பவனை, ஜனகர் முதலிய முனிவர்கள் உண்ணும் குற்றமற்ற பழம் போன்றவனை நந்தகோபரின் திருமகனை உலகத்தார் பணிந்து துதிக்கும் முதல்வனை அமுதம் போலே இனிமை தருபவனை, என்னை அடிமை கொண்ட தலைவனை ஒப்பற்ற பெண்கள் வாழ்கிற மயிலாப்பூர் அடுத்த திருவல்லிக்கேணியில் காணப்பெற்றேன் என்பது பொருள்.

அடுத்துப்பாடுகின்றார்,

“கிடந்தானை தடங்கடலுள் பணங்கள்மேவி கிளர்பொறிய மறிதிரிய அதனின்பின்னே படர்ந்தானை
படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானை பார்இடத்தை எயிறுகீற இடந்தானை
வளைமருப்பின் ஏனம்ஆகி இருநிலனும் பெருவிசும்பும் எய்தாவண்ணம் கடந்தானை
எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே”

திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் படங்களின் கீழே பொருந்தி கிடந்தவனும், மாரீசன் என்னும் பொய்ம்மான் எதிரே வந்து உலவ அதன் பின்னே தொடர்ந்து சென்றவனும், குவலையாபீடம் என்னும் யானையின் கொம்புகளை முறித்து அழித்தவனும், பன்றியாய் உருவம் கொண்டு உலகை பற்களாலே கிழித்து எடுத்தவனும்
நிலஉலகும் பெரிய வானுலகம் போகாதவாறு மிக வளர்ந்து உலகளந்தவனுமாகிய எனக்கு தலைவனானவனை கடல்மல்லை தல சயனத்தே கண்டு கொண்டேன்.

இனி அவர் பாடிய திருக்குறுந்தாண்டகம் எனும் பாடலைக் காணலாம்.

பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம். ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள் வந்தால் அது குறுந்தாண்டகம் என்றுரைப்பர்.

திருக்குறுந்தாண்டகம் என்பது வைணவக்கடவுளைப் பற்றிய செய்யுளாதலால் ‘திரு’ என்று பெயர் தொடங்குகிறது.

“நிதியினைப் பவளத் தூணை
நெறிமையால் சினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக்
கண்டுமுன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி
வணங்கிஎன் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட
தொண்டனேன் விடுகி லேனே..

எம்பெருமான் நினைத்தபோது பயன்படுத்திக் கொள்ளும் நிதி போன்றவன், அனைவரையும் தாங்கும் பவளத்தூண் போன்றவன், இவனை முறைப்படி நினைக்க வல்லவருக்கு பரமகதி ஆவான். கம்சனை அழித்து உலகை காப்பாற்றியவன், தனது அன்பர்களை நினைப்பவன், தனது அன்பரிடம் மோகம் கொள்பவன். இவனை வாழ்த்தி வணங்குமாறு என் மனதில் வந்த கருணை உடையவன். இவனை கண்ணாரக் கண்டு அனுபவித்து அடியேனான இனி ஒருபோதும் இவனை விடமாட்டேன் என்பது பொருள்.

அடுத்துப் பாடுகின்றார்,

“இம்மையை மறுமை-தன்னை
எமக்கு வீடு ஆகி நின்ற
மெய்ம்மையை விரிந்த சோலை
வியன் திரு அரங்கம் மேய
செம்மையை கருமை-தன்னை
திருமலை ஒருமையானை
தன்மையை நினைவார் என்-தன்
தலைமிசை மன்னுவாரே”

இவ்வுலகில் அனுபவிக்குமாறு சிறந்த அறிவை தருபவன், உடல் அழிந்த பின் மோட்சத்தில் கைங்கரியத்தை தருபவன், சோலைகளால் சூழப்பட்ட வியக்கத்தக்க திருவரங்கத்திலே என்றும் வாழ்பவன், ஒரு யுகத்தில் சிவந்த வடிவும் அடுத்த யுகத்தில் கருத்த வடிவும் உடையவன், திருவேங்கடத்தில் நின்று நித்தியசூரிகளுக்கும் நித்திய சம்சாரிகளுக்கும் வேறுபாடு காணாமல் ஒக்க முகம் காட்டுபவன், அடியார்களுக்கு வசப்பட்டு இருப்பவன். இத்தகைய இயல்புடைய இப்பெருமானை நினைக்க வல்லவரே என் தலையில் அணிகலனாக இருக்கத்தக்கவர் என்கின்றார்.

அடுத்துப் பாடுகின்றார்,

“பேசினார் பிறவி நீத்தார்-
பேர் உளான் பெருமை பேசி
ஏசினார் உய்ந்து போனார்
என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன்
பேதையேன் பிறவி நீத்தற்கு
ஆசையோ பெரிது கொள்க-
அலை கடல் வண்ணர்பாலே”

திருப்பேர் நகரில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானுடைய பெருமையை பேசினவர்கள் பிறவிக் கடலை கடந்தார்கள். சிசுபாலன் போன்றவர்கள் ஏசியதும் பேசியதேயாகி உய்த்துப் போனார்கள் என்று சொல்வது இவ்வுலகிற்கு இயல்பு . அப்படியே அறிவிலியான நான் அவன் குணங்களை புகழ்ந்தேன். மோட்சம் பெறுவதற்கும் ஏசமாட்டேன். இந்த சம்சாரத்தை விட்டு நீங்குவதற்கு கடல் போல் திருநிறமுடையவன் விஷயத்தில் அடியேன் கொண்ட அன்பு மிகப் பெரியதாய் உள்ளது என்கின்றார்.

அடுத்து திருநெடுந்தாண்டகம் பாடலைக் காணலாம்,

“மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப் பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே”

முன்பே கண்ணால் காணப்படுவனவான உலகமும் உலகில் உள்ள பொருள்களும் மின்னலைப் போல் நிலையற்றன என்பதை முதலில் பெருமான் எனக்கு வெளிப்படுத்தினான். உயிர்கள் உய்வதற்கு நான்கு வேதங்களையும் தந்தருளி விளக்கொளி இருளை போக்குவது போல் அறிவின்மை ஆகிய இருளைப் போக்கி தன்னுடைய சொரூபத்தை தெரிய காட்டினான். மலை உச்சியில் தோன்றும் சந்திரனைப் போல ஆனந்தத்தை அளிக்கக்கூடிய ஞானத்தை எனக்கு கொடுத்தான். காதால் கேட்பது, மனனம் செய்வது, மனதில் ஊன்றச் செய்வது, நேரில் காண்பது இவற்றை அளிப்பவனாய் இருபத்தைந்தாவது தத்துவமான ஆத்மாவை காட்டிக் கொடுத்தான். முன்னே தோன்றுவதான உலக வாழ்க்கையில் காணும் துன்பம், நோய், கிழத்தனம் இவை இல்லாததாய் பிறப்பில்லாத ஆத்மாவுக்கு தலைவனாய் மரணத்தின் பின் கைவல்யத்தை அடியாருக்கு கொடுக்க எண்ணாதவனாய் விளங்குபவன்
இப்பெருமானாவான். அன்றியும் மனனம் செய்வதற்கு ஏற்றதாய் பொன்னின் இயல்பை உடையவன் ஆவான். மணியின் இயல்பு உடையவனாய் வடிவில் சோதிமயமானவனாவான்.

நிலம், நீர், தீ, விசும்பு, காற்று என்னும் ஐம்பூதங்களில் உறைபவனாவான், பஞ்ச உபநிடத்துக்களாலான திருமேனி உடையவனாவான்.

தண்ணீர் போலே அன்பர்க்கு சுலபன். நெருப்பு போல மற்றவர்களுக்கு கிட்ட ஒண்ணாத வடிவுடையவன்.
தானே சோதிமயமானவன். என் உடலில் நிற்பவன்; எனக்கு சுவாமி இத்தகைய பெருமானுடைய திருவடி தாமரைகள் என் தலைக்கு அலங்காரமாய் உள்ளன என்று சிலாகித்து கூறுகிறார்.

அடுத்துப் பாடுகின்றார்,

“முளைக்கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா
மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
அந்தணனை அந்தணர்தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தை திருத்தண்காவில்
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்தனால் பயன்பெற்றேன் வருக என்று
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே”

அதாவது உதிக்கின்ற இளஞ் சூரியனைப் போன்றவன், திருக்குறுங்குடியில் கார்மேகம் போல் விளங்குபவன், நித்தியமாய் மூவகைப்பட்ட உலகுக்கும் அப்பாற்பட்டவனாய் பரம பதத்தில் முதல்வனாய் எழுந்துருளி இருப்பவனும் சொரூப ரூப குணங்களால் அளவிட முடியாதவனும் அருமையான அமுதம் போன்றவனும் ஆவான் என்கின்றார்.

அடுத்து அவர் பாடிய மடல் பாடல்களை காணலாம்.

மடல் ஏறுதல் என்பது அக்காலத்தில் உள்ள வழமை, அதாவது ஒரு பெண்ணை அல்லது அவள் வீட்டாரை கவர ஆண்கள் காளை அடக்குதல், பெரும் போர், கல்லை தூக்குதல் என பெரும் பலம் காட்டிநிற்பார்கள்.

ஆனால், பலவீனமானவர்கள் தங்களை தாழ்வாக கருதுபவர்கள் பனைமரத்தின் மட்டையில் இருக்கும் மடல் மேல் ஏறி அமர்வார்கள், அவரை ஊரார் இழுத்துவருவார்கள், அவரோ அந்த பெண்ணின் பெயரை சொல்லி அவளை மணந்து கொள்ள கதறியபடி வருவார்.

இது தன்னை தாழ்த்தி ஒரு பெண்ணை அடைய ஒருவன் இறங்கும் தாழ்மையான நிலை, ஒரு பெண்ணின் மனதை கேட்டு கெஞ்சி வரும் நிலை.

அப்படியான நிலையினைத்தான் மடல் ஏறுதல் என்பார்கள், பொதுவாக ஆண்கள்தான் மடல் ஏறுவார்கள். இங்கே பகவானின் அன்புக்காக தான் ஒரு பெண் மனநிலையில் இருந்து மடல் ஏறுகின்றார்.

சிறிய திருமடல், பெரிய திருமடல் எனும் அத்தியாயங்களில் இருந்து சில பாடல்களை காணலாம்.

“பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அதுகேட்டு
காரார் குழல்கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீரார் சுளகில் சிலநெல் பிடித்துஎறியா
வேரா விதிர்விதிரா மெய்சிலிரா கைமோவா
பேர்ஆயிரம்உடையான் என்றாள் பெயர்த்தேயும்
காரார் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீரார் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்
தாரார் நறுமாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர்ஏதும் அஞ்சேல்மின் நும்மகளை நோய்செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூரார் வேல்கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ
ஆரால் இவ்வையம் அடிஅளப்புண்டதுதான்
ஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல்மாரி காத்ததுதான் ஆழிநீர்
ஆரால் கடைந்திடப் பட்டது அவன் காண்மின்”

அதாவது உலகத்தோர் சொல்லும் வகையில் நீங்கள் செய்தால் இந்நோய் நீங்கலாம் அதாவது குறி கேட்கலாம். இந்நோய் யாரால் ஏற்பட்டது என்பதை அறியலாம்‌. யாவரும் இசைந்தனர். இந்நிலையில் குறி சொல்லுவாள் ஒருத்தி தானே அங்கு வந்து ஆவேசம் கொண்டு குறி சொல்ல ஆரம்பித்தாள். அழகிய முறத்திலிருந்து நெல்லை உருப்படி எடுத்து வீசினாள், விதிர்விதிர்த்தாள், மெய்சிலிர்த்தாள்.

அவள் தலைவியின் கையை முகர்ந்து இது ஆயிரம் பேர் உடையவனால் வந்தது என்று சொன்னாள்.

அதற்கு மேல் கறுத்த மேகத்தை காட்டி பெருமானது வடிவை காட்டினாள். திருக்கையில் பெருமை வாய்ந்த வலம்புரி சங்கு என்றாள். திருத்துழாய் மாலை அணிந்த திருமார்பை உடையவன் என்று குறி சொன்னாள். கட்டுவிச்சி வாய்விட்டு கூறியது.

நீர் சிறிதும் அஞ்ச வேண்டாம். உங்களது பெண்ணுக்கு இந்த நோயை செய்தவன் வேறு ஒருவனும் அல்லன். அவனை நான் அறிந்தேன். கூர்மைமிக்க வேல் போன்ற கண்ணுடைய மங்கையரை கேளுங்கள், நீர் அறியுமாறு சொல்லுகிறேன். இந்த வையகம் யாரால் அடியளக்கப்பட்டது?

யாரால் இலங்கை பொடிப்பொடியாய் அழிந்தது?? கல்மழை யாரால் தவிர்க்கப்பட்டது? கடல் நீர் யாரால் கடையப் பட்ட து? என்று அந்த எம்பெருமானை பிரிந்திருப்பதால் நாயகிக்கு உண்டான நோய் பிரிவு துயரினால் வந்துள்ளது என்று குறி சொல்லியதாக அமைத்துள்ளார்.

அந்த எம்பெருமானின் ஒவ்வொரு திருஅவதாரத்தினையும் அழகாக இங்கே பாடியுள்ளார் ஆழ்வார்.

இன்னும் ஒரு பாடல் உண்டு,

“சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேறுஓர் கலத்துஇட்டு
நாரார் உறிஏற்றி நன்குஅமைய வைத்ததனைப்
போரார் வேல்கண்மடவாள் போந்தனையும் பொய்உறக்கம்
ஓராதவன்போல் உறங்கி அறிவுஉற்று
தாரார் தடம்தோள்கள் உள்அளவும் கைந்நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி* — அருகுஇருந்த
மோரார் குடம்உருட்டி முன்கிடந்த தானத்தே
ஓராதவன்போல் கிடந்தானைக் கண்டுஅவளும்
வாராத்தான் வைத்தது காணாள் வயிறுஅடித்துஇங்கு
ஆரார் புகுதுவார்? ஐயர் இவர்அல்லால்
நீராம் இதுசெய்தீர் என்றுஓர் நெடுங்கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள்ஆய் சிக்கென ஆர்த்துஅடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்”

அதாவது திருவாய்பாடியிலுள்ள பசு கூட்டங்களை மெய்த்தவன். பிரளய காலத்தில் உலகம் முழுவதும் உண்டு தன் வயிற்றில் ஒடுக்கியவன். பின்னர் அவற்றை உமிழ்ந்தவன். இதனால் மன நிறைவு அடையாமல் வெண்ணெய் உண்பதில் ஆசை கொண்டவன்.

இவன் தாயார் யசோதை பிராட்டியார் தயிர் கடைவதற்காக மத்தை கையிலே பற்றிக் கொண்டு அழகிய நுண்ணிய இடை நோகுமாறு வெகுநேரம் கடைந்தாள்.

அதனால் இவ்வளவு நெற்றி வியர்த்தது. இவள் கடைந்த வெண்ணையை வேறொரு கலத்தில் இட்டு நாராலான உறியில் வைத்து கயிற்றை உருவி வைத்தாள்.

வேல் போல் கண்களை உடைய யசோதை இவன் களவுக்கு வருவானோ? என்று பார்த்துக் கொண்டிருந்தாள். இவள் அங்கிருந்து போகும் வரையிலும் இவன் பொய் உறக்கம் கொண்டான். அவள் சென்ற பின்பு இவன் விழித்துக் கொண்டு தாழிகளிலே மாலை அணிந்திருந்த தோல்வரையில் கையை நீட்டி திருப்தி பெறாமலே மேன்மேலும் வெண்ணை முழுவதையும் விழுங்கி அருகில் இருந்த மோர் குடத்தை உருட்டி முன்புதான்
படுத்துக்கொண்டிருந்த இடத்திலே ஒன்றும் தெரியாதவன் போல் படுத்துக் கிடந்தான்.

யசோதை அங்கு வைத்த வெண்ணெயை காணாமல் அய்யோ இவனுக்கு இந்த வெண்ணை எப்படி ஜீரணமாகும்? என்று வயிற்றில் அடித்துக் கொண்டு பெரியவரே உம்மைத் தவிர வேறு யார் இங்கு வந்து புகுந்தார்? இது செய்தது நீரே வேறு எவரும் இல்லை என்றாள். அப்பொழுது ஊர் மக்கள் எல்லோரும் காணுமாறு இவனை இழுத்துக் கொண்டு போய் ஓர் உரலோடே குறுங்கயிற்றினால் கட்டி வைத்தாள். கோபம் தீராமல் அடித்தாள்.

இவன் அந்நிலையில் பசி அடங்காத வயிற்றோடு பொறுக்க மாட்டாமல் இருந்தான் எனப் பொருள்.

பல பாடல்களை பாடி அவர் மடல்வகை பாடல்களை முடிக்கும் போது இப்படி முடிக்கின்றார்.

“எண்அருஞ்சீர் பேர்ஆயிரமும் பிதற்றி பெருந்தெருவே
ஊரார் இகழிலும் ஊராதுஒழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்”

அதாவது எம்பெருமானுடைய திருநாமங்கள் ஆயிரமும் சொல்லிக் கூப்பிட்டு பெருந்தெருகளிலே பெரிய அழகிய பனை மடல்களைக் கொண்டு மடல் கூறுவேன். ஊரார் என்னை பழித்தாலும் நான் கூறாமல் இருக்க மாட்டேன் என்று முடிக்கிறார்.

ஆம். இதெல்லாம் அவர் அருளிய ஆயிரம் பாடல்களில் ஒரு சில துளிகள்.

அவரின் வாழ்வில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று திருஞான சம்பந்தருடனான சந்திப்பு, ஆலயம் ஆலயமாக சென்று நாதனை பாடிவணங்கிய அவருக்கு சீர்காழிக்கு சென்றபோது அந்த அற்புதமான சந்திப்பு நடந்தது.

ஆழ்வார் சில வைணவ ஆலயங்களில் பாடியபோது அவரின் கவித்திறமையினை கேள்விப்பட்ட சம்பந்தர் அவரை காண விழைந்தார், அப்படியே அவரிடம் ஒரு பாடலை கேட்டுப்பெறவும் முயன்றார்.

ஆனால், பெருமாளை காணாமல் எப்படி பாடுவது எனத் தவிப்பில் இருந்தவருக்கு ஒரு பெருமாள் சிலைகிடைக்க சம்பந்தரே ஏற்பாடு செய்து அதனை கண்டபடி, கண்களில் நீர்கசிய பாடினார் திருமங்கை ஆழ்வார்.

அந்தப் பாடலை கேட்டதும் சம்பந்தபெருமானே உருகி “நாலுகவி பெருமான்” எனும் பட்டம் ஆழ்வாருக்கு பொருந்தும் என சான்றுரைத்து பரிசாக ஒரு வேலையும் வழங்கினார்.

இங்கே சைவம் வைணவம் எனும் பேதம் ஏதுமில்லை, அங்கே பௌத்தமும் சமணமுமே எதிராக இருந்தது. சமணரை கருவறுத்த சம்பந்தருக்கு பௌத்தத்தை முறித்துப்போட்ட திருமங்கை ஆழ்வாரை பிடித்துப்போனதில் ஆச்சரியம் ஏதும் இராது.

பின் தன் பெரும் கனவும், காலமெல்லாம் உழைத்ததுமான திருவரங்கத்துத்துக்கு வந்தார் திருமங்கை ஆழ்வார், அந்த கோவிலுக்கு அவர் செய்த திருப்பணிகளால் உவந்த எம்பெருமான் அவருக்கு என்ன வரம் வேண்டும் என கேட்க திருமங்கை ஆழ்வார் மாபெரும் கோரிக்கை ஒன்றை வைத்தார்.

அதுவரை திருவரங்கத்தில் சமஸ்கிருத ஸ்லோகமும், வடமொழி மந்திரமும் இன்னும் புரியா தமிழின் வழிபாடுதான் அதுவரை நடந்தது.

ஆழ்வார் அதனை தமிழில் பாட கோரினார். அன்றாட வழிபாடுகளை பாமர மக்களும் புரிந்துகொள்ளும் அளவு தமிழில் மறைகளை பாடவேண்டும், வேதம் உள்ளிட்ட எல்லாமும் தமிழில் பாடப்பட வேண்டும், அதற்கு பகவான் அருள் புரிய வேண்டும் என வேண்டினார்.

உன்னதமான பக்தனுக்கு பரமன் கேட்டதை அருளினார்.

இங்கிருந்துதான் தமிழில் வழிபாடு செய்யும் காலம் தோன்றிற்று. அதை தொடங்கி வைத்தவர் திருமங்கை ஆழ்வார். அங்கிருந்துதான் வைவணமும் தமிழும் வளர தொடங்கிற்று.

அப்படி தமிழில் வழிபாட்டை தொடங்கிவைத்தவர், அதுவும் பகவானிடமே உத்தரவை கேட்டு தொடங்கி வைத்து அதனை நடைமுறைபடுத்தி பின் அதை எல்லா ஆலயங்களுக்கும் பரப்பினார்.

அப்படி ஒவ்வொரு ஆலயமாக பரப்பி வந்து கடைசியில் தன் மனைவி குமுதவல்லியுடன் திருக்குறுங்குடி ஆலயத்தை அடைந்தார். அப்போது அவருக்கு 105 வயது ஆகியிருந்தது.

அங்கேதன் கடைசி காலங்களை கழித்தவர் அங்கே சமாதியானார்.

இன்றும் அவரின் சமாதி அந்தத் திருகுறுங்குடியில் அமைந்துள்ளது, அங்கிருந்து அருள் பாலிக்கின்றார் அந்த ஆழ்வார்.

திருமங்கை ஆழ்வார் என்பவர் ஆழ்வார் வரிசையில் அரசர் போல் மின்னுபவர், உடலாலும் பாசுரங்களாலும் பகவானுக்கு கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் என மூன்று வழிகளிலும் பகவானை பற்றி பிடித்து போதித்தவர் அவர்.

அவரின் பாசுரங்களை பாடி பகவானை பணிவோர்க்கு எக்காலமும் பகவானின் அருள் உண்டு.

திருவரங்க ஆலயம் இவ்வளவு பெரிதாக பிரமாண்டமாக உருவாக அவர்தான் காரணம். அங்கே செல்லும் போது அவரையும் நினைத்துக்கொள்வது நன்றியுடமையும் கடமையாகும்.

கலந்திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே.
காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே.
நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே.
நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே.
இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே.
இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே.
வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே.
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.