பஞ்ச நரசிம்மர் ஆலயங்கள்.
பஞ்ச நரசிம்மர் ஆலயங்கள் – முன்னுரை.
கார்த்திகை மாதம் என்பது கர்ம தொடர்புடையது, கர்மத்தைச் சரியாக முடிக்க ஒரு வைராக்கியம் வேண்டும், கூடவே உக்கிரமான வேகமும் வேண்டும், இதனாலேதான் கார்த்திகை மாதம் ருத்ர அம்சமெல்லாம் கொண்டாடப்பட்டது.
காலபபைரவர், யமன் போன்ற தெய்வங்களெல்லாம் இம்மாதத்தில் கொண்டாடப்பட்ட ரகசியம் இதுதான், கார்த்திகை என்பது மாதங்களில் எட்டாம் மாதம், எட்டு என்பது எப்போதுமே ஒரு சமநிலை அல்லது பழையன முடிந்து புதியன பிறப்பதைச் சொல்லும், புதிய படைப்பினைச் சொல்லும்
கர்கம் முடித்துப் புதிய காலகட்டத்தைத் தொடங்கும் காலமிது, இதனாலேதான் அவரவர் கர்மத்தைச் சரியாக செய்த அவதாரமெல்லாம் கொண்டாடப்பட்டன, அதில் ருத்ரவடிவில் நின்ற தெய்வங்கள் இன்னும் சிலாகிக்கப்பட்டன.
அப்படிக் கார்த்திகையில் சிவபெருமான், முருகப்பெருமான், யமன், ஐயப்பன் வழியில் கொண்டாடப்படும் அவதாரம் நரசிம்மர்.
ஓரிரு நாழிகை நடந்து முடிந்தாலும் நரசிம்ம அவதாரம் மகா முக்கியமானது, இது பொதுவான ருத்ர அமசத்தை சொல்வது. இந்த மகா பிரபஞ்சத்தின் முழு ரகசியங்களை முழுக்கப் புரிந்தவர் எவருமில்லை. அது சப்த மகா ரிஷிகளுக்கே முழுக்கப் புரியாத ஒன்று.
அதனை ஓரளவு புரிந்த ரிஷிகளும் ஞானியரும் தாங்கள் உணர்ந்தவற்றைச் சொன்னார்கள், அப்படி அவர்கள் சொன்னதுதான் ஒரே சக்தியில் இருந்து மும்மூர்த்திகள் தோன்றினார்கள், இந்த மும்மூர்த்திகளின் அம்சம் பல இடங்களில் ஒன்றுபட்டிருக்கும், இவை ஒன்றுக்குள் ஒன்று கருவானது, ஒன்றுக்குள் ஒன்றுடன் உருவானது, உலகின் இயக்கத்துக்காக இவை பிரிந்து நின்றாலும் அவற்றுக்குள் பல ஒற்றுமையான இயல்பும் சில பரஸ்பரமும் உண்டு.
அதனாலே ஹரியும் சிவனும் ஒன்றாகின்றது, உலகைக் காக்கும் இடங்களில் அவர்களுக்குள் பல ஒப்புமை வருகின்றது என்பது, இதனாலே கார்த்திகை மாதம் ஐயப்பன் வழிபாடும் விசேஷம். அப்படியே காலபைரவரோடு நரசிம்ம வழிபாடும் விசேஷம்.
நரசிம்ம வழிபாடும் பிரதோஷம் அன்றுதான் செய்யப்படும் அவருக்குரிய நாள் அதுதான். அதுவும் அந்த மாலைதான் என்பதிலே இருவருக்குரிய ஒற்றுமைகள் விளங்கும்.
நரசிம்ம அவதார கதை எல்லோரும் அறிந்தது, அதனைப் புராணம் பலவும் குறிப்பிடுகின்றது, பாகவத புராணம் முதல் விஷ்ணு புராணம் வரை அதன் செய்தி உண்டு, சீவக சிந்தாமணி ‘‘இரணியன் பட்டது எம்மிறை எய்தினான்” என்ற வரியோடு அதனைச் சொல்கின்றது.
கம்பர் தன்னுடைய இரணிய வதைப் படலத்தில் அற்புதமாகக் காட்டுகின்றார்.
“பிளந்தது தூணும் அங்கே பிறந்தது சீயம் பின்னை
வளர்ந்தது திசைகள் எட்டும் பகிரண்டம் முதல் மற்றும்
அளந்தது அப்புறத்துச் செய்கை யார் அறிந்து அறைய கிற்பார்?
கிளர்ந்து கனக முட்டை கிழித்தது கீழும் மேலும்”
என அற்புதமாக ஞாலம் நடுங்க நரசிம்ம அவதாரம் வந்த காட்சியினைப் பாடுகின்றார்.
“ந்ருஸிம்ஹதா பிந்யு உபநிஷம்” எனும் உபநிஷம் இதனைத் தெளிவாகச் சொல்கின்றது. “பூர்வதாபநீயம்” என்றும், “உத்தர தாபநீயம்” என்றும் இரண்டு பாகங்களாக அது நரசிம்ம அவதார பெருமையினை விளக்குகின்றது.
பிரம்மனே நரசிம்மதைத் தொழுது படைக்கும் சக்தியினைப் பெற்றான் என்பதை அது ஆழமாகப் போதிக்கின்றது.
சிவன் பார்வதியிடம் சொல்வதாக ஒரு ஸ்லோகம் உண்டு.
“யந்நாம ஸ்மரமணாத் பீதா பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத் யாஸ்ச ப்ரணச் யந்தி பீஷணம் தம் நமாம்யஹம்”
யாருடைய பெயரை நினைத்தாலே, பூதங்கள், பிசாசுகள், ராக்ஷஸர்கள் நடுங்கி நான்கு திசைகளிலும் ஓடுவார்களோ, எவனுடைய பெயரைச் சொன்னால், எந்த வியாதிகளும் ஒருவனைக் கிட்டே கூட அணுகாதோ, எந்த நாமத்தைச் சொன்னால் ஏற்கனவே வந்த தீராத நோய்களும் அவரை விட்டு ஓடி ஒளியுமோ, அப்படிப்பட்ட நரசிம்ம பிரபுவை நான் வணங்குகின்றேன். அந்த நரசிம்மம் எமனுக்கு எமன், அவன் திருவடிகளில் ‘‘நம:” என்று கூறி, ஆத்ம நிவேதனம் செய்து விட்டால், அவன் காப்பாற்றி விடுவான்” என்பது அதன் பொருள்.
ஆதிசங்கரரும் நரசிம்மத்தை வழிபட்டே பெரும் ஞானம் அடைந்து தரிசனமும் பெற்றிருக்கின்றார், நரசிம்ம வழிபாடு அவ்வளவு முக்கியமானது.
இதனாலேதான் தமிழகத்தில் மூவேந்தர்களும் ருத்ரமூர்த்தியான சிவனுக்கு என்ன இடம் கொடுத்தார்களோ அதற்கு சற்றும் குறையாத இடத்தை நரசிம்மமூர்த்திக்கும் கொடுத்தார்கள், பெரும் ஆலயங்களெல்லாம் இங்கு அமைந்தன.
நரசிம்மருக்கு ஆழமான தத்துவமும் உண்டு, சிவனைப் போல பஞ்சமுகமும் ஐந்து தொழிலும் அவருக்கும் உண்டு, இதனால் அவருக்கு அவற்றை சொல்லுபடி ஐந்து ஆலயங்களும் உருவாயின.
சிவனுக்கு படைத்தல்,காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என ஐந்து தொழில் இருப்பது போல் திருமாலுக்கும் ஐந்து தொழில்கள் உண்டு அவை பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என ஐந்து.
பரம் எனும் நிலை வைகுண்டத்தில் தன்னை அடைந்தவர்களுக்குப் பரமன் தரும் தரிசனம், முக்தி அடைந்தோர் காணும் பாக்கியமான பரம்பொருள் நிலை.
வியூகநிலை என்பது தேவர்களுக்கு அருள்புரிய உலக இயக்கத்துக்காக பாற்கடலில் பகவான் சயனம் கொள்ளும் நிலை.
விபவ நிலை என்பது, நல்ல காரியங்களை நிறைவேற்றுவதற்காக திருமால் எடுத்து வந்த அவதார கோலம்.
அந்தர்யாமித்துவ நிலை என்பது, ஒவ்வொரு உயிருக்குள்ளும் இறைவன் இருப்பதை உணர்த்தும் யோக தத்துவம், தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது அந்தத் தத்துவமே.
அர்ச்சை நிலை என்பது அர்ச்சிக்கும் நிலை அதாவது கோவில்களிலும் பூஜை அறையிலும் சிலை வடிவமாக இருக்கும் நிலை மானுடர்களால் பூஜிக்கப்படும் நிலை.
இப்படி ஐந்து நிலைகளில் பகவான் அருள்பாலிப்பார் என்பதால் அவரை ஐந்து நிலைகளில் வழிபடுவது மரபு, அதனைப் பஞ்ச நரசிம்ம தத்துவமாகச் செய்தார்கள், இதனை அகோபிலம் அருகே யாதமுனி மூலம் பகவான் ஏற்படுத்தினார்.
யாதமுனி என்பவருக்காக பகவான் ஐந்து நரசிம்ம கோலத்தை மேற்சொன்ன ஐந்து தத்துவங்களில் காட்டினார், உக்கிர நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், யோக நரசிம்மர், வீர நரசிம்மர், ஹிரண்ய (பேரண்ட) நரசிம்மர் . லட்சுமி நரசிம்மர் என ஐந்து நரசிம்ம உருவம் காட்டினார் இவை பகவானின் ஐந்து நிலைகளின் தத்துவவடிவம்.
இவை இன்றும் அகோபிலம் அருகே யாதகிரி மலையில் உண்டு, பக்தர்கள் பெரும் கூட்டமாக சென்று இந்த ஐந்து நரசிம்மரையும் வணங்குவார்கள், பின்னாளில் இவை அப்பக்கம் பஞ்ச நரசிம்ம தலங்கள் என்றாயின.
அகோபிலம் செல்லமுடியாதர்களுக்காக பகவான் மயிலாடுதுறை பக்கம் ஐந்து நரசிம்ம தலங்களை இதே தத்துவ முறையில் ஏற்படுத்தினார், அவை பஞ்ச நரசிம்ம தலங்கள் என இங்கும் உண்டு, அதே ஐந்து நரசிம்ம கோலத்தில் உண்டு.
அவை குறையலூர் ஆலயத்தில் உக்கிர நரசிம்ம பெருமாள், மங்கை மடத்தில் வீர நரசிம்ம பெருமாள், திருநகரியில் ஹிரண்ய நரசிம்ம பெருமாள், திருநகரியின் அதே ஆலயத்தில் யோக நரசிம்ம பெருமாள் மற்றும் திருவாலியில் லட்சுமி நரசிம்ம பெருமாள்.
இந்த ஐந்து ஆலயங்களும் பகவான் நாராயணன் எப்படி ஐந்து நிலைகளாக நின்று கர்மம் செய்து உலகை காத்து இயக்குகின்றாரோ அதை ஆழமாகப் போதிக்கும் தத்துவம் கொண்ட ஆலயங்கள், பகவானின் ஐந்து நிலைகளைச் சொல்லி அவற்றினை வழிபடவேண்டிய அவசியத்தைச் சொல்லி பூமியில் கர்மம் முடிக்க எப்படி ஒருவன் சிந்தித்து வழிபட்டு பிறவிக் கடலை கடக்க வேண்டும் எனச் சொல்லி ஓங்கிப் போதிக்கும் ஆலயங்கள்.
இந்தப் பஞ்ச நரசிம்ம தலங்கள் ஒவ்வொன்றாய் இனி காணலாம்.
பஞ்ச நரசிம்ம தலங்கள் 01 திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர்.
இந்தத் தலம் சீர்காழியிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும், திருவெண்காட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் கோவில்.
குறைகளை அகற்றும் ஊர் எனும் பெயர் மருவி பின்னாளில் திருக்குறையலூர் என்று ஆயிற்று. மிகவும் பழமையான இத்தலத்தை ‘ஆதி நரசிம்மர் தலம்’ என்றும், தெற்கே பிரதான நரசிம்மர் என்பதால் ‘தட்சிண நரசிம்மர் தலம்’ என்றுமாயிற்று.
புராணங்களில் இந்த ஊர் ஸ்ரீ பூரண புரி, பூரண நரசிம்ம ஷேத்திரம் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. பூரண வரத்தை அருளும் தலம் என்பதால் பூரண நரசிம்ம ஷேத்திரம் என்றும் இதற்குப் பெயர்.
பூரண மகரிஷி என்பவரின் மகளாக தாயார் அமிர்தவல்லி என அவதரித்த இடம் என்பதால் இது பூரணபுரி என்றாயிற்று என்பதும் புராணச் செய்தி.
இந்த ஆலயத்தின் வரலாறு தட்சன் செய்த யாகத்தில் இருந்து துவங்குகின்றது, சிவபெருமானை அங்கு அழைக்காமல் அவன் அவமானப்படுத்தியதும், அந்த யாகத்துக்கு சிவன் தடுத்தும் சென்ற பார்வதி அங்கு நடந்த அவமானம் தாளாமல் அந்த யாக நெருப்பிலே வீழ்ந்ததும் எல்லோரும் அறிந்தது.
அப்போது சிவன் உருத்திரக்கோலம் கொண்டு யாகசாலையினை அழித்துப் போட்டு, சதி தேவி என அவள் உடலைக் கொண்டு ஆடி ஆத்திரம் தீராமல் உக்கிரம் குறையாமல் நின்றபோது அவரைச சாந்தபடுத்திய தலம் இது.
இந்தத் தலத்தில்தான் நரசிம்மர் அவரின் உக்கிரகோலம் தணித்தார், சிவனின் குறை தணிந்த இடம் என்பதால் திருக் குறை அகன்ற ஊர் என்றானது, இங்கு நரசிம்மர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள்பாலிக்கின்றார். வேறு எங்குமே இந்தக் கோலத்தில் நரசிம்மரைக் காண முடியாது.
இந்த ஊர் மன்னியாற்றின் அருகில் இருப்பதால் ‘மன்னியில் நீர் தேங்கும் குறையலூர், சீர்கலியன் தோன்றிய ஊர்” என இதனை அடியார்கள் பாடினார்கள். ஆம், இது திருமங்கை ஆழ்வார் பிறந்த இடமாகவும் அறியப்படுகின்றது.
திருமங்கை ஆழ்வார் எதிரிகளைப் பந்தாடுவதில் உக்கிரமான கோலம் காட்டியவர், சிறு அரசனாக நின்று பெரும் போர்கள் செய்தவர், பல சாகசங்களை மிகச் துணிச்சலாக செய்து திருவரங்க கோவிலை பெரிதாக்கி மதில் சுவரும் எழுப்பியவர், அவர் இந்த ஆலய நரசிம்மரிடம் இருந்தே எல்லா அருளையும் பெற்றார்.
அவர் 86 திவ்ய தேசங்களைப் பாடியவர். வழிபட்டவர். அவரை நினைந்து இந்த நரசிம்மரை வழிபட்டால் 86 ஆலயங்களையும் தரிசித்த பெரும் பாக்கியமும் அருளும் கிடைக்கும்.
இந்த நரசிம்மரின் வடிவம் அதாவது தேவியர் இருவருடன் அவர் வீற்றிருந்து அருள் பாலிக்கும் வடிவமே வைகுண்டத்தில் பகவான் இருக்கும் அருள்கோலத்தை சொல்வது, அதாவது பரம் எனும் மகா உயர்ந்த நிலை.
பரம் எனும் நிலை வைகுண்டத்தில் தன்னை அடைந்தவர்களுக்கு பரமன் தரும் தரிசனம், முக்தி அடைந்தோர் காணும் பாக்கியமான பரம்பொருள் நிலை என்பதால் அந்தக் கோலத்தில் பகவான் இங்கே காட்சியளிக்கின்றார்.
சிவபெருமான் இங்கே தன் உருத்திரகோலத்தில் இருந்து அமைதியானார். இந்த நரசிம்மர் அவரை ஆற்றுப்படுத்தினார் என்பது ஒருவரியில் கடக்கும் விஷயம் அல்ல, ஆழ்ந்த தத்துவமானது.
ஒவ்வொரு மனமும் ஓராயிரம் ஆசையுடனும் நிறைவேறா ஏக்கத்துடனும் ஏதோ ஒரு இயலாமையுடன் ஏதோ ஒருவகையில் வன்மமும் கொண்டுதான் இயங்குகின்றது, ஒவ்வொரு மனதினுள்ளும் ஓராயிரம் உருத்திர கோலம் உண்டு.
அது ஏதோ ஒரு காரணத்தால் ஒவ்வொரு மனதுக்கும் ஏற்பட்டிருகும் பாதிப்பு, அது கொடுக்கும் கொந்தளிப்பு ஆத்மாவினை நிலை குலையச் செய்யும், பிறப்பின் நோக்கில் இருந்து தடம்புரளச் செய்யும், இன்னும் பெரும் குழப்பத்தை பலவற்றை அது தரும், அந்த ஆத்மா நீங்கா வன்மத்தில் இறைபாதையில் இருந்து விலகி பிறவிச் சூழலுக்குள் சிக்கும்.
சிவன் இங்கு இந்த நரசிம்மரைத் தரிசித்து தன் உருத்திரபோலத்தில் இருந்து சாந்தமடைந்தார் என்பது எல்லாம் கடந்த மனசாந்தியினை அவர் அடைந்தார், அந்த உள்மனம் முழுக்க நிம்மதி அடைந்தது. நிம்மதி அடைந்த மனம் தன் கர்மத்தினை உணர்ந்து அதைச் செய்யத் தயாரானது என்பதைக் குறிப்பது.
தட்சனின் மகளான அவள் தன் கர்மத்தை முடித்துச் செல்லும்போது தானும் அதை முடித்து செல்லுதலே முறை. அங்கே இந்த ஆர்பபாட்டமும் கொந்தளிப்பும் பொருத்தமற்றது, நடப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் பெரும் தாத்பரியம் அங்கே போதிக்கப்பட்டது.
ஒரு ஆத்மா மண்ணில் செய்யவேண்டிய கடமையினை முடித்து விண்ணகம் சென்று பகவானுடன் கலக்க வேண்டும் முக்தி அடைய வேண்டும் என்பதை இந்த இரு தேவியர் தத்துவத்துடன் இந்த ஆலயம் போதிக்கின்றது.
அந்த உக்கிர நரசிம்மர் அவரவர் தன் கர்மத்தை முழுக்கச் சரியாகச் செய்ய வரம் அருள்வார், ஆத்மாவின் கொந்தளிப்பினை ஏக்கத்தை அடக்கி முக்தி நோக்கி நடக்க, கர்மத்தை செய்து செல்லும் வழியினைத் தரும்.
ஆத்மாவின் குறை எல்லாம் அகற்றித் தரும் ஆலயம் குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயம்.
சக்திவாய்ந்த இந்த ஆலயத்தில்தான் திருமங்கை ஆழ்வார் மட்டுமல்ல, குலசேகர ஆழ்வார், இராமானுஜர், மணவாள மாமுனிகள் எனப் பெரும் பெரும் மகான்களெல்லாம் வழிபட்டு பலன் அடைந்தார்கள்.
இந்த ஆலயமே பஞ்ச நரசிம்மர் ஆலயங்களில் முதன்மையானது. பஞ்ச நரசிம்மர் ஆலயங்களெல்லாம் ஒரே நாளில் தரிசிக்கும் அளவு அருகருகே அமைந்திருக்கின்றது. அதனால் முதலில் இதைத்தான் தரிசித்தல் மரபு, அதாவது பரம்பொருள் வைகுண்டத்தில் அருள்பாலிக்கும் கோலத்தைக் காட்டி வரம் அருளும் தலம் இது.
இங்கு அமாவாசையில் நரசிம்மருக்குத் திருமஞ்சனம் செய்து அன்னதானமும் செய்தால் பித்ரு தோஷம் விலகும். வம்ச விருத்தியும் உண்டாகும்.
ஐந்து தொழில் செய்யும் இறைவன் இங்குப் பஞ்ச பூத தத்துவமாகவும் உண்டு. அதன்படி ஞானச்சுடரான ஜோதி வடிவில் இங்குப் பரம்பொருள் உண்டு என்பதால் இது நெருப்பின் தலமுமாகின்றது.
அதனால் இங்கு விளக்கேற்றி வழிபடுதல் பெரும் பலனைத் தரும். அவரவர் வயதுக்கேற்ற எண்ணிக்கையில் விளக்குகளை ஏற்றி ஏழு அல்லது ஒன்பது வாரங்கள் வழிபட்டால் நிச்சயம் நினைத்த வரம் கிடைக்கும்.
சுவாதி நட்சத்திர வழிபாடு இங்கு விசேஷம் என்றாலும், நரசிம்ம ஜெயந்தி இங்குப் பெரிய விஷேசம். அன்று இங்கு நடைபெறும் ஸ்ரீமகா சுதர்சன யாகத்தில் கலந்து கொண்டு தரிசித்தால் எல்லா நலனும் கிடைக்கும்.
இந்த ஆலயம் எதிரிகளின் தொல்லையினை ஒழித்துத தரும், எல்லா எதிர்ப்பையும் கட்டுப்படுத்தி வாழவைக்கும். அப்படியே மனம்சார்ந்த பிரச்சினைகளெல்லாம் இங்குத் தீரும்.
சிவனின் மனக்கொதிப்பை அடக்கி அருள் செய்த இந்த ஆலயம், மனக்கொதிப்பை எல்லாம் அடக்கி தருவதால் இங்கு எல்லா மனம் சம்பந்தமான சிக்கலும் தீரும்.
மிக மிக முக்கியமான விஷயம், இது ஒரு பெண்ணை இழந்ததால் சிவன் சந்தித்த சோதனைக்கு மனநிம்மதி கிடைத்த இடம், இரு பெண்களோடு பகவான் அவரைச் சாந்தபடுத்திய இடம்.
திருமங்கை ஆழ்வார் வாழ்வும் ஒரு பெண்ணாலேதான் மாறிற்று.
இதனால் இங்கு வணங்கினால் எல்லாத தடைகளும் நீங்கி பெண்கள் நிம்மதியாக வாழ்வார்கள். பெண்கள் நிம்மதியாக வாழ வாழ அந்த வீடே நிம்மதியாக வாழும், பெரும் மகிழ்வும் ஐஸ்வர்யமும் அந்த வீட்டில் சூழும், பகவான் அருளில் எல்லாத் தொல்லையும் நீங்கி நலமெல்லாம் நிறையும்.
முழு மனதோடு தேடுபவர்களுக்கு முக்தி நோக்கிய எல்லா வழியும் தரும் ஆலயம் இது, கார்த்திகை மாதத்தில் வழிபட வேண்டிய பஞ்ச நரசிம்மர் தலத்தில் இது முக்கியமானது, இரண்டாம் ஆலயத்தை அடுத்துக் காணலாம்.
பஞ்ச நரசிம்மத் தலங்கள் 02 : மங்கைமடம் வீர நரசிம்மர்.
கார்த்திகை மாதம் சிவபெருமனைப் போல நரசிம்மருக்கும் முக்கியமானது, அவ்வகையில் ஒரே நாளில் தரிசித்துவிடும் ஐந்து நரசிம்ம தலங்களில் இரண்டாம் தலமான மங்கைமடம் வீரநரசிம்மர் ஆலயம் முக்கியமானது .
இது சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் முதல் தலமான திருக்குறையலூருக்கு அடுத்து அமைந்துள்ளது, இதன் வரலாறும் சிவபெருமானோடு சம்பந்தப்பட்டது.
இரண்யகசிபு என்பவன் சிவனிடமிருந்தும் யமனிடமிருந்தும் சில வரங்களை வாங்கியிருந்தான், அந்தக் கொடியவனுக்கு வரம் அருளிய பாவத்தில் இவர்களுக்கும் பங்கு இருந்தது, அந்தப் பாவம் தீர அவர்கள் நரசிம்மரை வழிபட்ட இடமே இந்த மங்கை மடம், அப்படி எழுந்தவர் இந்த வீர நரசிம்மர்.
இந்த வீர நரசிம்ம கோலம் என்பது பகவான் பாற்கடலில் பள்ளி கொள்ளும் இரண்டாம் நிலை தத்துவம், முதல் ஆலயமான திருக்குறையலூர் பர தத்துவம் எனும் வைகுண்டத்தைச் சொல்வது, இது பாற்கடலைச் சொல்லும் தத்துவம்.
அதாவது. பகவான் மன்னிப்பு அருள்பவராக இருக்கின்றார், உலக இயக்கத்தை காக்க, தர்மத்தை காக்க பாற்கடலில் எல்லாம் அறிந்த அறிதுயிலில் இருக்கின்றார் என்பதைச் சொல்லும் தாத்பரியம்.
சிவனும் யமனும் மயனும் இரண்யகசிபுவுக்குத் துணை செய்ததை வரம் கொடுத்ததை உதவியதை பகவான் அறிந்தே இருந்தார். ஆனாலும், அதை வெளிக்காட்டாமல் அவர்கள் செய்த தவறை உணரும்போது அதனை மன்னிதார், பகவான் எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றார், அவரிடம் எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு என்பதைச் சொல்லும் தலம் இது.
அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களினால் வந்த கர்மவினைகள் இங்குக் கழியும், எவ்வித பழியோ குற்றமோ இருந்தால் அது உடனே நீங்குமிடம் இது.
இது வாயுத்தலமுமாகும். பொதுவாக வாயுத்தங்களில் அறியாமையால் அல்லது அன்பால் செய்யப்படும் எல்லாக் குற்றங்களும் மன்னிக்கப்படும் தன்மை உண்டு. கண்ணப்பநாயனாரின் திருக்காளஹத்தி அதற்கான தலம், இந்தக் கோவிலுக்கும் அதே சக்தி உண்டு.
இங்கு நரசிம்மராகப் பகவான் வீரக்கோலம் காட்டினாலும் அதன் தத்துவம் பாற்கடல் தத்துவம். அதாவது, பாம்பணையில் பரமன் படுத்திருக்கும் தத்துவம் என்பதால் நாகதோஷங்களை விலக்கும் இடமும் இதுதான்.
இந்த இடம் மங்கைமடம் எனப் பெயர் வரக் காரணமானவர் திருமங்கை ஆழ்வார், அவரின் மனமாற்றம் குமுதவல்லி நாச்சியாரிடம் இருந்து தொடங்கும், நாச்சியார்தான் அவரிடம் தினமும் 1008 அந்தணர்க்கு ஒருவருடம் உணவிடச் சொல்லிக் கேட்பார்.
அப்படி இங்கு மடம் அமைத்து திருமங்கை ஆழ்வார் தினமும் 1008 பேர்க்கு உணவளித்தார், அதற்காக பெரிய தோட்டத்தை அமைத்திருந்தார், அந்த இடம் இன்றும் “பெருந்தோட்டம்” என்ற அடையாளமாக உண்டு.
இந்தத் தலத்தின் ஸ்ரீசெங்கமல புஷ்கரணி விசேஷமானது.
பகவான் இங்கு வீர நரசிம்மராக அருள்பாலிக்கின்றார் என்பது வீரம் எனும் ஒரு வார்த்தையில் கடந்து செல்லுதல் அல்ல, வீரம் என்பது வெறும் பராக்கிரமம் அல்ல, வெறும் உடல்பலம் அல்ல, மனதால் ஒருவிஷயத்தைச் செய்துவிடலாம் என மட்டும் நம்புவதும் வீரம் அல்ல.
வீரம் என்பது பராக்கிரமத்தால் மற்றவர்களை வெல்லுதல் மட்டும் அல்ல, தன்னை வெல்லுதல் என அறுதியிட்டு சொன்ன மதம் இந்துமதம். எவன் தன்னைக் கட்டுப்படுத்தித் தர்மத்தையும் இறைவனையும் தேடுவானோ அவனையே உண்மையான வீரன் எனவும் அந்த ஞானமதம் குறிப்பிட்டுக் காட்டியது.
ஒவ்வொரு மனதிலும் அகங்காரம் உண்டு, பேராசை உண்டு, இன்னும் ஏகப்பட்ட மயக்கங்கள் உண்டு. அந்த மயக்க குரோதங்களையெல்லாம் யார் வெற்றிக் கொள்வானோ அவனே முக்தி அடைவான் என்றது இந்துக்கள் போதனை.
வீரத்தின் உச்சபட்சம் தன்னை வெல்வது, தன் ஆசைகளையும் மாய மயக்கங்களையும் வெல்வது, தான் எனும் அகந்தையினை வெல்வது, தன் மனதில் விடாபிடியாக இருந்து தன்னை ஆட்டுவிக்கும் ஆசைகளை வெல்வது,
அது அல்லாது ஒருவன் ஞானம் பெற முடியாது.
எல்லாம் தன்னால் நடப்பது என்றும், “நான்” எனும் அகந்தையும் ஆங்காரமும் கொண்டவனுக்கு ஒரு காலமும் முக்தியுமில்லை நிம்மதியுமில்லை. எவன் இந்த உடல் வெறும் கூடு இதில் ஆன்மா அமர்ந்து இறை உத்தரவால் கர்மாவினை மட்டும் செய்கின்றது எனக் கருதுவானோ அவனிடம் அகங்காரம் இராது, ஞானம் பெருகும்.
இந்தச் சிந்தை உள்ளவன் வெற்றியில் மகிழ்வதில்லை, தோல்வியில் கதறுவதுமில்லை, பெரும் இழப்புகளில் கதறுவதுமில்லை, உலகமே காலடியில் கிடந்தாலும் ஏறெடுத்துப் பார்ப்பதுமில்லை.
அதில் தர்ம ஞானத்தை கலந்தவன் காலத்துக்கும் நிலைக்கின்றான்.
தன்னை வெல்லுதல், தன் மனதை வெல்லுதல், இரஜோ குணத்தை வெல்லுதல் என அந்தப் பலத்தை தரும் ஆலயம் இது. தன்னைத் தன் குறையினை ஒப்புக்கொள்வது பெரும் வீரம், அதற்குத் தனி தைரியமும் மனபலமும் வேண்டும், அதைத் தரும் ஆலயம் இது.
இந்த ஆலயம் எடுத்த காரியத்தை முடிக்கும் வைராக்கியம் தரும் பெரும் நல்ல முடிவினை, அருளைப் பெற்றுத் தரும்.
திருமங்கை ஆழ்வார் இங்குப் பெரும்பணி செய்துதான். அன்னதானம் செய்துதான். அடுத்தகட்டத்துக்கு உயர்ந்தார். அவரைப்போல் மனதிடம் மிகுந்த ஒருவரை மிகுந்த மனநலமும் தவபலமும் கொண்ட இன்னொருவர் இல்லை, அந்த அளவு அவருக்கும் மனதைரியம் பலம் என எல்லாமும் கொடுத்த ஆலயம் இது.
கார்த்திகை மாதம் என்பது கர்மா செய்ய பலம் வேண்டும் மாதம், கர்மத்தைச் செய்ய அதை மனவலிமையுடன் செய்ய வரம்வேண்டும் மாதம், கார்த்திகை மாத நோன்புகளெல்லாம் அப்படியானவை, வழிபாடும் அப்படியானது.
அந்தக் கார்த்திகையில் கர்மத்தைச் செய்ய வரம்தரும் ஆலயங்களில் இது முக்கியாமானது, திருமங்கை ஆழ்வாரின் கர்மபலன் அப்படித்தான் மிகத் தீவிரமானது.
இந்த ஆலயத்தில்வழிபட்டால் மணவாழ்வு இனிதாகும், நல்வாழ்வு வாய்க்கும், திருமண வாழ்வும் ஒரு கர்மமே, அந்தக் கர்மத்தை சரியாகச் செய்ய இவ்வாலயம் அருள்தரும்.
மணவாழ்வு என்றல்ல எல்லாக கர்மமும் செய்ய மனதிடமும் வைராக்கியமும் தன்னை வென்று தன் ஆசைகளை வென்று கர்மம் செய்யும் மனபலமும் அவசியம் அதனை இந்த ஆலயம் தரும்.
இங்குச் சென்று அந்தச் செங்கமல குளத்தில் குளித்து தயிர்ச்சாதம் அன்னதானம் நைவேத்யம் செய்து வணங்குவது சிறப்பு, அங்குத் திருமங்கை ஆழ்வார் போல் அடியார்களுக்கு அன்னதானமிட்டால் எல்லோருக்கும் அன்னமிட்டால் இன்னும் இன்னும் சிறப்பு.
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பது சாதாரணம் அல்ல, அன்னதானம் ஒன்றில்தான் மானிடன் நிறைவு கொள்வான், வேறு எந்த தானம் கொடுத்தாலும் அவனுக்கு நிறைவு வராது. இந்த உடல் கர்மம் செய்ய வந்தது, ஒவ்வொருவரும் அன்னத்தோடு சக்திபெற்று தொடர்ந்து கர்மம் செய்ய வழிவகை செய்வது பெரும் புண்ணியம், அந்தப் புண்ணியத்தை இங்குச செய்தால் இறையருள் நிரம்ப நிரம்ப வந்து சேரும். நரசிம்மரின் திருவருளில் எல்லாப் பாவகர்மாவும் தீர்ந்து புண்ணிய கர்மா அதிகரிக்கும். எல்லாத் தோஷமும் நீங்கி ஷேமம் ஒன்றே பெருகி நிற்கும்.
பஞ்ச நரசிம்ம தலங்கள் 03 & 04 : திருநகரி ஹிரண்ய நரசிம்மர் மற்றும் யோக நரசிம்மர்
பஞ்ச நரசிம்ம தலத்தில் அடுத்த ஆலயம் திருநகரியில் அமைந்திருக்கும் ஆலயம். இது மங்கை மடத்தில் இருந்து இரண்டு கல் தொலைவில் அமைந்துள்ளது. இங்கே மூன்றாம் நான்காம் நரசிம்மர்கள் ஒரே ஆலயத்தில் காட்சியளிகின்றார்கள்.
இங்குப் பகவான் ஸ்ரீஹிரண்ய நரசிம்மர் என்றும் யோக நரசிம்மர் என்றும் இரு சன்னதிகளில் அருள் புரிகின்றார். திருநகரி ஆலயம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
திருமங்கை ஆழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் வந்து பாடி மங்களசாசனம் செய்த ஆலயம் இது. திருமங்கை ஆழ்வாருக்குப் பகவான் தரிசனம் கொடுத்து அவரை ஆட்கொண்ட இடமும் இதுதான்.
இங்கே ஹிரண்யகசிபினைத் தூக்கி ஆகாயத்தில் வதம் செய்யும் வடிவத்துடன் ஹிரண்யநரசிம்மராக பகவான் முதலில் காட்சி தருகின்றார், இது ஹிரண்யனை அழிக்க வந்த நரசிம்ம கோலம் என்றாலும் கொஞ்சம் ஆழமாக நோக்கத்தக்கது.
பகவானின் ஐந்து குணங்களில் மூன்றாம் நிலை “அந்தர்யாமித்துவ நிலை” என்பது, ஒவ்வொரு உயிருக்குள்ளும் இறைவன் இருப்பதை உணர்த்தும் யோக தத்துவம், தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது அந்தத் தத்துவமே.
அப்படிப் பிரஹலாதன் அதைச் சொல்ல அவன் வாக்கினை மெய்பிக்கும் பொருட்டு தூணில் இருந்து வெளிவந்த நரசிம்மர் ஹிரண்யனை வதம் செய்தார், அவர் “அந்தர்யாமித்துவ”மாக எங்கும் எல்லாப் பொருளிலும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார் என்பதை ஆழச் சொல்லும் ஆலயம் இது.
அதனாலே இது ஆகாய தத்துவமாகவும் அறியப்படுகின்றது. ஆகாய வெளியில் இருந்துதான் எல்லாமும் உண்டாயின. பகவான் ஆகாயமாகவும் அதன் கீழ் உள்ள எல்லாமுமாகவும் வியாபித்திருக்கின்றான், இங்குக் காணும் எல்லாமும் பகவானே அவனுக்குத் தெரியாமல் அறியாமல் ஒரு அணுவும் அசையாது என்பதை அழகுற சொல்லும் தாத்பரியம் இது.
எப்படிச் சைவர்களுக்கு சிதம்பரம் ஆலயம் ஆகாய தத்துவத்தை அம்பலம் எனச் சொல்லுமோ அப்படி “அந்தர்யாமித்துவ” கோலத்தை ஆகாயத் தத்துவத்தை வைஷ்ணவ பாரம்பரியத்தில் சொல்லும் ஆலயம் இது.
இந்த நரசிம்மரைத் தரிசித்தால் எதிரிகள் தொல்லை மறையும், அஞ்ஞானம் மறையும் அறியாமை மறையும் என்பதால் இந்த நரசிம்மரை தரிசிப்போர்க்கு எவ்வித எதிரிகளும் உள்ளேயும் வெளியேயும் இருக்கமாட்டார்கள்.
ஒரு மனிதனுக்கு எதிரி வெளியில் மட்டுமல்ல குழம்பிய மனம், தேவையற்ற சிந்தனைகள் நிரம்பிய மனம், ஆயிரம் எண்ணங்களால் அலைபாயும் மனம் என எதிரிகள் உள்ளேயும் உண்டு, அதைத் தாண்டித்தான் வெளியே உண்டு.
பகவான் இங்கு ஆகாயத் தத்துவமாக இருப்பதால் அவர் எல்லாம் அறிந்த நிலையில் அவருக்குத் தெரியாதது எதுவுமில்லை எனும் நிலையில் உங்கள் எதிரிகள் யாராக எதுவாக இருந்தாலும் ஒழித்து ஒடுக்கித் தருவார், நல்வழியில் காத்தும் தருவார்.
அடுத்த சந்நதி யோக நரசிம்மர். யோகம் என்பது புலன்களை அடக்கி மனதால் பகவானைத் தரிசித்து அவரோடு ஐக்கியமாகுதல் என்பதால் தன்னுள் இறைவனைக் காணுதல் என்பதால் இந்த யோக நரசிம்மர் ஞானம் வழங்குவார். தெளிந்த நல்லறிவினை வழங்குவார்.
பூமியில் வாழும் மனிதன் தன்னில் இறைவனைக் காணும் அருளை பகவான் தரும் இடம் என்பதால் இது பூமி தத்துவ தலமுமாயிற்று. பகவானின் ஐந்து தொழில்களில் இது விபவ நிலை அதாவது நல்ல அருளைத் தர பகவான் வரும் அருள்கோலமுமாயிற்று.
பகவான் நல்லகாரியங்களை நிறைவேற்ற பூமிக்கு வந்தபோதெல்லாம் பெரும் போதனைகளை அருளினார். இராமனும் கண்ணனும் அதில் முக்கியமானவர்கள். பெரும் ஞானியர்கள், அப்படி யோக நரசிம்மர் பெரும் ஞானத்தையும் அதனால் நல்வழிபோதிக்கும் அருளையும் இங்குத் தருவார்.
இந்தத் தலத்தின் மூலவர் ஸ்ரீகல்யாண ரங்கநாதர். தாயார் ஸ்ரீஅமிர்தவல்லி தாயார் என்றாலும் இந்த இரு நரசிம்மர் சந்நதிகளும் இங்கு முக்கியாமானது.
இந்த ஸ்ரீகல்யாண அரங்கநாதரருக்குச் சனிக்கிழமை மாலை சாற்றி நெய்யில் தீபமிட்டு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும், கல்வி கேள்விகளில் ஞானம் கிடைக்கும்.
ஸ்ரீயோக நரசிம்மருக்கு செவ்வரளிப் பூமாலை சார்த்தி, நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் தீபமேற்றி வழிபட்டால், விரைவில் புது வீடு கட்டும் யோகம் உண்டாகும். வியாபாரத் தடைகள் நீங்கும்; எடுத்த காரியங்கள் யாவும் எளிதில் கைகூடும்.
ஹிரண்ய நரசிம்மருக்கு நீலநிறப்பூக்கள் சார்த்தி நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால், குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். நிம்மதியும் சந்தோஷமும் சூழும்.
பிரதோஷம் மற்றும் சுவாதி நட்சத்திரம் ஆகிய நாட்களில் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீஹிரண்ய நரசிம்மர் மற்றும் ஸ்ரீகல்யாண அரங்கநாத பெருமாளை வணங்கினால், வாழ்வில் எல்லா வளமும் வரும்.
இங்கே ஆழக் கவனிக்கவேண்டிய விஷயம் ஹிரண்ய நரசிம்மருக்கு நீல நிறபூக்கள் என ஆகாய நிறமும், யோக நரசிம்மருக்கு செம்மண் எனும் நிலத்தை குறிக்கும் அரளிப்பூ வழிபாடு.
அதாவது, வானுக்கும் மண்ணுக்குமான தொடர்பை சொல்லும் தாத்பரிய ஞான போதனையின் உச்சம் இது. அந்தரத்தில் ஹிரண்யனை பகவான் வதம் செய்தார் என்பது அவன் எந்த ஆகாயத்தில் இருந்து வந்தானோ எந்த மூலத்தில் இருந்து வந்தானோ அங்கே எடுத்துக்கொள்ளபட்டான் எனும் தத்துவம்.
யோக நரசிம்மர் என்பது பூமி தத்துவம், அதாவது பூமியில் பிறந்த மானுடன் மேல்நோக்கி செல்லவேண்டும், அகங்காரம் நீங்கி, ஆணவம் நீங்கி, யோக நிலையில் உயர்ந்து இறைநிலை அடையவேண்டும் என்பதைச் சொல்வது.
ஹிரண்யனை அந்தரத்தில் பகவான் அழித்தது ஆணவம் நீங்கிய ஆத்மா, அகங்காரம் நீங்கிய ஆத்மா மேலே உயர்ந்து இறைவனை அடையும் என்பது.
ஆக, பூமியில் மானுடராய் இருந்து யோக பக்தியால் இறைபக்தியால் இறைவனை அடையலாம், ஆணவம் நீங்கினால் அடையலாம். அதற்குப் பகவான் எப்போதும் அருள் செய்வார், அப்படித்தான் திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வாரெல்லாம் அப்படித்தான் இறை நிலை அடைந்தார்கள்.
இன்னும் இந்த ஆலய தாத்பரியத்தை விளக்க வேண்டுமென்றால் விஞ்ஞான வரிகளில் விளக்க வேண்டுமென்றால் இந்துமதத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் உள்ள தொடர்பை இந்த ஆலயம் கொண்டு புரியவேண்டுமென்றால் ஆழ்வார் பாடலைக் கொண்டே புரியலாம்.
“ஊழி முதல்வன் ஒருவனே
என்னும் ஒருவன் உலகெலாம்
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என்னம்மான்
அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிடேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே”
விஞ்ஞானம் இந்தப் பிரபஞ்சம் தோன்றிய இரகசியத்தைச் சொல்வது இப்பாடலிலும் இருக்கின்றது.
அதாவது, இந்த உலகம் வெளியில் அதாவது எல்லையும், முடிவும் தொடக்கமற்ற இந்த வெளி எனும் ஆகாயத்தில் இருந்து காற்று தோன்றும்.
காற்றில் இருந்து அக்னி உருவாகும், அக்னியும் காற்றும் வெளியும் சேர்ந்து நீர் உருவாகும், நீரில் இருந்து நிலம் உருவாகும், நிலத்தில் உயிர்களெல்லாம் உருவாகும்.
பின் அழியும்போது நிலம் நீரால் அழியும், நீரானது அக்னியின் வெப்பத்தால் இல்லாது போகும் , அக்னி காற்றில் கரையும், காற்று ஆகாயத்தில் இல்லாமல் போகும்.
இதுதான் இந்த உலகம் தோன்றி மறையும் சுழற்சி, விஞ்ஞானமும் இதைத்தான் சொல்கின்றது.
இதை என்றோ சொன்ன இந்துமதம் இந்த ஐந்து பூதங்களை சைவமரபில் சிவன் என்றது, அந்த ஐந்து தொழில்கள் அதாவது படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைதல் என்பதைச் சொல்லிற்று.
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”
எனத் திருவாசகம் சொல்லும் பாடலின் தத்துவம் இதுதான்.
“ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவாறிப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே”
என அபிராமி பட்டர் அதனைப் பாடினார்.
இந்தத் தத்துவங்களைத்தான் நுணுக்கமாக இவ்வாலயமும் சொல்கின்றது. ஆகாயத்தில் இருந்தே நீர் நிலம் காற்று பூமி என எல்லாம் உண்டானது. அந்தப் பூமி மானுடர் கர்மம் கழிக்கும் இடமாக உள்ளது, மானுடர் அந்தப் பூமியில் வாழும்போது இறைவனை நோக்கி சென்று அகங்கார அந்தகாரங்களை நீக்கி மனதால் செம்மைபட்டு இறைநிலை நோக்கிச் செல்வதே அவர்கள் கர்மம், அந்தக் கர்மம் செய்யும் வலிமையினை, பலத்தை தரும், கார்த்திகையில் அந்தப் பலனை இங்கு வழிபட்டு பெற்றுக் கொள்வோர் பாக்கியவான்கள்.
பஞ்ச நரசிம்மர் தலம் 05 : திருவாலி.
“வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்
புகுந்ததன்பின் வணங்கும் என்
சிந்தனைக்கு இனியாய்-திருவே என் ஆர் உயிரே
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளந்
தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந் தழல் புரையும் திருவாலி அம்மானே “
எனத் திருமங்கை ஆழ்வாரால் பாடப்பட்ட ஆலயம் இது.
பஞ்ச நர்சிம்மர் தலங்களில் ஐந்தாம் தலம் திருவாலி, திரு ஆலி என்பது மருவி திருவாலி என்றாயிற்று, திருநகரிக்கு அடுத்து அமைந்திருக்கும் ஆலயம் இது, இரண்டும் இரட்டை தலங்கள்.
இது திவ்யதேசங்களில் மிக முக்கியமானது.
ஆலி என்றால் ஆலிங்கணம் செய்தல் எனப் பொருள், பகவானை தேவி தழுவிக் கொண்ட இடம் என்பதால் திரு ஆலி என்றாயிற்று, இதன் வரலாறு பிரம்மனின் ஐந்தாம் மகன் கர்த்தம பிரஜாபதியிடம் இருந்து துவங்குகின்றது. கர்த்தபிராஜபதி தனக்கு முக்தி வேண்டி பகவானையும் தேவியையும் நோக்கித் தவமிருந்தான், அவனின் கோரிக்கைக்குக் காலம் தாழ்த்தி வந்தார் பகவான்.
அதனால் அவர்மேல் கோபம் கொண்ட அன்னை தானும் அவனோடு சேர்ந்து விரதம் இருப்பதாகச் சொல்லி இங்கு வந்து தாமரையில் அமர்ந்து கொண்டாள், அவளை தேடிவந்த பகவானின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவரை ஆலிங்கணம் செய்து கொண்டாள், இருவரும் சேர்ந்து கர்த்தம பிரஜாபதிக்கு முக்தி பெறும் வழியினைச் சொல்லி கலிகாலம் வரை அவன் காத்திருக்க வேண்டும் எனச் சொல்லி வாழ்த்தினார்கள்.
அதிலிருந்து இது திருவாலி என்றாயிற்று. கர்த்தம பிரஜாபதிக்குப் பகவான் உபதேசித்த இடம் இது. பக்தனுக்காக அவர் நரசிம்ம கோலத்தில் இறங்கி வந்ததால் லட்சுமி நரசிம்ம கோலமாக இங்குக் காட்சியளிக்கின்றார்.
இந்த ஆலயம் பல வகையில் சிறப்பு மிக்கது, பகவானின் ஐந்தாம் நிலையான அர்ச்ச நிலை தத்துவத்தை விளக்கும் திருத்தலம் இது, அதனால் பல நுணுக்கமான தத்துவ போதனைகளையும் சொல்கின்றது.
இந்த உலகைப் படைத்து காக்கும் மகா சக்தி, உருவமற்றவர் அல்லது அவர் உருவினை அறியும் சக்தி மனிதனுக்கு இல்லை, மனிதனின் அறிவும் உணர்திறமும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது அவனின் ஆயுளும் திறனும் அற்பமானது, மாபெரும் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியான பூமியில் அவன் ஒரு தூசும் துரும்புமாகவும் இருக்கின்றான்.
அவன் கர்மம் கழிக்க ஒரு உடலும் அதனுள் ஒரு ஆத்மாவும் பகவானால் இயக்கப்படுகின்றன. அந்த மகா சக்தி தன் பக்தன் என்ன உருவில் தன்னைக் கண்டால் புரிந்துகொள்வானோ அந்த உருவில் காட்சியளிக்கின்றார்.
இதைத்தான் கீதையில் கிருஷ்ணபகவான் சொல்கின்றார், “அர்ஜூனா, ஒருவன் எந்த வடிவில் என்னை வழிபடுவானோ அந்த உருவிலே நான் அவனை ஆட்கொள்வேன்”
இதுதான் பகவானின் ஐந்தாம் நிலையான அர்ச்சை நிலை, கோவிலில் பகவான் எழுந்தருளியிருக்கும் கோலமும், அர்ச்சனை எனும் பூஜை நடக்கும் தத்துவமும் இதுதான்.
எந்த உருவில் நாம் பகவானை வேண்டுவோமோ அந்த உருவில் அவர் நம்மை ஆட்கொள்கின்றார், அவரோடு தேவியும் வந்து நமக்கு அருள் புரிவார், அப்படிப் பெரும் அருள்மழை பொழியும் ஆலயம் இது.
திருமங்கை ஆழ்வார் வாழ்வில் பிரிக்கமுடியா ஆலயம் இது, அவ்வகையில் இது பத்ரிநாத் தலத்துக்கு நிகராகப் போற்றப்படும் ஆலயம்.
பத்ரிநாத் எனும் ஆலயன் வடக்கே ஹிமாலயத்தில் எல்லோரும் அறிந்தது, பகவான் கிருஷ்ணரே தவம் செய்த இடம் இன்னும் பலருக்கு முக்திக்கு வழிகாட்டிய இடம், அங்கு அன்னை பத்ரி எனும் இலந்தை மரமாக வந்து பகவானுடன் நின்றாள்.
அந்தப் பத்ரிநாத் எனும் தலத்தில்தான் பகவான் தனக்குத் தானே குருவாக இருந்து தானே சீடனாகவும் இருந்து திருமந்திரத்தை உபதேசித்தார், அப்படியே இங்குத் திருமங்கை ஆழ்வார் எனும் பக்தனுக்கும் அவர் உபதேசம் செய்தார்.
உத்தவர்க்கு பத்ரிநாத்தில் உத்தவ கீதை உரைத்த எம்பெருமான் இங்கு அதேபோன்றதொரு உபதேசத்தை திருமங்கை ஆழ்வாருக்கும் செய்தார், திருமந்திரப் பொருளைச் சொல்லி இன்னும் பல தெளிவுகளைக கொடுத்து அவரைக் கர்மம் செய்ய பணித்தார்.
இங்கிருந்துதான் திருமங்கை ஆழ்வார் எனும் மாபெரும் பொக்கிஷம் கிடைத்தது, அப்படியான தலம் இது, திருமங்கை ஆழ்வாரைப் பகவான் ஆட்கொண்ட இடம் இன்றும் மண்டபத்தோடு இதன் அருகில் உண்டு.
ஆழ்வார் திருநகரி எப்படி நம்மாவழ்வாருக்கோ அப்படி திருமங்கை ஆழ்வாருக்கு இந்தத் திருநகரி திருவாலி எனும் இந்த இரட்டை தலங்கள் மிக முக்கியமானவை.
திருவாழி, திருநகரி இரட்டைத் தலங்களில், திருவாழியில் அழகிய சிங்கர் கோயில் மற்றும் திருநகரியில் கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.
இங்கு அழகிய சிங்கராக மேற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார் பகவான். தாயாரின் பெயர் பூர்ணவல்லி நாச்சியார், மேற்கு நோக்கிய தலங்கள் கர்மம் செய்யும் வலிமையினை, சக்தியினை தருபவை. அப்படி இந்த ஆலயமும் கர்மம் தீர்க்கும் அருளைக் காவலை திருமங்கை ஆழ்வாருக்குக் கொடுத்தது போல் அள்ளிக் கொடுக்கும்.
இத்தலத்தில் மூலவர் சந்நதியின் மேல் உள்ள விமானம் அஷ்டாட்சர விமானம் எனப்படும், லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு “லட்சுமி நரசிம்ம க்ஷேத்திரம்’ என்ற பெயரும் உண்டு.
திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனிச் சந்நதியில் வேலுடன் காட்சித் தருகிறார். இவருக்கு எதிரே ஒரு கொடிமரமும், பெருமாளுக்கு எதிரே ஒன்றும் என இரண்டு கொடி மரங்கள் உள்ளன.
தனிச் சந்நதியில் திருமங்கையாழ்வார் ஆராதித்த சிந்தனைக்கினியான் என்ற மிகச்சிறிய உற்சவமூர்த்தி அமர்ந்து இருக்கிறார். அவர் இப்பொழுதும் திருமங்கையாழ்வார் உற்சவமூர்த்தியுடன் எழுந்து அருளுவார். திருமங்கை ஆழ்வாரின் திருவடியின் கீழ் ஸ்வாமி ராமானுஜரின் சிறு வடிவிலான உற்சவ மூர்த்தி இருக்கிறது.
ஆழ்வாருக்குத் தனிக் கொடிமரம் உண்டு. கொடியேற்றி உற்சவம் நடக்கும். வேதராஜப் பெருமாளுக்கு தனிக் கொடிமரம் உண்டு. வைஷ்ண மரபில் மூன்று ஆழ்வார்களுக்கு மட்டுமே கொடிமரம் மற்றும் கொடியேற்றி உற்சவம் உண்டு.
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருக்கும் உள்ள ஆழ்வார் சந்நதிகள் கொடிமரம் உள்ளவை அடுத்த இரண்டு.
இந்தத் தலம் பத்ரிநாத்துக்கு ஈடானது, பெரும் ஞான தத்துவமும் முக்தி அடையும் தத்துவமும் தருவது, இன்னும் ஆழமாகச் சொன்னால் கர்மத்தைச் செய்து இறைவனை அடையும் வழியினை இது போதிக்கும்.
பத்ரிநாத் அதில் முக்கியமானது. உத்தவர், பஞ்சபாண்டவர் இன்னும் பலருக்குக் கர்மவழியில் இறைவனை அடையும் வழியினைப் போதித்த தலம் அது, அதுதான் அந்த ஞானதாத்பரியம்தான் இங்கும் உண்டு.
மேற்கு நோக்கி அமைந்த அந்த ஆலயம் பஞ்ச பாண்டவர்க்கு கர்மம் தீர்க்க உதவிய பத்ரிநாத் நாத் தலம் போல, திருமங்கை ஆழ்வார்க்கு கர்மம் தீர்க்க வழிகாட்டியதைப் போல உங்களுக்கும் நல் வாழ்வினைத் தரும்.
பஞ்சபூத தத்துவத்தில் இது நீர் ஆலயம், நீரே எல்லாவற்றையும் சுத்தமாக்கும், நீர்தான் வாழ்வும் வளமும் தரும், அந்த நீர்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை, இந்தத் தலம் வாழ்வுகுரிய எல்லா வரமும் நீர் போல் தந்து செழுமையும் வளமும் பெரும் ஐஸ்வர்யமும் தந்து வாழவைக்கும்.
நல்ல மணமிக்க மலர்களைச் சாற்றி நெய்தீபமிட்டு இங்கு வேண்டும் எல்லா வரங்களும் எல்லா வேண்டுதலும் கிடைக்கும்.
“நாளை என்பதே நரசிம்மர்க்கு இல்லை” என்பார்கள், அழைத்தவுடன் ஓடிவந்து பெரும் வரம் தந்து காப்பவர் நரசிம்மர்.
கார்த்திகை மாதம் கர்மத்தினைச் செய்ய வரம்தரும் மாதம். அதனைச் செய்ய வரம் தருபவர் நரசிம்மர், அவரை இம்மாதம் தொழுதல் சிறப்பு.
அதுவும் இந்தப் பஞ்ச நரசிம்மர் ஆலயங்களில் தொழுவது மஹா விசேஷம், சீர்காழி அருகிருக்கும் இந்த ஐந்து நரசிம்ம தலங்களும் ஒரே நாளில் தரிசிக்கக் கூடியவை, முடிந்தவர்கள் கார்த்திகையில் தொழலாம்.
வாய்ப்பில்லாதவர்கள் எப்போது சீர்காழி பக்கம் செல்ல முடியுமோ அப்போது இந்த ஐந்து தலங்களையும் தரிசிக்க மறவாதீர்கள், இந்தத் தலங்களின் அருளைப் பெற்றவர்தான் திருமங்கை ஆழ்வார், அதனால்தான் ஆழ்வார்களில் அவர் சிம்மமென நின்று எல்லா எதிர்ப்புகளையும் கடந்து திருவரங்க ஆலயத்தையே சீரமைத்து மதில் எழுப்பி மங்கா இடம்பிடித்தார்.
திருமங்கை ஆழ்வார் என்பது மங்கா இடம்பிடித்த பெரும் பிறப்பு, மாபெரும் மகான், அவருக்கான எல்லா வரமும் இந்த ஆலயங்களே கொடுத்தன, இங்கு அவர் பாடிய பசுரங்களைப் பாடி பகவானைத் தொழுதால் ஐந்துவகை நிலையில் உலகைக் காக்கும் அந்தப் பரந்தாமன் உங்களுக்கும் எல்லா அற்புதங்களையும் நிறைவாய்ச் செய்வார், உங்கள் கர்மமும் வாழ்வும் அர்த்தமுள்ளதாகி முக்தி பேறும் உங்களுக்கு கிடைக்கும். இது சத்தியம்.