மாரியம்மன் ஆலயங்கள்.

மாரியம்மன் ஆலயங்கள் : 01
புன்னை நல்லூர் மாரியம்மன்.

அம்பாளே இந்த உலகின் ஆதி சக்தி. நித்திய பரிபூரண சக்தி. இந்தப் பிரபஞ்சம் முழுக்க அவள் ஆட்சியே. அப்படியானவள் சில இடங்களில் தன்னை உரிய காலத்தில் உரிய வடிவில் வெளிபடுத்துவாள். அதற்குப் பூர்வ ஜென்ம பலன் அவசியம். சில கர்மத் தொடர்பு அவசியம். அப்படியானவர்களுக்குத் தன்னை வெளிபடுத்தும் அன்னை அவர்கள் பொருட்டு எல்லா மக்களுக்கும் அருள் வழங்குவாள்.

அப்படி அவள் அருளாட்சி நடக்குமிடம் சோழநாட்டின் புன்னை நல்லூர் மாரியம்மன் தலம். இதன் வரலாறு மிக மிக தொன்மையானது என்றாலும், ஆடி மாதம் அன்னையினை மழைவழங்கும் தெய்வமாக கண்ட மக்கள் அந்த அன்னையினை மாரி என மழையின் பெயராலே அழைத்தார்கள்.

இந்த ஆலயம் முசுகுந்த சக்கரவர்த்தி காலத்துக்கும் முந்தையது. அதாவது, புராணக் காலத்தில் தஞ்சகன் எனும் கொடிய அசுரனை அழிக்க அன்னை வந்து அவனைக் கொன்றுவிட்டு அமர்ந்த தலம் இது. அப்போதே அது பிரசித்தி, பிற்காலச் சோழர்களும் கொண்டாடினார்கள்.

இது தஞ்சாவூரைக் காக்கும் எட்டு சக்திகளில் கிழக்கு எல்லைக் காவலாக அமர்ந்த சக்தி. அதாவது, சோழநாட்டின் மற்ற எல்லைகளுக்கு வரும் ஆபத்து நிலம் வழியாக வரும் அதைக் காணுதல் எளிது. ஆனால் கடல்வழியாக, நீர் வழியாக வரும் ஆபத்துக் கண்டறிய சிரமம், அந்த முக்கியமான எல்லைக்கு இந்த அம்மனை நிறுத்தி வழிபட்டார்கள்.

இது “சோழசம்பு” எனும் நூலில் சொல்லப்படுகின்றது.

அப்படியான இந்த ஆலயம் பின்னாளில் அந்நியப் படையெடுப்பு காலம், இதர காலங்களில் பொலிவிழந்தது அல்லது அம்மன் தன்னை வெளிப்படுத்தவில்லை. காலத்துக்கு அவளும் கட்டுப்பட்டாள். அந்நேரம் மௌனித்திருந்தாளே தவிர அகலவில்லை, அகலவும் மாட்டாள்.

1680 ஆம் ஆண்டு அவள் மறுபடி கம்பீரமாக வெளிபட்டாள். அதற்குக் காரணம் இருந்தது. அப்போது பெரும் இந்து எழுச்சியும் அதற்கான கட்டாய அவசியமும் இருந்தது.

முழுக்கப் பௌத்தமான இந்தியாவினை ஆதிசங்கரர் மீட்டெடுத்தார். அதன் பின்பே இங்கு இந்துமதம் துளிர்த்தது. ஆதி சங்கரர் ஒவ்வொரு இடமாகச் சென்று கோவில்களைப் பல வழிகளில் வலுப்படுத்தினார்.

பின்னாளில், சோழ சாம்ராஜ்யத்தை ஜடாவர்ம சுந்தரபாண்டியன் அடக்கினான். அவனுக்குப் பின்னரான பாண்டியர் வலுவிழந்து ஆப்கானியர் இங்கு வந்தார்கள். அவர்கள் காலம் கொடியதாய் இருந்தது, அவர்களை நாயக்கர்கள் விரட்டினாலும் பின்னாளைய நாயக்கர்கள் பலமிழந்தார்கள்.

அந்த இடைவெளியில் இரு சக்திகள் தமிழகத்தை மிரட்டின பிஜப்பூர் சுல்தானியம் மொகலாயம் என ஒரு புறமும், இன்னொரு பக்கம் கடற்கரையினை விழுங்கிய கிறிஸ்தவ கும்பலும் சோழநாட்டைக் குறிவைத்தன‌.

கோவா போல இங்கும் காலூன்ற அவை முயன்றன‌.

அந்நேரம்தான் ஒரு அவதாரம் எழுந்து காத்தது, அதன் பெயர் வீரசிவாஜி. இங்கே நம்பமுடியா அதிசயம் அல்லது நம்பி தீரவேண்டிய விஷயம் சிவாஜியின் குலத்துக்கு அன்னை பவானியின் அருள் இருந்தது என்பது.

வீரசிவாஜியினை எழுப்பிய அதே பவானியின் அருள் அவனின் தம்பிக்கும் இருந்தது. அதாவது தகப்பன் ஷாஹாஜிதான் பிஜப்பூரின் தளபதியாகத் தஞ்சைக்கு வந்து இங்கு இந்து அரசு சாத்தியமா எனச் சோதித்தான், அவன் வழியில் அவன் இளைய மகன் வெங்கோஜி இங்கு அமர்த்தபட்டான்.

ஷாஹாஜி பிஜப்பூரின் தளபதியாக மறைந்தாலும் வீரசிவாஜி தனி இந்துராஜ்ஜியம் எழுப்பினான். அப்படியே தஞ்சாவூரை வெங்கோஜி ஆட்சி செய்தான்.

இந்தக் காலகட்டத்தில் வெங்கோஜிக்கு பல சிக்கல்கள் இருந்தன. நாயக்கர்கள் தன்னை விரட்டுவார்களா, செஞ்சிவரை வந்த பிஜப்பூர் சுல்தானம் கோல்கொண்டா சுல்தானம் தன்னை விழுங்குமா எனும் அச்சம் இருந்தது.

சிவாஜியின் அரசு செஞ்சிவரை பின்னர் நீண்டது என்றாலும் அவன் குழப்பத்திலே இருந்தான். சிவாஜியோடும் பெரிதாக ஒத்துழைக்கவில்லை, சிவாஜி இறந்தபின் இன்னும் அஞ்சினான்.

அப்படி அவன் குழப்பத்தின் உச்சத்தில் ஒருநாள் சமயபுரம் மாரியம்மனை வணங்கச் சென்றான். அதன் அருகே பெரிய கோட்டையும் உண்டு, இதனால் அங்குச் சென்று தங்கிவர கிளம்பினான் அவன் மனைவி தீபாபாயும் உடன் வந்தாள்.

அப்போது அவன் கனவில் வந்த அன்னை “நான் தஞ்சாவூருக்குக் கிழக்கே புன்னை மரங்கள் நடுவில் புற்றில் இருக்கும்போது என்னை தேடி ஏன் எங்கெங்கோ அலைகின்றாய், வந்து என்னை வணங்கு நான் உன்னைக் காப்பேன்” எனச் சொல்லி மறைந்தாள்.

ஏன் அன்னை வெங்கோஜியிடம் வந்தாள் என்றால் அந்தச் சிவாஜி குடும்பத்துக்கு இருந்த அம்மன் அருள் அப்படியானது, அவளே அந்த வம்சத்தை இங்கு இழுத்து வந்து காவலும் அமர்த்தினாள்.

வெங்கோஜி காலை எழுந்தான். தன் மனைவியுடன் அம்மன் சொன்னபடி தஞ்சைக்கு கிழக்கே புன்னைமர காட்டுக்குள் சென்றான். ஆனால், எது அவள் சொன்ன இடம் என்பது தெரியாமல் “தாயே” என வானை நோக்கி அழைத்தான்.

அந்நேரம் ஒரு பெரிய நாகம் அங்கு வந்தது, வீரர்கள் வாளை உருவினார்கள் மன்னன் தடுத்தான், சலசலப்புடன் பாம்பு பின்னோக்கிச் சென்றது, மன்னன் தொடர்ந்தான். புற்றுக்குள் சென்ற பாம்பு மறைந்து அங்கு ஒரு ஜோதி தென்பட்டு மறைந்தது.

அங்கே விழுந்து வணங்கினான் வெங்கோஜ., அங்கே கோவில் கட்ட உத்தரவிட்டவன், அப்பகுதி நிலமெல்லாம் அம்மனுக்கு என எழுதிக்கொடுத்ததோடு “புன்னை நல்லூர்” எனப் பெயரும் கொடுத்தான்.

இப்படி அன்னை தன்னை வெளிப்படுத்தியபின் அவன் முழுக்க அன்னைக்கான பக்தனானான். அதன் முன்பு இருந்த குழம்பிய வெங்கோஜி அல்ல, அவன் முதலில் எப்போதும் குழப்பத்திலும் நம்பிக்கைற்றவனாகவும் இருந்தான்.

அவன் மனைவி தீபாபாயின் வேண்டுதலே அன்னையின் இந்த அருளாக முடிந்தது, அன்றிலிருந்து அவளும் அன்னையின் பக்தரானாள்

தமிழக வரலாற்றில் வெங்கோஜி தீபாபாய் செய்த திருப்பணிகள் கொஞ்சமல்ல. வரலாற்றில் அது மறைக்கப்பட்டாலும் அவர்கள் இருவரும் செய்த சிவாலயப் பணிகள், அம்மன் கோவில் பணிகள் மிக அதிகம்.

வீரசிவாஜிக்குப் பவானி போல வெங்கோஜிக்குப் புன்னை நல்லூர் மாரியம்மன் குலதெய்வமானாள். அந்த மண் இந்துமதத்தில் அவனால் நிலைத்தது.

நிச்சயம் வெங்கோஜி அங்கு இல்லை என்றால் சோழநாடு கோவா போல் மாறியிருக்கும், அவனால் அந்த ஆபத்தை அன்னை நீக்கினாள்.

வெங்கோஜி காலத்தில் சோழநாட்டில் மடங்கள் பெருகின. சுவாமி இராமதாஸர் போன்றோர் வந்து மடங்களை எழுப்பினர், காவேரிக் கரை எங்கும் பெரும் மடங்களை வெங்கோஜி அமைத்தான்.

(இப்படியான மடங்கள்தான் பின் இராகவேந்திரர், ஸ்ரீதர ஐயாவாள், சதாசிவ பிரம்மேந்திரர் எனப் பெரும் பெரும் மகான்களைக் கொடுத்தது.

இந்தச் சந்ததிதான் பின்னாளில் அபிராமி பட்டர் வரை ஆதரித்தது. (இவன் சந்ததிக்காக அன்னை பட்டரை வைத்து அபிராமி அந்தாதி என அழியா காவியமும் தந்தாள். ஆக… அது கிடைக்க‌ மூலக் காரணம் இந்தப் புன்னைநல்லூர் மாரியம்மன்.)

அப்படியான அன்னை வெங்கோஜிக்குப் பின் வந்த அவன் சந்ததிக்கும் அப்பகுதி மக்களுக்கும் காவலாய் இருந்தாள். வெங்கோஜியின் மகன் பிரதாப மகாராஜா இன்னும் இந்த ஆலயத்தைப் பெரிதாக்கினான்.

கி.பி.1739 முதல் கி.பி.1763 வரை தஞ்சையை ஆட்சி செய்த அவன் இந்த அம்மனுக்காக “அருள்மொழிப்பேட்டை” எனும் கிராமத்தையே மானியமாக அளித்தான். அப்படியே கோயிலுக்கு வட திசையில் அருள்மிகு கோதண்டராமா் திருக்கோயிலையும் நிா்மாணித்து கொடுத்தான்.

இவனுக்கு அடுத்த மன்னர் வந்த காலத்தில் அன்னை தான் யாரென இன்னும் இன்னும் நிரூபித்தாள். கி.பி.1763 முதல் கி.பி.1787 வரை அங்கு ஆட்சி செய்த துளஜா மன்னரைக் கொண்டு அதைச் செய்தாள்.

துளஜா மன்னரின் மகளுக்கு வைசூரி வந்ததில் பார்வைப் பறிபோனது. மன்னன் மிகுந்த சோகத்தில் வீழ்ந்தான். மனன்னுக்கு வரும் தீங்கு நாட்டின் தெய்வத்தின் கோபம் என்பதை நம்பும் அவன் தன் ஜோதிடர்கள் ஞானியருடன் பிரசன்னம் பார்த்தான், அங்கே அம்பாளை மறந்ததே இந்தத் தண்டனை என்றார்கள்.

அதாவது, மகளுக்கு வைசூரி வந்தபோது அவன் அன்னையினைத் தேடவில்லை முன்னோர் வழியில் அவன் நாடவில்லை.

அதை உணர்ந்து மன்னிப்புக் கேட்டவன் உறங்கச் சென்றான். அவன் கனவில் ஒரு சிறுமி வடிவில் வந்த அன்னை சொன்னாள், “என்னைக் குடும்பமாக வந்து பார், உன் கஷ்டம் தீரும்”

மன்னன் மறுநாள் தன் மகளோடுச் சென்றான். கண் தெரியாத அப்பெண்ணைக் கையினை பிடித்தபடி அழுது கொண்டே சென்றான், தன் மகள் கையால் புற்றுக்கு மாலையிடச் சொன்னான்.

ஆம். அப்போது அங்குச் சிலை இல்லை. புற்றைத்தான் காலம் காலமாக வணங்கினார்கள். புற்றை அகற்றிவிட்டு கோவில் கட்டும் தைரியம் யாருக்குமில்லை.

அப்பெண் புற்றுக்கு மாலையிட்டாள். “தாயே” என்றபடி கொஞ்சம் மண்ணை எடுத்துக் கண்களில் வைத்தாள், சிறுமி என்றாலும் நம்பிக்கையாய்ச் செய்தாள், மறுநொடி கண்ணில் இட்ட மண் கண்ணீரில் கரையும்படி கத்தினாள்.

“நான் பார்க்கின்றேன், இந்தத் தாயின் புற்றைப் பார்க்கின்றேன்” என அவள் கதறினாள். அதைக் கண்ட மன்னன் குடும்பம் மொத்தமாக விழுந்து பணிந்தது. அன்னைக்கு நன்றிகடனாகக் கோவிலை பெரிதாக்கித் திருச்சுற்று மாளிகை மதில் எல்லாம் கட்டினான்.

எல்லாம் நடந்தும் மன்னனுக்கு ஒரு குறை இருந்தது. அது அம்மனுக்கு உருவம் இல்லை என்பது, அது பற்றி அவன் யோசிக்கும் போதே அங்கொரு ஆச்சரியம் நடந்தது.

ஆம். மகா ஞானி சதாசிவ பிரம்மேந்திரர் அங்கு வந்தார், அவர் மௌனசாமி யாரிடமும் பேசுவதுமில்லை, பழகுவதுமில்லை. அவருக்கு என்ன தோன்றுமோ செய்வார், அவர் திடீரெனப் பாடுவார், பாடல் எழுதுவார், பின் அமைதியாகிவிடுவார். திடீரெனத் தியானத்தில் அமர்ந்தால் மழைவெள்ளம் மண் மூடினாலும் எழமாட்டார்.

பின், மண்ணை அகற்றும் போது மண்டையில் மண்வெட்டியால் அடிபட்டாலும் அசரமாட்டார். ஆடையும் அணிவதில்லை, தன் போக்கில் செல்லுவார்.

ஒருமுறை ஒரு படைவீரன் அவரை அந்நிய உளவாளி எனக் கையினை வெட்டினான், எடுத்துப் பொருத்திக்கொண்டு அவர் போக்கில் நடந்தார். அப்படிபட்டவர் சதாசிவ பிரம்மேந்திரர்.

அவர் அரண்மனை முன் நின்றார். மன்னனுக்குச் செய்தி சொல்லப்பட்டது. மன்னன் ஓடிவந்தான், சித்தரோ நேரே புன்னை நல்லூர் புற்றுக்குச் சென்றார்.

புற்றுமண்ணாலே ஒரு உருவம் செய்ய ஆரம்பித்தார், சில மணிநேரங்களில் செய்தும் முடித்தவர், சில சக்கரத்தையும் சக்தியேற்றி அங்குப் பதித்தார்.

பின் மன்னனை நோக்கி “இனி வழிபடு, நீ கேட்டது கிடைத்தது” எனச் சொல்லிவிட்டு அவர் போக்கில் சென்றார்‌

அந்தப் புற்றுமண்ணில் செய்யப்பட்ட சிலைதான் இன்றும் உண்டு. அவர் ஸ்தாபித்த சக்கரம் அன்னைக்குப் பெரும் சக்தியினைக் கொடுத்தது. ஆலயம் இன்னும் பன்மடங்கு சக்தி பெற்றது.

பாம்பு என்பது சித்தர்களுடன் தொடர்புடையது, அதுவும் பாம்புப் புற்று என்பது சிலநேரம் பாம்பு வடிவில் சித்தர்கள் தங்கும் இடமுமாகும். பாம்பு பல வழிகளில் யோக சூட்சுமம் மிக்கது, அந்த உடலில் எளிதாக யோகத்தை உணரமுடியும் என்பதால் சித்தர்கள் பாம்பு உடலில் தங்குவார்கள்.

அதனாலே பாம்பு புற்றுகளுக்கும் அம்மனுக்கும் ஒரு தொடர்பு வரும். சித்தர்களின் வேண்டுதலால் வரும். இங்கும் அப்படித்தான் வந்தது, அன்னை அப்படி அமர்ந்தாள்.

அதைப புற்றுமண்ணில் அன்னைக்குச் செய்து மக்களுக்கு சொன்னார் சதாசிவ பிரம்மேந்திரர்.

அடுத்து வந்த மன்னர்கள் இன்னும் இன்னும் அள்ளிக் கொடுத்து செய்தார்கள்‌ கி.பி. 1798 முதல் கி.பி.1832 வரை ஆட்சி செய்த‌ சரபோஜி மகாராஜா மாரியம்மன் கோயில் மகாமண்டபம், நா்த்தன மண்டபம், முன் கோபுரம், பெரிய திருச்சுற்று ஆகியவற்றை நிா்மாணித்து மஹா கும்பாபிஷேகம் செய்தான்.

இவன் காலத்தில்தான் அபிராமிபட்டர் வாழ்ந்தார். இவனிடம் அமாவாசையினைப் பௌர்ணமியாக்கி அன்னை விளையாடி அபிராமி மை அந்தாதியும் பெற்றுக் கொண்டாள்.

இந்த மன்னன் மகன் சிவாஜி மூன்றாம் பிரகாரம் கட்டிக் கொடுத்தான். அவன் மனைவி காமாட்சிபாய் திருக்கோயில் வெளிமண்டபம், போஜன சாலை, வடக்குக் கோபுரம் ஆகியவற்றை கி.பி. 1892 இல் கட்டிக் கொடுத்தாள்.

இப்படி 1680 இல் தொடங்கி 200 வருடம் எல்லா மன்னர்களையும் வேலை வாங்கி தன் ஆலயத்தை அமைத்து கொண்டு இன்று கம்பீரமாக மக்களுக்கு அருளாசி வழங்குகின்றாள் அன்னை.

அன்னை புற்றுமண்ணால் உருவானவள் என்பதால் அன்னைக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக்காப்பு மட்டுமே சாற்றப்படும்.

அங்கிருக்கும் விஷ்ணு துா்க்கைக்கும், அம்பாளின் உற்சவ மூா்த்தத்திற்கு மட்டுமே நித்ய அபிஷேகம் நடைபெறுகின்றது.

அந்த மண்ணாலான திருமேனிக்கு ஐந்துவருடத்துகு ஒருமுறை ஒரு மண்டலம் தைலக்காப்பு நடக்கும். அந்நேரம் அம்பாளைத் திரை ஓவியமாக மட்டும் காணலாம்.

இந்தக் காலகட்டத்தில் அன்னைக்கு சாம்பிராணி, தைலம், புனுகு என எல்லாம் சாற்றுவார்கள். அந்நேரம் வெப்பம் அதிகரிக்கும், அந்நேரம் தயிர், இளநீர் போன்றவை நிவேதனம் செய்யப்படும்.

ஒவ்வொரு வருடமும் உஷ்ணம் அதிகமுள்ள காலங்களில் சித்திரை, வைகாசியில் அன்னை முகத்தில் வியர்வைக் கொட்டும். நிரம்பிக் கொட்டும். பின், ஆடிமாதம் காவேரி வரும்போதுதான் பூமி குளிரும்போதுதான் வியர்வை நிற்கும்.

முத்து முத்தாக வியர்ப்பதால் அன்னை “முத்து மாரியம்மன்” என்றும் அழைக்கப்படுகின்றாள்.

இந்த அன்னைக்கு அம்மை நோயினை தடுக்கும் சிறப்பு உண்டு. நோய் கண்டவர்கள் அம்மனுக்குப் பிரார்த்திப்பார்கள். அவர் குடும்பத்தார் இங்கு உள் தொட்டி மற்றும் வெளித் தொட்டிகளில் நீா் நிரப்ப அந்த வைசூரி தானாய் மறையும்.

கரையாக் கட்டி, வலிகொடுக்கும் பருக்கள், இன்னும் உஷ்ணத்தால் வரும் எல்லா வியாதியும் இங்குத் தீரும். அன்னைக்கு அர்ச்சனை செய்து வெல்லம் வாங்கி அங்கிருக்கும்ம் வெல்ல குளத்தில் கரைத்தால் எல்லாக் கட்டியும் தீரும், இது அங்கு வழமை.

குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு நேர்ந்தால் நிச்சயம் அன்னை அருள்வாள். அப்படி நேர்ந்து கிடைத்த பிள்ளை செல்வத்தைக் கோவில் தொட்டியில் பக்தர்கள் இட்டு வணங்கும் நிகழ்வும் இங்கு அன்றாட வாடிக்கை.

அன்னைக்கு அன்றே மராட்டிய மன்னர்கள் பெரும் முத்துப்பல்லக்கைச் செய்துவைத்தார்கள். உலகிலே மிகப்பெரிய முத்துப்பல்லக்கு இவளுக்குத்தான் உண்டு.

எல்லா மாதமும் அவளுக்கு கொண்டாட்டம் என்றாலும் ஆடியும் நவராத்திரி காலமும் மிக மிக விசேஷம்.

புன்னைநல்லூா் மாரியம்மனின் குங்குமப் பிரசாதத்தை நெற்றியில் அணிந்து அவள் நினைவில் வாழ்வோர்க்கு எந்த தீவினையும் அண்டாது, அவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள், குலமும் கொடியும் வாழும், பெருவாழ்வு வாழும்.

மராட்டிய மன்னர்களின் 88 கோவில்களில் இது குலதெய்வம் போல் கொண்டாடப்பட்ட பெரும் கோவில்.

இங்குக் கிடைக்கா வரமில்லை, நடக்காத அற்புதமில்லை. அன்று வெங்கோஜிக்கு அன்னை கொடுத்த அழைப்புப்படி இன்றும் அவர்கள் வம்சமே இங்கு அறங்காவலர்கள்.

உங்கள் கஷ்டம் எதுவாகவும் இருக்கட்டும், வறுமை முதல் நோய் வரை எந்தச் சிக்கலாகவும் இருக்கட்டும், இங்கு வந்து அன்னையினைப் பணியுங்கள், நிச்சயம் எல்லாக் குறையும் தீரும்.

இங்கு மண்ணால் அன்னை எழுந்திருப்பது பெரும் தாத்பரியமானது. ஒரு மனிதனுக்கு எல்லா வரமும் வளமும் வாழ்வும் மண்ணில் இருந்துதான் கொடுக்கப்படும், இந்த உலகில் எல்லாமும் மண்ணில் இருந்துதான் வரும்.

மண்ணில் இருந்துதான் உணவு வரும்; வீடு வரும்; பொக்கிஷம் வரும்; தங்கம் இரும்பு எல்லாம் வரும், ஏன் இன்றைய கணிப்பொறியின் மூலக் கருவிகளே மணலில் இருந்து வருபவைதான்.

மண்ணே இங்கு ஆதாரம், மண்ணே எல்லாமும். அந்த மண்ணில் நீர் விழும்போதுதான் உயிர்கள் ஜெனிக்கின்றன. மண்ணில் மறைந்திருக்கும் உயிர்சக்தி நீரால் உருப்பெறுகின்றது, மண்ணில் இருக்கும் தாதுக்கள் நெருப்பால் உருப்பெருகின்றன‌.

இப்படி ஒவ்வொருவர் வாழ்விலும் நீராக நின்று எல்லாம் பெருக்கி தருபவள் அன்னை. அதே மானுடர்க்கு நெருப்பு எனும் சிரமம் வந்தால் உஷ்ணம் வந்தால் அது கஷ்டமென வந்தால் அதை அன்னையே தாங்குகின்றாள், அதை வியர்வயினை வெளிப்படுத்தி உலகுக்குச் சொல்கின்றாள் என்பதே இங்குள்ள தாத்பரியம்.

அதனாலே மண்ணாளும் அரசனுக்கு தன்னை வெளிப்படுத்தினாள், பிரம்மேந்திரர் எனும் மகா சித்தரின் மூலம் மண் சிலையாகவே அமர்ந்தும் கொண்டாள்.

நானே இங்கு எல்லாவற்றுக்கும் ஆதாரம்; எல்லாமும் தாங்குபவள் நான்; தன்னை அண்டுவோர்க்கு உணவு, உடை, வீடு வாழ்வு அதிகாரம் ஆபரணம் காவல் என எல்லாம் தருபவள் நான் என அங்கிருந்து தன் மக்களுக்கு அருள்வழங்கி இந்த மண்ணுலகம் என் அதிகாரம் எனச் சொல்லி அரசாட்சி செய்கின்றாள் அன்னை.

இந்த ஆடிமாதத்தில் வணங்கவேண்டிய முக்கியமான ஆலயம் புன்னை நல்லூர் ஆலயம். அங்குச் சென்று வணங்குங்கள். மறக்காமல் சதாசிவ பிரம்மேந்திரர் எனும் மகா சித்தரையும் நினைத்து வணங்குங்கள். அன்னை உங்களுக்கு எல்லா நலமும் தருவாள். இந்துஸ்தானில் மராட்டியர் கொண்டிருந்த பக்தி காலம் கடந்து நிற்பது போல, அன்னை பவானி வழிவந்த குலத்துக்குப் பெரும் வாழ்வு கொடுத்தது போல உங்களையும் அன்னை காலத்துக்கும் நிலைக்கவைப்பாள். காலம் கடந்தும் பேசவைப்பாள். இது சத்தியம்.

மாரியம்மன் ஆலயங்கள் 02 : நார்த்தாமலை மாரியம்மன் .

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் மாரியம்மன் அருள்பாலிக்கும் நார்த்தாமலை ஆலயம் உள்ளது, இது பழமையானது.

இந்தப் பகுதிகள் பல்லவர் சோழர்களிடம் மாறி மாறி வந்தவை. பின்னாளில் புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு வந்தது, அவ்வகையில் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மிகப் பிரதானமான ஆலயமாக விளங்கியது.

இந்த இடத்தை சுற்றி மேலமலை, கோட்டைமலை, கடம்பர்மலை, பறையர்மலை, உவக்கன்மலை, ஆளுருட்டிமலை, பொம்மாடிமலை, பொன்மலை, மண்மலை என ஏகப்பட்ட மலைகள் உண்டு. இராஜராஜசோழன் தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டும்போது இங்கிருந்து பாறைகளை வெட்டியிருக்கலாம் எனும் அனுமானம் உண்டு.

இந்த மலைகுன்றுகளெல்லாம் அனுமன் இலங்கைக்கு சுமந்து சென்ற சஞ்சீவ பர்வதத்தில் இருந்து விழுந்தவை, இதனால் இன்றும் அம்மலைகள் சிலவற்றில் அபூர்வ மூலிகளைகள் உண்டு, சித்தர்கள் பலர் சுற்றித்திரிந்த மலைகள் இவை.

இந்த மலைகளில் ஒன்றுதான் நார்த்த மலை. அனார்த்தம் எனும் சொல்லுக்குப் பலனில்லாதது, அழிவு எனப் பொருள், நார்த்தம் எனும் பெயருக்கு ஆக்கசக்தி, நல்ல சக்தி எனப் பொருள்.

இது ஒரு கோணம், அம்மலை அப்பொழுது இருந்தே பிரபஞ்ச சக்தியினை ஈர்த்துக் கொடுக்கும் மலையாகத்தான் இருந்திருக்கின்றது. அங்கு நாரதர் தவமிருந்தார், அதனால் நாரதமலையாகி நார்த்தா மலை என்றானது எனும் பெயரும் உண்டு.

நகரத்தார் எனும் செட்டியார்களின் வணிக வழியில் முக்கிய இடம் இது. இதனால் நகரத்தார்மலை என்பது நார்த்தா மலை என மருவியது எனும் கோணமும் உண்டு.

இப்படியான நார்த்தா மலையில் அம்மன் குடிகொண்ட வரலாறு சிலிர்ப்பானது.

இங்கு அம்மன் ஏற்கனவே உண்டு, வேறு வடிவில் உண்டு. பௌத்த காலம் சமணக் காலத்தில் இந்துக்கோவில்களுக்கு ஆபத்து வந்தது, இந்து ஆலயச் சிலைகளை ஒழிப்பதில் சமணத்துக்கு ஆர்வம் அதிகம், பௌத்தமோ இந்து சாமி சிலைகளில் புத்தன் சிலையினைப் பொருத்தி சிரிக்கும் புத்தர், தூங்கும் புத்தர், நான்கு முக புத்தர் என மாற்றிவிடும்.

ஆப்கானியர் செய்வது எல்லோரும் அறிந்தது. கற்சிலை என்றால் உடைத்துப் போடுவது, உலோக சிலை என்றால் உருக்கிப்போடுவது எனப் பல உண்டு.

இந்த ஆபத்துக்கள் வரும்போதெல்லாம் இந்துக்கள் சாமி சிலைகளைப் புதைத்து வைப்பது வழமை. தமிழகமெங்கும் இப்போதும் பல இடங்களில் சிலைகள் கிடைத்துக் கொண்டிருப்பதெல்லாம் அப்படி ஒரு கொடுங்காலத்தில் பாதுகாப்பாகப் புதைக்கபட்டவை.

இப்படி இந்த அம்மன் சிலையும் புதைக்கப்பட்டிருந்தது அவள் காலம் பார்த்து மீண்டாள். மதுரையில் சுல்தானிய ஆட்சி அகற்றப்பட்டு நாயக்கர் கால ஆட்சி வந்தபோது அவள் தன்னை வெளிப்படுத்தினாள்.

நார்த்தமலையில் இருந்து சில கல் தொலைவிலுள்ள கீழக்குறிச்சி அருகே அவள் தன்னை வெளிப்படுத்தினாள். அது கொள்ளை நோய்கள் அதிகரித்தக் காலம், கோவில் குருக்கள் ஒருவர் இதுபற்றி மனதில் பெருவருத்தம் கொண்டிருந்தார், அங்கிருக்கும் அம்மன் கோவிலில் அனுதினமும் அவர் மக்களுக்காக வேண்டிக் கொண்டே இருந்தார்.

அந்நேரம் இந்தக் குருக்கள் வயலுக்குச் செல்லும் போது ஒரு வரப்பில் தொடர்ந்து தடுக்கி விழுந்தார். முதல் இருமுறை அவர் அதனைப் பெரிதாகக் கருதவில்லை. மூன்றாம் முறை விழும்போது அவருக்குள் ஏதோ ஒரு உணர்வு ஏற்பட்டது, உடனே அதனைத் தோண்டிப்பார்க்கச் சொன்னார், ஆட்கள் தோண்டினார்கள்.

அப்போது மிக அழகான அம்மன் சிலை வெளிப்பட்டது. அனைவரும் பரவசத்தில் விழுந்து வணங்கினார்கள். குருக்கள் அங்கே சிலையினைக் குளிப்பாட்டி பூஜைகள் செய்தார். பின் அந்தச் சிலையினை எங்கே வைப்பது என்பதில் ஆளாளுக்குக் குழம்பினார்கள்.

இருக்கும் பழைய ஆலயத்தில் வைப்பதா? புதிய கோவில் கட்டி வைப்பதா? இல்லை இந்த இடத்திலே கோவில்கட்டுவதா எனக் குழம்பினார்கள். அப்போது அம்மனின் வாக்கு அசரீரியாகக் குருக்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே கேட்டது.

“என்னை நார்த்தாமலை அடிவாரத்தில் இருக்கும் சிவன் கோவில் அருகே அமர்த்துங்கள், நான் எல்லா நோய்களில் இருந்தும் உங்களுக்குப் பாதுகாவல் தருவேன்”

அதன்படி மக்கள் அப்பகுதி அரசனை நாடினர், அரசனும் வந்து அம்மனை தரிசித்து நார்த்தாமலை சிவன் கோவில் அருகே ஒரு ஆலயம் அமைத்து அன்னையினை அமர்த்தினான், மக்கள் அன்னையினை வணங்கத் தொடங்கிய நேரம் நோய்களெல்லாம் மறைந்தன‌.

குறிப்பாக அம்மை நோய் போன்றவை உடனே மறைய மறைய அன்னை முத்துமாரி என்றானாள்.

இது 14 ஆம் நூற்றாண்டில் நடந்த காட்சி என்கின்றது சில வரலாறுகள். அதன்பின் அவள் மிக மிகப் பிரசித்தியானாள். எங்கிருந்தெல்லாமோ வந்து பக்தர்கள் வணங்கினார்கள், அவளும் அவர்கள் குறை எல்லாம் தீர்த்துவைத்து தன் சக்தியினைக் காட்டியபடி நின்றாள்.

இந்த ஆலயத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனைக் கொடுத்தவள், அதன் பெருமையினை அகிலமெல்லாம் பிரகாசிக்கச் செய்தவள் ஒரு பெண், அவளாலே இந்த ஆலயம் மிக மிகப் பிரசித்தியானது.

அவளுக்கும் அம்மனுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு, அவளைப் இப்பிறப்பில் சரியாகப் பிடித்துக் கொண்ட அன்னை அவளைக் கொண்டே தன் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தாள்.

அவள் பெயர் மலையம்மாள், அவள் பிறந்த குடும்பம் திருவண் ஜமீன் அந்தஸ்தில் இருந்தது, ஆனால் அவளுக்குச் சிறுவயதிலே அம்மை போட்டது.

அவள் நிலைமை மிக மிக மோசமானது. குடும்பத்தார் என்ன செய்தும் பலனில்லை. கடைசியில் இந்த ஆலயம் பற்றி அறிந்து அவளை இங்கு அழைத்து வந்தனர், அவள் நிலைமை மிக மோசமாக இருந்தது.

உடலெல்லாம் கொப்பளமாகத் தலை தொங்கி கண் திறக்கக் கூட முடியாமல் பேசமுடியாமல் வாழ்வின் இறுதி நொடியில் இருப்பவளைப் போல் அவள் சுருங்கிக் கிடந்தாள்.

அங்கு அம்மன் சன்னதியில் அவளை இட்டுச் சொன்னார்கள், “இவள் பிழைத்தால் உனக்கே தருகின்றோம்” என்றார்கள்.

ஒரு சில நிமிடங்களில் அவள் நோய் தீர்ந்தது, குடும்பத்தார் அதிசயித்தனர். அந்தச் சிறுவயதில் அந்த மலையம்மாளும் இவளே என் தாய் என உரிமையாய் அவள் அருகில் அமர்ந்து கொண்டாள், அவளில் தன் சக்தியினை இறக்கினாள் மாரியம்மன்.

அதன் பின் அவள் அங்கு நடமாடும் அம்மனாக அமர்ந்தாள், அவளிடம் குங்குமம் வாங்கினால் நோய் தீர்ந்தது, அவள் அருள்வாக்குச் சொன்னால் அது அப்படியே நடந்தது, அவளைத் தேடி தேடி பெரும் கூட்டம் வர ஆரம்பித்தது.

ஒரு மனிதன் தன் உயிரைக் காக்க எதையும் இழப்பான், கொடுப்பான். அப்படி அவள் முன்னால் பணமும் தங்கமுமாகக் கொட்டினார்கள், அவள் தனக்காக ஒரு காசு எடுப்பதில்லை.

அவள் அம்மன் கோவிலில் கூழும் கஞ்சியும் குடித்து வாழ்ந்து கொண்டிருந்தாள்; மஞ்சள் ஆடை மட்டும் உடுத்தியிருந்தாள்; ஒரு குடிசையில்தான் தங்கியிருந்தாள்.

அந்தத் தவத்தில்தான் இந்தத் தலத்தை விரிவுபடுத்தினாள், பெரிய பெரிய சுவர்கள் கோபுரங்கள் எனத் தனி ஒருத்தியாக முடித்துக் காட்டினாள்.

சுமார் 70 ஆண்டுகாலம் அந்தக் கோவிலில் அம்மனின் மகளாக கர்மம் கழித்தவள் அங்கே சமாதியும் கொண்டாள், ஆலயத்திலிருந்து சற்றுத் தள்ளி அவளின் சமாதி சக்தியோடு அமைந்திருக்கின்றது.

அவள் பிறந்த வேட்டமலையில் இருந்து அவள் சாதிசனமும் மக்களும் வந்து இப்போதும் அவளுக்குப பூஜை செய்வது உண்டு.

தனக்கென வாழாமல் திருமணம் செய்யாமல் ஒரு சித்தராக வாழ்ந்து அம்மனின் அருள் பெற்றவளாக வாழ்ந்த அந்த மலையாள்தான் இப்போதும் அன்னையோடு நின்று அங்கு அருள்புரிகின்றாள்.

இந்தக் கோவில் கிழக்குப் பார்த்தபடி, ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் கம்பீரமாக நிற்கின்றது.

இங்கு மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து சென்றால் கருவறையில் மிகக் கம்பீரமாக கனிவே உருவான பார்வையுடன் ஆசி வழங்குகின்றாள் அந்த முத்துமாரியம்மன்.

கட்கம், கபாலம், டமருகம் மற்றும் சக்திஹஸ்தம் கொண்டு நான்கு கரங்களுடன் அரவணைத்துக் காக்கிறாள் அம்மன்.

இந்த ஆலயத்தின் மிக முக்கியமான சிறப்பு இங்கு அம்மன் சந்நிதியில் வடபுறத்துச் சுவற்றில் கல்லாலான முருகன் எந்திரம் பதிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் அற்புதமான சக்தி கொண்டது.

சித்தர் ஒருவரால் இது ஸ்தாபிக்கப்பட்டது, மலையம்மாள் காலத்துக்கு முன்பே அது இருந்தது என்கின்றது செய்திகள்.

இதனாலே முருகனுக்குச் செய்யும் காவடி வழிபாடு உள்ளிட்ட எல்லா வழிபாடுகளும் இங்கும் அப்படியே உண்டு, வேறு எந்த அம்மன் ஆலயத்திலும் அது இல்லை.

முருகப்பெருமானுகுரிய ஹஸ்தத்துடன் அம்மன் காட்சி தரும் அதிசயம் கொண்டது இக்கோவில்.

சற்று மேலே இந்த மலையில் ஒரு சுனை உண்டு. அது தலையருவி சிங்கம் என அழைக்கப்படும், அங்கு ஒரு லிங்கம் உண்டு, அவருக்கு ஜிரஹரேஸ்வரர் எனப் பெயர், அங்கும் பக்தர்கள் வழிபடுவார்கள், சித்தர் கால லிங்கம் இது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைமை அம்மன் இவள் எனுமளவு மாபெரும் இடம் பிடித்து தனக்கென ஒரு ஆட்சியினை அவள் செய்துகொண்டிருக்கின்றாள்.

புதுக்கோட்டை பிராந்தியத்தை அவள்தான் காக்கின்றாள், அவளால்தான் அந்த இடம் செழிப்பாக உள்ளது என மனமார நம்பும் பக்தர் கூட்டத்தால் நாள்தோறும் கூட்டம் அலைமோதும்.

திருமணங்கள் நிறைய நடக்கும், இன்னும் அம்மை உள்ளிட்ட நோய்கள் தீரும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட எல்லா நோய்களும் தீரும்.

பெண்களுக்கு வரும் கர்ப்பபை சிக்கல், மாதாந்திர சிக்கல் என எல்லா நோய்களும் இந்த அம்மன் சந்நிதியில் காணாமலே போகும்.

குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் இங்குக் கரும்பு தொட்டில் கட்டி வழிபட்டால், அவர்கள் வீட்டில் தொட்டில் ஆடும் கரும்புபோல் பேச மழலை உருவாகி வரும்.

இங்கு அக்னிகாவடி விசேஷம், அது தீராத நோயெல்லாம் தீர்த்துவைக்கும்.

அனுதினமும் அம்மனுக்கு மாவிளக்கு, அக்னிக் காவடி, கரும்பு தொட்டில்,காவடி எடுத்தல், விளக்கு வைத்தல், அவளுக்குப் புடவை சாத்துதல், ஆகியவை தவிர வழக்கமான நன்றிக்கடன்கள் பலநூறு பக்தர்களால் நடத்தப்படும்.

நன்றிக்கடன் செலுத்த பக்தர்கள் வராத நாளே இல்லை, இங்குப் பறவைக் காவடி இன்னும் விசேஷம்.

இங்குப் பங்குனித் திருவிழா முக்கியம் என்றாலும் ஆடிமாதம் பெரும் கூட்டம் வரும், கடைசி ஆடிவெள்ளிக்கு வரும் கூட்டம் பல இலட்சத்தைத் தாண்டும், அவ்வளவுக்கு அம்மன் அருள் மழையாய்ப் பொழியும் தலம் இது.

இங்கு ஜல்லிகட்டு மிகப் பிரசித்தி. அவள் கோவிலில் நடக்கும் ஜல்லிக்கட்டு மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் விழா, பொங்கலில் அம்மனுக்கு அது தேர்திருவிழா போல ஒரு கொண்டாட்டம்.

அம்மனுக்கு இங்கு தங்கரதமெல்லாம் உண்டு, அதில் அவள் வரும் அழகுக் காண கோடி கண்கள் போதாது.

“நாடு போற்றும் நாத்தாமலை, மாநிலம் போற்றும் மாரியம்மன்” என அவளுக்குப் பெயர் உண்டு, அவளை இந்த ஆடிமாதத்தில் வணங்கினால் எல்லா நலமும் உங்களைத் தேடிவரும்.

அந்த நார்த்தாமலைக்குச் சென்று முதலில் அருகிருக்கும் சிவனை வழிபடுங்கள், விஜயாலய சோழீஸ்வரம் என விஜயாலய சோழன் கட்டிவைத்த கோவில் அது.

சோழர்களின் பொற்காலத்தை பின்னாளில் விஜயாலய சோழனே தொடங்கி வைத்தான், அவன் பல்லவரிடம் இருந்து இந்த இடத்தை கைப்பற்றி இந்த கோவிலைக் கட்டினான்.

அதன் அருகில்தான் அம்பாள் குடிகொண்டாள், அதனால் அந்தச் சிவனை முதலில் வழிபட்டு பின் அம்பிகையினை தொழுது நில்லுங்கள், உங்கள் குறையெல்லாம் உரிய வேண்டுதலோடு சொல்லுங்கள்.

பின் மறக்காமல் மலையம்மாள் சமாதிக்குச் செல்லுங்கள். இன்றும் அவள் அங்கு அரூபமாய் உண்டு, சக்தியாய் உண்டு, பலரிடம் அவள் நேரிலே வந்துபேசும் ஆச்சரியங்களும் உண்டு.

அம்மன் யாரை தேர்ந்துகொண்டாளோ அவளை வைத்தே எல்லாக் காரியமும் சாதிப்பாள், ஒரே ஒரு உத்தமமான பக்தையால் ஒரு ஆலயத்தையே அவள் எழுப்பிக்கொள்வாள் என்பதற்கு அந்த மலையம்மாள் பெரும் சாட்சி.

இந்த ஆடிமாதம் முடிந்தவர்கள் செல்ல வேண்டிய மாரியம்மன் ஆலயத்தில் இந்த நார்த்தாமலை முக்கியமானது.

அம்மன் அங்கு மலைபோல் நின்று மக்களைக் காக்கின்றாள். மலைதான் அரண் மலைதான் எல்லா மருந்துகளையும் தரும், மலையில் இருந்து வரும் நதிதான் மக்களை வாழவைக்கும், மலையின் சிறப்பம்சம் தன்னிடம் உள்ள எல்லாமும் மக்களுக்குத் தரும், தாய்போல் தரும்.

இந்த நார்த்தாமலை மாரியம்மனும் அப்படித் தாயாக நின்று தன்னை அண்டிவரும் மக்களை வாழவைக்கின்றாள்; மலைபோல் காத்து நிற்கின்றாள்; அவளை நம்பி சென்று வழிபடுங்கள் உங்கள் வாழ்வும் மலைபோல் உயரும். உறுதியாகும். இது சத்தியம்.

மாரியம்மன் ஆலயங்கள் 03 : இருக்கன்(ண்)குடி மாரியம்மன்.

தென் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை சித்தர்களின் பூமி. அகத்தியர், விஸ்வாமித்திரர், மச்சமுனி என எல்லா மகரிஷிகளும் வாழ்ந்து நடமாடி தவம் செய்தபூமி. இராவணனே அங்குக் கால்பதிக்க அஞ்சிய அளவு அது சித்தர்களின் இராஜ்ஜியமாக இருந்தது.

இப்போதும் அங்குச் சித்தர்கள் நிரம்ப உண்டு. சதுரகிரி மலை எக்காலமும் சித்தர்களுக்குப் பிரசித்தியானது, இந்த ஞானமலையில் இருந்து வரும் எல்லாமே சூட்சும சக்தி கொண்டவை.

அப்படியான அந்த மலையிலிருந்து வரும் இரு ஆறுகள் நடுவே அமைந்திருப்பது இந்தச் சக்திமிக்க இருக்கன்குடி மாரியம்மன் ஆலயம்.

அந்த இரு நதிகளும் அர்ச்சுன ஆறு, வைப்பாறு என இரண்டு. இவை வற்றா நதிகள் அல்ல, தாமிரபரணி போல காலமெல்லாம் நீரோடும் நதியுமல்ல. மழைக்காலத்தில் இவை பெருக்கெடுக்கும். மற்றபடி, சிற்றோடைப் போல் ஓடும்.

அர்ஜூன நதி மகாபாரத அர்ஜூனனால் உருவாக்கப்பட்டது. வனவாச காலங்களில் அவன் தன் சகோதர்களுக்காக உருவாக்கிக் கொடுத்த நதி, அவன் அம்பினால் உருவாகி ஓடிய நதி.

இன்னொரு நதி வைப்பாறு. இது இராமபிரானால் உருவாக்கப்பட்டது. இராமபிரானுக்கும் தென்முனைக்குமான பந்தம் நீண்டது. விஸ்வாமித்திரரின் யாக காவலுக்காக இராமர் விஜயாபதிக்கே வந்திருந்தார். அப்படியான காலங்களில் அவரின் அம்பினால் உருவானது வைப்பாறு.

வைப்பு என்றால் புதையல் போல் மறைந்திருப்பது, அந்த ஊற்றை இராமபிரான் திறந்துவிட்டதால் அது வைப்பாறு ஆயிற்று.

இந்த இரு ஆறுகளுக்கும் இடையில் சாத்தூர் அருகே அமைந்ததுள்ளதுதான் இந்த ஆலயம். அதை அமைத்தவர் ஒரு சித்தர், சிவஞான சித்தர் என அவருக்குப் பெயர்.

அவர்தான் பல மாதம் இந்த ஆற்றின் இடைத்திட்டில் தவமிருந்து இந்த அம்மனை உருவாக்கி பிரதிஷ்டை செய்தார். அது பல காலத்துக்கு முன்பே அம்மனின் தலமாக இருந்தது.

பின்னாளில் ஆற்றுப்பெருக்கில் அது மண்மூடிற்று, தெற்கே இப்படி மண்மூடிய இடம் நிரம்ப உண்டு. இது அந்நியர்க்குப் பயந்து கோவில் சிலைகளை இந்து மக்கள் புதைத்த காலம் போல் அல்ல. மாறாக, இது இயற்கை அனர்த்தம்.

தென்முனை இப்படிப் பெரும் அழிவில் ஏதோ ஒரு காலத்தில் சிக்கியிருக்கின்றது. நெல்லையப்பர் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் என எல்லாமும் இப்படிப் புதைந்தே மீண்டன, அது ஆதிச்சநல்லூர் மூழ்கிய காலமாகக் கூட இருக்கலாம்.

ஆனால், புதைந்த ஆலயங்கள் சமயம் பார்த்து மீண்டன, அப்படி இந்த ஆலயமும் ஒரு பெண்ணால் மீண்டது.

13 ஆம் நூற்றாண்டு காலங்கள் தெற்கே குழப்பமானவை. மதுரையில் சுல்தானிய ஆட்சி வந்து மக்கள் நிலை குலைந்த நேரம், இனி எல்லாமே ஆப்கானியர் ஆட்சி அவர்கள் மதமெனப் பெரும் அச்சம் எழும்பிய நேரம்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயமே பூட்டப்பட்டு வழிபாடு இல்லாமல் கிடந்த காலம்.

அந்நேரம் மக்களுக்குப் பெரும் நம்பிக்கை கொடுக்கும்படி இந்த அம்மன் எழுந்தாள். மாடுகள் மேயும் அந்த இடத்தில் சாணமெடுக்கச் சென்ற பெண் சாணக் கூடையினை அகற்றமுடியாமல் திணறினாள், பலர் கூடியும் கூடையினை அசைக்க முடியவில்லை.

இந்த ஆச்சர்யம் எதனால் என எல்லோரும் திகைத்த நேரம் ஒரு பெண்ணில் இறங்கிச் சொன்னாள் அம்மன், “கீழே இருக்கும் என் உருவத்தைத் தோண்டி மேலே வைத்து வழிபடுங்கள், நான் இங்கிருந்து ஆட்சி செலுத்தி உங்களைக் காப்பேன்”

அப்படியே அவளைக் கண்டடைந்தார்கள். சித்தர் உருவாக்கிய அதே அற்புதமான கோலத்தோடு வெளிவந்து அமர்ந்தாள், மக்கள் வந்து பணிந்து பணிந்து நல்வரம் பெற்றனர்.

கங்கையின் இரு பிரிவுகள் நடுவே காசியில் அமர்ந்திருக்கும் விசாலாட்சி போல இரு கங்கை நடுவே அமர்ந்திருப்பவள் இடம் இருகங்கைக் குடி என்றானது, பின் இருக்கங்குடி என்றாகி இருக்கன் குடியாகிவிட்டது.

அதிலிருந்து தொடர்கின்றது அவளின் அரசாட்சி. இன்று தெற்கே உள்ள அம்மன் கோவில்களில் பிரதானம் அவளே. மகா சக்தி, மாபெரும் சக்தியாக நின்று அவளால் முடியாதது எதுவுமில்லை எனத் தன் மக்களைக் காத்து வருகின்றாள்.

அம்மன் ஆலயத்தில் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டால் அது பக்தர்கள் அம்மனைத் தேடி அழைத்து உருவான ஆலயம் எனப் பொருள், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டபடி அமர்ந்தால் அவள் யாரையும் தேடவில்லை இது அவளின் வீடு, அவள் சொந்த கோட்டை எனப் பொருள்.

இது வலதுகாலை மடக்கி இடதுகாலை தொங்கவிட்டு அமர்ந்த கம்பீரக் கோலம் என்பதால் அவளின் சொந்த வீடு, இதனால் அவளுக்குச் சக்தி மிக அதிகம், உக்கிரமும் அதிகம்.

அம்பாள், இங்கு சிவ அம்சம் அதனால் அவள் சந்நிதி எதிரே நந்தி உண்டு. இது வேறெங்கும் இல்லாக் காட்சி, தினமும் அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கும் போது திரை போடப்பட்டு விடும். ஆனால், பௌர்ணமியன்று நடக்கும் அபிஷேகத்தை மட்டும் பக்தர்கள் காணலாம்.

அம்பாள் கண்டறியப்பட்ட மூல இடத்தில் ஆதி அம்பாள் சந்நிதி உண்டு. ஆனால், அங்கு அம்பாள் உருவம் பொறித்த சூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது.

அம்மன் தோன்றிய இடத்தில் உள்ள தல விருட்சத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இந்த ஆலயத்தில் சேவல் கூவுவதில்லை, அதன் தாத்பரியம் அன்னை இருக்குமிடம் எக்காலமும் பகல், அங்கு இரவு என்பதே இல்லை என்பது, இது சிலிர்ப்பான உண்மை.

ஆதிகால கருவறை இன்னும் அப்படியே பழங்காலத் தோற்றத்தில் உண்டு.

இங்குப் பக்தர்களின் கண் தொடர்பான சிக்கல்களை அன்னை எளிதில் தீர்ப்பாள், அதனாலே அவள் இரு கண்களின் காவல் எனும்படி இருக்கண்குடி மாரியம்மன் என்றானாள்.

கண் நோய் உள்ளவர்கள், “வயனம் இருத்தல்’ என்ற விரதத்தை அனுஷ்டித்தால் இங்குப் பெரும் பலன் உண்டு. அதாவது இங்கே தங்கியிருந்து விரதம் அனுசரிப்பது, அப்படித் தங்குவோர்க்கு இங்குத் தீராத கண் நோய் இல்லை.

வயன மண்டபத்தில் 20 நாட்கள் தங்கி 6 பூஜைகளுக்கும் போய் தீர்த்தம் எடுத்துத் தடவினால் கண்பார்வை சரியாகும் சாட்சிகள் ஏராளம்.

பலவிதமான நோய்கள், கட்டிகள் பருக்கள் என எல்லாமும் அம்மன் சன்னதியில் தீரும், வைசூரி வந்த வீட்டில் இருந்து அம்மனை நினைத்தாள் அம்மன் நொடியில் தீர்ப்பாள்.

குழந்தை வரம் தரும் ஆலயம் இது. அவள் தாயுள்ளத்தோடு அதைத் தந்து கரும்பு தொட்டிலோடு மகவை தன் சந்நிதியில் தாங்கிக் கொள்வாள்.

உலகின் அழகான அம்மன் சிலை அது, அம்முகம் பார்த்தால் பார்ப்போரை வசீகரிக்கும், அதுவும் தீபாரதனை காட்டும் போது அவள்காட்டும் புன்னகையில் தாயே என அழத் தோன்றும், அவ்வளவு அழகான அம்மன் அவள்.

விசேஷ நாட்கள் தவிர சாதாரண நாட்களில் மொட்டை இடுதல், பொங்கலிடுதல் என நேர்ச்சை செய்வோர் மட்டும் ஐந்தாயிரம் மேல் வரும், விசேஷ நாட்களில் இலட்சமும் இருக்கலாம்.

பாலையம்பட்டி பெரியலான் என்பவர் அம்மன் மீது கீர்த்தனம் பாடி உள்ளார். இன்னும் முள்ளிக் குளம் வித்வான் சங்கரபாண்டி பிள்ளை மாலை பதிகம் செய்துள்ளார்.

துலுக்கங்குளம் அருளானந்த கருப்பையா இராஜா என்பவர் ‘செந்தமிழ் பதிகம்’ பாடி உள்ளார்.

இந்த ஆலயத்தில் புனித நீர் தீர்த்தங்கள் என்று எதுவும் இல்லை. அர்ச்சுனா நதியும், வைப்பாறும் தீர்த்தங்களே.

அம்மன் ஆலயங்களில் பெரிதாக பலி இல்லை என்பதற்கு இதுவிலக்கு, அன்போடு தரும் எந்தப் பலியும் அவள் ஏற்றுக்கொள்கின்றாள்.

இவள் எக்காலமும் பிரசித்தி. நாயக்கர் காலத்தில் அவர்கள் பணிந்து காணிக்கை செலுத்தினார்கள். பிரிட்டிஷார் காலத்தில் 1882-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு இனாம் மானியமாக 49 ஏக்கர் 19 செண்டும், ரொக்க மானியமாக ஐந்து ரூபாயும் சென்னை ஆளுநர் கொடுத்த ஆவணம் உண்டு, அவ்வளவு சக்தி வாய்ந்தவள்.

தென்னகத்தின் ஆடிமாதமே அவளுக்கானது, பாதயாத்திரை முதல் பல இலட்சம் மக்கள் வந்து கூடி ஆடிமாதம் முழுக்க அவளைக் கொண்டாடித் தீர்ப்பார்கள்.

ஏராளமான பக்தர்கள் கனவில் சென்று ஏன் சிலரிடம் நேரிலே சென்று பேசியவள் அவள், தான் தேர்ந்து கொண்ட அடியாரிடம் அவளே வருவாள்.

தெற்கே நடக்கும் மாபெரும் விழாக்களில் அன்னையின் ஆடித் திருவிழா பெரும் விசேஷம், பல இலட்சம் பக்தர்கள் கூடி நேர்ச்சைக்கடன் செலுத்துவது மனித கடலையே காட்டும்.

கண்களைக் காப்பதால் அவள் இருக்கண்குடி மாரியம்மாள் என்றல்ல தன் பக்தர்களை கண்ணின் மணிபோல் தாங்குவதாலும் அந்தப் பெயரைப் பெற்றாள்.

நீங்கள் உலகின் எந்த மூலையிலும் இருங்கள், எங்கிருந்தாலும் உங்கள் நோய்களில் சிக்கல்களில் கஷ்டமான நேரங்களில் அவளை அழையுங்கள். நொடியில் வந்து நின்று காப்பாள்.

தெற்கே செல்லும்போது இந்த இருக்கன்குடி மாரியம்மனை மறவாதீர்கள். தென்னகத்தின் மிகப்பெரிய சக்திபீடங்களில் அவள் ஆட்சி செய்யும் அந்த இராஜகம்பீர இருக்கன்குடியும் ஒன்று. அவளிடம் கேட்ட எல்லாமும் நிரம்ப நிரம்ப கிடைக்கும். இது சத்தியம்.

மாரியம்மன் ஆலயங்கள் 03 : இருக்கன்(ண்)குடி மாரியம்மன்.

தென் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை சித்தர்களின் பூமி. அகத்தியர், விஸ்வாமித்திரர், மச்சமுனி என எல்லா மகரிஷிகளும் வாழ்ந்து நடமாடி தவம் செய்தபூமி. இராவணனே அங்குக் கால்பதிக்க அஞ்சிய அளவு அது சித்தர்களின் இராஜ்ஜியமாக இருந்தது.

இப்போதும் அங்குச் சித்தர்கள் நிரம்ப உண்டு. சதுரகிரி மலை எக்காலமும் சித்தர்களுக்குப் பிரசித்தியானது, இந்த ஞானமலையில் இருந்து வரும் எல்லாமே சூட்சும சக்தி கொண்டவை.

அப்படியான அந்த மலையிலிருந்து வரும் இரு ஆறுகள் நடுவே அமைந்திருப்பது இந்தச் சக்திமிக்க இருக்கன்குடி மாரியம்மன் ஆலயம்.

அந்த இரு நதிகளும் அர்ச்சுன ஆறு, வைப்பாறு என இரண்டு. இவை வற்றா நதிகள் அல்ல, தாமிரபரணி போல காலமெல்லாம் நீரோடும் நதியுமல்ல. மழைக்காலத்தில் இவை பெருக்கெடுக்கும். மற்றபடி, சிற்றோடைப் போல் ஓடும்.

அர்ஜூன நதி மகாபாரத அர்ஜூனனால் உருவாக்கப்பட்டது. வனவாச காலங்களில் அவன் தன் சகோதர்களுக்காக உருவாக்கிக் கொடுத்த நதி, அவன் அம்பினால் உருவாகி ஓடிய நதி.

இன்னொரு நதி வைப்பாறு. இது இராமபிரானால் உருவாக்கப்பட்டது. இராமபிரானுக்கும் தென்முனைக்குமான பந்தம் நீண்டது. விஸ்வாமித்திரரின் யாக காவலுக்காக இராமர் விஜயாபதிக்கே வந்திருந்தார். அப்படியான காலங்களில் அவரின் அம்பினால் உருவானது வைப்பாறு.

வைப்பு என்றால் புதையல் போல் மறைந்திருப்பது, அந்த ஊற்றை இராமபிரான் திறந்துவிட்டதால் அது வைப்பாறு ஆயிற்று.

இந்த இரு ஆறுகளுக்கும் இடையில் சாத்தூர் அருகே அமைந்ததுள்ளதுதான் இந்த ஆலயம். அதை அமைத்தவர் ஒரு சித்தர், சிவஞான சித்தர் என அவருக்குப் பெயர்.

அவர்தான் பல மாதம் இந்த ஆற்றின் இடைத்திட்டில் தவமிருந்து இந்த அம்மனை உருவாக்கி பிரதிஷ்டை செய்தார். அது பல காலத்துக்கு முன்பே அம்மனின் தலமாக இருந்தது.

பின்னாளில் ஆற்றுப்பெருக்கில் அது மண்மூடிற்று, தெற்கே இப்படி மண்மூடிய இடம் நிரம்ப உண்டு. இது அந்நியர்க்குப் பயந்து கோவில் சிலைகளை இந்து மக்கள் புதைத்த காலம் போல் அல்ல. மாறாக, இது இயற்கை அனர்த்தம்.

தென்முனை இப்படிப் பெரும் அழிவில் ஏதோ ஒரு காலத்தில் சிக்கியிருக்கின்றது. நெல்லையப்பர் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் என எல்லாமும் இப்படிப் புதைந்தே மீண்டன, அது ஆதிச்சநல்லூர் மூழ்கிய காலமாகக் கூட இருக்கலாம்.

ஆனால், புதைந்த ஆலயங்கள் சமயம் பார்த்து மீண்டன, அப்படி இந்த ஆலயமும் ஒரு பெண்ணால் மீண்டது.

13 ஆம் நூற்றாண்டு காலங்கள் தெற்கே குழப்பமானவை. மதுரையில் சுல்தானிய ஆட்சி வந்து மக்கள் நிலை குலைந்த நேரம், இனி எல்லாமே ஆப்கானியர் ஆட்சி அவர்கள் மதமெனப் பெரும் அச்சம் எழும்பிய நேரம்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயமே பூட்டப்பட்டு வழிபாடு இல்லாமல் கிடந்த காலம்.

அந்நேரம் மக்களுக்குப் பெரும் நம்பிக்கை கொடுக்கும்படி இந்த அம்மன் எழுந்தாள். மாடுகள் மேயும் அந்த இடத்தில் சாணமெடுக்கச் சென்ற பெண் சாணக் கூடையினை அகற்றமுடியாமல் திணறினாள், பலர் கூடியும் கூடையினை அசைக்க முடியவில்லை.

இந்த ஆச்சர்யம் எதனால் என எல்லோரும் திகைத்த நேரம் ஒரு பெண்ணில் இறங்கிச் சொன்னாள் அம்மன், “கீழே இருக்கும் என் உருவத்தைத் தோண்டி மேலே வைத்து வழிபடுங்கள், நான் இங்கிருந்து ஆட்சி செலுத்தி உங்களைக் காப்பேன்”

அப்படியே அவளைக் கண்டடைந்தார்கள். சித்தர் உருவாக்கிய அதே அற்புதமான கோலத்தோடு வெளிவந்து அமர்ந்தாள், மக்கள் வந்து பணிந்து பணிந்து நல்வரம் பெற்றனர்.

கங்கையின் இரு பிரிவுகள் நடுவே காசியில் அமர்ந்திருக்கும் விசாலாட்சி போல இரு கங்கை நடுவே அமர்ந்திருப்பவள் இடம் இருகங்கைக் குடி என்றானது, பின் இருக்கங்குடி என்றாகி இருக்கன் குடியாகிவிட்டது.

அதிலிருந்து தொடர்கின்றது அவளின் அரசாட்சி. இன்று தெற்கே உள்ள அம்மன் கோவில்களில் பிரதானம் அவளே. மகா சக்தி, மாபெரும் சக்தியாக நின்று அவளால் முடியாதது எதுவுமில்லை எனத் தன் மக்களைக் காத்து வருகின்றாள்.

அம்மன் ஆலயத்தில் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டால் அது பக்தர்கள் அம்மனைத் தேடி அழைத்து உருவான ஆலயம் எனப் பொருள், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டபடி அமர்ந்தால் அவள் யாரையும் தேடவில்லை இது அவளின் வீடு, அவள் சொந்த கோட்டை எனப் பொருள்.

இது வலதுகாலை மடக்கி இடதுகாலை தொங்கவிட்டு அமர்ந்த கம்பீரக் கோலம் என்பதால் அவளின் சொந்த வீடு, இதனால் அவளுக்குச் சக்தி மிக அதிகம், உக்கிரமும் அதிகம்.

அம்பாள், இங்கு சிவ அம்சம் அதனால் அவள் சந்நிதி எதிரே நந்தி உண்டு. இது வேறெங்கும் இல்லாக் காட்சி, தினமும் அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கும் போது திரை போடப்பட்டு விடும். ஆனால், பௌர்ணமியன்று நடக்கும் அபிஷேகத்தை மட்டும் பக்தர்கள் காணலாம்.

அம்பாள் கண்டறியப்பட்ட மூல இடத்தில் ஆதி அம்பாள் சந்நிதி உண்டு. ஆனால், அங்கு அம்பாள் உருவம் பொறித்த சூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது.

அம்மன் தோன்றிய இடத்தில் உள்ள தல விருட்சத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இந்த ஆலயத்தில் சேவல் கூவுவதில்லை, அதன் தாத்பரியம் அன்னை இருக்குமிடம் எக்காலமும் பகல், அங்கு இரவு என்பதே இல்லை என்பது, இது சிலிர்ப்பான உண்மை.

ஆதிகால கருவறை இன்னும் அப்படியே பழங்காலத் தோற்றத்தில் உண்டு.

இங்குப் பக்தர்களின் கண் தொடர்பான சிக்கல்களை அன்னை எளிதில் தீர்ப்பாள், அதனாலே அவள் இரு கண்களின் காவல் எனும்படி இருக்கண்குடி மாரியம்மன் என்றானாள்.

கண் நோய் உள்ளவர்கள், “வயனம் இருத்தல்’ என்ற விரதத்தை அனுஷ்டித்தால் இங்குப் பெரும் பலன் உண்டு. அதாவது இங்கே தங்கியிருந்து விரதம் அனுசரிப்பது, அப்படித் தங்குவோர்க்கு இங்குத் தீராத கண் நோய் இல்லை.

வயன மண்டபத்தில் 20 நாட்கள் தங்கி 6 பூஜைகளுக்கும் போய் தீர்த்தம் எடுத்துத் தடவினால் கண்பார்வை சரியாகும் சாட்சிகள் ஏராளம்.

பலவிதமான நோய்கள், கட்டிகள் பருக்கள் என எல்லாமும் அம்மன் சன்னதியில் தீரும், வைசூரி வந்த வீட்டில் இருந்து அம்மனை நினைத்தாள் அம்மன் நொடியில் தீர்ப்பாள்.

குழந்தை வரம் தரும் ஆலயம் இது. அவள் தாயுள்ளத்தோடு அதைத் தந்து கரும்பு தொட்டிலோடு மகவை தன் சந்நிதியில் தாங்கிக் கொள்வாள்.

உலகின் அழகான அம்மன் சிலை அது, அம்முகம் பார்த்தால் பார்ப்போரை வசீகரிக்கும், அதுவும் தீபாரதனை காட்டும் போது அவள்காட்டும் புன்னகையில் தாயே என அழத் தோன்றும், அவ்வளவு அழகான அம்மன் அவள்.

விசேஷ நாட்கள் தவிர சாதாரண நாட்களில் மொட்டை இடுதல், பொங்கலிடுதல் என நேர்ச்சை செய்வோர் மட்டும் ஐந்தாயிரம் மேல் வரும், விசேஷ நாட்களில் இலட்சமும் இருக்கலாம்.

பாலையம்பட்டி பெரியலான் என்பவர் அம்மன் மீது கீர்த்தனம் பாடி உள்ளார். இன்னும் முள்ளிக் குளம் வித்வான் சங்கரபாண்டி பிள்ளை மாலை பதிகம் செய்துள்ளார்.

துலுக்கங்குளம் அருளானந்த கருப்பையா இராஜா என்பவர் ‘செந்தமிழ் பதிகம்’ பாடி உள்ளார்.

இந்த ஆலயத்தில் புனித நீர் தீர்த்தங்கள் என்று எதுவும் இல்லை. அர்ச்சுனா நதியும், வைப்பாறும் தீர்த்தங்களே.

அம்மன் ஆலயங்களில் பெரிதாக பலி இல்லை என்பதற்கு இதுவிலக்கு, அன்போடு தரும் எந்தப் பலியும் அவள் ஏற்றுக்கொள்கின்றாள்.

இவள் எக்காலமும் பிரசித்தி. நாயக்கர் காலத்தில் அவர்கள் பணிந்து காணிக்கை செலுத்தினார்கள். பிரிட்டிஷார் காலத்தில் 1882-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு இனாம் மானியமாக 49 ஏக்கர் 19 செண்டும், ரொக்க மானியமாக ஐந்து ரூபாயும் சென்னை ஆளுநர் கொடுத்த ஆவணம் உண்டு, அவ்வளவு சக்தி வாய்ந்தவள்.

தென்னகத்தின் ஆடிமாதமே அவளுக்கானது, பாதயாத்திரை முதல் பல இலட்சம் மக்கள் வந்து கூடி ஆடிமாதம் முழுக்க அவளைக் கொண்டாடித் தீர்ப்பார்கள்.

ஏராளமான பக்தர்கள் கனவில் சென்று ஏன் சிலரிடம் நேரிலே சென்று பேசியவள் அவள், தான் தேர்ந்து கொண்ட அடியாரிடம் அவளே வருவாள்.

தெற்கே நடக்கும் மாபெரும் விழாக்களில் அன்னையின் ஆடித் திருவிழா பெரும் விசேஷம், பல இலட்சம் பக்தர்கள் கூடி நேர்ச்சைக்கடன் செலுத்துவது மனித கடலையே காட்டும்.

கண்களைக் காப்பதால் அவள் இருக்கண்குடி மாரியம்மாள் என்றல்ல தன் பக்தர்களை கண்ணின் மணிபோல் தாங்குவதாலும் அந்தப் பெயரைப் பெற்றாள்.

நீங்கள் உலகின் எந்த மூலையிலும் இருங்கள், எங்கிருந்தாலும் உங்கள் நோய்களில் சிக்கல்களில் கஷ்டமான நேரங்களில் அவளை அழையுங்கள். நொடியில் வந்து நின்று காப்பாள்.

தெற்கே செல்லும்போது இந்த இருக்கன்குடி மாரியம்மனை மறவாதீர்கள். தென்னகத்தின் மிகப்பெரிய சக்திபீடங்களில் அவள் ஆட்சி செய்யும் அந்த இராஜகம்பீர இருக்கன்குடியும் ஒன்று. அவளிடம் கேட்ட எல்லாமும் நிரம்ப நிரம்ப கிடைக்கும். இது சத்தியம்.

மாரியம்மன் ஆலயங்கள் 04 : பண்ணாரி மாரியம்மன் ஆலயம்.

அம்மன் ஆலயங்களில் தனித்து அறியப்படும் ஆலயம் பண்ணாரி மாரியம்மன் ஆலயம். ஈரோடு சத்தியமங்கலம் அருகே அமைந்திருக்கும் அவளின் வரம்மிகு ஆலயம் நினைக்கும் மாத்திரத்திலே உருக்கத்தைத் தருவது.

அந்த ஆலயம் மகா சக்தியின் அருள் நிரம்பிய ஸ்தலம், அங்குக் கூடும் கூட்டமும் அனுதினமும் நடக்கும் அற்புதங்களும் கொஞ்சமல்ல. உலகின் எந்த மூலையில் ஒருவன் தாயே எனக் கலங்கி நின்றாலும் மூல தெய்வமாக, குல தெய்வமாக வந்து நிற்பவள் அவள்தான்.

அவள் வரலாறு மிகத் தொன்மையானது. ஆச்சரியமானது. மிக மிக அச்சுறுத்தலை மானிடர்க்கு வனம் கொடுத்தக் காலத்தில வனதேவதையாக நான் இருந்து உங்களைக் காக்கின்றேன் என அவளே வந்து மானுடர்க்குக் காவல் கொடுத்து நின்ற ஆலயம்.

அடர்ந்த காடு, விலங்குகள், விஷ ஜந்துகள் என எவ்வளவோ ஆபத்துக்களை மக்கள் எதிர்கொண்ட காலங்களில் இங்கு எல்லாமே நான் உங்களைக் காப்பதும் என் கடமை என அமர்ந்து அன்று முதல் இன்றுவரை மக்களைக் கண்போல் மணிபோல் காக்கும் காவலும் அரணும் அவளுடையது.

அவளே அங்குக் காவல். அவளே அங்கு ஆதார சக்தி.

அவள் அங்குக் குடிகொண்ட வரலாறு இருவழிகளில் சொல்லப்படுகின்றது, இரண்டும் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்தது.

முதலாவது, சம்பவம் மலையாளத்திலிருந்து காட்டுவழி வரும் வணிகர்கள் பற்றியது.

அக்காலத்தில் காட்டுப்பாதை ஆபத்தானது, விலங்குகள் வழிப்பறி கொள்ளையர்கள், அனுமாஷ்ய சக்திகள் என ஏகப்பட்ட இடையூறு உண்டு. இதனால் அனுபவமான ஒருவனே அவர்களுக்கு வழிகாட்டுவான், அன்று அந்தத் தலைவன் இல்லாததால் தாயே எங்களுடன் வா எனத் தங்கள் பகவதியினை அழைத்தார்கள், அவர்களுக்குத் துணையாக வந்தாள் அந்தத் தெய்வம்.

பின், வணிகர்களின் தலைவன் இவர்களைத் தேடி வந்தான், அந்த இடத்தில் “இனி நான் இங்கே அமர்கின்றேன், இனி அவன் உங்களை நடத்தட்டும், இங்கிருந்து நான் எல்லோருக்கும் காவலிருப்பேன்” என அம்மன் சொல்லி அமர்ந்து கொண்டாள்.

அப்படி அவள் அமர்ந்து, காட்டுவழியில் வரும் வணிகரெல்லாம் செய்த வழிபாடே ஆலயத்தின் துவக்கம் என்பது.

இரண்டாவது, அதே இடத்தில் நிகழ்ந்த ஒரு சலவைத் தொழிலாளி மனைவி பிரசவம். ஒரு சலவைத் தொழிலாளி நிறைமாத கர்ப்பிணியுடன் அப்பக்கம் வரும்போது அவளுக்குப் பிரசவ காலம் வந்தது.

அவள் இரு குழந்தைகளை ஈன்றாள். சற்று ஓய்வுக்குப் பின் அவர்கள் கிளம்ப நினைக்கும் போது ஒரு குழந்தையினைக் கையில் எடுக்க முடிந்தது இன்னொரு குழந்தையினைத் தூக்க முடியவில்லை.

முடிந்தவரை பார்த்த அவர்கள் ஊருக்குள் சென்று ஆட்களை அழைத்து வந்தார்கள், யாராலும் குழந்தையினை அசைக்க முடியவில்லை, அது சிரித்துக் கொண்டே கை காலை ஆட்டியபடிக் கிடந்தது.

கடைசியில், தரையோடுப் பெயர்த்தெடுக்க கடப்பாரையால் அந்தத் தரையினைத் தோண்டினார்கள். அந்நேரம் கடப்பாரைக் குழந்தையின் மார்பில் பட்டது, எல்லோரும் திகைத்த நேரம் அது அம்மனாக மாறிற்று.

உடனே அதனைத் தொழுது வழிபட்டார்கள். அந்த அம்மன் சுயம்பு அம்மன். இந்தப் பிராந்தியம் சேரநாட்டுக்கும் முன்பு பாத்தியப்பட்டது என்பதால் அவர்கள் அரசுக்குக் கட்டுப்பட்ட காட்டுவழி தெய்வமாய் இருந்தது.

இவையெல்லாம் நெடுநாளைக்கு முன் நடந்த விஷயங்கள். பின், ஏதோ ஒரு அனர்த்த காலங்களில், அரசுகள் வீழ்ந்து குழப்பம் வந்து போக்குவரத்து நின்ற காலங்களில் இந்த ஆலயம் காட்டுக்குள்ளே மறைந்தது.

ஆனால், ஒரு மகா ஆச்சரியமான விஷயம் இங்கு நடந்தது. அந்தச் சத்தியமங்கலம் புலிகள் சிறுத்தைகள் நிரம்பிய காடு என்றாலும் இப்பக்கம் மேயும் மாடுகளையோ ஆடுகளையோ அவைக் கடிப்பதில்லை. எல்லா விலங்கும் ஒன்றாக நீர் அருந்தும் அபூர்வமெல்லாம் நடந்திருக்கின்றது.

இந்த இடத்தில் மட்டும் துஷ்ட விலங்குகள் அடங்கிப்போயின. இதன் காரணம் அறியா மக்கள் அங்கு ஆடுமாடுகளை மேய்த்தார்கள். அதில் ஒரு பசு அடிக்கடி தனியே சென்று பால் சொரிந்து வந்தது, அதைக் கவனித்த இடையன் அந்த இடத்தினைத் தோண்டியபோது அம்மன் தென்பட்டாள்.

பின் ஊர் கூடி வணங்கிற்று. பெரும் கூட்டம் கூடிற்று. அம்மன் அசரீரியாகத் தான் யாரெனச் சொன்னாள். பின், நெடுநாள் மறைந்திருந்த அவள் வரலாறும் அவள் சக்தியும் வெளிப்பட்டது.

பின், கோவில் எழுப்பப்பட்டு அந்தச் சுயம்பு அம்மன் ஸ்தாபிக்கப்பட்டாள். குழந்தையாய் இருந்தபோது விழுந்த கடப்பாரைத் தழும்பு இப்போதும் அவள் மார்பின் மேல் உண்டு.

முன்பு அம்மன் கிழக்கு நோக்கித்தான் அமர்ந்திருந்தாள். ஒருமுறை ஊரெல்லாம் அவளுக்கு விழா எடுக்க பலர் பச்சரிசி மாவோடு வந்தார்கள், ஒரு ஏழைப் பெண் புளியங்கொட்டையினை அரைத்து எடுத்துச் சென்றாள். அவளிடம் அதுதான் இருந்தது.

ஆனால், அதைக் கொடுக்க நாணி தெற்குப்பக்கமாக நின்றாள். அப்போது அம்மனே தெற்கு நோக்கித் திரும்பி அவளிடம் இருந்து புளியங்கொட்டை மாவினைப் பெற்றுக் கொண்டு அந்நிலையிலே இப்போதும் காட்சியளிக்கின்றாள்.

உளமார்ந்த பக்தி ஒன்றைத்தான் அவள் காண்பாள். பக்தர்கள் அன்போடு கொடுக்கும் எதையும் அவள் மறுப்பதில்லை. அன்பே அங்குப் பிரதானம்.

கொங்கு நாட்டில் கன்னட கேரள எல்லையில் இந்தக் கோவில் மகா விஷேசம். அங்கு எல்லோருக்கும் காவல் இவளே, அவளை மீறி எதுவும் நடவாது, முழுச் சக்திவாய்ந்த தெய்வம்.

கேட்டவரம் கிடைப்பதாலும் முழு நம்பிக்கையாய்ச் சரணடபவர் யாராயினும் காக்கப்படுவதாலும் அன்னையே தேடிச் சென்று தன் பக்தர்களை அழைப்பதாலும் எப்போதும் பெரும் கூட்டம் கூடும் கோவில் இது.

மகா சக்திவாய்ந்தவள் அவள், பக்தர்களைக் காக்க எந்த எல்லைக்கும் செல்பவள் அந்தத் தாய்.

இங்கு விபூதி குங்குமமெல்லாம் கிடையாது. புற்று மண்தான் பிரசாதமாகத் தரப்படுகிறது, எக்காலமும் இதுதான் நடைமுறை.

இந்த ஆலயத்தின் மாபெரும் வழிபாடு அக்னி குண்டத்தில் இறங்குதல், இது காலம் காலமாக நடக்கும் வழிபாடு.

பங்குனி மாதம் நடக்கும் பெரும் விழாவில் பக்தர்கள் காடுகளுக்குப் போய் மரம் வெட்டி (இது கரும்பு வெட்டும் சம்பிரதாயம் என்பார்கள்) கொண்டு வந்து குவித்து அவற்றை எரித்து 8 அடி நீளம் கொண்ட அக்னிக் குண்டம் உருவாக்குவார்கள்.

முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார். பின்பு இலட்சக்கணக்கான பக்தர்கள் அக்னிக் குண்டம் இறங்குவார்கள், அவர்களோடு அவர்கள் ஆடுமாடுகளும் அக்னிக் குண்டம் இறங்கும்.

இந்த ஆலயம் மிக அழகிய கோபுரத்துடனும் உள்ளே அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் ஆகியவை உண்டு.

பங்குனி மாதம் பெருவிழா என்றாலும ஒவ்வொரு நாளும் அங்குக் குவியும் பக்தர்கள் பல்லாயிரம். ஆடிமாத வழிபாடு சாலச் சிறந்தது.

அங்கு நடந்த அற்புதங்களுக்கும் நடக்கும் நம்பமுடியா ஆச்சரியங்களுக்கும் சாட்சிகள் ஏராளம். மகா சக்தியாக ஒவ்வொருவரையும் அவள் வழிநடத்தி காத்து வருவாள்.

இது காட்டில் இருந்தாலும் மருத்துவவசதி உள்ளிட்ட எல்லா வசதியும் கொண்ட அற்புத ஆலயம், உணவுக்கும் தங்குமிடத்துக்கும் அங்குப் பஞ்சமே இல்லை.

அன்று ஆடுமாடு மேய்ந்த பகுதி என்பதால் இன்றும் அவற்றுக்கு முன்னுரிமை உண்டு, மாடுகள் தானே வந்து நீர் அருந்தும். சில நேரம் காட்டு யானைகளும் இரவில் அப்பக்கம் வரும் ஆனால் யாரையும் தொந்தரவு செய்வதில்லை.

இந்த ஆலயம் பெரும் தாத்பரியங்களைக் கொண்டது, நுணுக்கமான தத்துவங்களையும் கொண்டது.

தெற்கு நோக்கி அம்மன் அமர்ந்த கோலம் என்பது முன்னோர்கள் வழிபாட்டைச் சொல்வது, எமதீபம் முன்னோர்க்கான தீபத்தை தெற்கு நோக்கித்தான் ஏற்றுவார்கள். ஆக, அவள் ஆலய வழிபாடு, குலதெய்வ வழிபாட்டுக்கு ஈடானது.

அவள் வனதேவதை அம்சம், மகா சக்திவாய்ந்த அம்சம். மனிதன் முதலில் காட்டில்தான் வாழ்ந்தான், பின்புதான் சமவெளிகள் தேடி வந்து ஆற்றங்கரையில் குடியிருந்தான்.

இவள் வனதேவதையாக இருந்து அருள்வதும் அந்தக் குலதெய்வ ஆதிதெய்வ தத்துவமே. வனத்தில் மனிதன் வழிபட்ட அந்த ஆதிகாலத்தில் இருந்து இன்றுவரை தன் பக்தர்களைக் காத்துவருவதை சொல்லும் தத்துவம் அது.

ஆதிமனிதன் காட்டில் இருந்ததால் அவளே எல்லாருக்கும் குலதெய்வமுமாகின்றாள். இதனால்தான் உலகில் எந்த மூலையில் இருப்போரையும் தன் சக்தியால் அவளால் ஈர்க்க முடிகின்றது.

அவள் அங்கு ஆடுவது எல்லாமே ஞானமுள்ள நாடகம், பாடம் சொல்லும் நாடகம்.

அவள் காட்டுவழி பயணிகளுக்குத் துணையாய் வந்தாள் என்பது ஆபத்தான மானிட வாழ்க்கையில் அவள் ஒவ்வொருவருக்கும் துணையாய் வந்து கரைசேர்க்க காவலிருப்பாள். நம் கர்மம் கழிக்க வைத்து கரை சேர்ப்பாள் எனும் போதனை.

சலவைத்தொழிலாளிக்கு மகளாய்ப் பிறந்தாள் என்பது நமது பாவங்களை எல்லாம் போக்கி, நம்மை நம் ஆத்மாவினைச் சலவை செய்து நம்மைப் புது பிறப்பாக்குவாள், பாவ அழுக்கை எல்லாம் போக்கி நம்மை புதிதாக்கி வாழவைப்பாள், நம் வாழ்வை அழகாக்குவாள் என்பது.

அவள் ஆலயத்தில் நடக்கும் அக்னி குண்ட இறக்கம் அறிவியல் ஆன்மீகம் சார்ந்தது.

தீ மிதித்தல் என்பது உடலுக்கு நல்லது என்பது மருத்துவத்தில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. மேல் நாடுகளில் இதெல்லாம் இப்போது பின்பற்றப்படுகின்றது, அதை அன்றே மக்களுக்கு உடல் நல ஆரோக்கியம் என‌த் தந்த ஆலயம் இது.

அப்படியே வாழ்க்கை ஒரு நெருப்புப் பாதை, அம்மன் அருளால் அதைத் தாண்டிவரலாம், வாழ்க்கை எனும் பெரும் வலிகொடுக்கும் காலத்தை, சுட்டுப் பொசுக்கும் வினைகள் நிறைந்த பிறப்பை அன்னை தாண்டவைப்பாள், பிறவி நெருப்பில் நம்மை எரியவிடமாட்டாள் என்பதைச் சொல்லும் தத்துவம் அது.

மிகுந்த சக்தி கொண்டவள் அன்னை. மக்கள் பக்தர்கள் மட்டுமல்ல, அரச நிர்வாகத்தில் வரும் தடங்கல் சிக்கல்களுக்காக அங்கு அதிகாரிகளே வந்து நேர்ச்சை செய்வதும் பின் அதனை நிறைவேற்றுவதும் வழமை.

இந்த அன்னையினை ஆடிமாதம் விளக்கேற்றி வணங்குதல் நல்ல பலனைத் தரும். அப்படியே அவளுக்குப் பாலூற்றி வழிபட்டால் கூடுதல் பலன், மனமகிழ்ந்து அவள் உங்களை ஆசீர்வதிப்பாள்.

எந்த இடத்தில் இருந்தாலும் அவளை மனமார நினையுங்கள். முன்னோர்களின் தெய்வமாக, குல தெய்வமாக அவளே வந்து உங்களைக் காத்துத் தன் கோட்டைக்கும் அழைத்துச் சென்று நல்வாழ்வும் காவலும் தன் பெரும் கருணையில் தருவாள். இது சத்தியம்.

மாரியம்மன் ஆலயங்கள் 05 : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ஆலயம் .

இந்தியாவின் ஆதிகால தெய்வங்கள் குறிப்பாகக் கிராமங்களின் தெய்வங்களாக இருந்தவை மாரியும் காளியும். இரண்டும் பொதுவாக மாரியாத்தா, மகமாயி எனக் கொண்டாடப்பட்டாலும் இருவருக்கும் நுணுக்கமான வேறுபாடு உண்டு.

ஒரு ஊரின் முதல் தேவை நீராதாரம், அது மழையால் வரும், அதை வழங்குபவள் மாரி. அடுத்த அவசியம் எல்லா வகையிலும் காவல், அதைத் தருபவள் காளி. இப்படி ஒரே சக்தி இரு அத்தியாவசிய வரங்களைத் தருவதால் அவர்கள் இரு பெயரில் கொண்டாடப்பட்டனர்.

இங்குக் காளி என்பவள் எல்லையில் நிறுத்தபடுவாள், மாரியம்மன் ஊருக்குள் வழிபாடு பெறுவாள். இது காலத்தால் மூத்த ஏற்பாடு, இதன் பின்பே இதர வழிபாடுகள் வந்தன‌.

அப்படிப் பாண்டிய நாட்டின் மூத்த தெய்வம் இந்த அம்மன், பாண்டிய நாடு முழுக்க முழுக்க அன்னை சக்தி தேவி வழிபாட்டினைக் கொண்டது. மீனாட்சியம்மன் அங்குத்தான் அவதரித்தாள். அப்படிப்பட்ட பாண்டியர்கள் அன்றைய மேற்கு எல்லையில் இன்றைய திண்டுக்கல்லில் இந்த அம்மனை நிறுத்தினார்கள், பாண்டிய நாட்டின் காவல் தெய்வமான அவளுக்கு இராஜராஜேஸ்வரி எனப் பெயர், மன்னர்களால் அவள் இப்பெயரில் வழங்கப்பட்டவள்.

இது முன்னெடுங்காலத்திலே உருவான ஏற்பாடு, அன்னையினை அங்குப் பாண்டியர்களே முதலில் நிறுத்திக் காவல் தெய்வமாக வழிபட்டார்கள். ஜடாவர்ம சுந்தரபாண்டியன் காலம் அவன் சந்ததிகள் காலம் வரை அது நீடித்தது.

இந்த அன்னையினைக் கல்லில் செய்து யாரும் பெயர்க்கமுடியாதபடி மிக இறுக்கமாக அன்றே ஸ்தாபித்து வணங்கினார்கள், விமரிசையான கொண்டாட்டங்கள் அவளுக்கு இருந்திருகின்றன‌.

அங்குப் பாண்டியர் சிறிய கோட்டைக் கட்டி அவளை வழிபட்டிருக்கின்றனர், அந்தக் கோட்டைக்கும் பாண்டிய நாட்டுக்கும் அவள் காவலாய் நின்றிருந்தாள்.

அந்தக் கோட்டையில் பல சுரங்கப்பாதைகளைப் பாண்டியர் நிர்மாணித்தார்கள். பழனி வரை அந்தச் சுரங்கம் நீளும், இப்போதும் அது உண்டு.

மதுரையில் பாண்டியர் வீழ்ந்து சுல்தானிய ஆட்சி வந்த காலங்களில் இந்தக் கோட்டையும் கோவிலும் பாழடையத் தொடங்கியது. பின் நாயக்கர் ஆட்சி வந்த காலங்களில் சிறிய ஆலயம் இருந்திருக்கின்றது.

16 ஆம் நூற்றாண்டில் பிஜப்பூர் சுல்தானிய ஆட்சி இப்பக்கம் வரை வந்தபோது எல்லாம் பாழ்பட்டிருக்கின்றது. அன்னையின் கோவில் அழிந்து போனது. ஆனால், அவள் சிலை மட்டும் நகரவில்லை, அதை யாராலும் தொடமுடியவில்லை.

பின், வீரசிவாஜியின் ஆட்சியில் இந்த ஆலயம் மீண்டும் துலங்கியிருக்கின்றது, சாம்பாஜியும் இதர மராட்டியர்களும் அதனை வணங்கியிருகின்றார்கள்.

ஆனால், சிவாஜியின் இந்துராஜ்ஜியம் மொகலாயருடன் வடக்கே மோதிய காலங்களில் தெற்கே மறுபடியும் ஒரு சுல்தானிய குழப்பம் வந்தது, அது ஐதர் அலி.

அவன் காலங்களில் இந்த ஆலயம் பாழ்பட்டிருக்கின்றது. பின், திப்பு வந்து இந்தக் கோட்டையினை மீளக் கட்டியிருக்கின்றான், அம்மன் வழக்கம் போல் தனித்துக் கவனிப்பற்று நின்றிருக்கின்றாள்.

அந்நேரம் அவன் படைவீரர்கள் அங்குத் தங்கிப் பயிற்சி எடுப்பதும் அணிவகுப்பதும் இதர தயாரிப்புக்களைச் செய்வதுமாக முகாம் அமைத்திருந்தார்கள், அந்த வீரர்களின் கனவில் வந்து அன்னை தன்னை வெளிப்படுத்தினாள்.

“நான் இந்தக் கோட்டைக்குச் சொந்தக்காரி, எனக்கான வழிபாட்டினைத் தொடங்க வேண்டும்” என அவள் ஆணையிட்டாள், அதன்படி அங்குச் சிறிய கோவில் கட்டப்பட்டது, அதற்கான ஒரு மடமும் அமைக்கப்பட்டது.

திப்பு பிஜப்பூர் சுல்தானியத்தை மீளக் கட்ட எழும்பிய சுல்தான், அவனே இந்த அன்னைக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றான், அவள் அப்போது காட்டிய உக்கிரம் அப்படியானது.

அவன் காலத்தில் இருந்து வழிபாடுகளும் கொண்டாட்டமும் தொடங்கிற்று. பாண்டியர் காலத்தில் உருவான அந்த அன்னைதான் இன்றும் அங்கு நிலைகொண்டிருக்கின்றாள். இன்றும் அந்த விக்ரக அடிப்பாகம் எவ்வளவு ஆழத்தில் புதைத்திருகின்றது என்பது யாருக்கும் தெரியாது.

இவளிடம் கேட்டவரம் எதுவும் பொய்த்ததில்லை, எல்லா நோய்களும் அவள் சந்நிதியில் தீருகின்றன என்பதால் அவள் அன்றே சக்திவாய்ந்த தெய்வமானாள், எல்லா இடமும் அவள் புகழ் பரவிற்று.

கோட்டையின் முன்பே அமைந்திருப்பதால் அவள் கோட்டை மாரியம்மன் என்றானாள்.

இந்தக் கோவிலுக்குச் சிறப்பு வாயில்கள் மூன்றும் முன்புற வாசல் அம்மன் புறப்பாட்டுக்கும் பக்தருக்குமானது, பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது.

சன்னதியின் உட்புறத்தில் நூழைவாயில் தாமிரத்தாலான‌ கம்பம் அமைந்துள்ளது. அம்மன் சந்நிதி, அம்மன் தெற்குப்பக்கம விநாயகர் கோவிலும், வடக்குப்பக்கம் மதுரைவீரன் சாமிக்கோயில், முன்புற வடக்கில் நவக்கிரங்கள், பின்பக்கம் தென்புறம் மூனீஸ்வரசுவாமி சந்நிதி உண்டு.

வடக்குப் பக்கம் கருப்பண்ணசாமி சந்நிதி உள்ளது. காளியம்மன் சந்திதி துர்கை சந்நிதி உண்டு.

காளியின் அம்சமாகவும் கனகதுர்க்கை சாயலிலும் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் அவளின் கம்பீர அழகைக் கண்டோர் வாழ்நாளில் அதை மறக்கவே முடியாது,

அப்படி ஒரு அழகான கம்பீரமான உருவம் அவளுடையது.

எட்டுக் கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கைகளில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவை ஏந்தி அவள் நிற்கும் கோலம் பெரும் காவலைத் தரும்.

இந்த அம்மன் கோவிலில் எந்தக் கோவிலும் இல்லாச் சிறப்பு ஒன்று உண்டு, அது பெருமாளின் தசாவாதரங்களைத் தேவியின் வடிவில் சொல்வது.

அதாவது, தேவி பத்து அவதாரங்களிலும் பகவானின் சக்தியாக இருந்தாள் என்பதை இந்தக் காட்சிச் சொல்கின்றது. இந்த ஆலயத்தில் மாசித் திருவிழா இருபது நாட்கள் நடக்கும், அந்தத் திருவிழாவில்தான் இந்த தசாவாதாரக் காட்சி நடக்கும்.

அம்மனின் காளி, மச்ச, கூர்ம, கிருஷ்ணர், ராமர், காளிங்கநர்த்தனம், மோகினி என எல்லாக் கோலமும் வரும்.

சுருக்கமாகச் சொன்னால் ஆதிபராசக்தி எப்படி உலகைப் படைத்துக் காத்து வருகின்றாள் என்பதை மிக நுணுக்கமாகச் சொல்லும் கொண்டாட்டம் இது.

இந்தக் கோவில் பருவகால மாறுதல்களைச் சூரியனின் இயக்கத்தைத் துல்லியமாகச் சொல்லும் ஆலயம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 9, 10, 11 ஆகிய நாள்களிலும் அக்டோபர் மாதம் 2, 3, 4 ஆகிய நாள்களிலும் காலை 6.20 மணி முதல் 6.40 மணி வரை சூரியனின் செங்கதிர்கள் மாரியம்மனின் திருமுடிமீது பட்டு முகத்தில் இறங்கி ஜொலிக்கும் அபூர்வக் காட்சி நடைபெறும்.

சூரியனின் வடதிசை, தென் திசை நகர்வுகளை அளவிடும் நுட்பம் இந்த ஆலயத்தில் உண்டு. அன்னை சூரியனின் இயக்கு சக்தி என்பதை ஆழமாகச் சொல்லும் காட்சி இங்கு உண்டு.

நோய் நொடி நீங்க மஞ்சளும், உப்பும் கொடி கம்பத்தடியில் பக்தர் இடும் நேர்ச்சையும் சம்பிரதாயமும் இங்கு உண்டு.

கொடிஏற்றும் நாளில் அம்மனைக் குளிர்விக்க பெண்கள் புனிதநீர் அபிஷேகம் செய்யும் வைபவம் உண்டு.

தீச்சட்டி ஏந்தி குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுதினமும் வழிபட்டால் குழந்தைபாக்கியம் தவறாமல் கிடைக்கும்.

முளைப்பாரி, அங்கப்பிரதட்சணம், தொட்டில் கட்டுவது, உப்பு – மிளகுக் கொட்டுவது, மலர் பந்து சாத்துதல், தீச்சட்டி ஏந்துவது, பூக்குழி இறங்குவது, கரும்புத் தொட்டில் சுமப்பது, மாவிளக்கு ஏற்றுதல் என இங்கு எல்லா வகையிலும் பக்தர்களின் நேர்ச்சையும் காணிக்கையும் நடந்து கொண்டே இருக்கும்.

மாசி மாதம் பெரு விழா என்றாலும் ஆடி மாத வெள்ளி, செவ்வாய், ஞாயிறு பூஜை இங்குப் பிரசித்தி. அது போக மண்டகப்படி விழா, பூக்குழி விழா ஊஞ்சல் உற்சவம், தெப்போற்சவம் எனக் கொண்டாட்டம் அதிகம்.

தெப்ப திருவிழாவின்போது மாரியம்மன் சயனக்கோலத்தில் காட்சியளிப்பாள். இது பாற்கடலில் பரந்தாமன் பள்ளி கொள்வதை சொல்லி அன்னை அவரை இயக்கும் சக்தி என்பதைச் சொல்லும் தத்துவம்.

இந்த அன்னை எல்லா மக்களையும் அரவணைப்பவள். திண்டுக்கல் பக்கம் அவளின் இராஜாங்கமே. அவள் திருவிழாவில் வழிபாட்டில் இந்துக்கள் மட்டுமன்றி இஸ்லாமியர் கிறிஸ்வர்களும் திரளாகப் பங்கேற்பார்கள், அவர்கள் இவளைத் தங்கள் தாயாக கருதிக் கொண்டாடுகின்றார்கள்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மகா சக்திவாய்ந்தவள் என்பதற்கு அங்குக் கூடும் இலட்சகணக்கான மக்கள் சாட்சி, மாசித் திருவிழாவில் 30 லட்சம் மக்கள் திரண்டதாக செய்திகள் உண்டு. அந்த அளவு உலகெல்லாம் பக்தர்களை ஈர்த்துக் காத்து வருபவள்.

ஆடிமாதம் அவளை நினைத்து வணங்குதல் நன்று, அவள் உங்கள் வாழ்விற்குக் கோட்டைச் சுவர் போல் காவலிருப்பாள், தன் காவலுக்குள் உங்களை வைத்து காத்துக் கொள்வாள், உடல் உபாதைகள், தொல்லைகள் எதுவும் உங்களை அணுகாது.

அவள் பாண்டிய நாட்டின் காவல் தெய்வமாக வந்தவள். இப்போது தன்னை நம்பும் ஒவ்வொருவரையும் காத்து நிற்கும் கருணைமிக்க மாரியம்மனாக அருள்மழை பொழிபவள், அவளைப் பணிவோர்க்குக் கோட்டைக் கட்டி ஆளும் பெரும் வரமும் பலமும் அவள் தருவாள்.

எல்லா நோய்களையும் தீர்த்து வைப்பதால் அவள் “மகா மருத்துவச்சி” எனக் கொண்டாடப்படும் அந்த அன்னை ஆடிமாதத்தில் எல்லா நலனையும் எல்லா மக்களுக்கும் தன் காவலைத்தந்து காத்து வரட்டும்.

அவளை அண்டி பணிவோர்க்கு ஒரு குறையும் வராது. எந்த குறையென்றாலும் அது தீர்ந்து அவர்கள் நிறைவாழ்வு வாழ்வார்கள். இது சத்தியம்.

மாரியம்மன் கோவில் ஆலயங்கள் 06 : நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள்.

செட்டிநாட்டு அம்மன் தலங்களில் சக்திவாய்ந்த அம்மன் ஆலயம் இந்தக் கண்ணாத்தாள் ஆலயம், அதன் தொன்மை நீண்டது. கம்பன் காலத்துக்கும் மூத்தது‌. அம்பாள் நின்று பேசும் அந்த ஆலயம் உடல் உள்ள நலன்களை அனுதினமும் சூரியன் போல் வீசிக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது, தாய் போல் நின்று அம்பாள் காவலிருந்து மக்களைக் காக்கும் தலம் இது.

இந்த ஆலயம் முற்காலத்தில் இருந்தது. பின், சமண பௌத்த காலங்களில் அது புதையுண்டுப் போனது. நாட்டரசன் கோட்டையின் தெற்கே ஒரு கல் தொலைவில் உள்ள பிரண்ட குளம் எனும் ஊர் அருகே இத்தலம் அமைந்துள்ளது.

அக்காலம் அம்மை நோயும், இதர பல நோயும் தாக்கிக் கொண்டிருந்த காலம். மக்கள் தங்களுக்கு ஒரு வழியில்லை, காவலுமில்லை எனக் கலங்கிய காலம், அப்படியான நேரத்தில் இவ்வழியில் பால் தயிர் கொண்டுவரும் மக்கள் பலா மரம் அருகே வரும்போது தடுக்கி விழுந்திருக்கின்றார்கள்.

ஒரு கல் தங்களைத் தடுப்பதாக எண்ணி அதை எடுத்து அகற்றத் தோண்டினார்கள். அப்போது கல்லில் கடப்பாரை பட்டு இரத்தம் கொட்டிற்று. விஷயம் அறிந்த அந்த ஊர் தலைவர் மலையரசன் வந்து அது கல் அல்ல அம்மன் என அறிந்து சில பூஜைகளைச் செய்து அம்மனை வெளிக்கொணர்ந்தார்.

அந்நேரம் எனக்கோர் கோவில் கட்டுங்கள், நான் உங்களைக் காப்பேன் என அசரீரியாகக் குரல் கேட்டது, மக்கள் என்ன செய்யலாம் என ஆலோசித்து மன்னரை நோக்கிச் சென்றார்கள்.

அதே நேரம் மன்னனும் அந்த பிரண்டகுளம் நோக்கிச் செல்ல தயாரானான். காரணம், அவன் கனவிலும் முந்தையநாள் வந்த அம்மன் “நான் பிரண்ட குளம் அருகில் பலாமரத்துப் பக்கம் அமர்ந்திருக்கின்றேன், மக்கள் உன்னைத் தேடிவருவார்கள், அவர்களைப் பின்பற்றி வந்து எனக்கான கோவிலைக் கட்டுவாய்” எனச் சொல்லியிருந்தாள்.

இதனால் மன்னன் மறுவார்த்தையின்றி அவர்களோடு சென்று அம்மனை வழிபட்டான். அந்நேரம் ஒரு அதிசயமும் நிகழ்ந்திருந்தது. அதாவது, அம்மன் தோண்டி எடுக்கப்பட்டபின் அவளைக் கிழக்கு நோக்கித்தான் வைத்திருந்தார்கள், ஆனால் மன்னன் மக்களோடு வரும்போது அவள் வடக்கு நோக்கித் திரும்பியிருந்தாள்.

அவள் விருப்பம் அது என்பதால் அவளை அப்படியே ஸ்தாபித்துச் சிறிய கோவிலும் கட்டி நகைகளெல்லாம் கொடுத்து வழிபாட்டைத் தொடங்கினான் மன்னன்.

வடக்கு நோக்கி அமைந்திருக்கும் ஆலயம் இது.

அப்போதிலிருந்து அந்த ஆலய வழிபாடு தொடங்கிற்று. பக்தர்களைக் கண்போல் காப்பதாலும், கண் பார்வை வரம் வழங்குவதாலும் அவள் கண்ணாத்தாள் எனக கொண்டாடப்பட்டாள்.

வடக்கு நோக்கிய கோவில்கள் முக்தியும் ஞானமும் இதர வளமெல்லாம் தருபவை. காசி விஸ்வநாதர் ஆலயம் வடக்கு நோக்கித்தான் அமைந்துள்ளது. மிக மிகச் சொற்ப ஆலயங்களே அப்படி உண்டு. இது ஆகமவிதிப்படி மகா சக்திவாய்ந்த ஆலயம், குபேர திசையான வடக்கு நோக்கி இமயத்தை நோக்கி அமைந்திருக்கும் ஆலயங்கள் மிக மிகச் சூட்சுமமான சக்தியினினை, ஐஸ்வர்யத்தினைத் தருபவை, இந்த ஆலயம் அதில் ஒன்று.

அன்னை குடியிருந்து ஆட்சிச் செய்யும் இந்த ஆலயம் அழகானது, அற்புதமானது.

ஐந்துநிலை இராஜகோபுரம் கொண்ட இந்த ஆலயம் முன்பு கோவில் குளம் படிதுறையுடன் உண்டு.

அன்னையின் அருள் பெற்ற நீர் சக்தி மிக்கது என்பதால் இந்த நீரை அருந்தினால் நோய்கள் தீரும், கண்ணில் இட்டால் கண் நோய்கள் அகலும், பார்வை கிடைக்கும். இந்த கோவில் அருகே அமர்ந்திருக்கும் விநாயகரைத் தொழுதபின்பே கோவிலுக்குள் வரவேண்டும்.

இந்தக் குளத்தின் நீரை எடுத்துத் தலையில் தெளித்துக் கொஞ்சம் அருந்தி கண்களிலும் இட்டு விநாயகரைத் தொழுது அன்னையினைக் காணச் செல்லுதல் வேண்டும், இன்றுவரை இது மரபு.

கோவிலுக்குள் முதலில் சொக்கட்டான் மண்டபம் உண்டு. பிரமாண்டமான இந்த மண்டபம் அழகான சிற்பங்களைத் தாங்கி நிற்பது. இந்த மண்டபத்தில்தான் அன்னையிடம் நோய் தீர வேண்டுவோர் வைக்கும் உப்பும் மிளகும் இடுவதற்கான இடம் உண்டு.

கண் நோய் முதலான சிக்கல்கள், இன்னும் பல நோய்கள் கொண்டவர்கள் 48 நாட்கள் இம்மண்டபத்தில் தங்கிக் குளத்தில் நீராடி அம்மனை வழிபட்டு நலமடைவார்கள், சாட்சிகள் ஏராளம்.

(இப்போது குளத்தில் நீராட அனுமதியில்லை என்றாலும் பக்தர்கள் தங்கியிருந்து வழிபடுவது உண்டு)

இந்தச் சொக்கட்டான் மண்டபத்தை அடுத்து மகா மண்டபம் உண்டு. அடுத்து அர்த்த மண்டபம், அங்கே அனுக்ஞை விநாயகர் அமர்ந்திருப்பார், அருகே அம்மனின் உற்சவத் திருமேனியான ‘களியாட்டக் கண்ணாத்தாள்’ திருக்கோலம் உண்டு.

இதை அடுத்துக் கருவறையில் அன்னை உத்குடி ஆசனத்தில் அமர்ந்திருக்கிறாள் அம்மன், அன்னையின் வலது பாதம் பீடத்தின் மேல் ஊன்றிய நிலையில் இருக்க, இடது திருவடி, கீழே சண்டாசுரனின் தலை மேல் இருக்கிறது.

ஆம். சண்டாசுரனை வதம் செய்த கோலத்துடன் வலதுகாலை மடித்து இடது காலை தொங்கவிட்டபடி அவள் அமர்ந்திருக்கின்றாள். இது இந்த ஆலயம் என் கோட்டை, நான் குடியிருக்கும் சொந்த ஆலயம் என்பதைச் சொல்லும் கோலம்.

ஒரு வகையில் இக்கோலம் நிசும்ப மர்த்தினி கோலம், எட்டுத் திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள். ஆறு கிளி, பாசம், வாள், உடுக்கை, கேடயம், மணி முதலியவற்றை ஏந்தி, உயர்த்திய வலது மேற்கரத்தில் சூலம் தாங்கி, இடது கீழ்க்கரத்தில் பான பாத்திரமும் தாங்கிய திருக்கோலம் கொண்டிருக்கின்றாள்.

முத்தாரமும் தாலியும் அணிந்து சூலத்தைச் சண்டனை நோக்கி நீட்டியபடி அமர்ந்திருப்பவள், ‘ஜ்வாலா கேசம்’ (அக்னி மகுடம்) என்னும் கதிர் மகுடம் அணிந்திருக்கின்றாள், அவள் கொஞ்சம் மெல்ல தலைசாய்ந்து பார்க்கும் அந்தப் பார்வைக்கு உலகில் ஈடேதுமில்லை.

தாய் தன் பிள்ளைகளை மெல்ல தலைசாய்த்துக் காணும் பாசத்தின் பார்வை அது.

அன்னையின் எதிரே பெண் வடிவு கொண்ட வேதாள வடிவம் ஒன்று, அவள் பெயர் ஆதி வேதாள நாயகி, அவள் வேதாள கொடி கொண்டு அமர்ந்திருக்கின்றாள்.

இதன் அருகே மகா மண்டபம் உண்டு. அங்குக் கொடிக்கம்பம் அமைதிருப்பதால் அதனைக் கம்பத்தடி மண்டபம் என்பார்கள்.

மண்டபத்தின் வடப்புறம், வீரபத்திர சுவாமியும், சிறு வடிவில் காளியும் அமர்ந்திருப்பார்கள். கிழக்கே பைரவர் உண்டு. உள் மற்றும் வெளிப்பிரகாரம் கொண்ட ஆலயத்தின் கன்னி மூலையில் அபிஷேக விநாயகர் அமர்ந்திருப்பார்.

இந்த ஆலயம் மகா சக்தி வாய்ந்தது. கண் பார்வை கோளாருக்கும் இன்னும் பலவிதமான நோய்களுக்கும் மிக மிகப பிரசித்தியானவள். மானுடர்க்கு மட்டுமல்ல இங்கு யானைக்கும் இன்னும் விலங்குகளுக்கும் கண் பார்வை கிடைத்த அதிசயம் உண்டு.

இந்த ஆலயம் செட்டியார்களின் குல ஆலயம் என்பதால் அவர்கள் இடும் நகைகளும் வைர அட்டிகைகளும் அதிகம். அவளின் அலங்காரத்தில் பிரசித்தியான கண்டிகை மாலை விலைமதிப்பற்றது. இந்த நகைகளை திருட வந்தவர்கள் அன்னையின் எல்லையிலே கண்பார்வை இழந்ததும் பின் மன்னிப்புக் கேட்டு பார்வை பெற்றுத் திரும்பியதும் கண்கண்ட சாட்சிகள், ஆதாரம் நிரம்ப உண்டு.

இந்த ஆலயத்தில் வைகாசி மாதம் பெரும் விழா, ஆடிமாதம் முளைப்பாரி விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா என நிரம்ப உண்டு என்றாலும் முக்கியமான விழா “களியாட்டத் திருவிழா”.

இது பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கும்பகோண மாகமகம் போல விசேஷமாக கொண்டாடப்படும், மகா மக சாயல் இது.

குரு பகவான் 12 ஆண்டுகளில் 12 இராசிகளையும் ஒரு சுற்று முடித்து புதிதாகத் தொடங்குவார், இதனைச் சூட்சுமமாக இந்த விழா சொன்னாலும் இதைச் சொல்லி கொடுத்தது அம்மனே.

அன்னை தன்னை வெளிக்காட்டும் போது தனக்கு 12 ஆண்டுக்கு ஒருமுறை இந்த விழா எடுக்கச் சொன்னாள், அதுவும் பரம்பரை காளிக்கோவில் பூசாரி குலப் பெண்கள், உவச்சர் குலப் பெண்களே தனக்கு அந்த விழா எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டாள். அதனால் இன்றுவரை அந்தக் குலப் பெண்கள்தான் இந்தக் களியாட்ட விழாவினை நடத்துகின்றார்கள்.

களிநாட்ட நாயகியின் அந்தப் பெருவிழா 12 வருடத்துக்கு ஒருமுறை நகரத்தாரால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். எக்காலமுமுள்ள மரபு இது.

இந்த அன்னை எல்லா நலன்களையும் வழங்குவாள், வடக்கு நோக்கி அமர்ந்திருப்பதால் பெரும் ஞானத்தை கூர்மையான தெளிவினையும் அருள்வாள்.

அப்படிக் கம்பனுக்கு அருளினாள், கம்பன் இங்கு வழிபட்டான். அடிக்கடி வழிபட்டிருக்கின்றான். ஒரு வகையில் அவனை ஆதரித்த சடையப்ப வள்ளல் இங்கேதான் இருந்தான் என்பதும் சில குறிப்புகளில் உண்டு.

கம்பனின் சமாதி இந்தப் பக்கமே அமைந்துள்ளது, கம்பன் இங்கு வாழ்ந்தான் என்பதை அவன் வரிகளும், அந்த வரிகளின் மூலக் காட்சியுமே சொல்கின்றது.

இங்கு வந்த கம்பன் சாப்பிடுவதற்காக அவ்வூர் மக்களிடம் ‘சோறு எங்கு விற்கும்?’ என மாடுமேய்ப்போரிடம் கேட்க, ‘சோறு தொண்டையில் விக்கும்!’ என்று அவர்கள் பதில் கொடுக்க சிரித்தான் கம்பன். இந்த மக்களிடம் ஞானமிருப்பதை அறிந்தவன் அது அம்பிகையின் அருளால் என உணர்ந்தவன் பாடினான்.

‘காட்டெருமை மேய்க்கின்ற காளையர்க்கு நான் தோற்றேன்- இனி இந்
நாட்டரசன் கோட்டை நமக்கு’

ஆம். அவன் இவளை வணங்கினான். எங்கெல்லாமோ அவன் சுற்றினாலும் கடைசியில் அவள் பாதமே சேர்ந்தான், அவன் வரலாற்றில் பிரிக்கமுடியாதவள் இந்த அன்னை கண்ணாத்தாளே, அவனுக்கு கம்பராமாயணம் எழுதவும் வகை செய்தாள், அவளைத்தான் சரஸ்வதி எனக கொண்டான் கம்பன்.

இந்த ஆலயத்தின் இன்னொரு மகா முத்திரையும் அடையாளமுமானவர் அழுகுணி சித்தர்.

இவர் இந்த அன்னையினைத்தான் வணங்கினார், அவளே அவருக்குச் சித்த நிலையும் ஞானமும் கவிபாடும் வல்லமையும் அளித்தாள், அழகு அணி சித்தர் என்பது “அழுகுணி சித்தர்” என்றானது.

அவரின் பாடல்களில் அணி இலக்கியம் அவ்வளவு அழகாக அமைந்திருக்கும், அவர் இந்த அன்னையின் பக்தனாக இருந்தவர், ஏகப்பட்ட பாடல்களைத் தத்துவங்களைச் சொன்னவர், அவர் இந்த ஆலய அபிஷேக தொட்டியின் அடியில் சமாதி கொண்டிருக்கின்றார்.

“பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்
செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!
கண்குளிரப் பாரேனோ!”

என அழுகுணி சித்தர் அன்னையினைப் பாடி மகிழ்ந்த தலம் இது.

முத்துக் குட்டிப் புலவர் அன்னைக்காக ‘ஸ்ரீகண்ணுடையம்மன் பள்ளு’ எனும் நூலை இயற்றினார்.

‘பூணுமெழிற் காளி எதிர் பொருந்தவர் மெய் கண்ணில் காணவர முற்றமையால் கண்ணுடையாள்’ என அவளைப் போற்றுகின்றது காளையார்கோயில் புராணம்.

அன்னை இங்கு மட்டுமல்ல எல்லா இடமும் பிரசித்தியானவள். இவளை “நேத்திராம்பிகா” என வடமொழியில் கொண்டாடுகின்றார்கள்.

இந்த ஆலயத்துக்குச் சென்று வணங்கினால் அன்னையின் அருளில் எல்லாச் சிக்கலும் தீரும், கண் பார்வை சம்பந்தமான நோய்கள் உள்ளிட்ட எல்லாமும் தீரும், எல்லா வினையும் அகலும்.

கண்ணாத்தாள் என்றால் லௌகீகமான கண்பார்வை மட்டும் தருபவள் அல்ல, அவள் அகக்கண்ணை ஞானக் கண்ணைத் திறப்பவள்.

அவள் சண்டாசுரனை வதம் செய்யச் சென்றபோது முதலில் அவனை அழிக்கவில்லை, அவனின் அகக்கண்ணைத் திறந்து வந்திருப்பது யார் எனக் காட்டினாள், ஆனால் அவன் அகங்காரத்தில் அவளையே எதிர்த்தபோதுதான் அழித்துப் போட்டாள்.

ஆம். அன்னை ஞானக் கண்ணை திறப்ப்பவள், அகங்காரம் அழிப்பவள், அகக்கண் திறக்குமிடம் ஞானம் கிடைக்கும்.

அதுதான் கம்பனுக்கும் கிடைத்தது, அதுதான் அந்த அழுகுணி சித்தருக்கும் கிடைத்தது.

சண்டாசுர வதம் செய்த திருக்கோலம் என அவள் அங்கு அமர்ந்தாலும் அடிப்படையில் அவள் ஞானம் அருள்பவள்.

சித்தர்கள் வாக்குப்படி அவளே வாலையாக வந்து ஞானம் தந்து ஞானக்கண்ணைத் திறந்து ஒருவனைச் சித்தனாக்குபவள், அந்த அன்னையாக அவள் இங்கு வீற்றிருக்கின்றாள்.

அவள் ஆலயம் செல்லுங்கள், கண்மலர் சாற்றி அவளை வழிபடுங்கள்.

“முகம் பிந்தும் க்ருத்வ குசயுக மதத் தஸ்ய ததேதோ
ஹரார்த்தம் தாயேத் யோ ஹரே மகிஷி தே மந்மத கலாம்”

என்பது சௌந்தர்ய லலஹரியின் வரி.

“அன்னையே… ஒரு தாயாக உனக்கு எனக்கு என்ன தரவேண்டும் என்பது தெரியும், என்னை நீ கைவிடமாட்டாய். ஆனால், என் துயரங்களை உன்னிடம் கொட்டுவதில் எனக்கோர் நிம்மதியும் தைரியமும் வரும், என்னை தடுக்காதே” என்பது பொருள்.

அந்த அன்னையிடம் சென்று வணங்குங்கள், அவளை வணங்கும்போது கண்மலர் சாற்றி வணங்கி நில்லுங்கள், உங்கள் பார்வையே மாறும். லௌகீகமாக எல்லாமும் மாற்றும் அன்னை உங்கள் அகக் கண்ணை, ஞானக் கண்ணையும் திறந்து உங்கள் விதியினை மாற்றுவாள்.

அவள் ஆயிரம் கண்ணுடையாள் என்பது தோற்றத்தில் அல்ல, அவள் சூரியனாக, சந்திரனாக இன்னும் இந்தப் பிரபஞ்சத்தின் ஆயிரம் சக்திகளாக உங்களைப் பார்க்கின்றாள் என்பது, அதாவது எல்லா இடத்திலும் எல்லாமுமாக இருந்து உங்களைக் காக்கின்றாள் என்பது.

அன்னை பூமியில் இருந்து வெளிப்பட்டாள் என்பதும் ஒரு ஞானக்குறியீடு. ஒவ்வொருவர் மனதிலும் அவள் சக்தி உண்டு, அவள் மறைந்திருக்கின்றாள், அவளை ஞானத்தோடும் விருப்பத்தோடும் தேடும் போது தன்னை வெளிக்காட்டி ஒருவனைப் பெருமிடம் வரச்செய்கின்றாள்.

அதை எத்தனையோபேருக்குத் தந்தாள் கம்பனுக்கும் அழுகுணி சித்தருக்கும் இன்னும் பலருக்கும் தந்தாள், அவளை அண்டி வணங்கி நில்லுங்கள், அவள் மகா சக்தியாக உங்களிலும் வெளிப்பட்டு பெரும் இடம் தருவாள். இது சத்தியம்.

மாரியம்மன் ஆலயங்கள் 07 : வலங்கைமான் பாடைக்கட்டி மாரியம்மன்.

திருவாரூர் அருகே வலங்கைமானில் அமைந்துள்ளது அந்த பாடைக்கட்டி மாரியம்மன் ஆலயம், சீதளதேவி எனும் மாரியம்மன் ஆலயம், அவள் ஆலயத்தில் நடக்கும் பிரசித்தியான சம்பிரதாயம் காரணமாக அவள் பாடைக்கட்டி மாரியம்மன் என்றானாள்.

இந்த ஊரின் சிவாலயமும் பிரசித்தியானது. எல்லா ஊரிலும் சிவனின் இடது கையில் மான் இருக்கும். இங்கு வலது கையில் இருப்பதால் வலங்கைமான் என்றானது.

சீதளம் என்றால் குளிர்ச்சி, இவள் வெம்மையானவற்றைத் தணித்துக் குளிர்ச்சித் தருவாள். அது அம்மை நோய் என்றாலும் சரி, சுற்றுச்சூழல் வெப்பம் என்றாலும் சரி, மனதால் வரும் கொதிப்பு உணர்வுகளானாலும் சரி அவள் அதைத் தணித்துப் பெரும் ஆறுதல் தருவாள்.

அது சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம். அப்போது இப்பக்கம் தம்ப‌தியர் இருவர் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள், காத கவுண்டர் கோவிந்தம்மாள் என்பவர்கள் அவர்கள், இவர்களுக்குக் குழந்தையில்லை என்பது பெரும் குறையாயிருந்தது.

காத கவுண்டர் விளைவிக்கும் காய்கறிகளை அக்கம் பக்கம் சென்று விற்றுவருவது கோவிந்தம்மாளின் பணி, அவள் பக்திமிக்கவள், ஒரு குழந்தைக்காக தவமிருந்தவள்.

அப்படி அவள் அருகிருக்கும் புங்கஞ்சேரி எனும் கிராமத்துக்கு வந்தாள், அன்று விசேஷ நாள் என்பதால் எல்லாக் காய்கறிகளும் விரைவில் விற்றுத் தீர்ந்தன. அவள் கைகளில் பணம் குவிந்தது. நீராடி அருகிருக்கும் ஐயனார் கோவில் செல்லலாம், காணிக்கை வைத்து வணங்கலாம் என அவள் நினைந்து அவசரமாக நீராட குளத்துக்குச் சென்றாள்.

அது வெள்ளிக்கிழமை நாளாய் இருந்தது.

அந்நேரம் அந்தக் காட்சியினைக் கண்டாள். ஒரு அந்தணரும், அவர் மனைவியும் கைக்குழந்தையும் ஐயனார் கோவிலுக்குச் செல்வதை கண்டபடி நீராடினாள், அவள் நீராடிவிட்டுக் கோவிலுக்கு வந்தபோது அந்தணரையும், மனைவியினையும் காணவில்லை. இந்தப் பெண்குழந்தை மட்டும் கோவில் வாசலில் சிரித்தபடியே கிடந்தது.

பட்டுத்துணியில் அது கண்களில் மகிழ்ச்சி பொங்க சிரித்தபடி கைகால்களை ஆட்டியபடிக் கிடந்தது. அதைக் கண்டதும் அவளில் தாய்மை பொங்கி அதன் அருகிலே அமர்ந்து கொண்டாள், தாய் தந்தையர் வழிபட சென்றிருப்பார்கள் வருவார்கள் எனக் காத்திருந்தாள்.

ஆனால், அவர்கள் வரவில்லை. குழந்தை அழத் தொடங்கிற்று. அஞ்சியவள் ஊரை அழைத்தாள், எல்லோரும் வந்தார்கள். அக்குழந்தைக்குப் பாலூட்டிப் பசியடக்கினார்கள். குழந்தை உறங்க ஆரம்பித்தது.

இப்போது அது கோவிலில் கைவிடப்பட்ட குழந்தை, அதனால் அதை வளர்ப்பது யார் எனக் குழப்பம் வந்தது, கோவிந்தம்மாள் முந்திக்கொண்டு தான் வளர்ப்பதாக மடியேந்தி நின்றாள். அவளுக்கு அக்குழந்தை அவ்வளவு பிடித்திருந்தது.

ஆனால், ஊர் ஒப்புக்கொள்ளவில்லை. தங்கள் ஊரில் கிடைத்தக் குழந்தை இது, ஊர் ஊராகக் காய்கறி விற்பவள் எப்படிக் குழந்தையினை வளர்ப்பாள் என்றெல்லாம் வாதம் செய்து கடைசியில் ஊர் தலைவரே வளர்க்க ஏற்பாடானது, அவர் அந்த அழகு குழந்தையினை வளர்க்கத் தொடங்கினார்.

சில மாதங்களிலே அங்கு அம்மை நோயும் இதர நோய்களும் தாக்கின. அம்மையின் வீரியம் அதிகரித்தது. மனிதர்கள் மட்டுமல்ல கால்நடைகளும் வீழத் தொடங்கின, அஞ்சிய மக்கள் தெய்வத்தை நோக்கித் கதறத் தொடங்கினார்கள்.

அந்நேரம் அருள்வந்து ஆடிய அம்மன் வாக்கில் அவள் சொன்னாள், “இங்கிருக்கும் குழந்தையினை கோவிந்தம்மாளிடம் ஒப்படையுங்கள், அது அவள் வளர்க்க வேண்டிய குழந்தை, அதை நீங்கள் வளர்ப்பது தெய்வக் குற்றம்”

அதன் பின் ஊரே கூடிக் கோவிந்தம்மாளிடம் குழந்தையினை ஒப்படைத்தது, இந்த ஊர் நோயிலிருந்துவிடுபட்டது.

கோவிந்தம்மாள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதற்குச் “சீதள தேவி” அதாவது தன்னைக் குளிர்விக்க வந்தவள் எனப் பெயரிட்டு கண்ணின் மணிபோல் வளர்த்தாள், அவளின் வாழ்வில் வசந்தம் வீசிற்று.

ஆனால், சில மாதங்களில் அந்தக் குழந்தைக்கும் அம்மை நோய் வந்தது, வராது வந்த மாமணி வாடிக்கிடந்ததில் மனமொடிந்தாள் கோவிந்தம்மாள். என்னவெல்லாம் முடியுமோ அவ்வளவும் செய்தாள், எல்லாத் தெய்வத்திடமும் வேண்டினாள். ஆனால், விதி வென்றது.

அந்தக் குழந்தையும் இறந்தது. கண்பெற்று கண் இழந்த குருடிபோல் தவித்த கோவிந்தம்மாள் அந்தக் குழந்தையினைத் தன் வீட்டருகே புதைத்து அவள் நினைவிலே வீழ்ந்து கிடந்தாள்.

அவள் மனம் தெய்வத்தை வெறுத்தது, கோவிலில் கிடைத்த குழந்தையினைத் தெய்வம் பறித்துக் கொண்டதென அவள் கடும் வெறுப்பிலும் தீராச் சோகத்திலும் வீழ்ந்தாள்.

அவள் வீடு குடமுருட்டி ஆற்றின் அருகில் இருப்பது, அந்த ஆற்றில் குளித்துவிட்டு பலர் இவள் வீட்டோரமாக செல்வது வழக்கம், அப்படிச் செல்வோர் இவள் வீட்டை நெருங்கியதும் அருள் வந்து ஆடிச் சொன்னார்கள்.

“கோவிந்தம்மாளே, வந்தது அம்மன். அவள் ஒரு நாடகம் நடத்தி இங்கே குடிகொண்டிருக்கின்றாள், அந்த நாடகத்தில் நீ ஒரு கருவி, உன் ஜென்மா ஒரு கருவி.

அன்னை சக்தியினைச் சில காலம் நீ வளர்க்கும் பேற்றினைப் பெற்றாய், இவள் மாரியம்மன், இவள் இங்குச் சக்தியாய் எழுந்து நிற்கின்றாள், அவளுக்குக் கோவில்கட்டி வணங்கினால் இந்தப் பகுதியே பெரும் வளம் பெறும், பெரும் காவல் பெறும்” எனச் சொன்னார்கள்.

அந்தக் குழந்தை சமாதியில் எழுப்பப்பட்டதுதான் இந்த ஆலயம், ஓலைக் குடிசையாகத் தொடங்கப்பட்ட அந்த ஆலயம் பின் பெரும் ஆலயமாகப் பெரும் பெரும் அற்புதம் நிகழும் ஆலயமாக மாறி ஒளிவீசிக் கொண்டிருக்கின்றது.

திருக்கோயிலின் கருவறையில் எழுந்தருளியிருக்கின்றாள் சீதளாதேவி மகாமாரியம்மன். இவள் அமர்ந்த நிலையில் நாற்கரங்களுடன் அருள் பாலிக்கின்றாள். வலது மேற்கரத்தில் உடுக்கையும், இடது மேற்கரத்தில் சூலமும் உள்ளன. வலது கீழக்கரத்தில் கத்தியும், இடது கீழக்கரத்தில் கபாலமும் உள்ளன.

இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு அன்னை வீரசிம்மாசனத்தில் அமர்ந்துள்ளாள். இரு தோள்களின் மீதும் இரு நாகங்கள் உள்ளன.

இடதுகாலை மடித்த கோலம் என் பக்தர்களைக் காக்க நானே வந்து அமர்ந்திருக்கின்றேன் என்பது, அப்படித்தான் அவள் வந்து அமர்ந்தாள்.

இந்தச் சீதள தேவி அம்மனை எங்கிருந்து வேண்டினாலும் அவள் அருள் பாலிப்பாள், உலகின் எந்த மூலையில் இருந்தும் அவளை வேண்டினால் அதை ஏற்றுத் துயரம் தீர்ப்பாள், அவள் நிகழ்த்திய அற்புதம் நிரம்ப உண்டு என்றாலும் கடல் நீரைச் சிப்பியில் அள்ளுவதைப் போல சிலவற்றைக் காணலாம்.

புதுக்கோட்டை ஜமீனுக்குச் சில நோய்குறைபாடுகள், எதிரிகளின் தொல்லைகள், இன்னும் பல குழப்பங்கள் இருந்தன. அவர் அன்னையினை வேண்டி நின்றார். அவர் கனவில் வந்த அன்னை அவர் சர்ப்பக்காவடி எடுத்து வரவேண்டும் எனச் சொல்லிச் சென்றாள்.

ஆனால், சர்ப்பம் கிடைப்பது கடினமாக இருந்தது, அவர் அன்னையிடமே சொல்ல அவர் கனவில் மீண்டும் வந்த அன்னை “அஞ்சாதே சர்ப்பம் உன்னைத் தேடிவரும்” எனச் சொல்லி மறைந்தார்.

பின் ஜமீன் பங்குனி திருவிழாவுக்குச் சர்ப்ப காவடி எடுக்க முடிவு செய்தார். ஆனால், சர்ப்பம் வரவே இல்லை. சரி அவளிடமே முறையிடலாம் எனச் சென்றவர் வலங்கைமான் அருகே காவடியினை வைத்து இளைப்பாறும் போது அம்மனை நினைந்து துதித்து உடுக்கடித்துப் பாடினார்.

அந்நேரம் எங்கிருந்தோ வந்த சர்ப்பம் காவடியில் சுற்றிக் கொண்டது, ஜமீன் அன்னையினை அங்கே விழுந்து வணங்கினார்.

பின், மகிழ்ச்சியுடன் அவர் ஆலயம் சென்றார். அந்நேரம் காவடியில் இருந்த சர்ப்பம் கோவிலில் கட்டியிருந்த வாழை மரத்துக்குத் தாவி படமெடுத்து ஆடி அப்படியே மறைந்து போனது.

அனைவரும் மெய்சிலிர்த்துப் போய் அன்னையினை வணங்கினார்கள். ஆலய குறிப்பிலும் புதுக்கோட்டை ஜமீன் வரலாற்றிலும் இக்காட்சி உண்டு. அதன்பின் ஜமீனின் எல்லாச் சிக்கலும் தீர்ந்து அவர் அன்னையின் பக்தனாக வாழ்ந்து மரித்தார்.

பிரிட்டிஷ் காலத்தில் காவல்துறை பெரும்பாலும் மாற்றுமதத்தினரால் நிர்வகிக்கப்பட்டது. அப்படியானவர்கள் இந்துமதம் என்றால் வெறுப்புக் கொண்டிருந்தனர், அப்படி ஒரு அதிகாரி இந்தக் கோவிலை வெறுப்புடன் பார்த்தார், தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தார்.

அன்னையின் சர்ப்ப காவடிக்குத் தடை, பாதயாத்திரைக்குத் தடை என நெருக்கடிகள் கொடுத்தார். ஒருகட்டத்தில் பக்தர்களை அவர் பிரம்பால் தாக்கினார்.

அத்தோடு அவரின் கண்பார்வை பறிபோனது, அவரின் சக காவலர்க்கும் அம்மை நோய் வந்தது. பின், அவரும் அவர் குழுவும் அம்மனிடம் மன்னிப்புக் கேட்டு நலம் பெற்றனர். அதன் பின் அம்மன் காரியங்களில் யாரும் தலையிடக் கூடாது என அவன் எழுதியே வைத்தான்.

அம்மனைப் பழித்தவன் ஊமையான வரலாறும் பின் அவன் பாடைக்கட்டி வந்து அம்மன் அருளால் பேசிய காட்சியும் நடந்தது.

பணத்திமிரில் எல்லாம் விஞ்ஞானம் எனப் பகுத்தறிவு பேசி அன்னையின் திருக்கோலத்தை படமெடுக்க முயன்று தோற்றுத் தண்டனைப் பெற்று பின் அன்னையால் மீண்ட ஒருவன் சாட்சியும் அங்கு உண்டு.

ஒரு பக்தைக்குக் காலில் வெடிப்பு ஏற்பட்டு பிளவுகள் வந்து பெரும் இரத்தகசிவு ஏற்பட்டது, அம்மன் அவளுக்குக் கனவில் வந்து தன் பீடத்து வேப்பிலை, குங்குமம், எலுமிச்சை என மூன்றையும் குழைத்து காலில் இடச் சொன்னாள்.

அப்படி செய்து அந்தப் பக்தை நலம் பெற்றாள், அதன் சாட்சியாக மண்ணால் ஆன காலும், குழந்தை உயரத்திற்கு வெள்ளி மாலையும் வாங்கி காணிக்கை செலுத்தித் தனது வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டார். அது இன்றும் உண்டு.

மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகள் அம்மனின் முடிக்கயிறு கட்டியதும் எழுந்த சாட்சிகள் உண்டு.

பேசமுடியாத சிறுவனை அம்மன் முன் அழைத்து வந்தார்கள். அம்மன் அசரீரியாக, “விபூதியினை வாயிலிட்டு ஒருவாரம் என் தாலாட்டுப் பாடுக” என மொழிந்தாள்.

பெற்றோர் அவ்வண்ணமே செய்ய அச்சிறுவன் பேச ஆரம்பித்தான். அந்த அதிசயம் அங்குப் பெரும் சாட்சி, அவர்கள் குலம் இப்போதும் அன்னையின் பக்தர்கள்.

இப்படி எண்ணற்ற அற்புதங்களைச் செய்த அன்னையின் ஆலயத்தில் காவடிகள் எப்போதும் விசேஷம். அதுவும் பாடைக்காவடி மிக மிக விசேஷம்.

பாடைக் காவடி என்பது நோயுற்றோர் அல்லது நேர்ச்சை செய்து கொண்டவர் மரணத்தின் பின் எப்படி பாடைக் கட்டுவார்களோ அப்படிக் கோலத்தில் அவர்களைப் பாடையாக கட்டி அம்மன் சந்நிதிக்குச் சுமந்து செல்வார்கள், அங்கு அவருக்குத் தீர்த்தம் தெளித்து எழுப்பப்படுவார்கள்.

இது பாடைக்காவடி. இது இங்கு மிகப பிரசித்தம். இங்கு அன்றாடம் நடக்கும் நிகழ்வு என்றாலும் பங்குனி, ஆவணி மாத திருவிழாவில் இது அதிகம், எண்ணற்ற பாடைக்காவடிகள் இங்கு உண்டு.

இந்தக் காவடி பூர்வ ஜென்ம தொடர்புடையது என்பதுதான் ஆச்சரியம். ரோசி எனும் அயல்நாட்டுப் பெண் தன்னைப் பாடைக்கட்டி தூக்கிச் செல்வதை கண்டு அஞ்சினாள், மெல்ல மெல்ல இது இந்துசம்பிரதாயம் என அறிந்தவள், அந்தப பாடையும் கோவிலும் மாறி மாறி கனவில் வருவதைக் கண்டு விசாரித்தாள். அது இந்த ஆலயம் எனத தெரிந்தபின் ஓடிவந்து அந்தக் காவடி எடுத்தாள், அன்னையின் மாபெரும் சக்தி இது.

பூர்வ ஜென்ம தொடர்புப்படி ஒருவரை அன்னை அழைத்துக் கொள்கின்றாள்.

இங்கு அங்கபிரதட்சணம் என்றொரு சம்பிரதாயம் உண்டு. உடலில் எந்த அங்கம் சர்ச்சையோ நோயோ அந்த அங்கத்துக்கு வேண்டி கொண்டு அங்க பிரதட்சணம் செய்தால் அந்த உறுப்பு சரியாகும், பின் அம்மனுக்கு அந்த உறுப்பை வெள்ளியில் வைக்கும் மரபு உண்டு.

கணவனுக்காக வேண்டும் மனைவியர் பிரார்த்தனைப் பலிக்கும், மாங்கல்ய பலம் தரும், இந்த ஆலயம் திருமண வரமும் தரும்.

திருமண வரம் பெற்றவர்கள், கணவன் நலம் அடைந்தவர்கள் அன்னைக்கு மாங்கல்யத்தைக் காணிக்கையாக இடுவது இங்கு வழமை.

செடல் திருவிழா இன்னும் விசேஷம், அந்நாளில் மாரியம்மனிடம் சாட்டை அடிவாங்கி பெண்கள் பரிகாரம் செய்வதும் உண்டு.

இந்த ஆலயம் மிகச சூட்சுமமானது. ஈசான்ய திசையில் அமைந்துள்ளது. தெய்வீக சக்தி நிரம்பிப் பொங்குவதற்கு ஈசான்ய திசையும் ஒரு பெருங்காரணம்.

இங்கு எல்லாமே ஒரு சக்தி குவியல், பிரபஞ்சத்தின் சக்திகளை அப்படி குவித்துத் தருவதுதான் வாஸ்து.

அது ஊர்களுக்கு உண்டு, வீடுகளுக்கு உண்டு, ஆலயங்களுக்கும் உண்டு. சரியாக அவை அமையும் போது அந்தச் சக்தி அவர்களுக்குப் பெரிதாகக் கிடைக்கின்றது, அப்படி எல்லாமும் சரியாக அமைந்த ஆலயம் இது.

சீதளம் என்றால் குளிர்ச்சி. இங்கு எல்லாமே ஒரு வெப்ப சக்தி, மானுட உடல் ஒரு வெப்பத்தில் இயங்குகின்றது, இந்தப் பூமியும் பிரபஞ்சமும் அந்த வெப்பத்தின் சக்தியிலே இயங்குகின்றது.

இது வெப்பமான சக்தி என்றாலும் அதன் முழுத் தன்மை அறிந்தவர் யாருமில்லை. அது ஒரு உணரக்கூடிய சக்தி.

இந்தச் சக்திதான் உடலை இயக்குகின்றது, உயிரை இயக்குகின்றது, இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றது.

இது சீதளமாக இருத்தல் அதாவது ஒரு அளவில் இருத்தல் அவசியம், அந்த அளவை மிஞ்சும்போதுதான் உடல் உபாதைகள், இயற்கை சீரழிவுகள் ஏற்படும்.

இந்துமதம் இதனை நுணுக்கமாகக் கவனித்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்தது. சீதளதேவிக்குச் செய்யப்படும் ஒவ்வொரு வழிபாடும் அந்தச் சக்தியினைக் குளிர்வித்து வைக்கும் காரியம்.

இதனால் ஒவ்வொருவருக்கும் உடலில் சமநிலை வரும், உள்ளம் குளிரும் இன்னும் சுற்றுப்புறமும் தட்பவெட்ப சமநிலை முதல் எல்லாமும் பெறும்.

ஆடிமாத சூட்சுமம் என்றல்ல, இந்துமதத்தின் தாத்பரியமே இந்தச் சக்தியினை அவரவர் தகுந்த அளவு பெற்று அது மிகையும் குறைவுமின்றி பார்த்துக் கொள்வது, இந்தச் சீதள தேவி அந்த வரத்தை வழங்குவாள்.

பாடைக்கட்டி வருதல் என்பது உலகில் இந்த ஆலயம் தவிர எங்குமில்லாத வழமை. இது லௌகீகமாக ஒருவனுக்கு மரணத்தைத் தள்ளிப்போட்டு அகால மரணம், இளவயது மரணத்தை அம்மன் தள்ளிப்போட்டு நலம் அருள்வாள், மறுவாழ்வு தருவாள் என்பது.

ஆனால், ஞானதாத்பரியமும் ஞான போதனையும் நுணுக்கமானது. இது எமபயம் அதாவது மரணபயத்தைப் போக்கும் ஆலயம், அந்தப் பயத்தை கடந்தவன் ஞானம் பெற்றுக் கர்மத்தை மட்டும் சரியாகச் செய்வான்.

வாழ்வின் முடிவு அன்னை, வாழும்போதும் அவள் காவல் வாழ்ந்து முடிந்தபின்னும் அவளிடமே செல்லப்போகின்றோம், அவள் இருக்கும்போது எதற்கும் அஞ்சுவதோ கலங்குவதோ கூடாது, அந்தத் தெய்வத்தாய் எக்காலமும் நம்மோடு இருக்கின்றாள், நமக்காக நம்மோடு காவல் இருக்கின்றாள், வாழ்வின் தொடக்கமும் முடிவும் அவளே, அவள் இருக்க அச்சமில்லை நடுக்கமில்லை கலக்கமில்லை, மரணத்தைக் கண்டே பதற்றமில்லை என்பதைச் சொல்லி நிற்கின்றது அந்த வலங்கைமான் மாரியம்மன் ஆலயம்.

திருவாரூர் செல்லும் போது நீடாமங்கலம் அருகிருக்கும் இந்த அன்னையினைத் தரிசிக்க மறவாதீர்கள். நீங்கள் யாராகவும் இருங்கள், எந்த சிக்கலிலும் இருங்கள், இந்தத் தாயினை மனமார நினைத்தால் அவளே தேடிவந்து உங்கள் குறை தீர்ப்பாள். வாழ்வில் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் நீங்கள் இருந்தாலும் இனி எல்லாம் முடிந்தது என்ற நிலையில் இருந்தாலும் அவள் மறுவாழ்வு தருவாள்.

உங்களுக்கு மிகவும் முடியாநிலை இருந்தால், யாருக்கேனும் பெரும் உயிராபத்து, இல்லை நோய் இருந்தால் அவள் ஆலயத்தில் பாடைக்கட்டும் காவடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள், அந்தப் பாடைக்காவடி ஒரு காலமும் பொய்த்ததில்லை எனும் அதிசயத்தை நீங்களும் அனுபவபூர்வமாக உணர்வீர்கள். இது சத்தியம்.

மாரியம்மன் ஆலயங்கள் 08 : நாகப்பட்டினம் நெல்லுக் கடை மாரியம்மன்.

நாகப்பட்டினம் இரயில் நிலையம் அருகே, பேருந்து நிலையத்தின் மிக‌ அருகே அமைந்திருக்கும் இந்த மாரியம்மன் ஆலயம் மகா பிரசித்தியானது, வாழ்வில் எல்லா ஐஸ்வர்யங்களும் தரும் அந்த அன்னை நெல்லுக்கடை மாரியம்மன் எனப் பக்தர்களால் கொண்டாடப்படுகின்றாள். அனுதினமும் வரும் கூட்டமும் விழாகாலத்தில் வரும் பெரும் கூட்டமும் அவளின் பெரும் சக்தியினைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன‌.

காவேரியின் கடைமடை பகுதிகள் நெல் விளைச்சலுக்கு பெயர்பெற்றவை, அக்காலத்தில் ஆண்டுமுழுக்க அங்கு நெல் விளைந்து கொட்டிற்று, இதனால் நெல் வியாபாரம் அங்கு இயல்பான ஒன்றாக இருந்தது. அதுவும் நாகப்ட்டினம் அன்றே துறைமுகம் இருந்த இடம் என்பதால் நெல்புழக்கம் மிகுந்திருந்தது.

அப்படியான நிலையில் அங்கு ஸ்ரீ சௌந்தர ராஜப்பெருமாள் வீதியில் பெரியநாய‌கத்தம்மாள் என்பவள் நெல் வியாபாரம் செய்து வந்தாள். எல்லா வகை நெல்லும் அவள் கடையில் இருந்தது, மிகுந்த பக்தி கொண்டவள். தேவி உபாசகி.

அவள் அனுதினமும் தன் வீட்டருகே இருக்கும் வேப்பமரத்திலும் அதனருகே அமைந்த புற்றையும் வணங்கி கொண்டிருந்தாள். ஒரு நாள் கூட அதை நிறுத்தியதில்லை.

அந்தப் பெரியநாய‌கத்தம்மாள் கடைக்கு ஒரு நாள் மஞ்சள் சேலை அணிந்து முகமெல்லாம் புன்னகையுடன் ஜொலிக்கும் மூக்குத்தியும், அசைந்தாடும் கம்மலும் பெரிய அசைந்தாடும் விழிகளும் நெற்றியில் பெரிய குங்கும பொட்டுமாய் ஒரு பெண் வந்தாள்.

அவளைக் கண்டவும் அவளிடம் பொங்கிய அந்தத் தெய்வாம்ச தேஜஸால் ஈர்க்கப்பட்டாள் பெரியநாகத்தம்மாள், இனம்புரியா ஈர்ப்பு அப்பெண்மேல் வந்தது , அந்தப் பெண் புன்னகைத்தபடி கையில் இருக்கும் கூடையினை நீட்டினாள்.

“எனக்குக் கொஞ்சம் நெல் தருவாயா?” எனக் கேட்டாள்.

தன்னை அறியாமல் அவள் கையிலிருந்த கூடையினை வாங்கினாள் பெரியநாகத்தம்மாள், அவள் நெஞ்சில் பெரும் ஆனந்தமும் நிறைவும் வந்தது, அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்பெண் திரும்பக் கேட்டாள் “என்னம்மா நெல் கேட்டால் என்னையே பார்க்கின்றாய்?”

“இதோ தருகின்றேன்” எனக் கடைக்குள் சென்றவள் இருப்பதிலே மிக உயர்ந்த நெல் ரகத்தில் பல படிகள் அள்ளிக் கூடையில் இட்டு விரைந்து வந்தாள், ஆனால் அந்தப் பெண் அங்கு இல்லை.

அந்த நாய‌கத்தம்மாள் பெரும் வருத்தம் கொண்டாள், அந்தப் பெண்ணின் அழகான முகமும் அவளைக் கண்டவுடன் மனதில் வந்த மகிழ்வும் நிறைவும் மறுபடி மறுபடி அவளைத் தேடச் சொன்னது, அவளை எங்கெல்லாமோ தெருமுனை எங்கும் தேடியவள் அவள் கிடைக்காததால் மிகவும் ஒடிந்து போனாள்.

அன்றிரவு அவள் கனவில் அதே பெண் வந்து சொன்னாள், “பெண்ணே, நான் உன்னை தேடிவந்த அம்மன், நீ வணங்கும் வேப்பமரத்தடியில்தான் குடியிருக்கின்றேன், எனக்கோர் கோவில்கட்ட உன்னை அழைக்க வந்தேன்” என்றாள்.

அதன்படி சிறிய கோவிலை அந்தப் பெரியநாய‌கத்தம்மன் தன் நெல்லுக்கடை சார்பாக அமைத்துக் கொடுத்தார், நெல் வியாபாரம் நிறைந்த பகுதியில் அமர்ந்த அம்மன் நெல்லுக்கடை அம்மன் என்றானாள்.

இது எப்போதோ நடந்த அன்னையின் திருவிளையாடல். அன்றிலிருந்து மெல்ல மெல்ல வளர்ந்த அவள் புகழ் இப்போது எல்லாத் திசையிலும் பரவி நிற்கின்றது, அவளை அறியாதவர் யாரும் இருக்கமுடியாது.

அவள் சந்நதியில் அப்போதே விதை நெல்லை வைத்து வணங்கினார்கள், வியாபார நெல் மூட்டைகளை வைத்து வணங்கினார்கள், அவளை வணங்கி சென்ற காரியம் பெரிதாக விளைந்தது, அவளை நம்பி விதைத்தால் முழு விளைச்சல் வந்தது, அவளை நம்பி கடைதிறந்தால் லாபம் கொழித்தது.

அந்தத் தெரு தாண்டி ஊர்தாண்டி அவள் வெகு பிரசித்தியானாள், நெல்வயலுக்கு வரும் பறவைகள் போல் கூடி வந்த மாந்தர்கள் அள்ள அள்ள குறையா அவள் அருள் நெல்லை அனுதினமும் அள்ளிச் செல்கின்றார்கள்.

அவள் ஐஸ்வர்யம் தரும் தாயாக வாழ்வில் நிதி சிக்கல் தொழில் சிக்கல் தீர்க்கும் மகா சக்தியாக அங்கு அமர்ந்திருக்கின்றாள், அவளை அண்டியோர்க்கு ஒரு நாளும் வசதியும் வளமும் குறையாது, உணவுக்கு அலையும் அவலம் ஒரு காலமும் வராது.

கிழக்கு நோக்கிய அற்புதமான ஆலயம் அது. அங்குக் கருவறையில், கருணை பொங்கும் ஸந்த மாரியம்மன் கிழக்குப் பார்த்தபடி அழகுறக் காட்சித் தருகிறாள்.

கம்பீரமாய் அமர்ந்தபடி நான்கு திருக்கரங்களிலும் டமருகம், பாசம், கத்தி, கபாலம் ஆகியவற்றை ஏந்தியபடி காட்சித் தருகின்றாள், அவளைப் பார்த்த நேரம் வேறேதும் கேட்கத் தோன்றாது, எதுவும் ஆசை வராது, மனம் அவளில் அவள் அழகில் முழுக்கக் கரைந்தே விடும் அவ்வளவு அழகானவள் அந்த அன்னை.

அவளைத் தரிசிக்கும் நேரம் நம் மொத்தக் கவலைகளும் காணாமல் போய்விடும் , இவளுக்கு எதிரில் சிறிய உருவிலான அம்மன் விக்கிரகமும் உள்ளது.

வருடத்துக்கு ஒருமுறை, பெரிய அம்மனுக்குத் தைலக்காப்பு சார்த்தப்படுகிறது. சின்ன அம்மனின் விக்கிரகத் திருமேனிக்குத் தினந்தோறும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றது, விழா காலங்களில் வெளியே வருபவள் இவள்தான்.

இந்த இரண்டு அம்மன்களைத் தவிர ஸ்ரீநடராஜர், ஸ்ரீஎல்லையம்மன், ஸ்ரீகாத்தவராயன், ஸ்ரீபெரியாச்சி அம்மன், ஸ்ரீபூரணை- புஷ்கலை சமேத ஸ்ரீஐயனார், ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசெல்லப் பிள்ளையார், ஸ்ரீகப்பல் பிள்ளையார், ஸ்ரீதுர்கை எனத் தனிச்சந்நிதிகளில் அருள்புரிகின்றனர்.

இங்கிருக்கும் எல்லையம்மனும் மகா பிரசித்தி, மாரியம்மனைப் போலவே தனி விமானத்துடன் கூடிய கருவறையில், நான்கு திருக்கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி, ஐந்து தலை நாகம் படம் எடுத்துக் குடை பிடிக்க, வீராசனத்தில் அமர்ந்தபடி திருக்காட்சி தருகிறாள்.

இவளுக்கு எதிரில், மகுடம் தரித்த நிலையில், அம்மனின் சிரசு காட்சித் தருகிறது.

இந்த ஆலயத்தில் ஆடிமாதம் வெகுவிசேஷம், அந்த ஆடியின் வெள்ளி செவ்வாய்களில் கூட்டம் அலை மோதும். எந்த அளவு என்றால் பால் அபிஷேகம் செய்ய பக்தர்கள் இரவெல்லாம் வரிசையில் காத்திருப்பார்கள் என்றால் அந்தக் கூட்டத்தை உணர்தல் எளிது. அதுதான் அன்னையின் மகா சக்தி.

இந்த ஆலயத்தில் செடல் ஏறுதல் சம்பிரதாயம் உண்டு, இது அடிப்படையில் கொல்லங்கோடு பகவதி அம்மன் ஆலயத்தில் நடக்கும் தூக்குச் சம்பிரதாயம் போன்றது.

இங்கு மாறுதலாக உயர சரிந்திருக்கும் கம்பில் மரசட்டம் ஒன்றில் காத்தவராய வேடம் அணிந்தவர் நின்றிருப்பார் அவரிடம் குழந்தையினைக் கொடுப்பார்கள், பின் அந்தச் சட்டம் சுழற்றப்படும்.

இங்கு இப்படி ஏற்றப்படும் குழந்தைக்கு எந்த நோயும் அண்டாது, அன்னையின் குழந்தை அது என்பது காலம் காலமாக நடக்கும் அற்புதம், நலம் பெற்ற குழந்தைகள் ஏராளம்.

அன்னைக்கான சித்திரைப் பெருவிழாவில் இந்தச் செடல் மிக முக்கியமான சம்பிரதாயம்.

இந்த ஆலயம் திருமண வரம் தரும், குழந்தை வரம் தரும் மிக முக்கியமாக குடும்பத்துக்கு ஆதாரமான வருமானத்தை நல்ல உணவை நிறைவினை அள்ளி அள்ளி தரும், குடும்பமும் தொழிலும் காக்கும் ஆலயம் இது.

நெல் என்பது செழுமையின் அடையாளம், நெல் படைத்து வணங்குவதில் செழுமை மட்டுமல்ல ஐஸ்வர்ய அடையாளம் மட்டுமல்ல பலவிதமான போதனையும் இருந்தது.

ஒரு நெல் பல நூறாய்ப் பெருகும், நெல்லில் உமி, தவிடு அரிசி என எல்லாமே பயனுள்ளது. அங்குப் பயனற்றது என எதுவுமில்லை, நாளானாலும் அதன் உயிர்ச்சக்தி அகலாதது, நெல்லின் அரிசிதான் உலக உயிர்களின் பசியாற்றும், தொடர்ந்து இயங்க சக்தியும் கொடுக்கும்.

நெல்லைப் புனிதமான மகா முக்கியமான இடத்தில் வைத்தார்கள் இந்துக்கள். அது உயிர்ச்சக்தி கொண்டது என்பதால் வழிபாடுகளில் கோபுர கலசங்களில் வைக்கப்படும் பேற்றினைப் பெற்றது.

வாழை போல நெல்லும் வழி வழி அடையாளம், வம்ச வம்சமாக வாழும் அடையாளம். அன்னையினை வணங்கினால் நெல்போல் குலம் பெருகும், ஊரும் உலகமும் பயன்பெற குலம் பெருகும் என்பது இங்குத் தாத்பரியம்.

இன்னும் ஆழமாகப் சொன்னால் அன்னை உலக மக்களுக்குப் படியளப்பவள், அவள் காசியில் அன்னபூரணியாக நின்று பசியாற்றுகின்றாள்.

இது பற்றி புராணத்தில் பல காட்சிகள் உண்டு, அதைச் சொன்னால் இந்த ஆலயத்தின் மகா சக்தி புரியும்.

அன்னை சக்தியின் பல கடமைகளில் ஒன்று பசிபோக்க்குவது, “அறம் வளர்த்த நாயகி” என அபிராமி அந்தாதியிலும், “நித்தியான்ன தானேஸ்வரி” என ஆதிசங்கரராலும் கொண்டாடப்படும் நாயகி அவள்தான்.

அக்காலத்தில் காத்யா எனும் முனிவர் அம்பிகையே தனக்கு மகளாக பிறக்கக் கடும் தவம் புரிந்தார். அதை அறிந்த அன்னை மானுடர்க்கு பல விஷயம் போதிக்கவும், அப்போது பூமியில் அட்டகாசம் செய்த அசுரர்களை அழிக்கவும் ஒரு நாடகம் ஆடினாள்.

அதன்படி அவள் சிவனின் கண்களை அவர் அறியாதவாறு விளையாட்டாய் மூடினார். வானலோகத்தில் ஒரு நொடி என்பது பூலோகத்தில் ஒரு ஆண்டுக்குச் சமம்.

இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. உயிர்கள் தடுமாறின. ஒரு நொடிக் கூட தவறாமல் உலகை இயக்கும் சிவன் இதனால் ஆத்திரமாகி தேவிக்கு ஒரு சாபம் கொடுத்தார், பூமியில் பிறந்து தவமிருந்து தன்னைத் தேடிவரும்படி அனுப்பினார்.

தேவியும் அதை ஏற்றுக்கொண்டு காத்யா முனிவருக்கு மகளாய் பிறந்தாள். அவள் தேவி அம்சம் என்பதால் இயல்பாகவே அவள் மனம் சிவன்பால் பக்தி கொண்டிருந்தது. எப்போதும் பூஜை, தவம் என்றிருந்தாள். அவளில் தெய்வீக சக்தி குடிகொண்டிருந்தது.

சிவனின் கண்களை மூடி, அதனால் உலக இயக்கம் பாதிக்கப்பட்டு உயிர்கள் பசியால் வருந்தி அதனால் அறக்காரியங்கள் பாதிக்கப்பட்ட சாபம் பெற்றதால் அவள் இயல்பிலே பசிப்பிணி போக்குவதிலும், அறக்காரியம் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாள்.

அவள் தெய்வீகப் பெண் என்பது காசியில் ஏற்பட்ட பஞ்சத்தில் தெரிந்தது. அந்தக் கொடிய பஞ்சத்தில் எல்லா உயிர்களும் பாதிக்கப்பட்டது, அன்னை அங்குச் சென்று ஒரு அட்சய பாத்திரம் கொடுத்தாள், அள்ள அள்ள குறையாத பாத்திரம் ஒன்றைக் கொடுத்து எல்லா மக்களும் பசியாற வழி செய்தாள்.

மன்னன் அதைக் கேட்டு அவளை அட்சயபாத்திரம் எடுத்து அரண்மனைக்கு வரச்சொன்னான். அவள் மறுத்தாள். மன்னன் ஆத்திரமடைந்தான். ஆனால், கனவில் அவள் தெய்வாம்சம் கொண்டவள் என உணர்ந்து அவனே மாறுவேடத்தில் அன்னசாலை சென்று பசியாறினான்.

அப்படிப் பசிபஞ்சம் போக்கியதால் அவள் “அன்ன பூரணி” என்றானாள், காசியில் இந்த ஆலயம் இன்றும் உண்டு.

அதன் பின் காசியில் எக்காலமும் உணவுக்குப் பஞ்சமில்லை. எக்காலமும் அங்கே உணவு எல்லா உயிர்க்கும் உண்டு, அன்னை அப்படி நின்று பசியாற்றுகின்றாள்.

(இங்கே பார்வதியாக வந்தபோது அன்னை செய்த பசியாற்றிய அறத்தையும் சொல்லுதல் அவசியம்.
இமயவன் மகளான பார்வதி தேவி அவதிரித்திருந்தாள், முன்பு கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளப்பான் ஈசன் எனும் தத்துவம் விளங்க சிவனைச் சோதித்தற்காக அப்பிறப்பை எடுத்திருந்தாள்.

அப்போது பெரும் பஞ்சம் வந்தது. அன்னை சிவனை நோக்கி தவமிருந்தாள். சிவன் இருநாழி நெல் மட்டும் கொடுத்து உயிர்களைக் காத்துக்கொள் எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.

அன்னை மிகச் சாதுர்யமாக ஒரு பங்கு நெல்லை தற்காலிக பசிக்கும், மீதி நெல்லை விதை நெல்லாக்கிளாள்.
அந்த நெல்லை வைத்து, உலகத்தை வயலாக்கி, கடலை ஏரியாக்கி, ஈசனின் காளையை உழவுமாடாக்கி, பலராமனின் கலப்பையால் நிலத்தை உழுது விதைதாள், அது விளைந்து கொட்டியது, அதைக் கொண்டு அறம் வளர்த்தாள், அப்போதும் பசி போக்கினாள்.

ஆம், அவள் பசிப்பிணி போக்கும் நாயகி, அதைத்தான் இந்த ஆலயத்திலும் அவள் செய்தாள், அவள் செய்தது மாபெரும் நுணுக்கமான அறம்.

அதாவது அது நெல் கடைகள் நிரம்பிய வீதி ஆனால் ஆளாளுக்கு நெல்லை அவரவர் கடைகளில் வைத்துப் பூட்டி வியாபாரம் செய்தார்கள், அன்னை தன் பக்தை மூலம் படி நெல்லை தன் ஆலயத்தில் பெற்றாள்.

தொடர்ந்து ஒவ்வொருவராய் வந்து படிநெல்லை கொட்ட கொட்ட அவள் இல்லாதவர்க்கும் ஏழைகளுக்கும் பசிபோக்கினாள்.

அன்னை அன்னபூரணி என்பதும், இருபடி நெல்லைக் கொண்டு இல்லறம் நடத்தியவள் எனபதும் வெறும் புராணம் அல்ல, அவள் எக்காலமும் அறம் வளர்க்கின்றாள் தர்மம் காக்கின்றாள், உயிர்களைப் பேணுகின்றாள் என்பதற்கு இந்த ஆலயமே பெரும் சாட்சி.

அவளுக்கு ஒருபடி நெல் அளந்தால் பன்மடங்கு உங்கள் வீட்டில் செல்வம் பெருகும், அவளுக்கு ஒரு படி பால் அளந்தால் உங்கள் வீட்டில் எல்லா வகை ஐஸ்வர்யமும் பொங்கும்.

இந்த ஆலயம் சாதாரணம் அல்ல, இவள் எழும்பிப் பிரகாசித்தபின்புதான் அங்கு நடந்த பல மதமாற்றங்கள் முடிவுக்கு வந்தன, அரண்போல் நின்று அங்கு மதமாற்ற சக்திகளை அவள் முறியடித்தாள்.

அவள் நெல்லுக்கடை அம்மனாக இருந்து அருள்பாலிப்பது ஆயிரம் அர்த்தங்களைக் கொண்டது, நெல் என்பது நமது லௌகீக வாழ்வைக் குறிப்பது. அதற்குக் காவலானவள் பொறுப்பானவள் அந்தத் தாய் .

தாய் பறவை தன் குஞ்சுக்கு உணவளிப்பது போல, தாய் தன் குழந்தையினைக் கண்மணிபோல் காப்பதைப் போல் அவள் உங்களைத் தன் கையில் வைத்து உணவூட்டி சீராட்டி குலம் குலமாக வாழவைப்பாள், ஒரு குறையின்றி மிகுந்த கண்ணும் கருத்துமாய் ஆளவைப்பாள் .

அவள் ஆலயம் எல்லா மக்களுக்குமான தாய் வீடாக திறந்தே கிடக்கின்றது, அங்குச் சென்று படி நெல்லோ, படி பாலோ அவளுக்கு அர்ப்பணித்து மன்றாடுங்கள், அவள் நெல் வயல் நாற்றுபோல் உங்களைக் கவனமாக‌ வாழவைப்பாள், உங்களைக் குலம் குலமாக பெரு வாழ்வு வாழவைப்பாள். இது சத்தியம்.

மாரியம்மன் ஆலயங்கள் 09 : சமயபுரம் மாரியம்மன்.

உலகளவில் தனித்து நிற்கும் ஆலயங்களில் முக்கியமானது சமயபுரம் மாரியம்மன் ஆலயம். பெயரைக் கேட்ட உடனே ஒரு இந்துவின் மனதில் மிகுந்த பரவசமும் உருக்கமும் தாய்மை உணர்வும் தரும் தனித்துவமான ஆலயம் அது.

அதனை அறியாதவர்கள் என ஒரு தமிழக இந்து இருக்க முடியாது, சக்திபீடங்கள் பல உண்டென்றாலும் தனக்கென பீடமிட்டு மகா சக்தியாக மாரியம்மன் அமர்ந்து திருவாட்சி செலுத்தும் கோட்டை அது.

இதன் வரலாறு மகா தொன்மையானது. இன்னும் ஆழமாகச் சொல்வதென்றால் திருவரங்க காலத்துடன் தொடர்புடையது, அதற்கும் முந்தையது.

அந்த மாரியம்மன் வரலாறு கண்ணன் அவதாரத்தோடு தொடங்குகின்றது. கண்ணனை காக்க பிறந்த பெண் குழந்தையாக அன்னை அவதரித்து கம்சனை எச்சரித்து மறைந்த அந்தக் காட்சியிலிருந்து தொடங்குகின்றது.

கண்ணனுக்கு முன் வந்த அந்தத் தேவிக்கு அங்கொரு ஆலயம் இருந்திருக்கின்றது. அந்த ஊர் கண்ணூர் எனக் கண்ணன் பெயரோடு அமைக்கப்பட்டிருக்கின்றது.

இராமபிரானின் தகப்பன் தசரத சக்கரவர்த்தி இங்கு வந்து வழிபட்டிருகின்றான், இன்னும் பெரும் பெரும் மன்னர்களும் ரிஷிகளும் வந்து வணங்கியிருக்கின்றார்கள்.

அவள்தான் ஆதி சமயபுரம் அன்னை என இப்போதும் அழைக்கப்படுகின்றாள்.

இந்தத் தொன்மையான ஊருக்கு உஜ்ஜைனியின் மகாராஜா விக்ரமாதித்தன் காடுகாடாய் வேதாளத்தோடு சுற்றும் போது வந்திருக்கின்றான், இந்த அன்னையினை வழிபட்டிருகின்றான், அவன் வழிபட்ட உஜ்ஜைனி மகாகாளி ஆலயம் இன்றும் அதன் அருகில் உண்டு, அவன் சுமந்த வேதாளமும் அவன் மந்திரி சுழுவனும் சிலையாய் உண்டு.

அவ்வளவுக்கு அந்த இடம் தொன்மையானது. பின்னாளில், கண்ணூர் பக்கம் சோழர்கள் ஒரு கோட்டைக் கட்டி இந்த ஆதி சமயபுர மாரியம்மனை வணங்கியிருக்கின்றார்கள், அவள்தான் காலத்தால் மூத்தவள்‌

இந்த ஆதிசமயபுரத்தில் இருந்து உருவானதுதான் இப்போது அமைந்திருக்கும் சமயபுர மாரியம்மன் ஆலயம், அங்கே இரு வரலாறுகள் சங்கமிக்கின்றன‌.

13 ஆம் நூற்றாண்டில் ஆப்கானிய படையெடுப்பால் திருவரங்க ஆலயம் பாழ்பட்டு தொடர்ந்து அச்சுறுத்தப்பட்ட கொடுமை நடந்தது, நம்பெருமாளை சுமந்து காடும் மேடும், மலையாள தேசமெல்லாம் அலைந்து சுமார் 40 ஆண்டுகள் அம்மக்கள் பட்டபாடு கொஞ்சமல்ல‌.

மாலிக்காபூர் காலத்தில் தொலைந்த நம்பெருமாள் டெல்லி சென்று மீட்டு வந்தவர்களுக்குத் துக்ளக் காலம் கொடியதாய் இருந்தது, அந்நேரம் திருவரங்கத்தில் வழிபாடுகள் இல்லை, மூலவர் சிலை சுவரோடு சுவராக மறைக்கப்பட்டிருந்தன‌.

அந்நேரம் சப்தமாதாக்களில் ஒருவரான வைஷ்ணவி தேவியினை விஷ்ணுவின் அம்சமான அவளைக் காவேரிக்கு வடக்கே நிறுத்தி இரகசியமாக வழிபட்டார்கள், தங்கள் இழிநிலையினைக் களையவும், அந்நியர் ஆட்சி அகலவும், திருவரங்கம் மீளவும் வழிபட்டார்கள்.

அவர்களுக்கு அந்தச் சூட்சுமம் தெரிந்திருந்தது. இது கண்ணனின் சகோதரி துர்க்கையின் ஆலயம் இருக்குமிடம், அதர்மங்களை அழிக்க அவள் நிச்சயம் வருவாள் அவளோடு வைஷ்ணவியும் வருவாள் என வேண்டி நின்றார்கள்.

அந்த வேண்டுதல் சரியாகப் பலித்தது. மதுரையினை மீட்க பெரும் படையோடு நாயக்கர்கள் வந்தார்கள், அப்படி வந்தவர்களுக்குக் காவேரித் தாண்டி மதுரைச் சென்று சுல்தானை வெல்வது பற்றி மிகுந்த கவனம் இருந்தது, எல்லாம் நல்லபடியாக முடியவேண்டும் எனும் பதற்றமும் இருந்தது.

அந்நேரம் இங்கு அவர்கள் சில சூட்சும அசைவுகளைக் கண்டார்கள். திருவண்ணாமலையில் அந்த நாயக்க மன்னன் கம்பண்ணனுக்கு மீனாட்சி வாள் கொடுத்தது போல சில சாயலைக் கண்டார்கள், மதுரையில் சுல்தானை வென்றால் இங்குத் தேவிக்கோர் ஆலயம் கட்டுவோம் என நேர்ச்சை செய்தார்கள்.

ஆம். மகா சக்தி அந்த வைஷ்ணவ தேவி அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினாள், அப்படியே மதுரை மீட்கப்பட்டது.

மதுரையினை மீட்டாலும் வைஷ்வணர்களான நாயக்கர்களுக்குத் திருச்சித்தான் தலைநகரமாயிற்று, திருவரங்கம் அவர்களுக்கு அவ்வளவு முக்கியமானது.

திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்புவரை அவர்கள் திருச்சியில் இருந்துதான் இராஜபரிபாலனம் செய்தார்கள், அப்படி அவர்கள் நிலைகொண்ட போதுதான் தங்களுக்கு வெற்றி கொடுத்த அன்னைக்கு ஆலயம் எழுப்பினார்கள்.

அவர்கள் எழுப்பிய ஆலயம்தான் இன்றிருக்கும் சமயபுரம் மகா மாரியம்மன். அதனைத் தங்கள் குல தெய்வமான சாமுண்டீஸ்வரி சாயலில் எழுப்பிக் கொண்டார்கள், அதைக் கவனமாகச் செய்தார்கள்.

ஆதி சமயபுரம் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து இந்த அன்னை அவளின் மகள் என்பதைச் சொல்லி மிக ஆச்சாரமாகக் சூட்சுமமாக அவளை இங்கு நிறுத்தினார்கள். சாமுண்டீஸ்வரியின் அம்சமான அவளை மூலிகைச் சிலையாய், சக்திமிக்க மூலிகைகள் பலவகை மந்திர சக்தி கொண்ட மூலிகையினால் சிலையாய்ச் செய்து வைத்தார்கள்.

இதனால் அங்குச் சக்தி இன்னும் இன்னும் பெருகிற்று. மடை திறந்த வெள்ளம்போல் அன்னை அங்குத் தன் பெரும் சக்தியினைக் காட்டினாள்.

ஆதி சமயபுரத்தில் மகா துர்க்கையாக அமர்ந்தவள் அருகே உஜ்ஜைனி காளியாக அமர்ந்தவள் இங்குச் சமயபுரத்தம்மனாக திருச்சியின் காவலாக திருவரங்கக் காவலாக அமர்ந்து கொண்டாள்.

அதிலிருந்து அவளின் அருளாட்சி பெருகிற்று, அவள் ஆலயம் எழும்பியபின் திருவரங்கத்துக்கு எந்தச் சோதனையும் வரவில்லை. இன்றுவரை அவள் காவலில் திருவரங்கம் பெரும் கொண்டாட்டத்தில் பிரசித்தியாக நிற்கின்றது.

நாயக்கர்களுக்கு பின் வீரசிவாஜியின் மராட்டிய சேனைகள் இப்பக்கம் வந்தன, அவர்கள் பவானியின் சாயலாக அன்னையினைத் தொழுதார்கள்.

எனினும், இடையில் ஒரு சோதனை வந்தது, அது ஆற்காடு நவாப்.

வீரசிவாஜிக்குப் பின் ஔரங்கசீப் தமிழகத்தை கைப்பற்றினான். அவன் நேரடியாக வரவில்லை என்றாலும் அவன் தன் பிரதிநிதியாக ஆற்காடு நவாபை நியமித்தான். சில மாதங்களிலே அவன் மரித்தான், அவனுக்குப் பின் மொகலாயம் தள்ளாடியது, ஆற்காடு நவாப் தனி அரசனாக முடிசூட்டினான்‍ அவனுக்குத் தமிழக மன்னர்கள் அடங்க மறுத்தார்கள்.

அந்நேரம் பிரிட்டிஷாரும், பிரெஞ்சுக்காரர்களும் வியாபாரம் செய்ய வந்தார்கள், வந்த இடத்தில் இருவருமே கூலிப்படையாக நவாபுக்கு உதவினார்கள்.

நவாபின் குடும்பச் சண்டையில் இரு கோஷ்டி உருவானது. சாந்தா சாஹிப் என்பவனை பிரெஞ்சுக்காரரும், முகமது அலி என்பவனை பிரிட்டிஷாரும் ஆதரித்தனர். பெரும் சண்டை உருவானது.

முகமது அலி திருச்சிக் கோட்டையில் தங்கியிருந்தான், அவனைப் பிடிக்க சாந்தா சாஹிப்பின் படைகள் வந்தன, அதைத் தடுக்க பிரிட்டிஷ் படைகளும் வந்தன‌.

அந்தப் படைகளில் ஒருவனே ராபர்ட் கிளைவ், பின்னாளில் இந்தியச் சரித்திரத்தை மாற்றிய பிரிட்டிஷார் ஆட்சிக்கு அவனே அடிக்கோலினான், அவனே இந்தப் பெரும் காரியத்தைச் செய்யப்போகின்றான் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.

அவன் தன் தளபதிகள் ஜின்ஜின், டால்டன், லாரன்ஸ் ஆகியோருடன் அங்குத் தங்கியிருந்தான். திருச்சி மலைகோட்டைக்குப் பிரெஞ்சு படையும், சுல்தான் படையும் சென்றால் இவர்கள் தாக்க வேண்டும், போருக்கு முந்தைய கட்டம் அது.

அந்நேரம் கிளைவுக்கு அம்மை நோய் வந்தது, அவன் முடங்கினான், அவன் தளபதி ஜின் ஜின் காவலைச் செய்தான். அப்படிக் காவல் செய்தவன் அப்பக்கம் மக்கள் யாரும் இரவில் வரக்கூடாது என மிகுந்த கட்டளைகளை இட்டான்.

அதைச் சோதிக்க இரவில் அவன் வந்தபோது கையில் சூலம் தாங்கிய பெண் அப்பக்கம் நடந்து செல்வதைக் கண்டான், கண்டவன் யாரோ எதிரி பெண் ஆயுதத்தோடு வருவதாக நினைந்து துப்பாக்கியினைத் தூக்கியபடி சென்று அவளை மிரட்டினான், அவளோ தன் போக்கில் சென்றாள்.

ஆத்திரமடைந்த ஜின் ஜின் அவளை நோக்கிச் சுட்டான். ஆனால்‍, அவன் சுட்ட ஒவ்வொரு தோட்டாவும் அவள் மேல் மலராய்ப் பொழிந்தன, அவன் அதிசயித்து நின்றான். யார் இவள் என அவன் அதிசயித்துப் பார்த்த போது அவள் திரும்பி ஒரு சிரிப்பு சிரித்து பிரகாச ஒளியோடு மறைந்தாள்.

அந்த வெளிச்சத்தில் அவன் பார்வை பறிபோனது, அவன் மிகுந்த வேதனையுடன் வீழ்ந்தான். அவனைக் கண்டெடுத்த உதவியாளர்கள் அவன் கண்டது அம்மன் என உள்ளூர்வாசிகளுடன் சொன்னார்கள்.

அவன் தன்னை அம்மன் சந்நிதிக்கு கொண்டு செல்லச் சொன்னான், அங்குச் சென்று மிகுந்த உருக்கத்துடன் மன்னிப்புக் கேட்டான். மறுநொடி அவனுக்குக் கண் பார்வை வந்தது.

அவனுக்குக் கண் பார்வை வந்ததை அறிந்த கிளைவ் தானும் அன்னையினை வேண்டினான், அவனுக்கு இந்து தெய்வங்கள் மேல் எப்போதும் பக்தி இருந்தது.

அவன் அன்னையினை நினைத்த மாத்திரத்தில் அவனுக்கு அம்மை நோய் குணமாயிற்று. அம்மனை நோக்கி ஓடியவன் பெரும் காணிக்கை செலுத்திப் பணிந்தான், அந்நொடியில் இருந்து அவன் மாறினான். மிகுந்த பராக்கிரமும் போர் முறையும் வியூகமும் அறிந்தவனான்.

அடிப்படையில் அவன் ஒன்றுமில்லாதவன், தற்கொலைக்கு இலண்டனில் முயன்று தோற்று கிழக்கிந்திய கம்பெனியில் கூலியாளாக வந்தவன், இப்போதும் கூலிக்கே போராட வந்தான்.

ஆனால், அன்னை முன் நின்றவனுக்கு பெரும் போர் ஞானம் வந்தது, அந்நொடி எழுந்தவன் இங்கு மோதுவதை விட ஆற்காடு கோட்டையினை முற்றுகையிடலாம் என வியூகத்தை மாற்றினான், ஆற்காடு கோட்டையினை அவன் பிடித்துக்காட்ட சாந்தாசாஹிப்பும் பிரஞ்சுக்காரரும் அதிர்ந்தார்கள், யாரும் செய்யமுடியாச் சாதனை அது.

பின் நடந்த போரிலெல்லாம் கிளைவ் வென்றான், அவன் வெற்றிதான் இங்குப் பிரிட்டிஷாரை நிறுத்தியது, முழு இஸ்லாமிய நாடாக ஆப்கானியர் ஆதிக்கம் இருந்த இந்தியா அந்த ஆபத்தை முறியடித்தது.

ஆம். பிரிட்டிஷாரின் வருகை 800 வருட ஆப்கானியரை இங்கிருந்து அகற்றியது, அதைத் தொடங்கி வைத்தவன் கிளைவ், அவனை ஆசீர்வதித்து அனுப்பியவள் அன்னை.

ஆம். அந்தச் சமயபுரம் அன்னைதான் அன்று மதுரை சுல்தான்களை விரட்ட ஆசிவழங்கினாள். பின்னாளில், அதே சுல்தான்களை விரட்டி அடிக்க ஆசி வழங்கியவளும் அவளே.

எப்போதெல்லாம் இந்தத் தேசத்துக்கும் மதத்துக்கும் ஆபத்து வருமோ அப்போது அங்குக் குடிகொண்டிருக்கும் மகா சக்தி எழுந்து அதனை அகற்றிக் காக்கின்றது, அவள் பெயர்தான் சமயபுரம் மாரியம்மன்.

தன் நாட்டையும் மக்களையும் அவள் என்றென்றும் காக்கின்றாள், இப்போதும் கோட்டைக்கட்டி அமர்ந்து காக்கின்றாள்.

சமயபுரத்தாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.

இரண்டாம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.

இங்கு மூன்று விநாயகர்கள் உண்டு. கோவிலுக்குக் கூட்டம் வர வர பக்தர்களை நிரம்ப கண்ட ஆனந்தத்தில் அன்னை மிக்க உருக்கமடைந்தாள். அவளின் உருக்கத்தின் சக்தி அதிகரித்தது, அந்தச் சக்தியினைத் தாங்கமுடியாத அளவு பல சம்பவங்கள் நடந்தன, அவள் அன்பின் வீரியமும் சக்தியும் அப்படி இருந்தது.

அங்குப் பல புரிந்து கொள்ளமுடியாத காட்சிகள் சம்பவங்கள் நடந்தன, அவளை கட்டுப்படுத்துவது என்பது முடியாததாக இருந்தது.

பக்தர்கள் காஞ்சி மகாபெரியவரை அணுகினார்கள், அவர் வலப்புறத்தில், ஒரே சந்நிதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங்களாக மூன்று விநாயகர்களைப் பிரதிஷ்டை செய்தனர். அப்படியே அம்மன் முகத்தில் இருந்த கோரைபற்கள் அகற்றபட்டு சாந்த சொருபினியானள், அவளுக்கு 1970 இல் மகா பெரியவரே கும்பாபிஷேகம் செய்தார்.

எனினும், அவளின் அனல் அடங்கவில்லை. அதனால் அவளைக் குளிர்விக்க அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்தபடி கால்வாய் போல் தொட்டிகளை அமைத்திருப்பார்கள்.

அன்னையின் க‌ருவறை மற்றும் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. பக்தர்கள் கொடுத்த தங்கத்தின் எடை மட்டும் 71 கிலோ . இத்துடன் 3 கிலோ செம்பு சேர்க்கப்பட்டு இந்தத் தகடுகள் வேயப்பட்டன‌.

அன்னை இங்கு சுகாசினி கோலத்தில் காட்சியளிப்பாள், அது ஐந்து தலை நாகம் குடைபிடிக்க வலது காலை தொங்கவிட்டு இடக் காலை மடித்து காட்சியளிப்பாள். கீழே தொங்க விட்டுள்ள வலக் காலின் கீழ் அசுரர்களது மூன்று தலைகள் காணப்படுகின்றன. இவளின் எட்டுத் திருக்கரங்களில் கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவை உண்டு.

குங்கும மூக்குத்தியுடன் கூடிய அல‌ங்காரத்துடன், 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, 27 யந்திரங்கள் கொண்ட திருமேனியில் அவள் அருள்பாலிக்கின்றாள், இது 27 நட்சத்திரங்களைக் குறிப்பது.

இந்த அம்மன் மூலிகையும் விசேஷ சக்திகளும் கொண்ட வேர்களால் செய்யப்பட்டவள் என்பதால் அங்கு அபிஷேகமில்லை.

கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடும் மரபு உண்டு.

அன்னையின் பக்தர் சூரப்ப நாயக்கர். இவர், ஒரு முறை அன்னையின் ஆசி பெறாமல் புதிய உற்சவர் விக்கிரகம் ஒன்று செய்து பிரதிஷ்டை செய்ய முயன்றார். அதற்குப் பல தடைகள் ஏற்பட்டன. இறுதியில் சூரப்ப நாயக்கர் கண்ணீர் மல்க அன்னையிடம் மன்றாடி மன்னிப்புக் கோரினார். அன்னை மனமிரங்கி அவருக்கு அனுமதி அளித்தாள்.

இன்றும் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் திருவீதி உலாவின்போது சூரப்ப நாயக்கர் செய்த விக்கிரகம் இடம் பெறும்.

இங்குள்ள பெருவளை வாய்க்கால் முதல் தீர்த்தமாகும், இது கரிகால் பெருவளத்தானால் வெட்டப்பட்ட வாய்க்கால், பெருவள என அவன் பெயரால் வழங்கப்படுகின்றது, ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருக்குளம் மற்றொரு புண்ணிய தீர்த்தம். இதற்கு ‘மாரி தீர்த்தம்’ என்று பெயர்.

இந்த ஆலயத்தில் அம்பாள் சிவ ரூபமாகக் கருதப்படுவதால் விபூதி விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிற அம்மன் கோயில்களைப் போல் அல்லாமல் இங்கு மட்டும் சிவச்சார்யர்கள் அர்ச்சனை செய்வார்கள்.

இந்த அம்மனுக்கு தைப்பூசமன்று திருவரங்கத்தில் இருந்து சீர்வரிசையும் இதர அன்பளிப்பும் வரும், அவள் கண்ணனின் சகோதரி அம்சம் என்பதால் இந்த மரபு காலம் காலமாக உண்டு.

இங்குச் சித்திரைத் திருவிழா, ஆடி புரட்டாசி வைபவம் என நிறைய இருந்தாலும் மகா முக்கியமானது பச்சைப் பட்டினி விரதம், அது உலக மக்களுக்காக அன்னையே இருக்கும் விரதம்.

பொதுவாக மக்கள் அம்மனுக்காக விரதம் இருப்பார்கள், இங்கு அம்மன் மக்களுக்காக விரதமிருப்பார். மாசிக் கடைசி வார முதல் பங்குனிக் கடைசி ஞாயிறு வரை 27 நாட் களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டும் சாயரட்சை பூஜையின்போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு, வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படுகின்றன.

அம்மன் 27 நட்சத்திரத் தத்துவங்களையும் தன்னில் கொண்டிருக்கின்றாள். இந்த உலகின் மக்களெல்லாம் 27 நட்சத்திரத்தில் அடங்கிவிடுவார்கள், அதனால் எல்லா மக்களுக்குமான விரதம் இது.

இந்த விரதத்தை அன்னையோடு சேர்ந்து மக்களும் அனுசரிப்பதும் உண்டு, இது எல்லாக் கர்மத்தையும் போக்கும், பெரும் பலன்களைப் பெற்றுத் தரும்.

இங்கு எல்லாக் காலமும் வழிபாடுகள் அதிகம் என்றாலும் அமாவாசைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகம் அதிலும் புரட்டாசி மகாளய அமாவாசை அன்று கூடும் கூட்டம் மிக அதிகம்.

ஆற்றில் குளித்து வரும் பக்தர்கள் ஈர உடையுடன் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபடுவதுடன், ஆடு, கோழி, தானியங்கள், உப்பு, வெல்லம் ஆகியவற்றுடன் நேர்ந்து கொண்ட வெள்ளியால் ஆன உறுப்புகளையும், தன்னைப் போன்ற மனித பொம்மையையும் காணிக்கை செலுத்துகின்றனர்.

இங்கு ஆடு கோழி காணிக்கை உண்டே தவிர பலி இல்லை. வினோதமான வழிபாடும் உண்டு நேர்ச்சை செய்த பக்தர்கள் மல்லாந்து படுத்துக் கொண்டு தங்களின் வயிறு மற்றும் கண்களில் மாவிளக்கு தீபம் ஏற்றி வைத்தும் அம்மனை வழிபடுகின்றனர்.

மாங்கல்ய பலம் வேண்டுவோர் தாலி பலத்துக்காக சுமங்கலிப் பெண்கள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களைத் தானம் அளித்தால், அம்பாளே பெண்மணியின் உருவில் வந்து இவற்றைப் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பாள்.

குழந்தைப்பேறின்மை, தொழில் பிரச்னை, ராகு கேது தோஷம் எல்லாம் அன்னையினை நினைத்த மாத்திரத்தில் தீரும்.

புராணக் காலம் முதல் இப்போதும் எப்போதும் அவள் அற்புதங்களைச் செய்து கொண்டே இருக்கின்றாள், அவள் அங்கு நடத்தும் அற்புதங்கள் ஏராளம்.

கரும்பு தூளி இன்னும் விசேஷம். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் நேர்ந்து கொள்வது இந்த நேர்ச்சை. அன்னையின் அருளால் கருவுற்று, சீமந்தம் முடிந்த பின், சீமந்தப் புடவை வேஷ்டியைப் பத்திரமாக வைத்திருப்பர்.

குழந்தை பிறந்ததும் ஆறாவது மாதத்தில் அன்று பத்திரப்படுத்திய துணிகளை மஞ்சள் நீரில் நனைத்து கரும்புத் தொட்டில் தயார் செய்து அதில் குழந்தையைக் கிடத்துகிறார்கள். அந்தத் தொட்டிலைப் பிடித்தபடி தந்தை முன்னே செல்ல, தாய் பின்தொடர மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள்.

இந்தக் காட்சி அன்றாடம் அங்கு நடக்கும் ஒன்று, பார்வை இழந்த சிவந்திலிங்க சுவாமிகள் இந்த அன்னையின் மீது அருட்பாக்கள் பாடிக் கண்ணொளி பெற்றிருக்கிறார். இந்த அருட்பாக்கள் இன்றும் உண்டு.

பழனிக்கு அடுத்து அதிக காணிக்கை குவியும் ஆலயம் இதுதான் என்பதில் தெரிகின்றது அன்னையின் மகா சக்தி.

இந்த ஆலயம் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் பெரும் ஞானம் தரும், அவர்கள் குறையெல்லாம் போக்கி எழுதும் சக்தியினைத் தரும்.

அதற்குக் கோவி மணிசேகரன், பாலகுமாரன் போன்றோர் பெரும் உதாரணம். இன்னும் பலர் உண்டு.

இந்த ஆலயம் பக்தர்களுக்கு மட்டுமல்ல தேசத்துக்கும் மதத்துக்கும் அதன் வரலாற்றுக்கும் மிகப் பெரிய காவலைத் தரும், மைசூர் சாமுண்டீஸ்வரி போல நாட்டை ஆளும் அரசர்களுக்கான ஞானத்தை அவளே அருள்வாள். அரசர்களுக்கு முதல் தேவை ஞானமும் அறிவும், அதைத் தருபவள் இவள், தைரியமும் வீரமும் அடுத்தடுத்து அருள்வாள்.

இங்கு எல்லா நோயும் தீரும், கண் நலம் வழங்குவதால் அவள் கண்ணாத்தா, எல்லா வரங்களையும் மாரிபோல் வழங்குவதால் அவள் மாரியாத்தா.

என்றும் அது அவள் கோட்டை, ஆலய மண்டபத்தில் காலை 4 மணிக்கு அவள் நடந்துவரும் கொலுசு சத்தம் எந்நாளும் கேட்கும், அதை பக்தர்கள் அனுதினமும் கேட்பதுண்டு.

அவள் இந்நாட்டை யாரெல்லாம் நேசிப்பார்களோ இங்கு அக்கிரமத்தை ஒழிப்பார்களோ அவர்களுக்கு மகிழ்ந்து வரம் தருவாள். நிறைய ஞானமும் அறிவும் தைரியமும் வீரமும் தருவாள். அதை நாயக்க மன்னர்களுக்கு வழங்கினாள், ராபர்ட் கிளைவுக்கு வழங்கினாள், இன்னும் எல்லா அரசர்களுக்கும் தந்தாள்.

இந்நாட்டுக்கு அவள் எப்படிக் காவலோ அப்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் காவல், அவளை நம்பி வணங்கும் குடும்பம் எக்காலமும் வாழும், வழி வழியாக வாழும். இது சத்தியம், மாறாச் சத்தியம்.

ஆடி மாதம் அவளை வணங்குபவர்கள் பாக்கியம் பெற்றவர்கள், அங்குச் செல்லமுடியாதவர்கள் வீட்டிலே இரு விளக்கும், பச்சரிசி மாவும் வைத்து வணங்கினால் அவள் ஓடிவந்து உங்களை ஆசீர்வதித்து தன் பெரும் காவல் கோட்டைக்குத் தரும் காவலும் வரமும் தருவாள், அவளை நோக்கி கைகளைக் கும்பிட்டு வணங்குங்கள் உங்கள் கைகளை பற்றிக்கொள்ள ஓடிவருவாள். அந்த கருணை மிக்க தாய்…

மாரியம்மன் ஆலயங்கள் 10 : படவேடு ரேணுகா மாரியம்மன் ஆலயம்.

வேலூருக்கும், ஆரணிக்கும் இடையே அமைந்திருக்கும் ஆலயம் அந்தப் படவேடு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம், அவளே அங்கு மாரியம்மனாகவும் இருந்து அருள்பாலிக்கின்றாள்.

அந்த வரலாறு புராணத்தில் இருந்து வருகின்றது, அது நீண்ட பெரும் வரலாறு.

விதர்ப்ப நாட்டை பல நாடுகளுடன் சேர்ந்து ஆண்ட மன்னனுக்கு குழந்தையில்லை, அவன் சிவபெருமான் பார்வதியிடம் வேண்டி ஒரு மகளைப் பெறுகின்றான், அவளுக்கு ரேணுகா எனப் பெயர், இவன் அகத்திய முனிவரின் சீடன்.

ரேணுகா மிகுந்த பக்தியோடு வளர்கின்றாள். தன் தோழி சாமுண்டா எனும் மந்திரி மகளோடு போர்க்கலைகள் அனைத்தும் கற்றுப் பெரிய பராக்கிரமசாலியாக வளர்ந்து நிற்கின்றாள். அவளுக்கு மணமுடிக்கும் காலம் வந்தது.

அந்நேரம் அவளுக்குக் கனவில் ஒரு ஆற்றங்கரையும், ஒரு ஆடவன் முகமும் அடிக்கடி வந்து போனது. ஆனால், அவள் அதனைப் பெரிதாகக் கருதவில்லை.

மன்னன் தன் மகளுக்கு மணமுடிக்க விரும்பினான், அவளோ தன்னைப் போரிலோ மனதாலோ வெல்பவன் எவனோ அவனையே மணப்பேன் எனச் சொல்லி தன் தோழி சாமுண்டியுடன் கிளம்பினாள். அதாவது, வடக்கே இருந்து பல இராஜ்ஜியங்களைக் கடந்து, அகத்தியர் இருக்கும் தெற்குப் பக்கம் வருவது அவளின் திட்டம்.

இப்படி வரும்போது எல்லா இளவரசர்களும் அவளுக்குப் பணிந்தனர், யாருக்கும் அவளுடன் மோதவோ வாதிடவோ தைரியமில்லை. அவள் எங்கும் தனக்கு ஏற்றத் துணை கிடைக்கா நிலையில் இந்த ஆரண்யம் அதாவது பெரும் காடாக இருந்த பாலாற்றின் பக்கம் வந்தாள்.

அப்போது கமண்டல நதியோரம் ஒரு முனிவன் தன் சீடர்களுடன் இருப்பதைக் கண்டாள், அவனைக் கண்டதும் அவளுக்கு அவள் கனவெல்லாம் நினைவுக்கு வந்தது, அந்தக் கனவில் வந்த உருவம் அவனே.

அவனே தனக்கேற்ற கணவன் எனப் பணிந்தாள், அவன் பெயர் ஜமதக்னி.

அவளோ இளவரசி எல்லாச் சுகங்களிலும் இன்பங்களிலும் வளர்ந்தவள், சேவகர்கள் ஆயிரம், அவரோ காட்டில் தனித்து வாழும் தவமுனி, அதனால் முனிவர் பரமனிடமே வேண்டினார், அவளை மணக்க சொல்லி உத்தரவு கிடைத்தது.

எப்போதுமே ஒரு ஆண் சக்திக்குப் பெண்ணின் சக்தியே முழுமை தரும், இதனாலே முனிவர்களும் தமக்குகந்தப் பெண் துணையினைக் கொண்டிருந்தனர், யோகத்தில் இது அனுமதிக்கபட்ட சூட்சுமம்.

அவர் அவளுக்கு நிபந்தனையிட்டார். அரண்மனைவிட்டு இங்கே தங்கி, தனக்குச் சேவகம் செய்வதாக இருந்தால் திருமணம் செய்யலாம் எனச் சொன்னார். அவளும் இசைந்தாள், தோழி சாமுண்டி விடைபெற்றாள், இவர்கள் வாழ்வு தொடங்கிற்று.

அவர்களுக்கு வாசு, ப்ரிஹுத்யானு, புருத்வகன்வா, ராம்பத்ரா என நான்கு மகன்கள் பிறந்தார்கள். ராம்பத்ரா என்பவன் விஷ்ணுவின் அம்சமாக சிவனின் அருள் பெற்றவனாக இருந்தான், சிவன் அவனுக்குக் கோடரி கொடுத்திருந்தார், அதனால் அவன் பரசுராமன் என்றானான்.

ஜமதக்னி முனிவர் பரசுராமனுக்கு எல்லாக் கலைகளும் கற்றுக்கொடுத்து பெரும் வீரனாக்கினார்.

அனுதினமும் ஆற்றங்கரைக்குச் செல்லும் ரேணுகா மண்ணுக்கு உத்தரவிடுவாள்; அவளின் புனிதத்தன்மையால் மண்ணே ஒரு பானையாக உருமாறும்; அதில் நீரெடுத்து வந்து முனிவரின் பூஜைக்கு உதவுவாள்.

அன்று அவள் நீரெடுக்க செல்லும்போது அப்படியே குடம்பெற்றாள், பெற்றவள் வானில் ஒரு அசைவு தெரிய மேல் நோக்கினாள், அங்கு ஒர் அழகிய காந்தர்வன் சென்று கொண்டிருந்தான், அவனின் அழகில் நொடிப் பொழுதில் மெய்மறந்தாள் ரேணுகா.

ஆனாலும், அவள் சுதாரித்துத் திரும்பும்போது அவள் பானை உடைந்தது, அவள் எவ்வளவோ முயற்சித்தும் மறுபடி அவளால் பானை செய்யமுடியவில்லை. பூஜைக்குத் தாமதமான நிலையில் அவள் இன்னும் திரும்பாத காரணத்தை தன் ஞான திருஷ்டியில் கண்ட முனிவர் அவள் காந்தர்வனைக் கண்டு ஒருநொடி மயங்கியதே இந்த நிலைக்கு காரணம் என அறிந்து கொதித்தார்.

அவள் தன்னிலை தவறிவிட்டாள் இனித் தன்னோடு வாழ அவளுக்குத் தகுதியில்லை, அவள் ஆசைகளைக் கடந்து தன்னைச் சரணடைந்தாள் என எண்ணினால் அவள் அடிமனதில் இன்னும் சலனமிருக்கின்றது, அப்படியானால் அவள் தன்னை ஏமாற்றிவிட்டாள் எனக் கொதித்த முனிவர் தன் மகன்களை நோக்கி தாயினைக் கொல்லச் சொன்னார்.

மற்ற மகன்கள் மறுத்த நிலையில் அவர்களைச் சாம்பலாக பொசுக்கினார். அந்நேரம் அங்கில்லாமல் எங்கோ சென்று திரும்பி வந்தவனும் தந்தையினைக் குருவாகக் கொண்டிருந்தவனுமான‌ பரசுராமன் அவர் சொன்னதைச் செய்யத் துணிந்தான், அவன் கோடரி கொண்டுவரும் கோலத்தினை உணர்ந்தவள் ஊருக்குள் ஓடினாள், அங்குமிங்கும் அலறியபடி அலைந்தவள் சலவைத் தொழிலாளி குடிசையில் அடைக்கலமானாள்.

தன் தாயினைத் தேடிவந்த பரசுராமனை அந்தச் சலவைத் தொழிலாளி பெண் தடுத்தாள். அவள் கழுத்தைத் துண்டாக்கியவன் தன் தாயின் கழுத்தையும் வெட்டிவிட்டு தந்தையிடம் சென்று விஷயத்தைச் சொன்னான்.

அவர் அவன் செய்த குருபக்திக்காக மகிழ்ந்து வரம் கேட்கச் சொன்னார். அவனோ தாயுன் உடன்பிறந்தோரும் அந்தச் சலவைத் தொழிலாளி பெண்ணும் மறுபடி உயிர்பெற வேண்டும் என்றான். முனிவரும் வரமருளினார்.

அப்படியே கமண்டல நீரில் உடன்பிறந்தோரை எழுப்பியவன் தாயினைத் தேடிச் சென்றான். அவசரத்தில் தாயின் தலையினை சலவைத் தொழிலாளி உடலிலும் அவள் தலையினைத் தாயின் உடலிலும் பொருத்தினான். இருவரும் உயிர்பெற்றார்கள்.

அத்தோடு தாயினை அழைத்து வந்தான் முனிவரும் கோபம் தீர்ந்து ஏற்றுக் கொண்டார்.

பின் பரசுராமன் தவம் செய்யச்சென்றபோது கார்த்தவீரியன் எனும் மன்னன் வந்தான்; அவன் ஆயிரம் கரங்களைக் கொண்டவன்; வெல்லமுடியாதவன்; அவன் முனிவரிடம் இருந்த காமதேனுவுக்காக ஜமதக்னியினைக் கொன்று அதனை அபகரித்தான்.

திரும்பி வந்த பரசுராமன் கார்த்தவீரியனைக் கொன்று காமதேனுவினை மீட்டு வந்து தகப்பனுக்காக அழுதான். அந்நேரம் அவன் தாய் ரேணுகாவும் உடன்கட்டை ஏறத் துணிந்தாள், அந்நேரம்தான் அவள் யாரென்ற உண்மை வெளிப்பட்டது.

அவளை அக்னி ஏற்க மறுத்தது. அவள் மிகுந்த உக்கிர உருவம் அடைந்தாள். கடும் வெம்மை அங்கு வெளிபட்டது; அவள் வெம்மையினைத் தணிக்க வேப்பிலை ஆடை உடுத்தினாலும் சீற்றம் தணியவில்லை.

அந்நேரம் சிவன் வந்து அவளைச் சாந்தபடுத்தினார். முனிவரைத் தன்னோடு அழைத்துக் கொண்டார். அவள் தானும் வருவேன் எனக் கிளம்ப, பரசுராமன் வெட்டிய அந்தத் தலைவடிவத்தில் பூலோக மக்களுக்கு அவள் அங்கிருந்து ஆசிவழங்கிக் காக்கவேண்டும்; இங்கே தங்கவேண்டும் எனச் சொல்லி மறைந்தார் சிவன்.

அவள் அங்குத் தலையோடு தெய்வமானாள்.

பின்னர், பரசுராமனுக்குப் பல இரகசியங்களைத் தத்தாத்ரேய மகரிஷி போதித்தார். “பரசுராமா! அவள் ஆதிபராசக்தி, இந்த உலகில் பல நன்மைகளைக் கருதி உன் தாயாக வந்தாள்.

நீ பெற்ற வரத்துக்கெல்லாம் அவளே காரணம், அவள் மகனாகத்தான் நீ நாராயணன் அம்சமாகத் தோன்றினாய்.

அவளே தசமகா வித்யாவில் சின்னமஸ்தா; நவ துர்கா வழிபாட்டில் காளராத்ரி ;
சப்த மாதாவில் சாமுண்டா” என அவளின் இரகசியங்களைச் சொன்னவர், இன்னும் சொன்னார்.

சலவை பெண் உடம்பும், உன்னுடைய தாயின் சிரசும் பெற்று இருக்கும்போது அவள் ரேணுகா பரமேஸ்வரி. சிரசே பிரதானம் என்பதால் உடலை மண்ணுக்குள் வைத்து சிரசை மேலேவைத்து ரேணுகா மாரியாக வணங்குங்குகிறோம்.
சிரசு சலவைப் பெண்ணின் முகமும் உடல் ரேணுகையாக உள்ள வடிவம் மாரியம்மன். ( மாறிய அம்மா ).

உன் தாய் உடலும் சலவைத் தொழிலாளி உடலும் மாறியதும் பரமன் விருப்பமே, அவள் எல்லாருக்கும் எல்லாக் குலத்துக்கும் தாய், உடலோடு அவள் மாரியம்மன், தலையோடு அவள் ரேணுகா எனச் சொல்லி சூட்சும இரகசியமும் போதித்தார்.

அன்றிலிருந்து அவள் வழிபாடு அங்கு நிலைத்தது. பின்னாளில் எவ்வளவோ மாறுதல்கள் வந்தும் அவள் கோவில் நிலைத்தது. பரசுராமன் காலம் தொட்டு இப்போது வரைக்கும் அவள் அங்கு அருளாட்சி செய்கின்றாள்.

முருகப்பெருமான் சூரனை அழித்துவிட்டு அவள் சந்நதி முன்புதான் தேவசேனாதிபதி பட்டம் பெற்றார். இதனால் முருகப்பெருமான் தலம் அவள் ஆலயம் அருகே உண்டு.

இவள் காலத்துக்கும் வெகுவாக முந்தையவள்.

இராவணன் வீழ்ந்தாலும் அவன் குலத்தில் தாண்டக இராவணன் என்பவன் பெரும் தொல்லைக் கொடுத்தான்; அவன் தன் உயிரை ஒரு வண்டாக மாற்றி இந்த தலத்தின் குளத்தின் தாமரையில் ஒளித்துவைத்தான்; அவனை அழிக்க அனுமன் வந்தபோது அன்னைத் தடுத்தாள். பின்… இராமபிரானே வந்து பணிந்து அந்த அரக்கனை ஒழித்தார்.

இப்படி யுகம் தாண்டி நிற்கும் ஆலயம் அது. அந்த ஆலயத்தின் கீர்த்தியும் சிறப்பும் மாபெரும் சக்தியும் சிறப்பு வாய்ந்தவை. ஜமதக்னி முனிவரின் ஆசிரமம் இருந்த இடம் என்பதால் சக்தியும் ஆற்றலும் மிக அதிகம்.

இந்தத் தலத்தின் பாணலிங்கம் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கபட்டது. அவர்தான் இங்குப் பிரதிஷ்டை செய்தார்.

இந்த அம்மன் சுயம்பு என்பதால் அந்த ஆதிகால தலையுடன் தானே உருவாகி அமர்ந்திருக்கின்றாள்; அவள் சீற்றம் தணிக்க பிரம்மா, சிவன், விஷ்ணு என மூவரும் அவளோடு இருந்து அருள்பாலிக்கின்றார்கள்.

அந்தத் தலை உருவம் சுயம்பு… அதன் பின்னால் அத்திமரத்திலான முழு அம்மன் சிலை உண்டு.

இங்கு எல்லாச் சக்தி தேவியின் ஆலயங்களிலும் இருக்கும் சிங்கம், பிற மிருகங்கள் போன்ற வாகனங்கள் இங்கு காணப்படவில்லை. காரணம் இங்கு அவள் குடியிருக்கின்றாள் என்பதாலும் அன்னை அவற்றை எல்லாம் கடந்த நிலையில் உள்ளதாலும் அவை வைக்கப்படவில்லை.

இங்கு ஆதிசங்கரர் வந்து சக்தி தேவி, பாண லிங்கம் போன்றவற்றை பிரதிஷ்டை செய்து, நானாகர்ஷன சக்கரத்தை ஸ்தாபித்து உள்ளார். அதன் சக்தி அதிகம், வல்லமை மிக அதிகம்.

இங்கு ஆலயப் பிரசாதமாக குங்குமத்தைத் தராமல் கமண்டல நதி அருகில் உள்ள ஜமதக்னி யாகசாலையின் மணலை பிரசாதமாகத் தருகிறார்கள், ஆனிமாதத் திருமஞ்சனத்தில் வெட்டி எடுக்கப்படும் மணல் இங்கே பிரசாதமாகக் கொடுக்கப்படும்.

ஆலயத்தின் தென் பகுதியில் விநாயகர் சந்நதியும், தென் மேற்குப் பகுதியில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் உள்ள சந்நதியும் உண்டு.

பரசுராமர் பிறந்த இடம் என்பதால் அவருக்கும் அங்கொரு சந்நதி உண்டு.

உள்சுற்று வெளிச்சுற்று என இரு பிரகாரங்களைக் கொண்ட நான்மாடக் கோவில் இது. திருச்சுற்றில் அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் சந்நதிக்கு அருகில் உட்பிரகாரத்தில் அருள்மிகு சோமநாத ஈஸ்வரர், உமாமகேஸ்வரி அம்மன் தனித்தனி சந்நதிகளில் காட்சியளிக்கின்றனர்.

இராமனும் அனுமனும் வந்ததால் அவர்களுக்கும் அடையாளம் உண்டு.

கோவில் திருக்குளம் உள்பிரகாரத்தில் வடக்கிழக்கில் அமையப்பெற்றுள்ளது. அன்னையின் கருவறை நோக்கி பரசுராமரும், நந்தி தேவரும் காட்சி தருகின்றார்கள். அகில உலகையும் காத்தருளும் அன்னை ஸ்ரீரேணுகாம்பாள் இங்கே காருண்யம் மிக்கவளாய், தீர்க்கமான கண்களுடன், புன்னகை தவழும் அதரங்களுடன் அமர்ந்த கோலத்தில், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றாள்.

இங்கு எல்லா வினையும் தீரும், அன்னை முன் அம்மை நோய் முதல் எல்லா நோய்களும் தீரும். எல்லோர்க்கும் அன்னை இங்குப் பெரும் அருள் பாலிப்பாள்.

அவள் திருமண வரம், குடும்பத்துடன் வாழும் வரம் தருவாள், குழந்தைச் செல்வம் நிரம்பத் தருவாள், பெண்கள் எந்நிலையில் இருந்தாலும் என்ன தவறுகள் செய்திருந்தாலும் அவற்றையெல்லாம் போக்கிப் பெரும் வாழ்வுக் கொடுப்பாள்.

இது படைவீடு எனக் கொண்டாடப்பட காரணம் இருந்தது. ஒரு காலத்தில் 1008 சிவாலயங்களும், 108 விஷ்ணு ஆலயங்களும் இவ்வூரில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றுள் ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில், அம்மையப்பன் திருக்கோயில் மற்றும் இராமச்சந்திர சுவாமி திருக்கோயில் தவிர இதர திருக்கோயில்கள் அனைத்தும் காலப்போக்கில் இல்லை.

ஆயிரம் வீடுகளைத் தெய்வங்களைப் படைபோல் கொண்டிருந்ததால் அவள் படைவீடு என்றானாள். பின்னாளில், அது படவேடு என மாறிற்று.

இங்குப் பக்தர்கள் துலாபாரம் செய்வார்கள். நோய் கண்டவர்கள் உருவமும் புடவையும் வைத்து வழிபடுவார்கள், இன்னும் வேப்பிலை மட்டும் கட்டிக்கொண்டு அம்மனை வழிபடும் மரபு உண்டு.

அங்கபபிரதட்சணம் செய்தல், மொட்டை அடித்தல், காதுகுத்தல், தொட்டில் கட்டுதல், ஆடு மாடு கோழி காணிக்கை செலுத்தல் ஆகியவை இத்தலத்தில் பக்தர்கள் செலுத்தும் முக்கியமான நேர்த்திகடன்களாகும்.

உடலின் கட்டி நீங்க வெல்லம் மிளகு சாற்றுவார்காள், குழந்தை வேண்டி தொட்டில்கட்டும் வழமை உண்டு.

கோடித்தீபம் ஏற்றுதல் இத்தலத்தில் மிகவும் சிறப்புடையது. கோவிலின் பிரசாதமான ஜமதக்னி முனிவரின் யாகசாலை மண்ணை கரைத்துக் குடித்தால் தீரா வினை எல்லாம் தீரும், அன்னை சகலமும் மாற்றித தருவாள்.

இந்த ஆலயம் ஒருவகையில் யோக சூட்சுமத்தைச் சொல்வது, பெரும் ஞானத் தாத்பரியத்தையும் போதிப்பது.

பரசுராமன் தாயின் தலையினை வெட்டினான் என்பது பிறவிப் பந்தத்தை முறிப்பது, தலை வீழ்ந்தது என்பது நான் எனும் அகங்காரம் ஒழிந்ததைச் சொல்வது.

பின் மீளத் தலை ஒட்டியது என்பது ஞானத்தின் பிறப்பைக் குறிப்பது, சலவைத் தொழிலாளி தலைக்கு அம்மன் தலை வந்தது என்பது மனிதனும் தெய்வமாகலாம், தன் தலையால் தெய்வத்தை உணரலாம் என்பது.

இந்த அன்னை சின்னமஸ்தாவின் சாயல், சின்னமஸ்தா எனும் தெய்வம்தான் தலையின் சக்கரம் துலங்க வைத்து ஞானம் தருபவள்.

ஆம். இது ஒருவருக்கு யோகசக்தி தரும் ஆலயம். அந்த ஆலயம் அமைந்திருக்கும் இடமும், நதியும், மலைக்குன்றுகள் இடையே இருக்கும் அமைப்பும், புருவ மத்தியில் இறைவனைக் காணும் யோகத்தைச் சொல்வது.

இங்கு எத்தனையோ ஞானியர் வந்து ஞானம் பெற்றனர் என்றாலும் கண் கண்ட சாட்சி கணபதி முனிவர்.

இவர் 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ரமண மகரிஷியின் சீடர், மிகுந்த ஞானவானான இவர் கோரக்பூர் இன்னும் காசி உள்பட எல்லா இடமும் சுற்றிப் பெரும் புகழ்பெற்றவர், நாயனா என அழைக்கப்பட்டவர், மகா ஞானி.

ரமணருடன் இருந்தவர், ரமணரின் பெரும் கீர்த்தியினை உணர்ந்து அவருக்கு “ரமண மகரிஷி” எனப் பட்டம் கொடுத்தவர் அவர்தான், மூன்று நாட்களில் மூவாயிரம் ஸ்லோகங்கள் எழுதும் அளவு பெரும் மகா ஞானி.

அவர் இத்தலத்தின் மாபெரும் பக்தர், அன்னையின் ஆலயத்தில் அவர் வந்து தியானம் செய்தபோது 21 நாட்கள் தங்கியிருக்க உத்தரவு வந்தது.

21 ஆம் நாளில் அன்னையே வந்து அவரை தன் சந்நதிக்கு அழைத்துச் சென்று தீட்சை வழங்கினாள், அதன் பின் அவர் மழைபோல் ஸ்லோகங்களைக் கொட்டினார், அன்னைக்குக் கண்கண்ட சீடரானார்.

காஞ்சி காமாட்சி மகாபெரியவர்க்கு எப்படியோ, அப்படிக் கணபதி முனிவர்க்கு இந்த ரேணுகா.

அது சுதந்திரப் போராட்ட காலங்கள், இந்த முனிவர் இந்துமதம் பற்றி பெரும் விழிப்பினை ஏற்படுத்தியது பிரிட்டிஷாருக்கு சுதந்திரப்போராட்டத்தைத் தூண்டுவதாகப்பட்டது, அவரைக் கைது செய்யத் தீவிரமானது.

இதனால் அவர் பேசும்போதோ எழுதும்போதோ கையோடு பிடிப்பது எனத் தீர்மானமாகி உளவுத்துறையினர் இறக்கப்பட்டார்கள், இந்துக்களில் துரோகிகள் அப்பொழுதே இருந்தார்கள்.

கணபதி முனியினைக் கைது செய்ய அலைந்த காவலர்கள் அவர் ரேணுகா தேவி ஆலயத்தில் இருப்பதை அறிந்து அங்கு வந்தார்கள், அங்கே அவரை நோட்டமிட்டார்கள்.

வேலூரில் இருந்து காவலர்கள் வந்திருந்தார்கள், எல்லொரிடமும் சென்னையில் இருப்பதாக சொல்லிக்கொண்டவர்கள் பக்தர் வேடத்தில் முனிவரைக் கண்காணித்தார்கள்.

முனிவர் தன் வழிபாடுகளை முடித்து பாடல்களைப் பாடிவிட்டு “உமாசகஸ்ரம்” எழுத ஆரம்பித்தார், அவர் அருகே வந்து என்ன எழுதுகின்றார் என்பது போல் அமர்ந்தனர் உளவாளிகள்.

“வேலூரிலிருந்து வருகின்றீர்களா, வந்த காரியம் முடிந்ததா?” என இயல்பாக கேட்டபடியே எழுதிக் கொண்டிருந்தார் முனிவர்.

காவலர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது, “என்ன இப்போது? நான் என்ன எழுதுகின்றேன் எனத் தெரியவேண்டும் அப்படித்தானே?, அதோ அவளிடம் கேளுங்கள்” எனக் கைக்காட்டினார்.

அந்நேரம் காவலர்களுக்கு மனமுருக்கம் வந்தது, அவர்கள் இனம்புரியா மகிழ்ச்சியில் ஆனந்தத்தில் கண்ணீருடன் பணிந்து சொன்னார்கள்.

“ஐயா உங்களைக் கைது செய்யத்தான் வந்தோம், இல்லையேல் தீங்கு விளைவிக்க உத்தரவு, ஆனால் உங்களைக் கண்டபின் இனி எங்களால் முடியாது, எங்களை ஆசீர்வதியுங்கள்” என மண்டியிட்டனர்.

அன்னையினை வணங்கிவிட்டுச் செல்லுங்கள் என்றார் முனிவர், அவர்கள் அப்படியே செய்து கணபதி முனிக் குற்றமற்றவர், அவர் மேல் வந்ததெல்லாம் வதந்திகள் என ஆவணமாக எழுதிவைத்தனர்.

அந்தக் கணபதி முனிக்கு ஞானமும் கொடுத்து, காவலும் கொடுத்தவள் இந்த அன்னை.

இவள் எல்லையில் இருந்ததால் எல்லையம்மன் என்றாகி எல்லம்மாள் என்றுமானாள், தலை வடிவ மாரியம்மனெல்லாம் இவள் வடிவமே.

தேசமெங்கும் இவளுக்கு ஆலயம் பல பெயர்களில் உண்டு, ஆதி குல தெய்வம் அவளே, எல்லா மக்களுக்கும் தாய் அவளே.

சக்திபீடங்களுக்குத் தலையும் தலைமையும் அவளே.

ஆனித் திருமஞ்சணம் இங்கு விசேஷம், ஆடியும் ஆவணியும் அவளுக்குப் பெரும் விழா காலங்கள், மார்கழியில் பெரும் வழிபாடுகள் உண்டு.

அவள் ஆலயத்துக்குச் சென்று வழிபடுவோர்க்கு எல்லா வகை காவலும் பலமும் ஐஸ்வர்யமும் கிடைக்கும். பரசுராமனைப் பெற்றெடுத்த அந்த ஞான அவதாரம் உங்களுக்கு எல்லா ஞானமும் அருளும் தந்து தன் பிள்ளை போல் வாழவைப்பாள். ஒருமுறை அவளை வணங்கிப்பாருங்கள், அதன் பின் வாழ்வு எப்படி மாறுகின்றது என்பதை நீங்களே உணர்வீர்கள்.

அவள் ஆதிபராசக்தி, ஆதிகாலத்திலே அங்கு வந்து அமர்ந்த மகா சக்தி, லௌகீகம் ஆன்மீகம் என எதைக் கேட்டாலும் அள்ளி அள்ளி தரும் தாய்சக்தி அவள், படைகொண்டு ஆளும் பெரும் வரம் தருவாள், படியளந்து வாழ்வளித்து கரம்பிடித்து வருவாள்.

அவளிடம் கேட்ட வரமெல்லாம் தந்து, உங்கள் துயரெல்லாம் தீர்த்து, உங்கள் தலைக்கு மேல் தன் கரம் வைத்தபடி ஆயுளெல்லாம் அவள் காத்துவருவாள், பணிந்து அவள் காவலை ஆடிமாதம் பெறுவோர் பெறுபெற்றவர்கள்.

மாரியம்மன் ஆலயங்கள் 11 : திருவேற்காடு கருமாரியம்மன்.

தமிழகத்தின் மாரியம்மன் கோவில்களில் மகா முக்கியமானதும், பெரும் தொன்மை வாய்ந்ததும் மகா நுணுக்கமான தத்துவம் கொண்டதும், பெரும் வல்லமை கொண்டதுமான ஆலயம் இந்தத் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம்.

“கண்டாலும் பிணிநீங்கும் நிதிபெருகும் கலைஒங்கும்
ஞானமுறும், கருத்துணர்ந்து

விண்டாலும் வாணாட்கள் மிக பெருகும்; செவியுற்றால்
வீரமுறும், வேதை தீரும்

பண்டாலின் கீழமரும் பரமனருள் சிறப்புற்றுப்
பரஞானப் பதமளிக்கும்

மண்டலத்தில் தேவி கருமாரியாளின் புராணச்சீர்
எவராலும் மொழியொணாதே”

என்பது இந்த தலத்தின் சிறப்பைச் சொல்லும் தலபுராணத்து வரிகள்.

சென்னைக்கு மேற்கே திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த அற்புதத் ஆலயத்தின் தொன்மை உலகப் படைப்பின் காலத்தை ஒட்டித் தொடங்குகின்றது. பெரும் பிரளயம் ஒன்றுக்குப் பின் இங்குச் சுயம்புவாக எழுந்த சிவனைச் சுற்றி வெள்ளை வேல்மரங்களாக வேதங்கள் எழுந்தன, அதனால் இந்த இடம் திருவேலங்காடு, திருவேதங்கள்காடு என்றும் அழைக்கப்பட்டு திருவேற்காடு என மருவிற்று.

வேதங்கள் வழிபட்ட சிவன் இங்கு வேதபுரீஸ்வரராக விளங்குகின்றார். அவரை ஞானசம்பந்தர் வந்து பாடி வணங்கினார், அவ்வளவுக்கு அந்தச் சிவன் அங்குத் தொன்றுதொட்டு வீற்றிருப்பவர்.

இந்தத் தலத்துக்கு “வட வேதாரண்யம்” என்றும் பெயர் உண்டு.

இங்கு அன்னை எழுந்தருளியது அகத்திய பெருமான் காலத்திலே, சிவ பார்வதியின் திருமணக் கோலத்தை இங்குத் தரிசித்தார் அகத்தியர். பின்னாளில், சிவன் கடுமையான தவத்தில் மூழ்கும்போது அன்னையிடம் தன் ஐந்து தொழில்களையும் ஒப்படைத்தார்.

அதாவது காத்தல், படைத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் எல்லாவற்றையும் சக்தியிடம் கொடுத்தார் சிவன், சக்திதேவி தான் எப்படி இந்த உலகை இயக்கப் போகின்றேன் என்பதை அகத்தியமுனிக்குக் காட்டினாள்.

அகத்தியர் சிவனடியாரான சித்தர் மட்டுமல்ல அவர் அன்னை மேலும் பெரும் பக்திக் கொண்டிருந்தவர், அவரின் பாடல்களிலெல்லாம் அன்னையினை வாலை குமரியாக கொண்டாடுவார், இன்னும் கோலாப்பூர் மகாலட்சுமிக்குத் தனித் துதிகளைத் தந்தவர் அவர், மகா பிரசித்தியான “லலிதா சகஸ்ரநாமம்” அவராலே கிடைத்தது.

அப்படியான அகத்தியருக்குத் தான் உலகை இயக்கப் போகும் கோலத்தைக் காட்டினாள் அன்னை.

ஒரே சக்தியான அவள் ஏழு சக்தியாகப் பிரிந்து நின்றாள். காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அந்தரி, வானத்தி, பார்ப்பனி, கருமாரி என ஏழு வடிவம் காட்டினாள்.

பின், கருமாரியாக இங்கு நின்றுகொண்டாள். மீதி ஆறுவடிவங்களும் அதனதன் ஆட்சிப் பகுதிக்குச் சென்றன, அதனைக் கண்ணாரக் கண்டார் அகத்தியர், இதனால் கருமாரியாக அன்னை இங்கு அமர்ந்திருக்கும் கோலத்தின் பின்னால் ஏழு வடிவங்களும் இப்போதும் உண்டு.

இதனை அகத்தியர் பாடிவைத்தார்.

“ஐந்துதலை நாகமணி அம்பிகையே அருளரசி
அனாதியுருக் கொண்டே மாரி

ஐந்தெழுத்தி ஐம்பொறிச்சி ஐம்பூதம் அறியாத
ஆகாமத்தி ஆரணத்தி

ஐம்புலனை நெறி செலுத்தும் அன்பருக்கு துணைபுரியும்
மக்மாயி அனிமா சக்தி

ஐஞ்சக்தி ஐஞ்சிவனை ஆள்கின்ற ஆதி சக்தி
ஐந்தொழில் செய் கரிய மாரி”

தைப்பூசம் அன்று அகத்தியருக்கு அன்னையின் காட்சி கிடைத்தது, அன்றே மிக உருக்கமாகப் பாடிவைத்தார். அன்னை காட்டிய இந்தக் காட்சி சூட்சுமமானது நுணுக்கமான மறைபொருளைப் பிரபஞ்ச இயக்கத்தை மிக நுணுக்கமாகச் சொல்வது. அதாவது, இந்த உலகமும் படைப்பும் மானுடமும் அதன் இயக்கமும் ஏழு சக்திகளால் இயக்கப்படுவது.

இது ஏழு வானம், ஏழு கடல், ஏழு கிரகம், ஏழு வண்ணம் என எல்லா இயக்கமும் ஏழாகப் பிரியும். மானுட உடலில் தாதுக்கள் ஏழு, சக்கரங்கள் ஏழு என எல்லாமும் ஏழு. இந்த உலகை இயக்கும் சக்திகள் ஏழு.

அந்த ஏழு வடிவத்தை இங்குக் காட்டி எல்லாமே நான் என்பதை அகத்தியருக்குச் சொன்ன அன்னை இங்குக் கருமாரியாய் குடியிருக்கின்றாள்.

கருமாரி என்றால் பல பெயர்களில் பொருளாகும், மாரியம்மன் வடிவமெல்லாம் கண்ணனுக்கு முன்பிறந்த துர்க்கை வடிவம், இவளும் அவ்வடிவமே, அவள் தேவகிக்குப் பதிலாக யசோதையிடம் கருவாகி வந்தவள் கருமாறி கண்ணனிடம் வந்ததால் அவள் கருமாரி.

கருமையான மேகம் போல் பெரும் அன்புமழை, கருணை மழை பொழிவதால் அவள் கருமாரி.

கருநாகம் வடிவில் அவள் அருள்பாலிப்பதால் கருமாரி.

அவள் ஒளிவடிவம், கருமையினை மாற்றி வெளிச்சம் தருவதால் கருமையினை மாற்றித் தருவதால் அவள் கருமாரி. இப்படி அவள் பெயருக்கு பல அர்த்தங்கள் உண்டு.

முருகப்பெருமான் சூரனை வதம் செய்ய செல்வதற்கு முன் இங்கு வந்து வணங்கினார், வந்தவர் அன்னைக்குக் காமதேனுவின் கன்று நந்தினியின் தேவலோகப் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்தார், அது ஆறாக ஓடியது, அந்தப் பாலாறு இன்று பாலி ஆறாயிற்று.

அங்கே முருகப்பெருமான் வேலால் உருவாக்கிய தீர்த்தம் வேலாயுத தீர்த்தமாயிற்று, அது இன்றும் உண்டு.

இந்த ஆலயம் மகா சக்தி கொண்டது, அன்னை கருமாரி இங்கிருந்து எல்லா மக்களையும் ஆசீர்வதிக்கின்றாள், மிக மிகத் தீர்க்கமாக ஆசீர்வதிக்கின்றாள், எல்லா வரமும் அருளுகின்றாள்.

அன்னை வேலமரத்தடியின் பாம்புப் புற்றிலிருந்து வெளிபட்ட சுயம்பு, ஆனால் மரத்தினால் செய்யபட்ட உருவம் கொண்டவள், அகத்தியர் காலம் சம்பந்தர் காலம் தாண்டி இங்கு அவள் புற்றுக்குள் மறைந்திருந்தாள் பின் தன் பக்தை மூலம் வெளிபட்டாள்.

அலமேலு அம்மாள் என்பவரைக் கருநாகம் தீண்டி அவர் இறந்துவிட அவரைத் தகனம் செய்யசக் கொண்டு சென்றபோது ஒருவர்க்கு அருள் வந்து ஆடிச் சொன்னார்.

“நான் இங்குதான் குடியிருக்கின்றேன், இவளை உயிர்பித்து தந்து என்னை நம்பவைக்கின்றேன், அவள் வாயில் கூழ் ஊற்றுங்கள், அவள் எழுவாள், 21 தலைமுறை நான் அவள் குடும்பத்தின் மூலம் இங்கு அருள்பாலிப்பேன்” என்றாள்.

அம்மன் சொன்னபடியே செத்த பிணத்தின் வாயில் கூழ் ஊற்ற அப்பெண் எழுந்தாள், அவளின் சந்ததிகள் இன்றும் அம்மனுக்குச் சேவர்களாக உண்டு.

இந்த வாரிசுகளில் ஒருவர் தம்புசாமி, அவர் சித்துக்காடு வையாபுரி மனைவியினை அம்மன் அருளால் காப்பாற்றினார், இதனால் அந்த வையாபுரி அம்மனுக்குச் சிறு ஆலயம் அமைத்துக் கொடுத்துப் பல வசதிகளைச் செய்தார்.

அதிலிருந்து இந்த ஆலயம் வெகு பிரசித்தியாயிற்று, அகத்தியர் காலத்தில் தோன்றிய அன்னை இப்படிப் பிற்காலத்தில் மீண்டும் தன்னை உலகுக்குக் காட்டி பெரும் வரம் அருளுகின்றாள்.

இன்று கோடிகணக்கான பக்தர்களைத் தன்னுள் இழுக்கும் அன்னை அவள், மாபெரும் பக்தர் கூட்டம் பெற்று தங்க கூரைக்கு கீழ் அமர்ந்திருக்கும் சக்தி அவள்.

உலகெங்கும் பெரும் மக்களைத் தன் பக்தர்களாக்கி அவர்களுக்கு தன் அருள்காவலை வழங்கிகொண்டே நாள்தோறும் பல்லாயிரம் மக்கள் தேடிவரும் அளவு சக்தியோடு நிற்கின்றாள்

ஐந்து நிலை இராஜகோபுரம் கொண்ட இந்த ஆலயத்தில் வேப்பரம் வரவேற்கும் அந்த மரத்தடியில் விநாயகர் அமர்ந்திருப்பார், அவர் வலம்புரி விநாயகர்.

இதை அடுத்து யாக சாலை, அதை அடுத்து அம்மன் சந்நதி, தங்கக் கவசம் பூண்ட கருவறையில் அம்மன் கம்பீரமாக அருள்பாலிக்கின்றாள்.

வடக்குப் பிரகாரத்தில் வேற்கண்ணி அம்மைக்கும், பெரிய கருமாரியம்மனுக்கும், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகன் சந்நதி உண்டு.

வளாகத்தில் நவகிரகங்களுக்குச் சந்நதிகள் உண்டு, அப்படியே ஏழுமலையான் சந்நதியும் உண்டு. இன்னும் துர்க்கை, பிரத்தியங்கிரா சந்நதிகளும் உண்டு.

உள்ளே கருவறையில் கருமாரி அன்னை ஈருருவாய் காட்சி தருகின்றாள். அமர்ந்த கோலத்தில் தனிப்பெரும் கருணையோடு புன்னகை தவழும் திருமுக மண்டலத்துடன் உடுக்கை, திரிசூலம், வாள், கபாலம் தாங்கி எழிற்கோலம் காட்டுகின்றாள் சிவ சக்தி ரூபமாய் அன்னை.

மற்றொரு கோலம் தலைமட்டும் காட்டும் மாரியம்மனாய் அருள் பாலிக்கின்றாள் அந்தக் கருமாரி, அவள் சந்நதியில் பிரசாதம் யாக‌ சாம்பல் மற்றும் குங்குமம். இந்தச் சாம்பல் கண்கண்ட அருமருந்து, இங்கு மட்டும் கிடைக்கும் தனி மருந்து.

அன்னை இங்கு வரும் பக்தர்களுக்குத் திருமண வரம், மழலைச் செல்வம், தொழில் விருத்தி ஆகியவற்றைத் தருகின்றாள், அன்னையின் வேப்பிலை இங்கு எல்லா நோய்களையும் தீர்க்கும் மருந்தாகும்.

இங்கு அன்னை அலமேலுவினை உயிர்பித்த காலத்தில் இருந்து அவள் சந்நதியில் இருக்கும் பிரம்பு விசேஷம், அதைக் கொண்டு ஒருவரைத் தொடும்போது அங்குப் பில்லி சூனியம், மனநோய் எல்லாம் அகலும். இன்னும் ராகு கேது குழப்பமெல்லாம் தீரும், அந்தப் பிரம்பு ஒருவரின் தலைவிதியினையே மாற்றும்.

இங்குப் புற்றுக்குப் பால்வார்த்தால் ராகு கேது குழப்பமெல்லாம் தீரும்.

பௌர்ணமி தோறும் 108 சுமங்கலி பெண்களால் மாலை வேளையில் 108 திருவிளக்கு பூஜை இங்குப் பிரசித்தி.

இன்னும் முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிஷேகம், மாலை சாத்துதல், சங்காபிஷேகம், கலசாபிஷேகம், கல்யாண உற்சவம், பொங்கல் வைத்தல், அங்கப்பிரதட்சணம் என எல்லாமும் எல்லா நாளும் உண்டு.

இங்குப் பூட்டு வைத்து வேண்டுதல் மிகச் சிறப்பு அன்னை முன் பூட்டு வைத்து வேண்டினால் நம் சிக்கல்கள் இன்னல்கள் எதிரிகளை எல்லாம் பூட்டுவாள், நமக்கான நல்ல கதவுகளைத் திறப்பாள், எல்லாத திசையும் கெட்டதைப் பூட்டி நல்லதைத் திறப்பாள்.

இங்குப் பூட்டு வைத்து வேண்டினால் பெரும் பலன் உண்டு, நம் சிக்கலுக்கு அங்கே பூட்டு விழுந்து நன்மையெல்லாம் அவளால் திறக்கப்படும்.

இங்கு ஆடித் திருவிழா பெரும் விசேஷம், அகத்தியருக்கு அவள் தன்னுரு காட்டிய தைப்பூசம் இன்னும் விசேஷம். அப்படியே மாசிமகம், நவராத்திரியெல்லாம் பெரும் வழிபாடு உண்டு.

பௌர்ணமியன்று இன்னும் விசேஷம்.

பொதுவாக, அம்மனுக்கு வெள்ளிக்கிழமை விசேஷம். ஆனால், இவளுக்கு ஞாயிற்றுக்கிழமை கிழமைதான் முக்கியம், காரணம் சூட்சுமமானது.

அன்னை ஒளிவடிவம் என்பதால் இவள் சூரியனின் சக்தியாகின்றாள், இவள் இல்லாச் சூரியன் வெறும் கருமையே.

அன்னை கருமையினை மாற்றி ஒளி தருபவள் என்பதால் ஞாயிறு அவளுக்கான நாள். அப்படியே ஏழுகிரகமும் அவள் வடிவம் என்பதை அவள் முன்னே இயங்குகின்றது என்பதைச் சொல்லும் தத்துவமும் இது.

இவள் தசமகா வித்யாவில் இராஜராஜேஸ்வரி, நவதுர்க்கையில் சந்திரகாண்டா.

இராஜராஜேஸ்வரி என வழங்கப்படும் அம்மன் இந்தக் கருமாரி அம்மனே, அவளை இங்கு இவ்வடிவில் வணங்குவோர்க்கு எக்குறையும் எக்காலத்துக்கும் ஏன் அவர்கள் குலத்துக்கே வராது.

இந்த அம்மன் மகா சக்திவாய்ந்தவள், அக்காலமுதல் இப்போது வரைக்கும் கருமாரியினை நம்பினால் வாழ்க்கை உருமாறும் என்பதற்கு முழு நம்பிக்கையாய் நிற்பவள்.

இங்கு யாரையும் அரவம் தீண்டுவதில்லை, அவ்வாறு தீண்டினாலும் விஷம் ஏறுவதில்லை என்பது சிலிர்ப்பான உண்மை.

அன்னை இங்குப் பெரும் சக்தியாய் நிற்கின்றாள், அவளின் எல்லாக் குழந்தைகளுக்கும் அந்தக் கதவு திறந்தே இருக்கின்றது, அவளை அண்டிச் சென்று நம்பிச் சென்று பாலூற்றி வணங்குவோர்க்கு அவள் எல்லா நலமும் தருவாள்.

அவளின் யாகச் சாம்பலும், வேப்பிலையும் எல்லாச் சிக்கலையும் தீர்க்கும் , ஒரு எலுமிச்சை கனிக்கே இறங்கி வந்து அருள்தருவாள் அந்தக் குங்குமக்காரி.

‘காற்றாகி, கனலாகி கடலாகினாய், கருவாகி, உயிராகி உடலாகினாய்
நேற்றாகி, இன்றாகி நாளாகினாய் நிலமாகிப் பயிராகி உயிராகினாய்…’

என உருகுகின்றது கருமாரி அம்மன் பதிகம்.

அவள் ஒளிதருபவள், வாழ்வில் மட்டுமல்ல மனதில், வாக்கினில், சிந்தையில், அறிவினில், ஞானத்தில், செயலில் என எல்லா ஒளியும் தருபவள், மகா பேரோளியான முக்திநிலை நோக்கியும் நம்மை அழைத்துச் செல்பவள்.

அதனால் காயத்திரியும் அவளாகின்றாள், நம் வாழ்வுக்கும் வளத்துக்கும் அவளே பொறுப்பாகின்றாள், அவளை எங்கிருந்து அழைத்தாலும் எந்நிலையில் அழைத்தாலும் அந்தக் குரலுக்கு வந்து நின்று பெரும் காவலும் வரமும் கருமேகம் போல் பொழிந்து கருநாகம் போல் காவலிருந்து காத்து வருவாள் அந்த மகமாயி. இது சத்தியம்.

மாரியம்மன் ஆலயங்கள் 12 : தென்னலூர் மாரியம்மன் மற்றும் கொன்னையூர் மாரியம்மன்.

இந்து தாத்பரியம் சொன்ன பிரபஞ்ச ரகசியத்தின்படி ஒவ்வொரு சக்தியும் ஏழு சக்தியாக பிரிந்து செயலாற்றும், அந்த நுணுக்கமான அடிப்படையில் சமயபுரம் மாரியம்மனுக்கு ஏழு துணை சக்திகளாய் பிரியும், அப்படிச் சமயபுரம் மாரியம்மன் ஏழு துணை சக்திகளோடு எழுந்தருளியிருப்பாள்.

அந்தச் சக்திகள் லௌகீக மரபுப்படி அவளின் சகோதரிகள் என்றாயிற்று, அதாவது சயமபுரம் மாரியம்மனின் அம்சம் கொண்ட அம்மன்கள் அவர்கள், புன்னை நல்லூர் மாரியம்மன், அன்பில் மாரியம்மன், தென்னலூர் மாரியம்மன், நார்த்தமலை முத்துமாரியம்மன், கொன்னையூர் மாரியம்மன், வீரசிங்கம்பேட்டை என ஆறுபேர் உண்டு.

இவர்களில் ஒன்று தென்னலூர் மாரியம்மன், இது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் தென்னலூரில் அமைந்துள்ளது, இந்த ஊரின் பெயர் “திருநல்லூர்”, பின்னாளில் தென்னலூர் என்றாயிற்று.

இந்த ஆலயம் சோழமன்னர்கள் காலத்தில் சிவாலயம் கொண்ட ஊராக இருந்திருக்கின்றது, குலோதுங்க சோழனின் கல்வெட்டு அப்படித்தான் வரலாற்றைச் சொல்கின்றது.

ஆனால், பின்னாளில் அம்மன் வெளிபட்டாள் அதுவும் சுயம்புவாக வெளிபட்டாள். மக்கள் பால் கொண்டு செல்லும் பாதையில் ஒரு வேப்பமரம் இருந்தது. அது சிவாலயத்தின் அருகில் இருந்தது. ஆனால் அந்த மரத்தின் அருகே செல்லும்போது இனம்புரியாச் சக்தி ஒன்று பால் பானைகளை தட்டிவிட்டது, பாலெல்லாம் கொட்டிற்று.

அது வேப்பமரத்தின் பெரிய வேரினால் வரும் சறுக்கல், அந்த வேர் மக்கள் நடக்கத் தடையாக இருக்கின்றது என எண்ணிய மக்கள் வேரை வெட்ட அதிலிருந்து ரத்தமும் பாலும் பீறிட்டு வர அஞ்சி ஒடுங்கினர் மக்கள், பின் அம்மன் தான் அங்குக் குடிகொண்டிருப்பதைச் சொன்னாள்.

உரிய பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் உருவம் வெளிக்கொணரப்பட்டு ஆலய வழிபாடுகள் தொடங்கின, அன்றிலிருந்து இன்றுவரை அவள் நின்று பேசும் தெய்வமாக நின்று அருள் பாலிக்கின்றாள்.

இவள் அங்குப் பெரிய சக்திவாய்ந்த தெய்வம், பல சந்நதிகளுன் நின்று அந்தப் பக்கம் நீதி பரிபாலனை செய்கின்றாள், அவள் ஆலயத்தில் சக்திவாய்ந்த இதர சந்நதிகளும் உண்டு.

காவேரி தீர்த்தமே இவளுக்கு உவப்பானது என்பதால் விழாக்காலங்களில் காவேரி நீரில்தான் இங்கு எல்லா அபிஷேகமும் செய்யப்படும்.

இவளுக்கு ஸ்ரீ ஐயனார் காவல் தெய்வம், இதனால் திருவிழாவில் குதிரை எடுத்து வந்து வழிபடுவார்கள், இன்னும் ஆடு கோழி போன்ற பலிகளும் உண்டு. இந்த ஐயனார் ஆலயம் திருநல்லூர் முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து 250 அடி தூரத்தில் உள்ளது.

அடுத்து வாரிகருப்பண்ணசுவாமி சந்நிதி உண்டு. இது சற்றுத் தள்ளி அமைந்துள்ளது, இவர் அன்னைக்கு ஏவலாள், அன்னையிடம் சொல்லும் குறைகளை இவரே தீர்த்துவைப்பார் என்பதால் இங்கும் பக்தர்கள் மரியாதையுடன் வழிபடுவார்கள்.

அன்னை கோவில் சுற்றுப் பிரகாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, அம்மன் குடிகொண்ட கூரை உட்புறம் தனித்தே காணப்படுகிறது. அன்னை முத்துமாரியம்மன் உருவானவள் உக்கிரமானவள் என்பதால் இங்கு புகைப்படம் எடுக்க அனுமதியில்லை, அவள் அனுமதியுடன் ஓவியங்கள் மட்டும் வரைய முடியும். அதையும் அவள் அனுமதியுடனே வணங்கவும் முடியும், அவ்வளவுக்குக் கட்டுப்பாடுகள் கொண்ட கோவில் இது.

அன்னை வேப்பமரத்தின் அடியில் தோன்றியவள் என்பதால் இங்கு அதுதான் தலவிருட்சம், வேம்பின் நிழல் போல் அன்னை தன் பக்தர்களுக்குக் குளிர்நிழலாய் நின்று அடைக்கலம் தந்து வாழ்விக்கின்றாள்.

இந்த மரத்தில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை எழுதியோ, மஞ்சள் கயிறுகட்டியோ, குழந்தை வேண்டுவோர் தொட்டில் கட்டியோ தங்கள் பிரார்த்தனைகளைத் தாங்கள் விரும்பிய வண்ணம் செய்கிறார்கள்.

பின் வேண்டுதல் நிறைவேறியதும் வந்து நேர்ச்சைக்கடன் செலுத்துகின்றார்கள், பொங்கலும் வழிபாடுமாக அன்னையின் ஆலயம் எந்நாளும் திருக்கோலம் கொண்டது.

அன்னை இங்குக் கலியுக கருணைக் கொண்டவள், அவளில் நிலைத்தேர் மண்டபம் பிரசித்தியானது, அங்குதான் தேர் தயார் செய்யப்பட்டு ஊர்வலம் செல்லும்.

இங்கு அம்மன் வாக்கு சொல்லும் முக்கல் மேடை விசேஷம், திருவிழாவில் அம்மனின் வாக்கு தன் பக்தர் மூலமாக இங்கிருந்தே கிடைக்கும், அது ஒருநாளும் பொய்க்காது.

இந்த முக்கல் மேடையில் சில மந்திரக்குறிப்புகள் கண்களுக்குப் புலப்படாத வகையில் உண்டு, இந்த இடம் மகா சூட்சுமமானது, அம்மன் உபாசகர்கள் மட்டுமே உள்செல்ல முடியும், கடும் விரதம் அவசியம்.

அலங்காநல்லூர்க்கு அடுத்து பிரமாண்ட ஜல்லிகட்டு நடக்குமிடம் இதுதான், இக்கோவிலின் காளைதான் முதலில் களத்தில்விடப்படும்.

இங்கு முனி சன்னதி பிரசித்தி, இது மிக உக்கிரமான முனி, இங்கு வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உடனே நீதிவழங்கபடும், சிடல் முனி என இதற்குப் பெயர், இங்குப் பாதிக்கபட்டோர் முறையிட்டால் இந்த முனி வந்து நியாயம் சொல்லும். எந்தக் கொம்பாதி கொம்பனும் இங்கு அடக்கப்படுவான்.

பக்தர்கள் காணிக்கையாக ஆணியால் செய்யப்பட்ட செருப்பு, அரிவாள், போன்ற ஆயுதங்கள், தங்கள் குறைகள் தீர்ந்த பிறகு பக்தர்கள் காணிக்கையாக கொடுப்பது வழக்கம். அவ்வளவுக்கு இங்கு அரிவாள் வேல்கம்புகள் நடப்பட்டிருகின்றன‌.

இங்கு மெய்சிலிர்க்க வைக்கும் வழிபாடு பிடாரி அம்மனுக்கானது, ஆட்டு ரத்தத்தோடு கலந்து மேலே சாதம் வீசப்பட்டால் ஒரு பருக்கை கூட கீழே வராது மறைந்துவிடும், வெறும் பாத்திரம் மட்டும் விழும்.

இன்றும் மேளதாளம் முழங்க இந்த வழிபாடு உண்டு, இந்த ஆச்சரியமும் உண்டு. அம்மனின் தீர்த்தவாரி கிணறு மகா பிரசித்தி ஆழம் குறைந்த அக்கிணறு எக்காலத்திலும் வற்றுவதே இல்லை.

ஆங்கார ரூபினியாக அன்னை பரிபாலனம் செய்யும்தலம் இது. ஐயனார், சிடல் முனி, பிடாரி என உக்கிர தெய்வங்களுடன் அவள் வீற்றிருக்கின்றாள். பெரும் வம்பு வழக்குகள் பில்லி சூனியம் இன்னும் அநியாயமாக நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால் இங்கு வழிபட்டால் நிச்சயம் தீர்ப்பு வரும்.

நியாயம் உங்கள் பக்கம் இருந்து அன்னையிடம் வழிபட்டால் நிச்சயம் அவள் பெரும் நீதி பெற்றுத்தருவாள் இது சத்தியம்.

அன்னை மிக மிக உக்கிரமாக நின்று துஷ்ட சக்திகளையும் துஷ்டர்களையும் ஒடுக்கிப் பக்தர்களைக் காக்கும் கோவில் இது, பில்லி சூனியம் மாந்த்ரீகம் போன்ற சிக்கல்களும் பொல்லாத துஷ்டர்களின் தீயசெயல்களும் இந்த அன்னையிடம் அழியும், இங்கு ஆடிமாதம் வழிபடுதல் மிக்க நன்று.

அம்மன் திருவிழா காலங்களில் பால்குடம், தீச்சட்டி எடுப்போர், அங்கப்பிரதட்சணம் இந்த தீர்த்தவாரி கிணற்றில் நீராடி முடித்தபின்பே மேற்கண்ட வேண்டுதல்கள் நிறைவேற்றுவது வழக்கம். இது புனித தீர்த்தம் ஆனதால் மற்ற நாட்களில் குளிக்கவோ வேறு செயல்களுக்கோ பயன்படுத்துவதில்லை.

அடுத்த ஆலயம் கொன்னையூர். இது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அமைந்துள்ளது.

முன்பொரு காலத்தில் கற்றாழையும் கொன்றை மரங்களும் நிறைந்த காட்டுவழி மக்கள் செல்லவேண்டி இருந்தது, அக்காலகட்டத்தில் பெரும் வறட்சியும் சாபமும் தாக்கிற்று.

விவசாயம் கருகிற்று, கால்நடைகள் மடியத் தொடங்கின, நீருக்கு பெரும் தட்டுப்பாடாயிற்று மக்கள் வாழ வழியின்றி தவித்தனர், நோய்களும் பெருகத் தொடங்கின‌.

மக்கள் தெயவத்திடம் முறையிட்டு கண்ணீர்விட்டும் முடிவு கிடைக்கவில்லை. மக்கள் மனம் நொந்து கிடந்தபோது அந்தக் காட்டுவழியில் கொன்னை மரத்தின் வேரை வெட்டவேண்டிய அவசியம் வந்தது, அது பாதைக்கு இடையூராக இருந்தது, வண்டிகள் செல்லமுடியவில்லை.

அந்த வேரை அகற்ற வெட்டும்போதுதான் “நான் இங்கிருக்கின்றேன்” என்ற குரல் கேட்டது, மக்கள் அஞ்சினார்கள் எனினும் வேரை லேசாக வெட்டியபோது பால் பொங்கிற்று.

மக்கள் அஞ்சினார்கள், மக்கள் கூட்டத்தில் ஒருவர்மேல் இறங்கி அன்னை தான் இங்கு உருவவடிவில் குடிகொண்டதை சொன்னாள். தோண்டிப்பார்க்கையில் அழகான விக்ரகமாக வெளிப்பட்டாள்.

கொன்னை மரத்தடியில் கிடைத்ததால் அவள் கொன்னை அம்மன் என்றானாள், அவளுக்கு மரத்தடியில் சிறிய கோவில் ஸ்தாபித்து அவளுக்குப் பூஜை செய்தபோது இடைவிடாது மழை கொட்டிற்று, பெரும் வறட்சி அகன்றது.

அத்தோடு நோய்களும் அகன்றன, மக்கள் வாழ்வில் செழிப்பும் ஷேமமும் பெருகத் தொடங்கிற்று, இன்றுவரை அங்கு நீர்த்தட்டுப்பாடு இல்லை, பெரிய சிக்கல் ஏதுமில்லை.

அப்படித் தானே வெளிப்பட்டு மக்களைக் காத்துவருபவள் அன்னை, முதலில் அந்த இடம் காடாகக் கிடந்தாலும் பின் மக்கள் குடியேறி, அன்னைக்காக குடியேறி அது ஊராயிற்று.

இங்குள்ள நெல்லிமரமே தல விருட்சம், குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குத் தொட்டில் கட்டி வழிபடுதல் மரபு, இங்குக் கண்நோய் தீர்க்க கண்மலர் வைக்கும் வழக்கம் உண்டு, நோய் இதனால் நிச்சயம் தீரும்.

இன்னும் நோய் தீர உப்பு மிளகு காணிக்கை, விளைந்த நெல்லின் காணிக்கை என இவையெல்லாம் குவிந்து கிடக்கும் கோவில் இது.

இங்குப் பங்குனிமாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறும். அதில் கொன்னையூரைச் சுற்றியுள்ள சுமார் 60 கிராமங்களிலிருந்து மின்னலங்கார பல்லக்குகளில் வாணவேடிக்கையுடன் புஷ்ப பவனியுடன் ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் பால் குடங்களுடன் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக் கடனையும், அதைத் தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்ட அக்னி குண்டங்களில் பக்தர்கள் இறங்கியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

இங்குள்ள வினோதமான வழிபாடு உடலெல்லாம் சேறு பூசிக்கொண்டு அம்மனை வணங்கும் மரபு, இது மருத்துவரீதியாக தோல் சம்பந்தமான நோய்களைப் போக்கும்.

ஆன்மீகமாக இது மண்ணை நம்பி சேற்றை நம்பி வாழ்பவன் மனிதன், அங்கே அன்னை நீராக வாழ வழிசெய்கின்றாள் என்பதைச் சொல்கின்றது.

அப்படியே கர்ம சேற்றில் கிடக்கும் அழுக்கான மனிதனை அன்னை தூய்மையாக்கி நல்வாழ்வு தருகின்றாள் என்பதையும் சொல்கின்றது.

பங்குனி மாதம் அக்னி காவடி, மாவிளக்கு, வெள்ளிரதத்தில் அம்மன் வீதியுலா என எல்லாமும் உண்டு.

புதுக்கோட்டை மன்னர் குடும்பம் கொண்டாடிய இந்தக் கோவில் அந்தப் பகுதியில் லட்சோப லட்சம் மக்களுக்குப் பெரும் அடைக்கலாமாய், தாய் வீடாய் திகழ்கின்றது.

ஆடிமாதம் வழிபட வேண்டிய அற்புதமான மாரியம்மன் தலங்களில் கொன்னையூரும் ஒன்று, எல்லா வித சாபங்களையும் போக்கிப் பெரும் செல்வத்தில் நல்ல ஆரோக்கியத்தில் அன்னை அவளை உளமார தேடி வணங்குவோரை வாழவைப்பாள். அவளைத் தேடி வணங்குவோர் பாக்கியசாலிகள். மனமார அவளை நினைத்தாலே கோடி பலன் உண்டு.

மாரியம்மன் ஆலயங்கள் 13 : வீரசிங்கம் பேட்டை மாரியம்மன் மற்றும் அன்பில் மாரியம்மன் ஆலயம்.

வீரசிங்கம் பேட்டை எனும் ஊர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்டியூரை அண்மித்து திருவையாற்றுச் சமீபமாக குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உண்டு, இன்று வீரசிங்கம்பேட்டை என அது குறுகிவிட்டாலும் காலத்தால் அது தொன்மையானது.

பல்லவர்காலத்தில் அந்த ஊர் நந்திவர்மன் நினைவாக நந்திபுரம் என அழைக்கப்பட்டிருக்கின்றது, ஆயிரம் லிங்கம் கொண்ட பெரும் ஆலயங்களெல்லாம் இருந்திருக்கின்றன, ராஜராஜசோழனின் பெற்றோர்களின் பள்ளிபடை ஆலயம் இப்பக்கம்தான் அமைந்திருக்கின்றது.

பின்னாளில் அந்நியரின் படையெடுப்பால் எல்லாம் அழிந்திருக்கின்றன, எஞ்சிய லிங்கங்கள் சில பல ஆலயங்களில் தஞ்சமடைந்தன, அந்தப் பாரம்பரியமிக்க ஊரில் அன்றைய மன்னர்கள் வணங்கிய அம்மனாக இன்றும் தொடர்ந்து அருள்பாலிப்பவள் இந்த மாரியம்மன்.

நந்தபுரம் எனும் ஊர் சோழர்காலத்தில் வீர வாணபுரம் என்றாயிற்று, சோழமன்னின் பெயரால் அப்படி மாறிற்று பின்னர் அது வீரசிங்கம் பேட்டையாக மருவிற்று.

அந்தப் பல்லவர்கள் சோழர்கள் காலத்துக்கு முன்பிருந்தே அருள்பாலிக்கும் அன்னை இப்போதும் அங்குப் பெரும் சக்தியுடன் ராஜபரிபாலனம் செய்கின்றாள்.

அப்பக்கம் அவள் சக்திவாய்ந்த தெய்வம் அதனால் அங்கு எல்லா நாளும் கூட்டம் அதிகம், எல்லாவகை குறைபாடுகளும் உடலாலும் மனதாலும் கொண்ட மக்கள் ஒருபக்கம் வேண்டுதலை வைத்து கொண்டிருப்பர்

இன்னொரு பக்கம் வேண்டியது கிடைத்த மகிழ்வில் மக்கள் நன்றியோடு நேர்ச்சைக் கடன் செய்து கொண்டிருப்பர்.

அம்மை நோய் உள்ளிட்ட எல்லா நோயும் தீரும் தலமிது, உடலின் உஷ்ணம் காரணமாக எழும் எல்லா நோய்களையும், மருத்துவர்கள் கைவிட்ட நோய்களையும் அம்மனே தீர்த்துத் தருவாள்.

இந்த ஆலயத்தில் மன்னர் காலத்தில் யானைகளில் காணிக்கையும் இதர மரியாதைகளும் வந்தன, அதன்படி இப்போதும் திருச்சோற்றுத்துறையில் இருந்து விழாக்காலங்களில் யானையில் சீர் வரும் மரியாதை உண்டு.

இந்தப் பக்கம் வாழ்வைத் தொடங்கும் இளம் தம்பதியர்கள் இங்கு வழிபட்டே வாழ்வினைத் தொடங்குவார்கள்.

குடமுருட்டி ஆற்றின் பக்கம் இருக்கும் இந்த அன்னை காவேரி போல் பெரும் வாழ்வைத் தருபவள் என்பதால் அவளை வணங்கி வாழ்வைத் தொடங்கும் மரபு எக்காலமும் அங்கு உண்டு.

ஆவணி மற்றும் பங்குனி அவளுக்கான கொண்டாட்டம் என்றாலும் பங்குனி வழிபாடும் விழாவும் மிகப் பிரசித்தி.

ஒரு காலத்தில் ஆயிரம் லிங்கம் கொண்ட நந்திபுரத்தைக் கட்டியாண்ட அந்த மகா சக்தி இப்போது எல்லா மக்களுக்கும் வரமளிக்கும் மாரியம்மனாக நின்று அருள்பாலிக்கின்றாள்.

திருக்கண்டியூர் பக்கம் செல்லும்போது திருவையாறு செல்லும் போது சக்திமிக்க இந்த மாரியம்மனை வழிபட்டு வாருங்கள், அவள் காவேரியின் அம்சம் கொண்டவள், நல்வாழ்வை இல்லற வாழ்வை மிக மிக இனிமையாக செல்வமாக தந்து வாழவைப்பவள்.

சமயபுரத்தாளின் ஏழு சகோதரிகளில் இவள் கடைசி சகோதரியாக அறியப்படுகின்றாள், அதனால் எல்லா மாரியம்மன் கோவில்களின் நிறைந்த அருள் அங்கு உண்டு.

அடுத்த ஆலயம் அன்பில் என லால்குடி அடுத்திருக்கும் ஊரில் அமைந்திருக்கும் ஆலயம், இது அமைந்த விதம் ஆச்சரியமானது.

பல நூறு ஆண்டுக்கு முன் காவேரியில் பெரு வெள்ளம் வந்தது. அப்போது கொள்ளிடம் ஆற்றங்கரையின் வேப்பமரத்தடியில் தானே ஒதுங்கிற்று, வெள்ளம் வடிந்தபின் மக்கள் அதைக் கண்டார்கள்.

அந்த மரத்தடியே அந்த அம்மன் வழிபாடு தொடங்கிற்று, அம்மனின் அருளில் அந்த ஆலயம் வேகமாக வளர்ந்தது, அப்போதைய சோழ குறுநில மன்னன் முதலாங்கர் என்பவர் இந்தக் கோவிலைக் கட்டிக் கொடுத்தார்.

காலம் செல்ல செல்ல மக்கள் வேண்டிய வரங்களைப் பெற்றபடியே ஆலயத்தின் கீர்த்திப் பரவிற்று. பொதுவாக சமயபுரத்தாளும் அவள் அம்சம் குடிகொண்ட துணை மாரியம்மன் ஆலயங்களில் கையில் குழந்தையுடன் அம்மன் காணப்படுவதில்லை.

இங்கு ஒரு சந்நிதியில் அம்மன் குழந்தையோடு நிற்கின்றாள். அவ்வகையில் இது தாய்மை அருளோடு மூத்த சகோதரியாக நின்று தமக்கை கடமையோடு அன்னை பொறுப்பேற்று அருள் வழங்கும் ஆலயம் இது.

ஆலயத்தின் உள்ளே பிரவேசித்ததும் கொடி மரமும், பலிபீடமும் உண்டு, தென்மேற்கு திசையில் உள்ள சந்நதியில் விநாயகப் பெருமான் உண்டு.

இதை அடுத்துள்ள மூலஸ்தானத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கோயிலின் வடமேற்கு திசையில் ரேணுகா தேவியும், வடக்குத் திசையில் காவல் தெய்வமான கருப்பு சாமியும் தனித்தனி சந்நதியில் காட்சித் தருகின்றனர்.

இதை அடுத்து பரிவார தெய்வங்களான செல்லாண்டியம்மன், காமாட்சி அம்மன், சப்பானி கருப்பன், பேச்சியம்மன் உள்ளிட்டோர் அருள்பாலிப்பர், இந்த‌க் கோயிலின் தீர்த்தமாக கொள்ளிட ஆற்று நீரும் தல விருட்சமாக வேப்பமரமும் உண்டு.

அம்மை நோய் இருப்பவர்கள் இத்தலத்திற்கு வந்து நோய் குணமடையும் வரை தங்கி இருந்து செல்கின்றனர். கண் குறைபாடு இருப்பவர்கள் இந்தக் கோயிலில் வழிபாடு நடத்தினால் பார்வை கோளாறுகள் நீங்கும்.

இந்தக் கோவிலின் பிரசித்தியான மரபு பகல் 12 மணிக்கு கண்களில் பச்சிலை ஊற்றும் வழிபாடு, சித்தர் காலங்களில் சொல்லப்பட்ட ரகசிய மூலிகைகள் பச்சிலை சாற்றை அம்மன் சந்நிதியில் வைத்து கண்பார்வை குறைந்தவர் கண்ணில் இடுவார்கள், எவ்வகை கண் நோய் என்றாலும் அந்நேரம் அகலும்.

இங்குப் பங்குனி விழா பெரும் விசேஷம், ஆடிமாத சண்டி ஹோமம் இன்னும் விசேஷம்.

சமயபுர மாரியம்மனின் சகோதரிகள் எனும் வகையில் இந்த ஆலயம் மூத்த சகோதரிக்கான ஆலயம், ஒரு குடும்பத்தில் மூத்த சகோதரி என்பவள் தாய்க்குச் சமம், முழு அன்பும் அர்ப்பணிப்பும் பாசமும் தியாகமும் அவளிடமே உருவாகி வரும்.

அவ்வகையில் இவள் அன்பினில் தாய், அன்பினில் மூத்தவள் அதனாலே அவள் குடியிருக்கும் தலம் அன்பில் என்றாயிற்று.

காவேரிக் கரையில் அன்னை மாரியம்மனாக அருள்பாலிக்கும் இந்தத் தலங்களில் ஆடிமாத வைபவங்கள் எப்போதும் சிறப்பானவை, முடிந்தவர்கள் அங்குச் சென்றுவழிபடலாம். முடியாதவர்கள் இருந்த இடத்தில் இருந்து அவளை நோக்கி வேண்டினால் பெரும் வரமும் கீர்த்தியும் பெரும் ஆரோக்கியமும் எல்லாமும் அவள் தருவாள், நிரம்ப தந்து தாய்போல் காத்து வருவாள்.

அம்மன் வழிபாட்டில் மாரியம்மன் வழிபாட்டில் விருப்பம் கொண்டோர் ஒரே நாளில் தரிசிக்கும் ஏழு ஆலயங்கள் இவை, முடிந்தவர்கள் முயற்சிக்கலாம். இந்த ஏழு ஆலயங்களிலும் வழிபட்டால் தீராத சிக்கல் என எதுவுமில்லை எல்லாம் நொடியில் மாறும், விதி அதன் பின் உங்களுக்கு முழுக்க ஒத்துழைக்கும்.

மாரியம்மன் ஆலயங்கள் 14: ஆகாச மாரியம்மன் நாச்சியார் கோவில் (திருநரையூர்)

தமிழக அம்மன்கோவில்களில் முக்கியமானது நாச்சியார் கோவிலில் அமைந்திருக்கும் ஆகாச மாரியம்மன் ஆலயம். கும்பகோணம் திருவாரூர் சாலையில் அமைந்திருக்கும் நாச்சியார் கோவில் எனும் ஊரில் அமைந்திருக்கும் ஆலயம் இது, அங்கிருக்கும் கல்கருடன் ஆலயம் போல இதுவும் பிரசித்தியானது.

இந்த ஆலயத்தின் வரலாறு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்குகின்றது, சுமார் 700 ஆண்டுக்கு முன்பு வளையல் வியாபாரம் செய்த கவரைச் செட்டி என்பவர் அம்மன் பக்தராக இருந்தார், அவருக்கு மாரியம்மன் மேல் பக்தி அதிகம்.

அவர் ஊரெல்லாம் சென்று வளையல் வியாபாரம் செய்வது வழக்கம், ஆனால் என்ன சூழலில் இருந்தாலும் பங்குனிமாதம் சமயபுரம் செல்வார். அங்கு நடக்கும் பச்சை பட்டினி விரத்தத்தில் கலந்து கொள்வார், அவரும் விரதமெல்லாம் இருப்பார், அந்த நாட்களில் அங்கேயே தங்கிக் கொள்வார்.

அம்மனுக்குப் புடவையும் வளையலும் வாங்கி வந்து சமர்பித்து வணங்குவார், ஒருவருடம் கூட அவர் இதனை விடவில்லை, அம்மனைத் தேடி தேடி வந்தார்.

ஆனால், காலம் ஓடியது. அவருக்கு வயதாயிற்று, முடியாத காலத்தில் தட்டுத் தடுமாறி வந்தவர் தாயே இனி என்னால் வரமுடியாது போலிருக்கின்றது, இதுவே இங்கு நான் வழிபடும் கடைசி முறையாக இருக்கலாம் என எண்ணியபடியே அவள் கோவில் மண்டபத்தில் உறங்கிக்கொண்டிருந்தார்.

அவர் கனவில் ஒரு சிறுமி வந்தாள் வந்தவள் “தாத்தா, எனக்கு வளையல் மாட்டிவிடு” எனக் கைகளை நீட்டினாள்.

அவரும் அவளுக்கு வளையல்கள் மாட்டினார், அனைத்தும் உடைந்து விழுந்து கொண்டே இருந்தது. எல்லா வளையலும் அப்படி உடைந்து போக அவள் மெல்ல சிணுங்கினாள், அவரோ “பாப்பா, எங்கள் ஊருக்கு வருவாயா? உனக்கு வளையல் தருகின்றேன் இங்கு எல்லாமும் உடைந்ததுவிட்டது” என்றார்.

அவளோ செல்லக் கோபம் காட்டியபடி, “உம்மிடம் வளையல் இல்லையா சரி நான் அவர்களிடம் செல்கின்றேன்” எனச் சொல்லி அவரோடு வந்த சக வளையல் வியாபாரிகளிடம் சென்றாள், அத்தோடு கனவு முடிந்தது.

காலையில் எழும்பியவர் கண்டது கனவு என உணர்ந்தார், அவரின் வளையல்களெல்லாம் அப்படியே இருந்தது, இதுபற்றி அவர் சிந்திக்கும் போதே ஆலய குருக்கள் பணத்தோடு அவரிடம் வந்து சொன்னார்.

“அம்மன் என்னிடம் சொன்னாள், உங்கள் வளையல் எல்லாம் உடைந்துவிட்டதாம் இதனைக் கொடுக்கச் சொன்னாள்”

கவரைச் செட்டியாருக்கு அதிர்ச்சி தாளவில்லை, அதோடு ஆனந்தமும் கூடிற்று. தான் கண்ட கனவின் பொருள் அறியாமல் அவர் தவிக்க இதை யாருக்குச் சொல்லி புரியவைக்க என அவர் தவிக்க அன்னையே தன் குருக்களை அனுப்பி தனக்கு காசு கொடுத்து நடந்த கனவை அவரும் அறிய செய்தாள், தனக்குச் சாட்சியாய் வந்தாள் என்பதில் உள்ளம் உருகிப்போனார்.

இந்த விவகாரம் அவரோடு வந்திருந்த மற்ற வியாபரிகளுக்கும் எட்டிற்று, அவர்கள் அந்தக் கனவில் எம்மிடம் வந்ததாக சொன்ன அன்னை ஏன் தங்களிடமும் பேசவில்லை என அம்மனிடம் மனம்கசிந்து வேண்டினார்கள்.

மறுநாள் அம்மன் அவர்கள் கனவிலும் வந்தார், அந்தக் கனவிலில் அவர்களெல்லாம் சமயபுரம் கோவில் வாசலில் நிற்கின்றார்கள், அங்கே ஆகாயத்தில் அன்னை எழுந்தருள்கின்றாள், சுடர் வடிவாக நிற்கின்றாள்.

ஆகாயத்தில் அம்மன் ஆகாயத்தில் அம்மன் என அவர்கள் ஆனந்தத்தில் கூச்சலிடுகின்றார்கள், விழுந்து வணங்கி சொல்லமுடியாப் புளாகாகித ஆனந்தம் அடைகின்றார்கள்.

அவள் அவர்களை நோக்கி புன்னகைக்க, தாயே எங்கள் ஊருக்கும் வா என வேண்டுகின்றார்கள்.

“வந்தால் என்ன தருவீர்கள்?” என அவள் கேட்க “எங்கள் ஊரில் முல்லை மல்லிபூக்கள் அதிகம், “நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் திருநாரையூர்” என எங்கள் ஊருக்கு பெயர் எனச் சொல்லி கேட்கின்றார்கள்.

அவள் அவர்களை நோக்கி ஆகாயத்தில் இருந்து புன்னகைத்து வருடம் பத்துநாள் அங்குவருவேன், வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்த வெள்ளியில் நான் அங்குவந்து 10 நாட்கள் இருப்பேன்” எனச் சொல்லி மறைந்தாள்.

அக்காட்சியினைக் கண்டதும் அவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர், எழுந்து பார்த்தால் அவர்களுக்கு உடலெல்லாம் அம்மை கண்டிருந்தது.

அந்நேரம் ஆலய குருக்கள் அம்மன் உத்தரவுப்படி வந்து அவர்களுக்குக் குங்குமமிட்டார் அத்தோடு அவர்கள் அம்மை நோய் தீர்ந்தது.

கவரை செட்டியும் அவரின் இதர வியாபாரிகளும் நடந்த அற்புதம் உணர்ந்து அன்னையினை வணங்கி விடைபெற்று தங்கள் ஊரான நாச்சியார்கோவிலை அடைந்தார்கள். அது வணிக செட்டியார்கள் அதிகம் வாழ்ந்த ஊராக இருந்தது, “நாச்சியார்” என்பதே செட்டியார்கள் அன்னையினை வணங்கிய பெயர்களில் ஒன்று.

அதாவது தெய்வத்தாய், உலகாளும் அன்னை என அதற்குப் பொருள்.

நாச்சியார் கோவில் வந்தவர்கள் அன்னைக்கு ஒரு கோவில் கட்டினார்கள், ஆனால் அவள் ஆகாயத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்ததால் அன்னைக்கு சிலை வைக்கவில்லை சந்நிதி கட்டவில்லை. மாறாக, நடந்த சம்பவத்துக்குச் சாட்சியாக அன்னைக்கு விளக்கு மட்டும் வைக்க முடிவெடுத்தார்கள்.

மறுவருடம் வைகாசி அமாவாசை அடுத்து வந்த வெள்ளிக்கிழமை அவளுக்காய்க் காத்திருந்தார்கள். அவள் வந்து தங்களுடன் நிற்பதை அறியாமல் பெரும் கூட்டமாய் கூடி நின்றார்கள்.

அந்த வணிகர்களுக்கும் அவளுக்கும் நடந்த அந்தக் காட்சி சமயபுரம் கோவிலில் நடந்தது, ஆனால் இந்த ஊர்மக்கள் அதை நம்ப ஒரு அதிசயம் அவசியம் இருந்தது, இல்லையேல் இவர்கள் சொன்னது பொய் என்றாகிவிடும்.

அந்நேரம் கவரைச் செட்டிக்கு ஒரு செய்தி காதில் விழுந்தது, அது “தண்ணீரில் விளக்கேற்று” என்றது.

அப்படியே தண்ணீர் கலயத்தில் அவர் விளக்கேற்றி வைக்க அது எரிந்தது, மக்களெல்லாம் அந்த அதிசய காட்சியினைக் கண்டு விழுந்து வணங்கினார்கள், அதிலிருந்து இந்த ஆலய வரலாறு தொடங்கிற்று.

இப்படி உருவான அந்த ஆகாச மாரியம்மன் ஆலயம் இன்றும் நாச்சியார்கோவிலில் பெரிதாக உண்டு, ஆனால் அம்மனுக்குச் சந்நிதி இல்லை உருவமில்லை, அவள் ஒளிவடிவமாக ஆகாயத்தில் தோன்றியதால் ஆகாச மாரியம்மன் என அந்த விளக்கினில்தான் அங்குக் காட்சி தருகின்றாள்.

வைகாசி அமாவாசை அடுத்த பத்துநாட்கள் அங்கு விழா அப்போதுமட்டும் தர்ப்பை புல்லில் ஒரு அம்மனை செய்து வழிபடுவார்கள், 13 நாள் அவள் ஊர்வலம் வருவாள் பின் அவளைச் சமயபுரத்துக்கு அனுப்பிவைத்து அந்த தர்ப்பை சிலையினைப் பிரித்துவிடுவார்கள்.

இந்த ஆலயத்தில் அம்மனுக்குப் பட்டும் மல்லியும் முல்லையும் முக்கியமாக வளையலும் வைத்து வணங்கினால் நினைத்த காரியம் நடக்கும், எதை வேண்டுகின்றோமோ அது கிடைக்கும்.

அம்மை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு இந்த ஆலயம் அருமருந்து, அப்பக்கம் மக்களைக் காக்கும் பெரும் சக்தி இவள்.

வைகாசி அங்கு விசேஷம் என்றாலும் ஆடிமாதம் நிரம்ப கூட்டம் உண்டு.

அவளிடம் மல்லியும் முல்லையும் வளையலும் வைத்து வேண்டும் கூட்டம் அலைமோதும், அவளிடம் வேண்டும் எதுவும் கிடைக்காமல் போனதில்லை. சில நேரங்களில் நீரில் விளக்கெரியும் அற்புதமும் நடந்திருக்கின்றது.

சமயபுரம் தேடி வந்து தன்னை வணங்கிய பக்தர்களுக்காக அன்னையே வந்து குடிகொண்ட ஆலயம் அது, அவள் ஒளிவடிவில் அங்கு இருந்து அருள்பாலிக்கின்றாள், அந்த வளையல் வியாபாரிகளின் நினைவாக வளையலோடு தன்னை வணங்குவோர்க்கு அவள் எல்லா வரத்தையும் அவள் தருவாள்.

அவளுக்கு மல்லியும் வளையலும் சாற்ற சாற்ற வீட்டில் பெண்கள் வாழ்வார்கள் மங்கலம் வாழும், குலம் ஒரு குறையின்றி வாழும்.

கால் தேய தேய தன்னைக் காண ஓடிவந்த தன் பக்தர்களுக்காக அவர்கள் இருக்குமிடம் தேடிச் சென்று அமர்ந்த ஆலயம் இது.

அவளைச் சென்று வளையல் இட்டு வணங்குங்கள் உங்கள் இல்லம் தேடி அவளே வருவாள், அவள் நன்றியும் அன்பும் கருணையும் கொண்டவள், ஒரு குழந்தை தன்னை அன்பால் தேடுபவர்களிடம் தாவி வருவது போல் அவள் உங்களிடமும் வருவாள்.

கவரைச் செட்டிக்கு கனவில் அவள் வளையல் உடைந்ததைக் காட்டியது அவரின் கர்மவினை நீங்கிற்று என்பது, மலர்களைக் கேட்டது ஆகாயத் தத்துவத்தைச் சொன்னது.

அதாவது மலரின் மணத்தை உணரமுடியுமே தவிர பார்க்கமுடியாது, அன்னை அப்படி அரூபியாக நின்று நம்மைக் காப்பாள், பரந்த ஆகாயம் போல் எங்கிருந்தும் நம்மைக் காத்துக் கொண்டே இருப்பாள் என்பதைச் சொல்வது.

அந்த ஆலய தத்துவம் அதைத்தான் சொல்கின்றது, முடிந்தவர்கள் ஆடிமாதம் அவளுக்கு வளையலும் மல்லிகைப் பூவும் வாங்கிக் கொடுத்து ஒரு குழந்தையினைப் போல அவளை அன்புடன் அழைத்தால், தூய அன்போடு அழைத்தால் உங்கள் கர்மாவினை தீர்க்க ஒரு குழந்தையாய் அவள் ஓடிவந்து ஒட்டிக்கொண்டு காலமெல்லாம் துணை இருப்பாள். இது சத்தியம்.

மாரியம்மன் ஆலயங்கள் 15 : சேலம் கோட்டை மாரியம்மன்.

பண்டைய காலத்தில் முக்கிய வணிகப் பாதையாக இருந்த இடம் சேலம், அதன் வணிக வழித்தடம் முக்கியமானது, மலைகள் சூழ்ந்த அந்த இடம், சேலம் (சைலம் என்றால் மலை ) என்றானது.

அந்த வணிகப் பகுதிகள் எக்காலமும் பிரசித்தி. சென்னை உருவாகும் முன்பு வரை சேலம் மிகக் குறிப்பிடத்தக்க வணிக மையமாக இருந்தது, அந்த அளவு அது முற்காலத்தில் இருந்தே முத்திரை பதித்த பகுதி.

அந்தப் பகுதி சோழர்கள் சேரர்கள் அதியமான் போன்றோர் ஆட்சிபுரிந்த பகுதி என்றாலும் சேரர்கள் அதிககாலம் ஆட்சி செய்தார்கள். அப்போது ஒரு காவல் நிலைய கோட்டை ஒன்றை அமைத்தார்கள்.

அந்தக் கோட்டைக்கு காவலாக ஒரு தேவியினைப் பிரதானமாக நிறுத்தினார்கள் அவள் பிரதான தெய்வமானாள், பின் அவளுக்குத் துணையாகவும் அங்கு எல்லைகளின் காவலாகவும் இன்னும் ஏழு மாரியம்மனை நிறுத்தினார்கள்.

அம்மாப்பேட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன்
சின்னக் கடைவீதி சின்னமாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன் மற்றும்
பொன்னம்மாப்பேட்டை மாரியம்மன் என ஏழு.

இந்த ஏழு என்பது வானத்தில் சஞ்சரிக்கும் ஏழு கிரகங்கள், ஏழு முக்கிய சக்திகளையும் சொல்வது. இந்த ஏழு சக்திகளையும் அடக்கியாளும் மகா சக்தி இங்கு மாரியம்மனாக நிற்கின்றாள்.

அதனாலே இந்த எட்டு மாரியம்மன்களில் இந்தக் கோட்டை மாரியம்மனே முதன்மையானவள். மற்றயவை அவளுக்குத் துணையாக நிற்கும் சக்திகள்.

ஒருவகையில் இது அஷ்ட லட்சுமி சாயல் அல்லது அஷ்ட திக்குகளிலும் காவல் இருக்கும் ஏற்பாடு, வியாபார சந்தையாகவும் சேர நாட்டின் எல்லையாகவும் இருந்த இந்த முக்கிய இடத்தில் பல காரணங்களுக்காக இவை ஸ்தாபிக்கப்பட்டன‌.

எட்டு மாரியம்மன் இப்படி ஸ்தாபிக்கபட்டாலும் சேரநாட்டு மன்னர்கள் காலத்தில் உருவான இந்தக் கோட்டையில் உள்ள அவள் சக்திவாய்ந்த காவல் தெய்வமானாள், பின்னாளில் காலவோட்டத்தில் கோட்டை அழிந்து மண்மேடு என்று மாறிப்போனாலும் அந்த மாரியம்மன் அங்கே அருளோடு நிலைத்துவிட்டாள்.

“எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்ற சிறப்பு அவளுக்கு உண்டு.

அக்காலத்தில் இருந்து வழிபாடு என்றும் உண்டு, கோட்டையின்றி போனாலும் அப்பெயரில் அவள் கோட்டை மாரியம்மன் என எல்லா மக்களுக்கும் வழிகாட்டி நிற்கின்றாள்.

“கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி” என் அவள் கொண்டாடப்படுகின்றாள்.

சேலம் வளர வளர அங்குக் குடியிருப்புகள் பெருக பெருக அவள் கீர்த்தியும் பெருகிற்று, சேலம் என்றாலே கோட்டை மாரியம்மன் எனும் அளவு சக்திவாய்ந்தவளுமானாள். இன்று ஆடிமாதம் நடக்கும் அவளின் திருவிழா தமிழகத்தில் மதுரை சித்திரை திருவிழாவுக்கு அடுத்து அதிக மக்கள் கூடும் பெரும் விழா.

இந்த அன்னை அக்காலத்தில் கட்டப்பட்ட சிறிய கருவறையில்தான் முதலில் குடியிருந்தாள், மிக மிக ஒடுக்கமான சிறிய கருவறை அது, அங்கு அர்ச்சகரே குனிந்துதான் உள் செல்ல வேண்டும்.

பின்னாளில் பக்தர்களெல்லாம் சேர்ந்து பெரிய மண்டபமெல்லாம் கட்டினார்கள் அவைகளும் பழமையானவை, இதனால் ஆலயமும் கோபுரமும் மண்டபமும் இன்னும் எல்லாம் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் 2023ல் நடைபெற்றது.

இவ்வாண்டு ஆடித் திருவிழா விசேஷமாக நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த மாரியம்மன் நவக்கிரக‌நாயகி என்பதால் கிரகணங்கள் இவளைப் பாதிக்காது, அதனால் சந்திரக் கிரகணம், சூரியக் கிரகணம் போன்ற காலங்களில் கூட கோவில் நடை சாத்தப்படுவதில்லை. கிரகண காலங்களின்போது சிறப்பு பூஜை மட்டும் நடத்தப்படும்.

அன்னை எல்லாக் கிரகங்களையும் கட்டுப்படுத்துபவள் ராகு கேது பாதிப்புக்களைத் தடுப்பவள் இவளை அண்டியோர்க்கு கிரக சஞ்சாரங்களால் பாதிப்பில்லை என்பதைச் சொல்லும் நுணுக்கம் இது.

சேலம் கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் அருள்பாலிக்கும் பெரிய மாரியம்மனின் கண்களும், பலி பீடத்திலுள்ள அம்மனின் கண்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும், இது மற்ற ஆலயங்களில் காணமுடியா அம்சம்.

இந்தக் கோவிலில் மிக முக்கியமான அம்சம் பூ போட்டு பார்ப்பது, எல்லாக் காரியங்களுக்கும் அம்மனின் உத்தரவினை எதிர்பார்த்து இதனைச் செய்கின்றார்கள், வெள்ளை நிற சிகப்பு நிற பூக்கள் இதற்குப் பயன்படும்.

அம்மன் சந்நதியில் இவற்றைத் தனி தனிப் பொட்டலமாக இட்டு பின் ஒன்றை எடுத்துப் பார்ப்பார்கள், சிகப்பு நிறமென்றால் அன்னை உத்தரவு எனப் பொருள், இந்த பூ போட்டு கேட்கும் உத்தரவு இங்கு ஒரு காலமும் பொய்ப்பதில்லை.

அந்த ஊர் மக்களுக்கு இது மகா முக்கியம் அவள் உத்தரவில்லாமல் எதுவும் செய்வதில்லை, இதுமட்டுமன்று அங்குப் புதிதாக வாங்கும் தங்கம், தாலி என எல்லாம் அன்னையின் பாதத்தில் வைத்த பின்பே பெண்கள் அணிவார்கள், சேலத்தில் இது மகா முக்கிய பாரம்பரியம்.

திருமணி முத்தாற்றின் கரையில் அமைய பெற்றுள்ள கோட்டை மாரியம்மனுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணி முத்தாற்றில் இருந்து புனித நீர் எடுத்து அபிஷேகம் செய்யப்பட்டது, இப்போது அது மாறினாலும் சில முக்கிய நாட்களில் இந்தப் பாரம்பரியம் உண்டு.

ஆடிமாதத் திருவிழா இங்கு முக்கியமானது. அப்போதுதான் உருளுதண்டம் முதல் எல்லா வேண்டுதலும் நடக்கும், அப்பொழுது வேம்பு, பலா பலா அல்லது அரசமரம் ஆகிய ஒன்றின் முப்பிரி கிளைகள் கொண்ட கம்பு வெட்டப்ட்டு கம்பமாக நடப்படும், அதாவது சூலாயுதம் போன்ற அமைப்பில் அமைந்திருக்கும் கம்பம் நடப்படும்.

அந்தக் கம்பத்துக்கு இளம்பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்வார்கள். மேலும் தங்களுக்கு விரைவில் திருமணம் கைகூட வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

இங்குக் கண்ணடக்கம், உருஆரம், அடியளந்து கொடுத்தல் மண் உரு சாத்துதல் எனப் பல நேர்ச்சைகள் உண்டு.

கண்ணடக்கம் என்றால் கண்ணில் வரும் நோய்கள் அம்மன் அருளால் தீர்ந்தபின் வெள்ளி, தங்கம் போன்றவற்றில் கண் செய்து அன்னைக்குச் சாற்றுதல் கண்ணின் நோய்களெல்லாம் அதில் அடங்குவதால் அது கண்ணடக்கம்.

மண் உரு சாத்துதல் என்பதும் இதன் சாயல். அம்மை நோய் போன்ற நோய்கள் குணமாக வேண்டி, அம்மனை வழிபட்டு, நோய் நீங்கிய பின், அம்மனுக்குப் பொம்மைகள் செய்து அதைத் தலையில் சுமந்து கொண்டு கோவிலை மூன்று முறை வலம் வந்து சமர்பிக்கும் மரபு இது.

உருவாரம் என்றால் நேர்ச்சையால் பிழைத்த மனிதர்கள் போன்ற சிலை, கால்நடை உருவங்களைச் சாற்றி நன்றி செலுத்துதல் என்பது, அடியளந்து கொடுத்தல் என்பது நேர்ச்சை நிறைவேறிய பின் தலையில் நீருற்றி கைகளில் வேப்பிலை ஏந்தியபடி நெஞ்சாண்கிடையாக விழுந்து அடி அடியாக அம்மனை நோக்கி வருவது.

இப்படி எல்லாவகை நேர்ச்சைகடனும் இங்குப் பிரசித்தி. நாள் தோறும் வழமை.

ஆடிமாதம் சேலம் அவள் அடியார்களால் நிரம்பிவிடும், பூச்சொரிதல் அங்குப் பிரமாண்டமாக நடக்கும், அப்போது மீதமுள்ள ஏழு மாரியம்மனுக்கும் இங்கிருந்தே பூக்கள் கொண்டு செல்லப்படும்.

அப்படியே சேலம் பெருமாள் கோவிலில் இருந்து அன்னைக்குச் சீர்வரிசை ஆடிமாதம் எடுத்து வரப்படும்.

81 அடி ராஜகோபுரம் கொண்ட கோவிலுள் அன்னை ஆட்சிக்கோலத்தில் அமர்ந்திருக்கின்றாள், கருவறையில் மாரியம்மனின் சிரசில் ஜூவாலா கிரீடம், அக்னி ஜூவாலையுடன் ஒளி வீசிக் கொண்டிருக்கும்.

அக்கிரீடத்தில் நாகம் படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உண்டு, அங்கே நான்கு கரங்களுடன் அன்னை வீற்றிருக்கின்றாள். அவள் வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருப்பாள். வலது கீழ்க்கரத்தில் திரிசூலம் இடது மேற்கரத்தில் அங்குசமும், அமுத சின்னமும் ஏந்தியவளாய் வீற்றிருப்பாள்.

இடது கீழ்கரத்தில் கபாலம் கொண்டபடி தன் வ‌லது காலை தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் மடித்து வைத்துக் கொண்டு ஈசான திசை நோக்கி எழுந்தருளி இருக்கின்றாள்.

பொதுவாக எல்லா அம்மன் கோவில்களிலும் பூஜையின் போது அவளுக்கு நைவேத்தியம் அவள் முன் படைக்கப்படும். ஆனால் இக்கோவிலில் நைவேத்தியமானது மாரியம்மனுக்கு ஊட்டியே விடப்படும், இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இது.

ஆம், பக்தர்கள் அன்னை மேல் அவ்வளவு அன்பு கொண்டிருக்கின்றார்கள் , பிள்ளைகள் தாய்க்கு உணவு ஊட்டும் அன்பு இது, இதனாலே ஆடிமாத உச்சபூஜையின் போது ஒவ்வொரு வருடமும் தவறாமல் மழைவரும்.

ஆம், தான் மாரியம்மனாக அங்கிருப்பதை எல்லாப் பக்தர்மேலும் மழையாய்ப் பொழிந்து அருளால் சொல்கின்றாள் அன்னை, இந்த அற்புதம் ஒவ்வொரு காலமும் உண்டு.

சேலத்தின் வளர்ச்சியில் எல்லாப் பங்கும் அவளைச் சார்ந்தது. இதனாலே சேலம் செல்வோர் அவளைக் கண்டு ஆசிவாங்காமல் வரமாட்டார்கள், ஆடிமாதம் இந்த அம்மனை வணங்குவோர் பாக்கியசாலிகள், அவளை நினைந்து வணங்குவோர்க்கு எல்லா நலமும் வரும்,உரியகாலம் அவளே தன் ஆலயத்துக்கு உங்களை வரவழைத்து ஆசி வழங்குவாள்.

இங்கு எல்லாக் குறைகளும் நிறையாகும், எல்லா நோய்களும் குணமாகும், எல்லா இல்லாமைகளும் இல்லாமலே போகும்.

கோட்டை மாரியம்மனை நம்பினால் உங்களைத் தன் அருள்கோட்டைக்குள் வைத்து காத்துப் பெருவாழ்வினைப் பாதுகாப்பாய் வாழவைப்பாள் இது முக்கால சத்தியம். ஆடிமாதம் அவளுக்காய்க் கூடும் பெரும் கூட்டமும் நடக்கும் மாபெரும் நேர்ச்சைகளும், அப்போது மாரியாய்க் கொட்டி அவள் செய்யும் ஆசீர்வாதமும் அதைத்தான் சொல்கின்றது.

மாரியம்மன் ஆலயங்கள் 16: கோலாலம்பூர் மகா மாரியம்மன்

17 ஆம் நூற்றாண்டு வரை தமிழக மக்களுக்குப் பிழைப்பதற்கு இன்னொரு தேசம் செல்லும் அவசியம் வந்ததே இல்லை, இந்தியா எனும் அந்த அற்புதத் திருநாடு அப்படி ஒரு காவலை வழங்கியிருந்தது, இந்து அரசர்கள் கவனமாகத் தங்கள் குடிகளைக் காத்தார்கள்.

வியாபாரத்துக்காக கடல் தாண்டினார்களே தவிர அப்போதெல்லாம் பிழைப்புக்காக நாடுவிட்டு நாடு செல்லும் நிலை வந்ததில்லை.

பிரிட்டிஷாரின் கொடும் சுரண்டல் இந்தியாவினைப் பெரும் பஞ்சத்தில் தள்ளிற்று. அந்தப் பஞ்சம் அம்மக்களை உலகெங்கும் சிதறடித்தது, தமிழர்கள் இதற்கு மிகுந்த இலக்கானார்கள்.

மேற்கிந்திய கரும்புத்தோட்டம், ஆப்ரிக்க சுரங்கங்கள், பிஜூ கரும்புத்தோட்டம், இலங்கை தேயிலைத் தோட்டம் என எங்கெல்லாமோ இந்த மக்களை அழைத்துச் சென்ற பிரிட்டிஷார் மலேயாவுக்கு இரப்பர் தோட்ட தொழிலுக்காக அழைத்துச் சென்றனர்.

வறுமை ஒன்றுக்காக‌ அதுவும் அந்த வறுமையினை எவன் கொடுத்தானோ அவனுக்காக அவன் சொன்னதைக் கேட்டு இந்தக் கூட்டம் கப்பல் கப்பலாய்க் கிளம்பிற்று.

இந்தியாவின் தானியம் தங்கம் எனக் கொள்ளையடித்த பிரிட்ட்ன் பின்னாளில் இந்திய மக்களையே இப்படிக் கொள்ளை அடித்துச் சென்றது.

அப்படிக் கொண்டு செல்லப்பட்ட மக்கள் மலேய ரப்பர் தோட்டங்களில் பாடுபட்டு வாழ ஆரம்பித்தனர். மெல்ல மெல்ல அவர்கள் அங்கு நிலைகொண்டு பெருகினர், எங்குச் சென்றாலும் தன் மொழி தன் மதம் என இரண்டையும் கொண்டு செல்லும் இந்தச் சமூகம் அங்கும் தங்கள் தெய்வங்களைச் சுமந்து சென்றது.

அப்படி வந்த வம்சங்களில் ஒருவர் தம்புசாமி பிள்ளை, பின்னாளில் தொழிலதிபரானார். மலேயாவுக்கு மின்சாரம் வந்த காலங்களில் அவர் தொழில் உச்சத்துக்குச் சென்றது, அவர் பெரும் தனவானகவும் இருந்தார்.

அக்கால கட்டங்கள் தமிழர்கள் இலங்கையில் இருந்தும் வந்திருந்தார்கள் ஆனால் அவர்கள் உத்தியோகம் எனும் உயர்பதவியில் இருந்தார்கள் தொழிலாளர்கள் என இல்லை, அவர்கள் தங்களுக்கென தனி முருகன் ஆலயங்களைக் கொண்டிருந்தார்கள், அங்குப் பிறமக்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் இருந்தன‌.

இக்காலகட்டத்தில்தான் தம்புசாமி பிள்ளை இந்தக் கோவிலைக் கட்டினார், பின் மக்களுக்கே கொடுத்தார். அவர் தமிழகச் செட்டியார்கள் போல் பெரும் பரோபகாரியாக இருந்தார், பத்துமலை முருகன் கோவில் உருவாக்கத்திலும் அவருக்குப் பங்கு உண்டு.

அவர் சிலை இன்றும் பத்துமலை முருகன் ஆலய வளாகத்தில் உண்டு.

அவரால் 1873 இல் தொடங்கபட்ட மாரியம்மன் அவள். அது அவரின் குலதெய்வமாகவும் இருந்தது, பின்பு அது எல்லா மக்களுக்குமான ஆலயமாக மாறிப் போனது

அன்றிலிருந்து மெல்ல மெல்ல வளர ஆரம்பித்த இந்த ஆலயம் மலேசிய இந்துக்களுக்குத் தாய்கோவிலானது, இக்கோவில் கட்டி வணங்க வணங்கத்தான் பத்துமலை முருகப்பெருமான் ஆலயமும் புகழ்பெற தொடங்கிற்று.

ஆம், இந்த ஆலயம் துலங்க துலங்கத்தான் பத்துமலை ஆலயம் பெரிதாக புகழ்பெற்று தடைபல கடந்து ஒளிவீசிற்று, தாயின் அருளில் மகனின் ஆலயம் அவ்வளவு துலங்கிற்று.

19 ஆம் நூற்றாண்டுவாக்கில் இந்தியா கடுமையாக சீரழிந்தபோது பிழைப்புத்தேடி மலேயா வந்த மக்களுக்கெல்லாம் வேலை கிடைக்கும் வரை இந்த ஆலய சந்நிதி அடைக்கலான வரலாறும் உண்டு.

பத்துமலை முருகனுக்கு இந்த மாரியம்மன் கோவில் தாய்கோவில் என்பதால் தைப்பூசத்தின் முந்தைய நாள் இங்கிருந்து முழுக்க வெள்ளியில் செய்த‌ இரதமானது பத்துமலை நோக்கிச் செல்லும், இரவும் பகலுமாகச் செல்லும் அந்த இரதத்தைச் சுற்றி பல்லாயிரம் மக்கள் நடந்து செல்வார்கள்.

இரதத்தை சூழ்ந்து பக்தர்கள் பால்குடமும் காவடியும் எடுத்துவரும் அந்தப் பக்தியின் சிறப்பை வார்த்தைகளால் சொல்லமுடியாது, உடலெல்லாம் அலகு குத்தி அவர்கள் நடக்கும் அந்தப் பக்தியின் வைராக்கியம் அவ்வளவுக்கு உருக்கமானது.

இந்த ஆலயத்தில் அன்னை மாரியம்மனாக அருள்பாலிப்பார், வலப்பக்கம் விநாயகர் இடப்பக்கம் முருகர் என சந்நிதி உண்டு, பக்கவாட்டில் இராமபிரான் உள்ளிட்டோர் உண்டு.

வலப்பக்கம் நடராஜர் சந்நிதியோடு 63 நாயன்மார் சிலைகளும் வைக்கப்பட்டிருக்கும்.

பின்பக்கம் பேச்சியம்மன், முனீஸ்வரன், சங்கிலிகருப்பனுக்கு ஒரு சந்நிதியும், துர்க்கைக்கு ஒரு சந்நிதியும் உண்டு. சுவரில் அழகான கற்களில் எல்லா அம்மன் உருவமும் பதிக்கப்பட்டிருக்கும்.

வடக்குப் பக்கம் பெருமாளுக்கு ஒரு சந்நிதி உண்டு, அங்குத் தசவாதார படங்கள் சுவரில் பதிக்கப்பட்டிருக்கும். அதை அடுத்து நவக்கிரக சந்நிதி உண்டு.

கயிலைக் காட்சியும் சிலையாக வடிக்கப்பட்டிருக்கும்.

ஐந்தடுக்கு இராஜகோபுரம் கொண்ட இந்த ஆலயத்தினுள் அற்புதமாக அபிராமி அந்தாதியின் 100 பாடல்களும் வடித்து வைக்கபட்டிருப்பது வெகு சிறப்பு.

ஒவ்வொரு பண்டிகையும் இங்கு அவ்வளவு அழகாக கொண்டாடப்படும், பௌர்ணமி வழிபாடுகள் தொடங்கி ஒவ்வொரு விழாகாலமும் மிக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும், நவராத்திரி காலங்கள் கூடுதல் சிறப்பு.

இந்தியத் தமிழகத்தில் கூட இல்லாத அபிராமி அந்தாதி பாடப்படுவதும் இன்னும் பல பாடல்கள் நீண்ட நேரம் பாடப்படுவதும் இங்குள்ள வழிபாட்டு முறை.

இந்தியத் தமிழர்கள் தொலைத்துவிட்ட பல பழைய சாங்கியங்களை வழிபாட்டு முறைகளை இந்த ஆலயத்தில் காணமுடியும், அவ்வளவுக்கு பழமை மாறாமல் பின்பற்றி வருகின்றார்கள்.

விளக்கு பூஜை, பௌர்ணமி பூஜை என எல்லாம் அங்குக் கொண்டாடப்படும் அழகே தனி, அதுவும் தீபாவளி மாபெரும் கொண்டாட்டத்தின் உச்சம்.

அம்மன் சத்தியமாய்க் குடியிருக்கும் இந்த ஆலயத்தில் காணப்படும் வெகுவான சிறப்பம்சம் சுத்தம். மலேசிய இந்துக்கள் அவ்வளவு அழகாக பராமரிக்கின்றார்கள், கோவிலை எப்படிச் சுத்தமாக வைத்துப் பராமரிக்க வேண்டும் என்பதை அவர்களிடமே தமிழக தமிழர்கள் கற்றாக வேண்டும்.

இதனால்தான் அவர்களில் பலருக்குத் தமிழக பிரசித்தியான கோவில்களைக் காணும்போது கண்ணீர் வருகின்றது, என்ன செய்வது இந்திய நிலை அப்படி.

ஒரு இஸ்லாமிய நாடான மலேசியாவில் முழு மத சுதந்திரத்துடன் இந்துக்களால் அவர்கள் ஆலயத்தை மிக மிக அழகாகப் பராமரிக்க முடிகின்றது ஆனால் மதசார்பற்ற இந்தியாவில் இவ்வளவு அலங்கோலம் என்பது விசித்திரம்.

இந்த மாரியம்மன் சக்தியுள்ளவள், மலேசிய இந்துக்களுக்கு தாயாக நின்று அருள்பாலிப்பவள், இந்துக்கள் அவளை இன்று மலேசியாவின் பணக்கார அம்மனாக மாற்றி வைத்திருக்க அவளின் பெரும் அருளே காரணம்.

மாரியம்மன் இந்தியாவின் தமிழகத்தில் மட்டுமல்ல அவள் கடல்கடந்தும் மலேசிய திருநாட்டில் தமிழ்பேசும் இந்துக்கள் மத்தியில் அருள்பாலிக்கின்றாள், இந்த மண்ணைவிட்டு தன் இனம் குலம் சென்றாலும் அவளும் அவர்களோடு குடியேறி அவர்களைக் காத்து வருகின்றாள்.

ஆடிமாதம் அவளுக்கு பெரும் விசேஷமும் வழிபாடுகளும் நடைபெறும். கேட்ட வரம்தரும் கண்கண்ட மாரியம்மன் அவள்.

கோலாலம்பூர்க்கு வருபவர்கள் மலேசிய பத்துமலை முருகனின் தாயான இவளைக் கண்டு வணங்குங்கள். எல்லா நலமும் அருளும் உங்களுக்கு கைக்கூடும், நம்பி பணிந்தால் அடிக்கடி உங்களை அழைத்துத் தன் அருள்பார்வையில் வைத்துக் கொள்வாள் அந்தக் கருணமிக்க மாரியம்மன்.

மாரியம்மன் ஆலயங்கள் 17 & 18: சிங்கப்பூர் மற்றும் யங்கூன் (ரங்கூன்)

அன்றைய மலேசிய திருநாட்டின் ஒரு பகுதியும் இன்று தனிநாடாகவும் அமைந்திருக்கும் சிங்கப்பூரில் அமைந்திருகும் மாரியம்மன் ஆலயம் பிரசித்தியானது.

சிங்கப்பூர் சைனா டவுன் பக்கம் அமைந்திருக்கும் இந்த ஆலயம் 1827 இல் கட்டப்பட்டது. அது கட்டப்பட காரணமானவர் நாராயண பிள்ளை எனும் தமிழர்.

அவர் நாகபட்டினத்தில் இருந்து இங்கு வந்தவர், பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரு செங்கல்சூளையில் கணக்கராக பணியாற்றினார், அவருக்கு நற்பெயர் நிரம்ப இருந்தது, அம்மன் பக்தர் அதுவும் தீவிரமான பக்தர்.

தான் பணியாற்றும் செங்கல்சூளையின் செங்கல் அம்மனுக்கும் செல்லவேண்டும் என அவர் விரும்பி அன்றைய பிரிட்டிஷாரிடம் அனுமதி வாங்கி சிறியகோவிலாகக் கட்டினார்.

கடலூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சிறிய அம்மன் சிலையினை அங்கு ஸ்தாபித்தார். அது “சின்ன அம்மன்” என அழைக்கப்பட்டது, மெல்ல மெல்ல ஆலயம் வளர்ந்தது.

அடுத்த 20 ஆண்டுகளில் ஆலயம் முழுமை பெற்றது, சிங்கப்பூரில் தமிழக இந்துக்கள் பெருக பெருக அந்த ஆலயமும் பெரிதானது, பின்னாளில் இராஜகோபுரமெல்லாம் அழகுற எழுப்பப்பட்டது.

இன்று பல இனங்கள் கலந்துவாழும் சிங்கப்பூரில் இந்துத்தமிழரின் அடையாளமாக அது எழும்பி ஒளிவீசி நிற்கின்றது.

அக்காலங்களில் வேலைத்தேடி வரும் இந்துக்களுக்கு இதுதான் புகலிடமானது, வேலை கிடைக்கும்வரை அவர்கள் அங்குதான் தங்கி பசியாறினர். அம்மனே அவர்களைக் காத்தாள்.

திருமணம், குழந்தைகளுக்கான சம்பிரதாயம் என கடல்கடந்த அம்மக்களின் எல்லா சுபநிகழ்வும் அவள் ஆலயத்திலே நடந்தது.

இடையில் சிங்கப்பூர், ஜப்பானியர் கையில் வீழ்ந்தபோதும் இந்த ஆலயத்தின் தனித்தன்மை நீடித்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியத் தேசிய இராணுவத்தைக் கட்டமைத்தபோது சிங்கப்பூரில் இந்த ஆலயத்தில் வேண்டிக்கொண்டுதான் அவரோடு தமிழர் பலர் போராட‌ கிளம்பினார்கள்.

அந்த வரலாற்றோடு தொடர்புடைய ஆலயம் இது.

இந்தியத் தமிழகம் போலவே இந்த ஆலயத்திலும் தீமிதிக்கும் வழமை உண்டு. இந்தியர் மட்டுமல்ல சீனர்களும் இதர இனத்தவரும் இதில் பங்குபெறுவார்கள்.

ஆடிமாதத் திருவிழாவும் அப்போது நடக்கும் கூழ் ஊற்றும் நிகழ்வும் இன்னும் இதர பாரம்பரிய வழிபாடுகளும் கடல் கடந்து சென்றாலும் இந்துக்கள் கலாச்சாரத்தை சுமந்தபடி அன்னை தன் மக்களோடு மக்களாக அங்கு நின்று அவர்களைக் காக்கின்றாள் என்பதைக் காட்டுகின்றது.

அங்கு அவளை நம்பி வேண்டியவர்க்கு எல்லாமும் கிடைக்கும், முழுக்க கிடைக்கும் என்பதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம், விழா காலங்களில் இன்னும் அதிகம்.

200 ஆண்டுகளைக் கடந்தாலும் இன்னும் கொஞ்சமும் பழமை மாறாமல் மிக நவீன சிங்கப்பூரில் இந்து அடையாளத்தைச் சுமந்தபடி தன் மக்களைக் காத்தபடி அவர்களை வாழவைக்கும் அத்தேசத்துக்கும் அருள்பாலிக்கின்றாள் அந்த நாயகி.

அடுத்த ஆலயம் இன்று மியான்மார் என்றாகிவிட்ட பழைய பர்மாவின் தலைநகர் யங்கூனில் இருக்கும் ஆலயம், அது காலத்தால் மூத்தது என்றாலும் ஆவணப்படி 300 ஆண்டு பழமையானது.

பர்மாவுக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு கால காலத்துக்கு முன்பே உண்டு. பூம்புகார் கடலில் மூழ்கும் காலம் முன்பே இருந்து அது தொடர்ந்தது, கிழக்காசிய நாடுகளில் பிரமாண்ட ஆறும் பெரிய மலைகளுமற்ற அந்தப் பூமி அரிசிக்கும் இதர இயற்கை விளைச்சலுக்கும் பெயர்பெற்றது.

இதனால் காலங்காலமாக தமிழகச் செட்டியார்கள் அங்கு வியாபாரம் செய்தார்கள், இன்று காரைக்குடி பக்கம் காணப்படும் செட்டிநாட்டு அரண்மனைகளின் தேக்கு மரமெல்லாம் “பர்மா தேக்கு” என அங்கிருந்தே வந்தது.

செட்டியார்கள் அங்கு வியாபாரம் செய்தபோது உருவான ஆலயம் இது, சிறிய ஆலயமாக இருந்த அந்த ஆலயம் பின் தமிழக இந்துமக்கள் பெருகியபின் பெரிதானது.

பர்மாவில் செட்டியார்கள் கட்டிய கோவில்கள் ஏராளம் உண்டு, அதில் இதுவும் ஒன்று.

இந்த மாரியம்மன் கோவிலிலும் ஆடி மாதம் பெரும் விசேஷம். அம்மனுக்குத் திருவிழா முதல் தீமிதி பண்டிகை வரை எல்லாமும் நடக்கும், சிறிய ரத ஊர்வலமும் உண்டு.

இன்று அமெரிக்காவில் ஐடி தொழிலில் ஈடுபட்டிருப்பது போல் ஒரு காலத்தில் பர்மாவில் வியாபாரம் செய்தோர் விவசாயம் செய்தோர்க்குப் பெரும் மதிப்பு இருந்தது, பின்னாளில் பர்மா அரசியல் குழப்பங்களில் சிக்கினாலும் பௌத்த நாடாக பிரகடனம் செய்யப்பட்டாலும் அந்த நாட்டில் இந்துக்கள் வாழ்வாங்கு வாழ்ந்தார்கள். இன்னும் எதிர்காலத்தில் சிறந்து வாழ்வார்கள். இது அவர்கள் அடையாளம் என்றபடி அமர்ந்து மாரியம்மன் அருள்பாலிக்கின்றாள்.

கிழக்காசியா முழுக்க இந்துக்களின் அடையாளத்தைக் காணமுடியும். அவ்வகையில் இந்த மாரியம்மன் ஆலயங்கள் உழைக்கும் மக்கள் நடுவில் நான் உண்டு, அவர்களைக் காத்து வழிநடத்த நான் அவர்களோடு உண்டு என குடியிருக்கும் ஆலயங்கள்.

இவை இந்துமக்கள் எங்குச் சென்றாலும் மாரியம்மனோடு செல்கின்றார்கள், அவள் அருளில் வாழ்கின்றார்கள், அவளிலே கரைந்தும் போகின்றார்கள் என்பதைக் காட்டும் ஆழ்ந்த பக்தியின் உணர்ச்சிமிகு சான்றுகள்.

ஆடிமாதம் கடல்கடந்து நிற்கும் இந்த மாரியம்மன் ஆலயங்களும் எல்லோரையும் நிரம்ப ஆசீர்வதிக்கட்டும், பர்மா நதிகளின் பெரும் வெள்ளம் போல, சிங்கப்பூரின் கடலலை போல, மலேயாவில் கொட்டும் கனமழை போல அவள் அருளும் கருணையும் எல்லா மக்களையும் ஆசீர்வதிக்கட்டும்.

மாரியம்மன் ஆலயங்கள் 19 : வெட்டுவானம் எல்லையம்மன் ஆலயம்.

இந்த ஆலயம் வேலூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூரில் இருந்து மேற்கே 23 கி.மீ. தொலைவில், ஜவ்வாது மலைச்சாரலிலும், பாலாறு நதிக்கரை ஓரத்திலும் நடுநாயகமாக அமைந்துள்ளது.

இந்த ஆலயம் படவேடு ரேணுகாதேவி ஆலயத்துடன் நேரடியாக‌ தொடர்புப்பட்டது.

அதாவது, இது அப்படியே பரசுராமனின் தாயும், ஜமதக்கினி முனிவனின் மனைவியான ரேணுகா தேவிக்கான ஆலயம், பரசுராமன் தன் தந்தையின் உத்தரவுப்படி தன் தாய் தலையினையும், அவளைக் காக்க வந்த சலவைக்கார பெண் தலையும் துண்டித்துப் பின் தன் தந்தை கொடுத்த வரத்தின்படி இருவரையும் தலைமாற்றி உயிரோடு எழுப்பிய இடம் இதுதான்.

ரேணுகாவின் தலைவெட்டப்பட்ட இடம் என்பதால் இது வெட்டுவானம் ஆலயம் என்றாயிற்று.

இது மிக மிக பழமையான ஆலயம், படவேடு ரேணுகா காலத்துக்கு சமமானது, அந்த ஆலயம் பல்வேறு காலகட்ட சிக்கலாலும், அந்நிய படையெடுப்பாலும் புதையுண்டு போனது.

அப்பக்கம் ஒரு விவசாயி தன் நிலத்துகான கால்வாயினைத் தோண்டும்போது மண்வெட்டி எதிலோ மோதுவது போல் சத்தம் கேட்டது. பின் தரையில் இருந்து இரத்தம் ஊற்றெடுத்தது, அந்த விவசாயி மயங்கி விழுந்தான்.

ஊர்க்கூடி இந்த அதிசயத்தைக் கண்டு அஞ்சி நின்றபோது “இந்த மண்ணின் தெய்வமான எல்லையம்மன் நான். என்னைப் பிரதானமாக வைத்து ஆலயம் எழுப்புங்கள். உங்கள் குறையெல்லாம் தீரும்” என அசரீரி ஒலித்தது.

அதன்படி மக்கள் பயபக்தியாய் அன்னையினைத் தோண்டி எடுத்துக் கோவில் கட்டி அமர்த்தினர். அன்றிலிருந்து அப்பக்கம் எல்லோருக்கும் அவள் எல்லா வகையிலும் தாய்போல் நின்று காத்து வருகின்றாள்.

அந்த ரேணுகா பெரும் ரிஷியின் மனைவி, பெரும் நியதியான வாழ்வும் ஆச்சாரமும் கொண்டவள், அப்படியே அம்மன் அம்சம், அவள் தன் தலையும், சலவைத்தொழிலாளி பெண் உடலிலும் இருந்து அதாவது தெய்வ நிலையில் இருந்து மான்டரின் எல்லாப் பாவ அழுக்கையும் கர்ம அழுக்கையும் போக்கி தாயாக நின்று வாழவைப்பாள் என்பது.

அவள் வாழ்வில் கவனிக்க வேண்டிய அம்சம் அவள் மகா சக்தி நிரம்பியவள், அவள் சாபமிட்டிருந்தால் பரசுராமனே இல்லை. ஆனால், அவள் தன் தலையினையே மகன் வெட்டியபோதும் மன்னித்தாள், பின் உயிரோடு அவள் எழுந்து வந்தபோதும் அவன்மேல் ஆத்திரமடையவில்லை, வெறுக்கவில்லை. மாறாக, அன்புக்காட்டினாள்.

இந்தத் தாயன்புதான் மாரியம்மன், மானுடர் அனைவரையும் பிள்ளைகளாகக் கருதி எந்தப் பெரும் தவறு செய்திருந்தாலும் மன்னித்து அன்போடு காத்துவரும் தாயன்பு.

அப்படியான அம்மன் இங்கு எல்லையம்மனாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். எல்லையம்மன் என்றால் கருணைக்கு அவள்தான் எல்லை, மானிடரின் எல்லாச் சிக்கலுக்கான தீர்வுக்கும் அவளே எல்லை, கருணைக்கும் அரவணைப்புக்கும் ஆறுதலுக்கும் அவளே எல்லை என்பதைச் சொல்லும் பெயர்.

இந்த ஆலயம் அந்த ரேணுகா இரத்தம் சிந்தி உயிர்ப்பெற்ற இடம் என்பதால் இது எல்லா நோய்க்கும் சுகம் தரும் ஆலயம், இரத்தம் சம்பந்தமான எல்லாச் சிக்கல்களும் இந்தச் சந்நதியில் தீரும்.

அப்படியே பேறுகாலப் பெண்களுக்குச் சுகப்பிரசவம் முதல் பெண்களுக்கான எல்லா நோய்களுக்கும் சிக்கலுக்கும் இங்குத் தீர்வு உண்டு.

இந்த ஆலயம் நோய்கள் நீக்கி, வாழ்வின் எல்லாச் சிக்கலும் நீக்கி வாழவைக்கும் பெரும் ஆலயம், சுபவாழ்வை நீண்ட ஆயுளோடு ஒரு குறையின்றி தரும் மகத்தான ஆலயம்.

இந்த ஆலயம் கிழக்கு நோக்கிய ஐந்துநிலை இராஜகோபுத்துடன் அமைந்துள்ளது. அதனையொட்டி அழகிய மண்டபம், திருக்குளம் இன்னும் அதனருகே புற்றும் வேப்பமரமுமாக எழிலுற அமைந்துள்ளது.

ஆலயத்தின் உள்ளே நாகர் சிலையின் பீடத்தில் பழமையான வேப்ப மரம் தலமரமாக அமைந்துள்ளது. கோயிலின் உள்ளே அலங்கார மண்டபம் உற்சவ மண்டபம் அமைந்துள்ளன‌.

அருகில் அஷ்ட நாக தீப மண்டபமும் அமைந்துள்ளன.

உள்ளே கருவறையில் எல்லையம்மன் கழுத்தளவு மேனியளாக, பெரிய‌ கண்கள் கொண்டு அருளாசி வழங்குகின்றாள், காணும்போதே உருகவைக்கும் கருணைமிக்க கண்கள் அவை.

இத்தலத்தின் அம்மன் அவளை வேண்டி வருவோருக்கு மணப்பேறும் மக்கட்பேறும் அருள்கிறாள். அதோடு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளையும் காப்பாற்றும் அன்னையாக வெட்டுவானம் எல்லையம்மன் திகழ்கிறாள்.

அன்னையினை அண்டி வந்த யாரும் இதுவரை கைவிடப்பட்டதில்லை என்பதால் மருத்துவர்கள் கைவிட்ட நோயாளிகளின் புகலிடமும், அவர்கள் மீண்டுவரும் இடமும் அன்னையின் சந்நதிதான்.

இராஜமருத்துவச்சியாக குலத்தின் மூத்தத் தாயாக நின்று அவள் அருள்பாலிக்கின்றாள்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அம்மனின் அபிஷேக மஞ்சள் நீரும், தல மரத்து வேப்பிலையும், புனிதமான குங்குமமும் பிரசாதங்களாக அளிக்கப்படுகின்றன.

செவ்வாய்க்கிழமைகளில் காலை 8 மணி முதல் 9 மணி வரை நாகதோஷ நிவர்த்தி பூஜை உண்டு.

உடல் நோய் தீர நேர்ச்சை செய்தவர்கள் இங்கு விற்கப்படும் மண் பொம்மைகளை வாங்கி காணிக்கை செலுத்துகின்றனர். விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு வரும் நோய்களுக்கு வேண்டிக் கொண்டு அவை குணம் பெற்ற பின்பு, விலங்கு பொம்மைகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

கோயிலின் நேர் எதிரே அழகிய படிகள் கொண்ட சதுர வடிவிலான திருக்குளம் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இக்குளம் எப்போதும் நீர் நிறைந்து காணப்படும்.

இத்திருக்குளத்தின் படிகளில், லட்ச தீப விழாவின் போது விளக்கேற்றப்படும்.

இந்த ஆலயம் அப்பக்கம் பெரும் பிரசித்தியானது, ஆடிமாத கொண்டாட்டம் அங்கு உச்சம், ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் இருந்து ஏழு வெள்ளிக்கிழமைகளில் விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

பல்லாயிரகணக்கான பக்தர்கள், லட்சகணக்கான பக்தர்கள் ஓடிவந்து நேர்ச்சை செய்யும் ஆலயம் என்பதால் எப்போதும் அது விழாக்கோலம் பூண்டிருக்கும். அன்னையின் சக்தி அப்படியானது.

இது அன்னையே மானிடராக பிறந்து மானிட சிக்கலெல்லாம் உணர்ந்து மரணம் என்றால் என்ன என்று அவள் சந்தித்து மீண்ட ஆலயம், மீண்டும் தன் குடும்பத்துடன் சேர்ந்த இடத்தின் ஆலயம்.

அதனால் யாரெல்லாம் பெரும் நோயாடு உயிருக்குப் போராடுவார்களோ அவர்களையெல்லாம் அவள் குணமாக்கி உயிரை மீட்டுத் தருவாள், எந்தக் குடும்பம் சிக்கலில் உண்டோ அந்தக் குடும்பத்தை வாழவைப்பாள், இல்லற வாழ்க்கையின் நினைவால் சாபம்பெற்ற அவள் தன்னை அண்டிவரும் மக்களெல்லாம் குடும்பமாக நிலைபெற்று பெருவாழ்வு வாழ வழி செய்வாள்.

ஆடிமாதம் வழிபட வேண்டிய முக்கியமான அம்மன் இவள். வேலூர் பக்கம் உள்ளவர்கள் இங்குச் சென்று வணங்குங்கள், முடியாதவர்கள் எல்லையம்மா என வீட்டில் இருந்தே அவள் பெயரை சொல்லி வணங்குங்கள்.

எல்லையம்மா என்றழைத்தால் உங்கள் எல்லைக்கே ஓடிவந்து காவலிருந்து வாழவைப்பாள். எல்லையற்ற அன்பும் கருணையும் ஆசியும் தந்து தாய்போல் நின்று உங்களைக் காலமெல்லாம் காத்துக்கொள்வாள். இது சத்தியம்.