நரசிம்மர் ஆலயங்கள்.

நரசிம்மர் ஆலயங்கள் 01 : சிங்கம்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மர் ஆலயம்.

ஆவணிமாதம் விஷ்ணுவிற்கானது, விஷ்ணு வழிபாடு பல வகையில் உண்டு. அது வாமன ஜெயந்தி முதல் பல வடிவில் உண்டு, தசாவதரமும் கொண்டாடப்படும் மாதமும் இதுவே.

அவ்வரிசையில் நரசிம்ம வழிபாடும் பிரசித்தி, மிக மிக உக்கிரமான ஆனால் மிக‌ப் பலமான அவதாரம் அந்த நரசிம்ம அவதாரம்.

இந்துக்களின் ஒவ்வொரு அசைவும் ஞானமானவை. அர்த்தமுள்ளவை. அம்மதம் ஒன்பது வகையான விலங்குகளை இறைவனின் வாகனமும் வடிவமுமாக்கிற்று, அதில் ஒன்று சிம்மம்.

காட்டில் பலம் வாய்ந்தது என்பதற்காக மட்டும் சிங்கத்தை இந்துமதம் கொண்டாடவில்லை, எந்த விலங்கிடமும் இல்லாத ஒரு விசேஷ ஆளுமையும் சில தனித்த குணமும் அதனிடமேதான் உண்டு.

சிங்கத்தின் மிக முக்கிய பலம் அதன் மன உறுதி, மற்ற விலங்குகளைவிட மனிதனை விட அதற்கு 100 மடங்கு மனோபலம் அதிகம், எந்தச் சூழலிலும் அது பின்வாங்காது. ஆபத்தைக் கண்டு அஞ்சாது.

சிங்கம் ஆளுமை மிக்கது, அது தன் குடும்பம் குலத்துக்கென ஒரு எல்லை வகுக்கும், அந்த எல்லைக்குள் இன்னொரு விலங்கை இன்னொரு சிங்கத்தையே அனுமதிக்காது.

சிங்கத்தைப் போல குடும்பபாசம் மிக்க விலங்கு இன்னொன்று இல்லை, அந்த அளவு தன் குடும்பத்தை மிகக் கருத்தாய் அக்கறையாய் அது காவல் இருந்து வளர்க்கும்.

அது தேவையற்ற இடங்களில் பலம் காட்டாது, தன் உணவுக்கு அவசியமில்லை எனும் போது எந்த விலங்கையும் தேவையற்று கொல்லாது. அதன் வேட்டையில் கூட தர்மம் உண்டு , இரைகளான மானோ காட்டெருமையோ எது என்றாலும் அவை கர்ப்பமாக இருந்தால் தொடாது, குட்டிகளாய் இருந்தாலும் எப்பசியிலும் தொடாது.

இன்னொரு விலங்கு வேட்டையாடி போட்டதை சிங்கம் உண்ணாது, வேட்டை என வந்துவிட்டால் ஆண்சிங்கம் தனியே செல்லும், யாரையும் எதிர்பாராது.

பொதுவாக பெண் சிங்கங்களே வேட்டையாடி ஆண் சிங்கத்துக்குத் தரும், பெண் சிங்கம் முடியாவிட்டால் ஆண்சிங்கம் களமிறங்கும், அப்போது யாரையும் எதிர்பாராது.

அதன் கர்ஜனை பெரிதாக கேட்குமே தவிர மிக மிக நுணுக்கமான மெல்லிய குரலில் அது பேசும் குரல் குட்டிகளுக்கும் பெண் சிங்கத்துக்குமே கேட்கும்.

மிகத் தொலைவில் இரை வரும்போதே பார்த்து கணிக்கும் சக்தி சிங்கத்துக்கு உண்டு, 30 அடி வரை பாய்வதும், பல வகையில் வியூகங்களைச் சட்டென மாற்றி போராடுவதும் அதன் தனிச் சிறப்பு.

தன் குடும்பத்துக்குத் தலைவனான சிங்கம் தன் குட்டிகளில் ஒரு ஆண்சிங்கம் தலை எடுத்ததும் முதுமை காரணமாக தனியே ஒதுங்கிவிடும், தொலைவில் சென்று முடிந்தவரை வாழ்ந்து இறந்துவிடும். தன் கூட்டத்தை நம்பியிராது. பாசத்தில் சிக்காது.

பெரும் பலம், எதற்கும் கலங்கா வீரம், தேவையற்ற பலம் காட்டாது, இரை கிடைத்தால் போதும் எனும் திருப்தி, எல்லையிட்டு குடும்பம் காக்கும் ஆளுமை, வயதானால் தானே ஒதுங்கிச் செல்லும் தியாகம் என அதன் நுணுக்கமான குணம், அறத்துக்கு கட்டுப்பட்ட குணம் நிரம்ப உண்டு.

இதனாலே அதனை காட்டின் இராஜா எனச் சொன்ன இந்துக்கள் அரசனும் சிங்கத்தின் சாயலில் இருக்கவேண்டுமென சொல்லி அவனுக்குச் சிம்மாசனம் அமைத்தார்கள்.

புலியாசனம் சிறுத்தை ஆசனமெல்லாம் அமைக்காமல் சிம்மாசனம் அமைத்த நுணுக்கம் இதுதான், இது இந்துக்களின் சாயல்.

இந்துமதம் உலகெல்லாம் பரவியிருந்தபோது அராபியாவில் சிங்கம் தனி இடம்பெற்றது, நெபுகாத்நேச்சரின் சின்னம் சிம்மமே.

சிங்கத்தின் பிடரிமுடி சிறப்பால் அது கேசரி என வழங்கப்பட்டது. இதுதான் ஜெர்மன் போன்ற மொழிகளில் கெய்சர் என்றாயிற்று, லத்தீனில் சீசர் என்றாயிற்று, இதற்கு சிம்மம் எனப் பொருள்.

இலங்கையின் சிங்கள வம்சம், சிங்கபுரா எனும் சிங்கப்பூர் என எல்லா இடமும் இந்துக்கள் சிங்கத்தைச் சுமந்து சென்றது இப்படித்தான்.

இந்தச் சிறப்பான சிம்ம அடையாளத்தைத்தான் நரசிம்ம அவதாரமும் தாங்கி வந்தது, தன் பக்தன் பிரகலாதனுக்காய் வந்தது.

அதர்மத்தை அழித்து தன்னை நம்பியோரை காக்க, தர்மத்தை காக்க பகவான் உக்கிரவடிவம் எடுத்த கோலம் அது, மிகச சில நொடிகள் நிகழ்ந்தாலும் எவ்விதமான வரம்பெற்றவனையும் மிக நுணுக்கமான கோலத்தில் வந்து ஒழிக்க பகவானால் முடியும், தீர்க்கவே முடியா பெரும் சிக்கலானாலும் பகவானால் முடியும் என நம்பிக்கை கொடுக்கும் கோலம் அது.

ஆம், எவ்வளவுக்குச் சிக்கலான பிரச்சினை என்றாலும் எதிரி மாபெரும் பலமுள்ளவன் என்றாலும் நியாயமும் தர்மமும் நம்மிடம் இருந்தால் பகவான்மேல் அசைக்கமுடியா நம்பிக்கை இருந்தால் அங்கு நிச்சயம் பகவான் வந்து நமக்கு வெற்றித்தந்து காப்பார் என்பதைச் சொல்வதே நரசிம்ம அவதாரம்.

நரசிம்மரைத் தொழுவோர்க்குப் பெரும் காவல் கிடைக்கும், எதிரிகள் தொந்தரவு அழியும்,எல்லா வகை காவலும் அருளும் பலமும் செழிப்பும் நிரம்பியிருக்கும்.

அதாவது, காட்டில் சிங்ககுட்டிகள் எப்படி எல்லாம் பெற்று வாழுமோ அப்படி ஒரு குறையின்றி தன்னை அண்டியோரை காத்துவரும் வழிபாடு நரசிம்ம வழிபாடு.

அந்த நரசிம்ம வழிபாட்டில் தமிழகத்தில் பல தலங்கள் முக்கியமானவை. அவற்றில் ஒன்று சிங்கம்பெருமாள் எனும் ஊரில் அமைந்திருக்கும் படலாத்ரி நரசிம்மர் ஆலயம்.

பாடலம் என்றால் சிகப்பு எனப் பொருள் (பாடல புஷ்பம் என்றால் செம்பருத்தி) அத்ரி என்றால் மலை பாடலத்திரி என்றால் சிகப்பு மலை எனப் பொருள்.

இது பல்லவர் காலத்தில் மலையினை குடைந்து கட்டப்பட்டது, பல்லவர்கள் நரசிம்ம வழிபாட்டில் தீவிரமானவர்கள், அவர்கள் அடையாளமாக சிம்மமே உண்டு, அவர்கள் கொடியிலும் அதுதான் கம்பீரமாக பொறிக்கப்பட்டிருக்கும்.

அப்படியான பல்லவர்களில் நரசிம்ம பல்லவர் எனப் பல மன்னர்கள் உண்டு, அந்த அளவு நரசிம்மத்தை அவர்கள் வணங்கினார்கள்.

அப்படியான பல்லவர்கள் உருவாக்கிய குடைவரை கோவில் இது என்றாலும், இது உருவாக முக்கிய காரணம் ஜாபாலி முனிவர்.

இவர் ராமாயண காலத்தவர் காட்டிலே இருந்து தவம் செய்தவர், இவர் இந்துமத தத்துவ பிரிவுகளில் ஒன்றான “நியாமா” எனும் பிரிவைச் சார்ந்தவர் அதாவது அறிவைக் கொண்டு இறைவனை அடைதல் வேண்டும் எனும் கோட்பாடு அது.

மிகச் சிறந்த முனிவரான இவர் ஜாபாலி உபநிடதம் என்றொரு பிரசித்தியான நூலை எழுதியவர், இவர் வாழ்ந்த இடமே இப்போது ஜபல்பூர் என விளங்குகின்றது.

இவர்தான் ராமன் வனவாசம் சென்றபோது முதல் மனைவியான கோசலையின் மகனான ராமனே அரசுக்குரியவன், கைகேயி மகனை அரசனாக்க தசரதனுக்கே உரிமையில்லை என வாதிட்டவர்.

மிகச் சிறந்த முனிவரான அவருக்கு நரசிம்மம் சாத்தியமா எனும் ஒரு சந்தேகம் இருந்தது. அதைத் தீர்க்கும் பொருட்டு அவர் இங்குள்ள சிறிய குகையில் தவமிருந்தார், அவர் தவத்துக்கு நரசிம்மமாக பகவானே வந்து காட்சி அளித்து அவர் பெயரால் அங்கு வழிபடுவோர் துயரம் தீரும் என வரமும் தந்தார்.

இப்படி உருவான அந்த ஸ்தலத்தில் பல்லவ மன்னர்கள் குகையினை இன்னும் பெரிதாக்கி கோவிலையும் ஸ்தாபித்தார்கள், அன்றிலிருந்து இந்த ஆலயம் பிரசித்திப் பெற்று விளங்குகின்றது.

கோவிலுள் சிங்க முகமும் மனித உடலும் கொண்ட நரசிம்மர் நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் ஆசிவழங்குகின்றார். அவரின் மேல் திருக்கரங்களில் சங்கு சக்கரங்களும், கீழ் வலது திருக்கரம் அபயமுத்திரையுடனும், இடது திருக்கரத்தை மடியில் வைத்தபடியும் அமர்ந்திருப்பார்.

பொதுவாக நரசிம்மர் இடதுகாலை மடித்து வைத்தும் வலது காலை ஊன்றியும் இருப்பார், இத்தலத்தில் அவர் வலது காலை மடித்து வைத்துக் கொண்டு, இடது திருவடியைத் தாமரை மலர்மேல் வைத்து அமர்ந்திருக்கும் இக்கோலத்தை காண்பது வேறேங்கும் முடியாது.

அவரே வந்து அமர்ந்த கோலமிது.

இந்த நரசிம்மருக்கு மூன்று கண்கள் உண்டு. மார்பில் மஹாலஷ்மி அமர்ந்திருக்கின்றார் பகவானின் மூன்றாம் கண் தீபாராதனையின் போது நாமதிருச்சின்னதை விலக்கிக் காட்டப்படுகிறது.

அவர் முக்காலமும் அறிந்தவர் என்பதும், அவரை வழிபட்டால் தியானித்தால் நம் மூன்றாம் கண்ணால் அவரை அறியலாம், அந்நேரம் நாமும் அதர்மங்களை அழித்து தர்மத்தை காக்கும் சக்தி பெறுவொம், மாய அதர்மங்கள் நம்மை விட்டு அகலும் என்பதைச் சொல்லும் தத்துவமிது.

இங்கு உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரஹ்லாதவரதர் என அமர்ந்திருக்கின்றார், தாயாரின் திருப்பெயர் அஹோபிலவல்லித் தாயார்.

அஹோபிலம் என்றால் சிம்மக்குகை என்பது பொருள், அன்னைகு இங்குத் தனிச் சந்நதி உண்டு.

விஷ்வக்சேனர், கருடன், லட்சுமிநரசிம்மர், ஆஞ்சநேயர், ஆண்டாள் சந்நிதிகளும் உண்டு, கோவில் முகப்பில் தசவதாரகாட்சிகள் செதுக்கபட்டிருக்கின்றன‌.

இங்குத் தீர்த்தம் சுத்த புஷ்கரணி, தல விருக்ஷம் பாரிஜாதமரம், அழிஞ்சல் மரமும் இங்குப் பிரசித்தி.

நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த கோலத்தோடு இங்குள்ள புஷ்கரணியில் குளித்தெழுவார் அதனால் அது சுத்த‌ப் புஷ்கரணி என்றழைக்கப்படுகிறது.

ஜாபாலி முனிவர்க்குப் பிரதோஷ வேளையில் மகரிஷிக்குத் தரிசனம் தந்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் பெருமாளுக்குப் பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடக்கும்.

இங்கு ஆண்டுதோறும் ஒரு அதிசயம் நடக்கும், மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், சரியாக ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளிபடும்.

ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரால் பாடபட்ட தலம் இது, சிங்கவேள்குன்றம் என இத்தலப் பெருமாளை அவர் போற்றிய பாடல்கள் உண்டு. அவை தினந்தோறும் இங்கே பாடப்பெறுகின்றன.

இந்த மலையே பெருமாளின் திருமேனியாக உள்ளதால், இங்குப் பௌர்ணமி கிரிவலம் மிகுந்த விசேஷம்.

12 ஆழ்வார்களும் இங்கு நின்று அருள்பாலிக்கின்றார்கள்.

இந்த ஆலயத்தின் விசேஷம் அந்த அழிஞ்சல் மரம், இது மிக மிக விசேஷமான ஒரு குணம் கொண்டது, அதாவது இம்மரத்தின் விதைகள் மரத்திலிருந்து வீழ்ந்தால் மீண்டும் மரத்தைத் தேடி சென்று ஒட்டிக்கொள்ளும்.

தாய்மரத்தோடு அவை ஒட்டிக்கொள்ளும், எங்கிருந்து அவை உருவாகி வந்ததோ அந்த மரத்தோடு தானே சென்று ஒட்டிக்கொள்ளும். இதனால் பெரிய அழிஞ்சல் மரத்தின் அடிப்பாகம் அம்மை போட்ட உடல் போல் பருக்களுடன் காணப்படும்.

ஜீவாத்மா பரமாத்மாவினைத் தேடிச் சென்று கலக்கும் , பரமாத்மா ஜீவாத்மாவினைத் தன்னோடு ஈர்த்துக் கொள்வதை விளக்கும்படி இம்மரம் அங்கு உண்டு.

பக்தர்கள் தங்கள் உடையில் இருந்து நுனிக்கிழித்து அதனை இம்மரத்தில் கட்டிவைக்க வேண்டியது எல்லாம் நிறைவேறும்.

நரசிம்ம வழிபாடு பகை நீக்கும். நல்ல ஞானத்தை அறிவை தெளிவைத் தரும், மாயைகளை அகற்றிப்போடும்.

நீங்கள் அதர்மத்தினால் பாதிக்கப்பட்டு, உங்கள் எதிரி உங்களால் நெருங்கமுடியா பலவானாக இருந்தால் ஒருகாலமும் கலங்காதீர்கள், எவ்வளவு பலமான எதிரியென்றாலும் நீங்கள் நரசிம்மரிடம் அடைக்கலாகும் பொழுது அவரே அவனை ஒழித்து உங்களைக் காப்பார்.

தர்மத்தை மீறி அறத்தை மதிக்காமல் தெய்வத்தை நினையாமல் அயோக்கியன் எதைப் பெரிதென எண்ணுகின்றானோ, எதை முழுக்க நம்புவானோ, எது அவன் கனவும் பெருமையும் எனக் கருதி நிற்பானோ அதுவே அவனுக்கு அழிவினைக் கொண்டுவரும். எதற்காக அயோக்கியன் காலமெல்லாம் உழைப்பானோ அதனாலே அழிவான்.

அவன் சற்றும் எதிர்பாரா அழிவு அவனுக்கு வரும் என்பதே நரசிம்ம அவதாரம்.

நரசிம்ம அவதாரம் என்றோ நடந்துவிட்ட கதை அன்று, பல யுகங்களுக்கு முன்பு நடந்த ஒரு அவதாரம் அன்று.
அது எப்பொழுதெல்லாம் மானிடன் தான் பலமானவன் என்னை யாரும் அசைக்க முடியாது எனக் கருதி அகங்காரம் கொள்கின்றானோ அப்பொழுதெல்லாம் அவனின் மாய பலத்தை தாண்டி பரம்பொருள் ஆடும் ஆட்டம்.

எக்காலமும் மானிடனின் பெரும் பலத்தில் ஒரு பலவீனம் இருந்து கொண்டே இருக்கும். அவனால் ஒரு காலமும் இறை சக்தியினை நெருங்க முடியாது, அது நினைத்தால் நொடியில் எதையும் சரிக்கும் என்பதுதான் நரசிம்ம அவதார தத்துவம்.

பகவானின் அவதாரங்களில் நொடியில் தோன்றி நொடியில் மறைந்த அந்த அவதாரம் மானிட அறிவின் பலவீனத்தையும் அவன் முயற்சிகளெல்லாம் வீண் என்பதையும் அந்த வீணான முயற்சியில் அகங்காரம் பெரும் அழிவினைக் கொடுக்கும் என்பதையும் சொல்லிவிட்டுச் சென்றது.

அவதாரத்தில் ஒரே ஒருவனுக்காக பரமாத்மா சில நிமிடங்களே அவதரித்த அவதாரமும் அதுவே, அந்த அளவு இரணியன் தனி ஒருவனாக பிரபஞ்சத்தையே ஆட்டி வைத்துக்கொண்டிருந்தான்.

தன்னையும் தன் வரத்தையும் நம்பிய இரணியன் அழிந்ததும் , பகவானை நம்பிய பிரகலாதன் வாழ்ந்ததும் அக்காலமல்ல வருங்காலமல்ல எல்லாக் காலத்திலும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய தத்துவங்கள்.

அந்தப் பெரும் தத்துவத்தை போதித்தபடி அந்தச் சிங்கம்பெருமாள் கோவிலில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார் பாடலாத்ரி நரசிம்மர், ஆவணியில் வணங்க வேண்டிய கோவில் அது.

முடிந்தவர்கள் முயற்சிக்கலாம். விரும்பியோர் மனதால் பிரகலாதன் போல் நினைத்து கொண்டால் அந்த நரசிம்மரே உங்களை அங்கு அழைத்து பகை முடித்து நீங்கள் வேண்டியன எல்லாம் தருவார். இது சத்தியம்.

நரசிம்மர் ஆலயங்கள் 02 : சிங்கிரிக்குடி நரசிம்மர் ஆலயம்.

கடலூர் அருகே பாண்டிச்சேரியினை அண்மித்திருக்கும் ஊர் அபிஷேகப்பாக்கம். அங்குதான் சிங்கிரிக்குடி ஆலயம் என நரசிம்மர் குடியிருக்கும் ஆலயம் அமைந்துள்ளது. சிங்கர் குடி எனும் பெயர் சிங்கிரிக்குடி என மருவினாலும் அது நரசிம்மரின் தனிப்பெரும் ஆலயமாக அங்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கின்றது, இந்தத் தலத்துக்கு கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்றும் பெயர்.

இந்தத் தலத்தின் வரலாறு சூரிய குலத்தின் மன்னன் நேமி சக்கரவர்த்தியிடம் இருந்து தொடங்குகின்றது. அவன் மாபெரும் மன்னனாக இருந்தும் இன்னும் இன்னும் அதிக சக்திகள் வரங்கள் பெற பெரும் யாகம் செய்ய முயன்றான் அதாவது எல்லாவற்றையும் எக்காலமும் ஆளும் பெரிய ஆசை அவனிடம் இருந்தது.

அவன் அந்த யாகத்தை நடத்த சரியான முனிவர் என அவன் வஷிஷ்டரை தேர்ந்தெடுத்து அழைப்பும் விடுத்தான். ஆனால், அவன் உள்நோக்கம் அறிந்த வசிஷ்டர் அந்த யாகம் செய்ய சம்மதிக்கவில்லை.

ஆனாலும், அவன் கௌசிக முனிவரைக் கொண்டு அந்த யாகத்தை செய்து முடித்து பெரிய வரம் பெற்றான், பல வரங்கள் பெற்றவன் தனக்கு யாகம் செய்து தராத வசிஷ்டர் மேல் வன்மம் கொண்டிருந்தான்.

வசிஷ்டருக்கு அவன்மேல் வன்மம் ஏதுமில்லை என்பதால் ஒருமுறை அவனைச் சந்திக்கச் சென்றார், அவனோ அவரைச் சந்திக்க மறுத்துவிட்டான், அவன் அகங்காரம் அப்படி இருந்தது.

வசிஷ்டர் அவன் உடல் வேறு, ஆன்மா வேறு எனப் பிரிய சாபம் கொடுத்தார், அவன் ஆத்மா பிரிந்து இலக்கின்றி அலைந்தது. ஆனால், அவன் சக்தி பல பெற்றிருந்ததால் அதே சாபத்தை வசிஷடருக்கும் கொடுத்தான்.

அந்தச் சாபம் வசிஷ்டரைத் தாக்க அவர் பிரம்மனைச் சரண்டைந்தார், பிரம்ம தேவன் இருவரையும் அழைத்துச் சாபம் தீர்க்க சிங்கர் குடியில் இருக்கும் நரசிம்மரிடம் சரண் அடையச் சொன்னார்.

அதன்படி வசிஷ்டரும் நேமி மன்னனும் ஆத்ம வடிவில் அங்கு வந்து நரசிம்மரை வேண்டினார்கள், அவர்கள் வேண்டுதலுக்கு நரசிம்மர் காட்சிக் கொடுத்து சாபம் தீர்த்தார்.

நரசிம்மரைக் கண்ட நேமி மன்னன் இனி தான் பக்தர்கள் வடிவிலே பரமனைத் தொழுவதாகச் சொல்லிப் பணிந்தான், வசிஷ்டரின் சாபம் தீர்ந்து அவரும் தன் உடலைப் பெற்றார்.

இருவரின் சாபம் போக்க நரசிம்மர் தன் முழு விஸ்வரூபக் கோலத்தை காட்டிய தலம் இது, ஒரு வகையில் அவர்கள் இருவரின் அகங்காரத்தையும் போக்கி வரமருளிய தலமும் இதுதான்.

வசிஷ்டருக்கு தான் பிரகலாதனுக்காக எப்படி 16 கரங்களோடு பகவான் வந்தாரோ அதே கோலத்துடன் வசிஷ்டருக்கும் அவர் காட்சி கொடுத்த தலம் இது.

இந்தக் கோலத்தில் வேறேங்கும் நரசிம்மரைக் காணமுடியாது. இராஜஸ்தானில் மட்டும் ஒரே ஒரு நரசிம்மர் ஆலயம், இந்த 16 கரங்கள் கொண்ட கோலத்தில் உண்டு. வேறு எங்குமில்லை.

வசிஷ்டர் மட்டுமல்ல அவருக்கு முன்பே பிரகலாதனும் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டிருந்தான்.

இங்கு நரசிம்ம மூர்த்தி பதினாறு கரங்களுடன் உக்கிரமாகக் காட்சியளிக்கிறார். உக்கிரமான பார்வையுடன் கோரபற்களுடன் அவர் அருளாசி வழங்குவார்.

பதினாறு கரங்களில் ஐந்து கரங்கள் ஹிரண்யகசிபுவை கொல்வது போன்றும், மூன்று கரங்கள் பக்தர்களைக் காப்பது போலவும் அமைந்திருக்கும். அவருடைய இடது கரம் அந்த அரக்கனுடைய தலையைத் தம் மடி மீது அழுத்துவது போன்றும், மற்றொரு வலது கரம் அசுரனுடைய தொடையை அழுத்துவது போன்றும், மற்ற கரங்களினால் அரக்கனுடைய கால்களை நன்றாக அழுத்தி மடித்திருப்பது போன்றும், மற்ற இரு கரங்களினால் இரண்யனுடைய மார்பைக் கிழித்து கொல்வதுமாக நரசிம்மரின் கைகள் அமைந்திருக்கும்.

வலது மேல்கை அபய முத்திரையாகவும், தன்னுடைய பக்தர்களைக் காப்பது போன்றும், இடது மேல்கை அவருடைய அவதார ரூபத்தை உணர்த்துவதாகவும், வலது திருக்கரத்தால் அவருடைய அன்பிற்குரிய குழந்தை பிரகலாதனை ஆசீர்வதிப்பது போலவும், மற்ற கரங்களில் சங்கு சக்கரம் உட்பட பலவிதமான ஆயுதங்களை ஏந்தியிருப்பது போலவும் காட்சித் தருகின்றார்.

மூலவருக்குக் கீழே இரணியன் வதம் செய்யப்பட, இடதுபுறம் மனைவி நீலாவதியும், வலப்புறம் பிரகலாதன், வசிஷ்டர், சுக்கிரன், நேமி மன்னன் எனப் பலர் காணப்படுவார்கள்.

இரணியனைப் பகவான் அழித்துப்போட்ட அந்த முழுக் காட்சியினை தத்ரூபமாக இங்குதான் காணமுடியும், முழு ஹிரண்யவதத்தை அப்படியே சொல்லும் நரசிம்மர் இவர்தான்.

இந்தக் கோயிலில் ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிக்கிறார்கள். 16 கரங்களுடன் உக்கிர நரசிம்மர் காட்சியளிக்கின்றார்; அவர் அருகில் பால நரசிம்மர்; யோக நரசிம்மர் என இன்னும் இரு நரசிம்மர்கள் உண்டு.

அதாவது அவர் ஹிரண்யனுக்கு உக்கிர நரசிம்மர், பிரகலாதனுக்குப் பால நரசிம்மர், யோகத்தில் தன்னைக் கண்டோர்க்கு யோக நரசிம்மர் என மூன்றுவடிவங்களைக் காட்டுகின்றார்.

அவர் அகங்காரம் கொண்டோர்க்கு உக்கிர நரசிம்மர், தன்னை நம்புவோர்க்கு பால நரசிம்மர், தன் அடியார்கு யோக நரசிம்மர் அதாவது அமைதியில் தன்னைக் காணும் நரசிம்மர் எனத் தத்துவங்களைக் கொண்டிருக்கும் கருவறை இது.

வேறேங்கும் இந்தச் சிறப்பு இல்லை.

வைஷ்ணவ ஆகமவிதிகளின் படி இக்கோவிலின் எல்லாப் பூஜைகளும் நடைபெறும்.

இந்த ஆலய சிலையும், கருவறையும் மிக மிகப் பழமையானது. பின்னாளில் இதனைச் சோழமன்னர்கள் கட்டினார்கள், இராஜராஜசோழன் இதற்குத் திருப்பணி செய்திருக்கின்றார்.

நாயக்க மன்னர்களில் சிறந்தவரான கிருஷ்ண தேவராயர் இங்குப் பல திருப்பணிகளைச் செய்திருக்கின்றார், அப்போதுதான் ஆண்டாள் சந்நிதியெல்லாம் கட்டப்பட்டது.

பின்னாளில் மராட்டியர், பிரிட்டிஷார், ஆற்காடு நவாப் போன்றோரும் பணிகள் செய்துள்ளனர். அரியூர் ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என இதனை குறித்துப் பாடுகின்றார்.

இந்தக் கோயில் மேற்கு திசை நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து சென்றால் இடது புறம் வேப்ப மரத்தடியில் சிறிய விஷ்ணு துர்க்கை சந்நிதியும் வலதுபுறம் நாகர் சந்நிதியும் உள்ளன.

இந்தச் சந்நிதிக்கு அருகில் ஒரு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. அடுத்துக் கிழக்கு திசை நோக்கியவாறு விநாயகர் உண்டு.

உள்ளே த்வஜஸ்தம்பம், பலிபீடம் மற்றும் தனி மண்டபத்தில் கருடாழ்வார் காட்சித் தருகிறார்.

கோயிலின் வடக்கு வெளிச் சுற்றில் ஆண்டாள் தனிச்சந்நிதியிலும், தெற்குச் சுற்றில் கிழக்குத் திசை நோக்கியவாறு கனகவல்லித் தாயாரின் சந்நிதியும் உள்ளன. தாயார் சந்நிதிக்கு அருகிலேயே சீதா, இராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்குச் சந்நிதி உண்டு.

உள் பிரகாரத்தில் விஷ்வக்சேனர், பன்னிரண்டு ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.

சித்திரை, வைகாசி பிரம்மோத்ஸவம் இங்கு விசேஷம், நரசிம்ம ஜெயந்தி நாளில் தேர் திருவிழா சிறப்பானது.

வைகுண்ட ஏகாதசியன்று காலையில் சொர்க்க வாசல் திறப்பு, மாலையில் கருட சேவை எனக் கொண்டாட்டம் உண்டு.

மாசி மாதம் அன்று கடலில் தீர்த்தவாரி உண்டு, புரட்டாசிமாத வழிபாடுகள் இன்னும் விசேஷம்.

இந்த ஆலயம் எல்லாச் சிக்கலையும் தீர்த்துத் தரும் , எதெல்லாம் ஆத்மரீதியாக லௌகீக ரீதியாக இழந்தீர்களோ அதையெல்லாம் திருப்பித் தரும்.

கடன் தொல்லை முதல் எல்லாத் தொல்லையும் நீங்கும், துஷ்ட சக்திகளிடமிருந்து முழுக் காவல் தரும் ஆலயம் இது, கிரகத் தோஷமெல்லாம் நீக்கித் தரும் சக்திவாய்ந்த நரசிம்மர் இவர்.

சனியின் பாதிப்பை ஜாதகத்தில் கொண்டவர்கள் திருவோண நாள் அல்லது ஏகாதசி நாளன்று வழிபடுதல் சிறப்பு.

இன்னும் பரணி அல்லது பூரம் நட்சத்திரத்தன்று குங்குமம் வாங்கிக் கொடுத்து செந்தாமரை மாலை தொடுத்து தரிசனம் செய்தால் வாழ்வில் மங்கலம் பெருகும்.

இங்குப் பூரட்டாதி நட்சத்திரத்தன்று மாம்பழச் சாற்றை அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் புத்திரப்பேறு உண்டாகும்.

சுவாதி மற்றும் சதயம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு வெற்றிலையும், தாமரையும் வைத்து வணங்கினால் திருமண தடை அகலும்.

அனுஷம் மற்றும் பூரட்டாதி நட்சத்திர நாளில் சுவாமியை ஒன்பது முறை வலம் வந்து அங்குள்ள மண்ணை சிக்கல் உள்ள நிலங்களில் வைத்தால் நிலத்தின் தடைகள் வில்லங்கமெல்லாம் அகலும்.

இந்த நரசிம்மருக்கு செவ்வாய்க் கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்வது வழமை, நேர்ச்சை நிறையேறியபின் நரசிம்மருக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாற்றுகிறார்கள். அன்னதானம் கட்டாயம்.

சிங்கிரிக் கோயில், பூவரசன்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று நரசிம்ம தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் துன்பங்கள் அகலும், இவை அருகருகே அமைந்துள்ளன‌.

கடலூர் பக்கம், பாண்டிச்சேரி பக்கம் செல்லும் போது இந்த நரசிம்மரை தரிக்க மறவாதீர்கள், 16 கரங்களோடு உக்கிரமாய் நிற்கும் இந்த நரசிம்மரைப் போல் இன்னொரு நரசிம்மரை எங்கும் காணமுடியாது என்பதால் இது அபூர்வமான ஆலயம்.

இங்கு வசிஷ்ட மகரிஷியினை நினைந்து, பிரகலாதனை நினைந்து உங்கள் பிரச்சினைகளை முன் வையுங்கள், அது எவ்வளவு பெரிய சிக்கல் என்றாலும் யாராலும் தீர்க்கமுடியா மகா சிக்கல் என்றாலும் ஒரு நொடியில் அங்குத் தீரும், எவ்வளவுக்கு நம்பிக்கையாய்ப் பிரகலாதனின் பக்தியில், அவனைப் போன்ற உறுதியில் அந்த நரசிம்மரை அழைப்பீர்களோ அவ்வளவுக்கு உங்களுக்கு அதிசயம் நடக்கும். இது சத்தியம்.

நரசிம்மர் ஆலயங்கள் 03 : பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர்.

“கூடா இரணியனைக் கூர் உகிரால் மார்விடந்த
ஓடா அடலரியை உம்பரார் கோமானை தோடார் நறுந்துழாய் மார்வனை
ஆர்வத்தால் பாடாதார் பாட்டென்றும் பாட்டல்ல கேட்டாமே”

எனத் திருமங்கை ஆழ்வார் பாடியதும்,

“அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதுமே”

எனப் பெரியாழ்வார் பாடியதுமான பெருமை கொண்டவர் நரசிம்ம பெருமான். அப்படியான நரசிம்மருக்கு பெரும் சிறப்பும் பல தோற்றமும் உண்டு. அதனில் ஒன்று லட்சுமி நரசிம்மர் ஆலயம்.

நரசிம்ம அவதாரத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று லட்சுமி நரசிம்மர், அந்தக் கோலம் மற்ற தெய்வங்களுக்கு இல்லாத திருக்கோலம், மற்ற தெய்வங்கள் மனைவியோடு காட்சித்தரும்போது தனித் தனியாகத்தான் காட்சி தருவார்கள். ஆனால், நரசிம்ம அவதாரம் ஒன்றுதான் மனைவியினைத் தன் மடிமேல் வைத்து அணைத்துப் புன்னகைத்தபடி காட்சி தரும்.

இது மங்கல அடையாளம். நரசிம்மம் உக்கிரம் தீர்ந்த நிலையின் அடையாளம். அந்நேரம் என்ன கேட்டாலும் கிடைக்கும் என்பதால் பெரிய வரம் தரும் நேரத்தின் அடையாளம்.

இலட்சுமி நரசிம்ம அவதாரம் மிக முக்கிய கட்டடத்தில் உருவானது. ஹிரண்ய கசிபினை அழித்து போட்டபின்னும் பகவானின் உக்கிரம் குறையவில்லை. மிக மிக ஆவேசமாக அங்குமிங்கும் உருமிக்கொண்டிருந்தார், அவரின் சீற்றம் தணிக்க யாருக்கும் தைரியமில்லை.

பிரகலாதனை அவர் அணைத்துக் கொண்டாலும் ஆத்திரம் அடங்கவில்லை, அப்போது அவரை எப்படி சமாதானப்படுத்துவது என எல்லோரும் பதைபதைத்தார்கள்.

அந்நேரம் பாற்கடலில் பகவான் நெஞ்சிலே வாழும் தேவியினை, மகா லட்சுமியினைத் தியானித்தார்கள், அவளும் அவர்கள் கோரிக்கைக்கு ஏற்ப வந்து நரசிம்மரின் மடியில் அமர்ந்தாள், அவளைக் கண்டதும் நரசிம்மம் அமைதியாயிற்று.

அவள் பார்த்த ஒரு பார்வையிலே நரசிம்மம் கோபம் தணிந்தது, அந்த நிறைவில் அவள் எல்லோரையும் திரும்பி பார்த்தாள் அங்கிருந்த தேவர்களெல்லாம் அன்னைக்கு நன்றி கூறினார்கள்.

தன் அவதார வேலைமுடிந்தபின்பும் உக்கிரமாக இருந்த நரசிம்மத்தை அன்னையே சமாதானம் செய்தாள், அதன் பின்பே நரசிம்மம் வரம் தரும் குளிர்ந்த நிலைக்கு வந்தார். கோபத்தில் இருக்கும் ஒருவர் வரமருள முடியாது, கொதிநிலையில் இருந்து நரசிம்மரைக் குளிர்நிலைக்குக் கொண்டுவந்து வரமருளும் நிலைக்கு இழுத்து வந்தவர் மகலாட்சுமி.

இதனால் மகாலட்சுமியினை முன்னிறுத்தி நரசிம்மரிடம் கேட்கும் எதுவும் கிடைக்காமல் போகாது, மகா லட்சுமியுடன் கேட்கும்போது நரசிம்மம் முழு மனதுடன் நிறைவுடன் வரமருளும்.

இதுதான் லட்சுமி நரசிம்மரின் தத்துவம், இப்படியான லட்சுமி நரசிம்மர் குடியிருக்கும் ஆலயமே பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் ஆலயம்.

இந்தக் காட்சியினை அதாவது அன்னை நரசிம்மம் மடியில் அமர்ந்து அவரைக் குளிர்வித்தக் காட்சியினை சப்தரிஷிகள் காண விரும்பினார்கள்.

அவர்கள் மிகுந்த தவம் செய்து அதைக் கேட்டபோது அக்காட்சியினை அன்னையும் நரசிம்மரும் அவர்களுக்கு வழங்கினார்கள். சப்தரிஷிகள் ஏழுபேரும் லட்சுமி நரசிம்மர் கோலத்தைக் கண்டு ஆனந்தப்பட்ட தலம் இது.

அவர்கள் லட்சுமி நரசிம்மரைத் தரிசித்த இந்த இடத்தில் முன்பு கோவில் இருந்தது. ஆனால், பின்னாளைய குழப்பங்களில் அது சிதலமானது, மீண்டும் அந்தக் கோவில் எழும்ப பகவான் ஒரு திருவிளையாடலை நடத்தினார்.

இரண்யகசிபு போல சாயல் கொண்ட பல்லவ மன்னன் ஒருவனைக் கொண்டே நடத்தினார், அந்தப் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஐந்தாம் நூற்றாண்டுவாக்கில் ஆட்சி செய்து வந்தான்.

அவன் முழுக்கச் சமணம் சார்ந்து ஈர்க்கப்பட்டான், சமணர்கள் அவனை வளைத்துப்போட்டு அவனை முகமூடியாகக் கொண்டு இந்து துவேஷம் செய்தனர். சமணம் ஒன்றே அரசமதம் என்றும் சைவம், வைணவம் உள்ளிட்ட எல்லாமும் தீட்டு, எல்லாமே பாவம், எல்லாமே அழிக்க வேண்டியவை என்றும் அவர்கள் அட்டகாசம் செய்தன‌ர்.

மதுரைக் கூன்பாண்டியன் சமணர்களிடம் சிக்கியது போல் இந்தப் பல்லவ மன்னனும் முழுக்க அவர்களிடம் சிக்கி சனாதன ஒழிப்பைத் தீவிரமாக்கினான்.

அந்தக் காஞ்சியில் ஒரு விஷ்ணுபக்தர் இருந்தார். அவர் பெயர் நரஹரி, அதாவது மானிடரில் விஷ்ணு அம்சமாக அவர் வாழ்ந்து கொண்டிருந்தார், தீவிர பகவான் பக்தர்.

அவர் யாருக்கும் அஞ்சுவதில்லை, பகவான் ஒருவனுக்கே அஞ்சினார். உடல் அழியக்கூடியது ஆத்மா அழிவில்லாதது, அதனால் உடலை உதற பயப்படக் கூடாது, கர்மமே முக்கியம் என மிகத் தீவிரமாக தன் ஆலயப் பணிகளில் பகவான் கைங்கரியத்தினைச் செய்து கொண்டிருந்தார்.

மன்னனின் உத்தரவு இவரையும் எட்டிற்று, அதன்படி அவர் வைஷ்ணவக் கோவிலை இடித்துவிட்டு பகவான் திருமேனியினைச் சிதைத்துவிட்டு சமணராகும்படி கட்டளை வந்தது.

கொதித்த நரஹரி அதெல்லாம் முடியாது என்றார். பகவான் தான் அரசர்கெல்லாம் அரசன், தான் அவரை மட்டுமே சேவிப்பேன் என்று மன்னரின் கட்டளைக்கு அடிபணியமுடியாது எனவும் சொல்லிவிட்டார்.

அவரின் பதிலைக்கேட்டு கொந்தளித்த மன்னர்கள் இது ராஜதுரோகம் என அவரிடம் சொல்லி அந்த நரஹரிக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள்.

அதனை அறிந்த நரஹரி இனி மன்னன் தன்னை வாழவிடமாட்டான், அவனை நேருக்கு நேர் சந்திப்பதே சரி என அவன் சபைக்குச் சென்றார். எல்லோர் முன்னிலையிலும் பகவானின் பெருமையினை உரக்கச் சொன்னார், சமணர்கள் செய்யும் அத்தனை சதிகளையும் சுட்டிக்காட்டி, இந்தச் சனாதானத்தை அழிக்க முயலும் அவர்கள் அழிந்தே போவார்கள் என உரக்கச் சொன்னார்.

சமணர்கள் மன்னனை நோக்க மன்னன் அவரை உடனே கழுவிலேற்றும்படி உத்தரவிட்டான். வீரர்கள் தன்னை நெருங்கும்போது நரஹரி கடைசியாகச் சொன்னார்.

“மன்னா, உன்னைவிட பெரும் பெரும் அகங்காரிகளையெல்லாம் கண்டவர், கண்டு அடக்கியவர் எம்பெருமான், அவரே இங்கு நித்யகாலமும் மன்னன், அவர் முன்னால் நீ ஒரு தூசு, ஒரு நாள் நீ அவரை உணர்வாய், எல்லா அகங்காரிகளும் அவரிடமே சரணடைவர்.

என்னைக் கொல்ல உத்தரவிட்டுவிட்டாய் நீ, என்னை நானே முடித்துக் கொள்வேன். ஆனால், இனி பிரம்மஹத்தி உன்னைத் தாக்கும், இதோ இந்தச் சமணார் உன்னைக் காக்கட்டும் பார்க்கலாம். அதன்பின்பாவது பகவானை உணர்ந்துகொள்” எனச் சொல்லி கண்களை மூடி காற்றில் ஜோதியாய்க் கரைந்தே போனார்.

மன்னன் அதிர்ந்தான். சபை அதிர்ந்தது. ஆனாலும், சமணர்கள் அவன் மாயக்காரன் அவனால் எங்களை மீறி ஏதும் செய்யமுடியாது என மன்னனை சமாதானப்படுத்தினார்கள்.

ஆனாலும், நரஹரி சொன்னபடி பிரம்மஹத்தி மன்னனைப் பிடித்துக் கொண்டது. அவனுக்கு அது பெரும் தொல்லையினைக் கொடுத்தது, அவனை உண்ணவிடாமல் உறங்கவிடாமல் அது பெரும் தொல்லை கொடுத்தது.

சமணரின் யாகங்கள், மந்திரங்கள் உள்ளிட்ட எதுவும் அதனைத் தடுக்க முடியவில்லை, அந்தப் பிரம்மஹத்தி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிற்று. மன்னன் அரண்மனையே கலங்கிப் போயிற்று.

அவனால் அமரமுடியாது, அமர்ந்தால் யாரோ நாற்காலியினை ஆட்டுவது போலிருக்கும். தரையில் அமர்ந்தால் யாரோ காலை பிடித்து இழுப்பார்கள், படுக்கையில் படுத்தால் பாதாளத்தில் வீழ்ந்தது போல் அவனுக்குத் தோன்றும்.

அவன் ஆடைகளில் துர்நாற்றம் வர அவனே அதைக் கிழித்துக் கொண்டான், அவன் உண்ண அமர்ந்தால் உணவில் புழுக்கள் வண்டுகள் நெளிவது கண்டு அலறி ஓடினான்.

அவன் குதிரைகளெல்லாம் பேய்களாகத் தெரிந்தன, அவன் அரண்மனை மனித கழிவில் நிரம்பியது போல் அவனுக்குத் தோன்றிற்று.

சமணர்கள் இதர மாந்த்ரீகர்கள் எவ்வளவோ முயன்றும் மன்னனை மீட்க முடியவில்லை. மன்னன் தனிமையில் இருக்கும்போது அழுதான். ஆனால், மற்றவர் முன்னிலையில் அவனால் ஒட்டமுடியவில்லை, அவன் மனநலம் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரண்மனையினை விட்டே ஓடிப்போனான்.

நரஹரிக்குச் செய்த பாவங்களுக்கும் கொடுமைக்குமாகக் கண்ணீர்விட்டு அழுதபடி தென்பெண்ணை ஆற்றின் ஓரமாக ஒரு பூவரசு மரத்தடியில் படுத்திருந்தான். இன்னும் சில நாட்களில் மரணம் தன்னைப் பிடித்துக்கொள்ளும் என அவனாக எண்ணிக்கொண்டான் நிலைமையும் அப்படி மோசமாக இருந்தது.

அப்போது அவனுக்கு அசரீரி ஒலி கேட்டது “மன்னா… உன்னைத் தேடி நரஹரி வருவார் அவர் சொன்னதை செய்” என அது உத்தரவிட்டது.

மன்னன் இதுபற்றி சிந்திக்கும் போதே ஒரு பூவரச இலை அவன் மேல் விழுந்தது, இலைபோல் அல்லாமல் கல்போல் அது அவன் நெஞ்சில் சத்தமாய் வலிக்க விழுந்தது.

மன்னன் அந்த இலையினை எடுத்துப் பார்த்தான். பார்த்தவன் அதிர்ந்தே போனான். காரணம், அந்த இலையில் லட்சுமி நரசிம்மர் உருவம் தெள்ளத் தெளிவாக இருந்தது.

அந்நேரம் மன்னர் முன் நரஹரி மீண்டும் தோன்றினார். அவரைக் கண்டதும் வீழ்ந்து வணங்கி பெரும் மன்னிப்பு கோரினான் மன்னன்.

அவர் “உனக்கு மங்கலம் உண்டாகும், இலையில் கண்ட எம்பெருமான் லட்சுமி நரசிம்மர் உருவினை ஸ்தாபித்து கோவில்கட்டி வழிபடு, சனாதனத்தை வாழவிடு, எம்பெருமான் புகழைப்பாடு அவரே நிலையான தெய்வம்” எனச் சொல்லி மறைந்தார்.

அதன்படி மன்னன் எல்லாக் காரியமும் செய்தான். சமண கும்பலை நாட்டைவிட்டே விரட்டினன், அவன் முழுக்க வைஷ்ணவ மதம் தழுவினான். சைவமும் வைஷ்ணவமும் மீள வழி செய்தான். அப்படியே இந்த லட்சுமி நரசிம்மர் கோவிலை கட்டினான்.

பூவரச இலையில் நரசிம்மரை அவன் கண்ட இடம் பூவரசன்குப்பம் என்றாயிற்று, அப்பெயர் நிலைத்தும்விட்டது. இந்த ஆலயத்தை சப்த ரிஷிகள் காலத்துக்கு பின் திரும்ப கட்டியது அவனே.

சமணம் கொடும் தொல்லை செய்த காலங்களில் நரஹரி எனும் தன் உன்னதமான பக்தன் மூலம் பகவான் சமணம் ஒழித்துத் தனக்கும் ஓர் ஆலயம் கட்டிக்கொண்டார்.

இந்த ஆலயம் பல்லவர் காலம், சோழர்காலம் என எல்லாக் காலத்திலும் விசேஷமாக இருந்தது. பின்னாளில், நாயக்க அரசு இங்கே எழும்போது இது அவர்களுக்கும் காவலாயிற்று.

நாயக்கர்கள் நரசிம்ம பக்தி மிக்கவர்கள், அப்படி இங்கோர் மன்னன் இருந்தான், அவனுக்கு அக்கால பாமினி சுல்தான்களால் தொல்லை இருந்தது, அவன் ஆட்சி செய்த பகுதி மிரட்டலுக்குள்ளானது.

அவன் இந்த நரசிம்மர் ஆலயத்தில் நாற்பத்தி எட்டு நாள் கடும் விரதமிருந்தான், அந்த நோன்பு முடிந்ததும் பெரும் பலமும் தெளிவான சிந்தனையும் கொண்டு எதிரிகளைப் பந்தாடி தன்நாட்டை மீட்டுக்கொண்டான், அவன் பெயரே பூவரசன் என்றாயிற்று.

அவன் இக்கோவிலுக்குப் பெரும் திருப்பணி செய்தான். பின்னாளில் மராட்டியர் உள்ளிட்ட பலர் இந்த நரசிம்மரை வணங்கி திருப்பணி செய்தார்கள்.

தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் கிழக்கு திசை நோக்கிக் கம்பீரச் சிறப்புடன் எழுந்து நிற்கின்றது இந்த ஆலயம்.

அந்த ல‌ட்சுமி நரசிம்மர் காண்போரை வசீகரிக்கும் விதமாக கொள்ளை அழகுடன் அருள்பாலிக்கின்றார், அவரின் பின்புறக் கைகள் சங்கும், சக்கரமும் தாங்கிகொண்டிருக்க, முன்புற இடக் கையால் அன்னை அமிர்தவல்லி என்று அழைக்கப்படும் மகாலட்சுமியினை அணைத்தபடி இருக்க, வலக்கையால் அருள் வாரி வழங்குகிறார் நரசிம்ம பெருமான்.

இடக்காலை மடக்கி மடி மீது மகாலட்சுமியை அமர்த்திக் கொண்டுள்ளார். தாமரை மலரொன்று கீழே தொங்க விடப்பட்டிருக்கும் வலக் காலைத் தாங்கி நிற்கின்ற‌து.

அவர் மடியிலிருக்கும் அமிர்தவல்லி தாயார், வலக்கரத்தால் அவரை அன்புடன் அணைத்துக் கொண்டிருக்க இடது கையில் தாமரையினை ஏந்தியுள்ளார்.

அன்னை அமிர்தவல்லி ஒரு கண்ணால் கணவர் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் சந்நிதி முன் நிற்போரையும் காண்கின்றாள். அதாவது, சப்தரிஷிகளுக்குக் காட்சி கொடுத்த அதே கோலத்தில் இங்கு அருள் பாலிக்கின்றாள்.

இலட்சுமியும் நரசிம்மரும் ஒரே உயரத்தில் காட்சியளிக்கின்றனர். இது இங்குமட்டும் காணப்படும் சிறப்பு.

அந்த நரசிம்ம‌ சந்நிதியின் எதிரே கருடாழ்வாரும், தென்புறம் ஆஞ்சநேயரும் வணங்கிய நிலையில் காணப்படுகின்றனர்.

மகா மண்டபத்தின் மேற்புறம் மேற்கில் அவதாரச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிந்தை கவரும் சீரிய கலை நுணுக்கங்கள் கொண்ட பல சிற்பங்களும் உள்ளன.

ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள உன்னதச் சிற்பங்கள் பல்லவர் மற்றும் விஜயநகரப் பேரரசின் சிற்பகலைக்கு எடுத்துகாட்டாய் நிற்கின்றது.

வடகிழக்கு மூலையில் லட்சுமி தேவிக்கு (அமிர்தவல்லி தாயார்) தனிச் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கின்றார். பிரகாரத்தினுள் இராமானுஜர், நாகர் சந்நிதியும் இருக்கிறது. பிரகாரத்தின் வாயு மூலையில் அனுமன் சந்நிதியும், வடக்கே வரதராஜப்பெருமாள், தென்கிழக்கே தும்பிக்கை ஆண்டவர் எனும் விநாயகரின் தனித்தனி சந்நிதிகள் உண்டு.

இங்குத் தொடக்கத்தில் நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்டதால் தூணும் வழிபாடு செய்யப்படும், நரசிம்மரின் திருவுருவம் இருந்தாலும் அங்குத் தூண் மறக்கப்படுவதில்லை, ஆதிமூலம் என அதுவும் வணங்கப்படுகின்றது.

இதையடுத்து அந்தத் தூண் ஹோம மண்டபம் பகுதியில் வைத்துள்ளனர். இக்கோயிலின் ஸ்தலவிருட்சம் நெல்லி மரம், அங்குள்ள தீர்த்தம் சக்கர தீர்த்தமாகும்.

இந்த ஆலயம் மகா சக்தி மிக்கது, எவ்வளவுக்கு என்றால் நினைத்த எல்லாமும் நடத்தித் தரும், தன்னை மீட்டு தன் பக்தர்கள் குறையும் தீர்த்து தரும் ஆலயம்.

இக்கோவிலில் அற்புதங்கள் பல்லவர் காலத்தில் மட்டும் நடந்தது அல்ல, நாயக்கர் காலத்தில் மட்டுமல்ல எப்போதும் அடிக்கடி அற்புதங்களைத் தரும் கோவில் இது.

அப்படி 2004 ஆம் ஆண்டு ஒரு அதிசயம் நடந்தது. 2004 இல் இந்த பூவரசங்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் ஆண்டாள் சந்நிதி நிர்மாணிக்க நிலத்தைத் தோண்டும் போது பூமிக் கடியில் இருந்து ஸ்ரீ வரதராஜ பெருமாளின் உற்சவத் திருமேனி ஒன்று கண்டெடுக்கப்பட்டது

முழுப் பௌர்ணமியான அந்நாளில் கும்பகோணத்தில் வரதராஜ பெருமாள் தீர்த்தவாரிக்காக எழுந்தருளினார், அவர் எழும்பிய அந்தச் சரியான பொழுதில் இங்கு மறைந்திருந்த வரதராஜர் மண்ணிலிருந்து வெளிப்பட்டார். இன்றும் அந்த வரதராஜர் இந்த ஆலயத்தில் உண்டு, மிகச் சக்திவாய்ந்தவர் அவர்.

இங்கு எல்லா வரங்களும் கைக்கூடும் ஆலயம் இது, இதனால் தென்னக அஹோபிலம் என அழைக்கப்படுகின்றது.

அஹோபிலம் என்பது நரசிம்மருக்கான பெரும் ஷேத்திரங்கள் நிரம்பிய ஆந்திரமாநிலத்தின் பிரதான நரசிம்ம ஆலயம், அஹோபிலம் என்றால் சிம்மக்குகை எனப் பொருள்படும், அப்பக்கம் அஹோபிலம் பிரசித்தி.

இந்தப் பூவரசன்குப்பம் நரசிம்மர் அந்த அஹோபில நரசிம்மர் போல் சக்திவாய்ந்தவர், அங்குச் செல்லமுடியாதவர்கள் இங்கு இவரை வழிபட்டு வேண்டியன பெறலாம்.

இந்த ஆலயம் எல்லா வரங்களையும் தரும். குறிப்பாக, மணவாழ்வில் இனிமை தரும்; நல்ல குழந்தைகளைத் தரும்; கடன் தொல்லை ஒழிக்கும். இன்னும, பகைவர் தொல்லை எல்லாமும் தகர்த்து முழுக் காவல் தரும்.

தன்னை நம்பி இங்குப் பணிவோர்க்கு நரசிம்மரும் அன்னையும் எல்லா நலன்களையும் தருவார்கள். அன்னையின் கடைக்கண் காட்சி நரசிம்மர் அருளோடு கிடைக்கும் நேரம் எல்லாமும் நலமாகும்.

விழுப்புரம் பக்கம் செல்லும்போது மிகக் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய நரசிம்மர் ஆலயம் இந்த “தென்னக அஹோபில நரசிம்மர்”. அங்குச் சென்றுவழிபட்டால் உங்கள் வாழ்வே மாறும், இழந்ததை எல்லாம் மீட்டுத்தரும் ஆலயம் இது.

மிக மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சிங்கிரிக்குடி ஆலயம், இந்த பூவரசன்குப்பம் ஆலயம், பரிக்கல் நரசிம்மர் ஆலயம் என மூன்றும் மிகத் துல்லியமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும். இது அக்காலத்திலே எப்படி இவ்வளவு துல்லியமாக அமைந்தது என்பது ஆச்சரியம்.

சிங்கிரிக்குடி ஆலயத்தைக் காலையிலும், இந்த பூவரசன்குப்பத்தை மதியமும், பரிக்கல் நரசிம்மரை மாலையிலும் ஒரே நாளில் தரிசித்தால் வாழ்க்கை நேராகும். முக்தி வழி நேராகும். பகவானுக்கும் நமக்குமான வழி நேராகும். பகவானின் நேரடிப்பார்வையில் நாம் இருப்போம் என்பதைத் துல்லியமாகச் சொல்லும் ஆலய நுட்பம் இது.

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் உங்கள் வாழ்வை லட்சுமி கடாட்சமாக, சுபிட்சமாக, பெரும் காவலும் அருளும் கொண்ட வாழ்வாக மாற்றுவார். அவரைச் சந்திக்கும் பொழுதில் அதுவரை நீங்கள் சந்தித்த வாழ்வின் கொதிநிலைகள், உக்கிர சூழல்கள், பெரும் பெரும் அக்னிரூப சிக்கலல்கள், நெருப்பாறுகளெல்லாம் கடந்து மிகக் குளிர்ந்த நிம்மதியான சூழலை வாழ்வில் உணர்வீர்கள். சென்று வணங்கிப்பாருங்கள். அற்புதத்தை உணர்வீர்கள்.

நரசிம்மர் ஆலயங்கள் 04 : பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அருகில் உள்ள பரிக்கல் கிராமத்தில் அமைந்திருக்கின்றது இந்த ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில்.

இந்தக் கோவிலின் வரலாறு பரிகலாசூரன் என்பவனிடமிருந்து தொடங்குகின்றது. அவனே திரிபுரங்கள் எனும் மூன்று கோட்டைகளைக் கட்டி ஆண்ட அசுரர்களின் தளபதியாக இருந்தான்.

திரிபுரத்தைச் சிவன் தலைமையில் தேவர்களெல்லாம் கூடி எரித்து அந்த மூன்று அசுரர்களையும் ஒழித்துப் போட்டபோது அந்த வித்யுந்மாலி, தாரகாக்ரன், கமலாசுரன் என மூவரையும் ஒழித்தபோது அவன் தப்பி ஓடினான்.

தப்பி ஓடியவன் பூலோகத்தில் ஆங்காங்கே தொல்லை கொடுத்து வந்தான். அப்படி வசந்தராஜன் எனும் மன்னனுக்குப் பெரும் தொல்லை கொடுத்தான்.

வசந்தராஜன் நரசிம்மர் பக்தனாய் இருந்தான். தனது இராஜ்ஜியத்துகாகவும் மக்களுக்காகவும் பெரும் யாகங்களைச் செய்தவன், நரசிம்மருக்கும் யாகம் செய்ய ஏற்பாடு செய்தான்.

அதனைத் தடுக்க தானே நேரில் வந்தான் பரிகலாசூரன். அவனை எதிர்கொள்ள தயங்கிய வசந்தராஜன் நரசிம்மரிடமே தஞ்சமடைந்தான்.

எந்த நரசிம்மருக்கான யாகத்தை இவன் செய்தால் பலன் பெற்றுவிடுவான் என பரிகலாசூரன் அஞ்சினானோ அந்த நரசிம்மரிடம் யாகம் செய்யமுடியா நிலையில் மன்றாடினான் வசந்தராஜன்.

அப்போது அவனுடைய குரு கையில் கங்கணம் கட்டி, “அராக்ஷ்ர அமிர்தாக்ஷ்ர” எனத் தொடங்கும் மந்திரத்தை உபதேசித்தார். அதை உச்சரித்தவாறு நரசிம்மரை நோக்கி அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தான்.

தியான நிலையில் இருந்த அவனை அழிக்க தன் கோடரியினைப் பரிகலாசூரன் வீச முயன்றபோது தன் பக்தனைக் காக்க நரசிம்மமாக பகவானே வந்தார்.

பிரகலாதனுக்காக நேரில் தூணில் இருந்து வந்த நரசிம்மம் இங்கு வசந்தராஜனைக் காக்க மீண்டும் வந்து பரிகலாசூரனை அழித்துப் போட்டார்.

அந்த ஆவேசத்தில் உக்கிரகோலத்தில் அவன் முன் நின்றார், அவரை நன்றிபரவசத்துடன் மன்னன் மண்டியிட்டு வணங்கினான். கண்கள் பனிக்க அவரிடம் வேண்டினான். “பகவானே, இந்த அருள் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும், தங்களை நாடி வரும் பக்கதர்களின் குறை தீர சாந்த நரசிம்மராக தாயாருடன் இங்குக் கோவில் கொண்டு அமர்ந்து அருள வேண்டும்” என வேண்டினான்.

அவன் கோரிக்கையினை ஏற்று வரமருளினார் நரசிம்மர். அப்போதே அவர் மடியில் அன்னையும் வந்து அமர லட்சுமி நரசிம்மராக அவனுக்கு ஆசிவழங்கி மறைந்தார் பகவான்.

மனம் குளிர்ந்த மன்னன் நரசிம்மருக்குக் கோயில் கட்டினான். தேவசிற்பியான விஸ்வகர்மா லட்சுமி நரசிம்மர் சிலையினை மிக மிக அழகாக செதுக்கிக் கொடுத்தான். அதிலிருந்து இக்கோவில் துலங்க தொடங்கிற்று.

பரிகலாசூரனைப் பகவான் வதம் செய்த இடம் என்பதாலிது அவன் பெயரில் பரிகலா தலம் என்றாகி பின் பரிக்கலாகிவிட்டது.

(இதனை வேறுவிதமாகவும் சொல்வார்கள், இக்கோவிலில் பகவான் எழுந்தருளிய பின் அவரை பிரஹலாதன் பெயருடன் பிரஹலா பிரஹலா எனச் சொல்லி வணங்கி, அந்தப் ப்ரஹலா எனும் பெயரே பரிக்கல் ஆயிற்று எனும் குறிப்பும் உண்டு.)

இந்தப் பரிக்கல் ஆலயம் மகா தொன்மையானது. பல்லவரும், சோழர்களும் மாறி மாறி திருப்பணி செய்த ஆலயம் இது.

இங்கு வியாசர் வழிபட்டிருக்கின்றார். ஆலய கருவறைக்குள் உள்ள ஆஞசநேயர் அவரால் ஸ்தாபனம் செய்யப்பட்டவர். சக்தி கொண்டவர்.

சமண பௌத்த குழப்பமான இருண்ட காலங்களில் இந்த ஆலயம் நலிந்துபோனது, அப்போது சிறிய ஆலயமாக இருந்த இந்த ஆலயம் புதரும் புற்றுமாகிப் போனது.

அந்நேரம் இந்த ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தில் வாய் பேச முடியாதவரின் கனவில் தோன்றிய பகவான், “அன்பனே, நரசிம்மர் விக்கிரகம் புற்றில் மறைந்திருக்கிறது. அதை எடுத்துப் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்’ என அசரீரியாகச் சொல்லி அருளினார்.

அதுவரை வாய்பேசமுடியாதவன் இதனைச் சொல்லி முதன் முறையாக பேச ஊரே அதிர்ந்துபோனது, அப்படியே புற்றின் நடுவில் இருந்த லட்சுமி நரசிம்மர் மீண்டும் வெளிபட்டார்.

அதன் பின் மன்னர்களின் பராமரிப்பில் மீண்டும் துலங்கிய ஆலயம் காலத்தால் பின்னடைந்தபோது மத்வ பீடத்தைச் சேர்ந்த வியாசராஜ சுவாமிகளின் முயற்சியால் இந்த ஆலயம் மீண்டும் துலங்கிற்று.

அவர் அமைத்த 278 ஆஞ்சநேயர் சிலைகளில் இங்கு இருக்கும் ஆஞ்சநேயரும் ஒருவர். வியாசர் ஸ்தாபித்த அந்த ஆஞ்சநேயரோடு இதுவும் சேர்ந்து இரட்டை ஆஞ்சநேயராக உண்டு, இது எங்குமில்லாத விசேஷம். இங்கு மட்டும் சாத்தியம்.

மூலஸ்தானத்தில் லட்சுமி நரசிம்மரும், தனிச் சந்நிதியில் ஸ்ரீகனகவல்லித் தாயாரும் அருள்பாலிக்கின்றனர். தன் மடியில் லக்ஷ்மி தாயாரை அமர்த்திக் கொண்டு அருள் பாலிக்கின்றார்.

உலகிலே இத்தலத்தில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர்.

பிரகாரத்தின் வாயு மூலையில் வாயுமைந்தனான அனுமன், வீர ஆஞ்சநேயராகவும், பக்த ஆஞ்சநேயராகவும் அருள்பாலிக்கிறார்.

பக்தர்கள் இவருக்கு முன்னால் நவதானியம் மற்றும் நெல்லை கொட்டி அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதி வழிபாடு செய்கின்றனர். இந்த வழிபாடு நிச்சயம் பலிக்கும்.

இந்த லட்சுமி நரசிம்மர் பலருக்குக் குல தெய்வமாகக் கொண்டாடப்படுகிறார்.

இத்தலத்தில் வருடத்தில் 12 மாதங்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசியில் நரசிம்ம ஜெயந்தி நடத்தப்படுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த பலர் இத்தல நரசிம்மரை குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

அதனால் இங்கு தெலுங்கு வருடப் பிறப்பு இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர தினத்தன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

இந்த லட்சுமி நரசிம்மருக்குச் சூரியன், செவ்வாய், சனி, சுக்ரன் ஆகிய கிரகங்கள் வழிபாடு செய்து வருவது உண்டு, காலம் காலமாக உண்டு. இதனால் சில நட்சத்திரங்களின் நாள் விசேஷமான பலனைத் தரும்.

அனுஷம் நட்சத்திரம் அல்லது உத்திரட்டாதி நட்சத்திரம் அன்று எட்டு நீர் குளத்தில் புனிதநீரை எடுத்துவந்து அதனைச் சுவாமிக்கு அபிஷேகம் செய்து அந்த நீரை வாங்கி வந்து வீட்டில் தெளித்தாலோ அல்லது ஒரு சிறு கலயத்தில் போட்டு உத்திரத்தில் வைத்தால் வீட்டில் ஏழ்மை மறையும்.

பூரம், விசாகம் நட்சத்திர நாளில் மூன்று நீர் நிலைகளில் நீர் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து நீல நிற சங்கு பூவை இருபத்தி நான்கு பூக்களாக எடுத்து மாலை தொடுத்து சுவாமிக்குச் சாற்ற வேண்டும், இது சுபகாரியங்களுக்கான எந்த தடையினையும் நீக்கும் பரிகாரம்.

பரணி, பூராடம் நட்சத்திர நாளில் அத்திப்பழ பிரசாதம் செய்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்து, கன்னிப் பெண்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் தானம் கொடுத்து அவர்களின் ஆசி பெற்றால் குபேர சம்பத்து உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தின் நீல நிற சங்கு பூவை சாற்றி, சுவாமிக்கு அத்திப்பழ பிரசாதம் கொடுத்தால் திருமணத் தடை விலகும், சொத்து பிரச்னை தீரும், நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வரும்

வெள்ளிக்கிழமை வரும் ஏகாதசி திதி அன்று மாங்கல்ய காணிக்கை செலுத்தினால் தம்பதியர் இடையேயான பிரச்னைகளில் தீர்வுகள் உண்டாகும்

மேஷம் லக்னக்காரர்கள் அவிட்டம் நட்சத்திர நாளில் கோயிலுக்கு ஆடு கொடுத்தால் எந்த பிரச்னை இருந்தாலும் தீரும், இந்த நேர்ச்சையும் இங்கு உண்டு.

இங்கு வழிபட்டால் வேலையில் உயர்வு, திருமணத் தடைகள் தீருவது, இன்னும் மன நல பாதிப்பும் தீரும்.

இங்கிருக்கும் லட்சுமிநரசிம்மர் தேவதச்சன் விஸ்வகர்மாவால் செய்யப்பட்டது. தனி அழகும் சக்தியும் கொண்டது. அன்னை நரசிம்மரை அணைத்திருக்கும் காட்சிக் கொண்ட ஒரே நரசிம்மர் ஆலயம் இதுதான்.

இங்கிருக்கும் இரு விநாயகரும் சக்திவாய்ந்தவர்கள், வியாசப்பெருமானால் அமைக்கப்பட்ட அனுமனும் மத்வமுனி கொடுத்த அனுமனும் எல்லா நலன்களையும் அருள்வார்கள்.

இந்த ஆலயம் பூவரசன்குப்பம், சிங்கிரிக்குடி என இதர நரசிம்ம ஆலயங்களுடன் ஒரே நேர்கோட்டில் இருப்பதுதான் அந்த திரிபுரத்தை எரித்த புராணத்துடன் பொருந்தி வருகின்றது.

அந்த மூன்று கோட்டைகளும் ஒரே கோட்டில் வரும்போதுதான் அவற்றை அழிக்கமுடியும், அப்படி அவை அழிந்தது.

திரிபுரம் என்பது கோட்டை எனச் சொல்லப்பட்டாலும் உண்மையில் அது ஆணவம், கண்மம், மாயை எனும் மூன்று குணங்களைக் குறிப்பது.

“அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்க்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே”

என்பது திருமூலர் பாடல்.

இந்த மூன்று ஆலயங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது இந்த மூன்றிலும் பகவான் மும்மலங்களை எரிப்பார் அழிப்பார் என்பதும், ரஜஸ் தமஸ் சத்வ குணம் எனும் முக்குணங்களை ஒழிப்பார் எனும் தாத்பரியமாகும்.

அவ்வகையில் இது ஆழ்ந்த தத்துவமும் வரமும் தரும் ஆலயம்.

இந்த மூன்று ஆலயமும் அன்றே நேர்கோட்டில் அமைந்த தத்துவம் அதுதான், முப்புரங்களின் தளபதியான பரிகலாசூரன் இங்கு அழிக்கப்பட்டதும் அப்படித்தான்.

இந்த மூன்று ஆலயங்களில் வணங்குவோர்க்கு முக்தி சாத்தியம். மறுமையில் பெரும் நிம்மதியும் மோட்சபாக்கியமும் உண்டு.

இம்மையில் இந்த மூன்று ஆலயங்களும் கல்வி, செல்வம், தைரியம் என மூன்றையும் அள்ளித் தந்து பெருவாழ்வு வாழவைக்கும், ஒரே நாளில் காலை சிங்கிக்கிரி குடி, மதியம் பூவரசங்குப்பம், மாலை பரிக்கல் என வணங்குவோர்க்கு கல்வி அறிவு செல்வம், அரச செல்வம், தைரியம் எனும் பெரும் காவல் என மூன்றும் கிடைக்கும். அந்த ஆலய வரலாறும் அது அமைந்திருக்கும் நேர்கோட்டு தத்துவமும் அதையே சொல்கின்றது.

வாழ்வின் வக்கிர வினைகளை எல்லாம் அழித்து வாழ்வை சீராக நேராக மாற்றித்தரும் ஆலயங்கள் இவை. இங்கு நரசிம்மர் எக்காலமும் உண்டு. பெரிதாக வலுவாக அருளாக ஆட்சி செய்யும் செங்கோல் உண்டு. அங்குப் பிரஹலாதனாய்ப் பணிந்து பலன் அடைபவர்கள் பாக்கியசாலிகள், அங்கு வழிபடுவோர்க்கு நரசிம்மரின் பூரண அருள் பரிபூரணமாய்க் கிடைக்கும். இது சத்தியம்.

நரசிம்மர் ஆலயங்கள் 05 : அந்திலி லட்சுமி நரசிம்மர் ஆலயம்.

விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் பக்கம் தென்பண்ணை ஆற்றின் ஓரமாக அமைந்திருக்கின்றது இந்த அந்திலி நரசிம்மர் ஆலயம். இது சக்திவாய்ந்த நரசிம்மர் தலம்.

திருக்கோவிலூரில்தான் ஆழ்வார்களின் முதல் மூவரை பகவான் ஒருசேர ஆட்கொண்டார், அந்தப் புண்ணிய தலத்தின் அருகில் அமைந்திருக்கின்றது நரசிம்மருக்கான இத்தலம்.

இதன் வரலாறு பகவானின் வாகனமான கருடனிலிருந்து தொடங்குகின்றது, கருடாழ்வார் இல்லாமல் பகவான் எங்கும் சென்றதில்லை, அவருடன் இரண்டறக் கலந்திருப்பது அந்தக் கருடன்.

பகவான் ஆதிமூலமே எனக் கதறிய கஜேந்திரனைக் காக்கச் செல்லும்போது கூட கருடனில்தான் விரைந்தார். யானையினைக காக்க கருடனில் இருந்து குதித்தோடி வந்து சக்கரம் வீசினார்.

சில அவதாரங்களில் கூட கருடனும் ஒரு அம்சமாக அவருடன் அவதரித்திருந்தது, அப்படியான பந்தம் இருவருக்குமானது.

ஆனால், நரசிம்ம அவதாரத்தின்போது பிரஹலாதனைக் காக்க நரசிம்மர் ஓடிச் சென்று தூணில் இருந்து வெளிப்பட்டார், அங்குக் கருடன் இல்லை, அக்காட்சியினைக் கருடன் காணவுமில்லை.

இதனால் கருடனுக்கு ஒரு மனக்குறைவு ஏற்பட்டது. தனக்கு அக்காட்சி கிடைக்கவில்லையே எனும் சங்கடம் எழுந்தது. தான் ஏதோ பாவம் செய்தோம் எனவும், அதனாலே பகவானின் நரசிம்ம காட்சி தனக்குக் கிடைக்காமல் போனது எனவும் வருந்திய கருடன் அந்தச் சாபம் தீர தவம் செய்ய கிளம்பிற்று.

அதற்கு அது தேர்ந்தெடுத்த இடம் தென்பண்ணை ஆற்றின் இக்கரையில் இருந்த பாறை.

தென்பெண்ணை என்பது கிருஷ்ண பத்ரா எனவும் அழைக்கப்படும், பகவான் வாமனனை அழிக்கும் போது அவர் கமண்டலத்தில் இருந்து சிந்திய துளிகளால் உருவான நதி அது, அதனால் அது மகா புண்ணிய நதியாயிற்று.

அந்த நதியோரம் தன் சாபம் தீர கருடன் தவமிருந்தார்.

அவரின் தவத்துக்காய் பகவான் இறங்கி வந்து தன் நரசிம்ம திருக்கோலம் காட்டினார். தேவியுடன் காட்டினார். அதை மனமார தரிசித்து மகிழ்ந்த கருடாழ்வார் ஒரு வரம் கேட்டார்.

“என் குறை நீக்க இந்தக் கோலத்தில் வந்த எம்பெருமானே, இங்கு வருவோர் எல்லோரின் குறையினை ஐயனே நீர் இக்கோலத்தில் தீர்க்க வேண்டும், முடிவே இல்லாமல் எக்காலமும் வரமருள வேண்டும்” என உருகிக் கேட்டார்.

கருடனின் வேண்டுதலைக் கேட்ட எம்பெருமான் அப்படியே வரமருளினார். அந்தப் பாறையே கருட வடிவமாயிற்று, அதன் மேல் ஆலயம் கண்டு அமர்ந்திருக்கின்றார் பகவான்.

கருடனின் வேண்டுதல்படி அங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசிவழங்கினார். எக்காலமும் பகவான் இங்கு உண்டு. அவருக்கு முடிவே இல்லை அதாவது அந்தமே இல்லை என்பது இங்குத் தாத்பரியம்.

அந்தமே இல்லாத நரசிம்மர் இங்கு அந்திலி நரசிம்மர் என்றானார். அதுமுதல் பக்தர்களுக்கு எல்லையில்லா வரங்களை அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இந்தப் பாறையே கருடன் வடிவில் அமையப்பெற்று கருடனின் தவத்துக்கு இன்றும் சாட்சியாய் நிற்கின்றது.

ஆம், அந்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோயில் அரசமரத்தடியில் சிறகுகளை விரித்துப் பறக்கத் தயாராக உள்ள கருட வடிவிலான சிறிய பாறையின் மீது அமைந்துள்ளதைக் காணலாம்,

இக்கோயிலுக்கு வெளியே திறந்த வெளியில் துவஜஸ்தம்பம் அமைந்துள்ளது. கோயிலுக்குள் செல்லப் பதின்மூன்று படிகள் உள்ளன. கோயிலின் உட்புறம் கருவறையும் மண்டபமும் உள்ளன.

கருவறையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அருளுகின்றார். பின்புறம் உள்ள ஒரு சிறிய குன்றின் மீது ஆஞ்சநேயர் கோயிலும் அமைந்துள்ளது.

இந்தக் கோவில் மகா தொன்மையானது. திருக்கோவிலூர் போலவே மகா தொன்மையான இந்த ஆலயத்தின் கோவில் சுமார் 1800 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. பின்னாளில், பல்லவர் சோழர் என எல்லோரும் திருப்பணிகள் செய்து பெரிதாக்கினார்கள்.

இங்கு எப்போதுமே தன் பக்தர்களை ஈர்த்துக் கொண்டு அதிசயங்களைச் செய்வார் நரசிம்மர், அப்படி அவர் ஈர்த்துக் கொண்ட மகான் ஒருவரே “ஸ்ரீவியாசராஜர்”

மத்வ வழி முனிவரான இவர் சக்திமிக்கவராக இருந்தார். எந்த அளவு சக்திமிக்கவர் என்றால் ஒரு கல்லில் இவர் சிற்ப கோடு வரைந்தால் அது சிலையாக உருப்பெற்றுவிடும், அப்படி எண்ணற்ற அனுமன் சிலைகளை உருவாக்கி ஸ்தாபனம் செய்த மகான் இவர்.

சுமார் 739 அனுமர் சிலைகளை இவர் இப்படி ஸ்தாபனம் செய்தார். அங்காரா கட்டியால் அவர் கோட்டோவியம் வரைந்தால் அது சிலையாகிவிடும்.

அப்படிப்பட்ட மகா சக்தியினை இவர் பகவானிடம் இருந்து தன் பக்தியால் தவத்தால் பெற்றிருந்தார். அவர் இத்தலத்தில் தங்கியிருந்து தவம் செய்து இந்த நரசிம்மரை தன் ஞானக்கண்ணால் கண்டு மகிழ்ந்தவர்.

அவர்தான் இங்கிருக்கும் அனுமாரை ஓவியமாக வரைந்து பின் தன் தவவலிமையால் சிற்பமாக்கி இங்கு ஸ்தாபனம் செய்தவர்.

இந்த “ஸ்ரீவியாசராஜர்” மகானே தன் அடுத்தப் பிறப்பில் ராகவேந்திர சுவாமிகளாக அவதாரம் செய்தார். அவருக்குப் பகவான் தன் திருக்கோலம் காட்டி அனுகிரஹம் செய்த தலம் இது. இங்குச் செய்த திருப்பணியும் தவத்தின் பலமுமே அவருக்கு இன்னும் புண்ணியம் கொடுத்து அவரை அடுத்தப் பிறப்பில் ராகவேந்திரர் எனும் மகானாக அவதரிக்கச் செய்தது.

இங்கு இன்னொரு மிகச்சிறந்த அடியாரும் உண்டு அவர் பெயர் நரசிம்மாச்சார். அவர் சிறந்த வேத விற்பன்னர். இந்த நரசிம்மரை வழிபட்டு நரசிம்ம ஆச்சாரியர் எனும் பெயரே பெற்றவர்.

அவர் தினமும் காலையில் கிருஷ்ணபத்ரா நதியில் ஸ்நானம் செய்து, நரசிம்மரை வணங்கி விட்டு அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும் மணம் பூண்டிக்குச் செல்வார். அங்குத் தன் குருவான பிருந்தாவனஸ்தரான ரகோத்தம ஸ்வாமிகளைச் சேவிப்பார். ஒரு நாள் கூட நரசிம்மர் தரிசனமும் ரகோத்தமர் வழிபாடும் நின்றதில்லை.

காலமெல்லாம் அவர் இந்த வழிபாட்டை ஒருநாள் கூட விடாமல் செய்தார். காலத்தால் அவருக்கும் முதுமை வந்தது. மூப்பின் காரணமாக அவர் உடல் தளர்ந்தது.

பகவானைச சந்திக்காமல் வாழ்வதை விட சாவதே மேல் என மனமார அழுத பக்தர் தன்னை எடுத்துக் கொள்ள வேண்டினார், அப்போது அவருக்கு ஒரு கனவு வந்தது.

அந்தக் கனவில் நரசிம்மரே வந்து அவருக்குத் தரிசனம் கொடுத்தார். காலமெல்லாம் தன்னைத் தேடிவந்த பக்தனுக்கு. அவனுக்கு முடியாத காலத்தில் பகவானே வந்து தன் திருக்கோலம் காட்டி வரம் தந்தார்.

இன்னும் ஏகப்பட்ட சிறப்புக்களைக் கொண்டது இந்த ஆலயம்.

சுமார் 400 வருடங்களுக்கு முன்பு அந்திலி ஆச்சாரியார் என்பவர் இத்தல நரசிம்மரைப் பூஜித்து வந்தார். அவரின் நினைவாக அவரது உருவச் சிலை இத்தல தூணில் பொறிக்கப்பட்டுள்ளது.

இதன் பெரும் சிறப்பு என்னவென்றால் வருடத்தின் எல்லா நாளும் சுவாமி மேல் சூரிய ஒளிபடும்படி, பகவானே உலகுக்கு ஒளி என்பதைக் காட்டும்படி அங்குக் கோவில் அமைக்கபட்டிருக்கின்றது. எந்தக கோவிலிலும் இல்லாத நுணுக்கமான வேலைப்பாடு இது.

இந்த ஆலயத்தில் சித்திரை சுவாதி, நரசிம்மர் ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி மிக விசேஷம். இதைத்தவிர மாத சுவாதி நட்சத்திரம், மற்றும் ஒவ்வொரு சனிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

தீராத கடன் தொல்லை, எதிரிகளின் தொல்லை,, திருமணத்தில் தடை, குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், கண் நோய், மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பிள்ளைகளால் தொல்லை கொண்டவர்கள் இங்குப் பிரார்த்திக்க பூரண நலம் கிட்டும்.

தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் லட்சுமி நரசிம்மருக்குத் திருமஞ்சனம், நரசிம்மர் ஹோமம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது இங்கு அன்றாட வழமை.

இங்கு நரசிம்ம ஹோமம் மிகப் பிரசித்தியானது. மிகுந்த பலன் கொண்டது.

குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி ஆனந்தமெல்லாம் கைக்கூடி நிலைக்க இந்த ஆலயம் பெரும் வரம் தரும்.

அந்திலி நரசிம்மர் அந்தமில்லா நிம்மதி, அந்தமில்லா நிறைவு அதாவது முடிவில்லா ஆனந்தம் தருபவர். திருக்கோவிலூர் பக்கம் செல்லும்போது அஷ்ட நரசிம்மர் தலங்களில் ஒன்றும் எத்தனையோ மகான்களை உருவாக்கியதும், நம்பி வரும் பக்தர்களுக்குப பெரும் பெரும் பாக்கியம் தரும் இந்த ஆலயத்தை தரிசிக்க தவறாதீர்கள்.

கருடன் என்பது ஆத்ம தத்துவம், ஆத்மா பகவானை ஏந்தவும் அவரைச் சுமக்கவும் படைக்கப்பட்டது, அதுதான் பெரும் ஆனந்தம் முடிவில்லா ஆனந்தம் என்பதைச் சொல்லும் தத்துவம்.

அந்த ஆத்மா பகவானை அடைந்து அவர் திருக்கோலம் கண்டு கூடிநின்ற பெருஞான நிலையினைச் சொல்லும் ஆலயம் இது. இத்தலத்தில் மனமுவந்து நரசிம்மரைத் தரிசிக்க மனதின் மாய இருளகன்று ஞான ஒளி கைக்கூடி, அனுதினமும் காலையில் இந்த நரசிம்மர் மேல் படும் சூரிய ஒளிபோல் ஆத்மாவும் துலங்கிப் பகவானை அடைந்து முடிவில்லா ஆனந்தத்தில் திளைக்கும். இது சத்தியம்.

நரசிம்மர் ஆலயங்கள் 06 : நாமக்கல் நரசிம்மர் ஆலயம்.

நாமக்கல் எனும் மேற்கு தமிழக நகரில் அமைந்திருக்கும் அந்த நரசிம்மர் ஆலயம் வெகு பிரசித்தியானது, அந்த ஊரின் பெயரே இந்த ஆலயத்திலிருந்துதான் உருவானது.

யுகங்களைக் கடந்த இந்தத் தலம் பகவான் விஷ்ணுவின் விருப்பமான இடங்களில் ஒன்று. இங்குதான் பகவான் அரங்கன் கோலம், வரத கோலம், நரசிம்ம கோலம் என மூன்று விதங்களிலும் காட்சியளிக்கின்றார், ஒவ்வொன்றுக்கும் ஒரு புராண சம்பவமும் உண்டு.

நாகமலை என்பதே பின்னாளில் நாம மலை என்றாகி நாமகிரி என்றுமாயிற்று.

கார்கோடகன் தான் பெற்ற சாபம் காரணமாகத் திருமாலை நினைந்து தவமிருந்தான். காசியப்ப முனிவருக்குத் தொல்லை கொடுத்து அந்த நாகம் சாபம் பெற்றிருந்தது, அது திருமாலை நோக்கித் தவமிருக்க அதற்குக் காட்சி தந்து சாபம்போக்கினார் பகவான்.

அவரிடம் அந்தக் கார்கோடகன் உருக்கமான வேண்டுகோளை வைத்தது. ஆதிஷேஷன் பாற்கடலில் பகவானைத் தாங்குவதை போல் தானும் அவரைத் தாங்க வரம் கேட்டது. பகவானும் வரமருளினார்.

அப்படி இங்கு அவர் பள்ளிகொண்டிருப்பது கார்கோடகன் எனும் பாம்பணை மேல் என்பது எங்குமில்லாச் சிறப்பு.

துர்வாச முனிவரின் சில சாபங்களால் தேவர்கள் தவித்தபோது இத்தலத்தில் வந்து பகவானை வேண்டி நலம் பெற்றனர். அதனால் அவர்களைக் காக்கும் வரத கோலத்தில் பகவான் தரிசனமானார்.

அவர் நரசிம்ம கோலத்தில் அமர ஒரே காரணம் தாயார், அவர்தான் இங்கு சகலமும். அவர்தான் மூலம். இந்தத் தலம் தாயாரின் தலம், அவருக்குத் துணையாக வந்தவரே நரசிம்மர்.

அந்த வரலாறு இராமாயணத்தோடு தொடர்புடையது.

ஒருமுறை பகவானைப் பிரிந்த தேவி இங்கு தவமிருந்தாள். அன்னையின் தவம் நீண்டகாலம் தொடர்ந்தது. அப்போதுதான் இராம அவதாரம் நிகழ்ந்தது. இலங்கையில் யுத்தம் நடந்தது.

அந்த யுத்தத்தில் மயக்கமடைந்த இராம லட்சுமணனுக்காக சரவன் எனும் மருத்துவன் அனுமனை இமயத்திலிருந்து சஞ்சீவி மூலிகையினைக் கொண்டுவர சொல்ல அனுமனும் அப்படியே கொண்டு வந்து லட்சுமணனைப் பிழைக்க வைத்தான்.

பின் அந்தச் சஞ்சீவி மலையினை எடுத்த இடத்திலே வைத்த அனுமன் அங்கே கண்டமுகி நதிக்கரையோரம் ஒரு சாளக்கிராமக் கல்லைக் கண்டான். அழகான அக்கல்லின் அழகில் மயங்கியவன் அதனை இராமபிரானுக்காய் எடுத்துச் சென்றான்.

அவன் மனதில் அதனை இராமனின் சிலையாக செதுக்கும் ஆசை இருந்திருக்கலாம்.

அப்படி அவன் கொண்டு செல்லும் போது தாகத்தால் இப்பகுதியின் தடாகத்துக்கு நீர் அருந்த வந்தான், அந்நேரம் அன்னை ஒரு பெண்ணாக அங்கு நின்றாள், அவளிடம் அக்கல்லை கொடுத்து கீழே வைக்காமல் இருக்கச் சொல்லிவிட்டு அவன் நீர் அருந்தி இளைப்பாறச் சென்றான்.

அன்னை அக்கல்லை கீழே வைத்தாள், அதன் பின் வந்த அனுமனால் கல்லை அசைக்க முடியவில்லை, அவனின் முழு பலமும் சேர்ந்தும் அசைக்கமுடியவில்லை.

அது இராவணனுக்கு எதிராக பெரும் யுத்தம் நடந்த நேரம் என்பதால் அவன் விரைந்து செல்ல வேண்டிய அவசியமும் இருந்தது.

அந்நேரம் அவன் மிகுந்த பலத்தோடு கல்லை எடுக்க முயன்று தோற்றபோதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அந்தக் கல் நரசிம்மமாய் உருமாறியது, பிரகலாதனைக் கொன்ற அதே நரசிம்மவடிவில் உருமாறியது.

அனுமன் நரசிம்மத்தைப் பணிந்து வணங்கினான். தேவியும் வணங்கினாள்.‌ அந்த நரசிம்மமே இராவணன் அழிய முழு ஆசியினையும் அனுமனுக்கு அளித்தது. அதன் பின் அனுமன் பெரு வெற்றி அடைந்தான், அவன் நினைத்த எல்லாமும் வெற்றியாய் அமைந்தது.

மாபெரும் வல்லமை வாய்ந்த இராவணன் சேனை அனுமன் இங்கு நரசிம்மரைத் தரிசித்த பின்பே சரிந்தது. அந்த நரசிம்ம உருவமே சாளகிராமக் கல்லில் நரசிம்மமாய் பதிந்தது. அவ்வகையில் அந்த நரசிம்மர் சுயம்பு.

அதிலிருந்து இந்தக் கோவில் வரலாறு தொடங்குகின்றது. அனுமனுக்கு வரமளிக்க நரசிம்மர் வந்தாலும் அக்கோவிலின் பிரதானம் தாயார் அவளே, நாமகிரி தாயார் எனச் சக்திவாய்ந்தவளாக அங்கு அமர்ந்திருக்கின்றாள்.

இவள்தான் அங்கு இயக்கு சக்தி. அவளுக்கு அடுத்தே நரசிம்மரும் அனுமனும்.

அந்த ஆலயம் மூன்று நிலைகளைக் கொண்டது. மலையடியில் அரங்கனுக்கான ஆலயம் உண்டு.
மலையின் அடிவாரத்தில் ஒருபுறம் நரசிம்மரும், மறுபுறம் அரங்கநாதரும் உள்ளனர்.

கார்கோடகனின் வேண்டுதல் படி அவன் மீது பள்ளிகொண்டு காட்சி தருகிறார். தெற்கில் சிரம் வைத்து, வடக்கில் திருப்பாதம் நீட்டி சயன நிலையில் காட்சி தருகிறார் பகவான்.

அதற்கு மேல் மலையில் கோட்டையில் வரத ராஜர் அருள்பாலிக்கின்றார். இது மன்னர்கள் காலத்தில் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட கோட்டை. திருச்சி மலைக்கோட்டையின் சாயல், அந்த ஆலயம் அந்த கோட்டைக்குள் அமைந்துவிட்டது.

இதற்கு மேல் பக்கமே மிக அற்புதமாக அமைந்திருக்கின்றது நாமகிரி தாயார் ஆலயம். அங்குதான் நரசிம்மர் அருள்பாலிக்கின்றார், சாளகிராமக் கல்லில் அருள்பாலிகின்றார்.

பாறையில் பிரம்மாண்டமாகச் சிம்மாசனத்தின் மீது அமர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் நரசிம்மர். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருட்பாலிக்கும் நரசிம்மரின் வலதுகையில் இரணியனை வதம் செய்த இரத்தக்கறையும், நகங்களின் கூர்மையும் நுட்பத்துடன் வடிக்கப்பட்டுள்ளன.

த்ரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்த நாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களிலும் அமர்ந்து அருட்பாலிக்கின்றனர்.

நாமகிரித் தாயாரின் கோயில் மலையைக் குடையாமல் தனியாக கட்டப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அவள்தான் இங்கு நாயகி.

நரசிம்மருக்கு நேரே உள்ள சுவரிலுள்ள ஒரு சாளரத்தின் வழியே ஆஞ்சநேயரைக் காணமுடியும். ஆனால், அனுமன் கண்கள் நரசிம்மரின் பாதங்களைப் பார்த்தபடி அமைந்திருக்கும், அவ்வளவு நுணுக்கமாகக் கட்டப்பட்ட ஆலயம் இது.

இக்கோவில் தேவதச்சன் மயன் உருவாக்கியது. அவனால் உருவாக்கப்பட்ட இக்கோயில், பிற்காலத்தில் சிற்பக் கலையில் ஆர்வம் கொண்ட பல்லவ மன்னர்களால் மேம்படுத்தப்பட்டது, நாயக்கர்களின் திருப்பணியும் நிரம்ப உண்டு.

இங்குச் சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலயத்தின் தாத்பரியம் ஆழமானது. மிகுந்த மறைபொருளைக் கொண்டது.

அதாவது, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை அழிக்கவே முடியாத பெரும் எதிரிகளை அதர்மக்காரர்களை அடக்கித் தரும் ஆலயம் இது.

இராமாயணத்தில் அந்தக் கடைசி யுத்தத்தில் பெரும் அச்சுறுத்தல் கொடுத்தவன் இந்திரஜித். அவன் இராம லட்சுமணர்களையே அதிரவைத்து மயக்கமடைய வைத்தவன், அவன் மேகத்தில் மறைந்து போரிடுவான், கண்ணுக்குத் தெரியமாட்டான்.

அவனை வெற்றிக்கொள்ளல் என்பது இராமனுக்கே சவாலாய் இருந்தது. இங்கு அனுமன் நரசிம்மரைத் தொழுது சென்ற பின்னரே அந்த மாய இந்திரஜித் வீழ்த்தப்பட்டான்.

ஆம், எவ்வளவு வல்லமையான எதிரி என்றாலும் எவ்வளவு பெரிய வரம்பெற்றவன் என்றாலும் அதர்ம எதிரிகளை வீழ்த்தும் ஆலயம் இது.

இதனால் மாயப் பிசாசு தொல்லைகள், ஏவல், பில்லி சூனியம் என எல்லா மாபெரும் சிக்கலும் இந்தத் தலத்தில் தீரும்.

அன்னை நாமகிரி தாயார் இங்கு காளி அம்சம், அவளே இராமனுக்கு உதவியாக இங்குப் பகவானை நரசிம்ம கோலத்தில் எழவைத்து அனுமனை அழைத்து அவனுக்கு வரம்பல கொடுத்து யுத்தத்தில் வெல்லவும் வைத்தாள்.

அவள் இங்குக் காட்டும் கோலம் காலத்தைக் கட்டுப்படுத்தும் கோலம்.

அவள் அங்கு முந்தைய காலத்து நரசிம்மத்தை வரச் செய்தாள், அந்த நிகழ்காலத்தில் நடந்த போரை வெற்றி பெறச் செய்தாள், எதிர்காலம் எக்காலமும் அங்குக் காவல் இருக்கின்றாள்.

அவள் காலம் அறிந்தவள், காலம் என்பது ஒரு கணக்குக்கு உட்பட்டது, இங்கு எல்லாமே காலத்தால் நடப்பது அந்தக் காலம் சில சூட்சுமமான கணக்கு விதிகளுக்கு உட்பட்டது.

அந்த அன்னை காலத்தை சரியாக நமக்குக் கட்டுப்படுத்தி தருவாள், அவள் அங்குக் கால வர்த்தினி.

அவள் தான் தேர்ந்துகொண்டவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்துவாள். அப்படி அவள் அருள் பெற்ற அடியாராக நம் கண்முன் நின்ற மாபெரும் அறிவாளி கணிதமேதை சீனிவாச ராமானுஜம்.

பூர்வ ஜென்ம வரம் காரணமாக அவனுக்கு அன்னையின் அருள் கிடைத்தது. கனவில் நாமகிரி தாயாரே வந்து தனக்குக் கணிதம் கற்றுக்கொடுத்ததை அவனே பல இடங்களில் சொல்லியிருக்கின்றான்.

அந்தப் பெரும் கணிதமேதை அதுவும் உலகில் வந்த கணிதமேதைகளில் தலையானவன், முதன்மையானவன் எனக் கொண்ட்டாடப்படுபவனுக்கு அறிவும் ஆற்றலும் ஞானமும் கொடுத்தவள் அன்னை.

அவள் காலக்கணிதம் கொண்டவள், எல்லா ஞானமும் எல்லாக் கணக்கும் எல்லாச் சூட்சுமமும் அவளிடமிருந்தே வருகின்றன‌.

இதனால் இந்த ஆலயம் கல்வி செல்வம் உள்பட எல்லா ஞானமும் தரும். புரியாத விஷயத்தையெல்லாம் புரிய வைக்கும் தனி ஞானம் தரும், பிரபஞ்ச ரகசியத்தை சொல்லித்தரும் ஆலயம்.

ஆம், அங்கிருக்கும் அன்னை முக்காலமும் அறிந்தவள், அதையும் தாண்டியவள். காலத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவள், அவளைப் பணிந்தால் விதியினை மாற்றி எல்லாக் காலத்துக் கணக்கையும் சரிசெய்து உங்கள் விதியினை மாற்றி உங்களை வாழச்செய்வாள்.

அரங்கனாக, வரதனாக, நரசிம்ம மூர்த்தியாக அங்குப் பகவான் அருள்பாலிக்கின்றார். அவரை அன்னை தேவி மூன்று காலங்களிலும் கட்டுப்படுத்தும் சக்தியாக நாமகிரி தாயாராக அமர்ந்திருக்கின்றாள்.

அங்கு அவளை முதலில் வணங்கிவிட்டுத்தான் பகவானையும், அனுமனையும் வணங்குதல் வேண்டும்.

நாமகிரி நரசிம்மர் கோவில் சக்தி வாய்ந்தது. அங்கிருக்கும் அன்னை நாமகிரி தாயார் மகா சக்தி வாய்ந்தவள். அங்குச் சென்று வழிபடுவோர்க்கு முக்காலம் செய்த பாவம் தீரும். நடப்பதும், நடக்க இருப்பதும் நன்மையாகும்.

கண்ணுக்குத் தெரியா எல்லா துஷ்ட சக்தியும் அழித்துப்போடும் ஆலயம் இது. எல்லா விதமான போராட்டத்தையும் வெற்றிகரமாக முடித்து தரும் சக்தி கொண்ட ஆலயம் இது.

அங்கு நரசிம்மர் பெரும் காவல் தருவார். அன்னை நாமகிரி தாயார் பெரும் ஞானமும் கல்வியும் அறிவும் செல்வமும் தருவார். நாமக்கல் எனும் நாமகிரிக்குச் சென்று அங்கு இருவரையும் பணியுங்கள், அந்த அனுமன் போல் பணியுங்கள். எல்லா நலமும் வரமும் பலமும் உங்களுக்குக் கூடிவரும். இது சத்தியம்.

நரசிம்மர் ஆலயங்கள் 07 : சிந்தலவாடி யோக நரசிம்மர்.

இந்த ஆலயம் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் தாலுக்காவில், சிந்தலவாடி கிராமத்தில் காவேரிக் கரையோரமாய் அமைந்துள்ளது. நரசிம்ம மூர்த்தி யோக நிலையில் அதாவது தன்னிறைவான நிலையில் அருள்தரும் தெய்வீகம் நிரம்பிய ஆலயமிது.

இதன் வரலாறு தொன்மையானது. எனினும், இடைக்காலத்தில் நடந்த சுல்தானிய படையெடுப்புக் காலங்களில் இந்த ஆலயமே தரைமட்டமாக்கப்பட்டு நரசிம்மர் ஆற்றங்கரையில் துணி துவைக்கும் கல்லாக வீசப்பட்டார். அது நரசிம்மர் எனத் தெரியாத வகையில் சலவைத் தொழிலாளிகளும் துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.

இது பாரதம் முழுக்க ஆப்கானியர் காலத்தில் நடந்த பெரும் கொடுமை. மராட்டியத்தில் இப்படிச் சிவலிங்கமே ஊருக்குத் துணிதுவைக்கும் கல்லாக மாற்றப்பட்டது. போர்ச்சுகீசியர் காலத்திலும் இக்கொடுமை நிகழ்ந்தது. வீரசிவாஜிதான் அங்கே இதையெல்லாம் மீட்டு எடுத்தார்.

அந்நிய கும்பல்கள் செய்த அட்டகாசம் அப்படி. இந்துக்கள் தெய்வத்தின் சிலையினை இந்துக்களைக் கொண்டே அடித்துத் துவைக்கச் செய்து ரசித்த பெரும் கொடுமையான காலக்கட்டம் அது.

அப்படித் தென்னகத்தில் நிகழ்ந்த பெரும் கொடுமையினை நாயக்க மன்னர்கள் 14 ஆம் நூற்ராண்டில் எழுந்து தடுத்தனர். அக்கால கட்டத்தில் பிரசித்தியான மகான்களும் தோன்றினார்கள். அவர்கள் இந்துக்களுக்குத் தேவை மகா வீரசக்தி, பெரும் பலமான சக்தி எனக் கருதி அனுமனை பெரும் இடங்களில் ஸ்தாபனம் செய்தார்கள்.

அனுமனுக்கும் நரசிம்மருக்கும் தொடர்பு அதிகம். இருவருமே மிகுந்த பராக்கிரமம் கொண்டவர்கள். இருவருமே யாராலும் கட்டுப்படுத்தமுடியா அளவு சக்தி கொண்டவர்கள். எந்த ஆபத்தையும் முறியடிப்பதில் வல்லவர்கள், எந்தச் சக்தியாலும் வெல்லமுடியாதவர்கள்.

இவர்களைப் பல இடங்களில் மகான்கள் ஸ்தாபனம் செய்தார்கள். வரலாற்றில் வியாசராஜர் எனும் மாத்வ முனிவரும், அனுமனின் அவதாரமான ஸ்மர்த்த ராமதாசரும் அதில் முக்கியமானவர்கள்.

அப்படியான வியாசராஜர் பல இடங்களில் அனுமனைப் பிரதிர்ஷ்டை செய்தார். அப்படி அவர் 14ஆம் நூற்றாண்டில் இந்தக் காவேரிக் கரையில் காளிங்க நர்த்தன கிருஷ்ணருடன் அனுமனை ஸ்தாபித்தார். பழைய ஆலயத்தைத் தரைமட்டமான ஆலயத்தை அவர் அப்படி மீளக்கட்டி அனுமனை, கிருஷ்ணனை நிறுத்தினார்.

ஆலயம் மீளக்கட்டபட்டாலும் அந்த நரசிம்ம விக்ரஹம் கல் விக்ரஹம் ஆற்றோரம் துணி துவைக்கும் கல்லாகவே கிடந்தது.

வியாசராஜர் ஸ்தாபித்த நர்த்தன கிருஷ்ணர் ஆலயம் துலங்கி பெரும் பிரபலமானது. எல்லா இடமும் பரவிற்று. அப்படி அது ஸ்ரீமுஷ்ணத்தில் வாழ்ந்த ஹரி ஆச்சாரியர் எனும் பெரும் பக்தனையும் எட்டிற்று.

ஒரு நாள் அவர் கனவில் பகவான் எழுந்தருளி தான் சிந்தலவாடி அருகில் உள்ள கருப்பத்தூர் என்ற காவிரிக்கரை ஊரில் உள்ள சலவைத் தொழிலாளியிடம் துணி துவைக்கும் கல்லாகக் கிடப்பதைச் சொல்லி அதனை எடுத்து ஆலயம் ஸ்தாபிக்கும்படிச் சொன்னார்.

அதே நேரம் அந்தச் சலவை தொழிலாளிக்கும் இந்தக் கல்லை ஒரு அடியாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார் பகவான்.

ஹரி ஆச்சாரியார் மிக மிகத் தீவிரமான பக்தர். அவர் பெருமாள் கனவில் காட்டிய இடத்துக்கு விரைந்தார், கருப்பத்தூரிலே காவேரிக் கரையிலே அவரை எதிர்கொண்டு நின்றான் சலவைத் தொழிலாளி.

பெருக்கெடுத்தோடும் காவேரி அருகில் அந்த எளிய சலவைத் தொழிலாளிக்கு உடலெல்லாம் பகவான் அடையாளத்துடன் பக்தி பழமாக ஒரு அடியார் வந்து நிற்பது தான் பெற்ற பெரும் வரமாகத் தோன்றியது. அவர் காலில் விழுந்து பணிந்து, “ஐயா நான் எதிர்பார்த்த பக்தர் நீர்தானா?” என்றான்.

“பகவான் என்னிடம் இங்கு ஒரு கல்லை பெற்றுக்கொள்ளச் சொன்னார்” என்றார் ஆச்சாரியார்.

“இதோ அந்தக் கல், எனக்கும் உத்தரவு வந்தபின் நான் அதைத் தொடவில்லை, நீங்களே தொட்டுக்கொள்ளுங்கள்” எனச் சொன்னான் சலவைத் தொழிலாளி.

அந்தக் கல்லின் பின்பகுதிதான் இப்படித் துணிதுவைக்கும் கல்லாகத் தெரிந்தது. ஆச்சாரியர் அதனைப் புரட்டிப்போடும் போது அங்கு நரசிம்மர் சிலை தெரிந்தது.

இருவருமே ஆடிப்போனார்கள். அச்சிலையினை நிமிர்த்துவைத்து சில பூஜைகளைச் செய்த ஹரி ஆச்சாரியார்க்கு அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை. அப்போது அவருக்கு ஒரு அசரீரி கேட்டது.

“சிலையினைச் சுமந்து மேற்கு நோக்கிப் போ” என்றது, அந்த எடை மிகுந்த கல்லை எப்படிச் சுமப்பது என யோசித்த ஆச்சாரியார் பின் மெல்ல தூக்கிப்பார்த்தார், அது பஞ்சுமூட்டை போல் எடை குறைவாயிற்று.

அதனை எளிதாகத் தூக்கித் தோளில் வைத்தபடி அவர் மேற்கு நோக்கி நகர்ந்தார், சுமார் ஐந்து கல் தொலைவுக்கு அவர் சென்றபோது சிலை மிகக் கனமானது, திடீரென அதன் எடை அதிகமானதும் ஆச்சாரியாரால் சுமக்க முடியவில்லை. சிலையினைக் கீழே வைத்தார்.

அந்த இடம் இந்த நர்த்தன கிருஷ்ண ஆலய வாசலாய் இருந்தது. அதன்பின் எல்லோரும் கூடி நடந்த மெய்சிலிர்க்கும் சம்பவத்தை அறிந்து அந்த நரசிம்மரை கோவிலுக்குள்ளே ஸ்தாபித்தார்கள்.

பாரத நாட்டில் ஒரு இருண்ட காலத்தில் புதைந்த சிலைகளெல்லாம் இப்படித் தானே உரிய கோவிலை தேடுவதும், புதிய கோவில்களை உருவாக்கிக் குடி கொள்வதும் உலகில் எங்குமில்லா அதிசயம், இந்துமதம் மட்டுமே காணும் அதிசயம்.

இந்துக்களின் சிலைகள் வெறும் கல்லும் உலோகமுமல்ல, அவை தெய்வசக்தியினை பெற்றுவிட்டவை. காலத்தின் சில கட்டளைக்குக் கட்டுப்படும் அவைகள் உரிய காலம் வரும்போது பகவான் அனுகிரஹத்தோடு மீண்டும் ஆலயம் எழுந்து அருள்பாலிக்கின்றன‌.

அப்படிப் பெரும் சக்தி கொண்ட விக்ரஹம் இந்த யோக நரசிம்மர். இந்த ஆலயத்தில் பகவான் எழுந்தபின் இந்தப் பகுதியே பெரும் சுபிட்சமானது. அதுவரை இருந்த வறுமை, கொள்ளை நோய்களெல்லாம் அகன்றே போயின. மக்களும் எல்லா வளமும் பெற்றார்கள்.

காவேரி ஆற்றில் கரையில் மூலஸ்தானம் யோக நரசிம்ம சுவாமி என்று அழைக்கப்படுகிறார். கருவறையில் வீற்றிருக்கிறார். இந்த யோக நரசிம்மர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்லாயிரம் மாத்வா பிரிவு மக்களின் குல தெய்வமாகின்றார்.

கருவறைக்குள் கோபால கிருஷ்ணரின் சிலையும், அருகில் அனுமன் சிலையும் உள்ளது. கருவறைக்கு இடதுபுறம் மாத்வா சந்நிதி உள்ளது.

இராகவேந்திரரின் மிருத்திகா பிருந்தாவனம் கொண்ட வெங்கடரமண கோயிலும் இதனருகில் உண்டு.

இந்த ஆலயம் இழந்ததை எல்லாம் மீட்டுத் தரும். சலவைத் தொழிலாளியிடம் சலவைக்கல்லாய்க் கிடந்த நரசிம்மர் என்பது நம்முடைய பாவங்களை அழுக்குகளைப் பகவான் போக்கி நம்மைச் சுத்தப்படுத்தி நல்வாழ்வு தருவார் என்பதைச் சொல்லும் தாத்பரியம்.

நம்முடைய பாவ சாபமெல்லாம் கழுவி நம்மைச் சுத்தப்படுத்தும் ஆலயமிது.‌ எதையெல்லாம் இழந்தோமோ அதையெல்லாம் மீட்டுத் தரும் சக்திவாய்ந்த நரசிம்மர் இவர். அதோடு நம் வம்சத்துக்கே காவல் இருப்பவர். அதனால்தான் பல்லாயிரகணக்கான மக்களுக்கு குலதெய்வமாய் வீற்றிருக்கின்றார்.

பிரதோஷ நாள் அன்று இளநீர், பால், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு எனப் படைத்து இவருக்கு வழிபடுவது சிறப்பு என்பதால் அன்று பெரும் கூட்டம் அலைமோதும்.

வேண்டுவதும் வேண்டுதல் பலிப்பதும் பின் நேர்ச்சைகள் நிறைவேற்றுவதும் இங்கு வாடிக்கை.

இந்தச் சிந்தலவாடி மகா விசேஷமான ஊர். இங்கிருக்கும் அம்மன் கோவிலும் மகா விசேஷம். வியாசராசரால் மீளக் கட்டமைக்கப்பட்ட இந்த ஆலயமும் தானே தேடிவந்து இங்கு அமர்ந்த சக்திவாய்ந்த நரசிம்மரும் இங்குப் பெரும் விசேஷம்.

தானே தேடி வந்து பகவான் நரசிம்மர் குடிகொண்ட கோவிலில் நீங்களும் தேடிச் சென்று பணிந்தால் எல்லா நலமும் அருளும் பெரும் காவலும் உங்களைத் தேடிவரும். நரசிம்மரின் பூரண அருள் உங்களைக் காவல் காக்கும். தலைமுறை தாண்டி காவலாய் நிற்கும். இது சத்தியம்.

நரசிம்மர் ஆலயங்கள் : 08 சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம்.

சென்னையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலும், வேலூரில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும் ஆலயம். காஞ்சிபுரத்துக்கும், திருப்பதிக்கும் இடையில் அமைந்திருக்கும் இந்தச் சோளிங்கர் நரசிம்மர் ஆலயம். மகா விசேஷமான ஆலயம் இது.

வைஷ்ணவ திவ்யதேசங்களில் இது 65 ஆம் தலம், மகா புண்ணியமானது. வடமொழியில் “பிரம்ம கைவர்த்த புராணத்தில்” இதன் சிறப்புக்கள் சொல்லபட்டிருக்கின்றன.

நரசிம்ம ஆலயங்களில் தொன்மையானது இதுதான். இதன் வரலாறு சப்தரிஷிகளிடம் இருந்து துவங்குகின்றது.

பகவானின் அவதாரங்களில் உடனே நடந்து மின்னல் வேகத்தில் பலன் கொடுத்தது நரசிம்ம அவதாரம். எவ்வளவு பெரிய இக்கட்டில் ஒருவன் சிக்கினாலும் இனித் தப்பவே முடியாது எனப் பெரும் நெருக்கடியில் வீழ்ந்தாலும் அங்கு ஓடிவந்து அவனைக் காக்கும் அற்புதமான சக்தி நரசிம்ம அவதாரத்துக்கே உண்டு.

நாளை வா என்றோ, பின்னர் தருகின்றேன் என்றோ சொல்லாமல், நினைத்த மாத்திரம் வந்து வரமருளும் நரசிம்ம மூர்த்தியினை, அதுவும் அதுவேண்டுமா இதுவேண்டுமா எனக் கேட்காமல், இதுதானே வேண்டும் எனச் செயலில் காட்டும் அவதார மூர்த்தியினைத் தரிசிக்கும் விருப்பம் சப்தரிஷிகளுக்கு உண்டாயிற்று.

அதுவும் உக்கிர நரசிம்மரைத் தவிர்த்து தங்களைப் போல் தவக்கோலத்தில் அமைதியாய் உலகை இயக்கும் கோலத்தில் இருக்கும் யோக நரசிம்மரைக் காண விரும்பினார்கள்.

வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர், விசுவாமித்திரர் என ஏழுபேரும் மிகுந்த தவமிருந்து பகவானின் யோக நரசிம்ம‌ காட்சியினை ஒரு கடிகை அதாவது 24 நிமிடம் கண்ட தலம் இது.

பிரகலாதனைக் காக்க பகவான் வந்து நின்ற நேரம் ஒரு கடிகைதான். அது 24 நிமிடம் என வரையறுக்கப்படும் பழைய கால நேர அளவு, கடிகாரம் எனும் சொல் இதில் இருந்துதான் வந்தது.

இவ்வாறு 24 நிமிடங்கள் அந்தச் சப்தரிஷிகள் பகவானை மனதார, கண்ணார தரிசித்த தலம் இது. அப்படியே அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க பகவானும் இங்கு வந்து தன்னை 24 நிமிடம் தரிசிப்போர்க்கு முக்தி எனத் திருவுளம் பற்றிய தலமும் இதுதான்.

ஆம், இத்தலத்தில் 24 நிமிடங்கள் தரிசித்தால் முக்தி, அங்கு எந்தக் காணிக்கை வேண்டாம், நேர்ச்சை வேண்டாம், மந்திர வழிபாடு யாகம் என எதுவும் வேண்டாம், 24 நிமிடங்கள் அவர் சந்நதியில் நின்றால் எல்லாத் தோஷமும் சரியாகும். மனதில் எண்ணியது பலிக்கும்.

இத்தலம் மிகப் பழமையானது. கடிகாசலம் அதாவது கடிகைமலை என அழைக்கப்பட்டது, பின் சோழர்கள் ஆட்சியில் இது சோழபுரமாகி பின் சோழிங்கர் என்றாயிற்று.

சோழி என்றால் காவல், கவசம் எனும் பொருளும் உண்டு, எல்லோருக்கும் காவல் தரும் நரசிம்மரின் தலமாதனால் சோழிங்கர் என்றாயிற்று என்பதும் ஒரு கோணம். சோழிங்கர் மருவி சோளிங்கர் என்றாயிற்று.

இந்தத் தலம் இரு கோவில்களைக் கொண்டது. மலையடியில் உற்சவராகப் பக்தவச்சலம் எனும் பெயரில் சுதாவல்லி, அமிர்தவல்லி என இரு தேவியரோடு எழுந்தருளியிருக்கின்றார், மூலவர் மலை மேல் ஆலயத்தில் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.

பக்தவத்சலம் என்றால் பக்தர்மேல் அன்புகொண்ட பெருமாளின் மலை எனப் பொருள்.

1305 படிகள் கொண்ட மலைப்பாதையில் கோவிலுக்குச் செல்லும் வழியில் சங்கு சக்கரம் ஏந்திய அனுமர் சிலையினைக் காணலாம். அம்முனிவர்கள் தவமிருந்தபோது காலகேய அசுரர்கள், கும்போதர அசுரர்கள் அட்டகாசம் செய்தார்கள். அவர்களைத் தடுக்க அனுமனுக்குத் தன் ஆயுதங்களைக் கொடுத்து பகவான் அனுப்பினார் என்பது புராணச் செய்தி.

பகவானே இங்குத் தன் பக்தர்களை அனுமனுடன் காக்கின்றார் என்பது இதன் தாத்பரியம்ஹ

இந்த ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது சிறப்பு.

மலையில் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளதாக ஆலயம் அமைந்துள்ளது. இங்கு லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார்.

அனுமன் காவல் காப்பதால் இங்குள்ள குளம் அனுமன் தீர்த்தமாயிற்று. இதில் நீராடுவது நல்ல பலனைத் தரும்.

இது மிகத் தொன்மையான தலம் என்பதாலும், பகவானே யோக நிலையில் இருப்பதாலும் ஆழ்வார்களெல்லாம் மங்கள சாசனம் செய்தார்கள். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம் இது.

நம்மாழ்வார் தவிர பல ஆழ்வார்கள் வந்து பணிந்த ஆலயம் இது, பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இங்கு வந்து நரசிம்மரை தரிசனம் செய்து வணங்கி அருள் பெற்றது வரலாறு.

வைகுண்டம், திருபாற்கடல், திருவேங்கடத்துக்கு இணையாக போற்றப்படும் தலமும் இதுதான்.

இங்கு வேண்டி கொண்டால் 24 நிமிடம் அமர்ந்து பகவானை மனமொன்றி தியானித்தால் எல்லாச் சிக்கலும் தீரும்.

குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். தொழில் வளரும், பெரும் வாழ்வு கிட்டும்.

இங்குச் சொந்தமாக நிலம் வாங்கி வீடுகட்டி குடியேற விரும்புவோர் செய்யும் வினோத வழிபாடு ஒன்று உண்டு. அதன்படி மலைக்குச் செல்லும் வழியில் கிடக்கும் கற்களை எடுத்துச் சென்று கோவில் முன் கல்லின் மேல் கல் அடுக்கி வழிபடுவார்கள், அந்த வழிபாடு நிச்சயம் சொந்தவீட்டை கொடுக்கும். சாட்சிகள் ஏராளம்.

இங்கு நரசிம்ம தீர்த்தம் உண்டு. அது விசேஷம். அங்குப் பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும்.

இந்தத் தலம் பாற்கடலுக்கும் வைகுண்டத்துக்கும் ஈடானது என்பதால் இங்குத் தான தர்மம் செய்வதும், இதர வழிபாடுகளைச் செய்வதும், கயாவில் செய்வதற்கு ஈடானது.

சில துண்டு கற்கண்டுக்கும், ஒரு கட்டி வெல்லத்துக்கும், வாழைபழ நைவேத்தியத்துக்கும் ஓடிவந்து அந்த எளிய பக்திக்கே இங்கு அருள்புரிவார்.

வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அந்த நாளில் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வது விசேஷம்.

இங்கு வியாழக்கிழமைகளில் பிரம்மதீர்த்தத்தில் நீராடி நரசிம்மசுவாமியை வணங்கினால் எல்லா நலமும் அடையலாம் வேண்டியன கிடைக்கும்.

இது கயாவுக்கு ஈடான தலம் என்பதால் இங்குத் தூய மனத்துடன் நீராடி நம்பிக்கையுடன் சோளிங்கரில் பித்ரு தர்ப்பணம் தானம், தவம் முதலியன செய்தால் பரம்பரை செழித்து வாழும். வம்சம் தொடரும்.

மாசி மாதத்தில் சூரியோதயத்தின் போது பிரம்ம தீர்த்தத்தில் நீராடிப் பகவானை தியானித்தால் எல்லாப் பாவங்களும் நீங்கும்.

பிரம்மதீர்த்தினருகில் பைரவ தீர்த்தம் இருக்கிறது. அதில் திங்கட்கிழமையில் நியமுடன் நீராடினால் பூதபிசாசுகளால் வரும் தொல்லை நீங்கும்.

இந்த ஆலய நரசிம்ம பகவானின் கண்கள் 11 மாதம் மூடியிருக்கும். கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறப்பு நடைபெறும், கார்த்திகையில் தான் பகவான் கண் விழிப்பார் என்பதை மிக அழகாகக் காட்டும் ஏற்பாடு இது.

வேறெங்கும் இந்த ஏற்பாட்டினைக் காணமுடியாது.

சோளிங்கர் ஆலயம் சக்தி மிக்கது. நவகிரகங்களால் ஏற்படும் தொல்லை முதல் பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வரை இங்கு பிரம்மதீர்த்தத்தில் நீராடி, மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் எல்லாச் சிக்கலும் தீரும்.

பலமிக்க எதிரிகள், எப்பக்கமும் பெரும் சிக்கல்கள், உயிராபத்து இதர பெரும் அழுத்தங்கள் கொண்டவர்கள் இங்கு வந்து வணங்கினால் நரசிம்மர் எல்லா விக்னங்களையும் நொடியில் அழித்து உங்களுக்குக் காவல் தருவார்.

இந்தத் தலம் மன அமைதி தரும் தலம், அம்மலையில் இருக்கும் மூலிகைகளின் காற்றே பாதி நோயினைத் தீர்த்து நலமெல்லாம் தரும்.

வேலூர் பக்கம் செல்லும் போது இந்தச் சோளிங்கரை தரிசிக்க மறவாதீர்கள், அவருக்குக் கல்கண்டும், வெல்லமும் வாழைப்பழமும் கொண்டு சென்று மனமொன்றி தரிசனம் செய்யுங்கள்.

நெய்விளக்கேற்றிவிட்டு 24 நிமிடம் அவர் சந்நிதியில் அமர்ந்திருங்கள், அது போதும் அது மட்டும் போதும்.

கருணையே உருவான நரசிம்மம் உங்கள் சிக்கல் எதுவோ, உங்கள் ஆபத்து எதுவோ, எது உங்களை மிரட்டி அஞ்சவைக்கின்றதோ, எது உங்களை மனதால் வாட்டுகின்றதோ அதையெல்லாம் தீர்த்து எல்லாச் சிக்கலிலும் இருந்தும் உங்களை விடுவிப்பார். இது சத்தியம்.

நரசிம்மர் ஆலயங்கள் : 09 கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்திருக்கும் நரசிம்மர் இந்திய தேசத்தின் நரசிம்மர்களில் தனித்துவமானவர், 16 கைகளுடன் அருள்பாலிக்கும் நரசிம்மர் இந்தியாவில் மூன்று இடங்களிலேதான் உண்டு. முதலாவது, இராஜஸ்தான் மாகாணம் ஹிந்தவானில் அமர்ந்திருக்கும் நரசிம்மர், இரண்டாவது, கடலூர் அருகே சிங்கிரி குடியில் அமைந்துள்ளது.

மூன்றாம் ஆலயம் இந்தக் கீழப்பாவூரில் அமைந்துள்ளது.

இந்தக் கீழப்பாவூர் மிகத் தொன்மையான ஊர்களில் ஒன்று. சித்ரா நதியோரம் அமைந்திருக்கும் இந்த ஊர் முன்பு “பாகு ஊர்” என அழைக்கப்பட்டது, பாகு என்றால் வலிமையான பதமான எனப் பொருள், பாகு ஊர் என்பது பாகூராகி பின் பாவூராயிற்று, அப்படியே அப்பக்கம் இரு பாகூர் இருந்ததால் இது கீழ்பக்கம் உள்ள பாகூர் என்பதால் கீழப்பாவூர் என்றுமாயிற்று.

மதுரையினை ஆட்சி செய்த பாண்டியர்களின் முக்கிய இடம் இது, இந்தப் பகுதி அடிக்கடி சேர நாட்டு மன்னர்களிடம் சிக்குவதும் பின்னர் பாண்டியர் மீளப் பிடிப்பதுமாக மாறி மாறி இருவர் கைகளிலும் இருந்தது. ஆப்கானிய காலங்களிலும் இங்குதான் பாண்டியர் ஆட்சி நிலைத்தது.

மாலிக்காபூர் இங்குக் கொள்ளையிட வந்தபோது அவனை விரட்டி அடித்ததில் தென்காசி பாண்டியருக்குப் பங்கு உண்டு. துக்ளக் மதுரையினை ஆளும்போது அவர்களுக்கு அடங்க மறுத்து தனி இராஜ்ஜியம் கண்ட மண் இந்தப் பகுதி, எப்போதும் வீரத்துக்கும் இந்துமத காவலுக்கும் பெயர் பெற்ற பகுதி.

தென்காசி ஆலயம், குற்றால ஆலயமெல்லாம் அங்கு எப்படிப் பெரும் அடையாளமோ அப்படி இந்தக் கீழப்பாவூர் ஆலயமும் மகா பிரசித்தியானது.

இந்த ஆலயத்தின் வரலாறு மகா தொன்மையானது. பிரகலாதனுக்கு பகவான் இரங்கி இரணியகசிபுவினைக் கொன்றொழித்த சில காலங்களில் உருவாகி வந்தது. அதற்குக் காரணம் நாரதமுனி, காசியப்பமுனிவர், சுகாசனர் இன்னும் வருணன் எனும் சிலர்.

நாரதர் எப்போதும் கலகம் செய்பவர், அப்படி அவர் காசியப்பமுனிவரிடமும் தேவர்களிடமும் நரசிம்ம அவதாரம் எப்படி நிகழ்ந்திருக்க முடியும்? அவதாரம் என்றால் மானுடர்போல் எல்லோருக்கும் தெரிய வாழவேண்டாமா? இப்படி ஓரிரு நாழிகையில் வந்து செல்வது அவதாரத்தில் சாத்தியமா என்றெல்லாம் சில விதைகளை விதைத்துப்போட்டார்.

அவதாரங்களில் பக்தன் ஒருவனுக்காக, ஒரே ஒருவனுக்காக இறங்கி வந்த நரசிம்மரின் கோலத்தை தரிசிக்க இந்த ரிஷிகளும் விருப்பம் கொண்டார்கள், அதற்காக தவமிருக்க பொதிகை மலை வந்தார்கள்.

அங்கே அவர்களுக்குப் பகவானின் வாக்கு கிடைத்தது, “மகா தபஸ்விகளே! பொதிகை மலையில் அகத்தியர் ஏற்படுத்திய தாமிரபரணியில் மனிதர்கள் நீராடுவதற்காக சமதள பகுதியில் 86 தீர்த்தங்களும், வரம் பெற்ற ரிஷிகள் நீராடுவதற்காக மலை மேல் 32 தீர்த்தங்களும் உள்ளன.

அப்படியான தீர்த்தமான மணிமுக்தா தீர்த்தம் எனும் பாபநாசம் பாண தீர்த்தத்தில் நீராடி அங்கிருந்து வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் தவம் இயற்றுங்கள். அப்போது உங்கள் கோரிக்கை நிறைவேறும் எனத் திருவுளம் பற்றினார்.

அதன்படி முனிவர்கள் தவமிருந்தார்கள், அவர்கள் பாபநாசத்தில் நீராடியிருந்ததால் அவர்களின் கர்மவினையெல்லாம் கழிந்திருந்தது, பகவானும் நாரதர் மூலம் அவர்களைக் கொண்டு ஒரு நாடகம் நடத்தி அங்கு குடியேறும் திட்டமும் கொண்டிருந்தார்.

அதாவது, அகோபிலம் என்பது ஆந்திராவில் காடும் மலையும் நிரம்பிய இடம். அங்கேதான் நரசிம்மருக்கு மிகப்பெரிய தலம் உண்டு, மக்களெல்லாம் அங்குச் செல்வது முடியாத காரியமாக இருந்தது, இதனால் பாண்டிய மக்களுக்காக சமவெளியில், வயல்சூழ் நிலத்தில் எல்லா மக்களும் வந்து தன் அருள் பெற சித்தம் கொண்டார், முனிவர்களின் தவம் அக்கணமே நிகழ்ந்தது.

அவர்கள் தவம் உச்சத்தை அடைந்தபோது ஈரேழு உலகமும் அஞ்சும் வண்ணம் பெரும் சிம்மகுரல் எழுந்தது, சித்ரா நதியே கொதிக்கும் வண்ணம் பெரும் அனல் சூழ்ந்தது, அண்ட சராசரம் நடுங்கும் வண்ணம் நரசிம்ம மூர்த்தியாய் பகவான் எழுந்து வந்து நின்றார், அவரின் உக்கிரக் கோலம் தாங்கமுடியாததாய் இருந்தது.

பிரகலாதன் பணிந்தது போல் முனிவர்களும் அவர்பாதம் பணிந்தார்கள், அவர்கள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை எதிர்கொள்ளமுடியாமல் அன்னையினை வேண்டினார்கள், அன்னை வந்து அவரைச் சாந்தபடுத்தியதால் லட்சுமி நரசிம்மராக பகவான் அவர்களுக்கு வரமருள முன்வந்தார்.

அதன்படி எக்காலமும் பகவான் இங்கிருந்து நரசிம்ம மூர்த்தியாக மக்களுக்கு வரம் அருள வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்க அப்படியே அங்கு அமர்ந்து கொண்டார் நரசிம்மர்.

அதிலிருந்து தொடங்கும் இந்த ஆலய வரலாறு பாண்டிய மன்னர்களால் தொடரப்பட்டு இன்று மகா பிரசித்தியான ஆலயமாக நிலைத்து நிற்கின்றது, பதினாறு கரங்களுடன் முனிவர்களுக்கு நரசிம்மர் காட்சி கொடுத்த அந்தத் திருவுருவம் தானே அமைந்ததாகத்தான் வரலாறு சொல்கின்றது.

பாண்டிய மன்னர்களுக்குச் சிவனே தலைவர், அதே நேரம் அவர்கள் நரசிம்ம வழிபாட்டையும் செய்திருக்கின்றார்கள், திருவிளையாடலில் வரும் விக்ரம பாண்டியனுக்காக சிவன் சமணர்கள் அனுப்பிய மாய யானையினைக் கொல்லும் போது அந்த அம்பில் இருந்தவர் நரசிம்மர் என்பதால் இன்றும் அந்த யானைமலை அருகே நரசிம்மருக்குச் சிறப்பான ஆலயம் உண்டு.

அக்காலத்தில் இருந்தே பாண்டியர்களுக்கு நரசிம்ம வழிபாடு இருந்திருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆலயத்தைச் சிறப்பாக கொண்டாடினார்கள்.

முற்கால பிற்கால பாண்டியர்களும், நாயக்கர் காலத்தில் ஆண்ட தென்காசி பாண்டியர்களும் இந்தக் கோவிலை வெகு சிரத்தையாகக் கொண்டாடியிருக்கின்றார்கள்.

திருவிளையாடல் விக்ரமன் பாண்டியன் தொடங்கி பின்னாளில் வந்த ஜடாவர்ம சுந்தரபாண்டியன் வரை, இன்னும் பின்னாளைய விக்ரம பாண்டியன், வல்லப பாண்டியன் என எல்லா மன்னர்களும் இந்த ஆலயத்தில் பணிந்திருக்கின்றார்கள்.

பாண்டியர்க்கு வெற்றிமேல் வெற்றி கொடுத்த ஆலயம் இது, விக்ரம பாண்டியன் வெறும் ஆயிரம் வீரர்களைக் கொண்டு இந்த நரசிம்மர் துணையால் பெரும் வெற்றிபெற்றதை அங்கிருக்கும் அடையாளமும் வரலாறுகளும் சொல்கின்றன‌.

பாண்டியர்கள் இந்த நரசிம்மரை ” முனைகடி மோகர் விண்ணர் ” எனக் கொண்டாடினார்கள், அதற்கு அர்த்தம் ஈட்டி வாள் அம்பு எனக் கூரிய ஆயுதம் கொண்ட படைகள் வந்தாலும் வெற்றி தருபவர் எனப் பொருள், பாண்டியரின் வெற்றிக்கெல்லாம் இந்த ஆலயம் முக்கிய காரணமாய் இருந்தது.

இராஜராஜசோழன் பெரும் அரசை எழுப்பிய‌ காலத்தில் இது சோழர்கள் கட்டுப்பாட்டிலும் இருந்தது, அவர்கள் இந்த ஆலயத்தை “க்ஷத்திரிய சிகாமணி நல்லூர்” என்றார்கள், ஒரு சோழ மன்னனின் மனைவியான அறிஞ்சிகை பிராட்டியின் பெயரில் “அறிஞ்சிகை பிராட்டி சதுர்வேதி மங்கலம்” என்றும் இது அழைக்கப்பட்டிருக்கின்றது.

பின்னாளில் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் சோழர்களை ஒடுக்கியபோது மீண்டும் பாண்டிய நாட்டிடம் இந்த ஆலயம் வந்தது.

கிழக்கு நோக்கிய வாயில் வழியாக நுழைந்தால் மகாமண்டபம், அர்த்த மண்டபம் கடந்து செல்ல வேண்டும். இந்தக் கோவிலில் இரண்டு சந்நிதிகள் உள்ளன. வடக்கு பார்த்த தனிச் சன்னிதியில் அலர்மேல் மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீ பிரசன்ன வேங்கடாஜலபதி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

பாண்டியர் கோவில் என்பதால் சிவனுக்குரிய சந்நதியும் உண்டு திருக்காவலீஸ்வரமுடைய நாயனார் என அவர் அழைக்கப்படுகின்றார்.

பின்னால் மேற்கு நோக்கிய தனிச் சந்நிதியில் நரசிம்மர் தரிசனம் தருகிறார். திரிபங்க நிலையில் பதினாறு திருக்கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலத்தில் அபூர்வ வடிவ சிறப்புடன் காட்சித் தருகிறார்.

சூரியனும் சந்திரனும் வெண் சாமரங்கள் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, வெண் கொற்றக் குடையுடன் தியானத்தபடி கம்பீரமாக வீற்றிருக்கிறார் நரசிம்மர். பிரகலாதன், அவனுடைய தாய், நாரதர், காசி மன்னன் ஆகியோர் அருகில் நின்று நரசிம்மரை துதித்துக் கொண்டிருக்கும் காட்சியினை இங்குக் காணலாம்.

நரசிம்மர் ஆலயங்களில் மிக மிக அழகான உக்கிரமான நரசிம்மர் இவர்தான், சிலிர்க்கும் பிடரியுடன் பிரகாசிக்கும் சிங்கமுகத்துடன், பிளந்த வாய், நிமிர்ந்த காதுகள், உருக்கிய பொன் போன்று ஒளிரும் கண்கள், தீர்க்கமான பார்வை, அகன்ற நெற்றி, வீங்கிய கழுத்து, விசாலமான மார்பு, ஒட்டிய வயிறு, தலைக்குமேல் வெண்குடை என அந்த நரசிம்மர் நிற்கும் கோலம் மிக மிக சிலிர்ப்பானது.

இந்த நரசிம்மர் எப்போதும் உக்கிரமாக இருப்பதால் ஒருவித அனலும் வெப்பமும் இருந்து கொண்டே இருந்தது. அதைத் தணிக்கத்தான் பெரிய குளம் எதிரில் வெட்டப்பட்டது, அதற்கு நரசிம்ம தீர்த்தம் எனப் பெயர், அதன் பின்பே இந்த அனல் கட்டுப்பட்டது.

இந்த ஆலயம் மிக மிக சக்திவாய்ந்தது. எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களை ஒழித்து அடக்கி வெற்றித்தரும் ஆலயம் இது.

இந்த நரசிம்மரை வழிபட்டே பாண்டியர்கள் இப்பக்கம் காவல் பெற்றனர், அப்போதுதான் ஈசனே பராகிரம பாண்டியனிடம் வந்து தனக்கு காசியில் ஆலயமில்லை இங்கே ஒரு ஆலயம் கட்டு எனச் சொல்லி காசி போலவே இங்கும் ஒரு ஆலயம் எழுப்பப்பட்டு அது தென்காசி ஆலயம் என்றாயிற்று.

தென்காசி ஆலயம் எழும்ப மூலக் காரணம் இந்த நரசிம்மர்.

இங்கு வேண்டினால் எல்லா எதிரிகள் தொல்லையும் ஒடுங்கும். பாண்டிய மன்னர்களுக்கே காவல் தந்த நரசிம்மர் தன்னை வணங்கும் ஒவ்வொருவருக்கும் பெரும் காவல் தருவார், எதிரிகளை ஒழித்துத் தருவார்.

இந்த ஆலயத்தில் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜை விசேஷம், நரசிம்ம ஜெயந்தி மகா விசேஷம்.

ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று 16 வகை மூலிகை ஹோமம் உள்பட ஐவகை ஹோமமும், தொடர்ந்து பால், இளநீர், திரவியப்பொடிகளால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றது, இந்த 16 வகை மூலிகை ஹோமம் மிகச் சிறந்த பலனைத் தரும்.

இங்கு வழிபடும் போது. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் நினைத்த வரம் கிடைக்கும், இவரை வணங்கிச் செல்வோர் தம் பகைவர்களைச் சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். இங்கு வழிபட்டால் நீண்ட கால துன்பங்கள் நீங்கும்.

கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டால் அறிந்தும் அறியாமலும், போன, இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும். எல்லா உலக நன்மையும் இன்பமும் சூழும்.

கடன் தொல்லை, கல்யாணத் தடை, நீண்ட நாள் நோய், நீதிமன்ற வழக்கு ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலம் இந்த ஆலயம்.

குற்றாலம் பக்கம் தென்காசி பக்கம் செல்லும்போது கீழப்பாவூர் நரசிம்மரை தரிசிக்க மறவாதீர்கள், நரசிம்ம அவதாரம் என்பது அக்னியும் இரத்தமும் சேர்ந்த தத்துவத்தைக் குறிப்பது.

உடலின் இரத்தத்தில் உஷ்ணம் உரிய அளவே இருத்தல் வேண்டும். அது கூடினாலும் குறைந்தாலும் நோயாகும், இரண்யகசிபுவின் இரத்தத்தை பகவான் உறிஞ்சினார் என்பது அவன் உடல் இரத்தம் கொண்டிருந்த உஷ்ண அகந்தையினை அடக்கினார் எனும் தாத்பரியம்.

நரசிம்மரை வணங்க வணங்க உடலின் உஷ்ணம் கட்டுப்படும், உஷ்ணம் கட்டுப்பட்டால் சிந்தையும் இதர எண்ணங்களும் சீர்பெறும், சீர்பெற்ற சிந்தை தெளிவான நிதானமான செயலுக்கு வழிவகுக்கும். அவர்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும்.

அவருக்குப் பானகமும், இளநீரும் கொடுக்கும் தாத்பரியம் இதுதான்.

ஆம், நரசிம்மரை வணங்கினால் உடல் உஷ்ணம் கட்டுப்படும், இதனால் உடல்நோய் தீரும். அப்படியே சிந்தையும் மிக மிக துல்லியமானதாக மாறும்.

இந்த ஆலயம் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் நரசிம்மர் போலவே பெரும் அதிசயம் கொண்டது, ஆம் ஸ்ரீரங்கத்தில் நரசிம்மர் சந்நதியில் சிம்மத்தின் உறுமல் கேட்பது இயல்பு. இப்போதும் பக்தர்களின் காதில் அந்தச் சிம்மத்தின் கர்ஜனை அங்குக் கேட்கும்.

அதே அதிசயம் இந்த ஆலயத்திலும் உண்டு, முன்பு மாலை வேளையில் மிகப் பெரியதாக அங்கு வழிபடும் பக்தர்களுக்கெல்லாம் அக்குரல் கேட்டிருக்கின்றது, இப்போதும் மனமுருக தன்னிடம் கேட்கும் பக்தர்கள் காதில் சிம்ம கர்ஜனை விழுகின்றது.

அது நான் உனக்கு இருக்கும் போது என்ன கவலை? எல்லா நிலையிலும் நான் உன்னை காப்பேன் என பகவான் பக்தனோடு பேசும் மொழி, நரசிம்ம மொழி. அந்தக் கீழப்பாவூர் ஆலயம் சென்று வணங்குங்கள். மனமார அந்த நரசிம்மரைப் பணிந்தால் பிரகலாதன் பணிந்தது போல் பணிந்தால் உங்கள் காதிலும் அந்த நரசிம்மம் தன் சிம்மமொழியில் பேசும். இது சத்தியமான உண்மை.

நரசிம்மர் ஆலயங்கள் : 10 அவனியாபுரம் நவ நரசிம்மர்.

திருவண்ணாமலை அருகே வந்தவாசி பக்கமாக அமைந்திருக்கின்றது அந்த அவனியாபுரம் நவ நரசிம்மர் ஆலயம், ஒரே ஆலயத்தில் ஒன்பது நரசிம்மமாக அவர் எழும்பியிருக்கும் தலம் அது.

“அவனி நாராயணபுரம்” எனும் பெயரே மருவி அவனியாபுரம் என்றாயிற்று, அவனி என்றால் சிம்மம் என சமஸ்கிருதத்தில் பொருள் உண்டு.

சிறிய குன்றின் மேல் இப்படி நவநரசிம்மர்கள் அமர்ந்து அருள்பாலிப்பது வேறு எங்கும் இல்லாத கோலம் என்பதால் இந்தத் தலம் “தட்சண அகோபிலம்” என அழைக்கப்படுகின்றது.

இந்தத் தலத்தின் வரலாறு இரணியனைப் பகவான் நரசிம்மமாய் அழித்த காட்சியில் இருந்து துவங்குகின்றது, நரசிம்ம அவதாரம் வெகு முடிவாக முடிந்துவிட்ட ஒன்று, ஓரிரு நாழிகையிலே அது முடிவடைந்தும் விட்டது, அதனால் அக்கோலத்தை தேவர்கள் யாரும் பார்க்கமுடியவில்லை, அக்குறை அவர்களுக்கு இருந்தது.

அவர்கள் இந்த மலையில் வந்து பகவானை நோக்கித் தவம் செய்தார்கள், தவத்தின் உக்கிரமாய் வெப்பாலை மரமாக மாறிப்போனார்கள், அவர்களின் பக்திக்கு இறங்கி நரசிம்ம வடிவாய்ப் பகவான் காட்சிக் கொடுத்தத் தலம் இது.

அவரின் உக்கிர வடிவம் கண்டு பிரம்மனும் யாகம் செய்து வழிபட்ட தலமும் இதுவே, அதன்பின் தேவர்களின் வேண்டுதலினால் பகவான் அதே கோலத்தில் நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார்.

தேவர்கள் வெப்பாலை மரமாக நின்று தவம் செய்த அடையாளமாக இன்றும் அங்கு வெப்பாலை மரங்கள் உண்டு.

பிருகு முனிவர் பகவானிடம் பெரும் பக்தி கொண்டவர், ஆனால் அவருக்கு முக்தி கிட்டவில்லை. அவர் அக்குறை தீர பகவானிடம் வேண்டினார். பகவான், பிருகு முனிவர் கனவில் தோன்றி நீ அவனி நாராயணபுரம் என்னும் திருத்தலம் சென்று என்னைக் குறித்து தவம் செய். நான் அங்கு உனக்குக் காட்சித் தந்து முக்தி அளிப்பேன் என்றார்.

அப்படியே பிருகு மகரிஷியும் அவனிநாராயணபுரம் வந்து ஸ்ரீமத்நாராயணனைக் குறித்து தவம் செய்தார். பிருகு மகரிஷியின் தவத்திற்கு இரங்கிய ஸ்ரீமத் நாராயணன் மகரிஷிக்குக் கொடுத்த வாக்கின் படி தான் நின்ற கோலம், சயனிக்கும் கோலம் என எல்லாக் கோலமும் காட்டி முக்தியும் கொடுத்தார்.

அவர் பொருட்டு இந்த ஷேத்திரத்திலேயே இலட்சுமி தேவி சமேத நரசிம்மராகவும், ஸ்ரீரங்கநாயகி சமேத ரங்கநாதராகவும், அமிர்தவள்ளி தாயார் சமேத யோக நரசிம்மராகவும், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாளாகவும், அலர்மேலு மங்கை சமேத ஸ்ரீசீனிவாச பெருமாளாகவும் ஆகிய ஐந்து அவதாரங்களையும் தந்தருளி ஐந்து மூர்த்தி சிலை ரூபமாக காட்சித் தந்தார், அதனால் இன்றும் அந்த ஐந்து வடிவ பகவான் கோலங்களும் இங்கு உண்டு.

இந்த இரு புராணங்களில் இருந்து இந்த ஆலய வரலாறு துவங்கி இன்றுவரை அருள்மழை பெருகி நிற்கின்றது.

எல்லா நரசிம்மர் ஆலயத்திலும் பகவான் மட்டுமே நரசிம்ம கோலத்துடன் இருப்பார், ஆனால் இங்கே பகவானும், பிராட்டியாரும், கருடாழ்வாரும் சிம்ம முகத்துடன் காட்சி தருகின்றனர், அதாவது பகவானின் நரசிம்ம அம்சம் தாயாரில் உண்டு, அவளே நரகாசுரனை வதம் செய்தாள். கருடனிலும் உண்டு அதனாலே அவன் பல சம்ஹாரங்களைச் செய்தான் என்பதைச் சொல்லும் தத்துவம் இது.

திவ்ய தேசங்களுக்கு இணையான இந்தத் தலத்தின் தாத்பரியம் எளிது, நவகிரகங்களின் பலன்களை அதாவது அறிவு, புத்தி, செல்வம், சுகம், தைரியம், ஆயுள் என எல்லாமும் மொத்தமாகத் தரும் ஆலயம் இது.

ஒவ்வொரு நரசிம்மரும் ஒரு கிரஹத்துகுரிய பலன்களைத் தருவார், இன்னும் ஆழமாகச் சொன்னால் நவக்கிரகங்கள் என்பது ஒருவன் அவன் கர்மத்தைச் செய்ய வழிசெய்யும் அருளைத் தருபவை, இந்த நரசிம்மர் அந்தக் கர்மத்தை நல்லபடியாக ஒருவன் செய்துமுடிக்கும் எல்லா வரமும் அருள்வார்.

சிறிய குன்றின் அடியில் இருந்து படியேறினால் 30 ஆம் படியில் லட்சுமி நரசிம்மர் சந்நிதியினை அடையலாம்.

அங்கே சிறிய மலை இடுக்கில் கருவறையில் அருள்பாலிக்கின்றார் லட்சுமி நரசிம்மர். அவருடைய மடியில் லட்சுமி பிராட்டியார் சிம்ம முகத்துடன் காட்சி தருகிறார்.

அடுத்து தனிச் சந்நிதியில் இங்கே அலர்மேல் மங்கை தாயார் அருள்கிறார். தாயார் சந்நிதிக்கு அடுத்தாற்போல் ஒரே சந்நிதியில் வீர நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், உக்கிர நரசிம்மர், பிரகலாத நரசிம்மர், மங்கள நரசிம்மர் என்று பஞ்ச நரசிம்ம மூர்த்திகள் தெற்கு நோக்கி அருள்கின்றனர்.

அவர்களுக்கு அருகில் இரண்டு நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன, அவை நாகதோஷமெல்லாம் நீக்கும்.

ஆக, மலையின் மத்தியில் லட்சுமி நரசிம்மர் சந்நிதியில் மூன்று நரசிம்மர்கள், அவரை வலம் வரும் பாதையில் ஐந்து நரசிம்மர்கள், மலைக்கு மேலே யோக நரசிம்மர் என ஒன்பது நரசிம்மர்கள் இங்கே அருள்கிறார்கள்.

இந்த நரசிம்மரைத் தரிசித்து மேலே சென்றால், மலை உச்சியில் திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசிக்கலாம். அவரை வலம் வரும்போது, வெளிச்சுற்றில் சோளிங்கர் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள், அமிர்தவல்லி தாயார் ஆகியோர் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்பாலிப்பர்.

ஐந்து பெருமாள் அருள்பாலிப்பதால் பிருகு முனிவருக்கு இந்த ஐந்துவடிவமும் காட்டி அவர் வழிபட்டதால் இத்தலம் “பஞ்ச திருப்பதி” என்றும் அழைக்கப்படுகின்றது.

சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவதால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும், திருமணத் தடைகள் நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். மேலும் பித்ரு தோஷம் போன்ற தோஷங்கள் விலகும் என்பது ஐதிகம்.

இந்தக் கோவிலின் விசேஷம் துலாபாரம். குழந்தை இல்லாத தம்பதியினர் இந்தத் தலத்துக்கு வந்து லட்சுமி நரசிம்மரை வேண்டிக்கொண்டால், விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும், பெருமாளின் திருவருளால் பிள்ளை வரம் பெற்றவர்கள், தங்கள் குழந்தையைக் கொண்டு வந்து எடைக்கு எடை துலாபாரம் அளிப்பது வழமை.

கார்த்திகையில் வழிபடவேண்டிய முக்கிய நரசிம்மர் ஆலயம் இது, ஒன்பது நரிசம்மரை ஒரே இடத்திலும், ஐந்து பெருமாளையும் ஒரே இடத்திலும் தரிசிப்பது என்பது எங்குமில்லாச் சிறப்பு.

இங்கு வழிபட்டால் எல்லா நரசிம்ம தலத்தின் அருளும் உண்டு, திருப்பதி முதல் திருவரங்கம் வரை எல்லா பெருமாள் கோவிலில் வழிபட்ட பெரும் பலனும் உண்டு.

அப்படியே நவக்கிரகங்கள் அனைத்தினையும் அவற்றின் தலங்களில் வழிபட்ட பெரும் அருளும் உண்டு, எல்லாக் கிரஹங்களின் தோஷமும் சாபமும் இங்கே தீரும்.

கார்த்திகையில் இந்த அவனியாபுரம் நவ நரசிம்மர் ஆலயத்துக்குச் சென்று நம்பிக்கையுடன் தரிசித்தால் எல்லாமும் நலமாகும், எல்லாச் சாபமும் பாவமும் கர்மமும் தீர்ந்து நல்வாழ்வு பெருகும்.

இங்குத் திருப்பதியைப் போலவே சித்திரை, புரட்டாசி ஆகிய இரண்டு மாதங்களில் பிரம்மோற்சவம், வைகாசி மாதம் நரசிம்ம ஜெயந்தி, ஆடிப் பூரம், கிருஷ்ண ஜெயந்தி திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மாசி மகம் ஆகிய விழாக்கள் பிரசித்தம்.

திருவண்ணாமலை பக்கம் இருப்பவர்கள் வாய்ப்பு கிடைத்தால் கார்த்திகையில் வழிபடுங்கள், வாய்ப்பு இல்லாதவர்கள் அவனியாபுரம் நவ நரசிம்மரை மனதால் வழிபடுங்கள். நிச்சயம் ஒருநாள் அவரே உங்களை அங்கு அழைத்துத் தன் ஒன்பது திருக்கோலமும் காட்டி உங்கள் சாபமெல்லாம் கர்மமெல்லாம் தீர்த்து பெருவாழ்வு வாழவைப்பார், நவக்கிரங்களின் தோஷமெல்லாம் சந்தோஷமாக மாற்றி உங்களை எல்லா நலமும் அருளும் சூழ வாழவைப்பார்.

அப்படியே ஐந்து கோலத்தில் நின்றும், படுத்தும், நடந்தும் பக்தர்களைக் காக்கும் பகவான், ஐந்து நிலைகளில் உலகைக் காக்கும் பகவான் உங்களையும் எல்லா வகையிலும் எல்லா நிலையிலும் முழுக்கக் காத்து வருவார். இது சத்தியம்.

நரசிம்மர் ஆலயங்கள் : 11 இஞ்சிமேடு மற்றும் செவிலிமேடு நரசிம்மர்.

நரசிம்மருக்கான ஆலயங்களில் முக்கியமானது திருவண்ணாமலை அருகே செய்யாற்றின் கரையில் அமைந்திருக்கும் இஞ்சிமேடு ஆலயம், வரதராஜ பெருமாள் ஆலயம் என அது அமைந்திருந்தாலும் அங்கிருக்கும் நரசிம்மர் மகா பிரசித்தியானவர்.

இந்த ஆலய வரலாறு பரத்வாஜ முனிவரிடம் இருந்து துவங்குகின்றது. ரிஷிகளில் அவர் மிகச் சிறப்பானவர், பாரத கண்டமெங்கும் பல இடங்களில் தங்கியிருந்தார், துறவியரும் ஞானியரும் ஒரே இடத்தில் தங்குவது வழமையல்ல. அப்படியானவர் இந்தப் பாஹூ நதி, வேத நதி எனும் செய்யாற்றின் கரையிலும் தங்கியிருந்தார்.

பரத்வாஜர் மிகப்பெரிய ரிஷி, வால்மீகியின் சீடர், ராமபிரானோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். அயோத்தி விட்டு நீங்கிய ராமன் பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் தங்கியிருந்து நிறைய கற்றும் கொண்டார், பின் தன் இலங்கை போர் முடிந்து அயோத்தி திரும்பும் போது பரத்வாஜரைச் சந்தித்துவிட்டே சென்றார்.

அந்த அளவு இருவருக்கும் உள்ள பந்தம் நெருக்கமானது.

பரத்வாஜர் எனும் சொல் பரத் வாஜர் என வரும் அதாவது பெரிய விஷயத்தை தாங்கி நிற்பவர் என்றாகும். இஞ்சி என்றால் காவல் நிறைந்தது, பெரிய மதில் என்றும் பொருள் உண்டு, பெரிய காவலை தரும் பரத்வாஜ முனிவர் யாகசாலை இருந்த இடம் இஞ்சிமேடு என்றாயிற்று.

இதன் பழைய பெயர் ஸ்ரீநரசிம்மபுரம்.

இந்தத் தலத்தில் ராமபிரானின் காட்சியினைக் கண்ட பரத்வாஜர் இன்னொரு அழகான காட்சியும் கண்டார். ராமபிரான் இவருக்குத் தன்னை வெளிபடுத்தும்போது நரசிம்மமாகவும் காட்சியளித்தார், தன் அவதாரத்தில் நரசிம்ம சாயலும் இருந்தது என்பதைக் காட்டினார், ராமனாகவும் நரசிம்மமாகவும் முனிவருக்கு அருள் பாலித்தார் ராமபிரான்.

அப்போது இன்னுமோர் அதிசயத்தையும் காட்டினார். ராமனின் வில்லின் மேல் நரசிம்மர் அமர்ந்திருக்கும் நுணுக்கமான காட்சியினைக் காட்டினார், அதாவது தன் சக்தியில் தன் வில்லில் காவலாக இருப்பது நரசிம்மரே என்பதை உணர்த்தி தன் வில்லின் மேல் அவர் அமர்ந்திருக்கும் கோலத்தைக் காட்டினார்.

அந்தக் கோலத்திலே மக்களுக்கு அருள்பாலிக்கவேண்டுமென பரத்வாஜர் கேட்க அப்படியே அந்தக் கோலத்திலே இன்றுவரை அருள்பாலிக்கின்றார் ராமபிரான்.

இப்படிப் பரத்வாஜ முனிவருக்கு ராமபிரான் நரசிம்ம பெருமையினை உணர்த்திய தலம் இது, இங்குள்ள நரசிம்மரை வழிபட்டால் ராமபிரானின் எல்லா அருளும் பெருகிக் கிடைக்கும்.

சோழமன்னர்கள் தாங்கள் ராமனின் வாரிசுகள் எனப் பெருமையாகக் கருதினார்கள். அதனால் இக்கோவிலை அழகுற பெருமையுற அமைத்துக் கொடுத்தார்கள், மிக மிக அற்புதமான அழகான ஆலயம் இது.

இந்த ஆலயம் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் என அடையாளம் கொண்டது. வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார் தனியாக அருள்பாலிப்பார்கள்.

அப்படியே இங்கு நரசிம்மர் கல்யாண லட்சுமி நரசிம்மர் எனத் தேவியோடு சந்நதிக் கொண்டிருக்கின்றார், அவரை வணங்கியபடி பிரகலாதன் நிற்பது இங்குச் சிறப்பு.

அப்படியே இங்கு ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர், மற்றும் கருடாழ்வார் ஆகியோருக்குத் தனித்தனி சந்நதிகள் உண்டு.

ராமரின் அருகிலேயே பெரிய திருவடி கருடாழ்வாரும், சிறிய திருவடி அனுமனும் அருள்பாலிப்பதும், நரசிம்மர் மடியில் உள்ள தாயார் நரசிம்மரை ஆலிங்கனம் செய்திருப்பதும் சிறப்பு.

ராமர் என்றால் தன்னை நம்பிய எல்லோருக்கும் நல்வாழ்வும் காவலும் தரும் சிறப்பான அவதாரம், அவ்வகையில் இந்த ஆலயம் எல்லோருக்கும் நல்வாழ்வினை வழங்கும்.

அதுவும் பிரிந்தவர் சேர்வது முதல் திருமண வரம்வரை நிரம்ப அருளும் ஆலயம் இது, இதனாலே இங்குள்ள நரசிம்மர் லட்சுமி நரசிம்மர் என அழைக்கப்படுகின்றார்.

இங்குள்ள தாயார் சக்திவாய்ந்தவர், அவரிடம் எந்தவித கோரிக்கை என்றாலும் 48 நாள் தொடர்ந்து அகல்விளக்கில் மஞ்சளிட்டு வணங்கி வந்தால் நிச்சயம் நடக்கும், சாட்சிகள் நிரம்ப உண்டு.

இங்கு ஒவ்வொரு சுவாதி நட்சத்திரம் அன்று நடக்கும் யாகம் இன்னும் இன்னும் விசேஷம்.

இந்த ஆலயம் வாழ்வின் காவலைத் தரும், திருமண வரம் தரும், இன்பவாழ்வுக்கு எதெல்லாம் தடையோ அதெல்லாம் அழித்துப்போடும், தர்மத்தின் கொடியினை ஏற்றித் தரும்.

இத்தலம் ஆழமான தாத்பரியத்தையும் சொல்கின்றது. கருணையே வடிவான ராமபிரான் ராவணனை இன்று போய் நாளைவா எனக் கடைசிவரை அவகாசம் கொடுத்தார், அவன் திருந்தாமல் மாண்டபின் ராவணுக்காக ராமன் பாதம் பணிந்து மன்றாடினான் விபிஷ்ணன்.

அப்படியே இங்கு பிரகலாதன் நரசிம்மரிடன் தன் தந்தைக்காக மன்றாடிப் பணிந்து நிற்கின்றான்.

இத்தலம் சொல்லும் சூட்சுமம் அதுதான். இங்கு முன்னோர்கள் செய்த பாவம் தீரும், அறிந்தும் அறியாமலும் செய்த அத்தனை பாவமும் வம்சமவழி சாபமும் தீரும்.

வாழ்வின் சிக்கலுக்கும் தீரா வலிக்கும் பெரும் பெரும் குழப்பங்களுக்கும் முன் ஜென்ம கர்மா காரணம், சில சாபங்களும் காரணம். இந்தத் தலம் அதனையெல்லாம் தீர்த்துவைத்து களைந்துபோட்டு நல்வாழ்வை அருளும்.

இந்த ஆலயத்துக்குச் சென்று தீபமிட்டு மலர்களிட்டு வரதராஜரை வணங்கி தாயாரை வணங்கி நரசிம்மரை வணங்கி ராமபிரானிடம் பணிதல் வேண்டும்.

வேறு எங்குமே இல்லாதபடி வில்லின் மேல் நரசிம்மரைக் கொண்டபடி அருள்வழங்கும் அந்தத் திருக்கோலத்தை கண்டால் அந்த அருள் வழங்கும் கோலத்தைக் கண்டால் எல்லாப் பாவமும் நொடியில் தீரும்.

பரத்வாஜர் எனும் மாமுனியால் பிரதிர்ஷ்டை செய்யப்பட்ட இந்தச் சந்நதி அவரின் பெரும் அருளையும் தரும்.

பரத்வாஜ முனி விருத்தோம்பலுக்கும் இன்னும் பல நற்பண்புகளுக்க்கும் பிரசித்தியானவர், தவத்தில் காட்டில் இருந்தாலும் இல்லற தம்பதிகளை வாழ்த்தி வாழ வழி பல செய்தவர்.

ராமனும் சீதையும் கானகத்தில் குறைவின்றி வாழ அவர் எல்லா வழியும் செய்தார். அப்படியே ராமன் அயோத்தி திரும்பும்போதும் வாழ்த்தி வழியனுப்பினார்.

அந்த மகா முனியின் ஆசி இங்கு ராமனையும் நரசிம்மரையும் வணங்கும்போது உங்களுக்கும் கிடைக்கும், உங்கள் குடும்ப வாழ்வு இனிமையும் அர்த்தமுள்ளதும் பயனுள்ளதுமாகும். அதனாலேதான் இங்கிருக்கும் நரசிம்மர் கல்யாண நரசிம்மர் எனப் பெரும் வரம் தரும் நரசிம்மராக குடும்பம் காக்கும் நரசிம்மராக வரமருள்கின்றார். இஞ்சிமேடு கல்யாண நரசிம்மரிடம் வேண்டி கிடைக்கா வரம் என குடும்பத்தில் எதுவுமிருக்காது , அந்தச் சந்நதி கண்ட குலமும் குடும்பமும் வாழும், முயற்சித்துப் பாருங்கள். நீங்களே உணர்வீர்கள். இது சத்தியம்.

இன்னொரு ஆலயம் செவிலி மேடு நரசிம்மர் ஆலயம். இது காஞ்சிபுரம் அருகில் உள்ளது, பாலாற்றின் கரையில் உள்ளது.

பழைய சோழமன்னர்களின் செவிலிதாய்கள் வசித்த மாளிகை இருந்த இடம், பல்லவ மன்னர்களின் செவிலியர் இருந்த இடம் என்பதால் இதற்கு செவிலிமேடு எனப் பெயர் வந்தது என்பதும், செவ்வல்லி பூக்கள் நிறைந்த இடம் என்பதால் செவ்வல்லி மேடு என்றாயிற்று என்பதும், காஞ்சி நகரை ஒட்டிப் பாலாற்றங்கரையில் இருக்கும் செவிலிமேடு லட்சுமி நரஸிம்மர் கோயில். ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. பல்லவ ராணியின் செவிலித்தாய் இந்தப் பகுதியில் குடியிருந்ததால் செவிலிமேடு ஆனதாகச் சொல்லப்படுகிறது.

அதே நேரம் ராமர்மேடு என அது அழைக்கப்பட்டது. பழைய ராமர் ஆலயம் ஒன்று அங்கே இருந்தது எனும் குறிப்பும் உண்டு, செவ்வல்லி பூக்கள் நிறைந்து கிடந்தது அந்த ராமர்கோவில் குளத்தில்தான் என்பதும் சில குறிப்புகள் சொல்வது.

இவ்வாலயம் சோழர் காலத்தில் கட்டப்பட்டு பின் பல்லவர் காலத்தில் இன்னும் பெரிதானது, விஜயநகர அரசுகள் இன்னும் இதற்குத் திருப்பணி செய்திருக்கின்றனர்.

மிகப் பிரமாண்டமான இக்கோவில் காலத்தால் பழுதடைந்து இப்போது பக்தர்களின் பெரும் முயற்சியால் மீட்கபட்டு துலங்கி கொண்டிருக்கின்றது.

ஐந்துநிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இக்கோவிலின் துவஜஸ்தம்பத்தை கடந்து, மகாமண்டபத்தின் உள்ளே நுழைந்தவுடன், பெரிய திருவடி கருடன் தனிச் சந்நிதியில் இருக்கிறார். பச்சை கல்லில் வடிவமைக்கப்பட்ட கருடன் விசேஷமானது.

அதை அடுத்து தெற்கு நோக்கி ஆஞ்சநேயர் சந்நிதி உண்டு, இதனை இங்கு ஸ்தாபனம் செய்ய சொன்னவர் காஞ்சி மகா பெரியவர், அதன் பின் இந்த ஆலயம் இன்னும் சக்தியாயிற்று.

அர்த்த மண்டபத்தில் சுவர் ஓரமாக மேடையில் ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் அருள்புரிவார்கள். அடுத்து எட்டடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார் லட்சுமி நரஸிம்மர்.

அந்த நரசிம்மரின் மேலே உயர்த்திய கைகளில் சங்கும், சக்கரமும் அழகாக காட்சியளிக்கும். வலது கரம் கீழிறங்கி, அபய ஹஸ்தமாக பக்தர்களை காக்கும், இடதுகரம் தன் மடியில் இருத்தியிருக்கும் லட்சுமியை அன்போடு அரவணைத்துக்கொண்டிருக்கும்.

சுவாமிக்கு முன்புறம் உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். உற்சவர் ஸ்வாமிக்கு ‘செளந்தர்ய வரதர்’ என்று பெயர் . வெளிப்பிராகாரத்தில் தனிச் சந்நிதியில் உறைகிறார் தாயார் செளந்தரவல்லி.

ஆண்டுக்கு ஒருமுறை காஞ்சி வரதராஜர் இந்த ஆலயத்துக்கு சித்ராபௌர்ணமி அன்று வருவார், ஆப்கானிய படையெடுப்பின் போது வரதர் இங்குதான் காக்கப்பட்டார் என்பதால் இன்றுவரை அந்தத் தொடர்பு உண்டு, காஞ்சி வரதர் கோவிலுக்கும் இந்த ஆலயத்துக்கும் தொடர்புகள் மிக அதிகம்.

இந்த நரசிம்மரை மகான் ஸ்ரீ ராமானுஜர் தொழுது ஆராதித்தார் அவரின் வாழ்வில் மிக முக்கிய இடம்பிடித்த நரசிம்ம தலம் இது, அவர் இப்பக்கமே தங்கி இருந்து நரசிம்மரை வழிபட்டிருகின்றார், இங்குள்ள “சாலைக் கிணறு” என்பது அப்போது வேதபாடசாலை கிணறு என்றிருந்தது, அவர் அந்த கிணற்று நீரால் நரசிம்மரை வழிபட்டிருக்கின்றார்.

இந்தக் கிணற்றின் கீழ் சில அடையாளமும் பல வரலாறும் உண்டு, அங்குச் சிறிய மண்டபம் உண்டு, சித்ரா பௌர்ணமி அன்று இக்கிணற்றின் நீர் முழுக்க இறைக்கப்பட்டு அந்தக் கிணற்றின் மண்டபத்தில் நரசிம்மருக்குப் பூஜை செய்யப்படும்.

இது சுல்தான்களின் காலத்தில் நரசிம்மர் இங்கு மறைக்கப்பட்ட வரலாற்றைச் சொல்வது.

இது நாயக்கர் காலம் வீழ்ந்தபின் இப்பக்கம் அட்டகாசம் செய்த பிஜப்பூர் சுல்தான்கள் காலத்தில் நடந்த கொடுமைகள், அவர்கள் காலத்தில் சிதம்பரம் ஆலயம் வரை பாழ்பட்டது, திருவண்ணாமலை சிதலமடைந்தது, அப்போது இந்த நரசிம்மரும் வரதரும் இப்படிக் கிணற்றடியில் வைத்து காக்கப்பட்டார்கள்.

அதெல்லாம் இங்கு நினைவுகூறப்படுகின்றது, பக்தியோடு வரலாற்றையும் தரும் ஆலயம் இது.

ராமானுஜர் ஏற்படுத்திய வழக்கபடி இங்கு ஆதிசங்கரரின் “லட்சுமி நரஸிம்ம காரலவம்ப ஸ்தோத்திரம்” பாடப்படுவது சிறப்பு, ஆதிசங்கரர் காஞ்சிபுரம் வந்தபோது அவர் இதனைத் தந்ததாக சில குறிப்பு உண்டு. ஆனால், ஆதாரமில்லை. எனினும், இந்த ஸ்லோகம் அவரால் வழங்கப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சுவாதி நட்சத்திரத்தின்போது மூலவருக்குத் திருமஞ்சனம் உண்டு. இன்னும் பல விழாக்களும் கொண்டாட்டமும் உண்டு, இந்த ஆலயம் நரிசமம்ருக்கான தனித்துவமான ஆலயம், பல்லவமன்னர்களின் விருப்பத்துகுரிய இடம்.

பல்லவ மனன்ர்களும் நரசிம்மரும் பிரிக்கமுடியாதவர்கள். அவர்கள் பெயர்கள் பல நரசிம்ம பல்லவன் என அமைந்தே வரும், அந்த நரசிம்ம எனும் அடையாளத்தைக் கொடுத்தது இந்தச் செவிலிமேடு நரசிம்மரே.

திருவண்ணாமலை பக்கம் செல்லும் போது இஞ்சிமேடு நரசிம்மரையும், காஞ்சிபுரம் பக்கம் செல்லும்போது இந்தச் செவிலிமேடு நரசிம்மரையும் வழிபடத் தவறாதீர்கள், மிகச் சக்திவாய்ந்தவர், பல்லவ மன்னர்களுக்கு அருள்பாலித்த இந்த நர்சிம்மர்.

அங்கு ஆதிரங்கரர் அருளிய .

“ஸ்ரீமத் பயோநிதி நிகேதன சக்ர பாணே
போகீந்த்ர போக மணி ரஞ்சித புண்ய மூர்த்தே |
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || “

செல்வங்கள் சேர் பாற்கடலில் இருப்பவரே, கையில் சுதர்சனம் என்னும் சக்கரப் படையைத் தாங்கியுள்ளவரே, அரவங்களின் அரசனான ஆதிசேஷன் தலையிலிருக்கும் நாக மணி உமிழும் ஒளியினால் ஒளியூட்டப்படுபவரே, நற்கருமமே வடிவானவரே, யோகங்களுக்கும், யோகிகளுக்கும் தலைவரே, என்றென்றும் நிலை நின்று பிறப்பு, இறப்பு என்னும் இந்தப் பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் தோணி போன்றவரே, திருமாமகள் தன்னோடு பிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக் கொடுத்து அருளுங்கள்!!!

ப்ரஹமேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீட கோடி
சங்கட்டித அங்க்ரி கமல அமல காந்தி காந்த |
லக்ஷ்மீ லஸத் குச ஸரோருஹ ராஜ ஹம்ஸ
லக்ஷ்மி நரசிம்ம மம தேஹி கராவலம்பம் ||

பிரம்மன், இந்திரன், பரமசிவன், மருத் கணங்கள், கதிரவன் போன்ற கோடிக்கணக்கான தேவர்களின் மகுடங்கள் கூடி சேர்ந்து ஒளிவிடுவதால், மேலும் ஒளியூட்டப்பட்ட, தாமரை மலரைப் போன்ற சிவந்த, தூய்மையான, மனங்கவர் திருப்பாதங்களை உடையவரே!!! திருமகளை அணைத்துக் கொண்டு, தாமரை மலர் போன்ற அவரது (தாயாரது) திரு மார்பகத்தில் மீது விளையாடும் ஒரு சிறந்த அன்னப் பறவையைப் போல இருப்பவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!

ஸம்ஸார கோர கஹனே சரதோ முராரே
மார உக்ர பீகர ம்ருக ப்ரவர ஆர்த்திதஸ்ய |
ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக நிபீடிதஸ்ய
லக்ஷ்மி நரசிம்ம மம தேஹி கராவலம்பம் ||

பிறவியென்னும் அச்சமூட்டும் இருண்ட காட்டினுள் நான் சென்று கொண்டிருக்கிறேன். (தகாத) காமமென்னும் கொடிய விலங்குகளாலும், பொறாமை போன்ற காட்டு தீயாலும் நான் மிகவும் துன்புறுத்தப் படுகிறேன். முரன் போன்ற பல அசுரர்களை கொன்றொழித்தவரே, திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!

ஸம்ஸார கூபம் அதி கோரம் அகாத மூலம்
ஸம் ப்ராப்ய துக்க ஸத ஸர்ப்ப ஸமாகுலஸ்ய |
தீனஸ்ய தேவ க்ருபணா பதமாகதஸ்ய
லக்ஷ்மி நரசிம்ம மம தேஹி கராவலம்பம் ||

இந்தப் பிறவியானது ஆழம் காண இயலாத ஒரு பாழுங்கிணறு. இதன் உள்ளே நூற்றுக் கணக்கான அரவங்கள் (பாம்புகள்) என்னைத் தீண்டுகின்றன. இவற்றால் துன்பமடைந்துள்ள எனக்கு- திருமாமகள் தன்னோடு என்றும் இணை பிரியாதிருக்கும் நரசிம்மரே,- எனக்கு கை கொடுத்து அருளுங்கள்!!!

ஸம்ஸார ஸாகர விஷால கரால கால
நக்ர க்ரஹ க்ரஹண நிக்ரஹ விக்ரஹஸ்ய |
வ்யக்ரஸ்ய ராக ரஸனோர்மி நிபீடிதஸ்ய
லக்ஷ்மி நரசிம்ம மம தேஹி கராவலம்பம் ||

இந்தப் பிறவியென்னும் கரை காண இயலாத பெருங்கடலில் வீழ்ந்து தத்தளிக்கிறேன். காலமென்னும் முதலைகள் என்னை பீடித்து, தனது கூரிய பற்களால் கடித்துத் துன்புறுத்துகிறது. உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, புலனின்பங்களின் சுவை என்னும் பேரலைகளால் அலைக் கழிக்கப்பட்டு மிகுந்த துன்பம் அடைந்துள்ளேன். திருமாமகள் தன்னோடு என்றும் இணை பிரியாதிருக்கும் லக்ஷ்மி நரசிம்மரே, எனக்கு கை கொடுத்து அருளுங்கள்!!!

ஸம்ஸார வ்ருக்ஷம் அக பீஜம் அனந்த கர்ம
சாகா ஸதம் கரண பத்ரம் அனங்க புஷ்பம் |
ஆருஹ்ய துக்க பலிதம் பததோ தயாளோ
லக்ஷ்மி நரசிம்ம மம தேஹி கராவலம்பம் ||

பிறவியென்னும் ஒரு கொடிய விஷ மரத்தினில் ஏறி விட்டேன். என்னுடைய பாவம் என்னும் விதியினால் முளைத்த இந்த மரத்தில், (என்னுடைய) எண்ணிலடங்கா வினைப் பயன்கள் என்னும் நூற்றுக் கணக்கான கிளைகளும், புலனுறுப்புக்கள் என்னும் இலைகளும், (தகாத) காமம் என்னும் மலர்களும், துன்பங்கள் என்னும் பழங்களும் உள்ளன. காமத்தின் (இந்த மரத்தின் மலர்கள்) வாசனையால் தூண்டப்பட்டு, துன்பங்கள் என்னும் பழங்களை சுவைத்தேன். அதனால், மேலிருந்து கீழ் நோக்கி தலை கீழாக விழுந்து கொண்டு இருக்கிறேன். கருணையே வடிவானவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணை பிரியாதிருக்கும் லக்ஷ்மி நரசிம்மரே, எனக்கு கை கொடுத்து அருளுங்கள்!!!

தம்ஷ்டிராகரால விஷ தக்த விநஷ்ட மூர்த்தே |
நாகாரி வாஹன ஸுதாப்தி நிவாஸ சௌரே
லக்ஷ்மி நரசிம்ம மம தேஹி கராவலம்பம் ||

இந்தப் பிறவி கூரிய நஞ்சு நிறைந்த பற்களை உடைய ஒரு அரவமாகும் (பாம்பாகும்). இந்தப் பிறவியென்னும் அரவம் என்னைத் தன் நச்சுப் பற்களால் தீண்டித் துன்புறுத்துகிறது. (பாம்புகளின் எதிரியான) கருடன் மீதேறி வருபவரே!!! பாற்கடலில் வாழும் சௌரியே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணை பிரியாதிருக்கும் லக்ஷ்மி நரசிம்மரே, எனக்கு கை கொடுத்து அருளுங்கள்!!!

ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோரு
ஜ்வாலா வலீபி ரதிதக்த தனூரு ஹஸ்ய |
த்வத் பாத பத்ம ஸரஸீ ருஹமாகதஸ்ய
லக்ஷ்மி நரசிம்ம மம தேஹி கராவலம்பம் ||

இந்தப் பிறவியானது ஒரு கொடிய காட்டுத் தீப்போல என்னைத் துன்புறுத்துகிறது. தனது தீப் பிழம்புகளால் எனது மேனியையும், துடைகளையும் எரிக்கிறது. இதனால் துன்பமடைந்துள்ள நான், தங்களின் தாமரைப் பாதங்களாகியப் பொய்கையை நாடி வந்துள்ளேன். திருமாமகள் தன்னோடு என்றும் இணை பிரியாதிருக்கும் லக்ஷ்மி நரசிம்மரே, எனக்கு கை கொடுத்து அருளுங்கள்!!!

ஸம்ஸார ஜால பதிதஸ்ய ஜகந் நிவாஸ
ஸர்வ இந்த்ரியார்த்த படிஷாக்ர ஜஷோபமஸ்ய |
ப்ரோத் கண்டித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்ய
லக்ஷ்மி நரசிம்ம மம தேஹி கராவலம்பம் ||

புலனின்பங்கள் என்னும் புழுவைத் தன் தூண்டிலில் வைத்து, இந்தப் பிறவி விரித்த மாய வலையில் நான் சிக்கித் தவிக்கின்றேன். புலனின்பங்களை நாடி, தூண்டிலில் விழுந்து தன் தலையை இழந்துள்ள ஒரு மீனைப் போன்று தவிக்கிறேன். இவ்வுலகனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!!!

ஸம்ஸார பீகர கரீந்த்ர கராபி காத
நிஷ்பிஷ்ட மர்ம வபுஷ ஸகலார்த்தி நாச |
ப்ராண ப்ரயாண பவ பீதி ஸமாகுலஸ்ய
லக்ஷ்மி நரசிம்ம மம தேஹி கராவலம்பம் ||

இந்தப் பிறவியென்னும் மத யானை ஒன்று, என்னை தனது துதிக்கை மற்றும் தந்தங்களால் முட்டி, மிதித்து எனது மர்ம உறுப்புக்களைத் தாக்கித் துன்புறுத்துகிறது. மரண தசையைப் போன்று துன்பத்தில் பீடிக்கப்பட்டுள்ள என்னை திருமாமகள் தன்னோடு என்றும் இணை பிரியாதிருக்கும் லக்ஷ்மி நரசிம்மரே!!! கை கொடுத்து அருளுங்கள்!!!

அந்தஸ்ய மே ஹ்ருத விவேக மஹாதனஸ்ய
சோரை: ப்ரபோ பலிபிர் இந்த்ரிய நாமதேயை: |
மோஹாந்த கூப குஹரே வினிபாதிதஸ்ய
லக்ஷ்மி நரசிம்ம மம தேஹி கராவலம்பம் ||

புலன்கள் என்னும் திருடர்கள் எனது அறிவையும், விவேகமென்னும் சொத்துக்களைத் திருடி விட்டனர். இதனால், அகக் கண் குருடாகி, பிறவி யென்னும் இருண்ட பாழும் கிணற்றினுள் விழுந்து தவிக்கின்றேன். திருமாமகள் தன்னோடு என்றும் இணை பிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கை கொடுத்து அருளுங்கள்!!!

பத்வா களே யம படா பஹு தர்ஜயந்த
கர்ஷந்தி யத்ர பவ பாச சதைர்யுதம் மாம் |
ஏகாகினம்* பர வசம் சகிதம் தயாளோ
லக்ஷ்மி நரசிம்ம மம தேஹி கராவலம்பம் ||

காலனின் தூதர்கள், மரணமடையும் தருவாயில், என்னை பற்றுதல் என்னும் கயிற்றினால் கட்டி, திட்டித் துன்புறத்தி, இங்கும் அங்கும் அலைக் கழித்து இழுத்துச் செல்கின்றனர். யம தூதர்களில் கட்டுப்பாட்டில், எவ்வித உதவியும் இன்றி தனித்து விடப்பட்டுள்ள நான், மிகவும் அச்சத்தில் உள்ளேன். கருணையே வடிவானவரே!!! திருமாமகள் தன்னோடு என்றும் இணை பிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கை கொடுத்து அருளுங்கள்!!!

லக்ஷ்மீ பதே! கமலநாப! சுரேஷ! விஷ்ணோ!
வைகுண்ட்ட! க்ருஷ்ண! மது சூதன! புஷ்கராக்ஷ! |
ப்ரஹ்மண்ய! கேசவ! ஜனார்தன! வாஸு தேவ!
லக்ஷ்மி நரசிம்ம மம தேஹி கராவலம்பம்* ||

திருமகள் கேள்வனே! உந்தித் தாமரை உடையோனே! தேவர்களின் தலைவரே! எங்கும் நிறை பரம்பொருளே! வைகுண்டத்தில் உறைவோனே! கார்மேகக் கண்ணனே! மது என்ற அசுரனை அழித்து தேவர்களைக் காத்தவரே! செந்தாமரைக் கண்ணனே! ப்ரஹ்மத்தை உணர்ந்தோரின் உற்ற தோழரே! அழகிய திருமுடி உடையவரே! தீயோரை அழிப்பவரே (அடியவருக்கு நேரும் தீங்கினை போக்குபவரே)! எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவரே! திருமகள் தன்னோடு என்றும் இணைபிரியாதிருக்கும் நரசிம்மரே எனக்கு கைக்கொடுத்து அருளுங்கள்!

ப்ரஹலாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந் நிவாஸ |
பக்தானுரக்த பரிபாலன பாரிஜாத
லக்ஷ்மி நரசிம்ம மம தேஹி கராவலம்பம் || (14)

ப்ரஹலாதன், நாரதர், (விஷ்ணு புராணத்தை மைத்ரேயருக்கு உரைத்தவரும், வேத வ்யாஸரின் தந்தையுமான) பராசர மஹரிஷி, புண்டரீக மஹரிஷி, (வேதங்களைத் தொகுத்தவரும், பதினெண் புராணங்களைத் தொகுத்தவரும், ஐந்தாவது வேதமான மஹாபாரதத்தை இயற்றிய) வேத வ்யாஸர் போன்ற தலைசிறந்த அடியவர்களின் உள்ளத்தில் உறைபவரே. உனது அடியவர்களை (அவர்களிடம் கொண்ட பேரன்பினால்) காத்தருளி, அவர்கள் வேண்டியதை பாரிஜாத மரம் போல வழங்குபவரே! திருமாமகளை என்றும் இணைபிரியாதிருக்கும் லக்ஷ்மி நரசிம்மரே! எனக்குக் கை கொடுத்து அருளுங்கள்.

லக்ஷ்மி நரசிம்ம சரணாப்ஜ மது வ்ரதேன
ஸ்தோத்ரம் க்ருதம் ஸுகக ரம் புவி சங்கரேன |
ஏதத் படந்தி மனுஜா ஹரி பக்தி யுக்தா:
தே யாந்தி தத் பத சரோஜம் அகண்ட ரூபம் ||

பகவான் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரின் திருவடித் தாமரையிலிருந்து வழியும் தேனை நுகரும் வண்டான ஆதிசங்கரரான நான்,
உலக நன்மைக்காக இயற்றிய இந்த ஸ்துதியை தினமும் ஓதுபவர்களுக்கு, பகவானிடம் பக்தி உண்டாகி (அல்லது பெருகி),
இந்த ஸம்ஸாரத்திலிருந்து பகவானால் கை கொடுத்துத் தூக்கப்பட்டு, தன்னுருவால் இந்த ப்ரபஞ்சம் அனைத்தையும்
நிறைந்து வ்யாபிக்கும் பகவானின் திருவடித் தாமரைகளை சென்றடைவர்.

இதுதான் ஆதிசங்கரர் தந்த நரசிம்மரின் சக்திவாய்ந்த ஸ்லோகம், இதை செவிலிமேடு நரசிம்மர் தலத்தில் மட்டுமல்ல எல்லா நரசிம்மர் தலத்தில் சொல்லி வேண்டுவது புண்ணியமானது, அதுவும் கார்த்திகையில் நரசிம்மரை வேண்டி இந்த ஸ்லோகத்தை சொல்லி துதிப்பது மிக மிக பெரும் பாக்கியமானது.

நரசிம்மர் ஆலயங்கள் 12 : நரச நாயகபுரம்.

நரசிம்மருக்குத் தமிழகத்தில் மிகச் சிறப்பான தலம் தமிழ்நாட்டில் திருவள்ளூர் பேரம்பாக்கம் அருகே அமைந்துள்ளது அதன் பெயர் நரசிங்கபுரம்.

இது காலத்தால் தொன்மையானது. இந்தத் தலம் அக்காலமே “நரச நாயகபுரம்” என அழைக்கப்பட்டதை சில கல்வெட்டுக்கள் சொல்கின்றன, அப்போதே நரசிம்மருக்காக ஸ்தாபிக்கப்பட்ட ஆலயம் இது.

இந்தத் தலம் நவக்கிரக பாதிப்புக்களைக் குறிப்பாக ஏழரைச் சனி பாதிப்பினைக் குறைப்பதால் ஏழரை அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மராகப் பகவான் அருள் பாலிக்கின்றார், உலகின் அதி அற்புதமான அழகான நரசிம்மர் சிலை இது.

ஸ்ரீ அஹோபில மடம் 45ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் இங்கு வந்து மங்களாஸாசனம் செய்துள்ளார் என்று கோவில் குறிப்பேடு சொல்கிறது.

ஐந்து நிலை கொண்ட கிழக்குக் கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், பலிபீடம் மற்றும் கொடிக்கம்பம் உள்ளது. கோபுரத்தின் உட்புறம் தெற்கில் சக்கரத்தாழ்வார் வடக்கில் வேதாந்ததேசிகன் அருள்பாலிக்கின்றனர்.

ஏழரை அடி உயரம் கொண்ட நரசிம்மர் காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி நிற்கின்றார்.

பிரகாரத்தின் தெற்கில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, மேற்கு பிரகாரம் சென்றால் சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகள் அருள்புரிகின்றார்கள்.

தென்மேற்கில் கிழக்கு நோக்கினால், 5 அடி உயரமுள்ள மரகதவல்லித் தாயார், அபயஹஸ்தத்துடன் வசீகரமான சிரிப்புடன் அருள்பாலிக்கிறார், அவரை அடுத்து ஆண்டாள் நாச்சியாரும், வடகிழக்கில் 20 தூண்களுடன் மண்டபமும் உள்ளது.

பொதுவாக லக்ஷ்மி நரசிம்மர் கோயில்களில், லக்ஷ்மி பக்கவாட்டில் பார்த்தபடி அமர்ந்திருப்பார். ஆனால், இங்கே லக்ஷ்மி தாயார், வரும் பக்தர்களை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார். ஆகையால், நரசிம்மரைத் தரிசித்தால் சத்ரு பயம் அகலுவதோடு, லக்ஷ்மி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். லட்சுமியின் பார்வை நேரே விழும் தலம் இது.

இக்கோவில் மிகப் பழமையான சோழர்கோவில் என்றாலும் அது மீளக்கட்டப்பட்டது 1400 வருடங்களுக்கு முன்பானது. பின்னாளைய நாயக்க மன்னர்களும் பெரும் திருப்பணி செய்திருக்கின்றார்கள்.

இங்கே கருடாழ்வார் நான்கடி உயரத்தில் 16 நாகங்களை அணிந்துள்ளார், இது 16 வகை செல்வங்களும் இங்கு அருளப்படும் எனும் தாத்பரியமாகும், எல்லாவகை தோஷங்களும் இங்குக் களைந்துபோகும். ஒழிந்துபோகும்.

மரகதவள்ளி தாயார் ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்துள்ளது தனிச் சிறப்பு, இது பல ஆலயங்களில் இல்லாத வெகுமதியான சிறப்பு, தாயார் சந்நதி அடுத்து ஆண்டாள் நாச்சியார் சந்நதியும் இன்னும் ஆழ்வார்கள் சந்நதியும் அழகுற அமைந்துள்ளது.

சக்கரத்தாழ்வாருக்கும் ராமபிரானுக்கும் இங்குத் தனித் தனி சந்நதி உண்டு.

இந்த ஆலயத்தில் சப்தரிஷிகளுக்கும் பகவான் போக மூர்த்தியாக காட்சியளித்தார். அதாவது உலகை இயக்கும் சக்தி படைத்த சூட்சுமம் அறிந்த சப்த மகா ரிஷிகளுக்கும் தானே அவர்களின் மூலம் இந்த உலக இயக்கத்தின் மூலம் என்பதை அவர் அருள்பாலித்துக் காட்டினார்.

இந்தத் தலம் லட்சுமி நரசிம்மர் என ஏழரை அடி உயரத்தில் நரசிம்மர் நின்று அருள்பாலிக்கும் தலம் அதாவது நவக்கிரகங்களையும் அடக்கி அவற்றின் தோஷங்களை எல்லாம் தீர்க்கும் தலம், இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் கர்மவினைப்படி அமையும் ஜாதகவிதிகளை மாற்றி தலையெழுத்தை மாற்றித் தரும் தலம்.

திருவள்ளூர் பக்கம் செல்லும் போது இந்தத் தலத்தைக் காணத் தவறாதீர்கள்.

நாளை என்பதே நரசிம்மரிடம் இல்லை என்பார்கள், எந்த வரம் கேட்டாலும் கேட்ட நொடியில் தருபவரும், எந்த அபாயத்தில் இருந்து அழைத்தாலும் அழைத்த நொடியில் வந்து காப்பவரும் அவர்தான், இங்கு வேண்டும் எல்லா வேண்டுதலும் நொடியில் தீரும்.

நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அந்திப் பொழுதில் அவதரித்தவரானதால் இங்கு இவரை ஒன்பது சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால், தீராத கடன், பிணி, திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

இங்கு மாதந்தோறும் நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்குத் திருமஞ்சனம் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் நெய் தீபம் ஏற்றி, கோயிலை முப்பத்திரண்டு முறை வலம் வந்தால் திருமணத் தடை நீங்கும். நினைத்த காரியம் கைகூடும்.

இந்தத் தலம் இந்திய இந்துக்களின் சிற்பகலைக்கு மிகப்பெரிய உதாரணம், உலகின் மிக அழகான உயரமான நரசிம்மராக மட்டுமல்ல மிக மிக சூட்சுமான துல்லியமான சிற்பக்கலையாக இந்த நரசிம்மரே திகழ்கின்றார்.

அதாவது இங்குப் பிரகலாதன் அருகில் இருந்து பார்த்தால் நரசிம்மர் முகத்தில் அவ்வளவு சாந்தம், கருணை, அன்பு , ஸ்நேகம், தாய்மை என எல்லாமும் அழகுற மின்னும்.

அதே நேரம் சற்று நகர்ந்து இரணியன் இடத்தில் இருந்து பார்த்தால் அந்த முகத்தில் ஆவேசம், மூர்க்கம், கோபம், ருத்திரம் என எல்லாம் கலந்த கோலம் தெரியும்.

ஒரே ஒரு சிற்பம் இப்படி இரு முகபாவனைகளை இரு கோணத்தில் காட்டுவது உலகில் வேறு எங்குமே இல்லாத சிறப்பு, மோனாலிசா ஓவியமெல்லாம் இந்தச் சிற்பகலையின் கால் தூசுக்குப் பெறாது.

இவ்வளவு அருமையான நரசிம்மர் அதிகம் வெளித்தெரிவதில்லை, வாய்ப்பிருந்தால் அந்த நரசிம்மரை நரசிங்கபுரம் சென்று தரிசியுங்கள், அவரைப் பிரகாலதன் அருகில் நின்றும் இரணியன் கோணத்தில் நின்றும் தரிசியுங்கள். உங்களை மெய்மறக்கும் அளவு அந்த அற்புத முகபாவத்தை பகவான் முகத்தில் காண்பீர்கள்.

உலகில் வேறு எங்குமில்லாத அதிசய சிற்பம் இது, வெயிலும் குளிரும், கோபமும் அன்பும் ஒரே முகத்தில் வெவ்வேறு கோணத்தில் காட்டும் இந்துக்களின் பெரும் ஞானத்துக்கும் கலைதிறனுக்கும் மாபெரும் சாட்சி இது.

அங்குச் சென்று அந்த நரசிம்மருக்கு நெய்விளக்கு ஏற்றி லட்சுமிதாயாருடன் அவரைப் பிரகலாதன் போல் வணங்கி அந்த அற்புத நரசிம்மரைத் தரிசனம் செய்து வாருங்கள், உங்கள் வாழ்வே மாறும். இது சத்தியம்.