சத்ரபதி சாம்பாஜி : 07
சத்ரபதி சாம்பாஜி : 07
தன் ஆசனத்தில் தலைப்பாகையின்றி அப்படியே சரிந்துகிடந்தான் ஔரங்கசீப். சிவாஜிக்குப் பின் எளிதாக இந்துராஜ்ஜியத்தை வளைத்துவிடலாம், சாம்பாஜி பெரிய விஷயம் இல்லை என எதிர்பார்த்தவனுக்கு அந்தப் பர்ஹான்பூரில் கிடைத்த அடி இடியாக இறங்கியிருந்தது.
சிவாஜி தன்னுடன் மோதும்போது அவனுக்கு 30 வயதுக்கு மேல் இருந்தது. ஆனால், 23 வயது சாம்பாஜி இவ்வளவு பெரிய அடியினை அதுவும் 300 மைல் தள்ளி வந்து தன் இதயம் போன்ற இடத்தில் அடித்த அடியினை அவனால் நம்பமுடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, மிகுந்த கோபத்தில் எல்லாமும் வீசிவிட்டு அப்படியே தளர்ந்து கிடந்தான்.
“அன்று சிறையில் இருந்த சிவாஜியினை விட்டது தவறு, அவனைக் கொல்லாமல் விட்டது தவறு. அன்றே தகப்பனையும் மகனையும் கொன்று போட்டிருந்தால் இவ்வளவு பெரிய அவமானம் எனக்கு வந்திருக்காது, தவறு செய்துவிட்டேன்” எனத் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.
யாரும் அவனை நெருங்கத் துணியவில்லை. அன்று முழுக்க அவன் எதுவும் உண்ணவுமில்லை, பருகவுமில்லை. பற்களைக் கடித்தபடி பெரும் சோகத்தில் இயலாமையில் இருந்தபடி தளர்ந்து கிடந்தான், தொழுகைகளை மட்டும் தவறவிடவில்லை.
“இந்துஸ்தானை எனக்கு ஆளக் கொடுத்தீரா, இல்லை அவமானபட்டே சாகக் கொடுத்தீரா? தகப்பனுக்குப் பின் மகனும் அதே வலியினைக் கொடுப்பதேன்” என அவன் துயரத்தோடு சொல்லிக் கொண்டான்.
இந்த அடி என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என அவன் நினைக்கும்போதே அச்சம் வந்தது, இனி ராஜபுத்திரர்க்கு எதிரான யுத்தம் என்னாகுமோ என யோசித்தான்.
மறுநாள் தன் வலிகளை மறைத்தபடி எழுந்தவன் என்ன நடந்தது என மெல்ல விசாரித்தான். அவர்கள் பர்ஹான்பூரில் நடந்த கொள்ளைப் பற்றியும் “இது இந்துக்களுக்கான பணம்” என சாம்பாஜி எழுதிவைத்துவிட்டு சென்றதையும் காட்டினார்கள்.
ஔரங்கசீப் தன் முகத்தில் எந்தச் சலனமும் காட்டவில்லை. மாறாக, உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது, அவன் எழுதி வைத்ததை பத்திரப்படுத்தும்படி சொல்லிவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் மூழ்கினான்.
வங்கத்தில் பிரிட்டிஷார் சிட்டகாங் பக்கம் அட்டகாசத்தைத் தொடங்கியிருக்க ஷாயிஸ்டாகான் பதிலடியினைக் கொடுத்துக் கொண்டிருந்தான், பிரிட்டிஷாருக்கு எதிராக அப்போது வங்கத்தின் அருகிலிருந்த செயின்ட் மார்ட்டின் தீவுகளில் இருந்த டச்சுக்காரர்களைப் பயன்படுத்த திட்டமிட்டது மொகலாயம். அதைக் கூர்மைபடுத்தச் சொல்லி உத்தரவிட்டவன், மிக முக்கிய பிரச்சினையான ராஜபுத்திரர்களுக்கு எதிரான போர் பற்றி விசாரித்தான்.
“ஆலம்கீர், இது ராஜபுத்திர மன்னர்களுக்கும் உங்களுக்குமான போர் என்பதைத் தாண்டி ஜிஸியா வரிவிதிப்பால் இந்துக்களுக்கும் உங்களுக்குமான போராகிவிட்டது, ராஜபுத்திரம் எங்கும் பெரும் எதிர்ப்பு நிலவுகின்றது, இன்னொரு பக்கம் சாம்பாஜி முடிசூடியபின் அவர்களுக்கும் ராஜபுத்திரர்களுக்குமான பெரும் உறவு வலுப்படுகின்றது.
சிவாஜியின் இந்துராஜ்ஜியம் தெற்கே முழுக்கக் கட்டுப்படுத்துவதால் கோல்கொண்டா, பிஜப்பூர் சுல்தானியமெல்லாம் அவர்களுக்குக் கப்பம் கட்டுவதால் நல்ல நிதிநிலையிலும் பெரும் பலத்திலும் இருக்கின்றார்கள், ராஜபுத்திரர்களும் அவர்களும் இணைந்தால் நாம் எதிர்ப்பதும் போரிடுவதும் கடினம்.
இப்போதைக்கு ஜிஸியா வரிதான் பெரிய வெறுப்பாக இந்துக்களிடம் பதிந்திருக்கின்றது” எனத் தலைமை அதிகாரி சொன்னான்.
ஔரங்கசீப் எதுவும் பேசவில்லை, ராஜபுத்திரர்க்கு எதிராக நடக்கும் யுத்தம் பற்றி தன் மகன்களிடம் இருந்து அறிக்கை வாங்கி வரச் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
சென்றவன் தனக்கு மிக நெருக்கமானவளும் ஒரே ஆறுதலுமான ஜஹனாராவிடம் சென்றான், அவள் நோயுற்று இருந்தாலும் ஓரளவு பேசக்கூடிய நிலையில் இருந்தாள், ஐரோப்பிய மருத்துவர்கள் அவளுக்கு இரத்தம் வெளியேற்றும் சிகிச்சை செய்திருந்தனர், இதனால் கொஞ்சம் முன்னேற்றம் அவளிடம் இருந்தது.
அக்காலகட்டத்தில் ஐரோப்பிய மருத்துவர்களுக்கு ஒரு மதிப்பு இருந்தது. இஸ்லாமிய மருத்துவமும், ஐரோப்பிய மருத்துவமும் பெருகிக் கொண்டிருந்தன, இந்துக்களுக்கு பெரும் மருத்துவம் இந்த மண்ணில் உண்டு எனினும் அவை வியாபார காரணங்களுக்காக கட்டுப்பாட்டில் வைத்து முடக்கப்பட்டன, சிவாஜியின் இந்துராஜ்ஜியம் போன்ற பகுதியிலும் மொகலாயத்தின் சில பகுதிகளிலும் அது வழக்கம் போல் இருந்தது.
குடலை சுத்தப்படுத்துதல், இரத்தத்தை வெளியேற்றிச் சிகிச்சை கொடுத்தல், இதயகற்களைக் கொண்டு சில மருந்து தயாரித்தல், சீன ஆப்ரிக்க அராபிய முறையோடு இந்துக்களின் மருத்துவத்தை கலந்து ஏதோ செய்து ஐரோப்பியர் மருத்துவம் எனச் சம்பாதிக்க தொடங்கிய காலம் அது.
டெல்லி செங்கோட்டையில் தனக்கான மாளிகையில் அவள் கட்டிலில் சரிந்து கிடந்தாள், ஔரங்கசீப் வருவது தெரிந்ததும் பணியாட்களெல்லாம் அகல அவள் சால்வையினைப் போர்த்தியபடி எழுந்து அமர்ந்திருந்தாள்.
அவள் அருகில் அமர்ந்து கொண்ட ஔரங்கசீப் நலம் விசாரித்தான். ஆனாலும், முகம் சுருங்கிக் கிடந்தது, என்னாயிற்று என்றாள்.
அவன் பர்ஹான்பூர் பற்றிச் சொன்னான், அதற்கு முன்பே அதைப் பணியாளர் மூலம் அறிந்திருந்தவள் அவன் சொல்லும்போது விரக்தியாய்ப் புன்னகைத்தாள்.
“நீ பெரிய சவாலை எடுத்துவிட்டாய் ஆலம்கீர், இனி இதனை நீ சரிசெய்வது கடினம், பர்ஹான்பூர் வரை அடித்துவிட்டார்கள் என்றால் நம் பலவீனத்தை அறிந்து கொண்டார்கள் என்றல்லவா பொருள்? இந்தச் சவாலை எப்படிக் கடக்கப் போகின்றாய்” என்றாள்.
அவன் சொன்னான், இறுக்கமாகச் சொன்னான்.
“எனக்கு எல்லாமே சவால். ஆனால், எல்லாச் சவாலிலும் வென்றே வந்திருக்கின்றேன், ஜிஸியா வரி விதித்தது மிகச் சரி, ஒரு அரசனாக மிக மிக சரி.
நாம் இந்துஸ்தானத்தின் மன்னர், ஆனால் நம்முடைய படையின் முக்கிய சேனையும் குதிரையும் வெடிபொருளும் வீரர்களும் அடிமைகளும் பெரும் விலையானவை, இந்துக்கள் என்னோடு நின்றிருந்தால் எனக்குப் பெரும் சேனை கிடைத்திருந்தால் இந்தச் செலவுகள் குறைந்திருக்கும்.
ஆனால், அப்படி நடக்கவில்லை. ராஜபுத்திரர்களுக்கு உள்ளூர இந்து அபிமானம் நிறைய இருக்கின்றது, நான் நம் மதத்தைப் பெருக்குவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை, பெரிய அளவில் இந்துக்கள் ஒத்துழைப்பு எனக்குக் கிடைக்காததால் நான் அந்த வரியினை விதித்தேன், அவர்கள் கோவில்களுக்கு செய்வதென்ன? அள்ளி அள்ளி கொடுப்பதென்ன? அவர்கள் பண்டிகைகள் விழாக்கள் என்றால் இந்துக்கள் செய்யும் செலவு என்ன?
ஏகப்பட்ட கோவில்கள், ஏகப்பட்ட செலவுகள் செய்கின்றார்கள், நான் இந்துஸ்தான மன்னன் அவர்களின் காவலன். அப்படியான எனக்கு அள்ளித் தராமல் அவர்கள் கோவில்கள் பண்டிகைகள் சாமிகள் எனக் கொடுத்தால் நான் எப்படி அனுமதிப்பேன்?
இங்கு எப்படி இது நடந்தது? நாம் சிறுபான்மை அவர்கள் பெரும்பான்மை. அதனால் நமக்கென பெரும் பலம் இல்லை, இதனால் இஸ்லாமியத்தை பெருக்குகின்றேன், நம் எண்ணிக்கையினை அதிகரிக்கின்றேன், என்ன ஆனாலும் விடமாட்டேன்” என்றான்.
அவள் மறுத்துச் சொன்னாள், “ஆலம்கீர், அவர்கள் உன் குடிமக்கள், அவர்கள் சரியாக வரி செலுத்துகின்றாகள். தொழில் செய்வோர் விவசாயிகளெல்லாம் சரியாக வரிகட்டுகின்றார்கள், இன்னும் துறைமுக வரி, சுங்கவரி என எல்லாமும் கட்டுகின்றார்கள்.
அங்கே இந்துக்கள் இஸ்லாமியர் எனப் பாகுபாடு ஏன்? இந்து அவர்கள் நாடு, இம்மதம் அவர்கள் மதம், நாம் இங்குக் காவல் காக்கும் வேலையினைத்தான் செய்யமுடியும். துருக்கி, பாரசீகம், உஸ்பெக் போல் நாம் இங்கு எல்லாம் மாற்றிவிடமுடியாது, அங்கு மக்கள் இஸ்லாமியர், மன்னனும் இஸ்லாமியன்.
இங்கு அப்படி அன்று. இது இந்துக்கள் நாடு. நமக்கு முன் 600 வருடமாக யார் யாரோ முயன்று தோற்ற நாடு, ஏன் இஸ்கண்டார் (அலெக்ஸாண்டர்) தோற்றுத் திரும்பிய நாடு, இங்கு நீ வாளை நீட்டினால் அவர்களும் வாளை நீட்டுவார்கள். போர் நீளும், புரிந்துகொள். ஜிஸியா வரியினை நீக்கிவிடு ,மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் அரசு வீழும். அதுவும் அந்த வெறுப்பினை வாள்முனையில் அடக்க நினைத்தால் நொடியில் வீழும்.
உனக்குள்ள வரியினை அவர்கள் செலுத்தும்போது மதரீதியாக நீ இப்படிக் கொடும்வரி விதித்தால் அது இங்கு உன்னை மதரீதியாக எதிர்க்கும் வாய்ப்புத்தானே கொடுக்கும்” என்றாள்.
“அக்கா, நான் கடைசி கட்ட போரில் இருக்கின்றேன், இப்போது வெற்றிப்பெற்றால் இனி எளிதில் இங்கு நம் மதம் பரப்பலாம், எந்தப் போர்தான் சுலபமாக இருக்கும் சொல்? எல்லாப் போரும் கடினமே.
ஆனால் சாம்பாஜி, இந்த ராணா போன்றோரெல்லாம் சிறியவர்கள். அனுபவமே இல்லாதவர்கள். ஆர்வக்கோளாறில் ஆடுவார்களே தவிர இடம்பார்த்து அடித்தால் வீழ்வார்கள்.
சிவாஜியோடு நான் நேருக்கு நேர் மோதமுடியாதபடி காலம் வழி செய்தது. ஆனால், சாம்பாஜியினை அப்படி விடமுடியாது, விடவும் மாட்டேன். என் மகன்களிடம் இருந்து தகவல்களை எதிர்பார்க்கின்றேன். அதன் பின் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும், இனி கிழக்கில் கவனம் செலுத்த வேண்டும்.
வங்கத்தில் பிரிட்டிஷார் சலசலப்பு செய்கின்றார்கள், நாம் இனி அரக்கான் தேசம் (பர்மா) மேல் நம் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தவேண்டும். சிந்துகரை, கங்கைகரை போல் அரக்கானும் வளம் கொழிக்கும் ஐராவதி நதியினைக் கொண்டுள்ளது, நாம் செல்லாவிட்டால் இந்தப் பிரிட்டிஷார் போன்றோர் அங்குத் தளம் அமைத்துவிடக் கூடும்.
அவர்கள் பௌத்தமத நாடாக நீடிக்கின்றார்கள், பெரிய ராணுவமெல்லாம் அங்கும் இல்லை. எளிதில் பிடித்துவிடலாம். இதனால் நான் வங்கம் பக்கம் செல்ல விரும்புகின்றேன். அதற்கு முன் இந்த ராஜபுத்திர கலவரங்களை அடக்கிவிட்டு சென்றால் நல்லது எனபதால் யோசிக்கின்றேன்.
நீயும் அப்பக்கம் வா, அங்கே அழகான இடம் பல உண்டு, மலையோரமாக ஒரு மாளிகை கட்டித் தருகின்றேன்” என்றான்.
“இப்போது நான் நகரும் நிலையில் இல்லை, உடல் தேறினால் பார்க்கலாம். முதலில் ராஜபுத்திரர்கள் கலகத்தை தீர்க்கப்பார், அவர்களையும் சாம்பாஜியினையும் சேரவிடாதே. உன் மகன்களை வேகமாக செயல்படச் சொல். முடிந்தவரை ராஜபுத்திரிடம் பேசி கைக்குள் வைக்கப்பார், அவர்கள் இந்துக்களின் அரசர்கள்.
ஜிஸியா வரி இந்துக்களுக்கு வெறுப்பு என்றால் அவர்கள் அரசர்களும் வெறுப்பார்கள், இதனால் அவ்வரியினை ரத்து செய்து கொஞ்சகாலம் பொறு” என்றாள்.
அவன் தலையாட்டி மறுத்துச் சொன்னான், “இதெல்லாம் வீண் அச்சம், போராடாமல் எதுவும் கிடைக்காது. வாள் வீசாமல் இவர்களை அடக்கி மதம்மாற்ற முடியாது, நான் நடத்திக் காட்டுவேன்” என்றான்.
அவள் பதிலேதும் பேசவில்லை. அவன் அவளிடம் மருத்துவ சிகிச்சையினைக் கேட்டுவிட்டு இன்னும் பல பெரிய மருத்துவர்களை வரச் சொல்லியிருப்பதாகச் சொன்னான். அவள் புன்னகைத்துக் கொண்டாள்.
ஔரங்கசீப் தன் அறைக்குத் திரும்பினான், அப்போது அடுத்தச் செய்தி கிடைத்தது.
அது மொகலாயரின் கஜானா இருக்கும் சோலாப்பூர் மற்றும் நல்துர்க் கோட்டைகளை சாம்பாஜி படை தாக்குகின்றது என்பது. மொகலாயரின் தென்னகத் தலைமையகமான ஔரங்கபாத் அருகே இருக்கும் அக்கோட்டைகளை ஹம்பிராவ் மோதியும், கவி கலாஷும் தாக்குகின்றார்கள் எனச் செய்தி வந்ததும் அரண்டு போனான் ஔரங்கசீப்.
“சாம்பாஜி, ஆபத்தானவன், சாம்பாஜி சாத்தான், அவன் விஷத்தை விடக் கொடியனாய் இருக்கின்றானே, இந்தக் கோட்டைகள் வீழ்ந்தால் பகதூர்கானின் தலை இருக்காது என ஆணையிட்டுச் சொல்கின்றேன்” என உறுமினான்.
அதை முன்பே கணித்த பகதூர்கான் நல்துர்க் மற்றும் சோலாப்பூர் கோட்டைகளைக் காக்க கடும் முயற்சி எடுத்தான். பர்ஹான்பூரில் இருந்து திரும்பிய வேகத்தில் பிப்ரவரி 1681 ல் மொகலாயருக்கு அடிமேல் அடி கொடுக்கும் விதமாக அடித்தான் சாம்பாஜி.
இவை உண்மையில் கோட்டையினைக் கைப்பற்றும் முயற்சியோ, கொள்ளை முயற்சியோ அல்ல. பர்ஹான்பூர் தாக்குதலால் கொதித்த மொகலாயர் திரும்ப அடிக்கமுன் அவர்களை எச்சரித்து திசைதிருப்பும் உத்தி, இதனால் உக்கிரமாக தாக்கினார்களே தவிர கோட்டைகளைக் கைப்பற்ற சாம்பாஜி தரப்பு விரும்பவில்லை.
இந்தத் தாக்குதலால் பகதூர்கான் திகைத்துப் போனான், கோட்டைகள் வீழாமல் காப்பாற்றியவன் இனி மராட்டியர்கள் எப்போது வேண்டுமானாலும் ஔரங்கபாத்தில் பாயலாம் எனும் அச்சத்துடன் ராஜபுத்திரர் இடத்தில் இருந்த சேனைகளை முக்கியமாக திலியர்கானை இங்கே திருப்பினான்.
திலியர்கான் அவர்களுக்கு மிகுந்த அனுபவமான தளபதி, 30 ஆண்டுக்கு மேலாக இப்பக்கம் சுற்றித் திரிவதால் சாம்பாஜி சேனையினைச் சமாளிக்க தகுதியானவன் என இங்கே இழுத்துக் கொண்டான்.
அந்நேரம் ஆஜ்மீர் பக்கம் இன்னும் தென்பக்கம் நின்ற ஔரங்கசீப்பின் மகன் முகமது அக்பருக்கும் வேறுவழி தெரியவில்லை, இங்கே முழுப்போரை நிகழ்த்தினால் ஔரங்காபாத் கைவிட்டுச் செல்லும் நிலை வந்ததால் அங்கும் சேனையினை அனுப்பியதில் அவன் பலம் குறைந்து போனது, இதனால் அவனே யுத்தம் நடத்தக் களம் இறங்கினான்.
அப்போது அவன் மகன்கள் முசாம் எனும் ஷா ஆலம், ஆசம் ஷா மற்றும் இந்த முகமது அக்பர் ஆகியோர்க்கு இடையில் யார் அடுத்த மன்னன் எனும் போட்டி எழுந்தது. மொகலாயத்தில் யார் அடுத்த மன்னன் என்பது பிறப்பினால் வருவது அல்ல, யார் வலுத்தவர்களோ அவர்களே அடுத்த வாரிசுகள். இங்கே வாரிசுகளுக்குள் அடிதடி வெட்டுக் குத்து என எல்லாமே அனுமதிக்கப்பட்டவை.
யார் எல்லோரையும் மீறி எழுவானோ அவனே அடுத்த அரசன். இங்கு எல்லா வகைகளையும் அவர்கள் பயன்படுத்தலாம். ஜஹாங்கீர், ஷாஜகானெல்லாம் அப்படி வாரிசு சண்டை கண்டுதான் ஆட்சியினைப் பிடித்தார்கள். ஔரங்கசீப் சகோதர்களைக் கொன்று தகப்பனையே சிறையிட்டு அரியாசனத்தில் அமர்ந்தவன்.
அப்படியான மொகலாயத்தில் மூவரில் சிறந்தவர் யார் எனும் போட்டி இருந்தது. இந்தப் போட்டியினை முடிவு செய்யும் இடமாக ராஜபுத்திரர்க்கு எதிராக நடந்த அந்தப் போர் இருந்தது, யார் அமைதியினைக் கொண்டு வருவார்களோ அவர்களே அடுத்த அரசர்.
இங்கு முகமது அக்பரின் கரமே ஓங்கியிருந்தது. ஷா ஆலமும் ஆசன் ஷாவும் தங்கள் பலத்தைக் காட்ட முயன்றாலும் முகமது அக்பர் எல்லாவற்றிலும் முந்திக் கொண்டிருந்தான்.
பர்ஹான்பூர் தாக்குதலும் அங்கே இழந்த பெரும் பணமும் மொகலாயத் தரப்பை நிலைகுலையச் செய்திருந்தன. காரணம், யுத்தம் என்பது வீரத்தாலும் தந்திரத்தாலும் நடத்தப்படுவது அல்ல, முழுத் தேவை பணம்.
வீரர் சம்பளம், உணவு, மருந்து, ஆயுதம், வெடிபொருள், கால்நடை செலவு, மாற்று வீரர் செலவு எனப் போர் பெரிய பெரிய பணத்தை விழுங்கும். அதுவும் மொகலாயம் போல் அந்நியர் பலர் கொண்டிருக்கும் சேனைக்கு சம்பளச் செலவு இன்னும் அதிகம்.
பர்ஹான்பூரில் விழுந்த அடி பெரிய இழப்பைக் கொடுத்ததால் மொகலாயர் தளர்ந்து போயினர், முகமது அக்பர் திணறினான், இருக்கும் பணத்தை வைத்துச் சமாளித்துக் கொண்டிருந்தான்.
ஷா ஆலமும், ஆசம் ஷாவும் முகமது அக்பரின் போர் வியூகம் சரியில்லை என்றும் தங்கள் வியூகங்களை அவன் மதிப்பதில்லை குழப்புகின்றான் என்றும், இப்போதைக்கு தாங்கள் தற்காப்பு யுத்தமே செய்வதாகவும் கூடுதல் படைகளும் ஆயுதமும் கிடைத்தால் தாக்குதலைச் செய்யலாம் என்றும் ஔரங்கசீப்புக்குச் செய்தி அனுப்பினார்கள்.
முகமது அக்பர் தனியாகச் செய்தி அனுப்பினான், “போர் வியூகம் பற்றி நீங்கள் அறியாதது அல்ல, இங்கு நிலைமை மோசமாகத்தான் உள்ளது, வரவேண்டிய நிதி வரவில்லை. தவிரவும் திரும்பும் இடமெல்லாம் எதிர்ப்பும் தாக்குதலும் அதிகரிக்கின்றது, மக்கள் வேறு, போர்வீரர்கள் வேறு என அறியமுடியாதபடி தாக்குதல் நடக்கின்றது.
இது வழக்கமான ராஜபுத்திர யுத்தம் அல்ல, முன்பெல்லாம் அவர்கள் இந்துக்களின் அறத்துடன் நேருக்கு நேர் போர் புரிவார்கள், இப்போதோ சிவாஜி பாணியில் மாறிவிட்டார்கள். இதனால் நடவடிக்கை எடுக்கக் குழப்பமாய் இருக்கின்றது. ஆனாலும். விரைவில் மன்னருக்கு நல்ல செய்தி அனுப்புகின்றேன்” என எழுதினான்.
ஔரங்கசீப் நிலைமையினை அவதானித்தான். மேற்கு கடல் பக்கம் அப்போது அவனுக்கு ஒரே நம்பிக்கையாக போர்ச்சுகீசியர்கள் தென்பட்டார்கள். அவர்களிடமிருந்து முகமது அக்பருக்கும், இதர மகன்களுக்கும் ஆயுதமும் இதர யுத்த தளவாடங்களும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யச் சொன்னான்.
மொகலாயம் இப்படித் திணறிக் கொண்டிருக்க சாம்பாஜி பெரும் செல்வத்துடன் ராய்காட் கோட்டைக்கு வந்திருந்தான். சிவாஜி எட்டடி என்றால் சாம்பாஜி 16 அடி என மக்களும் சேனைகளும் ஆடிப்பாடி வரவேற்றனர், பெரும் செல்வத்தால் சேனைகள் இன்னும் இன்னும் பலமானது.
ஔரங்கபாத் பக்கம் பெரும் மிரட்டலை ஏற்படுத்தி வைத்திருந்தான் ஹம்பிராவ், எப்போதும் மொகலாயர் ஔரங்கபாத் மேல் பாயலாம் எனும் அச்சத்தில் பகதூர்கானும் திலியர்கானும் கடும் விழிப்பில் இருந்தார்கள், சிவாஜி காலத்தில் கூட இல்லாத பெரும் அச்சம் சாம்பாஜி காலத்தில் அவர்களுக்கு வந்திருந்தது.
முன்பு தன்னிடம் சிக்கிய சாம்பாஜியினைப் பிடித்து டெல்லிக்கு அனுப்பாதது எவ்வளவு பெரிய தவறு எனச் சிந்தித்துக் கொண்டிருந்தான் திலியர்கான்.
இங்கே நிலைமைகள் இப்படி இருக்க அங்கே ராஜபுத்திரர்கள் அடுத்தக் கட்டத்துக்காக ஜோத்பூர் பக்கம் ஆரவல்லிமலையின் காவல் நிறைந்த இடத்தில் கூடியிருந்தார்கள், துர்க்காதாஸ், ரத்தோர், மேவாரின் ராணா உதயபூரின் மன்னர் என எல்லோரும் இருந்தார்கள், ஆம்பர் ராஜா ராம்சிங் வம்சமும் வந்திருந்தது.
ராஜா ராணா சொன்னான், “சாம்பாஜி செய்தது மிகச் சரியான அடி , நமக்குப் பல வகையில் உதவும் அவர் பர்ஹான்பூரைக் குறிவைத்து அடித்திருக்கின்றார், இதனால் இனி சிலகாலம் மொகலாயர் வேகமின்றி இருப்பார்கள். நாம் இந்நேரம் வேகமாக அவர்களை முடக்க வேண்டும் என்றான்.
ராஜ்சிங் சொன்னான், “மொகலாயருக்கு இப்போது ஆயுத விநியோகம் செய்வது போர்ச்சுகீசியர். நாம் அவர்களை அடக்க வேண்டும், ஆயுத வளங்களைப் பறிக்க வேண்டும், முப்பக்கம் நம்மை ஔரங்கசீப்பின் மகன்கள் சூழ்ந்து கொள்ள, கடல் பக்கம் போர்ச்சுகீசியர் மூலம் நாம் வளைக்கப்படுகின்றோம், நம்மேல் நான்கு முனை தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கின்றது, இதனை ஒரு பக்கம் உடைக்க வேண்டும்” என்றான்.
சிசோடியாவின் ஆலோசனை அதை ஒட்டியே இருந்தது. “மேற்கே நாம் பெரிதாக சாதிக்கமுடியாது. நம்மிடம் கடற்படை இல்லை, சாம்பாஜி தரப்பு நமக்கு உதவுமே தவிர இன்னும் நேரடியாகக் களத்தில் இறங்கவில்லை.
வடக்கே கிழக்கே முற்றுகையினை உடைத்தாலும் மொகலாயப் பகுதிகளே வரும், நாம் தெற்கே அவர்களை உடைத்தால் சாம்பாஜியோடு நிலவழி தொடர்பு வரலாம். அப்படியே தெற்கே அதிக வலு இல்லாத மொகலாயரை முடக்கிப் போட்டு பலமாகி அதன் பின் வடக்கு நோக்கி நகரலாம் ” என்றான்.
அவன் இலக்கு முகமது அக்பரை நோக்கி இருந்தது, துர்க்காதாஸ் அதை ஒப்புக்கொண்டான். அவர்களின் மிகச் சரியான திட்டமாக முகமது அக்பரை முடக்குவதாக இருந்தது.
வெப்பம் துவங்கும் ஏப்ரல் மாதத்தில் ஒரு நடவடிக்காக இருக்கும் படைகளை தயார் செய்து தானே தலைமையேற்றுக் கிளம்பினான் முகமது அக்பர், அவனைத் தங்கள் உளவுப்படையுடன் சரியாக கவனித்துக் கொண்டிருந்தனர் ராஜபுத்திரர்கள்.
உதய்பூர் பக்கம் அவன் படை நடத்திச் சென்றபோது, உதய்பூரில் ஒரு பெரிய தாக்குதல் செய்யச்சென்றபோது நிறைய வீரர்களுடன் அவன் மலை இடுக்கில் வளைக்கப்பட்டான், இரு புறம் மலைகள் நிரம்பிய இடத்தின் ஊடாகச் செல்லும் போது முன்பும் பின்பும் ராஜபுத்திர சேனைகள் மறித்துக் கொண்டன.
பொறியில் அகப்பட்டவன் போல் சேனையுடன் சிக்கிக் கொண்டான் முகமது அக்பர். இரு பக்கமுமான பாறைகள் பெரியவை, அவற்றின் மேல் ஏறி தப்பமுடியாது, முன்னும் பின்னும் சேனைகள் முடக்கிக் கொண்டதால் அவன் முன்னேறி முற்றுகையினை முடக்க நினைத்த போது மலையின் ஒரு பக்கம் இருந்து பாறைகள் சில உருண்டு வந்தன, சில அம்புகளும் வந்தன.
அதாவது, மலையின் இரு பக்கமும் ராஜபுத்திர வீரர்கள் இருப்பதுதெரிந்தது, அவர்கள் பாறைகளை உருட்டிவிட்டாலே பெரும் சேதம் ஏற்படும்.
தான் வசமாக சிக்கிக் கொண்டதை அறிந்தான் முகமது அக்பர், என்ன செய்வது என அவனுக்குத் தெரியவில்லை. நிச்சயம் இனி மரணம் நிச்சயம் அல்லது கைது நிச்சயம் என உணர்ந்தவன் போரிட்டு இனி ஆவது ஒன்றுமில்லை என உணர்ந்து நின்றான், அப்போது தொலைவில் இருந்து குதிரை வீரன் ஒருவன் வந்தான்.
வந்தவன் சற்றுத் தள்ளி நின்று கொண்டான். யானை மேல் இருந்த முகமது அக்பர் அவனை வரச்சொன்னான். வந்தவன் குதிரை மேல் இருந்தபடி சொன்னான், “எங்கள் தலைவர் துர்க்காதாஸ் உங்களைச் சந்திக்க விரும்புகின்றார், எங்களை நம்பினால் பேச்சுவார்த்தைக்கு வரலாம், அதை மறுத்து நீங்கள் யுத்தத்தினைத் தொடர விரும்பினால் உங்கள் விருப்பம்”
வேறு தேர்வு எதுவுமே இல்லாத முகமது அக்பர் குழம்பியபடி கேட்டான், “உங்களை நம்பலாமா? என்ன உத்திரவாதம் தருகின்றார் உங்கள் தளபதி” என்றான்.
“நாங்கள் இந்துக்கள், சொன்ன சொல்லை காப்பவர்கள். தவிரவும் பேச்சுவார்த்தையே இல்லாமல் நீளும் போரை நாங்கள் விரும்பவில்லை. பேச்சுவார்த்தை முடிந்த இடத்தில்தான் போர் தொடங்கும், இங்கு மொகலாயம் வலுக்கட்டாயமாகப் போரைத் தொடங்கியதே தவிர பேச வாய்ப்பளிக்கவே இல்லை” என்றான்.
அப்போதுதான் யோசித்தான் முகமது அக்பர். ஆம், அங்குப் பேச்சுவார்த்தையே நடக்கவில்லை, இப்போது வசமாகச் சிக்கிய நிலையில் பேசுவதுதான் சரி என்றவன் தன் சேனையினைப் போகவிடும்படியும் தான் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனவும் அறிவித்தான்.
குதிரையில் வந்தவன் தகவலை துர்க்காதாஸிடம் தெரிவிக்க அவன் ஒரு நிபந்தனை விதித்தான், “முகமது அக்பரும் அவன் சேனையும் செல்லலாம். ஆனால், பேச்சுவார்த்தைக்கு முகமது அக்பர் வரும் வரை அவன் வாளும், அவன் தளபதிகள் சிலரும் எங்களிடம் இருக்கவேண்டும். அதைக் கொடுத்துவிட்டு அவர்கள் செல்லலாம்”
வாளை ஒப்படைப்பது ஒரு அரசனுக்கு உச்சகட்ட அவமானம். அதனால் மறுத்தவன் சில தளபதிகளை ஒப்படைக்க முன் வந்தான், அப்படியே போர் நிறுத்தம் என ஒன்றை அறிவித்து, குராம் கான் உள்ளிட்ட சில முக்கிய தளபதிகள் பணயக் கைதிகளாக ஒப்படைக்கப்பட்டனர். முகமது சல்மான் சோகத்துடன் தன் முகாமுக்குத் திரும்பினான்.
இந்த விஷயம் ஷா ஆலம் மற்றும் ஆசம் ஷாவுக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. முகமது அக்பர் விவேகமற்றவன் போரிடத் தெரியாதவன் என ஔரங்கசீப்பிடம் அவர்கள் சொல்ல, “நீ என் அவமானம்” என ஔரங்கசீப் அவனிடம் கடிதத்தில் கொந்தளித்துவிட முகமது அக்பர் கடும் வெறுப்பிலும் விரக்தியிலும் இருந்தான்.
மொகாலாயத் தளபதிகளைப் பணயமாக பெற்றதால் போர் நிறுத்தம் வந்தது. ஔரங்கசீப்போ போரைத் தொடர வற்புறுத்தினான், ஷா ஆலம் போரைத் தொடர விரும்பினான். ஆனால், முகமது அக்பர் பணயக் கைதிகள் முக்கியம் பேசிப் பார்க்கலாம் எனச் சொல்ல மொகலாயத் தரப்பில் விரிசல்கள் விழ ஆரம்பித்தன.
இந்தச் சூழலில் முகமது அக்பரிடம் என்ன பேசவேண்டும் என ஆலோசனை செய்ய மீண்டும் ராஜபுத்திரர்கள் கூடினார்கள், துர்க்காதாஸ் இந்தப் போரின் மிக முக்கிய மற்றும் தளபதி என்பதால் அவனே இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தான்.
இங்குக் கவனிக்க வேண்டிய விஷயம் துர்க்காதாஸ் அங்குத் தலைமை தளபதியே தவிர முடிவெடுக்க வேண்டிய இடத்தில் ராஜபுத்திர மன்னர்களே இருந்தார்கள், ஜோத்பூர் மகாராணி அதாவது ஜஸ்வந்த்சிங் குடும்பம, மேவார் ராஜா, உதய்பூர் ராஜா, ஆம்பர் ராஜா என அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
எப்போதும் தளபதிகளின் பார்வை போர், வியூகம் அடிக்கு அடி என்ற நோக்கிலே இருக்கும். ஆனால் அரசர்களின் பார்வை அதைத் தாண்டி ராஜதந்திரமாக இருக்கும்.
அந்தத் தற்காலிகப் போர் நிறுத்தத்தின்போது இருந்த அந்தச் சூழலில் மேவார் மன்னன் ராஜா ராணா சிங் சொன்னான், “இந்தப் போர் ஔரங்கசீப்பால்தான் வந்தது, அதற்கு முன் எந்த மொகலாய மன்னனும் நம்மைத் தொட்டதுமில்லை, இந்த அளவுக்கு அக்கிரமங்களை இந்துக்களுக்குச் செய்ததுமில்லை.
அக்பர் ஜலாலுதீன் ஏறக்குறைய 100 வருடங்களுக்கு முன் ரத்து செய்த ஜிஸியா வரியினை ஔரங்கசீப் மீளக் கொண்டு வந்ததாலே இந்தப் போர் வெடித்தது, நாம் மொகலாயத்தை முடித்துவிடலாம். ஆனால், மறுநொடி பாரசீக அரசன் வருவான், இல்லை இன்னொரு சுல்தான் வருவான். இங்குக் கொள்ளைகளைத் தொடர்வார்கள்.
நமக்குப் பலமான முகமூடி வேண்டும், அது இஸ்லாமிய முகமாக இருந்தால்தான் அராபிய கடும்போக்கு கூட்டம் ஆப்கானிய கொடும்போக்கு கூட்டத்தினைச் சமாளிக்க முடியும், இல்லையேல் நமக்கு அழிவுகள் அதிகம்.
இதனால் இப்போதைய சூழலுக்கு மொகலாயம் வேண்டும், ஆனால் ஔரங்கசீப் இல்லாத மொகலாயமாக வேண்டும்” என்றான்.
அவனின் ராஜதந்திரம் புரியாமல் துர்க்காதாஸும் மற்றவர்களும் கேட்டார்கள் “ஔரங்கசீப் இல்லாமல் மொகலாயமா? யார் அந்த அரசன்? அது எப்படி சாத்தியம்” என்றார்கள்.
ஒரு ராஜபுத்திர அரசனாக தேர்ந்த அனுபவத்துடன் ராஜா ராணா சொன்னான், “மொகலாயத்தின் வரலாற்றில் எப்போதும் வாரிசுகள் சண்டையும், அவர்களில் ஒருவரை ராஜபுத்திரர்கள் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்துவதும் எக்காலமும் உண்டு.
ஜஹாங்கீரை மன்னராக்கியது யார்? ஷாஜகானை மன்னராக்கியது யார்? இந்த ஔரங்கசீப்போடு நின்று அவன் சகோதரர்களை ஒடுக்கி அவனை மன்னனாகியது யார்? நிச்சயம் ராஜபுத்திரர்களாகிய நாம்.
இங்குப் பல தலைமுறையாக நாம் கைகாட்டும் நபர்கள்தான் மொகலாய மன்னர்களாக இருந்தார்கள். அக்பர் காலத்தில் இருந்தே இது வழமை. நமது ஒத்துழைப்பில்தான் அக்பர் ஜலாலுதீன் ஒப்பந்தப்படி அமர்ந்திருந்தான்.
பின்னாளில் நாமே அவர்களில் யார் அரசர் என்பதைத் தீமானித்தோம், ஔரங்கசீப் நமக்குக் கட்டுப்படுவான் என்றுதான் ராஜா ஜெய்சிங், ராஜா ஜஸ்வந்த்சிங்கெல்லாம் இவனுடன் சேர்ந்து போராடி அவனை அரசனாக்கினோம், ஆனால் சிம்மாசனம் கிடைத்ததும் அவன் புத்திமாறிவிட்டது.
எந்த ஔரங்கசீப்பை நாம் அரசனாக்கினோமே அவனை நாமே பதவியில் இருந்து இறக்கிவிட்டு புதிய அரசனை வைத்துவிட்டால் நாம் சொன்னபடி கேட்கும் மொகலாய மன்னன் வந்துவிட்டால் இங்கு எல்லாமே மாறும், நம் கட்டுப்பாட்டில் மொகலாயம் வரும்” என்றான்.
“யார் அந்த மன்னன்?” எனக் கேட்டான் சிசோடியா.
“யாரா? நம்மிடம் பேச வருகின்றானே அந்த முகமது அக்பர், அவனை வளைத்துப்போட்டு அடுத்த அரசனாக்க ஆதரவு கொடுப்போம். நிச்சயம் அவன் நம்பக்கம் சாய்வான். அவனைக் கொண்டே மொகலாயத்தினை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம், இதனால் நமக்கும் ஆதரவு பெருகும், மொகலாயத்தின் பலமும் இப்போதே பாதி நமக்குக் கிடைக்கும்” எனப் பல வியூகங்களைச் சொன்னான்.
இது சாத்தியமான திட்டம். காலம் காலமாக நடக்கும் விஷயம் என்பதால் எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள், இதனால் பேச்சுவார்த்தைக்கு வரும்படி முகமது அக்பருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் பேச ராஜபுத்திர மன்னர்கள் வரவில்லை. முகமது சல்மானை ஆழம்பார்க்கும் விஷயமும் செய்துவரும்படி துர்க்காதாஸைத்தான் அனுப்பினார்கள்.
மே மாத மத்தியில் அந்தச் சந்திப்பு நடந்தது. மொகலாயத்தில் முகமது அக்பருக்கும், ஔரங்கசீப்புக்கும் இடையே விரிசலும் உரசலும் இருந்தன. பர்ஹான்பூரில் கோட்டை விட்டது இப்போது தளபதிகளைப் பிணை கைதியாக விட்டுவந்தது என முகமது அக்பர் மேல் கடும் ஆத்திரத்தில் இருந்தான் ஔரங்கசீப், அந்தக் கோபத்தை மற்ற இரு சகோதரர்களும் தூண்டி விட்டுக் கொண்டே இருந்தனர்.
முகமது அக்பர் போரிட மறுத்ததால் பல குழப்பம் ஏற்பட்டு மொகலாயத் தரப்பில் குழப்பமே எஞ்சியிருந்தது, சகோதரர்களும் எதிர்ப்பு, தகப்பனும் எதிர்ப்பு எனும் நிலையில் குழம்பியிருந்தான் முகமது அக்பர்.
அவனுக்கு அப்போது 23 வயதுதான் ஆகியிருந்தது, பெரிய அனுபவமில்லாத அவன் பேச்சுவார்த்தைக்குச் செல்வோம், தளபதிகளை அழைத்துவருவோம் என்றுதான் சென்றான், அவனை மிகுந்த காவலுக்கும் சோதனைக்கும் இடையே சந்தித்தான் துர்க்காதாஸ்.
துர்க்காதாஸின் வயது 45 ஆகியிருந்தது. முகமது அக்பரை விட இரு வயது அதிக வயது, ஜஸ்வந்த் சிங் தளபதியாக மொகலாயருடன் சேர்ந்து பல யுத்தங்களைச் செய்தவன் என்பதால் முகமது அக்பரை அறிவான். ஆனால், பெரிய பழக்கமில்லை எனினும் மொகலாய ராஜபுத்திர உறவுகள் சிக்கல்கள், அவசியங்கள் எல்லாமே அவனுக்கு நன்றாக தெரியும்.
மே மாதம் 1681 மத்தியில் ஆரவல்லி மலைப்பக்கம் பலத்த பாதுகாப்புக்கு இடையில் அமைக்கப்பட்ட பந்தலில் முகமது அக்பரை சந்தித்தான் துர்க்காதாஸ், மிகப் பலத்த சோதனைக்குப் பின் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள்.
துர்க்காதாஸ் அவனை ஓடி வந்து தழுவிக்கொண்டான், மிகுந்த உற்சாகத்துடன் அவனை வரவேற்றான். இது அவனே எதிர்பாராத ஒன்று. காரணம், தன்னை மிக மரியாதை குறைவாக நடத்துவான், மிகுந்த குழப்பம் ஏற்படும் என நினைத்து வந்தவனுக்கு ஆச்சரியம் மிகுந்திருந்தது.
அவ்வளவு மரியாதையாக நடத்தினான் துர்க்கா தாஸ், ஒரு தளபதியாக இருந்தாலும் ராஜதந்திரம் அவனுக்குக் கைகூடியிருந்தது. ராஜபுத்திரர்களின் கைவினை பொருட்கள் எப்போதும் பிரசித்தியானவை, அப்படித் தங்கம் பூசிய அற்புதமான வேலைப்பாடு அமைந்த வாள் ஒன்றைப் பரிசளித்தான்.
தன் வாளை பணயமாக கேட்டவனா தனக்கு வாளை கொடுக்கின்றானே எனக் குழம்பினான் முகமது அக்பர், புன்னகை ஒன்றைப் பரிசாகக் கொடுத்தான் துர்க்காதாஸ்.
பின் மெல்லப் பேச்சை துவக்கினான், “இந்தத் தற்காலிக அமைதினைப் பாருங்கள், எங்கும் நிம்மதி எங்கும் மகிழ்ச்சி. கலக்கமும் கவலையும் அச்சமுமில்லாமல் இப்பகுதி அமைதியினைச் சுவாசிக்கின்றது, உங்கள் தரப்பிலும் ஒரு அமைதி நிலவுகின்றது.
ஆனால், இந்த அமைதிக்கு நாம் கொடுத்திருக்கும் விலையினைப் பாருங்கள், இடிந்த கோவில்கள் பெரும் சாவுகள், திரும்பும் பக்கமெல்லாம் இடிபாடுகள், கண்ணீர் ஓலங்கள், அதுதான் உங்கள் பக்கமும் நடந்தது.
இது நடக்கக் கூடாது என்றுதான் நிறைய இழந்தோம், எவ்வளவோ விட்டுக் கொடுத்தோம், எவ்வளவோ விஷயங்களில் பல்லை கடித்துப் பொறுத்துக் கொண்டோம்.
சிந்துநதி, கங்கை நதி எனத் துவங்கி நர்மதா நதி, பீமாநதி வரை பரவியிருந்த பெரும் அரசு நாங்கள், இந்து எங்கள் இந்துபூமி. எங்களுக்குள் பல சர்ச்சைகள் முரண்கள் இருந்தாலும் அனைவருமே காக்கத் துடித்தது இந்தப் புனிதமான இந்துமதம்.
இந்த மதத்தை நாங்கள் உயிருக்கு மேலாக போற்றுகின்றோம், அதற்காகவே வாழ்கின்றோம். எங்கள் வாழ்க்கைமுறை உங்களில் இருந்து வேறுபட்டது. உங்கள் வாழ்க்கை எங்காவது சென்று ஆக்கிரமிப்பது அல்லது அங்கே குடியமர்ந்து உங்கள் மதத்தை நிறுவி வாழ்வது. அதற்கு மற்ற சுல்தானியங்களெல்லாம் உதவுவது என உங்கள் வரலாறுகள் உங்களுக்கே தெரியும், வறண்ட நிலத்தில் இருந்து வளமான பூமி தேடிய நீங்கள் ஓடி ஓடி இங்கு வந்தவர்கள்.
நாங்கள் அப்படி அல்ல.
இந்த மண்ணின் மக்கள், இம்மண்ணில் பிறந்தவர்கள், இந்த மதத்துக்காக வாழ்பவர்கள், இந்த மண்ணை நேசித்து இந்த மதத்தை காத்து இங்கே வாழப் பிறந்தவர்கள். எங்கள் வரம் அல்லது எங்கள் சாபம் நாங்கள் தொட்டது துலங்குவது. அதனால் பெருகும் செல்வம் இது. எங்கள் முன்னோர் காட்டிய வழியில் வந்த தர்மப்படி மதவழிப்படி வந்த செல்வம்.
எங்களுக்கு எல்லாமே எங்கள் மதம் என்பதால் கோவில்களில் எங்கள் செல்வத்தைக் கொட்டிவைத்தோம், அப்படிக் கொட்டிவைக்கப்பட்ட செல்வமும் தங்கமும் கோவில்களில் குவிந்திருந்தன, அவற்றைக் குறிவைத்து அராபிய கொள்ளையர்கள் வந்து வந்து எங்கள் கோவில்களைக் கொள்ளையிட்டார்கள்.
முடிந்த அளவுக்கு அவற்றைத் தடுத்தோம். ஆனால், அலை அலையாக அவர்கள் வந்தபோது அவர்களில் ஒருவரையே இங்குக் காவல் இருக்க அமர்த்தினோம், அப்படி வந்தவர்கள் முதலில் அமைதியாக இருந்தார்கள். பின், எங்கள் நிலைமையினை அவர்களுக்குச் சார்பாக எடுத்து எங்களை மீறி இங்கு இஸ்லாமியத்தை வளர்ப்பதும் எங்களைச் சுரண்டுவதுமாக மாறுவார்கள்.
எப்போது அவர்கள் மாறுவார்களோ அவர்களை நாங்கள் விரட்டிவிடுவோம், இத்தேசம் அப்படி விரட்டி விரட்டி அடிக்கும், அப்படி இந்து துவேஷம் செய்வோர் இங்கு எங்களை ஒடுக்க விரும்புவோர் யாராயினும் இங்குத் தோற்று ஓடுவாரே தவிர நிலைக்க மாட்டார்கள். இதுதான் இந்த மண், இதுதான் வரலாறு.
அப்படி லோடி என்பவனை ஒடுக்கும் போது உங்கள் முப்பாட்டன் பாபரை அழைத்து வந்தோம். அவனே பின் எங்களுக்குக் காவலாக இருக்க சம்மதித்தான். ஆனால், குழப்பங்களை அவன் ஏற்படுத்தியபோது வழக்கம்போல் அவன் விரட்டப்பட்டு ஆப்கானிஸ்தானிலே மரித்தான். அவன் மகன் ஹுமாயூனாலும் ஆளமுடிவில்லை.
பின்னர் பாரசீக மன்னன் உதவியுடன் அக்பர் ஜலாலுதீன் வந்தான், அவன் எங்களுக்குக் கட்டுப்பட்டான். அவனே ஜிஸியா வரியெல்லாம் நீக்கினான். எங்களோடு மண உறவு செய்யும் வரை இறங்கிவந்தான், நாங்களும் எங்கள் குலப் பெண்களைத் திருமணம் செய்துவைத்தோம், எங்களுக்கு அவன் விசுவாசமான காவலாக இருப்பான் என நம்பினோம், அவனும் நம்பிக்கையினை அப்போது காத்தான்.
ராஜபுத்திரர்க்கும் அவனுக்கும் முறுகல் வந்தாலும் நாங்கள் அவனை அடக்கி எங்களின் காவல் முகமாய் வைத்து நின்றோம், அவனாலே அராபிய கும்பல்கள் கொள்ளைகள் குறைந்தன.
இளவரசரே, இந்நாட்டின் வரமும் சாபமும் செல்வம். அதைத் தேடி தேடி வரும் கொள்ளைக் கூட்டமும் அரசக் கூட்டமும் அதிகம். சிறிது சிறிதாக இருந்த கொள்ளைகள் தைமூர் வந்து இந்தியாவினைக் கொள்ளையிடும் போது உச்சத்துக்குச் சென்றது. இதனாலே ஒரு வலுவான அரசு வேண்டும், அது இஸ்லாமியரைச் சமாளிக்க இஸ்லாமிய முகமாக ஆனால் எங்களுடன் ஒத்துழைக்கும் முகமாக இருத்தல் வேண்டும் எனக் கருதினோம்.
அக்பர் ஜலாலுதீன் அந்த ஒப்பந்தத்தில் இந்துக்கள் நலன் காப்பேன் என உறுதி தந்தான். எனக்குப் பின் என் வாரிசுகள் காக்கும் என உறுதி தந்தான். அந்த உறுதியில் நாங்கள் தோள் கொடுத்தோம், அந்த உறவில்தான் எங்களின் அஸ்திபாரத்தில்தான் உங்கள் மொகலாயம் நிலைத்தது.
உலகின் மிகப்பெரிய பணக்கார வல்லரசாக மொகலாயம் நிலைக்க அஸ்திபாரமும் காவலும் நாங்களே, உங்கள் செல்வமும் அதிகாரமும் பலமும் வெளியே இஸ்லாமியம் எனும் முகமூடியாக இருந்தாலும் உள்ளே இருக்கும் அஸ்திபாரமும் கட்டுமானமும் நாங்களே, ஆணிவேர் நாங்களே.
நாங்கள்தான் அடுத்தடுத்த மொகலாய மன்னர்களை நியமித்தோம், இந்த ஔரங்கசீப் எனும் உங்கள் தகப்பனாரை உங்கள் பெரியப்பா தாரா ஷிக்கோ, நொடியில் உங்கள் அப்பாவினை நசுக்கியிருப்பார், நாங்கள்தான் போராடி மொகலாய சுல்தானாக உங்கள் தகப்பானரை நிறுத்தினோம்.
ஏன் செய்தோம்? எங்களுக்கும் உங்களுக்கும் அப்படி என்ன பெரிய பந்தம் சொல்லுங்கள்? எதற்காக உங்களை வைத்து நாங்கள் பாதுகாத்தோம்? மொகலயம் எங்களுக்கும் முக்கியம் என ஏன் கருதினோம் சொல்லுங்கள்? ” எனக் கேட்டான்.
முகமது அக்பரிடம் பதில் இல்லை மாறாக, பதிலை அவனிடமே எதிர்பாத்தான்.
சலசலக்கும் ஆரவல்லி மலையின் வெப்பக்காற்றுகளிடையே சொன்னான், “எல்லாம் இந்த மண்ணை இந்த மதத்தை இந்த மக்களை இந்தத் தர்மத்தை காக்க இளவரசரே.
என்றேனும் ஒரு நாள் இங்கு நிலைமை மாறும், அதுவரை தர்மத்தை அணையாமல் காக்க வேண்டும் என்பதற்காக, இளவரசரே நீங்கள் இஸ்லாமியர் என்பது எங்களுக்குச் சிக்கலே இல்லை. ஆனால், அந்த மதம் கொடுக்கும் அடையாளத்தில் அராபியாவில் இருந்து வந்து எங்கள் கோவில்களைக் கொள்ளையிடுவதும், எங்களை அழித்து ஆளநினைபப்தும், மதமாற்றி அழிக்க நினைப்பதுமே எங்களுக்கு இங்குச் சிக்கல்.
இஸ்லாம் எனும் வார்த்தையில் உங்கள் கொள்ளைகள் மறைகின்றன, பல இனக் கொள்ளையர்கள் இஸ்லாமிய சுல்தான்கள் எனும் அடைமொழியோடு ஒன்று சேர்ந்து இங்குப் பாயவைக்கின்றனர், அதற்குக் காபீர்கள் மேலான தாக்குதல் என மத சமரசமும் செய்கின்றார்கள்.
அறமில்லாமல், தர்மம் இல்லாமல் வாழ்ந்த பாலை நில மக்களுக்கு நல்ல வழியினைப் புனிதமான நபிபெருமான் போதித்தார், அது சரியானது. ஆனால். எங்களுக்கான தர்மம் எங்களிடையே உண்டு. நீங்களே சொல்லுங்கள் என்றாவது எங்காவது நாங்கள் கொள்ளை அடித்தோமா ஆக்கிரமித்தோமா?
உங்கள் வம்சம் என்ன? உங்களோடு இருக்கும் சேனைகளின் மூலம் என்ன? ஆனால் நாங்கள் என்றாவது இப்படி ஆக்கிரமிக்க கிளம்பினோமா?
எங்களோடு வாழவந்த உங்களையும் உங்கள் வழியில் நீங்கள் இருங்கள், எங்கள் வழியில் நாங்கள் இருக்கின்றோம், எங்களை இந்துக்களாக வாழவிடுங்கள் அதற்குக் காவல் இருங்கள் என்றுதான் கேட்கின்றோம்.
காலம் மாறும் இளவரசரே, அராபியாவில் மாற்றம் வரும்போது எல்லாமே மாறும். செங்கிஸ்கான் அராபியாவினைக் குலைத்துப்போட்டபோது பரிபூரண இந்து அரசை நாங்கள் உருவாக்க முயன்றோம். ஆனால் அதை செங்கிஸ்கான் அழிக்கக் கூடும் எனத் தள்ளிவைத்தோம், பின்னாளில் அராபிய சுல்தான்கள் சரியும் போது அங்கே ஆபத்து முறியடிக்கப்படும் போது நாங்கள் எழுவோம். அதுவரை இந்தக் காவல் எங்களுக்கு முக்கியம்.
நான் மனம்விட்டு சொல்கின்றேன் இளவரசே, எங்களுக்கு மொகலாயம் முக்கியம், அவர்கள் காவல் முக்கியம். ஆனால், இந்த மதவெறுப்பும் ஜிஸியா வரியும் கொண்ட மொகலாயம் அல்ல. மாறாக. இந்துக்களுக்குச் சலுகைகள் தந்து எங்களை வாழவைக்கும் மொகலாயம்.
அதுதான் எங்கள் அவசியம், இதை எல்லோரும் விரும்புவார்கள், இந்துக்களுக்கென ராஜ்ஜியம் அமைத்த சிவாஜியும் இதை விரும்பினார். நீங்களே யோசியுங்கள், எங்கெல்லாமோ வென்ற சிவாஜி மன்னர் ஔரங்கபாத்தை ஏன் விட்டுவைத்தார்?
இங்கு மொகலாயம் அவசியம் என அவருக்கும் தெரியும், இப்போது இருக்கும் சாம்பாஜிக்கும் தெரியும், நாங்களெல்லாம் எதிர்ப்பது சக்கரவர்த்தியின் ஜிஸியா வரி, இந்து துவேஷமே அன்றி மொகலாயத்தை அல்ல.
அதனால் இந்துக்களை மரியாதையாக கௌரவமாக நடத்தும் மொகலாயம் இருந்தால் இங்கே அமைதி வரும். ஷாஜகான் காலம் போல் அவர்கள் பொற்காலம் வரும். மாறாக, எங்களை அழித்து வாழமுயன்றால் இதுவரை எல்லா சுல்தானியமும் எப்படிச் சரியுமோ அப்படி மொகலாயமும் சரியும். இந்த மண் தன் போராட்டத்தை விடாது.
அது யாரையாவது உருவாக்கும் இளவரசே, சிவாஜி எப்படி அவ்வளவு பெரிய இந்துராஜ்ஜியத்தை உருவாக்கினார்? அவர்களோடு நாங்கள் கைகோர்த்ததால். டெல்லியினைப் பிடிக்க எவ்வளவு நேரமாகும் சொல்லுங்கள்?
ஆனால், செய்யமாட்டோம். மொகலாயம் வேண்டும். இந்து ஆதரவாக வேண்டும், அதைத் தர மொகலாயம் மறுத்தால்” எனச் சொன்னவன் குரலைத் தாழ்த்திச் சொன்னான்.
“மறுத்தால் மொகலாயம் இருக்கும் இடத்தில் இன்னொரு அரசுதான் இஸ்லாமிய அரசாக அமையும், வேறுவழியே இல்லை”
சொன்னவன் முகமது அக்பர் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தான். அக்பர் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். பின் மெல்லச் சொன்னான்.
“நான் இதுபற்றி என் தந்தையிடம் பேசிப் பார்க்கின்றேன்” என்றான்.
“தாராளமாக பேசுங்கள், பேசிவிட்டு சொல்லுங்கள், நாமெல்லாம் ஒன்று கூடி அராபிய கொள்ளையர்களுக்கு எதிராக போராடி இந்நாட்டை காத்து நிற்க வெண்டும். அக்பர் காலம், ஷாஜகான் காலம் திரும்பவேண்டும், அதைத்தான் எதிர்பார்க்கின்றோம். இப்போதைக்கு அதிகம் வேண்டாம் ஜிஸியா வரி ரத்து, இடிபட்ட இந்துக்கோவில்களை மீளக் கட்டி தருதல், காசியில் இந்துக்கோவில் மீளத் தருதல் என இவ்வளவு போதும்.
நீங்கள் எங்கள் வம்சம் இளவரசே, அக்பருக்கும் ஜஹாங்கீருக்கும்மான எங்கள் மண உறவுகள் பிரசித்தி, மதம் வேறானாலும் குலம் ஒன்று. ரத்தம் ஒன்று. அது இந்துஸ்தானுக்காக சிந்தவேண்டுமே தவிர நமக்குள் சிந்தக் கூடாது” என்றான்.
இது முகமது அக்பருக்கு நியாயமான கோரிக்கையாக பட்டதால் ஔரங்கசீப்பிடம் சொல்வதாக சம்மதித்தான். அவனுக்கு நல்ல விருந்தளித்து இன்னும் பட்டாடை அணிவித்து சிறந்த ஒட்டகமெல்லாம் கொடுத்து நிறைவாக வழியனுப்ப முனைந்தான் துர்க்காதாஸ்.
மிகுந்த மகிழ்வுடன் விடைபெற்றான் முகமது அக்பர், அப்போது அழைத்துச் சொன்னான் துர்க்காதாஸ், “இளவரசரே உங்கள் பணயக் கைதிகளைப் பெற்றுச் செல்லுங்கள்”
வியந்து புருவம் உயர்ந்த முகமது அக்பர் சொன்னான், “யுத்தம் இன்னும் நிற்கவில்லை. எந்த உத்திரவாதமும் நான் தரவில்லை, என் தகப்பனிடம் இனிதான் பேசவேண்டும், அதற்குள் அவர்களைத் தருவீர்களா? நிஜமாகவா?” எனக் கேட்டான்.
“இவர்களைப் போல் ஆயிரம்பேர் வந்தாலும் சமாளிக்கும் வீரம் எங்களுடையது, இவர்களை உங்களுடன் பேசும் ஒரு வாய்ப்பாகத்தான் பயன்படுத்தினோம், அன்புக்கும் வீரத்துக்குமே நாங்கள் கட்டுப்படுவோம். இப்படி மிரட்டி சாதிக்கும் வழமை இந்துகளிடம் இல்லை” எனச் சொல்லி அவர்களை ஒப்படைத்தான்.
துர்க்காதாஸின் நேர்மையிலும் உயர்ந்த பண்பிலும் உருகிப்போனான் முகமது அக்பர், தகப்பனுக்கு எப்படி இதை எடுத்துச் சொல்வது, ஆனால் இனி போராடிப் பலனில்லை எனும்போது சொல்லித்தான் ஆகவேண்டும் என யோசித்தபடி யானையில் அமர்ந்து தன் இடம் நோக்கி வந்து கொண்டிருந்தான்.
துர்க்காதாஸை தன் மகன் சந்தித்தான் என்பதைக் காற்றிலும் கண்கள் கொண்ட ஔரங்கசீப் அறிந்து கொண்டான், ஆனால் அவனாகச் சொல்லட்டும் என ஒன்றுமறியாதவன் போல் காத்திருந்தான்.
முகமது அக்பர் அங்குள்ள நிலவரத்தினையும். தன் ஆலோசனையினையும் கலந்து ஔரங்கசீப்புக்கு மடல் எழுதினான், அது தன் வாழ்க்கையினை மாற்றிப்போடும் என்பதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.
(தொடரும்..)