சத்ரபதி சாம்பாஜி : 08

சத்ரபதி சாம்பாஜி : 08

1681 ஆம் ஆண்டு மே மாத மத்தியிலே ஔரங்கசீப்புக்கு ராஜபுத்திரருடனான போர்க்களத்தில் இருந்தபடி கடிதம் எழுதினான் முகமது அக்பர். அப்போது அவன் ஆஜ்மீர் எனும் அஜய்ன் மேரு பக்கம் இருந்து அவன் அதை எழுதினான்.

“உலக சக்கரவர்த்தியானவருக்கு வணக்கம், எம்மை நீங்கள் ராஜபுத்திருக்கு எதிரான கலவரங்களை அடக்கும்படி அனுப்பினீர்கள், நானும் மொகலாயச் சேனையின் உச்ச தளபதியாக நின்று இங்குக் கடமையினைச் செய்கின்றேன். ஆனால், நிலைமை இங்கு வேறுமாதிரியாக உள்ளது.

எல்லா நடவடிக்கையினையும் மிக அலசி ஆராய்ந்து செய்பவர்கள் நாம், எதிரிகள் அந்நியர் என்றால் நாம் மிகக் கடுமையாக நடந்து கொள்ளலாம். ஆனால் இவர்கள் நம் குடிமக்கள். அதுவும் நமது உறவினர்களும் 100 ஆண்டுகளாக நம்மைத் தாங்கி நிற்பவர்களுமான ராஜபுத்திரர்கள்.

கிளர்ச்சி என்பதை ஒரு மன்னன் செய்தால் குறிவைத்து முடக்கலாம். ஆனால், இங்கு எல்லா ராஜபுத்திர மன்னர்களும் ஒருசேர வந்து நிற்பது கிளர்ச்சி அல்ல, எழுச்சி. இதனை நாம் மிகுந்த உக்கிரத்தோடு அடக்கினால் எழும் விளைவுகள் பல உண்டு.

முதலாவது, சொந்த நாட்டுக்குள்ளே சொந்த குடிகளுடன் அதுவும் பலமும் வீரமுமிக்க ராஜபுத்திரருடன் நாம் மோதும்போது அந்நியர்கள் உள்ளே வருவார்கள், நாம் நமக்குள் அடித்துப் பலவீனமாவது நல்லதல்ல, வடமேற்கு ஆபத்தினை சக்கரவர்த்தி அறியாதவர் அல்ல‌.

இரண்டாவது, இது வீணான அழிவினை நமக்கும் கொடுக்கும் அவர்களுக்கும் கொடுக்கும், இதனால் நம் அரசுக்கே வரி இழப்பும் வருமான இழப்பும் ஏற்படும்.

மூன்றாவது, நம் குடிகளை நாமே கொன்றுவிட்டு வேறு யாருக்காக ஆளப்போகின்றோம் என்பது எனக்குள் எழும் குழப்பம், எவ்வகையில் நோக்கினாலும் இது சரியாகப்படவில்லை.

இந்தப் போருக்கு மூலக்காரணம் ஜிஸியா வரி என்பது அவர்கள் குற்றசாட்டு, இந்த நாடு எல்லோருக்குமானது எல்லா மக்களுக்குமானது. அதுவும் இந்துஸ்தான் என இந்துக்களுக்கு சொந்தமான இந்நாட்டில் நாம் வந்தவர்கள் அந்நியர்கள், இஸ்லாம் இங்கு அந்நிய மதம், ஆனாலும் அவர்கள் பேதமே பார்க்காமல் தங்களில் ஒருவராக நம்மை ஏற்றும் கொண்டார்கள். உறவும் கொண்டார்கள்.

அப்படியான நிலையில் இங்கு எங்களைத் தரம் தாழ்த்தி எங்களுக்கு மட்டும் ஜிஸியா வரி மற்ற மதங்களுக்கு இல்லை என்றால் எப்படி? இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் இந்த அரசில் சலுகைகள் அதுவும் இஸ்லாமியருக்கே எல்லாவற்றிலும் முன்னுரிமை வரிசலுகை அதுவும் அவர்கள் திருப்பயணமாக மெக்கா செல்ல அரசின் பணம்.

ஆனால், இந்துக்களின் புண்ணியபூமி காசியில் இந்துக்களுக்கு ஆலயமில்லை, பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கின்றது, மதுராவில் பள்ளிவாசல் கட்டபட்டிருக்கின்றது, இதெல்லாம் எவ்வகை நியாயம் எனக் கேட்கின்றார்கள்.

இது மண்ணுக்கான சண்டை என்றால் போராடலாம். இது அவர்கள் மதம் காக்க நடக்கும் சண்டை, தவிரவும் தெற்கே சிவாஜியின் இந்து அரசு இவர்களுக்கு மிகப் பலமான பின்புலமாக நிற்கின்றது, இந்த யுத்தத்தை நாம் எளிதில் முடிக்க முடியாது. காலத்துக்கும் நீளும்.

இங்கு நமக்கு தேவை அமைதி, அந்த அமைதி போரால் மட்டும் வரவேண்டியதில்லை. சில விஷயங்களை நாம் விட்டுக்கொடுத்தாலும் வரலாம்.

இதனால் போரை நீடிக்க எனக்கு விருப்பமில்லை. எல்லாவற்றையும் நிறுத்தியிருக்கின்றேன். நம் நிதி நிலையும் மிக மோசமாக இருக்கின்றது.

ஒரு ஆளுநராக அல்லாமல் அடுத்து மொகலாயத்தின் அரசனாக என் பார்வையும் முடிவும் இதுதான்” என எழுதியவன் முத்திரை இடப்பட்ட அக்கடிதத்தை சேவகனிடம் கொடுத்துவிட்டு ராஜபுத்திரருடன் சேர்ந்து அமைதியினை நிலைநாட்ட சிந்தித்துக் கொண்டிருந்தான்.

சில நாட்களில் அச்செய்தி ஔரங்கசீப்பை அடைந்தது, அதைப் படித்துப் பார்த்தவன் கண்களை மூடிக் கொண்டு கடிதத்தை ஓரமாக வைத்துவிட்டு சிந்தனையில் இறங்கினான்.

இது அவனின் வழக்கமான ராணுவ நடவடிக்கை அல்ல. மாறாக, அடுத்த வாரிசு யார் என்பதை முடிவு செய்யும் விஷயம் என்பதால் கொஞ்சம் நிதானமாகவே சிந்தித்தவன் இன்னொரு மகனான ஷா ஆலம் மற்றும் அசம் ஷாவின் முடிவினையும் அறிய விரும்பினான்.

முல்தானுக்கும் பிக்கானூருகும் இடையே நிலை கொண்டிருந்தான் ஷா ஆலம், அசம் ஷா சிந்து பிரதேசம் பக்கம் அதாவது ராஜபுத்திரரின் மேற்கு பக்கம் நிலை கொண்டிருந்தான்.

ஷா ஆலம் தன் முடிவினை தீவிரமாக எழுதினான், “உலக சக்கரவர்த்தியானவர்க்கும் கடவுளின் பெரும் ஆசியினைப் பெற்றவர்க்கும் என் வணக்கங்கள், இங்குப் போர் தீவிரமாக நடக்கின்றது. விரைவில் நல்ல செய்தி தர விரும்புகின்றேன்.

ஆனால், இந்தப் போரின் தன்மை நீங்கள் அறியாதது அல்ல. ராஜபுத்திரர் 100 ஆண்டுகாலம் நம் சேனைகளில் இருந்தவர் என்பதால் நம் வியூகம் அனைத்தும் அறிந்தவர்கள். அதுவும் இப்போது காமினி காவா எனும் மறைந்திருந்து தாக்கும் போர்முறைக்கு மாறிவிட்டார்கள். இதனால் நமக்கு சேதம் அதிகம்.

மிகுந்த சேதம் ஏற்படுத்திவிட்டால் நாம் இறங்கிவருவோம் என எண்ணுகின்றார்கள். அது நம்மால் முடியாது, ஒரு அரசன் அவன் விதித்த சட்டத்தை மக்களை ஏற்கவைக்க வேண்டும், மக்கள் சொல்வதற்கெல்லாம் ஆடுபவன் கோமாளியாக இருக்கமுடியுமே தவிர அரசனாக இருக்க முடியாது.

இங்கு இந்துக்கள் பெரும்பான்மை தொழில்கள் பல அவர்கள்தான் செய்கின்றார்கள். விவசாயம், ஜவுளி, ஆபரணம் என எல்லாமும் அவர்களிடமே உண்டு. நமது அரசுக்கு நிதி அதிகம் வேண்டும் என்பதற்காக ஜிஸியா வரி கேட்கின்றோம், அதை ஏன் கேட்கின்றோம்? ஆப்கன் பக்கம் இருந்து வரும் ஆபத்துக்களைச் சமாளிக்க கேட்கின்றோம். அது இந்த மக்களுக்குப் புரியவில்லை. சொன்னாலும் கேட்பதில்லை.

நாங்களும் உங்களுடன் போரிடும்போது ஏன் வரி என்கின்றார்கள்? அரச நிர்வாக செலவுகளை இவர்களிடம் சொல்ல நமக்கு அவசியமில்லை, நம்மேல் சந்தேகம் கொண்டுவிட்ட இவர்கள் இனி பெரிய கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள்.

ஒரு அரசன் நாட்டில் அமைதியினை நிலைநாட்ட அஞ்சக் கூடாது. முழுப் பலத்தையும் பயன்படுத்தி இவர்களை அடக்குதல் வேண்டும், கொஞ்சம் நிதி வசதியும் நல்ல சேனைகளும் கிடைத்தால் இவர்களை முடக்கிவிடலாம், கொஞ்சம் கொஞ்சமாக உணவு, குடிநீர், கால்நடைகள் என எல்லாவற்றையும் முடக்கினால் காலடியில் விழுவார்கள்.

இவர்களுக்குச் சிவாஜி அரசின் ஆதரவும் இருப்பதுபோல் தெரிகின்றது, இதுவரை சிவாஜி தரப்புடன் நெருக்கம் காட்டாதவர்கள் இவர்கள். காலம் காலமாக மன்னர் பரம்பரையான இவர்களுக்கு மன்னர் பரம்பரை அல்லாத சிவாஜியுடன் நெருக்கம் காட்ட தயக்கம் இருந்தது. ஆனால், இப்போது உறவு மலர்ந்திருக்கின்றது.

என்ன ஆனால் என்ன? நாம் இவர்களை அடக்கியே தீரவேண்டும், விரைவில் அதைச் செய்து காட்டுவேன்” என எழுதினான்.

இன்னொரு மகனான அசம் ஷா எல்லாமே சக்கரவர்த்தியாரின் விருப்பம், போர்ச்சுகீசியருடன் சேர்ந்து பெரும் ஆயுத கொள்வனவு செய்தால் இவர்களை அடக்கிவிடலாம் எனத் தன் செய்தியினை அனுப்பியிருந்தான்.

மூன்று மகன்களின் கருத்தையும் சீர் தூக்கி பார்த்தவன் அடுத்து என்ன செய்வது என விளக்கம் கேட்க முல்லாக்கள் எனும் உலேமாக்கள் சபையினைக் கூட்டினான்.

இஸ்லாமியர் ஆட்சியில் இவர்கள் சக்திவாய்ந்த மதகுருக்கள், நாட்டின் மதரீதியான விவகாரங்களில் இவர்கள் கருத்து முக்கியம், ஜிஸியா உள்ளிட்ட வரிகளில் இவர்கள் ஆலோசனை முக்கியம். இஸ்லாமிய நாட்டு அரசுகளில் சுல்தான் சக்தி உள்ளவன் என்றாலும் இந்த உலேமாக்களை எளிதில் தாண்டமுடியாது, நாட்டுக்கு மிகப்பெரிய நெருக்கடி எனும்போது அவன் தன் உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தலாமே தவிர பல மத விஷயஙளில் அவரகள் ஒப்புதல் அவசியம்.

அதுவும் ஷரியட் சட்டங்களை இஸ்லாமிய அடிப்படையில் மொகலாயர் பின்பற்றியதால் இந்த உலேமாக்கள் குழு முக்கிய இடம் பிடித்தது, அவ்வகையில் ஔரங்கசீப்பின் இஸ்லாமிய குரு சயிது முகமது குவானவ்ஜி எனும் இஸ்லாமிய மார்க்க அறிஞர் இவர் முகிபுல்லா அலாஹாபடி என்பவரின் சீடர்.

இந்த முகிபுல்லா என்பவர் ஜஹாங்கீர் காலத்தில் பிரசித்தியான அறிஞராக இருந்தார். அவரிடம் சிறிய வயதிலே சேர்ந்த இந்த சயீத் பின்னாளில் தேர்ந்த இஸ்லாமிய குருவாக உருவானார், ஔரங்கசீப் முழுக்க இவரின் வார்ப்பு மற்றும் வளர்ப்பு.

எல்லாவற்றையும் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பார்க்கும் வாய்ப்பினை இவர்தான் ஔரங்கசீப்புக்குக் கொடுத்தார், ஒருவகையில் இஸ்லாமிய பரிபூரண இந்துஸ்தான் என்பது இவர் கனவு.

1666ல் இவர் இறந்தபின் இவரின் மகன் குவாசி முகமது ஹூசேன் ஔரங்கசீப்பின் மத விவகாரங்களுக்கான தலைவராக இருந்தார். அவரிடமே ஜிஸியா வரி விவகாரம், வசூல் முறை, அந்தத் துறை என எல்லாவற்றையும் ஒப்படைத்திருந்தான்.

இது தன் தனிப்பட்ட விஷயம் என்றால் அவன் எப்போதோ முடிவினை மகன்களுக்கு அறிவித்திருப்பான், இது அடுத்த மன்னர் யார் என்பதன் பிரச்சினை, ஔரங்கசீப்புக்கும் அப்போது 62 வயதாயிற்று.

அரச வாழ்வு என்பது ஆபத்து நிறைந்தது, எவ்வளவுக்கு அது சுகபோக அதிகார வாழ்வோ அவ்வளவுக்கு ஆபத்தும் நிறைந்தது. ஒரு அரசன் எப்போது வேண்டுமானாலும் சாகலாம் என்பதால் அடுத்த வாரிசுகள் தயாராக இருப்பது முக்கியம், ஆட்சிமுறை அத்தனையும் கரைத்துக் குடித்துத் தேர்ந்திருந்த மொகலாயத்திலும் இந்த நடைமுறை இருந்தது.

மொகலாயர் நீடித்து நிற்க அவர்களின் ராஜரீக அரசப் பரிபாலனை முறையும் நிர்வாகமும் சேனை வழிநடத்தலும் முக்கியமானதாக இருந்தது, மிகத் துல்லியமான அரச நிர்வாகமும் ராஜகுடும்ப நிர்வாகமும் அங்கு இருந்தது.

மொகலாயரில் மூத்தவன் இளையவன் என வித்தியாசமில்லை. யார் அரசபதவிக்குப் பொருத்தமானவனோ அவனுக்கே பதவி கொடுப்பார்கள். இல்லை அவனே எடுத்துக் கொள்வான், அதற்கும் வழிவிடுவார்கள், அங்கு வலுவான ஆட்சி ஒன்றே பிரதானம்.

ஔரங்கசீப் மெக்கா செல்ல விரும்பியதால் இந்த விவகாரத்தை மதகுருமார்களிடம் கேட்டு முடிக்க முடிவு செய்து அந்த அவையினைக் கூட்டினான்.

மொகலாய அவையில் அவன் அரசன், ஆனால் உலேமா கூட்டத்தில் அவன் சமானியன் என்பதால் வழக்கமான அரச உடை எல்லாம் களைந்து வெள்ளை நிற அங்கியும், வெள்ளைத் தலைப்பாகையும் அணிந்து அமர்ந்திருந்தான்.

சபை எல்லா விவகாரங்ளையும் அலசியது. முகமது அக்பரின் செய்தி, ஷா ஆலமின் செய்தி என எல்லாமும் விவாதிக்கப்பட்டது, அவர்கள் விருப்பம் ஷா ஆலமின் முடிவாகவே இருந்தது.

பல மார்க்க அறிஞர்கள் என்றல்ல மொத்த அவையுமே ஷா ஆலம் கருத்தை ஆதரித்தது, இதனால் அதன் தலைவரான குவாசி முகமது உசேன் தன் முடிவினைச் சொன்னான்.

“நாம் இறைவனால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த இந்துஸ்தானத்தினைப் பரிபூரண இஸ்லாமிய நாடாக மாற்றுவதைத் தவிர வேறு எதையும் யோசிக்கக் கூட முடியாது, காபீர்களை ஒழித்து மக்களை மார்க்கவழியில் திருப்ப அனுப்பப்பட்டவர்கள் நாம்.

அதனாலே இத்தேசம் நமக்கு இறைவனால் அருளப்பட்டது, அதை வாள்முனையில் சுல்தான் செய்யும்போது நமக்கு உரைக்கப்பட்ட மார்க்கப்படி அவரை வழிநடத்துதல் நம் கடமை.

இது இஸ்லாமிய நாடு, இங்கு இஸ்லாமிய முறைப்படி ஆட்சி நடக்கும் போது ஜிஸியா வரி அனுமதிக்கப்பட்டதே, நாம் நம் மார்க்க விதிகளைப் பார்க்க வேண்டும், நம்முடைய புனிதமான சட்டங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

இதனால் ஜிஸியா வரியினை ரத்து செய்யவேண்டும் எனும் முகமது அக்பரின் கோரிக்கையினைச் சபை நிராகரிக்கின்றது, அப்படியே இந்த வரி அவசியம் இது இஸ்லாமிய நாடு எனும் நிலைபாட்டில் உள்ள ஷா ஆலம் அவர்களை ஆதரிக்கின்றோம்.

காபீர்கள் சொன்னபடி எல்லாம் கேட்டிருந்தால் நம் அரசு மொரோக்கோ முதல் வங்கம் வரை நீண்டிருக்க முடியாது, நாம் காபீர்களைக் கொல்லவில்லை அழிக்கவில்லை. மாறாக, வரிமட்டும் கட்டச் சொல்கின்றோம், இது இஸ்லாமிய அரசின் முடிவு அவர்கள் கட்டுப்பட்டே தீரவேண்டும். ஏற்க மறுத்தால் சேனைகளைக் கொண்டு சக்கரவர்த்தி அடக்க வேண்டும், இறைவன் நமக்குத் துணையிருப்பார்”

டெல்லி செங்கோட்டையில் நடந்த உலேமாக்கள் அவை இப்படி முடிவு எடுத்ததும் புன்னகை பூத்தான் ஔரங்கசீப், அவன் எண்ணமும் அதுவாகவே இருந்தது.

அவன் மிகுந்த தந்திரசாலி. சகோதரர் அனைவரையும் அழித்து ஷாஜகானை முடக்கி அதிகாரத்தை கைப்பற்றியவன் என்பதால் தன் மகன்களுக்குள் இந்த விவகாரத்தால் மோதல் வராதபடி முகமது அக்பரை வங்கத்துக்கு அனுப்பி ஆங்கிலேயர் செய்த குழப்பங்களை அடக்க எண்ணி கடிதம் எழுதினான்.

“மகனே முகமது அக்பர், உன் கடிதத்தில் சொன்னபடி முடிவெடுக்க இது உகந்த நேரமல்ல. போர்க்காலங்களில் முடிவெடுக்கக் கூடாது, இவை எல்லாம் பின்னாளில் பார்க்க வேண்டிய விஷயங்கள்.

ஜிஸியா வரியினை உலேமாக்கள் சபையே ரத்து செய்ய முடியாது எனச் சொன்னபின் என்னாலும் மீறமுடியாது, அதனால் நீ உடனே வங்கத்துக்குச் சென்று ஷாயிஸ்டாகானுடன் நின்று ஆங்கிலேயர் செய்யும் கலவரங்களை அடக்க உத்தரவிடுகின்றேன், அவசரமாக நீ டாக்கா கிளம்பவும்”

இந்தச் செய்திக் கேட்டு துடித்துப்போனான் முகமது அக்பர், காரணம் 20 வயதைத் தாண்டிவிட்டால் மொகலாய இளவரசர்களில் யார் அடுத்த அரசன் எனும் சண்டை வரும், அது அங்கே உள்ளூர வந்திருந்தது, இங்கே ராஜபுத்திரர்களை அடக்க வந்தோம் எனச் சொன்னாலும் உண்மையில் மிகப் பலமான ராஜபுத்திரரை வீழ்த்தியவர்கள் அடுத்த மன்னனுக்கான தகுதியினைப் பெறுவார்கள்.

இதை வாள்முனையில் பெற விரும்பியே மூவரும் வந்தார்கள். ஆனால், முகமது அக்பரோ அதைச் சமாதானத்திலே பெற்றுவிடலாம் என நம்பினான்.

அப்படியான நிலையில் ஔரங்கசீப் இப்படி அவனைக் கிளம்பச் சொன்னது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்போது இவன் நகர்ந்துவிட்டால் வாய்ப்பு ஷா ஆலமுக்குச் செல்லும். பின், அவன் அரசனாகும் வாய்ப்பு உண்டு.

வங்கம் மிகத் தொலைவான இடம், அங்குப் பராக்கிரமங்களைக் காட்ட வாய்ப்பில்லை, இங்கே ஆப்கான் பக்கம் கொள்ளைக் கூட்டத்தால் சிக்கல் உண்டு. அடுத்து ராஜபுத்திரர் எனும் பெரும் பலசாலிகளிடம் பலம் காட்ட வாய்ப்பு உண்டு, தெற்கே சிவாஜியின் இந்துராஜ்ஜியம் அசாத்தியமானது.

இங்கு ஏதும் சாதித்தால்தான் அரச பதவிக்கு அடி எடுத்து வைக்கமுடியும். வங்கத்தில் அது சாத்தியமில்லை, அந்தப் பிரிட்டிஷ் கும்பல்கள் ஒரு விஷயமே அல்ல. அவை கடல்பாம்புகள். நிலத்தில் அவர்களை அடிப்பது சுலபம். அது பெரும் தகுதி ஆகாது.

இதனால் வங்கம் செல்ல மறுத்தவன் மறுபடி விஷயத்தை துர்க்காதாஸுக்கே கடத்தினான்.

துர்க்காதாஸ் புன்னகைத்தான். மொகலாயத்தில் விரிசல்களின் வேர் விழுவதை அறிந்தான், கடப்பாரையாலும் பிளக்க முடியா மலைகளை செடிகளின் பல வேர்கள் எளிதாக மெல்ல மெல்ல பிளந்துவிடும் என்பதால் புன்னகைத்தான்.

மறுபடியும் ராஜபுத்திரர்கள் கூடி ஆலோசித்தனர். ராஜா ராணா சொன்னான்.

“முகமது அக்பர் இங்கிருந்து செல்வது நல்லதல்ல, அவன் சென்றுவிட்டால் ஷா ஆலம் முழுப் பலத்தோடு பாய்வான், அவனைச் சரிகட்டவும் மொகலாயருக்குக் கடிவாளம் இடவும் முகமது அக்பர் அவசியம், அவனை வளைத்து போட்டு நம்மோடு வைத்துக் கொள்ள வேண்டும்” என்றவன் பல ஆலோசனைகளைச் சொன்னான்.

முகமது அக்பரை மீண்டும் சந்தித்தான் துர்க்காதாஸ், மெல்லச் சொன்னான்.

“உங்கள் நிலை புரிகின்றது, உங்களை ஓரம்கட்டிவிட்டு ஷா ஆலமினை முன்னிறுத்த விரும்புகின்றார் உங்கள் தந்தை, நீங்கள் இனி மொகலாயத்தில் செல்லாக் காசு ஆகிவிடுவீர்கள் அல்லவா?” எனச் சொன்னபடி முகமது அக்பரின் முகத்தை நோக்கினான்.

அக்பரின் முகம் சினமும் இயலாமையும் கொண்டிருந்தது, அவன் முகத்தில் அரச ஆசை எனும் நெருப்பு தெரிந்தது, அந்த நெருப்பில் எண்ணெயினை ஊற்றினான் துர்க்காதாஸ்.

“அக்பரே, நீங்கள் சென்றாலும் நாங்கள் யுத்தத்தை தொடரவேண்டும், தொடர்வோம். யாரை எதிர்த்து போராடுவோம்? இதே ஔரங்கசீப்பை எதிர்த்தே போராடுவோம்.

நீங்கள் வங்கத்தில் இருந்து யாரை எண்ணி கொதிப்பீர்கள்? இவர்களை எண்ணி கொதிப்பீர்கள். ஆனால், உங்களால் வங்கத்தில் இருந்து ஒன்றும் செய்யமுடியாது.

இங்கு எங்களுக்கும் ஔரங்கசீப்பை எதிர்க்கும் தேவை இருக்கின்றது, உங்களுக்கும் அதே தேவை இருக்கின்றது. உங்கள் மொகலாயம் பற்றித் தெரியுமல்லவா? நாளை உங்கள் சகோதரன் ஷா ஆலம் அரசனானால் உங்கள் கதி?

இங்கு நாங்கள் ஒருவேளை வீழ்ந்தால் நிச்சயம் ஷா ஆலம் பெரும் சக்தியாகிவிடுவார். அடுத்த கணம் அவர் உங்கள் தந்தையினைச் சிறையிட்டோ அல்லது கொன்றுபோட்டோ ஆட்சிக்கு வந்துவிடுவார். அதன் பின் உங்கள் நிலை என்னாகும்? வங்கத்தில் இருந்து எப்படித் தப்புவீர்கள்?” எனச் சொன்னவன் அவனைக் கூர்ந்து பார்த்தான்.

துர்க்காதாஸ் சொல்வது அத்தனையும் உண்மை என உணர்ந்த முகமது அக்பர் படபடப்பில் தண்ணீர் எடுத்துக் குடித்துக் கொண்டான்.

அவனின் படபடப்பில் பயத்தில் உற்சாகம் கொண்ட துர்க்காதாஸ் அந்த இடத்தில் ஓங்கி அடித்தான். “எங்களுக்கும் வாழ்வா சாவா எனும் போராட்டம், உங்களுக்கும் அதுவே எனும் நிலையில் நாம் ஏன் சேர்ந்து போராடக் கூடாது?”

கண்களை அகல விரித்த முகமது அக்பர் கேட்டான், “அது சாத்தியமா? எனக்கு உதவுவீர்களா? இதெல்லாம் நடக்குமா?”

துர்க்காதாஸ் புன்னகைத்துச் சொன்னான், “மொகலாயத்தில் யாருக்குமில்லா வாய்ப்பு உங்களுக்குத்தானே உண்டு, உங்களிடம் சேனை உண்டு. எங்களிடமும் பெரும் பலம் உண்டு. எல்லாவற்றுக்கும் மேல் பெர்ஷிய மன்னன் உங்கள் தாய்மாமன் அல்லவா? உங்கள் அன்னையார் அவர்கள் குலம் அல்லவா? உங்களுக்கு ஒன்று என்றால் வரமாட்டார்களா?

வருவார்கள் எல்லோரும் வருவார்கள். ராஜபுத்திரர், பெர்ஷியர் என எல்லோரும் உங்களுடன் கூடுவார்கள். ஆனால், அதற்குத் தேவை ஒன்றே ஒன்றுதான்” என்றான்.

என்ன எனும்படி அவனைக் கண்டான் முகமது அக்பர்.

“நீங்கள் இந்த அரசு உங்களது என முழங்க வேண்டும், நானே மொகலாயத்தின் அரசன் என முழங்க வேண்டும், அப்படியானால் எல்லோரும் நொடிப் பொழுதில் வருவார்கள், மொகலாயத்தில் உங்கள் சேனை, எங்கள் சேனை, பெர்ஷிய சேனை என எல்லாமும் உங்களுக்குக் கிடைத்தால் மொகலாய சக்கரவர்த்தி பட்டம் உங்களுடையது”

நம்பமுடியாமல் “கட்டாயம் நடக்குமா?” என அவன் கைகளைப் பிடித்துக் கொண்டான் முகமது அக்பர், அவன் துர்க்காதாஸ் கைகளைப் பற்றியவிதம் அவன் அரச ஆசையினை அழுத்தமாகச் சொன்னது.

துர்க்காதாஸ் சொன்னான், “இது எளிதில் சாத்தியம், இது ஒன்றும் மொகலாயத்தில் புதியது அல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா?

ஜஹாங்கீர், ஷாஜகான் எல்லாம் இங்கு ராஜபுத்திரர் துணையுடனேதான் ஆட்சியினைக் கைபற்றினார்கள், ஔரங்கசீப்பை அரசராக்கியது நாங்களே, இப்போது உங்களை அரசனாக்க போகின்றோம், எங்களுக்கு வேண்டியதெல்லாம் நீங்கள் வலுவாக அவரை எதிர்த்தால் போதும்.

அதுவும் எங்களுக்காக அல்ல. உங்கள் மொகலாயத்துக்காக, உங்கள் ஆட்சி நலனுக்காக” எனச் சொன்னான்.

“எனக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால் நானும் விசுவாசமாக இருப்பேன், இனி நான் உங்கள் பக்கம், என் தந்தையிடம் செய்தி அனுப்பி பார்க்கின்றேன், அவர் எனக்கு வழிவிடாவிட்டால் அடுத்து நாம் செய்யவேண்டியதை செய்யலாம்..” என இழுத்தவன் மெல்லக் கேட்டான்.

“இப்போது நீங்கள் எங்களோடு போரில் இருக்கின்றீர்கள், எங்கள் மொகலாயம் முழுப் படையோடு வந்தால் எப்படிச் சமாளிக்க முடியும்?”

துர்க்காதாஸ் சிரித்தபடியே தெற்கு நோக்கி கைகாட்டி சொன்னான், “தெற்கே சிவாஜியின் இந்துராஜ்ஜியம் இருக்கின்றது, அங்கே சாம்பாஜி இருக்கின்றார், அந்தச் சேனை நமக்கு நிலத்திலும் கடலிலும் பெரும் பலம் தரும், அவர்கள் இருக்க அஞ்சவேண்டாம்”

முகமது அக்பர் இந்த நம்பிக்கையான மொழிகளால் நிறைவு கொண்டான், தனக்கான சேனையினை அவன் திரட்ட ஆரம்பித்தான். அவனுக்குரிய நம்பகமான தளபதியாக திலியர்கான் இருந்ததால் அவனோடு தனக்கான பெரும் சேனை திரட்ட திட்டமிட்டவன். ஔரங்கசீப்புக்குத் துணிச்சலான கடிதம் எழுதினான்.

“நான் வங்கத்துக்கு வரமாட்டேன், இது எனக்கு எதிராக நீங்களெல்லாம் செய்யும் சதி, நான் மிக அமைதியான முறையில் இங்கு அமைதி ஏற்பட வழிகூறினால் நீங்கள் அழிவில் அதைச் செய்ய முயல்கின்றீர்கள், அமைதிக்கான வாய்ப்பு இருந்தும் போரைச் செய்வது என்பது உங்களின் இன்னொரு திட்டத்தைக் காட்டுகின்றது.

நீங்கள் ஷா ஆலமுக்கு பட்டம் சூட்ட முடிவு செய்தே என்னை வங்கத்துக்கு அனுப்ப முயல்கின்றீர்கள். என்னை ஓரம்கட்ட முயல்கின்றீர்கள், நான் இதற்குப் பலியாகமாட்டேன்.

இங்கு அமைதி ஏற்படுத்தி இம்மக்களிடம் நல்ல பெயர் பெற்று ராஜபுத்திரர் ஆதரவை பெற்று நான் மன்னராவதை தடுக்க ஷா ஆலம் செய்யும் சதிக்கு நீங்கள் துணைபோவது சரியல்ல, நீங்கள் சற்றுத் தள்ளி இருங்கள். இது எனக்கும் ஷா ஆலமுக்குமான பிரச்சினை. அவனே இன்னும் போருக்கு உங்களைத் தூண்டவும் கூடும், என்ன ஆனாலும் நான் இங்கிருந்து வரமாட்டேன், இந்தப் பகுதியில் அடிப்படை வரி தவிர ஜிஸியா வரி விதிக்க அனுமதிக்கவும் மாட்டேன்”

இந்தக் கடிதம் கண்டு அரண்டே போனான் ஔரங்கசீப், மொகலாயரின் எல்லாக் குணம், வழி, பதவி வெறி என எல்லாமும் வழி வழியாக அறிந்தவன் தன் மகன் மன்னனாக விரும்புவதையும் அதற்காக ராஜபுத்திரரிடம் கருணை காட்ட துவங்குவதையும் அறிந்தான்.

இது இனி இரு மகன்களுக்கான சண்டையாகி அதில் மூன்றாம் மகனும் இணைந்தால் அது மொகலாயத்தின் உள்குடும்ப பகையாகி போராகி அது ராஜபுத்திரருக்கும், சாம்பாஜிக்கும் சாதகமாகும் என அஞ்சினான்.

மொகலாயருக்குள் வாரிசு சண்டை வருவதும் அங்கே ராஜபுத்திரர் ஒரு தரப்புக்கு உதவுவதும் காலம் காலமாக நடப்பது. ஆனால், அப்போதெல்லாம் ராஜபுத்திரர் இரு அணியில் ஒரு அணியில் இருப்பார்கள்.

முக்கியமாக தெற்கே பாமினி சுல்தான்கள் பிஜப்பூர் கோல்கொண்டா என வலுவாக இருந்தார்கள், அவர்கள் ஆதரவும் இருவரில் ஒருவருக்கு இருந்தது.

இப்படி இது வழக்கமான வாரிசு சண்டையாக இருந்தால் தன் அண்ணனுடனும் தகப்பனுடனும் தான் சண்டையிட்ட காலம் போல் இருந்தால் விட்டுவிடலாம், ஆனால் இப்போது நிலைமை அப்படி அன்று.

யுத்தம் எனக்கும் ராஜபுத்திரருக்கும் இடையே நடக்கின்றது. இதனால் மொகலாயத்தினுள்ளே ராஜபுத்திரர் வருவார்கள், அதைவிடப் பெரிய ஆபத்தாக சிவாஜியின் இந்து பேரரரசு இருக்கின்றது, இன்று இந்துஸ்தானத்தின் வெற்றி தோல்வியினை நிர்ணயிப்பவர்கள் அவர்களே.

அந்தச் சாம்பாஜி என்னோடு இணக்கமாக செல்வான் எனக் கருதினால் அவன் பர்ஹான்பூர் வரை வந்து கொள்ளையிட்டுச் சென்றிருக்கின்றான். இனி அவனும் உள்ளே வந்தால் ஆபத்து.

இது என் மகனைக் கொண்டே ராஜபுத்திரர் செய்யும் சதி, இங்கே இனி எல்லோரும் புகுந்தால் ஷா ஆலமை ஒடுக்குவார்கள். பின் என்னைக் குறிவைப்பார்கள், அவர்கள் குறி என் மகனை வளைப்பது அல்ல. என்னை முடக்கி அழிப்பது.

ஆ….. எவ்வளவு பெரிய சதி , மொகலாயத்தையே அழிக்கும் சதி என உறுமியவன் இதற்கு ஒரே வழி தானே களத்தில் குதிப்பது என முடிவு செய்தான், தான் இனி களத்தில் இறங்கினால்தான் விரைவில் முடிவுகட்டப்படும், இன்னும் மகன்களை நிறுத்தினால் அவர்களுக்குள் உள் சண்டையாக இதுமாறி பிளவை ஏற்படுத்தும். இனி யுத்தத்தைதானே எடுப்பதே சரி, மகன்கள் ஆடத் தெரியாமல் ஆடுகின்றார்கள் என நினைத்தவன் அடுத்தடுத்துச் சிந்தித்தான்.

அவன் தன் மெக்கா பயணத்தைத் தள்ளிவைத்தான், அப்படியே ரமலான் முடிந்ததும் தெற்கே நகர முடிவெடுத்தான், டெல்லியினை விட்டு செல்லும்போது என்னென்ன செய்துவிட்டு செல்லவேண்டும் எனப் பட்டியலிட தொடங்கினான்.

அதே நேரம் நான் இனி ஜிஸியா வரி வசூலிக்கமாட்டேன் என அக்பர் எழுதியவரி அவன் மனதில் பெரும் வலியும் அவமானமும் கொடுத்து பெரும் கோபமாய் எரிந்து கொண்டிருந்தது, அவனைப் பிடித்து இனி சிறையிடுவேன் என மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தான்.

ராஜபுத்திரருக்கும், மொகலாயருக்குமான போர் இப்போது ஔரங்கசீப்புக்கும் அவன் மகன் முகமது அக்பருக்குமாக மாறும் போராக திரும்பிற்று, ராணா ராஜாவின் திட்டம் சரியாக வேலை செய்தது.

ராஜபுத்திர பகுதியில் ஜஸியாவரி வசூலிப்பதை முகமது அக்பர் நிறுத்தினான், இதனால் ராஜபுத்திரர்க்கும் அவனுக்கும் பெரும் உறவு ஏற்பட்டது, ஷா ஆலம் இதைத் தடுக்க முடியாமல் தடுமாறினான், ராஜபுத்திரர் பகுதிகள் தன்னாட்சி பெற்றது போல் இருந்தது.

இனியும் தாமதிக்காமல் அவனை அரசனாக்க ராஜபுத்திர தரப்பு விரும்பிற்று, அவர்கள் சாம்பாஜியினைத் தொடர்பு கொள்ள முனைந்தார்கள், அது ஜூன் ஜூலை மாதம் என்பதால் பெரும் மழையில் கொங்கன் பகுதி சிக்க சாம்பாஜி இதுபற்றி தன் கோட்டையில் இருந்து விவாதித்தான்.

அங்குச் சில அபிப்பிராய பேதங்கள் வந்தன. மூத்த தளபதிகள் வயதானோர்கள் இதைக் கொஞ்சம் எதிர்த்தனர். அவர்கள் வாதம் வேறு கோணத்தில் இருந்தது.

“நாம் மொக்லாயருக்கு எதிரிகள். ஆனால், அவர்கள் குடும்ப விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் நமக்கில்லை, ராஜபுத்திரர்களும் அவர்களும் உறவினர்கள் பல வகைகளில் பங்காளிகள், இன்று அடித்து கொள்வார்கள் நாளை சேர்ந்து கொள்வார்கள். அவர்களுக்கும் மொகலாயருக்கும் உள்ள உறவும் பகையும் பிரிக்கமுடியாதபடி சேர்ந்துவிட்டார்கள்.

நமக்கு ராஜபுத்திரர்கள் பெரிய உதவி செய்துவிடவில்லை, நம்மைக் கொஞ்சம் தள்ளியே வைத்தார்கள். ஜஸ்வந்த் சிங், ஜெய்சிங் போன்றோரும் நாமும் அவர்களைப் போல் மொகலாயருக்கு உதவியாக இருந்தால் என்ன என்பதுபோலத்தான் நகர்ந்தார்கள். மற்றபடி நமது இந்து ராஜ்ஜியம், இந்துக்களுக்கான பரிபூரண ராஜ்ஜியம் என்பதை அவர்கள் ஏற்கவில்லை.

அதனால் இங்கு நாம் நேரடியாக களமிறங்காமல் அவர்களுக்குத் தேவையானதை மட்டும் செய்து மொகலாயர் குடும்பத்துக்குள் செல்லாமல் இருப்பது நல்லது” என்றார்கள்.

ஆனால், கவி கலாஷ் இதை மறுத்துச் சொன்னான், “இது நிச்சயம் நல்ல வாய்ப்பு , மிகச் சரியான காலம். மொகலாயர் அவர்களுக்குள் அடிக்கும் நேரம் அவர்களில் ஒருவன் மூலம் உள்ளே புகுந்து மொகலாயத்தை முடிப்பதே சரி.

நாம் நேரடியாக செல்ல வேண்டாம். ராஜபுத்திரரை முன்னிறுத்தி அடிக்கலாம், நாம் பணமும் படைபலமும் கருவி மட்டும் கொடுத்து நாடிப் பார்ப்போம், அதன் பின் அடுத்தக்கட்ட நகர்வைச் செய்யலாம்.

நாம் முதலில் அந்த முகமது அக்பரை ஆதரிப்போம், இங்கு ஷாஜஹான் பிஜப்பூர் தளபதியாக இருந்த சிவாஜி மன்னரின் தகப்பனார் ஷாஹாஜியுடன் சேர்ந்து ஜஹாங்கீரை எதிர்த்த வரலாறு உண்டு, அதே வரலாறு இப்போது திரும்புகின்றது.

அப்போது நாம் தளபதி, இப்போது இந்துராஜ்ஜிய மன்னர். அவ்வளவுதான் வித்தியாசம். ஆக, நாம் இங்குத் தலையிட்டு அடித்தால் நம் ராஜ்ஜியமும் செல்வாக்கும் வடக்கில் பெருகும். மொகலாயரையும் அடக்கியது போலாகும். விரைவில் அவர்களை முடக்கிவிட்டு அழித்துவிடலாம்” என்றான்.

ஆனாலும், அனுபவமிக்க தளபதிகள் எதிர்த்தார்கள். “மொகலாயரை வீழ ராஜபுத்திரர்கள் விடமாட்டார்கள், அவர்கள் இலக்கு மொகலாயம் அன்று. மாறாக, ஔரங்கசீப் இல்லாத மொகலாயம், நமது இலக்கோ மொகலாயமே இருக்கக் கூடாது என்பது.

இதைச் சொன்னால் மொகலாயம் வீழ்ந்தால் பாரசீக அரசன் வருவான், இன்னும் பலர் வருவான் எனக் காரணம் சொல்வார்கள். நாம் அதை ஏற்க முடியாது, நமக்குத் தேவை வலுவான இந்து அரசு, அதனால் யோசித்து செய்வோம்” என்றார்கள்.

கலாஷ் விடுவதாக இல்லை. அவன் வாதாடினான். “இருக்கட்டும், இப்போது முகமது அக்பரை வைக்கட்டும், பின் ராஜபுத்திரரில் ஒருவரை சக்கரவர்த்தியாக்கி நாம் அதிகாரம் செலுத்தலாம், காலம் நமக்கும் கைகொடுக்கும் இப்போதைக்கு ஔரங்கசீப் ஒழிவதே நம் இலக்கு” என்றான்.

சாம்பாஜிக்கு கலாஷ் சொன்னதே சரியாக இருந்தது, அவன் எப்போதும் அவனை நம்புவான். முழுக்க நம்புவான்.

அவன் கடைசியாகச் சொன்னான், “நாமும் இந்தப் போரில் பங்கெடுக்கின்றோம், மழைக்காலம் முடிந்ததும் நேரடி நடவடிக்கை துவங்கலாம், முதலில் ஔரங்கபாத்தை கைப்பற்றி மொகலாயரை அங்கிருந்து விரட்டவேண்டும். அதற்கான ஆயத்தமெல்லாம் செய்யுங்கள், இனி இங்குத் தீராப்போர்” என உத்தரவிட்டான்.

மன்னரின் முடிவினைச் சபை ஏற்றுக்கொண்டது. இந்துஸ்தானின் அமைதியினை மொகலாயரைக் கட்டுப்படுத்தி இங்குச் சமநிலையினை ஏற்படுத்தும் அளவு சக்தி பெற்றிருந்த இந்து ராஜ்ஜியத்தின் முடிவு இது என்பதால் வரலாறு அடுத்தடுத்து காட்சிகளை எழுதத் தயாரானது.

அன்றைய நாளில் ராஜபுத்திரரின் பலம் சிறியது, ஏதோ வீரத்துடன் மொகலாயரை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், மொகலாயருக்குச் சரிக்குச் சரியாக ராணுவம், பொருளாதாரம் என எல்லா வகையிலும் சவால்விடும் சக்தி இந்து ராஜ்ஜியம் ஒன்றுக்கே இருந்தது, சிவாஜி அந்த மாபெரும் சாதனையினைச் செய்துவிட்டே மறைந்திருந்தார்.

ராஜபுத்திரர்க்குச் செய்திகள் பறந்தன. படைகள் திரட்டப்பட்டுக் கொண்டிருந்தன, குதிரைகள் யானைகள் தயார் செய்யபட்டன, வெடிமருத்தும் இதர தயாரிப்பும் நடந்து கொண்டிருந்தன. காலம் ஆகஸ்டு 1681 ஆம் ஆண்டை எட்டிற்று.

ஔரங்கசீப் ரமலான் நோன்பினை துவங்க இருந்தான். அதை முடித்தபின் தெற்கு நோக்கி நகரும் திட்டத்தில் இருந்தான், சாம்பாஜி இனி நேரம்பார்த்து ஔரங்கபாத்தினைப் பிடிக்கும் முடிவில் இருந்தான்.

அன்று ஆகஸ்ட்மாத புதன் கிழமை ஒன்றில் அவன் சாப்பிட அமர்ந்தபோது அந்த விபரீதம் வெடித்தது.

அவன் மதியம் பந்தி அமர அமர்ந்தபோது அரண்மனை அதிகாரி ஓடி வந்து கொண்டிருந்தான். “மன்னா உணவைத் தொடாதீர்கள். அதில் விஷம் கலந்திருக்கின்றது”

அவன் உணவை வாயில் வைக்கவில்லை என்பதால் தப்பினான், அப்படியே எழுந்தவன் மூச்சிறைக்க ஓடிவந்தவனை நோக்கி என்ன சொல்கின்றாய்? என அவன் தோளைத் தொட்டுக் கேட்டான்.

“மன்னா, இந்த உணவில் விஷம் இருக்கின்றது, அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும், நமது உளவுப்படையினர் கொடுத்த தகவல் இது, இன்றுதான் அரண்மனையில் முக்கிய சம்பவம் நடைபெற இருப்பதாக நமது உளவாளிகளுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் உங்கள் உணவில் விஷம் வைக்கப்பட்டிருப்பதாக அறிந்து கொண்டோம்.

இது மீன் வியாபாரி மூலம் வந்திருக்கின்றது, யாரோ சதிகாரர்கள் சிலர் மூலம் அரண்மனைக்கு மீன் கொடுப்பவனை வளைத்து விஷத்தை யாருக்கும் சந்தேகம் வராதபடி உள்ளே செலுத்தி விஷத்தன்மை வாய்ந்ததாக மாற்றியிருக்கின்றார்கள், இது சமையல்காரர்க்கே தெரியாது அவர்கள்மேல் குற்றமில்லை.

முழுக்கத் தேர்ந்த மீன் வியாபாரியின் கணக்கு. பிடித்த மாத்திரத்தில் செலுத்தப்படும் விஷம் மீனின் உடலெல்லாம் பரவும், அதுவும் மூலிகை விஷம் அல்லாமல் கடல்வாழ் உயினங்களில் இருந்தே எடுக்கப்படும் விஷம் என்பதால் சந்தேகம் யார் மீதும் வராது.

இது மிகப்பெரிய சதி, விஷமீனால் மன்னர் பாதிக்கப்பட்டார் என முடித்துவிடுவார்கள். ஆனால் மீன் விஷமாக்கப்பட்டதை யாரும் வெளியிடமாட்டார்கள்” என்றான்.

சாம்பாஜி உடனே அந்த மீன் உணவை சோதிக்கச் சொன்னான், அது பூனைகளுக்கு கொடுக்கப்பட்டது, காரணம் பூனைகள் மிகவும் சுதாரிப்பானவை. அவைகளுக்கு மீன் மிகப் பிடிக்கும் என்றாலும் விஷம் கலந்த மீனை எளிதில் உணர்ந்துவிடும்.

பூனைகள் ஒரு காலமும் சில விஷயங்களைத் தொடாது, அவைகள் இன்னொரு பூனைக் கறியினைத் தொடாது. அப்படியே விஷம் இருக்கும் கறியினையும் முகர்ந்து பார்த்தே ஒதுங்கிக்கொள்ளும்.

அரண்மனை பூனை இந்த மீன் உணவைக் கண்டு முகம் திருப்பிக் கொண்டது. சாம்பாஜி அதிர்ந்தே போனான், பின் அந்த உணவின் ஒரு சிறிய பகுதி மூலிகை சாறுகளால் சோதிக்கப்பட விஷம் இருந்தது உறுதியானது.

ஆடுதீண்டா பாலையின் சாறு உள்ளிட்ட சில பல மூலிகைகளை எடுத்து, அருகம்புல் சாரோடு புகையிலை நீரைக் கலந்து ஒருமாதிரியான மருந்தினை அவர் செய்து உணவினைச் சோதித்து அதன் நிறம் மாற்றம் அடைவதை வைத்தே விஷம் இருப்பதைச் சொன்னார்.

எல்லோரும் அதிர்ந்து போனார்கள், சாம்பாஜி ஏதும் பேசாமல் வந்து தன் அறையில் அமர்ந்துகொண்டான், தன் அரண்மனையிலே தனக்குப் பாதுகாப்பில்லை என்பதை நினைத்து நொந்துபோனான்.

கவிகலாஷும் அதிர்ந்துபோனான். இது சாம்பாஜிக்கு விஷம் வைக்கப்பட்ட இரண்டாம் தடவை என்பதால் எல்லோருக்கும் குழப்பமே நீடித்தது.

“என் தந்தையினை இப்படித்தான் கொன்றுவிட்டார்கள் துரோகிகள். அவர் இப்படித்தான் சரிக்கப்பட்டிருக்கின்றார்” என அழுதவன் மிக உடைந்தே போனான்.

கவி கலாஷ் இன்னொரு வகையில் சிந்தித்தான். ஒருவேளை மெல்லக் கொல்லும் விஷத்தை ஏற்கனவே சாம்பாஜிக்குக் கொடுத்திருந்தால் என அவன் சிந்தித்தபோது உள்ளூர நடுக்கம் வந்தது, அவன் அரண்மனை வைத்தியரை தனியே அழைத்து இந்தச் சந்தேகத்தைச் சொன்னான்.

அவர் இதனை ஆமோதித்து ஆனால் அப்படிக் கொடுக்கபட்டிருந்தால் “பானு சதா புஷ்பம்” எனும் சஞ்சீவ மூலிகையின் குளிகையினைக் கொடுத்தால் எவ்வித விஷமும் இறங்கிவிடும் எனச் சொல்லி அந்தக் குளிகைகளைக் கொடுத்தார்.

அதனை உடனே சாம்பாஜியினை உண்ணச் சொன்னான் கலாஷ்.

“இங்கிருப்பவர் என்னைக் கொல்ல நினைக்கும்போது எங்கிருந்தோ வந்த நீ என்னைக் காக்க நினைக்கின்றாய்” என விரக்தியாய்ச் சொன்னபடி அதை விழுங்கினான் சாம்பாஜி.

அரண்மனையில் விஷயம் பெரிதாக வெடித்தது, எல்லோரின் சந்தேகங்களும் சோயுர்பாய் மேல் விழுந்தது, அவள் மிகுந்த அச்சம் கொண்டவளாய் நடுங்க ஆரம்பித்தாள்.

சம்பந்தபட்ட மீன்வியாபாரியினை சதிகாரர்கள் பல தரப்பு மூலம் வளைத்திருந்தனர், அவனாலும் சரியான தகவலை தரமுடியவில்லை. அதில் பலரின் தொடர்பும் இருந்ததால் மூலத்தினைக் கண்டறிதல் சிரமாயிற்று.

எல்லோர் கைகளும் சோயுர்பாயினையே குற்றம்சாட்ட சாம்பாஜி ஏதும் செய்தாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டான், இம்முறை சோயுர்பாய் தலை தப்புவது கடினம் என எல்லோருக்கும் தெரிந்தது.

(தொடரும்…)