காளிதாசனின் ரகுவம்சம் : 41 to 45

காளிதாசனின் ரகுவம்சம் : 41

தேவர்கள் இவ்வாறு தம்மைத் துதித்து வாழ்த்தியதன் பின் பகவான் அவர்களிடம் அவர்களின் நலன் பற்றியும் அவர்களின் தர்மவழி இயக்கம் பற்றியும் விசாரித்தார்ர், அப்போது மிகுந்த துயருடன் அவர்கள் சொன்னார்கள்.

“பகவானே, பிரளய காலத்தில் கடல் பொங்கி வந்து பெரும் அழிவினைத் தரும் அது விதிக்கபட்டது , ஆனால் ஒழுக்கம் எனும் கரைதாண்டி வரும் ராவணன் எனும் ராட்சனால் நாங்கள் மிகுந்த பாதிப்படைகின்றோம்” என முறையிட்டார்கள்.

அப்போது பகவான் சமுத்திர கரையில் உள்ள மலைக்குகைகளில் எதிரொலித்து ஓசைமிகும் கடலையும் அடக்கும் சப்தத்துடன் கம்பீரமாகச் சொன்னார்.

பகவான் வாயில் இருந்து வந்ததாலே வார்த்தைகள் அதன் முழு வடிவினை அடைந்தன, அவர் மிகச் சரியாக‌ அடிவயிறு, மார்பு, நெஞ்சம், தலை, மூக்கு, அன்னாக்கு, பல், உதடுகள், நாவின் அடிப்பாகம் என வார்த்தைகள் தோன்றும் இடத்தில் இருந்து சரியாக உச்சரித்துச் சொன்னார், அப்படியே மெல்லினம் வல்லினம் இடையினம் என மிகச் சரியான ஓசையுடனும் சொன்னதால் அவை முழு வடிவமும் அவற்றால் பலனும் அடைந்தன‌.

பகவானின் வாக்கு அவரின் வெண்மையான பற்களில் இருந்து வந்தபோது அது முன்பு அவர் காலடியில் இருந்து வந்த வெண்ணிற கங்கை மேல் நோக்கி வந்தது போல் இருந்தது, வாமனனாக வந்தபோது பகவான் வானை அளந்த திருவடியினைப் பிரம்மன் அபிஷேகம் செய்த நீர் கங்கையாய்ப் பாய்ந்தது, அந்த வெண்ணிற கங்கை இப்போது மேல் நோக்கி வந்தது போல் அது புனிதமான வார்த்தையாய் இருந்தது, பகவான் சொன்னார் .

“ஓ தேவர்களே ரஜஸ், தமஸ், சத்துவம் எனும் முக்குணங்களும் எல்லாப் படைப்பிலும் உயிர்களிலும் உண்டு. ரஜஸ் சத்துவம் எனும் இரு குணங்களும் மானுடரிடத்தில் தமஸ் குணத்தால் மறைக்கப்பட்டு அவர்கள் தத்தளிப்பதை போல, உங்கள் பெருமையும் வீரமும் ராவணனால் மறைக்கப்பட்டு உங்கள் நிலை மங்கிக் கிடக்கின்றது என்பதை அறிவேன்.

நல்லகுடியில் பிறந்த ஒருவன் மிகச்சிறிய பாவம் ஒன்றைச் செய்தாலும் அவன் மனம் மிகவும் வருந்தும், அவ்வாறே ராவணனால் பாதிக்கப்படும் மூவுலகத்தார் மனமும் மிகவும் அஞ்சி நடுங்குகின்றன என்பதையும் அறிவேன்.

ஓ தேவர்களே, இந்திரனும் நானும் உலகைக் காக்கும் தொழிலைச் செய்பவர்கள். அதற்காக இந்திரனின் உதவி எனக்கு அவசியமில்லை. நெருப்பு காற்றில் எரியும், ஆனால் யாரும் காற்றை எரியும் நெருப்பை நோக்கிச் செல்ல அழைப்பதில்லை, காற்று அருகிருக்கும் போது தானே எரியும் நெருப்பை போல அறிவுடையவர் உகந்த சூழலில் தன் கடமையினைத் தானே செய்வார்கள், என் கடமையினை நானே செய்ய யாருடைய தயவும் அவசியமில்லை.

அந்த ராவணன் கோகர்ண ஆசிரமத்தில் பஞ்சாக்னி நடுவில் பத்தாயிரம் வருடம் தவமிருந்தவன், அவன் ஒவ்வொரு ஆயிரம் ஆண்டின் முடிவிலும் ஒவ்வொரு தலையாக வெட்டி யாக தீயில் இட்டவன், ஒன்பதாயிரம் வருடமாக ஒன்பது தலைகளைக் கொடுத்து பத்தாயிரம் வருடத்தை அவன் தொட்டு கடைசித் தலையினையும் இழக்க முனைந்தபோது பிரம்மன் அவனுக்கு வரமருளினார்.

அந்த வரத்தின்படி அவனை ராட்சதர், பூதம், வானவர், அசுரர் முதலானவர்களால் அவனுக்கு அழிவில்லை என்ற வரம் பெற்றான். ஆனால், மனிதரை அவன் ஒரு பொருட்டாக கருதாததால் அவன் வரத்தில் மனிதரால் அழியும் பலவீனம் உண்டு.

அவன் தான் இழந்த ஒன்பது தலைகளையும் பிரம்மனால் திரும்பப் பெற்றான், அவன் யாகத்தில் வெட்டிப்போடாத ஒரே ஒரு தலையினைத் தன் சக்கர ஆயுதத்துக்காய் விட்டுவைத்தவன் போலிருக்கின்றான்.

மணமிக்க சந்தனமரம் கொடிய பாம்பு தன்மேல் ஏறுவதை சகிப்பதைப் போல அவனின் எல்லா அட்டகாசங்களையும் பிரம்மன் கொடுத்த வரத்தின் காரணமாய் சகித்து கொண்டேனன்றி வேறு எதுவும் காரணம் அல்ல‌.

அவன் பிரம்மன் தன் தவத்தின் பலனாய் தன்முன் வந்ததும் , அவன் மானுடர் எக்காலமும் தன்னைக் கொல்லமுடியாதென அலட்சியமாய் அவர்களைத் துரும்பாய் கருதி தேவர்கள், அசுரர், பூதங்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், பைசாங்கள் முதலானோரால் தனக்கு ஆபத்து வரக்கூடாது என வரம்பெற்றுக் கொண்டான்.

ஓ தேவர்களே, அதனால் நீங்கள் அஞ்சவேண்டாம், நான் தசரதனின் மகனாகப் பிறந்து அவன் தலைகள் எனும் தாமரைகளை என் அம்பினால் கொய்து யுத்த பூஜைக்குரியவைகளாக்குவேன்.

இனி யாகத்தில் உங்களுக்குரிய அவிர்பாகம் உங்களை வந்தடையும், நான் ராமனாக வந்து எல்லா அர்க்கர்களையும் வதம் செய்ய இருப்பதால் இனி உங்களுக்கு எந்த இடைஞ்சலுமில்லை.

யாகங்களை முறைப்படி செய்யும் மானுடர் விஸ்வதேவர் எனும் இறைசக்தி பெற்றவர்களாகி வானுலகில் சஞ்சரிப்பர், அப்படியானவர்கள் கூட ராவணன் தன் புஷ்பக விமானத்தில் பறக்கும் போது அவனுக்கு அஞ்சி மேகங்கள் பின்னால் ஒளிந்து கொள்கின்றார்கள். அந்த நிலை நான் ராவணனை அழிக்க போவதால் இனி மாறும் என

ராவணன் தேவலோகப் பெண்களைச் சிறைபிடித்து வைத்திருக்கின்றான். ஆனால், அவர்களை அவன் பலாத்காரம் செய்யவில்லை , செய்தால் நளகூபரனின் சாபப்படி அவன் தலை வெடித்துவிடும் எனும் சாபத்தால் விட்டுவைத்திருக்கின்றான், அந்தத் தேவர்குல பெண்கள் அவர்கள் கணவரான உங்களைப் பிரிந்ததால் கூந்தலை வாரி முடியாமல் அலங்காரம் செய்யாமல் முன்பு இட்ட பின்னலுடனே இருக்கின்றார்கள், நான் ராவணனை வதைத்தபின் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள், அப்போது உங்கள் அன்பான மனைவியருடன் கூடி அவர்கள் கூந்தலுக்கு அலங்காரம் செய்து மகிழ்ந்திருப்பீர்கள், கவலை வேண்டாம்” எனச் சொல்லி ஆசிகூறி மறைந்தார்.

கடும் வறட்சியினால் நீரினால் வாடிய பயிர்களை மழைமேகம் தன் நீரினால் மகிழ்வித்து நிம்மதி கொள்ள செய்தல் போல பகவானின் மொழியால் தேவர்கள் நிம்மதி கொண்டார்கள்.

மரங்கள் மணமிக்க மலர்களைப் பூக்கின்றன, காற்றில் அம்மணத்தின் மணம் நெடுந்தொலைவு பரவுகின்றது, புஷ்பங்களின் மணம் காற்றில் நெடுந்தொலைவு சென்றாலும் அவை மரங்களின் அம்சமே, அப்படி இந்திரன் முதலான தேவர்கள் பகவான் ராமனாய் பிறக்கும் போது அவருக்குத் துணை செய்ய தங்கள் மஹிமையின் அம்சத்துடன் வாலி , சுக்ரீவன் போன்றோராக‌ அவதரித்தார்கள்.

அந்நேரம் அயோத்தியில் தசரதன் புத்திரகாமேஷ்டி எனும் யாகத்தை செய்தார், அந்த யாக நெருப்பில் இருந்து அழகான உருவம் ஒன்று தோன்றிற்று, யாகம் செய்த அனைவரும் அதைக் கண்டு அதிசயித்தார்கள், ஒரு தேவலோக வாலிபனாக அவ்வுருவம் மாறிற்று.

அவன் கையில் வெள்ளி மூடியுடன் கூடிய தங்க‌க் கிண்ணம் ஒன்றை வைத்திருந்தான். அதனுள் அமிர்தம் போன்ற பாயாசம் இருந்தது, உலக முதல்வரான விஷ்ணு அப்பாத்திரத்தில் இருந்ததால் அது இன்னும் கனமாய் இருந்தது.

முன்பு பாற்கடலை கடைந்தெடுத்த அமிர்தத்தை இந்திரன் தன்வந்திரியிடம் இருந்து வாங்கியதை போல தசரதன் தேவலோகப் புருஷனிடம் இருந்து அந்தத் தேவலோகப் பாயாச‌ பாத்திரத்தை பெற்றுக் கொண்டான்.

மகா விஷ்ணுவே தசரதனை தந்தை என அழைக்க சித்தம் கொண்டதால் தசரதனின் பெருமையினை விளக்க வேறேதும் வார்த்தையோ அவசியமோ இல்லை, அவரின் நற்குணங்கள் எத்தகையது என்பதற்கு விஷ்ணுவே மகனாய் வந்தபின் சொல்ல என்ன உண்டு?

சூரியன் தன் காலை இளவெயிலை ஆகாயத்துக்கும் பூமிக்கும் தருவதுபோல் தசரதன் அந்தப் பாயாசத்தை தன் மனைவியரான கோசலைக்கும் கைகேயிக்கும் பகிர்ந்தளித்தார்

கோசலை அவன் பட்டத்து அரசி, கைகேயி அவனுக்குப் பிரியமான் அரசி என்பதால் இருவருக்கும் சமமாக பகிர்ந்தளித்தார், அங்குத் தன் பட்டத்து ராணியினையும், தன் பிரியத்துகுரிய கைகேயினையும் அவர் அப்படி கௌரவிக்க விரும்பினாரே தவிர மூன்றாம் மனைவியான சுமித்ரையினை ஒதுக்கி வைத்து அன்று.

அவர் அந்த இருவரும் சுமித்ரைக்கும் ஒரு பங்கினை அவர்கள் கொடுப்பார்கள் என உணர்ந்தே கொடுத்தார், அவ்விருவரும் அவரின் உள்ள குறிப்புப்படியே தம் தம் பங்கினில் பாதியினை சுமித்திரைக்குக் கொடுத்தார்கள், இதனால் பாயாசத்தில் கால் பங்கு கோசலைக்கு, கால் பங்கு கைகேயிக்கும், இரண்டு கால் பங்கு சுமித்திரைக்கும் கிடைத்தது.

யானையின் இரு கன்னங்களிலும் மணமிக்க ம‌தநீர் ஒழுகும் போது அதைத் தேடி வரும் வண்டு, ஒரு பக்கம் என்றல்ல இரு பக்கமும் ஒழுகும் மதநீரையும் விரும்பும், அப்படிச் சுமித்திரை கோசலை, கைகேயி என இருவரிடமும் சமமான அன்பை கொண்டிருந்ததால் அவர்கள் இருவரும் அவளை அன்போடு நடத்தி பாயாசமும் கொடுத்தார்கள்.

சூரியன் தன் கதிர் எனும் குழல்களால் நீரை உறிஞ்சி அதனை மேகமாக மாற்றும், சூரியனால் மேகம் கர்ப்பமடைந்தது போல் அவை தோன்றும், உலக நன்மைக்காக சூரியன் அப்படி மேகங்களை உருவாக்குகின்றது, அப்படியே தசரதன் எனும் சூரியனின் மனைவியர் எனும் வானங்களில் உலக நன்மைக்காக கருகொண்ட மேகங்கள் தோன்றின‌.

ஆம், அவன் மனைவியர் கருவினை சுமக்கத் துவங்கினார்கள்.

கோசலை, கைகேயி, சுமித்திரை என மூவரும் ஒரே நேரம் கருவுற்றனர், நாட்கள் செல்ல செல்ல அவர்கள் வெளிறிய நிறம் அடைந்தனர், பசுமையான நெற்பயிர்கள் தலையில் நெல் உருவானதும் நிறம் வெளிறுவது போல் அவர்களும் வெளிறிப் போனார்கள்.

அப்போது சங்கு, சக்கரம், கதை, வில், கத்தி ஆகியவற்றை ஏந்திய குட்டி உருவங்கள் தங்களுக்குக் காவல் இருப்பது போலவும், இன்னும் பொன்மயமான சிறகுகளைக் கொண்ட கருடன் தங்களைச் சுமந்து பறப்பது போலவும் அதனால் வானில் பிரகாசமான ஒளி எழுவது போலவும் கனவுகள் பல கண்டார்கள்.

கௌஸ்தும எனும் ஒளிமிக்க மணியினை மார்பினில் அணிந்த லஷ்மி தாமரை புஷ்பம் கொண்ட விசிறியால் தங்களுக்கு விசிறி பணிவிடை செய்வதாக கனவில் கண்டார்கள்.

உபநிநிஷங்களை உரைத்தவர்களும் ஆகாய கங்கையில் நீராடுபவர்களுமான ஏழு பிரம்மரிஷிகளும் தங்களை உபசரிப்பதாகவும் கனவு கண்டார்கள்.

அவர்கள் அக்கனவினைத் தசரதனிடம் சொல்ல அவனோ கருவில் இருப்பது விஷ்ணு அம்சம் நிறைந்த குழந்தைகள் என உணர்ந்து இவ்வுலகில் தானே சிறந்தவன் என நிறைவும் மகிழ்வும் கொண்டான்.

ஒரே நிலவின் பிம்பம் தடாகங்களில் பலவாறு தெரிவது போல, ஒரே விஷ்ணுவின் அம்சம் அந்த நான்கு குழந்தைகளாக கருவில் வளர்ந்து கொண்டிருந்தன‌.

(தொடரும்..)

காளிதாசனின் ரகுவம்சம் : 42

பகலில் ஒளியின்றி இருக்கும் ஜியோதிர்வதா எனும் கொடி இரவில் ஒளியினைப் பெற்றுச் சுற்றியுள்ள இருளைப் போக்கும், அவ்வாறே கொடி போன்ற‌ கௌசல்யை உரிய நேரம் வந்தபோது ஒளிமிகுந்த குழந்தை ஒன்றைப் பெற்றுத் தசரதனின் கவலை எனும் பெரும் இருளைப் போக்கினாள், அக்குழந்தை உலகின் பாவ இருளைப் போக்கும் ஒளியாகவும் உதித்தது.

மிகவும் அழகுடையதும் காண்போரை வசீகரிப்பதுமான அக்குழந்தைக்கு “மிகுந்த அழகுடையவன்” எனப் பொருள்படும் “ராமன்” எனும் பெயரினை, உலகுக்கே நன்மை தருவதும், மகா மங்களகரமானதுமான அப்பெயரைத் தசரதன் சூட்டினான்.

ரகுவின் வம்சத்தினை துலக்க வந்த அந்த நிகரற்ற ஒளியுடைய ராமனால் அந்த அறையில் இருந்த தீபங்களெல்லாம் ஒளி குன்றிப் போயின‌.

மழைக்காலத்தில் பெருக்கெடுக்கும் கங்கை நதியால் மூழ்கும் அதன் கரையானது வசந்த காலத்தில் நீர் குறைந்ததால் மணல் திட்டுகளாக காட்சியளிக்கும், அந்த வெண்ணிற மணலில் அன்று மலர்ந்த தாமரையினை வைத்து முனிவர்கள் தேவலோக பூஜையினைச் செய்வார்கள், கரைகளில் வெண்ணிற மணல் திட்டினில் தாமரைகள் இருக்க இளைத்த மேனியுடன் காணப்படும் கங்கையின் காட்சி அழகானது.

அவ்வாறே வெண்ணிற விரிப்பில் ராமன் அழகான மிருதுவான தாமரைபோல் படுத்திருக்க அவன் அருகில் உடல் இளைத்த கங்கை போல் கிடந்தாள் கோசலை.

பணிவு எனும் குணம் செல்வத்தை அழகு செய்வது போல தாயினை அழகும் பெருமையும் கொள்ளச் செய்பவனாய் ஒரு மகன் கைகேயிக்குப் பிறந்தான், பரதன் என அவனுக்குப் பெயரிட்டான் தசரதன்.

நன்கு கற்ற பாடமானது நல்ல அறிவையும், தன்னடக்கத்தையும் உருவாக்கும். அவ்வாறே சுமித்ரை லட்சுமணன், சத்ருக்கன் என இரட்டை குழந்தைகளைப் பெற்றாள்.

ராமன் பிறந்தபின் உலகில் பஞ்சமும் நோய்களும் அகன்று எல்லா உயிர்களும் இன்புற்றிருந்தன, பகவானின் அம்சமாக ராமன் அவதரித்ததால் சொர்க்கமே பகவானுடன் மண்ணில் குடியேறிற்று.

பகவான் ராமன், பரதன், லட்சுமணன், சத்ருகன் எனும் நான்கு வடிவில் அவதரித்திருப்பதால் தூய்மையான காற்று நான்கு பக்கம் இருந்தும் வீசிற்று, இது ராவணனால் பெருத்த இன்னலுக்கு உள்ளான தேவர்களின் (இந்திரன், யமன், வருணன், குபேரன்) நான்கு திசைகளிலும் ஆறுதலைக் கொடுத்தது, அந்தத் தேவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டது போலிருந்தது.

பெரும் அவதாரம் நிகழும்போது காற்று சுகமாய் வீசுதல் போல நீர் நிலைகளும் அமைதியாக தெளிந்திருக்கும், வானம் மிக நிர்மலமாய் விளங்கும், அவை எல்லாம் இங்கு அப்படியே நடந்தன‌.

ராவணனின் கொடுமையால் அக்னியும் சூரியனும் கூடப் பெரும் இன்னல் அடைந்தார்கள், ராமன் அவதரித்ததால் மகிழ்ந்த அக்னி புகையின்றி எரிந்தது, சூரியனின் பிரகாசம் துலங்க ஆரம்பித்தது, அவர்களின் துயரம் குறைய ஆரம்பித்தது.

அந்நேரம் ராவணனின் கிரீடத்தில் இருந்த ரத்தினங்கள் தானே உதிர்ந்து கீழே விழுந்தன, அது அவனின் செல்வமெல்லாம் “இனி நாம் அழிந்துவிடுவோமே” என அவை அழுது கண்ணீர் சிந்தியதைப் போலிருந்தது.

அரசனுக்கு மகன் பிறந்ததால் அரண்மனையில் மங்கள வாத்தியங்கள் முழங்கத் தயாரானார்கள். ஆனால், அதற்கு முன்பே தேவதைகளே வாத்தியங்களை முழங்க தொடங்கின, ராமன் பிறந்ததால் தசரதனை விட அவர்களே மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் கொண்டிருந்தனர், அதனால் தேவலோகத் துந்தூபிகளே முதலில் முழங்கின‌.

வானிலிருந்து தேவர்கள் தேவலோக புஷ்பங்களைத் தசரதன் அரண்மனை மேல் பொழிந்தார்கள், இதனால் குழந்தைக்குச் செய்யவேண்டிய முதல் மங்களகரமான காரியம் தேவர்களாலே செய்யப்பட்டது, அவர்களைத் தொடர்ந்தே தசரதன் பாரம்பரியமான மங்களகாரியங்களைச் செய்தான்.

தசரதன் அக்குழந்தைகளுக்கு ஜாதகர்ம, நாமகரண சம்பிரதாயங்களைச் செய்துவைத்தான், அக்குழந்தைகள் தாய்மார்களுடனும் செவிலி தாய்களுடனும் இனிதே வளர்ந்தன, அவைகளோடு தசரதனின் மகிழ்வும் பெருமையும் கௌரவமும் வளர்ந்தது.

நெருப்பு நெய்யினால் பெரிதாகி பிரகாசிப்பது போல, இயல்பிலே ஞானமுள்ள அக்குழந்தைகளுக்குக் கல்வி புகட்டும்போது இன்னும் இன்னும் அவர்களின் ஞானமும் அறிவும் நற்பண்பும் பிரகாசமானது.

தேவர்களின் நந்தவனத்தில் வசந்தம் முதலான ஆறு பொழுதுகளும் ஒன்றாய் இருந்தன, ஒரு பொழுது இருந்தால் இன்னொன்று இராது எனும் பூலோக இயல்பு அங்கு இல்லை, அப்படியே ராமனும் அவன் சகோதரர்களும் தங்களுக்குள் எந்த வேறுபாடும் இன்றி மிக ஒற்றுமையாய் அன்பாய் தாங்கள் பிறந்த ரகு குலத்துக்கே பெருமை தேடித் தருபவர்களாக இருந்தார்கள்.

நால்வரும் மிக்க அன்பானவராயினும் ராமனுக்கும் லட்சுமணனுக்கும், பரதனுக்கும் சத்ருக்கனுக்குமான பந்தம் இன்னும் அதிகமானது, ஒருவர் இன்றி இன்னொருவர் இல்லை எனுமளவு பாசபந்தத்தில் இறுகிப்போனார்கள்.

கௌசல்யா, சுமித்ரைக்குக் கொடுத்த பாயாசத்தின் பங்கினால் உருவான லட்சுமணன் அவள் மகனிடமும், கைகேயி கொடுத்த பாயாசத்தால் பிறந்த சத்ருகன் அவள் மகனிடமும் நெருக்கமான அன்பு கொண்டிருந்தார்கள்.

காற்றும் நெருப்பும் போல, சமுத்திரமும் நிலவும் போல ராமனும் லஷ்டமணனும், பரதனும் சத்ருகனும் சேர்ந்தே இருந்தார்கள்.

(தொடரும்..)

காளிதாசனின் ரகுவம்சம் : 43

கோசலை நாட்டின் அந்த இளவரசர்கள் பெரிய கோடையின் முடிவில் வரும் குளிர்ந்த மழைமேகங்கள் போல மக்கள் மனதை குளிரிவித்தார்கள்; அவர்களின் அன்பும் அடக்கமும் கருணையும் இன்னும் பல சிறந்த குணங்களெல்லாம் இடியின்றி மின்னலின்றி தூறும் மழைச்சாரல் போல மக்களுக்குப் பெரும் மகிழ்வினைத் தந்தது, மக்கள் அவர்களால் மகிழ்ச்சிக் கொண்டார்கள்.

அந்த நான்கு நல் மகன்களும் பெரும் தத்துவமாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்பதன் அவதாரம் போல் இருந்தார்கள். தசரதன் தன் இப்பிறப்பிலே அந்த நான்கு பெரும் நிலைகளை அடைந்த பேறுபேற்றான் என்பதுபோல் அந்த நான்கு மகன்களால் அவன் மிகுந்த சிறப்பினை அடைந்தான்.

நான்கு கடல்கள் வரை பரவியிருக்கும் அவனின் பெரும் ராஜ்ஜியத்தில் நான்கு கடல்களும் தங்களிடம் உள்ள பெரும் செல்வத்தைத் தசரதனுக்குக் கொடுத்து மகிழ்வதுபோல நான்கு மகன்களும் அவர்களின் உயர்ந்த நற்பண்புகளால் அவனை மகிழ்வித்தனர், ஒரு தகப்பனுக்கு அதைவிடப் பெரிய பாக்கியம் எதுவாக இருக்க முடியும்? அரசனாக மட்டும் அல்லாமல் ஒரு தகப்பனாக அவன் பெரும் நிம்மதி அடைந்தான்.

பெரும் யுத்தத்தில் அசுரர்கள் எவ்வளவோ முயன்றும் வெட்டமுடியாத இந்திரனின் யானையான ஐராவதத்தின் நான்கு பலமான தந்தங்கள் போல, பகவான் விஷ்ணுவிற்கு அமைந்த‌ நீண்ட ஏர்க்கலப்பை போன்ற நான்கு கரங்களைப் போல , ராஜநீதியில் போதிக்கபாபடும் நான்கு உபாயங்களைப் போல அந்த நான்கு மகன்களும் தசரதனின் பெருமைமிகு பலமாய் இருந்தார்கள்.

இவ்வாறு தசரதன் தன் மகன்களால் சிறப்பு பெற்று விளங்கிய காலத்தில் அவன் முன் வந்து நின்றார் முனிவர்களில் முக்கியமான விஸ்வாமித்திர மகரிஷி.

தசரதன் அவரை அன்போடு வரவேற்று உபசரித்து வேண்டியன என்ன என ரகுவம்ச தர்மப்படி கேட்டபோது தன் யாகம் தடையின்றி நடக்க, யாகத்துக்குத் தொல்லை கொடுக்கும் அசுரரரை தடுக்க வேண்டி ராமனைத் தன்னோடு அனுப்பக் கேட்டார் முனிவர்.

ரிஷிகளின் யாகம் உலக நலனுக்கானது, அதை அவர்கள் செய்ய முழுக்காவல் செய்யவேண்டியது அரசக் கடமை, ஆனால் பெரும் சேனையினைக் கேட்காமல் வீரத்தில் சிறந்த தன்னை அழைக்காமல் சிறிய வயதான ராமனை மட்டும் விசுவாமித்திரர் அழைக்கும் காரணம் புரியாமல் குழம்பினான் தசரதன்.

முக்காலமும் அறிந்த ரிஷி தசரதன் மகனைப் பிரிந்து வாழ பழகவேண்டும் என்பதைச் செய்யும்படி ஒரு திட்டத்தோடு வந்தவர் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. முனிவர் சொல்லவுமில்லை. ஆயினும், தசரதனின் குழப்பமான பார்வைக்கு அவர் பதில் மொழி தந்தார்.

“மன்னவ, ராமன் பலம் பொருந்தியவன். ஒருவனின் பலம் பற்றிப் பேசப்படும் போது அவனின் வயது பற்றி யாரும் சிந்திப்பதில்லை, தழல் நெருப்பில் மூத்தது இளையது என என்ன வித்தியாசம் உண்டு? எனக்குத் தேவை ராமன், அவன் இருக்குமிடம் எல்லாக் காவலும் இருக்கும்” என்றார்.

தசரதன் தர்மவழி அத்தனையும் அறிந்தவன், சாலையில் விலகாமல் செல்லும் வண்டிபோல் தன் முன்னோர் வழி நடப்பவன், அவன் சில நேரம் தன் ஆலோசகர்களிடம் கேட்டும் முடிவெடுப்பான், அவ்வாறு எல்லோரும் கூடி முனிவருடன் ராமனை அனுப்புவது சரி எனச் சொன்னதால் தவமிருந்து யாகமியற்றி பெற்ற ராமன் எனும் திருமகனை விஸ்வாமித்திரருடன் அனுப்ப சம்மதித்தான், ராமன் இருக்குமிடமே நானும் இருப்பேன் என ராமன் பின்னால் நின்ற லட்சுமணனையும் அவன் அனுமதித்தான்.

தெய்வத்தின் ஊர்வலமும் அரசர்களின் ரதமும் செல்லும் வீதிகளில் நீர் தெளித்து மலர்பரப்பி அவர்களை வரவேற்க வேண்டும் என்பது மரபு, மக்கள் அதைத் திருவிழா காலத்திலும் அரசன் பவனிவரும் காலத்திலும் செய்வார்கள். அங்கே பகவானின் அம்சமான ராமன் வருவதால் வருணபகவானே மழை பொழிந்து அந்த வீதியில் புழுதி எழும்பாதபடி ஈரமாக்கினான், வாயுபகவான் எங்கிருந்தோ மணமிக்க பூக்களைக் கொண்டுவந்து வீதிகளில் தூவி ராமனை வரவேற்கத் தயாரானான்.

ராமன் தேவகாரியத்துச் செல்வதால் தேவர்களே அவனை முன்னின்று வரவேற்கத் தயாரானார்கள்.

ராமனும் லட்சுமணனும் எப்போதும் பெரியவர்களின் கட்டளைக்குக் கீழ்படிபவர்கள், தங்கள் கடமையினைச் செய்ய தேரில் பூட்டப்பட்ட இரு குதிரைகளைப் போல துடிப்பாக நிற்பவர்கள், அவர்கள் தங்கள் வில்லை ஏந்தியவர்களாய்ப் பெரியோர்களைப் பெற்றோர்களை வணங்கி விசுவாமித்திரருடன் செல்லத் தயாரானார்கள், அவ்வாறே தசரதன் காலில் விழுந்தும் ஆசிபெற்றார்கள்.

வாழ்வில் முதல்முறையாக அவர்களைப் பிரிவதால் தசரதன் கண்ணீர்விட்டு கலங்கினான், முக்காலமும் உணர்ந்த முனிவர் விதியின் முன்னோட்டத்திற்குத் தானொரு கருவி என்பதுபோல் புன்னகைத்துக் கொண்டார்.

பெருகும் கண்ணீருடன் தசரதன் அவர்களை விசுவாமித்திரருடன் அனுப்பி வைத்தான், தங்கள் அன்பிற்குரிய ராமன் தங்கள் வீதிவழி நடந்து செல்வதை அறிந்த மக்கள் நகரத்தின் இருபுறமும் திரண்டு நின்றார்கள், நகரின் பெண்கள் தங்கள் அன்புக்குரிய ராமனை வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள், அது வீதியோரம் தாமரை மலர்ச்சரங்கள் அமைந்த காட்சிபோல் ரம்மியமாய் இருந்தது.

விஸ்வாமித்திரர் ராமன் மட்டும் போதும் எனக் கேட்டார், லட்சுமணனும் ராமனும் வேறு வேறு அல்ல என்பதால் பின் இருவரையும் சேர்த்துக் கொண்டார், அவர் பெரிய சேனையோ இதர பலமோ கோரவில்லை, இதனால் ராமனும் லட்சுமணனுமே விசுவாமித்திரருக்கு முழுச் சேனையாக இருந்தார்கள். அவர்களுக்கு எந்த அபாயமும் நேரக் கூடாது என்பதற்காக தசரதன் அவர்களை முழு மனதோடு ஆசீர்வதித்தான், எப்போதும் பெரியோர்களின் ஆசீர்வாதத்தை விட பெரும் காவல் எதுவுமில்லை.

ராமனும் லட்சுமணனும் தங்கள் தாய்மார்கள் மூவரையும் தொழுதுவிட்டு முனிவரைப் பின் தொடர்ந்தார்கள், அது சூரியனைச் சித்திரை மாதமும், வைகாசி மாதமும் தொடர்வது போன்ற காட்சியாய் இருந்தது.

(சித்திரையும் அதைத் தொடர்ந்த வைகாசியும் சூரியனால் பிரகாசமாகும் மாதங்கள். அப்போது மரங்கள் துளிர்க்கும். புதிய மலர்களும் காய்களும் கனிகளுமாக அம்மாதங்கள் பொலிவுடன் விளக்கும், சூரியனால் அவை சோபிக்கும் மாதங்கள் இவை. )

மழைக்காலத்தில் பெருகும் நதிகள் தங்கள் கரங்களைகா கரையோரம் வீசியபடி செல்லும், வேகமாகச் செல்லும் அந்நதிகள் கரங்களை வீசிக் கரைகளைத் தொட்டபடி செல்லும் காட்சி எவ்வளவு அழகானதோ அவ்வளவு அழகான காட்சிபோல் ராமனும் லட்சுமணனும் கைகளை வீசியபடி முனிவர் பின் நடந்து வேகமாகச் சென்றார்கள்.

அரண்மனையில் எல்லாச் சுகபோகத்துடன் வளரும் அந்தச் சிறுவர்கள் வனத்தில் தவித்துவிடக் கூடாது என்பதற்காக விசுவாமித்திரர் ‘பலை, அதிபலை’ எனும் மந்திரங்களை அவர்களுக்கு உபதேசித்தார். ‘பலை’ எனும் மந்திரத்தால் பசியும், ‘அதிபலை’ எனும் மந்திரத்தால் தூக்கமும் அற்றுப்போகும், இதனால் அவ்விருவரும் மிகுந்த உற்சாகமாய் களைப்பின்றி முனிவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள், தாய் அருகே உள்ள குழந்தைகள் போல் மிகுந்த நம்பிக்கையும் உற்சாகமும் முனிவர் அருகாமையில் அவர்கள் கொண்டிருந்தார்கள்.

பின்னாளில் நடக்க இருக்கும் பெரும் வனவாசத்துக்குத் தாங்கள் இப்போதே பழக்கப்படுகின்றோம் என்பதை அறியாமல் இருவரும் முனிவரைத் தொடர்ந்தார்கள், இது விதியிட்ட பயிற்சிப்பாதை என்பதை அறியாமலே நடந்தார்கள், பகவானின் அம்சம் என்றாலும் மானுடர்கானபோது விதி அவர்கள் மனதையும் அறிவையும் மறைத்தே வைத்தது, பூமியில் விதியின் ஆட்சியே ஓங்கி இருப்பதால் பகவானின் அம்சமான அவர்களும் அதற்குக் கட்டுப்பட்டவர்களாயினர்.

பேசிக்கொண்டே செல்லும்போது பயணமும் பாதையும் களைப்பினைத் தராது, விசுவாமித்திரர் அவர்களுக்குத் தன் நீண்ட அனுபவித்தினால் நிறைய கதைகளைச் சொல்லியபடி வந்தார், இதனால் முன்பின் நீண்ட தொலைவு நடந்திராத ராம லட்சுமணர்கள் களைப்பும் ஓய்வுமின்றி அவரை எளிதாகப் பின் தொடர்ந்தார்கள்.

நற்காரியத்தைச் செய்யப்போகும் அவர்களுக்கு இயற்கையும் எல்லா உதவிகளையும் செய்தது. தடாகங்கள் அவர்கள் தாகம் தீரும்பொருட்டு குளிர்ந்த நீரால் நிரம்பியிருந்தன; காற்று குளிர்ச்சியுடன் இனிய மணத்துடன் அவர்கள்மேல் வீசி களைப்பைப் போக்கிற்று; மேகங்கள் அழகான நிழலைக் கொடுத்தன; பட்சி வகைகள் இனிய சங்கீதம் போன்ற ஓசையுடன் அவர்கள் களைப்புத் தெரியாமல் இருக்கப் பாடின; இதனால் அவர்கள் உற்சாகமாக நடையிட்டார்கள்.

கானகத்தில் உள்ள முனிவர்களுக்கு எப்போதும் தாமரை பூத்த தடாகங்களும் நிழல் தரும் பெரிய மரங்களும், மணமிக்க பூக்களைத் தரும் செடி கொடிகளும், வேத யாகங்களுக்கு ஸமித்துக்களைத் தரும் தாவரங்களும் மகிழ்ச்சித் தருவன. ஆனால், ராம லட்சுமணனைக் கண்ட கானகத்து ரிஷிகளின் மனம் அவைகள் மேல் விருப்பம் கொள்ளாமல் ராம லட்சுமணர்களைக் கண்டதால் மகிழ்ந்து அவர்களை ஆசீர்வதித்தனர்.

அவர்கள் ஆசிகளைப் பெற்ற ராமனும் லட்சுமணனும் முனிவரோடு ஒரு முக்கியமான ஆசிரமத்தை அடைந்தார்கள்.

(தொடரும்..)

காளிதாசனின் ரகுவம்சம் : 44

கையில் வில்லேந்திய ராமர் எங்கே மன்மதன் சிவனின் தவத்தைக் கலைக்க முற்பட்டுச் சாம்பலாகிப் போனானோ அந்த வனத்தை, சிவபெருமான் தவமிருந்த வனத்தை அடைந்தார்கள். அங்கே ராமபிரான் வில்லேந்திய அழகிய கோலத்தில் தன் மகா அபூர்வ வசீகரத்தில் மன்மதன் போல் நின்றானே தவிர செயலினால் அப்படி அன்று, அவன் அழகால் மன்மதனாகவும் மனதால் சிவனாகவும் அங்கே நின்றான்.

அந்த இடத்திலேதான் சுகேது எனும் யட்சனின் மகளும் மாரீசனின் தாயுமாகிய தாடகை என்பவள பற்றியும் அகத்தியரின் சாபத்தால் அவள் அரக்கியாக மாறி பெரும் அட்டகாசம் செய்வதையும் அறிந்தார்கள். அவளுக்கு அஞ்சி அந்த வனமும் மக்களும் படும் இன்னல்களை அறிந்தவர்கள். தங்கள் அம்பினை தரையில் ஊன்றி வில்லில் நாணை ஏற்றினார்கள்.

ராமனும் லட்சுமணனும் தங்கள் வில்லின் நாண் ஒலியினை எழுப்பி அந்த வனத்தை அதிர செய்தபோது கிருஷ்ணபட்ச இரவினை போன்ற உருவம் கொண்ட தாடகை மனிதர்கள் மண்டை ஒட்டினைக் காதணியாக அணிந்த உருவுடன் எழுந்து வந்தாள், கருநிற மேகம் அருகே பறக்கும் வெண் நிறக் கொக்கு போல அவளின் கருத்த மேனியின் காதோரமும் கழுத்தோரமும் அசைந்த மண்டை ஓடுகளுடன் அவள் வந்தாள்.

அவள் மிகுந்த கோபத்தோடு அவர்களை நோக்கி வரும்போது மரங்கள் வேகமாக அசைந்தன, பிணங்களின் ஆடையினை அணிந்த அவள் மயானத்தின் அருவெறுப்பான வாடையுடன் நடுங்க வைக்கும் இடிபோன்ற குரலுடன் வந்து கொண்டிருந்தாள். மனிதர்கள் குடலை ஒட்டியாணமாகவும் குருதியினை மருதாணியாகவும் கொண்டிருந்த அவள் தன் தடித்த கரங்களை உயர்த்தியபடி ராமனை நோக்கி ஆவேசமாக வந்தாள்.

தாயின் அம்சம் தேவதை அம்சம் தாண்டிய பெண்ணை, அரக்கரும் அசுரருமான குணங்களைப் பெற்றுவிட்ட பெண்ணைக் கொல்வது பாவமல்ல, பெண்மைக்குரிய குணங்களை இழந்தவள் பெண்ணே அன்று . அதனால் அவளைக் கொல்லுதல் பாவமாகாது. அவள் மானுடருக்கே ஆபத்து, அவளை அழிப்பதே அறம் என உணர்ந்த ராமன் பாணத்தை அவளை நோக்கிச் செலுத்தினான்.

ராமபிரானின் பாணம் அவளின் பாறை போன்ற நெஞ்சினைத் துளைத்துப் போட்டது, அதுவரை மரணம் என்ற ஒன்றையோ தோல்வி என ஒன்றையோ அறியாத அரக்கர் குலம் அவள் வீழ்ந்ததால் அலறிற்று. அதுவரை அவர்கள் கோட்டைக்குள் நுழையாமல் வெளியே சுற்றிக் கொண்டிருந்த எமனுக்குத் தாடகையினைத் துளைத்த ராமனின் அம்பானது அவன் அவர்கள் கோட்டைக்குள் நுழையும் வழியினை ஏற்படுத்தி கொடுத்தது, இனி அங்கு யமன் தன் பணியினைச் செய்வான் என்பது போல அந்த அம்பு வழி கொடுத்தது.

ராமனின் அம்பு தாடகையின் மார்பைப் பிளந்து அவளை வீழ்த்திற்று, அந்தக் காடே அதிரும்படி அவள் வீழ்ந்து கிடந்தாள், அது மூவுலகிலும் தனக்கு எதிரிகளே இல்லை என நம்பி இறுமாந்திருந்த ராவணனின் வீழ்ச்சிக்கான அறிகுறியாகவும் அமைந்தது.

ரத்தம் பெருக ராமனின் அம்பினால் அடிக்கப்பட்ட அவள் யமலோகம் அடைந்தாள்.

இரவிலே தவிப்புடன் அலையும் ஒரு பெண் மன்மதனின் அம்பினால் தாக்கப்பட்டு குங்குமப்பூவும் சந்தனமும் கலந்து பூசியவளாய் தன் காதலனை அடைந்ததுபோல் அவள் தான் அடையவேண்டிய உலகை அடைந்தாள்.

விசுவாமித்திரர் ராமனை இன்னும் பலமானவனாக மாற்றினார். சூரிய காந்த கல் சூரிய ஒளியால் வெம்மை அடைந்து விறகுகளை எரிக்கும் சக்தியினை அடைவது போல ராமர் விசுவாமித்திரரிடம் இருந்து பல அஸ்திரங்களைப் பெற்று அரக்கர்களை வதைத்துப் போட்டார்.

அப்படியே விசுவாமித்திரர் ராம லட்சுமணனரைக் கானகம் வழியே அழைத்துச் சென்றார், அவர்கள் ஒரு ஆசிரமத்தை அடைந்தார்கள். அது வாமனராக பகவான் வந்தபோது வசித்த ஆசிரமம் என்பதால் மிகுந்த அழகும் சக்தியும் உடையதாக இருந்தது, அங்கு வந்து சேர்ந்த ராமன் தன் தாய்வீட்டுக்கு வந்ததுபோல் நிறைவும் உற்சாகமும் கொண்டான், அது வார்த்தையில் விவரிக்க முடியா உணர்வாய் இருந்தது.

வாமனனின் அந்த ஆசிரமத்திலே அவர்மேல் கொண்ட‌ அன்பினால் விசுவாமித்திரர் தங்கியிருந்தார் என்பதால் அதுவே அவரின் உறைவிடமும் ஆயிற்று.

விசுவாமித்திர முனிக்காக அவரின் சீடர்கள் யாகம் செய்யவேண்டிய பொருட்களுடன் காத்திருந்தனர், ராம லட்சுமணனுடன் அவர் அங்கே நுழையும்போது அவர்கள் அவர்களை வரவேற்றனர், அவர்களோட அந்த வனத்தின் மரங்களும் இளம் தளிர்களைக் கூப்பியபடி வரவேற்றது, மானினங்கள் தலையினைத் தூக்கி அவர்களை மருகும் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தன‌.

இவ்வுலகை சூரியனும் சந்திரனும் இரவும் பகலும் தங்கள் கதிர்களால் காப்பதைப் போல முனிவரின் யாகத்தை இரவு பகலாக தங்கள் பாணங்களுடன் ராம லட்சுமணர்கள் காத்து வந்தார்கள்.

அப்போது முனிவரின் யாகத்தை தடுக்க வேண்டி அசுரர்கள் வானில் திரண்டார்கள், யாக குண்டத்தை நோக்கி ரத்தத் துளிகளை இட்டார்கள், அது பெரிய செம்பருத்தி பூ போல வந்து வீழ்ந்தது , அதைக் கண்ட சீடர்கள் யாகம் செய்வதை நிறுத்தும் பொருட்டு கையில் இருந்த ஸ்ருக் எனும் நீண்ட யாகக் கரண்டியினை நழுவவிட்டார்கள்.

லட்சுமணகுக்கு மூத்தவனான ராமன் அதைக் கண்டு வானத்தை நோக்கினான். அங்கே அசுரர்கள் கொடிபறக்க சேனை திரண்டிருந்தது, கழுகுகள் வட்டமிடும் அந்தக் கொடியினைக் கண்டபடி ராமன் தன் அம்பை அம்பாற துணியில் இருந்து எடுத்து வில்லில் பொருத்தினான்.

நாகங்களை வேட்டையாடும் கருடன் விஷமற்ற நாகங்களை விட்டுவிட்டு விஷமுள்ள நாகத்தையே முதலில் குறிவைப்பது போல அந்த அசுரச் சேனையின் தளபதிகளாக வந்த சுபாஹு என்பவனையும், மாரீசன் என்பவனையுமே ராமன் குறிவைத்தான்.

அஸ்திர சாஸ்திரம் அறிந்த ராமன் வாயுபகவானின் அம்சமுள்ள மிக வேகமாக பாயும் அஸ்திரத்தை பயன்படுத்தி மலையினை போன்ற பெரிய உடல் கொண்ட மாரீசனை காய்ந்த இலையினை வீழ்த்துவது போல் எளிதில் வீழ்த்தினான்.

மாரீசன் வீழ்ந்தாலும் தந்திரம் உடையவனான அந்த சுபாஹூ ராமனின் அம்புக்கு தப்பும்படியாக மாயையினால் ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் அசைந்து ராமனை சோதிக்க விரும்பினான். ஆனால், தன் கத்தி போன்ற அம்புகளால் அவனைப் பல துண்டுகளாக்கி ஆசிரமத்துக்கு அப்பால் வீசிப் பறவைகளுக்கு அவனை உணவாக்கினான் ராமன்.

இவ்வாறு அரக்கர்கள் விரட்டப்பட்டதால் ராமனின் வீரத்தை மெச்சிய முனிவர்கள் யாகத்தைத் தொடர்ந்தார்கள், மௌனமாக அங்கு அமர்ந்திருந்த விசுவாமித்திரர் விரும்பிய யாகம் அங்கு முறையாக நடந்து முடிந்தது.

யாகம் முறையாக முடிந்ததும் விசுவாமித்திரர் முறைப்படி நீராடி வந்தார். அவரிடம் ராம லட்சுமணர்கள் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர், அவர் அவர்களை ஆசீர்வதித்துவிட்டு அவர்கள் முதுகினை அன்போடு தடவிக் கொடுத்தபடி ஜனக மன்னனை பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

மிதிலை நகரத்தில் இருந்து அரசாளும் ஜனகன் எனும் பெரும் மன்னன் ஒரு யாகம் நடத்த தன்னை அழைத்ததைச் சொன்ன விசுவாமித்திரர் அவனிடம் இருக்கும் வலுவான சிவனின் தனுசைப் பற்றியும் சொன்னார், வில்லாளிகளான ராமனுக்கும் லட்சுமணனுக்கும் அதனால் அந்த வில்லை காணும் ஆர்வம் இயல்பாக வந்தது, அதனால் அவர்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல அவர் சம்மதித்தார்.

மிதிலை நோக்கி அவர்கள் செல்லும் போது இரவாகிவிட்டதால் அப்பக்கம் இருந்த கௌதம மகரிஷியின் ஆசிரமத்தில் தங்கிச் செல்லும்படி முனிவர் அவர்களை அந்த ஆசிரமம் நோக்கி அழைத்துச் சென்றார்.

(தொடரும்..)

காளிதாசனின் ரகுவம்சம் : 45

ராமன் தன் தம்பியான லட்சுமணன் உடன் வர விசுவாமித்திர மகரிஷி முன்னே செல்ல, கௌதம முனிவரின் ஆசிரமம் நோக்கிச் சென்றான், அவன் அந்த ஆசிரமத்தில் நுழையும் போது அவன் காலின் தூசிபட்டு கல்லாய்க் கிடந்த முனிவரின் மனைவி அகலிகை சாபம் நீங்கி உயிர்ப்பெற்றாள்.

ராமனின் கால் தூசிக்கே இவ்வளவு புனிதம் என்றால் அவன் கால் எத்தனை புண்ணியமானது?

அகலிகையினை அங்கே உயிர்பித்த ராமன் அவளை ஆசீர்வதித்து முனிவரோடு சேர்த்துவிட்டு மிதிலை நோக்கிச் சென்றான்.

அறமும் பொருளும் தர்மத்தோடு சேரும்போது அற்புதமான விஷயமாகின்றது, அப்படி ராம லட்சுமணனுடன் வந்த விசுவாமித்திரரைத் தர்மத்தோடு வந்த அறம் பொருள் என கொண்டாடிய மிதிலை நகரின் ஜனகன் அவரைப் பெரும் அன்புடன் மரியாதையுடன் உபசரித்தான்.

புனர் புவசு (புனர்பூசம்) எனும் இரட்டை நட்சத்திரங்களுக்கான அதி தேவதைகள் இறங்கி வந்ததை போல ராமனும் லட்சுமணனும் மிக்க அழகுடன் மிதிலை நகரில் நடந்து வரும்போது இவர்கள் தேவர்களோ என மிதிலை நகர மக்கள் வியந்து நின்றார்கள், கண் இமைத்தால் இவர்கள் அழகு மறையுமே எனக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள், கண் பெற்றதன் பலனை இன்று இவர்களைக் கண்டதால் அடைந்தோம் என நிறைவு கொண்டார்கள்.

(புனர்பூசம் ராமபிரானின் நட்சத்திரம் என்பதை குறிப்பால் இப்படி உணர்த்துகின்றார் காளிதாசர்)

அந்நேரம் மிதிலை நகரில் நடக்கும் யாகத்தின் நிமித்தம் யூகஸ்தம்பம் நடும் நிகழ்வில் இருந்தான் ஜனக மன்னன், அந்த ஸ்தம்பம் நடப்பட்ட பின் சரியான சந்தர்ப்பம் கிடைத்தபோது ஜனகனிடம் ராமன் அந்தச் சிவதனுசை காண விரும்புவதாக சொன்னார் விசுவாமித்திரர்.

ஜனகன் ராமனின் அழகான தோற்றத்தையும் அவனின் உயர்குடி பிறப்பையும் அவனின் இனிமையான குணத்தையும் வீரத்தையும் அறிந்து அவனைத் தன் மருமகனாக்க விரும்பினான். ஆனால், பரமசிவனின் வில்லை வளைப்பவர்க்கே சீதையினைக் கொடுப்பதாக அவன் அறிவித்திருப்பதால் தன் வாக்கினைப் பற்றி அதுவே தன் ஆசைக்குத் தடையாக இருப்பதைப் பற்றி நிரம்ப யோசித்தான்.

விசுவாமித்திரர் விடுத்த கோரிக்கையினைக் கேட்ட ஜனகன் தன் ஆசையினை மனதோடு வைத்தவனாய்ச் சொன்னான், “முனிவரே, மிகப் பெரிய யானைகள் செய்ய முடியாததை சிறிய யானைகுட்டி செய்யுமோ? அதனைக் கொண்டு பெரிய காரியம் செய்ய முயலுதல் அறிவுடமை ஆகாது. எவ்வளவோ பலசாலிகள் பராக்கிரமசாலிகள் செய்யமுடியாததை இந்தச் சிறுவன் செய்வானோ? அவன் இந்த வில்லை வளைப்பான் என்பது நடவாத செயல். இதற்கு அனுமதி தருவது எப்படி முடியும்?” என்றவன் இன்னும் சொன்னான்.

“முனிவரே, இந்த வில் சாதாரணம் அன்று , எத்தனையோ சிறந்த வில்லாளிகள் பலர் இந்த வில்லால் அவமானப்படுத்தப்பட்டனர், எவ்வளவோ வல்லவர்கள் இந்த வில்லை வளைக்கமுடியா எம் தோள்கள் பயனற்றவை என வருந்தி சென்றார்கள், இந்தப் பெரும் உண்மை எல்லா இடமும் பரவிக் கிடப்பதே” என்றான்.

விசுவாமித்திரர் புன்னகைத்தபடி சொன்னார், ” ஜனகா, நீ பேசுவது பலனற்றது என்பதை நான் சொல்வதால் புரிந்து கொள்வாய். எவரையும் உருவையும் வயதையும் கொண்டு எண்ணாதே. அவனின் பெரும் வீரம் பற்றி நான் சொல்லியா நீ அறியவேண்டும்? இந்திரனின் வஜ்ராயுதத்தின் பலம் அது. மலைகளின் சிறகை வெட்டும்வரை அறியபட்டதில்லை அவ்வாறே ராமனின் பலம் இந்த வில்லை உடைக்கும் வரை உனக்குப் புரியாது” என்றான்.

தனது நண்பரும் சிறந்த முனிவருமான விசுவாமித்திரரின் சொல்லைக் கேட்ட ஜனகன் சற்று யோசித்தான். சிறிய பாலகர்கள் அணியும் ரட்சைக் கயிறை அணிந்திருந்த அவனை அந்தக் கயிறை வைத்து கணித்தது தவறோ எனச் சிந்தித்தான், மிகச் சிறிய பூச்சியான இந்திரகோபம் எனும் பூச்சி தன் வெப்பத்தால் பெரிய நெருப்பை ஏற்படுத்துவது போல சிறிய வயதுடைய ராமனிடம் பெரிய பலம் இருக்கலாம் எனச் சிந்தித்தான்‌

இந்திரனே வானவில்லுக்கு அதிபதி, அவன் உத்தரவிட்ட உடனே சிறிய சிறிய மேகங்கள் ஒன்றிணைந்து வானவில்லை வானில் தோன்றச் செய்யும், அவ்வாறே தசரதன் உத்தரவிட்டதும் அவன் பணியாட்கள் பலர் சேர்ந்து அந்தச் சிவதனுசு எனும் பலமான வில்லை கொண்டு வந்தார்கள்.

அந்தப் பெரிய வில் காளை கொடி ஏந்திய பரமசிவனுடையது, தட்சனின் யாகத்தினால் கோபம் கொண்ட சிவன் அதை அழிக்க வரும்போது அந்த யாகத்தின் தேவதை மான் உரு கொண்டு தப்பி ஓடினாள், அவளை அழிக்க சிவன் கையில் எடுத்த வில் அது, பின்னர் சிவன் ஜனகனின் முன்னோரிடம் கொடுத்ததால் வழிவழியாக இங்கு வந்தது, அப்படி உறங்கும் பெரிய பாம்பினைப் போல் வளைந்து கிடந்த அவ்வில்லினை ராமன் தன் ஒற்றைக் கையினால் எடுத்தபோது ஜனகனின் சபை மிரண்டது.

இந்த இளம் வயது ராமன் மலை போன்ற உறுதியும் கனமும் கொண்ட வில்லை ஒற்றைக் கையினால் தூக்கினான் என்பதைக் கண்ட அவையோர்கள் அசந்து போயினர், ஆனாலும் அவனால் இந்த வில்லில் நாணேற்ற முடியுமா என இமைக்கா விழிகளுடன் அவனையே நோக்கினார்கள்.

ராமனோ மன்மதன் தன் கரும்பு வில்லை மிக எளிதாக எடுப்பதைப் போல் அதை எடுத்திருந்தான். அப்படியே பெரிய சிரமம் ஏதும் இன்றி நாணேற்றி நின்றான், கதவில் தாழ்பாளை இடுவது போல் எளிதாக இட்டான்.

ராமன் அந்தச் சிவதனுசை எடுத்து வளைத்து நாணேற்றி, அந்த நாணை பிடித்து இழுத்தபோது பெரும் ஓசையுடன் அந்தப் பலமான தனுசு உடைந்தே போனது, அந்தப் பெரும் சத்தம் பரசுராமனால் ஒடுக்கபட்ட ஷத்ரிய இனம் மீண்டும் ஆள எழுந்துவிட்டதை போல பெரும் ஒலியாக உலகம் அதிர ஒலித்தது.

(தொடரும்..)