ஆஷாட நவராத்திரியில் வழிபட வேண்டிய ஆலயங்கள்.

ஆஷாட நவராத்திரியில் வழிபட வேண்டிய ஆலயங்கள் 01 :
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி.

வராஹி நவராத்திரி காலங்களில் வழிபட வேண்டிய முக்கிய தெய்வம் அன்னை அகிலாண்டேஸ்வரி. திருச்சி திருவானைக்கா ஆலயத்தில் நின்று அருள்பாலிக்கும் அன்னை அகிலம் ஆளும் அகிலாண்டேஸ்வரி தாய்.

அவள் அன்னை பார்வதியின் ரூபம், வாராஹி எனும் உக்கிர வடிவம் கொண்டு அங்கு வந்தாள். பல காரணங்களுக்காக வந்தாள். சிவனே அதர்மங்களை ஒழிக்க அனுப்பியதால் வந்தாள். வந்தவள் ஆங்கார ரூபிணியாய் உக்கிரவடிவாய் நின்றாள். ஆதிசங்கரர் காலத்தில் அவள் அருள்பாலிக்க சாந்தப்படுத்தினார். அந்தச் சாந்த வடிவமே இன்று அவளை அகிலத்தின் தாய் எனக் கொண்டாட வைத்திருக்கின்றது.

அடிப்படையில் அவள் வராஹி, பெரும் சக்தியும் அளவில்லா வரமும் வழங்கும் வாராஹி. பெரும் பெரும் வரம் அருளும் வாராஹியின் தாய் அம்சம், அதுவும் மிக மிகக் கண்டிப்பான தாய் எனும் தன்மை கொண்ட மிகக் கடுமையான தன்மை கொண்ட அம்சம்.

தன் குழந்தையினை ஒரு தாய் எப்படி மிரட்டி கண்டித்து நல்வழியில் வளர்ப்பாளோ அப்படித் தன் குழந்தைகளை நல்வழியில் வளர்ப்பவள் இந்தத் தாய், அதனால் அகிலாண்டேஸ்வரி.

அந்தக் கோவில் தலவரலாறு அதனைத் தெளிவாகச் சொல்கின்றது.

அப்போது பூமியில் அதர்மம் அதிகரித்திருந்தது. எங்குத் திரும்பினும் அதர்மம் அராஜகம் எனப் பாவங்கள் பெருகி மக்களிடம் தர்ம சிந்தனை அகன்றிருந்தது. அந்நேரம் மானுடர்க்கு ஞானமும் அறிவும் வர தர்ம சிந்தனை வர சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார்.

அப்போது அன்னையினை நோக்கி, உலக மக்கள் தர்மத்தை அறிந்து கொள்ளும்படி, நீ பூலோகம் சென்று தவமிருந்து ஞானத்தை தர்மத்தை அறிந்து கொள்வாய், அதை மானுடர் அனைவருக்கும் போதிப்பாய், நானே குருவாக இருந்து உனக்குப் போதிப்பேன் எனச் சொல்லி அதற்கான இடத்தையும் அவரே குறிப்பிட்டு அனுப்பினார்.

அது அவரின் சீடர் ஜம்பு என்பவர் தவமிருந்த இடமாக இருந்தது. காவேரி நதியின் ஓரத்தில் அன்னை நீர் மண்ணினால் ஒரு இலிங்கம் செய்து அதனை அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தாள். அவளின் வழிபாட்டிலும் தவத்திலும் இறங்கி வந்த சிவன் தட்சிணாமூர்த்தி கோலமாய் அன்னைக்கு ஞானம் போதித்தார்.

இறைவனே தர்மமும் ஞானமும் அன்னைக்குப் போதித்த இடம் இது. அதாவது சிவனிடமிருந்து தர்ம ஞானத்தை கற்றுக் கொண்டே அவள் மக்களுக்கு அவற்றைத் தரும் ஆலயம் இது.

இங்குத்தான் அன்னை இன்னும் தர்மம் போதிக்கும் சிஷ்யையாக இருந்து சிவனிடமிருந்து பெற்று மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றாள். அவள் சிவனுக்கு அபிஷேகம் செய்த முறைப்படி இன்றும் மதியம் அர்ச்சகர்கள் சேலை அணிந்தே சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றார்கள்.

இந்த ஆலயத்தில் அன்னை அதர்மங்களை அழிக்க உக்கிரமாய் இருந்தாள். மக்களுக்கு மிகக் கடும் வழியிலே நியாயத்தைத் தர்மத்தைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளே ஒரு துவாரபாலகை போல் நின்று நடத்திக் கொண்டிருந்தாள். ஆனால், அவளின் உக்கிரம் மக்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது.

அவளின் சக்தி மாபெரும் பிரளயமாய் அக்னி நெருப்பாய் நின்றது. அவள் உக்கிர வடிவாய் நின்று பரிபாலனம் செய்துகொண்டிருந்தாள், அவளை நெருங்க மக்களும் பக்தர்களும் அஞ்சினார்கள்.

இந்துக்களின் தெய்வங்கள் இந்த உக்கிர நிலையில் இருந்த காலத்தில்தான், மக்களுக்கு மிகுந்த கடுமையுடன் வழிகாட்டிய நிலையில் பௌத்தம் சமணம் போன்றவை தலைதூக்கின‌.

இப்படியான காலகட்டத்தில்தான் ஆதிசங்கரர் தனி ஒரு மகானாக தெய்வங்களுடன் நேரடியாகப் பேசினார், அவரின் மகா சக்தி அதனைச் சாதித்தது, அவரே உக்கிர கோல தெய்வங்களைச் சாந்தமாக்கினார்.

அவை இந்த உலகின் அன்னைகள். அன்னையினைக் கண்டு குழந்தைகள் அச்சப்படக் கூடாது எனத் தாயின் கருணை வடிவுக்கு அவைகளைத் திருப்பினார். அப்படித்தான் காஞ்சிபுரம் காமாட்சி ஆலயம், கொடுங்கல்லூர் ஆலயம் என எல்லாச் சக்தி பீடங்களும் அவரால் அன்புமயமாக்கப்பட்டன‌.

அப்படியான சங்கரர் இந்த ஆலய அன்னைக்கு இரு தோடுகள் என இரு சக்கரம் கொடுத்து அவளைச் சாந்த சொரூபியாக்கினார். அன்னையின் உக்கிரம் தணிப்பதற்காக, அகிலாண்டேஸ்வரியின் எதிரில் விநாயகரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

அன்றிலிருந்து அன்னை இங்குத் தாயன்போடு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றாள். அவள் அடிப்படையில் வராஹி, மிக மிக இறுக்கமான தன்மையோடு தன் குழந்தைகளைக் கண்டிப்பாய் நல்வழிக்குத் திருப்பி கொண்டிருந்த கடுமையான தாய்.

தந்தை கட்டுப்பாட்டினைப் போல் கடுமையான கட்டுப்பாட்டோடு தன் குழந்தைகளை நல்வழிபடுத்திய தாய், அவள் ஆதிசங்கரரின் அன்புக்குக் கட்டுப்பட்டு கருணை மிக்கவளாக மாறினாள். அகிலத்தின் தாயாகி அருள் பாலிக்கின்றாள்.

திருவானைக்கா என்பது சிலந்தி என வந்த புஷ்பதந்தன் எனும் சிவகணமும், யானையாக வந்த மாலியனும், யார் சிவனுக்கு அர்ச்சனை செய்வது என மோதி பக்தியின் உச்சம்காட்டிய இடம் மட்டுமல்ல, அது கோச்செங்கண்ண சோழனாக சிலந்தி உருவெடுக்க அடிதளமிட்ட தலம் மட்டுமல்ல‌.

அது நீர் தத்துவ தலம் எனச் சிவாலயம் மட்டுமல்ல, நீர் என்பது அங்கு அன்னையின் மனதையும் குறிப்பது அவளே. அங்கு ஈரமனம், கனிந்தமனம் கொண்ட அன்புத்தாய், அவள் தன் குழந்தைகளை எப்போதும் அன்பிலும் ஞானத்திலும் தர்மத்திலும் வழிநடத்துவாள்.

வீணையில்லாச் சரஸ்வதி இங்கு உண்டு. ஜேஷ்டா தேவியுடன் கூடிய விநாயகரும் உண்டு, இன்னும் முருகப்பெருமானின் சந்நிதியும் உண்டு.

வீணையில்லாச் சரஸ்வதி என்பது இந்த அன்னை எல்லாக் கலைகளுக்கும் அதிபதி, அவள் வாராஹி அம்சம் என்பதைச் சொல்கின்றது.

இங்குப் பிரம்மனுக்கு அம்பாள் சிவனாகவும், சிவன் அம்பாளாகவும் அருள்பாலிக்கும் சடங்கும் நடைபெறும். இதுபற்றி புராணக்கதை பல உண்டென்றாலும் சிவனும் சக்தியும் வேறல்ல. இருவரும் ஒரே வடிவம் சக்தியே சிவம், சிவமே சக்தி என்பதை ஆழச் சொல்லும் போதனை இது.

இக்கோவில் இன்னும் தத்துவம் பல கொண்டது. அங்கு ஜம்புகேஸ்வரரை ஒன்பது துளை கொண்ட ஜன்னல் வழியேதான் தரிசிக்க வேண்டும். இது உடலில் உள்ள ஒன்பது துளைகளைச் சொல்வது, நவதுவாரங்களையும் ஒடுக்கி தவம் செய்து இறைவனை அடைதலை சொல்லும் ஆழமான தத்துவம் கொண்டது.

இங்கு அன்னை இறைவனுக்குச் சீடர் என்பதால் மாணவி என்பதால் திருக்கல்யாணமில்லை, அந்த வழமையில்லை. முழுக்க ஞானதேடலுக்கான ஆலயம்.

இங்குச் சிவனும் திருவிளையாடல் பல செய்திருக்கின்றார். சோழமன்னன் இந்த ஆலயத்துக்கு மதிலெழுப்பும் போது அவனுக்கு போர் செய்யும் ஆபத்து வந்தது. இதனால் இதனை முழுமை செய்யமுடியாமல் தவித்தான். அப்போது சிவனே வந்து திருநீற்றைத் தங்கமாக்கி அந்த மதிலைக் கட்டிமுடித்தார். அந்தச் சந்நிதி “திருநீற்றான் மதில்” என இப்போதும் உண்டு.

அந்த விபூதி சித்தருக்கு அங்கு சந்நிதியும் உண்டு.

இந்த அன்னை செய்த அற்புதம் ஏராளம். அவள் அந்த ஆலயத்தின் அரசியாய் நின்று செய்த திருவிளையாடல்களும் அவள் அருள் பெற்றவர்கள் நிரம்ப உண்டு எனினும் மிகப்பெரிய சாட்சி அந்தக் காளமேகப் புலவர்.

அந்த ஆலயம் எல்லா ஞானத்தையும் தரும். அப்படிக் கல்வி ஞானத்தையும் தரும். ஒரு வேதியன் அப்படிக் கல்வி வேண்டி அவளிடம் மன்றாடிக் கொண்டிருந்தான், அவன் உள்மனம் வன்மமானது அகங்காரமிக்கது என்பதால் அவனைச் சோதிக்க அன்னை முடிவு செய்தாள்.

கலைகளுக்கு அதிபதியான அன்னை தாம்பூலம் தரிப்பவள் என்பது மானுடர்க்கு அவள் காட்டும் வடிவம், இது அவளின் பக்தர் அனைவரும் அறிந்த ஒன்று.

“படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.”

எனக் கம்பன் பாடியது அதுதான். அதாவது, அவள் தாம்பூலம் தரிப்பவள் என எல்லோரும் அறிந்தது.

அப்படி அவள் அழகான பெண் உருவில் தாம்பூலம் தரித்தபடி வந்து அவனைச் சோதித்தாள். அந்த வேதியனை அணுகிச் சொன்னாள், “நான் தாம்பூலம் தரித்திருக்கின்றேன், கோவிலில் உமிழக் கூடாது, உன் வாயை காட்டுகின்றாயா?” என வேடிக்கையாகக் கேட்டாள்.

அவள் அம்மனின் அம்சம் என்பதை அறிந்தும் வேதியன் அவளை விரட்டினான், அவன் அகங்காரம் அதைச் செய்யவைத்தது.

அவள் புன்னகைத்தபடியே தான் யார்? தன் சக்தி என்ன என்பதைக் காட்ட அங்கே மடத்தில் வேலை செய்யும் ஒரு பரிசாரகனை நோக்கினாள்.

அவன் பெயர் வரதன், வாயினைப் பிளந்தபடி அவன் உறங்கிக்கொண்டிருந்தான். ஸ்ரீரங்கத்தில் பரிசாரகனாக வேலை செய்தவன் தாசி மோகனாங்கிக்காக சைவ சமயத்திற்கு மாறியவன். அன்போடு அமுது செய்து படைக்கும் அவன் மனம் கண்டு அன்னை மகிழ்ந்தாள்.

அன்னை அவன் வாயில் தன் தாம்பூலத்தைத் துப்பிவிட்டு மறைந்தாள். வரதன் அப்போதே மாபெரும் கவிஞனாகிப் பாடல்களை மழைபோல் பொழிந்தான். அதனால் “காளமேகம்” எனப் பெயரும் பெற்றான்.

தமிழ் இலக்கிய உலகில் அவனுக்குக் கம்பன் போல் தனி இடம் உண்டு, எக்காலமும் உண்டு.

இந்தத் திருவானைக்கா அன்னை வாராஹி வடிவம், மகா சக்திமிக்க வடிவம். வாராஹி பல முகங்களைக் கொண்டவள் பல சக்திகளை ஞானத்தை அருள்பவள்.

அவளின் மகா பராக்கிரம முகமே வராகமாக அறியப்படுகின்றது. இராஜராஜசோழன் வழிபட்டது அந்த அம்சமே.

அது மட்டும் அவள் அல்ல. அவள் பன்முகங்களைப் பல வரங்களைக் கொண்ட தாய், அவள் வழங்கும் வரங்களில் கல்வி வரம் ஞானவரம் வாழ்க்கை வரம் எனப் பல உண்டு.

திருவானைக்கா எனும் ஏழாம் சக்திபீடத்தில் இருந்து அவள் அதனை வழங்கிக் கொண்டிருக்கின்றாள்.

வாராஹி நவராத்திரி காலங்களில் வழிபட வேண்டிய ஆலயத்தில் திருவானைக்கா முக்கியமானது, அந்த அகிலாண்டேஸ்வரி வாராக ஸ்வரூபம்.

“க்வணத்-காஞ்சீ-தாமா கரி-களப-கும்ப-ஸ்தந-நதா
பரிக்ஷீணா மத்யே பரிணத-சரச்சந்த்ர-வதநா |
தநுர்-பாணாந் பாசம் ஸ்ருணிமபி ததாநா கரதலை:
புரஸ்தாத் ஆஸ்தாம் ந: புரமதிது-ராஹோபுருஷிகா | |”

இது சௌந்தர்ய லஹரியில் ஆதிசங்கரர் பாடும் பாடல்.

கிலுகிலுக்கும் மணிச்சிலம்புகள் அமைந்த ஒட்டியாணச் சரட்டை அணிந்தவளும், யானையின் கும்பத்தை நிகர்த்த குடம் போன்ற மார்பை உடையவளும், இடையில் மிகவும் நுண்ணியவளும், சரத் காலத்துப் பூர்ண சந்திரன் போன்ற முகத்தினளும், வில் அம்பு இவற்றோடு பாச அங்குசங்களையும் கைத்தலங்களில் பிடித்துக் கொண்டிருப்பவளும், திரிபுரங்களை அழித்தவனின் மனதின் வடிவானவளுமானவள் நமக்கு எதிரே எழுந்தருளட்டும்.

இது இந்த அன்னைக்கான பாடல், இதனைச் சொல்லி அவளை இன்று வழிபடுதல் இந்த வாராஹி நவராத்திரியில் வழிபடுதல் மிக்க பலனைத் தரும். அதுவும் பஞ்சமி மாலையில் அவளை வழிபட்டால் கோடி நலன்கள் கூடி வரும். இது சத்தியம்.

ஆஷாட நவராத்திரியில் வழிபட வேண்டிய ஆலயங்கள் 02 :
உத்திரகோசமங்கை மங்களநாதர் ஆலயம்.

உலகின் மிகத் தொன்மையான இந்து ஆலயங்கள் இருக்குமிடம் உத்திரகோசமங்கை எனும் ஊரில் இருக்கும் ஆலயங்கள். அந்த மங்களநாதர் கோவில் அதில் முக்கியமானது.

அந்த மங்களநாதர் கோவிலுக்குக் காவலாய் இருக்கும் ஆலயம் வராஹி அம்மன் ஆலயம் எனும் வகையில் உத்திரகோச மங்கை வராஹி மகா தொன்மையனாவள் காலத்தால் மூத்தவள், முதல் வராஹி ஆலயம் வரலாற்றில் அதுதான்.

” மண் முந்தியதோ, மங்கை முந்தியதோ’ என்பது தமிழ்பேசும் இந்துக்களின் பிரசித்தியான வரி. அதாவது, உத்திரகோசமங்கை உலகம் தோன்றும்போதே உருவான ஆலயம் என்பது பொருள்.

(இதுதான் பின்னாளில் தழிழ்வெறி கும்பல்களால் “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே” என மாற்றப்பட்டது)

அவ்வகையில் இந்த வராஹி அம்மன் ஆலயம் உலகின் முதல் வாராஹி ஆலயம், அவள் எப்படிப்பட்ட தொன்மை கொண்டவள் என்பது புராணங்களில் உண்டு என்றாலும் மாபெரும் சாட்சி இராவணன்.

இராவணன் வாழ்வோடு தொடர்புடைய ஆலயம் உத்திரகோசமங்கை சிவாலயம், அங்கே அவன் விரும்பி வழிபட்டிருக்கின்றான், அவனுக்கு பெரும் வரங்கள் அங்கிருந்தே கிடைத்தன‌.

மண்டோதரி பெரும் சிவபக்தை, உலகின் பெரும் சிவபக்தனை மட்டுமே மணப்பேன் எனப் பிடிவாதமாய் அவள் சிவனை வழிபட்ட ஆலயம் இதுதான், அவளின் பக்திக்கு இறங்கி அவளுக்கும் இராவணனுக்கும் குழந்தைவடிவில் சிவன் காட்சி அருளி இராவணனால் கையில் ஏந்தப்பட்டதும் அந்த ஆலயத்தின் மூலமே.

அங்கு வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன் எனப் பலரும் வணங்கி வழிபட்டார்கள். மாணிக்கவாசகரின் விருப்பமான ஆலயம் இது. இன்னும் தேவாரம் பாடிய மூவரும் பல அடியார்களும் வந்து வணங்கிய ஆலயம்.

இப்படியான சிவாலயத்தின் காவல் தெய்வமாக அதாவது இந்த சிவாலயதுக்கே உத்தரவு கொடுக்கும் தெய்வமாக அமர்ந்திருப்பவள் வாராஹி.

அதாவது, இவளை வணங்கியபின்பே இராவணன் மண்டோதரி முதல் எல்லோரும் சிவனை வணங்கினார்கள், வியாசர் முதல் எல்லா மகரிஷிகளும் இவளை முதலில் பணிந்தார்கள்.

யுகங்களுக்கு முன் நடந்த போரில் உலகை காக்க வந்தவள் மானுடரின் காவலாய் அமர்ந்த இடம் இது. இந்த வராஹிதான் முதன்மையான கோவிலைக் கொண்டவள், பல சதுர் யுகங்களையும் கடந்து நிற்பவள்.

இந்தியாவில் வராஹி அம்மனுக்கு சந்நிதி காசி, தஞ்சை என வெகு சில இடத்தில்தான் உண்டு, அவற்றில் மிக மிகப் பழமையானது இது.

இவள் இங்கு மங்கை மாகாளி என அழைக்கப்படுவாள், அவள் சுயம்பு வராஹி.

அந்த உத்திரகோச மங்கை ஆலயத்தில் ஆறடி உயரத்தில் எட்டு திருக்கரங்களுடன் மும்மூர்த்திகளின் அம்சமாக வரம் அருள்வாள் அன்னை.

அவளின் வலது கரம் அபயம் அளிக்க, இடது கரம் வரதம் காட்டி, அவளின் மற்ற கரங்களில் சங்கு, சக்கரம், ஏர்கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம் தாங்கிட, காளியம்மன் போல வலது காலை மடக்கி வைத்து இடது காலை தொங்கவிட்டு உக்கிரமாக அமர்ந்த கோலத்தில் வராஹி அன்னை இருக்கிறாள்.

வடக்கு திசை நோக்கி இருக்கும் அவள் காலடியில் பஞ்ச பூதங்களும் அடக்கம். இதனைக் குறிக்கும் வகையில் 5 பூதகணங்கள் அவள் காலடியில் உள்ளனர்.

அதாவது அண்ட சராசரமே அவள் வடக்கு நோக்கி அமர்ந்ததால் அவள் முக்தி அடையும் வரத்தை தருபவள், முழு இறையருளை அனுமதிப்பவள், அதில் வரும் தடை எல்லாம் தகர்த்து வாழவைத்து நிறைவினை தருபவள்.

இவள் முன்பொரு காலத்தில் அசுர கூட்டத்தை ஒழிக்க எழும்பியள் என்பதால் உக்கிரம் அதிகம், அந்த உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு அவளது இடது பக்கம் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்.

இவர் அம்பாளின் கோபத்தை பெற்றுக் கொண்டு, பக்தர்களுக்கு அருள் மட்டும் கிடைக்க வழிவகை செய்கிறார். இப்படி விநாயகர் அருகில் இருக்கும் வராஹி அம்மனை, வேறு எந்தத் தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது.

இந்த ஆலயத்தில் அம்மனுக்கு மஞ்சள் பூசுவது வழமையான ஒன்று, அதுவும் பெண்கள் உரலில் இடித்து பூசுவது சிறப்பு.

மஞ்சளை ஏன் வைத்தார்கள் என்றால் அங்கும் சில நுணுக்கம் உண்டு, மஞ்சள் என்பது பூமிக்கு அடியில் விளைவது, அது கிருமி நாசினி என்றும் இன்னும் பல வகையிலும் பயன்படுவது.

மஞ்சள் மங்கல வாழ்வின் அடையாளமுமாயிற்று, மஞ்சள் நிறமே மங்கலத்தின் நிறம், அதுவே ஞான அறிவின் நிறம் அதனாலே அது தட்சணாமூர்த்தியின் ஆடை வடிவமுமாயிற்று.

அன்னையினை வழிபட்டால் மனதின் ஆழத்தில் இருக்கும் ஞானம் வெளிப்படும், அன்னை அடிமனதின் சக்தியினை, அறிவை மீட்டுத் தருவாள், ஒவ்வொரு ஆத்மாவின் அடிமனமும் ஆழமானது மங்களமானது, அதை அவளே அகழ்ந்து தருவாள். மனக்கிணற்றின் தூர் அள்ளி ஞான நீரைத் தருவாள், மனதின் அடியாழம் வரை சென்று தீயதை அகற்றி நன்மையினை மீட்டெடுப்பாள் எனும் தத்துவம் அது.

இந்த ஆலயத்தில் வேண்டினால் கிடைக்காத வரமில்லை. திருமணம், குழந்தை பேறு, வேலைவாய்ப்பு, தொழில் , பணம் மற்றும் சொத்துப் பிரச்சினை, வழக்கு மற்றும் நோய் நொடிகள் தீர பக்தர்கள் மஞ்சளை அரைத்து அம்பாளின் பாதத்தில் சாத்தி கோரிக்கைகளைச் சொல்லி வழிபடுவார்கள்.

அன்னையின் பாதத்தில் சாத்திய மஞ்சளைப் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். அதனை சிறிதளவு எடுத்து 3 நாட்கள் சாப்பிட வேண்டும்.

பெண்கள் என்றால் உடலுக்கு பூசியும் குளிக்கலாம்.

மஞ்சள் பொடிக் கூடாது.‌ இந்தக் கோவிலுக்கு வந்து தான் மஞ்சள் கிழங்கை அரைத்துக் கொடுக்க வேண்டும். இதற்காக கோவில் வளாகத்தில் 180 அம்மிகற்கள் வைக்கப்பட்டு உள்ளன.

மற்றொரு சிறப்பு பரிகாரமாக தேங்காய் விளக்கு ஏற்றுதலும் செய்யப்படுகிறது. இங்கு வழிபட்டு கிடைக்கா வரமிலை, ஒரு வேண்டுதல் வைத்தால் அது 6 மாதத்துக்குள் கட்டாயம் நடக்கும்.

பொதுவாக, பஞ்சமி திதி வளர்பிறை, தேய்பிறை என எதுவானாலும் வராஹிக்கானது. ஆனால், இந்த வராஹி நவராத்திரியின் எல்லா நாளும் அவளை வழிபட உத்தமமானது.

இந்த வராஹி நவராத்திரி காலங்களில் வழிபட வேண்டிய ஆலயங்களில் முதன்மையானது இந்த உத்திரகோசமங்கை வராஹி ஆலயம், முடிந்தவர்கள் நேரில் சென்று வணங்கினால் கூடுதல் பலன் உண்டு, மஞ்சள் அரைத்து வைத்து வேண்டினால் நிச்சயம் பலன் உண்டு.

அவள் இராவணன் முதல் இலங்கை மன்னர் பலர் தொடங்கி பாண்டிய மன்னர்கள் வரை போரில் வெற்றி அருளியவள்; வியாசர் முதல் எத்தனையோ ரிஷிகளுக்கு ஞானம் அருளியவள்; மண்டோதரி முதல் எத்தனையோ பெண்களுக்கு பெரும் வாழ்வு அருளியவள்; அவளிடம் என்ன கேட்கின்றோமோ அதனை அப்படியே தருபவள்.

வராஹி நவராத்திரியில் உலகின் முதல் வராஹி ஆலயம், அவளே சுயம்பு என அமர்ந்த வராஹி ஆலயத்தில் வணங்குபவர்கள் பெரும் பேறு பெற்றவர்கள். அவளை நினைந்து இந்த வராஹி நவராத்திரியில் வணங்குவோருக்கு அற்புதம் செய்து அவளே தன் தலத்துக்கு ஈர்த்தும் கொள்வாள்.