சிவ வாக்கியார் பாடல்கள்- 1 to 10

சிவ வாக்கியார் – முன்னுரை.

இந்து ஞானமரபில் முக்கியமான சித்தர் சிவ வாக்கியார், திருமூலரைப் போல அவரின் பாடல்களும் காலத்தை வென்ற தத்துவப் பேழைகள்.

சிறிய பூசணிக்கொடி பெரிய காய்களைச் சுமப்பதுபோல் பெரிய பெரிய தத்துவங்களைச் சுருக்கமாக சொன்னவர் அவர், அந்த எளிமையும் தத்துவமும் மகா ஞானமானது.

அவரையும் அவரின் பாடல்களையும் ஒவ்வொரு இந்துவும் அறிந்துவைத்தல் நலம், ஆகச் சிறந்த ஞானம் அவருடையது, அதனை நாத்திகம் எனச் சொல்லமுடியாது.

அதெல்லாம் ஞான சிகரத்தின் மேலிருந்து பொழியப்பட்ட தத்வார்த்தங்கள், அந்த ஞானநிலையில் பொழியப்பட்ட பெரும் போதனைகள்.

சனாதனம் சொல்லும் ஆகச் சிறந்த கடைநிலையினை, அறம் பொருள் இன்பம் வீடு என்பதை எளிதாகக் கடந்து எடுத்த எடுப்பிலே வீடும் ஞானமும் பிரபஞ்ச ரகசியமும் சிவதத்துவமும் பொழியும் ஞானம் அவருடையது.

பக்குவப்பட்ட மனம் அவரின் ஞானத்தை அறியமுடியும்.

அவரின் வரலாற்றை கொஞ்சம் பார்க்கலாம்.

சித்தர் வரிசையில் 17 ஆம் சித்தர் அவர், திருமூலத்துக்கு இணையான பாடல்களைச் சிவவாக்கியார் பாடல்கள் எனக் கொடுத்த அவரின் வரலாறு பல‌ சித்தர்களைப் போலவே ரிஷிமூலமாகத் தெரியவில்லை.

10 ஆம் நூற்றாண்டை ஒட்டி அவர் வாழ்ந்திருக்கலாம்.

அவர் தமிழகத்தில் ஒரு சிவனடியாக வளர்ந்திருக்கின்றார், சைவம்பால் சிவன்பால் பெரிய பக்தி இருந்திருக்கின்றது, இவர் வாழ்ந்த காலத்தில் பேயாழ்வார் போன்ற ஆழ்வார்கள் இருந்திருக்கின்றார்கள், அவர்களுக்கும் இவருக்கும் மோதல் வந்திருக்கின்றது.

இவருக்கோ அவர்களுக்குப் பதில் சொல்ல பல தேடல்கள் தேவைப்பட்டது, அவர் சிவனை இன்னும் தேடினார், அவருக்கு முழு ஞானம் வாய்க்கவில்லை, அதைத் தேடி தேடி அலைந்தார்.

ஞானம் போதிக்க நல்ல குரு தேடி அலைந்தார், எல்லோரிடமும் வாதமும் வார்த்தைபிரயோகமும் வந்ததே தவிர கடைசிவரை அவருக்கு ஞானம் போதிக்க யாருமில்லை, அவரோ விடுவதாக இல்லை.

ஆங்காங்கே சுற்றியவர் இனிக் காசிக்குச் சென்று சிவனை வழிபட்டு முறையிடுவேன் எனக் கிளம்பினார், அக்காலங்கள் காசிக்குச் செல்வதும் திரும்பி வருவதும் எளிதான காரியமாக இருக்கவில்லை.

சுருக்கமாகச் சொன்னால் அவர் விரக்தியில் சென்றார், இங்கே தனக்கான குரு யாருமில்லை என்றும் காசியிலாவது யாரும் கிடைக்கமாட்டார்களா என்றும் ஒரு தவிப்பில் சென்றார்.

அந்தத் தவிப்பை அறிந்த சிவன் அவருக்கு ஞானம் அருள திருவுருளம் கொண்டார், அந்த நாடகம் அரங்கேறிற்று.

காசியினை அடைந்தவர் ஒவ்வொரு ஆலயமாகத் தரிசித்து கங்கைக்கும் வந்தார், அங்கேதான் அவரைக் கண்டார், ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியாக அவர் அமர்ந்திருந்தார்.

(சிலர் அவரைக் கொங்கண்ண சித்தர் என்றும் சொல்வார்கள்.)

ஒல்லியான தேகம் வெண்ணிற தாடி, தலையில் வரிந்துகட்டிய முடி என அவர் கவனமாக செருப்பை தைத்துக் கொண்டிருந்தார், அருகில் ஒரு தோல்பையில் நீரும், பணம் வைக்க சிறிய பெட்டியும் இருந்தது.

அவர் மூச்சுப்பயிற்சியிலே தன் உடலுக்கான தேவையினைக் காற்றில் இருந்து பெற்றுக்கொள்வார், உணவு எடுப்பதில்லை, உறங்குவதுமில்லை.

செருப்பு தைப்பது தன் கர்மம் எனத் தைத்துக் கொண்டிருந்தான், அதன் உள்ளார்த்தம் தத்வார்த்தமானது.

பூமிக்கும் மானிட பாததுக்குமான தொடர்பை அறுப்பதாக, மானிடப் பாதத்தைப் பூமியில் படாமல் தாங்குவதாக அமைவது செருப்பு.

தான் அப்படி பற்றற்ற கோலத்தைப் போதிப்பவன், மக்களைப் பூமியின் லௌகீக ஆசைகளில் இருந்து மாயையில் இருந்து காப்பவன் என்பதைத் தன் கோலத்தால் சொல்லிக்கொண்டிருந்தார்.

அது ஒரு ஞானக் குறீயீடு.

கங்கையில் நீராடிவிட்டு எனக்கொரு நல்ல குருவைக் காட்டு சிவனே என இவர் வேண்டி வந்த நேரம், அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளி நிமிர்ந்து பார்த்தார்.

அந்தக் கண்களின் தீர்க்கமும், அந்தப் பார்வை வீசிய நேரம் அவர் உதடு காட்டிய புன்னகையும் இவருக்குள் ஏதோ செய்தது.

அந்தக் கண்கள் சந்தித்த அந்தத் தருணம் சில நொடிகள் நீண்டன. தனக்குள் ஏதோ மாறுதல்கள் நடப்பதை உணர்ந்தவர் தன்னை அறியாமல் அவரிடம் சென்றார்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர், இருவரும் ஒரே தேடலில் இருந்ததைப் புரிந்துகொண்ட இதயங்கள் நிறைந்தன‌.

அவரும் ஒரு நல்ல சீடனை தேடிக்கொண்டிருந்தார், இவரும் நல்ல குருவினைத் தேடிக் கொண்டிருந்தார்.

ஜென்ம ஜென்மமாக வரும் பந்தங்களுக்கு நீண்டகாலம் பழகவேண்டிய அவசியமில்லை, அங்கே புதிதாக புரிந்துகொள்ள எதுவுவில்லை, ஒருவரை ஒருவர் அதிகம் அறிந்துகொள்ள அவசியமில்லை.

இருவரும் சிவன் எனும் புள்ளியில் கரைந்திருந்ததால் இருமனங்களும் சிவமனமாகி அங்கே உறவாடின.

சீடன் அவருக்குக் கிடைத்துவிட்டான் ஆனால் சோதிக்காமல் எப்படி ஏற்பது? அதனால் தன் சோதனையினை அவர் தொடங்கினார்.

கொஞ்சம் காசும், கசப்பு நிறைந்த பேய்சுரைக்காய் ஒன்றுமாக கொடுத்து “என் தங்கை கங்கையினை அழைத்து அவள் கையில் இதனைக் கொடுத்துவிடு, கங்கையில் இந்தப் பேய்சுரைக்காயினைக் கசப்பு போக கழுவிக்கொண்டு வா” என்றார்.

இவர் கொஞ்சமும் யோசிக்கவில்லை, கங்கை எப்படி வந்து வாங்கும் என்றோ, காசை நதியில் கொட்டச் சொல்லும் ஒருமாதிரியான நபர் என்றோ கொஞ்சமும் சலனம் கொள்ளவில்லை.

கசப்பான பேய்சுரைக்காய் எப்படிக் கங்கையில் கழுவினால் கசப்பை இழக்கும் எனச் சிந்திக்கவுமில்லை. காரணம், அவர் முழுச்சரணகதி அடைந்திருந்தார், அதனால் காசுகளையும் பேய்சுரைக்காயினையும் எடுத்துக் கொண்டு கங்கை கரைக்குச் சென்றார்.

“என் குருவின் தங்கையே இந்தக் காசுகளை ஏற்றுக்கொள்” என அவர் சொன்னதும் ஒரு வளையணிந்த கரம் எழுந்து அதனை வாங்கிக்கொண்டது.

இவருக்கு அதுவும் அதிசயமாகப் படவில்லை, வெகு இயல்பாக நின்றவர் பேய்சுரைக்காயினைக் கழுவி எடுத்து வந்தார்.

குரு கேட்டார்

“காசை என்ன செய்தாய்?

உங்கள் பெயரால் அழைத்தேன் உங்கள் தங்கையின் கரம் வந்து வாங்கிற்று.

பேய்சுரைக்காய் கசப்பு போனதா?

நான் கங்கையில் உங்கள் உத்தரவுப்படி கழுவியதால் போயிற்று.

எப்படி அதை உண்ணாமல் சொல்கின்றாய்?

உங்கள் வாக்கினை நான் அந்தச் சுரைக்காயினைச் சுவைத்துப் பார்த்துத்தான் நம்பவேண்டும் எனும் அவசியமில்லை”

இருவரும் சிரிக்கவில்லை இயல்பாய் இருந்தார்கள்.

குரு தொடர்ந்தார்.

“கங்கையிலே வளைகரம் ஒன்று காசை வாங்கிற்றா?

ஆமாம்.

அப்படியனால் திரும்ப தரவும் வேண்டுமல்லவா?

நீங்கள் சொன்னால் வாங்கி வருகின்றேன்.

அப்படியா, இதோ இந்த பையிலும் அதே கங்கையின் நீர்தான் உள்ளது. எங்கே அந்தப் பணத்தை கேள் பார்க்கலாம்?”

இவர் சொன்னார் “கங்கையே என் குரு கேட்கின்றார், நான் கொடுத்ததைக் கொடுத்துவிடு”

அதே கரம் வாங்கிய காசுகளையெல்லாம் திரும்ப வந்து கொடுத்து மறைந்தது.

அந்தக் குரு இவரை உற்றுப்பார்த்தார், “நீ வந்தவேலை முடிந்தது. சொந்த இடத்துக்கு போ, இனி எல்லாம் சிவனருள்” என்றார்.

மானுடக் கண்களுக்கு இது ஏதோ இரண்டு வித்தியாசமான ஆசாமிகளுக்கு இடையில் நடந்த வேடிக்கையான அர்த்தமில்லாச் சம்பாஷனையாகத் தெரியலாம்.

செருப்பு தைக்கும் ஒருவன் சொன்னதையெல்லாம் கொஞ்சமும் தயக்கமில்லாமல் ஒருவன் நம்புவதும், அது நடப்பதாக அவன் கண்ணுக்கு மட்டும் தெரிவதும் நகைப்பான விஷயமாக தெரியலாம்.

இதில் உள்ள ஆழமான பொருள் பெரிது.

குரு தன்னுடையதை எல்லாம் அவனிடம் கொடுத்து அதைப் புனிதமான காரியத்துக்குப் பயன்படுத்தமுடியுமா எனக் கேட்டுக்கொண்டார்.

அவர் காசை கங்கையில் போட சொன்ன தத்துவம் அதுதான், அதைப் புரிந்துகொண்ட சீடரும் உடனே செய்தார்.

இதைக் குருவும் புரிந்து கொண்டார்.

கசப்பான பேய்சுரைக்காய் என்பது ஒருவன் கொண்ட மோசமான கர்மா, அந்தக் கர்மாவினைக் கரைக்க சொன்னார், இவரும் கரைத்துவிட்டார்.

மீண்டும் குரு காசுகளைத் திரும்ப பெறச் சொன்னார் என்பது, இப்போது பிரபஞ்ச பெரும் அருள் சிவன் அருள் அவருக்குக் கையில் கிடைத்தது என்பதைச் சொல்வது.

காட்சிகளாலே இருவரும் பேசிக்கொண்டார்கள், அந்த சிலநிமிடங்களிலே ஞானம் பெற்றார் சீடர்.

“சிவனின் வாக்கியங்களை ஈயப்போகும் சித்தன் என்பதால் நீர் இனி சிவ வாக்கியார் என அழைக்கப்படுவீர்” எனக் குரு திருவாய் மொழிந்தார்.

சிவ வாக்கியார் எனும் மகாஞானி காசியில் உருவான வரலாறு இப்படித்தான், எல்லா இந்துமத பெரும் ஞானிகளையும் உருவாக்கும் காசிதான் சிவ வாக்கியரையும் ஞானியாக்கியது.

காசிநாதனை வணங்கிவிட்டு குருவிடம் விடைபெற்றார் அந்த சிவ வாக்கியார்.

“குருவே, நான் தேடிவந்த அமைதி எனக்குக் கிடைத்துவிட்டது, குரு என்பவர் சூரியன் போல யாரும் இதுதான் சூரியன் எனக் காட்டித்தராமலே பார்த்ததும் உணரவேண்டிய விஷயம், அவர்தான் உண்மையான குருவாக உள்ளத்தில் அமரமுடியும்.

எனக்கான குரு நீங்கள், நான் இனி அடையவேண்டியது ஒன்றுமில்லை, ஆனால் என்ன செய்வது எங்குச் செல்வது எனத் தெரியவில்லை, நீங்கள்தான் வழிகாட்டவேண்டும்” எனப் பணிந்தார்.

குரு கொஞ்சம் மணலை சிறிய துணியில் மூட்டையாகக் கட்டினார், ஒரு பேய்சுரைக்காயினையும் எடுத்துக் கொண்டார்.

“உன் முன் ஜென்ம கர்மம் கழிக்கும்படி காசிக்கு வந்தாய், இங்கே எல்லாம் கழிந்துவிட்டது இனி நீ சிவனால் ஆட்கொள்ளப்பட்ட சித்தன்.

அதே நேரம் உனக்கு இன்னும் சில கடமைகள் உண்டு , நீ இல்லறத்தில் ஈடுபட்டு உனக்காக அவதரித்திருக்கும் பெண்ணின் சக்திபெற்று இன்னும் உயர்வாய்.

இந்த மண்ணையும், இந்தப் பேய்சுரைக்காயினையும் யார் உனக்குச் சமைத்துத் தருவாளோ அவளே உன் மனைவி, அதன்பின் அடுத்தப் படிநிலைக்கு நீ செல்வாய்” எனச் சொல்லி அனுப்பினார்.

குருவிடம் காசியில் விடைபெற்றுக் கிளம்பினார் சிவாக்கியார்.

ஒரு தோளில் குரு கொடுத்த மணல், ஒரு தோளில் அந்த வாடாத‌ பேய்சுரக்காய் என வலம் வந்தார், பட்டினத்தார் கரும்போடு நின்றிருந்த கோலம் அது.

அந்தக் கோலத்தில் அர்த்தமும் இருந்தது.

மணல் என்பது இந்தப் பூலோக இன்பங்களைக் குறிப்பது, இந்த உலகில் எல்லாமே மண்ணில் இருந்துதான் வரும், உணவு, உடை, வீடு என எல்லாமும் மண்ணில் இருந்துதான் வரும் மண்ணே மூலம்.

பொன் என எடுத்தாலும் மண்ணில் இருந்துதான் வரும், பெண் என எடுத்தாலும் அவள் மண்ணில் இருந்து வந்த மூலத்தாலே உருவெடுத்திருப்பாள்.

எல்லா மாயைக்கும் மூலக் காரணம் மண்.

மகாபாரத பீஷ்மர் மண்ணைத் தொடாமல் நின்றார் என்றால் இதுதான் காரணம், எல்லா ஆசைகளையும் மூலமாகக் கொண்டிருப்பது மண், அந்த உலக ஆசையினைத் துறப்பதையே மண்ணைத் தொடமாட்டேன் எனப் பீஷ்மர் குறிப்பால் சொல்லிக்கொண்டிருந்தார்.

அதைத்தான் செருப்பு தைக்கும் தொழிலாளியாகக் குருவும் சொன்னார், மண்ணைச் சமந்து சீடரும் சொன்னார்.

கசப்பான சுரைக்காய் என்பது கர்மம் தாங்கி வந்த உடல், கசப்பு என்பது கர்மம்.

மண்ணாசையினைத் துறந்தால் கர்மா அழியும் என்பதைக் குறிப்பால் காட்டிக்கொண்டு வந்தார் அந்த ஞானி.

அவர் இளம் வயதுக்காரர், ஞானிகளிடம் எப்போதும் ஒரு தேஜஸ் மிளிரும். அதைக் கண்டு பெண்கள் பலர் வந்தனர். ஆனால், மணலையும் பேய்சுரைக்காயினையும் காட்டிச் சமைக்க சொன்னபோது ஓடிவிட்டனர்.

கடைசியில் அவர் குறவர்கள் வாழும் இடத்தை அடைந்தார், அவர்கள் மூங்கில் வெட்டி மூங்கில் பொருள் செய்து பிழைக்கும் குலம்.

அந்த ஊரில் ஒரு பெண்ணைச் சந்தித்தார், அவள் ஒரு கூடை முனைந்துகொண்டிருந்தாள், வீட்டில் அவளைத் தவிர யாருமில்லை.

அவளுக்கு அவர் ஒரு ஞானி எனத் தெரிந்தது, உடனே பணிந்தாள். என்ன உதவி வேண்டும் எனப் பணிந்து கேட்டாள்.

சிவனடியார்க்கு வேண்டியன செய்யவேண்டும் எனும் கொள்கையில் அவள் வளர்க்கப்பட்டிருந்தாள், அதனால் அவரை வேண்டி நின்றாள்.

சிவ வாக்கியார் தன் தோளில் இருந்த மணலையும், கசப்பான சுரைக்காயும் சமைத்துத் தரச் சொன்னார், ஞானிகள் எது சொன்னாலும் அர்த்தமுண்டு என்பதை அறிந்தவள் மறுபேச்சில்லாமல் வாங்கிச் சமைக்கச் சென்றாள்.

அந்த மணல் அரிசி சோறாகச் சமைந்தது, அந்தச் சுரைக்காய் கசப்பு நீங்கி உண்ணத் தகுந்ததாய் இருந்தது.

அவளே தனக்குரியவள் என்பதை அறிந்த சிவ வாக்கியார் பின் அவள் பெற்றோர் சம்மதத்துடன் குறவர் இனத்திலே அவளோடு வாழத்தொடங்கினார்.

மெல்ல மெல்ல பரிபூரண நிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார், ஆனால் அவர்களோடு களைவெட்டும் தொழிலை, மூங்கில் தொழிலை அவரும் செய்தார்.

பூமியில் ஒருவன் உழைத்துத்தான் வாழவேண்டும் என்பதில் கவனமாய் இருந்தார்.

அப்படிக் களைவெட்டும் போது ஒருநாள் மூங்கிலில் இருந்து தங்கம் கொட்டிற்று “ஐயோ ஆட்கொல்லி” எனச் சொல்லி ஓடினார், அதை வழிபோக்கர் நால்வர் கண்டு நகைத்து அவரை மனநிலை சரியில்லாதவர் எனச் சொல்லிவிட்டு நால்வரும் தங்கத்தை மூட்டையாக கட்டினர்.

பின் அவர்களுக்குள் ஆசை பெருகி மூவர் முதலில் ஒருவனைத் தீர்த்துக் கட்டினர். பின் இருவர் ஒருவனைத் தீர்த்து கட்டினர், பின் இருவரும் அவர்களுக்குள்ளே மோதி ஒருவன் கொல்லப்பட்டான் , கடைசியில் தங்கமெல்லாம் தனக்கு என்றவனை கொள்ளையர் கொன்றுபோட்டு தங்கத்தை அள்ளிச் சென்றனர்.

“ஆட்கொல்லி ஆட்கொல்லி” எனத் தன் ஞானதிருஷ்டியில் நடந்ததைக் கண்டு சிரித்துக்கொண்டார் சிவ வாக்கியார்.

அவர் பெரும் ஞானி என உணர்ந்த மக்கள் மெல்ல மெல்ல அவரை நாடி வந்தார்கள், “தங்கத்தைத் தேடி அலையாதீர் தங்கங்களே, நீங்களே ஞானத்தங்கங்கள் என்பதை உணருங்கள்” எனப் போதிக்கத் தொடங்கினார்.

அப்போதில் இருந்து சந்நியாசம் ஏற்று ஒவ்வொரு இடமாக பாடி பாடி சென்று போதித்துக் கடைசியில் கும்பகோணத்தில் சமாதி அடைந்தார்.

இன்றும் அவரின் சமாதி அங்கு உண்டு.

இவர் பாடிய பாடல்கள்தான் “சிவ வாக்கியார் பாடல்கள்” எனத் திருமந்திரததினைப் போல பெரும் இடம் பெற்று நிற்கின்றது.

மிக எளிய தமிழில் இயல்பான சொற்களுடன் அவர் சொன்ன பாடல் புரிந்துகொள்ள்ள எளிதானது ஆனால் ஆழ்ந்த தத்துவமுடையது.

அவரின் பாடல்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம், முடிந்தவரை ஒவ்வொரு நாளும் தர முயற்சிக்கின்றோம்.

அந்தப் பாடல்கள் ஆழமானவை, மிகப்பெரும் தத்துவத்தை கொண்டவை, நம்மால் அதை முழுவதும் விளக்க முடியாது.
எனினும், பாற்கடலை நக்கிய பூனை போல, மலைத்தேனை எடுக்க முயன்ற முடவன் போல முடிந்தவரை முயற்சிப்போம்.

சிவ வாக்கியார் 01 : கடவுள் வாழ்த்து.

“அரியதோர் நமசிவாய மாதியந்த மானதும்
ஆறிரண்டு நூறுதேவ ரன்றுரைத்த மந்திரம்
சுரியதோ ரெழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோ(ஷ)டதோ(ஷ்)ட பாவமாய்கை தூரதூர வோடவே.”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.

அரியது ஒர் நமசிவாய மாம் ஆதி அந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறு தேவர் என்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவ வாக்கியம்
தோஷ தோஷ பாவம் மாயை தூர தூர ஓடவே”

அதாவது, “மிக மிக அரியதானதும், இந்த பிரபஞ்சத்தின் தொடக்கமும் முடிவுமானதுதும், 1200 (ஆறிரண்டு நூறு) தேவர்கள் இடைவிடாமல் சொல்வதும், மறுபடி மறுபடி சுழன்று (சுரிய) ஒலிக்கும் அந்த “ஓம் நவசிவாய” எனும் மந்திர எழுத்தை உரைக்க சொல்லி சிவனுடைய வரிகளைச் சொல்கின்றேன்.

இதைச் சொல்ல சொல்ல எல்லாப் பாவ தோஷங்களும், அவற்றின் மூலமும் மாய மயக்கங்களும் தூர ஓடிவிடும்.

சிவ வாக்கியார் “ஓம் நமச்சிவாய” எனச் சொல்லி சிவ வாக்கியத்தை தொடங்குகின்றார், இதைச சொல்லித்தான் சப்தரிஷி முதல் அகத்தியர் உள்ளிட்ட எல்லாச் சித்தர்களும், 1200 பேர் என அடையாளபடுத்தபடும் அதிசிறந்த தலையாய சிததர்களும் பெரும் ஞானம் பெற்றார்கள்.

நானும் அவ்வரிசையில் அந்த “ஓம் நமசிவாய” எனும் மந்திரத்தைச் சொல்லி சிவனின் போதனைகளைத் தருகின்றேன், அதைச் சொல்ல சொல்ல என் பாவங்களும் தோஷங்களும் கழியும், மாய மயக்கங்களும் கழியும், அதைப் படிக்கும் உங்களுக்கும் கழியட்டும் எனப் பாடலைத் தொடங்குகின்றார்.

அடுத்து கடவுள் வாழ்த்தை தொடங்குகின்றார்.

“கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள்நூல்கள் ஞானமுங் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி யோதிடும் பிழை பொறுக்க வேண்டுமே”

கரிய முகத்தோனான கணபதியினை, கேட்பதையெல்லாம் தரும் கற்பகத்தானை கையெடுத்து வணங்கித் தொழுது தொடங்குகின்றேன், கலைகளும் ஞான நூல்களும் இன்னுமெல்லா ஞானங்களும் என்னில் வந்து உதிக்க அவனை வணங்குகின்றேன்.

கற்றறிந்த பெரியோரும், அவர்களில் சிறியோரும் , ஞானியரும் அவர்களின் சீடர்களும் இந்த ஒன்றுமறியாதவன் ஓதிடும் பிழைகளைப் பொறுத்தருள வேண்டுகின்றேன்.

அடுத்துப் பாடுகின்றார்.

“ஆனவஞ் செழுத்துளே யண்டமும் மகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே யாதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே யகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே யடங்கலாவ லுற்றே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து வரும்.

“ஆன அஞ்சு எழுத்துள்ளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்சு எழுத்துள்ளே ஆதியான மூவரும்
ஆன அஞ்சு எழுத்துள்ளே அகரமும் உகாரமும்
ஆன அஞ்சு எழுத்துள்ளே அடங்க ஆவல் உற்றே”

நமசிவாய எனும் எழுத்துள்ளே இந்த அண்டமும் அகண்டமும் (பிரபஞ்சமும்) அடங்கியுள்ளது, இந்த அஞ்சு எழுத்தினில்தான் பிரம்மா, சிவன், விஷ்ணு எனும் மூம்மூர்த்திகளும் அடங்கியுள்ளனர்.

அகரமும் அதாவது “அ”, உகரமும் என்றால் “உ” என்பது அ+உ+இம் அதாவது ‘ஓம்’ என்பதை சொல்வது, ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தைச் சொல்வது.

ஓம் என்பது வெறும் எழுத்தல்ல, அது அ+உ+ம் எனும் இயல்புடையது, அப்படித்தான் அதை ஓதவும் வேண்டும்.

( இதைத்தான் இறைவனை அடையும் வழியின் தொடக்கம் என்றார்கள் இந்துக்கள், அதைத்தான் வள்ளுவனும் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவனை அடையும் வழி, அவனே உலகில் முதன்மையானவன் எனச் சொன்னான்

“அகர முதல” என்பது “அகர முகர” என்றுதான் இருந்திருக்க வேண்டும் பின்னாளில் அது மாறியிருக்கலாம் என்பாரும் உண்டு, அப்படி ஒரு வாதம் உண்டு. )

ஆக, “நமசிவாய” எனத் தொடங்கி, அதை ஓதி இறைவனை உணர்ந்த 1200 சித்தர்களைச் சொல்லி, விநாயகரை வழிபட்டு, பின் இந்த “நமசிவாய” எனும் மந்திரத்துள்தான் அகிலமும், அண்டமும், பிரபஞ்சமும், இன்னும் மும்மூர்த்திகளும், பிரணவ மந்திரமுமே அடக்கம் , பஞ்சாட்சர மந்திரம் அவ்வளவு சக்திவாய்ந்த மந்திரம் முழுமையான மூல மந்திரம் என்பதைச் சொல்லி வணங்கி தன் போதனையினைத் தொடங்குகின்றார் சிவ வாக்கியார்.

சிவ வாக்கியார் : 02

“ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யண்ணிறைந்த கோடியே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள்தரும்

“ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறைந்த கோடியே”

இந்த உடலில் சக்தியாய் அந்த அரும்பெரும் சக்தி ஓடிக் கொண்டிருக்கின்றது, அது காற்றாய் மூச்சாய் உள்ளே சென்றுவந்து ஓடிகொண்டிருக்கின்றது, நாடிகள் தோறும் ஓடிக்கொன்டிருக்கின்றது.

அந்த மூச்சை அடக்கி, நாடிகளைத் துலக்கினால் அந்தப் பெரும் பேரோளியினை உணர்ந்து தரிசிக்கலாம், ஆனால் மாந்தரோ அதை விடுத்து ஓடி ஓடி கோவில்களிலும் இன்னும் பல இடங்களிலும் தேடுகின்றார்கள்.

பின் தாங்கள் தேடி தேடி அலைந்த பெரும் சக்தியினைக் காணமுடியாமல் வாடி வாடி அந்த ஏக்கத்திலே மறைந்தும் போகின்றார்கள், அப்படி எங்கெல்லாமோ இறைவனைத் தேடி அவனைக் காணாமல் வாடியபடி ஏங்கி மறைந்தோர் ஏகப்பட்ட கோடிபேர் என்பது பாடலின் பொருள்.

இந்தப் பாடலை அப்படியே படித்தால் அப்படியானால் கோவில்கள் பொய்யா, கோவில்கள் செல்ல வேண்டாமா? சிவ வாக்கியார் நாத்திகம் பேசுகின்றாரா என எண்ணத் தோன்றும், நிஜம் அது அல்ல.

சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு படிகட்டுக்களை இறைவனை உணர்ந்து அடைய போதித்தார்கள் இந்துக்கள்.

சரியை என்றால் முதல் படி நிலை, அதாவது கோவிலுக்குச் செல்லுதல் விக்ரகங்களை வணங்கி பூச்சொரிதல், விளக்கேற்றுதல், நைவேத்தியம் இதர பூஜை முறைகள்.

கிரியை என்றால் அடுத்த படிநிலை, மந்திரங்களை ஜெபித்தல், திருப்பணிகள், அடியார்கள் பணி எனச் செயல்களால் அடுத்த நிலைக்குச் செல்லுதல்.

யோகம் என்றால் ஒன்றுதல், மனதால் இறைவனிடம் ஒன்றித்திருத்தல், தியானத்தின் முதல் படி இது.

ஞானம் என்பது இறைவனை ஆத்மாவினால் உணர்தல், இறைசக்தியோடு கலந்து அந்தச் சக்தியோடு கலந்துவிடுதல்.

இப்படி நான்கு படிநிலைகளை இந்துமதம் போதித்தது.

பள்ளியில் பாலர் வகுப்பு தொடங்கி பெரும் ஆய்வுபட்டத்துக்குச் செல்லும் மாணவனைப் படிபடியாக தயார் செய்வது போன்ற பயிற்சி இது.

அந்த நிலையில் கடைநிலையினை சிவ வாக்கியார் போதிக்கின்றார். அவரின் போதனை நாத்திகமோ கோவில், விக்ரஹ வழிபாடோ கூடாது என்பதல்ல, அதை எல்லாம் கடந்து வந்து கடைசியில் தெய்வத்தை தன் மனதால் தரித்து ஞானமடைய வேண்டும் என்பது.

இந்துமதம் ஞானத்தைத் தேடி அடையச் சொன்ன மதம், அதன் வழிபாடுகள் பூஜைகள் விழாக்கள் விரதங்கள் மந்திரங்கள் எல்லாமே படிப்படியாக ஒருவனை இறைசக்திக்குள் இழுத்துச் செல்லும் வகையில் மிகச் சூட்சுமமாக அமைக்கப்பட்டவை.

அந்தப் பயிற்சியினைச் சரியாகச் செய்தால் கடைசிநிலை ஞானம் அடைவதாக முடியும்.

அப்படியான ஞானம் அடையாத வழிபாடும் பிரார்த்தனையும் முழுப் பலனைக் கொடுக்கவில்லை எனப் பொருள், அதைத்தான் அந்த முழுமையினை அடையத்தான் கடைசிப் படிநிலை இது எனச் சொல்கின்றார்.

கோவில் சென்று வழிபடுவது இன்னும் பலவகை வழிபாடெல்லாம் ஞானம் நோக்கி அழைத்துவர வேண்டும், கடைசியில் ஞானம் அடையாமல் பலனற்று போகக் கூடாது, அந்த ஞானம் என்னவென்றால் எல்லா உயிரிலும் இருக்கும் சிவம் தன்னுள்ளும் உண்டு , எல்லாச் சக்தியும் ஒன்றே எனும் பெரு ஞான நிலைக்கு வந்துவிடுவது.

அப்படியான ஞான நிலையினைத் தவத்தால் தியானத்தால் உணரும்போது தெய்வம் தன்னுள்ளும் உண்டு எல்லா உயிரிலும் உண்டு, இந்த உலகில் எல்லாமே இறைவடிவம் எனும் பெரும் ஞானம் தோன்றும்.

அந்த ஞானத்தைத்தான் இங்கே சொல்கின்றார் சிவவாக்கியார்.

இதையே திருமூலரும் சொல்வார்.

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே”

எல்லா உயிரிலும் இருக்கும் சிவமே தன் உடலிலும் உண்டு எல்லாமும் சிவ வடிவமே என்பதே ஞானத்தின் பெருநிலை, அந்த நிலைக்கு மக்களை வரச்சொல்லி பாடுகின்றார் சிவ வாக்கியார்.

ஒளவையின் ஞானகுறளும் அதையே சொல்கின்றது.

“எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்”

அதாவது, இப்புவியிலுள்ள எண்ணிலடங்காத ஆண், பெண், அலியென்ற பேதமுள்ள அனைத்து உயிரினங்களிலும் எங்கும் பரவி, உடலில் நிறைந்து நிற்கும் சிவம்.

இன்னொரு குறள் உண்டு.

“ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்
ஒன்றாகி நிற்குஞ் சிவம்.”

மூல வித்தாகி, அதிலிருந்து உதிக்கும் எல்லா உயிர்களின் உடலுக்குள் பரவி, ஒரே சீவனாகி நிற்கும் சிவம்.

இதையே இன்னொரு பாடலில் திருமூலரும் சொல்கின்றார்

“அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் வகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே”

இதைத்தான் தன் பாடலில் சொல்லி அந்தப் பரம்பொருள் உட்கலந்திருக்கின்றது, ஞானம் அடைந்தால் அதைத் தன்னில் உணரலாம் என்கின்றார் சிவ வாக்கியார்.

சிவ வாக்கியார் : 03

“உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருட்டரித்த நாதர்பாத மம்மைபாதம் உண்மையே”

பாடலைப் புரிந்து கொள்ளுதல் எளிது, ஆனால் பாடலின் அர்த்தம் ஆழமானது.

உருத்தரித்த நாடி என்றால் சுழுமுனை நாடி, இந்தச் சுழுமுனை நாடி என்பது சந்திரகலை, சூரியகலை. அதாவது, இடது வலது மூச்சுக்களைக கொண்டு, அதைச் சரியாக ரேசகம் எனும் மூச்சினை உள்ளிளுத்தல் பூரகம் எனும் மூச்சினை வெளியேற்றுதல், கும்பகம் என மூச்சை அடக்கி வைத்தல் எனப் பயிற்சிகளில் கொண்டு வந்தால் துலங்கும்.

இந்துக்களின் திரிசூல வடிவ தத்துவம் இதுதான். இடது நாடியும் வலதுநாடியும் சேருமிடத்தில் சுழுமுனை நாடி துலங்கி எழும் என்பதே அந்தத் தத்துவம்.

அந்தச் சுழுமுனை நாடி துலங்கும்போது குண்டலினி சக்தி கீழிருந்து மேலேறும், அந்தச் சக்தி ஆறு சக்கரங்களைத் துலக்கி மேலேறி உச்ச சக்கரத்தைத் தொடும்போது அமிர்தம் சுரக்கும்.

அந்த அமிர்தம் உடலின் எல்லா நாடிகளிலும் பரவும், அப்படி ஒரு நிலை வந்தால் ஒருவன் மிகுந்த இளமைதோற்றத்துடன் காணப்படுவான், வாழ்நாள் நீடிக்கும் உடல் சிவந்த பழம் போல் கனிந்து ஜொலிக்கும
அந்நிலையில் தெய்வீக தன்மையினை அடையலாம் என்பது யோக தத்துவம்.

அதைத்தான் இங்கே பாடுகின்றார் சிவ வாக்கியார்.

“உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை”, சரியாக மூச்சினை உள்ளிழுத்து கும்பகம் செய்து வெளியிட்டால், உரு தரிக்கும் அதாவது சுழுமுனை நாடியில் சக்தி உண்டாகும், இரு நாடிகளும் அங்கே குவிந்து ஒரு பெரும் சக்தி எழும்.

“கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்”, மிகக் கவனமாக மனதை ஒருமுனைப்படுத்தி உச்சந்தலைக்கு ஏற்ற முடிந்தால்,
“விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்” விருத்தர் என்றால் வயதானவர், பாலர் என்றால் இளமை. அப்படி சுழுமுனை நாடி துலங்கினால், அது உச்சந்தலைக்குச் சென்று அமிர்தம் சுரந்தால் மூத்தவரும் இளமையான தோற்றம் பெறுவார், அவர் மேனி சிவந்து அழகாக ஜொலிக்கும்.

“அருட்டரித்த நாதர்பாத மம்மைபாதம் உண்மையே””, இது அருள் வழங்கும் சிவ பாதம், அம்மை சிவகாமி பாதம் சேர்த்துவிடும். அதாவது, தெய்வீக நிலையினை அடையலாம்.

ஆக, பாடலின் பொருள் இதுதான்.

சுழுமுனை நாடி துலங்கினால் அமிர்தம் சுரக்கும், அந்த அமிர்தம் எல்லா நாடியிலும் பாய்ந்தோடினால் ஒருவன் இளமையான தோற்றம் பெற்று தேஜஸாக ஜொலிப்பான் இது சிவன் பார்வதி பாதம் சேர்க்கும், தெய்வீக தன்மை உண்டாகும் என்பது பாடலின் பொருள்.

ஒளவை தன் ஞானக்குறளில் சொல்கின்றார்.

“அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி
முடிமிசை யோடி முயல்”

அதாவது, மூச்சை அடக்கி மூலாதாரத்தில் இருக்கும் சக்தியினை எழுப்பி அதனை முடி எனும் உச்சிக்கு கொண்டுவரும் பயிற்சியினை செய்தால் சிவயோக நிலையினை அடையலாம் என்பது குறளின் பொருள்.

யோகத்தில் மூச்சே பிரதானம், அந்த மூச்சினை அடக்கி முறையாகப் பயிற்சி செய்து மூலாதாரத்தின் சக்தியினை மேலே எழுப்ப வேண்டும் என்பதே சிவயோக நிலையினை எட்டும் முதல்படி என்பது ஒளவை சொல்லும் போதனை.

தன் அகவலில் கூட “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலால் (மூச்சு காற்றால்) எழுப்பும் கருத்தறிவித்தே” எனப பாடியிருப்பது இதனைத்தான்.

கம்பளிச் சட்டை முனி நாயனார் பாடுகின்றார்.

“காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகங்
கண்டுகொள்ளு தாமரையில் நூல்போ லாடும்;
ஊணப்பா அதிலிரட்டி யபான வாயு
உற்றுநின்றி ரண்டையுநீ கண்டா யானால்
பூணப்பா விதற்குள்ளே ஞான யோகம்”

அதாவது, பிராண யோகம் செய்ய தாமரையில் நூல் போல் உள்ள குண்டலினியையும், அதில் ஆடும் பிராண அபான வாயுவையும் அறியலாம். அதன் இயக்கங்களை உற்று நோக்கி அறிந்து கொண்டால் அது ஞானமும் யோகமும் ஆகும் என்கின்றார்.

அதைத்தான் சொல்கின்றார் சிவ வாக்கியார்.

சிவ வாக்கியார் : 04

“வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவ னத்தினால்
விடுவனோ வவனைமுன்னர் வெட்டவேண்டு மென்ப‌னே
நடுவன்வந் தழைத்தபோது நாறுமிந்த‌ நல்லுடல்
சுடலைமட்டுங் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பரே”

இப்பாடல் கீழ்கண்டாவாறு பிரிந்துவரும்.

“வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் அன‌த்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே
நடுவன் வந்து அழைத்தபோது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே”

அழகான மனைவி, சர்வ லட்சணம் பொருந்திய பெண்ணை கொண்டவன் அவளை இன்னொருவன் இச்சிக்க விடமாட்டான், அப்படி ஒருவன் அவளைக் கவர நினைத்தால் அவனை வெட்டிப்போட ஆத்திரத்துடன் கிளம்புவான்.

இப்படி இன்னொருவன் அவளை எடுக்க நினைக்கும் போது கடும் ஆத்திரம் கொள்ளும் கணவன் எமன் அவள் உயிரைப் பறிக்கும் போது அவள் உடலை வெட்டியானிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுவான், இப்படியான உலகம் இது என்பது பாடலின் பொருள்.

தன் மனைவிக்காக இன்னொருவன் உடலை வெட்ட துணிபவன் எமன் வரும்போது அவள் உடலையே வெட்டியானிடம் கொடுத்துவிடுகின்றான், நிலையற்ற உலகில் எல்லாமே மாயை என இப்பாடல் நேரடிப் பொருளைச் சொல்லும்.

அதற்காக அப்படியானால் ஒருநாளில் அழியப்போகும் உடலை இன்னொருவன் எடுத்தால் என்ன எனத் தமிழக பகுத்தறிவுவாதிகள் போல பொருள் கொள்ளக் கூடாது, சித்தர்கள் எப்போதும் மறைமுகமாகப் போதிப்பவர்கள்.

இங்கே சித்தர் ஆத்மாவும் உடலும் குடியிருக்கும் மானிட வாழ்வை சொல்கின்றார், ஒவ்வொருவருக்கும் தன் உடல் மீதுதான் பெரும் காதல் உண்டு, முதல் இடம் எப்போதும் உடலுக்குத்தான்.

அந்த உடல் உண்ண உணவு, உடல் உறங்க வீடு, உடலுக்கு ஆடைகள், வாசனைகள், அந்தத் தோற்றத்துக்கு மரியாதை சுருக்கமாக “நான்” என்பதே உடல் எனக் கருதி உடலைப் பேணுவதே மானிடரின் வாழ்வு.

இங்கு அழகான மனைவி எனச் சித்தர் சொல்வது அவனவன் உடலை.

இந்த உடலில் ஒரு ஆத்மா குடிகொண்டிருக்கின்றது, அந்த ஆத்மா இறைவனை அடையத்தான் இந்த உடல் பயன்பட வேண்டும், ஆனால் அந்த உடல் புலன் மயக்கத்தாலும் இதர சுகங்களாலும் திசைமாறி மாயையில் சிக்குகின்றது.

அது மாயையில் சிக்கி சுகபோகங்களில் திளைத்து எமன் வந்து அதற்குரிய காலத்தை முடிக்கும் போது அந்த உடல் அழிகின்றது, அப்போது பிரியும் ஆத்மா கலங்கி நிற்கின்றது.

இப்படி உடலை மனைவியாகவும் ஆத்மாவினை க்கணவனாகவும் பாவித்துப் பாடுகின்றார் சிவ வாக்கியார்.

அழியக் கூடிய உடலை விடுத்து அழியா ஆன்மாவினை இறைபதம் சேர்க்கப்பாடுங்கள், ஆத்மா அழிவில்லாதது உடல் அழிய கூடியது என்பது பாடலின் பொருள்.

உடல் என்பது ஒருவன் அல்ல, உடலால் வரும் பந்தங்கள் உண்மை பந்தங்கள் அல்ல, தாய் பிள்ளை தகப்பன் மகன், கணவன் மனைவி, உடன்பிறப்புகள், சொந்தபந்தம், நட்பு என எல்லாமே உடல் உருவில் இணைந்திருப்பவை.

அந்தப் பாச பந்தத்தில் உடலைக் கண்டு இதுதான் உண்மையானது என மயங்கி கிடக்காமல், இந்த உருவம்தான் நிரந்தரமானது என அறியாமையில் நில்லாமல் உருவில் மயங்காமல் பாச பந்ததில் சிக்காமல் நான் என்பது ஆத்மா, அவர்கள் என்பதும் ஆத்மா என்பதை உணர்வதே ஆன்மயோக நிலை.

அந்த ஞான நிலையினைத்தான் போதிக்கின்றார் சிவ வாக்கியார்

யாரையும் அவர் உடலால் நோக்காதே, உடலால் கொண்ட உருவால் ஏற்காதே பற்றுவைக்காதே, அதை ஒரு ஆன்மாவாக, உன்னையும் ஒரு ஆத்மாவாக மட்டும் கவனி , உட்ல அழியும் ஆத்மா அழியாது என்பதே ஞானம் என்பது அவரின் போதனை

இதையே பல சித்தர்கள் பாடினார்கள்

“நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடி வருமோ
கூடுபோன பின் பவற்றாற் கொள்பய னென்னோ
கூத்தன் பதங் குறித்துநின் றாடாய் பாம்பே”

என்றார் பாம்பாட்டி சித்தர்

“விட்டுவிடப் போகுதுயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் – பட்டது பட்டு
எந்நேரமும் சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்”.

என்றார் பட்டினத்தார்

“நீரிலெழும் நீர்க்குமிழி நிலைகெ டல்போல
நில்லாதுடல் நீங்கிவிடும் நிச்சய மென்றே
பாரிற் பல உயிர்களைப் படைத்த வன்றனைப்
பற்றவேநீ பற்றித்தொடர்ந் தாடாய் பாம்பே”

என்பது பாம்பாட்டி சித்தர் பாடல்

“இந்தச் சடலம் பெரிதென – எண்ணியான்
இருந்து வீண்காலந் தான்கழித்துச்
சொந்தச் சடலம் எதுவெனப் பார்த்திடில்
சுத்தமாய்க் காணோம் ஆனந்தப் பெண்ணே”

என்பது சங்கிலி சித்தர் பாடல்

இதையேதான் ஞானசித்தன் பாடினார்

“நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?”

சிவ வாக்கியார் : 05

“என்னிலே யிருந்தவொன்றை யானறிந்த தில்லையே
என்னிலே யிருந்தவொன்றை யானறிந்து கொண்டபின்
என்னிலே யிருந்தவொன்றை யாவர்காண வல்லரோ
என்னிலே யிருந்து யானுணர்ந்து கொண்டேனே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.

“என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யார் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.”

அதாவது, என்னில் இறைசக்தி இருந்ததை அறியாமல் இருந்திருக்கின்றேன், அதை நான் அறிந்துகொண்டேன். ஆனால், என்னைத் தவிர யாருக்கு அதைச் சொல்லமுடியும், யார் காணமுடியும், என்னில் என்ன இருக்கின்றது என்பதை நான் உணர்ந்து கொண்டேன் என்பது பாடலின் பொருள்.

பரம்பொருள் என்பது எங்கோ தொலைதூரத்தில் வானத்தில் இருப்பது அல்ல, அதைச் சென்று அடையவும் முடியாது, பரம்பொருள் உன்னுள்ளே இருக்கின்றது அதை உணர்ந்துகொள் என்பது பாடலின் தத்துவம்.

அதாவது, தெய்வத்தினை அடையமுடியாது உணரமுடியும் என்பதைப் பொதிக்கின்றார். தெய்வத்தை உணர்வதே உன்னத படிநிலை உச்சநிலை என்கின்றார் சிவ வாக்கியார்.

தன்னை அறிதலே தன்னுள் இருக்கும் தெய்வத்தை உணர்தலே, தான் யாரென்று உணர்தலே ஞான நிலை எனப் போதிக்கின்றார்.

இதனை ஒளவையாரும் சொல்வார்.

“தன்னை யறியு மறிவு தனைப்பெறில்
பின்னைப் பிறப்பில்லை வீடு”

அதாவது, தன்னையே யார் என அறிந்து கொண்டால், நான் என்பது உடலா மனமா ஆத்மாவா என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொண்டால் அடுத்தப் பிறவி இல்லை, இந்தப் பிறவியே தான் யார் என்பதை அறிய கொடுக்கப்பட்டது என்பது குறளின் பொருளாகும்.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.” என இந்தத் தத்துவத்தை திருமூலர் திருமந்திரத்தில் சொல்வார்.

அப்பர் சுவாமிகளும் தன் பாடலில் சொல்வார்.

“தன்னில் தன்னை அறியுந் தலைமகன்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடில்
தன்னில் தன்னையும் சார்தற் கரியனே” என்பார்.

“என்னையே நானறிய இருவினையும் ஈடழித்து
தன்னை அறிய தலம் எனக்குச் சொன்னாண்டி” என்பது பட்டனத்து சித்தரின் தேடல் மொழி.

“தன்னை அறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்
தன்னை அறியாதவரே தன்னைக் காட்டுவார்” என்பது பாம்பாட்டி சித்தரின் அனுபவ மொழி.

ஆம், ஒவ்வொருவனும் தான் யார் என்பதை அறிந்தால் சிக்கலே இல்லை, உண்மையில் தான் யார் என்றால் என்ன?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பெயர் உண்டு, அந்தப் பெயர் உடலுக்கா ஆத்மாவுக்கா எனும் கேள்வி எங்கு எழுமோ அதுதான் “தன்னை அறிதல்” என்பதன் தொடக்கம்.

நான் என்பது உடல் என்றால் அது அழிய கூடியது, அப்படியானால் அது நான் அல்ல‌.

நான் என்பது ஆத்மவானால் அது பரம்பொருளில் இருந்து வந்து அங்கே கரையவும் கூடியது, அப்படியானால் நான் என்பது ஆத்மாவும் அல்ல‌.

அப்படியானால் நான் யார்?

நான் என்பது ஒன்றுமல்ல வெறும் மாயை, வானில் வந்து செல்லும் மின்னல் ஒளிபோல ஒரு மாயை, அதனை இயக்குவதும் நான் அல்ல, இயங்குபவனும் தான் அல்ல , தான் ஒன்றுமே இல்லை என அறியும் ஞானம்.

இந்த ஞானத்தைத்தான் “என்னை அறிவித்து எனக்கருள் செய்து” என விநாயகர் அகவலில் பாடினார் ஒளவை.

தான் ஒன்றுமில்லை எல்லாம் இறைவனின் இயக்கம் என அறிவதே ஞானம், தான் வேறு இறைவேறு இல்லை என்பதே உன்னத ஞானம்.

“அகம் பிரம்மாஸ்மி” என்பது அதுவே.

அதைத்தான் பாடுகின்றார் சிவ வாக்கியார்.

சிவ வாக்கியார் : 06

“நினைப்பதொன்று கண்டிலே னீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
அனைத்துமா யகண்டமா யனாதிமுன் னாதியாய்
யெனக்குள்நீ யுனக்குள்நா னிற்குமாற தெங்கனே.”

இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும்.

“நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்கு மாறு எங்கனே”

பரம்பொருளே நான் உன்னைப் புதிதாக நினைப்பதுமில்லை மறப்பதுமில்லை. அங்கே மாய விளையாட்டுக்களுமில்லை.

நான் எப்போதும் உன் நினைவில் இருப்பதால் மாயை என்னிடம் வருவதில்லை, உன்னை நினைத்து மறந்து பின் நினைத்து மறந்து பின் நினைக்கவேண்டிய அவசியமே இல்லாதபடி என்னில் நீ எப்போதும் நிறைந்திருக்கின்றாய்.

எல்லாவற்றுக்கும் ஆதி மூலமானவவனே, மகா தேவனே, இந்த அகண்ட பிரபஞ்சத்தின் தொடக்கமும் முடிவுமாய் இருக்கும் மகா பெரிய சக்தியே, உனக்குள் நான் இருப்பது முறை ஆனால் எனக்குள் நீ இருப்பது எப்படி? அந்தக் கருணையினை எண்ணி பணிந்து நிற்கின்றேன் என்பது பாடலின் பொருள்.

சிவ வாக்கியார் தன்னில் இறைவனைக் காண்கின்றார்.

இது மிக எளிதான தத்துவம், பானைக்குள் காற்று இருக்கின்றது, பானைக்கு வெளியிலும் காற்று இருக்கின்றது, அப்படி எங்கும் இருக்கும் இறைவன் தன்னிலும் இருக்கின்றார், பாலில் இடப்படும் சர்க்கரை பாலின் ஒவ்வொரு துளியிலும் கலந்துவிடுதல் போல தன்னோடும் கரைந்துவிட்டார் அதனை நான் உணர்ந்து கொண்டேன்.

தொடக்கமும் முடிவுமில்லா அந்தப் பெரும் ஞானசக்தி என்னிலும் உண்டு அந்தக் கருணையே கருணை எனப் பாடுகின்றார்.

இறைவனில் எப்போதும் கலந்திருக்கும் நிலையினைச் சொல்கின்றார் சிவ வாக்கியார், எப்போதும் இறைநினைவில் இருப்போர்க்கு வேறு நினைவு இல்லை, அந்நேரம் மாயைகளோ லௌகீக ஆசாபாசங்களோ அந்த மனதில் எழாது.

முப்போதும் எப்போதும் இறைநினைவில் இருத்தலே பூரணமான சித்தநிலை, பரிபூரண ஞான நிலை என்பதைச் சொல்கின்றார் சிவ வாக்கியார்.

இதைத்தான் மாணிக்க வாசகரும் தன் பாணியில் பாடுகின்றார். இமைப் பொழுதும் உன்னை நான் மறக்கவில்லை சிவனே, ஒரு நொடிக் கூட நீங்காமல் நீ என் நெஞ்சில் இருக்கின்றாய் என உருகிப் பாடுகின்றார்.

“இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி யாண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமமாகி நின்றண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க”

சிவ வாக்கியாரும் மாணிக்கவாசகரும் ஒரே ஞான நிலையில் பாடுகின்றார்கள்.

மாணிக்க வாசகர் இன்னும் பாடுகின்றார்.

“உடையாள் உந்தன் நடு இருக்கும்,
உடையாள் நடுவில் நீ இருத்தி அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்பதானால் அடியேன் உன்
அடியார் நடுவுள் இருக்கும்
அருளைப் புரியாய் அம்பலத்து எம்
முடியா முதலே என் கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே!”

சிவ பெருமானோடு பார்வதி இருக்கிறாள், பார்வதியோடு சிவ பெருமான் இருக்கிறான். சிவம் – சக்தி மயம், சக்தி – சிவ மயம்.”சிவமும் சக்தியும் என்னோடு இருப்பதானால், நான் உங்கள் பக்தர்களோடு இருப்பதற்கு அருள் புரிவாயாக” என்று வேண்டுகிறார்.

சிவமும் சக்தியும் ஒன்றாக இருக்கிறார்கள். அவர்கள் மாணிக்க வாசகரோடு இருக்கவிரும்புகிறார்கள். அப்படித் தம்மோடு அவ்விருவரும் இருக்க வேண்டுமானால், தாம் சிவ பக்தர்களோடு இருக்க அருள் தர வேண்டுமென மாணிக்க வாசகர் வேண்டுகிறார்.

அம்பலத்துக்கு வா என அவர் அழைப்பதுதான் இங்கே பொருள், சிதம்பரத்தில் அவன் ஆட்டத்தைத் திரையிட்டு மறைத்து ரகசியம் என்பார்கள்.

அப்படி ரகசியமாக ஏதுமில்லை. சிவன் நம்முள்ளே உண்டு அதை எல்லோரும் உணரலாம் என்பதே மாணிக்க வாசகரின் போதனைஹ

இறைவன் நமக்குள்ளே உண்டு என்பதை திருமூலரும் பாடுகின்றார்.

“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே”

தேனுக்குள் சுவை உண்டு, அந்தச் சுவை என்ன நிறம் உருவம் குணம் என யாரும் தேடுவார் உண்டோ, அப்படி இறைவனின் உருவம் குணம் எனத் தேடித்திரிவது அறிவற்ற செயல், மலருக்குள் தேனும் தேனுக்குள் சுவையும் இருப்பது போல இறைவன் ஒவ்வொருவர் உள்ளுக்குள்ளும் ஒளிந்திருக்கின்றான் என்பது பாடலின் பொருள்.

இடைவிடாமல் இறைவனில் நிறைந்திருப்பது பற்றி ஒளவையும் தன் ஞானக்குறளில் பாடுகின்றார்.

“இமையாத நாட்டத் திருந்துணர் வாருக்
கமையாத வானந்த மாம்”

அதவது இமைக்கும் நொடிக் கூட மறவாது மனதை உள்ளே செலுத்தி புருவ மத்தியில் நிறுத்தித் தியானிப்பவர்கள் அந்த ஜோதியைக் கண்டு தரிசித்து பேரானந்தம் அடைவார்கள்.

இதைத்தான் திருமூலரும், மாணிக்க வாசகரும், ஒளவையாரும் பாடியதைத்தான் தானும் பாடிப் போதிக்கின்றார் சிவ வாக்கியார்.

சிவ வாக்கியார் : 07

“மண்ணும்நீ விண்ணும்நீ மறிகடல்க ளேழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ யியைந்த பண்ணெழுத்தும்நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுளாடும் பாவைநீ
நண்ணுநீர் மைநின்ற பாதம் நண்ணுமா றருளிடாய்”

இப்பாடல் இப்படிப் பிரியும்.

“மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இயைந்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்”

பரபொருள்றே, இந்த மண்ணுலகும் அதில் உள்ள எல்லாமும் நீ, விண்ணும் அதிலுள்ள எல்லாமும் நீ, கத்துகின்ற ஏழு கடல்களும் நீ, எழுத்து எண் எனும் கல்வியும் அறிவுவமாக இருப்பதெல்லாம் நீ, இசை நீ, கண்ணும் கண்ணுக்குள் இருக்கும் மணியும் அதனுள் இருக்கும் பாவையும் நீ.

இப்படி எல்லாமுமாக இருக்கும் நீ, அவற்றையெல்லாம் எங்களுக்குத் தந்த நீ, அப்படியே உன்னை அடையும் வழியும் எமக்கு அருள்வாய் என்பது பாடலின் பொருள்.

பாடல் கொஞ்சம் ஆழமான மறைபொருளை உடையது.

இறைவன் இந்தப் பூமியாகவும் ஆகாயமாகவும் கடலாகவும் பிரபஞ்சமாகவும் உள்ளான், எல்லாம் அவனே. ஐம்பெரும் பூதங்களும் அவை கூடி எடுத்த எல்லாமும் அவனே.

இன்னும் அவனே வேதவடிவினன், அவனே எண்கள், அவனே எழுத்து எனும் வகையில் கல்வியும் அறிவும் அவனே ஆகின்றான்.

ஐம்பெரும் பூதத்தால் உருவான மானிட உடலிலும் அவனே, அதிலும் கண்ணும், கண்ணின் மணியும் மணியின் பாவமும் அவனே.

இப்படி எல்லா இடத்திலும் இருக்கும் இறைவனை மானிடர்கள் தன் உடலாலும் உள்ளத்தாலும் கல்வியாலும் பார்வையாலும் அறிந்து, இதெல்லாம் இறைவனின் வடிவம் எல்லாமே இறைவன் என்பதை உணர்ந்து மாயையில் சிக்காமல் இறைபாதம் நோக்கிச் செல்லவேண்டும் என்பது சிவ வாக்கியாரின் போதனை.

ஆத்மா மானிட உடலில் தங்கியிருப்பது ஞானப் பார்வை பெற்று எல்லாமே இறைவடிவமே என்பதை உணர்ந்து இறைபாதம் நோக்கிச் செல்லவே என்பது சிவ வாக்கியார் வரி.

“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”

என மாணிக்கவாசகர் இதைத்தான் பாடிப் போதிக்க்ன்றார்.

“ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவாறிப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே”

என அபிராமிபட்டர் பாடியதும் இதுதான்.

“மந்திரமாய்ப் பதமாகி வண்ண மாகி
வளர்க லையாய்த் தத்துவமாய்ப் புவன மாகி,
சந்திரனாய் இந்திரனாய் இரவி யாகித்
தானவராய் வானவராய்த் தயங்கா நின்ற
தந்திரமாய் இவையன்றும் அல்ல வாகித்
தானாகித் தனதாகித தான்நான் காட்டா
அந்தரமாய் அப்பாலாய் அதற்கப் பாலாய்
அப்பாலுக் கப்பலாய் அமர்ந்த தேவே”.

என வள்ளலார் சொல்லும் பாடலும் அதேதான்.

“உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
முடம்பினி லுத்தமனைக் காண்”

என்பது ஒளவையின் ஞானக்குறள்.

நாம் இந்த உடம்பினைப் பெற்றிருக்கிறோம். இதனைப் பெற்றிருக்கும் பயன் (காரணம்) எல்லாமே நம் உடம்பினுள் இருக்கும் உத்தமனை அந்த இறைவனைக் காண்பதற்காகவே ஆகும் என்பது அவள் போதனை

அதைத்தான் இங்குப் பாடிச் சொல்கின்றார் சிவவாக்கியார்.

சிவ வாக்கியார் : 08

“அரியுமல்ல வயனுமல்ல வலப்புறத்தி லப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்து நின்றகாரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமுங் கடந்துநின்ற தூரதூர தூரமே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.

“அரியுமல்ல வயனுமல்ல வலப்புறத்தி லப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்து நின்றகாரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமுங் கடந்துநின்ற தூரதூர தூரமே”

அந்த மகாசக்தி அரி எனும் பெருமாளும் அன்று, அயன் எனும் பிரம்மனும் அன்று, இடப்புறம் சக்திக்கு கொடுத்து வலப்புறம் அமர்ந்த சிவனும் அன்று, அது ஆதி அந்தம் காணமுடியா மகா சக்தி என்பதுமன்று, அது மிகப் பெரியதாக எங்கோ தொலைவில் இருப்பது அன்று.

அது உங்களிடமே இருக்கின்றது, அது தொலைவில் அன்று. உங்கள் தலைக்கு மேல் துரிய சக்கரத்தில் இருக்கின்றது, துரிய சக்கரத்தில் இருக்கும் ஒன்றைத்தான் தொலைவில் எங்கோ தேடுகின்றீர்கள் என்பது பாடலின் பொருள்.

“ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா(த) அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.”

இது நம்மாழ்வார் பாடல், அந்த ஆழ்வார் இறைவனின் தன்மையினை விளக்குகின்றார். இறைவன் என்பது ஒரு மகாசக்தி, அந்த மகாசக்தியினை மாந்தர்கள் புரிந்துகொள்ள அவர்களின் பலவீனமான இயலாமையின் பொருட்டு, மிகச்சிறிய புரிந்துகொள்ளும் சக்தியின் பொருட்டு புரியவைக்க ஆண்,பெண் எனப் பெயரிட்டு அழைக்கின்றோம்.

உண்மையில் அந்தச் சக்தி ஆணும் அன்று, பெண்ணும் அன்று, இரண்டும் கலந்த அலியும் அன்று, அது ஒரு மகா சக்தி என ஆழ்வார் பாடுகின்றார்.

எம்பெருமான் ஆணுமல்லன், பெண்ணுமல்லன் இவ்விரண்டுமல்லாத வகையும் அல்ல, அவன் பார்க்கவும் முடியாதவன், இருப்பவனுமன்று இல்லாதவனுமன்று.

அவன் தன் அடியார் விரும்பின காலத்து அவர்கள் விரும்பின வடிவை எடுப்பவனாவான் என்கின்றார்.

இன்னும் பல இடங்களில் இதனைக் காணமுடியும், திருமூலர் பாடுகின்றார்.

“பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்
உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே”

அந்தப் பரம்பொருள் பெண், ஆண், பேடு என்ற பாகுபாடு உடையது அன்று. அண்ட கோசத்தால் மூடியிருக்கும்போது உள்நின்ற சோதியை ஒருவராலும் அறிய இயலாது. அது கண் ஆகிய கருவியின்றிப் பார்க்கும். காதாகிய கருவியின்றிக் கேட்கும்.

ஜோதிக்குள் ஜோதியாய் விளங்கும் இறைவன் பெருமையை ஆராய்ந்து உணர்ந்து அறிந்ததே மூத்த ஞானமாம்.

இறைவன் என்பது ஒரு வடிவமன்று, அது மானிட உடல்போல் சுபாவம் கொண்டதுமல்ல, அந்த மகா சக்தி எங்கோ தொலைவில் இருப்பதுமன்று, அது நம்மிலே உண்டு, உச்சசக்கரம் துலங்கும் போது அந்த இறைவனை நம்முள்ளே உணரலாம் என்பது போதனை.

ஒளவையார் சொல்கின்றார்.

“பெண்ணா ணலியென்னும் போரொன் றிலதாகி
விண்ணாகி நிற்கும் வியப்பு”

அந்தப் பரம்பொருள் என்பது ஆணும் அல்ல பெண்ணும் அல்ல இரண்டும் அல்லாத திருநங்கை (அலியும்) அல்ல அது பிரபஞ்சம் முழுக்க பரந்து வியாபித்திருக்கும் பெரும் சக்தி என்பது பொருள்.

இதைத்தான் பல ஞானியர் ரிஷிகள் பாடியதைத்தான் சிவ வாக்கியாரும் பாடி விளக்குகின்றார்.

சிவ வாக்கியார் : 09

“அந்திகால முச்சிமூன்று மாடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களுந் தபங்களுஞ் செபங்களும்
சிந்தைமேவு ஞானமுந் தினஞ்செபிக்கு மந்திரம்
சிந்தைராம ராமராம ராமவெனும் நாமமே’

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.

“அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப்பணங்களும் தவங்களும் ஜெபங்களும்
சிந்தை மேவும் ஞானமும் தினம் ஜெபிக்கும் மந்திரம்
சிந்தை ராம ராம ராம என்னும் நாமமே”

காலை மதியம் மாலை என பொழுதுகளில் நீராடி நியமங்கள் விதிகளின் படி இருந்து, தர்ப்பணங்கள் செய்து தவம் செய்து ஜெபங்களைச் செய்து பூஜைகளுடன் மந்திரங்களைச் சொல்லி சிந்தை முழுக்க பரம்பொருளை எண்ணி நின்றால் வரும் பலன், ஸ்ரீ ராமன் பெயரைச் சொன்னாலே வரும், ராம ராம ராம எனச் சொன்னாலே முழுக்கக் கிடைக்கும் என்பது பாடலின் பொருள்.

ராமநாமம் என்பதன் சக்தியினைச் சொல்கின்றார், எல்லா இயம நியம சரியை கிரியை தவம் மந்திரம் என மிகுந்த ஆச்சாரமாக கிடைக்கும் ஞானபலனை ராம நாமம் கொடுக்கும் என்கின்றார்.

இங்கே ஒரு கேள்வி எழலாம், ஒரு சிவனடியார் சிவவாக்கியர் எனும் பெயர் கொண்டவர் எப்படி ராமனை பாடச் சொன்னார் என்பது.

இந்துமரபில் எப்போதும் சைவம், வைணவம் எனும் பேதமெல்லாம் இருந்ததில்லை. நதி இரண்டாகப் பிரிந்து கடலை நோக்கி செல்வது போல, ஒரே ஊருக்கு இரு சாலைகள் செல்வது போல அது வழி செய்திருந்தது.

ஹரியும் சிவனும் ஒன்று என்பதே ஞானியர் போதனை

இங்கே ராமன் என்பது பெயர் அன்று, மந்திரம். ராம பிரானின் பக்தியில் மிக மிக முக்கியமானது அந்த ராம நாமம்.

ராம நாமம் என்பது ஒரு மந்திரம், அதைச் சொல்ல சொல்ல உடலின் நாடிகள் துலங்கும், உடலின் சூட்சுமச் சக்கரங்கள் துலங்கும்.

அதனாலே பகவான் பெயரைச் சொல்லி நாடெங்கும் “ராம” பக்தியினை வளர்த்த ஆன்மீக பூமி இது, அந்தப் பெயரைச் சொல்ல வைக்கும் முயற்சியாக பகவானே ராம அவதாரமாக இறங்கி வந்தார்.

இந்துஸ்தானமும் ராம நாமமும் பிரிக்கமுடியாதவை, ராம நாமம் என்பது அப்படி மந்திர சக்தி சூட்சுமச் சக்தி நிறைந்தது.

இதனாலே வால்மிகீ முதல் சமர்த்த ராமதாஸர், தியாக பிரம்மம் இன்னும் காஞ்சி மகாபெரியவர் போன்றோரெல்லாம் ராம நாமத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தவர்கள்.

ராம நாமம் சொல்ல சொல்ல ஒருவனுக்கு மாயை விலகும், தன் பலம் தெரியும், அவன் மிகபெரிய ஞானியாக பராக்கிரமசாலியாக அழியா இடம் பெறுவான்

அனுமன் அதற்குப் பெரிய உதாரணம்.

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”

என்பான் கம்பன்.

ராம நாமத்தின் பெருமை வேத சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

“ய ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர சுசி
மானஸம் வாசிகம் பாபம் ஸகுபார்ஜிதம்
ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்சய
ஸ்ரீ ராம ராம ராம”

ராமனின் நாமம் எல்லாப் பாவத்தையும் போக்கி ஒருவனை சாபத்தில் இருந்து கர்ம வினையில் இருந்து விடுவித்து சுத்தமாக்கும் சக்தி கொண்டது என்பது பொருள்.

இன்னும் ராமநாமத்தின் பெருமை எல்லா இடங்களிலும் உண்டு, அம்புப்படுக்கையில் கிடந்த பீஷ்மர் தன் விஷ்ணு சகஸ்ரநாமத்தை சொல்லும் போது ராமனின் பெருமைகளை எடுத்துச் சொல்கின்றார்.

“ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே”

இந்த ஸ்லோகத்தை அதாவது ராமநாமத்தை சொன்னால் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுக்கப் படித்த பலன் உண்டு என்பது சிவபெருமானின் உபதேசம்.

வால்மிகீ முதல் தியாகராயர் வரை இன்னும் ஏராளமானோரை ராம நாமத்தால் அதை ஒன்றே சொன்னதால் பெரும் ஞானியரானதைக் காணமுடியும்.

ராம மந்திரமும் ராம பாடல்களும் வெறும் சம்பிரதயமோ பெயர்களோ அல்ல, அது சூட்சும மந்திரம் அதைச் சொல்ல சொல்ல நாடிகளெல்லாம் துலங்கும்.

அதைத்தான் இங்கே சொல்கின்றார் சிவ வாக்கியார், அதனாலேதான் இந்துக்கள் ராமன் பெயரை பாடவும் எழுதவும் இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கவும் வழி செய்தார்கள்.

ராம நாமம் ஒலிக்க ஒலிக்க இத்தேசம் ஞானமும் அறிவும் கொண்டு வாழ்ந்தது அவ்வாறே, அதை ஒழிக்க அயோத்தி ஆலயம் மறைக்கப்பட முடிந்ததும் இந்த மறைமுக பின்னணியே.

பின் ஸ்மார்த்த ராம்தாஸர் “ராம ராம ராம” என முழங்கத் தொடங்கி அவரைப்போல் தியாகராசரும் இன்னும் பலரும் ராமநாமமே விடிவு தரும் என அந்த நாமத்தைப் பிடித்து அதை மட்டும் பிரார்தித்து பெரும் எழுச்சி கொடுத்ததும் வரலாறு.

சீக்கியர்களின் ஸ்தாபனர் குருநானக் இதே ராமநாம வழிபாட்டை வற்புறுத்தினார், சீக்கிய வழிபாட்டிலும் இது உண்டு.

ஆம், ராமா என்பது பெயர் அல்ல, அது மந்திரச்சொல், ஆலயம் வழிபாடு ஊர்பெயர், நாட்டின் பெயர் , ராமஜெயம் என எல்லா இடத்திலும் இந்துக்கள் ராமன் பெயரை புகுத்தியதில் இந்த மந்திரச் சொல்லை உச்சாடனத்தை மானிடர் அவர்களை அறியாமலே செய்ய வேண்டும் எனும் சூட்சுமத் தந்திரம் இருந்தது.

அதைத்தான் அது மட்டும் போதும் என்றுதான் ஸ்மர்த்த ராமதாசருக்கும், தியாகராயருக்கும், கம்பனுக்கும் இன்னும் பலருக்கும் முன்பே பாடிவைத்தார் சிவவாக்கியார்.

சிவ வாக்கியார் : 10

“சதாவுபஞ்ச பாதகங்க ளைத்துரந்த மந்திரம்
இதாமிதாம நல்லவென்று வைத்துழலு மோழைகாள்
சதாவிடாம லோதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாமிதாம ராம ராமராம ராமவென்னும் நாமமே”

இப்பாடல் இப்படிப் பொருள் தரும்.

“சாதாவும் பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
இதாம் இதாம் நல்லவென்று வைத்து உழலும் மோழைகாள்
சாத விடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம் ராம ராம ராம ராம என்னும் நாமமே”

எல்லாப் பாவங்களயும், பஞ்ச பாதககம் எனும் காமம்(ஆசை), குரோதம்(கோபம்), லோபம் (சுயநலம்), மதம் (கர்வம்), மாற்சரியம்(பொறாமை) எனும் பெரிய பாவங்களையும் செய்துவிட்டு அதன் பாதிப்பில் இருந்து தப்ப அந்த மந்திரம் கைகொடுக்குமோ இந்த மந்திரம் கைகொடுக்குமோ எனப் பல மந்திரங்களை தேடும் அறியாமை மிக்க மாந்தர்கள், இடைவிடாமல் ஓதினால் எந்த மந்திரம் எல்லாக் காலத்திலும் உயர்வினைக் கொடுக்கும் என்றால் அது ராம ராம எனும் மந்திரமே என்கின்றார்.

ராம ராம எனும் மந்திரம் எல்லாப் பாவங்களையும் போக்கிவிடும் என்பது சிவ வாக்கியார் சொல்லும் போதனை, இந்துக்களின் பெரும் ஞானமரபும் சொல்வது அதுதான்.

இந்தப் போதனையினைப் பார்க்குமுன் ஒரு புராணக் கதையினைக் கண்டால், அதன் தாத்பரியத்தைக் கண்டால் இப்பாடல் எளிதில் புரியும்.

சிவன் பிரம்மனின் ஐந்தாம் தலையினைக் கிள்ளி அந்தப் பாவத்தால் பெரும் சாபம் பெற்று அந்த மண்டை ஓட்டுடன் ஊரெல்லாம் நாடெல்லாம் சுற்றித்திரிந்த கதை எல்லோரும் அறிந்தது.

அப்படியான கோலத்தில் அவர் காசிக்கு வந்தபோது அவர் பாவம் நீங்கி, அவர் கையில் இருந்த கபாலம் கழன்றது, அவர் பாவமுக்தி பெற்றார்.

எந்த இடத்திலும் நடக்கா அதிசயம் அங்கே நடந்ததென அவர் மகிழ்ச்சியும் சில குழப்பங்களும் கொண்டிருந்தார், ஏராளமானோர் அங்கே முக்தி வேண்டி, பாவ பரிகாரம் வேண்டி தவமிருப்பதையும் அறிந்தார்.

அதன் உண்மை தெரியாமல் அவர் சற்றுக் குழம்பியபோது பிரம்மனும் பெருமாளும் அவருக்கு ஒரு உபதேசத்தைச் சொன்னார்கள்.

பெருமாள் அவருக்குச் சில உண்மைகளைச் சொன்னார்கள்.

இந்த இடம் பாவம் நீக்கும் இடம், ஆனால் அந்தப் பாவம் தீர ராமநாமம் மிக அவசியம் , “சிவனே, இனி கங்கைக் கரையில் சரீரத்தை விடுவோர் காதில் இம்மந்திரத்தை உபதேசித்திடுவீர். இதன் பயனாக அவர்களும் முக்தியைப் பெறுவார்கள், உமது எண்ணமும் ஈடேறும்” என்று கூறி மறைந்தார்.

அன்று முதல் இன்று வரை சிவன் காசியில் மரணடைபவர் காதில் ராமநாமத்தை ஓதி அவர்களுக்கு முக்திபேற்றைக் கொடுத்து மகிழ்கின்றார் சிவன்.

இன்றும் காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது ( சப்தரிஷி பூஜையின் போது )
ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

அப்படியானது ராம பிரானின் தாரக மந்திரம்.

அதுதான் கொள்ளைக்கார பாவியாய் இருந்த வால்மீகியினைப் பெரும் ஞானி ஆக்கிற்று, இன்னும் பலரை அது பெரும் பெரும் பாவத்தில் இருந்து மீட்டது.

வாலியும், மாரீசனும், ராவணனும் அப்படித்தான் ராம நாமத்தைக் கடைசியில் சொல்லிப் பாவ மன்னிப்புப் பெற்றார்கள்.

அப்படியான மகா சக்தி மிக்கது ராம நாமம்.

காசியில் பிரம்மனும் விஷ்ணுவும் சிவனுக்குப் போதித்ததும் இன்றும் காசி ஆலயத்தின் மாலை பூஜையில் சிவன் காதில் ஓதப்படுவதும், அங்கே கங்கையில் பாவ மன்னிப்பு பெற மூழ்கும் ஒவ்வொருவரும் சொல்லும் ஸ்லோகம் இதுதான்

“யதா வர்ணயத் கர்ண மூலேந்தகாலே
ஸிவோ ராம ராமேதி ராமேதி காஸ்யாம் |
ததேகம் பரம் தாரகப் ரஹ்மரூபம்
பஜேஉஹம் பஜேஉஹம் பஜேஉஹம் பஜேஹம் ||”

அதாவது காசியில் மரணமடைந்த மானுடனுக்குக் காதில் அவாஸன காலத்தில் விஸ்வேஸ்வரன் மூன்று முறை ராம ராம ராம என்று எதை உபதேசிக்கிறாரோ அப்பேற்பட்ட பிரம்ம‌ ரூபமான தாரக மந்திரத்தை நான் சேவிக்கின்றேன்.

இப்படியான மகா பிரசித்தியான ராம நாமம் எல்லாப் பாவங்களையும் போக்கும், பாவ பரிகாரத்துக்கு அதைவிட சக்திவாய்ந்த மந்திரம் இல்லை என்கின்றார் சிவ வாக்கியார்.