நாச்சியார் திருமொழி : 79

நாச்சியார் திருமொழி : 79 ( பாசுரம் 10.5)

ஆண்டாளுக்கு மிகப் பெரிய குழப்பம் அதிகரித்தது, அப்படியே அது வருத்தமாயிற்று, அவளால் வெளியில் செல்ல முடியவில்லை. காரணம் கோவைக்கனி, முல்லை மலர் என எதைக் கண்டாலும் கண்ணன் நினைவு அவளை ஆட்டிவைத்தது, அதைக் கண்டு அவை அவன் நினைவில் மூழ்குவதும் அந்த மாயவன் வந்து அவளிடம் பேசிவிட்டு ஏங்க வைத்துவிட்டு செல்வதும் அதிலிருந்து அவள் வெளிவரமுடியாமல் அவன் நினைவில் போராடுவதும் அவளுக்கு மிகக் கொடிய துன்பமாயிற்று.

அதனால் அன்று எங்குமே செல்லக் கூடாது, எதையுமே பார்க்கக் கூடாது, அப்படிப் பாத்தால் தானே அவன் நினைவு வரும், யாருடனும் பேசினால்தானே அவன் நினைவு வரும் அதனால் யாரையும் பார்க்கமாட்டேன் எதையும் பார்க்கமாட்டேன் என அவள் வீட்டின் மாடியில் கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.

அவள் எங்கும் செல்லவில்லை, கண்களையும் மூடிக்கொண்டாள் என்ன ஆனாலும் சரி இப்படியே தவமிருந்து மனதை கட்டுப்படுத்தி வெளிவந்துவிடவேண்டும், அவன் நினைவு எனும் மாயையில் இனி விழக்கூடாது என வைராக்கியமாக அமர்ந்திருந்தாள்.

அந்த நிசப்தம் பெரிதாய் இருந்தது, மெல்லிய தென்றல் வீசிக்கொண்டிருந்தது, அந்த இனிமையான தென்றலில் மெல்லியதாக குயிலோசை கேட்டது, இன்னும் இன்னும் அழகாக இனிமையாகக் கேட்டது. அதைக் கேட்டதும் அவன் நினைவு மீண்டும் விஸ்வரூபமானது, அவன் முகமும் சிரிப்பும் அவளைப் பாடாய்ப் படுத்தியது.

“பாடும் குயில்காள்! ஈதென்ன பாடல்? நல் வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுகள் கேட்டுமே”

சொன்னவள் அப்படியே கண்ணை மூடி அமர்ந்திருந்தாள், அவள் மனம் கொதிப்பாக இருந்தது, அவன் நினைவிலும் ஆசையிலும் அதே நேரம் இவனிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது எனும் வைராக்கியத்திலும் இருந்தாள்.

அது கூவ கூவ அதன் இசைமொழி தன் காதில் விழ விழ இன்னும் வைராக்கியமானவள் தனி உலகுக்கே தன்னை அறியாமல் சென்றாள்.

கண்களை மூடலாம், மூக்கைப் பிடித்துக் கொள்ளலாம், கைகளைக் கால்களை இறுகக் கட்டிக் கொள்ளலாம். ஆனால், காதை மூட முடியாது அந்தத் தவமாய்க் கொண்டு அவள் சிந்தனையினை ஒடுக்கி ஆழ்ந்தாள். நினைவினை ஒரு புள்ளியில் குவித்து தன்னை மறந்தாள், முழுக்க மறந்தாள், எங்கோ செல்வது போல் அவள் மனம் கரைந்து கொண்டிருந்தது.

ஆனால், அந்நேரம் குயிலோசை இன்னும் இன்னும் அதிகமாகக் கேட்டது, ஒரு கட்டத்தில் அது காதோரம் கேட்க கண் விழித்தாள் ஆண்டாள் அங்கே ஒரு குயில் அமர்ந்திருந்தது.

அது அவள் முகத்தை உற்றுகாநோக்கி கொண்டே இருந்தது, மெல்ல அதை நோக்கி புன்னகைத்தாள் ஆண்டாள் அது மெல்ல பேசிற்று “ஆண்டாளே” என்றது.

நீலக்கருமேனி நிறம் மினுமினுக்க, சிவந்த குன்றுமணிகளைப் போல சிறு கண்களுடன் அந்தக் குயில் அவள் முன் அமர்ந்திருந்தது. ஆச்சரியமாக அதனை நோக்கினாள், மைனா பேசும் கிளி பேசும், ஆனால் குயில் பேசுவதை அப்போதுதான் கண்டாள்.

“எங்கள் குரலை எல்லோரும் விரும்புவார்கள் ஆனால் என்னை நோக்கிப் பாடாதே என்றாயே என்னதான் உனக்கு சிக்கல்? உனக்கு என்ன அப்படிப் பெரிய வெறுப்பு” என்றது குயில்.

ஆண்டாள் புலம்ப யாருமில்லாததால் தன் கவலையெல்லாம் அதனிடம் புலம்பினாள்.

“நான் ஒன்றும் பாடவேண்டாம் எனச் சொல்லவிலலை குயிலே, எனக்கு இப்போது உங்கள் குரலை கேட்டால் வேதனையே மிஞ்சுகின்றது, நோயுற்று கிடப்பவர் காதில் விருந்துவகை பெருமை பேசினால் எப்படி? தாகத்தில் சிக்கியிருப்பவரிடம் வந்து தீஞ்சுவை கனிச்சாறு பற்றிச் சொன்னால் எப்படி? ஏழ்மையில் கிடப்பவனுக்கு ராஜவிருந்தை சொன்னால் எப்படி அப்படித்தான் பெரும் வேதனையில் இப்போது நான் இருப்பதால் வேண்டாம், பின்னர் ஒருநாள் வந்து பாடுங்கள்.

அது எந்தநாள் ஆண்டாளே?

அதைத்தான் பாடினேனே, அந்தத் திருவேங்கடவன் எப்போது வருவானோ அந்த நாள்?

அவன் வரும் நாளை சொல்லவில்லையா?

இல்லையே. அதுதானே என் பெரும் கவலை, அவன் சொல்லிகாகொண்டு வருபவன் அன்று?

என்ன குழப்புகின்றாய் ஆண்டாளே?

ஆம், அவன் என்னைக் குழப்புகின்றான், நான் உன்னை குழப்புகின்றேன், அவனாக தேடித்தான் நம்மிடம் வருவான், நாமாக அவனைத் தேடிச் செல்லமுடியாது”

சொன்னவள் முகத்தில் சோகம் பெரிதாய்ப் படர்ந்திருந்தது, அதனைக் கண்ட குயில் சொன்னது “வருந்தாதே, அவன் ஒருநாள் நிச்சயம் வருவான், அப்போது நான் உன்னிடம் வந்து மகிழ்ச்சியாய்ப் பாடுகின்றேன்”

“அவன் வருவான் என எனக்கும் தெரியும் ஆனால் எப்போது சித்தம் வைத்து என்று வந்து சேருவான் என்பது அவனையன்றி யாரும் அறியவும் முடியாது, அப்படி அவன் வரும்போது வந்து பாடு, அது பாலில் கலந்த தேன் போல் என்னை இனிமையாக்கும், இப்போது இந்தத் துன்பத்தில் நீ பாடினால் எனக்கு அது நெருப்பில் இட்ட நெய்போல் இன்னும் இன்னும் துன்பத்தை வளர்க்கும்.

இப்போதும் நான் உன் கரும் நிறத்தில் அவனைக் காண்கின்றேன், உன் குரலின் இனிமையில் அவன் புல்லாங்குழலை காண்கின்றேன்” என்றவள் முகத்தை மூடிக் கொண்டாள்.

அந்த மாடத்தின் தாழ்வாரத்தில் மெல்லிய காற்று அவள் கூந்தலைக் கலைத்துப் போட்டபடி இருக்க முகத்தை மூடிக்கொண்டு சொன்னாள் “அவனை நான் கண்களில் இருந்து அகற்றலாம், பேச்சில் இருந்து அகற்றலாம், காதினைகா கூட மூடிகா கொள்ளலாம், ஆனால் என் நெஞ்சில் இருந்து எப்படி அகற்றுவேன்?”

“ஏன் ஆண்டாளே முடியாதா?” என்றது குயில்.

‘அவன் என் சிந்தையில் ரத்தத்தில் நினைவில் மொத்தத்தில் என்னில் கலந்துவிட்டான் எப்படி அகற்றுவது?” என்றாள்.

“அப்படியானால் நான் பாடவில்லை, ஆனால் அவன் வரும்போது நான் கண்டிப்பாய்பா பாடுவேன், ஆனால் அவன் வருவதை நான் எப்படி அறிவது?” என்றது குயில்.

“அவன் கருடக் கொடி பறக்க வருபவன், கருடன் மேல் வருபவன், எப்போது கருடக் கொடி பறக்க ஒருவன் வருவானோ, பெரிய கருடன் ஒருவனைச் சுமந்தபடி இங்கு வருமோ அந்த நாள் எனக்கான நாள் என நீ அறிந்துவரவேண்டும்” என்றாள்.

“அப்படியானால் நீ கருடனைத்தான் எதிர்பார்க்கின்றாய்” என்றது குயில்.

“அவன் கருடவாகனன் என்பதால் கருடக்கொடி கொண்டிருப்பவன் என்பதால் வேறு எங்குதான் எதிர்பார்க்கமுடியும்?” என்றாள்.

“உன்னைக் காணவரும்போது அவனுக்கு ஏன் கொடி ஆண்டாளே? என்றது குயில்.

“ஒரு அரசன் தன் அதிகாரத்தை, தன் பலத்தைகாட்டும் போது அதுவும் தனக்குரியவற்றை பெறும் போது கொடியோடுதான் செல்வான், அது அவனின் பராக்கிரமத்தைக் காட்டுவது.

அப்படி என்னைக் காணவும் அவன் கொடியோடுதான் வரவேண்டும், அதுதான் அவனுக்கும் பெருமை எனக்கும் பெருமை” என்றாள் ஆண்டாள். தொடர்ந்தாள்.

“குயிலே, அந்தக் கருடன் காஸ்யபர் மகனாகப் பிறந்து தன் தவத்தால் அவனைச் சுமக்கும் வரத்தை அடைந்தது ஒரு இடத்தில் கூட அவனை விட்டு அது பிரியவில்லை, எல்லா அவதாரத்திலும் அது கூடவே அவதாரமாய் வந்தது, ஆனால் அவன் நரசிம்மமாய் வந்தபோது மட்டும் அதனைப் பிரிந்துவந்தான்.

அப்போது அது தவித்துப்போனது கலங்கிப் போனது, அந்தச் சில நாழிகை கூட அவனைக் காணாத கருடன் அவன் நரசிம்ம கோலத்தை காண தவமிருந்தது, அதன் பக்திக்கு மெச்சிய பகவான் அதனைத் தன் கொடியில் வைத்துக் கொண்டார்.

இப்போதும் திருவேங்கடம் முதல் பல ஆலயங்களில் அவன் கொடிதானே பறக்கும், கருடன் பறக்கும் கொடிதானே அவனுக்கான சிறப்புக்களைச் சொல்லும்.

நானும் அந்தக் கருடனைப்போலவே ஏங்கிக் கிடக்கின்றேன், இன்னும் இன்னும் தவமிருக்கின்றேன், என் மனமெல்லாம் என் சிந்தையெல்லாம் அவனை மனதால் சுமக்கவேண்டும் என்ற எண்ணமன்றி வேறல்ல, கருடன் பகவானை உடலால் சுமப்பதுபோல் ஒரு நொடி அவனைப் பிரியாமல் இருப்பதுபோல் நானும் அவனை மனதால் சுமக்கும் வரம் வேண்டித் தவமிருக்கின்றேன்.

கருட பக்திபோல் என் பக்தியும் துலங்கவேண்டி அப்படி அவனைத் தேடினேன்” என்றவள் மனமுடைந்து குரலுடைந்தாள்.

அவளின் பெரும் துயரம் கண்டு குயில் மெல்லக் கேட்டது, அவனின்றி நீ வாழமாட்டாயா? அவனை அவ்வளவு பிடிக்குமா?

“குயிலே! என் கண்ணனைத் தேடி ஏங்கி ஏங்கி நான் மிகவும் சோர்ந்துவிட்டேன், என்னால் முடிந்த அளவு அவனைத் தேடி தேடி என் கால்கள் ஓய்ந்துவிட்டன, எனக்கு மட்டும் சிறகு இருந்தால் அவனைப் பறந்து பறந்து தேடி அவன் பாற்கடலுக்கே சென்றிருப்பேன் அல்லது திருவேங்கடத்துக்காவது சென்றிருப்பேன். ஆனால், உனக்கிருக்கும் சிறகு எனக்கில்லையே!

என்னைப்போல் சோகம் நிறைந்த குயிலே, நீ பறந்து செல்லுமிடமெங்காவது அவனைக் கண்டால் என்னிடம் சொல்வாயா?

அவன் சாதாரணம் அல்ல, எல்லோரையும் போல் அவனை எண்ணாதே? நீ எத்தனையோ இடங்களுக்குப் பறப்பாய் அல்லவா? அங்கே கீர்த்திமிக்க அரசர்களைக் காண்பாய், பெரும் சக்கரவர்த்திகளைக் காண்பாய். ஆனால் அவர்களெல்லாம் காலத்தால் மங்கி போவார்கள்.

காலத்துக்கு முந்தையவனும், காலமெல்லாம் நிலைத்தவனும், காலத்துக்கே காலம் வைக்கும் நித்தியமானவன் அவன், அவனே என் மன்னன்.

அவன் எனக்கு மட்டும் மன்னன் அன்று, இந்தப் பிரபஞ்சத்துக்கே மன்னன், எல்லா லோகத்தின் அதிபதி அவனே. மன்னனுக்குரிய பட்டத்து வாகனம் அந்தக் கருடன், அவன் மற்ற மன்னர்களைப் போல யானையில் குதிரையில் வருபவன் அன்று, பெரிய கருடனில் கம்பீரமாக வரும் மன்னன், அவன் கருடக் கொடி மிக மிக அழகானது.

நீ வானில் பறக்கும் போது எங்காவது கருடனில் அவன் தென்பட்டால் எனக்காக ஒன்றைச் சொல்வாயா?

அவன் என்னை அவனோடு அழைத்துச் செல்வதாகச் சொல்லி ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றான், நானும் அவனைத் தவிர ஏதும் அறியாதவளாக வளர்ந்துவிட்டேன், அவன் என்னை அடிக்கடி வந்து சந்திப்பான்.

இப்போதெல்லாம் அவன் வருவதில்லை, நொடிதோறும் அவனைக் காணத் துடிக்கும் நான், அவன் ஒருநாள் வராவிட்டாலும் வாடிவிடும் நான், அவனை நாள் கணக்கில் காணவில்லை என்றால் தாங்குவேனா?

நீரற்ற வயலில் பயிர்கள் வாடுவதைப் போல் வாடிவிட்டேன், இதோ பார் என் கைகளின் சங்கு வளைகள் தானே கழன்றுவிடும்படி மெலிந்துவிட்டேன்”

குயில் அவளை உற்று பார்த்தது.

எண்ணெய் பூசி வாரப்படாத தலை, குழிவிழிந்து காய்ந்த கண்கள், உலர்ந்த உதடுகள், ஒட்டிவிட்ட கன்னம், சரியாக துவைக்கபடாத ஆடை, மெலிந்த தேகம் என அவள் ஒரு பராரி அபலையாய்த் தெரிந்தாள்.

குழிவிழுந்த கண்களில் கண்ணன் எப்போது வருவானோ எனும் ஏக்கம் மட்டும் நிறைந்திருந்தது.

அவள் தொடர்ந்தாள்.

“நீ பல இடங்களுக்குப் பறப்பாய் அங்கே கருடன் பறந்துவர கண்டால் தயவு செய்து என் நிலையினைச் சொல்
கருடன் மேல் அமர்ந்து வரும் அவனை, பவளம் போல் சிவந்த வாயினைக் கொண்ட என் நாதனைக் கண்டால் என் நிலை சொல், அவன் காதில் விழும்படி என் சோகத்தைப் பாடு, என்னை அவனிடம் சேர்த்துவிடு குயிலே…” என தன் சோகத்தையெல்லாம் சொன்னாள்.

சொல்லி முடித்தவளுக்கு குரல் கொஞ்சம் விம்மிற்று, சோகம் நெஞ்சடைத்தது. கொஞ்சம் ஆசுவாசபடுத்தித் தொடர்ந்து சொன்னாள்.

“நான் கருடன் போல் அவனை என் உள்ளத்தில் தாங்கவேண்டும், அவனைப் போல் பகவானிடம் இணைபிரியாமல் இருக்க வேண்டும், அதற்கே தவமிருக்கின்றேன் என்பதைச் சொல்.

ஆகாயத்தில் இருந்தே எல்லாமும் உருவானது மறுபடி ஆகாயத்திலே எல்லாம் கலந்துவிடும் எனும் தத்துவப்படி நான் ஆகாயம் நோக்கி அவனுக்காய் காத்திருக்கின்றேன் என்பதைச் சொல்.

நீல வண்ணமாய் பரந்த வானமே அவன், அங்கே அவனில் கலந்துவிட தவித்துக் கொண்டிருக்கின்றேன் என்பதைச் சொல், அவனை ஏந்தி துதிக்க காத்துக் கொண்டே இருக்கின்றேன், அவனின்றி நான் இல்லை எனத் தவமிருக்கின்றேன்.

கருடன் அவனைக் கணநேரம் பிரிந்ததற்குத் தவமிருந்தான், அந்தத் தவத்துக்கு அஹோபிலத்தில் நரசிம்மனாய் அவன் தோன்றினான், நான் இவ்வளவு காலம் பிரிந்து என் நெஞ்சக் குகையில் அவனுக்காய்த் தவமிருக்கின்றேனே அவன் இன்னும் வரவில்லையே அது ஏன் எனக் கேட்டுச் சொல்”

“குயிலே! அந்த மாயன் நான் சொன்ன அடையாளத்தோடு இருப்பான், அவனருகே அந்தத் தவம்செய்த தேவி இருப்பாள். அப்படித்தான் கருடனில் அவன் வலம் வருவான்.

நீலநிறம் அவன் அடையாளம், நீலநிற மணியின் வண்ணத்தில் அவன் ஜொலிப்பான். அவனை அடையாளம் கண்டுகொள்.

அவனிடம் சொல் குயிலே.

குயிலே! இந்தச் செடி கொடிகளைப் பார்க்கின்றேன். கரும்பச்சை இலை தெரிகின்றது; அவன் நினைவே வருகின்றது, இந்தச் செந்நிற கோவைக் கனிகளைக் கண்டால் அவன் சிவந்த இதழ்கள் நினைவுக்கு வருகின்றது.

முல்லைப் பூக்களைக் கண்டால் அவன் சிரிப்புநினைவுக்கு வருகின்றது, உன் குரல் கேட்டால் அவன் புல்லாங்குழல் நினைவுக்கு வருகின்றது.

அப்படி நான் அவன் நினைவிலே முழுக்கக் கரைந்துவிட்டேன். பாலில் சர்க்கரை போல அப்படியே கரைந்துவிட்டேன்.
குயிலே! நான் எத்தனையோ பறவை இருந்தும் உன்னிடம் என் சோகத்தை ஏன் சொன்னேன்?

நீயும் என்னைப் போல்தான். என் நிலை உன்னைவிட யாருக்குப் புரியும்?”

சொல்லிவிட்டு அவள் விசும்பினாள், குயில் அவளை உற்று பார்த்தது.

“குயிலே உனக்கு கூடுகட்ட தெரியாது. எனக்கு இந்த உலகில் வாழ தெரியாது, ஆம். உனக்கென கூடு கட்ட தெரியாமல் தடுமாறும் பறவை நீ. உன் இயல்பு அது.

பறவை என்றால் கூடுகட்டும் கலை தானாக வரும், சின்னஞ்சிறிய தூக்கணாங்குருவி கூட அழகான கூட்டை கட்டும், சிறிய குருவி பிரமாதமான கூட்டை கட்டும் அவைகளின் இயல்பு அது. அதனாலேதான் அந்த இனம் கால காலமாக நிலைக்கின்றது, அவைகள் தர்மம் அது.

தானே கூடுகட்டி, இணை கூடி, முட்டையிட்டு, அடைகாத்து, தன் வீடு தன் குஞ்சு தன் குடும்பம் என இரைதேடி கொடுத்து வாழ்வது பறவை குணம், கடுமழையோ, பெரும் வெயிலோ தன் கூட்டை காப்பது அதன் குணம்.

மானிடர் என்றால் அவர்களுக்கும் இப்படி குணம் உண்டு, தனக்கான வீடு, தனக்கான குடும்பம், தனக்கான வருமானம் என அவர்கள் தேடி தேடி ஓடுவார்கள். தாங்கள் குடும்பமாய் வாழ எல்லா முயற்சியும் செய்வார்கள்.

ஆனால் பறவைகளில் நீ விசித்திரம். நீ பறவைதான். அழகாக பாடும் பறவைதான். ஆனால் கூடுகட்ட தெரியாமல் தடுமாறி திரியும் பறவை, எதையோ தேடி, பாடி, பறந்துகொண்டே செல்லும் பறவை.

நானும் அப்படித்தான், இந்த பூமியில் எனக்கு மற்றவர்களை போல வாழ தெரியவில்லை, என் வீடு என் கணவன் என் பிள்ளைகள் எனும் ஆசை வரவில்லை, பெரும் வீடுகட்டி வீடெல்லாம் பிள்ளைகள். பிள்ளைகளுக்கெல்லாம் நகைகள், வீட்டை சுற்றி சொத்துக்கள் என வாழும் ஆசை எனக்கு இல்லை.

உனக்கு கூடுகட்டும் கலை சபிக்கபட்டது போல, எனக்கு மானிட வாழ்க்கை சபிக்கபட்டது. நீ எதையோ தேடி பாடுகின்றாய், நான் கண்ணனைத் தேடி தேடி ஓடுகின்றேன்.

உன் பிறப்பும் என் பிறப்பும் ஒன்று குயிலே

நீ காக்கையின் கூட்டில் பிறப்பாய், காகமும் உன்னை தன் குஞ்சாக வளர்க்கும், நீயும் அப்படி நம்பி வளர்வாய்.

ஆனால் காலம் செல்ல செல்ல நீ அவர்கள் இனமல்ல என்பது காக்கைக்கு தெரியும், அப்போது உன்னை கொத்தி விரட்டும் நீயோ சோகமாக பாடியபடி காயங்களோடு பறந்து செல்வாய்.

உன் பெற்றோர் உனக்கு தெரியாது, ஏன் வந்தாய் என்பது தெரியாது, ஏன் காக்கை உன்னை வளர்த்தது என்பதும், ஏன் விரட்டியது என்பதையும் நீ அறியமாட்டாய்.

உன் வாழ்வு வலி மிகுந்தது, அந்த சோகத்தைத்தான் நீ ராகமாக பாடுவாய், அதை தேடித்தான் ஆறுதல் சொல்ல ஒரு குயில் வரும் என எதிர்பார்ப்பாய்.

குயிலே! நானும் அப்படித்தான், மாயை என்னை இந்த உலகில் பிறக்கவைத்தது, விவரம் தெரியாத வயதுவரை நானும் அவர்களோடு விளையாடி வளர்ந்தேன்.

ஒரு கட்டத்தில் அவர்கள் இயல்புக்கு என்னால் ஒத்துபோக முடியவில்லை, என் சிந்தனையும் அவர்கள் சிந்தனையும் மோதிற்று.
சதா காசு, பணம், குடும்பம், சொத்து, சம்பாத்தியம், சந்தோஷம் என அவர்கள் லவுகீக வாழ்வில் சிக்கிவிட்டார்கள்.

நானோ கண்ணன் வருவான் ,என்னை கரம்பிடிப்பான், அவனை தவிர யாருமில்லை என சிறுவயதில் இருந்தே வளர்ந்தேன்.
நான் வளர வளர என் கண்ணன் என்னோடு வளர்ந்தான்

நீ காக்கை கூட்டில் வளர்வது போல் நானும் இவ்வுலகில் வளர்ந்தேன் உன்னால் காகங்களோடு ஒட்டமுடியாதது போல் இவர்களோடு
என்னால் ஒட்டமுடியவில்லை. அவர்களோடு வாழ முடியவில்லை, அவர்களால் என்னை புரிந்து கொள்ளமுடியவில்லை. அது முடியவும் முடியாது.

அதனால் என்னை பயித்தியம் என்றார்கள், வாழ தெரியாதவள் என்றார்கள், பூமிக்கு பாரம் என்றார்கள், எல்லாவகை சொல்லாலும் இழிவுபடுத்தினார்கள்.

குயிலே! காக்கை கூட்டில் இருந்து நீ விரட்டப்படும் போது உனக்கு சிறகுகள் உண்டு, பறந்து தப்பித்தாய். ஆனால் எனக்கு என்ன உண்டு? நான் எங்கு செல்வேன்?

மாயை பெற்றுவிட்ட இந்த மானிட குயிலினை, லவுகீக காக்கைகள் விரட்டும்போது நான் என்ன செய்வேன்?

நான் யாரிடம் செல்வேன்? எனக்கு யாரை தெரியும்? இந்த குயில் குஞ்சு கதறி கத்துவதை தவிர என்ன செய்யும்?

அதன் மனமெல்லாம் காயம், மாபெரும் காயம், லவுகீக காக்கைகள் குதறிய காயம், அது அழுகின்றது.
அதற்கு வெயிலிலோ, மழையிலோ ஒதுங்க இடமில்லை. அதற்கு கூடுகட்டவும் தெரியாது.

குயிலே! இந்த குயில் பாவம் அல்லவா? நீ பாடினால் உனக்கொரு ஜோடி வரும். ஆனால் நான் பாடினால் அவன் வரவேண்டும் அல்லவா?

அவனை தவிர நான் யாரை எதிர்பார்க்கமுடியும்?

நான் அவனுக்காக பாடுகின்றேன், அவனுக்காக ஏங்குகின்றேன், லவுகீக காக்கைகள் விரட்டியடிக்கும் ஆத்ம குயிலாக காயத்தோடு அவனை நோக்கி பாடுகின்றேன்,

அவனைத் தவிர யாரும் எனக்கு அடைக்கலமாக முடியாது, அவனை தவிர யாரும் என்னை காக்க முடியாது.

என் சோகம் அறியக் கூடிய குயிலே! என் வாழ்வினை சரியாக உணரக்கூடிய வலிகொண்ட குயிலே! அவனிடம் சொல், அவனை கண்டு என் நிலைமையினை சொல்…நான் இருக்கும் கோலத்தை சொல்.

இன்னும் அவன் வரவில்லை என்றால்….” என சொன்னவள் அதற்கு மேல் சொல்லமுடியாமல் கேவி கேவி அழுதாள்..

கண்ணா என ஓங்கி அழுதாள், ஆனமட்டும் அழுதாள், மெல்ல அவள் அழுகை விசும்பலாயிற்று.ஒரு நீலவண்ண கரம் அவளைத் தொட்டது, அந்த ஸ்பரிசத்திலே முழு ஆனந்தம் அடைந்தாள், பலமாதமாக ஏங்கிய வயலில் மழை விழுந்து பெய்ததுபோல் மனம் நிறைந்தாள்.

“கண்ணை மூடிக் கொண்டு என்னைக் காணக் கூடாது என அடம்பிடிக்கின்றாய்” எனச் சொல்லிப் புன்னகைத்தான் கண்ணன்.

“நான் அப்படி மெல்ல முயன்று பார்த்தேன், ஆனால் என் ஐம்புலன் அல்ல என் சிந்தை மட்டுமல்ல என் உயிருமாக நீ ஆனாய் என்பதை உணர்ந்தேன், இதயத்தில் நீ நிரம்பியிருகின்றாய் என் எண்ணம் என் சிந்தை என எல்லாமுமாக நீயே இருக்கின்றாய் என்பதை அப்போதுதான் முழுக்க உணர்ந்தேன்” என்றவள் அந்தக் கைகளைப் பிடித்துத் தன் கண்ணோடு வைத்துச் சொன்னாள், “என்னை விட்டு எங்கே சென்றாய்?”

“நான் எங்கே சென்றேன் ஆண்டாளே, சதா காலமும் நீ என்னை நினைந்திருக்கும் போது, நான் உன்னை எப்படி மறக்கமுடியும்?

கூடற்ற குயிலாய், கூடுகட்ட தெரியாக் குயிலாய் அலையும் இந்த ஆத்மாவுக்கு அடைக்கலம் கொடுப்பாயா?

குயிலையே காக்கும் நான் உன்னைக் காக்க மாட்டேனா?

என் ஆத்மகீதம் உனக்குக் கேட்டதா?

அந்தக் கீதத்தில் மயங்கித்தானே ஓடி வந்திருக்கின்றேன்.

அப்படியானால் என் பாடலைக் கேட்டாயா கண்ணா?

உன் மூச்சையே உன் அருகிருந்து கேட்பவன் நான், உன் பாடலை கேட்டிருக்கமாட்டேனா?”

கண்ணா! என்றவள் அந்தக் கரத்தைத் தன் கழுத்தோடு சுற்றிக்கொண்டு சாய்ந்தாள், அவள் காதுகளில் அந்தக் குழலோசை குயிலோசை போல் கேட்டுக்கொண்டே இருந்தது.

அதுவரை சோகமாகப் பாடிய குயில் அப்போது உற்சாகமாகப் பாடியது, அதற்கொரு ஜோடியும் தேடி வந்து அமர்ந்து, அவைகள் ஜோடியாய் பாடி வாழ்த்தின. உற்சாகமாய்ப் பாடின‌.

சட்டென கண் விழித்தாள் ஆண்டாள், இப்போது குயிலோசை தொலைவில் கேட்டாலும் அது அவளுக்கு இன்பமாய் இருந்தது, மாடத்தின் ஓரம் வந்து வானத்தை நோக்கினாள், அங்குப் பெரிய கருடன் கம்பீரமாய்ச் சிறகினை விரித்தபடி பறந்து வந்தது.

அவள் உள்ளங்கைகளை நீட்டியபடி மகிழ்வோடு அதனைக் கண்டாள், அவள் கையில் பெரிய பூமாலை விழுந்தது, அதனைக் கண்ணோரம் ஒற்றிக்கொண்டு கழுத்தில் அணிந்துகொண்டாள், தொலைவில் குயில்களின் ஓசை உற்சாகமாய்க் கேட்டுக் கொண்டே இருந்தது.