நாச்சியார் திருமொழி : 75

நாச்சியார் திருமொழி : 75 ( பாசுரம் 10.1)

ஆண்டாளுக்கு கண்ணில் காணும் எல்லாமும் கண்ணனை நினைவுப்படுத்தி கொண்டே இருந்தன. அவளும் கண்ணில்பட்ட எல்லாவற்றையும் கண்ணனிடம் தூது அனுப்பித் தோற்றுக்கொண்டே இருந்தாள். மேகம் குயில் என எல்லாவற்றையும் அனுப்பியாயிற்று என்பதால் மனதில் ஒரு சலிப்பும் எட்டிற்று.

தானே எப்போதும் கண்ணனைத் தேடிகொண்டிருப்பதையும், அவன் தன்னைத் தேடி வரவில்லை என்பதையும் எண்ணியபோது அவன் மேல் கோபம் உண்டாயிற்று. தன் அன்பை அவன் புரிந்துகொள்ளவில்லை தானே வலிய வலிய தேடுவதில் இனி அர்த்தமில்லை என்றவள் அவனை இனித் தேடப் போவதில்லை எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.

இனி அவனை தேடவும் மாட்டேன் பேசவும் மாட்டேன் எனச் சொல்லி விட்டாலும் காணும் எல்லாமும் அவனை நினைவுப்படுத்தின‌.

வானின் மேகம், கன்னங்கரிய குயில்கள், பசுக்கள், கன்றின் துள்ளல் , நாகம், பால், வெண்ணெய் என எங்குத் திரும்பினாலும் அவன் நினைவு ஆட்கொண்டது. வண்டியின் சக்கரம் கூட அவன் சகடாசுரனை அழித்த கதையினை அவளுக்குச் சொன்னது.

எங்கும் கண்ணன் எல்லாவற்றிலும் கண்ணன் என அவள் கரைந்தே போனதால் அவன் நினைவிலிருந்து மீள முடியாமல் தவித்துப் போனாள். இனி எதுவும் வேண்டாம் எனக் கண்ணை மூடினாலும் அங்கிருந்த கரும் நிறம் கண்ணனைக் காட்ட இன்னும் தவித்துப்போனாள்.

அவனை அவளால் மறக்கவும் முடியவில்லை, அதே நேரம் அவன் தன்னைத் தேடிவராத வலியினைத் தாண்டிச் செல்லவும் முடியவில்லை.

அவளின் இந்தப் போராட்டம் நீண்டுகொண்டே சென்றது. எந்த வேலையினைச் செய்தாலும் அவன் நினைவு காற்றைப் போல் அவளுள் எங்கும் நிறைந்திருந்தது. சிந்தனை முதல் உயிர் வரை அவன் நினைவாக இருந்தது, அவளின் சுவாசமாக அவனே இருந்தான்.

மூச்சைப் பிடித்து அவள் அமர்ந்தாலும் மெல்லிய இதய சத்தம் கண்ணா கண்ணா எனத் துடிப்பது அவளுக்குக் கேட்டது.

அவளின் போராட்டத்தில் அவள் தோற்றுக் கொண்டிருந்தாள். யாருமற்ற தனிமையில் இருக்க விரும்பினாள், கவலையிலும் விரக்தியிலும் மூழ்கிய மனதுக்குத் தனிமைபோல் மருந்தில்லை.

அவள் அப்படி இருக்க எண்ணி ஊரின் குளத்தோரம் வளர்ந்த மரத்தடிக்குச் செல்ல விரும்பினாள். அப்படிச் சென்று கொண்டிருக்கும் போது அவள் வானத்தை நோக்கினால் கண்ணன் நினைவு வரும் என்பதால் பாதையில் மட்டும் பார்வையினை வைத்தாள், குயிலோசைக் கூட தன்னில் அவன் நினைவை தரக்கூடாது எனக் காதை பொத்திக் கொண்டாள்.

வேகமாக அவள் நடந்து செல்லும் போது மழைக்காலத்தில் வளரும் கார்கோடல் பூக்கள் எனும் கரும் காந்தள் பூக்கள் வளர்ந்திருந்தன, கருத்த நிறமும் இடையே செவ்வரிகளும் கொண்ட விசேஷமான பூக்கள் அவை.

அதனைக் கண்டதும் அடக்கி வைத்திருந்த கண்ணனின் நினைவுகள் அவளுக்குள் பொங்கின. அதற்கு மேலும் தாளாதவளாய்ப் பாடினாள்.

“கார்க்கோடல் பூக்காள்! கார்க்கடல் வண்ணன் என் மேல் உம்மைப்
போர்க்கோலம் செய்து போர விடுத்தவன் எங்குற்றான்?
ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது? அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ”

அவள் பாடி முடித்துவிட்டு மிகுந்த சோகத்துடன் அப்பூக்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது ஒரு கருங்காந்தள் மலர்மெல்ல மெல்ல பெரிதானது, ஆண்டாள் அதனையே வித்தியாசமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

திடீரென வானளாவ எழுந்து விஸ்வரூபமாய் நின்ற அந்தக் கருங்காந்தள் பூ அப்படியே அவள்மேல் சரிந்து மூடிக் கொண்டது, அவள் அப்போதும் “கண்ணா….” என்றே வாய்விட்டு சத்தமிட்டாள், அப்படியே கண்மூடிக் கொண்டாள்.

கண்னைத் திறந்தபோது அழகான பசுஞ்சோசலையில் நின்று கொண்டிருந்தாள், அங்கே பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. சிறிய ஓடை கிண்கிணி ஒலியுடன் ஓடிக்கொண்டிருந்தது, ஆங்காங்கே பறவையினங்கள் அமர்ந்திருந்தன.

பசும் மரங்களும் அழகான செடிகொடிகளும் செழித்திருந்த அவ்விடத்தில் நறுமண மலர்களின் நறுமணம் எங்கும் காற்றில் நிரம்பியிருந்தது.

தான் எப்படி இங்கு வந்தேன் என அவள் குழம்பி நிற்கும் போதே, சிரித்தபடி அருகில் நின்ற கண்ணனைக் கண்டாள், அவனைக் கண்டதும் அவள் கோபமெல்லாம் பறந்தோடின‌.

அவள் முகத்தில் மெல்ல புன்னகை அரும்பிற்று. கண்களில் காதல் பொங்க அவனைக் கண்டாள், அவனும் அவளை நோக்கிச் சிரித்தான், அவள் திரும்பச் சிரித்தாள்.

இருவரும் மாறி மாறி சிரித்ததில் அந்தச் சோலையின் மரங்கலெல்லாம் மகிழ்ச்சியில் ஆடின; பூக்கள் அந்தச் சிரிப்பிற்கு நடனமிட்டன; அதற்கேற்ற ஜதியுடன் நதியும் ஓடிக்கொண்டிருந்தது.

“என்மேல் என்ன கோபம் இருந்தாலும் ஆபத்து என்றால் என்னைத்தான் அழைக்கின்றாய் அல்லவா?”

கோபம் மறந்து சிரித்தபடி சொன்னாள் ஆண்டாள், “வேறு யாரை நான் அழைப்பேன் கண்ணா, ஆபத்பாந்தவன் எனக்கு நீயன்றி யார்?”

அவள் தோள் தொட்டு அவளைத் திருப்பி அவளின் தலையில் ஒரு பூவினைச் சூடிவிட்டான் கண்ணன், ஆண்டாள் உருகிப்போனாள். அப்படியே அவளைத் தன் அருகே அந்தப் புல்வெளியில் அமர்த்திக்கொண்டான்.

கண்ணா! என்றபடி அவன் முகத்தைப் பார்த்தவள் ஏதும் சொல்லாமல் நாணத்தால் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ஆண்டாளே, என்ன பாடினாய்?” எனக் கேட்டான் கண்ணன்.

அவனை மீண்டும் காதல் பொங்க ஏறிட்டுப் பார்த்தவள் வாழை மொட்டுபோல் தலையினைக் குனிந்து நிலம் நோக்கிச் சொன்னாள்.

“கார்கோடல் பூக்களே, அந்த நீலவண்ணம் கொண்ட கண்ணன் என்னுடன் போரிட உங்களை அனுப்பிவிட்டு எங்கு மறைந்திருக்கின்றான் சொல்லுங்கள்? துளசி மாலை அணிந்த அவனைத் தேடி அடைய நான் செய்யும் போராட்டத்தை, அவனைத் தேடி தேடி நான் அலையும் என் சோகத்தை நான் யாரிடம் இனி முறையிடுவேன்” எனப் பாடினேன் கண்ணா.

அவளை அன்பாக பார்த்தபடி அவள் கரம்பற்றிக் கேட்டான் கண்ணன், “என்ன கண்ணே, யாரிடம் முறையிடுவேன் என்றாயே எதற்காக?” என்றான்.

அவன் தோள்மேல் சரிந்து சொன்னாள் ஆண்டாள். “கண்ணா! என் நிலமையினை நான் மேகத்திடம் சொன்னேன், குயிலிடம் சொன்னேன் இன்னும் எதெல்லாம் கண்ணில்பட்டதோ அங்கெல்லாம் சொன்னேன். நான் காமனுக்கு விரதமிருந்து அவனிடமும் சொன்னேன், உனக்கு நினைவிருக்கின்றதா…

இப்படி எல்லோரிடமும் முட்டி மோதி புலம்பிவிட்டேன், தேவர்கள் வானில் உலாவும் மேகம் வானில் பறக்கும் குயில்கள் வரை புலம்பி வானில் இருக்கும் உனக்குத் தூதுவிட்டு பார்த்துவிட்டேன்

இந்த மழைக்காலத்தில் நான் பட்டுபூச்சிகளைக் காண்கின்றேன், செந்தூரம் சிந்தும் பூக்களைக் கொண்ட மரங்களைக் காண்கின்றேன். அவைகளிடமும் புலம்பிவிட்டேன் ஆனாலும் பலனில்லை.

அதனால்தான் சொன்னேன், இனி நான் யாரிடம் முறையிடமுடியும், என்னால் முடிந்தவரை எல்லோரிடமும் முட்டி மோதி பார்த்துவிட்டேன் எனப் பாடினேன்”

சொன்னவள் குரலில் சோகம் மிகுந்திருந்தது. அவள் கண்ணனை உற்றுப் பார்த்தாள், அவன் தோளில் கிடந்த துளசி மாலையினை மெல்லத் தடவி அதன் மேல் சாய்ந்து சொன்னாள்.

“எல்லாம் இந்த மாலை கொண்ட நெஞ்சத்தில் சாய்ந்து கிடக்கத்தான் கண்ணா” என அவனைக் கட்டிக்கொண்டாள்.

கண்ணன் அவள் தலையினை வருடியபடி கேட்டான், “கண்ணே! அதென்ன போர்க்கோலம் செய்து போர விடுவித்தவன் என்றாயே என்னபோர்? என்ன விஷயம் அது?” என்றான்.

அவள் மெல்லப் புன்னகைத்து சொன்னாள், “கண்ணா, நீ பல இடங்களில் நேராக வரமாட்டாய் அல்லவா? யாரையாவது தூண்டிவிட்டு பின்னால் நின்று கொள்வாய், அப்படி இந்த கருங்காந்தள் பூக்களை அனுப்பி உன்னைத் தேட வைத்து உன் நினைவினைத் தூண்டிவிட்டு மறைந்திருந்து என்நிலையினைக் கண்டு ரசிக்கின்றாய் அல்லவா? அதைத்தான் சொன்னேன்” எனச் சொல்லி மெல்லச் சிரித்தாள்.

“நானா எப்போது அப்படி மறைந்திருந்தேன்?” எனப் பதறினான் கண்ணன்.

அவள் சிரித்தபடி சொன்னாள், “நடிக்காதே கண்ணா, வாலியினை எதிர்க்க சுக்ரீவனை ஏவிவிட்டு மறைந்திருந்தவன் நீ, இந்திரஜித்தனை எதிர்க்க லட்சுமணனை அனுப்பிவிட்டு மறைந்திருந்து கண்காணித்தவன் நீ.

பீஷ்மரை வதைக்க சிகண்டியினை முன்னிறுத்திவிட்டு பின்னால் நின்றவன் நீ, கர்ணனை வதைக்க அர்ஜூனன் பின்னால் நின்றவன் நீ, துரியோதனனை வதம் செய்ய பீமனின் பின்னால் நின்றவனும் நீ.

இப்படி யாரையாவது முன்னிறுத்திவிட்டு பின்னால் இருந்து இயக்குபவன் நீ அல்லவா? அப்படித்தானே உன் நினைவுகளில் நான் சிக்கிக் கிடக்கும்படி என் மனப்போராட்டம் தொடரும்படி இந்தக் கருங்காந்தள் பூக்கள் வரை என் முன் நிறுத்தினாய், உன்னால் மறுக்க முடியுமா சொல்? உன் மாய வேலைகளை அறியாதவளா நான்?”

கண்ணன் புன்னகைத்தான், “இதனையா பாடினாய் கண்ணே? நான் அவ்வளவு கொடியவன் என எண்ணிக் கொண்டாயா?” என்றான்.

“நீ கொடியவர்க்கு கொடியவன், நல்லவர்க்கு நல்லவன். ஆனால், என்னைத்தான் நீ இப்படியெல்லாம் பாடாய்ப் படுத்துகின்றாய். அதை சொல்லக்கூட எனக்குத் தெரியவில்லை கண்ணா” என்றாள்.

கண்ணன் வானம் பார்த்தபடி சொன்னான், “கண்ணே, நான் யாரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துதானே செயல்பட முடியும், இப்புவியில் நானும் விதிகளுக்குக் கட்டுப்பட்டவனன்றோ?”

ஆண்டாள் அவன் கரம் பிடித்துச் சொன்னாள், “அதெல்லாமில்லை விதிகளுக்கு அப்பாற்பட்டவன் நீ என்பதைத்தான் அங்கே இப்படி இன்னொருவரை முன்னிறுத்திக் காட்டினாய், எனக்குத் தெரியும்” என்றாள்.

“என்ன தெரியும் கண்ணே?” என்றான் கண்ணன்.

அவனின் விரல்பிடித்து மடித்தபடி சொன்னாள் ஆண்டாள், “கண்ணா, அவரவர் தங்கள் முயற்சியால் சில வரங்களைப் பெற்றுவிடுகின்றனர் அல்லது கர்மவினையால் அந்தப் பலம் அவர்களுக்கு வாய்த்துவிடுகின்றது.

அந்தப் பலத்தைக் கொண்டு தாங்கள் அசைக்கபடமுடியாதவர்கள் வெல்லபட முடியாதவர்கள் என ஆடும் போது, எல்லாப் பராக்கிரமசாலியும் என்னை மீறிவிடமுடியாது, ஏதோ ஒருவகையில் அவர்களை அழிக்கமுடியும் எனக் காட்டியவன் நீ.

அப்படித்தான் நீ வாலியினைக் கொன்றாய்; இந்திரஜித்தனைக கொன்றாய்; பீஷ்மரை, துரோணரையெல்லாம் வதைத்தாய். இவர்களெல்லாம் பல வரம் கொண்டவர்கள், வெல்லமுடியாதவர்கள். ஆனால் அவர்களை நீ ஏதோ ஒருவகையில் வீழ்த்திக் காட்டினாய்.

அதுதான் இரணியனுக்கும் நடந்தது, மகாபலிக்கும் நடந்தது. அங்குப் பிரஹலாதனை முன்னிறுத்தினாய், இங்கு மூன்றடி மண்ணை முன்னிறுத்தினாய்.

மிகச் சிறிய விஷயங்களை முன்னிறுத்தி பெரிய பெரிய மலைகளைப் புரட்டி போடுபவன் நீ கண்ணா” என்றாள்.

“அக்கிரமம் செய்பவர்களை அதர்மக்காரர்களை நான் வேறு எப்படி அழிப்பது கண்ணே, என் கடமை அது அல்லவா? அதனால் அவர்களின் அறியாமையினை, அகங்காரத்தை ஒழிக்க அவர்களே எதிர்பாரா ஒரு வழியில் வதம் செய்து முடித்துவைக்கின்றேன், இது என் தர்மம் ” என்றான்.

அவள் திரும்பக் கேட்டாள், “கண்ணா, அவர்களெல்லாம் அகங்காரிகள் அதர்மக்காரர்கள் அவர்களை நீ மறைந்திருந்து வதைப்பதில் அர்த்தமுண்டு. ஆனால், மிக மிக எளியவளான என்னை ஏன் மறைந்திருந்து இப்படி வதைக்கின்றாய், நான் செய்த பாவம் என்ன?”

கண்ணன் திகைத்தான், அவனிடம் பதிலில்லை, அவள் கரத்தை அழுத்தி பிடித்து ‘ஆண்டாளே’ என்றான்.

அவள் தொடர்ந்தாள், “எனக்குத் தெரியும் கண்ணா, பாவம் செய்தவர்களை நீ மறைந்திருந்தேதான் வதைப்பாய். புண்ணியம் செய்தவர்களையே நீ நேரடியாகச் சென்று அணைத்துக் கொள்வாய்.

நான் மானுடப்பிறப்பு, ஏதோ பெரும் பாவத்தால் இப்படிப் பிறந்துவிட்ட சாபமிக்க பிறப்பு. என் விதிப்படி என்னை நேருக்கு நேர் சந்திக்காத நீ இப்படி மறைந்திருந்து என்னை வதைக்கின்றாய்.

கண்ணா! நான் செய்த பாவமென்ன? நான் செய்த கர்மமென்ன? ஏன் இத்தனைக் கோடி மாந்தரில் நான் உன்னை மட்டும் நினைத்து வாழவேண்டும், உன் திருகோவிலுக்குக் கூட நள்ளிரவில் பூட்டு உண்டு. ஆனால், என் மனக்கோவிலில் எல்லா நேரமும் உன்னையே போற்றி நான் ஏன் வாழவேண்டும்.

என் தேடலும் வாழ்வும் விதியும் நீயானாய், உன்னைத் தவிர இன்னொரு உருவம் என் முன் வருமென்றால் அதுவும் நீயன்றி வேறென்ன? உன்னையே எண்ணியெண்ணி ஒவ்வொருவரிடமும் ஓடும் அபலையாக நான் அலைவதென்ன?

மேகத்தைக் கண்டால், பறவைகளைக் கண்டால், கொடிகள் செடிகள் மலர்களைக் கண்டால், சங்கினைக் கண்டால், கருடனை கண்டால், மன்மதன் உள்ளிட்ட தெய்வங்களைக் கண்டால் எல்லோரிடமும் ஓடி ஓடி என்னை அவனிடம் சேர்த்து வையுங்கள் என நான் கதறும் இந்தச் சபிக்கப்பட்ட நிலைதான் என்ன?

கண்ணா! நான் சாபம் நிறைந்தவள், பெரும் பாவங்களைச் செய்தவள். அதனாலே நீ நேரடியாக வந்து என்னை நீ ஆட்கொள்ள மறுக்கின்றாய்.

வாலி, இந்திரஜித் எனப் பெரிய வரம்பெற்றவர்களை நீ மறைந்திருந்து அடித்தால் அது நியாயமானது. ஆனால், மிக மிக எளியவளான என்னை நீ இப்படி மறைந்திருந்து அலையவிட்டு போர் தொடுத்தால் என்ன நியாயம்?

விதிப்படி எல்லோரையும் எதிர்கொள்ளும் நீ என்னை மறைந்திருந்தே ஆட்டுவிக்கின்றாய் என்றால் என் விதி சரியில்லை என்றுதானே பொருள்?”

கண்ணன் அவளைத் தேற்றினான்.

“கண்ணா! நான் உன்னிடம் வாதிடவில்லை, உன்னிடம் சண்டையிடும் பலமும் தகுதியும் எனக்கில்லை. உன் முன் நான் அற்ப பிறப்பு.

நான் என் நிலையினைச் சொல்லிப் புலம்பினேன். வாலி சுக்ரீவனோடு மோதும் போது நீ அருகில் மறைந்திருந்தாய், இந்திரஜித்தனை லட்சுமணன் வதைக்கும் போதும் மறைந்திருந்தாய், அப்படி இந்தக் கருங்காந்தள் பூக்கள் என்னை உன் நினைவால் வதைக்கும் போதும் நீ எங்காவது மறைந்திருப்பாய் என்றேதான் அப்படியாவது உன்னைக் காணமுடியாதா என நினைத்தே புலம்பினேன்”

சொன்னவள் அவன் மடியில் கிடந்து குழந்தை போல் அழுதாள், கண்ணன் அவளைத் தலையினைத் தடவி தேற்றினான்.

“கண்ணே, கொடிய பகைவரானாலும் என்னை அறிந்தவர்களை உணர்ந்தவர்களை நான் கைவிடாமல் என்னோடு சேர்த்துக்கொள்வேனே, அகங்காரிகளை அக்கிரமக்காரர்களை விதிப்படி வலிமையானவர்களைத்தானே நான் மறைந்திருந்து அடித்தாலும் அவர்கள் தங்களை உணர்ந்து தங்கள் அகங்காரத்தை களைந்தால் என்னோடு சேர்த்துக் கொள்வேனே அப்படியிருக்கையில் உன்னைக் கைவிடுவேனா?

நீ எல்லாப் பொருளிலும் என்னைக் காணும்போது நானும் மறைவாய் இருந்து உன்னைப் பார்க்காமலா இருப்பேன் சொல். நீ என்னைத் தேடும் ஒவ்வொரு விஷயத்தையும் அவைகளில் இருந்து அறிபவன் நான்.

இங்கு எல்லாமே நான் கண்ணே, நீ காணும் எல்லாமும் நானாக இருக்கும் போது உன் மனம் அறியாமலா இருக்கும்?”

சொன்னவனை இறுகக் கட்டிக்கொண்டு “கண்ணா ” என அவள் கத்திச் சொன்னாள், அந்தச் சோலையே அதிர்ந்தது.

“உனக்கு நான் உறுதியாய்ச் சொல்வேன் கண்ணே, உரிய காலம் வரும்வரை உன்னை நான் என் கண்காணிப்பிலே வைத்திருப்பேன், உரிய நேரம் வரும்போது உன்னை என்னோடு சேர்த்துக்கொள்வேன்”

அவள் திரும்பச் சொன்னாள், “கண்ணா! எனக்கு ஆன்மீகம் தெரியாது, ஆத்ம ஞானம் தெரியாது. அறியாமை இருள் சூழ்ந்த ஆத்மாவுக்கு பகவான் மறைமுகமாக நிற்பதெல்லாம் புரியாது என வேதாந்தம் பேசத் தெரியாது, அகங்கார கண்களுக்குப் பகவான் அகப்படமாட்டான் மறைந்திருப்பான் என ஞானம் போதிக்கத் தெரியாது.

எனக்குத் தெரிந்ததெல்லாம் நீ, உன்னை மட்டுமே தெரியும். நான் ஆத்மாவா? உடலா? என்பதெல்லாம் எனக்கு அவசியமில்லை. ஏதோ ஒரு வடிவில் நான் உன்னை அடையவேண்டும், அந்த ஏக்கம் என் உள்ளிருந்து வருமானால் அது ஆத்ம ஏக்கமாகவே இருக்கட்டும், என்னை உன்னோடு சேர்த்துக்கொள். கைவிட்டுவிடாதே” எனக் கதறினாள்.

கண்ணன் அவளை அப்படியே அணைத்துக் கொண்டான், அவளின் கண்ணீரால் அவன் தோள்கள் ஈரமாயின, அவனின் ஸ்பரிசத்தில் தன்னை மறந்திருந்த ஆண்டாள் கண் திறந்தபோது குளத்தின் கரையோர பாதையில் நின்றிருந்தாள்.

நடந்ததனை நினைத்துப் பார்த்தாள், புன்னகைத்தாள். கைகளை விரித்தபோது கையில் துளசி இருந்தது. கண்ணன் கழுத்தில் கிடந்த துளசிமாலையின் இலைகள் அது என்பதை நினைத்துக் கொண்டவள் அதைப் பத்திரமாகக் கைகளில் பொத்திக் கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அவள் மனமெல்லாம் கண்ணன் நிறைந்திருந்தான். காற்றில் தலையாட்டிய அழகிய கருங்காந்தள் மலரெல்லாம் கண்ணனையும் அவளையும் பற்றிப் பாடுவதாக அவள் நினைத்தபடி நடந்து கொண்டிருந்தாள்.

அந்நேரம் நெற்றியில் நாமமிட்ட கோவில் யானை ஆவேசமாக ஓடி எதிரே வந்தது, அதன் பின்னால் பலர் ஓடி வந்தார்கள், ஆண்டாளை நோக்கி அந்த யானை மிக வேகமாக வந்தது.

அவள் கையில் இருந்த துளசியினை இறுகப் பிடித்தபடி “கண்ணா” என்றாள். ஓடிவந்த யானை அப்படியே நின்று துதிக்கையால் அவளை ஆசீர்வதித்தது.

யானை பின்னால் வந்தவரெல்லாம் அதிசயித்தார்கள், யானை இயல்பு நிலைக்கு வந்ததால் பாகனுக்குக் கட்டுப்பட்டது, அவன் அதை இழுத்துச் சென்றான்.

ஆண்டாளுக்கு என்ன நடந்தது என்பது தெரியவே சில நிமிடங்களாயின. அவள் கண்களைத் திருப்பிப் பார்த்தபோது அங்கு ஓர் மரத்தின் பின்னால் கண்ணன் நின்றுகொண்டிருந்தது அவளுக்கு மட்டும் தெரிந்தது.

புன்னகைத்தபடி அந்தத் துளசி இலையினைக் கண்களில் ஒற்றியபடி கோவிலுக்குச் செல்ல விரைந்தாள் ஆண்டாள்.