நாச்சியார் திருமொழி : 73
நாச்சியார் திருமொழி : 73 ( பாசுரம் 9.5, 9.6, 9.7)
ஆண்டாள் கண்ணனை வழமை போல் தேடிக் கொண்டிருந்தாள், அவளுக்குள் அவன் நினைவு எரிந்து கொண்டிருந்தது, கண்களும் மனமும் சிந்தையும் அவனைத் தேடிக் கொண்டிருந்தன, அவன்பால் ஏக்கமும் கலக்கமும் கொண்டவள் மழையினை எதிர்பார்க்கும் நாற்றுபோல் வாடிக்கிடந்தாள்.
அதிகாலை வானத்தை நோக்கியபடி அமர்ந்திருந்தாள், அங்கே மேகங்கள் எழுந்தன, மெல்லச் சூரியன் தன் பாதையில் மேலேழுந்தது, பறவைகள் இறகுகளை அசைத்தபடி மிதந்து சென்று கொண்டிருந்தன.
பசுக்கள் கன்றுகளுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தது, அந்தப் பசுக்களை ஆச்சியர் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தனர், வயல்களுக்கு வேலை செய்வோர் விரைந்து கொண்டிருந்தனர், எங்கும் காலை நேர ரம்மியமும் நாள் தொடங்கும் பரபரப்பும் தெரிந்தது.
புத்தம் புதிய மலரில் வண்டுகள் மொய்த்துக் கொண்டிருந்தன, அழகிய வட்ட வடிவ மலரில் கருவண்டுகள் ஆடுவது கண்களில் கருவிழி அசைவது போல் அவளுக்குத் தெரிந்தது, அவளுக்குத் தெரிந்த கண் கண்ணனின் கண் மட்டும் என்பதால் அவன் முகம் அப்படியே நினைவுக்கு வந்தது.
அத்தோடு பெரும் ஏக்கமும் வந்தது, அவள் அதில் மூழ்கி பாடினாள்.
“துங்க மலர்ப் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
செங்கட் கருமுகிலின் திரு உருப் போல் மலர் மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையில்
தங்கு செந்தாமரைகாள் எனக்கு ஓர் சரண் சாற்றுமினே
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திரு உடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ?
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள்
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே”
பாடியவள் அப்படியே அந்த வண்டாடும் மலரைப் பார்த்துக் கொண்டே இருந்தாள், அங்கே ஆடிய வண்டுகளும் கண்ணனின் முகமும் மாறி மாறி தெரிந்தன, சட்டென பிரமாண்டமாக பெரிதான அந்த மலர் அவளை அப்படியே உள்ளிளுத்துக் கொண்டது.
அவள் கண்விழித்து பார்த்தபோது ஒரு மாளிகையில் நின்று கொண்டிருந்தாள், உயர்ந்த மாடங்களுடன் கூடிய அம்மாளிகை யமுனையின் அருகிலே கம்பீரமாய் நின்றது, மாளிகையின் தூண்கள் அற்புதமான சிற்பங்கள் தங்க இழைகளால் மூடப்பட்டு ரத்தினங்களினால் ஜொலித்துக் கொண்டிருந்தன.
அவள் ராணிக்குரிய அணிகலன்களை அடையாளங்களை அணிந்திருந்தாள்.
யமுனையின் ஈரக்காற்று அவள் முடிகளைக் கோதிவிட அதைச் சரிசெய்தபடியே கண்ணனின் நினைவில் ஒரு ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள், அந்த ஊஞ்சல் தானாக ஆட ஆரம்பித்தது.
மெல்லிய கற்பூர வாசம் அங்குச் சூழ்ந்தது, ஆண்டாள் மெல்லப் புன்னகைத்துக் கொண்டாள், அந்நேரம் ஒரு கரிய உருவம் மெல்ல அங்குக் காற்றில் உரு கொண்டு அவள் அருகே அமர்ந்தது.
ஊஞ்சல் மெல்ல ஆடிக்கொண்டிருந்தது, “ஆண்டாளே, என்ன பாடினாய்?” எனக் குரல் கேட்டபோது தன் அருகில் கண்ணனைக் கண்டாள் ஆண்டாள்.
கொடிய தாகத்தில் சிக்கியவன் குளிர்நீரைக் கண்டது போல் அவன் முகம் கண்டு மகிழ்ந்தவள் அப்படியே ஒட்டிக்கொண்டாள், ஓட்டிக் கொண்டவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வந்தது.
“ஆண்டாளே” எனும் அவனின் கேள்விகளுக்கெல்லாம் அவளிடமிருந்து கேவிய குரல் மட்டும் பதிலாக வந்தது.
கண்ணன் அவளை அணைத்துக் கொண்டான். ஏதும் பேசவில்லை, ஊஞ்சல் இருவரோடும் ஆடிக்கொண்டிருந்தது.
கண்ணன் மெல்லக் கேட்டான் “என்ன பாடினாய் ஆண்டாளே?”
அவள் அவனை உற்றுப்பார்தாள் அவன் கண்ணைச் சில நொடிகள் பார்த்தாள், பின் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு சொன்னாள்.
“அழகான திருமாலிருஞ்சோலையின் உயர்ந்த மரங்களே, கார்முகில் வண்ணம் கொண்ட என் கண்ணணின் கண்களைப் போல சிவந்த நிறம் கொண்ட மலர்களில் ஆடும் வண்டுகளே, அந்தச் சோலையில் இருக்கும் சுனைகளே, அந்தச் சுனைகளில் பூத்துக் கிடக்கும் தாமரைகளே, அவனையே நினைத்து வாழும் எனக்கோர் புகலிடம் சொல்லுங்கள்” எனப் பொருள் கண்ணா என்றவள் கண்களில் ஏக்கமும் சிறு நாணமும் கொண்டு தலைகுனிந்தாள்.
அவள் தலைதொட்டுக் கேட்டான் கண்ணன் “அடுத்தப் பாடல் என்ன கண்ணே?”
“அந்தத் திருமாலிருஞ்சோலை நாயகனுக்கு நூறு கொப்பரை நிறைய வெண்ணெய் வைத்தேன், நூறு கொப்பரை நிறைய அக்கார அடிசிலும் வைத்தேன், அவற்றைக் காணிக்கையாய் வைத்து வணங்கி நிற்கின்றேன், அவன் அவற்றையெல்லாம் என்னோடு சேர்த்து எடுத்துக் கொள்வான் எனக் காத்திருக்கின்றேன்” என்றாள்.
அவன் வெடித்துச் சிரித்தான், அவள் காதுகளில் காதணி குலுங்க அவனை ஏறிட்டு பார்த்து “என்ன?” என்றாள்.
“வெண்ணைக்கு நான் கட்டுப்படுவேன் அதுவும் நூறு கொப்பரை வெண்ணெய் என்றால் நகரமாட்டேன் என நினைத்துவிட்டாய்” என்றான்.
“உனக்கு அனுதினமும் படைத்து வைப்பதை சொன்னேன், ஒரு கிண்ணம் நிறைய வழக்கமாக வைப்பேன். இம்முறை பெரும் கனவாகச் சொன்னேன். உன்னைப் பற்றி தெரியாதா கண்ணா. துரியோதனன் கொடுத்த பெரும் விருந்தை புறக்கணித்து விதுரன் வீட்டில் கூழ் உண்டவன் நீ.
மதுரா மாளிகையின் விருந்துணவினை விட குசேலலின் அவலுக்கு ஆசைபட்டவன் நீ.
பாஞ்சாலி அர்ப்பணமாக கொடுத்த ஒரே ஒரு முருங்கை இலைக்குக் கட்டுப்பட்டு நின்றவன் நீ, நியாயத்துக்கு மட்டும், உண்மையான பக்திக்கு மட்டும் நீ கட்டுப்படுவாய். இது எனக்கான தனி ஆசை, நூறு கொப்பரை நிறைய உனக்கு அள்ளி அள்ளி வெண்ணையும் அடிசிலும் படைக்க பெரும் ஆசை” என்றவள் ஏதோ முணுமுணுத்தாள்.
“என்ன ஆண்டாளே” என்றான் கண்ணன்.
“ஒரு பெண்ணுக்குத் தனக்குரியவனை உண்ண வைத்துப் பார்க்கும் மகிழ்ச்சியின் நிறைவினைச் சொல்ல வார்த்தைகள் ஏது கண்ணா? பெண்ணின் மனம் அப்படியானது, எதெல்லாம் தன்னால் முடியுமோ எல்லாம் சமைத்துப் போட்டு அவன் உண்ணும் அழகைப் பார்த்துக் கொண்டே இருப்பது ஒரு சுகம். அவன் உண்ண உண்ண அள்ளி அள்ளி இடுவது பெரும் சந்தோஷம்.
உணவிடுவது பெண்களின் கடமை, ஆனால் உரிமையுள்ளோர்க்குப் படைப்பது முழு நிறைவு. அது ஒரு பரவச நிலை, இருப்பதை எல்லாம் அள்ளிக் கொடுத்து உண்ண வைத்து அழகு பார்ப்பது ஒரு நிறைவு. அதனால்தான் நூறு கொப்பரைகள் நிறைய வெண்ணையும் நெய்சோறும் வைத்து நீ உண்பதை பார்த்துக் கொண்டே இருக்க விரும்பினேன்” என்றவள் தொடர்ந்தாள்.
“அப்படி நீ அந்த நூறு கொப்பரை வெண்ணெயும் அடிசிலும் ஏற்றுக்கொண்டு என்னை உன்னோடு சேர்த்தால் நூறாயிரம் கொப்பரைகளில் உனக்கு வெண்ணையும அடிசிலும் தந்து கொண்டே இருப்பேன்” இதைத்தான் பாடினேன்.
மெல்லத் தலையாட்டியபடியே அவளை அணைத்துக் கொண்டவன் உச்சந்தலையில் முத்தமிட்டுச் சொன்னான், “வண்டாடும் மலரிலும் என்னையே தேடும் ஆண்டாளே, அந்தச் சுனைகளிடமும் மலர்களிடமும் மரங்களிடமும் எனக்கோர் வழி சொல்லுங்கள் என்றாயே, நான் உனக்குப் புகலிடம் இல்லையா?” என்றான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள், பின் பார்வையினை வேறுபக்கம் திருப்பினாள், பின் மீண்டும் அவனைக் கோபுரம் நோக்கும் கன்றுகுட்டி போல் பார்த்தாள்.
அவன் அவளை நோக்கி கைகளை நீட்ட குழந்தைபோல் தாவி அணைத்துக் கொண்டவள் அவன் தோள்களில் மாலைபோல் கிடந்தபடி சொன்னாள்.
“கண்ணா, நான் உன்னிடம் எவ்வளவு அனுதினமும் மன்றாடுகின்றேன், என்னை உன்னுடன் சேர்த்துக்கொள் எனக் கதறுகின்றேன். நீயோ பதில் சொல்வதில்லை.
அதனால் அந்த அழகர்கோவிலில் உனக்குச் சூட மலரும் பூக்களிடம் சொன்னேன், உனக்கு நீர் கொடுக்கும் சுனையிடம் சொன்னேன், உன் மாலைகளைச் சுற்றியபடி பறக்கும் வண்டுகளிடம் சொன்னேன்.
என் காதலை உன்னிடம் சொன்னால் நீ இன்னும் ஏற்கவில்லை, மாந்தர்களிடம் சொன்னால் அவர்களுக்குப் புரிவதுமில்லை, பின் நான் யாரிடதான் சொல்வது?
ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்தவை உன் அழகர்கோவில் மலையில் மலராக, வண்டாக, சுனை நீராக வந்து உனக்குச் சேவகம் செய்கின்றன, உனக்கும் அவைகளுக்கும் ஏதோ முன் தொடர்பு உண்டு, அவை புண்ணியம் செய்தவை, அதனால் அவற்றிடம் என் நிலையினைச் சொன்னேன்” என்றவள் குரல் மாறிற்று.
கொஞ்சம் உடைந்து சொன்னாள்.
“கண்ணா, அந்த மலர்களுக்கு ஆதாரமாகச் செடிகள் உண்டு, செடிகளுக்கு மண் உண்டு, மண்ணுக்கு மழை உண்டு, அந்த வண்டுகளுக்கு ஆதாரமாக மலர்களின் தேன் உண்டு, சுனைக்கு ஆதாரமாக நீர் உண்டு.
இங்கு எல்லாமும் ஏதோ ஒன்றைச் சார்ந்திருக்கின்றன, இந்த மண் மழையினைச் சார்ந்திருக்கின்றது, மழை சூரியனைச் சார்ந்திருக்கின்றது, சூரியன் மானிடரின் அவிர்பாகத்தையும் வழிபாட்டையும் சார்ந்திருக்கின்றது.
இதோ இந்தச் சோலைக்கு மலை அடைக்கலம், அதோ அந்தக் கன்றுவிற்குப் பசு அடைக்கலம், பசுவுக்கு இடையர் தொழுவம் அடைக்கலம், அதோ அந்தப் பறவைக்கோர் கூடு உண்டு, இங்கு எல்லார்க்கும் எல்லாமும் ஒரு அடைக்கலம் உண்டு.
ஆனால் எனக்கென யார் உண்டு சொல்? எனக்கான ஒரே ஒரு அடைக்கலம் நீ, நான் என்னை முழுக்க நம்பி ஒப்டைத்திருக்கும் பெரும் புகலிடம் நீ.
நீ என்னை இன்னும் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நான் என்ன செய்வேன் சொல்? நான் உனக்குக் கட்டளை இட முடியுமா? இல்லை ஆத்திரமடைந்து கத்திவிட முடியுமா? நீ அதற்கெல்லாம் ஏன் அஞ்சவேண்டும் சொல், நீ தெய்வம் நான் சாதாரண மாய மானிடப் பிறப்பு.
உன்னிடம் நான் அடைக்கலமாக வருகின்றேன் எனச் சொல்லி அழத்தான் முடியும், திருக்கோவிலைத் திறக்கும் மனமும் பொறுப்பும் உன்னுடையது, அது திறக்காவிட்டால் நான் அந்தக் கதவில் முட்டி அழமுடியுமே தவிர வேறு என்ன செய்துவிடமுடியும்?
கண்ணன் அவளைச் சமாதானபடுத்தினான், “கண்ணே, நான் உனக்கு அடைக்கலம் என்பதை விட நீ தானே எனக்கு அடைக்கலம், அது உனக்குப் புரியவில்லையா?” என்றான்.
ஆழ்ந்த நிசப்தத்தின் நடுவே அவள் மெல்ல விசும்பும் ஒலிமட்டும் கேட்டது, அவளே அதனை உடைத்துச் சொன்னாள், “அப்படியானால் நீ ஏன் என்னை இன்னும் உலகறிய ஏற்றுக்கொள்ளவில்லை, நான் எப்போதும் உன்னை என் மனதில் வைத்துப் பூஜிக்கின்றேன், ஊரறிய உலகறிய பூஜிக்கின்றேன், உனக்காய் வாழ்கின்றேன்.
அதிகாலை எழும்பியது முதல் உலகறிய உன் நினைவிலே வாழ்கின்றேன். இரவில் உன் நினைவினிலே நான் மட்டும் அறிய உறங்குகின்றேன், ஆனால் நீதான் உலகறிய என்னை ஏற்கவில்லை” என்றாள்.
“காலம் வரும்போது அது நடக்கும் கண்ணே, என் வார்த்தைகள் நிறைவேறும்” எனச் சொல்லிப் பெருமூச்சு விட்டான் கண்ணன்.
அவன் முகத்தை ஒருமுறை பார்த்தவள் அவன் கைகளைப் பற்றி சாய்ந்து கொண்டாள், “நம்புகின்றேன் கண்ணா, என் ஒரே ஒரு புகலிடம் நீ, நீ மட்டும்” எனச் சொல்லிக் கொண்டாள்.
யமுனையில் படகு போல் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது, கண்ணன் மெல்லச் சொன்னான்.
“ஆண்டாளே, உன் அன்பு பெரிது, என்மேல் கொண்டிருக்கும் காதல் பெரிது, அதனை 100 கொப்பரைகளில் வெண்ணெய் வைத்துச் சொல்லும் அவசியம் என்ன? எனக்கு உன் மனம் தெரியாதா?”
அவள் புன்னகைத்துக் கேட்டாள் “அதன் அர்த்தம் உனக்குப் புரியவில்ல்லையா கண்ணா?”
அவன் இல்லை எனத் தலையாட்டினான், அவள் தொடர்ந்தாள் “கண்ணா, உனக்கு ஒரு கிண்ணம் வெண்ணெய் தினமும் என்றால் ஒரு கொப்பரை எவ்வளவு நாள் வரும்?
ஒரு வருடம்.
அப்படியானால் 100 கொப்பரை?
100 வருடம்.
அதேதான் கண்ணா, நான் நூறுவருடம் உன்னோடு வாழவிரும்புகின்றேன், ஊர் அறிய உலகறிய நூறு வருடம் உன்னோடு வாழவேண்டும் அதுவும் தீராது என்பதால் இன்னும் நூறு ஆண்டு வேண்டும். பல நூறு ஆண்டுகள், நூறு நூறு ஆண்டுகள் உன்னோடு நான் வாழும் வரம் கேட்டேன் கண்ணா…
நூறாயிரம் வருடம் நான் உன்னோடு வாழும் வரத்தைக் கேட்டேன், அதைத் தவிர வேறு உன்னிடம் நான் என்ன கேட்பேன் கண்ணா….:
கண்ணன் திகைத்துப் போனான், அவனிடம் பதிலேதுமில்லை. நூறு கொப்பரை வெண்ணெயெல்லாம் அவளின் பிரமாண்ட கனவு தன்னோடு வாழும் பெரும் கனவு என்பதை அறிந்து துடித்துப் போனான்.
அதுவும் அது நூறாயிரம் கொப்பரை என்றபோது அவனிடம் வார்த்தையில்லை, அவன் அமைதியானான்.
மெல்ல அவள் தலையினை வருடியபடி கேட்டான், “நூறு நூறுஆண்டுகள் நீ பூமியில் என்னோடு வாழவேண்டும் அவ்வளவுதானே கண்ணே”
அவள் அவன் விரல்களைப் பற்றிக்கொண்டு கண்களைப் பார்த்தபடிச் சொன்னாள், “கண்ணா, இந்த விஷயத்தில் நான் பேராசைக்காரி, நூறு நூறு ஆண்டுகள் பூமியில் அன்று வானத்தில் வேண்டும்”
“வானத்தில் ஒரு நாள் என்றால் பூமியில் ஒரு வருடம் ஆகுமே கண்ணே” என்றான் கண்ணன்.
“அதேதான் கண்ணா, நூறு நூறு ஆண்டுகள் உன்னோடு நான் கலந்திருக்க வேண்டும், யுகம் யுகமாக உன்னொடு உன் அருகில் வாழ வேண்டும் அதைத்தான் பாடினேன், யுகம் தாண்டி, நான்கு யுகம் தாண்டி, சதுர யுகமெல்லாம் தாண்டி நூறாயிரம் நூறாயிரம் காலங்கள் உன்னோடு வாழவேண்டும் கண்ணா” என்றவள் அவனை இறுகப் பற்றிக் கொண்டாள்.
பின் அவனிடமிருந்து சற்று விலகிச் சொன்னாள்.
“கண்ணா, நான் ஒரு நாள் வாடும் மலராக, ஒரு மாதம் வாழும் வண்டாக ஒரு வருடம் வாழும் சுனை நீராக அல்ல, நான் காலம் காலமாக உன்னோடு வாழவேண்டும், அந்த வரத்தைக் கேட்கின்றேன்.
எந்நேரமும் உன்னோடு கலந்திருக்கும் பெரும் வரத்தைக் கேட்கின்றேன்.
என் மனமெனும் கடலைத் தவமெனும் மத்தால் கடைந்து உருவான ஞான வெண்ணையினை என் ஆத்மத்தை உன்னிடம் வைக்கின்றேன், அக்கார அடிசில் போன்ற பக்குவமான ஆத்மாவினை உன் முன் வைக்கின்றேன்.
100 முறை உன் முன் வைக்கின்றேன், அதனை ஏற்றுக்கொள். ஏற்றுக்கொண்டு காலமெல்லாம் என் ஆத்மாவினை உன்னோடு வைத்துக் கொள், என்னைக் கைவிட்டுவிடாதே.
வாழ்க்கையினைக் கடைந்தெடுத்த ஞானமிது, சமைத்தெடுத்தப் பக்குவமிது, எல்லாம் நீ என அடைக்கலமான என்னை தள்ளிவிடாதே, நான் நூறு நூறு காலம் உன்னோடு கலந்து வாழவேண்டும்.
அதைத் தவிர எனக்கேதும் ஆசையுமில்லை, வாழ்க்கையுமில்லை, எண்ணமுமில்லை. நான் என்னை உருக்கி வெண்ணையாய் வைத்திருக்கின்றேன், என்னை வேகவைத்து அடிசிலாய் தந்திருக்கின்றேன் ஏற்றுக்கொள், உன்னோடு கலந்துவிடுகின்றேன்”
என்றவள் ஓங்கி அழுதாள், வெள்ளத்தில் சிக்கிய மான்குட்டி போல் கதறியவளை வாஞ்சையுடன் பார்த்தான் கண்ணன்.
அவள் மெல்ல நிறுத்திச் சொன்னாள் “அதை நீ தர மறுத்தால் நான் நூறு பிறவி உனக்காக பிறப்பேன், ஆயிரம் பிறவிகள் எடுத்தாலும் உனக்காக காத்திருப்பேன், இது சத்தியம். உனக்காக ஆயிரமாயிரம் பிறவிகள் எடுத்துக் கல்லானாலும், பூவானாலும் , வண்டானாலும், நீரானாலும் உனக்காகக் காத்திருப்பேன், நீ என்னை உன்னோடு சேர்க்கும் வரை காத்திருப்பேன்”
சொன்னவள் அப்படியே சாய்ந்து அழுதாள், அவள் அழுகைப் பெரிதாயிற்று, கண்கள் சிவக்க அழுதவளை நோக்கிச் சொன்னான் கண்ணன்.
“ஆண்டாளே, நீ கேட்ட வரம் தந்தேன், நூறு நூறு ஆண்டுகள், நூறாயிரம் ஆண்டுகள் நீ என்னோடு நிலைத்திருப்பாய், என் பெயர் உள்ள இடமெல்லாம் நீயும் கால காலத்துக்கும் நின்றிருப்பாய்”
சொன்னவனைச் சிவந்த கண்களில் நீர்மல்க பார்த்தாள் ஆண்டாள், அவன் புன்னகைத்தான், தன் நிலை கண்டும் அவன் புன்னகைக்கக் காரணம் தெரியாமல் அவள் புருவம் சுருக்கினாள்.
அவன் சொன்னான் “என் கண்களைச் சிவந்த தாமரை கண்கள் எனப் பாடினாயே, இப்போது உன் கண்கள்தான் அந்த நிறத்தில் இருக்கின்றன, நீயும் என்போலவே ஆகிவிட்டாய்”
அவள் தலைமுடியினைச் சரிசெய்தவாறே புன்னகைத்தாள் கண்ணன், அவளை இரு கரங்களையும் நீட்டி விரல்களைக் குவிக்கச் சொன்னான்.
அவள் அப்படியே செய்தாள், அவள் வலக்கையில் ஒரு கிண்ணம் வெண்ணெயும் இடது கையில் ஒரு கிண்ணம் அக்கார அடிசிலும் வந்தது.
“ஆண்டாளே அதனை வீசு” என்றான், அவள் கைகளை மடித்து வீசினாள், அங்கே நூறு கொப்பரை நிறைய வெண்ணெயும் அக்கார அடிசிலும் வந்தன.
ஆண்டாள் அப்படியே சொக்கிப் போனாள், அவள் கனவில் பாடியது கண்முன் நடந்தது, கைகளை முகத்தின் மேல் பொத்தி மகிழ்ந்தவள் அவன் தோள்களைத் தட்டி மகிழ்ந்தாள்.
“இவை எனக்காக நீ தந்தது ஆண்டாளே” என்றபடி எழுந்தான் கண்ணன், அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் பெரும் விஸ்வரூபமெடுத்தான் பரந்தாமன் கோலம் கொண்டான், அர்ஜூனனுக்கு அவன் காட்டிய அந்தக் கோலத்தில் நின்று வாய் திறந்தான்.
நூறு கொப்பரை வெண்ணையும் அடிசிலும் நொடியில் உள்ளே புகுந்தன.
அதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஆண்டாளுக்குக் கை கால்களெல்லாம் தானாய்ப் பணிந்தன, பரந்தாமா என்றபடி மண்டியிட்டு குப்புறப் பணிந்து வணங்கினாள்.
நிமிர்ந்து பார்க்கும் போது தன் வீட்டின் மாடத்தில் இருந்தாள், கைகளில் ஏதோ பிசுபிசுக்க பார்த்தாள், கொஞ்சம் வெண்ணெய் இருந்தது.
அவள் புன்னகைத்து வானம் நோக்கினாள். கருடன் ஒன்று வட்டமிட்டது, பெருமாள் கோவிலின் மணியோசை உரக்கக் கேட்டது, அவள் சிரித்தபடியே தயாராகிக் கோவிலுக்குச் சென்றாள்.
அங்கே “பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம்” எனப் பாசுரம் பாடிக் கொண்டிருந்தார்கள், உருக்கமாக கவனமாகப் பாடிக்கொண்டிருந்தார்கள், அவள் சந்நிதியில் கண்ணன் சிலையினைக் கண்டு நாணத்துடன் புன்னகைத்தாள், அவன் பதிலுக்குக் கண்ணசைத்துப் புன்னகைத்தது அவளுக்கு மட்டும் தெரிந்தது.