சிவ வாக்கியார் பாடல்கள் : 21 to 30

சிவ வாக்கியார் பாடல்கள் : 21

“அஞ்செழுத்தி லேபிறந்து அஞ்செழுத்தி லேவளர்ந்து

அஞ்செழுத்தை யோதுகின்ற பஞ்சபூத பாவிகாள்

அஞ்செழுத்தி லோரெழுத் தறிந்துகூற வல்லிரேல்

அஞ்சலஞ்ச லென்றுநாத னம்பலத்தி லாடுமே”

இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும்.

“அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து

அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்

அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்

அஞ்சல் அஞ்சல் என்று அம்பலத்தில் ஆடுமே”

அதாவது அஞ்செழுத்தான “ஓம் நமசிவாய” என்பதை  ஓதும் குலத்தில் பிறந்து, அந்தப் பஞ்சரட்சரத்தை ஓதி வளந்ந்து தொடர்ந்து அதையே ஓதிக்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்களால் அமைந்த உடலைக் கொண்ட பாவிகளே, அந்த ஐந்தெழுத்தில் ஓர் எழுத்து உங்களுக்கு போதும் என அறியமாட்டீர்களா?

அதை அறிந்து சொன்னால் அஞ்சாதே அஞ்சாதே என அந்தப் பரம்பொருள் நடராஜ கோலத்தில் அம்பலத்தில் ஆடுவதை காணலாமே என்பது பாடலின் பொருள்”

அதாவது,காலம் காலமாக நமசிவாய எனக் ஓதிக்கொண்டே இருக்கும் பஞ்சபூத பாண்டங்களான மானுடரே, அங்கே ஓர் எழுத்தைச் சொன்னாலே போதும் அங்கே சிவனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணலாம், அதை முயற்சியுங்கள் என்கின்றார்.

அதாவது, அசபை எனும் ஓரெழுத்து மந்திரத்தைச் சொன்னால்  போதும் எல்லா யோகமும் கைக்கூடும், சிவனின் ஆனந்த நடனத்தையே காணலாம் என்கின்றார்.

இதனைக் கொங்கண முனிவரும் சொல்கின்றார்.

 “ஓம் என்ற அட்சரம் தானுமுண்டு அதற்குள் ஊமை எழுத்தும் இருக்குதடி” என்கின்றார்

வள்ளலார் இதனைத் தன் பாணியில் சொல்கின்றார்.

“ஓரேழுத்தில் ஐந்துண்டென்பார் வெண்ணிலாவே -அது ஊமை எழுத்தாவதென்ன வெண்ணிலாவே” என்கின்றார்.

அகத்தியரும் இந்த மந்திரத்தின் அருமைகளை பின் வருமாறு கூறுகிறார்.

“எகமேனும் ஓரெழுத்தின் பயனைப் பார்த்தே

 எடுத்துரைக்க இவ்வுலகில் எவருமில்லை

ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக் கொண்டே அறிந்தொமேன்பர்

மௌனத்தை அவனை நீயும் வேகாச்

சாகாத தலை கால் விரைந்து கேளாய்

விடுத்த அதனை உரைப்பவனே ஆசானாகும்

தேகமதில் ஒரெழுத்தைக் காண்பவன் ஞானி திருநடனம் காண முத்தி சித்தியாமே!”

என்கின்றார் அகத்தியர்.

ஆம், அந்த ஓர் எழுத்து எது? ஊமை எழுத்து எது?

அதுதான் அசபை எனும் மந்திரம், ஒளவை அதுபற்றி தெளிவாகச் சொல்கின்றாள்.

“அசபை யறிந்துள்ளே யழலெழ நோக்கில்

இசையாது மண்ணிற் பிறப்பு”

அசபை என்பது வாயால் சொல்லாமல் மூச்சால் செய்யப்படும் மந்திரப் பயிற்சி அது வார்த்தை அற்றது, அதைச் செய்ய செய்ய மூலாதாரத்தில் இருந்து எழும் அக்னியான சக்தி மேலேழுந்து சிரசை அடையும், அப்பொழுது பெரும் ஞானம் வாய்க்கும்.

வாய்திறந்து சொல்லப்படும் மந்திரம் சபை, மூச்சுக்காற்றிலே வார்த்தையின்றி சொல்லபடும் மந்திரம் அசபை, அது மந்திரம் என்பதை விட மூச்சுப்பயிற்சி என்பதே சரி.

அந்நிலையில் மூச்சு வெளியேறி உள்வாங்கும் ஒரே ஒரு ஒலிமட்டும் கேட்பதால் அது ஒரேழுத்து மந்திரம் எனவும் அழைக்ப்படும்.

ஔவையார் விநாயகர் அகவலில் “குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து” எனச் சொல்கின்றார்.

இந்த அசபையினைப் பட்டினத்தாரும் பாடுகின்றார்.

“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறுஒருவர்க்கு

எட்டாத புட்பம்  இறையாத தீர்த்தம்  இனிமுடித்துக்

கட்டாத லிங்கம்  கருதாத நெஞ்சம்  கருத்தின்உள்ளே

முட்டாத பூசைஅன்றோ குருநாதன் மொழிந்ததுவே”

இதனைத் திருமூலரும் பாடுகின்றார்.

“போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தை

தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி

சாற்றுகின் றேன்அறை யோ சிவ யோகத்தை

ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே”

அதாவது, பஞ்சாட்சரம் என்பது “ஓம் நமசிவாய” என்பது சிவனின் நாமம் அல்ல, பரமனை வழிபடும் மந்திரம் அல்ல, அது ஒரு பயிற்சி, சக்கரங்களை இயக்கும் பயிற்சி.

அதைச் சரியாகச் சொன்னால் பலன் உண்டு, அது அல்லாமல் வெறுமனே சொன்னால் அதனால் பலனில்லை, அப்படி அதனை எப்படிச் சொல்லவேண்டும் எனத் தெரியாமல் சொல்வதை விட, மூச்சுப்பயிற்சி எனும் பயிற்சியினை, மூச்சு மட்டும் சென்றுவரும் சத்ததைக் கொண்ட ஓரேழுத்தை, பேசா மந்திரத்தை பின்பற்றினால், மிக மிக மௌனமாக இருந்து மூச்சினைக் கவனித்தால், அந்த மூச்சு எழுப்பும் ஒரு ஒலியினை மட்டும் கவனித்தால் போதும் அது இறைவனோடு கலக்க வைத்து அவன் ஆனந்த தாண்டவத்தையும் தரும் என்கின்றார் சிவ வாக்கியார்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 22

“அஞ்சுமஞ்சு மஞ்சுமே யனாதியான தஞ்சுமே

பிஞ்சுபிஞ்சு தல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்

நெஞ்சிலஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரே

லஞ்சுமில்லை யாறுமில் லனாதியாக தோன்றுமே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.

“அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அனாதியானது அஞ்சுமே

பிஞ்சு பிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்

நெஞ்சில் அஞ்சு கொண்டுநீர் நின்று தொக்க வல்லீரே

அஞ்சுமில்லை ஆறுமிலா அனாதியாக தோன்றுமே”

ஐந்தெழுத்தே ஐந்து பூதங்களாகவும் ஐந்து புலன்களாகவும் அமைந்து இயங்குகின்றது அதுதான் ஆதியும் முடிவிலாததுமான ஐந்து தொழிலின் சாயலாக அமைந்துள்ளது.

அந்த ஐந்து எழுத்துத்தான் ஒரே சக்தியான ஜீவனாக சிவனாக நின்று கொண்டிருக்கின்றது, அதுதான் மூச்சாக வெப்ப காற்றாக நின்று உடலை இயக்குகின்றது.

இதை அறியாமல்  வெறும் வாயால் மந்திரமும் ஐந்தெழுத்தும் ஒதி என்ன பயன்? பிதற்றிக்கொண்டிருக்கும் பித்தர்களான மானிடரே, வார்த்தையால் அவனைப் போற்றாமல் நெஞ்சத்தால் அவனை நினைந்து அவனைத் தியானியுங்கள்.

அப்போது ஐந்தெழுத்தும் அவசியமில்லை, ஆறு ஆதாரங்களின் சக்கரமும் அவசியமில்லை, எல்லாம் அவனாக உணர்வீர்கள், ஐந்தெழுத்தும் ஆறு ஆதாரமும் எல்லாமே சிவமே என்பதை அறிவீர்கள் என்பது பாடலின் பொருள்.

அதாவது, ஐந்துவகை பூதங்களின் சேர்க்கையால் அமைந்த உடல் இது, அப்படியே ஐந்து கோசங்கள் எனும் அடுக்குகளும் உண்டு.

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐந்து தத்துவங்களில் அமைந்த உடல் இது. அப்படியே அன்னமய கோசம், பிராணமய கோசம்,  மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என ஐந்து அடுக்குகள் மானுடருக்கு உண்டு.

கோசம் என்றால் முட்டை போல் சூழ நிற்கும் அடுக்கு.

அன்னமய கோசம் என்றால் இந்த‌ ஸ்தூல உடல் அன்னம் அதாவது உணவால் தோன்றி, உணவால் வளர்ந்து, உணவின் மூலமாகிய மண்ணில் சிதைந்து அழியும் இந்த உடல்.

பிராணமய கோசம் என்றால் வாயு (காற்று) உடலின் உள்ளும் புறமும் இருக்கிறது. உடலுக்குள் இது மூச்சுக் காற்றாக உள்ளது. இதன் இயக்கத்தாலேயே உடலின் எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன. இதன் மூலம் செயலாற்றும் புலன்கள், உயிர் வாழ்வதற்கு அவ்சியமான உள் உறுப்புகள், அவற்றின் இயக்கங்கள், ஆகியவை பிராணமய கோசம், ஆவி உடல் என்றால் இதுதான்.

மனோமய கோசம் என்றால் உணர்ச்சிகள், உணர்ச்சிகளுக்கு ஆதாரமான மனம், அதன் பல்வேறு அடுக்குகள், செயல்பாடுகள் ஆகியவை மனோமய கோசம்.

விஞ்ஞானமய கோசம் என்றால் எது சரி, எது தவறு? எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது? எது உண்மை, எது பொய்? எது நிலைக்காது, எது நிலைக்கும்? என்ற தேடல், அறிவின் இந்த இயல்புகளும் செயல்பாடுகளும் அடங்கிய உறை விஞ்ஞானமய கோசம் எனப்படும்.

ஆனந்தமய கோசம் என்பது இந்த அடுக்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருக்கும் நிலை. இந்த நிலையை உணர்வதும் அடைவதுமான ஞானப்பெரு நிலை.

இப்படி ஐந்து பூதம், ஐந்து அடுக்கு, ஐந்து புலன்கள் எனக் கொண்ட உடலைக் கொண்டிருகும் மானுடர்கள் ஐந்தெழுத்து மந்திரத்தை வாயினால் ஓதினால் போதும் என நினைக்கின்றார்கள், சிலரோ ஆறு சக்கரங்களைத் துலக்கினால் போதும் என நினைக்கின்றார்கள்.

இப்படியான பித்தர்களுக்கு நெஞ்சில் சிவனை நினைத்துத் தியானித்தால் போதும் என தெரியவில்லை, அதை செய்யாமல் வாயால் சொல்லும் மந்திரம் எப்படி பலனளிக்கும்

மானுடரே, மனதால் அவனை தியானியுங்கள் அப்போது ஐந்து பூதம், ஐந்து அடுக்கு, ஐந்து புலன் , ஆறு ஆதாரம் எல்லாமே சிவன், உள்ளிருக்கும் சிவன் என்பதை அறிவீர்கள் என போதிக்கின்றார் சிவவாக்கியார்

ஒளவையார் தன் ஞானக்குறளில் சொல்வார்

“நெஞ்சகத்து ணோக்கி நினைப்பவர்க் கல்லாஅல்

அஞ்சலென் னாது சிவம்”

சிவனிடம் முழுக்க சரணடையவேண்டும் அடைக்கலமாக வேண்டுமென்றால், மனதை ஒருமுகப்படுத்தி மனம் முழுக்கச் சிவனைத் தவிரே ஏதுமில்லை எனும் நிலைக்குக் கொண்டுவருவதன்றி வேறு வழி எதுவுமில்லை என்கின்றார்.

இந்தச் சரணடைதலைத்தான் முழுக்கச் சரணடையும் நிலையினைத் தத்துவ விசாரங்களுடன் போதிக்கின்றார் சிவ வாக்கியார்.

அதாவது ஏன் ஐந்து பூதம், ஐந்து கோசம், ஐந்து புலன், ஐந்து தொழில், ஆறு ஆதாரம் எனத் தத்துவ ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கின்றாய் மானிடனே, மனதால் சிவனை நினைந்து பணிந்தால் எல்லாம் சிவம் என்பதை அறிந்துகொள்வாய், அதைவிடுத்து ஏன் தத்துவ விசாரங்களைக் குழப்புகின்றாய் என எளிய போதனையினைச் சொல்கின்றார்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 23

“நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்

வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே

காலனோலை வந்தபோது கைகலந்து நின்றிடும்

ஆலமுண்ட கண்டர்பாத மம்மைபாத முண்மையே. “

இப்பாடல் இப்படிப் பிரிந்துவரும்.

“நீளவீடு கட்டுறீர் நெடும் கதவு சாத்துறீர்

வாழவேணும் என்றலோ மகிந்திருந்த மாந்தரே

காலன் ஓலை வந்தபோது கை கலந்து நின்றிடும்

ஆலம் உண்ட கண்டர் பாத அம்மை பாதம் உண்மையே”

“ஏ மானுடர்காள், நீங்கள் பெரிய பெரிய சுவர்களைக் கொண்ட வீட்டைக் கட்டி, அங்கே ஏகப்பட்ட கதவுகளையும் அமைத்து உள்ளே பாதுகாப்பாக இருந்தாலும் எமனுக்கான காலம் வந்து அவன் வந்து நிற்கும்போது இந்தச் சுவரும் கதவும் உங்களைக் காக்குமோ? காக்காது.

அதனால் ஆலகாலம் விஷம் உண்டு உயிர்களைக் காத்தவன், அந்தப் பிரானைக் காத்தவளுமான எம்பிராட்டியார் என இருவரின் பாதங்களையும் பணியுங்கள், அதுதான் எக்காலமும் உங்களுக்குக் காவல், அதைச் செய்யுங்கள்”

ஒரு அழகான போதனையினைச் சூட்சுமமாகப் போதிக்கின்றார்.

பெரிய பெரிய வீட்டைக் கட்டி, கோட்டைச் சுவர் கட்டி, உள்ளே  கதவுகள் பல கொண்ட மாளிகையில் இருந்தாலும் காலன் விடுவானோ?, மரணத்தில் இருந்து தப்ப முடியுமோ?

அதனால் முடிவு என்ன என்பதை அறிந்து அன்னையோடு இணைந்திருக்கும் நாதன் பாதம் பணியுங்கள் என்கின்றார்.

அதாவது, சுவற்றைக் கட்டி கதவைப் பூட்டி உள்ளே இராமல், லௌகீகமாக அப்படிச் செய்யாமல் ஐம்புலன்களைப் பூட்டி சிந்தையினைச் சுற்றி சுவர்கட்டி ஈசனை தியானத்து யோகம் செய்யுங்கள், அப்போது எமன் வந்தாலும் ஆபத்தில்லை, காரணம் நீங்கள் கயிலாய நாதன்பதம் அடைந்துவிடுவீர்கள் என்கின்றார்.

அழியக்கூடிய வாழ்வை விடுத்து, அழியாப் பரமன்பாதம் நாடுங்கள் என்பது அவரின் எளிய போதனை.

திருமூலர் இதனை இன்னும் விளக்கமாகச் சொல்வார்.

நான்கு நிலையாமையினை அவர் நுணுக்கமாகச் சொல்வார், அது உடல், செல்வம், இளமை, உயிர் இந்த நான்கும் நிலையானது அல்ல என்பார்.

உடலைப் பற்றிச் சொல்வார்.

“பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்

உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்

கொண்ட விரதமும் ஞானமும் அல்லது

மண்டி அவருடன் வழிநட வாதே.”

செல்வம் நிலையாமை சொல்கின்றார்.

“ஈட்டிய தேன்பூ மணங்கண்  டிரதமும்

கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்

ஓட்டித் துரந்திட் டதுவழி யார்கொளக்

காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே”

ஈட்டிய செல்வம் கூட வராது என்பது பொருள்.

இளமை நிலையாமை என்பதை

“கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே

விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்” என்கின்றார்.

உயிர் நிலையாமை என்பதை

“தழைக்கின்ற செந்தளிர் தண்மலர்க் கொம்பில்

இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்” என்கின்றார்.

இதைத்தான் பட்டினத்தாரும் பாடுவார்.

“வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்

போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்

தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்?

காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!

வேதத்தின் உட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்

போதித்த வன்மொழி கேட்டிலையோ? செய்த புண்ணியத்தால்

ஆதித்தன் சந்திரன் போல வெளிச்சம் அதாம் பொழுது

காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே!

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில்மட்டே

இனமான சுற்றம் மயானம் மட்டே வழிக்கேது துணை?

தினையா மளவு எள்ளளவாகிலும் முன்பு செய்ததவம்

தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே”

ஆம், உலக வாழ்வும் உடலும் செல்வமும் நிலையானது அன்று, பரம்பொருளே நிலையானவன் என எல்லா யோகியரும் சொன்னதைச் சொல்கின்றார் சிவ வாக்கியார்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 24

“வீடெடுத்து வேள்விசெய்து மெய்யரோடு பொய்யுமாய்

மாடுமக்கள் பெண்டிர்சுற்ற மென்றிருக்கு மாந்தர்காள்

நாடுபெற்ற நடுவர்கையி லோலைவந் தழைத்திடில்

ஓடுபெற்ற தவ்விலை பொறாது காணுமுடலமே”

இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும்.

“வீடு எடுத்து வேள்வி செய்து மெய்யரோடு பொய்யுமாய்

மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்

நாடு பெற்ற நடுவர் கையில் ஓலைவந்து அழைத்திடில்

ஓடுபெற்றது அவ்விலை பெறாது காணும் உடலமே”

பெரிய வீடுகட்டி அதற்குக் கிரகப்பிரவேசம் உள்ளிட்ட வேள்விகள் செய்து இன்னும் ஏகப்பட்ட யாகமெல்லாம் செய்து மெய்யாகிய வாழ்வை அறியாது மாயையான செல்வம் மக்கள் பெண்கள் சொந்தபந்தம் என இதுதான் நிரந்தர இன்பம் என வாழும் மாந்தர்களே, எல்லோருக்கும் பொதுவானவனும், எல்லோருக்கும் தீர்ப்பு சொல்பவனுமான எமன் வந்து அழைக்கும்போது என்ன செய்வீர்கள்?

உங்கள் உடலைக் கூட ஒருநாள் பாதுகாக்க மாட்டார்களே, ஒரு மண்பானைக்கு இருக்கும் மதிப்பு கூட இந்த உடலுக்கு காலன் வந்தபின் இல்லையே, அதை உணர்ந்து வாழும் போதே ஈசனை உள்ளத்தில் இருத்தி வாழுங்கள் என்பது பாடலின் பொருள்.

பெரிய வீடு கட்டி உலக இன்பம் இதுதான் என இருந்துவிடாதீர்கள், உயிர் தங்கியிருக்கும் இந்த உடல்வீடு யமன் வந்தபின்னால் பலனற்றுபோகும், அதன்பின் எந்தச் செல்வமும் உங்களுக்குப் பலனளிக்காது, சொந்த பந்தம் உங்களோடு கடைசிவரை வராது.

அதனால் பரமனை நினைந்து அவனைப் பற்றி நில்லுங்கள், அதுதான் நித்தியமானது எனப் போதிக்கின்றார்.

“நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயம் என்றே எண்ணிப்

பாக்களவாம் அன்னம் பசித்தோர்க்கு அளியாமல்

போர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் அப்போது

ஆர்ப்படுவார் என்றே அறிந்திலையே நெஞ்சமே!

உற்றார்ஆர்? பெற்றார்ஆர்? உடன்பிறப்புஆர்? பிள்ளைகள்ஆர்?

மற்றார் இருந்தால் என்? மாளும்போது உதவுவரோ?

கற்றா இழந்த இளம் கன்றது போலே உருகிச்

சிற்றாகிச் சிற்றின்பம் சேர்ந்தனையே நெஞ்சமே!

வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க

பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க

மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்

கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே?”

எனப் பட்டினத்தார் பாடியது இதுதான்.

“விதிகாணும் உடம்பை விடா வினையேன்

கதிகாண மலர்க்கழல் என் றருள்வாய்

மதிவா ணுதல்வள் ளியையல் லதுபின்

துதியா விரதா சுரபூ பதியே”

என அருணகிரிநாதர் கந்தர் அனுபூதியில் பாடுவதும் இதுதான்.

“குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு”

என வள்ளுவன் சொன்னதும் இதுதான்.

திருமூலர் இதே தத்துவத்தை தன் வழமையில் சொல்கின்றார்.

“பண்டம் பொய் கூரை பழகி விழுந்தக்கால்

உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார்

கொண்ட விரதமும் ஞானமும் அல்லது

மண்டி அவருடன் வழிநட வாதே “

நாம் உயிருடன் இருக்கும்போது கூட இருந்தவர்கள் யாரும் கூட வரமாட்டார், ஆனால் நாம் வாழும்போது செய்த பாவ புண்ணியமே நம்முடன் வரும்.

“ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச்

சூரைஅம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பு அழிந்தார்களே”

எல்லோரும் ஒன்று கூடி அழுதுபுலம்பி உடம்பின் உண்மைப் பெயரை நீக்கி பிணம் என்று பெயர் சொல்லி சுடு காட்டில் எரித்துவிட்டு நீரில் முழுகிவிட்டு நினைவையும் மறந்து விடுவார்களே. என்ன வாழ்க்கை இது?

இதைத்தான் சிவ வாக்கியாரும் பாடி நிலையில்லா  வாழ்வினை நிலையென்று எண்ணியிராதீர் மாந்தர்களே என்கின்றார்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 25

“ஓடமுள்ள போதெலாம் ஓடியே உலாவலாம்

ஓடமுள்ள போதெலாம் உறுதிபண்ணிக்கொள்ளலாம்

ஓடமும் உடைந்தபோதங்கு ஒப்பில்லாத வெளியிலே

ஆடுமில்லை கோனுமில்லை ஆருமில்லை ஆனதே”

இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும்.

“ஓடம் உள்ளபோது எல்லாம் ஓடியே உலாவலாம்

ஓடமுள்ள போது எல்லாம் உறுதி பண்ணிக் கொள்ளலாம்

ஓடமும் உடைந்த போது அங்கு ஒப்பிலாத வெளியிலே

ஆடுமில்லை கோனுமில்லை ஆரும் இல்லை ஆனதே”

அதாவது, இந்த உடலாகிய ஓடம் உள்ளவரைதான் உயிர் அதில் தங்கியிருக்கும், அதைக் கொண்டு பிறவிக் கடலில் அங்குமிங்கும் செல்லலாம் மகிழலாம், ஆனால் அந்த ஓடம் உடையும் போது அதாவது உயிர் அழியும் போது உயிர் பிரிந்துவிடும்.

அப்போது உடலுள் இருந்து மேய்க்கும் ஈசனின் அருள் இல்லை, சொந்தமில்லை பந்தமில்லை எதுவுமில்லை, அதனால் பிறவிக் கடலைக் கடக்க இந்த ஓடமாகிய உடலில் உயிர் இருக்கும் போதே யோக, தியானங்கள், முழுப் பக்திகாரியங்களைச் செய்து அந்த ஈசனை உணர்ந்து அடையுங்கள் என்பது பொருள்.

இதைத்தான் “பிறவிப் பெருங்கடல் நீந்துவர்” எனச் சொன்னான் வள்ளுவன்.

உடல் அழியக் கூடியது ஆன்மா அழியாதது, ஆன்மா முக்தி பெறுவதே வாழ்வின் நோக்கம். அதனால் ஓடமாகிய உடல் இருக்கும் போதே அந்தப் பிறவிக்கடலை கடந்துவிடும்படி இறைவன் பாதங்களைப் பற்றிக்கொள்ளுங்கள் என்கின்றார் சிவ வாக்கியார்.

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”

“நல்ல வழிதனை நாடு – எந்த

நாளும் பரமனை நத்தியே தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு”  என கடுவெளி சித்தர் பாடியதும் இதுதான்.

நாலாறு மாதம் என்றால் நான்கு + ஆறு = பத்து மாதம் எனப் பொருள், பத்துமாதமாக உருவாகும் அந்தக் தோண்டி எனும் பாண்டத்தை, அவன் உடலை அவன் வீணே கூத்தாடி உடைக்கலாமா என்பது சித்தரின் கேள்வி, அப்படியே அது சரியில்லாதது, அடியார் கூட்டத்தில் சேர்ந்து பரமனை நாடி அவனை அடைதலே பிறப்பின் நோக்கம் எனப் போதிக்கின்றார்.

அதே பாடலை திருமூலரும் சொல்கின்றார்.

“வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்

குளத்தின் மண்கொண்டு குயவன் வளைந்தான்

குடமுடைந்தால் அவை ஓடென்று வைப்பர்

உடலுடைந்தால் இறைப் போதும் வையாரே”

ஒரு குயவன் எவ்வாறு மண்ணை வடித்துப் பானை செய்கின்றானோ அவ்வாறே இந்த உடலையும் இறைவன்  வடித்திருக்கிறான். அந்த மண் குடம் உடைந்தால் அதை ஓடாகவாவது உபயோகிப்பர், ஆனால் இந்த உடல் உடைந்தால் கண் இமைக்கும் நேரம் கூட வைக்க மறுப்பார் அதைப் புரிந்துகொள் மனமே என்கின்றார்.

“நாற்றப் பாண்டம் நான்முழத்து ஒன்பது

பூற்றல் துண்டம் பேய்ச்சுரைத் தோட்டம்

அடலைப் பெரிய சுடலைத் திடருள்

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்

ஓயா நோய்க்கிடம்; ஓடும் மரக்கலம்

மாயா விகாரம் மரணப் பஞ்சரம்

சோற்றுத் துருத்தி தூற்றும் பத்தம்

காற்றில் பறக்கும் கானப் பட்டம்”

உடல் என்பது வெறும் நாற்றமெடுக்கும் பாண்டம், ஒன்பது வாயில் கொண்ட நான்கு முழ துண்டம், கசப்பான பேய்சுரைக்காய் தோட்டம், ஆசை கயிற்றில் ஆடும் பம்பரம்

அது நோய்கொண்டது, அது ஓடும் மரகலம் , மாயையினால் ஆட்கொள்ளப்படும், அது சோற்றில் நிறையும் பை, அது காற்றில்பறக்கும் கனவு பட்டம் என்றெல்லாம் உடலைச் சொல்கின்றார் பட்டினத்தார்.

அந்தத் தத்துவத்தைத்தான் இங்கே சொல்லிப் பாடிப் போதிக்கின்றார் சிவ வாக்கியார்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 26

“அண்ணலே யனாதியே யனாதிமுன் னனாதியே

பெண்ணுமாணு மொன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்

கண்ணிலாணின் சுக்கிலங் கருதியோங்கு நாளிலே

மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாற தெங்ஙனே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்

“அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே

பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன் எல்லாம்

கண்ணில் காணின் சுக்கிலம் கருதியோங்கு நாளிலே

மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு அது எங்ஙனே”

அதாவது, அந்த அண்ணலான பரம்பொருளே அனாதி (அந்+ஆதி), ஆதிக்கும் அனாதி. அந்தப் பரம்பொருளே நம் ஆத்மாவில் உறைகின்றது. பரம்பொருள் எனும் சக்தி ஆண் பெண் எல்லாம் கடந்தது அப்படியே உடல் எடுக்கும் வரை ஆத்மாவுக்கு ஆண் பெண் எனும் வேறுபாடு இல்லை. அது ஒரே சக்தி.

பூமியில் கடமையாற்ற அது ஒவ்வொரு உடலில் உயிராக உருவாகும் போது ஆண் பெண் என அடையாளப்படுத்துகின்றது, இது மண்ணில் மட்டுமல்ல தேவர்கள் உருவாகும் விதமும் இதுதான் என்பது பொருள்.

இப்பாடல் ஒரு ஆழ்ந்த தத்துவத்தைச் சொல்வது.

இறைவன் என்பது ஒரு சக்தி, அந்தப் பரம்பொருளே சிவன், அந்தச் சிவன் எல்லா உயிரிலும் எல்லா ஆன்மாவின் வடிவமாயிருக்கின்றான், எல்லா உயிரிலும் உறைந்திருக்கின்றான்.

உலக இயக்கத்துக்காக உயிர்கள் படைக்கப்படும் போது அவை ஒவ்வொருவகை உடலாகின்றன, அப்போது அந்த உடலுக்குள் நுழையும் பரம்பொருளின் சக்தி உடலைப் பொறுத்து ஆண், பெண் என வகைப்படுத்தப்படுகின்றது.

அப்படியே எல்லா உயிராகவும் எல்லாப் படைப்பாகவும் பெயரிடப்படுகின்றது, இதுதான் தேவர்கள் உலகிலும் நடப்பது.

இவை எதுவும் உண்மை அன்று, எல்லாமே மாய வெளிவடிவங்கள். மற்றபடி உள்ளே இருந்து இயக்குவது ஒரே ஒரு சக்திதான், அதுதான் எல்லா உயிரிலும் நிறைந்திருக்கின்றது. இதை அறிந்துகொள்ளுங்கள் என்பது சிவ வாக்கியாரின் போதனை.

ஞானியரின் பாடல்கள் சொல்லும்.

“ஒன்றல்ல இரண்டல்ல ஒன்றிரண்டு மல்ல

நன்றல்ல தீதல்ல நாதவிந்து மல்ல

அன்றல்ல இன்றல்ல ஆதியந்த மல்ல

மன்றுள் மரகத வல்லிகொண் டாட”

அதாவது, “கண்ணால் எவரும் காணக் கூடிய உருவம் கொண்டவன் அன்று. காண இயலாத அருவமானவனும் அன்று. உன் வடிவின் நீள அகலங்களை அறியக் கிடைக்காது. வாள் நுதல் பச்சை மடந்தை ஆகிய மரகதவல்லி சிவகாமி கொண்டாட நின்று ஆடுகின்றனையே ஐயா எனப் பொருள்.

“ஆணல்ல பெண்ணல்ல அன்றி அலியுமல்ல

காணும் உருவம் அல்ல காணா அருவுமல்ல

சேண் அல்ல வேயொரு தேவர்க்குள் ளேதேவ

வாணுதற் பச்சை மடந்தைகொண் டாட “

பூதங்கள் அல்ல புறம்பல்ல உள்ளல்ல

வேதங்க ளாலே விளங்கும் பொருளல்ல

ஆதவன் போலே அசையும் வடிவல்ல

மாதுமை யாள்பச்சை வல்லிகொண் டாட”

ஆம், இறைவன் ஒன்றானவனும் இரண்டானவனும் அன்று, எனத் தொடங்கும் பாடல் அவன் தேவரிலும் இல்லை, சொர்க்கதிலுமில்லை, பூதங்களிலுமில்லை, ஏன் வேதங்களினால் கூட அவனை முழுக்க அறியமுடியாது என்கின்றது.

“ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்

காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன

பேணுங்கால்பேணும் உருவாகும் அல்லனுமாம்

கோணை பெரிதுடைத்த எம்பெம்மானைக்கூறுதலே” என்பது நம்மாழ்வார் பாடல்.

இறைவன் ஆண் அல்ல, பெண் அல்ல, அலி அல்ல அவன் காண்பதில் அல்ல காணாததிலும் அல்ல உருவமும் அல்ல அருவமும் அல்ல எனச் சொல்கின்றார் நம்மாழ்வார்.

காரைக்கால் அம்மையாரின் பாடல் ஒன்று உண்டு.

“அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்

இன்றும் திருவுருவம் காண்கிலேன் – என்றும் தான்

எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்

எவ்வுருவோ நின்னுருவம் ஏது”

அதாவது, சிவனைத் தேடி தேடி அலைந்தேன் அவன் அருள் பெற்றுவிட்டேன். ஆனால், அவன் எப்படி இருப்பான் என்றால் என்ன சொல்வேன் எனத் தவித்துப் பாடுகின்றார் காரைக்கால் அம்மையார்.

அப்பர் சுவாமிகளும் ஒரு பாடலில் சொல்கின்றார்.

“மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி

    மயானத்தான் வார்சடையன் என்னின் அல்லால்

ஒப்புடையான் அல்லன் ஓருருவனல்லன்

    ஓரூரனல்லன் ஓர்உவமன் இல்லி

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்

    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்

    இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே”

அதாவது அவன்  இப்படி இருப்பான் என்று உதாரணம் கூற முடியாது, அவன் உருவம் உடையவன் அல்லன்

ஒரு ஊர்காரன் இல்லை, உவமை ஏதும் சொல்லமுடியாதவன், உவமை இல்லாதவன், நிறமில்லாதவன் இப்படி இதுதான் இறைவன் எனச் சொல்லமுடியாதவன் என்கின்றார் அப்பர்.

“சித்தமும் காணா சேச்சியோன் காண்க” என்கிறார் மணிவாசகர்.

“காணாத அருவினுக்கும்

    உருவினுக்குங் காரணமாய்

நீணாக மணிந்தார்க்கு

    நிகழ்குறியாஞ் சிவலிங்கம்

நாணாது நேடியமால்

    நான்முகனுங் காணநடுச்

சேணாருந் தழற்பிழம்பாய்த்

    தோன்றியது தெளிந்தாராய்” என்பதும் அப்பர் பாடல்.

இறைவன் எனும் பரம்பொருள் ஒரு மகா சக்தி அந்த சக்தி எல்லா உயிரிலும் எல்லாப் படைப்பிலும் தேவலோகத்திலும் இன்னும் ஈரேழு லோகத்திலும் ஒவ்வொரு வடிவில் ஒவ்வொரு படைப்பாக உயிராக இயங்குகின்றது, அடிப்படையில் அது ஒரே சக்தி.

அதுவே ஒவ்வொன்றையும் படைத்து உள்ளே குடியேறி இயக்குகின்றது. அப்படி இயங்கும் போதும் இயக்கும் போதும் ஆண், பெண், தேவர்கள் இன்னும் ஏகப்பட்ட பெயர்களைச் சொல்லலாமே தவிர எல்லாமுமாக இருப்பது அந்தச் சிவமே அதை அறிந்துகொள்ளுங்கள் என்கின்றார் சிவ வாக்கியார்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 27

“பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்க ளெத்தனை

பாழிலே செபித்துவிட்ட மந்திரங்க ளெத்தனை

மிண்டராய்த் திரிந்தபோ திரைத்தநீர்க ளெத்தனை

மீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்த தெத்தனை”

இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும்.

“பண்டு நான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை

பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை

மிண்டராய்த் திரிந்தபோது இரைத்த நீர்கள் எத்தனை

மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை”

முன்பு நான் பறித்து எறிந்த மலர்கள் எத்தனை? சொல்லிப் பலனளிக்காத மந்திரங்கள் எத்தனை, வழிபாட்டுக்காக இறைத்த நீர்கள் எத்தனை? மீண்டும் மீண்டும் சுற்றிவந்த சிவாலயங்கள் எத்தனை? என்பது பாடலின் பொருள்.

அதாவது, தெய்வம் தன்னுள் இருப்பது தெரியாமல், தெய்வத்தைத் தியானத்தால் உணரலாம் அடையலாம் என்பதை அறியாமல் தெய்வம் எங்கோ இருப்பதாகக் கருதி அதை வழவழைக்க பூக்களிட்டு மந்திரம் சொல்லி வழிபட்டேன், நீர் இரைத்தேன் (தீர்த்த குளியல்) ஆலயம் ஆலயமாக சுற்றினேன், ஆனால் அதெல்லாம் இப்போது எண்ணிப் பார்க்கின்றேன் என்கின்றார் சிவ வாக்கியார்.

தெய்வம் மனதில் உண்டு என்பதை இப்படிச் சொல்கின்றார்.

திருமூலர் இதனை தன் பாடலில் சொல்வார்.

“உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்

கள்ளத்தினாலும் கலந்தறிவார் இல்லை

வெள்ளத்தை நாடி விடுமவர் தீவினைப்

பள்ளத்தில் இட்டதோர் பத்தலுள் ஆமே”

உள்ளத்தின் உள்ளே உயிருக்கு உயிராக உணரப்படும் இறைவனை, அந்த உள்ளத்தில் அன்பில்லாமல், ஆரவாரமாகச் செய்யப்படும் செயல்களால், யாராலும் அடைய முடியாது, அன்பு வழியைத் தேடாமல், புறத்தில் தீர்த்தங்கள் பலவற்றையும் தேடிச் செல்பவர், தீவினையாகிய பள்ளத்தில் போடப்பட்ட ஓட்டைக் குடம் போன்றதாகும், அது நீர் கொண்டுவராது.

“உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

மெல்லக் குடைந்து நின்றாடார் வினைகெடப்

பள்ளமும் மேடும் பரந்த திரிவரே

கள்ள மனம் உடைக் கல்வி இல்லோரே”

ஒவ்வொருவர் உள்ளத்துக்குள்ளும் பல உயர்ந்த தீர்த்தங்கள் இருக்கின்றன. ஆனால் அதனை நல்ல மனம் கொண்டோர் அறிகின்றார்கள், கள்ளமனம்  உடையோர் அதை அறியாமல் காடுமேடாய்ச் செல்கின்றார்கள் என்பது பொருள்.

இன்னொரு திருமூலர் பாடல் உண்டு.

“‘கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல்

உடலுற்றுத் தேடுவார் தம்மை ஒப்பாரில்லார் திட

முற்றநந்தி திருவருளாற் சென்று

உடலிற் புகுந்தமை ஒன்றறியாரே”

அதாவது, கடலில் ஒரு பொருளைப் போட்டு விட்டு, அதைக் குளத்தில் தேடுவதைப்போல, உடலிலேயே ஒப்பற்ற தீர்த்தங்கள் பல இருப்பதை அறியாமல், அதை வெளியே தேடி அலைபவர்களைப் போன்றோர், யாருமிருக்க மாட்டார்கள். உயிருக்கு உற்ற துணையாக, இறைவன் உடலுக்குள்ளேயே பொருந்தியிருப்பதை, அவர்கள் சிறிதுகூட உணர வில்லையே என்பது பொருள்.

இங்குக் கொஞ்சம் கவனமாக யோசிக்க வேண்டும், பலர் சறுக்குவது இங்குதான்.

அதாவது சிவவாக்கியார் கோவில்கள் செல்வதை, பூக்களிட்டு வழிபாடுகள் செய்வதை, தீர்த்தங்களில் நீராடுவதைசா சாடுகின்றாரா அவை அவசியமில்லை எனச் சொல்கின்றாரா என விபரீதமாக சிந்திக்கச் கூடாது.

நல்ல அன்பான மனம், எல்லா உயிர்களிடமும் கனிவான அருளான மனம் கொண்டு இறைவனைத் தேடினால் அவன் வருவான் மனதிலே வருவான், மாறாக கொடிய மனமும் பிறர்பால் வன்மமும் மனமெல்லாம் தீமையும் கொண்டிருந்து பூக்கள் தூவி தீர்த்தமாடி ஆலயம் சுற்றினால் பலனில்லை என்பதே.

அதாவது மனதை செம்மைப்படுத்துங்கள் , கெட்டதை ஒழியுங்கள், நல்லதைச் சிந்தியுங்கள், மனதால் சரியாக இருங்கள். தெய்வம் தானாக வரும். மனதினைக் கொடியதாக்கிவிட்டு இருளாக்கிவிட்டு எந்தக் கோவில் சென்று எவ்வளவு பூக்கள் கொட்டி எத்தனை தீர்த்தங்களில் நீராடினாலும் பலனில்லை, எந்த மந்திரம் சொன்னாலும் பலனில்லை என்கின்றார்.

“மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்” என்பது அதுதான்.

ஆம், மனதை நல்லவிதமாக பண்படுத்தி அன்பும் கருணையும் எல்லா உயிர்கள் பால் அன்பு கொண்டவர்களைத் தெய்வம் தேடிவரும், அவர்கள் ஆலயம் சென்றால் வழிபட்டால் பலன் உண்டு, அப்படி அல்லாமல் மனமெல்லாம் தீமை நிரம்பியோர் எல்லா வன்மங்களும் நிரம்பியோர் ஆலயம் சென்றால் எந்தப் பூஜையாலும் பலனேதுமில்லை என்கின்றார் சிவ வாக்கியார்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 28

“அண்டர்கோ னிருப்பிட மறிந்துணர்ந்த ஞானிகள்

பண்டறிந்த பான்மைதன்னை யாரறிய வல்லரோ

விண்டவேத பொருளையன்றி வேறுகூற வகையிலா

கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப தில்லையே”

இப்பாடல் இப்படிப் பிரிந்துவரும்.

“அண்டர் கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகள்

பண்டு அறிந்த பான்மை தன்னை யார் அறிய வல்லரோ

விண்ட வேத பொருளை அன்றி வேறு கூற வகையிலா

கண்ட கோயில் தெய்வமென்று கையெடுப்பது இல்லையே”

அதாவது அண்டங்கள் அரசனனான (கோன்) இருக்குமிடம் அறிந்து உணர்ந்து கொண்ட ஞானிகள், அந்த இறைவனைத் தேடி முன்பு (பண்டு) அறிந்த பாடுகள் சிரமங்கள் எவ்வளவோ இழப்புகள் பற்றியெல்லாம் யார் அறியக்கூடும்?

வேதங்கள் வெளிப்படுத்தும் (விண்டு) இறைவனைத் தன்னுள் கண்டுகொண்ட ஞானியர் அவன் கோவில்களில் இருப்பதாகக் கருதிக் கையெடுத்துத் தொழமாட்டார்கள் என்பது பொருள்.

தெய்வம் மனதில் இருக்கின்றது, அந்தப் பரம்பொருள் நம்மில் இருக்கின்றான் என்பதை உணர்ந்த ஞானியர்கள் கோவிலுக்குச் சென்று வணங்க அவசியமில்லை எனக் கருதுவார்கள், ஆனால் அந்த ஞானநிலையினை அடைய அவர்கள் பட்டபாடுகள், அவர்கள் இழந்தவைகள், அவர்கள் தேடி தேடி அலைந்த கஷ்டங்களை யாரும் அறிந்திருக்க முடியாது, அவ்வளவுக்கு எல்லாம் இழந்து இறைவனை உணர்ந்து அடைந்தார்கள் என்கின்றார் சிவவாக்கியார்.

இந்தப் பாடலில் அவர் சொல்வது ஆழமான ஆன்மீகத் தத்துவம்.

மாந்தரே, தெய்வம் கோவிலில் மட்டுமல்ல அது ஒவ்வொருவர் மனதிலும் உண்டு, அதை மனமார உணர்ந்து அடைந்தவர் ஞானியர், ஆனால் நிறைய இழந்து அந்நிலையினை அடைந்திருக்கின்றார்கள்.

இழக்க எதுவுமில்லை எனும் நிலைதான் உன்னத ஆன்மீகம், அந்நிலையில்தான் இறைவனை முழுக்க அடைய உணரமுடியும், அந்நிலை அடைந்தவர்களே யோகிகள் ஞானியர், அவர்கள் கோவிலைக் கண்டால் வணங்க வேண்டிய அவசியம் இல்லா அளவு தெய்வத்தை மனதால் தரிசித்து உணர்ந்திருப்பார்கள் என்பது போதனை.

அதாவது கோவில்களில் தொழும் மாந்தரே, இது ஆரம்பமே, பக்திநிலையின் ஆரம்பமே. அந்த இறைவனை மனதால் காண்பதே பக்தியின் கடைநிலை அந்நிலை நோக்கிச் செல்லுங்கள், வழிபாடும் கோவிலும் இன்னும் பலவும் பக்தியின் தொடக்கமே, அதன் நிறைவு என்பது இறைவனை உணர்ந்து மனதில் அடைதல்.

அந்நிலைதான் வேதங்கள் சொல்லும் இறைவனை மனதினில் காணும் உன்னத பக்தி நிலை என்கின்றார் சிவவாக்கியார்.

இந்துமதம் என்பது பாலர் கல்வியில் தொடங்கி பல்கலைகழகம் வரை ஒருவனை ஒவ்வொரு படிநிலையாக ஆன்மீகத்தின் உச்சிக்கு இழுத்துச் செல்லும் மதம்.

உருவத்தில் இருந்து அருவம் நோக்கி, மலை கடல் ஆலயம் என அலைந்து தேடுதலில் இருந்து தனியே அமர்ந்து மனதில் தேடும் நிலை நோக்கி அழைத்துச் செல்லும் ஞானாசிரிய மதம்.

அந்தப் பாடத்தின் கடைசி நிலையினைத்தான் போதிக்கின்றார் சிவவாக்கியார்.

இதைத்தான், இந்த உச்சநிலையினைத்தான் திருமூலரும் சொன்னார்.

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே”

“உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று

உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே”

அதையே பூதத்தாழ்வார் பாடினார்.

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்”

இதுதான் அத்வைத தத்துவமாகும், இதுதான் “அஹம் பிரம்மாஸ்மி” எனும் அந்த மகா ஞானவரியினைச் சொல்லும் தத்துவமாகும்.

ஆம், இறைவன் உன்னுள் உள்ளான், அஹமே அவன் வாழும் இடம், அவன் எல்லா இடமும் உண்டு உன்னுள்ளும் உண்டு எனும் பெரும் தத்துவம்.

இதைத்தான் ஞானசித்தன் பாரதி சொன்னான் “தெய்வம் நீ என்றுணர்”

சிவ வாக்கியார் பாடல்கள் : 29

“நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தநித்த நீரிலே

விருப்பமோடு நீர்குளிக்கும் வேதவாக்கியங் கேளுமின்

நெருப்புநீரு மும்முளே நினைந்துகூர வல்லிரேல்

சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே”

இப்பாடல் இப்படிப் பிரியும்.

“நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே

விருப்பமோடு நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளுமின்

நெருப்பும் நீரும் உம்முள்ளே நினைந்து கூற வல்லிரேல்

சுருக்கமற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே”

தினமும் நீராடி பின் யாகத்தில் நெய் ஊற்றி நெருப்பு வளர்க்கும் வேத பண்டிதர்களே, நெருப்பும் நீரும் உங்களுக்குள் உள்ளே உள்ள நாதனை ஜோதியினைக் காட்டுமோ?

மந்திரங்களைச் சொல்லி அந்த ஜோதியினைக் காணமுடியுமோ? முடியாது, அதனால் பஞ்சாட்சரம் சொல்லி வேதங்களின் பொருளை உணர்ந்து அவனை வணங்கினால் அந்தப் பரஞ்ஜோதியினை நீங்கள் காணலாம் அதோடு தொடர்ந்து நிலைத்திருக்கலாம் என்பது பாடலின் பொருள்.

நெய் ஊற்றி யாகம் வளர்த்து நெருப்பினைக் காணும் வேத ஞானியரே, பஞ்சாட்சர மந்திரத்தை சொன்னால் உங்கள் மனதில் ஜோதியாய் இருக்கும் அந்த ஆனந்த ஜோதியினைக் காணலாமே, அது ஏன் உங்களுக்குத் தெரிவதில்ல்லை எனக் கேட்கின்றார் சிவவாக்கியார்.

“ஓம் நமசிவாய” எனும் ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொன்னால் மனதிலே அந்த ஜோதி நெருப்பு சுடராகத் தெரியும் அந்த ஜோதியோடு கலந்திருக்கலாம் என்பது பாடலின் போதனை.

“கேளப்பா சிங் நமசி வாய மென்றால்

கிளர்ந்து நின்ற தென்னமரம் வளையுமப்பா

நாளப்பா மங் மங் கென் றொருகா லோதில்

நமனுமே கிட்ட வந்து அணுகா னப்பா

வாளப்பா வங் சிவய நமவென் றாலோ

மழைதனிலே நனையாமற் செல்லலாகும்

ஆளப்பா மழைநிற்க வேண்டு மென்றால்

ஆச்சரியம் சிவாய ஓம் ஸ்ரீயும் சொல்லே.”  என்பது அகத்தியர் பாடல்.

“”மந்திரம் நான்மறை யாகி, வானவர்

சிந்தையுள் நின்று அவர் தம்மை ஆள்வன

செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு

அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்தும்மே” என்பது திருஞான சம்பந்தர் பாடல்.

“ஐம்ப தெழுத்து அனைத்து வேதங்களும்

ஐம்ப தெழுத்து அனைத்து ஆகமங்களும்

ஐம்ப தெழுத்தின் அடைவை யறிந்தபின்

ஐம்ப தெழுத்தே அஞ்செழுத் தாமே” என்பது திருமந்திர பாடல்.

“நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!” என்பார் மாணிக்கவாசகர்.

ஞானியர் பலர் சொன்ன பெரும் போதனையினைச் சொல்லி போதித்த ஞானத்தை தானும் போதிக்கின்றார் சிவ வாக்கியார்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 30

“பாட்டிலாத பரமனை பரமலோக நாதனை

நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை

கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்

வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முநின்றதே”

இந்த பாடல் கொஞ்சமல்ல நிறைய தத்துவார்த்தமானது, எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய பாடல் என்பதால் சீர் பிரித்துச் சொல்ல அவசியமில்லை, ஆனால் தத்துவம் ஆழமானது.

பாட்டில்லாத பரமனை என்பது இரு பொருள். படம் அதாவது பரமனை எல்லோரும் பாடிப்போற்றுவார்கள் ஆனால் அவன் எதையும் பாடவேண்டிய அவசியமில்லை.

இன்னொன்று பாடு என்றால் துன்பம் என்றொரு பொருள் உண்டு, எந்தத் துன்பமும் இல்லாமல் இருப்பவன் இன்ப துன்பங்களையெல்லாம் கடந்த நிலையில் இருப்பவன் எனப் பொருள்.

“நாட்டிலாத நாதனை” என்றால் அவனிடம் மக்கள் நாட்டம் கொண்டு விருப்பம் கொண்டு அதுவேண்டும் இதுவேண்டும் எனக் கேட்பார்களே தவிர அவன் எதிலும் நாட்டம் கொண்டவன் அல்ல, அவன் பற்றெல்லாம் எல்லாம் கடந்த நிலையில் இருப்பவன் எனப் பொருள்.

“நாரிபங்கர் பாகனை” என்றால் அர்த்த நாரீஸ்வரராக தேவியினைத் தன் இடப்பக்கம் கொண்ட சிவனை எனப் பொருள்.

“கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்” என்றால் அந்த நாதனோடு கூடி, தன்னில் இருக்கும் அவனை அறிய வாய்குள்ளே மெல்ல மெல்ல மந்திரம் சொல்ல வேண்டும், மூச்சையே கவனித்து மூச்சுவிடும் ஒலி ஒன்றையே வைத்துச் சொல்லவேண்டும் என்கின்றார்.

அது எப்படியாக சொல்லப்படவேண்டும் என்பதை அடுத்த வரியில் சொல்கின்றான்.

“வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முநின்றதே”

அதாவது வேட்டைக்குச் செல்வோர் பேசமாட்டார்கள்,  இலக்கு எது எனத் தெரிந்தபின் மிக மிக அமைதியாய் மூச்சை கூட அடக்கி மிக மிக மௌனித்துத் தங்களுக்குள் அமைதியாய் குறிப்பால் சைகை தெரிவித்து விலங்கைப் பிடிப்பார்கள்.

அங்கே மௌனத்தில் அவர்கள் நிலைப்பார்கள், அந்த மௌன நிலையினைத்தான் சுட்டிக்காட்டுகின்றார் சிவ வாக்கியார்.

“ஏ மானுடரே, பரமனை வாய் திறந்து சத்தமாகப் பாடி, நாட்டம் அதிகம் கொண்டு மந்திரம் சொல்லி எங்கெல்லாமோ தேடி அலைந்து அடையமுடியாது.

அவன் எப்படி தன் பாதியினைத் தேவிக்குக் கொடுத்து அவளோடு இணைந்தே இருக்கின்றானோ அப்படி அந்தப் பரம்பொருள் உங்களில் இணைத்தே உங்களுடனே இருக்கின்றான்.

அந்தப் பரம்பொருளை உங்களில் உள்ளே இருக்கும் பரம்பொருளை, ஓரேழுத்து மந்திரம் அல்லது ஓசையில்லா மந்திரம் கொண்டு உணர்ந்து அடையுங்கள்ழ

வேட்டைக்காரன் எப்படி மௌனமாக இருந்து இரையினைப் பிடிப்பானோ, அப்படி முழு மௌனத்தில் அவனைத் தேடி அடையுங்கள்” என்பது சிவ வாக்கியாரின் போதனை.

இங்கே அவர் சொல்லவருவது மௌனத்தில் அமர்ந்து மூச்சுக்காற்றைப் பயிற்றுவித்து அந்த மூச்சுவிடும் ஓசை கூட அதிகம் கேட்காமல் கனத்த மௌனத்தில் யோகத்தின் உச்சியினை அடைந்து இறைவனைத் தன்னுள் உணரும் நிலை.

.

மூச்சு விடும் ஓசை ஒன்றிலே நிலைக்கும் தவத்தை, மூச்சு செல்லும் ஓசை ஒன்றை மட்டும் கொண்ட நிலையினை அசபை என்பார்கள் அது ஓரேழுத்து மந்திரம் என்பார்கள்.

“”போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தை

தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி

சாற்றுகின் றேன்அறை யோ சிவ யோகத்தை

ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே”

என்பது திருமூலர் வாக்கு.

அசபை என்பது அதுதான், அசையா நிலையில் மூச்சுமட்டும் விட்டு தியானிக்கும் நிலை அதுதான் ஓரேழுந்து மந்திரம், ஒளவையார் அதைச் சொல்கின்றார்.

“அசபை யறிந்துள்ளே யழலெழ நோக்கில்

இசையாது மண்ணிற் பிறப்பு”

அசபை என்பது வாயால் சொல்லாமல் மூச்சால் செய்யப்படும் மந்திரப் பயிற்சி அது. வார்த்தை அற்றது, அதைச் செய்ய செய்ய மூலாதாரத்தில் இருந்து எழும் அக்னியான சக்தி மேலேழுந்து சிரசை அடையும், அப்பொழுது பெரும் ஞானம் வாய்க்கும்.

வாய்திறந்து சொல்லபடும் மந்திரம் சபை, மூச்சுக்காற்றிலே வார்த்தையின்றி சொல்லப்படும் மந்திரம் அசபை, அது மந்திரம் என்பதை விட மூச்சுப்பயிற்சி என்பதே சரி.

அந்நிலையில் மூச்சு வெளியேறி உள்வாங்கும் ஒரே ஒரு ஒலிமட்டும் கேட்பதால் அது ஒரேழுத்து மந்திரம் எனவும் அழைக்கப்படும்.

ஔவை தன் விநாயகர் அகவலில் “குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து” எனச் சொல்கின்றார்.

மிக மிக மௌனித்து இந்த மூச்சின் ஒலிஒன்றை அசபை மந்திரமாக கொண்டு தேடினால் தன்னுள் இருக்கும் சிவனை அடையலாம் என்கின்றார்.

இங்கு வேட்டைக்காரன் உவமையினை அவர் சொல்வது புதியவிஷயம் அன்று.

அக்காலத்தில் வேட்டையினைக் கொண்டு ஆன்மீக தத்துவத்தை விளக்கும் காட்சி உண்டு, கண்ணப்ப நாயனார் வாழ்வே அந்தத் தத்துவம்.

வேட்டைக்காரன் எப்படி மௌனத்தில் நின்று போராடி இலக்கை வீழ்த்துவானோ அப்படி மௌனத்த்தில் இறைவனைத் தேடினால்  ஆணவ மல மாயையை எனும் விலங்கு அழியும் எனப் போதித்த மதம் இந்துமதம்.

சிவன் பன்றிவேட்டைக்கு வந்தார், அர்ஜூனனுடன் சண்டையிட்டார் என்பதில் இந்தத் தத்துவமும் அடங்கியிருந்தது, கண்ணப்ப நாயனார் வாழ்வில் இந்தத் தத்துவம் உண்டு.

அக்காலத்தில் சிவாலயங்களில் திருவிழாவின் போது திருவேட்டை சடங்கு என்றே ஒன்று உண்டு.

அப்போது திருவேட்டை கவி பாடப்படும், திருவேட்டை தத்துவம் சொல்லப்படும், பின் சிவன் பன்றியினை வேட்டையாடும் அல்லது கண்ணப்ப நாயனார் பன்றிவேட்டைக்குச் செல்லும் காட்சி நடத்தப்படும்.

இன்று கிராம திருவிழாவில் காணும் மயான வேட்டை போல அன்றே இந்தத் திருவேட்டை உண்டு.

ஆன்மாவினை எப்படி மௌனத்தால் அடக்கி மாயைகளை மும்மலங்களை ஒழித்து இறைவனை அடையவேண்டும் என்பதை வேட்டை காட்சியால் சொல்வார்கள்.

வேட்டையில் முழுக்க மௌனம், கவனம், விழிப்பு நிலை என எல்லாம் உண்டு, வேட்டை மனிதனின் ஆதிகால தொழில் என்பதால் அதைச் சொல்லியே அவனைத் தியானத்துக்கு இழுத்த சூட்சுமம் உண்டு.

இந்தியாவில் இந்தத் திருவேட்டை என்பது பல வகை மயான வேட்டை, பரிவேட்டை என மாறிப்போனாலும் சைவபூமியான இலங்கையில் இந்தத் திருவேட்டை கவி, திருவேட்டை விழா எல்லாம் உண்டு.

இந்தத் திருவேட்டை விழா தத்துவத்துவத்தைச் சொல்லித்தான் போதிக்கின்றார் சிவவாக்கியார்.

சிவன் பார்வதியோடு மட்டுமல்ல நம்மோடும் நம்முள் இணைந்திருக்கின்றான், வேட்டைக்காரன் மௌனத்தால் நின்று விழிப்பு நிலை கொண்டு வேட்டையாடுதலைப் போல விழிப்பு நிலை மௌன தியானத்தால் அவனை அடையலாம் காணலாம் எனப் போதிக்கின்றார்.