சத்ரபதி சாம்பாஜி : 11
சத்ரபதி சாம்பாஜி : 11
சாம்பாஜியின் வேகம் முகமது அக்பர் வந்தபின் வேகமானது. இனி நிச்சயம் ஔரங்கசீப் சும்மா இருக்கமாட்டான் என்பதையும் அவனின தாக்குதல் கடுமையாக இருக்கும் என்பதையும் அனுமானித்தான். ஆனால், எங்கே எப்படி அவன் தாக்குவான் என்பதை அவன் அறியமுடியவில்லை, சாம்பாஜியின் உளவுப்படைகள் களத்தில் இருந்தாலும் ஔரங்கசீப் ஊகிக்கமுடியாத ஆபத்தானவனாக இருந்தான்.
சாம்பாஜி எல்லாப் பக்கமும் தன் சேனையினைப் பலப்படுத்தினான். அதே நேரம் ஔரங்கசீப் மிகத் தீவிரமான ஆலோசனையில் இருந்தான். அவனிடம் பெரிய சேனை, பெரியநிதி, அன்றைய கால நவீன ஆயுதங்கள், திறமையான சேனாதிபதிகள் எனப் பலர் இருந்தார்கள். ஆனால், அப்போது அவனுக்கு இருந்த தயக்கம் இரண்டு.
முதலாவது, தன் மகன் முகமது அக்பர் சாம்பாஜி பக்கம் இருந்தது, இதனால் மொகலாய வியூகமெல்லாம் சாம்பாஜிக்குத் தெரியவரும் என்பது. இரண்டாவது, முரட்டுத் தாக்குதல் நடத்தினால் அக்பரின் எதிர்வினை எப்படி இருக்குமோ என்பது.
காரணம், அப்போது ஔரங்கசீப் படையிலும் அவனால் பாதிக்கப்பட்ட குலம் நிறைய இருந்தது. குறிப்பாக அவனால் கொல்லப்பட்ட அவன் அண்ணன் தாரா ஷிக்கோவின் மகள் அப்போது வீராங்கனையாக வந்திருந்தாள், முரட்டு குணமுள்ள அவள் மொகலாய ராஜ்ஜியத்தில் தன் தகப்பனுக்குள்ள உரிமை தனக்கும் உண்டு என்பதுபோல் ஔரங்கசீப்புடன் நின்றிருந்தாலும் அவளைச் சந்தேக கண்ணோடு நோக்கினான் ஔரங்கசீப், தன் நிழலைக் கூட நம்பாத அவனின் குணம் அப்படி.
ஒருவேளை தன் தாக்குதலால் பெரிய குழப்பம் செய்தால் இவளைப் போன்றோர் அவனுடன் ஒட்டிக் கொள்ளக் கூடாதே எனும் அச்சமும் அவனுக்குள் இருந்தது, எதிரிகளை ஒன்றுசேர விடுவது எப்போதுமே ஆபத்தானது.
இதனால் தான் களத்தில் முதலில் இறங்காமல் சாம்பாஜியின் எதிரிகளைத் தூண்டிவிட்டு அவர்கள் பின்னால் இருந்து தாக்கலாம் என முடிவு செய்தவன் வியூகத்தில் சிலர் இருந்தனர்.
அவர்களில் முக்கியமானவன் ஜான்சிரா தீவில் அட்டகாசம் செய்துகொண்டிருந்த சித்தி எனும் ஆப்ரிக்க கும்பல். கோவா டையூ டாமன் என வலுவாக இருந்த போர்ச்சுசீசியர், பம்பாயில் இருந்த பிரிட்டிஷார் எனக் கடலிலும், சிவாஜி அரசின் தமிழக இணைப்பின் வழியில் இருந்த மைசூர் மன்னன் சிக்க தேவராய உடையார் என இருந்தது.
மைசூர் மன்னன் இந்துவாக இருந்தபோதிலும் சிவாஜிக்குப் பின் அடங்க மறுத்தான், அவனின் நோக்கம் சிவாஜி அரசுக்கு வரி கட்டுவதில் இருந்து விலகுவது, அப்படியே சிவாஜிகுடும்பத்தின் தனிப்பட்ட சொத்தான பெங்களூரு பகுதியினைக் கைபற்றுவதில் இருந்தது.
சிவாஜியின் தகப்பன் ஷாஹாஜி பிஜப்பூர் சுல்தானிய தளபதியாக இருந்தபோது அவனுக்குக் கொடுக்கபட்ட நிலம் அது, ஜாகீர் எனும் அந்தப் பெரும் நிலம் சிவாஜி குடும்ப சொத்தாக இருந்தது, அதைச் சிவாஜி தன் தம்பி வெங்கோஜிக்குக் கொடுத்திருந்தார். தஞ்சாவூரில் இருந்து ஆட்சி செய்த வெங்கோஜியிடம் இருந்து அதைப் பறிக்க சிக்க தேவராய உடையாரால் முடியும் என்றாலும் அவன் அஞ்சியது சாம்பாஜிக்கு.
சிவாஜியிடம் கப்பம் கட்டி அடங்கி இருந்த சிக்க தேவராயனால் சாம்பாஜிக்கு அடங்கி இருக்க மனமில்லை, சாம்பாஜியினை வென்றுவிடலாம் என நினைத்தவனுக்கு ஔரங்க்சீப்பின் வருகை இன்னும் பலமாயிற்று, அவனை ரகசியமாக தூண்டிவிட தொடங்கினான் ஔரங்கசீப்.
இப்படிப் பல எதிரிகளை சாம்பாஜி பக்கம் திருப்பத் தயாரான ஔரங்கசீப் முதல் கல்லை ஜான்சிரா தீவில் இருந்த சித்தியினைக் கொண்டு எறிந்தான். அதன்படி ஜான்சிராவின் சித்தி முகமது காசிம் பெரும் அட்டகாசத்துக்குள் இறங்கி சாம்பாஜி மேல் போரைத் திணித்தான்.
இயல்பாகவே சிவாஜிமேல் அவனுக்கு வன்மம் இருந்தது. காரணம், கடலில் ஆதிக்கம் செலுத்திய சித்திகளை அவன் அடக்கி வைத்திருந்தான், கடைசிவரை ஜான்சிரா கோட்டையினைச் சிவாஜி கைப்பற்றவில்லையே தவிர அதைச் சுற்றி பத்மதுர்க். சிந்துதுர்க், உந்தேரி எனப் பல இடங்களில் கோட்டைக் கட்டி இவர்கள் அட்டகாசத்தை ஒடுக்கி வைத்திருந்தான்.
சிவாஜி இல்லாக் காலங்களில் இதனை மீளத் துவக்கினான் சித்தி. ஏன் இப்படியான மோதல்கள் இருந்தன என்பதற்கு இதன் பின்னணியினைக் கொஞ்சம் காணுதல் வேண்டும்.
15 ஆம் நூற்றாண்டில் அதுவரை இருந்த நில ஆதிக்கம் ஆற்றங்கரை செல்வ ஆதிக்கமெல்லாம் கடலுக்குத் தாவிற்று, இனி கடலில் ஆதிக்கம் செலுத்துவோர்க்கே எதிர்காலம் எனும்படி கடல்வழ் வியாபாரங்கள் பெரிதாயின. உலகெல்லாம் இருந்து பலவகை ஆயுதமும் பொருட்களும் வியாபாரமும் குவியத் துவங்கின, இது பெரும் வருமானம் மற்றும் நில ஆக்கிரமிப்புக்கு வழி செய்தது. தீவுகளும் கடலோரங்களுமாய்த் துவங்கிய இந்த ஆக்கிரமிப்பு நிலத்துள்ளும் நீண்டது.
இதனால் அதுவரை நிலம் வழியாகவே இன்னொரு நாட்டுக்குள் ஊடுருவமுடியும் எனும் நிலை மாறி கப்பல்படை கடல் பலம் இருந்தால் இனனொரு நாட்டில் ஊடுருவி ஆட்சிச் செய்யலாம் எனும் பலத்தைக் கொடுத்தது.
இதில் போர்ச்சுகீசியர் கோவா பக்கம் இன்னும் அரபிக்கடலின் இன்னொரு இடமான டையூ டாமன் பக்கம் வலுவானார்கள். வங்குரல்லா போன்ற இடத்தில் டச்சுக்காரர் இருந்தனர், பிரிட்டிஷார் பம்பாயில் சென்னையில் கல்கத்தாவில் காலூன்றினர்.
இங்கே இஸ்லாமியரில் இரு தரப்பு இருந்தது. ஒன்று ஆப்ரிக்க இஸ்லாமியரும் அவர்கள் சந்ததியினரும், அவர்களே சித்திகள் என அழைக்கப்பட்டனர். 15 ஆம் நூற்றாண்டில் அகமதுநகர் சுல்தானியத்தில் இருந்த ஆப்ரிக்கன் மாலிக் ஆம்பரால் இவர்கள் இங்குப் பெரிய சக்தியானார்கள், எப்படியாவது கருப்புச் சுல்தானியம் எனும் ஆப்ரிக்கச் சுல்தானியம் இங்கு அமையவேண்டும் என அவர்களுக்கு விருப்பம் இருந்தது.
அப்போது கட்டப்பட்டதுதான் ஜான்சிரா கோட்டை.
இக்கால கட்டத்தில் மூன்று தேசங்களே செல்வமாக இருந்தன. முதலில் இந்தியா. அங்கு மொகலாயம் பெரும் ஆட்சியில் இருந்தது. அதனை அடுத்துச் சாம்பாஜியின் இந்து அரசு இருந்தது. இவை இரண்டும் இந்தியாவில் இருந்தன, வீரசிவாஜி அமைத்த அரசு அவ்வளவு செல்வத்தோடு இருந்தது.
மூன்றாம் இடத்தில் ஆட்டோமன் துருக்கி இருந்தது, சீனா கிழக்கே தனித்து நின்றது, அப்போது அவர்களுக்கு வலுவான அரசு இருந்தது.
ஆக ஐரோப்பிய ஆப்ரிக்க கோஷ்டிகளுக்கு இந்தியாவும் துருக்கியும் பெரிய வியாபாரத் தளங்களாயின, ஆனால் அராபியா துருக்கி பக்கம் ஐரோப்பியரால் ஆப்ரிக்கரால் செல்லமுடியவில்லை. அராபிய கடலோடிகளும் வலுவான கடற்படை வைத்திருந்தனர். அந்த முரட்டுக் கூட்டம் பக்கம் செல்ல இவர்கள் அஞ்சினார்கள். இன்னொன்று செங்கடல் தவிர மற்ற அரபு துறைமுகங்கள் அன்று செல்வமில்லாதவை, அன்றைய ஈரானின் பண்டர் அப்பாஸ் துறைமுகம் செல்வமானது என்றாலும் பாரஸீக மன்னன் வலுவாக இருந்தான்.
இதனால் ஐரோப்பியக் கூட்டம் ஆப்ரிக்க கூட்டம் இப்பக்கம் குவிந்தது, சிவாஜிக்கு முன் இவர்கள் வேகமாக காலூன்றினார்கள் . மொகலாயரிடம் பிஜப்பூர் சுல்தானிடம் நாயக்கர்களிடம் வலுவான கடற்படை இல்லை என்பதால் தயக்கமின்றி கடலோரத்தை ஆக்கிரமித்து மதம் வளர்த்தார்கள்.
சிவாஜி எழுந்து கடற்படை கட்டி பிரிட்டிஷார், போர்ச்சுகீசியர், இந்தச் சித்திகள் என எல்லோரையும் அடக்கினான், அவனின் மரணத்துக்குப் பின் இக்கும்பல் மீண்டும் அப்பகுதியினைக் கைப்பற்ற தருணம் பார்த்தது.
அங்கேதான் ஜான்சிராவின் சித்திகள் முகமது காசிம் தலைமையில் ஆடத் தொடங்கின. அதனை இன்னும் தூண்டிவிட்டு பெரும் பணம் கொட்டினான் ஔரங்கசீப், அந்தக் கூலிக்கு சித்தி காசிமின் தாக்குதல் கொடியதாய் இருந்தது.
ஜான்சிரா தீவின் பெரும் பலம் அதன் கடல் அலைகள், அவை கணிக்கமுடியாதபடி ஒருமாதியாக முரட்டு அலைகளாக எழும்பும், அந்த அலைகளைக் கணித்து அவற்றுக்கு ஏற்ப கலன் செலுத்துவதில் ஆப்ரிக்க கும்பல் பெரிய பயிற்சி பெற்றிருந்தது, அதுவும் தீவினைச் சுற்றி எழும் ராட்சச அலைகளை மீறி கோட்டையினை அடைவது கடினம்.
இதனாலே சிவாஜிக்கும் அதைக் கைபற்றுவதில் தயக்கம் இருந்தது, அருகில் சென்றால் அது மாயாஜால வித்தை அனைத்தும் காட்டும், மிகக் கடுமையாக எழும்பி அடிக்கும், அப்போது ஆப்ரிக்க மந்திரவாதத்தை அங்குச் சித்திகள் வைத்திருப்பதாகவும் அது அவர்களைக் காப்பதகாவும் கூட ஒரு செய்தி சுற்றியது, அப்படியானால் அந்த மந்திராவாதம் வேறு இடத்தில் ஏன் பலிக்கவில்லை என்றால் பதில் இல்லை.
அதாவது மந்திரம் எல்லாம் அன்று. மாறாக. அந்தக் கடலின் அமைப்பும் அங்கு இருந்த தீவும் அப்படி அலைகளின் காவலில் இருந்தன. பிரிட்டிஷார், போர்ச்சுகீசியர் என எல்லோருமே அதைக் கைப்பற்றமுடியாமல் விட்டுவிட்டனர்.
சிவாஜி அதை முயன்று பார்த்தான். அவனாலும் முழுக்கக் கைப்பற்ற முடியவில்லை, அவனின் பிரசித்தியான தளபதிகள் உள்ளே புகுந்து அடிக்கும் திட்டம் பல வைத்திருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் குழப்பம் வந்தது, ஒருமுறை மொரோபந்த் இரவில் அத்தீவினை அடைந்து கோட்டை சுவரில் உடும்பு வீசி மேலேறி சென்று கோட்டையினைப் பிடிக்கும் திட்டத்தினைக் கொண்டிருந்தான், ஆனால் முறையற்ற வியூகத்தால் அதுவும் பலனளிக்கவில்லை.
இதனால் சிவாஜி அதைச் சுற்றி பல கோட்டைகளைக் கட்டி சித்திகளைக் கட்டுப்படுத்தினான், கடைசியில் இந்து அரசுக்கு எதிராக செயல்பட மாட்டோம், மொகலாயருக்கு உதவ மாட்டோம் எனும் ஒப்பந்ததோடு சித்திகள் அடங்கினார்கள்.
சிவாஜி இங்கு ஒரு தந்திரமான காரியத்தைச் செய்தான். அப்போது ஓமானிய கடலோடிகளும் அவர்கள் படைகளும் இருந்தார்கள். அவர்களுக்கு யருபிட் எனப் பெயர். இவர்களுக்கும் ஆப்ரிக்க ஐரோப்பிய கோஷ்டிகளுக்கும் ஆகாது, இதனால் சித்திகளை அடக்கி ஜான்சிராவினை கைப்பற்றினால் 20 கிலோ தங்கம் வழங்கப்படும் என அறிவித்திருந்தான். இதனால் யருபிட் கும்பலும் இவர்களைத் தாக்க சித்திகள் அடங்கி இருந்தார்கள்.
ஆனால், சிவாஜி இறந்தபின் இந்த ஒப்பந்தம் மீறப்பட்டது, பிரிட்டிஷார், போர்ச்சுகீசியர், இந்தச் சித்திகள் என மூவருமே ஔரங்கசீப்புக்கு ஆதரவாக இறங்கினார்கள். வெடிபொருள் ஆயுதம் எனப் பெரும் வழங்கலை அவனுக்குச் செய்தார்கள்.
இதனைக் கண்டித்தான் சாம்பாஜி, அவனின் மிரட்டலில் பிரிட்டிஷாரும் போர்ச்சுகீசியரும் மெல்லப் பணிந்து ஒதுங்கினார்கள். ஆனால், சித்தி அடங்கவில்லை அவன் போரைத் தொடங்க்கினான், பின்னால் இருந்து அவனை இயக்கியது ஔரங்கசீப்.
1681 நவம்பரில் தன் அட்டகாசத்தைச் செய்ய தொடங்கினான் சித்தி, அவன் கரைக்கு வந்து அட்டகாசம் செய்யத் தொடங்கினான். கரையோர பகுதிகளைச் சூறையாடினான், வயல்களைக் குடியிருப்புகளைக் கொள்ளையடித்து தீ வைத்தான். சில இடங்களைப் பிடித்தும் கொண்டான்.
அவனை அடக்க தாதாஜி ரகுநாத் தேஷ்பாண்டே எனும் தளபதியினை அனுப்பினான், அவன் சில வியூகங்களை வகுத்தான்.
ஜான்சிரா பெரிய தீவு அன்று. சுமார் 30 ஏக்கரில் அமைந்த கோட்டை அது, அதன் பலம் பிரமாண்ட அலைகள் அதைத் தாண்டிச் சென்றால் எழுந்து நிற்கும் 40 அடி மதில்கள் என உண்டு.
தாதாஜி திட்டப்படி உந்தேரியில் இருந்து சிலர் நடு இரவில் ஊடுருவிக் கோட்டைக்குள் புகுந்து போரிட்டுக் கதவை திறக்க வேண்டும். அப்போது கப்பல்களில் இருந்து வரும் சாம்பாஜி படைகள் உள்ளே புக வேண்டும் என்பதாக இருந்தது, சில கப்பல்கள் நிறைய வீரர்கள் அதற்குத் தயாராக இருந்தனர்.
80 வீரர்கள் கடல் வழியாக இரவில் ஊடுருவிக் கோட்டையினை அடைந்தார்கள், மெல்லச் சுவற்றில் ஏறி உள்ளே புகுந்தார்கள். யுத்தம் துவங்கிற்று.
சித்திகள் பெரிய எண்ணிக்கை அல்ல. ஆனால், கோட்டை அவர்கள் வசம் இருந்ததால் அவர்கள் கை ஓங்கிற்று, அவர்களைப் பிடித்துக் கொண்டனர் சித்திகள். அப்படியே கடல் போர் துவங்கி சாம்பாஜியின் இரு கப்பல்களும் கைப்பற்றப்பட்டன, ஆத்திரம் தாளாத சித்தி 80 பேரின் தலையினையும் வெட்டி சாம்பாஜிக்கே அனுப்பி அவர்கள் உடலை பம்பாய் பக்கம் காட்சிக்கு வைத்தான்.
தன் கோட்டையில் சாம்பாஜி ஊடுருவியது அவனுக்கு அவ்வளவு பெரிய ஆத்திரத்தைக் கொடுத்தது.
இந்தச் சம்பவத்துக்கு பின் நேரடியாக களமிறங்கினான் சாம்பாஜி, ஔரங்கசீப் எதிர்பார்த்ததும் இதுதான்.
சுமார் 50 கப்பல்கள், 20 ஆயிரம் வீரர்களுடன் அவன் களத்துக்கே வந்தான், ராஜாபூர் முதல் சௌல் வரையான கடலோரம் பெரும் யுத்தம் நடந்தது, தண்ட ராஜபுரி பக்கம் நின்று அவர்களை விரட்டினான் சாம்பாஜி.
அந்நேரம் சித்திகள் பிரிட்டிஷாரிடம் உதவிக் கோரினார்கள், சாம்பாஜியினை அடக்க வரும்படி அழைத்தனர். ஆனால், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி சாம்பாஜியினை எதிர்க்க விரும்பவில்லை, காரணம் கல்கத்தா பக்கம் மொகலாயருக்கும் அவர்களுக்கும் மோதல் இருந்ததால் அமைதியானார்கள்.
இதனால் பம்பாயினைத் தாக்கிக் கோபம் தீர்த்த சித்தி ஜான்சிரா கோட்டைக்குள் முடங்கினான், அவனை விடவே கூடாது என முடிவெடுத்த சாம்பாஜி தௌலத்கானிடம் கோட்டையினைப் பிடிக்க உத்தரவிட்டான்.
பெரும் போர் தொடங்கிற்று, 500 கப்பல்களைக் கொண்டிருந்த சாம்பாஜியின் பெரிய கப்பல்படையின் 50 கப்பல்கள் களமிறங்கின, யருபீட் எனும் ஓமானிய கடலோடிகளையும் களத்துக்குக் கொண்டுவந்தான் சாம்பாஜி.
தங்களின் ஒரே முக்கிய இடமான ஜான்சிராவினை விட்டு கொடுக்க சித்திகள் தயாராக இல்லை, அவர்கள் உரிய நேரம் வரும்வரை முடங்கிக் கிடந்தனர், அங்கே அவர்களின் பெரும் பலம் முரட்டு அலைகள் அவை எப்போது வரும் எப்போது அடங்கும் என்பதையும் அந்த அலைகளைச் சமாளிக்கும் அனைத்து பயிற்சிகளையும் சுமார் 200 ஆண்டுகாலம் பெற்றிருந்தனர்.
அப்படி அலை எழும்பும் பௌர்ணமி நேரம் பெரும் தாக்குதலைத் சாம்பாஜி கப்பல்படை மேல் செய்தார்கள். அவர்கள் நோக்கம் சாம்பாஜியின் கப்பல் சிலவும் முடிந்தால் கோட்டைகள் சிலவும் கைப்பற்றுவதாக இருந்தது.
ஆனால். தௌலத்கான் எனும் அந்தச் சாம்பாஜியின் கடற்படை தளபதி அதனை முறித்துப்போட்டான், அவனின் வியூகத்தாலும் சாம்பாஜி படையின் பீரங்கி தாக்குததாலும் பின்வாங்கி ஓடினான் சித்தி காசிம்.
இதுவரை அடங்கியிருந்த இந்தச் சித்திகளுக்கு திடீர் தைரியம் ஔரங்க்சீப் கொடுத்தது என்பதையும் அவன் தலையீடு உள்ளே உண்டு என்பதையும் அறிந்துகொண்டான் சாம்பாஜி.
இங்குச் சாம்பாஜிக்குச் சித்தி கொடுக்கும் தொல்லைகளுக்கு ஈடாக அங்கே சூரத் பக்கம் பல சலுகைகளை ஔரங்கசீப் வழங்கினான், இதனால் மொகலாயர்க்கு ஆயுத வியாபாரம் கடத்தல் என எல்லாம் செய்த சித்தி நல்ல சலுகை பெற்றுக்கொண்டு போரைத் தொடர்ந்தான்.
எப்பாடுபட்டேனும் ஜான்சிராவினைப் பிடிக்கக் கடும் பிரயர்த்தனம் செய்தான் சாம்பாஜி, ஆனால் முரட்டு அலைகள் சித்திக்ளுக்கே உதவின. அந்த அலைகளைச் சமாளிப்பது கடினம் அல்ல, ஆனால் அங்கே கப்பல்கள் மெதுவாகும் போது அந்த அலைகளால் திணறும் போது சித்திகளின் பீரங்கிகள் சரியாக கப்பல்களை சுட்டன, இது பெரும் ஆபத்தானதால் அவன் பின் வாங்கினான்.
அன்றைய பலமான பீரங்கிகளைக் கொண்டு சித்திகள் இப்படித் தாக்கினர், அந்தப் பீரங்கி மழையில் இருந்து கப்பல்களைக் காக்கும் அவசியம் சாம்பாஜிக்கு வந்தது, அதனால் வியூகத்தை மாற்றினான்.
அதன்படி சில நாட்கள் அமைதிக்குத் திரும்பி வழமையான கடல்வியாபாரத்தை அனுமதித்தான், அவனே நேரடியாக களத்தில் நின்றதால் சித்தி காசிம் தன் நடவடிக்கையினை நிறுத்தி முடங்கிக் கிடந்தான். அவர்களின் வியாபாரம் மெல்லத் தொடங்கிற்று.
இந்த வியாபாரிகளில் ஊடுவினான் சாம்பாஜியின் உளவாளி கொண்டாஜி பர்சாந்த் என்பவன், மிகத் தேர்ந்த திட்டம் அது.
சாம்பாஜி உண்மையில் வியூகம் வகுப்பதில் சிறந்தவனாக இருந்தான், அதுவும் உளவுக் கலைகளிலும் உளவாளிகளை அனுப்புவதிலும் கடும் திறமை பெற்றிருந்தான்.
அதன்படி போரை நீட்டிக்க அவன் விரும்பவில்லை. மாறாக. தன் ஆட்களை உள்ளே நுழையவைத்து கோட்டையினைக் குழப்பி அந்தக் குழப்பத்தில் உள்ளே செல்லத் திட்டமிட்டான், இங்கு அலைகள் சிக்கல் அல்ல, மாறாக அந்த வெடிபொருட்களும் பீரங்கிகளுமே சிக்கல்.
அவன் திட்டப்படி கொண்டாஜி பர்சாந்த் என்பவன் தன் ஆட்களோடு வியாபாரிகள் அடியாட்கள் கூலிகள் என ஜான்சிரா தீவுக்குள் நுழைந்து 1682 ஆம் ஆண்டு சிவராத்திரி கழித்த அமாவாசைக்குப் பின் இரண்டாம் நாள் தாக்குதலைத் தொடங்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அந்தத் திட்டம் துல்லியமானது, குறிப்பிட்ட அந்நாளில் கொர்னாந்து சித்திகளின் ஆயுத வெடிமருந்து களஞ்சியத்தை தாக்க வேண்டும், பெரும் கலகம் செய்யவேண்டும், அந்நேரம் கடலோரம் பதுங்கி இருக்கும் இந்துராஜ்ய வீரர்கள் மதில்களில் உடும்பு வீசி ஏறி வந்து உள்ளே புகுந்துவிடுவார்கள்.
அப்படியே கோட்டை வாசலை எரிக்க வேண்டும் அல்லது உடைத்துத் திறக்க வேண்டும், முக்கியமாக பீரங்கிகள் சுடப்படாமல் முடக்க வேண்டும், அந்த இடைவெளியில் 50 கப்பல்கள் நிறைய வீரர்கள் வந்து ஜான்சிராவினைக் கைப்பற்றுவார்கள்.
இதுதான் திட்டம், இது பல கோட்டைகளை நிலத்தில் மலையில் கைப்பற்றும் வழமையான சிவாஜி சேனையின் தந்திரமாய் இருந்தது. அதை இங்கும் செயல்படுத்த சாம்பாஜி முனைந்தான்.
எல்லாம் தயாரானது. கொண்டாஜியும் தன் ஆட்களோடு உள்ளே புகுந்தான், எல்லாம் சரியாக சென்றபோது அவன் ஆட்களில் ஒருவன் அங்கிருந்த அராபிய ஆப்ரிக்க கலப்பின பெண் ஒருத்தியிடம் மயங்கினான், அந்த மயக்கத்தில் உண்மையினை உளறிவிட்டான்.
காதல் மயக்கத்தில் அடிமையான அவனுக்குச் சாம்பாஜி அரசில் பெரும் வாழ்வு வாழவைப்பேன் என அவன் உளறிய உளறல் திட்டத்தைப் போட்டுக் கொடுத்துவிட்டது.
அவன் காதலில் உளறினானா இல்லை அவளைக் கொண்டு இன்னும் சித்தியின் வட்டத்துக்குள் செல்லமுயன்றானா என்பது தெரியவில்லை. ஆனால், திட்டம் வெளிப்பட்டு சித்தியினை எட்டிற்று.
வெறிபிடித்த சித்தி காசிம், கொர்னாந்தின் தலையினை வெட்டி அதைக் கடலில் எறிந்து அவன் உடலை வாசலில் தொங்கவிட்டு வெறியாட்டம் ஆடினான், சந்தேகப்பட்ட பலரைக் கொன்று குவித்தான்.
இதனால் திட்டம் தோல்வியுற்றுக் குறிப்பிட்ட நாளில் எதுவும் நடக்கவில்லை, சாம்பாஜி நினைத்தபடி தாக்குதலைத் தொடங்க முடியவில்லை.
கடலோரம் அப்படியே நின்றான் சாம்பாஜி, அவன் அருகே தாதாஜி நின்று கொண்டிருந்தார், கரையில் இருந்து 1.5 மைல் அல்லது இருமைல் தூரத்தில்தான் சித்திகளின் கோட்டை இருந்தது.
தன் இந்த முயற்சியும் தோற்றதில் சொன்னான் சாம்பாஜி, “தாதாஜி, கரையில் இருந்து வெகு அருகில் இருக்கும் இக்கோட்டையினை என் தந்தை பிடிக்க முடியாமல் போன காரணம் அவரின் இயலாமை எனக் கருதுகின்றீர்கள்? அப்படி இருக்க முடியாது, பின்னர் ஏன் விட்டுவைத்தார்”
தாதாஜி சொன்னார், “அரசரே மாமன்னர் அதைத் தன் இயலாமையினால் விட்டுவைக்கவில்லை, பல நாட்டுக் கடலோடிகள் அலையும் இக்கடலில் இவர்களை ஒழித்துவிட்டால் ஐரோப்பியரின் பலம் கூடியதுபோலாகிவிடும், இதனால் இவர்கள் இங்கு ஐரோப்பியர்க்குச் சவால்விடும் வகையில் இருக்கட்டும், ஆனால் நமக்கு அடங்கி இருக்கட்டும் என நினைத்தார்.
பல எதிரிகள் இருக்கும் போது ஒருவனை அழித்து இன்னொரு எதிர்க்கு பலம் சேர்க்கக் கூடாது அல்லவா, மாமன்னர் ராஜதந்திரம் இடையே வளர்ந்தவர். பிஜப்பூர் கோல்கொண்டா சுல்தானியத்தையே பலவீனமாக்கி விட்டு வைத்திருப்பவர், அவர் மகா ராஜதந்திரமானவர், அவர் நினைத்தால் இந்தச் சித்தியினைக் கண் இமைக்கும் நொடிக்குள் பொசுக்கியிருப்பார், கோட்டையினைப் பிடித்திருப்பார், ஆனால் சில காரணங்களுக்காக என்றாவது தேவைப்படுவான் என விட்டுவைத்தார்” என்றான்.
சாம்பாஜி புன்னகைத்தான் “ஆம், எல்லா முடிவுகளும் காலத்தை பொறுத்தே அமையும், அன்றைய சூழலில் இவர்கள் அவசியமாக இருந்திருக்கலாம், ஆனால் இன்று அப்படியன்று. ஔரங்கசீப் நம் காலடியில் வந்துவிட்டான் இன்னும் இவர்களை விட்டுவைத்தால் நாம் நாலா பக்கமும் எதிரிகளுடனே இருக்க நேரிடும்.
இந்தச் சித்தியினை விட்டுவைத்தால் நாம் ஔரங்கசீப்புடன் மோதும் மோது நிச்சயம் கடலிலும் கரையிலும் அவன் தொல்லை செய்வான், இவன் நாள்பட்ட புண்ணாகிவிட்டான், நம் கப்பல்களைப் பிடிக்கும் அளவு நம் ஆட்களைக் கொடூரமாக கொல்லும் அளவு சென்றுவிட்டான், இவன் ஔரங்கசீப்ப்பின் ஏவலாளகிவிட்டதை அவன் செயல்கள் காட்டுகின்றன.
இனி அவனை அனுமதிக்க முடியாது” எனச் சொன்னவன் கடலையே பார்த்துக் கொண்டிருந்தான். தாதாஜி அமைதி காத்துச் சொன்னார் “யாராலும் அந்தக் கோட்டையினைக் கைப்பற்ற முடியவில்லை என்றால் ஏதோ ஒரு மர்ம சக்தி இங்கு இருக்கலாம், ஆப்ரிக்கர்களை நம்பமுடியாது, ஏதோ சூட்சுமச் சக்திகளை நிலை நிறுத்தியிருக்கலாம்”
அப்படி ஒரு அச்சம் அப்போது இருந்தது, அது அப்பக்கம் அச்சமூட்டும் வகையில் ஆப்ரிக்கர்களால் பரப்பப்பட்டிருந்தது, இம்மாதிரியான சூட்சுமச் செய்திகள் மர்மக் கதைகளை விட பெரிய காவல் ஏதுமில்லை, காவலில் இவையும் ஒரு வழி.
மனோரீதியான குழப்பம் இவை, எதிரியினை ஆயுதரீதியாக அச்சுறுத்துவதை விட இப்படி மனோரீதியாக குழப்பி அச்சுறுத்தி ஓடச் செய்வது பெரிய பலனளிக்கும், மனதால் குழம்பிய மனிதன் ஒருகாலமும் அப்பக்கம் வரமாட்டான்.
இதனைச் சித்திகள் ஜான்சிரா தீவில் செய்தார்கள், அதையே போர்ச்சுகீசியர் பிரான்சிஸ் சவேரி எனும் பாதிரியின் உடலை கோவாவில் வைத்து இது சூட்சுமக் காவல் நிறைந்த பூமி, யாராலும் கைப்பற்றமுடியாப் பூமி, பிரான்சிஸ் சவேரியார் ஆத்மா காவல் இருக்கும் பூமி, அதனால் எக்காலமும் இது போர்ச்சுகீசியருக்கே எனச் சொல்லி அச்சுறுத்தினார்கள், சவேரி என்பவனின் அழியா உடல் இருப்பதாக ஒரு உடலைக் காட்டி மதமாற்றம், மனரீதியான அச்சுறுத்தல் என எல்லாம் செய்து கொண்டிருந்தார்கள்.
சாம்பாஜி கடலை நோக்கி நின்றபடி சொன்னான், “தாதாஜி அங்கு எந்த மாயமுமில்லை மந்திரமுமில்லை, காற்றுக் கரையினை நோக்கி வீசும்போது அந்தத் தீவின் பாறை அமைப்பு அப்படிக் கொந்தளிப்பான அலைகளை உருவாக்குகின்றது, காற்று இந்தக் கொங்கன் பகுதியின் சில நிலங்களை நோக்கி உள்வளைந்த நிலங்களை நோக்கி வீசும் போது எழுப்பும் வேகமாக அலைகள் அப்படிக் கொந்தளிப்பைக் கொடுக்கின்றன, அதன் மேற்கே சில சிறிய தீவுகளும் பெரிய பாறைகளும் உண்டு, அவற்றின் இடையே சீறி வரும் காற்றோட்டமும் நீரோட்டமும் கலக்கும் முக்கிய இடத்தில் அந்தச் ஜான்சிரா தீவு அமைந்திருப்பதே அதன் கொந்தளிப்புக்குக் காரணம்.
400 ஆண்டுகளாக அப்பக்கம் சுத்தும் சித்திகள் இதன் போக்கை அறிந்து அந்த அலைகளைத் தாண்டிச் செல்லும் வித்தை அறிந்துவிட்டார்கள், அவர்களின் கலன்கள் அதற்கு ஈடு கொடுக்கின்றன, அவ்வளவுதான் விஷயம்” என்றான்.
“என்ன செய்வது இப்போது அவை கொந்தளிப்பான அலைகளாகக் காக்கப்படுகின்றது, நாம் என்ன அனுமனா பறந்து செல்ல” என்றான் தாதாஜி.
“அனுமன்… ஆம் அனுமன்” எனச் சொல்லிக் கொண்ட சாம்பாஜி, கடற்படை தலைவன் தௌலத்கான் உள்ளிட்ட பலரை உடனே சந்திக்க ஏற்பாடு செய்யும்படி சொல்லிவிட்டு பத்மதுர்க் கோட்டைக்குச் சென்றுவிட்டான்.
ஏதோ வழக்கமான ஆலோசனை என நினைத்த தாதாஜி செய்தியினை எல்லோர்க்கும் பரப்பிவிட்டு உரிய நேரம் தானும் ஆலோசனையில் கலந்து கொண்டான்.
எப்படிச் சித்திகளின் ஜான்சிரா தீவினைப் பிடிப்பது என ஆலோசனை தொடங்கிற்று, ஆளாளுக்குப் பல ஆலோசனைகளைச் சொன்னார்கள், நீண்ட கடல்முற்றுகையிட்டு பல மாதம் அவர்களை வளைத்து காவல் இருந்து பிடிக்கலாம் என்றார்கள், சித்திகளின் கப்பல்கள் எல்லாமும் உடைத்து முடக்கலாம் என்றார்கள், இன்னும் பல யோசனைகள் வைக்கப்பட்டன.
சாம்பாஜி தன் திட்டத்தைச் சொன்னான் “அந்தத் தீவு முக்கியமானது, அதைச் சித்திகளிடமிருந்து கைப்பற்றினாலும் அதைத் தக்கவைக்க பெரிய கப்பல் படை செலவு முதல் பெரும் பராமரிப்பு வரை செய்யவேண்டும், நாம் சித்திகளிடம் இருந்து பறித்தாலும் பிரிட்டிஷாரோ இதர கோஷ்டிகளோ அதை எக்காலமும் குறிவைத்துக் கொண்டே இருப்பார்கள்.
இதன் ஒரே தீர்வு அது நிலத்தோடு இணையவேண்டும்” என்றான் யாருக்கும் எதுவும் புரியவில்லை.
அவன் புன்னகைத்துச் சொன்னான் “புரியவில்லையா, நாம் ஒரு பாலம் கட்டி அந்தத் தீவை நம்மோடு இணைக்கப்போகின்றோம், ராமபிரான் இலங்கைக்குக் கட்டிய பாலம் போன்ற பாலம் அது”
அனைவரும் அதிர்ந்துபோனார்கள், இது சாத்தியமா இது நடக்குமா எனக் கலங்கிபோனார்கள், அதுவரை யாரும் அந்தக் கோணத்தில் யோசித்ததுமில்லை, எல்லோர் முகத்திலும் பெரும் கவனமும் குழப்பமும் வந்தது.
சாம்பாஜி சொன்னான், “நாம் ராமபிரான் போல நீண்டபாலம் கட்டவேண்டாம், இது 3 மைல்களுக்கு உள்ளாக முடிந்துவிடும் விஷயம், சாத்தியம்” என்றான்.
அவை இன்னும் குழம்பிற்று, அவன் தீர்க்கமாய்ச் சொன்னான் “எவ்வளவு பெரிய அணைகளை ஆற்றில் கட்டியவர்கள் நாம், எவ்வளவு பெரும் ஏரிகளை அமைத்தோம், சிம்மமும் ஏறத் தயங்கும் பெரும் மலை உச்சியில் கோட்டைகளை அமைத்தோம், அவைகளை எல்லாம் மிக எளிதாக செய்த நமக்கு இந்தச் சிறிய பாலம் சிக்கலா?, ஒருகாலமும் இருக்கமுடியாது.
என் தந்தை அதை ஏன் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இனி என் ஆட்சியில் அந்நியர் எவரும் நம்மை மிரட்டும்படி அனுமதிக்க முடியாது, இப்பாலத்தின் பணி உடனே தொடங்கும்” என்றான்.
மன்னன் உத்தரவு என்பதால் உடனே பணிகள் தொடங்கின. யானைகள் பெரிய பெரிய மரங்களை, கற்களை இழுத்து வந்தன, எருதுகள் வண்டி வண்டியாய் எல்லாப் பொருளும் சுமந்து வந்தன.
சில ஆயிரம் பணியாளர்கள் தயாரானார்கள், பெரும் நிதி ஒதுக்கப்பட்டது, உணவுக் கூடாரம் பணியாளர் தங்கும் கூடாரம் கல் தச்சர், மரத்தச்சர், யானைப் பாகன்கள் என எல்லோரும் தங்கவும் இடம் ஒதுக்கப்பட்டது.
மிகப் பிரமாண்டமாக அந்தப் பாலம் கட்டும் வேலை பூஜையுடன் தொடங்கப்பட்டது, ராமபிரானை வணங்கி அனுமனை வணங்கி முதல் கல்லை இட்டான் சாம்பாஜி.
அதன் பின் வேகமாக பணிகள் தொடங்கின, கல்லும் மரமும் இன்னும் எல்லாமும் கொண்டு பணிகள் வேகமாக நடந்தன, அங்கு நிச்சயம் சித்திகள் இடைஞ்சல் செய்ய வருவார்கள் என்பதால் பெரிய பீரங்கிகளுடன் இந்துசேனையின் கப்பல்கள் காவல் இருந்தன.
இந்தப் பாலம் கட்டும் செய்தி கேட்டு சித்தி அலறினான், அப்படியே போர்ச்சுகீசிய கும்பலும் பிரிட்டிஷாரும் தலையில் கைவைத்தனர், காரணம் இது மட்டும் முடிந்துவிட்டால் அப்பக்கம் கடல் இரண்டாகப் பிரியும். முழுக் கட்டுபாடும் சாம்பாஜி கையில் வரும், அந்தச் ஜான்சிரா தீவும் சாம்பாஜி கையில் காலத்துக்கும் நிற்கும்.
மிக வேகமாக பாலம் வளர்ந்தது, கிட்டதட்ட 800 மீட்டர் தாண்டி அதாவது மொத்த தூரத்தில் ஐந்தில் ஒரு பங்கு அளவுக்கு பாலம் இரவு பகலாகக் கட்டப்பட்டு வளர்ந்தது.
இன்னும் சில வாரங்களில் இந்த வேலை முடிந்துவிடும் அதன் பின் தங்கள் நிலை அதோகதி என உணர்ந்த சித்திகள் கலங்கிப் போயினர். அவர்களுடன் ஐரோப்பியரும் கலங்கிப் நின்றனர்.
அவர்கள் ஔரங்கசீப்பிடம் ஓடிச் சென்று கெஞ்சினார்கள். ஏதாவது செய்து சாம்பாஜியினை திசை திருப்பாவிட்டால் தங்கள் அழிவு உறுதி என அழுதார்கள், ஔரங்கசீப் அவர்களைக் காக்கும் பொருட்டும் சாம்பாஜியினைச் சீண்டும் பொருட்டும் இரு காரியங்களைச் செய்தான்.
முதலில் ஹாசன் அலிகான் எனும் தளபதி தலைமையில் பெரிய சேனையினைக் கல்யாண் பக்கம் அனுப்ப உத்தரவிட்டான். அப்படியே இன்னுமோர் தொலைநோக்கான காரியத்தைச் செய்தான்.
சாம்பாஜியின் அரசு புனே அருகே இருந்து தமிழகம் வரை நீண்டது, தமிழகத்தில் செஞ்சிக் கோட்டை எனும் வலுவான கோட்டை சாம்பாஜிக்கு இருந்தது, அந்தக் கோட்டையின் முக்கியத்துவமும் பலமும் பெரிது, அக்கோட்டை நிச்சயம் சாம்பாஜிக்குக் கைகொடுக்கும், ஒருவேளை யுத்தம் தொடங்கினால் கிழக்கில் இருந்து பெரும் உதவி கிடைக்கும் என ஊகித்தவன் அந்தத் தமிழக பகுதிகளைச் சாம்பாஜியிடம் இருந்து துண்டிக்க நினைத்தான்.
அதற்குச் சரியான ஆயுதமாக மைசூர் மன்னன் சிக்க தேவராயனைத் தூண்டிவிட்டு பெரிய நிதியும் இன்னும் தான் பரிட்ஷித்து பார்க்காத விஷ அம்புகளைக் கொடுத்தான், அவை ஆப்கானிஸ்தான் பக்கம் மலைவாழ் பழங்குடியினரிடம் இருந்தவை, இவற்றை இந்துஸ்தானில் அறம் பேணும் இந்துமன்னர்கள் செய்வதில்லை என்பதால் இங்கு அவை பழக்கத்தில் இல்லை.
அதனை அந்தக் கொடும் விஷ அம்பும்களைச் சிக்க தேவராயனுக்குக் கொடுத்து அவனைத் தூண்டிவிட்டான்.
ஒரு பக்கம் கல்யாண் பக்கம் பல்லாயிரம் வீரர்களுடன் வரும் ஹாசன் அலி கான், இன்னொரு பக்கம் தமிழகத்தைத் துண்டாட நினைக்கும் சிக்க தேவராயர் என இருவரையும் ஒருசேர எதிர்க்கும் நிலை சாம்பாஜிக்கு வந்தது.
செஞ்சிக் கோட்டை பற்றி ஔரங்கசீப்புக்கு ஒரு யோசனை இருந்தது போலவே திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை பற்றியும் சாம்பாஜிக்குத் திட்டம் இருந்தது, அந்தக் கோட்டையினை இலக்கு வைத்து மெல்லத் திட்டங்களை வகுத்தான், அக்கோட்டை சிக்க தேவராயனின் மிக முக்கிய கோட்டை என்பதால் அதைப் பிடிக்கத் தீவிரமாக சிந்தித்தான் சாம்பாஜி.
அதே நேரம் ஹாசன் அலிகான் கல்யாண் பக்கம் பெரும் தாக்குதலைத் தொடங்கினான், ஔரங்கசீப் தெற்கே வந்தபின் தொடங்கும் முதல் யுத்தம் என்பதால் சாம்பாஜி அதை எப்படி எதிர்கொள்வான் எனும் பெரும் பதற்றம் எல்லா இடத்திலும் தொற்றியது, முக்கியமாக ஔரங்கசீப் அதனை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
சாம்பாஜி துணிச்சலாக இரு காரியங்களைச் செய்தான், அதில் ஔரங்கசீப்பே கலங்கிப் போனான்.
(தொடரும்…)