சிவ வாக்கியார் பாடல்கள் : 31 to 40

சிவ வாக்கியார் பாடல்கள் : 31

“நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தநித்த நீரிலே

விருப்பமோடு நீர்குளிக்கும் வேதவாக்கியங் கேளுமின்

நெருப்புநீரு மும்முளே நினைந்துகூர வல்லிரேல்

சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே”

இப்பாடல் இப்படிப் பிரியும்.

“நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே

விருப்பமோடு நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளுமின்

நெருப்பும் நீரும் உம்முள்ளே நினைந்து கூற வல்லிரேல்

சுருக்கமற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே”

தினமும் நீராடி பின் யாகத்தில் நெய் ஊற்றி நெருப்பு வளர்க்கும் வேத பண்டிதர்களே, நெருப்பும் நீரும் உங்களுக்குள் உள்ளே உள்ள நாதனை ஜோதியினைக் காட்டுமோ?

மந்திரங்களைச் சொல்லி அந்த ஜோதியினைக் காணமுடியுமோ? முடியாது, அதனால் பஞ்சாட்சரம் சொல்லி வேதங்களின் பொருளை உணர்ந்து அவனை வணங்கினால் அந்தப் பரஞ்ஜோதியினை நீங்கள் காணலாம் அதோடு தொடர்ந்து நிலைத்திருக்கலாம் என்பது பாடலின் பொருள்.

நெய் ஊற்றி யாகம் வளர்த்து நெருப்பினைக் காணும் வேத ஞானியரே, பஞ்சாட்சர மந்திரத்தை சொன்னால் உங்கள் மனதில் ஜோதியாய் இருக்கும் அந்த ஆனந்த ஜோதியினைக் காணலாமே, அது ஏன் உங்களுக்குத் தெரிவதில்ல்லை எனக் கேட்கின்றார் சிவவாக்கியார்.

“ஓம் நமசிவாய” எனும் ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொன்னால் மனதிலே அந்த ஜோதி நெருப்பு சுடராகத் தெரியும் அந்த ஜோதியோடு கலந்திருக்கலாம் என்பது பாடலின் போதனை.

“கேளப்பா சிங் நமசி வாய மென்றால்

கிளர்ந்து நின்ற தென்னமரம் வளையுமப்பா

நாளப்பா மங் மங் கென் றொருகா லோதில்

நமனுமே கிட்ட வந்து அணுகா னப்பா

வாளப்பா வங் சிவய நமவென் றாலோ

மழைதனிலே நனையாமற் செல்லலாகும்

ஆளப்பா மழைநிற்க வேண்டு மென்றால்

ஆச்சரியம் சிவாய ஓம் ஸ்ரீயும் சொல்லே.”  என்பது அகத்தியர் பாடல்.

“”மந்திரம் நான்மறை யாகி, வானவர்

சிந்தையுள் நின்று அவர் தம்மை ஆள்வன

செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு

அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்தும்மே” என்பது திருஞான சம்பந்தர் பாடல்.

“ஐம்ப தெழுத்து அனைத்து வேதங்களும்

ஐம்ப தெழுத்து அனைத்து ஆகமங்களும்

ஐம்ப தெழுத்தின் அடைவை யறிந்தபின்

ஐம்ப தெழுத்தே அஞ்செழுத் தாமே” என்பது திருமந்திர பாடல்.

“நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!” என்பார் மாணிக்கவாசகர்.

ஞானியர் பலர் சொன்ன பெரும் போதனையினைச் சொல்லி போதித்த ஞானத்தை தானும் போதிக்கின்றார் சிவ வாக்கியார்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 32

“பாட்டிலாத பரமனை பரமலோக நாதனை

நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை

கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்

வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முநின்றதே”

இந்த பாடல் கொஞ்சமல்ல நிறைய தத்துவார்த்தமானது, எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய பாடல் என்பதால் சீர் பிரித்துச் சொல்ல அவசியமில்லை, ஆனால் தத்துவம் ஆழமானது.

பாட்டில்லாத பரமனை என்பது இரு பொருள். படம் அதாவது பரமனை எல்லோரும் பாடிப்போற்றுவார்கள் ஆனால் அவன் எதையும் பாடவேண்டிய அவசியமில்லை.

இன்னொன்று பாடு என்றால் துன்பம் என்றொரு பொருள் உண்டு, எந்தத் துன்பமும் இல்லாமல் இருப்பவன் இன்ப துன்பங்களையெல்லாம் கடந்த நிலையில் இருப்பவன் எனப் பொருள்.

“நாட்டிலாத நாதனை” என்றால் அவனிடம் மக்கள் நாட்டம் கொண்டு விருப்பம் கொண்டு அதுவேண்டும் இதுவேண்டும் எனக் கேட்பார்களே தவிர அவன் எதிலும் நாட்டம் கொண்டவன் அல்ல, அவன் பற்றெல்லாம் எல்லாம் கடந்த நிலையில் இருப்பவன் எனப் பொருள்.

“நாரிபங்கர் பாகனை” என்றால் அர்த்த நாரீஸ்வரராக தேவியினைத் தன் இடப்பக்கம் கொண்ட சிவனை எனப் பொருள்.

“கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்” என்றால் அந்த நாதனோடு கூடி, தன்னில் இருக்கும் அவனை அறிய வாய்குள்ளே மெல்ல மெல்ல மந்திரம் சொல்ல வேண்டும், மூச்சையே கவனித்து மூச்சுவிடும் ஒலி ஒன்றையே வைத்துச் சொல்லவேண்டும் என்கின்றார்.

அது எப்படியாக சொல்லப்படவேண்டும் என்பதை அடுத்த வரியில் சொல்கின்றான்.

“வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முநின்றதே”

அதாவது வேட்டைக்குச் செல்வோர் பேசமாட்டார்கள்,  இலக்கு எது எனத் தெரிந்தபின் மிக மிக அமைதியாய் மூச்சை கூட அடக்கி மிக மிக மௌனித்துத் தங்களுக்குள் அமைதியாய் குறிப்பால் சைகை தெரிவித்து விலங்கைப் பிடிப்பார்கள்.

அங்கே மௌனத்தில் அவர்கள் நிலைப்பார்கள், அந்த மௌன நிலையினைத்தான் சுட்டிக்காட்டுகின்றார் சிவ வாக்கியார்.

“ஏ மானுடரே, பரமனை வாய் திறந்து சத்தமாகப் பாடி, நாட்டம் அதிகம் கொண்டு மந்திரம் சொல்லி எங்கெல்லாமோ தேடி அலைந்து அடையமுடியாது.

அவன் எப்படி தன் பாதியினைத் தேவிக்குக் கொடுத்து அவளோடு இணைந்தே இருக்கின்றானோ அப்படி அந்தப் பரம்பொருள் உங்களில் இணைத்தே உங்களுடனே இருக்கின்றான்.

அந்தப் பரம்பொருளை உங்களில் உள்ளே இருக்கும் பரம்பொருளை, ஓரேழுத்து மந்திரம் அல்லது ஓசையில்லா மந்திரம் கொண்டு உணர்ந்து அடையுங்கள்ழ

வேட்டைக்காரன் எப்படி மௌனமாக இருந்து இரையினைப் பிடிப்பானோ, அப்படி முழு மௌனத்தில் அவனைத் தேடி அடையுங்கள்” என்பது சிவ வாக்கியாரின் போதனை.

இங்கே அவர் சொல்லவருவது மௌனத்தில் அமர்ந்து மூச்சுக்காற்றைப் பயிற்றுவித்து அந்த மூச்சுவிடும் ஓசை கூட அதிகம் கேட்காமல் கனத்த மௌனத்தில் யோகத்தின் உச்சியினை அடைந்து இறைவனைத் தன்னுள் உணரும் நிலை.

.

மூச்சு விடும் ஓசை ஒன்றிலே நிலைக்கும் தவத்தை, மூச்சு செல்லும் ஓசை ஒன்றை மட்டும் கொண்ட நிலையினை அசபை என்பார்கள் அது ஓரேழுத்து மந்திரம் என்பார்கள்.

“”போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தை

தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி

சாற்றுகின் றேன்அறை யோ சிவ யோகத்தை

ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே”

என்பது திருமூலர் வாக்கு.

அசபை என்பது அதுதான், அசையா நிலையில் மூச்சுமட்டும் விட்டு தியானிக்கும் நிலை அதுதான் ஓரேழுந்து மந்திரம், ஒளவையார் அதைச் சொல்கின்றார்.

“அசபை யறிந்துள்ளே யழலெழ நோக்கில்

இசையாது மண்ணிற் பிறப்பு”

அசபை என்பது வாயால் சொல்லாமல் மூச்சால் செய்யப்படும் மந்திரப் பயிற்சி அது. வார்த்தை அற்றது, அதைச் செய்ய செய்ய மூலாதாரத்தில் இருந்து எழும் அக்னியான சக்தி மேலேழுந்து சிரசை அடையும், அப்பொழுது பெரும் ஞானம் வாய்க்கும்.

வாய்திறந்து சொல்லபடும் மந்திரம் சபை, மூச்சுக்காற்றிலே வார்த்தையின்றி சொல்லப்படும் மந்திரம் அசபை, அது மந்திரம் என்பதை விட மூச்சுப்பயிற்சி என்பதே சரி.

அந்நிலையில் மூச்சு வெளியேறி உள்வாங்கும் ஒரே ஒரு ஒலிமட்டும் கேட்பதால் அது ஒரேழுத்து மந்திரம் எனவும் அழைக்கப்படும்.

ஔவை தன் விநாயகர் அகவலில் “குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து” எனச் சொல்கின்றார்.

மிக மிக மௌனித்து இந்த மூச்சின் ஒலிஒன்றை அசபை மந்திரமாக கொண்டு தேடினால் தன்னுள் இருக்கும் சிவனை அடையலாம் என்கின்றார்.

இங்கு வேட்டைக்காரன் உவமையினை அவர் சொல்வது புதியவிஷயம் அன்று.

அக்காலத்தில் வேட்டையினைக் கொண்டு ஆன்மீக தத்துவத்தை விளக்கும் காட்சி உண்டு, கண்ணப்ப நாயனார் வாழ்வே அந்தத் தத்துவம்.

வேட்டைக்காரன் எப்படி மௌனத்தில் நின்று போராடி இலக்கை வீழ்த்துவானோ அப்படி மௌனத்த்தில் இறைவனைத் தேடினால்  ஆணவ மல மாயையை எனும் விலங்கு அழியும் எனப் போதித்த மதம் இந்துமதம்.

சிவன் பன்றிவேட்டைக்கு வந்தார், அர்ஜூனனுடன் சண்டையிட்டார் என்பதில் இந்தத் தத்துவமும் அடங்கியிருந்தது, கண்ணப்ப நாயனார் வாழ்வில் இந்தத் தத்துவம் உண்டு.

அக்காலத்தில் சிவாலயங்களில் திருவிழாவின் போது திருவேட்டை சடங்கு என்றே ஒன்று உண்டு.

அப்போது திருவேட்டை கவி பாடப்படும், திருவேட்டை தத்துவம் சொல்லப்படும், பின் சிவன் பன்றியினை வேட்டையாடும் அல்லது கண்ணப்ப நாயனார் பன்றிவேட்டைக்குச் செல்லும் காட்சி நடத்தப்படும்.

இன்று கிராம திருவிழாவில் காணும் மயான வேட்டை போல அன்றே இந்தத் திருவேட்டை உண்டு.

ஆன்மாவினை எப்படி மௌனத்தால் அடக்கி மாயைகளை மும்மலங்களை ஒழித்து இறைவனை அடையவேண்டும் என்பதை வேட்டை காட்சியால் சொல்வார்கள்.

வேட்டையில் முழுக்க மௌனம், கவனம், விழிப்பு நிலை என எல்லாம் உண்டு, வேட்டை மனிதனின் ஆதிகால தொழில் என்பதால் அதைச் சொல்லியே அவனைத் தியானத்துக்கு இழுத்த சூட்சுமம் உண்டு.

இந்தியாவில் இந்தத் திருவேட்டை என்பது பல வகை மயான வேட்டை, பரிவேட்டை என மாறிப்போனாலும் சைவபூமியான இலங்கையில் இந்தத் திருவேட்டை கவி, திருவேட்டை விழா எல்லாம் உண்டு.

இந்தத் திருவேட்டை விழா தத்துவத்துவத்தைச் சொல்லித்தான் போதிக்கின்றார் சிவவாக்கியார்.

சிவன் பார்வதியோடு மட்டுமல்ல நம்மோடும் நம்முள் இணைந்திருக்கின்றான், வேட்டைக்காரன் மௌனத்தால் நின்று விழிப்பு நிலை கொண்டு வேட்டையாடுதலைப் போல விழிப்பு நிலை மௌன தியானத்தால் அவனை அடையலாம் காணலாம் எனப் போதிக்கின்றார்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 33

“செய்யதெங்கி லேயிளநீர் சேர்ந்தகார ணங்கள்போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே”

இப்பாடல் இப்படிப் பிரிந்துவரும்.

“செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள்போல்
ஐயன் வந்து என் உள்ளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பதில்லையே”

செம்மையான தென்னைமரத்தில் தேங்காய்க்குள் நீர் எப்படி வந்தது? தானாக வந்தது. அப்படி என்னுள் இறைவன் எப்போதும் உண்டு, அவனாக வந்து என்னோடு இருக்கின்றான், அதை நான் கண்டறிந்தபின் இந்த உலகத்தில் என்ன பேசவேண்டி இருக்கின்றது? எதுவுமில்லை” என்பது பாடலின் பொருள்.

ஆழ்ந்த தத்துவமொன்றைப் போதிக்கின்றார் சிவ வாக்கியார்.

தென்னை மரத்தின் கனியான தேங்காய்க்குள் நீர் வரும் வித்தை யாருக்கும் தெரியாது. குறும்பல் பெரிதாக பெரிதாக நீரும் அதனுள் சேர்ந்தே பெருகும், முற்றிய காயுனுள்ளும் அந்த நீர் இருக்கும்.

அது எப்படி உருவாகின்றது எனும் ரகசியம் அறிந்தவரில்லை, அதன் இயல்பு அது.

அப்படி இறைவன் நாம் பிறக்கும்போதே நம்முள் தேங்காய்க்குள் நீர் போல் இருக்கின்றான், நம்மோடே இருக்கின்றான் அவனை மனதால் உணர்ந்தபின் இந்த உலகில் எதுவும் பேச‌ அவசியமில்லை, எல்லாமே இந்த உலகில் மாயை இறைவனே மெய், அந்த இறைவன் நம்முள் நம்மோடு இருக்கின்றான் எனத் தெரிந்தபின் பேச எதுவுமில்லை என்கின்றார் சிவவாக்கியார்.

ஒரு வரியில் தேங்காயினை உதாரணம் சொன்னார் எனக் கடந்துவிட முடியாப் பாடல் இது, தேங்காய் இந்து வழிபாட்டு முறையில் எவ்வளவு பெரிய தத்துவக் குறியீடு என்பதை இங்குச் சொல்கின்றார் சிவ வாக்கியார்.

தேங்காய் இல்லாமல் இந்துக்கள் வழிபாடு இல்லை, அதன் சூட்சும சக்திகள் இன்னும் பல பிரபஞ்ச‌ ஈர்ப்புகள் அதிகம் என்பது ரிஷிகள் அறிந்த நல்ல விஷயங்களை ஈர்க்கும் சக்தி அதற்கு உண்டு, அது தாந்ரீகம்.

சித்தர்கள் ஏன் சொன்னார்கள் , அதுவும் “கபால கனி” எனச் சொன்னார்கள் என்றால் விஷயம் இல்லாமல் இல்லை.

தேங்காயில்தான் ஐந்து பூத தத்துவங்களும் உண்டு, ஐம்பெரும் பூத தத்துவங்களும் கொண்ட ஒரே கனி அதுதான்.

தேங்காய் இளமையாக இருந்து பின் முற்றி பயன்பாட்டுக்கு வரும், அப்படியே மானிடன் தன் சிந்தையால் முதிர்ந்து இறைவனை அடைதல் வேண்டும்.

தேங்காயினை ஏன் வழிபாட்டில் வைக்கச் சொன்னார்கள்?

தேங்காய்குள் ஐம்பூதங்களும் இருப்பதைப் போல் பஞ்ச பூதவடிவமான இறைவன் தன்னுள் இருந்து நடத்த வேண்டும் எனச் சொன்னார்கள்.

கபால மோட்சம் என்பதே அதாவது பிரம்மந்திரியம் எனும் கபால சக்கரம் துலங்குவதே, திறப்பதே ஞானப் பெருநிலை ,பிறப்பற்ற நிலை அப்படி ஒருவன் உச்சந்தலை சக்கரம் துலங்க வேண்டும் என்பதற்கு தேங்காயினைச் சொன்னார்கள்.

தேங்காய் உடைப்பதன் தத்துவம் என்ன?

தலைக்கணம் என்பது ஆணவம், அந்த ஆணவம் இருக்கும் வரை பரம்பொருளை அறிய முடியாது, ஆணவம் சுக்குநூறாக உடைந்தால் அங்கே வெண்மை ஜோதியான இறைவனை காணலாம் எனச் சொல்ல அந்த ஏற்பாட்டை செய்தார்கள்.

தலைக்கணம் கொள்ளாதே, தலையில் ஆணவம் இருந்தால் உடைத்துப் போடு, அப்போது பரமனருள் கிடைக்கும் என்பதைக் குறிப்பால் சொன்னார்கள்.

மகா முக்கியமாக ஒரு யோக ரகசியத்தைச் சொன்னார்கள்.

தென்னையின் அடிவேரில் ஊற்றப்படும் நீர் அதன் உச்சியில் தேங்காயில் இனிமையான நீராக உருமாறுவது போல், உடலின் அடியில் இருக்கும் மூலாதார சக்கரத்திலிருந்து எழும் குண்டலினி சக்தி உச்சந்தலையில் அமிர்தமாக சுரந்து ஞான நிலையினைக் கொடுக்கும், அந்தத் தென்னையின் இயக்கம் உடலில் நடந்தால் தேங்காய்க்குள் நீர் போல உடலுக்குள் அமிர்தம் சுரக்கும், பரம்பொருளின் தரிசனம் கிடைக்கும் என்பது போதனை.

இந்தப் போதனையினைத்தான் சிவ வாக்கியார் சொல்கின்றார், “கபாலகனி” எனச் சித்தர்கள் சொன்ன தத்துவத்தைச் சொல்கின்றார்.

தென்னையின் காய்க்குள் நீர் எப்படி வந்தது? அதன் வேரில் இருந்து மேலேறி வரும் நீர் காய்க்குள் இனிய நீராக பெருகிற்று.

அப்படி மூலாதார சக்கரத்தில் இருந்து எழும் சக்தி உச்சந்தலையில் கபாலத்தில் அமிர்தமாக சுரக்கும் போது இறைவனைக் காணலாம், உணரலாம்.

பஞ்ச பூத வடிவான இறைவன் நம்முள் உண்டு என்பதைக் காணலாம், பஞ்ச பூத வடிவங்களைத் தன்னில்கொன்ட தேங்காய்க்குள் நீர் இருப்பதைப் போல் இறைவன் நம்மோடு நம்முள் உண்டு என்பதை உணரலாம் என்பதைப் போதிக்கின்றார்.

இறைவன் உன்னுள் தேங்காய்க்குள் நீர்போல் உண்டு அப்படி மறைந்திருக்கின்றான், பக்தியோகம் மூலம் அவனை அறிந்துகொள் என்பதே இந்துமத போதனை.

காஞ்சி மகாபெரியவர் ஒரு மட்டை தேங்காயுடன் காட்சியளிப்பது அந்தத் தத்துவமே.

அதைத்தான் அன்றே போதித்தார் சிவ வாக்கியார்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 34

“மாறுபட்டு மணிதுலக்கி வண்டினெச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே யூற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரு மறிந்துநோக்கு மென்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள்பாதம் வைத்ததே”

இப்பாடல் இப்படிப் பிரிந்து பொருள் தரும்.

“மாறுபட்டு மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின் மேல் ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் உண்மையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே”

உலோகங்களை அதன் இயல்பில் இருந்து மாற்றி உலோக கலவையாக்கி ஒலிக்கும் மணி செய்து மணியோசை எழுப்பி, வண்டுகளின் எச்சிலான தேனைக் கல்சிலை மேல் ஊற்றி பூஜை செய்யும் மக்களே அதன் அர்த்தம் தெரியாதவரை நீங்கள் செய்வது மூடத்தனமே.

இறைவன் நம்முள் இருக்கின்றான் அவனைத் தியானித்து அன்பால் அபிஷேகம் செய்து மனதால் உணர்ந்து பூஜை செய்து அடைய வேண்டும், அப்போது பாவங்களை மனதால் உணர்ந்து அதனைப் பகுத்து குருவின், மனதில் எழுந்திருக்கும் அந்தக் குருவானவன் பாதத்தில் வைத்து வணங்க வேண்டும் அதுதான் உண்மையான பூஜை என்பது பொருள்.

சிவ வாக்கியார் போதிக்கும் தத்துவம் கொஞ்சம் ஆழமானது. மேலோட்டமாக பார்த்தால் பூஜை அபிஷேகங்கள் அர்த்தமில்லாதது போல் சொன்னாலும் அதன் தாத்பரியத்தை அவர் விளக்குகின்றார்.

மணியோசை எழுப்பி விக்ரஹத்துக்குத் தேனாபிஷேகம் செய்யும் பக்தர்களை நோக்கிச் சொல்கின்றார்.

மணி என்பது பல உலோகங்களை அவற்றின் இயல்பில் இருந்து பிரித்துப் பல உலோகங்களால் செய்யப்படும் கலவை.

தேன் என்பது பூக்களில் இருந்து வண்டுகள் வாயால் எடுத்துவரும் துளியின் எச்சம்.

இங்கே சிவ வாக்கியார் சொல்லும் தத்துவம் இப்படிப் பல உலோகங்களைக் கலந்து செய்யும் மணிபோல பல பொய்களைக் கலந்து பேசி சம்பாதிக்கும் மானிடரே என்பது.

அப்படியே தேனை வண்டின் எச்சம் என்கின்றார், தேனொழுக பேசி அதில் பொய் கலந்து சம்பாதிக்கும் மானிடரே என்பது

ஆம், பொய்யும் புரட்டும் பேசி சம்பாதித்து பொருள் குவிக்கும் மானுடரே, அந்தப் பொய்யினால் எழுந்த சம்பாத்தியத்தை இறைவனுக்கு அபிஷேகமாக செய்தால் அங்கே இறைவன் இருப்பதில்லை அங்கே கல்தான் எஞ்சும்.

பொய்யும் புரட்டும் பேராசையும் கொண்டு செய்யப்படும் பூஜை அர்த்தமுள்ளது அன்று, அங்கே இறைவன் இருப்பதில்லை, கல்லே மிஞ்சும், அங்கே இறைதன்மை நீங்கிவிடுகின்றது, அந்தப் பூஜை அர்த்தமில்லாததாகின்றது.

மாறாக, இறைவன் மனதில் உண்டு, அந்த மனதில் அவனிடம் பேசுங்கள் நீங்கள் செய்த பாவங்களை எல்லாம் நான் எனும் ஆணவத்தையெல்லாம் கூறு கூறாக வைத்து மன்னிப்புக் கேளுங்கள், மனதில் உள்ள தெய்வத்தைப் பூஜியுங்கள், அது அர்த்தமானது என்கின்றார்.

உண்மையில் இந்துக்களின் வழிபாடு இதுதான், எல்லாத் தெய்வ சந்நிதி முன்னும் பலிபீடம் என ஒன்று உண்டு, அங்கே நின்று நம் மனதின் பாவங்களை அகங்காரங்களை ஆணவங்களை பலியிட்டு அதாவது மனகுற்றமெல்லாம் நீக்கிவிட்டுத்தான் சந்நிதி முன்னால் இறைவனிடம் செல்ல வேண்டும்.

அதுதான் ஆகமவிதி. அதுதான்வழிபாட்டு விதி.
ஆனால், அதை யாரும் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. மாறாக, ஆணவத்துடனே இறைவனிடம் சென்று நன்றிக்கடன் தீர்க்க அபிஷேகம், வேண்டுதல் கேட்டு அபிஷேகம் எனச் செய்வார்கள்.

அப்படியானவர்களை நோக்கித்தான் பொய்யும் புரட்டும் செய்து சம்பாதித்து நான் எனும் ஆணவத்தில் செய்யும் அபிஷேகத்தால் பலனில்லை, அது தேன் இல்லை உங்கள் வஞ்சக எச்சில், அது மணியோசை இல்லை உங்கள் மனதின் ஆணவக்குரல் என சூசகமாகச் சொல்லி எச்சரிக்கின்றார் சிவ வாக்கியார்.

“நாபிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி” எனப் புலவன் பாடியது அதைத்தான்.

“கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவனெங்கும் தோய்வுற்று நிற்கின்றான்
குற்றந் தெளியார் குணங்கொண்டு கோதாட்டார்
பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே.””

என ஐந்தாம் தந்திரத்தில் திருமூலர் போதிப்பதும் இதுதான்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 35

“கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே”

இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும்.

“கோயிலாவது ஏதடா குளங்கள் ஆவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே”

கோவில் என்பது எது? தீர்த்தக்குளம் என்பது எது எனத் தெரியாமல் அறியாமல் கோவிலிலும் குளங்களிலும் வழிபடும் அடிமைகளே, கோவிலும் தீர்த்தமும் மனம் அல்லவா? மனதில் இருப்பது அல்லவா? அந்த மனதில்தான் அழியா ஆன்மா உள்ளது, அந்த ஆன்மா ஒருகாலமும் அழியாது என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்பது பொருள்.

மேலோட்டமாக பார்த்தால் இது கோவிலும் குளங்களும் அவசியமில்லை எனச் சித்தர் சொன்னதாக தோன்றும், உண்மை பொருள் அது அன்று. சித்தர் பாடல்கள் சூட்சுமம் நிறைந்தது.

இந்துக்களின் கோவில்களும் தீர்த்தக்குளம், தெப்பகுளமெல்லாம் வெறும் ஏற்பாடுகள் அன்று, அவை ஆன்மீக மையம் மட்டுமல்ல அவை எல்லாம் அறக்காரிய நிலையங்கள்.

கோவில்கள்தான் அறங்களின் மையமாக இருந்தது, அதனாலே அதன் காவலர்கள் அறங்காவலர்கள் என்றானார்கள்.

கோவில்கள்தான் பசிப்பிணி ஒழிப்பு, சமத்துவம், ஊர் ஓற்றுமை இன்னும் தான தர்ம அறங்கள் காவல் என எல்லாவற்றுக்கும் மையமாய் இருந்தன‌.

திருமணம், இதர விசேஷங்கள் என அவைதான் ஒற்றுமையும் தான தர்மமும் உறவும் வளர்த்தன, ஜோதிட சிறப்பு நாட்களில் விசேஷ நாட்களில் பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்துக்கொடுக்க அவைதான் வழி செய்தன‌.

கோவில்கள்தான் ஒரு ஊரின் ஒற்றுமை முதல் அறம் வரை வளர்த்தன, அதன் தாத்பரியம் அதுதான், தெய்வத்தைக் காட்டி மானுடமும் அறமும் தர்மமும் ஒற்றுமையும் வளர்த்த சமூகம் இந்து சமூகம்.

அது குளங்கள் தீர்த்தங்கள் அமைப்பதிலும் அர்த்தமில்லாமலில்லை, அவைதான் மக்களின் சுகாதாரம், சுத்தம், நிலத்தடி நீர் , கால்நடை வளர்ப்பு, நீர் ஆதாரம், பயணங்களுக்கு உதவி என எல்லாமுமாய் இருந்தன‌.

இந்துக்களின் கோவில்களிலும் தீர்த்தங்களிலும் முழுக்க பொதுநலமே இருந்தது , மக்கள் நலமும் மாண்பும் அதைக் காக்கும் அவசியமும் கோவில்கள் கொண்டிருந்தன‌.

அவைதான் அக்கால சத்திரங்கள், அவைதான் சாவடிகள், வழிபோக்கனுக்கு அவைதான் எல்லா உதவிகளும் செய்தன‌.

கோவில்களின் அபிஷேகம் மருத்துவம், யாகப்புகை மருத்துவம், தல விருட்சம் மருத்துவம் இன்னும் கோவிலின் ஒவ்வொரு விஷயமும் ஆரோக்கியம் சார்ந்தது.

பிரமாண்ட ஆலயங்கள் மலைமேல் ஆலயமெலாம் உடல் ஆரோக்கியத்தை வளர்த்தன, அந்தச் சூட்சுமமும் இருந்தது.

இப்படிக் கோவில்களின் பெரும் நோக்கம் பொதுநலமும் மக்கள் சேவையும் அறக்காரியங்களும். குளங்களின் நோக்கமும் அதுவே.

இந்துமன்னர்களின் அவைகள் கோவிலில்தான் நடந்தன, மதுரை தமிழ்ச்சங்கம் கோவிலில்தான் நடந்தது, கோவில் அரசன் அவை நடத்தும் அவையாகவும் இருந்தது.

இங்கேதான் தேர்ந்த ஞானத்தைச் சொல்கின்றார் சிவவாக்கியார்.

கோவில்களும் குளங்களும் அவை அமைக்கப்பட்ட தாத்பரியங்களும் எல்லாம் கலந்தவை, அறம் தர்மம் தார்மீகம் மானுடம் அதில் ஆன்மீகம் என எல்லாம் கலந்தது.

மானுடரே அங்கே ஆன்மீகம் மட்டும் உண்டு எனவும், இறைவன் அந்தக் கோவிலில் மட்டும் உண்டு எனவும் நினைந்து இந்த வட்டத்துக்குள் சிக்க வேண்டா, இறைவன் கோவிலில் மட்டுமல்ல எல்லா இடத்திலும் உண்டு, கோவில்களின் தாத்பரியம் எல்லாமும் கலந்தது அறம் கலந்தது, மானுட நலமும் சார்ந்தது.

அதனால் முழுக்க இறைவனை அறியவேண்டுமென்றால் அங்கே மட்டும் அந்தக் காரியங்களில் மட்டும் தேடாதீர்கள், அவை அறக்காரியங்கள் தர்ம காரியங்கள் அதைச் செய்துவிட்டு அதைத் தாண்டி இறைவன் உங்களில் உண்டு அழியா ஆன்மாவில் உண்டு என்பதை அறியுங்கள்.

குளமும் ஆலயமும் மட்டுமலல இறைவன் உங்களுக்குள்ளும் உண்டு என்பதை அறிந்து, அறக்காரியங்கள் தர்மகாரியங்கள் தாண்டி உங்களில் இருக்கும் இறைவனை உணர்ந்து அடையுங்கள், கோவிலும் குளமும் அறமும் தர்மமும் வளர்ப்பவை, அங்கே இறைவன் எல்லா இடம்போல் உண்டு.

அதனால் இறைவன் அங்கு மட்டும் இருப்பதாக கருதாமல் கோவில் குளங்களின் முழுத் தாத்பரியம் காத்து உங்களில் இருக்கும் இறைவனையும் அறிந்துகொள்ளுங்கள் என்கின்றார்.

இதைத்தான் பட்டினத்தார் பாடுகின்றார்.

“தத்துவத்தைப் பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால்
உய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே!

ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே”

வள்ளலார் அதையே பாடுகின்றார்.

“தோன்றிய வேதாகமத்தைச் சாலமென வுரைத்தேம்
சொற்பொருளும் இலக்கியமும் பொய்யெனக் கண்டறியேல்
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்காகும்
உலகறி வேதாகமத்தைப் பொய்யெனக் கண்டுணர்வாய்

ஆன்ற திருவருட் செங்கோல் நினக்களித்தோம் நீயே
ஆள்க அருளொளினால் என்றளித்த தனிச் சிவமே
ஏன்ற திருவமுதெனக்கும் ஈந்த பெரும் பொருளே
இலங்கு நடத்தரசே என் இசையுமணிந்தருளே”

இதைத்தான் சிவவாக்கியாரும் பாடுகின்றார். இந்துமதத்தின் தாத்பரியங்களை மிக நுணுக்கமாக விளக்கிப் பாடுகின்றார்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 36

“செங்கலுங் கருங்கலுஞ் சிவந்தசாதி லிங்கமும்
செப்பிலே தராவிலுஞ் சிவனிருப்ப னென்கிறீர்
உன்பத மறிந்துநீ ரும்மைநீ ரறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாத ராடல்பாட லாகுமே”

இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும்.

“செங்கல்லும் கருங்கல்லும் சிவந்த சாதி லிங்கமும்
செப்பிலே தராவிலும் சிவன் இருப்பு என்கின்றீர்
உன்பதம் அறிந்து நீர் உம்மை நீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே”

அதாவது செங்கல்லிலும் கருங்கல்லிலும் ஆலயம் அமைத்து நல்ல கல்லில் சிவலிங்கமும் அமைத்து இன்னும் செம்பும் இதர உலோகமும் கலந்து கருவறை அமைத்து இங்கே சிவன் உண்டு என்கின்றீகள், ஆனால் உண்மை அறிந்து நீர்யார் என அறிந்தபின் அம்பலத்தில் ஆடும் பரமனை உங்கள் உள்ளத்திலே காணல் ஆகுமே, அது உங்களுக்குப் புரியவில்லையே எனப் பொருள்.

சரியை, கிரியை, ஞானம், யோகம் என நான்கு படி நிலைகளை இந்துமதம் சொல்கின்றது.

அதாவது, உருவமற்ற கடவுளை எங்கும் வியாபித்து நம்முள் இருக்கும் தெய்வத்தை அடைந்து உணர்வதே ஆன்மீகத்தின் கடைசி படிநிலை என்கின்றது.

இங்கே சிவவாக்கியார் கோவிலை சிலைகளை வெறுக்கவில்லை, அதை வழிபடுவதைக் கண்டிக்கவில்லை.

மாறாக, எவ்வளவு நாள் தொடக்க படியிலே நிற்பீர்கள் இன்னும் நீங்கள் ஏறிவரவேண்டிய படிகள் உண்டு, கோவிலும் விக்ரஹங்களும் தொடக்கப் படிகளே, அதனைத் தாண்டி உருவ வழிபாட்டில் இருந்து அரூப வழிபாட்டுக்கு வந்து பின் மனதால் இறைவனைத் தியான யோக வழிபாட்டில் தேட வேண்டும்.

அப்போது மனதில் இருக்கும் இறைவன் தெரிவான், அதுதான் ஆன்மீகக் கடை நிலை.

கோவிலும் விக்ரஹமும் போதும் என நினைந்துவிடாதீர்கள், அதைத் தாண்டி வாருங்கள் அப்போதுதான் மனதுள் உறையும் இறைவனையும் அவன் இயக்கத்தையும் அறிந்து கொள்ளமுடியும் என்கின்றார் சிவ வாக்கியார்.

உருவ வழிபாட்டில் இருந்து அரூப வழிபாட்டிற்கு சென்று மனதால் இறைவனை அடையும் நிலையினைக் காணும் நிலையினைப் போதிக்கின்றார்.

திருவண்ணாமலை தத்துவமே அதுதான், சிவலிங்க தத்துவமே அதுதான்.

அருணாச்சலம் என்றால் அருணம் அதாவது மறைந்திருந்து அருள்பாலிப்பது எனப் பொருள். அந்த இறைவன் உன் மனதில் மறைந்திருக்கின்றான், அவனைத் தியானித்து அடைந்து அந்தப் பரம்பொருளை மனதிலே காணுங்கள், அவனாக மாறுங்கள்.

நீங்களும் பரம்பொருளும் வேறு அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்கின்றார் சிவவாக்கியார்.

சிவ வாக்கியார்பாடல்கள் : 37

“பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசைகொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே. “

பாடல் இப்படிப் பிரிந்து வரும்.

“பூசைபூசை என்று நீர்பூசைசெய்யும் பேதைகாள்
பூசை உன்ன தன்னிலே பூசை கொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வானாதி பூசை கொண்டதோ
ஏது பூசை கொண்டது இன்னவென்று அறிய இயம்புமே”

பூசைகளைப் பூ இட்டு, நீர் இட்டு செய்யும் பேதைகளே உங்கள் பூசை எங்கே சேர்கின்றது என்பது அறிவீர்களா? அது ஆதி அந்தம் இல்லாப் பரமனை அடைந்ததோ? வானகம் அடைந்ததோ என்பதை யாரால் சொல்லமுடியும்? அதனால் மனதால் பூசை செய்து வழிபடுங்கள், அப்போது அது அடையவேண்டிய இடத்தை அடையும்.

அதாவது பூவும் நீரும் தூபமும் இட்டு வழிபடும் கிரியை எனும் முதல்நிலை வழிபாட்டைப் பற்றி இப்படிப் பாடுகின்றார் சிவவாக்கியார்.

அதற்காக அவர் பூஜை செய்வதை எதிர்க்கின்றார், அவர் மலரிட்டு, தூபமிட்டு வழிபடுவதை எதிர்க்கின்றார், அது மூடநம்பிக்கை எனச் சாடுகின்றார் என்பதல்ல விஷயம்.

அவர் அழுத்திச் சொல்லும் போதனை, வழிபாடுகளும் பூஜைகளும் மனதால் ஒன்றி செய்யப்பட வேண்டும் என்பது.

மனதில் இறைவனை நிறுத்தி, மனதை முழுமையாக இறைபாதம் வைத்து ஒவ்வொரு அசைவின் தத்துவம் அறிந்து வழிபட வேண்டும் என்பது.

பூவினை வைக்கும் போது மலர்ந்த பூ போல் இறைவன் தன் மனதில் மலரவேண்டும், ஞானம் மலர வேண்டும் என்றும், நீரினை இடும்போது மனதின் அழுக்கையெல்லாம் இறைவன் களையட்டுமென்றும், தூபமிடும்போது மனமெல்லாம் நன்மை பரவட்டும் என்றும், தீபமேற்றும்போது ஞான ஒளி பெருகட்டும் என்றும் அர்த்தம் அறிந்து ஒவ்வொரு பூஜையின் தாத்பரியம் அறிந்து செய்யுங்கள்.

முழு மனதோடு அதை ஒன்றிச் செய்யுங்கள் என்கின்றார்.

சரியை, கிரியை, ஞானம், யோகம் எனும் படிநிலைகளில் சரியை முக்கியமானது.

ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் முழு மனதோடு மிகக் கவனமாகச் செய்தல் வேண்டும்.

இதனாலே இந்துக்கள் பகவானுக்குத் தொடுக்கும் பூ முதல் சமைக்கும் உணவு வரை அவ்வளவு கவனமாக இருப்பார்கள்.

ஏன் அப்படி பழக்கினார்கள் என்றால் அப்போதுதான் மனம் ஒவ்வொரு காரியத்திலும் பகவானோடு இறைநினைவில் ஒன்றும்.

இறைவனுக்காய் மலர் தொடுக்கின்றோம், இறைவனுக்காய் சமைக்கின்றோம், இறைவனுக்காய் தீபமேற்றுகின்றோம் என ஒவ்வொரு அசைவிலும் இறைவனை மனதால் நினைக்க வைக்கும் ஏற்பாடு அது.

சிவவாக்கியார் அதைத்தான் சொல்கின்றார், பூஜையில் செய்யப்படும் ஒவ்வொரு காரியமும் முக்கியமானது, அதைக் கவனமில்லாமல் சிந்தையினை எங்கோ வைத்துச் செய்தல் சரியல்ல, முழு மனதோடு முழுவதும் மனம் ஒன்றிய நிலையில் செய்வதே பலனளிக்கும், பூஜையினை முழு மனதோடு தொடங்குங்கள் என்கின்றார்.

பூஜைவழிபாடுகள்தான் பக்தியின் முதல்நிலை அதாவது அஸ்திபாரம், அந்த அஸ்திபாரத்தைச் சரியாக இடவேண்டும், அதில் இருந்துதான் ஞானகோபுரம் எழும்பும் என்பதை போதிக்கின்றார் சிவவாக்கியார்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 38

“இருக்குநாலு வேதமு மெழுத்தையற வோதிலும்
பெறுக்கநீறு பூசிலும் பிதற்றிலும் பிரானிரான்
உருக்கி நெஞ்சை யுட்கலந்து வுண்மைகூற வல்லீரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே”

இப்பாடல் இப்படிப் பிரிந்து பொருள் தரும்.

“இருக்கும் நாலு வேதமும் எழுத்தை அற ஓதிலும்
பெறுக்கநீறு பூசிலும் பிதற்றிலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லீரேல்
சுருக்கமற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே”

நாலு வேதங்களை ஒரு பிசிறின்றி ஒரு எழுத்து விடாமல் ஓதினாலும், உடலெல்லாம் நீறு பூசி மந்திரங்களைச் சொல்லிக்கொண்டிருந்தாலும் உளமாற மனமொன்றிய பக்தி இல்லையேல் இறைவனை அடையமுடியாது. மாறாக, நெஞ்சை உருக்கி மனதால் அன்புவைத்து பரமனை தொழுதால் மிகப் பரந்ததும் சுருக்கமுடியாததுமான சோதியாகிய இறைவனோடு தொடர்ந்து கலந்திருக்கலாம் என்பது பாடலின் பொருள்.

அதாவது, நாளெல்லாம் வேதமும் மந்திரமும் ஓதி திருநீறிட்டு வணங்கி நின்றால் மட்டும் பரம்பொருள் இறங்கி வருவதில்லை, தெய்வம் உள்ளத்தை மட்டும் பார்க்கும், அங்கே உண்மையான அன்பிருந்தால் அது ஓடிவந்து அருள்புரியும்.

இந்த உதாரணத்தை எல்லாக் காலமும் போதித்தது இந்துமதம்.

பக்தி எனும் பெயரில் உளமாற தொழாமல் வாயால் பிதற்றுவோர்க்குப் பரமனருள் கிட்டாது, மாறாக எதுவுமே தெரியாவிட்டாலும் உளமார்ந்த அன்பு இருந்தால் உளமார்ந்த பக்தி இருந்தால் போதும். பரமனருள் கிட்டும் என்பது இந்துக்களின் புராணம் முதல் எல்லா இடங்களிலும் வரும் போதனை.

அது திருவிளையாடல் என எல்லாக் காட்சியிலும் வரும், மகாபாரத்தில் வரும், இன்னும் எல்லா இடங்களிலும் வரும்.

வேத சாஸ்திரத்தில் தேறியோர் ஆயிரம் பேர் இருந்தாலும் பகவான் கண்ணனின் அருள் அர்ஜூனனுக்கே கிடைத்தது.

எத்தனையோ முனிவர்கள் ரிஷிகள் வேத தத்துவான்கள் இருந்தாலும் ராமனின் அருள் அனுமனுக்கும், குகனுக்குமே கிடைத்தது. மூதாட்டி சபரிக்கும் கிடைத்தது.

நாயன்மார்களில் இந்தத் தத்துவத்தைக் காணலாம். புலையரான நந்தனும் இன்னும் வேடனான கண்ணப்பரும் நாயன்மார் என உயர்ந்து கோவில் கட்டுமளவு வரம்பெற்றது இப்படித்தான்.

திருப்பாண் ஆழ்வார் வாழ்விலும் இதனைக் காணலாம்.

அதற்காக வேதங்களோ வழிபாடோ அவசியமில்லை என அர்த்தமில்லை, சிவவாக்கியார் அப்படிச் சொல்லவில்லை.

வேதங்களைச் சொல்லும்போது முழுமனதோடு மனம் ஒன்றி சொல்லுங்கள், மந்திரம் சொல்லும்போது மனம் வாக்கு வார்த்தை என எல்லாம் பகவான் நினைவில் கலந்து சொல்லுங்கள்.
மாறாக, மனம் எங்கோ இருந்துகொண்டு வாயில் பிதற்றுவதுதான் பலனற்றது என்கின்றார்.

உளமார பகவானை எப்போதும் நினைந்தால் மனதால் அவனைப் போற்றிக்கொண்டே இருந்தால் அவனைத் தியானித்துக் கொண்டே இருந்தால், வேதங்கள் வேண்டாம், மந்திரங்கள் வேண்டாம் மனமார்ந்த பக்தி இறைவனிடம் இழுத்துச் செல்லும் என்பது அதுதான்.

பக்தி இல்லா வேதமந்திரங்கள் வேடங்கள், அந்த வெளிவேடத்தால் பலனேதுமில்லை என்பதே அவர் போதனை.

சிவவாக்கியார் வேதங்களுக்கும் ஆகமங்களுக்க்கும் எதிரி அவர் புரட்சியாளர் என்பதெல்லாம் குதர்க்கமான வாதங்கள், விபரீத குழப்பங்கள்.

அவர் எதைச் செய்தாலும் பக்தியோடும் மனமார்ந்த அன்போடும் செய்யச் சொன்னார், வேதமே ஓதினாலும் மனமார்ந்த பக்தி இல்லையேல் பலனில்லை என்பதே அவர் போதனையே தவிர வேதமே வேண்டாம் என்பதல்ல‌.

கண்ணப்ப நாயனார் உள்ளிட்ட நாயன்மார்கள், பல ஆழ்வார்கள் அடியார்கள் என வேதமோ யாகமோ மந்திரமோ அறியாவிட்டாலும் பக்தி ஒன்றாலே பரமனை அடைந்தவர்களைச் சுட்டிக்காட்டி இப்பாடலைப் பாடுகின்றார் சிவவாக்கியார்.

உங்களுக்கு வேதம் தெரிந்தால் அதை பக்தியோடு முழு மனதோடு சொல்லுங்கள், தெரியாவிட்டால் தயங்காதீர்கள், பாஞ்சாலி ஒரு முருங்கை இலையினை வைத்து வணங்கும் போது கண்ணன் வந்தான், நந்தனார் வேதம் ஓதாமலே பரமனை அடைந்தார்.

அதனால் உளமார்ந்த வைராக்கியமான பக்தி போதும். அது ஒன்று போதும். அதை மட்டும் கொண்டிருங்கள் எனப் போதிக்கின்றார் சிவவாக்கியார்.

“மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே”

என அகத்தியர் சொன்ன தத்துவம் இதுதான்.

பக்தி இல்லாத வேதம் ஓதுதல் பற்றி இன்னும் பல சித்தர்கள் பாடினார்கள்.

“சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரம் பல
தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்
விதம் வித மானவனான வேறு நூல்களும்
வீணான நூல்களை என்று ஆடு பாம்பே…!”

என்றார் பாம்பாட்டி சித்தர்.

“பொய் வேதம் தன்னைப் பாராதே – அந்தப் போதகர் சொற்புத்தி போத வாராதே…” என்றார் கடுவெளி சித்தர்.

“நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதிநெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்திர யோக நிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே”

என்பார் பட்டினத்தார்.

அதாவது சித்தர்கள் பாமர மக்களுக்கும் நம்பிக்கையும் பக்தியும் ஊட்டியவர்கள், வேதங்கள் தான் இறைவனை அடைய வழி என அவர்கள் நினைந்து அது இல்லாமல் தங்களால் வழிபடமுடியாது எனத் தயங்கியபோது அதைக் காட்டி மிலேச்ச சக்திகள் மதமாற்றம் செய்தபோது, மக்களே வேதங்கள் தேவையில்லை, பக்தியே முக்கியம் எனப் போதித்தவர்கள் சித்தர்கள்.

அதைத்தான் பாடுகின்றார் சிவவாக்கியார்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 39

“கலத்தில் வார்த்து வைத்தநீர் கடுத்ததீமுடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்ததீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின்மாயை நீக்கிலே மனத்துள்ளே கரந்ததே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து வரும்.

“கலத்தில் வார்த்து வைத்தநீர் கடுத்த தீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்த தீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள் விசும்பு கொண்டதோ
மனதின் மாயை நீக்கிலே மனதுள்ளே கரந்ததே”

(கரத்தல் என்றால் மறைதல், விசும்பு என்றால் ஆகாயம்)

அடுப்பின் மேல் ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து தீ மூட்டினால் அந்த நீரானது கொஞ்ச நேரத்தில் காணாமல் போகும்.

அதுவரை அங்கிருந்த நீர் என்ன ஆனது? அதனை நெருப்பு உண்டதா? இல்லை பாத்திரம் குடித்ததா? இல்லை நிலத்தில் நீர் மறைந்துபோனதா? இல்லை அது ஆகாயத்தில் சென்று மறைந்தது, அப்படி மனதினை மறைக்கும் மாயை தியானத்தால் நீங்கும், அப்படியே நம் ஆத்மா ஆகாயத்தில் கரையும் என்பது பொருள்.

மிகப் பொருத்தமான உவமையுடன் யோக தத்துவத்தை விளக்குகின்றார் சிவவாக்கியார்.

நீர் நெருப்பினால் ஆவியாகி விண்ணில் கலப்பது போல, யோக சக்தியின் குண்டலினி நெருப்பு சக்தியால் ஆத்மா விண்ணோடு இந்தப் பிரபஞ்சத்தோடு கலந்துவிடும் என்கின்றார்.

யோகமென்பது ஒரு நெருப்பு போன்ற சக்தியினைக் குண்டலியாக தூண்டிவிடும் , அந்தச் சக்தி மேலேறி மேலேறி வர உடல் நீர் கொதிப்பது போல் கொதிக்கும், மனம் கொதிக்கும் ஒருவித பரவச நிலை உருவாகும்.

நீர் வெப்பத்தால் கொந்தளிப்பது போல் உடலும் மனமும் ஒருவித முழு பரவசநிலைக்குச் சென்று பின் ஆத்மா பிரபஞ்சத்தில் கரையும்.

அதாவது யோகத்தின் கடைநிலை தான் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து பிரபஞ்சத்தில் கரைந்து “நான்” எனும் நிலை இல்லாமலே போவது.

நான் எனும் நிலையில் இருந்து மனம் கரைந்து, ஒன்றுமே இல்லாத நிலைக்குச் சென்று பிரபஞ்சத்தின் அங்கமாக கரைந்துவிடுவதே முழு யோக சித்த நிலை.

நான் என்பது உடல் அன்று, நான் என்பது இந்த மாய வாழ்வல்ல, நான் என்பது உறவன்று, நான் என்பது ஆத்மா ஆனால் அந்த ஆத்மாவின் மூலம் எது எனப் பார்த்தால் அதுவும் நான் அன்று.

எல்லாம் மாயை, எல்லாமே மாயை. இந்தப் பிரபஞ்சம் நிலையானது, ஆத்மா அந்தப் பிரபஞசத்தின் ஒரு துளி, அதனை அந்தப் பிரபஞ்ச பெருவெளியோடு கலந்துவிட்டால் நான் எனும் அந்த மாயபிம்பம் அழியும்.

நான் என்பது அழிந்தால் முக்குணம் அழியும், நான் என்பது அழிந்தால் மும்மலங்களும் அழியும்.

இதைத்தான் கீதையில் கண்னனும் சொல்வான், சத்வகுணத்தால் ரஜோ தம குணங்களை எரித்துவிட்டு கடைசியில் சத்வகுணத்தையும் எரித்துவிட்டு ஒன்றுமில்லாமல் என்னைச் சரணடையக்கடவாய்.

அதாவது, தான் எல்லாம் கடந்த யோகி, எல்லாம் கடந்தவன் நான் என்பதும் முழு ஞானமல்ல, தான் யோகி என்பதையும் கடந்து தான் ஒன்றுமில்லை என்பதை அறிந்து, ஒன்றுமே இல்லா நிலைக்குச் செல்வதே முழு யோகம்.

நான் எனும் எண்ணமும், நான் எனும் நிலையும் அற்ற நிலை, எல்லாம் கரைந்த பரிபூரண சூனிய ஒன்றுமற்ற நிலையே முழு யோக ஞான நிலை.

பாத்திரத்தில் நீர் ஒன்றுமில்லாமல் போவது போல், மனம் முழுக்கக் கரைந்து மனம் இல்லா நிலையே முழு ஞான நிலை.

இதனை “வாக்கும் மனமும் இல்லா மனோலயம்” என்பார் ஒளவையார்.

நான் என்பது இல்லாமல் போனால் பேச ஒன்றும் இராது, நான் என்பதே இல்லை எனும் போது நீ, நீங்கள் எனப் பேச என்ன உண்டு? அதுதான் சித்தர்களின் அமைதியின் ரகசியம்.

மனமே இல்லாமல் போனால் சிந்தனை எங்கிருந்துவரும்? முழு அமைதிதான் வரும்.

திருமூலர் இந்த முக்தி நிலையினை வேண்டிப் பாடும்பாடல் இரண்டு உண்டு.

“ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவதில்லை நமனுமங்கில்லை
இடும்பையு மில்லை இராப்பக லில்லை
படும் பயனில்லை பற்றுவிட் டோர்க்கே”

“நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற் றறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற் றறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே “

மாணிக்கவாசகர் பாடும் பாடல் ஒன்று உண்டு.

” இன்றெனக் கருளி இருள்கடிக் துள்ளத்
தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றதன் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிதுமற் றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாத்
திருப்பெருங் துறையுறை சிவனே
ஒன்றுநீ யல்லை அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற் பாரே”‘

ஒரு ஸ்லோகம் உண்டு.

“மோக்ஷஸா தன ஸாமகர்யாம் பக்திரேவ கரீசயஸீமி
ஸ்வஸ்வரூபா நுஸந்தானம் பக்திரித்யபிதீயதே”

பக்தியில் சிறந்தது ஆத்மரூபததை உணரும் பக்தி என்கின்றது ஸ்லோகம், அப்படித் தன் ஆத்மாவினை உணர தன் ஜீவாத்மா அந்தப் பரமாத்மாவில் கலந்து நிற்கும் நிலைக்குச் செல்வதே, தான் ஒன்றுமில்லை என உணர்வதே ஆன்மீக உச்ச நிலை அதைத்தான் போதிக்கின்றார் சிவவாக்கியார்.

சிவ வாக்கியார் பாடல்கள் : 40

“பறை(ச்)சி ஆவதேதடா பணத்தி ஆவதேதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ
பறை(ச்)சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ
பறை(ச்)சியும் பணத்தியும் பகுத்துப் பாரும் உம்முளே”

இப்பாடல் எளிதாக புரியக் கூடியது என்பதால் சீர்பிரிக்கும் அவசியமில்லை.

தாழ்த்தபட்ட குலத்து பெண், பணத்தி (பணம் என்றால் உயர்வு) உயர்ச்சாதி பெண் எனப் பிரித்து பார்ப்பதில் அர்த்தம் ஏது?

எல்லாப் பெண்களுக்கும் உடலின் எலும்பு தோல் இயக்கம் அமைப்பு தன்மை என எல்லாம் ஒன்றுதான், சாதியால் வேறுபடுத்தி சொன்னாலும் அவர்களின் உடலும் அமைப்பும் இயக்கமும் ஒன்றுதான்.

போக இன்பத்தில் எல்லாப் பெண்களும் ஒன்றுதான், சாதிவாரி பெண்களின் போகம் வேறல்ல‌.

அப்படியான நிலையில் ஏன் சாதியால் பிரித்துப் பார்க்கின்றீர்கள், மனதால் உகுத்து பாருங்கள், உண்மை புரியும் என்பது பொருள்.

இது மேல்மட்டமாக சாதி ஒழிப்பு பாடல் போல தெரியலாம், உண்மையில் அதன் ஒரு பொருள் சாதி ஒழிப்பையும் சொல்கின்றது.

இந்துமதம் ஒருகாலமும் சாதி பிரிவினை வளர்த்த மதம் அன்று, அதுவும் சித்தர்கள் அப்படி ஒரு பிரிவினையினை முழுக்க எதிர்த்தார்கள்.

சாதிய பிரிவுகள் இந்துமதத்தால் வந்ததன்றூ, அரச நிர்வாகத்துக்கும் தொழிலுக்கும் சமூக இயக்கத்துக்குமான இன்னும் பலவற்றுக்குமான பிரிவுகள் சில சுயநலவாதிகளால் அப்படி மாறிப்போயிற்று.

இதனை இந்துமதமும் சித்தர்களும் எப்போதும் கண்டித்தனர், ஒளவையார் முதல் எல்லாச் சித்தர்களும் மகான்களும் கண்டித்தனர்.

அதைத்தான் சிவவாக்கியாரும் தன் பாடலின் ஒரு பொருளாக சொல்கின்றார்.

அப்படியே பாடல் சொல்லும் இன்னொரு பொருள் வேறு, அது ஆழமானது.

தாழ்ந்த சாதி, உயர்ந்தசாதி என அவர் சொல்வது வெறும் சாதியினை அல்ல, அது ஆதார சக்கரங்களை.

அடியில் இருக்கும் மூலாதாரமும் உச்சியில் இருக்கும் துரிய சக்கரமும் அவரால் அப்படி. உருவகப்படுத்தபடுகின்றன‌

இந்தப் போதனை தத்துவம் ஆழமானது.

அதாவது, மனிதரில் பிரிவினைப் பார்க்கும் மாந்தர்களே, உடலின் அடி சக்கரம் முதல் உச்ச சக்கரம் வரை ஒன்றே, தியானத்தால் அந்தச் சக்கரங்களை துலக்கினால் எல்லாச் சக்கரத்திலும் சக்திபெற்றால் ஞானம் அடைவீர்கள்.

உடலின் வரிசையில் சக்கரம் அமைந்திருக்கலாம், அதற்காக அவை எது உயர்ந்தது தாழ்ந்தது என்பதல்ல, அவை எல்லாமே ஒரே மாதிரியானவை.

அந்தச் சக்கரம் துலங்கினால் ஞானம் வரும், ஞானம் வந்தால் எல்லா மக்களும் ஒன்றே எல்லா உயிர்களும் ஒன்றே, எல்லாமே இறைவடிவம் எல்லாமே சிவவடிவம் எனும் உண்மை தெரியும் என்கின்றார்.

ஆம், சிவவாக்கியார் சொல்லும் போதனை இதுதான்.

மாந்தரே, யோகத்தில் மனதை நிறுத்தி மூலாதாரம் எனும் அடிசக்கரம் முதல் உச்ச சக்கரமான துரியசக்கரம் வரை துலங்குங்கள், அப்போது ஞானம் வரும், அந்த ஞானத்தில் எல்லா மக்களும் இறைவடிவமே, எல்லாப் படைப்பும் இறைவனே எனும் உண்மை விளங்கும்.

ஒரே சிவனே எல்லா உடலிலும் உருவிலும் உயிரிலும் இருக்கின்றார் எனும் உண்மை துலங்கும், அதன் பின் எந்த மனிதரிலும் எந்த உயிரிலும் ஏற்ற தாழ்வு பார்க்கமாட்டீர்கள், எல்லாரும் இறைவடிவம் எல்லோரும் ஒன்றே என்பதை உணர்வீர்கள்.

ஆம், எல்லோரும் ஓர்மக்கள் என என்றோ சொன்னமதம் இந்துமதம், முதல் சமூகநீதி சமத்துவம் சொன்ன மதம் அதுதான்.

அதை அரசியலுக்காக வோட்டுபார்வை பார்க்கச் சொல்லவில்லை, ஞானத்தால் உணர்ந்து ஞானப்பார்வையில் பார்க்கச் சொன்னமதம் இந்துமதம்.

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே”

என்பது திருமூலர் பாடல்.

அதாவது மனதை பகுத்தறிந்து ஞானம் பெற்றால் எல்லாரும் ஒரே மக்களே, எல்லோருக்குள்ளும் ஒரே தேவன் இருக்கின்றான் என்பது விளங்கும் என்கின்றார் திருமூலர்.

ஆம், மனதால் ஞானம் பெற்றால் எல்லோரும் ஒரே இறைவனைக் கொண்ட ஒரே குல மக்கள், ஒரே இறைவனின் வடிவம் என்பது தெரியும் என்கின்றார்.

இதைத்தான் போதிக்கின்றார் திருமூலர்.