சத்ரபதி சாம்பாஜி : 18
சத்ரபதி சாம்பாஜி : 18
சாம்பாஜியினைப் பலமுனையில் பலபேரைக் கொண்டு தாக்கியும் வெற்றிப் பெறமுடியாத ஔரங்கசீப் மிகுந்த யோசனைக்குள்ளானான், அவன் தன் 10 வயதில் இருந்தே போர்களைத் தொடங்கியவன், அப்படியானவன் தன் 50 வருட வரலாற்றில் தோற்ற ஒரே அரசன் வீரசிவாஜி.
அதே நேரம் ஔரங்கசீப்பும் சிவாஜியும் நேருக்கு நேர் நின்று போரிடும் சூழல் வரவில்லை. சிவாஜிக்கும் அது நல்ல காலம். ஒருவகையில் ஔரங்கசீப்புக்கும் நல்ல காலம், இல்லையேல் ஔரங்கசீப்பினை எப்படியாவது வீழ்த்தியிருப்பான் சிவாஜி. அந்தக் காலக்கட்டத்தில் வாரிசு சண்டை ஆப்கன் எல்லையில் சண்டை என ஔரங்கசீப் வேறுபக்கம் இருந்ததால் இங்கு வரமுடியவில்லை. அதனாலே பெரும் ராஜ்ஜியத்தைச் சிவாஜி அமைத்துக் கொண்டான்.
சாம்பாஜிக்கு அப்படி ஒரு வாய்ப்பினைத் தரக்கூடாது என இங்கு வந்த ஔரங்கசீப்பால் இரு வருடங்களாகியும் அவனை நெருங்கமுடியவில்லை. யுத்தம் என்பது பெரும் செலவினைக் கோருவது, அப்படிப் பெரும் பணம் கொட்டிப் பலமுனை யுத்தம் செய்தும் ஔரங்கசீப்பால் சாம்பாஜியிடம் இருந்து ஒரு அங்குலம் நிலத்தைக் கூட ஒரு கோட்டையினைக் கூட கைப்பற்றமுடியவில்லை.
மாபெரும் மொகலாயச்சேனை, போர்ச்சுகீசியர் சேனை, ஆப்ரிக்க சித்திகள் படை இன்னும் ஆங்காங்கே ஆசைக்காட்டி வளைக்கப்பட்ட சில இந்து அரசர்களின் படை எனப் பெரும்படை இருந்தும் சாம்பாஜியினை வெல்லமுடியவில்லை.
இந்த விரக்தியினால் அப்படியே தலைவிரி கோலமாகக் கிடந்தான். சாம்பாஜியினைப் பிடிக்கும் வரை டர்பன் அணியமாட்டேன் எனக் கழற்றி வீசியவன் வெறிபிடித்த சிம்மம் விரக்தியானது போல் அமர்ந்திருந்தான்.
அந்நேரம் அவனுக்கு வடக்கே இருந்து இன்னொரு மோசமான செய்தி வந்தது, அது திபெத் எல்லையில் ஏற்பட்ட குழப்பம்.
அப்போது திபெத், சீன மன்னர்களிடமிருந்து விடுதலைபெற்றிருந்தது. அவர்களுக்கான தலாய் லாமா ஆட்சிமுறை வந்திருந்தது. அப்படி வந்த ஐந்தாம் தலாய் லாமா லடாக் பக்கம் முக்கியச் சாலைகளைக் கைப்பற்றி மொகலாயருடன் மோதிக் கொண்டிருந்தான்.
காஷ்மீர் என்பது மொகலாய ஆட்சியின் வடக்கு மாகாண அங்கமாய் இருந்தது, அதன் எல்லையில் ஏற்பட்ட இந்த மோதல் ஔரங்கசீப்புக்குப் புதிய தலைவலியினைக் கொடுத்தது.
எப்போதும் எங்கும் போர் செய்து கொண்டிருப்பதே ஔரங்கசீப்பின் வாழ்க்கை. ஆப்கன் முதல் அசாம் வரை பர்மா எல்லை வரை தெற்கே சிவாஜி அரசு வரை அவன் அனுதினமும் குறைந்தது சில போர்களையாவது செய்து கொண்டிருந்தான்.
அப்படிப்பட்டவனுக்கு அந்தப் பௌத்த தலாய்லாமாவின் போர் புதிய குழப்பத்தைக் கொடுத்தது. ஏற்கனவே நேபாள இந்து அரசு ஔரங்கசீப்புக்கு மிரட்டலாய் இருந்தது, அவர்களும் தலாய்லாமாவும் சேர்ந்து கொண்டால் புதிய குழப்பம் உருவாகும்.
ஔரங்கசீப் இதனால் குழம்பினான். தான் அங்கு வடக்கு நோக்கி நகர்ந்தால் சாம்பாஜி ஔரங்கபாத்தைப் பிடித்துக் கொள்வான் எனச் சிந்தித்தான், அப்படிப் பிடித்துத் தன் மகன் முகமது அக்பரை முக்கிய இடத்தில் வைத்துவிடுவான் எனும் யோசனையும் இருந்தது.
இந்த யோசனையில் கடுமையாக சிந்தித்தவன் ஔரங்கபாத்தை விட்டு நகரவும் முடியாமல், காஷ்மீர் சிக்கலைக் கைவிடவும் முடியாமல் திணறினான், சாம்பாஜி மேலான அவன் கோபம் இன்னும் அதிகரித்திருந்தது.
திபெத்திய அரசின் அந்தத் தலாய்லாமா அரச ஆளுகை 1400 ஆம் ஆண்டை ஒட்டித் துவங்கிற்று, செங்கிஸ்கானின் எழுச்சியில் இதுவும் ஒன்றாக இருந்தது, திபெத்தினை அவன் ஏற்படுத்திய எழுச்சியும் பாதித்து ஆயுதம் ஏந்தி மதத்தை காக்கும் முறை வந்தது, அவர்கள் மிரண்ட ஒரே விஷயம் இஸ்லாமிய விரிவாக்கம்.
செல்லுமிடமெல்லாம் ஆக்கிரமிப்பும் மதமாற்றமும் செய்து வளர்ந்த அராபிய கூட்டம் சீனாவினையும் குறிவைத்தது. ஆனால், செங்கிஸ்கான் எனும் மங்கோலியனின் எழுச்சி அராபியா ஐரோப்பா என இரு கூட்டத்தையும் முடக்கி வைத்தது, பாக்தாத் வரை கைப்பற்றி அராபியா முழுக்கச் செங்கிஸ்கான் கட்டுப்படுத்திய காலமும் இருந்தது. இதனால் அராபிய மத தாக்கம் சீனாவுக்குள் செல்ல வழியில்லை.
பின்னாளில் மங்கோலிய பேரரசு சீனாவுக்குள் சுருங்கினாலும் திபெத் போன்ற எல்லை வரை அவர்கள் வலுவாகவே இருந்தார்கள், இதனால் அவர்களுக்கும் அராபியருக்குமான போர் நீண்டு கொண்டே இருந்தது, திபெத்தியர்கள் காஷ்மீரைத் தொடர்ந்து தங்களையும் மொகலாயம் ஆக்கிரமிக்கலாம் என்பதால் கடும் விழிப்பாக இருந்தார்கள்.
அப்படித்தான் ஐந்தாம் தலாய் லாமா ஔரங்கசீப் தெற்கே நகர்ந்த நேரம் பார்த்து லடாக் பக்கம் பாய்ந்தான். முக்கியச் சாலைகளைக் கைப்பற்றியவன் பல இடங்களில் பள்ளிவாசல்களை இடித்துப்போட்டுவிட்டு அவை திபெத்திய பகுதி என அறிவித்துக் கொண்டான், லடாக் அக்சாய்சின் எனப் பல இடங்களில் இந்தப் போர் புகுந்தது, அவன் பாக்சங் ஏரி வரை முன்னேறி வந்து டெங்க்சங் வரை கைப்பற்றிக் கொண்டான்.
அவனின் இஸ்லாமிய ராஜ்ஜிய எதிர்ப்பைக் கண்ட நேபாளிகளும் அவனுக்கு மறைமுகமாக உதவினார்கள். பௌத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் அப்பக்கம் ஆகாது என்றாலும் மொகலாயம் பொது எதிரி என்பதால் நேபாள உதவியும் இருந்தது.
மொகலாயத்தின் வடக்கு மாகாணத்தின் காஷ்மீர் பகுதியின் நிர்வாகியான இப்ராகிம் கானின் மகன் படா கான் அங்குத் திபெத்திய படையினை எதிர்த்தான், திபெத்திய படைக்கு ஐந்தாம் தலாய்லாமா கால்டென் டெஸ்வாங் தலைவன் என்றாலும் தளபதியாக வந்தவன் கியாக்யோ கியாஸ்டோ.
அங்கே சிக்கல் அதுவரை மொகலாயத்துக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னன் லடாக்கை ஆண்டுவந்தான், ஐந்தாம் தலாய்லாமா லடாக்கைப் பிடித்துத் தன் பகுதி என அறிவித்து மேலும் உள்ளே வந்து பல இடங்களைப் பிடித்திருந்தான்.
இந்தப் போரில் திபெத்திய கை ஓங்கியிருந்தது, மொகலாயத் தரப்பு தடுமாறிக் கொண்டிருந்தது, என்ன செய்யலாம் எனும் பெரும் திகைப்பில் ஔரங்கசீப்புக்குச் செய்தி அனுப்பப்பட்டது.
அவன் ஆழ்ந்த சிந்தனையில் அவையினைக் கூட்டினான்.
இங்கே இப்படி ஆலோசனை நடந்து கொண்டிருக்க அங்கே சாம்பாஜி பக்கம் சில சலசலப்புகள் வந்தன. முதலாவது, சாம்பாஜிக்குத் துரோகம் செய்யலாம் செய்தார்கள் எனப் பட்டியலிட்டு ராஜாராம் தரப்பைச் சேர்ந்த பலரைக் கவி கலாஷ் ஒழித்துக் கட்டிக் கொண்டிருந்தான். எங்கிருந்தோ வந்த காசி பிராமணன் தங்கள் குலத்தவரைக் கொல்வதையும் அவனைச் சாம்பாஜி தடுக்காமல் விட்டதையும் கண்ட ஷிர்கே குலம் கடும் ஆத்திரத்தில் இருந்தது.
கவி கலாஷின் நடவடிக்கைகளால் அங்குக் குழப்பம் ஏற்பட்டிருந்தன. அந்தக் குழப்பத்தில் நட்டாஜி பால்கர், ஹம்பிராவ் மோதி போன்றோரெல்லாம் திகைத்துப் போயினர். எனினும், மொகலாய மிரட்டல் முடிந்தபின் இதையெல்லாம் விவாதிக்கலாம் இப்போதைய ஆபத்து ஔரங்கசீப் எனச் சொல்லிப் பார்த்தனர்.
ஆனாலும் கவி கலாஷ் தலைமையில் அனுபவமற்ற ஆனால் வேகமுள்ள தரப்பும் அனுபவம் வாய்ந்த மூத்தவர் தரப்புமாக இரு அணிகள் உருவாயின.
ஹம்பிராவ், பால்கர் போன்றோரெல்லாம் சிவாஜியுடன் நின்று இந்துராஜ்ஜியம் கண்டவர்கள், அவர்களுக்கு எதைச் செய்யவேண்டும் எதைச் செய்யக் கூடாது என்பதெல்லாம் தெரிந்திருந்தது, தம் பலம் பலவீனம் அறிந்து இந்த ராஜ்ஜியத்தைக் காத்து நின்றார்கள்.
ஆனால், புதியவர்கள் தரப்புக்குப் பழையவர்கள் தியாகம் தெரியவில்லை. இங்கு எல்லாமே மாற்றப்பட்டு இளம் தலைமுறை உருவாக வேண்டும் என உணர்ச்சியில் பேசிக்கொண்டிருந்தார்கள்.
இங்கு இவர்கள் இப்படி மாற்றம் உருமாற்றம் பெரிய பெரிய கனவுகள் எனப் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர எதிரி ஔரங்கசீப் மாறவே இல்லை. சிவாஜி கால எதிர்ப்பு இன்னும் இன்னும் வலுவாகிவிட்டது என்பதை வெகு எளிதான ஒன்றாகக் கருதினார்கள்.
மொகலாயத் தரப்பை எளிதாக எடைபோட வேண்டாம் மிகுந்த எச்சரிக்கை தேவை, அவர்கள் மகா அபாயமானவர்கள் என மூத்த தரப்பு சொன்னாலும் இளையதரப்போ தங்கள் படைபலத்தால் மொகலாயரை எளிதாக வெல்லலாம் எனத் தப்புக்கணக்கிட்டுக் கொண்டிருந்தது.
இந்த மெல்லிய மோதல் வலுக்கும் போதே முகமது அக்பர் சாம்பாஜியிடம் தன்னை டெல்லிக்கு அரசனாக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தான். கவி கலாஷோ காசியினை மீட்கும்படி இழுத்தான்.
சாம்பாஜி இரு தரப்புக்கும் அசைந்து கொடுக்கவில்லை. டெல்லியினைக் கைப்பற்றும் முகமது அக்பரின் திட்டத்துக்கு அவன் துணைபோகவில்லை, ஒரு கட்டத்தில் இது வாதமுமாயிற்று.
“என்னை டெல்லிச் சுல்தானாக்கினால் எல்லாப் பிரச்சினையும் தீரும், உடனே படையோடு ராஜபுத்திரரோடு சேர்ந்து டெல்லியினைக் கைப்பற்றுவோம்” என அவன் அவசரப்படுத்தினான், இதற்கு சில இந்துஅரச இளம் தளபதி ஆதரவும் இருந்தது.
சாம்பாஜி சார்பாக ஹம்பிராவ் மோடி இதனைக் கடுமையாக எதிர்த்துச் சொன்னான் ” இளவரசரே, மொகலாயப் படையினை எதிர்த்து சிவாஜி மன்னர் தன் படைகளால் மட்டும் இந்த ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பவில்லை.
இங்கு மலைகள், காடுகள், நதிகள் என எல்லாவற்றையும் துணைக்கு வைத்துக்கொண்டு மறைந்திருந்து தாக்கும் உத்தியில்தான் இதனைச் சாத்தியமாக்கினார். மொகலாயர் எனும் பெரும் படையினை வெல்ல இது போதாது, நாம் இன்னும் இப்போது இருப்பதுபோல் இருமடங்கு படையினை உருவாக்க வேண்டும், அவை சமவெளி பகுதியில் சண்டையிடும் கடும் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும், மிக வலுவான துப்பாக்கி படையும் அவசியம்.
நாம் மலைப்பகுதி போரில், கடல்போரில் பெரும் பலம் கொண்டிருக்கின்றோம். ஆனால், மொகாலாயம் போன்ற மாபெரும் சேனையினைச் சமவெளியில் சந்திக்கும் பலம் இப்போது நம்மிடம் பெரிதாக இல்லை. பல தலைமுறையாக வளர்ந்த மொகலாயத்தை ஒரே தலைமுறை அரசான நாம் எளிதில் முழுதும் சரித்துவிட முடியாது. இந்தப் போர் பல தலைமுறை நீடிக்கும்.
இன்னொரு விஷயம் நாம் வடக்கே நகர்ந்தால் ஔரங்கசீப்புக்கு இங்கே நமது கோட்டைகளைப் பிடிப்பது எளிதாகிவிடும், அவனுக்குத் துணையாக வடக்கில் ஆப்கனில் இருந்து படைவரும், தெற்கே அவன் இருக்கும்போது நாம் இடையில் சிக்கிவிடுவோம்.
ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். நாம் மிகப் பலமான கொடிய இஸ்லாமிய சக்கரவர்த்தியுடன் மோதுகின்றோம், அதனால் சிறிய தவறும் மொத்த சாம்ராஜ்யத்தை அழித்துவிடும். அதனால் முகமது அக்பரின் கோரிக்கையினை நாம் ஏற்கமுடியாது, இப்போதைக்கு நாம் அவருக்கு அடைக்கலம் மட்டும் கொடுக்கமுடியும்” என்றான்.
முகமது அக்பர் அதில் திருப்தி கொள்ளவில்லை, பெரும் படைபிரிவினைத் தனக்கு தந்தால் தானே வெல்வதாக சொல்லிபபார்த்தான். ஆனால், பன்முனை யுத்தம் நடந்தபோது அப்படி ஒரு சவாலை எடுக்க சாம்பாஜி விரும்பவில்லை.
இப்படி இங்குக் குழப்பங்கள் பல சூழ்ந்திருந்தாலும் சாம்பாஜி தன்னால் தோற்கடிக்கப்பட்ட போர்ச்சுகீசியருடன் ஒப்பந்தம் செய்யத் தவறவில்லை, மிகக் கடினமான நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
எக்காரணம் கொண்டும் மொகலாயருக்குப் போர்ச்சுகீசியர் எவ்வகையிலும் ஒத்துழைக்கக் கூடாது, இந்துக்களை மதம் மாற்றம் செய்யக் கூடாது, இந்து ஆலயங்களுக்கோ பண்டிகைகளுக்கோ இடையூறு தரக்கூடாது என்பது முதல் நிபந்தனை.
போர்ச்சுகீசியர் அவர்கள் வசிக்கும் பகுதி சாம்பாஜி அரசின் அங்கம் என்பதை ஒப்புக்கொண்டு ஒழுங்காக வியாபாரம் மட்டும் செய்யவேண்டும் என்பது இரண்டாம் நிபந்தனை.
சித்திகள் உள்பட இந்துராஜ்ஜிய எதிரிகள் யாரோடும் அவர்கள் நட்புபாராட்டுவதோ அணிசேருவதோ கூடாது. அப்படிச் செய்தால் மறுநிமிடம் துடைத்தொழிக்கப்படுவார்கள் என்பது மூன்றாம் நிபந்தனை.
இந்த யுத்தத்தால் போர்ச்சுகீசியருக்கு ஏற்பட்ட சில அழிவுகளுக்காக அதாவது உணவு தட்டுப்பாடு குடிநீர் சேதம் போன்றவற்றுக்காக சாம்பாஜி நிதி வழங்குவார். பதிலுக்கு போர்ச்சுகீசியர் ஆயுத வியாபாரம் செய்யவேண்டும் என்பது நான்காம் நிபந்தனை.
இப்படிப் பெரும் நிபந்தனைகளோடு போர்ச்சுகீசியர் கட்டுப்படுத்தபட்டனர், வெகு சிறிய பகுதிக்குள் அவர்கள் முடக்கப்பட்டார்கள், முற்றிலும் அவர்கள் வலிமை குறைந்துபோய் இருந்தது.
அதே நேரம் கடும் கவலையிலும் வருத்தத்திலும் லடாக்கில் நடந்த ஐந்தாம் தலாய்லாமா நடத்தும் போர் பற்றி விவாதித்து கொண்டிருந்தான் ஔரங்கசீப், அவனின் ஆலோசகர்களும் இதர தளபதிகளும் கலந்து கொண்டார்கள்.
“நான் இங்கு வந்து சிக்கிக் கொண்டதால் பெரும் பெரும் சோதனைகள் வருகின்றன, என்னோடு இருக்கவேண்டிய என் இளையமகன் முகமது அக்பர் இப்படி சாம்பாஜியோடு சேர்ந்து கலகம் செய்கின்றான், டெல்லியினைக் கூட அச்சுறுத்துகின்றான்.
சாம்பாஜியிடம் நான் சிக்கிக் கொண்டேன் என்றே காஷ்மீர் பக்கம் பௌத்த தலாய்லாமா வாலாட்டுகின்றான், லடாக் பக்கம் அவன் பெரிய அட்டகாசம் செய்கின்றான், நமது பகுதியினையும் ஆக்கிரமிக்கின்றான், இதை இப்படிவிட்டால் நேபாளிகள் உதவியுடன் நமக்கு இன்னும் நெருக்கடி வரும், அதனால் ஏதாவது அவசரமாகச் செய்தாக வேண்டும், போரைத் தொடர்வதா இல்லை பின்வாங்குவதா எனக் குழப்பத்தில் இருக்கின்றேன்” என்றான்.
அவன் ஆலோசகர்கள் சொன்னார்கள், “ஆலம்கீர், நாம் செய்யாத போர்களா? ஆடாத களமா? இப்போது சாம்பாஜிக்கு எதிராக பெரும் போரை நடத்துகின்றோம். அந்நேரம் சிலர் கலகம் செய்யத்தான் செய்வார்கள், பஞ்சாப் பக்கம் இருந்து கூடுதல் படைகளைக் காஷ்மீருக்கு அனுப்பி கொஞ்சம் பலத்துடன் சமாதானம் பேசலாம், பலஹீனத்துடன் சமாதானம் பேசுதல் ஆபத்து.
லாகூர் பக்கம் இருந்து படைகளை அங்குக் கொஞ்சம் நகர்த்துவோம், இப்போது தலாய்லாமாவுடன் சமரசம் செய்வோம்” என்றார்கள்.
ஔரங்கசீப் நீண்ட ஆலோசனைக்குப் பின் ஒரு தீர்வைச் சொன்னான், “லடாக்கை முன்னிட்டு அந்த மன்னனை முன்னிட்டே பௌத்தர்கள் போருக்கு வருகின்றார்கள், நாம் இங்குள்ள சிக்கல்களை முடித்து டெல்லி திரும்பியபின் இதனை ஆழ கவனிக்கலாம். இப்போது லடாக் பகுதி யாருக்கும் சொந்தமான பகுதி அன்று, அந்த லடாக் மன்னனின் தனிப்பட்ட பகுதி என அறிவித்துவிடுவோம்.
அப்படியானால் பௌத்தர்கள் சமாதானம் அடைவார்கள். நாமும் நமது எல்லை லடாக் என்பதால் கொஞ்சம் ஆபத்தின்றி இருக்கலாம்” என்றான்.
அப்படியே லடாக் ஒப்பந்தம் உறுதியானது, லடாக் சிற்றரசன் இரு தரப்புக்கும் இன்றி தனி அரசனாக விடப்பட்டான். ஆனால் அவன் ஔரங்கசீப் பக்கமே விசுவாசமாக இருந்தான்.
காஷ்மீர் சிக்கலைத் தற்காலிகமாக இப்படி முடித்த ஔரங்கசீப் சாம்பாஜியினை என்ன செய்வது எனத் தனிப்பட்ட வகையில் கடுமையாகச் சிந்தித்தான். எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தவித்த அவனுக்கு அவனது ஆஸ்தான முல்லா அவனுக்கோர் யோசனை சொன்னார்.
“ஆலம்கீர், இதுவரை நாம் எடுத்த எல்லாப் போர் முயற்சியும் சாம்பாஜியிடம் தோல்வியிலே முடிந்துள்ளன, இனியும் போர்தான் தீர்வு எனினும் சாம்பாஜிக்கு ஒரு கடிதம் எழுதிப் பார்க்கலாம், அவன் மனநிலையினை ஒருமுறை அறிதல் நல்லது”
அதன்படி ஔரங்கசீப் சாம்பாஜிக்கு ஒரு கடிதம் எழுதினான்.
“சிவாஜியின் மகனான சாம்பாஜிக்கு உலக மன்னரான ஔரங்கசீப் எழுதுவது என்னவென்றால் இந்த இந்துஸ்தானம் முழுக்க மொகலாயருடையது என்பதையும் எல்லா இடமும் மன்னர்களும் எமக்குக் கட்டுப்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
சிவாஜியினை மன்னர் என நாங்கள் ஒப்புக்கொண்டோம், அவர் தீரமுடன் உருவாக்கிய சமஸ்தானத்துக்கு அவர் மன்னன் என்பதை நாங்கள் அறிவித்திருக்கின்றோம். இதையெல்லாம் ஆக்ராவுக்கு வந்த நீங்களும் அறிந்த விஷயம்.
ஆனால். நாங்கள் ஆப்கன் எல்லையில் பெரும் போரில் இருந்த நேரம் உரிய கப்பம் வரவில்லை, மன்னர் சிவாஜியினை எல்லைக்கு ஜெய்சிங் மூலம் அழைத்தோம். அப்போதும் அவர் வரவில்லை. இப்போது மன்னர் இல்லை ஆட்சியில் இருப்பது சாம்பாஜி மன்னர்.
எல்லாம் மன்னர் அறிந்தது என்பதால் இதுவரை கட்டாத கப்பத்தொகையினைச் செலுத்தி மொகலாய அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், அப்படியே மாபெரும் மொகலாத்துக்கு எதிராக பெரும் கலகங்களைச் செய்யும் இளவரசர் முகமது அக்பருக்கு அடைகலம் கொடுத்தல் கூடாது.
ஆலம்கீர் எனும் மொகலாயப் பேரரசருக்கு கட்டுப்பட்டு நீங்கள் அடங்கினால் எங்கள் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டால் நல்லது, இல்லையேல் பெரும் நடவடிக்கை எடுக்கப்படும், சிவாஜிக்குக் கொடுக்கபட்ட அவகாசம் உங்களுக்குக் கொடுக்கப்படாது”
கடிதம் கண்டு சாம்பாஜியின் அவை கொதித்தது, சிலர் புன்னகைத்தார்கள். சாம்பாஜி உரிய பதிலை எழுதினான்.
“ஓ ஔரங்கசீப், உங்கள் நோக்கமும் படைநகர்வும் அதிகாரமும் இந்துக்களை ஒழித்துக் கட்டி குரான் வழி ராஜ்ஜியத்தை நிறுவுவது, அதை இந்த மண்ணின் மக்களான எங்களால் ஏற்கமுடியாது.
ஒருகையில் வாளும் ஒருகையில் குரானும் ஏந்தி நீங்கள் வந்தால் ஒரு கையில் கீதையும் இன்னொரு கையில் வாளுமாக நாங்களும் எதிர்ப்போம், இந்துக்களுக்கு எதிரான உங்களின் கொடூர வெறுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்து மக்களுக்கான அரசு இது, ஒரு காலமும் அதைவிட்டுக் கொடுக்க முடியாது.
இது எங்கள் இந்துராஜ்ஜியம், உங்களுக்குக் கப்பம்கட்ட நாங்கள் இந்நாட்டை உருவாக்கவில்லை, இந்துக்களை வாழவைக்கவும் இந்து பெண்களைக் காக்கவும் உருவான நாடு, எங்கள் செல்வமெல்லாம் இந்துக்களை இந்து ஆலயங்களை வாழவைக்கவே அன்றி உங்களுக்கு அன்று, ஜிஸியா வரி எனக் கொடுமைக்கு மேல் கொடுமை செய்யும் உங்களுடன், இந்து கோவில்களை அழிக்கும் உங்களுடன் ஒரு காலமும் எம்மால் உறவு கொண்டாடமுடியாது, உங்கள் வாள் கீழிறங்கும் வரை எங்கள் வாளும் உயர்ந்தே நிற்கும்”
கடிதம் கண்ட ஔரங்கசீப் கொதித்துப் போனான், ஆனால் எல்லா முயற்சியும் தோல்வி அடைந்த நிலையில் அடுத்துச் சாம்பாஜியுடன் எப்படி மோதுவது என யோசித்தான்.
ஒரு மன்னனாக சாம்பாஜிக்கு வரும் பெரும் வருமானம் பற்றிச் சிந்தித்தான், வருமானம் இல்லாத அரசன் பெரும் படைநடத்த முடியாது என்பது நியதி, இதனால் சாம்பாஜிக்கு வருமானம் வரும் வழி அத்தனையும் அடைக்கத் திட்டமிட்டவன், அப்படிச் செய்யும்போது சாம்பாஜி குறுக்கே வராதபடி செய்ய பெரும் மிரட்டல் தாக்குதல் ஒன்றைச் செய்யத் திட்டமிட்டான்.
இம்முறை இந்துராஜ்ஜிய தலைமை கோட்டையான ராய்காட் கோட்டைக்கே குறிவைத்தான், அது முழுக்க வெற்றி ஆகாது எனத் தெரிந்தாலும் சாம்பாஜியினை மனோரீதியாக அச்சுறுத்திவிட்டு இதர காரியங்களைச் செய்ய அது கைகொடுக்கும் என நம்பினான்.
அவன் உத்தரவிட்டதும் அவன் முன் வந்து நின்றான் கான் ஜஹான் எனும் தலைமை தளபதி….
(தொடரும்)