அடிமைகளை விடுவிக்க வந்த தேவதூதன்
மானிட குலம் எவ்வளவோ கொடும் காலங்களை, நினைத்தாலே குலை நடுங்கும் விஷயங்களை கடந்துதான் வந்திருக்கின்றது, அதிலொன்று அடிமை முறை.
சக மனிதனை அடக்கி நீ என் அடிமை என வைத்துகொள்வதும், அவனுக்கு பிறக்கும் சந்ததிகளையே தனக்கு அடிமை என வைத்துகொள்வதும் அந்நாளைய கொடும் வழக்கம். ஆச்சரியமாக அந்நாளைய மதங்களும் அதனை அங்கீகரித்திருக்கின்றன
அப்படி அடிமை மனிதன் என்பவன் ஆடுமாடுகளில் ஒன்று, கூடுதல் உரிமையாக வாய் மட்டும் பேசிகொள்ளலாம், அவனுக்கு குடும்பம் இருக்கலாம், ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் எஜமான் அவன் குழந்தையினை, அவனை, மனைவியினை யாருக்கும் விற்கலாம் அல்லது கொல்லலாம்.
யாரும் கேட்கமாட்டார்கள் அடிமைகள் உழைக்கவும் சாகவும் பிறந்தவர்கள், பஞ்சாயத்தில் கூட பிராது கொடுக்க முடியாது
வேலை செய்யவேண்டும் , முதலாளி விற்றால் அடுத்த எஜமான். அடித்தால் பட்டுகொள்ளவேண்டும், சூடு போட்டால் பொறுத்துகொள்ளவேண்டும், உழைத்தால் உண்ணலாம், இல்லாவிட்டால் சாகலாம்
இந்த இரண்டினை தவிர அவர்களுக்கு வேறு வாய்ப்பு அக்காலத்தில் இல்லை, அவர்களுக்கு கடவுளோ மதமோ இல்லை.
அடிமைகளுக்கு போட்டிருக்கும் உடை தவிர ஏதும் சொந்தமில்லை, சில அடிமைகளுக்கு அதுவுமில்லை
அவனுக்கு வீடு வாசல் சொந்தமாக ஒரு குண்டூசி கூட கிடையாது, அவர்களுக்கென காதில் அல்லது முதுகில் ஒரு அடையாளம் இடுவார்களாம், பார்த்தவுடன் கண்டுகொள்ள
அதவாது கடனுக்கு வாங்கிய மாடுபோல ஒரு முத்திரை, எவ்வளவு கொடூரம்?
இதில் பெண் அடிமைகளின் நிலை மகா மோசம், இயற்கையான இரட்டை ஆபத்து அவர்களுக்கு.
பைபிளின் ஆபிரகாம் முதல் அமெரிக்க ஆபிரகாம் லிங்கன் காலம் வரை அது உச்சத்தில் இருந்திருக்கின்றது, மன்னர்களின் சரித்திரம் எல்லாம் அதனைத்தான் சொல்கின்றது
வென்ற மன்னனுக்கு தோற்ற மன்னன் அடிமை, மன்னன் மட்டுமல்ல மக்களும் அடிமை.
அலெக்ஸாண்டர், செங்கிஸ்கான் என வரலாறு அதனைத்தான் சொல்கிறது. அவ்வளவு ஏன் நமது கரிகால சோழன் அடிமைகளை கொண்டுதான் அணை கட்டினான், ஈழ அடிமைகளை கொண்டுதான் ராஜராஜ சோழன் பெரியகோவில் கட்டினான்
எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை கொண்டே பெரும் பிரமீடுகள் கட்டபட்டன, என்பதெல்லாம் அடிமைகளின் வரலாற்றினை சொல்கிறதது, இந்தியாவில் அடிமைகள் விசுவாசமான தளபதிகளாகவும் இருந்தார்கள், மாலிக்காபூர் அப்படிபட்டவனே, பாகுபலி கட்டப்பா அவன் சாயலே
இதில் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லபட்ட கருப்பினத்தவர்கள் பட்டபாடு கொஞ்சமல்ல, ஆப்ரிக்காவிற்கு வரும் வெள்ளையர் துப்பாக்கி முனையில் அவர்களை பிடிப்பர், விலங்கிடுவர் அவர்களை கப்பலேற்றி அமெரிக்கா கொண்டுசெல்வர், ஏலமிடுவர்
திடகாத்திரமான அடிமைகள் நல்ல விலைக்கு விற்கபடுவார்கள்
அவன் மனதால் எவ்வளவு பாதிக்கபடுவான்?, சட்டென உறவுகளை பிரிந்து குடும்பத்தை பிரிந்து அவன் மனம் என்ன பாடு படும்? அடிமை அவ்வளவுதான். கடவுளே அங்கீகரித்தபின் என்ன செய்ய?
வாங்கபடும் அடிமைகள் பண்ணைகளில் கொண்டு அடைக்கபடுவர், அவன் சக அடிமையுடன் உழைக்கவேண்டும், சில பெண் அடிமைகளை விடுவார்கள், அவள் சந்ததி பெருக்கிகொண்டே உழைக்கவேண்டும், அப்படி அடிமைகள் பெருகிவிட்டால் இன்னொரு பண்ணைக்கு விற்றுவிடுவார்கள்
நினைத்துபார்த்தாலே மனம் கதறுகின்றது, மானிட குலத்தின் இயல்புகளான குடும்பம், பந்தம், பாசம், நட்பு, மண்வாசனை, எல்லாம் அவர்களுக்கும் இருந்திருக்கும் அல்லவா? எப்படி தாங்கிகொண்டார்கள்?
எப்படிபட்ட மகா துயரம் இது
எத்தனை தலைமுறைகளாக இதனை தாங்கி வந்தார்கள்? எவ்வளவு சபிக்கபட்ட வாழ்க்கை அவர்களுடையது.
இன்றைய அமெரிக்கா கனடா பிரேசில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் வளர்சிக்கு அடிமைகள் உழைப்பே அஸ்திவாரம்
ஒரு பேச்சு கூட பேசாமல் மாடுகளை விட கேவலமாக அந்த அடிமைகள் உழைத்த உழைப்பில் எழும்பி நிற்பவைதான் அந்த தேசங்கள்
இன்றளவும் அவை உழைப்பில் உயர்ந்துநிற்க சொல்லிகொடுத்தது அந்த அடிமை இனமே
அந்த கொடுமைக்கு முதலில் சாவு மணி அடித்தவன் மானிட வரலாற்றின் பெரும் மானிட நேயரான ஆபிராகம் லிங்கனே எனினும் முதல் அடிமைகள் கிளர்ச்சி ரோமை வரலாற்றில் தொடங்கிற்று, அடிமைகள் “எல்லாம் நான் அடிமை இல்லை” என தோற்ற புரட்சி அது.
அதன் பின் 1791 ஆகஸ்டு 23ல் இன்றைய ஹைத்தி நாட்டில் அது கிளர்ச்சியாக வெடித்தது, வியாபார முறை அடிமைதனத்திற்கு நவீன காலத்தில் எழும்பிய முதல் குரல் அது என்பதால் அந்நாளௌயினையே வியாபார அடிமை ஒழிப்பு நாளாக அனுசரிக்கின்றார்கள்
அதன் பின் ஆபிராக்ம் லிங்கன் காலத்தில் விடிந்தது என்றாலும், முன்னறிவித்த சேவல்கள் கூவிய தினம் இது.
ஆபிரகாம் லிங்கன் இந்த அடிமை ஒழிப்பில் மகா உன்னமதமான மனிதன், இதற்கான சட்டமியற்றிய பாவத்திற்குதான் அவர் உயிரினையே பறித்தார்கள்.
அப்படி விடிந்தபின்புதான் அடிமைகளுக்கான பல உரிமைகள் ஒவ்வொன்றாக கிடைத்தன, முதலில் அவர்களை மனிதர்கள் என்ற வரையறைக்கு கொண்டுவந்தார்கள்
பின் 10 மணிநேர வேலை என பளு குறைக்கபட்டது, பின் திருமணஅனுமதி, சமூக அனுமதி என அவர்கள் போராடினார்கள், பின் வாக்குரிமைக்கு பெரும் போரே நடத்தினார்கள், அதன் பின் குடிமக்களாக அங்கீகரிக்கபட்டார்கள்
இந்த பரிதாபத்திற்குரிய அடிமை இனத்தின் வாரிசுதான் முன்னாள் அமெரிக்க அதிபர் ஓபாமா
அந்த அடிமைகளின் வாரிசுகள்தான் இன்று ஒலிம்பிக்கினை கலக்கி முதலிடத்தில் நிற்கின்றார்கள்
காலம் எவ்வளவு மாறுகின்றது?,
காலம் மாற மாற மனிதன் மட்டுமல்ல கடவுளும் மாறிகொண்டே வந்திருக்கும் வித்தியாசமான உலகமிது.
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் வழிபடும் ஏக கடவுள் ஒருவர்தான் ஆனால் அடிமை முறையினை அங்கீகரிக்கும் பழைய ஏற்பாடும், அதனை எதிர்த்து உரிமைகுரல் எழுப்பும் புதிய ஏற்பாடும் ஒரே கிறிஸ்தவ நூலே
கடவுளின் கொள்கைகளும் காலத்திற்குட்பட்டு மாறுகின்றது, மாறட்டும்
இதனை மாற்றம் ஒன்றே மாறா தத்துவம் என சொல்லிவிட்டான் பகவான் கிருஷ்ணன்.
இன்றைய காலத்தில் எல்லாம் மாறிவிட்டன, மற்ற நாடுகள் எங்கோ சென்றுவிட்டன, அடிமைகள் அரசாளும் காலமிது, அமெரிக்காவில் ஆள்கின்றனர், லெனின் பெரும் சாம்ராஜ்யத்தினையே அமைத்து காட்டினான்
ஆனால் இவ்வுலகில் முதன் முதலில் அடிமைகளை பற்றி கண்ணீர் விட்ட முதல் மனிதன் ஆபிரகாம் லிங்கன் என்பவரே
அவர்கள் மாடுகளை போல சந்தையில் நின்றதை ஒரு விறகுவெட்டியின் மகனாக அவர் கண்டபொழுதே மனம் கலங்கிற்று, படித்து வேலைக்கு வரும் உலகில், அமெரிக்க அடிமைகளை விடுவிக்க தான் ஜனாதிபதி ஆகவேண்டும் என படித்த மாமனிதன் லிங்கன்
அவன் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தான், தெருதெருவாய் அலைந்தும் படித்தான்
அவலட்சனமான முகமும், மெலிந்த உடலும் கொண்ட அவனுக்கு குடும்பம் முதல் சமூகம் வரை எதுவுமே மரியாதை செலுத்தவில்லை
அவனோ லட்சியத்துடன் போராடினான், பலமுறை தோற்று பின் அமெரிக்க அதிபருமானான்
கடவுள் கூட ஒப்புகொண்ட அடிமை முறையினை இவ்வுலகில் முதன் முதலில் சட்டம் போட்டு தடுத்தவன் அவனே
லிங்கன் அடிமை முறையினை ஒழிக்க தொடங்கியபின்பே உலகெல்லாம் அது வழக்கொழிந்தது.
அடிமை முறை ஒழிப்பினை தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டு போரில் அமெரிக்கா உடையாமல் காத்தனும் அவனே, அவன் மட்டும் இல்லையென்றால் இந்த ஐக்கிய அமெரிக்கா இல்லை, பல துண்டுகளாக சிதறி இருக்கும்
அதனை எல்லாம் எண்ணாமல் , அடிமைகளை ஒழித்தான் கருப்பர்களை மனிதன் என சொன்னான் என்ற ஒரே காரணத்திற்காக வெள்ளை இனவெறி அவனை சுட்டுகொன்றது
அவனை கொன்றிருக்கலாமே அன்றி அவன் புகழை அழிக்க முடியாது
இன்று அவரின் பிறந்த நாள், உலகம் அடிமைகளை விடுவிக்க வந்த தேவதூதனாக அவனை கொண்டாடிகொண்டிருக்கின்றது
இன்று உலகில் அடிமை முறை இல்லை, ஆனால் தமிழக அரசியலில் அப்படி ஒரு கூட்டம் அதிமுக என்ற பெயரில் அலைகின்றது
முதலில் ராமசந்திரனுக்கும் பின் ஜெயாவிற்கும் அடிமையாய் இருந்தது, சசிகலவிற்கு அடிமையாக தலைகொடுத்தது அவர் சிறை சென்றதால் மத்திய ஆளும் கட்சிக்கு அடிமையாயிற்று.
ஆயிரம் லிங்கன் வந்தாலும் இவர்களின் அடிமைதனத்தை மட்டும் யாராலும் மாற்ற முடியாது, நாளை லிங்கன் வந்தாலும் உங்களுக்கே அடிமையாக இருக்கட்டுமா என சந்தோஷமாக முதுகு கொடுப்பார்கள், அவர்கள் சுபாவம் அப்படி
இன்னொரு கும்பல் கோபாலபுரத்திற்கு அடிமைசாசனம் எழுதி கொடுத்து சுற்றிகொண்டிருக்கின்றது
இன்று உலகம் லிங்கன் எனும் மாமனிதனின் பிறந்த நாளை கொண்டாடுகின்றது, அடிமைகளை ஒழிக்க அந்த கடவுளே அவதரித்த அந்நாளை நாமும் நன்றியோடு நினைவு கூறலாம்