அந்த கண்ணன் பன்முகம் கொண்டவன்
அந்த கண்ணன் பன்முகம் கொண்டவன், ஏகபட்ட முகங்களை கொண்ட வைடூரியம் போல, பல வகை மணம் கொடுக்கும் மனோரஞ்சிதம் போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடத்தை அன்றும் இன்றும் வழங்கிகொண்டே இருக்கின்றான்
அவனை தவிர இன்னொரு அவதாரத்துக்கு அது சாத்தியமே இல்லை
கண்ணனை வணங்குபவர்களுக்கு எல்லாமும் கை கூடும் என்பார்கள், அது பாண்டவர் காலத்தில் இருந்தே கண்ட உண்மை அது இக்காலத்திலும் நடக்கின்றது, அவனை சிந்தித்து அவன் அருமையினை உணர்ந்தோரை அவனே வந்து கைபிடித்து நடத்துகின்றான்
உலகில் இன்றும் ராஜதந்திரம், உளவு , விஞ்ஞானம், போர்முறை, உளவியல், தூது செல்லுதல், நிர்வாகம், மேலாண்மை, அரசியல், ஆன்மீகம், ஞானவியல் , இயற்கையினை பேணுதல் என எல்லாவற்றுக்கும் அவனே வழிகாட்டி
அவனிடம் இருந்து ராஜதந்திரம் கற்ற நாடுகள் பெரும் இடம் சென்றன, அவனிடமிருந்து உளவும் போர் வியூகமும் கற்ற நாடுகள் உயரத்தில் மின்னின
அவனின் நிர்வாகமும் இன்னும் பலவும் பலருக்கு பாடமாயின
அணுவிஞ்ஞானி ஓப்பன் ஹைமரும் இன்னும் பலரும் அணுகுண்டு வெடித்தபொழுது கீதையினை மேற்கோள் காட்டி அதிலிருந்தே பல மூல உண்மைகளை பெற்றதை ஒப்புகொண்டார்கள்
இன்று இருக்கும் அணுகுண்டை பிரமாஸ்திரமாகவும் , விஷவாயு குண்டுகளை நாகஸ்திரமாகவும் , ட்ரோன்களை சக்கராயுதமாகவும் முன்னறிவித்தவன் அவன் என விஞ்ஞானம் வியக்கின்றது
களத்தில் தகவல் தொடர்பும் அடிக்கடி மாற்றபடும் தந்திர உத்தியும் அவனாலே முக்கியத்துவம் பெற்றதை உலகம் உணர்கின்றது
மனோதத்துவ அடி என்பது யுத்தத்தில் எவ்வளவு முக்கியம் என்பதை முதலில் சொன்னவன் கண்ணனே என அது ஆராதிக்கின்றது
பல நாட்டு பிரசித்திபெற்ற உளவு அமைப்புகளின் குருநாதன் கண்ணனே.
மகாபாரதம் என்பது யாரை எப்படி கையாள வேண்டும் என கண்ணன் சொன்ன மேலான்மை பாடமாகவே மேல்நாட்டவர்களால் பார்க்கபடுகின்றது, ஆம் அவன் கவுரவர்களையும் இதர மன்னர்களையும் கையாண்ட விதம் அப்படி
அவன் கீதை ஆகசிறந்த உளவியல் நூலாகவும், ஞான நூலாகவும் கொண்டாடபடுகின்றது. பல நாடுகள் அதை பாடமாக வைத்திருக்கின்றன
தூது எப்படி சென்று எதிரிகளை எப்படி குழப்ப வேண்டும் என்பதிலும் கண்ணனே வழிகாட்டுகின்றான்
நல்ல ராஜதந்திரி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் அவனே உலகின் ஒளியாய் இருக்கின்றான்
நல்ல நண்பன், நல்லகுரு, நல்ல தளபதி, நல்ல உளவாளி, நல்ல ஞானாசிரியன் என எல்லா வகையிலும் அவனே ஒளிவீசி நிற்கின்றான்
அவன் வாழ்வின் சுருக்கமே அர்த்தசாஸ்திரமாயிற்று, இதர நீதிநூல்களும் ஆன்மீக நூல்களுமாயிற்று
ராம அவதாரம் அரச கடமைகளை சொன்னால் கண்ணன் அவதாரம் எளியமக்களுக்குமானதாய் அடக்கபட்ட ஒடுக்கபட்டவர்களுக்குமானதாய் ஜொலித்து நிற்கின்றது
இன்றும் அவன் கோவர்த்தனகிரி மலையினை வழிபட சொன்னதுதான் உலகின் முதல் பசுமை காக்கும் முயற்சியாக அறியபடுகின்றது
“தன்னை நெடுநாள்களாக மறந்திருந்த பாரதநாடு திடீரென விழித்துக்கொண்டதும், அதன் எதிரே முதலில் தோன்றிய ஒளி, கீதாசாஸ்திரத்தைக் கூறிப் பார்த்தனுடைய ரதத்தை வெற்றிபெற ஓட்டிய கண்ணபிரானுடைய உருவமே” என்பதுதான் இந்திய சுதந்திர போரின் தொடக்க வரி
அதுதான் தேசமெங்கும் ஒரு எழுச்சியினை கொடுத்து அதை வெற்றியாகவும் கொடுத்தது
அவனால் ஞானம் பெற்றவரும், வாழ்வு பெற்றவரும் கோடான கோடிமாந்தர் உலகில் எக்காலமும் உண்டு
நடிகர்களில் கூட அவன் வேடமிட்டோர் பெருமிடம் பெற்றனர்,
என்.டி ராமராவ் அதில் முக்கியமானவர்
ரஜினி வாயில் இருந்து வரும் வார்த்தையில் “கண்ணா..” எனும் வார்த்தை முந்தி வந்துவிழும், , பத்து வார்த்தை பேசியிருந்தால் 3 வார்த்தை “கண்ணா..” என வந்துவிழும்
இன்றுவரை தமிழ் சினிமாவின் நம்பர் 1 அவரே..
புலவர்களில் கூட அவனை பாடியோர் பெரும் இடம் பெற்றனர். வில்லிபுத்தூராழ்வார் முதல் ஆண்டாள், பாரதி, கண்ணதாசன், வாலி என அவன் புகழ்பாடிய எல்லோரும் நிலைத்தார்கள்
பாரதியின் கண்ணன்பாட்டு அழியா இடம்பிடித்த காவியம், ஆண்டாள் கண்ணனை பாடி கம்பனுக்கு நிகரான இடத்தை பிடித்து கொண்டாள்
அவனுக்கு பாடிய எம்.எஸ் சுப்புலட்சுமி அழியா இடம் பெற்றார். கண்ணனை பாடியவரும் சுமந்தவரும் பெரும் இடம் அடைந்தனர்.
கலை, இலக்கியம், பத்திரிகை, எழுத்து, பாடல் என என எல்லாமும் கூர்ந்து கவனியுங்கள், கண்ணனை வணங்கியோர் தனி இடம் பிடித்திருப்பார், யாரும் தொட முடியா உன்னத இடம் அது
அரசியல்வாதிகளில் ராஜாஜி போன்றோர் நிலைத்தார்கள், இனி புதிய கல்வி கொள்கை வந்து அதன் விளைவுகள் மின்னும்பொழுது ராஜாஜி உயர தெரிவர்
தனிபெரும் கவிஞர்களாய் சிலர் நிலைத்தார்கள்
மகா கவி பாரதி தனி ரகம். கண்ணதாசனும் வாலியும் மிக நீண்ட காலம் நிலைத்த ஒரே காரணம் கண்ணனே
ஆம் அவன் ஞான ஊற்று, தன்னை வணங்குவொருக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் அற்புத சக்தி
இன்றுள்ள தமிழ்திரையுலகில் ஏன் ஒரு கவிஞனும் வாலிக்கு பின் உருப்படியாக இல்லை என்றால்
கண்ணன் அவர்கள் மனதில் இல்லாததுதான் காரணம்.
பாரதிக்கு பெயர் கொடுத்தான் கண்ணன், கண்ணா என உருகி அழுது நின்றான் பாரதி
வெறும் முத்தையா செட்டி கண்ணதாசன் என்றானதில் இருந்து உச்சம் தொட்டான், கடைசி வரை கண்ணா என நின்றான். அவன் தொழிலில் அவன் இருந்தவரை அவனை நம்பர் 1 என ஆக்கி வைத்திருந்தது கிருஷ்ண பக்தி
ஆந்திர தேசத்தில் கிருஷ்ண வேடம் ஒன்றிலே மக்களை கவர்ந்து முதல்வரனார் என்.டி. ராமராவ்
அவனை போல் இனி ஒரு கவிஞன் தமிழுக்கு திரை இசைபாடல்கள் எழுத முடியாது எனும் அளவுக்கு காலத்திற்கும் நிற்கும் கான கல்வெட்டுக்களை கொடுத்தான், கண்ணன் பக்தி அதை செய்ய வைத்தது
அந்த திருவரங்க வாலி அதை செம்மையாக செய்தான், வாலி எழுதிய கண்ணன் பாடல்கள் தனி அழகு, தனி வரிசை
அவ்வப்போது தங்க சுரங்கத்தில் ஒரு சில வைரம் கிடைப்பது போல் கண்ணதாசனின் உதவியாளர் பஞ்சு அருணாச்சலம் போன்றோர் மின்னினர்
“சின்ன கண்ணன் அழைக்கிறான்..” என ஒரே பாடலில் முத்திரை கொடுத்தார் அருணாச்சலம்..
பாரதி தொடங்கி வைத்த கண்ணன் பாடல்கள் கண்ணதாசனால் கோபுரம் அமைக்கபெற்று வாலியால் அதில் ஒரு மகுடமும் சூட்டபட்டது
தசவதாரம் படத்தில் “முகுந்தா முகுந்தா” என வாலி எழுதிய அப்பாடலோடு ஒரு யுகம் முடிந்தது
அதன் பின் கண்ணன் பாடல்கள் இல்லை, இப்போதிருக்கும் கவிஞர்கள் பலருக்கு அந்த ஆசை இல்லை, ஆன்மீகத்தில் கலக்கா கலை எதுவும் நிலைக்காது
இருந்த ஓரிரு கவிஞர்களும் ஆன்மீகத்தில் நிலைக்காததால் பாழ்பட்டார்கள், ஒரு சிலரை கருணாநிதி கும்பல் கட்டிபோட்டது. அவருக்கு அஞ்சியே நாத்திகமும் பெரியாரிசமும் பேசி நாசமாய் போன சில கவிஞர்கள் உண்டு
இனி கண்ணனைபற்றி பாட கவிஞன் இல்லையோ என ஏங்கிய காலத்தில்தான் “கண்ணா நீ தூங்கடா..” எனும் பாடல் பாகுபலியில் வந்தது
அப்படத்தில் அப்பாடலே பாகுபலி சிலை போல விஸ்வரூபமாய் வளர்ந்து நின்றது, கண்ணனின் பக்தர்களுக்கு அது மாபெரும் உற்சாகத்தை கொடுத்தது.
காலம் தோறும் ஒருவரை பிடித்து கொள்ளும் கண்ணன் அந்த கவிஞனை பிடித்ததாக தோன்றிற்று, அதில் உண்மையும் இருக்கலாம்
அது யாரென பார்த்தால் மதன் கார்க்கி, வைரமுத்துவின் மகன்
அந்த பிரகலாதன் இவ்வழி தொடர்ந்து கண்ணனில் நிலைத்திருந்தால் நிச்சயம் மாபெரும் உயரம் அடைவான், அவனுக்கான விதி கண்ணன் சிலைமுன்னால்தான் இருக்கின்றது.
கண்ணன் ஒரு மாயஞான தத்துவம், இந்த உலகில் விஞ்ஞானம், அண்டவியல் முதல் உளவியல் ஆன்மீகவியல் வரை எதெல்லாம் உண்டோ அங்கெல்லாம் அவன் தன்னை நிறுத்தி தன்னில் இருந்தே எல்லாவற்றையும் ஆராயமும் சிந்திக்கவும் வழிசெய்து வைத்தான்
இன்றைய உலகின் எல்லா துறைகளும் அவனிலே எழுகின்றன அவனிலே தொடர்கின்றன அவனோடு முடிகின்றன
அவன் வாய்திறந்து மண்டலத்தை காட்டியது வெறும் காட்சி அல்ல, எல்லாமே என்னுள் அடக்கம் எனும் தத்துவம் அது
உலகம் அதை உணர்ந்து ஒவ்வொரு விஷயத்திலும் அவனின் முத்திரையினை கண்டு வியக்க்கின்றது
பல லட்சம் வருடத்துக்கு முன்பே 4 வகை வர்ணம் நானே படைத்தான் என்றான் கண்ணன்
இன்றும் இவ்வுலகம் உழைக்கும் உற்பத்தியாளர், வியாபாரிகள், ராணுவம், ஆட்சியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் என நான்கு வகையில்தான் அடங்குகின்றது, காலம் எவ்வளவு மாறினாலும் இந்த வர்ணங்கள் மாறாது எந்த விஞ்ஞானமும் அதை மாற்றாது என உணர்ந்த உலகம் அந்த ஒருவரிக்காகவே அவனை வணங்கி கொண்டிருக்கின்றது
இன்று அமெரிக்காவின் பிரத்யோக ஆயுதமான ட்ரோன்களில் இருந்து ஏவபடும் சுழலும் தகடுகள் கொண்ட கனைகள் ஒரே ஒருவனை மட்டும் கொல்லும் அளவு துல்லியமானவை, இப்பொழுது அது ஒருவழி பாதையாக இலக்கை அழித்துவிட்டு அது வீழும் வகையில் இருக்கின்றது
நாளை அது இன்னும் மேம்படுத்தபட்டு இலக்கை வீழ்த்திவிட்டு திரும்பும் வகைக்கு சென்றால் அதுதான் “சக்கராயுதம்” என்பதை உணர்ந்த விஞ்ஞானம் அவன் எல்லாம் அறிந்தவன் அறிந்து கடந்தவன் என அவனிடம் சரணடைந்து நிற்கின்றது