அந்த கால திமுகவினர் நடத்திய பத்திரிகைகள் இதோ

அந்த கால திமுகவினர் நடத்திய பத்திரிகைகள் இதோ

மதியழகன் -தென்னகம்; 
அண்ணாதுரை -திராவிட நாடு; 
என் வி நடராஜன் -திராவிடன்; 
ஆசைத்தம்பி- தனியரசு; 
சி பி சிற்றரசு -போர்வாள்; 
கண்ணதாசன்-தென்றல்;
கருணாநிதி-முரசொலி; 
ஆர் எஸ் தங்கபழம்-கிளர்ச்சி; 
அரங்கண்ணல்-அறப்போர்; 
மனோகரன்-விந்தியம்;
பி எஸ் இளங்கோ -மாலைமணி கட்சி பத்திரிகை – நம்நாடு; 
எம் ஜி ஆர்-சமநீதி; 
மாறன்-மறவன் மடல்;
நெடுஞ்செழியன் -மன்றம்

உண்மையில் இதை தொடங்கி வைத்தது பெரியாரின் வேலை, அவர்தான் முதலில் தொடங்கினார் ஆனால் பாமர தமிழ்

பெரியாரின் கருத்துக்கள் என்றாலும் விடுதலை குடியரசில் அதை தேன் தடவி கொடுத்தவர் அண்ணா

ஆம், அவரே எப்படி எழுத வேண்டும் என்ற புதுபாணியினை அறிமுகபடுத்தினார்

அவரை விட்டு விலகி வந்ததும் இவர்கள் ஆளாளுக்கு நடத்தினார்கள்

அதில் வந்த கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் தமிழ் துள்ளிவிளையாடும்

பொங்கிவரும் காவேரியினை பார்ப்பது போல் அந்த தமிழில் அப்படி ஒரு பரவசமும் அழகும் கொட்டி கிடக்கும்

மேற்கண்டோர் அதில் கடும் தேர்ச்சி பெற்றனர், (ராமசந்திரன் மட்டும் ஆள்வைத்து எழுதினார்), கருத்துக்கள் வில்லங்கமாயினும் அந்த தமிழ் அவ்வளவு அழகானது

கருத்து சரியில்லை என்றால் கூட அவர்களின் வாதமும் அழகு சொல் அடுக்கும் விதமும் மிக பொருத்தமான உவமைகளும் நம்மை விலக சொல்லாது

மேற்கண்ட பத்திரிகைகளை பழைய புத்தக கடைகளில் பலமுறை படித்திருகின்றேன்,

அண்ணா , கலைஞர் தவிர ஆசைதம்பி, சிற்றரசு, மதியழகன் போன்றோரின் தமிழும் அந்த நடையும் அவ்வளவு அழகு

கண்ணதாசன் அதை பூமாலை போல தொடுத்து கொடுத்தார்

நிச்சயம் அழகு தமிழ் பொக்கிஷமது, அவ்வளவு சுவையான சத்தான தமிழ்

அதில் திராவிட கருத்து மட்டுமல்ல, மாறாக உலக வரலாறு ஐரோப்பிய வரலாறு மதம் தத்துவம் பொருளாதாரம் போர் என எல்லாமும் கொட்டி கிடந்தது

அன்று அதற்கு வரவேற்பு எப்படி இருந்ததோ தெரியாது, ஆனால் நான் வாசித்து அசந்திருக்கின்றேன். அப்படியான தகவல்களும் வரலாறும் கொட்டி கிடக்கும்

ஜூலியஸ் சீசர் முதல் கடல் கொண்ட கபாடபுரம், ராஜராஜ சோழன் வரை அப்படி எழுதினார்கள்

அதன் கடைசி நீட்சிதான் கலைஞரும் அவரின் முரசொலியும், கலைஞருக்கு பின் முரசொலியும் சுரமில்லை

இப்போதுள்ள திமுகவினரில் அப்படி யாரும் வசீகர எழுத்து கொண்டிருப்பதாக தெரியவில்லை, அப்படி இருந்தாலும் கை கொடுக்க அண்ணாவுமில்லை கலைஞருமில்லை

அண்ணா ஏன் இன்னும் நிற்கின்றார் என்றால் மாபெரும் எழுத்தாளர்களையும் அழகுதமிழ் சொந்தக்காரர்களையும் கைதூக்கிவிட்டார்

ஒரு எழுத்து தலைமுறையினையே உருவாக்கினார்

தன்னை போல பலர் உருவாக வேண்டும், இன்னும் ஏராளம் எழுதவேண்டும் என தீரா ஆவல் கொண்டார் அண்ணா. தன்னால் முடிந்த உதவிகளை ஊக்குவிப்புகளை எல்லாம் அவர் செய்தார்

அந்த பாதிப்பில்தான் கலைஞர் ஏராளமான எழுத்தாளர்களை அருகிலே வைத்திருந்தார்

அப்படிபட்ட திமுவுக்கு இப்பொழுது மனுஷ்யபுத்திரன் போன்றோர் ஒருவகை சாபம், தீரா சோகம்