ஆச்சார கோவை : 74

“நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்
சொல்லின் செவி கொடுத்துக் கேட்டீக மீட்டும்
வினாவற்க சொல் ஒழிந்தக்கால்”

இப்பாடல் குரு முன்னால் எப்படி அடங்கி இருக்கவேண்டும் என்பதை சொல்கின்றது
குருவினை கண்டால் எழுந்து நிற்கவேண்டும் அவர் அமர சொன்ன பின்புதான் அமர வேண்டும், அவர் உத்தரவின்றி எழுந்து செல்லுதல் கூடாது, குரு சொல்வதை கவனமாக கேட்டு மனதில் பதிய வைக்க‌ வேண்டும், அவர் போதித்து முடித்தபின் மறுபடியும் அதனை கேட்க கூடாது என்பது பொருள்

குருவின் மனதில் ஒரு சீடன் எப்படி நல்லமுறையில் இடம்பிடிக்க வேண்டும், எப்படி மரியாதையாக குருவினை மதித்து போற்ற வேண்டும் என்பதை சொல்லும் பாடல் இது

இந்த மரியாதையும் குருபக்தியும் இருந்தால் மாணவனுக்கு எல்லா பாடமும் புரியும் பெரும் ஞானமும் வாய்க்குமென்பது சொல்லி தெரியவேண்டியதில்லை