ஆடிமாதங்களில் நடக்கும் அம்மன் விழாக்கள்
இந்துமதம் பிரபஞ்ச அசைவுகளில் இருந்து மானிட மனம் வரை ஒவ்வொரு விஷயங்களையும் நுணுக்கமாக படித்த மதம், மானிட இனம் நல்வாழ்வு வாழவும் அமைதியும் அன்பும் செழிக்கவும் மானிடர் மானிடராக வாழவும் பல ஏற்பாடுகளை மிக நுணுக்கமாக செய்திருந்தது
பெண் தெய்வ வழிபாடுகள் அப்படியானவை, குறிப்பாக ஆடிமாதங்களில் நடக்கும் அம்மன் விழாக்கள் அந்த தத்துவத்தை எளிதாக புரியவைப்பவை
மானிட சுபாவபடி அல்ல உயிர்கள் தத்துவபடி பெண் என்பது மட்டுமே படைப்புகுரியது, இயக்கும் சக்தியும் அதுவே, பெண்மையால் மட்டுமே உயிர்களை படைக்கவும் முடியும் அதனை வளர்க்கவும் முடியும்
இந்த இயக்கத்தை பெண் மட்டுமே எல்லா உயிர்களிலும் செய்வதால் அவளே இந்த உலகை இயக்கும் இயக்கி
மானிட இனம் பலுகி பெருகவும் வழிவழி வாழவும் பெண்களை எல்லா உயிரிலும் படைத்த சிருஷ்டிகர்த்தா அவைகள் மேல் ஆண் உயிர்களுக்கு ஒரு ஈர்ப்பும் மயக்கமும் வரவைத்தான் அது அல்லாது உயிர்கள் இல்லை
கண்காணா கிருமிகளில் இருந்து ஐந்தறிவு மிக்க மிருகம் வரை இதனில் சரியாக இருக்கின்றது, முழு பெண் மயக்கம் கொண்ட விலங்கோ அல்லது பெண்களுக்கு அடிமையான விலங்கோ பறவையோ, இல்லை பெண்ணுக்காக அடித்து சாகும் விலங்கோ பறவையோ எதுவும் இல்லை
அவைகளுக்கு சிந்திக்கும் திறன் இல்லாவிட்டாலும் அந்த மயக்கமோ கலக்கமோ இல்லாமல் சிருஷ்டிகர்த்தா விதித்ததை மட்டும் செய்கின்றன, இதனாலே காட்டுக்குள் எல்லா வித பெண் உயிரினங்களும் நிம்மதியாய் இருக்கின்றன, பறவைகள் உலகமும் அப்படியே
ஆனால் சிந்திக்க தெரிந்த மனிதனுக்கு விலங்குக்கும் பறவைக்கும் இருக்கும் அந்த அறிவு இல்லை, அவனின் சிந்தனை பெண்ணை ஒரு இலக்கு அல்லது இரையாக்குகின்றது
உல்லாச சுகபோகங்களில் எளிதில் சிக்கும் மானிட ஆண்வர்க்கம் பெண்ணையும் ஒரு போதையாக , ஒரு போகமாக கொண்டாட தொடங்கிற்று இதில் ஆயிரமாயிரம் சிக்கல்கள் வந்தன
சமூகத்தில் எத்தனையோ விதமான குழப்பங்கள் இந்த பலகீனத்தால் வந்தது, பெண்களின் கண்ணீர் பெருகிற்று, அவர்களுக்கான வேதனையும் கண்ணீரும் மானிட பலவீனத்தால் அதிகரித்தன
காட்டில் ஒரு பெண்மானுக்கு இருக்கும் நிம்மதியும் சந்தோஷமும் சுதந்திரமும் நாட்டு பெண்களுக்கு இல்லாதவகையில் மானுடம் அவர்களை வதைத்தது
இதனை கூர்ந்து கவனித்த இந்துமதம் பெண்களை காக்கவும் கொண்டாடவும் பல ஏற்பாடுகளை செய்தது
முதலானது சித்தர்களும், ஞானியர் சிலரும் பெண்களை மனதார வெறுப்பதாக காட்டிகொண்டனர். பட்டினத்தாரும் இன்னும் பலரும் ஏன் சாணக்கியனே பெண்களை மட்டமாக எழுதிவைத்தார்கள்
அதற்கு காரணம் பெண் வெறுக்கபட வேண்டியவள் அல்ல , அப்படியெல்லாம் சொன்னால் ஆண்கள் மனதில் பெண்ணாசை தீராதா? பெண்கள் மேல் வெறுப்பு வராதா? அந்த வெறுப்பில் பெண்கள் நிம்மதியாக வாழமாட்டார்களா எனும் தந்திரமான போதனை அன்றி வேறேதுமில்லை
ஆடவர் மனதை திசைதிருப்பும் தந்திரங்களை பல ஞானியர் இப்படி செய்தார்கள், அந்த நதிநீரை குடிக்காதே அது அசிங்கம், கசப்பு என ஒருவன் சொன்னால் யாராவது அப்பக்கம் செல்வானா? அப்படிபட்ட தந்திரம் அது
உண்மையில் சித்தர்களும் ஞானியரும் மனதார பெண்களை தொழுதார்கள் , வணங்கினார்கள், அவர்களின் பலவீனமான நிலை கண்டு கண்ணீர் வடித்தார்கள்
இதனாலே அக்காலத்தில் யுத்தம் என்றால் அந்தணர், குழந்தை, பசுக்களோடு பெண்களையும் காக்கும் நடைமுறை வந்தது, பாதுகாப்பு இல்லா இடத்தில் கொள்ளை போவதில் பெண்களையும் அச்சமூகம் சேர்த்து காவல் அளித்தது, இது இந்துக்களின் வழமையாய் இருந்தது
இன்னொரு ஞானமான ஏற்பாட்டை இந்துமதம் செய்தது, வேதங்களை கொடுத்த வியாசரும் இன்னும் மாபெரும் ஞானிகளும் பெண்களை காக்காத சமூகம், பெண்களை அழவைக்கும் சமூகம், பெண்களை பாடாய்படுத்தி கொடுமை செய்யும் இடம் எப்படி அழியும் என்பதை புராணமாக இதிகாசமாக எழுதிவைத்தார்கள்
ராமாயணம், மகாபாரதம் எனும் இருபெரும் இதிகாசங்களுமே பெண்களின் கண்ணீர் என்ன செய்யும் என்பதை சொன்ன வரலாறுகளே
சீதையின் கண்ணீர் மாபெரும் சிவபக்தனான ராவணனை அழித்தது என்பதையும், பாஞ்சாலியின் கண்ணீர் வலிமையான துரியன் கூட்டத்தை சரித்து போட்டதையும் அது சொன்னது
இன்னும் அவையெல்லாம் அன்று நடந்ததல்ல, காலம் காலமாய் நடப்பது, எக்காலமும் நடப்பது என்பதற்கு பல சம்பவங்களை சுட்டிகாட்டியது
இந்த பிரபஞ்சம் இங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அணுக்கமாக அவதானிக்கின்றது, பெண்களுக்கான
கொடுமைகள் பெருகும் பொழுது தெய்வாம்சம் மிக்க பெண்களை அது அனுப்புகின்றது, வாழும் பொழுது பெரும் கொடுமையும் சித்திரவதையும் அனுபவிக்கும் பெண் பின் சாமியாகின்றாள்
சாமியாகி நிலைத்து நிற்கின்றாள், பெண்ணுக்கு செய்யும் கொடுமை எப்படியான அழிவுகளை சந்ததி சந்தியாக கொடுக்கும் என்பதை உலகிற்கு சொல்லும் சாட்சியாகின்றாள்
பெண் என்பவள் எவ்வளவு பெரும் சக்தி, அவளுக்கெதிரான கொடுமைகள் என்னென்ன விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மானிடருக்கு போதிக்க அவள் பலவகை தெய்வமாக அமர்ந்திருக்கின்றாள்
அவையெல்லாம் வெறும் கிராம தேவதை அல்ல, உக்கிர தெய்வம் அல்ல, என்றோ வாழ்ந்து செத்துபோன ஆவிகள் அல்ல என்பதையும் அவை எல்லாம் பெண்களை எப்படி நடத்தவேண்டும், பெண்ணுக்கு எதிரான கொடுமைகள் எப்படி மானிட வாழ்வை பாதிக்கும் என்பதையும் கண்கண்ட சாட்சி என்பதையும் உணர்ந்தது இந்துமதம்
ஆம், ஒவ்வொரு அம்மனும் உருவானது இப்படித்தான்
மாபெரும் சாட்சி கண்ணகி, கண் கண்ட சாட்சி அவளே, வாழ்ந்து பலநூறு ஆண்டுக்கு பின்னும் இன்றும் தெய்வமாக வணங்கபடும் அவள், பெண்ணுக்கு செய்யும் அநீதி எப்படியானது என்பதை தன் வாழ்வில் காட்டுகின்றாள், பாதிக்கபடும் பெண் ஏராளமான பெண்களுக்கு வரமருள்பவளாகவும் ஆண்களை எச்சரிப்பவலாகவும் மாறமுடியும் என்பதை இன்றுவரை காட்டுகின்றாள்
இந்த பிரபஞ்சத்தில் சூட்சும சக்திகள் நிறைய உண்டு, அவற்றை இயக்கிகள் என்பார்கள், அந்த இயக்கிகளே பெண் வடிவமாக வந்து அதர்மங்களை களைய பல நாடகங்களை ஆடின
இன்று சுமார் நூற்றுகணக்கான அம்மன் ஆலயங்கள், ஒவொன்றும் ஒவ்வொரு பின்னணியுடன் இருந்தாலும் அவற்றின் அடிப்படை காரணங்களை பாருங்கள் ஒற்றுமை ஒன்றாகத்தான் இருக்கும்
அது அந்த பெண்கள் வாழும் பொழுது ஏதோ ஒரு கொடுமையில் உயிர்நீத்திருப்பார்கள்
அது கணவன், காதலன் செய்த கொடுமைகள், ஏமாற்றி கொல்லபட்ட பரிதாபம், கைகுழந்தையோடு கொல்லபட்ட கொடுமை , பலர் சேர்ந்து செய்த வஞ்சகம் என அதன் அடிப்படைகள் ஒன்றே
ஆம், அந்த கொடுமைகளால் கொல்லபட்ட அல்லது உயிரிழந்த பெண்களே தெய்வமானார்கள், மிக சில இடங்களில் நோயினால் வீழ்ந்த சிறுவயது பெண்களும் தெய்வமாகி இருப்பார்கள்
வாழும்பொழுது அவர்களுக்கு பல கெடுதல்களை செய்த வம்சம், பெண்களின் வாழ்வை கசக்கி எறிந்த வம்சமும் ஊரும் பெரும்சிக்கல்களை சந்தித்தபின் அந்த பெண்ணுக்கு நடந்த அநீதியே எல்லா சிக்கலுக்கும் காரணம் என்பதை உணர்ந்து, அப்பெண்ணை வணங்கி பெண்ணுக்கு செய்யும் பாவம் எவ்வளவு கொடியது என்பதையும் இனி யாரும் அப்படிசெய்ய கூடாது என்பதற்காகவும் கோவில் எழுப்பி வழிபட தொடங்கினார்கள்
இந்துக்களின் ஞானம் அவ்வளவு கூர்மையாக இருந்தது
அந்த ஆலயத்தையும் அப்பெண்ணின் வாழ்வையும் அவளை வதைத்தவர்கள் வம்சம் வம்சமாக பட்ட கொடுமைகளை கேட்ட எந்த ஆண்மகனும் பெண்ணை வணங்குவான், அவளை வதைக்க துணியமாட்டான்
அந்த பெண்ணின் கதையினை கேட்ட பெண்கள் தங்களுக்கு எக்காலமும் துணைவரும்படியும் அவளுக்கு வந்த ஆபத்து தங்களுக்கு வராதபடி தடுக்கவும் கோருவார்கள்
அந்த தெய்வமும் அதற்கு வரமருளும்
கிராம பெண் தெய்வங்களெல்லாம் இப்படி உருவானவை, பிரபஞ்சத்தின் இயக்கிகளான அவர்கள் ஏதோ ஒரு அதர்மத்தை களைய மனித பெண் உருவெடுத்து தங்கள் பிறவிநாடகம் முடிந்ததும் தெய்வமென நிலைத்திருக்கும்
அந்த இயக்கி எனும் சொல்லே மருவி இசக்கி என்றானது, தென்னக பிரதான இசக்கி அம்மன் என்பது இயக்கி என்பதன் மருவு
அவளை நீலி என்றார்கள், நீலவானத்தில் இருந்து எல்லாவற்றையும் பார்க்கும் சக்தி என அதற்கு விளக்கம் கொடுத்தார்கள்
அவளை சூலி என்றார்கள், சூல் என்றால் கர்ப்பம் , பெண்ணுக்கு செய்யும் பாவம் சந்ததி சந்ததியாய் சூலில் வரும் என எச்சரித்தார்கள்
இதனால் ஆண்களுக்கு ஒரு அச்சம் ஏற்பட்டது , பெண்களை வதைத்தால் தன் வம்சம் என்ன பாடுபடும் எனும் எச்சரிக்கை வந்தது, பெண்கள் நிம்மதி கொண்டார்கள்
கிராமங்களில் இந்த தெய்வங்களுக்கு கோவில் கட்டி சேலையும் வளையலும் வைத்து வணங்கினார்கள்
அந்த தெய்வத்துக்கு சேலை கொடுக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் இன்னொரு பெண்ணின் முந்தானையினை கூட தொடகூடாது எனும் எண்ணம் வரும்
பெண்களின் மானத்தை காப்பது புண்ணியம் எனும் ஞானம் வரும்
அந்த தெய்வத்துக்கு வளையல் சூட்டும் பொழுது இன்னொரு பெண்ணின் வளையல் உடைய நாம் காரணமாகிவிட கூடாது அப்படி செய்தால் வம்சம் வாழாது, சாபம் விடாது எனும் அச்சம் வரும்
தாலி காணிக்கை என்பதும் இவ்வகையே
இப்படி குவியும் சேலைகள் ஏழை பெண்களுக்கு ஆடைகளாயின வளையல் அணிகலனாயின
என்றோ முன்னோர் செய்த பெண்பாவங்களை பெண்களுக்கு செய்யும் பரிகாரம் மூலமே தீர்க்க சொன்னது இந்துமதம்
தெய்வசக்தி மிகுந்தபெண் வந்து பிறந்து படாதபாடுபட்டு வாழ்வினை முடித்தபின் பல்லாயிரம் பெண்ணை வாழவைக்கும் நுணுக்கம்தான் அம்மன் வழிபாடு
ஆடிமாத அம்மன் விழா சொல்வதெல்லாம் அதுதான்
பெண்கள் எக்காலமும் காக்க வேண்டியவர்கள், அவர்களை வதைத்தால் பிரபஞ்சம் தாங்காது அது ஏதோ ஒரு வடிவில் வந்து பழிவாங்கும் , பெண்ணுக்கு எதிரான பாவம் செய்துவிட்டு யாரும் வாழ்ந்துவிட முடியாது, அவர்கள் தப்பினாலும் வம்சம் வாழா
இன்று தெய்வமாக வணங்கபடும் இந்த பெண்களெல்லாம் ஒருகாலத்தில் வஞ்சகர்களால் வஞ்சிக்கபட்டவர்கள், அவர்களை தெய்வம் அழித்துபோட்டது போல பெண்களுக்கு எதிராக நாம் ஏதும் சிந்தித்தாலும் செய்தாலும் பிரபஞ்சம் விடாது
பெண் என்பவள் இயக்கி, பெண் என்பவள் சக்தி அவளை கொண்டாடவேண்டும் வணங்க வேண்டும், அவள் மகிழ மகிழத்தான் ஒரு சமூகம் வாழமுடியும்
அதைத்தான் அம்மன் கொடைவிழாக்கள் தத்துவமாக சொல்கின்றன
அங்கு தீமிதிப்பது வாழ்வு எனும் நெருப்பை தாங்க்கி கடக்கும் சக்தியினை எமக்கு தருவாய் தாயே என மன்றாட வைக்கின்றது
என்ன்னிடமுள்ள தீய பழக்கங்களை எரித்துவிடு தாயே என கெஞ்ச வைக்கின்றது
(தீ மிதித்தல் உடலுக்கு நல்ல விளைவுகளை தருகின்றது, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது என்பது மேல்நாட்டு அறிவியல் ஒப்புகொள்ளும் விஷயம்)
அங்கே முளைபாரி எடுப்பதில் நாம் வைத்திருப்பது நல்ல விதையா இல்லையா என்பது உறுதிபடுத்தபட்டது, அந்த முளையினை அம்மன் முன் வைத்து வணங்கும் காரியமும் நடக்கும்
பெண்ணால் மட்டுமே உயிர்களை பெருக்க முடியும், அந்த சக்தியான அம்மனே இந்த விவசாய பயிர்களின் உயிரும் பெருக வழிசெய்வாய் என வணங்க வைக்கின்றது
பாலும், மஞ்சளும் கிருமி நாசினிகள் அப்படியே மங்கல பொருட்கள்
அவற்றை அம்மனுக்கு ஊற்றி வளமான மங்கல வாழ்வினை தருவாயே என மன்றாட வைக்கின்றது
லவுகீக தத்துவம் ஆயிரம் சொன்னாலும் பெண் தெய்வங்களுக்கான ஆடிமாத வழிபாடு தத்துவம் பெண்களுக்கு எதிரான கொடுமை மாபெரும் பாவம், அது பல தலைமுறைக்கு பாதிக்கும் என்பது
ஒவ்வொரு பெண்ணும் தெய்வசக்தி கொண்டவள், கடும் அக்கிரமங்களில் அவள் தெய்வ உக்கிரமாக அவதாரமெடுக்கின்றாள் என்பது
பெண்ணை வதைக்கும் வம்சம் வாழாது, அவள் சாபம் தீராமல் யாரும் எங்கும் வாழமுடியாது என்பது
ஆண்டுதோறும் விழாக்கள் நடத்தபட்டு வில்லுபாட்டும், கதாகாலட்சேபமும் நடப்பதெல்லாம் அந்த உறுதிமொழிகளை அந்த நினைவுகளை மீட்டெடுக்கவே
கிராம ஆலயங்கள் ஊர்மக்கள் சங்கமிக்கும் இடம், அங்கு எல்லா பெண்களும் வருவதும் அவர்கள் கோலாட்டம் பொங்கல் என முன்னால் நிற்பதும் பெண்களுக்குள் ஒரு உறவை வளர்த்தன
கோவில்களில் பக்தியான பெண்ணை மருமகளாக்க பல பெண்கள் குறித்தும் கொள்வர், அம்மன் சன்னதியில் இப்படியெல்லாம் பெண்களுக்கு வாழ்வுகள் வந்தன
ஆம், அம்மன் ஆலயமெல்லாம் பெண்கள் நலனுக்காகவும் பெண்கள் அவர்களுக்குள் நல்ல உறவுக்காகவும் வழி கொடுத்தன, அப்படியே ஆண்களுக்கு அறிவுரை கூறி அடக்கியும் வைத்தது
இங்கு இன்னும் இரு விஷயம் ஆழ கவனிக்கதக்கவை அவை சூட்சுமமானவை, அதனில்தான் ஏன் ஆடிமாதத்தை இந்த தெய்வங்களுக்கு வைத்தார்கள் என்பதன் பதில் இருக்கின்றது
இந்த ஆடி மாதம் கடகராசி மாதம் கடக ராசி நீர் ராசி
எதெல்லாம் இயங்கும் சக்தியோ, எதெல்லாம் அசையும் சக்தியோ அதெல்லாம் பெண் என வகைபடுத்தியது இந்துமதம், அவ்வகையில் இந்த ராசியின் அதிபதி சந்திரனுடன் இது பெண் தன்மை பெறுகின்றது
அங்கு ஆடிமாதம் குரு உச்சம் அடையும் பொழுது செவ்வாய் பலமிழந்து சந்திர ஆதிக்கம் கூடுகின்றது, இந்த கோள் நிலை ஒவ்வொரு மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்
அந்நிலையில் ஒவ்வொரு ஆணின் மனதிலும் அவனுள் இருக்கும் பெண் தன்மை விழிக்கும் தன்னை உணரும், முழு ஆண் எனவும் முழு பெண் எனவும் யாருமில்லை இருவருக்குள்ளு இரு தன்மைகளும் உண்டு
ஆடிமாதம் ஆண்கள் மனதில் பெண்களை பற்றிய ஒரு இரக்கமும் நல்ல புரிதலும் வரும், சந்திரனின் எழுச்சி அதனை செய்யும்
அதனால்தான் அம்மாதம் மனரீதியாக ஆண்கள் முழுக்க பெண்களை புரிந்துகொள்ள சரியான மாதமாக உணர்ந்து அம்மாதம் இந்த தெய்வ விழாக்களை நடத்தினார்கள், த்ருமணமான ஆண்களை அப்பொழுது பிரித்து வைக்கும் காரணங்களில் அவன் கர்வம் நீங்கி (செவ்வாய் பலமிழந்து) பெண்ணை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக
இன்னொரு கேள்வி எழலாம், இந்த ஆலயங்களில் சாமியாடுவது பெண்களுக்கு சாமி வருவது உண்மையா என்பது
இந்த உலகில் உண்மை என ஒன்று இல்லாமல் போலி வரமுடியாது, தஞ்சாவூர் பெரிய கோவில் இல்லாமல் அதை போல போலி செய்யமுடியது, அசல் இல்லாமல் போலி வராது
இந்த சாமியாடுதல் சில இடங்களில் போலியாக இருக்கலாமே தவிர முழுக்க போலி என சொல்வது பைத்தியகாரனம்
இந்த பிரபஞ்சம் சிலரை கர்மவினையிலும் முன் ஜென்ம தொடர்ச்சியிலும் தேர்ந்தெடுத்து இந்த தெய்வங்களிடம் கொடுக்கின்றது, தெய்வங்களும் அவர்களை வைத்து தங்கள் பணியினை செய்கின்றன
சாமிகள் வராமல் போனாலோ, அது தான் இருக்கிறேன் என அறிகுறி காட்டாவிட்டாலோ மனிதனுக்கு மெல்ல அச்சம் நீங்கும், மெல்ல மெல்ல அவன் தவறுகளை இழப்பான்
வேலி இல்லா பயிரும், மேய்ப்பன் இல்லா ஆடுகளும் பாழாகும், மானிட சுபாவமும் அடிப்படையில் அப்படியே
அதனால் வருடம் ஒருமுறை வந்து அவனுக்கு நான் இங்கே இருக்கின்றேன், உங்களோடு உங்களை கண்காணிக்கின்றேன் என எச்சரிப்பது தெய்வத்தின் கடமையாகின்றது, அதை அத்தெய்வங்கள் சரியாக செய்கின்றன
சாமி வருவதும் அது சிலருள் புகுந்து சில விஷயங்களை சொல்வதும் அப்படித்தான், சாதாரண மின்சார அதிர்வையே தாங்கமுடியா உடல் தெய்வம் இறங்கும்பொழுது ஒரு அதிர்வுக்கு உள்ளாகும்
அந்த அதிர்வு யோகத்தின் உச்சியில் கிடைக்கும், பிரபஞ்ச சக்தி இறங்கும் பொழுது கிடைக்கும், அந்த பரவச நிலைதான் தெய்வம் இறங்கும் பொழுதும் சாமியாடிக்கு வரும்
இவையெல்லாம் உலகை இயக்கும் அந்த ஆதிபராசக்தியின் நடனங்கள், மானிடர் புரிந்து கொள்ளமுடியா சூட்சுமங்கள்
பெண் இனம் மிக மென்மையானது, அது படைக்கும் வரமும் தன்மையும் கொண்டது, உலகை இயக்கும் அந்த பெண் இனத்துக்கு பிரபஞ்ச ஆசியும் காவலும் என்றும் உண்டு
அப்பெண்கள் மகிழ்ச்சியோடு வாழ வாழ சமூகம் வாழும், அப்பெண்களை கொண்டாட கொண்டாட மானுடம் உய்யும்
ஆனால் அப்பெண்களை வஞ்சித்தாலோ, கதற் வைத்தாலோ, அவர்கள் நிம்மதியினை குலைத்தாலோ அது பாவத்தில் பெரும்பாவம், பிரபஞ்சமே இறங்கி வந்து ஜென்ம ஜென்மமாக வம்சம் வம்சமாக பழிவாங்கும் பெரும் பாவம் , தலைமுறை தலைமுறையாக தொலைக்க வேண்டிய பாவம் என்பதை அடித்து சொல்லியபடி நடந்து கொண்டிருக்கின்றன ஆடிமாத அம்மன் விழாக்கள்
முப்பந்தல் இசக்கி அம்மன் ஆலயம் முதல் ஏகபட்ட இசக்கி அம்மன் ஆலயமும், இன்னும் பல பெண் தெய்வ ஆலயங்களும் இந்த தத்துவத்தினை போதித்தபடி கொண்டாடிகொண்டிருக்கின்றன
இவ்வகை பெண் தெய்வங்கள் சில உக்கிரமானவை, அதாவது தாங்கள் கண்ட அக்கிரமத்தின் கொடுமை தாளாமல் பெரும் உக்கிரகோலத்தில் நிற்பவை
அந்த உக்கிரத்தை தணிக்க அருகில் ஒரு சித்தரையோ சிவயோகிகளையோ நிறுத்தியது இந்துமதம், சில ஆலயங்களில் அப்படி நீங்கள் காணமுடியும்
பழையனூர் நீலிக்கு காளி போல முப்பந்தல் தேவிக்கு ஒளவையாரை அது நிறுத்திற்று. ஒளவையார் வெறும் புலவர் அல்ல, காசுக்கு பாடியவள் அல்ல
அவள் ஞானி, சிவயோகி, யோகத்திலே சிவனை கண்டு அதை பாடியும் வைத்தவள், அந்த பெண் சித்தரையே பெண் தெய்வம் அருகில் நிறுத்தி வழிபட சொன்னார்கள் இந்துக்கள்
ஏன் சொன்னார்கள்?
அங்கு செல்லும் பெண்கள் தேவியின் அருள் பெற்று இந்த சித்தர்களையும் வணங்க வேண்டும், பெண்களுக்குரிய போதனைகளை அவர்கள் பாடிவைத்தார்கள் அதை பின்பற்றி நடக்க வேண்டும் என்பதை குறிப்பால் சொன்னார்கள்
அக்காலத்தில் கொடைவிழாக்கள் வெறும் வில்லுபாட்டு, கரகாட்டம் என்பதோடு இராது, அவையெல்லாம் கேளிக்கைகள். அந்த வில்லுபாட்டிலும் தேவி பெருமை சொன்னார்கள், அக்கால கரகாட்டம் என்பது தலையில் அம்மனை சுமந்து ஆடும் ஒரு வழிபாடாய் இருந்தது பின் மாறிவிட்டது
அக்காலத்தில் பெண் தெய்வ விழாக்களில் பெண்களுக்கான உபதேசம் வழங்கபடும், அவ்வை பெண்கள் எப்படியெல்லாம் வாழ போதித்தார்? பெண்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படி நல்வழியில் குடும்பம் நடத்தவேண்டும் என்றெல்லாம் போதிக்கபட்டன
சீதை மானுக்கு ஆசைபட்டதால் வந்த வினை, பாஞ்சாலி துரியோதனை நோக்கி சிரித்ததால் எழுந்த போர் வரை சொல்லி பெண்களை எச்சரித்தார்கள்
ஒளவையார் முன்பு எல்லா பெண் தெய்வ இடங்களிலும் இருந்தார், இப்படி போதித்து கொண்டே இருந்தார் காலபோக்கில் அவை மாறிவிட்டன சில இடங்களில் அவர் சன்னதிமட்டும் உண்டே தவிர பெண்களுக்கான போதனைகள் இல்லை
இன்னும் சில இடங்களில் பேச்சியம்மன் என்றொரு அம்மனை காணலாம்
அது பேய்+ஆச்சி அம்மன் என வரும்
பேய் என்றால் கொம்பு வளர்த்து ரத்தம் குடிக்கும் பிசாசு அல்ல, ரத்த காட்டேரி அல்ல, பேய் என்றால் பெரிய என பொருள்
பேய்காற்று, பேய்மழை, பேயாழ்வார் என்பதெல்லாம் பெரிய எனும் சொல்லில் வந்தவை
இங்கு அந்த பெரிய அம்மன், மூத்த அம்மன் என சொல்வது காரைக்கால் அம்மையார் எனும் நாயனாரை, பெண் நாயனாரில் ஒருவரை
மூத்த கிழபருவம் தாங்கி சிவனை கயிலாயத்தில் சந்தித்து சிவனே “அம்மை” என அழைத்தாரே அந்த அம்மையாரை
சிவனின் நடனத்தை கண்டாரே அந்த அம்மையாரை
பெண்களுக்குள் மூத்தவர் என்றும் எல்லா குடும்பத்துக்கும் தாய் அவளேஎன்றும், சிவனுக்கே தாயான அவளை எல்லோரும் வணங்கவேண்டும் என்றும் அந்த வழிபாடு வந்தது
உக்கிர பெண் தெய்வங்களை ஆற்றுபடுத்தும் விதமாக ஒளவையாரும், பெரிய அம்மன் எனும் காரைக்கால் அம்மை எனும் சித்தரும் இங்கு நிறுத்தபட்டு வணங்கபட்டார்கள்
பெண்களில் பக்தியில் சிறந்தோரை இந்த ஆடிமாதத்தில் பல பெண் தெய்வங்களோடு வணங்கி பெண்கள் ஞானமும் தைரியமும் நம்பிக்கையும் அறிவும் படிப்பினையும் பெற வைத்த மத இந்துமதம்
அப்படியே பெண்கள் வணங்கதக்கவர்கள், அவர்களை காத்து வாழவைக்க வேண்டியது மட்டுமே அவளுக்கு உடையும் உணவும் அண்கலனும் கொடுத்து அவளை பசுபோல , வேத பண்டிதர்கள் போல காத்துவரவேண்டியது மட்டுமே ஆண்கள் கடமை என போதித்தும் அதுவே
அதைத்தான் ஆடிமாத அம்மன் கோவில் விழாக்கள் எடுத்துசொல்கின்றன
இவையெல்லாம் வெறும் விழாக்களாக, கரகாட்டமும் வில்லுபாட்டுமாக வெறும் சம்பிரதாய சடங்காக மட்டும் நின்றுவிட கூடாது
அந்த விழாக்களில் ஒளவை போதனையும், காரக்கால் அம்மையாரின் போதனையும் பெண்களுக்கு எடுத்து சொல்லவேண்டும், பெண்களுக்கான எல்லா போதனையும் அங்கு நடக்க வேண்டும், இந்து பெண்களுக்கு தாங்கள் எப்படிபட்ட ஞானபரம்பரை என்பதை புரியவைக்க வேண்டும்
அப்படியே ஆண்களுக்கும் தெய்வத்தின் வரலாற்றை சொல்லி பெண்ணின் மேன்மையும், பிரபஞ்சம் அவளோடு இருப்பதையும், அவளுக்கு எதிரான கொடுமைகளை களைய சொல்லி பெண்ணை நிம்மதியாக பாதுகாப்பாக வாழ வழிசெய்ய வேண்டும்
அவைகளை செய்தால் அந்த விழாக்கள் அர்த்தமுள்ள விழாக்களாக அமையும், அக்காலம் அப்படித்தான் இருந்தது, அவையெல்லாம் மீட்டெடுக்கபட்டால் இன்று பெண்கள் காணும் எல்லா சிக்கலும் களையபடும்
இந்துமதத்தின் அடிப்படை போதனைகளையும், அம்மதம் செய்த உன்னத ஏற்பாட்டை புரிந்துகொள்ளாததும், அந்த ஞானமதம் போதிக்கும் தத்துவங்களை யாரும் எடுத்து சொல்லி புரிய வைக்காததுமே இன்று நடக்கும் பல விபரீதங்களுக்கு காரணம்
இந்துமதம் மேலேழுந்தால் பெண்கள் நலம் தானாக மேலெழும்,பெண்களின் வாழ்வும் நிம்மதியும் மகிழ்ச்சியும் இந்துமதம் புத்தொளிபெறுவதில்தான் அடங்கியிருக்கின்றது