ஆயர்பாடி மாளிகையில்

உலகின் மிகபெரிய கொண்டாட்டங்களில் ஒன்று கோகுலாஷ்டமி என்கின்றது ஆய்வு, இந்தியாவில் மிக பெரிதாகவும் இந்துக்கள் இருக்குமிடமெல்லாம் சிறப்பாகவும் கொண்டாடடும் நாள் அது

அந்த கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கின்றன, கண்ணனின் நினைவில் உலகம் ஆரவாரத்துடன் கொண்டாட தொடங்கியிருக்கின்றது

உலகெங்கும் கோகுலாஷ்டமி உற்சாகமாய் கொண்டாடபட்டு கொண்டிருகின்றது

இந்த மண்ணும் தர்மமும் இச்ச சமூகமும் எப்படி எல்லாம் குழந்தைகளை கொண்டாடியது?, அது கொண்டாடியது போல் இன்னொரு சமூகம் கொண்டாடியிருக்க முடியாது.

வள்ளுவன் மக்களுடமை என அதிகாரமே அமைத்து “குழலினிது யாழினிது” என்றான், இன்னொரு புலவன் “நெய்யுடை அடிசில் மெய்பட உதிர்த்தும்” என பாடினான்

எந்த தமிழ் கவிஞன் குழந்தை பற்றி பாடவில்லை?

குழந்தையினை கொஞ்சுவது, உடை உடுத்துவது, உணவூட்டுவது, தாலாட்டு பாடுவது, அலங்கார படுத்தி அழகு பார்ப்பது என தமிழ் இலக்கியமெல்லாம் குழந்தைகளுக்கான பக்கம் தனியாக இருக்கின்றது
அந்த பாடல்களும் அவற்றின் அழகும் உருக்கமும் அவ்வளவு சிலாகிப்பானவை, அதை கேட்ட மாத்திரத்திலே உற்சாகம் புரண்டோடும்

பாடல்கள் மட்டுமா பாடினார்கள்?

குழந்தைகளுக்கான கதைகள் நிறைய இருந்தன, குழந்தைகள் கதை கேட்கும் என்பதால் புராணத்து குழந்தை கதைகள் நிறைய சொல்ல வசதி இருந்தது

குழந்தையிலே ஒருவன் கடவுளை தேடவேண்டும் என்பதால் இந்துமதம் தன் கடவுள்களிலே நிறைய குழந்தை கதையினை வைத்திருந்தது, கண்ணன் ராமன் முருகன் பாரத கதைகள் எல்லாம் அவையே

அதெல்லாம் நீதி, தர்மம், கடவுள் பக்தி எல்லாம் வளர்த்தன‌

குழந்தைகளிடம் எதை சொல்ல வேண்டும் எப்படி சொல்லவேண்டும் எப்படி வளர்க்க வேண்டும் என அன்றே நன்றாக உணர்ந்து வாழ்ந்த சமூகம் இது

ஒன்றா இரண்டா குழந்தைகளுக்கான புராண கதைகள்? எல்லா அவதாரத்தின் கதைகளும் அவற்றின் பால்யமும் குழந்தைகளுக்கு பிடித்தமானவை

பிள்ளையார் கதையிலே அவை தாய்தந்தையினை மதிக்க கற்றுகொள்கின்றன, கண்ணன் கதையில் குறும்பையும் தைரியத்தை கற்கின்றன, குறைந்தபட்சம் வெண்ணை உண்ணவாவது கற்கின்றன, வெண்ணெய் மூளைக்கு பலம் என்கின்றது ஆய்வு

ராமனின் பல்யபருவத்து கதைகள் எவ்வளவு சுவாரஸ்யமானவை? சகோதர பாசம் தானே குழந்தைக்கு வளராதா?

தர்மனின் கதையினை கேட்கும் மூத்த குழந்தை தானும் அவனைபோல் ஆகவேண்டும் என நினைக்காதா?
நல்ல சமூகம் உருவாக எப்ப்படி எல்லாம் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டுமோ அப்படி எல்லாம் போதித்தது இந்துமதம், இந்திய மண்

கொண்டாடும் பொழுதும் கொஞ்சும் பொழுதும் “கண்ணனே, ராமனே, ஞானபண்டிதனே” என கொஞ்சி பக்திவளர்த்த சமூகம் இது

குழந்தை இந்துவாகவே வளரவேண்டும் ஆலயத்திலிருந்தும் மதத்திலிருந்தும் பிரியாமல் வளரவேண்டும் என்பதால் ஆலயத்தில் மொட்டை போடுதல் முதல் கண்ணன் வேடம் இடுவது வரை செய்து மகிழ்ந்தார்கள்
மாபெரும் அறிவார்ந்த சமூகத்தின் குழந்தை வளர்ப்பு தத்துவம் இது

பெண்குழந்தைகள் விளையாட கண்ணன் சிலையே கொடுத்து அவன் பக்தியினை வளர்த்த சமூகம் இது

அந்த அளவு குழந்தையினை கொண்டாடி கொண்டாடி தீர்த்த சமூகம் இது

உலகில் எங்கும் காணா அதிசயமாக‌ கடவுளையே குழந்தையாக்கி கொஞ்சிய மதம் இது, வேறு எந்த மதத்திலும் அது இல்லை

முருகன், கண்ணன், ராமன் என எல்லா கடவுள் அவதாரங்களையும் அவை குழந்தையாகவே கொண்டாடின‌
“குழந்தையும் தெய்வமும் ஒன்று” எனவும் “குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே” என சொன்ன சமூகம் இது

அது கடவுளுக்கும் கையில் குழந்தை கொடுத்து அழகு பார்த்தது, சிவனும் பார்வதியும் முருகனோடும் பிள்ளையாரோடும் இருக்கும் திருகுடும்பத்தை தன் ஞானகண்களால் பார்த்து மகிழ்ந்தது

கண்ணன் பிறந்த அஷ்டமியினை இன்றும் குழந்தைகளுக்கு அவன் வேடமிட்டு கொண்டாடும் நாடு இது

முன்பு தைபூசத்துக்கும் அந்த மாதிரி முருகன் வேடமிட்டு குழந்தைகளை கொண்டாடுவார்கள் பின் மறைந்து போயிற்று

குழந்தை கண்ணன் , குழந்தை முருகன், கையில் குழந்தையோடு வரும் பார்வதி, இசக்கிஅம்மன் என அது குழந்தைகளின் பெருமையினை அருமையினை உலகுக்கு அன்றே சொல்லிற்று

தெய்வத்துக்கு கையில் குழந்தை ஏன் என கேட்பது பகுத்தறிவு அல்ல, அதில் உள்ள தத்துவத்தை ஆழ சிந்திப்பதே பகுத்தறிவு

எந்த இனத்துக்கும் இல்லா பெரும் சிறப்பு தமிழினத்துக்கு குழந்தை வளர்ப்பில் இருந்தது, ஆம் குழந்தை கடவுளின் உருவம் என்பதால் அவர்களை மரியாதை குறைவாக அழைக்கமாட்டார்கள்

“அய்யா” என்பதும் “தாயே” என்பதுமாக அழைத்துகொஞ்சுவார்கள், இன்றும் வெளிநாட்டு வாழ்தமிழரிடம் குழந்தைகளை “அவர்கள்” என பன்மையில் அழைக்கும் பண்பாடு உண்டு

இன்றும் இந்து ஆலயங்களில் குழந்தைகளுக்கு மொட்டை போடுவது முதல் காதுகுத்துவரை நடக்கும் விஷேஷங்களை தெய்வத்தின் முன்னிலையில்தான் செய்வார்கள்

குழந்தைகள் தெய்வங்கள், அவற்றுக்கான விஷேஷ காரியங்கள் ஆலயத்தில்தான் நடக்க வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை

சிக்கலான பிரச்சினைகளில் திருவிளக்க சீட்டு போடும் பொழுதும் குழந்தையினைத்தான் அழைத்து எடுக்க சொல்வார்கள், ஆம் அது தெய்வத்தின் சாயல் என்பது நம்பிக்கை

குழந்தை தெய்வங்களுக்கான ஆலயங்கள் நிரம்ப கொண்ட பூமி இது, கேரளாவில் அவை அதிகம் குருவாயூர் கோவில் அதில் முக்கியமானது

பழனி கோவிலே குழந்தை முருகனுக்கானது, இது போக பால ராமன் கோவில் என ஏகபட்ட ஆலயங்கள் இந்நாட்டில் உண்டு

அப்படி எல்லாம் குழந்தைகளை தெய்வமாக‌ கொண்டாடிய பூமியில் நேரு பிறந்த நாளே குழந்தைகள் நாளாம்

நேருவும் ஒரு தலைவராக இருந்தார் என்பதில் மாற்றுகருத்து இருக்கமுடியாது,ஆனால் மத அபிமானமோ கலாச்சார பெருமையோ சுத்தமாக கிடையாது

இந்துமதம் காட்டுமிராண்டி நாகரீகமற்ற மதம் என்பது அவர் கருத்து, ஆனால் அவரும் அவர் முன்னோரும் அந்த மதத்தவர்கள் என்பது அவருக்கு மறந்ததுதான் தேசத்தின் சிக்கல்

இந்திராவும் ராஜிவும் அப்படியே.

இதனால் நேரு வந்துதான் குழந்தைகளை அணைத்தார் அதனால் அவர் பிறந்தநாளே குழந்தைகள் நாள் என்பதெல்லாம் சரியல்ல, குழந்தைகள் நன்றாக கற்று வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற அவரின் நோக்கம் அவருக்கு மட்டுமா இருந்தது?

எல்லோருக்கும் இருந்தது

இந்திய கலாச்சாரத்தில் குழந்தைகளுக்காக தேசமே ஒரு பண்டிகை கொண்டாடுகின்றது என்றால் அது கோகுலாஷ்டமி ஒன்றே

தைபூசத்தின் குழந்தை கொண்டாட்டம் இப்பொழுது அதிகம் இல்லை

ஆக இந்தியாவில் குழந்தைகள் தினம் நேருவுக்கு பின்பு தொடங்கியது அல்ல, அது அக்காலமே தொடங்கபட்டு கொண்டாடபட்டு கொண்டுதான் இருந்தது

ஆம் கோகுலாஷ்டமி என கொண்டாடபடும் பண்டிகை அதுவே, அது இன்னும் மக உற்சாகமாக கொண்டாடபடும் தேசத்தில் இன்னொரு குழந்தைகள் நாள் எதற்கு?

இதனால் கோகுலாஷ்டமி குழந்தைகள் தினமாக கொண்டாட அறிவிக்கபட வேண்டும், குழந்தைகள் சிறுவயதிலே ஆன்மீகத்தில் வளரவேண்டும்

கோகுலாஷ்டமி குழந்தைகள் நாளாக அறிவிக்கபடும் நாளை தேசம் எதிர்பார்க்கின்றது, அதைவிட பொருத்தமான குழந்தைகள் நாள் இந்திய மரபில் இல்லை

பாரதியின் பெருமித உணர்வு கண்ணன், அவன் கண்ணனை தேசத்தின் குலதெய்வமாக கண்டான். அந்த தெய்வத்தை ஞானாசிரியனாக, அரசனாக, ஆசானாக, சீடனாக, தாய் தந்தையாக, குழந்தையாக எல்லா நிலைகளிலும் பாடினான்

“புல்லாங் குழல்கொண்டு வருவான்; – அமுது
பொங்கித் ததும்புநற் பீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே – அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்” என்ற அவனின் வரிகள் சிலாகிப்பானவை

கண்ணதாசன் இன்னும் உருகினான்

“அவன் கோதைமொழி கேட்பதற்கும்
கொஞ்சுமுத்தம் ரசிப்பதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைபோல்
மாயகண்ணன் தூங்குகின்றான் தாலேலோ”

என்ற வரிகளில் அந்த குழந்தையினை நினைந்து ஆனந்த வெள்ளத்திலும் சிலிர்ப்பிலும் மூழ்கி கொண்டிருக்கின்றனர் அந்த மாயவனின் பக்தர்கள்