ஆர்.கே நகர் சூடு பிடித்திருக்கின்றது, பலருக்கு குளிர் எடுக்க ஆரம்பித்திருக்கின்றது

ஆர்.கே நகர் சூடு பிடித்திருக்கின்றது, பலருக்கு குளிர் எடுக்க ஆரம்பித்திருக்கின்றது

சில கட்சிகள் வழக்கம் போல சீ சீ இந்தபழம் புளிக்கும் என ஒதுங்கிவிட்டன, வைகோ, ராமதாஸ் அப்படியானவர்கள்

கோப்பை கிடைக்காது என தெரிந்தும் களம் காணும் கென்யா, ஜிம்பாப்வே போல சில கட்சிகள் களம் வந்திருக்கின்றன‌

திருமா கட்சி அப்படியானது,

நாம் நிச்சயம் தோற்போம், சந்தேகமில்லை ஆனால் திமுகவின் வோட்டுகளில் 2 பிரிந்தால் கூட அது வாழ்நாள் வெற்றி என தேமுதிக களமிறங்கியிருக்கின்றது

அதிமுகவிற்கு இது வாழ்வா சாவா போராட்டம், ஆட்சியினை கைபற்றி தீரவேண்டிய கட்டாயம் சசிகலா குடும்பத்திற்கு, அவர்களுக்கு இருக்கும் சிக்கல் அப்படி. கவுரவர்கள் போல ஏகபட்ட பாத்திரங்கள், எல்லோருக்கும் ஏகபட்ட சொத்துக்கள்எ

அனைத்தும் காக்கபடவேண்டுமானால் கட்சியும் ஆட்சியும் அவர்களிடம் இருந்தே ஆகவேண்டும், இல்லாவிட்டால் கயிலை மலை ஏறவேண்டியதுதான்

பன்னீர் கோஷ்டி கங்கணம் கட்டி நிற்கின்றது, தமிழகத்தை காக்க வந்தது நாங்களே என அது விடாபிடியாக நிற்கின்றது, பாம்பின் கால் பாம்பறியும், பன்னீர் சசிகலா குடும்ப தேர்தல் வித்தையினை அறிவார்

ஆக பன்னீரை சமாளிப்பது அவர்களுக்கு பெரும்பாடு

ஜெயலலிதாவிற்கு கொள்கையினை பார்த்தா வாக்களித்தார்கள்? பின் நான் ஏன் வாக்கு வாங்க முடியாது என வந்திருக்கின்றார் தீபா,

அட கட்சியின் பிதாமகனே என் சித்தப்பா தெரியுமா? என திடீரென களத்தில் வந்திருக்கின்றார் எம்ஜிஆரின் அண்ணன் மகன், அண்ணா மகன் அல்ல, அவரும் நிற்கின்றாராம்

ஆக அதிமுகவிற்கு பெரும் எதிர்ப்பு அதிமுக உள்ளே இருந்தே வந்திருக்கும் சுவாரஸ்ய காட்சிகள்

பிரதான திமுகவினை பொறுத்தவரை இத்தேர்தல் அவர்களுக்கு மகா முக்கியம் அல்ல, ஜெயாவிற்கு பின்னரான தேர்தலில் மக்களின் நாடியினை பிடித்துபார்க்கும் பரிசோதனை தேர்தலாக அவர்கள் பார்க்கின்றார்கள்

திருமங்கலம் போன்ற இடைதேர்தலை எதிர்கொண்டவர்கள் என்பதால், இடைதேர்தல் என்பது ஆளுங்கட்சியின் ஆதிக்கத்தில் நடபது என்பது அவர்கள் அறியாததல்ல…

அதனால் வந்தால் மலை, போனால் … எனபது போல களமிறங்கிவிட்டார்கள்

வெற்றி அவர்களுக்கு மிகுந்த உற்சாகமும் கொடுக்காது, தோல்வி அவர்களை பாதிக்கவும் செய்யாது.

ஏதோ பிரபலமில்லாதவரை ஏன் முன்னுநிறுத்தினார்கள் என பல கேள்விகள் எழுகின்றன, திமுக வரலாற்றில் இதெல்லாம் ஆச்சரியமில்லை

1960களில் திமுக இப்படித்தான் இருந்தது, அப்படி இருந்துதான் ஏராளமானோரை உருவாக்கியது, அவ்வளவு ஏன்? ஆனானபட்ட காமராஜரை எதிர்க்க கூட ஒரு சிறு இளைஞனைத்தான் நிறுத்தியது

இரண்டுவகையில் எடுத்துகொள்ளலாம், அதாவது பெரிய தலைநின்று தோற்றால் அது அவர்கள் அரசியல் வாழ்வினை கெடுத்துவிடும், புதுமுகம் என்றால் தலையில் தட்டி விரட்டலாம்

இன்னொன்று ஒரு புதுமுகம் எந்த பெரும் எதிரியினை வீழ்த்திவிட்டால், பார்த்தீர்களா அவரை அடிக்க இந்த சிறு அம்பு போதும் என பெருமையாக சொல்லிகொள்ளலாம்

அன்றைய திமுக தந்திரம் இது, கலைஞர் சொல்லிகொடுத்த தந்திரம்

இன்று ஆர்.கே நகரில் அதனைத்தான் ஸ்டாலின் செய்கின்றார், மற்றபடி சொந்த ஐடியா எல்லாம் இல்லை

ஒருவேளை மருது வெல்லட்டும், அதன்பின் எங்கிருப்பார் என நினைக்கின்றீர்கள்? இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார், காமராஜரை வென்ற சீனிவாசன் என்ன ஆனார் என யாருக்காவது தெரியுமா? அரசியல் அப்படித்தான்

ஆக பெரும் சிக்கலில் தினகரன் களம்காண்கின்றார், எவ்வளவு நெருக்கடி இருந்தால் பெரும் தலையினை களத்தில் இறக்குவார்கள்? ஆட்சியினை கைபற்றியே தீரவேண்டும் என்ற வன்மம் அவர்களிடம் இருப்பது நன்கு தெரிகின்றது

தினகரன் வென்றுவிட்டால் பழனிச்சாமி அரியணை இறங்கவேண்டியது, அதன் பின் என்னை மிரட்டினார்கள் என அம்மா சமாதியில் தியானம் இருப்பாரா என்பதெல்லாம் பின்னால் தெரியலாம்..

எல்லோரையும் விட இந்த தேர்தலில் முக்கிய இடம் வகிப்பது இரட்டை இலை சின்னம், என்ன கருமாந்திரமோ? அந்த சின்னம் பெற்றிருக்கும் இடம் அப்படி

அச்சின்னத்தில் நின்றால் சசிகலா என்ன? தாவுத் இப்ராஹிம் மருமகனே தமிழகத்தில் முதல்வராகலாம், அப்படி ஒரு பூதம் அது.

ஜெயாவோ, சசிகலாவோ ஆளட்டும், தமிழ்நாடு நாசமாய் போகட்டும் ஆனால் நாங்கள் சாவது வரை இரட்டை இலைக்குத்தான் வோட்டு என சொல்வோர் ஏராளம் உண்டு, தமிழகம் நாசமாய் போவதற்கும், தினகரன் சிரித்துகொண்டு திரிவதர்கும் அதுதான் காரணம்

என்னது சாகும் வரை இரட்டை இலைக்கு வாக்கா? என அவர்களை கொல்லவா முடியும் முடியாது

இப்பொழுது பன்னீர் என பிரிந்து கிடப்பதால் இந்த இரட்டை இலையினை கைபற்ற கடும் பிரயர்த்தனம், ஒருவேளை சின்னம் முடக்கபட்டால் தமிழகத்திற்கு நிச்சயம் விடிவு

இலையில்லா தினகரன் நீரில்லா குளம், துளிர்க்கமுடியாது.

சின்னம் என்னாகும் என்பதும் முக்கியம் பெறுகின்றது

மற்றபடி ஜெயா இல்லாத அதிமுகவும், கலைஞர் இல்லாத திமுகவும் முதல் தேர்தலை சந்திக்கின்றன‌

அதில் அதிமுக தன் முழுபலத்தினை திரட்டி , எதிர்காலத்தை தேடி களமிறங்குகின்றது, பன்னீர் கோஷ்டி அதற்கு கடும் சவாலை கொடுக்கின்றது

திமுக மிக ஆசுவாசமாக ஒரு பரிசோதனை தேர்தல் எனும் வகையில் வருகின்றது, அதாவது தானாக தன் கையில் விழபோகும் கனிக்கு ஏன் மிக மென்னகெட வேண்டும் எனும் சிந்தனை அது

இந்நிலையில் தேசிய கட்சிகள் நிலை என்னவென தெரியவில்லை, அவை வந்தும் ஒன்றும் கிழித்துவிட போவதில்லை

காங்கிரஸ் மூக்கை சீந்தி அழுதுகொண்டிருக்கின்றது, தேர்தல் தோல்விகளை கொஞ்சம் மறந்தாலும், திருநாவுக்கரசை நினைத்து மறுபடியும் ஓஓஓ என அழுகின்றது

தமிழிசை அவர் போக்கில் பேசிகொண்டிருக்கின்றார், அவருக்கு எங்கே கவுதமியினை நிறுத்திவிடுவார்களோ எனும் அச்சம் இருப்பது தெரிகின்றது.

வடக்கே பெரும் பலம் பெற்றுவிட்ட பாஜக இந்த தேர்தலில் பரிசோதனை செய்யலாம் தான், வலுவான வேட்பாளரை நிறுத்தி ஒரு ஆட்டம் ஆடித்தான் பார்க்கலாம், என்ன வந்துவிடும்

மோடி எனும் பிம்பம் நிச்சயம் குறிப்பிட்ட வாக்குகளை கொடுக்கத்தான் செய்யும், மொத்த இந்தியாவே எங்களை நம்பி வாக்களிக்கும்பொழுது தமிழக மக்களே நீங்கள் ஏன் நம்பகூடாது? என கேட்கலாம்தான்..

ஆனால் செய்வார்களா என தெரியாது, செய்தால் நன்றாகத்தான் இருக்கும்

ஆக பல சுவாரஸ்ய காட்சிகளோடு ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் நாளை நோக்கி நகர்கின்றது..

இதில் திராவிட கட்சிகளையும், தேசிய கட்சிகளையும் குழிதோண்டி புதைப்பேன் அதில் தமிழ்தேசிய கொடியினை பறக்கவிடுவேன் எனும் சைமனை காணவே இல்லை

ஒரு அதிமுக என்றாலே வாய் திறக்கமட்டார், இதில் ஏராளமான அதிமுக வந்தபின் அன்னார் வாய் திறப்பார்? ம்ஹூம்…

சுதந்திரம் பெற்ற காலங்களிலிருந்து , அதாவது தமிழகத்தில் ஜனநாயக தேர்தல் தொடங்கபட்ட காலங்களில் இருந்து , கடந்த 67 வருடமாக எல்லா தேர்தலில் கேட்ட , அந்த கரகரப்பான குரல் கேட்காத முதல் தேர்தல் இது.

எவ்வளவு தூரம் அந்த மனிதனும், எத்தனை தலைமுறையோடு தளராமல் ஓடி வந்திருக்கின்றார்…

அவர் வந்துவிட்டால் நன்றாக இருக்குமே என தேடிவிட்டு, கண்களை துடைத்துகொள்ளத்தான் முடிகின்றது…

அந்த கண்ணீரோடுதான் இந்த ஆட்டத்தினை பார்க்க வேண்டி இருக்கின்றது…


தினகரன் வெற்றி பெற மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள்: தமிழிசை

தினகரனுக்கு மட்டுமா ஆதரவளிக்க மாட்டார்கள்? ஏன்? நீங்களும் நின்று பார்க்க வேண்டியதுதானே..


 எனது வெற்றி உறுதியாகிவிட்டது; ஜெ.தீபா

அதாவது முற்றிவிட்டது., தேர்தல் முடிவு வந்தபின் எல்லாம் சரியாகிவிடும்..