இந்தியாவின் கரும்புலி
இது ரவீந்திர கவுசிக்கின் நினைவு நாளில் எழுதியது, இன்று என்னாயிற்றோ தெரியவில்லை ஆளாளுக்கு அவனை பிடித்து இழுக்கின்றார்கள்
நாமும் இழுப்போம்
உலகில் ஏகபட்ட உளவாளிகள் உண்டெனினும் அவர்களுக்கெல்லாம் பகவான் கண்ணனே வழிகாட்டி
பாரதபோரின் உளவுதகவல்களை அவனே வைத்திருந்தான், அந்த தகவலில் ஒவ்வொருவரின் பலவீனம்பார்த்து அடிக்க சொன்னான், இன்றளவும் கண்ணன் என்பவன் உளவு அமைப்புகளுக்கு ஆச்சரியகுறி, அடிச்சுவடி
உளவு தகவலின்றி ஒரு யுத்தம் வெல்வதுமில்லை, தடுக்கபடுவதுமில்லை
இந்த நூற்றாண்டில் பல அசாத்திய உளவாளிகளை இஸ்ரேல் கொடுத்தது, எலி கோகன், டேவிட் கீம்ஸி, எகுத் ஒல்மார்ட் என மிக சிறந்த உளவாளிகள் உண்டெனினும் மிக மிக சிலாகிக்க கூடியது எலிகோகனின் உளவு
அந்த இஸ்ரேலியர் சிரியாவில் ஊடுருவி சிரியனாய் வாழ்ந்து ராணுவ ஆலோசகராக உருவெடுத்து இஸ்ரேலை எப்படி எல்லாமோ காத்தார், பின் ஒருகட்டத்தில் அவரை அறிந்துகொண்ட சிரியா தூக்கிலிட்டது.
சமீபத்தில் அவரின் எலும்புகளையும் அவர் பயன்படுத்திய அந்த தொழில்நுட்ப வாட்சையும் கடத்தி வந்து கண்ணீர் விட்டது இஸ்ரேல்
இந்தியாவிலும் அப்படி ஒருவன் இருந்தான் அவன் பெயர் ரவீந்திர கவுசிக்
அவன் ராஜஸ்தானி பெரும் படிப்பில்லை ஆனால் இந்திய உளவுதுறை அவனை மிகசரியாக அடையாளம் கண்டு பாகிஸ்தானில் ஊடுருவ வைத்தது
அவனும் நபி அகம்த் எனும் பெயரோடு1975ல் ஊடுருவினான், இஸ்லாமியனாக மாறி ஒரு கட்டத்தில் உருது கற்று முழு பாகிஸ்தானியனாகவே மாறிப்போனான்
ஒரு கட்டத்தில் பாகிஸ்தானின் குடியுரிமையோடு அங்கே சட்டம்படித்து இந்தியாவினை ஒழிப்பதே கடமை என பாகிஸ்தான் ராணுவத்திலும் ஊடுருவினான், ஊடுருவி மேஜரும் ஆகிவிட்டான்
பாகிஸ்தான் பெண்ணையும் மணந்தான், கொஞ்சம் கொஞ்சமாக ராணுவ உயர்பதவியினையும் அடைந்தான்
இக்காலகட்டம் கொஞ்சம் மோசமான காலகட்டம் ஆப்கன் யுத்தமும் பின்லேடன் வருகையும் அப்பொழுதுதான் நடந்தன
இப்பக்கம் ஈரானிய புரட்சி அப்பக்கம் ஆப்கன் ரஷ்ய மோதல் என எங்கு திரும்பினாலும் குண்டு சத்தம்
அப்பொழுது சந்தடிசாக்கில் இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்த பாகிஸ்தான் ஏகபட்ட ஆட்டங்களை ஆடியது, அதற்கு ஆப்கன் தீவிரவாதகுழுக்கள் தயாராய் இருந்தன
ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய பதவியில் இருந்த கவுசிக் அட்டகாசமான தரவுகளை கொடுத்தான்
அவன் பாகிஸ்தான் ஆர்மியினை நடத்திகொண்டே இங்கு தகவல் கடத்தியது எப்படி என்பது இன்றுவரை ஆச்சரியமே
எவ்வளவோ தாக்குதல்கள் அவனால் முறியடிக்கபட்டன
மொரார்ஜி காலத்தில் பாகிஸ்தான் அணுகுண்டு செய்கின்றது என்பதை அவனே இங்கு தகவலாய் கடத்தினான்
அந்த குவெட்டா அணுவுலை விஞ்ஞானி முடிமுதல் அணுகதிர் மண் வரை அவனாலே இங்கு வந்தது, பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பது தெரிந்தது
விஷயம் இஸ்ரேலால் மோப்பம்பிடிக்கபட்டு மோஷே தயான் அதை தாக்க தயாரானார் ஆனால் அன்று நீண்டதூர விமானம் இல்லை, இந்தியா உதவியிருந்தால் நறுக்கியிருக்கலாம்
மொரார்ஜி மறுக்க இஸ்ரேலுக்கு ஏமாற்றம், விளைவு இன்று நாம் காணும் தலைவலி
அதாவது அந்த அளவு மிக துல்லியமான உளவாளியாக இருந்தான் கவுசிக், பஞ்சாபில் பாகிஸ்தான் தொடங்கிவிட்ட அந்த கலவரத்தின் தரவுகளும் திட்டமும் அவனாலே இங்கு கிடைக்கபெற்றன இன்னும் ஏராளம்
ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டல்லவா?
இன்னொரு உளவாளியினை ஈரான் மூலம் உள்ளே அனுப்பியது இந்தியா, அவர் கொஞ்சம் கத்துகுட்டி என்பதால் பாகிஸ்தான் முகத்தில் துண்டு போட்டு அமுக்கியது
இந்திய உளவுதுறை செய்த தவறு கவுசிக் எனும் மகா முக்கிய துருப்புசீட்டைபற்றி இவரிடம் நேரடியாக சொல்லியிருந்தது
அப்படி செய்திருக்க கூடாது மாறாக இடையில் பல கண்ணிகளை வைத்தே இவரை இணைத்திருக்க வேண்டும்
அது செய்யாபட்சத்தில் புதிய உளவாளி கவுசிக்கை காட்டிகொடுத்துவிட்டார்

முதலில் மயக்கம் போட்டு விழுந்த பாகிஸ்தானிய ராணுவ தலமை பின் சோடா குடித்து எழும்பி, காதல் படத்து வில்லன் போல வெறியாட்டம் ஆடியது
உளவாளிகளின் வாழ்க்கை மகா சோகமானது
மாட்டும் வரை சிக்கல் இல்லை, மாட்டிகொண்டால் சம்பந்தபட்ட நாடு கைகழுவிவிடும்
ஆனானபட்ட எலிகோகனே மாட்டும் பொழுது கவுசிக் மாட்டமாட்டானா?
மாட்டினான், இந்தியா கனத்த அமைதி. அதன் நிலைப்பாட்டில் அப்படித்தான் இருக்க முடியும்
2 வருடம் அவரை சித்திரவதை செய்த பாகிஸ்தான் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது
இன்று குல்பூஷனுக்காக வாதிடும் இந்தியா ஏதோ செய்து அவனை ஆயுள்தண்டனை கைதியாகமாற்றியது
ஆனால் பாகிஸ்தானின் திட்டமிட்ட கொடும்சிறைவாசம் அவனை நோயாளியாக்கியது
நோயுடன் போராடி முல்தானில் 1999ல் இறந்தான் கவுசிக் அவனுக்கு வயது 47.
அவன் இந்தியா எப்படியும் தன்னை மீட்கும் என நம்பினான், தன் தாய்க்கு அவன் எழுதிவைத்த கடிதம் எல்லாம் அவன் செத்தபின்பே இங்கு வந்தது
அதில் மிக நம்பிக்கையாக அவன் இருந்தது தெரிந்தது, நாட்டுக்காக அவன் மகிழ்வுடன் சித்திரவதைகளை ஏற்றதும் தெரிந்தது
எனினும் தேசம் கைவிடாது என நம்பியிருக்கின்றான்
ஆனால் அது காலம் கடந்த நம்பிக்கை, அப்படியாக சிக்கி கொண்ட உளவாளியினை எந்த தேசமும் காப்பாற்றாது, காப்பாற்ற முடியாது அந்த சாபம் பிடித்த துறை அப்படி
எனினும் இஸ்ரேலை போல பின்னாளில் இந்தியா அவரை தம் உளவாளி என ஒப்புகொண்டு இந்தியாவின் கரும்புலி என பெருமைபடுத்தியது
10 வருட உளவு பணி, 16 வருடம் கொடும் சிறை என அவன் இத்தேசத்துக்கு செய்த சேவை கொஞ்சமல்ல
இந்தியாவின் எலி கோகன் அவன்
எந்நாளும் இந்தியர் நினைவில் அவன் வாழ்வான், இன்றும் அவன் பெயரை சொன்னால் பாகிஸ்தான் ராணுவம் சிறு புன்னகை பூத்துவிட்டு தலையினை கவிழ்ந்து கொள்ளும்
, உலகின் தலைசிறந்த உளவாளிகளில் இந்தியரும் உண்டு என நிரூபித்து உயிர்விட்ட அந்த சிங்கத்துக்கு வீர வணக்கம்
இப்படிபட்ட பெரும் தேசபக்தர்கள் பிறந்த நாட்டில் இன்று புலி , பேரரிவாளன், நளினி என கொடிபிடிக்கும் கும்பலை நினைத்தால்………